பியூரிட்டன்களின் பார்வையில் மனந்திரும்புதல்

Shebaமுத்துக்களால் கோர்க்கப்பட்ட மணிமாலை

சத்தியம், சத்தியம் என்று சலசலக்கும் போலிச் சிலம்புகள் நடுவே மாறுபட்டு ஒலியெழுப்பி சத்தியத்தின் முன் மண்டியிடச் செய்யும் மாணிக்கச் சிலம்புகள்: போதகர் பாலா அவர்களின் ‘பியூரிட்டன்களின் பார்வையில் மனந்திரும்புதல்’ எனும் நூல்.

இந்நூலில் நூலாசிரியர், மறுபிறப்படைந்த ஒவ்வொரு விசுவாசியும் தனது மரணம்வரையிலும் தொடரவேண்டிய ‘மெய்யான மனந்திரும்புதல்’ என்பது என்ன? என்பதை தாமஸ் வாட்சனின் மனந்திரும்புதல் நூலிலிருந்து ஆராய்ந்து விளக்குகிறார். அதன் ஆரம்பமாக, வேதம் எதிர்பார்க்கும் மெய்யான மனந்திரும்புதல் இன்று எங்கே போய்விட்டது? என்ற கேள்வியோடு ஆரம்பித்து, எது உண்மையான மனந்திரும்புதல் இல்லை! யார் யார் மனந்திரும்ப வேண்டும்? மனந்திரும்புதல் மாம்சத்தின் கிரியையா? அல்லது ஆவியின் கனியா? என்பது போன்ற பல அடிப்படைக் கேள்விகளுக்கு, பியூரிட்டன் பெரியவர்களான தோமஸ் பொஸ்டன், ஜோன் கல்ஹுன் ஆகியோர் அளித்துள்ள பதிலை மேலதிக விளக்கங்களுடன் விபரித்துள்ளார். கடைசியாக வேதம் எதிர்பார்க்கும் அந்த ‘மெய்யான மனந்திரும்புதல்’ கொண்டிருக்க வேண்டிய அத்தியாவசியமான ஆறு மூலப் பொருட்களைத் தாமஸ் வாட்சனின் ‘மனந்திரும்புதல்’ நூலில் இருந்து விளக்கியுள்ளார்.

நூலின் அறிமுகமாக; தாமஸ் வாட்சன் குறித்தும், பியூரிட்டன்களின் பார்வையோடு ஒத்து இந்த நூலை வாசிப்பதற்கு அவசியமான காரியங்களைக் குறித்தும் மிகவும் அவசியமான அறிமுகத்தை ஆசிரியர் தந்துள்ளார். ஏனென்றால், நாம் வாழும் காலத்திற்கும் பியூரிட்டன்களின் காலத்திற்கும், நாம் கொண்டிருக்கும் வேத அறிவுக்கும் அவர்கள் கொண்டிருந்த இறையியல் அறிவுக்கும் இடையே இருக்கும் பெரிய இடைவெளி இந்த நூல் அறிமுகத்தின் அவசியத்தை உறுதிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி தாமஸ் வாட்சன் விளக்கும் அந்த வேதபூர்வமான மனந்திரும்புதலில் காணப்படும் அத்தனை ஆவிக்குரிய சாரம்சங்களும் ஒவ்வொரு விசுவாசியிலும் காணப்படவேண்டியது அவசியமாக இருந்தாலும், அது எல்லாருக்கும் ஒரேவிதமாக அனுபவத்தில் வெளிப்படுவது இல்லை. எனவே, நூல் விளக்கும் அனுபவம் எல்லாருக்கும் ஒரே அளவில் நிகழவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. பாவ உணர்த்துதல் அவரவர் செய்த பாவத்துக்குத் தக்கதாக மிகஆழமானதாகவோ அல்லது ஆழம் குறைந்ததாகவோ இருந்துவிடலாம். எனவே போதகர்களாக இருப்பவர்கள் இதை நிதானித்துப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்கிறார் ஆசிரியர்.

