வரலாற்றுக் கல்வினிசமும், கல்வினிச ஐம்போதனைகளும்

ஜே. ஐ. பெக்கரின் விளக்கம்

JIPacker(கிறிஸ்தவ வரலாற்றில் கல்வினிசம் என்ற பெயரில் பொதுவாக அழைக்கப்பட்டு வந்திருக்கிற சீர்திருத்த இறையியல் பற்ற¤ ஜே. ஐ. பெக்கர் வரைந்துள்ள ஆக்கம் இது. பெக்கர் இந்த ஆக்கத்தை தத்துவார்த்த ரீதியில், வாதப்பிரதிவாதங்களோடு எழுதியிருப்பதால் நம்மினத்துக் கிறிஸ்தவர்களுக்கு அதைப்புரிந்துகொள்வது கொஞ்சம் இடறலானதாக இருக்கும் என்பதால் ஆங்காங்கு என் வார்த்தைகளில் அதை விளக்கியிருக்கிறேன்; பெக்கரின் சிந்தனைப் போக்கிற்குத் தடையேற்படாதபடி அவருடைய எழுத்தை அப்படியே தந்திருக்கிறேன். ஆக்கம் முழுவதும் ‘கல்வினிசம்’ என்ற பதத்தைப் பயன்படுத்திப் பெக்கர் சீர்திருத்த இறையியலையே (Reformed Theology) விளக்குகிறார் என்பதை வாசகர்கள் நினைவில் வைக்கவேண்டும். கல்வினிசம் எனும் முழுமையான சீர்திருத்த இறையியலை அவர் ‘கல்வினிச ஐம்போதனைகளில்’ இருந்து வேறுபடுத்தி, கல்வினிச ஐம்போதனைகளின் குறைபாட்டை இந்த ஆக்கத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார். கல்வினிச ஐம்போதனைகளை மட்டுமே முழுமையான சீர்திருத்த இறையியலாகக் கருதுவதன் ஆபத்தை அவர் இந்த ஆக்கத்தில் விளக்கியிருக்கிறார். இன்று புதிதாக சீர்திருத்த போதனைகளைக் கற்றுக்கொள்ளுபவர்கள் இதை உணரவேண்டியது மிக அவசியம். சீர்திருத்த இறையியல், கல்வினிசம் ஆகிய பதங்களையும் இறையியல்பூர்வமாக சரியாகப் புரிந்துகொண்டு பயன்படுத்தவும் இது துணைபுரியும்.)

death-3dஅநேக வருடங்களுக்கு முன் 1959ல் பேனர் ஆவ் டுருத் பியூரிட்டன் ஜோன் ஓவனின் நூலான The Death of Death in the Death of Christ (கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம்) எனும் ஆங்கில நூலை முதன் முதலாகப் பிரசுரித்தபோது அந்நூலுக்கு அறிமுகமாக ஜே. ஐ. பெக்கரின் அறிமுகத்தையும் நூலோடு இணைத்துப் பிரசுரித்தார்கள் (Introduction to the Death of Death in the Death of Christ). அந்த அறிமுகம் 25 பக்கங்களைக் கொண்ட நீண்ட அறிமுகம். ஜோன் ஓவன் தன் படைப்பில் கிறிஸ்துவின் மரணத்தின் பலனைச் சகல உலக மக்களும் பொதுவாக அடைந்து அனுபவிப்பார்கள் என்ற உலகளாவிய இரட்சிப்பு (Univeral Salvation) எனும் போதனைக்கு எதிரான வாதங்களை முன்வைத்து, கிறிஸ்துவின் சிலுவைப்பலி கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்பதை விளக்குவதாக இருந்தது. இந்தப் போதனைபற்றி விளக்கும் நூல்களில் அதிமுக்கியமானது ஜோன் ஓவனின் படைப்பு. ஜோன் ஓவன் தன் ஞானமனைத்தையும் பயன்படுத்தி தகுந்த வேதஆதாரங்களை முன்வைத்து நூலில் கிறிஸ்துவின் பலி எல்லோருக்குமானதல்ல என்பதை அருமையாக விளக்கியிருந்தார். ஜே. ஐ. பெக்கர் சொல்லுகிறார், ‘அசைக்கமுடியாத ஆணித்தரமான ஓவனின் வாதங்களை வாசிக்கும் சிலர் அதிர்ச்சியில் புத்தகத்தை வாசிப்பதைக்கூட நிறுத்திவிடலாம்’ என்று. இதை அவர் உலகளாவிய இரட்சிப்பு எனும் போதனையைப் பின்பற்றுகிறவர்களை மனதில் கொண்டே குறிப்பிட்டிருக்கிறார்.

பெக்கரைப் பொறுத்தவரையில் ஓவனின் நூல் சமகாலத்தில் மறுபடியும் மெய்யான சுவிசேஷத்தை நிலைநிறுத்தப் பேருதவி செய்கிறது. ஓவனின் போதனை கிறிஸ்துவின் மீட்பு யாருக்கு, என்பதைக் குறித்தது; அதற்கும் சுவிசேஷத்திற்கும் என்ன தொடர்பு என்று யாராவது சிந்திக்கலாம். நிச்சயம் பெரிய தொடர்பு இருக்கிறது என்கிறார் பெக்கர். உங்களுடைய சுவிசேஷம் கடவுளுக்கு மகிமை தருவதாக இருக்கவேண்டுமா, மனிதனை மகிமைப்படுத்துவதாக இருக்கவேண்டுமா? கடவுளை மகிமைப்படுத்துவதுதான் உங்கள் நோக்கமாக இருந்தால் ஓவனின் நூலை வாசியுங்கள் என்கிறார் பெக்கர். கடவுளை நம்பக்கூடிய மனிதனின் இயல்பான தன்மை, இரட்சிப்புக்கு மூலகாரணமாக இருக்கும் கர்த்தரின் தெரிந்துகொள்ளுதலையும், கிறிஸ்து தன்னுடைய ஆடுகளுக்காக சிலுவையில் மரித்தது ஆகிய அதிமுக்கிய சத்தியங்களை இன்றைக்கு சுவிசேஷத்தில் பலர் பிரசங்கிப்பதில்லை என்கிறார் பெக்கர். இந்த உண்மைகள் பாவிகளை சங்கடப்படுத்தும், அதனால் இவை பயனற்றவை என்று அவர்கள் தாங்களாகவே முடிவுசெய்து, தங்களுடைய வல்லமையால் கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு இவை பாவிகளுக்குத் தடையாக இருந்துவிடும் என்று கருதி அவற்றை அவர்கள் சுவிசேஷத்தில் சொல்லாமல் மறைத்துவிடுகிறார்கள் என்கிறார் பெக்கர். ஆனால், இந்த சத்தியங்களை அடிப்படையாகக் கொண்டே சுவிசேஷத்தை நாம் பிரசங்கிக்க வேண்டும் என்கிறார் பெக்கர். சுவிசேஷத்தின் அடிப்படை சத்தியங்களை விலக்கிவிட்டு அரைகுறையாக அதைப் பிரசங்கிப்பது மெய்யான சுவிசேஷமல்ல என்று கூறும் பெக்கர், நாம் மறுபடியும் அப்போஸ்தலர் காலத்தில் இருந்து பிரசங்கிக்கப்பட்டு வந்திருக்கும் சுவிசேஷத்தை, வேதபூர்வமான சுவிசேஷத்தை, நம்முடைய பிரசங்கத்தையும் சுவிசேஷ நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கும் சுவிசேஷத்தை நாம் பிரசங்கிக்க வேண்டும் என்கிறார். இதுவே காலத்தின் கட்டாயமாக இருக்கிறது என்கிறார் பெக்கர். இந்த விஷயத்திலேயே ஓவனின் கிறிஸ்துவின் மீட்பைப்பற்றிய நூல் நமக்கு உதவுகிறது என்கிறார் அவர்.

கடந்த 20ம் நூற்றாண்டிலும், இந்த நூற்றாண்டிலும் சுவிசேஷம் என்பது, ஆண்டவர் நம்மை நேசிக்கிறார், அவரை விசுவாசித்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டால் உடனடியாகப் பரலோகம் போகலாம் என்ற ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பக் கோழி கொக்கரக்கோ சொல்லுவதைப்போல அறிவிப்பதாக மட்டுமே இருக்கின்றது. இதற்குமேல் எந்த வேதஉண்மைகளையும் விளக்கினால் விசுவாசிக்க வேண்டிய பாவிக்கு நாம் அநாவசியமான தடைகளை ஏற்படுத்தி அவனை கிறிஸ்துவிடம் வரவிடாமல் செய்துவிடுகிறோம் என்ற ஆழமான நம்பிக்கை சுவிசேஷ கிறிஸ்தவத்தில் பதிந்து காணப்படுகிறது. இறையியல் போதனைகள் எதையும் கொண்டிராத ஒருவகை அரைகுறை சுவிசேஷமே பிரசங்க மேடைகளை இன்று ஆக்கிரமித்து ஆண்டு வருகிறது. நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் இதற்குமேல் எதையும் சுவிசேஷப் பிரசங்கத்தில் எதிர்பார்க்க முடியாதிருக்கிறது. ஜே. ஐ. பெக்கரின் ஆக்கம் மேலைத்தேய சுவிசேஷப் பிரசங்கத்தை மனதில் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும் இந்த நூற்றாண்டில் நம்மினத்துக் கிறிஸ்தவத்தின் நிலைக்கு அப்பட்டமாகப் பொருந்தி வருகிற ஆக்கமாக ஓவனின் நூலுக்கான அவருடைய அறிமுகம் இருக்கிறது.

