மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்று தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது. இதில் வரும் ‘குதிர்’ என்ற வார்த்தை படிப்படியாக மாறிப் பின்னால் ‘குதிரை’ என்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. உண்மையில் இந்தப் பழமொழி குதிரையைப் பற்றியதல்ல. குதிர் என்பது மணல்திட்டைக் குறிக்கிறது. அதாவது, ஆற்றில் சில இடங்களில் மண்திட்டுக்கள் தீவுகள்போலத் தெரியும். அது குவிந்திருக்கும் வெறும் மணல்தானே தவிர உறுதியான தரை அல்ல. தரைதானே என்று நினைத்து அதில் கால்வைத்துவிட்டால் புதைமணல் நம்மை உள்ளே இழுத்துவிடும் ஆபத்து இருக்கிறது. அதனால்தான் மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்ற பழமொழி உருவானது.
இந்தப் பழமொழி என் நினைவுக்கு வந்த காரணம், நாம் பயன்படுத்திவரும் தமிழ் வேத மொழிபெயர்ப்புகளைப்பற்றி நான் சமீபத்தில் மறுபடியும் சிந்திக்க ஆரம்பித்ததுதான். என்னைப் பொறுத்தவரையில் அநேக தடவைகள் அவை எங்கு கைவைத்தாலும் மண்குதிரைப்போலக் காலைவாரிவிட்டுவிடுகின்றன. அவற்றை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்தி வருகிற பிரசங்கிகளும், ஆத்துமாக்களும் என்னென்ன பிரச்சனைகளைச் சந்திக்கிறார்களோ என்று என்னால் ஆதங்கப்படாமல் இருக்க முடியவில்லை. வேதத்தைப் பகுத்துப் பிரித்து விளக்கிப் போதிக்கும் (Exegetical Expository Preaching) ஆவலுள்ள பிரசங்கிகள் நம்மினத்தில் இருந்தால் இவை நிச்சயம் தடங்கலாகத்தான் அமையும்.
பலரும் பொதுவாகப் பயன்படுத்தி வரும் தமிழ் வேத மொழிபெயர்ப்பாகிய OV – இந்திய வேதாகம சங்கம், 1871 ஹென்றி பவர் திருத்திய மொழிபெயர்ப்பு) துல்லியமாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை என்பதை ஏற்கனவே இந்த இதழில் சில ஆக்கங்களில் விளக்கியிருக்கிறேன். இந்த மொழியாக்கத்தைச் செய்திருந்த மிஷனரிகளுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம். இருந்தாலும் மொழியாக்கம் என்பது இலகுவானதல்ல; அதேவேளை வேதத்தை மொழிபெயர்க்கும்போது சாதாரண மொழியாக்கங்களைவிட அதிக கவனத்தோடும், அக்கறையோடும், தரமாகவும், துல்லியமாகவும் மொழிபெயர்க்க வேண்டும். உண்மையில் தமிழ் வேதத்தைப்போலவே இந்திய மொழிகள் அனைத்திலும் வேதமொழிபெயர்ப்புகள் துல்லியமாக இல்லை என்று சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்திய வேதாகம சங்கம் வெளியிட்டுவரும் தமிழ் வேத பழைய திருப்புதல் மொழிபெயர்ப்பைவிடத் ‘திருவிவிலியம்’ போன்ற வேறு சில மொழிபெயர்ப்புகளும் வெளிவந்திருக்கின்றன. சமீபத்தில், WBTC வெளியிட்டிருக்கும் இலகு வாசிப்பு மொழிபெயர்ப்பைப் பற்றியும் கேள்விப்பட்டேன். இந்த மொழிபெயர்ப்பை நான் இன்னும் ஆய்வு செய்யவில்லை. இதற்கு முன்வந்திருக்கும் மொழியாக்கங்களை ஆய்வு செய்ததில் ஒன்றுகூடத் தமிழ் வேத பழைய திருப்புதலைவிட (OV) எந்தவிதத்திலும் உயர்வானதாக இல்லை; உண்மையில் எல்லாமே தரமற்ற மொழியாக்கங்களாகவே இருக்கின்றன. அதுவும் நல்ல தமிழில் வாசிக்கக்கூடியவிதத்தில் மொழியாக்கம் செய்வதை மட்டுமே நோக்கமாகக்கொண்டு இவை மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பதால், மூலமொழிகளில் இருப்பதைப்போன்று சத்தியம் தவறாமல் துல்லியமாக மொழியாக்கம் செய்வதில் எந்த அக்கறையையும் காட்டவில்லை. இவற்றைப் பயன்படுத்துவதில் உள்ள ஆபத்தை நான் அநேகருக்கு சுட்டியிருக்கிறேன். அடிக்கடி தமிழ் வேதமொழிபெயர்ப்புகளில் எது சிறந்தது என்று என்னிடம் சிலர் கேட்டிருக்கிறார்கள்; தொடர்ந்தும் கேட்டு வருகிறார்கள். உண்மையில் அப்படி நாம் நம்பிப் பயன்படுத்தக்கூடியவிதத்தில் மூலமொழிகளுக்கேற்றவிதத்திலும், இலகு தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்ட தரமான மொழிபெயர்ப்பொன்று இதுவரை வரவில்லை என்றுதான் நான் அவர்களுக்குப் பதிலளித்திருக்கிறேன். இனியும் அப்படியொன்று நம் காலத்தில் வரும் என்பதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.