நூல் அறிமுகத்தின் தொடர்ச்சியாக, இந்த வேதபூர்வமான மனந்திரும்புதலை, பியூரிட்டன் பெரியவர்களான தாமஸ் பொஸ்டன், ஜோன் கல்ஹுன் ஆகியோரின் பார்வையில் பல கோணங்களில் எடுத்துக்காட்டி தெளிவுபடுத்துகிறார். மெய்சிலிர்க்க வைக்கும் அந்த மெய்யான மனந்திரும்புதலை, இன்று நம்மினத்தில் காணப்படும் ‘ஜெல்லி மீன் கிறிஸ்தவ’ ஆத்துமாக்களிடம் தேடியும் காணமுடியாத நூலாசிரியர், இத்தகைய தரம் குறைந்த நிலையில் நம்மினத்து கிறிஸ்தவம் காணப்படுவதற்கு காரணமான ‘போலி சுவிசேஷத்தையும், போலி பிரசங்கிகளையும்’ வன்மையாகச் சாடுவதோடு, தாமஸ் வாட்சன் விளக்கும், கிரியையின் அடிப்படையில் அமையாத, சிந்தனை மாற்றத்தை மட்டும் எதிர்பார்க்காத, கிருபையினால் மட்டுமே உண்டாகும், அதாவது, வார்த்தையின் மூலமாக இருதயத்தில் கிரியை செய்யும் ஆவியானவரின் எச்சரிப்பிற்குக் கீழ்ப்படிந்து, ஆழமான பாவ உணர்வோடும், மன வருந்துதலோடும், மெய்யான பாவ அறிக்கையோடும் தொடர்ச்சியாகப் பாவத்தைக் கொன்று, வைராக்கியமாக பரிசுத்த வாழ்க்கை வாழத் தூண்டும், அந்த மெய்யான மனந்திரும்புதல் எங்கே போய்விட்டது? என்ற ஆத்துமபாரத்தோடு கூடிய ஓர் ஆணித்தரமான கேள்வியில் அனைத்து வாசகர்களின் சிந்தனைகளையும் ஒரு சக்கர வியூகத்திற்குள் கொண்டு வந்து, நூலின் அடுத்த பகுதிக்கு அழைத்துச் செல்கிறார்.

அடுத்து வரும் இரு அத்தியாயங்களில், மாய்மாலமான போலி மனந்திரும்புதல் குறித்து ஆசிரியர் எச்சரிக்கிறார். சரியானதை மட்டும் தெரிந்துவைத்திருந்தால் போதுமே போலியானதைக் குறித்த விளக்கம் அவசியமா? என்ற குழப்பம் எழும்போதே, ‘பகுத்தறிவு என்பது, சரியானதற்கும், தவறுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை வெறுமனே கூறுவது அல்ல; மாறாக அது சரியானதற்கும், கிட்டத்தட்ட சரியானதற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைச் சொல்கிறது’ என்ற ஸ்பர்ஜனின் மேற்கோளை நினைவுபடுத்தி, எதிர்மறையில் ஆரம்பித்து நேர்மறையான விளக்கங்களைத் தரும் பியூரிட்டன் பெரியவர்களின் நூல்களில் எத்தனை நன்மையிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வைக்கிறார்.

இந்தப் பகுதி கர்த்தரிடத்தில் இருந்து மட்டுமே வருகிற மெய்யான மனந்திரும்புதலின் அடையாளங்களைக் கொண்டிராத வேறு எந்தவிதமான மனித செயல்களும், உணர்ச்சிகளும் போலியானவை என்பதை அப்பட்டமாக விளக்கி, இருதயப்பரிசோதனையின் அவசியத்தை வலியுறுத்துகிறது. கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று சொல்வதற்கு மேலாக எந்தவிதமான ஆவிக்குரிய அடையாளங்களையும் கொண்டிராத இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்திற்கு, பியூரிட்டன் போதகரான மெத்தியூ மீட்டின் போலிமனந்திரும்புதல் குறித்த 20 அம்சங்களைக் கொண்ட போதனை குறித்த செய்தி கண்டிப்பாக அதிர்ச்சியளிக்கும். அத்தோடு எத்தனை வஞ்சகமாக நம் இருதயம் நம்மை ஏமாற்றிவிடக்கூடும் என்ற ஆழமான எச்சரிப்பையும் தருகிறது.

