பெருமையால் வந்த பேராபத்து

(2 இராஜாக்கள் 15:1-7; 2 நாளாகமம் 26)

2 இராஜாக்கள் நூலை எழுதியவர் இதன் ஆரம்ப அதிகாரங்களில் எல்லாம் இஸ்ரவேலின் இராஜாக்களைப் பற்றியே அதிகமாக விளக்கிவந்திருக்கிறார். அதற்கு மத்தியில் அவர் யூதாவில் நடந்துகொண்டிருந்த காரியங்களையும் சுருக்கமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார். அவ்வப்போதைக்கு அவர் யூதாவின் அரசர்களைப் பற்றியும் குறிப்பிட்டு வந்திருக்கிறார் என்பது நமக்குத் தெரியும்.

இந்த அதிகாரத்தில் மறுபடியும் நாம் யூதாவின் அரசர்களில் ஒருவரைப் பற்றி நூலை எழுதியவர் நமக்கு சுருக்கமாக விளக்குகிறார். அந்த அரசனே உசியா. இந்த அதிகாரத்தில் அவனுடைய பெயர் அசரியா என்றிருக்கிறது. 2 நாளாகமம் 26 அவனை உசியா என்றழைக்கிறது. 2 நாளாகமம் 26ம் அதிகாரம் முழுவதும் அவனைப் பற்றிய விளக்குகிறது.

இவனுடைய வாழ்க்கை நன்றாக ஆரம்பித்து முடிவு மோசமாக முடிந்தது. இதேபோலத்தான் இவனுடைய தாத்தாவான யோவாசின் வாழ்க்கையும், தகப்பனான அமத்சியாவின் வாழ்க்கையும் இருந்தது. இவர்கள் மூவருடைய ஆட்சியுமே நல்லபடியாக ஆரம்பித்தது; கொஞ்சக்காலத்துக்குப் பிறகு வெவ்வேறு காரணங்களினால் மூவரும் எடுத்த முடிவுகள் அவர்களுக்கும் அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களுக்கும் தீமையில் போய் முடிந்தன. இதன் மூலம் கர்த்தர் தொடர்ந்து நம்மை எச்சரித்து வருகிறார். அதாவது, நாம் எப்படி வாழ்கிறோம், எந்தெந்தவிதமாக வாழ்க்கையில் தீர்மானங்களை எடுக்கிறோம் என்பதிலெல்லாம் கர்த்தர் அக்கறை காட்டுகிறார். வாழ்க்கையை நல்லவிதமாக ஆரம்பிப்பது மட்டும் முக்கியமல்ல, அது நல்ல முடிவில் போய்ச்சேர வேண்டியதும் அவசியம். நாம் நல்லபடியாக நம் வாழ்க்கைப் பயணத்தை முடிக்கவேண்டும் என்பதையே கர்த்தர் விரும்புகிறார்.

ஆகவே, இந்த நேரத்தில் நாம் உசியாவின் ஆட்சியையும், அவனுடைய சிறப்புக்குக் காரணமென்ன என்பதையும், அவனுடைய முடிவு மோசமாக அமைந்ததற்கு எது காரணம் என்பதையும் கவனிக்கப் போகிறோம். அதைச் செய்வதற்கு நாம் சில முக்கியமான கேள்விகளைக் கேட்பது அவசியம்.

  1. உசியா யார்?
  2. உசியா பெயர் பெற்றவனாக இருந்திருப்பதற்கு அவன் அப்படி என்ன செய்திருந்தான்? (1-15)
  3. நூலாசிரியர், உசியாவின் சிறப்பை எப்படி விளக்கியிருக்கிறார்?
  4. உசியா விழுந்ததற்குக் காரணமென்ன? அவனுக்கு நேர்ந்ததென்ன? (16-23)

இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தெரிந்துகொண்டபிறகு நாம் படிக்கவேண்டிய பாடங்களைக் கவனிக்கலாம்.

உசியாவின் பெயர் 2 இராஜாக்கள் 15ல் ‘அசரியா’ என்று இருக்கிறது. அதுவே அவனுக்கு பிறப்பில் கொடுக்கப்பட்ட பெயர். ஆனால். 2 நாளாகமம் 26 அவனை உசியா என்றழைக்கிறது. இந்தப் பெயர் அவன் இராஜாவானபோது அவனுக்குக் கொடுக்கப்பட்டது. உசியா என்றால் ‘கர்த்தர் வல்லவர்’ என்று அர்த்தம். அசரியா என்றால் ‘கர்த்தர் உதவுவார்’ என்று அர்த்தம். இரண்டுமே உசியாவுக்குப் பொருத்தமான பெயர்கள்தான். உசியா யூதாவின் பெரும் அரசர்களில் ஒருவனாகக் கருதப்பட்டான். ஆர். சி. ஸ்பிரவுல் எனும் சீர்திருத்த அறிஞர், ‘உசியா யூதாவின் ஐந்து சிறப்பான அரசர்களில் ஒருவன்’ என்று சொல்லியிருக்கிறார்.

உசியா யூதாவை 52 வருடங்கள் ஆண்டிருக்கிறான். யூதாவை ஆண்ட இன்னுமொரு மோசமான அரசனான, மனாசே 55 வருடங்கள் யூதாவை ஆண்டான். உசியாவுக்கு 16 வயதிருக்கும்போது அவனை யூதாவின் அரசானக்கினார்கள். அப்போது அவனுடைய தகப்பன் அமத்சியா சிறையிலிருந்தான். உசியா தன் தகப்பனோடு 25 வருடங்களும், தனியாகப் 17 வருடங்களும், தன் மகனான யோதோமோடு இணைந்து 10 வருடங்களுமாக மொத்தம் 52 வருடங்கள் யூதாவை ஆண்டான்.

