சத்தியம் ஒன்றே; அதற்குப் பலமுகங்கள் இல்லை. வேதம் சத்தியமாகக் தோற்றமளிக்கும் இரண்டு விளக்கங்களை ஒரு குறிப்பிட்ட சத்தியத்துக்கு அளிப்பதில்லை. அதனால்தான் வேத வசனத்திற்கு ஒரு அர்த்தம் மட்டுமே உண்டு (single sense) என்று சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தர் சொன்னார். வேதத்தை ஆராயும்போது, குறிப்பிட்ட சத்தியத்திற்கு இரண்டு முகங்கள் இருப்பதுபோல் நம் கண்களுக்குத் தோற்றமளித்தால், அதற்குக் காரணம் நாம் வேதத்தைப் படித்திருக்கும் முறையில் காணப்படும் தவறு மட்டுமே. தகுந்த ஆய்வு மட்டுமே அதன் மெய்விளக்கத்தை நமக்குப் புலப்படுத்தும். இது வேதத்தைப் பற்றிய சீர்திருத்த இறையியலின் அசைக்க முடியாத நம்பிக்கை. சிலவேளைகளில் நாம் அறிந்துகொள்ள விரும்பும் விஷயத்திற்கு வேதம் பதிலளிக்காமலிருக்கலாம். அதற்குக் காரணம் கர்த்தர் அதை நமக்கு வெளிப்படுத்தாமல் விட்டதுதான். அத்தகைய விஷயங்கள் ஒருபோதும் அடிப்படைப் போதனைகளாக இருக்காது; அந்த விஷயங்களுக்கு அமைதியே பதில், அவற்றிற்கு நாம் வியர்வை சிந்தி பதில் தேடவேண்டிய அவசியமில்லை. உதாரணத்திற்கு பரலோகம் எத்தகைய தன்மை கொண்டிருக்கும் என்பதுபோன்ற விஷயங்கள்.
மேலே விளக்கியதை நான் எழுதுவதற்குக் காரணம், பொதுவாக சுவிசேஷக் கிறிஸ்தவர்கள் மத்தியில் (Evangelical Christians) அடிப்படை சத்தியங்களுக்குக்கூட ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கங்கள் கொடுக்கின்ற பொதுவான வழக்கம் காணப்படுவதுதான். அதையும்விட கொடுமையானதாக நான் கருதுவது, அடிப்படை சத்தியமொன்றைக் குறித்த விஷயத்தில், சத்தியத்துக்கு முற்றிலும் முரணான விளக்கத்தை வேதசத்தியமாக ஏற்று குரங்குப்பிடியோடு அதைப்பின்பற்றி வருவதுதான். அதைப் பற்றியதுதான் இந்த ஆக்கம். இந்த 21ம் நூற்றாண்டில் வேதப்புரட்டு எது (Heresy), போலிப்போதனை எது (False teaching) என்பதை உணர்ந்து அவற்றை இனங்கண்டு தவிர்த்துக்கொள்ளும் ஆற்றல் இல்லாத நிலையில் மேலைநாடுகளிலும், நம்மினத்திலும் இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவம் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பரவலாகக் காணப்படும் வேதஅறியாமையே. வேதஅறியாமை போதகர்களையும், ஆத்துமாக்களையும் இருட்டில் வைத்திருந்து வேதப்புரட்டுக்களும், போலிப்போதனைகளும் நம்மினத்தில் தலைவிரித்தாடும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது.
ஒரு பிரசங்கி துல்லியமற்ற பிரசங்கங்களை அளித்துவிடலாம். அதை அநேகர் இன்று செய்துவருகிறார்கள். அதற்குக் காரணம் அவர்கள் வேதத்தைப் பிரசங்கிப்பதற்கான போதிய ஆற்றலையும், அறிவையும், பயிற்சியையும், முதிர்ச்சியையும் கொண்டிராதிருப்பதே. துல்லியமற்ற பிரசங்கங்களைப் போலிப்போதனைகளின் பட்டியலில் சேர்க்கக்கூடாது. துல்லியமற்ற பிரசங்கங்கள் மேலெழுந்தவாரியான பிரசங்கங்களாக, சத்தியத்தைத் தெளிவாக, ஆழமாக வெளிப்படுத்தாதவை. அவை போலிப்போதனைகள் அல்ல; சிலவேளைகளில் அவை தவறான விளக்கங்களைக் கொண்டிருந்துவிட முடியும். அதுகூட பிரசங்கியின் அறிவின்மை மற்றும் ஆற்றலின்மையின் காரணமாகவே நிகழ்கின்றது.
வேதப்புரட்டுகளும் (Heresies), போலிப்போதனைகளும் (False teaching)
வேதப்புரட்டுகளையும், போலிப்போதனைகளையும் தனித்தனியாகப் பிரித்து வேதம் விளக்கம் கொடுக்கவில்லை. இவை இரண்டையும் ஒரேவிதமானதாகக் கணித்தே வேதம் விளக்குகிறது. அத்தோடு போலிப்போதனைகளைக் குறிக்க வேதம் ஒரே பதத்தைப் பயன்படுத்தவில்லை. பல்வேறு வார்த்தைகளையும், வார்த்தைப் பிரயோகங்களையும் பயன்படுத்தி வேதம் போலிப்போதனைகளை இனங்காட்டுகிறது. வேதப்புரட்டுக்கு ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தையான Heresy யை மிகவும் ஆபத்தானதொன்றாகப் பயன்படுத்தியே எல்லோருக்கும் பழகிப்போய்விட்டது. அதாவது Heresy என்றால் மோசமானது, சத்தியத்துக்கு மாறான ஏனைய போதனைகள் அத்தகைய ஆபத்துகொண்டதில்லை என்பது போன்ற ஒரு எண்ணத்தை நாமே வளர்த்துக்கொண்டிருக்கிறோம். அந்தவிதமான கருத்தை வேதத்தில் நாம் பார்க்கவில்லை. அப்படியானால் இந்தப் பதங்களையும், இந்தப் பதங்கள் சுட்டுகின்ற போதனைகளையும் நாம் எப்படிப் பிரித்து அறிந்துகொள்வது என்பதையே இந்த ஆக்கத்தில் விளக்கவிரும்புகிறேன்.
வரலாற்றில் ஆதியிலிருந்தே திருச்சபை அடிப்படை வேதசத்தியங்களுக்கு எதிரான பல கேடான, ஆபத்தான போதனைகளைச் சந்தித்து வந்திருக்கிறது. வரலாற்று இறையியலைப் படிக்கிறவர்கள் அதற்கான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளலாம். தீங்கான, ஆத்தும ஆபத்தை விளைவிக்கும் போதனைகளைத் திருச்சபை வரலாற்றில் அடையாளங்காட்டி, அவற்றிலிருந்து சபை தன்னைக் காத்துக்கொள்ளத் துணைசெய்யுமுகமாகவே வரலாற்று இறையியல் எழுதப்பட்டிருக்கிறது. வரலாற்று இறையியலை வாசித்துப் பார்த்தால் இன்று நம்மத்தியில் காணப்படும் அநேக போலிப்போதனைகளை திருச்சபை இன்று நேற்றில்லாமல் வரலாற்றில் சந்தித்து வந்திருக்கிறது என்பது உங்களுக்குப் புரியும். அத்தகைய போதனைகளை திருச்சபை வரலாற்றில் Heresy என்று கணித்து ஒதுக்கித் தள்ளியிருக்கிறது. Heresy எனும் ஆங்கில வார்த்தைக்கு தமிழில் ஒரு நல்ல தனி வார்த்தை இல்லை. இது கிரேக்க மொழியில் (Gk: hairesis) இருந்து ஆங்கிலத்துக்கு வந்த வார்த்தை. இந்த வார்த்தையில் அடங்கியிருக்கும் விளக்கங்களுக்கேற்ற ஒரே வார்த்தையை தமிழில் உருவாக்குவது கடினம். தமிழ் வேதம் இதைக்குறிக்க ‘வேதப்புரட்டு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. முதலில் Heresy என்றால் என்னவென்று கவனித்துவிட்டு தமிழ் வேதம் பயன்படுத்தும் வார்த்தையை ஆராய்வோம். திருச்சபை Heresy என்பதை அடையாளங்கான பின்வரும் உண்மைகளை வரலாற்றில் பயன்படுத்தியது; தொடர்ந்தும் பயன்படுத்தி வருகிறது.
- Heresy என்பது, சுவிசேஷ சத்தியங்களுக்கு முற்றிலும் முரணானது; சுவிசேஷத்துக்கு எதிரானது. பவுல் கலாத்தியர் 1ம் அதிகாரம் 8ம் வசனத்தில் ‘நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல் . . . வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்’ என்று கூறியிருக்கிறார். இப்படிச் செய்வதை ‘சுவிசேஷப் புரட்டல்’ (1:7) என்றும் சொல்லியிருக்கிறார். சுவிசேஷத்தை சுவிசேஷமாக அடையாளங்காட்டுகின்ற அத்தனை சத்தியங்களுக்கும் முற்றிலும் எதிரான எதுவும் heresy.