இந்திய வேதாகம இலக்கியம் 2000ம் ஆண்டில் ஜேம்ஸ் அரசன் மொழிபெயர்ப்பான 1611 (King James Version) ஐப் பயன்படுத்தி, அதிலுள்ள புரிந்துகொள்ளக் கடினமான வார்த்தைகளுக்கு இலகு வார்தைகளைத் தந்து தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒரு மொழியாக்கத்தை வெளியிட்டார்கள் (Parallel Bible). இது முழுமையாக ஆங்கில ஜேம்ஸ் அரசன் மொழியாக்கத்தைத் தழுவிய தமிழ் மொழியாக்கம். இப்போது நம்மத்தியில் பலரும் பயன்படுத்தி வரும் பழைய திருப்புதலைவிட இது நன்மையானது என்பது என் கருத்து. அத்தோடு ஸ்ரீலங்கா சர்வதேச வேதாகம சங்கம் 2002ல் இலகு தமிழில் ஒரு மொழிபெயர்ப்பை வெளியிட்டிருக்கிறது. இதுவரை அதை நான் பயன்படுத்தியதில்லை. இப்போது முக்கியமான சில பகுதிகளை வாசித்தபோது அந்தப் பகுதிகளின் மொழிபெயர்ப்பு சரியாகவே இருந்தது. தமிழும் நெருடலுள்ளதாக இல்லை. இருந்தாலும் கடவுளைத் ‘தேவன்’ என்று சொல்லியும், கேட்டும் பழகியவர்களுக்கு ‘இறைவன்’ என்பது ஒரு மாதிரியாகப்படலாம். இந்த மொழியாக்கத்தைப்பற்றிய விபரங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
வேதமொழிபெயர்ப்புகளின் நிலை இப்படியிருக்கும்போது போதகர்களும், இறையியல் மாணவர்களும் என்ன செய்யவேண்டும்? என்பது ஒரு முக்கியமான கேள்வி. அதற்கான பதிலை இந்த ஆக்கத்தின் முடிவில் தரப்போகிறேன்.
இப்போது தமிழ் வேத பழைய திருப்புதலில் ஒரு வசனத்தைப் பற்றிய விளக்கத்திற்கு வருவோம். அந்த வசனம் 1 தீமோத்தேயு 1:5. அது பின்வருமாறு காணப்படுகிறது,
‘கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.’
இந்த வசனத்தை விளக்கும்படி சகோதரர் ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார். அதுவே இந்த ஆக்கத்திற்கு அடித்தளமாக அமைந்தது. இந்த வசனம் என்னைப் பொறுத்தவரையில் துல்லியமாக கிரேக்க மூலத்தில் இருப்பதுபோன்று மொழியாக்கம் செய்யப்படவில்லை. மொழியாக்கம் செய்தவர்கள் எழுத்துபூர்வமாக மொழியாக்கம் செய்யாமல்விட்டிருப்பதோடு, வசனம் காணப்படும் சந்தர்ப்பத்தையும் தவறாகப் புரிந்துகொண்டு வசனத்தை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். தமிழ் வேத பழைய திருப்புதல் (OV) துல்லியமாக மூலமொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்படவில்லை என்பதற்கு இந்த வசனம் இன்னுமொரு நல்ல எடுத்துக்காட்டு.