2 இராஜாக்கள் உசியாவை ‘அசரியா’ என்ற பெயரில் குறிப்பிட்டு அவனைப் பற்றிச் சுருக்கமாக ஏழு வசனங்களில் விளக்கி முடித்துவிடுகிறது. 2 நாளாகமம் 26ம் அதிகாரம் அவனுக்கு 23 வசனங்களைக் கொடுத்திருக்கிறது. உசியாவின் ஆட்சிக் காலத்தில் அவன் செய்த பாராட்டக்கூடிய செயல்களையெல்லாம் 2 இராஜாக்கள் விளக்கவில்லை. உசியாவைக் கர்த்தர் தண்டித்து சாகும்வரை குஷ்டரோகம் பிடித்தவனாக்கியதை மட்டுமே அது குறிப்பிடுகிறது. ஆகவே, உசியாவைப் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்துகொள்ள நாம் 2 நாளாகமம் 26ம் அதிகாரத்திலேயே தங்கியிருக்கிறோம்.

2 நாளாகமம் 26ல் 2-15 வரையுள்ள வசனங்களில், நாளாகமத்தை எழுதியவர் உசியா நாட்டில் செய்திருந்த பெருமைக்குரிய செயல்களை விளக்குகிறார். அதில் முதலாவதை 2ம் வசனத்தில் வாசிக்கிறோம். அதில், உசியா ஏலோதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவுக்கு சொந்தமாக்கிக்கொண்டான் என்றிருக்கிறது. ஏலோத் முக்கியமானதொரு கப்பல்துறையாக இருந்தது. அதன் மூலமாக கடல்வியாபாரம் நடந்து வந்தது. சாலமோனின் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்திருந்த ஏலோதை நூறு வருடங்களுக்கு முன் யெகோரத்தின் காலத்தில் யூதா இழந்திருந்தது. ஆகவே, உசியா ஏலோதை மறுபடியும் வெற்றிகொண்டது யூதாவின் பொருளாதாரத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

6-8 வரையுள்ள வசனங்களில் உசியாவின் மேலும் பல வெளிநாட்டு வெற்றிகளைப்பற்றி வாசிக்கிறோம். உசியா அதுவரை நீண்டகால எதிரிகளாக இருந்த சில நாடுகளைக் கைப்பற்றுவதில் கவனம் செலுத்தி பெலிஸ்தியா, அரபியர், மெகுனியர் ஆகியநாடுகளைக் கைப்பற்றினான். இவற்றின் மூலம் அவன் அம்மோனியருக்குத் தன்மேல் பயமேற்பட்டு தனக்குக் கப்பம் கட்டும்படிச் செய்தான். உசியாவின் பலத்தால் அவனுடைய புகழ் இக்காலத்தில் எகிப்துவரை எட்டியது. அவன் மிகவும் பலமுடையவனாக இருந்தான்.

இதைப்போன்ற வெற்றிகளை சாலமோனுடைய காலத்து வரலாற்றில் தான் நாம் வாசிக்கிறோம். அவன் காலத்து சந்ததியினரே இத்தகைய வெற்றிகளைப்பற்றி அறிந்திருந்தார்கள்.

9-10 வசனங்களில், நாளாகமம் உசியாவின் உள்நாட்டு வெற்றிகளைப் பற்றி புகழுகின்றது. உசியா எருசலேமிலும் அதைச் சுற்றியிருந்த வாசல்களிலும் கோபுரங்களைக் கட்டினான் என்கிறது. வனாந்தரத்திலும் அவன் பாதுகாப்புக் கோபுரங்களைக் கட்டினான். உசியா விவசாயத்தில் அதிக ஆவல் உள்ளவனாக இருந்ததால் அதற்காக அநேகத் துரவுகளையும் கட்டினான். அவன் கட்டிய கோபுரங்கள் எல்லாம் எருசலேமைச் சுற்றியும், யூதாவைச் சுற்றியும் பலத்த பாதுகாப்பு அரண்களை உண்டாக்கி விவசாயத்தினால் பெறப்பட்ட பொருள்களைச் சேமித்து வைக்கும் இடங்களையும் பாதுகாத்தன. அவன் அநேக விவசாயிகளை வேலைக்கமர்த்தி திராட்சை மற்றும் பயிர்களை வளர்த்தான். அவனுக்கு விவசாயத்தில் அதிக ஈடுபாடு இருந்தது. ‘அவன் வேளாண்மைப் பிரியனாக இருந்தான்’ என்கிறது 10ம் வசனம்.

கடைசியாக 11-15 வரையுள்ள வசனங்களில் நாளாகமத்தை எழுதியவர் உசியாவின் இராணுவ பலத்தை விளக்குகிறார். அவனுடைய இராணுவம் திறமையான தலைவர்களையும், நல்ல பயிற்சிபெற்ற போர்வீரர்களையும் கொண்டிருந்தது. மூன்று இலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறு பேரைக் (307,500) கொண்ட பலத்த இராணுவம் உசியாவுக்கிருந்தது. அவனுக்குத் திறமையான 2600 இராணுவத் தலைவர்கள் இருந்தனர். தாவீதின் காலத்தில் அவனுக்கு 500 இராணுவத்தலைவர்கள் மட்டுமே இருந்தனர். அதைவிட ஐந்து மடங்கு மேலான இராணுவத் தலைவர்கள் உசியாவுக்கிருந்தனர். அந்தக் காலத்தில் இராணுவ வீரர்கள் தாங்களே தங்களுக்குச் சொந்தமான ஆயுதங்களைத் தேடிக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், உசியாவின் இராணுவம் அப்படிப்பட்டதாக இருக்கவில்லை. உசியா தன் போர்வீரர்களுக்கு கேடயங்களையும், ஈட்டிகளையும், தலைக் கவசங்களையும், மார்புக் கவசங்களையும், வில்லுகளையும், பெருங்கற்களை வீசியெறிகிற இயந்திரங்களையும் தயாரித்துக் கொடுத்திருந்தான். உசியாவின் இந்த நவீன இராணுவம் எதிரிகளின் இதயத்தில் மிகுந்த பயத்தை ஏற்படுத்தியது. அவனோடு எவரும் அவசரப்பட்டு யுத்தத்திற்கு வருவதற்குத் தயங்கினார்கள். உசியாவின் புகழும் பெருமையும் வெகுதூரம் பரவியதாக 15ம் வசனத்தில் வாசிக்கிறோம். அதோடு அவன் மிகுந்த பலம்வாய்ந்த அரசனாவதற்கு அவனுக்குக் கர்த்தர் உதவினார். அதை இந்த வசனம் ‘அவன் பலப்படுமட்டும் ஆச்சரியமாய் அவனுக்கு அநுகூலமுண்டாயிற்று’ என்று விளக்குகிறது. இது அவனுடைய திறமையாலோ வேறு எதனாலோ ஏற்பட்டதல்ல. இதற்குப் பின்னால் இருந்தவர் கர்த்தரே.