- ஆத்தும அழிவை உண்டாக்கும் போதனைகள் heresy. கிறிஸ்துவின் சுவிசேஷம் ஆத்துமாவை ஆதாயப்படுத்தி இரட்சிப்பை அளிக்கிறது. கிறிஸ்துவின் மூலம் இரட்சிப்புக்கு வழிகாட்டாமல், ஆத்துமாவுக்கு அழிவை உண்டாக்கும் (soul destroying) போதனைகளை heresy என்று அழைக்கிறது திருச்சபை. அது நியாயமானதுதான். ஏனெனில், Heresy ஆத்தும அழிவை மட்டுமே உண்டுபண்ணும்; ஆத்தும விடுதலைக்கு அதன் மூலம் வழியில்லை.
- அடிப்படை வேதசத்தியங்களுக்கு முற்றிலும் முரணானது heresy. கடவுளைப் பற்றியும், திரித்துவ போதனை பற்றியும், மனிதனைப் பற்றியும், பாவத்தைப் பற்றியும், கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பு, அவருடைய தெய்வீக மானுடத் தன்மைகள், அவருடைய மரணம், உயிர்த்தெழுதல், உயரெடுத்துக்கொள்ளப்படுதல் ஆகியவற்றோடு, கர்த்தரின் வேதத்தைத் திரித்து விளக்கி, பரிசுத்த ஆவியினால் ஊதித்தரப்பட்ட அதன் அழியாத்தன்மையையும், அதிகாரத்தையும் அடியோடு நிராகரித்து வெறும் மனித எழுத்தாக மட்டும் அதைக் கணிப்பது போன்ற, அடிப்படை வேதசத்தியங்களுக்கு முற்றிலும் முரண்பாடான போதனைகளையும் திருச்சபை heresy என்றே கணிக்கிறது.
இந்த விதத்தில் ஆத்தும அழிவை ஏற்படுத்துகிற போதனைகளை, கிறிஸ்தவர்களிடம் பாதகமான பிரிவினையை உண்டாக்குகிற போதனையை ‘ஹெரசி’ என்று திருச்சபை அழைத்து வந்திருக்கிறது; அத்தகைய போதனைகள் சபைக்கு ஆபத்தை ஏற்படுத்தாமலிருப்பதற்கான நடவடிக்கைகளையும் அது வரலாற்றில் எடுத்து வந்திருக்கிறது.
புதிய ஏற்பாட்டில் பேதுரு Heresy எனும் பதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். 2 பேதுரு 2:1 ஐ கவனியுங்கள்,
கள்ளத்தீர்க்கதரிசிகளும் (false prophets) ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் (false teachers) இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் (heresy) தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
இந்த வசனத்தில் கள்ளத்தீர்க்கதரிசிகளும் (false prophets), கள்ளப்போதகர்களும் (false teachers) வேதப்புரட்டுக்களை சபைக்குள் கொண்டுவந்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பதைப் பேதுரு விளக்குகிறார். தமிழ் வேத பழைய திருப்புதலில் heresy என்பதற்கான கிரேக்க வார்த்தை (Gk: hairesis) ‘வேதப்புரட்டு’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தை ‘சுயமாக முடிவுக்கு வந்து எடுத்த ஒரு கருத்து’ என்ற எழுத்துபூர்வமான அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. இருந்தபோதும் அந்த அர்த்தத்தில் மட்டுமே அந்த கிரேக்க வார்த்தை புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்படவில்லை. 2 பேதுரு 2:1ல், சிலர் தாங்களாகவே முடிவெடுத்து உருவாக்கிய ஆபத்தான போதனைகளைச் சபைக்குள் கொண்டுவர முயற்சி செய்வார்கள் என்று பேதுரு சொல்கிறார். ஆகவே, இந்த வார்த்தை ‘சுயமாகத் தீர்மானிக்கப்பட்ட சபையில் பிரிவினைகளை ஏற்படுத்தக்கூடிய தீங்குவிளைவிக்கும் போதனை’ என்ற அர்த்தத்தை இந்தப் பகுதியில் கொண்டிருப்பதால் தமிழ் வேதம் அதை ‘வேதப்புரட்டுகள்’ என்று மொழிபெயர்த்திருக்கிறது. உண்மையில் இந்த வார்த்தை அது காணப்படும் வேதப்பகுதியின் சந்தர்ப்பத்திற்கேற்ப மொழிபெயர்க்கவேண்டியதொன்றாக இருக்கிறது.
இதே வார்த்தை 1 கொரிந்தியர் 11:19ல் ‘மார்க்கபேதம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் (heresy) உங்களுக்குள்ளே உண்டாயிருக்க வேண்டியதே.
இந்தப் பகுதியில் 18ம் வசனத்தில் கொரிந்து சபையில் பிரிவினைகள் (Gk: Schismata; Eng: divisions) இருக்கிறதென்று பவுல் கூறுகிறார். 19ம் வசனத்தில், அத்தகைய பிரிவினைகளுக்கு மத்தியில் நிச்சயம் ‘தீங்கை விளைவிக்கும் போதனைகளும்’ உங்கள் மத்தியில் காணப்படும் என்கிறார் பவுல். இதை மார்க்கபேதம் என்ற வார்த்தையின் மூலம் சுட்டுகிறார். பிரிவினைகளுக்கு முக்கிய காரணமாக இந்த மார்க்கபேதங்களும் இருந்திருக்கின்றனவென்பதை பவுல் சுட்டுவதைக் கவனிப்பது அவசியம். வேதப்புரட்டு தீமையான பிரிவினையைச் சபையில் உருவாக்கும்.
கலாத்தியர் 5:20லும் ‘மார்க்கபேதங்கள்’ என்றே இருக்கிறது.
விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், (heresy),
இந்தப் பகுதியில் மாம்சத்தில் பாவத்தை அனுமதித்தால் அது எத்தகைய பாவச்செயல்களில் கொண்டுவிடும் என்பதைப் பவுல் விளக்குகிறார். அவற்றில் ஒன்று மார்க்கபேதங்கள் (வேதப்புரட்டு) என்பதைக் கவனியுங்கள்.
KJV, NKJV ஆகிய ஆங்கில மொழிபெயர்ப்புகள் இந்த இரண்டு வேதப்பகுதிகளிலும் இந்த வார்த்தையை Heresies என்றே மொழிபெயர்த்திருக்கின்றன. NASB இதை factions (பிரிவுகள்) என்றும், ESV இதை divisions (பிளவுகள்) என்றும் மொழிபெயர்த்திருக்கின்றன. தமிழ் வேதத்தின் மொழிபெயர்ப்பான ‘மார்க்கபேதம்’ – பிளவுகள், கோட்பாட்டுப் பிளவுகள் என்ற அர்த்தத்தை அளிக்கின்றன; அதில் தவறில்லை. ஏனெனில், இந்த வார்த்தை வேதவசனம் காணப்படும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி மொழிபெயர்க்கவேண்டிய வார்த்தை. ஆத்மீகத் தீங்கு விளைவிக்கும் போதனைகளால் ஏற்படுகின்ற பேதங்களையும், பிளவுகளையே இவை சுட்டிக்காட்டுகின்றன. கலா 5:20ல், ஏற்கனவே விரோதங்கள், சண்டைகள், பிரிவினைகள் என்ற வார்த்தைகளும், ஒவ்வொன்றும் வெவ்வேறு கிரேக்க வார்த்தைகளைக் கொண்டு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் தமிழில் ஒரே வார்த்தையைப் பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு கிரேக்க வார்த்தையும் தரும் அர்த்தத்திற்கேற்ப வசனம் அமைந்திருக்கும் சந்தர்ப்பத்தின்படியான வார்த்தையைப் பயன்படுத்த வேண்டியது மொழிபெயர்ப்பாளர்களின் பணியாக இருக்கிறது. அதனால் ஏனைய பொதுவான விரோதங்கள், சண்டைகள், பிரிவினைகளில் இருந்து தீங்கான போதனைகளினால் உருவாகும் பிளவை (heresy) வேறுபடுத்திக்காட்ட ‘மார்க்கபேதங்கள்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அத்தோடு 2 பேதுரு 2:1ல், கள்ளத்தீர்க்கதரிசிகள், கள்ளப்போதகர்கள் என்று மொழிபெயர்க்கப்பட்டிருகின்ற வார்த்தைகள் ஒளியின் தூதர்களாகத் தோற்றமளித்து உண்மைக்கு மாறானவற்றைப் போதிப்பவர்களைக் குறிக்கின்றன. இவர்களைப் போலித்தீர்க்கதரிசிகள், போலிப்போதகர்கள் என்று குறிப்பிடலாம். இந்த வார்த்தைகள், இவர்கள் வேதத்தைப் பயன்படுத்தி வேதத்தில் காணப்படாத சத்தியமல்லாதவற்றைப் போலியாகப் போதிக்கிறார்கள் என்பதை விளக்குகின்றன.
போலிப்போதகர்களின் மூலமாகவே ஆத்தும தீங்கு விளைவிக்கும் வேதப்புரட்டுகள் சபைக்குள் நுழைகின்றன என்கிறார் பேதுரு. போலிப்போதகர்கள் என்ற பொதுவான வார்த்தைப் பிரயோகம் சகலவிதமான சத்தியத்துக்கு மாறான போதனைகளை சபைக்குள் திணிக்க எத்தனிப்பவர்களைக் குறித்து வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. போலிப்போதனை எந்த ரூபத்தில் வந்தபோதும் அது எத்தனை மோசமானது என்று தன்னை இனங்காட்டிக்கொள்ளாது. அதை இனங்கண்டு தவிர்த்துக்கொள்ள வேண்டியது சபையினதும், கிறிஸ்தவர்களினதும் பொறுப்பு.
