கடவுள் தலையாட்டி பொம்மையல்ல

உலகத்தில் துன்பங்கள் தொடர்ந்து நிகழ்வதற்கு யார் காரணம்? இது பலரும் கேட்டு வரும் கேள்வி.

கடவுளை அறியாதவர்கள் அதற்கு எவரும் காரணமில்லை என்பார்கள்; அது தானாகவே தொடர்ந்திருக்கிறது என்பது அவர்களுடைய எண்ணம். வேறு சிலர் அதற்கும் கடவுளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பார்கள்; அன்புருவான கடவுள் யாரையும் துன்புறுத்தமாட்டார் என்பார்கள். பொதுவாகவே எவரும் துன்பங்களையும், கேடுகளையும் கடவுளோடு தொடர்புபடுத்த விரும்புவதில்லை. இதற்கு மாறாக சிலர் துன்பங்களை அனுமதிக்கும் கடவுள் எப்படி அன்புள்ளவராக இருக்கமுடியும் என்பார்கள்.

துன்பங்களுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு? உண்மை என்ன தெரியுமா உங்களுக்கு? எல்லாத் துன்பங்களுக்கும், கேடுகளுக்கும் கடவுள் முழுப் பொறுப்பாளியாக இருக்கிறார். இது அதிர்ச்சி தருகிறதா? துன்பங்கள் ஆரம்பித்ததற்கு சாத்தானே காரணம். மனிதனின் பாவச்செயல் உலகத்தைத் துன்ப வாழ்க்கைக்குள் தள்ளியது. இருந்தபோதும், இதெல்லாம் கடவுள் அறியாமலோ, அனுமதிக்காமலோ ஒருபோதும் நிகழவில்லை. இறையாண்மையுள்ள கடவுள் நித்தியத்தில் இருந்து சகலத்தையும் அறிந்திருந்து, சகல துன்பங்களையும் அனுமதித்து ஆண்டு வருகிறார்.

அனைத்திற்கும் இறையாண்மையுள்ள அவரே பொறுப்பாளி. துன்பங்களுக்கு அவர் நேரடிக் காரணகர்த்தா இல்லை; இருப்பினும் அவர் அவற்றை அனுமதித்து, தன் மகிமைக்காகப் பயன்படுத்தி வருகிறார் (யோபு). அவருடைய கட்டுப்பாட்டுக்குள் இல்லாத கேடுகளும், துன்பங்களும் உலகத்தில் இல்லை. கோவிட்-19, தலிபானின் எழுச்சி, இயற்கைச் சீரழிவுகள், காலநிலை மாற்றங்கள், உலக வெப்பமயமாகுதல், சமுதாய சீரழிவுகள், உங்கள் வாழ்க்கையில் நிகழும் அனைத்தும் அவரது இறையாண்மையின் இறுக்கமான கட்டுக்குள் இருந்துவருகின்றன. அவருக்குத் தெரியாமல், அவரை மீறி எதுவும் எங்கும் நிகழமுடியாது. இறையாண்மையில்லாத கடவுள், வெறும் பொம்மை மட்டுமே. ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவான இயேசு கிறிஸ்து இறையாண்மையுள்ள கடவுள். அவருடைய வல்லமையான கரத்தின் பாதுகாப்புக்குள் இருக்கிறவர்கள் எதைப்பற்றியும் கவலைகொள்ளத் தேவையில்லை.

மெய்யான கிறிஸ்தவ இறையியல் கடவுளின் இறையாண்மையிலிருந்தே ஆரம்பிக்கிறது. கடவுளின் இறையாண்மையை நிராகரிப்பவர்கள் கடவுளை வழிபடவில்லை. இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள் கடவுளின் இறையாண்மையை நிராகரிக்கிறார்கள். பலதெய்வ வழிபாடு செய்யும் மனிதன் கடவுளைத் தான் அசைத்தபடி ஆடுகிற, தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளத் துணைபோகும் கடவுளாக கல்லிலும், சிலையிலும் செதுக்கி வழிபடுகிறான். அவனுக்கு இறையாண்மையுள்ள ஒரே கடவுளைப் பிடிக்கவில்லை; அவன் கடவுளை ஆட்டுவிக்கும் இருதயத்தைக் கொண்டிருக்கிறான். கடவுள் அவனுக்குத் தஞ்சாவூர் பொம்மை; தன் இஷ்டத்துக்கு கடவுளை அவன் ஆடவைக்க விரும்புகிறான். தன் விருப்பத்திற்கேற்ற கடவுளை உருவாக்கி வணங்கித் தன் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முயல்கிறான். இதுவே பலதெய்வ வழிபாடு இறையாண்மையுள்ள ஒரே கடவுளை நிராகரிப்பதற்குக் காரணம்.

நாத்திகன் (Atheist) கடவுளுக்கு மேலாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளுகிறவன். மனிதனுக்கு மேலாக எவரையும் இறையாண்மையுள்ளவராக நாத்திகனால் கணிக்க முடியவில்லை. தன்னுடைய அதிகாரத்தை இறையாண்மையுள்ள ஒரே கடவுளிடம் ஒப்படைக்க அவனுடைய இருதயம் இடங்கொடுக்கவில்லை.  