ஒரு வேதவிளக்கவியலாளர், ‘உசியா யூதாவின் ஐந்து பெரும் அரசர்களில் ஒருவனாக இருந்தான்’ என்று சொன்னதன் காரணத்தை இப்போது புரிந்துகொள்ளலாம்.

இனி, இத்தகைய பெருமைக்கெல்லாம் எது காரணம் என்ற கேள்வியைக் கேட்பது அவசியம். ஏற்கனவே 15ம் வசனத்தின் இறுதியில் மறைமுகமாக அதற்கான காரணம் விளக்கப்பட்டிருக்கிறது ‘‘அவன் பலப்படுமட்டும் ஆச்சரியமாய் அவனுக்கு அநுகூலமுண்டாயிற்று’ என்றிருப்பதைக் கண்டோம். அதற்கு மேல் ஒரு காரணத்தை நூலாசிரியர் 4ம் வசனத்தில் தெரிவிக்கிறார். உசியா, ‘கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்’ என்று அதில் இருப்பதைக் கவனியுங்கள். தன் தகப்பன் அமத்சியாவைப் போலவே அவனும் ஆரம்பத்தில் கர்த்தரின் பார்வையில் நன்மையானதாகப்படுகின்றவற்றைச் செய்திருந்தான். இஸ்ரவேல், யூதா அரசர்களைப் பற்றி வேதம் விளக்கும் இரண்டு பொதுவான விஷயங்களில் இது ஒன்றாக இருந்தது. இரண்டாவது, ‘அவர்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பைச் செய்தார்கள்’ என்பது.

சாலமோனுக்குப் பிறகு தேவ இராஜ்யம் இரண்டாகப் பிரிந்த பிறகு வட இராஜ்யமான இஸ்ரவேலில் 20 இராஜாக்களும், யூதாவில் 20 இராஜாக்களும் இருந்தார்கள். இதில் துக்கமான விஷயம் என்னவென்றால் இஸ்ரவேலின் ஒரு இராஜாவைப் பற்றியாவது, ‘அவன் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்’ என்று எழுதப்படவில்லை. யூதாவின் 20 இராஜாக்களில் எட்டுப் பேரைப்பற்றி மட்டும் சாதகமாக விளக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இஸ்ரவேலின் இராஜாக்களும், யூதாவின் இராஜாக்களும் எத்தனை மோசமானவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இந்தவிதமான நிலைமைக்கு மத்தியில் உசியாவை வேதம் சாதகமான நிலையில்தான் காட்டுகிறது.

உசியா கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தான் என்றால் அது அவனால் எப்படி முடிந்தது?

5ம்வசனம், தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்.

இந்த வசனத்தில் இரண்டு முக்கியமான விஷயங்கள் காணப்படுகின்றன. (1) உசியா பிரபலமாயிருந்த அந்தக் காலங்களில் அவன் ‘கர்த்தரைத் தேட மனதிணங்கியிருந்தான். நம்முடைய வினாவிடைப் போதனைகளின் முதல் கேள்வி என்ன? – மனிதனின் வாழ்க்கையின் குறிக்கோளென்ன? பதில் – கர்த்தரை மகிமைப்படுத்தி அவரை எக்காலமும் அனுபவிப்பது. உசியா தன்னுடைய வெளிநாட்டு யுத்தகாலத்திலும், உள்ளூர் யுத்தகாலங்களிலும், இராணுவ வெற்றிகளை அடைந்த காலங்களிலும் கர்த்தரைத் தேடமனதுள்ளவனாயிருந்தான். அதாவது, கர்த்தரைத் தேடுவதும், அவருடைய வார்த்தைகளில் இன்பங்காணுவதுமே அவனுடைய இலட்சியமாக இருந்தது.

(2) இந்த விஷயத்தில் உசியாவுக்கு துணை கிடைத்திருந்தது. அதே 5ம் வசனத்தில் நாம் சகரியாவைப்பற்றி வாசிக்கிறோம். சகரியா ஒரு தீர்க்கதரிசி. அவருடைய தீர்க்கதரிசன நூல் வேதத்தில் இருக்கிறது. இந்தக்காலங்களில் சகரியா, உசியா கர்த்தரை நாடி வருவதற்கு மிகவும் துணையாக இருந்திருக்கிறார். சகரியாவின் உதவியோடு கர்த்தரைப் பற்றி உசியா அதிகம் கற்றுக்கொள்ள முடிந்தது. உசியாவின் தாத்தாவான யோவாஸுக்கு ஆசாரியனான யோகிடா துணையாக இருந்ததுபோல் உசியாவுக்கு சகரியா துணையாக இருந்திருக்கிறார். அத்தோடு, சகரியா கர்த்தருக்கு உசியா கணக்குக்கொடுக்கும்படியாக வாழ்வதற்கும் நிச்சயம் உதவியிருக்கிறார்.