போலிப் போதனைக்கும் (false teaching), வேதப்புரட்டுக்கும் (heresies) இடையில் மிகப்பெரிய வேறுபாடிருப்பதாகக் காட்டி வேதம் அவற்றைப் பயன்படுத்தவில்லை. புதிய ஏற்பாட்டுக் காலத்தில் புதிய ஏற்பாட்டு நிருபங்களின்படி மூன்று போலிப்போதனைகளை, அதாவது வேதப்புரட்டுக்களைத் திருச்சபை சந்தித்திருக்கிறது.
- கிரியைவாதம்: கிரியைகளின் மூலம் விசுவாசத்தை அடைய எத்தனிக்கும் போதனைகள் – ரோமர், கலாத்தியர் நூல்களில் பவுல் இவற்றை நிராகரித்து விளக்கங்கொடுக்கிறார்.
- நியாயப்பிரமாண நிராகரிப்புவாதம்: அன்டிநோமியனிசம்.
- நொஸ்டிசிசம் – யோவான், கொலோசெயர், 1, 2 யோவான் ஆகிய நிருபங்கள் இந்தப் போலிப்போதனையை நிராகரித்து எழுதப்பட்டவை. இந்தப் போதனை ஆண்டவரை அறிவதற்கான இரகசிய வழியைக் காட்ட முற்படுவதோடு, கிறிஸ்துவின் மானுடப் பிறப்பையும் மறுதலிக்கிறது.
மேற்குறிப்பிட்ட வேதப்புரட்டுக்களான போலிப்போதனைகளை நாம் இந்த 21ம் நூற்றாண்டிலும் எதிர்கொள்கிறோம். வேதப்புரட்டுகளும், போலிப்போதனைகளும் ஆபத்தானவை. இரண்டுமே சுவிசேஷத்தை அடியோடு மாற்றி அதற்கு மாறானதொரு வழியை ஆத்துமாக்களுக்குக் காட்டுபவை. அதனால் போலிப்போதனை என்ற பதத்தையே மோசமான எந்தப் போதனைகளையும் அடையாளப்படுத்தும் பதமாக இந்த ஆக்கத்தில் பயன்படுத்தப்போகிறேன்.
சிலவருடங்களுக்கு முன்வரை நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் தன்னைப் பிரபல்யப்படுத்திக்கொள்ள முயன்ற ஒரு போலிப்போதனை, புறஜாதி மதங்களான இந்து மதத்திலும், இஸ்லாமிலும் இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார் என்ற கருத்தை முன்வைத்தது. இது மோசமான சத்தியப்புரட்டல். உதாரணத்திற்கு, இந்து மதத்தில் இயேசுவைப்பற்றிய வெளிப்படுத்தல் இருக்கிறது என்று விளக்கி, இந்துக்கள் கிறிஸ்தவ வேதமில்லாமல் தங்களுடைய இந்துவேதத்தைப் படித்தே கிறிஸ்துவுக்குள் இரட்சிப்பை அடையலாம் என்றும், இந்துப் படைப்புகளில் இயேசுவைப்பற்றி விளக்கியிருப்பதாகச் சொல்லி திருக்குறளில் இருந்தும், இந்துப் பெரியவர்களான திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரின் படைப்புகளைத் திருச்சபையில் வாசித்து அவற்றிலிருந்து கிறிஸ்தவ விளக்கம் கொடுப்பதற்கும் பெயர் வேதப்புரட்டு. இந்த வேதப்புரட்டர்கள் இரட்சிப்புக்காக கிறிஸ்துவை மட்டும் நம்பாமல், கிறிஸ்தவ வேதத்திலே மட்டும் நம்பிக்கை வைக்காமல், கிறிஸ்தவ வேதபோதனைகளுக்கு அடிப்படையிலேயே முரணான புறஜாதி மதத்தில் இருந்து கிறிஸ்தவ விளக்கங்கொடுத்து சுவிசேஷத்தையும், வேதத்தையும் சிதைக்கிறவர்களாக இருக்கிறார்கள். இதையே பங்களாதேஷில் இஸ்லாமியர்கள் மத்தியில் கிறிஸ்தவ நிறுவனமொன்று செய்யமுயற்சிக்கிறது.
இத்தகைய சத்தியப்புரட்டர்களை திருச்சபை எப்படி அணுகவேண்டும் என்பதைப் பவுல் தீத்து 3:10-11 வரையுள்ள வசனங்களில் விளக்குகிறார்.
வேதப்புரட்டனாயிருக்கிற (Heretick) ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு. அப்படிப்பட்டவன் நிலை தவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.
பவுல் இந்நிருபத்தில் வேதப்புரட்டர்களை விட்டுவிலகு என்று சொல்கிறார். அத்தகையவர்கள் நிலைதவறி ஆக்கினைத்தீர்ப்புக்குடையவர்களாய் பாவஞ்செய்கிறவர்களாய் இருக்கிறார்கள் என்கிறார். வில்லியம் ஹென்ரிக்சன் இந்த வசனத்தை விளக்கும்போது,
‘இந்த வேதப்புரட்டன் கிரேக்க தத்துவத்தின் அடிப்படையிலானதொரு போலிப்போதனைக்கு இரையாகி சபையில் மோசமான பிரிவினையை உண்டாக்கியிருக்கிறான். இத்தகைய பிரிவினையை உருவாக்குகிற எவருமே வேதப்புரட்டர்கள்தான் என்கிறார்’ (1 & 2 Timothy and Titus commentary).
இவன் சபையிலிருந்தும், சபை அங்கத்துவத்திலுமிருந்து நீக்கப்பட வேண்டியவன் என்கிறார் பவுல். அவன் ‘நிலை தவறியவன்.’ அவன் நேரான வழியில் போகாமல் பாவத்தில் வாழ்கிறான் என்கிறார் ஹென்ரிக்சன். அதுவும் இவன் தன் பாவத்தை அறிந்து உணர்ந்து செய்கிறவன் என்றும், அவனுடைய பாவங்களே அவனை நியாயந்தீர்க்கின்றன என்றும் விளக்குகிறார் ஹென்ரிக்சன். இவன் சபை ஒழுங்குநடவடிக்கைக்குள் கொண்டுவரப்பட்டு சபைநீக்கம் செய்யப்படவேண்டியவன் என்கிறார். இப்படியாக வேதப்புரட்டர்களுக்கு கிறிஸ்தவ சபையும், கிறிஸ்தவர்களும் தங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் இடங்கொடுக்காது இருக்கவேண்டும் என்று வேதம் எச்சரிக்கை செய்கிறது.
வேதப்புரட்டுகளுக்கு (Heresies) உதாரணங்களாக, மோர்மனிசம், கிரிஸ்டோடெல்பியன், யெகோவாவின் சாட்சிகள் போன்ற போதனைகளைக் குறிப்பிடலாம். மூன்று ஆள்தத்துவங்களடங்கிய திரித்துவப் போதனையை மறுதலிப்பது அடிப்படைப் போதனைக்கு எதிரானது; அத்தகைய போதனையை நிச்சயம் இந்தப் பிரிவுக்குள் அடக்கலாம். இயேசு கிறிஸ்துவின் மானுடத் தன்மையையோ அல்லது தெய்வீகத்தையோ நிராகரிப்பது வேதப்புரட்டு (ஹெரசி) எனும் இந்தப் பிரிவுக்குள் அடங்கும். நித்திய தண்டனை என்று ஒன்று கிடையாது; சகல மனிதர்களும் பரலோகத்தை எப்படியாவது அடைந்துவிடுவார்கள் என்ற (Universalism) போதனையும் இந்தப் பிரிவுக்குள் அடங்கும். பாவம் என்றொன்றில்லை என்று போதிக்கும் பெலேஜியனிசப் போதனையும் தீவிர வேதப்புரட்டே.
நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் போலிப்போதனைகள்
கிறிஸ்தவ சபை இன்று சந்தித்து வரும் போலிப்போதனைகள் அநேகம். அவை அனைத்தையும் பட்டியலிட்டு இந்த ஆக்கத்தில் விளக்கிவிட முடியாது. அவற்றில் முக்கியமானவற்றை மட்டும் அடையாளங்காட்டி விளக்க விரும்புகிறேன். இவை எல்லாவற்றையுமே போலிப்போதனைகளாக அறிந்து உணராதவர்கள் நம்மினத்தில் பெருந்தொகையாக இருக்கிறார்கள். பொதுவாக வேதஞானம் இல்லாத குறையே அநேகரைப் போலிப்போதனைகளுக்கு இரையாக்கிவருகிறது. கீழ்வரும் போலிப்போதனைகளை ஆராய்ந்து வாசகர்கள் தங்களையும், தங்களைச் சேர்ந்தவர்களையும் இவற்றிற்கு இரையாகாமல் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
1. ஆர்மீனியனிசம் (Arminianism)
17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுந்த ஆர்மீனியனிசம் இன்றைக்கு பல கோணங்களில், பொதுவாக இவேன்ஜலிக்கள் கிறிஸ்தவர்கள் மத்தியில் பரவிக் கொடிநாட்டிக் கொக்கரித்துக் கொண்டிருக்கிறது. ஜெக்கபஸ் ஆர்மீனியஸினால் ஆரம்பிக்கப்பட்டு அவனுடைய சீடர்களால் பரப்பப்பட்டு இன்றைக்கு மெய்யான போதனையாக தன்னை இனங்காட்டி திருச்சபைப் பிரிவுகள் பெரும்பாலானவற்றை ஆண்டு வருகிறது ஆர்மீனியனிசம். ஆர்மீனியனிசம் இன்றைக்கு பல ரூபங்களில் நடமாடி வருவதால் அவை எல்லாவற்றையும் ஒரே பெட்டியில் போட்டு விளக்கிவிட முடியாது. அவற்றின் மத்தியில் தீவிரமான போலிப்போதனைகளையும், அந்தளவுக்குத் தீவிரமற்ற போலிப்போதனைகளும் காணப்படுகின்றன. தீவிரமான ரூபத்தில் காணப்படும் ஆர்மீனியனிசத்தை ஜே. ஐ. பெக்கர் விளக்கும்போது, ‘இதன் தத்துவார்த்தரீதியிலான முடிவு வேதப்புரட்டான பெலேஜியனிசத்தில் போய் முடியும்’ என்று சொல்லியிருக்கிறார். இந்தத் தீவிர ஆர்மீனியனிசத்தையே சினொட் ஆவ் டோர்ட் இறையியல் கவுன்சில் 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆய்வு செய்து போலிப்போதனையாக இனங்கண்டு நிராகரித்தது. ஆர்மீனியனும், மனிதநலவாதியுமான (Humanist) சார்ள்ஸ் பினி அப்படிப்பட்டவர். பினி மனிதன் பாவியல்ல எனும் பெலேஜியனிசப் போதனையை நம்பியவர். பினியே இரட்சிப்புக்காகத் ‘தீர்மானம்’ எடுக்கும் முறையை உருவாக்கியவர். தற்கால ஆர்மீனியனிசத்தைப் போலிப்போதனைகளின் பிரிவிலேயே சேர்க்க வேண்டும்.
ஆர்மீனியனிசம் அடிப்படை வேதசத்தியங்களை நிராகரிக்காவிட்டாலும், அவற்றில் மாற்றங்களைச் செய்து கடவுளைவிட மனிதனுக்கே இரட்சிப்புக்கான மகிமையை அளிக்கிறது. மனிதனுடைய கிரியையின் பங்கில்லாமல் இரட்சிப்பு அவனில் செயல்படவே முடியாது என்கிறது ஆர்மீனியனிசம். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் அது கடவுளுடைய இறையாண்மையிலும், மனிதனின் தன்மையிலும், பாவத்தின் தன்மையிலும், கிறிஸ்துவின் மரணத்தின் தன்மையிலும், அம்மரணத்தின் பலன்களை மனிதன் அடையும் முறையிலும் இறையியல் மாற்றங்களைச் செய்து இரட்சிப்பு பற்றிய மாறுபாடான போதனையை அளிக்கிறது. இதன் அடிப்படையிலேயே இன்றைக்கு, பாவத்தில் இருக்கும் மனிதன் தன்னை இரட்சித்துக்கொள்ள செய்யவேண்டிய வழிமுறைகள் என்று அநேக வழிமுறைகளைச் சுவிசேஷம் சொல்லுகிறவர்கள் உருவாக்கி ஆத்துமாக்களைத் தவறான வழியில் இட்டுச்செல்லுகிறார்கள். பியூரிட்டனான வில்லியம் ஏமெஸ், ‘ஆர்மீனியனிசம் . . . வேதப்புரட்டை நோக்கி இட்டுச்செல்லும் தீவிரமான போலிப்போதனை’ என்று விளக்கியிருக்கிறார். ஆர்மீனியனான ஜோன் வெஸ்லி, இரட்சிப்பில் கிருபைக்கான முக்கிய இடத்தை வலியுறுத்தினார்; அவருடைய ஆர்மீனியனிச நம்பிக்கைகள் ஆரம்பத் தீவிரப் போலி ஆர்மீனிய நம்பிக்கைகளைவிட சிறிதளவு வேறுபட்டிருந்தன. இருந்தாலும் இன்று நம்மினத்தில் கடந்த 50 வருடங்களாக இருந்துவரும் ஆர்மீனியனிசம் போலிப்போதனை என்பதில் சந்தேகமே இல்லை. நம்மினத்து ஆர்மீனியனிசத்தில் மறுபிறப்புக்கு அல்லாமல் மனிதனுடைய கிரியைக்கே இரட்சிப்பில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய வேத ஆதாரமற்ற நம்பிக்கை, சுவிசேஷகர்களையும், போதகர்களையும் மறுபிறப்பே அடைந்திராததொரு கூட்டத்திற்கு ஞானஸ்நானமளித்து அவர்களைக் கிறிஸ்தவர்களாக அறிவித்து வலம்வர வைத்துக்கொண்டிருக்கிறது. போலிப்போதனை எந்த ரூபத்தில் வந்தாலும் அது போலிப்போதனைதான். ஆர்மீனியனிசம் இறையாண்மையுள்ள கடவுளுக்கு மகிமையளிக்காத வேதவிரோதமான போலிப்போதனை.
ஆர்மீனியனிசம் என்ற போலிப்போதனையின் பெயரை அறியாமல், அந்தக் கோட்பாட்டின் சத்தியப்புரட்டலை உணராமல், கிறிஸ்துவை விசுவாசிப்பதில் நமக்கும் பங்கிருக்கிறது என்ற போதனைக்குப் பலியாகி வாழ்ந்துகொண்டிருக்கிற கிறிஸ்தவர்கள் நம்மத்தியில் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய இரட்சிப்புக்குத் தாங்களும் காரணமாக இருந்திருக்கிறோம் என்று தவறாக நம்பிவந்தாலும், அவர்கள் மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்ந்து வருவார்களென்றால் இறையாண்மையுள்ள கர்த்தரே அவர்களை இரட்சித்திருக்கிறார் என்பதுதான் உண்மை; சத்தியவெளிச்சத்தை அடையாமலிருப்பதால் அவர்கள் அதை உணராமலிருந்து வருகிறார்கள்.
2. காலசகாப்தக் கோட்பாடு (Dispensationalism)
ஆர்மீனியனிசத்தைப்போலவே நம்மினத்துக் கிறிஸ்தவத்தை ஆண்டுவரும் இன்னுமொரு போலிப்போதனை காலசகாப்தக் கோட்பாடு. J. N. டார்பி மற்றும் C. I. ஸ்கோபீல்ட் ஆகியோரின் கூட்டணியின் 19ம் நூற்றாண்டில் உருவாகி இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவர்கள் மத்தியில் கொடிநாட்டி வலம் வந்துகொண்டிருக்கிறது இந்தப் போலிப்போதனை. 19ம் நூற்றாண்டுக்கு முன் இதை திருச்சபை அறிந்திருக்கவில்லை என்கிறார் லீகன் டங்க்கன் (Dr. J. Ligon Duncan III). உண்மையில் இதை சுவிசேஷமாக நம்பி நம்மினத்துப் போதகர்களும், சுவிசேஷகர்களும் ஊழியம் செய்துவருகிறார்கள். இந்தப் போலிப்போதனையை அடையாளம் கண்டுகொள்ள முடியாதளவுக்கு இதைப்பற்றிய வரலாற்று, இறையியல் அறிவு இல்லாமல் அறியாமை அவர்களுடைய கண்களை மறைத்து வைத்திருக்கிறது. காலசகாப்தக் கோட்பாடு, வேதத்தை எந்த முறையில் வாசித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்று விளக்கும் ஒரு வேதவிளக்க முறை. இத்தகைய வேதவிளக்க விதிமுறை வேதத்தில் காணப்படவில்லை. இதை ஜே. என். டார்பியே முதலில் உருவாக்கினார். செயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட இந்தப்போதனை, வேத இறையியலையே தலைகீழாக மாற்றி, கர்த்தரின் மீட்பின் திட்டத்திற்கும், அவரின் வரலாற்று செயல்முறைகளுக்கும், அவரளிக்கும் இரட்சிப்பிற்கும் வேதபோதனைகளுக்கும் முற்றிலும் முரணான வகையில் விளக்கங்கொடுக்கிறது. காலசகாப்தக் கோட்பாடு போலிப்போதனை என்பதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது.