ஓவனின் நூலின் அருமையை உணராத பலர் கிறிஸ்துவின் மீட்பைப்பற்றிய அவரின் வாதத்தை எதிர்த்து நூலைக் குறைகூறியிருக்கிறார்கள். உண்மையில் அந்தப் போதனையை வெறுக்கிறவர்கள் பலர். அதற்குக் காரணம் நமக்குத் தெரியாததல்ல; அந்தளவுக்கு ஆர்மீனியனிசப் போதனை (செமி-பெலேஜியனிசம்) கிறிஸ்தவ உலகில் பரவி உண்மை தெரியாதபடி அநேகரின் கண்களை மறைத்து வைத்திருக்கிறது. இதை நன்குணர்ந்த ஜே. ஐ. பெக்கர் இந்நூலுக்கான அறிமுகத்தை எழுதி ஓவனின் வாதத்தின் மெய்த்தன்மையை பலரும் அறியச் செய்தார். ஜே. ஐ. பெக்கர் பியூரிட்டன் போதனைகளைக் கரைத்துக் குடித்தவர். அவர் மிகவும் ஆற்றல் மிக்க இறையியலறிஞர். பெக்கரின் இறையியலில் சில விஷயங்களோடு என்னால் ஒத்துப்போக முடியாமல் இருந்தபோதும் இந்த அறிமுகத்தை இத்தனைத் திறமையாக இன்னொருவர் எழுதியிருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. பெக்கர் ஒரு சிந்தனாவாதி; எழுத்தாற்றல் படைத்தவர். காரணகாரியங்களோடு உண்மைகளை ஆராய்ந்து நிலைநாட்டுபவர். எல்லாவிஷயங்களிலும் அவருடைய முடிவுகளை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் அவசியம் இல்லாவிட்டாலும், அவருடைய நுணுக்கமான ஆய்வுத்திறனை எதிலும் கவனித்துப் பாராட்டாமல் இருக்கமுடியாது. அதை இந்த அறிமுகத்தை வாசிக்கிறவர்கள் உணருவார்கள். ஆங்கிலத்தில் உள்ள பெக்கரின் அறிமுகம் ஒரு சிறந்த வக்கீலின் வாதத்திறத்தோடு தத்துவார்த்தரீதியில் எழுதப்பட்டது. பெக்கரின் வாதங்களைப் புரிந்துகொள்ள அவரின் அறிமுக உரையை ஒருவர் மிகக்கவனத்தோடும், நிதானத்தோடும் வாசிப்பது அவசியம்.

தன் அறிமுக உரையின் ஆரம்பத்தில் பெக்கர் சொல்லுகிறார், ‘ஓவனின் நூலை வாசிக்கும்போது, ஆ! மறுபடியும் “வரையறுக்கப்பட்ட மீட்பு” (Limited Atonement) ஆகிய போதனையைப் பெரிதுபடுத்துகிற நூல் இது; வேறு எதை இது செய்கிறது என்று சிலர் எதிர்ப்புக்குரல் எழுப்புவார்கள்’ என்கிறார். சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிற சீர்திருத்த இறையியலாளன் வரையறுக்கப்பட்ட மீட்பைத் தவிர வேறு எதிலும் அக்கறை காட்டுவதில்லை என்றும், நம்மையெல்லாம் கல்வினிசத்தைப் பின்பற்ற வைக்கின்ற வேலையைத்தான் ஓவன் செய்கிறார் என்ற கண்டனக்குரலையும் எழுப்புவார்கள் என்கிறார் பெக்கர். இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லும்முன் பலருடைய மனதிலும் இருக்கும் கல்வினிசம் பற்றிக் காணப்படும் தப்பான எண்ணங்களை முதலில் களைவது அவசியம் என்கிறார் பெக்கர். அதனால், பொதுவாக கல்வினிசத்தைப் பற்றியும், குறிப்பாக ஐம்போதனைகளைப் பற்றியதுமான வரலாற்று, இறையியல் விளக்கத்தை முதலில் தர ஆரம்பிக்கிறார் பெக்கர்.

இந்த ஆக்கத்தில் ஜிம் பெக்கரின் அறிமுக உரை முழுவதையும் விளக்குவது என்னுடைய நோக்கமல்ல. அவருடைய அறிமுக உரையில் கல்வினிசத்தைப் பற்றியும், அதற்கும் கல்வினிச ஐம்போதனைகளுக்கும் இடையில் காணப்படும் வேறுபாட்டையும் அவர் விளக்கியிருப்பதை மட்டுமே தரவிரும்புகிறேன். இந்தப் பகுதியே பெக்கரின் அறிமுக உரைக்கு அடிப்படையாக அமைகிறது. பெக்கரைப் பொறுத்தவரையில் இதைப் புரிந்துகொள்ளாதவர்களால் ஓவனின் நூலையும் புரிந்துகொள்வது கடினம். பெக்கரைப் பொறுத்தவரையில் “வரையறுக்கப்பட்ட மீட்பு” ஆகிய போதனைக்கு எதிராகக் குரலெழுப்புகின்றவர்கள் இரட்சிப்பு பற்றிய வரலாற்றுக் கல்வினிசப் போதனை பற்றிய முழுமையான ஞானமில்லாததாலேயே அதைச் செய்கிறார்கள். வரலாற்றுக் கல்வினிசத்தின் இரட்சிப்புப் பற்றிய போதனையை ஐம்போதனையாகிய விதிமுறை முழுமையாக விளக்கத் தவறிவிடுகிறது என்பதே இந்த அறிமுக உரையில் பெக்கரின் வாதம். அதாவது, வரலாற்றுக் கல்வினிசத்தின் இரட்சிப்புப்பற்றிய போதனையைத் தெளிவற்றதாக்கிவிடுகிறது கல்வினிச ஐம்போதனைகளாகிய விதிமுறை என்கிறார் பெக்கர். அது எப்படி என்று கேட்கிறீர்களா? நிதானத்தோடு இந்த ஆக்கத்தில் நான் விளக்கப்போகும் பெக்கரின் வாதத்தை வாசியுங்கள்.

1. கல்வினிச ஐம்போதனைகள் என்பது, பெல்ஜிக் செமி-பெலேஜியன்கள் (the Remonstrance) என்ற பெயரில் அழைக்கப்பட்டவர்கள் எதிர்மறையாக முன்வைத்த ஐந்துபோதனைகளுக்கு கொடுக்கப்பட்ட பதில் மட்டுமே.

இது 17ம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் நிகழ்ந்தது. வரலாற்றில் ஆர்மீனியனிசம் என்று அறியப்பட்டிருக்கும் இந்த செமி-பெலேஜியனிசம் இரண்டு முக்கிய தத்துவங்களின் அடிப்படையில் உருவானது:

 1. முதலாவது, தெய்வீக இறையாண்மையும் தனிமனித சுயாதீனமும் இணைந்து பயணிக்கமுடியாதவை, அதனால் இறையாண்மையும் மனிதனின் கடமையும் ஒன்றுக்கொண்று பொருந்திப்போக முடியாதவை.
 2. இரண்டாவது, மனிதன் எதற்கும் பொறுப்பாளியாயிருப்பதை அவனுக்கிருக்கும் ஆற்றல் இடங்கொடு¢க்கவில்லை.

இந்த இரண்டின் அடிப்படையிலும் ஆர்மீனியன்கள் மேலும் இரண்டு முடிவுகளுக்கு வந்தார்கள்:

அ. ஒன்று, விசுவாசத்தை வேதம் சுயாதீனமான மானுடக் கடமையாகக் கணிப்பதால், அது கடவுளிடம் இருந்து உருவாக முடியாது; அது மனிதன் கடவுளின் பங்கில்லாமல் தானே சுயமாகச் செய்யும் ஒன்றாகும்.

ஆ. இரண்டாவது, சுவிசேஷத்தைக் கேட்கும் அனைவரினதும் கடமைப்பாடாக விசுவாசத்தை வேதம் கருதுவதால், விசுவாசிக்கக்கூடிய வல்லமை அனைவரிலும் பொதுவாகக் காணப்படுகிறது.

ஆகவே, இவற்றின் அடிப்படையில் ஆர்மீனியன்கள் பின்வரும் ஐந்து கோட்பாடுகளை முன்வைத்தார்கள்.