பயன்பாடு: இதிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? இந்த உலகத்தில் நாம் தனியாக பரிசுத்த வாழ்க்கையை வாழ்ந்து உயர்ந்துவிட முடியாது. அப்படி நினைக்கின்ற அநேகரை நாம் பார்க்கிறோம். கர்த்தர் இரட்சிப்பைத் தந்தார், அவருக்கு நான் நேரே கணக்குக் கொடுத்துக்கொள்கிறேன் என்று யாரோடும் தொடர்பில்லாமல் அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு சபைத்தொடர்பிருப்பதில்லை, போதகக் கண்காணிப்பும் வழிநடத்தலும் இருப்பதில்லை, நல்ல ஆவிக்குரிய நண்பர்களையும் கணக்குக்கொடுத்து வாழத் துணையாக வைத்திருப்பதில்லை. பொதுவாக இவர்களே வாழ்க்கையில் தவறுகளைச் செய்து ஆபத்தில் சிக்கி குய்யோ முய்யோ என்று அழுது, ஆபத்து வருகிறபோது ஆவிக்குரிய ஆலோசனை கேட்டு வருவார்கள். இளைஞர்கள் மத்தியில் இது அதிகமாகவே இருக்கிறது. நான் அடிக்கடி ஆலோசனையாக சொல்லியிருக்கிறேன். சோஷல்மீடியா, இன்டர்நெட் பிரசங்கிகள், இணைய தளங்களை நாம் ஆவிக்குரிய துணையாக வைத்திருப்பது பெரிய ஆபத்து என்று. ஆண்டவர், ஆவிக்குரிய வழிகாட்டியாக இருப்பதற்கு அவற்றை ஏற்படுத்தவில்லை. ஆவிக்குரிய நல்ல சபைகளையும், நல்ல போதகர்களையும், நல்ல ஆவிக்குரிய நண்பர்களையுமே அதற்கு ஏற்படுத்தியிருக்கிறார். தீமோத்தேயுவுக்கும், தீத்துவுக்கும் போதகனான பவுல் வழிகாட்டியாக அதைச் செய்திருக்கிறார். இந்தவிதமாக ஒரு ஆவிக்குரிய வழிகாட்டி இருக்கவேண்டிய அவசியத்தைப் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் நமக்குக் காட்டுகிறது.

நீங்கள் ஆவிக்குரிய வழிகாட்டிகளாக யாரையாவது வைத்துக் கொள்ளாமல் இருக்கிறீர்களா? அதற்கு அறியாமை அல்ல, உங்களுடைய தற்பெருமைதான் காரணம். எதற்குப் பயப்படுகிறீர்கள்? ஆண்டவருக்கு விசுவாசமாக வாழ்வதுதான் உங்கள் இலட்சியமாக இருந்தால் அவரே கேட்டுக்கொண்டிருக்கிறவிதமாக ஒருவருக்குக் கணக்குக்கொடுத்து வாழ்வதற்கு எதற்குத் தயங்குகிறீர்கள்? பெருமைபிடித்தவன் வாழ்க்கையில் ஒருநாளும் உயர்ந்ததில்லை தெரியுமா? வீணாக ஆபத்தைத் தேடிக் கொள்ளாமல் மனந்திரும்பி சபை வாழ்க்கைக்கு விசுவாசமாக இருந்து, ஆவிக்குரிய எவருக்காவது கணக்குக்கொடுத்து வாழப் பழகிக்கொள்ளுங்கள். இந்த வயதில் எனக்கே அப்படி நெருங்கிய போதக நண்பர்கள் இருக்கிறார்கள் தெரியுமா? ஒருவருக்குமேல் அத்தகைய நண்பர்களை நான் என் ஆவிக்குரிய துணைகளாக வைத்திருக்கிறேன். ஆபத்தைத் தேடிக்கொள்ளாமல் உசியாபோல் ஒரு சகரியா உங்களுக்கு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உசியா புத்திசாலியாக சகரியா தீர்க்கதரிசியை தனக்கு வழிகாட்டியாக (Mantor) கொண்டிருந்தான்.

எபிரெயர் 3:12-13 என்ன சொல்லுகிறது என்பதைக் கவனியுங்கள், ‘சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.’

சகரியாவை ஆவிக்குரிய ஆலோசகனாகக் கொண்டிருந்த வரையிலும் உசியா கர்த்தரைத் தேடுகிறவனாக இருந்திருக்கிறான் என்பது நமக்குத் தெரிகிறது.

இனி உசியாவின் வாழ்க்கையைத் தொடர்ந்து கவனிப்போம். 7ம் வசனம் உசியா தன் யுத்தங்களில் வெற்றியடைய கர்த்தர் உதவினார் என்பதையும், 15ம் வசனம், கர்த்தர் அவனுடைய பெருமை எங்கும் பரவவும், அவன் மிகவும் பலமுள்ளவனாக இருக்கவும் ஆண்டவர் அவனுக்கு அற்புதமாக அநுகூலமாக இருந்தார் என்றும் அறிந்துகொள்கிறோம்.

ஆனால், திடீரென்று உசியாவின் வாழ்க்கை மாறியது. தேவையில்லாததொன்று அவன் வாழ்க்கையில் நுழைந்தது. நன்றாக வாழ்ந்துகொண்டிருந்த உசியாவின் வாழ்க்கை தொடர்ந்து கர்த்தரை நாடி அவன் நன்மைகளை அடைவதாக அல்லவா இருந்திருக்கவேண்டும்? என்னதான் நடந்தது என்று நாம் கேட்காமல் இருக்கமுடியாது? அதற்கு பதிலை 16-21 வரையுள்ள வசனங்கள் தருகின்றன.

2 நாளாகமம் 26:16, ‘அவன் பலப்பட்டபோது, தனக்குக்கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம்மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.’

இதிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? உசியாவின் வாழ்க்கை திடீரென்று மாறியது. வேதத்தை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், உசியாவின் வாழ்க்கையில் தீர்க்கதரிசியான சகரியாவின் செல்வாக்கு குறைந்துபோனதை அல்லது இல்லாமல் போனதை அறிந்துகொள்ள முடிகிறது. அதுவரை அவனுடைய நம்பிக்கையான வழிகாட்டியாக இருந்த சகரியாவின் இடத்தில் வேறுயாரோ வந்துவிட்டதை இது காட்டுகிறது. 16ம் வசனம் தெளிவாகச் சொல்லுகிறது – ‘தனக்குக் கேடுண்டாகும் வகையில் அவனுடைய மனம் மேட்டிமையாகியது (lifted up).’ இதற்கு அர்த்தம், அவனுடைய இருதயத்தில் பெருமை நுழைந்தது என்பதுதான். அவனுடைய வாழ்க்கையில் இருந்த சகரியாவின் இடத்தை அவனுடைய தற்பெருமை பிடித்துக் கொண்டது. யுத்தத்தில் அந்நிய படைகள் எதிர்பாராமல் சூழ்ந்துகொள்ளுவது போல் தற்பெருமை அவனுடைய இருதயத்தைச் சூழ்ந்துகொண்டது. அன்றிலிருந்து அவன் கர்த்தருக்குப் பயப்படுவதை நிறுத்திக் கொண்டான்.

கர்த்தர் சொல்லுகிறார், ஓசியா 13:6ல் – ‘தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதினால் என்னை மறந்தார்கள்.’

உசியா பலமான அரசனாக, பல வெற்றிகளைக் கண்டு புகழடைய ஆரம்பித்தான். அவனுடைய வளர்ச்சி பெரியது. எதிரிகள் அவனைக்கண்டு பயந்தார்கள். ஆனால், உசியா இதெல்லாம் கர்த்தரால் வந்தது என்பதை மறக்க ஆரம்பித்தான். பெருமை இருதயத்தின் ஓரத்தில் குடிபுகுந்து முழு இருதயத்தையும் நிரப்பியது. அதோடு உசியா விழுந்தான்.

உதா: ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிற போதகர்களுக்கு ஒரு எச்சரிக்கை. ஆரம்பத்தில் சின்ன ஊழியமாக இருந்து, கர்த்தர் வளர்ச்சியைக் கொடுக்கும்போது இருதயத்தைக் கவனமாகக் கண்காணித்து வாருங்கள். ஆண்டவர்தான் இதையெல்லாம் செய்கிறார் என்பதை மறந்து உங்களுடைய முதுகில் தட்டி உங்களைப் பாராட்டிக் கொள்ளும்படி சாத்தான் சொல்லுவான். நம்மோடு இருக்கிறவர்கள் மூலமாகக்கூட சாத்தான் பேசுவான். என்னால்தானே இதெல்லாம் என்று என்றைக்கு நினைக்க ஆரம்பிக்கிறீர்களோ, நிலைதடுமாறி விடுகிறீர்களோ அன்றைக்கே வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டது என்றுதான் அர்த்தம். உசியாவுக்கு நடந்தது அதுதான். உபா 8வது அதிகாரத்தில் 10-20வரை வாசித்துப் பாருங்கள். இதைத்தான் இஸ்ரவேலுக்கு மோசே நினைவு படுத்தினார்.

உபாகமம் 8:10-11 – ஆகையால், நீ புசித்துத் திருப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய். உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

உபாகமம் 8:12-14 – நீ புசித்துத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கும்போதும், உன் இருதயம் மேட்டிமையடையாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினவரும்,

உபாகமம் 8:16-17 – உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்து வந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும், என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து,

மோசே எத்தகைய ஆபத்தை ஏற்கனவே எதிர்பார்த்து புத்திசொல்லியிருக்கிறார் என்று உங்களுக்குப் புரிகிறதா? தற்பெருமையால் வருகிற ஆபத்து முதலில், ஆண்டவருக்கு நன்றிசொல்லுவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவடையச் செய்யும். அதற்குப் பிறகு நடக்கிற காரியங்கள் நம்மால் வந்தது என்று நாமே நம் முதுகில் தட்டிப் பாராட்டிக்கொள்ள வைக்கும். பெருமை நம்முடைய செயல்களில் நாம் இன்பம் காணவைத்து விடும். உசியாவுக்கு நடந்தது இதுதான்.

நீதிமொழிகள் 16:18 – அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.

இந்த வசனத்தில் அகந்தைதான் pride. இரண்டாவது வார்த்தை மனமேட்டிமை haughty spirit. எழுத்துபூர்வமாகப் பார்த்தால் ‘உயருகிற இருதயம்’ என்று அர்த்தம். அதாவது, வயிறு பெருப்பதுபோல் பெருமையால் இருதயம் வீங்கிப்போகிறதை இது காட்டுகிறது.

ஒரு வேதவிளக்க அறிஞர் பெருமையின் DNA யைப்பற்றி விளக்கும்போது சொல்லுகிறார், ‘நம்முடைய இருதயத்தில் கர்த்தர் மீது வைக்கிற நம்பிக்கையை வீசியெறிந்துவிட்டு நம்மேலேயே நம்பிக்கை வைக்கிறபோதே பெருமைக்கான விதைபோடப்படுகிறது’ என்று. இந்தப் பெருமையின் அடிப்படை அறிகுறிகள் என்ன தெரியுமா? – மற்றவர்களை ஏளனம் செய்வது, எதையும் சந்தேகிப்பது, பிடிவாதமாய் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நினைப்பது, இருதயத்தைக் கடினப்படுத்திக்கொள்வது போன்றவை.’ அவர் தொடர்ந்து சொல்கிறார், ‘இதன் காரணமாக, ஒருவன் கர்த்தரைத் தேடாமல் சண்டைக்காரனாக மாறி, அவனுடைய வாழ்க்கை தனிமையிலும், மற்றவர்களிடம் இருந்து அவன் தள்ளிநிற்பதிலும் கொண்டுவிடும்’ என்கிறார். இது எத்தனை பெரிய உண்மை.

ஆகவே, இதுவரை சொன்னவற்றை சுருக்கமாகச் சொல்லப்போனால், கர்த்தருடைய கிருபை நமக்குப் போடும் பிச்சைபோன்ற அவருடைய நன்மைகளையும், பாதுகாப்பையும் நினைத்து அடிக்கடி அவருக்கு நாம் நன்றிசொல்லாமல் வாழ்ந்தால் இருதயத்தில் பெருமை குடிபுகுந்து விசுவாசமில்லாத வாழ்க்கை வாழ்ந்து அழிவைத்தேடிக் கொள்ளுவதிலேயே நம் வாழ்க்கை போய்முடியும்.