காலசகாப்தக் கோட்பாட்டிலும் பல ஆபத்தான பிரிவுகள் காணப்படுகின்றன. இவற்றில் தீவிர போலிப்போதனைகளாக அடையாளங் காணக்கூடியவைகளும் காணப்படுகின்றன. கிறிஸ்தவ திருச்சபையும், கிறிஸ்தவர்களும் உண்மை தெரியாமல் இந்தப் போதனைக்குப் பலியாகி, இதையே வேத இறையிலாக நம்பி வாழ்ந்து வருகிறார்கள். இந்தப் போதனையே சார்ள்ஸ் ரைரி (Charles Ryrie), சேன் ஹொட்ஜ் (Zane C. Hodge) ஆகியோர் இரட்சிப்புக்கு மனந்திரும்புதல் அவசியமில்லை, விசுவாசம் மட்டுமே போதும் என்ற ஆபத்தான இறையியல் போதனையை அளிக்க வழிகோளியது. காலசகாப்தக் கோட்பாடு அநாவசியத்துக்கு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போதும் அதற்குப்பின்னும் நிகழப்போகும் நிகழ்ச்சிகளுக்கு வேதத்திற்கு முரணான விளக்கங்களை அளித்து கிறிஸ்தவர்களைத் தவறான வழியில் வழிநடத்துகிறது. காலசகாப்தக் கோட்பாட்டில் திருச்சபைக்கு இந்த 21ம் நூற்றாண்டில் இடமில்லை. திருச்சபையை வெறும் இடைச்செருகலாகக் கணிக்கும் இந்தப் போதனை, கிறிஸ்து இஸ்ரவேலை மறுபடியும் மகிமையுள்ள நாடாக இந்த உலகத்தில் இருக்கச் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார் என்ற மிகத்தவறான போதனையின் மூலம் கிறிஸ்தவர்களைத் திசைதிருப்பிக்கொண்டிருக்கிறது. கர்த்தரின் மீட்பின் திட்டத்தில் சபையே அதிமுக்கிய இடத்தை வகிப்பதோடு புதிய உடன்படிக்கையின் நிறைவேற்றமாக திருச்சபையே இருக்கிறது என்பதே வேதமளிக்கும் போதனை. காலசகாப்தக் கோட்பாட்டின் செல்வாக்கிற்குள் அகப்பட்டு சீரழியாத திருச்சபைப் பிரிவுகளோ, இவெஞ்சலிக்கள் நிறுவனங்களோ, சுயாதீன சபைகளோ, சுவிசேஷகர்களோ நம்மினத்தில் இல்லை என்றளவுக்கு இதன் காட்டாட்சியை நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் காண்கிறோம்.
3. கிரியைவாதம் (Legalism)
நாம் அதிகம் கவனிக்காமல் விட்டுவிடுகிற, அசட்டை செய்துவிடுகிற இன்னொரு போலிப்போதனை லீகலிசம் (Legalism). இதைத் தமிழில் ‘கிரியைவாதம்’ என்று அழைக்கலாம் என்று நினைக்கிறேன். கிரியைகளுக்கே இந்தப் போதனை அதிமுக்கிய இடத்தைக் கொடுக்கிறது; வலியுறுத்துகிறது. அதாவது, நியாயப்பிரமாணத்தைப் பூரணமாகக் கடைபிடிக்காவிட்டால் ஒருவர் இரட்சிப்பை அடையமுடியாது என்கிறது இந்தப் போதனை. கடவுளின் கட்டளைகளையோ அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட விதிகளையோ பின்பற்றி வந்தால் மட்டுமே கடவுள் முன் ஒருவர் நீதிமானாக முடியும் என்கிறது கிரியைவாதம். சகலவிதமான வேதப்புரட்டுக்களுக்கும் அடித்தளமாக கிரியைவாதம் அமைந்திருக்கிறது. கிரியைகளின் மூலமே இரட்சிப்பை அடையமுடியும் என்ற தவறான கருத்தை இந்தப்போதனை வலியுறுத்துகிறது. ரோமன் கத்தோலிக்க மதத்தில் இதைக் காணலாம். இதையே யூதப் பரிசேயர்களும் வலியுறுத்தி வந்திருந்தார்கள்.
சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். (மத்தேயு 23:4)
அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார். (லூக்கா 18:9)
கிரியைவாதத்திற்கு எதிராகவே பவுல் அப்போஸ்தலன் ரோமருக்கான நிருபத்தையும், கலாத்தியருக்கான நிருபத்தையும் (1-3), கொலோசெயருக்கான நிருபத்தையும் (2:20-23) எழுதினார்.
நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல, மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன? இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே. இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும்பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது. (கொலோசெயர் 2:20-23)
கிரியைவாதம் ஆதிசபைக்காலத்தில் இருந்தே வந்திருக்கின்ற ஆபத்தான போலிப்போதனை. இந்த 21ம் நூற்றாண்டிலும் இது நம்மத்தியில் செல்வாக்கோடு இருந்துவருகிறது.
இவெஞ்சலிக்கள் சபை மற்றும் நிறுவனங்கள் செய்துவரும் சுவிசேஷப்பணியில் கிரியைவாதத்தை சந்திக்கிறோம். பாவியாகிய மனிதன் தன்னுடைய சுயதீர்மானத்தின் மூலம் இரட்சிப்பை அடையலாம் என்று அவனை வற்புறுத்தி கிறிஸ்துவுக்காக தீர்மானம் எடுக்கவைக்கிறபோது அங்கே கிரியைவாத போலிப்போதனையைச் சந்திக்கிறோம். கிரியைகள் மூலம் விசுவாசம் கிடைக்காது என்பதே பவுல் ரோமரில் தருகின்ற விளக்கமாக இருக்கிறது. கிரியைவாதம் இன்று பல்வேறு ரூபங்களில் கிறிஸ்தவ சமூகத்தில் நடமாடி ஆத்மீக ஆபத்தை விளைவித்து வருகிறது. லேமென் இவெஞ்சலிக்கள் ஐக்கியம் (Laymen Evangelical Fellowship) என்ற பிரிவு, விசுவாசிகள் திருச்சபையில் வாராவாரம் சபைத்தலைவர்களுக்கு முன் தங்களுடைய பாவங்களை அறிக்கை செய்யவேண்டும் என்று கட்டளையிட்டு, கத்தோலிக்க மதம் செய்வதைப்போன்ற ஒரு பாவமன்னிப்புக்கான முறையைப் பின்பற்றி வருகிறது. மனந்திரும்புதலின் ஒரு பகுதியாக பாவ அறிக்கை இருப்பதை வேதம் விளக்குகிறபோதும், கிறிஸ்தவர்கள் சபைத்தலைவர்களுக்கு முன்பும், ஏனைய கிறிஸ்தவர்கள் முன்பும் அநாவசியத்துக்குப் பாவ அறிக்கை செய்வதை அனுமதிக்கவில்லை. இவர்கள் இப்படிச் செய்வது நிச்சயம் கிரியைவாதமே. இவர்கள் மனந்திரும்புதலையும், பாவ அறிக்கைபற்றிய வேதபோதனையையும் மிகத்தவறாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். எங்கெல்லாம் இரட்சிப்பை அடைவதற்கும், கிறிஸ்தவ வாழ்க்கையை விசுவாசமாக வாழ்வதற்கும் கிரியைகளை ‘நிபந்தனையாக’ வலியுறுத்துகிற எந்தப் போதனையும், எந்தக் கிறிஸ்தவ பிரிவும் கிரியைவாதத்தைப் பின்பற்றுகிறவையாக இருக்கின்றன. இந்த ஆபத்தான, பழமையான போலிப்போதனை இன்றும் பலரூபங்களில் கிறிஸ்தவர்கள் மத்தியில் நடமாடி வருகிறது.
4. நியாயப்பிரமாண நிராகரிப்புவாதம் (Antinomianism)
இந்தக் கோட்பாட்டின் ஆங்கிலப்பதம் அன்டிநோமியனிசம். இதுவரை அன்டிநோமியனிசம் என்றே இதை எழுதிவந்திருக்கிறேன். இதற்கு ‘நியாயப்பிரமாண நிராகரிப்புவாதம்’ எனபது சரியான தமிழ்ப் பதமாக எனக்குத் தோன்றுகிறது. அன்டிநோமியனிசப் போதனையின் கருத்துக்கேற்பவே அதை மொழிபெயர்க்கவேண்டும் என்பதால் இந்தப் பதத்தை உருவாக்கியிருக்கிறேன். நியாயப்பிரமாண நிராகரிப்புவாதம், நியாயப்பிரமாணம் பழைய ஏற்பாட்டு மக்களுக்கே கொடுக்கப்பட்டதாகவும் அதை விசுவாசிகளான கிறிஸ்தவர்கள் இக்காலத்தில் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் போதிக்கிறது. நியாயப்பிரமாணம் என்ற பதம் சகல பழைய ஏற்பாட்டுச் சட்டங்களையும் உள்ளடக்கிய பதமாக வேதத்தில் காணப்பட்டபோதும், அது பத்துக்கட்டளைகளை மட்டும் குறிக்கவும் வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நியாயப்பிரமாண நிராகரிப்புவாதம், புதிய ஏற்பாட்டுக்காலத்தில் கிருபையினால் விசுவாசத்தை அடைந்திருப்பவர்கள் பத்துக்கட்டளைகளைக் கவனத்தோடும், கருத்தோடும் பரித்தமாக்குதலுக்காகக் கடைபிடிக்கத் தேவையில்லை என்று விளக்குகிறது. அதற்குக் காரணம், எல்லாக் கட்டளைகளையும் கிறிஸ்து தன் வாழ்வில் நிறைவேற்றியிருப்பதால், அவர் மூலம் கிருபையினால் இரட்சிப்படைந்திருக்கின்ற நாம் அவற்றைப் பின்பற்ற அவசியமில்லை என்கிறார்கள் இவர்கள். கிறிஸ்துவை விசுவாசத்தினால் அடைந்திருக்கின்ற நாம் கட்டளைகளைத் தொடர்ந்து நிறைவேற்ற அவசியமில்லாதபடி அவரே நமக்காக அந்தக் கட்டளைகளைப் பூரணமாக நிறைவேற்றி நிறைவுசெய்திருக்கிறார் என்கிறது இந்தப் போதனை. கிருபையை அடைந்திருப்பவர்களுடைய கடமை கிறிஸ்துவை நேசிப்பது மட்டுமே, கட்டளைகளைப் பின்பற்றி வாழ்வதல்ல என்கிறார்கள் இவர்கள். கட்டளைகளைப் பின்பற்றுவது நம்மை கிரியைவாதத்துக்கே (Legalism) இட்டுச்செல்லும் என்று நியாயப்பிரமாண நிராகரிப்புவாதம் நம்புகிறது.