அடிப்படை இருதயமாற்றம் இல்லாமல் வெறும் உலகப் போக்கான ஒழுக்கக் கட்டுப்பாடாக பாவங்களை செய்யாமலிருப்பது மெய்யான மனந்திரும்புதலின் அடையாளம் அல்ல, என்று கூறும் ஆசிரியர் போலி மனந்திரும்புதலின் அடையாளமாக வாட்சனின் நூலில் இருந்து மூன்றுவகையான உதாணங்களைத் தருகிறார்: 1) நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கும், தண்டனைக்கும், நரகத்திற்கும் பயப்படுவதால் ஏற்படும் உணர்ச்சிகளை மட்டும் கொண்டிருப்பது மெய்யான மனந்திரும்புதலின் அடையாளம் அல்ல. 2) துன்பங்களின் மத்தியிலும், வியாதிப் படுக்கையிலும் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் தீர்மானங்கள் மனந்திரும்புதலின் அடையாளம் அல்ல. 3) ஒரு சில பாவங்களை மட்டும் செய்யாமல் நிறுத்திவிடுவது மெய்யான மனந்திரும்புதலின் அடையாளம் அல்ல.

இதுமட்டுமின்றி இதற்கு சுதி சேர்க்கும்விதத்தில் மேலதிகமாக ஆறு அடையாளங்களை ஜோன் கல்ஹூனின் நூலிலிருந்து அருமையாக விளக்கியுள்ளார் ஆசிரியர். இதிலிருந்து ஆகாபிலும், யூதாசிலும், ஏரோதிலும், அகிரிப்பாவிலும் காணப்பட்ட மனந்திரும்புதலின் அடையாளம் ஏன் போலியானது? என்பதைப் புரிந்துகொள்ள முடிவதோடு, நாமும் இந்தப் போலி அடையாளங்களோடு வாழ்ந்து நித்திய நரகத்தை அடைந்துவிடலாம் என்ற பயங்கரமான எச்சரிக்கையும் இது தருகிறது.

அடுத்த அத்தியாயத்தில் ஆசிரியர், மனந்திரும்புதல் மாம்சத்தின் கிரியையா அல்லது கிருபையின் கனியா? என்ற மனந்திரும்புதலைக் குறித்த மிகவும் முக்கியமான இறையியல் போதனையை ஆராய்ந்து விளக்குகிறார். இப்பகுதியில் கிறிஸ்தவத்தின் இரண்டு முக்கிய எதிரிகளான, லீகலிசம் மற்றும் அன்டிநோமியனிசம் ஆகியவற்றை அவற்றின் கொள்கைகளின் அடிப்படையில் விபரித்து, வேதபூர்வமான மனந்திரும்புதல் எந்தவகையில் இவற்றிலிருந்து வேறுபடுகிறது என்பதை விளக்கும் முகமாக, இரட்சிப்பை அடைவதற்கு மனந்திரும்புதல் ஒரு நிபந்தனையா அல்லது கிருபையின் விளைவாக மனிதன் செய்யவேண்டிய கடமையா? என்ற ஒரு ஆக்கப்பூர்வமான கேள்வியை எழுப்பி, விவாத அடிப்படையில் செமி-பெலேஜியனிச, ஆர்மீனியனிச போதனை மற்றும் சீர்திருத்தவாத இரட்சிப்பின் படிமுறை ஆகியவற்றிற்கு இடையிலான இமாலய வேறுபாட்டை அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து விளக்கி ‘மனந்திரும்புதல் சுத்தமாக சுவிசேஷ கிருபை’ என்பதை ஐயந்திரிபற எடுத்துரைக்கிறார் ஆசிரியர். இப்பகுதி தரும் முக்கியமான படிப்பினைகளில் ஒன்று, நாம் வேதபூர்வமான சத்தியங்களைத் தெளிவாகக் கேட்டு, சிந்தித்து நடைமுறை வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்தி வாழாமல், அரைகுறையாக சத்தியத்தைக் கேட்டு, ஏனோ தானோவென்ற ஒரு கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வோமானால், இலகுவாக இத்தகைய போலிப் போதனைகளுக்கு இரையாகி இறுதிவரை ஒரு லீகலிஸ்டாகவோ அல்லது ஆர்மீனியனாகவோ வாழ்ந்து பரிதாபமாக மடிந்து போகும் ஆபத்து இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