உசியாவின் ஆணவம் எப்படியெல்லாம் பாம்புபோல் தலையுயர்த்தி செயல்பட்டது என்பதை 16-21 வரையுள்ள வசனங்களில் நூலாசிரியர் விளக்குகிறார். தான் அரசனாக இருப்பதில் மட்டும் உசியா திருப்தி அடையவில்லை. அவன் ஆசாரியனாக இருக்கவும் தீர்மானித்தான். அதோடு ஆலயத்துக்குள் நுழைந்து தூபபீடத்தில் தூபங்காட்டவும் தீர்மானித்தான். யாத்த்திராகமம் 30; எண்ணாகமம் 16, 18 ஆகிய அதிகாரங்களை வாசித்துப் பார்த்தால் அந்தப் பணிகளெல்லாம் ஒரு ஆசாரியனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட பணிகளாக இருந்திருக்கின்றன. அவற்றை வேறுயாராவது செய்வது கர்த்தருக்கு எதிரானது மட்டுமல்ல, அவற்றை ஏற்படுத்தியிருக்கும் கர்த்தரை நிந்திக்கும் செயல்களாகும்.

உசியாவின் இந்தப் பாவத்தில் ஓரளவுக்கு முட்டாள்தனமும் கலந்திருந்தது. இதைச் செய்வது கர்த்தருடைய நியாயப்பிரமாணத்துக்கு எதிரானது என்பதும், அதனால் பாதிப்புகள் உண்டாகும் என்பதும் உசியாவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. இருந்தும் அவன் அவற்றைச் செய்யத்தீர்மானித்தான். ஆசாரியனான அசரியாவும் 80 பராக்கிரமசாலிகளும் அரசனான உசியாவை இந்த விஷயத்தில் எதிர்த்து நின்று அவனை எச்சரித்ததே உசியா செய்த பாவம் எத்தனை பெரியது என்பதைக் காட்டுகிறது (17-18).

யார் கர்த்தருக்கு தூபவர்க்கம் இடுவது என்று விவாதித்து மோசேயை எதிர்த்து 250 பேர்களோடு எழுந்த கோராகுவை உங்களுக்கு நினைவிருக்கிறதா? எண்ணாகம் 16ம் அதிகாரம் அதை விளக்குகிறது. அவனும் அவனைச் சார்ந்திருந்தவர்களுமுடைய ஆணவத்தினால் அவர்களைக் கர்த்தரின் அக்கினி பட்சித்துப் போட்டதோடு, அநேகரை நிலம் பிளந்து விழுங்கியது. ஆணவக்காரர்களுக்கு கோராவின் உதாரணம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

இனி உசியா என்ன செய்தான் என்று கவனிப்போம். தான் செய்த பாவத்திலிருந்து மனந்திரும்புவதை விட்டுவிட்டு அவன் ஆசாரியர்கள் மேல் கோபம் கொண்டான் என்கிறது 19ம் வசனம். மரணதண்டனைக்கு ஒப்பான பாவத்தை உசியா செய்திருந்தபோதும் கர்த்தர் உடனடியாக அவன் உயிரை எடுக்கவில்லை. ஆனால், அவன் செய்த பாவத்துக்கு வாழ்நாள் முழுதும் அனுபவிக்கவேண்டிய தண்டனை கிடைத்தது.

19-20ம் வசனம் – கர்த்தர் உசியாவுக்கு குஷ்டரோகம் வரும்படிச் செய்தார். ஆலயத்தில் அவன் தூபகலசத்தைத் தொட்டுப் பேசியபோதே அவனுடைய நெற்றியில் குஷ்டரோகம் தோன்றியது. அந்தக் காலத்தில் அது மிகவும் பயங்கரமான நோயாக இருந்தது மட்டுமல்லாமல் மக்கள் குஷ்டரோகியைத் தள்ளிவைத்து விடுவார்கள். இதே இரண்டு ராஜாக்கள் நூலில் 7ம் அதிகாரத்தில் நகரத்து வாசலுக்கு வெளியில் வாழ்ந்த நான்கு குஷ்டரோகிகளைப் பற்றி வாசிக்கிறோம். சீரியனான நாகமானுக்கும் குஷ்டரோகம் பிடித்திருந்தது. இப்போது பிரதான ஆசாரியரும் அவனைச் சேர்ந்தவர்களும் குஷ்டரோகம் பிடித்த உசியாவை ராஜாங்கப் பொறுப்புகள் எல்லாவற்றிலும் இருந்து உடனடியாக நீக்கினார்கள். வேறுவழியில்லாமல் கர்த்தர் தன்னைத் தண்டிக்கிறார் என்று உணர்ந்த உசியாவும் அதற்கு ஒத்துப்போனான். அவன் வாழ்நாள் முழுதும் ஒதுக்குப்புறமாகத் தனியாக ஒரு வீட்டில் வாழநேர்ந்தது. அவனுடைய மகனான யோதோம் அதற்குப் பிறகு அரச காரியங்களைக் கவனித்துக்கொண்டான்.