 1. சுவிசேஷத்தைக் கேட்கும்போது இரட்சிப்புக்குரிய விசுவாசத்தைக் கொண்டிருக்க முடியாதளவுக்கு மனிதன் ஒருபோதும் முழுமையாகப் பாவத்தினால் கறைபடிந்துபோகவில்லை.
 2. சுவிசேஷத்தை மறுதலிக்க முடியாதபடி மனிதன் கடவுளால் ஒருபோதும் ஆதிக்கம் செலுத்தப்படவில்லை.
 3. மனிதன் தன்னுடைய சுயாதீனமான சித்தத்தைப் பயன்படுத்தி கிறிஸ்துவை விசுவாசிப்பான் என்ற கடவுளின் முன்னோக்குப் பார்வையே இரட்சிக்கப்படுகிறவர்களுக்கான அவருடைய தெரிந்துகொள்ளுதலுக்குக் காரணமாக இருக்கிறது.
 4. கிறிஸ்துவின் மரணம் எவருடைய இரட்சிப்பையும் நிறைவேற்றவில்லை; அது எவருக்கும் விசுவாசத்தை ஈவாகவும் சம்பாதிக்கவில்லை. (அத்தகைய ஒரு ஈவு இல்லை): கிறிஸ்துவை விசுவாசிக்க விரும்புகிறவர்கள் இரட்சிக்கப்படும்படியான ஒரு வாய்ப்பை மட்டுமே அது உருவாக்கியது.
 5. கிருபையின் ஸ்தானத்தில் தொடர்ந்திருப்பதற்கு விசுவாசத்தைக் தக்கவைத்துக்கொள்ளுவது விசுவாசிகளின் கையிலேயே இருக்கிறது; அதைச் செய்யமுடியாதவர்கள் பின்வாங்கிப்போய் இரட்சிப்பை இழந்துபோவார்கள். இந்த முறையில் ஆர்மீனியனிசம், மனிதனுடைய இரட்சிப்பு அவனுடைய கையிலேயே தங்கியிருப்பதாக விளக்கியது. அத்தோடு, இரட்சிக்கும் விசுவாசம் ஆரம்பத்தில் இருந்தே மனிதனுடைய கிரியையாகவும், அவனுக்கே சொந்தமானதாகவும், கடவுளிடம் இருந்து அவனுக்குக் கிடைக்காததொன்றாகவும் அது விளக்கியது.

நெதர்லாந்தில் சினொட் ஆவ் டோர்ட் என்ற திருச்சபைத் தலைவர்களை உள்ளடக்கிய இறையியல் ஆய்வுக்குழு 1618ல் கூடி, ஆர்மீனியன்களின் ஐந்து போதனைகளுக்கும் எதிரான பதில்களாக கல்வினிச ஐம்போதனைகளை முன்வைத்தது. கல்வினிச ஐம்போதனைகள் மாறுபட்ட ஒரு தத்துவத்தில் இருந்து பிறந்தவையாக இருந்தன: அதாவது, வேததத்துவமான ‘இரட்சிப்பு கர்த்தருடையது’ என்பதில் இருந்து அவை உருவாகியிருந்தன. அவற்றை பின்வருமாறு சுருக்கலாம்:

 1. பாவத்தில் வீழ்ந்திருக்கும் மனிதன் தன்னுடைய இயல்பான ஸ்தானத்தில், ஊக்கப்படுத்தும்படியான சகலவித புறச்சாதனங்களையும் அடைந்திருந்தபோதும், நியாயப்பிரமாணத்தை விசுவாசிக்கக்கூடிய எந்த வல்லமையும் இல்லாதவனாக இருப்பதுபோல் சுவிசேஷத்தையும் விசுவாசிக்க முடியாத வல்லமையற்றவனாக இருக்கிறான்.
 2. கடவுளின் தெரிந்துகொள்ளுதல் சுயாதீனமானதும், இறையாண்மையுள்ளதும், நிபந்தனையற்ற பாவிகளின் தெரிவாகவும் இருப்பதோடு, பாவிகளைப் பாவிகளாக மட்டும் கணித்து, விசுவாசத்தை ஈவாக அடைந்து கிறிஸ்துவால் மீட்கப்படவேண்டியவர்களாகவும், அவர்கள் மகிமையை அடைகிறவர்களாகவும் செய்யக்கூடியதாக இருக்கிறது.
 3. தெரிந்துகொள்ளப்பட்டவர்களை இரட்சிப்பதே கிறிஸ்துவின் மீட்புப் பணியின் முடிவும், இலக்குமாக அமைந்திருக்கிறது.
 4. மனிதர்கள் விசுவாசத்தை அடையும்படிச் செயல்படும் பரிசுத்த ஆவியானவர் தன் இலக்கை நிறைவேற்றுவதில் ஒருபோதும் தவறமாட்டார்.
 5. எவரும் வெல்லமுடியாத கடவுளின் வல்லமை விசுவாசிகள் கிருபையிலும் விசுவாசத்திலும் நிலைத்திருந்து மகிமையை அடையும்படியாகச் செய்கிறது.

இந்த ஐம்போதனைகளும் சௌகரியமான விதத்தில் ‘டுலிப்’ என்ற ஆங்கில வார்த்தையின் (Tulip) மூலம் விளக்கப்படுகிறது: முழுமையான சீரழிவு, நிபந்தனையற்ற தெரிந்துகொள்ளுதல், வரையறுக்கப்பட்ட மீட்பும், நிராகரிக்கமுடியாத கிருபை, பரிசுத்தவான்களின் பாதுகாப்பு.

வேதபூர்வமான சுவிசேஷத்தை விளக்குகின்ற இந்த இரண்டு ஒத்திசைவான விளக்கங்களும் ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிர்மறைத் திசையில் நிற்கின்றன என்று கூறும் பெக்கர், இந்த இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு அவை வலியுறுத்தும் காரியங்களில் அல்லாமல் அவற்றின் உள்ளடக்கத்திலேயே தங்கியிருக்கின்றன என்கிறார். அதை மேலும் விளக்க எத்தனிக்கும் பெக்கர், இவற்றில் ஒன்று இரட்சிக்கும் கடவுளை விளக்குகிறது என்றும், அதற்கு எதிர்மறையானது மனிதன் தன்னை இரட்சித்துக்கொள்ள அவனுக்குத் துணைபோகும் கடவுளைப் பற்றியது என்கிறார். இவற்றில் ஒன்று பாவத்தில் வீழ்ந்திருக்கும் மனிதர்களை விடுவிக்க பரிசுத்த திரித்துவத்தின் மூன்று அங்கத்தவர்களும் செய்திருக்கும் மாபெரும் கிரியைகளை விளக்குகின்றது; பிதாவின் தெரிந்துகொள்ளுதலும், குமாரனின் மீட்புப்பணியும், பரிசுத்த ஆவியானவரின் அழைப்புமே அவை. இந்த மூன்று கிரியைகளும் குறிப்பிட்டோருக்கான இழந்துபோக முடியாத இரட்சிப்பை நிறைவேற்றவே செய்யப்பட்டன என்கிறார் பெக்கர். இரண்டாவது விளக்கம் இந்த மூன்று கிரியைகளுக்கும் முற்றிலும் மாறான விளக்கங்களைத் தருகிறது. அதாவது, இந்த மூன்றும் சகல மனிதகுலத்துக்குமாக செய்யப்பட்ட கிரியைகளாகவும், அவை எந்தவொரு மனிதனின் இரட்சிப்பையும் நிறைவேற்றவில்லை என்று அது விளக்குகிறது.

இந்த இரண்டு இறையியல் விளக்கங்களும் இரட்சிப்பின் திட்டத்தை முற்றிலும் வேறுபாடான நிலையில் இருந்து விளக்குகின்றன. ஒன்று, கடவுளின் கிரியையில் இரட்சிப்பு தங்கியிருப்பதாகவும், இதற்கு எதிரான விளக்கம் அதை மனிதன் இரட்சிப்புக்கு அளிக்கும் பங்கில் தங்கியிருப்பதாகவும் விளக்குகின்றன. முதலாவது, கடவுள் அளிக்கும் ஈவாகிய இரட்சிப்பின் ஒரு பங்காக விசுவாசத்தை விளக்கும்வேளை, அதற்கு முரணான விளக்கம், அதை மனிதன் இரட்சிப்புக்கு அளிக்கின்ற பங்காக விளக்குகின்றது. முதலாவது, விசுவாசிகளை இரட்சிக்கும் கடவுளுக்கு சகல மகிமையையும் அளிக்கின்றவேளை, இரண்டாவது, அதை இரட்சிப்பின் திட்டத்தை உருவாக்கிய கடவுளுக்கும், விசுவாசத்தின் மூலம் அதை இயங்கச் செய்யும் மனிதனுக்கும் இடையில் பங்கிடுகிறது. இரண்டு இறையியல் விளக்கங்களுக்குமிடையிலுள்ள இந்த வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளுவது மிகவும் அவசியமானது. கல்வினிசத்தின் சுருக்கவிளக்கமான ஐம்போதனைகளின் முக்கியத்துவமும் நிரந்தரப் பயனும், இந்த வேறுபாடுகளைத் தெளிவாகவும், எந்தளவுக்கு இந்த வேறுபாடுகள் ஒன்றிற்கொன்று முரணாக அமைந்திருக்கின்றன என்பதையும் விளக்குவதிலேயே தங்கியிருக்கின்றன என்கிறார் பெக்கர்.

