
மிகவும் ஆசீர்வாதமான இதழ். மோட்ச பிரயாணம் நூலை பலமுறை வாசித்து பயனடந்திருந்தபோதிலும் அதன் ஆசிரியராக ஜாண்பனியனை மட்டுமே நினைவில் கொண்டு வாசித்திருக்கிறேன். அதன் தமிழ் மொழியாக்கம் குறித்தோ அல்லது மொழிபெயர்ப்பு ஆசிரியர் குறித்தோ அதிகமாக யோசித்து பார்த்ததில்லை. இந்த ஆக்கத்தை வாசித்தபோதுதான் அது அவசியமானது என்று புரிந்ததோடு, தமிழ் மொழியாக்க பதிப்புடனான ஈடுபாடும் அதிகரித்துள்ளது.
சாமுவேல் பவுல் ஐயரின் 1923 பதிப்பை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டபடி மிகவும் அற்புதமான இலக்கிய சுவையோடு கூடிய மொழிபெயர்ப்பு, வேக வாசிப்பாக இரண்டு மூன்று நாட்களில் வாசித்து விடலாம் என்று எண்ணி வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் H.B.ராஜ் குமார் அவர்களின் மொழியாக்க பதிப்பை விடவும் சற்று அழுத்தமான வார்த்தை கையாடல், உரையாடல் நடை, இலக்கிய சுவை, கவித்துவம் மட்டுமல்லாமல் ஒவ்வொரு பக்கத்திலும் அந்த கதாபாத்திரம் மற்றும் அரும்பதங்களுக்கான விளக்கம் மற்றும் பயன்படுத்தப்பட்டிருக்கும் வேதசனங்களையும் அடிக்குறிப்பாகத் தந்திருப்பதால் வேதத்தோடு ஒப்பிட்டுப் படிக்க ஆரம்பித்தேன். ஏறக்குறைய இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக வாசித்து முதல் பாகத்தை முடிக்க முடிந்தது. இந்நூலின் மொழிநடை சிறுவயதில் கதை சொல்லிய என் தாத்தாவின் சொல்லாடலை நியாபகப்படுத்தியதோடு, சில 19-ம் நூற்றாண்டு எழுத்தாளர்களின் புதினங்களில் ரசித்து மகிழ்ந்த இலக்கியச் சுவையையும் அளித்தது. மெய்யாகவே மிகவும் அருமையான பயனுள்ள மொழியாக்கம்.
இறவா கிறிஸ்தவ இலக்கியமான ‘மோட்ச பிரயாணம்’ எங்கள் பிள்ளைகளின் இரவுநேர கதை நேரங்களை பயனுள்ளதாக்கியுள்ளது, துவக்கத்தில் அவர்கள் புரிந்து கொள்வார்களோ என்று சந்தேகத்தோடுதான் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தோம் ஆனால் ஒவ்வொரு நாளும் முந்தைய நாளின் முடிவை நியாயப்படுத்தி, அடுத்த என்ன நடந்தது? என்று ஆர்வமாகக் கேட்பதோடு மட்டுமல்லாமல் ஒரு சில கதாபாத்திரங்களுக்கான சரியான அர்த்தத்தையும் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார்கள், எனவே இதன் மூலம் வேத சத்தியங்களை இலகுவாக பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்க முடிகிறது.
“எலிசா போனாலும் யெகோவா இருக்கிறார்” தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற மிகவும் உபயோகமான ஆக்கம். மருத்துவமனையில் பணிபுரிவதால், கொரோனா 2-ம் அலை தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளையும், தொடர்ச்சியான மரணங்களையும் கண்டு சரீரத்திலும், ஆவியிலும் மிகவும் தளர்ந்து போன சமயங்களில், கர்த்தரின் வாக்குத்தங்களை நினைவுபடுத்தி தைரியப்படுத்தியது. மேலும் எலிசாவைப்போல சோதனைகள் மத்தியிலும் சந்தேகம் கொள்ளாமல், குறைகூறாமல் தொடர்ச்சியாக (வீட்டு மனைவியாக) கர்த்தரின் பராமரிப்பில் தங்கி இருக்கும் அனுபவத்தைக் கற்றுக் கொள்ள உதவி செய்தது.
“பாவத்தினால் ஏற்படும் தீங்கிற்கான சாட்சியங்கள்” மிகவும் பயனுள்ள தொடர் ஆக்கம். இன்றைய உலகில், பாவ மனிதன் தன் பாவகரமான செயல்களைக் குறித்துக் கொண்டிருக்கும் குற்ற உணர்ச்சிகளை மறைத்து, அந்த செயலை நியாயப்படுத்தும் வகையில் ஏற்படுத்தியிருக்கும் சட்டங்களும், கொள்கைகளும், கோட்பாடுகளுமே பாவம் அவிசுவாசிகளில் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. படைப்பும், நியாயப்பிரமாணமும், சுவிசேஷ செய்தியும் கண்டித்துச் சொல்லும் எச்சரிப்புகள் மட்டுமல்லாமல் பாவத்தின் வஞ்சகமும், அதன் விளைவுகளை சரிசெய்ய முடியாத வகையில் முழு உலகையும் கறைபடுத்தியிருக்கும் தன்மையும், மரணத்தையும் தாண்டித் தொடரும் அதன் பாதிப்புகளும் பாவத்தின் அகோரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு எடுத்துக் காட்டுவது உண்மை. பாவத்தின் கோரத்தை குறித்த சத்தியங்களை அறிந்துகொள்ள, இரட்சிப்பு எத்தனை விலையேறப்பெற்றது என்றும், விசுவாசிகள் அடைந்திருக்கும் பாக்கியம் எத்தனை மேன்மையானது என்றும் உணர்ந்துகொள்ள முடிகிறது.
– ஷேபா மிக்கேல் ஜார்ஜ்