உசியா 42 வருடங்கள் அரசனாக இருந்த பிறகு இந்த நிகழ்ச்சி நடந்தது. அவனுக்கு அப்போது 58 வயது. வாலிப காலத்தில் உசியா ஆணவத்தால் செய்த பாவம் அல்ல இது. முதிர்ந்த வயதில் உசியா இந்தப் பாவத்தைச் செய்திருந்தான். இது நம்மை சிந்திக்கவைக்க வேண்டும். வாலிபமுறுக்கினால் முதிர்ச்சியடையாதிருக்கும் வாலிபர்களுக்கு மட்டும் ஆணவம் ஏற்படுவதில்லை. அனுபவசாலிகளையும், முதிர்ந்தவர்களையும்கூட அது விட்டுவைக்காது. ஆணவம் வயது வேறுபாடு பார்த்து வருகிற ஒன்றல்ல. யார், யார் தங்களுடைய இருதயத்தைப் பாதுகாத்து தாழ்மையின்றி இருக்கிறார்களோ அவர்கள் எல்லோரையும் ஆணவம் விட்டுவைக்காது; அது பாவத்திலும் கொண்டுபோய்விடும். விசுவாசிகளையும் அது விட்டுவைக்காது தெரியுமா? தாவீது பாவம் செய்ததற்கு அவன் இருதயத்தில் இருந்த ஆணவமும் ஒருகாரணம். பேதுரு மூன்று தடவை இயேசுவை மறுதலித்ததற்கு அவனுடைய ஆணவமும் ஒருகாரணம். மோசே கர்த்தர் சொன்னதைச் செய்யாமல் கல்லில் அடித்ததற்கு அவனுடைய ஆணவமும் ஒரு காரணம். இத்தோடு உசியாவின் பாவத்திற்கான பலன் நின்றுவிடவில்லை.

2 நாளாகமம் 26:23ம் வசனம் சொல்லுகிறது – ‘உசியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, ஜனங்கள் அவனைக் குஷ்டரோகியென்று சொல்லி, அவனை அவன் பிதாக்களண்டையில், ராஜாக்களை அடக்கம்பண்ணுகிற இடத்திற்கு அருகான நிலத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.’

உசியா இறந்தபிறகு அவன் உடலை வழமையாக இராஜாக்களான பிதாக்களை அடக்கம் பண்ணுகிற நிலத்திலிருந்த அடக்கக் குகையில் அவனை அடக்கம்பண்ணவில்லை; உசியா குஷ்டரோகி என்று சொல்லி ஜனங்கள் அரசநிலத்தில் அடக்கக்குகைக்கு அருகில் இருந்த ஒரு நிலத்தில் அவனை அடக்கம் பண்ணினார்கள். உசியாவின் பாவத்தின் அவமானம் அவனைக் கல்லறைவரை தொடர்ந்தது. கல்லறையிலும் அது அவனைவிட்டுவைக்கவில்லை. அது அவனுக்கு ஏற்பட்ட கடைசி அவமானம். ஒரு வேதவிளக்க அறிஞர் சொல்லுகிறார் – உசியா தன்னுடைய விசுவாசத்திற்கெதிராகச் செய்த செயலால் ஏற்பட்ட குஷ்டரோகம் கல்லறையிலும் அவனைவிட்டுவைக்கவில்லை’ என்கிறார்.

பயன்பாடுகள்

1. போதகர்கள், உதவிக்காரர்களுக்காக நாம் ஜெபிக்கவேண்டும். உசியாவின் ஆணவம் அவர்களுக்கு இருக்கக்கூடாது என்று ஜெபிக்கவேண்டும். சபைத் தலைவர்கள் விழுந்தால் சபைக்கு எத்தனை அவமானம், ஆபத்து தெரியுமா? நமக்கு மிகவும் ஈசியாக இயற்கையாக வருவது சபைத்தலைவர்களைக் குறைகூறுவது தான். ஏன் அதைவிட்டுவிட்டு அவர்களுக்காக ஜெபிக்கக்கூடாது? அவர்கள் பூரணமானவர்கள் அல்ல; குறைபாடுகள் கொண்டவர்கள் தான். உங்களில் யாருக்கு குறைபாடு இல்லை. சபைத்தலைவர்களுக்காக, அவர்களுடைய இருதயத் தாழ்மைக்காக நீங்கள் உண்மையோடு ஜெபிக்கவேண்டும். உண்மையில் நாட்டை ஆளுகிறவர்களுக்காகவும் ஜெபிக்கவேண்டும். 2 தீமோத்தேயு 2ம் அதிகாரம் அதைச்செய்யும்படிச் சொல்லுகிறது. அவர்கள் விசுவாசிகள் இல்லைதான். இருந்தாலும் ஆணவத்தால் அவர்கள் தங்களையும் நாட்டையும் அழித்துவிடாமல் இருக்க ஜெபிக்கவேண்டும்.

2. ஆணவத்தினால் ஏற்படும் ஆபத்துக்களைப்பற்றி நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். அதை வேதம் அடிக்கடி எச்சரித்து விளக்கியிருக்கிறது. ஆணவத்தை நாம் பின்பற்ற வேண்டியதில்லை; தாழ்மையைப் பின்பற்ற வேண்டும். ஆணவம் நம் இருதயத்தில் இருக்கிற ஒன்று. அது அகற்றப்படவேண்டியது. தாழ்மை நாம் பின்பற்ற வேண்டியது.

மாற்கு 7:21-23ல் இயேசு சொன்னது,

‘எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

வாழ்நாள் முழுதும் நாம் இருதயத்தில் இருக்கும் பாவத்தைத் தூண்டும் சோதனைகளை எதிர்த்துப் போராடி ஆணவத்திற்கு இடங்கொடாமல் தாழ்மையைப் பின்பற்ற வேண்டும். அதோடு, நமக்கு வழிகாட்டியாக சகரியா போன்ற ஆவிக்குரிய ஒருவரை வைத்துக்கொண்டு நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி மறவாமல் கர்த்தரின் கிருபைகளுக்காக அவருக்கு ஜெபத்தில் நன்றி சொல்லவேண்டும்.