இருந்தபோதும், ஐம்போதனைகளையே கல்வினிசமாகக் (முழுமையான சீர்திருத்த இறையியலாக) கருதுவது தவறானது என்கிறார் பெக்கர்.

ஐந்து காரணங்களின் மூலம் இதைப் பெக்கர் விளக்குகிறார்.

1. ஐம்போதனைகள் தரும் விளக்கத்தைவிட மிகவும் விரிவானது கல்வினிசம்.

பெக்கர் சொல்லுகிறார், ‘கடவுளே இந்த உலகத்தைப் படைத்தவராக, இராஜாவாக இருக்கிறார் என்பதன் அடிப்படையில் கல்வினிசம் முழுமையானதொரு உலகப் பார்வையைக் கொண்டிருக்கிறது. தன்னுடைய சித்தத்தின் அடிப்படையில் அனைத்தையும் நிறைவேற்றிக்கொண்டிருக்கும் கடவுளே படைத்தவராக, ஆண்டவராக இருக்கிறார் என்பதை சீராக வலியுறுத்தி வருகிறது கல்வினிசம். கடவுளின் வார்த்தையின் வழியில், அதற்கு அடங்கி வாழ்க்கையின் அனைத்துப் பகுதியையும் கடவுளுடைய பார்வையின் அடிப்படையில் சிந்திப்பதே கல்வினிசமாகும். இன்னொருவிதத்தில் சொல்லப்போனால், வேதத்தின் அடிப்படையில் அனைத்தையும் ஆராயும் வேதஇறையியலே கல்வினிசமாகும் – இயற்கை, கிருபை ஆகிய இரண்டிலும் படைத்தவராகிய கடவுளே அனைத்திற்கும் காரணராகவும், அவற்றை அடையும் சாதனமாகவும், அவற்றின் முடிவாகவும் இருக்கிறார் என்ற கடவுளை மையமாகக் கொண்ட ‘கடவுள் பார்வையே’ கல்வினிசமாகும். கடவுளே அனைத்திற்கும் காரணகர்த்தா எனும் கடவுள் நம்பிக்கையையும், அனைத்தையும் கடவுளே அளிக்கிறார் என்று அவரில் தங்கி நிற்கும் மதநம்பிக்கையையும், அனைத்திற்கும் ஆண்டவராகிய கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என்ற சுவிசேஷ நம்பிக்கையையும் கொண்ட பூரணமான, நுணுக்கத்தோடு உருவான இறையியல் கோட்பாடு கல்வினிசம். கல்வினிசம் ஓர் ஒருங்கிணைந்த உலக தத்துவம்; அது உலகத்தில் நிகழும் வெவ்வேறுவிதமான நடவடிக்கைகளையும், அவை வளர்ந்து வரும் விதத்தையும், கடவுள் தன்னுடைய திருச்சபைக்கும், உலகத்திற்கும் நித்தியத்தில் இருந்தே முன்குறித்து உருவாக்கியிருந்த திட்டத்தின் படிப்படியான நிறைவேற்றமாகக் கணிக்கிறது. கல்வினிச ஐம்போதனைகள், தனியொருவனை கடவுள் தன் இறையாண்மையால் இரட்சிக்கிறார் என்பதற்கு மேலாக எதையும் விளக்குவதில்லை; ஆனால், கல்வினிசமோ, இதைவிட விரிவான உண்மையை விளக்குகிறது – அதாவது கடவுள் அனைத்துக் காரியங்களிலும் இறையாண்மையுள்ளவராக இருக்கிறார் என்பதே அது.’

2. ஐம்போதனைகள், இரட்சிப்பு பற்றிய கல்வினிசப் போதனைகளை எதிர்மறையாகவும், தத்துவார்த்தரீதியிலும் விளக்குவதாக இருக்கின்றவேளை, கல்வினிசம் அடிப்படையில் வேதவியாக்கியானமாகவும், போதக இறையியலாகவும், ஆக்கபூர்வமானதாகவும் காணப்படுகிறது.

இதுபற்றி விளக்கும் பெக்கர் சொல்கிறார், ‘கல்வினிசத்தால் ஆர்மீனியனிசத்தை சுட்டிக்காட்டாமலேயே தன்னுடைய போதனைகளை வேதத்தில் இருந்து தெளிவாக விளக்கமுடியும். அது தொடர்ந்து தன்னை நிலைநிறுத்திக்கொள்ள மெய்யாகவோ அல்லது கற்பனையாகவோ காணப்படும் ஆர்மீனியனிசத்தோடு தொடர்ந்து போர் தொடுக்கவேண்டிய அவசியமில்லை. கல்வினிசத்திற்கு எந்தவிதமான எதிர்மறைகளிலும் அக்கறையில்லை. கல்வினிசம் போராடுகிறவேளை அது நேர்மறையான சுவிசேஷ சத்தியங்களை நிலைநிறுத்தவே போராடுகிறது. எதிர்மறையாக எழுதப்பட்டிருக்கும் ‘ஐம்போதனைகள்’ அதன் மூன்றாவது புள்ளியைப் பொறுத்தவரையில் (வரையறுக்கப்பட்ட மீட்பு) தவறானதொரு கருத்துக்கு இடங்கொடுத்துவிடுகிறது. இந்தப் புள்ளியில் நாம் அழுத்தி வாசிக்கும், மீட்பை எத்தகையது என்று விளக்கும் ‘வரையறுக்கப்பட்ட’ (limited) என்ற பெயரடைச்சொல், கல்வினிசத்தார் தெய்வீக கிருபையைக் கட்டுப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்று கருத இடங்கொடுத்துவிடுகிறது. உண்மையில் இந்த வார்த்தைப் பிரயோகம், சுவிசேஷம் அதிமுக்கியமாக அறிவிக்கும் ‘மீட்பர் மெய்யாகவே மீட்கிறார்’ என்ற சத்தியத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடனேயே பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், தெரிந்துகொள்ளுதல் நிபந்தனையோடு கூடியது என்பதையும், கிருபையை நிராகரித்துவிட முடியும் என்பதையும் மறுக்கின்ற புள்ளிகள், கடவுள் மட்டுமே இரட்சிப்பை அளிக்கிறார் என்ற நேர்மறையான சத்தியத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பயன்படுத்தப்படுகின்றன. உண்மையில் ஆர்மீனியன்களே தெரிந்துகொள்ளுதல், மீட்பு, அழைப்பு ஆகியவை கடவுளின் இரட்சிக்கும் கிரியைகள் என்பதை அடியோடு மறுக்கிறார்கள். கல்வினிசமோ, சுவிசேஷத்தின் நேர்மறையான உள்ளடக்கத்தை நிலைநிறுத்தவும், விசுவாசத்தையும், திருச்சபையையும் பெலப்படுத்தும் நேர்மறை நோக்கத்துடன் இந்த ஆர்மீனியனிச மறுதலிப்புகளை நிராகரிக்கின்றது.’

3. கல்வினிசத்தின் இரட்சிப்பு பற்றிய போதனையை ஐந்து வேறுபட்ட போதனைகளாகப் பிரித்து விளக்குவது, இரட்சிப்பு பற்றிய கல்வினிசப் போதனையின் இயற்கைத் தன்மையையும், அதன் விளக்கத்தையும் தெளிவற்றதாக்கிவிடுகின்றது. (இந்த ஐந்து போதனைகளை சினொட் ஆவ் டோர்ட் பதிலாக உருவாக்கியதற்குக் காரணம் ஆர்மீனியனிசத்தின் ஐந்து போதனைகளே).

இதை பெக்கர் விளக்குவதைக் கவனியுங்கள், ‘கல்வினிச ஐம்புள்ளிகளும் வெவ்வேறாகக் காட்டப்பட்டிருந்தபோதும் அவை பிரிக்கமுடியாதபடி இணைந்திருப்பவை. அவை இணைந்தே இருப்பவை; அவற்றில் எதையாவது நிராகரிப்பது அனைத்தையும் நிராகரிப்பதில் முடியும். அந்தவிதத்திலேயே சினொட் ஆவ் டோர்ட் அவற்றை அமைத்திருந்தனர். இரட்சிப்பைப் பொறுத்தவரையில் கல்வினிசத்தை விளக்குவதானால் ஒரேயொரு உண்மையையே வலியுறுத்தமுடியும்: கடவுள் பாவிகளை இரட்சிக்கிறார் என்பதே அது. திரித்துவ ஆள்தத்துவங்களான பிதா, குமாரன், ஆவியானவர் ஆகிய மூவரும் இறையாண்மையுள்ள ஞானம், வல்லமை மற்றும் அன்போடு ஒருங்கிணைந்து செயல்பட்டு தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்காக இரட்சிப்பை நிறைவேற்றினார்கள். பிதா தெரிந்துகொள்வதன் மூலமும், குமாரன் பிதாவின் சித்தத்தைப் பின்பற்றி மீட்பை நிறைவேற்றியும், பிதாவினதும், குமாரனுடையதும் நோக்கங்களின்படி மறுரூபமாக்குவதை ஆவியானவர் செயல்படுத்துவதன் மூலமும் கடவுளின் மக்களுக்கான இரட்சிப்பு அவர்களைச் சேர்ந்தடைகிறது. கடவுளின் இரட்சிக்கும் கிருபை, ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை அனைத்தையும் நிறைவேற்றுகிறதாகக் காணப்படுகிறது – பாவத்தில் மரித்திருக்கும் மனிதனை விடுவித்து மகிமையில் ஜீவனை அடையும்வரையிலான அனைத்தும் அதில் உள்ளடங்கியிருக்கிறது: இரட்சிப்பின் திட்டமிடல், மீட்பை நிறைவேற்றி உரியவர்களுக்கு அதைக் கொண்டு சேர்ப்பது, அவர்களை அழைத்துப் பாதுகாப்பது, நீதிமானாக்குதல், பரிசுத்தமாக்குதல், மகிமையை அடையச் செய்தல் ஆகிய அனைத்தும் இரட்சிப்பில் அடங்கியிருக்கின்றன.’