ஐயவாதி (Agnostic), கடவுளை மறுப்பதில்லை, ஆனால் அவரைக் கண்டுகொள்ள முடியாது என்று தர்க்கரீதியில் வாதிடுகிறான். ஆணித்தரமாக கடவுள் இல்லை என்று ஐயவாதி மறுக்காவிட்டாலும், கடவுள் இருக்கிறார் என்பதையும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சுயத்தில் முழு நம்பிக்கை வைத்திருக்கும் ஐயவாதியும் இறையாண்மையுள்ள கடவுளை ஏற்றுக்கொள்வதில்லை.  

கிறிஸ்தவர்கள் மத்தியில் கடவுளின் இறையாண்மையை மறுக்கும் போதனைகள் தொடர்ந்திருந்து வருகின்றன. இதற்கு ஆர்மீனியன் நல்ல உதாரணம். ஆர்மீனியன், கடவுளின் இறையாண்மையை நிராகரிக்காவிட்டாலும், அதை மனிதனோடு பங்கிடுவதற்கு அரும்பாடுபடுகிறான். முழுமையான இறையாண்மை கொண்ட கடவுளை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனக்கு சமநிலையில் இருக்கும்விதமாக அவனுடைய போதனைகள் கடவுளை வர்ணிக்கின்றன. தான் சம்பந்தப்படாத கடவுளின் இறையாண்மை கொண்ட நித்திய திட்டத்தை அவன் நிராகரிக்கிறான். ஆர்மீனியன் நம்பும் கிறிஸ்துவால் அவனுடைய துணையோடு மட்டுமே அவனது பாவத்தைப் போக்க முடிகின்றது. அவன் துணையில்லாமல் ஆர்மீனியனின் கிறிஸ்துவால் அவனுக்கு முழுமையான இரட்சிப்பைக் கொடுக்க முடிவதில்லை; அவரால் இரட்சிப்பை இறுதிவரைக் காத்துக்கொள்ளவும் முடிவதில்லை. கடவுளின் இறையாண்மையை மனிதனோடு பங்கிடும் ஆர்மீனியனிசம் விளக்கும் கிறிஸ்து உண்மையில் திரித்துவக் கிறிஸ்து அல்ல.

வேதம் விளக்கும் கிறிஸ்து பூரண இறையாண்மையுள்ள கடவுள். நல்லவை, கெட்டவை அனைத்திற்கும் அவர் மட்டுமே பொறுப்பாளி. அவரில்லாமல் எதுவும் நிகழாது; அவரறியாமல் எதுவும் இருக்கமுடியாது. தற்செயல் என்பதற்கு அவருடைய அகராதியில் இடமில்லை. எதைச் செய்யவும் அவருக்கு மனிதனின் துணை தேவையாயிருக்கவில்லை. அவருடைய இறையாண்மையின் முன் மனிதன் வெறும் துரும்பு. “அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான் (காய்ந்து போகிறான்); நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்” (யோபு14:2). மனிதனின் துணையில்லாமல் அவனுடைய பாவத்துக்கான நிவாரணத்தை கிறிஸ்து பூரணமாகக் கல்வாரியில் நிறைவேற்றியிருக்கிறார்; அதன் மூலம் நித்தியத்துக்கும் நிலைத்திருக்கும் இரட்சிப்பை அவர் மனிதனுக்கு இலவசமாக அளிக்கிறார். மனிதன் தன்னைத் தேடாதிருக்கும் நிலையில், தனக்குரியவர்களை அவர் தன் இறையாண்மையால் நித்தியத்தில் தெரிவுசெய்து அவர்களுக்கு கிருபையால் இரட்சிப்பை அளிக்கிறார். இதுவே வேதபோதனை; சீர்திருத்த கிறிஸ்தவ போதனை. மீட்பின் திட்டத்திலும், இரட்சிப்பிலும் கிறிஸ்துவின் இறையாண்மையை நிராகரிக்கும் எந்தப் போதனையும் கிறிஸ்தவ வேதபோதனையல்ல. அத்தகைய போதனைகள் விளக்கும் கிறிஸ்துவும் வேதக் கிறிஸ்துவல்ல.

செழிப்புபதேசவாதிகள் (Prosperty gospel), கிறிஸ்தவத்தில் துன்பத்துக்கு இடமில்லை என்கிறார்கள். அவர்கள் விளக்கும் கிறிஸ்து ஆசீர்வாதத்தை மட்டுமே அள்ளிப்பொழிகிறவர். இவர்களுடைய கிறிஸ்து துன்பத்துக்கு எதிரி. துன்ப ஊழியனாக (ஏசாயா 53) வந்த வேதக்கிறிஸ்துவை இவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அவரைத் துன்பங்களுக்கு எதிரியாகக் கணிக்கிறார்கள். இவர்களும் கிறிஸ்துவின் இறையாண்மையை மட்டுப்படுத்திக் கொச்சைப்படுத்துகிறார்கள். இவர்களுடைய கிறிஸ்து அனைத்தையும் அனுமதித்து ஆளுகிறவரல்ல; இவர்களுடைய எண்ணப்படி மட்டுமே செயல்படுகிறவர். செழிப்புபதேசம் வேதம் போதிக்கும் கிறிஸ்தவ போதனையல்ல.  