3. உசியா ஆணவத்தால் பாவத்தைச் செய்தபோது அவனுக்கு 58 வயது. இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆணவம் எந்த வயதிலும் வந்துவிடும்; அழித்துவிடும். அதனால் நாம் சாகும்வரை சுவிசேஷ கிருபைகளைப் பயன்படுத்த வேண்டும். தொடர்ச்சியான வைராக்கியமான மனந்திரும்புதல் நமக்கிருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். ஆணவக்காரனே மனந்திரும்ப மறுக்கிறவன். உங்களையே ஆராய்ந்து பாருங்கள், சின்னச் சின்ன பாவத்துக்காகக்கூட சாக்குப்போக்குச் சொல்லி வருகிறீர்களா? காரணம் என்ன தெரியுமா? ஆணவந்தான். அது இருப்பதால்தான் சின்னப் பாவத்தை நம்மால் அழிவை உண்டாக்கும் ஒன்றாக எண்ணிப்பார்க்கத் தவறிவிடுகிறோம். அதற்காகக் கண்ணீர்விடத் தவறிவிடுகிறோம். ஒன்று தவறாமல் எல்லாப் பாவங்களுக்காகவும் மனந்திரும்ப வேண்டும். நாம் சமீபத்தில் வெளியிட்ட மனந்திரும்புதல் நூலை வாங்கிக் கருத்தோடு வாசியுங்கள். இந்த விஷயத்தில் ஆண்டவர் உங்கள் கண்களைத் திறக்கட்டும். சின்னச் சின்னப் பாவங்கள்தான் நம்மையும் அழித்து சபைக்கும் ஆபத்தைக் கொண்டுவருகிறது. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனேகப் பிரச்சனைகளுக்குக்கூட தற்பெருமைதான் காரணமாக இருக்கும். அது முத்திப்போய் உடனடியாக மனந்திரும்பாமல் நீங்கள் செய்துவருகிற பாவத்தை உங்கள் கௌரவப் பிரச்சனையால் மறைத்து வாழ்ந்து வருகிறீர்களா? உடனடியாக ஆண்டவர் முன் அறிக்கையிட்டு கண்ணீரோடு மனந்திரும்புங்கள்; மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள். மனந்திரும்பாமல் மன்னிப்பு கிடைக்காது தெரியுமா?

4. உங்களில் யாராவது, இவ்வளவு நாளாகத் தவறு செய்து வாழ்ந்துவிட்டேன். இனி எப்படித் திருந்துவது என்று நினைக்கிறீர்களா? உங்களுடைய மானப்பிரச்சனையாக இது இருக்கிறதா? மனந்திரும்ப ஆண்டவர் நேரங்காலம் குறிக்கவில்லை. எந்த நேரத்திலும் மனந்திரும்பலாம்; மன்னிப்பை அடையலாம். தாவீது தன் பாவத்திற்காக மனந்திரும்பினான். வேதம் அவன் பாவங்களைக் குறிப்பிட்டபோதும் அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்காட்டவில்லை. அவனைப் பற்றி வேதம் குறிப்பிடும்போது ‘கர்த்தரின் இருதயத்துக்கு ஏற்ற மனுஷன்’ என்றுதான் சொல்லுகிறது (1 சாமுவேல் 13:14).

பேதுரு முன்றுதடவை இயேசுவை மறுதலித்தான். இயேசு அவனை மீட்டெடுத்ததை யோவான் 21 விளக்குகிறது. அதேபோல் சிலுவையில் மரித்த திருடன் கடைசி நேரத்தில் மனந்திரும்பினான். தன் வாழ்க்கையை நல்லபடியாக முடித்தான். இன்னும் எத்தனையோ உதாரணங்களை வேதத்தில் காணலாம். அன்றாடம் மனந்திரும்புங்கள்; உங்கள் வாழ்க்கை நல்லபடியாக முடிவைச் சந்திக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

கடைசியாக, உசியா நல்லவனா? கெட்டவனா?

அவன் மனந்திரும்பிய வாழ்க்கை வாழ்ந்த மனிதனாக எனக்குத் தெரியவில்லை. அவன் எத்தனையோ நல்ல காரியங்களைத் தகப்பனைப்போலச் செய்திருந்தாலும் அவை அவன் வாழ்க்கையில் தொடரவில்லை. அவன் கடைசிக் காலத்தில் மனாசே மனந்திருந்தியதுபோல் மனந்திரும்பியதாக வேதம் சொல்லவில்லை. இதன் காரணமாகத்தான் 2 இராஜாக்கள் 15ம் அதிகாரத்தில் அதை எழுதியவர் வெறுமனே அவன் குஷ்டரோகம் வந்து வாழ்ந்ததை மட்டும் குறிப்பிட்டு நிறுத்திக் கொண்டிருக்கிறார். உசியாவின் வாழ்க்கை நமக்கு உதாரணமாக இருக்கட்டும். வாழ்க்கையில் வெளிப்புறமாக சில நன்மைகளை மட்டும் செய்துவிட்டு அவை தொடரும்படியான மனந்திரும்புதலுக்குரிய வாழ்க்கை வாழாவிட்டால் அதனால் நமக்கோ எவருக்குமோ எந்தப் பலனுமில்லை. உசியா ஆரம்பத்தில் வாழ்க்கையில் செய்திருந்த செயல்கள் மெய்யான பக்திக்குரியவையாக இருந்திருந்தால் ஆண்டவர் செய்ய அனுமதித்திராத ஆலயத்துக்குரிய செயல்களை அவன் செய்யத்துணிந்திருக்க மாட்டான்; கர்த்தரும் அவனைத் தண்டித்திருந்திருக்க மாட்டார். உசியா மெய்யான மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் கொண்டிருக்கவில்லை. சகரியாவிடம் இருந்து சத்தியத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தாலும் அதை விசுவாசித்து அதன் வழியில் போகும் நடவடிக்கைகளை உசியா எடுக்கவில்லை. சத்தியம் பக்கத்திலேயே இருந்தபோதும் அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை உசியா. கர்த்தரை விசுவாசித்து வாழ்கின்ற வாழ்க்கையை அவன் இருதயபூர்வமாக நாடவில்லை. நீங்களும் அப்படியிருக்கிறீர்களா? உசியாவைப்போல இருதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள். கிருபையாய் சுவிசேஷத்தின் மூலம் நம்மை நாடிவரும் இயேசு கிறிஸ்துவை அலட்சியப்படுத்தாதீர்கள். அவரில்லாத வாழ்க்கை ஆபத்தான வாழ்க்கை என்பதை உசியாவின் வாழ்க்கை நமக்குச் சுட்டுகிறது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s