முதலாவதாக, இந்த வசனத்தின் ஆரம்பத்தில் கிரேக்க மூலமொழியில் இருந்த ‘de’ எனும் இணைவார்த்தை மொழிபெயர்க்கப்படவில்லை. அந்த வார்த்தை ‘ஆனால்’ அல்லது ‘இப்போது’ என்ற அர்த்தத்தைக் கொண்டிருந்து, இந்த வசனத்தை இதற்கு முன்னால் வந்திருக்கும் வசனங்களோடு இணைக்கிறது. இந்த வசனம் விளக்கும் உண்மைக்கான காரணத்தை இதற்கு முன் வந்திருக்கும் நான்கு வசனங்களுமே தருகின்றன. இந்த இணைவார்த்தையைத் தவிர்த்துவிடுவதால் அந்தக்காரணத்தைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பில்லாமல் போவதோடு, இந்த வசனத்தை இதற்கு முன் வந்திருக்கும் வசனங்களோடு தொடர்பில்லாததாகக் கருதிவிடும் ஆபத்திருக்கிறது. இந்த வசனத்தில் இந்த இணைவார்த்தை முக்கியமாக இன்னுமொரு காரியத்தையும் செய்கிறது. அதாவது, 1:5ன் கட்டளையின் முடிவு என்ன என்பதை அழுத்தந்திருத்தமாக விளக்குவதற்காகவும் இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இணைவார்த்தை தமிழ் வேதத்தில் தவிர்க்கப்பட்டிருப்பது இந்த வசனத்தைப் புரிந்துகொள்வதில் பிரச்சனையை ஏற்படுத்திவிடுகிறது.
இரண்டாவதாக, இந்த வசனத்தில் அடுத்த முக்கியமான கிரேக்க வார்த்தை ‘telos.’ இதற்குப் பொதுவாக முடிவு அல்லது பூரணமானது என்றுதான் அர்த்தம். இருந்தபோதும் சந்தர்ப்பத்திற்கேற்றபடி இது மொழிபெயர்க்கப்பட வேண்டும். அந்தவகையில் இந்த வசனத்தில் இது ‘நோக்கம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் end, goal, purpose என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது இந்த வசனத்தில் காணப்படும் அடுத்து வரும் வார்த்தையான கட்டளையோடு தொடர்புடையது. தன் கட்டளையின் நோக்கத்தைப் பற்றியே பவுல் இங்கு விளக்குகிறார். இதைத் தமிழ் (OV) மொழிபெயர்ப்பு ‘பொருள்’ என்று மொழிபெயர்த்திருக்கிறது. பொருள் என்றால் அர்த்தம் அல்லது விளக்கம் என்று கூறலாம். இந்த இடத்தில் அந்த அர்த்தத்தில் telos மூலமொழியான கிரேக்கத்தில் பயன்படுத்தப்படவில்லை. நோக்கம், இலக்கு, இறுதி முடிவு என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கு மொழிபெயர்ப்பு பொருள் மாறி வலிமை குன்றிக் காணப்படுகிறது.
மூன்றாவதாக, தமிழில் இந்த வசனத்தின் ஆரம்பத்தில் வரும் வார்த்தையான ‘கற்பனை’ என்பது சரியான மொழிபெயர்ப்பல்ல. இதற்கான கிரேக்க வார்த்தையை கற்பனை என்று மொழிபெயர்த்திருப்பது இந்த வசனம் காணப்படும் பகுதியின் அர்த்தத்தையே மாற்றிவிடுகிறது. இந்த வார்த்தை கிரேக்கத்தில் parangelia என்றிருக்கிறது. இந்தப் பதம் புதிய ஏற்பாட்டில் 34 தடவைகள் காணப்படுகின்றன. 1 தீமோத்தேயுவில் 6 தடவைகள் காணப்படுகின்றன (1:3; 1:5; 1:18; 4:11; 5:7; 6:13; 6:17). இந்த கிரேக்க வார்த்தைக்கு ‘அதிகாரத்துடனான கட்டளை’ என்பது அர்த்தம். ஒரு போர்வீரனுக்குக் கொடுக்கப்படும் அதிகாரமுள்ள கட்டளை என்ற அர்த்தத்தை இது கொண்டிருக்கிறது.