பெக்கர் தொடர்ந்து, ‘கடவுள் மனிதர்களைப் பாவிகளாக, குற்றவாளிகளாக, கேடானவர்களாக, தன்னில் பலமற்றவர்களாக, ஆவியில் குருடர்களாக, கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்ற இயலாதவர்களாக, தன்னுடைய ஆவிக்குரிய நிலையை எந்தவிதத்திலும் திருத்திக்கொள்ள இயலாதவர்களாகக் காண்கிறார். கடவுள் பாவிகளை இரட்சிக்கிறார் – இந்த உண்மையின் சாரத்தை நாம் எந்தவிதத்திலும் பலவீனமாக்கக்கூடாது. இரட்சிப்பில் திரித்துவ தேவனின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் ஒற்றுமையைக் குலைத்தோ அல்லது இரட்சிப்பின் செயல்முறையை கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் பங்கிட்டு அதில் மனிதனுக்கு முதன்மையான இடத்தை அளித்தோ அல்லது மனிதனின் இயலாமையை திரித்துக்காட்டி இரட்சிப்பின் மகிமையை அவன் கடவுளோடு பங்கிடும்விதத்தில் விளக்கவோகூடாது. பாவிகள் எந்தவிதத்திலும் தங்களை இரட்சித்துக்கொள்ளுவதில்லை; ஆரம்பம் முதல் இறுதிவரை இரட்சிப்பு, முழுமையாக, எக்காலத்திலும் கடவுளுடையது; அவருக்கே சகல மகிமையும் சேர வேண்டும். ஆமென்! இந்த உண்மையைத்தான் கல்வினிசத்தின் இரட்சிப்புப் பற்றிய போதனைகள் ஐம்போதனைகளின் மூலம் வலியுறுத்துகின்றன; ஆர்மீனியனிசத்தின் அத்தனைப் போதனைகளும் இதை நிராகரிக்கின்றன’ என்று ஆணித்தரமாக விளக்குகிறார் பெக்கர்.

4. ஐம்போதனைகளாகிய விதிமுறை (கோட்பாடு), கல்வினிசத்திற்கும், ஆர்மீனியனிசத்திற்கும் இடையில் காணப்படும் ஆழமான இடைவெளியைத் தெளிவற்றதாக்கிவிடுகிறது.

ஐம்போதனைகள் அநேகரை இந்த விஷயத்தில் குழப்பமடையச் செய்துவிடுகிறது. இந்த ஐம்போதனைகளில் ஒவ்வொன்றையும் கவனித்தீர்களானால், அழுத்தம் அவற்றின் பெயரடைகளில் (adjectives) பதிந்துவிடுவதால் அது தவறான எண்ணத்தை உருவாக்கிவிடுகிறது. அதாவது, கடவுளின் மூன்று இரட்சிக்கும் கிரியைகளைப் பொறுத்தவரையில் அவற்றைப் பற்றிய விவாதம் ஐம்போதனைகளின் பெயரைடைகளைப் பற்றியதே என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறது. உதாரணத்திற்கு, இரண்டு தரப்பாருமே தெரிந்துகொள்ளுதல், மீட்பு, கிருபையாகிய ஈவு ஆகிய மூன்றைக் குறித்தும் ஒத்த கருத்தைக் கொண்டிருந்தபோதும், தங்களுக்குக்கிடையில் காணப்படும் வேறுபாடு அம்மூன்றின் பெயரடைகளைக் குறித்தது மட்டுமே என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறது. இன்னும் விளக்கமாக சொல்லப்போனால், முதலாவதான தெரிந்துகொள்ளுதல், ஒருவர் விசுவாசிப்பார் என்ற முன்னறிவின் அடிப்படையிலானதா? இல்லாவிட்டால் அத்தகைய முன்னறிவின் அடிப்படையில் அமையாததா? என்ற கேள்வியை எழுப்புகிறது. அதேபோல், இரண்டாவதான மீட்பு எல்லோருக்கும் இரட்சிப்பை அளிக்கிறதா, இல்லையா? என்பதைக் குறித்தது என்றும், மூன்றாவதான கிருபை நிராகரிக்கப்படக்கூடியதா, இல்லையா? என்பதைக் குறித்தது என்ற தோற்றத்தையும் கொடுத்துவிடுகிறது. இது ஐம்போதனைகள் பற்றிய முற்றிலும் தவறான எண்ணம். ஐம்போதனைகள் ஒவ்வொன்றின் பெயரடையில் ஏற்படுகின்ற மாற்றம் அவற்றின் பெயர்ச்சொல்லிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆர்மீனியனிசம் விளக்கும் நிபந்தனையுள்ள தெரிந்துகொள்ளுதலும், எல்லோருக்குமான மீட்பும், நிராகரித்துவிடக்கூடிய உள்ளார்ந்த கிருபையும், கல்வினிசம் போதிக்கும் தெரிந்துகொள்ளுதலும், மீட்பும், கிருபையும் அல்ல. ஐம்போதனைகளின் முக்கியத்துவம் அதன் பெயரடைகளில் தங்கியிராமல் அதன் பெயர்ச்சொற்களுக்கான விளக்கத்திலேயே தங்கியிருக்கின்றது. (உதா: வரையறுக்கப்பட்ட மீட்பு என்பதில் அதற்கான விளக்கம் ‘வரையறுக்கப்பட்ட’ என்ற அதன் பெயரடையில் தங்கியிராமல் அதோடு இணைந்து வரும் பெயர்ச்சொல்லான மீட்பு என்பதிலேயே தங்கியிருக்கிறது). முதன் முதலாக கல்வினிசம் பற்றிய முரண்பாடு தோன்றியபோதே இரு தரப்பினரும் இதை உணர்ந்திருந்தனர்; அதை நாமும் உணர்வது அவசியம். இல்லாவிட்டால் இந்த கல்வினிசம்-ஆர்மீனியனிசம் பற்றிய விவாதத்தில் எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் போய்விடும். அதனால், இரண்டு பகுதியாருக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பது அவசியம் என்கிறார் பெக்கர்.

1. கடவுளின் தெரிந்துகொள்ளுதலாகிய கிரியையை ஆர்மீனியன்கள், குறிப்பிட்ட விசேஷமான மனிதர்களைக் கடவுள் தன் பிள்ளைகளாக்குவதற்கும், அவர்கள் மகிமையடைவதற்குமான தீர்மானமாக விளக்குகிறது. இதைத் தனி நபர்கள் தாங்களாகவே கிறிஸ்துவை விசுவாசிப்பார்கள் என்று முன்கூட்டியே அறிந்திருக்கும் முன்னறிவின் அடிப்படையில் கடவுள் தீர்மானித்திருக்கிறார் என்பது ஆர்மீனியனிசத்தின் விளக்கம். இதன்படி, தெரிந்துகொள்ளுதலாகிய கடவுளின் ஆணையில் எவருமே உள்ளடங்கிக் காணப்படவில்லை; எந்த மனிதனையும் விசுவாசிக்கச் செய்யும் உறுதியான தீர்மானத்தைக் கடவுள் கொண்டிருக்கவில்லை என்பதே ஆர்மீனியனிசத்தின் வாதம். ஆனால் கல்வினிசமோ, எந்தவிதத் தகுதியுமில்லாத குறிப்பிட்ட நபர்களை அவர்களுடைய பாவத்தில் இருந்து இரட்சித்து மகிமையை அடையச்செய்யும் கிருபையாக தெரிந்துகொள்ளுதலை விளக்குகிறது. இதற்காக அவர்கள் கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் மீட்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவரின் திட்ப உறுதியான அழைப்பின் மூலம் விசுவாசத்தையும் அடையும்படிச் செய்யப்படுகிறார்கள். ‘என்னுடைய தெரிந்துகொள்ளுதலுக்கு நான் என் விசுவாசத்திற்குக் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று ஆர்மீனியன் சொல்கின்றவேளை, கல்வினிச விசுவாசி, ‘என் விசுவாசத்திற்கு நான் என் தெரிந்துகொள்ளுதலுக்கே கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று கூறுவான். இந்த இரண்டு கோட்பாடுகளும் தௌ¤வாகவே ஒன்றுக்கொன்று முரண்பாடுள்ள பேரிடைவெளி கொண்டவை.