அடுத்து வரும் இரண்டு அத்தியாயங்கள், யார் யார் மனந்திரும்ப வேண்டும்? என்ற தலைப்பில், மனந்திரும்ப வேண்டிய அனைத்து மனிதர்களையும் ஆறு பிரிவுகளாகப் பிரித்து மனந்திரும்புதலின் அவசியத்தை வலியுறுத்துகிறது. தாமஸ் வாட்சன் குறிப்பிடும் ஆறு பிரிவு மனிதர்களையும் நமது நூலாசிரியர், வாசகர்களின் புரிதலுக்கு ஏற்றபடி, அவிசுவாசி மற்றும் விசுவாசி என்ற இரண்டே பிரிவுக்குள் கொண்டு வந்து எளியமுறையில் குழப்பங்கள் இன்றி புரிந்துகொள்ளக்கூடியவகையில் விவரித்துள்ளார். அனைத்து அவிசுவாசிகளின் இரட்சிப்பிற்கும் மனந்திரும்புதல் அவசியம்; அத்தோடு மறுபிறப்படைந்த விசுவாசிகளுக்கும், அவர்களில் தொடர்ந்திருந்து தொல்லை கொடுக்கும் ஜென்ம பாவத்தின் காரணமாக தொடர்ச்சியான மனந்திரும்புதல் அவசியம் என்பதைத் தீர்க்கமாக எடுத்துரைக்கிறார். தொடர்ந்து பாவத்தை அழிப்பது ஒவ்வொரு விசுவாசியின் தலையாய கடமையாகக் குறிப்பிடும் ஆசிரியர், அந்தக் கடமையை ஒவ்வொரு விசுவாசியும் கருத்தோடும், கிருபையின் பலத்தோடும், ஆவியில் தங்கியிருந்து, தேவபயத்தோடு நிறைவேற்றவேண்டும்; இதற்குச் சவாலாக இன்றைய கேடான உலகில் காணப்படும் பலவகையான ஆபத்துக்களை எடுத்துக்காட்டி, இவற்றின் மத்தியில் விசுவாசியின் எண்ணமும், சொல்லும், செயலும் எத்தனை சுத்தமாக இருக்க வேண்டும் என்பதின் கட்டாயத்தை வலியுறுத்தி, தொடர்ச்சியான மனந்திரும்புதலின் அவசியத்தைக் கற்றுக் கொடுக்கிறார்.

இந்த பகுதியில் பியூரிட்டன் பெரியவர்களின் ஆரம்பகால வாழ்க்கையும், அவர்கள் நூல்கள், பிரசங்கங்கள் மற்றும் வைராக்கியமான பரிசுத்த வாழ்க்கை முறைகளையும் ரத்தினச் சுருக்கமாக ஆசிரியர் விளக்கியுள்ளார். மெய்யாகவே திருச்சபை வரலாற்றில் பியூரிட்டன்களின் காலம், ஒரு அற்புதமான பொற்காலம்! ஆழமான வேத அறிவு, அனல் வீசும் பிரசங்கங்கள், கர்த்தருடைய வார்த்தையைப் பிரதானமாகக் கொண்ட ஆராதனை முறைமைகள், வேதபிரசங்கங்களைத் தேடி அலைந்த ஆத்துமாக்கள், ஆச்சரியப்பட வைக்கும் சுயபரிசோதனை மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் பரிசுத்த வாழ்க்கை ஆகியவற்றை வாசிக்கும்போது, நாம் வாழும் தற்கால கிறிஸ்தவ சமுதாயத்தில், விசுவாசிகளின் பரிசுத்த வாழ்க்கை முறை இத்தகைய தரம் உயர்ந்த நிலையில் இல்லையே! என்ற ஏக்கத்தை உண்டாக்குவதோடு, அத்தகையதொரு வல்லமையான எழுப்புதலை வாஞ்சித்து, அதற்கு தேவையான கர்த்தரின் கிருபைக்காக ஜெபிக்கவும், உழைக்கவும் நம்மை ஊக்கப்படுத்துகிறது.