இந்த நியாயப்பிரமாண நிராகரிப்புவாதம் கர்த்தரின் கட்டளைகளைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறது. லேவியராகமத்தில் விளக்கப்பட்டிருக்கிற சடங்காச்சாரியம் மற்றும் பலிகள் தொடர்பானவற்றையும், இஸ்ரவேல் நாட்டுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட நீதிக்கட்டளைகளையுமே கிறிஸ்து புதிய ஏற்பாட்டுக்காலத்தில் அவசியமில்லாதபடி செய்திருக்கிறாரே தவிர, என்றென்றைக்கும் பின்பற்ற வேண்டிய ஒழுக்கவிதிகளான பத்துக்கட்டளைகளை அல்ல என்பதை இவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. பத்துக்கட்டளைகளும் நியாயப்பிரமாணத்தின் ஒரு பகுதியாக இருந்தபோதும் அந்தக் கட்டளைகள் ஏனைய கட்டளைகளைவிட விசேஷமானவிதத்தில் வேறுபட்டவை என்பதை அவை கொடுக்கப்பட்ட விதத்திலும், இஸ்ரவேல் நாடாக உருவாகுமுன் படைப்பில் இருந்தே அவை இருந்திருக்கின்றன என்பதையும் கர்த்தரின் மீட்பின் திட்டம் நமக்கு விளக்குவதிலிருந்தும் நாம் அறிந்துகொள்ளுகிறோம். எனவே, கிறிஸ்தவர்கள் பரலோகத்தை அடையும்வரை தங்களுடைய பரிசுத்தவாழ்க்கைக்கு அவசியமான கட்டளைகளாகக் கருதி கிருபையின் மூலமாகப் பத்துக்கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதே வேதம் போதிக்கும் தவிர்க்க முடியாத உண்மை. இதை நியாயப்பிரமாண நிராகரிப்பு வாதம் நிராகரித்து பரிசுத்தமாக வாழ்வதற்கு கிறிஸ்துவின் அன்பு மட்டுமே போதும் என்கிறது. அதாவது, கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை நமக்காக நிறைவேற்றி இருப்பதால் அவர் மேல் அதிக அன்பு வைத்து வாழ்வது மட்டுமே கிறிஸ்தவர்களின் கடமை என்று விளக்குகிறது.
நியாயப்பிரமாண நிராகரிப்பு வாதம் இவாஞ்சலிக்கள் பிரிவுகள் அனைத்திலும் வெவ்வேறு கோணங்களில் தலைவிரித்தாடும் போலிப்போதனை. இது சீர்திருத்த கிறிஸ்தவர்கள் மத்தியிலும் பரவியிருப்பது மிகவும் சோகமானது. இந்தப் போக்கையே ‘புதிய உடன்படிக்கை இறையியல்’ என்ற பெயரில் பாப்திஸ்துகள் மத்தியில் எழுந்த ஒரு பிரிவினரிடமும் காண்கிறோம். நியாயப்பிரமாண நிராகரிப்பு வாதம் முக்கியமாக ஓய்வுநாளைப் (வாரத்தின் முதல் நாள்) பரிசுத்தமாக, ‘கிறிஸ்தவ சபத்துநாளாக’ கிறிஸ்தவர்கள் அனுசரிக்கவேண்டும் என்பதையும் அடியோடு நிராகரிக்கிறது. போலிப்போதனையாளர்களின் வரிசையில் இல்லாவிட்டாலும், Paul K. Jewett, Don A. Carson, John Piper போன்றோர், ஆண்டவருடைய நாளாக ஞாயிறு தினத்தை ஆராதனை நாளாகப் பயன்படுத்தவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டாலும், அதற்கும் பழைய ஏற்பாட்டு சபத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று வாதிடுகிறார்கள். படைப்பில் உருவான சபத்துக்கோட்பாடு புதிய ஏற்பாட்டில் தொடர்கிறது என்பதை இவர்கள் நிராகரிக்கிறார்கள். படைப்பில் உருவான சபத்தின் தொடர்ச்சியாக புதிய ஏற்பாட்டு ஆண்டவருடைய நாளைக்கணிக்க இவர்கள் மறுக்கிறார்கள். ஞாயிறு ஓய்வுநாளின் பயன்பாட்டை இவர்கள் மறுக்காவிட்டாலும், சபத்துக்கோட்பாட்டின்படி முழுமையாக இந்த நாளைக்கையாள வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள். புதிய உடன்படிக்கை இறையியலைப் பின்பற்றுகிறவர்கள் மத்தியிலும், புதிய கல்வினிஸ்ட் என்போர் மத்தியிலும் இந்தப் போக்கை இன்று நாம் காண்கிறோம். என்னைப் பொறுத்தளவில் இதுவும் ஒருவகையான நியாயப்பிரமாண நிராகரிப்புவாதப் போக்குத்தான். தற்காலத்து இவாஞ்சலிக்கள் கிறிஸ்தவ பிரிவுகள் மத்தியிலும், சீர்திருத்த கிறிஸ்தவர்கள் மத்தியிலும் தலைவிரித்தாடும் பல்வேறுவகையான நியாயப்பிரமாண நிராகரிப்புவாதப்போக்கிற்கு இடங்கொடுக்காமல் நம் ஆத்மீகப் பயணம் தொடரும்படியாக நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது. வரலாற்றில் எழுந்திருக்கும் 1689 விசுவாச அறிக்கை போன்ற விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப்போதனைகளும் ஓய்வு நாள் அனுசரிப்பை வலியுறுத்தி விளக்கியிருப்பதை மனதில்கொள்ள வேண்டும்.
5. செழிப்புபதேசம் (Prosperity Gospel)
20ம் நூற்றாண்டில் உருவான போலிப்போதனையே செழிப்புபதேசம். இது பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் பிரிவுகள் மத்தியிலும், அமெரிக்க பாணியிலான மெகா சபைகள் மத்தியிலும் பல்வேறு ரூபங்களில் எல்லா நாடுகளிலும் உலவி வருகிறது. நம்மினத்தில் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் பிரிவுகள் மத்தியில் இது கவலையேற்படுத்தும் வகையில் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது. 1950 களில் அமெரிக்காவில் தொலைக்காட்சி இவெஞ்சலிஸ்டான ஓரல் ரொபட்ஸ் என்பவரால் இது ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1980 களில் ஜிம் பெக்கர், ஜிம்மி சுவேகர்ட் ஆகியோர் இதை பிரபல்யமாக்கினர்.
செழிப்புபதேசப் போதனையாளர், கிறிஸ்துவின் சுவிசேஷம் நமக்கு பரலோகத்தில் மட்டுமல்லாது இந்த உலகத்திலும் ஆத்மீகம் தவிர பொருளாதார, சரீர செழிப்பையும் வாக்குத்தத்தமாக நிறைவேற்றியிருக்கிறது என்று விளக்குகிறார்கள். அதனால் ஒரு கிறிஸ்தவன் வசதியில்லாமல் இந்த உலகத்தில் வாழ்ந்தால் அவன் பாவத்தில் தொடர்ந்திருக்கிறான் என்றும், விசுவாசக்குறைவுடையவனாய் இருக்கிறான் என்றும் அவர்கள் விளக்குகிறார்கள்.
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். (ஏசாயா 53:5)
திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். (யோவான் 10:10)
ஆகிய வசனங்களைப் பயன்படுத்தி இவர்கள், இயேசு கல்வாரியில் மரித்தபோது நம்முடைய சகல நோய்களையும் பூரணமாகக் குணமாக்கவும், நம்முடைய பாவமான ‘பொருளாதார வசதிக்குறைபாட்டையும்’ நீக்கவே மரித்தார் என்று விளக்குகிறார்கள். அத்தோடு கிறிஸ்தவர்கள் தேவ இராஜ்யப்பணிக்கு அதிகமாகக் கொடுத்தால் அவர்களுடைய செல்வம் பலமடங்கு அதிகரிக்கும் என்றும் போதிக்கிறார்கள். வாழ்க்கையில் செழிப்பை கிறிஸ்து சுவிசேஷ அனுபவத்தின் மூலம் தந்திருப்பதால் வேத வசனங்களைப் பயன்படுத்திப் பேசி நாம் செழிப்பை ஆண்டவரிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறது இந்த செழிப்புபதேசத்தைப் போதிக்கும் Word of Faith எனும் பிரிவு.