2. கிறிஸ்துவின் மீட்பின் கிரியையை ஆர்மீனியன்கள், சுவிசேஷத்தை கேட்டவர்களுக்கும், அதைக் கேட்டிராவிட்டாலும் தங்களுக்குக் கிடைத்த வெளிச்சத்தின்படி வாழ்ந்திருப்பவர்களுக்கும் கடவுள் அளிக்கும் மன்னிப்புக்குக் குறுக்கீடாக இருந்த தடையை அகற்றும் கிரியையாக மட்டும் விளக்கினார்கள். அந்தத் தடை அத்தகையோரின் விசுவாசித்தால் மட்டுமே நீக்கப்படுகிறதாகவும் அவர்கள் விளக்கினார்கள். கிறிஸ்துவின் மீட்பு, அத்தகைய மன்னிப்பை அளிக்கக்கூடிய உரிமையைக் கடவுளுக்குத் தந்ததே தவிர, அவர்களில் எவராவது அந்த மன்னிப்பை எப்போதாவது ஏற்றுக்கொள்ளுவார்கள் என்ற நிச்சயத்தை உறுதிப்படுத்தவில்லை என்பது இவர்களுடைய விளக்கம். ஆர்மீனியன்களின் விளக்கத்தின்படி, விசுவாசம் மனிதனுடைய சொந்தக் கிரியை மட்டுமே; அது கடவுளிடம் இருந்து வருகின்ற ஈவாக அவர்கள் கருதவில்லை. கிறிஸ்துவின் மரணம், பாவிகள் விசுவாசிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை மட்டும் ஏற்படுத்தித் தந்ததே தவிர வேறெதையும் செய்யவில்லை என்கிறது ஆர்மீனியனிசம்.

ஆனால் கல்வினிசமோ, மீட்பை வேறுவிதமாக விளக்குகிறது: குறிப்பிட்ட மக்களுக்காக கிறிஸ்து அவர்களுடைய இடத்தில் இருந்து பாவத்திற்கான தண்டனையை அனுபவித்த கிரியையாக அவர்கள் மீட்பிற்கு விளக்கமளிக்கிறார்கள். அத்தோடு மீட்பின் மூலம், கடவுள் அம்மக்களோடு ஒப்புரவாக்கப்பட்டு, அவர்கள் அனுபவிக்க வேண்டியிருந்த தண்டனை முற்றாக நீக்கப்பட்டு, நித்தியஜீவனுக்கான உறுதிப்பத்திரமும் நிச்சயப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, கடவுளின் முன் அவர்கள், தங்களுடைய ஆத்மீக சொத்துக்களை அனுபவிப்பதற்கான சாதனமாகிய விசுவாசத்தை ஈவாக அடையக்கூடிய உரிமையைப் பெறுகிறார்கள். கிறிஸ்து மரித்தவர்களுக்கான இரட்சிப்பை அவர்கள் அடைவதற்கான வெறும் வசதியை கல்வாரி ஏற்படுத்தவில்லை; அது அவர்கள் விசுவாசத்தையும், இரட்சிப்பையும் அடைவதை நிறைவேற்றி உறுதிப்படுத்தியது. சிலுவை இரட்சிக்கிறது என்கிறார் பெக்கர். ‘கல்வாரி இல்லாமல் நான் என்னுடைய இரட்சிப்பை அடைந்திருக்கமுடியாது’ என்று ஆர்மீனியன் சொல்லுகின்றவேளை, ‘என் இரட்சிப்பை எனக்காக கிறிஸ்து கல்வாரியில் பெற்றார்’ என்பான் கல்வினிச விசுவாசி. ஆர்மீனியனிசம், கல்வாரியை இரட்சிப்புக்கு மிக அவசியமானதாக மட்டும் கருதுகிறபோது, கல்வினிசம், அதுவே இரட்சிப்பு நிறைவேறுவதற்குக் காரணகர்த்தா என்கிறது. அத்தோடு, கடவுளுக்கும் அவருடைய குமாரனுக்கும் இடையில் இடம்பெற்ற மீட்பின் திட்டமிடலே கல்வாரியில் நிறைவேறியதாகவும், விசுவாசம் உட்பட இரட்சிப்பின் சகல ஆசீர்வாதங்களுக்கும் அத்திட்டமிடலே ஆதாரமானதாகவும் காண்கிறது. மீட்பைப் குறித்த இந்த இரண்டு விளக்கங்களும் ஒன்றுக்கொன்டு முற்றிலும் முரண்பாடானவை.

3. பரிசுத்த ஆவியானவரின் கிரியையான உள்ளார்ந்த கிருபையை ஆர்மீனியன்கள் ஒருவகை ‘ஒழுக்க உந்துதலாக’ மட்டுமே கணிக்கிறார்கள். அதாவது, கடவுளின் சத்தியத்தை அறிந்துகொள்ளும் அறிவை மட்டுமே ஆவியானவர் ஒருவருக்கு அளிப்பதாக விளக்குகிறார்கள். இதை அவர்கள் வலியுறுத்துகிறபோதும், அவர்களைப் பொறுத்தவரையில் எவரும் எந்த சூழ்நிலையிலும் விசுவாசிப்பதற்கு இது துணைபோவதில்லை. ஆனால், கல்வினிசம் இந்த ஆவியானவரின் ஈவை வெறும் அறிவொளியாக மட்டும் கணிப்பதில்லை; மாறாக, கடவுள் மனிதனின் நிகழ்த்தும் மறுபிறப்பாக விளக்குகிறார்கள்; அவர், அவர்களுடைய கல்லான இருதயத்தை அகற்றிவிட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அளித்து, அவர்களுடைய சித்தத்தை புதுப்பித்து, தம்முடைய வல்லமையால் நல்லதை நாடும்படிச் செய்து, திட்ப உறுதியாய் அவர்கள் கிறிஸ்துவிடம் வரும்படிச் செய்கிறார்; இருந்தும் அவர்கள் கடவுளுடைய கிருபையின் கிரியையினால் சித்தங்கொண்டு சுதந்திரமாக கிறிஸ்துவிடம் வருகிறார்கள். இந்தக் கிருபை தடுத்து வெல்லமுடியாததாக (Irresistible) இருப்பதற்குக் காரணம், அப்படித் தடுக்கின்ற மனநிலையை அது ஒருவனில் அழித்துவிடுகிறது. ஆகவே, ஆர்மினியன், ‘நான் கிறிஸ்துவுக்காக தீர்மானம் எடுத்தேன்’ என்றும், ‘நான் கிறிஸ்தவனாக வருவதற்கு சித்தங்கொண்டேன்’ என்றும் மனநிறைவோடு சொல்லுகிறவேளை, ஒரு கல்வினிஸ்ட் தன்னுடைய மனமாற்றத்தை இறையியல் ரீதியில், அத்தகைய மாற்றத்திற்கு யார் காரணம் என்பதை விளக்க விரும்புவான்.

சிறைப்பட்ட என் ஆவி நெடுங்காலம்
பாவத்தால் கட்டப்பட்டு இயற்கையில் இருண்டிருந்தது
உமது கண்களின் சுடரொளி வேகமாய்ப் பரவியது
பாதாளத்தில் நெருப்பொளி வீசியது; நான் விழித்தெழுந்தேன்
என் தளைகள் அறுந்தன, என் இருதயம் விடுதலையடைந்தது
நான் எழுந்தேன், நடந்தேன், உம் பின்னால் சென்றேன்.

சார்ள்ஸ் வெஸ்லியின் பாடலின் இவ்வார்த்தைகள் கல்வினிச விசுவாசியின் மனமாற்றத்தை விளக்குகின்றன. உள்ளார்ந்த கிருபையை விளக்கும் ஆர்மீனியனிச, கல்வினிச விளக்கங்கள் ஆணித்தரமாக எதிரும் புதிருமானவை.