இதைத் தொடர்ந்து வரும் அதிகாரத்தில், மெய்யான மனந்திரும்புதல் கொண்டிருக்கும் இரண்டு முக்கிய சாரம்சங்களாகிய, மனத்தாழ்மையையும், சீர்திருந்துதலையும் வேத வசனத்தின் அடிப்படையில் மிகவும் ஆணித்தரமாக விளக்கியுள்ளார் ஆசிரியர். அதாவது, ‘மனந்திரும்புதல் கர்த்தருடைய ஆவியின் கிருபையாக இருப்பதால், அதன் மூலமாக ஒரு பாவி உள்ளார்ந்த விதத்தில் தாழ்மைப்படுத்தப்பட்டு புறத்தில் சீர்திருந்தலுக்குள்ளாகிறான்’. இதனை பிலி 2:3-8 வசனங்கள் மூலம் கிறிஸ்துவில் மனத்தாழ்மை எந்தவிதத்தில் காணப்பட்டது? எப்படி வெளிப்பட்டது? கிறிஸ்துவில் இருந்த அதே சிந்தையை நாம் கொண்டிருப்பது என்பது முடிகின்ற விஷயமா? என்ற பல கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு வேதபூர்வமாகவும், மூல மொழியினடிப்படையிலும் மிகவும் தெளிவான பதில்களைத் தந்து விளக்கியுள்ளார்.

இந்தப் பகுதி தரும் பயங்கரமான எச்சரிப்புகளில்: 1) நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சியோ, கனிகளோயின்றி, காண்பவர்கள் இவர்கள் அவிசுவாசியா அல்லது விசுவாசியா என்று சந்தேகப்படும்விதத்தில் காணப்படுமானால் அதற்கு ஒரே காரணம், மனத்தாழ்மையோடு கூடிய தொடர்ச்சியான மனந்திரும்புதல் இல்லாமையே! 2) யூதாஸ் மனங்கசந்து அழுதும், கதறியும் மனந்திரும்பாமல் தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணம், கிருபையின் கனியாகிய அந்த மெய்யான தாழ்மை அவனில் இல்லாமல் போனதே! என்ற உண்மைகளை உரக்கச் சொல்லி நம்மை எச்சரித்து நமது ஆவிக்குரிய வாழ்க்கையைப் பரிசோதனை செய்து பார்த்து மனந்திரும்பத் தூண்டுகிறது.

தொடரும் அத்தியாயத்தில்: தொமஸ் வாட்சனின் நூலிலிருந்து, பாவத்தின் விளைவால் மரணத்திற்கு ஏதுவாக நோயுற்றிருக்கும் மனித ஆத்துமாவுக்கு, கர்த்தர் ஏற்படுத்தியிருக்கும் ஆவிக்குரிய மருந்தாகிய மனந்திரும்புதலில் காணப்படவேண்டிய ஆறு அத்தியாவசியமான மூலப்பொருட்களை, ஒன்றன் பின் ஒன்றாக, வேதத்திலிருந்தும், 1689 விசுவாச அறிக்கையை மேற்கோள் காட்டியும் தெளிவாக ஆசிரியர் விளக்கியுள்ளார்.