அமெரிக்காவில் ஜொயல் ஒஸ்டின், பெனிஹின், ஜொய்ஸ் மாயர் போன்றோர் இப்போதனையைத் தற்காலத்தில் பரப்புகிறவர்கள். ஜொயல் ஒஸ்டீன் போன்றோர் வேதப்புரட்டர்கள் என்று சொல்லுமளவுக்கு அளவுக்குமீறிப் போலிப்போதனைகளை முன்வைக்கிறார்கள். நம்மினத்தில் செழிப்புபதேசம் செய்யாத பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் பிரசங்கிகளைக் காணமுடியாது. பால் தினகரன், மோகன் சி. லாசரஸ் போன்றோர் முன்னணி செழிப்புபதேச போலிப்போதகர்கள். பொருளாதார வசதிகள் குறைந்த மக்கள் முன் பணத்தைக் குறியாகக் கொண்டே இந்தப்போதனையாளர்கள் நம்மினத்தில் செயல்பட்டு வருகிறார்கள். சாமன்ய மக்களை ஏமாற்றி கிறிஸ்தவத்தின் பெயரில் பணத்தைச் சுரண்டுவதற்கு இந்தப் போலிப்போதனை அநேகருக்கு நம்மினத்தில் கைகொடுத்து வருகிறது. பால் தினகரன் அளவுக்கு வருமானம் இல்லாத சாதாரண சுவிசேஷகர்களும் பணத்தைப் பெருக்கிக்கொள்ளுவதற்காக இத்தகைய ஊழியத்தில் ஈடுபட்டு ஆத்துமாக்களை வஞ்சித்து வருகிறார்கள். அப்படியான சிலரை நான் நேரிலேயே சந்தித்திருக்கிறேன். பொருளாதரத்தில் வளர்ந்திராத சமூகங்கள் காணப்படுகின்ற ஆசிய நாடுகளிலும், ஆப்பிரிக்காவிலும் எல்லையற்று இந்த செழிப்புபதேசம் தலைவிரித்தாடி வருகிறது.
உண்மையில் கிறிஸ்துவின் சுவிசேஷம் ஆத்மீக செழிப்பைத் தவிர வேறு எந்தச் செழிப்பையும் எவருக்கும் வாக்குத்தத்தமாகக் கொடுக்கவில்லை. இயேசு கிறிஸ்துவோ, அவருடைய அப்போஸ்தலர்களோ அத்தகைய செழிப்பை சுவிசேஷ அனுபவத்தின் மூலம் அடையலாம் என்று வாக்குத்தத்தமாக பிரசங்கங்களில் விளக்கவில்லை. ஒருவர் வசதியுள்ளவராக இருப்பதற்கும் அல்லது வாழ்நாள் முழுவதும் நல்ல சுகத்தோடு வாழ்வதற்கும் சுவிசேஷ அனுபவத்திற்கும் தொடர்பில்லை. சுவிசேஷ அனுபவம் பரலோக வாழ்க்கையையே நிச்சயப்படுத்துகிறது. வேதவார்த்தைகளை மிகத்தவறாகப் பயன்படுத்தி விளக்கங்கொடுத்ததால் உருவானதே செழிப்புபதேசம்; அதற்கும் பரிசுத்த வேதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மாறாக, கிறிஸ்தவ வேதம் நம் துன்பங்களுக்கு மத்தியிலும் நாம் விசுவாசத்தோடு வாழ்ந்து கிறிஸ்துவை மகிமைப்படுத்தவேண்டும் என்று விளக்குகிறது. எலிசாவின் காலத்தில் அவருக்குக் கீழ் பயிற்சிபெற்று வந்த எத்தனையோ தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் மிகவும் வசதிக்குறைவுள்ளவர்களாகவே இருந்திருக்கின்றனர். யோபு தன் வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்கள் கர்த்தர் அனுமதித்து நிகழ்ந்தவையே. கஷ்டங்களும், துன்பங்களும், பொருளாதார வசதியின்மையும் சகல மானுடத்திற்கும் பொதுவானது. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை துன்பங்கள் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. அவர் துன்பங்களுக்கு மத்தியில் எவ்வாறு விசுவாசத்துடன் வாழ்வது என்பதை நமக்குக் கற்றுத்தருகிறார். பேதுரு எழுதிய நிருபங்களில் ஓரிடத்திலாவது துன்பமற்ற, வசதிகள் கொண்ட வாழ்க்கைக்கான வழிமுறைகளை அவர் விளக்கவில்லை; மாறாக துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு அவர் ஆறுதல் மட்டுமே தந்திருக்கிறார். செழிப்புபதேசம் இன்று ஆத்துமாக்களை மெய்யான சுவிசேஷத்திலிருந்தும், மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கையிலிருந்தும் திசைதிருப்பும் போலிப்போதனையாக உலவி வருகிறது.
போலிப்போதனைகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளுதெப்படி?
1. பொதுவான வேத அறிவு கிறிஸ்தவர்களுக்கு அவசியம் – நம்மினத்தில் பொதுவாகவே ஆத்துமாக்களுக்கு வேதஅறிவு குறைவாக இருப்பது அவர்கள் இலகுவாக போலிப்போதனைகளின் வலையில் விழுந்துவிடுவதற்கு பெரும் வாய்ப்பாக இருந்து விடுகிறது. கிறிஸ்தவர்கள் வேதத்தைக் கருத்தோடு வாசிப்பது அவசியம். அத்தோடு வேதத்தில் ஆரோக்கியமான பொதுவான அறிவு அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் அவசியம். வேதம் மட்டுமே நமக்கு கடவுளைப்பற்றியும், அவருடைய செயல்களைப் பற்றியும் விளக்குவதால் அதை அதிகாரமுள்ள வார்த்தையாகக் கொண்டே நாம் அனைத்தையும் ஆராய்ந்து சரி எது, தவறு எது என்று பிரித்துத் தரம்பார்த்து நம்ப வேண்டும். அத்தகைய பொதுவான ஆரோக்கியமான வேதஅறிவை கிறிஸ்தவர்கள் எப்பாடுபட்டாவது பெற்றுக்கொள்ள வேண்டும். அது மட்டுமே பெரும்பாலான வேதப்புரட்டுகளிலும், போலிப்போதனைகளின் வலைகளிலும் விழுந்து விடுவதை தடுத்துக்கொள்ள உதவும். வேதத்தில் நல்லறிவில்லாத சிலர் பலவிதமான போலிப்போதனைகளில் சிக்கிக் காலத்தை வீணாக்கிவிட்டு நான் பணிபுரியும் சபைக்கு வருவதை அனுபவத்தில் காண்கிறேன். அவர்களில் சிலருக்கு தங்களுடைய கிறிஸ்தவ அனுபவத்தைக் குறித்தும் சந்தேகம் இருந்திருக்கிறது. இதெல்லாம் முறையான வேதஅறிவில்லாததால் உண்டாகும் பாதிப்புகள்.
2. விசுவாசத்துக்குரிய அடிப்படை சத்தியங்களை கிறிஸ்தவர்கள் அறிந்துவைத்திருக்கவேண்டும் – பொதுவான வேத அறிவுக்கு மேலாக, அடிப்படையான விசுவாசத்திற்குரிய சத்தியங்களை கிறிஸ்தவர்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும். இவற்றைத் திருச்சபைகள் தெளிவாக அறிந்துவைத்திருந்து முக்கியமாக சபை அங்கத்தவர்களுக்குப் போதிக்கவேண்டும். நம்மினத்தில் தெளிவான போதனைகளைக்கொண்டோ, முறையான அங்கத்துவத்தைக்கொண்டோ, சத்தியத்தெளிவுள்ள தலைவர்களைக்கொண்டோ சபைகள் அமையாதிருப்பதால்தான் போலிப்போதனைகள் ‘சபைகள்’ என்ற பெயரில் இருக்கும் அநேக இடங்களில் ஆண்டுவருகின்றன. அதுவும் தனிநபர் ஆளுகையில் இருக்கும் கிறிஸ்தவ அமைப்புகள் போலிப்போதனையின் கருவிடங்களாக இருந்து ஆத்துமாக்களை நம்மினத்தில் வஞ்சித்து வருகின்றன. அடிப்படையான விசுவாசத்துக்குரிய சத்தியங்களை நமது முன்னோர்கள் விசுவாச அறிக்கைகளிலும், வினாவிடைப் போதனைகளிலும் தந்திருக்கின்றனர். முப்பத்தி இரண்டு அதிகாரங்களில் அடிப்படை சத்தியங்களை 1689 விசுவாச அறிக்கை நமக்கு வெளிப்படையாகவே விளக்குகிறது. இவை, நாம் விசுவாசிக்க வேண்டிய சத்தியங்களைத் தெளிவாக அறிந்துவைத்திருந்து போலிப்போதனைகளிடம் சிக்கிவிடாமல் இருக்க நம்மைப் பாதுகாக்கும். விசுவாச அறிக்கைகளையும், வினாவிடப்போதனைகளையும் அடிப்படையாகக்கொண்டு அமைக்கப்படாத சபைகளும், அவற்றை விசுவாசத்தோடு பயன்படுத்தாத சபைகளும், ஆத்துமாக்களுமே பொதுவாகப் போலிப்போதனைகளிடம் இலகுவாக சிக்கிவிடுகிறார்கள். உண்மையில் இவற்றைத் தெளிவாக அறிந்துவைத்திராத எவரும் வரலாற்றுக் கிறிஸ்தவத்தோடு, அதாவது கிறிஸ்துவும், அப்போஸ்தலர்களும் ஸ்தாபித்து வளர்ந்துவருகின்ற கிறிஸ்தவத்தோடு சம்பந்தமில்லாதவர்களாகவே இருப்பார்கள். (1689 விசுவாச அறிக்கையையும், கிறிஸ்தவ வினாவிடைப்போதனை நூலையும் சீர்திருத்த வெளியீடுகள், சென்னை முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்).
பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் சபைகளில் தெளிவான அடிப்படை வேதசத்தியங்களுக்கு இடமில்லாததால்தான் செழிப்புபதேசமாகிய போலிப்போதனைக்கு அவை இரையாகியிருக்கின்றன. சபை அமைப்பையும், தெளிவான வேதக்கோட்பாடுகளைப் பின்பற்றியும் அமைக்கப்படாத சுயாதீன சபைகளில் ஆர்மீனியனிசமும், காலப்பாகுபாட்டுக் கோட்பாடும், கிரியைவாதமும், நியாயப்பிரமாண நிராகரிப்புவாதமும் ஆதிக்கம் செலுத்துவதில் ஆச்சரியமே இல்லை. விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப்போதனைகளும் வேத சத்தியங்களை மட்டுமே விளக்குபவையாக இருந்து வேதவழியில் ஆத்துமாக்கள் பயணம் செய்யத் துணைபோகின்றன.
3. போலிப்போதனைகளை கிறிஸ்தவர்கள் இனங்கண்டுகொள்ள வேண்டும் – கிறிஸ்தவர்கள், தற்காலத்தில் நம்மத்தியில் வலம் வந்துகொண்டிருக்கும் போலிப்போதனைகளைப் பற்றியும் அறிந்துவைத்திருப்பது அவசியம். நம்மினத்தில் சில காலத்துக்கு விஷத்தைப்போல ஆபத்தேற்படுத்திவந்த, இந்து மதத்தில் இயேசுவைக் காணும் போதனைக்குப் பரவலாகவே கிறிஸ்தவர்கள் பலியாகியிருந்தார்கள். அதற்குக் காரணம் வேதஅறிவின்மையும், போலிப்போதனைகளை அடையாளம் கண்டுகொள்ளும் பக்குவமின்மையுந்தான். போதகர்கள் சத்தியத்தெளிவுள்ளவர்களாக இருந்து போலிப்போதனைகளை அடையாளம் கண்டு ஆத்துமாக்கள் அவற்றில் விழுந்துவிடாமல் இருக்கத் துணைபுரிகிறவர்களாக இருக்கவேண்டும். சத்தியத்தை எந்தளவுக்கு தெளிவாக விளக்கிப் போதித்து ஆத்துமாக்களை வழிநடத்தவேண்டுமோ, அந்தளவுக்கு அசத்தியமான போலிப்போதனைகளில் இருந்தும் ஆத்துமாக்களையும், சபைகளையும் காக்கவேண்டிய பொறுப்பும் போதகர்களுக்கு இருக்கிறது.
முடிவாக . . .
வேதப்புரட்டுகளும், போலிப்போதனைகளும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைவரையும் இந்த உலகத்தில் திருச்சபையைத் தாக்கவே செய்யும். அவற்றில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும்படி இயேசு கிறிஸ்துவும், அப்போஸ்தலர்களும் அடிக்கடி எச்சரித்து வந்திருக்கிறார்கள். புதிய ஏற்பாட்டு நிருபங்களில் போலிப்போதனைகளை அடையாளங்கண்டு எச்சரிக்காத நிருபமே இல்லை என்றுதான் கூறவேண்டும். இதை நான் எழுதி விளக்கும்போது நம்மினத்துக் கிறிஸ்தவம் இருந்துவரும் மிகவும் ஆபத்தான சூழலை எண்ணி என்னால் வருந்தாமல் இருக்கமுடியவில்லை. தெளிவான சத்தியங்களை அறியாமலும், அவற்றுக்கு இருதயத்திலும், வாழ்க்கையிலும் இடங்கொடுக்காமலும் வெறும் சராசரிகளாக, பெயரளவில் கிறிஸ்தவர்களாக இருந்துவருகிறவரை போலிப்போதனைகளுக்கு நம்மினத்துக் கிறிஸ்தவம் தொடர்ந்தும் இரையாகிவரும். முக்கியமாக இளைஞர்கள் இந்த 21ம் நூற்றாண்டில் பக்திவிருத்தியோடு சிந்திக்கிறவர்களாக இருந்து வேதசத்தியங்களில் தேர்ச்சியடைந்து வருவது எதிர்காலத்தில் கிறிஸ்தவம் நல்ல நிலையில் காணப்பட ஆண்டவர் கிருபை பாராட்டலாம்.
மிகவும் அருமையான விளக்கம். 🙏 நன்றி.
மற்றும் ஒரு சிறு வேண்டுகோள்:
1)எவை எல்லாம் போலி மற்றும் கள்ள உபதேசம்
2) இவைகள் யாரால் எப்போது உருவாக்கப்பட்டது
3) அதில் உள்ள துர் உபதேசம் என்ன என்பதை சிறு குறிப்போடு
ஒரு சிறு Chart அட்டவணையாக
வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம். நன்றி உங்கள் பத்திரிகை ஊழியம் மிகவும் ஆசிர்வாதமாய் உள்ளது.
LikeLike
உங்கள் கருத்துக்கு மிகுந்த நன்றி. போலிப்போதனைகள் ஏதேன் தோட்டத்திலேயே ஆரம்பமாகிவிட்டன. எல்லாப் போலிப்போதனைகள், துர்உபதேசங்களுக்கும் அடிப்படைக் காரணம் சாத்தானே. அவன் ஏதேனில் நமது முதல் பெற்றோரை ஏமாற்றுவதற்காக போலிப்போதனையை அவர்களுக்கு உபதேசித்திருந்தான். அதற்கு தலைசாய்த்து நமது முதல் பெற்றோர் வீழ்ச்சியை சந்தித்தார்கள். பழைய ஏற்பாட்டில் போலித்தீர்க்கதரிசிகள் இருந்திருப்பதை ஆரம்பத்திலிருந்தே கவனிக்க முடிகிறது. போலிப்போதனைகள் என்பவை கர்த்தருடைய தெளிவான போதனைகள் அனைத்திற்கும் முற்றிலும் எதிர்மறையானவை. ஆகவே, வேதபோதனைகளைத் தெளிவாக நாம் அறிந்துவைத்திருந்து அதன் மூலம் மட்டுமே எல்லாவகைப் போலிப்போதனைகளையும் எக்காலத்திலும் இனங்கண்டுகொள்ள வேண்டும். வேதபோதனைகளைத் தெளிவாக நாம் அறிந்துவைத்திருப்பதற்காகத்தான் 1689 விசுவாச அறிக்கை, கிறிஸ்தவ வினாவிடைப்போதனைகள் உருவாயின. சபைகள் போலிப்போதனைகளில் விழுந்துவிடாமல் இருக்கவே இவை தயாரிக்கப்பட்டன. அவற்றைக் கவனமாகப் படித்துத் தேர்ந்து சத்தியத்தில் நமக்குத் தெளிவிருக்கும்போதே எந்தப் போலிப்போதனைகளையும் இனங்கண்டுகொள்ள முடியும். போலிப்போதனைகளை இனங்கண்டுகொள்ள வேறுவழியில்லை.
போலிப்போதனைகள் அனைத்திற்குமான முழுப்பட்டியலைத் தயாரித்துவிட முடியாது. அவை தொடர்ந்து வெவ்வேறுரூபங்களில் எக்காலத்திலும் உருவாகிக்கொண்டேயிருக்கும். பொதுவாகப் பிரபலமாக இருந்திருக்கும் போலிப்போதனைகளை ‘வரலாற்று இறையியல்’ அடையாளம் காட்டுகின்றது. வரலாற்று இறையியலைப் படிப்பது இதற்கு உதவுகிறது. தொடர்ந்திருந்து வருகின்ற பொதுவான போலிப்போதனைகளை மட்டுமே நான் பட்டியலிட்டு இந்த ஆக்கத்தில் தந்திருக்கிறேன். திருமறைத்தீபத்தை ஆரம்ப இதழில் இருந்து வாசித்து வருவீர்களானால், அநேகமான போலிப்போதனைகளை வெவ்வேறு ஆக்கங்களில் தெளிவாக விளக்கியிருக்கிறேன். உங்களுடைய ஆலோசனைக்கு மறுபடியும் நன்றி.
LikeLike
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
என் வேண்டுகோள்களுக்கு இணங்க நீங்கள் தந்த பதிலுக்கு நன்றி ஆரம்பதிலிருந்து நீங்கள் எழுதிய புத்தகத்தை என்னால் முடிந்த அளவு அநேக புத்தகத்தை பாதுகாத்து வாசித்து வருகிறேன் அதிலிருந்து கற்றுக்கொடுத்தும் வருகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
LikeLike