ஆர்மீனியன்களின் விளக்கமான, கடவுளின் கிரியைகளான தெரிந்துகொள்ளுதலும், மீட்பும், அழைப்பும் இரட்சிப்பை ஒருவருக்கும் வழங்குவதில்லை என்பது அவற்றின் வேதபூர்வமான விளக்கங்களை அழிப்பதில் முடிகிறது என்கிறார்கள் கல்வினிசப் போதனையாளர். அதாவது, ஆர்மீனியன்கள் கூறுவதுபோல், கடவுள் விசுவாசிக்கிறவர்களைத் தெரிந்துகொள்கிறார் என்பதும், கிறிஸ்து சகல மனிதர்களுக்குமாக மரித்தார் என்பதும், வார்த்தையை ஏற்றுக்கொள்கிறவர்களை ஆவியானவர் உயிர்ப்பிக்கிறார் என்பதும், உண்மையில் வேதபோதனையின்படி பார்க்கிறபோது கடவுள் ஒருவரையுமே தெரிந்துகொள்ளவில்லை என்றும், கிறிஸ்து எவருக்குமாகவே மரிக்கவில்லை என்றும், ஆவியானவர் ஒருவரையுமே உயிர்ப்பிக்கவில்லை என்றும் சொல்வதில் போய் முடியும். இந்த இறையியல் விவாதத்தில் முக்கியமானது எதுவெனில், இதில் நாம் பயன்படுத்தும் வேதவார்த்தைப் பிரயோகங்களுக்கு நாம் கொடுக்கவேண்டிய அர்த்தமே. அத்தோடு, இரட்சிப்பு பற்றிய போதனையில் அவசியமானதாகக் காணப்படும் ஏனைய வார்த்தைப் பிரயோகங்களான தேவனின் அன்பு, கிருபையின் உடன்படிக்கை, இரட்சிப்பு எனும் வினைச்சொல் மற்றும் அதற்கிணையாகப் பயன்படுத்தப்படும் ஏனைய வார்த்தைகளுக்கும் நாம் கொடுக்கின்ற அர்த்தம் மிகமுக்கியமானது.

ஆர்மீனியன்கள், இரட்சிப்பு கடவுளின் எந்த ஆணையிலோ அல்லது கிரியைகளிலோ தங்கியிராமல் தனி மனிதனின் சுயாதீனமான கிரியையாகிய விசுவாசத்திலேயே தங்கியிருக்கிறது என்ற தத்துவத்தின்படி இந்த வார்த்தைப்பிரயோகங்களுக்கான உண்மையான அர்த்தங்களுக்கு மேற்பூச்சுப் பூசிமெழுகிவிடுகிறார்கள். ஆர்மீனியன்களின் தத்துவம் வேதபூர்வமானதில்லை என்றும், இப்படியாக வார்த்தைப் பிரயோகங்களுக்கு மேற்பூச்சுப் பூசிமெழுகுவது வேதத்தின் அர்த்தத்தை மாசுபடுத்தி, சுவிசேஷத்தின் அத்தனைப் பயன்பாடுகளையும் பாதித்துவிடுகிறது என்கிறார்கள் கல்வினிசப் போதனையாளர். இது மட்டுமே ஆர்மீனியன்களைப் பற்றிய விவாதமாக இருக்கின்றது.

5. ஐம்போதனைகளின் குறைபாட்டை விளக்கும் அடுத்த காரணி – அதன் அமைப்பு, அது ஆர்மீனியனிசத்தின் உருமாற்றமே என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறது. அதாவது, இயற்கையில் ஆர்மீனியனிசமே ஒரு முக்கிய போதனையாக இருந்தது என்றும், அதிலிருந்து உருவான கிளை விதிமுறையே கல்வினிசம் என்ற எண்ணத்தை அது உருவாக்குகிறது.

இத்தகைய கருத்து தவறானது என்பதை நாம் வரலாற்றின் அடிப்படையில் விளக்கினாலும், இதுவே இவை இரண்டுக்குமிடையிலான உறவைப் பற்றிய உண்மை என்ற சந்தேகம் அநேகருடைய மனதில் காணப்படுகின்றது. ஆர்மீனியனிசமே வேதத்தை நாம் படிக்கின்றபோது இயற்கையாக, தெளிவாகக் கவனிக்கின்ற, பாரபட்சமற்ற உண்மை என்றும், மாறாக கல்வினிசம், குறிப்பிட்ட வசனங்களை அவற்றின் மெய்யான கருத்தை மறைத்துப் பயன்படுத்தி ஒழுங்குபடுத்தி உருவான செயற்கையான போதனை என்றும் பரவலாகக் கருதப்பட்டு வருகிறது.

தனி நபர்களான கல்வினிஸ்டுகளைப் பற்றி நாம் எதைச்சொன்னபோதும், பொதுவாக கல்வினிசத்தைப்பற்றி இந்தவகையிலேயே கருதப்பட்டு வருகிறது. ஒருவிதத்தில் ஆர்மீனிசனிசம் இயற்கையானதுதான். எப்படியென்றால், பாவத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மனிதனின் மனதில் உருவானதொரு போதனையை அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது; இரட்சிப்புப் பற்றிய போதனையில்கூட தன்னுடைய முடிவுக்குத் தானே தலைவனென்றும், தன் ஆத்துமாவுக்குத் தானே வழிகாட்டியென்றும் மனிதன் நினைக்கின்ற மாயையை அதனால் ஒதுக்கிவிட முடியாதிருக்கிறது. இத்தகைய தவறான போக்கு முன்பு சபை வரலாற்றில் பெலேஜியனிசத்திலும் பின்பு சபைப் பிதாக்களின் காலத்தில் செமி-பெலேஜியனிசத்திலும், அதன்பின் இருண்டகாலப்பகுதியிலும் காணப்பட்டு, 17ம் நூற்றாண்டில் மீண்டும் தலைதூக்கி கத்தோலிக்க இறையியலிலும், புரொட்டஸ்தாந்தியர்களின் மத்தியிலும், தாராளவாதக் கோட்பாட்டாளர்களிடமும், நவீன சுவிசேஷ இயக்கத்தார் மத்தியிலும் இருந்து வருகின்றது; இது நம்மத்தியில் தொடர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பாவத்தால் மனித மனம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்வரை ஆர்மீனியனிசமே அதில் இயற்கையாகக் காணப்படும் தவறான போதனையாக இருக்கும். அது வேறுவிதங்களில் இயற்கையானதாக இருக்க முடியாது. உண்மையில் கல்வினிசமே வேதத்தை அது காணப்படும் இயற்கை நிலையில், அதனுடைய மெய்யான அர்த்தத்தில் புரிந்துகொள்ளுகிறது; கல்வினிசம் வேதம் தெளிவாக விளக்குவதைப் பின்பற்றுகிறது. கடவுளே இரட்சிக்கிறார் என்ற வேதத்தின் தெளிவான போதனையை, அதுவும் தான் இரட்சிப்பதற்காகத் தெரிந்துகொண்டிருக்கிறவர்களையே இரட்சிக்கிறார் என்றும், அவர்களை எந்தவிதக் கிரியைகளின் அடிப்படையிலும் அல்லாமல் கிருபையின் மூலம் மட்டுமே இரட்சிக்கிறார் என்றும், அதனால் எந்த மனிதனும் தன்னுடைய இரட்சிப்புக்காக மார்தட்டிக்கொள்ள முடியாதென்றும், கிறிஸ்து அவர்களுக்கு பூரண இரட்சகராக கொடுக்கப்பட்டிருக்கிறார் என்றும், அவர்களுடைய இரட்சிப்பு முழுமையாக சிலுவையில் இருந்தே புறப்படுகிறதென்றும், அவர்களை மீட்கின்ற பணி சிலுவையிலேயே முடிவுற்றது என்றும் கல்வினிசம் வலியுறுத்துகிறது. கல்வினிசமே சிலுவைக்கு அளிக்கவேண்டிய முறையான மரியாதையை அளிக்கிறது.

கல்வினிஸ்டு பாடும்போது, ‘தூரத்தில் பச்சைநிறத்திலொரு மலை நிற்கிறது, நகரத்து சுவரதில் இல்லை, அங்கேயே நம் ஆண்டவர் சிலுவை மரணத்தை சந்தித்தார். நம்மனைவரையும் இரட்சிக்க மரித்தார்; நம் பாவமன்னிப்புக்காக மரித்தார், நம்மை நலமாக்க மரித்தார்; அவருடைய பரிசுத்த இரத்தத்தால் இரட்சிக்கப்பட்டு நாம் பரலோகத்துக்குப் போக மரித்தார்’ என்றே பாடுகிறான். அதை அவன் உணர்ந்தே பாடுகிறான்.