1) பாவத்தைப் பாவமாகப் பார்த்தல்: பாவத்தைப் பாவமாகப் பார்க்கக் கூடிய கண்களால் மட்டுமே அதைக் குறித்த துக்கமடைந்து கண்ணீரோடு மனந்திரும்ப முடியும் என்று கூறும் ஆசிரியர், தாவீதிலும், இளையகுமாரனிலும் காணப்பட்ட ‘பாவத்தைப் பாவமாகப் பார்க்கும் தன்மையை’ வேதத்திலிருந்து எடுத்துக் காட்டி அவர்களைப் போன்ற பாவ உணர்தல் இல்லாத மனந்திரும்புதல் மெய்யான மனந்திரும்புதல் அல்ல என்கிறார். இந்த பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும், டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்சின் ‘பாவத்தைப் பற்றிய அறிவோ உணர்வோ இல்லாத ஒருவனுக்கு கிறிஸ்துவின் சுவிசேஷம் தள்ளியே காணப்படும்’ என்ற கருத்து நம்மை அதிகமாகச் சிந்திக்க வைக்கிறது. அதுமட்டுமின்றி இன்றைய ஆத்துமாக்களுக்கு பாவத்தைப் பாவமாகப் பார்க்கும் உணர்வு இல்லாமல் இருப்பதற்கு காரணம், சுவிசேஷப் பிரசங்கங்களிலும், சபைப் பிரசங்கங்களிலும் மனந்திரும்புதல் பிரசங்கிக்கப்படாதிருப்பதே என்று கூறி, இன்றைய பிரசங்கங்களில் காணப்படும் இறையியல் குறைபாட்டையும் சுட்டிக்காட்டி தெளிவுபடுத்துகிறார்.

2) பாவத்தைக் குறித்த துக்கம்: கர்த்தர் விரும்பும் பாவத்தைக் குறித்த பரிசுத்தமான துக்கம் என்றால் என்ன? என்பதை வேதத்திலிருந்து பல வசனங்களை அடுக்கடுக்காக மேற்கோள் காட்டி விளக்கும் ஆசிரியர், சுயநலமான உலகத்துக்கு ஏற்ற துக்கத்திலிருந்து இந்த பரிசுத்தமான துக்கம் எப்படி மாறுபடுகிறது? என்பதை ஆறு தலைப்புகளில், பல கேள்விகளை எழுப்பிப் பதிலளிக்கிறார். அத்தோடு ‘அறிவுபூர்வமான’ துக்கத்தைக் குறித்த எச்சரிக்கையும், மனந்திரும்புதலை அசாதாரணமாகப் புதுப்பித்துக் கொள்ளவேண்டிய இரண்டு முக்கியமான சந்தர்ப்பங்களைக் குறித்த செய்தியையும் தருகிறார்.

3) பாவத்தை அறிக்கையிடுதல்: இந்த பகுதியில் ‘கடவுளுக்கு முன் நம் பாவத்தை ஆராய்ந்து பார்த்து, அதற்காகக் காயப்பட்டு நம்மைப் பற்றி நாமே கடவுளிடம் செய்யும் அறிக்கைக்கு பெயர்தான் பாவ அறிக்கை’ என்று விளக்கம் கொடுக்கும் வாட்சன், அதைத் தொடர்ந்து மெய்யான பாவ அறிக்கை கொண்டிருக்க வேண்டிய எட்டுத் தகுதிகளைக் குறித்து விவரிக்கிறார். அதன் பின்னர் பாவ அறிக்கை செய்யவேண்டியதன் அவசியம் மற்றும் அதனால் விளையும் பயன்பாடுகள் ஆகியவற்றையும் பட்டியலிட்டுக் கூறுகிறார். இதை வாசிக்கும்போது எத்தனை முறை ஆகஸ்தீனைப் போல, நம் வாய் பாவத்தை அறிக்கையிட்ட போதும் இருதயம் ‘இன்னும் இல்லை’ ஆண்டவரே! என்று சொல்லியிருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. கடைசியாகக் கர்த்தருக்கு முன்பாக மட்டுமல்லாமல் மனிதர்கள் முன்பும் அறிக்கை செய்யப்பட வேண்டிய மூன்று காரியங்களை வாட்சன் கோடிட்டுக் காட்டுகிறார்.