கடவுளின் பூரண இறையாண்மையை உதறித்தள்ளி தங்களுடைய வசதிக்காக, தங்கள் விருப்பத்தின்படி இயங்கும் ஒரு ‘கிறிஸ்துவை’ மையமாகக் கொண்டிருக்கும் எந்த இறையியல் போதனையும் கிறிஸ்தவ போதனையாக இருக்கமுடியாது. இவையனைத்தும் போலிப்போதனைகளே. இறையாண்மையுள்ள கடவுளை நிராகரித்த நேபூக்காத்நேச்சார் தன் புத்திதெளிந்தபோது என்ன சொன்னான் தெரியுமா? “என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்தரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே (இறையாண்மை) நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும். பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்” (தானி 4:34-35).

————————————————————————————————————————

போதகர் ஆர். பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள ஆக்லாந்து நகரில், சவரின் கிறேஸ் சபையில் (ஆங்கிலம்) கடந்த 34 வருடங்களாகப் போதகராகப் பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் பணியாற்றி வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார்; கருத்தாழமிக்க ஆக்கபூர்வமான ஆவிக்குரிய ஆக்கங்களையும் அடிக்கடி இத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.  இவருடைய தமிழ் பிரசங்கங்கள் தொடர்ந்து காணொளி மற்றும் ஒலிநாடாக்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

5 thoughts on “கடவுள் தலையாட்டி பொம்மையல்ல

  1.  

    Thank you pastor,
    சில வாரங்களாக பத்திரிக்கை செய்திகள் மற்றும் வலைப்பதிவுகளில் பரவலாக விவாதிக்கப்படும் ஆப்கானிஸ்தான் அரசியல் மாற்ற விளைவுகள், உலக வெப்பமயமாதல் மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்ற செய்திகள் பலவாறாக நம்மை பயமுறுத்தும் இக்கால கட்டத்தில், இவையனைத்தும் இறையாண்மையுள்ள என் தேவனின் இறுக்கமான கட்டுக்குள் இருக்கிறது, அவருக்குத் தெரியாமல், அவரை மீறி எதுவும் எங்கும் நிகழமுடியாது. அவரது பாதுகாப்புக்குள் இருக்கிறவர்கள் எதைப்பற்றியும் கவலைக்கொள்ளத் தேவையில்லை என்ற சத்தியத்தை நினைவு கூறுவது மிகவும் ஆறுதலாக இருக்கிறது. சில நாட்களாக நான் வாசித்து வரும் ,ஜாண் ஃப்ளேவல் -ன் ‘கடவுள் செயலின் இரகசியம்’ ( The mystery of Providence) என்ற நூலும் இதே உண்மையை வலியுறுத்துகிறது.

    Like

    • நம்மில் அநேகருக்கு கர்த்தரின் இறையாண்மையின் அடிப்படையிலான உலகப்பார்வை (world view) இல்லை. அதை வலியுறுத்தவே இந்த உண்மையைப் பற்றி எழுதினேன். ஜோன் பிளேவல் அருமையான பியூரிட்டன் போதகர். அவருடைய படைப்புக்களில் ’கடவுள் செயலின் இரகசியம்’ முக்கியமானது. உங்கள் கையில் இருக்கும் சிறுநூல் பிளேவலின் மூலநூலின் சாரம் மட்டுமே. அதில் பிளேவலின் எழுத்தாண்மையைப் பார்க்கமுடியாமல் போனாலும் கடவுளின் பராமரிப்பு பற்றிய உண்மையாவது இருக்கிறதே.

      Like

  2. Dear Pastor thank you for your message now a days it is need and must for our nation.every believers should read this message.thanks and God bless you Amen

    Like

    • உங்கள் வார்தைகளுக்கு நன்றி. கர்த்தரின் இறையாண்மை பற்றி சிந்திக்காமல் இருக்கிறவர்கள் அநேகர். நீங்கள் சொன்னபடி ஒவ்வொரு கிறிஸ்தவரும் வாசித்து சிந்திக்க வேண்டிய சத்தியம் இது. கர்த்தரின் இறையாண்மையின்படி நம்முடைய உலகப் பார்வையும், சிந்தனையும் அமையாமலிருந்தால் நம் விசுவாசம் கேள்விக்குரியதாகிவிடும்.

      Like

      • Prise the Lord Pastor thank you for your reply.now a days our christian peoples does not take much more time to take read bible with devotion.because I think this is for their inability or work burden or some one else . Even though who one regularly read and devotion in their difficult possessions.surly god help them and redeem their problems .thank you pastor pray for me thank you May god bless you

        Like

மறுமொழி தருக