தன் குமாரனின் மரணத்தின் மூலமாக மனிதர்களை இரட்சிக்கும் கடவுளின் நோக்கத்தின் நிறைவேறுதல், மனிதன் அதை விரும்பி விசுவாசிப்பதிலேயே தங்கியிருக்கிறதென்றும், கடவுளால் செய்யமுடிந்ததெல்லாம் எவருக்குமே இரட்சிப்பளிக்காத மரணத்தை கிறிஸ்து மரிக்கச் செய்தது மட்டுமே என்ற வெறும் அறிவுசார்ந்த விருப்பமாக கல்வினிச விசுவாசி வேத உண்மைகளைப் பூசிமெழுக மாட்டான். கிறிஸ்துவின் இயலாமையை அல்ல, அவருடைய இரட்சிக்கும் வல்லமையையே சிலுவை வெளிப்படுத்துகிறதென்று அவன் வலியுறுத்துகிறான். கற்பனையில் உருவான மனிதர்களுக்காக கற்பனையானதொரு இரட்சிப்பை கிறிஸ்து உருவாக்கவில்லை என்பதை அவன் நம்புகிறான். அதாவது, எவராவது விசுவாசிக்கக்கூடும் என்ற சாத்தியத்தியக்கூற்றின்படி சாத்தியமாகக்கூடிய இரட்சிப்பை கிறிஸ்து நிறைவேற்றாமல், தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கான மெய்யான, நிலையான இரட்சிப்பை அவர் நிறைவேற்றினார் என்பதை அவன் வலியுறுத்துகிறான். அவருடைய பரிசுத்தமான இரத்தம் நம்மெல்லோரையும் இரட்சிக்கின்றது; சிலுவை அது ஏற்படுத்தப்பட்ட நோக்கத்திற்கேற்ப அமைந்திருந்ததால், கிறிஸ்து தன்னை ஒப்புக்கொடுத்த நோக்கத்தின் பலன்கள் அதைத் தொடருகின்றன. விசுவாசம் அதோடு இணைக்கப்பட்டிருப்பதால் சிலுவையின் இரட்சிக்கும் வல்லமை விசுவாசத்தில் தங்கியிருக்கவில்லை; சிலுவையின் இரட்சிக்கும் வல்லமையின் காரணமாகவே விசுவாசம் அதைத் தொடருகிறதாயிருக்கிறது. எவர்களுக்காக கிறிஸ்து மரித்தாரோ அவர்களெல்லோருக்குமான முழுமையான இரட்சிப்பை சிலுவை சம்பாதித்திருக்கிறது.

‘நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக’ (கலாத்தியர் 6:14).

இப்போது, இரட்சிப்பு பற்றிய கல்வினிசப் போதனை தெளிவாகிறது. அது செயற்கையானதல்ல; அதீத தத்துவரீதியான வாதத்தின் பலனுமல்ல. அதன் தலையாய போதனை, கடவுள் பாவிகளை இரட்சிக்கிறார், கிறிஸ்து நம்மை தன்னுடைய இரத்தத்தினால் மீ¢ட்கிறார் என்பதே. அதுவே வேதத்தினதும், விசுவாசிக்கும் நம் இருதயத்தினதும் சாட்சியாக இருக்கிறது. ஜெபிக்கிறபோது தன்னுடைய இருதயத்தில் கடவுளுக்கு முன் எதை விசுவாசிக்கிறானோ அதையே கல்வினிச விசுவாசி மனிதர்களுக்கு முன் தன்னுடைய இறையியலாக அறிக்கையிடுகிறான். தன்னுடைய இருதயத்தில் கடவுளை ஆராதனை செய்வதற்கான உந்துதல் எழும்போது அதற்கு அவன் இணங்குகிறபோது, சகல கிறிஸ்தவர்களும் ஆத்துமாக்களின் விடுதலைக்காக ஜெபிக்கிறபோது செய்வதுபோல் கடவுளின் இறையாண்மையைக் குறித்தே அவன் எப்போதும் சிந்திக்கிறவனாகவும், பேசுகிறவனாகவும் இருக்கிறான். இதன் மூலம் அவன் தன்னைத் தாழ்த்தி தன் இரட்சிப்பிற்கான எதையும் தன்னுடையதாகக் கருதாமல் தனது இரட்சகருக்கே சகல மகிமையையும் செலுத்துகிறான்.

கிறிஸ்துவில் புதிய மனிதனாக இருக்கிறவனின் இருதயத்தில் எழுதப்பட்டிருக்கிற இயற்கையான இறையியலே கல்வினிசம்; ஆர்மீனியனிசமோ அறிவுசார்ந்த பாவத்தின் பலவீனம். மறுபிறப்படையாதவர்களெல்லோரிலும் பாவம் எப்படி இயற்கையானதாக இருக்கிறதோ அதேபோல்தான் ஆர்மீனியனிசமும் இயற்கையானது. அறிவு சார்ந்த நிலையில் கிறிஸ்தவன் தன்நிலை உணர்ந்தவனாக இருப்பதன் அறிகுறிதான் கல்வினிச சிந்தனைப்போக்கு; கிறிஸ்தவன் தன் மாம்சத்தின் பலவீனத்தால் தன்நிலை உணராதிருப்பதன் அடையாளமே ஆர்மீனியனிச சிந்தனைப் போக்கு. வேதம் போதிக்கின்றவைகளுக்கெதிரான வாக்குவாதத்தில் அகப்பட்டு தன் கவனம் சிதறாதிருந்த வேளையிலும், போலியான பாரம்பரியங்களைப் பின்பற்றாதிருந்த வேளையிலும், கிறிஸ்தவ திருச்சபை கல்வினிசத்தையே பின்பற்றிப் போதித்தும் வந்திருந்தது. அதுவே ஐம்போதனைகளைக் குறித்த சபைப்பிதாக்களின் சாட்சியின் முக்கியத்துவமாக இருந்திருக்கிறது. அத்தகைய எத்தனையோ சாட்சிகளை முன்வைக்கமுடியும். ஆகவே, உண்மையில் இரட்சிப்பு பற்றிய இந்த இறையியல் போதனையை ‘கல்வினிசம்’ என்று அழைப்பது தவறான பாதைக்கு வழிகாட்டிவிடுகிறது; அது ஜோன் கல்வினுக்கும், சினொட் ஆவ் டோர்ட் இறையியலறிஞர்களுக்கும் மட்டும் சொந்தமாயிருந்த போதனையல்ல. இது கடவுளின் வெளிப்படுத்தலாகிய வேதம் போதிக்கின்ற, அதில் காணப்படுகின்ற போதனையும், கிறிஸ்தவ சமுதாயம் விசுவாசிக்கின்ற சத்தியமுமாகும். வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக இந்தப் போதனை ‘கல்வினிசம்’ என்ற தவறான புனைப்பெயரின் மூலம் அறியப்பட்டு அநேகரின் எதிர்ப்பைச் சந்தித்திருக்கின்றது. ஆனால், இது வேதபூர்வமான சுவிசேஷம் மட்டுமே.

ஜே. ஐ. பெக்கரின் இந்த ஆக்கத்தை பாப்திஸ்து பிரசங்கியான சார்ள்ஸ் ஸ்பர்ஜன் அவர்களின் வார்த்தையைக் குறிப்பிட்டு முடிக்க விரும்புகிறேன்.

“கல்வினிசம் என்ற வார்த்தையின் மூலம் பொதுவாக தற்காலத்தில் அறியப்பட்டிருக்கும் சத்தியத்தைப் பிரசங்கித்தால் தவிர, சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம் என்று சொல்ல முடியாது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. கல்வினிசம் என்பது அதற்குக் கொடுக்கப்பட்ட புனைப்பெயர்; கல்வினிசமே சுவிசேஷம், அதுவேறெதுவுமில்லை. இறையாண்மையின் மூலம் வருகின்ற கிருபையையும்; தெரிந்துகொள்ளும், மாறாத, நித்திய, வெற்றியடையும் யெகோவாவின் அன்பையும் பிரசங்கிக்காவிட்டால் நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறோம் என்று நான் நம்பவில்லை. அதுமட்டுமல்லாமல், தன்னால் முன்குறித்து தெரிந்துகொள்ளப்பட்ட குறிப்பிட்ட மக்களை மீட்பதற்காக கிறிஸ்து சிலுவையில் மரித்தார் என்ற சுவிசேஷ சத்தியத்தின் அடிப்படையில் பிரசங்கிக்காவிட்டால் நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறோம் என்பதை நான் நம்பவில்லை; அழைக்கப்பட்ட பரிசுத்தர்களை விழுந்துபோகும்படிச் செய்கின்ற சுவிசேஷத்தையும் என்னால் ஒருபோதும் புரிந்துகொள்ளவும் முடியவில்லை.” (சார்ள்ஸ் ஸ்பர்ஜனின் சுயசரிதத்தில் இருந்து)

One thought on “வரலாற்றுக் கல்வினிசமும், கல்வினிச ஐம்போதனைகளும்

 1. அன்பு சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,

  இந்த இதழ் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மின்னஞ்சலில் வாசித்தேன்
  வாழ்த்துக்கள். மேலும் எனது முகவரி மாற்றம் செய்து இருப்பதால் தயவு செய்து
  எனது புதிய முகவரிக்கு தயவு செய்து திருமறை தீப இதழை தொடர்ந்து அனுப்பி வைக்க
  வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  அன்பு சகோதரன்
  ஏ இராபின் ஏசையன்.

  On Fri, Oct 15, 2021, 20:33 திருமறைத்தீபம் (Bible Lamp) wrote:

  > ஆர். பாலா posted: ” ஜே. ஐ. பெக்கரின் விளக்கம் (கிறிஸ்தவ வரலாற்றில்
  > கல்வினிசம் என்ற பெயரில் பொதுவாக அழைக்கப்பட்டு வந்திருக்கிற சீர்திருத்த
  > இறையியல் பற்ற¤ ஜே. ஐ. பெக்கர் வரைந்துள்ள ஆக்கம் இது. பெக்கர் இந்த ஆக்கத்தை
  > தத்துவார்த்த ரீதியில், வாதப்பிரதிவாதங்களோடு எழுதியிருப்பதால”
  >

  Like

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s