4) பாவத்துக்காக வெட்கப்படுதல்: கிறிஸ்தவன் பாவத்தை பாவமாக பார்த்து, ஆவியின் மூலம் உணர்ந்து, இருதயத்தில் குத்தப்படும் போது அதைக் குறித்து வெட்கப்படுவதே பாவத்துக்காக வெட்கப்படுதல்; அந்த பரிசுத்தமான வெட்கம் எஸ்றாவில் காணப்பட்டது, ஆலயத்திற்குப் போய் மார்பில் அடித்து ஜெபித்த ஆயக்காரனிடம் காணப்பட்டது என்று கூறும் வாட்சன், தொடர்ந்து பாவத்தைக் குறித்த வெட்கத்தை உண்டாக்கும் ஒன்பது விஷயங்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துக் கூறுகிறார். இந்தப் பகுதியில் நம்மை அதிர்ச்சியில் தூக்கி வாரிப்போடச் செய்யும் ஒரு சத்தியம் என்னவென்றால்; நம் பாவங்கள் பிசாசின் பாவங்களை விட மகா மோசமானவை என்பது. அந்த பகுதியின் விளக்கத்தைத் தொடர்ந்து வாசித்து முடிக்க முடியாதபடி, வரிக்கு வரி கண்களில் நீர் தாரை தாரையாக பெருகி ஓடுவதைத் தடுக்க முடியாது. நாளைய வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு அன்று வெட்கமற்று தலை நிமிர்ந்து நிற்பதற்கு, இன்றைய பரிசுத்தமான வெட்கம் அசைக்க முடியாத அஸ்திவாரமிடுகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக எடுத்துக் காட்டுகிறார் வாட்சன்.

5) பாவத்தை வெறுத்தல்: உண்மையான ஆரோக்கியமான மனந்திரும்புதல் கடவுளை நேசிப்பதில் ஆரம்பித்து பாவத்தை வெறுப்பதில் போய் முடியும் என்று கூறும் நூலாசிரியர், ஆரோக்கியமான பாவ வெறுப்பு எப்படி வெளிப்படுகிறது என்பதை வாட்சனின் ஐந்து காரணிகள் மூலம் விளக்குகிறார். அதுமட்டுமல்லாமல் பாவத்தின் கோரத்தை, அதன் தன்மை, பிறப்பிடம், சுபாவம், பயங்கரம் மற்றும் வெறுக்கப்படத்தக்க அதன் விளைவுகளைக் குறித்துத் தெளிவான விவரங்களையும் ஆழமான எச்சரிக்கையும் தருகிறார்.

6) பாவத்தை விட்டு விலகுதல்: பாவத்திற்கு புறமுதுகு காட்டி அதை விட்டு விலகுவதில் போய் முடியாத மனந்திரும்புதல் மெய்யான மனந்திரும்புதலாக இருக்க முடியாது என்பதை, பல வேத வசனங்களின் மூலம் விபரித்து, அதைத் தொடர்ந்து காணப்பட வேண்டிய சீர்பொருந்திய வெளிப்புற மாற்றத்தை, பிலிப்பி சிறை அதிகாரி மற்றும் நினிவே மக்களின் செயல்கள் மூலம் உறுதிப்படுத்துகிறார். தொடர்ச்சியான மனந்திரும்புதலோடு மெய்யாக பாவத்துக்கு விலகி ஓடுகிறவனில் காணப்பட வேண்டிய ஐந்து அம்சங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் விவரிக்கிறார்.

இதைத் தொடர்ந்து வரும் அதிகாரத்தில், மனந்திரும்புதலுக்கு வழிநடத்தும் அற்புதக் கருவியாக, வீழ்ச்சிக்கு பின்பும் இன்னும் மனிதனில் தொடரும் தெய்வீக சாயலின் ஒரு அம்சமான ‘சிந்திக்கும் திறனை’ சுட்டிக்காட்டி, தீவிரமாகச் சிந்திப்பதின் அவசியத்தை, வாட்சனின் நூலிலிருந்து மட்டுமல்லாமல், ஜோன் ஸ்டொட்டின் (Your Mind Matters) நூலிலிருந்தும் பல மேற்கோள்களைக் கொடுத்து, சிந்தித்துச் செயல்படுவதை நமது அடிப்படைக் கடமையாகவும், மனந்திரும்பாத பட்சத்தில் நாம் சந்திக்கப் போகிற பாரதூரமான விளைவுகளையும் கூறி எச்சரிக்கும் ஆசிரியர், இந்த அதிகாரத்தை மிகவும் லாவகமான முறையில், மனந்திரும்புதல் என்ற இலக்கை நோக்கி நம்மை உந்தித் தள்ளும் விசையைப் போலப் பயன்படுத்தி ‘இன்றே மனந்திரும்பு!’ என்ற ஒரு ஆணித்தரமான அறைகூவலோடு இந்நூலை முடிக்கிறார்.

பின் இணைப்பில் இரட்சிப்பின் படிமுறையில் மறுபிறப்பு, மனந்திரும்புதல், பாவமன்னிப்பு மற்றும் நீதிமானாகுதல் இவற்றிற்கு இடையே உள்ள நெருக்கமான தொடர்பை விளக்கப்படங்களுடன் சுருக்கமாகவும் தெளிவாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூலை வாசித்து முடித்தபோது, பலகாலமாக தீராத வேதனையை உண்டாக்கிய ஒரு பெயர் தெரியா நோயை, அதன் காரணகாரணிகள், பாதிப்புகள் மற்றும் பின்விளைவுகளோடு அறிந்துகொண்டு, அதற்கான மருந்தை உட்கொண்டு நிவாரணம் பெற்றுக்கொண்ட நிம்மதியைத் தந்தது. மெத்தியூ மீட்டின் நூலுக்கு மெக்காத்தர் அளித்த விளக்கம் போல ‘உணர்ச்சிகளுக்கு தூபம் போடும் நூல் அல்ல, இது ஆத்துமாவுக்கான உணவு!’. பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால், வேத அறிவில் மூழ்கித் திளைத்த, பல பியூரிட்டன் பெரியவர்கள், சீர்திருத்த இறையியல் அறிஞர்கள் ஆகியோரின் சிந்தனைக் கருவூலத்திலிருந்து சிதறிய விலையுயர்ந்த முத்துக்களால் கோர்க்கப்பட்ட அற்புதமான மணிமாலை! நூல் விளக்கும் மனந்திரும்புதலை அனுதின அணிகலனாக அணிந்து வாழும் விசுவாசிக்கு, ஆவிக்குரிய அழகு சேர்த்து எல்லையில்லாத இன்பம் அளிக்கும் நூல் இது.

இத்தகைய ஒரு அருமையான நூல் நமக்கு தமிழில் கிடைத்திருப்பது, நினிவே மக்களுக்கு கர்த்தர் யோனா தீர்க்கதரிசி மூலம் காட்டிய கிருபைக்கு ஒப்பானது, எனவே நூலைக் கருத்தோடு வாசித்து இன்றே மனந்திரும்புவோம்! யாருக்கு தெரியும் நமக்கு அளிக்கப்பட்ட கிருபையின் நாட்கள் இன்றோடு முடிந்து போகலாம்! நாளை என்பதும் நமது கரத்தில் இல்லை! இந்த நூலை முறையாக வாசித்து சிந்திக்கும் ஒவ்வொரு இருதயத்திலும் ஆவியானவர் கிரியை செய்யவும், அதனாலுண்டாகும் வெளிப்புறமான சீர்திருத்தத்தின் ரேகைகளை காணும் நாளை வாஞ்சித்தும் ஊக்கத்தோடு ஜெபிக்கிறேன்.

சுவிசேஷ ஊழியத்தில், கர்த்தர் வல்லமையாக பயன்படுத்தி வரும் போதகர் பாலா அவர்களுக்கும், சீர்திருத்த வெளியீடுகளுக்கும் உளமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

– ஷேபா மைக்கேல் ஜார்ஜ்

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s