அப்போஸ்தலர் 5:28 ல் இந்த கிரேக்க வார்த்தையின் பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் இணைத்து லூக்கா பயன்படுத்தியிருக்கிறார் (parangelia parangeilamen). தமிழ் வேதம் (OV) அதை ‘உறுதியாய்க் கட்டளையிடவில்லையா?’ என்று மொழியாக்கம் செய்திருக்கிறது. வேதவிளக்கவியலாளர் லென்ஸ்கி இதை எழுத்துபூர்வமாக ஆங்கிலத்தில் ‘with an order we gave orders to you’ என்று மொழிபெயர்த்திருக்கிறார். ஏனென்றால் இங்கே ஒரே கிரேக்க வார்த்தை இரண்டு தடவை ஒரே அர்த்தத்தோடு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு ஆங்கில மொழியாக்கம் இதை ‘commanding we commanded you’ என்று மொழியாக்கம் செய்திருக்கிறது. இதைத் தமிழில், ‘கட்டளையாய்க் கட்டளையிடவில்லையா?’ என்று எழுத்துபூர்வமாக விளக்கலாம். ஆனால், அது வாசிப்பதற்கு நெருடலாக இருக்கிறது. இந்த இடத்தில் முதலாவது வார்த்தையான கட்டளை வசனத்தின் இரண்டாவது வார்த்தையான கட்டளையை அழுத்தந்திருத்தமாக அது எத்தனை அதிகாரமுள்ளது என்பதை வலியுறுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பதால் எழுத்துபூர்வமான நேரடி மொழியாக்கம் வாசிப்பதற்கு உதவாது. ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு இதை, By charge we commanded you (Berean Literal Bible) என்று மொழிபெயர்த்திருக்கிறது. அது சரியான மொழிபெயர்ப்பு. பொதுவாக எல்லா நல்ல ஆங்கில மொழிபெயர்ப்புகளும் அதை strictly commanded you அல்லது strictly ordered you என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். தற்காலத் தமிழில் இதை மொழியாக்கம் செய்தால், அது, ‘அதிகாரத்தோடு கட்டளையிடவில்லையா?’ அல்லது ‘ஆணித்தரமாய்க் கட்டளையிடவில்லையா?’ என்றிருக்க வேண்டும். இரண்டுமே பொருத்தமானதுதான். வேதமொழியாக்கத்தில் ஈடுபடுகிறவர்கள் மூலமொழியில் இருக்கும் வார்த்தையின் அர்த்தம் மாறாமலும், அதன் அழுத்தத்தைக் குறைத்துவிடாமலும் மொழியாக்கம் செய்யவேண்டும்.
இப்போது மறுபடியும் 1 தீமோத்தேயு 1:5 ஐக் கவனிப்போம். இந்த வசனத்தில், பிரச்சனை வார்த்தைக்கான பொருளைப்பற்றியதாக மட்டுமல்லாது பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை பொருத்தமானதா என்பதையும் பற்றியது. இதில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் கிரேக்கத்தில் parangelia (ஆங்கிலத்தில் Commandment) என்றிருக்கும் வார்த்தையை அது பத்துக்கட்டளைகளைக் குறிக்கிறது என்று ஊகம் செய்து அதைக் ‘கற்பனை’ என்று மொழிபெயர்த்திருக்கிறார். இதுவே தமிழ் வேதமொழிபெயர்ப்பில் இந்த வசனத்தின் அர்த்தத்தை அடியோடு மாற்றிவிடுகிறது. தமிழ் வேதமொழிபெயர்ப்பு (OV) ‘கற்பனை’ என்ற தமிழ்ப்பதத்தை பத்துக்கட்டளைகளையும், நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளையும் மட்டுமே குறிக்கப் பயன்படுத்துகிறது. உண்மையில் மூலமொழிகளான எபிரெயத்திலோ, கிரேக்கத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ பத்துக்கட்டளைகளை மட்டும் குறிப்பதற்குத் தனியாக ஒரு வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. பொதுவாகவே கர்த்தருடைய கட்டளைகளுக்கும், இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளுக்கும், மனிதர்களுடைய கட்டளைகளுக்கும் ஒரே அர்த்தம் கொண்ட வெவ்வேறு வார்த்தைகள் மூலமொழிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் எந்த வார்த்தையும் ‘தெய்வீக’ அந்தஸ்தைக் கொண்டிருக்கவில்லை. தமிழ் வேதத்தில் இப்படியாக ‘கற்பனை’ என்ற வார்த்தையை விசேஷமாக பத்துக்கட்டளைகளையோ அல்லது அவற்றில் ஒன்றை மட்டுமோ குறிக்கப் பயன்படுத்தியிருப்பது முழுத்தவறு. இதன் மூலம் மொழிபெயர்ப்பாளர் இரண்டு தவறுகளுக்கு இடம் கொடுத்திருக்கிறார்.
- முதலில், மூலமொழியில் இருந்த வார்த்தையை அதிலிருப்பதுபோல் மொழிபெயர்க்காமல் தன்னுடைய கருத்தின்படியான ஒரு வார்த்தையை அந்த இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.
- மொழிபெயர்ப்பாளர் தான் செய்யவேண்டிய பணியைச் செய்யாமல் விளக்கவுரையாளராக (commentator) மாறியிருக்கிறார். இதனால் வாசகர்கள் செய்யவேண்டிய பணியை மொழிபெயர்ப்பாளர் செய்திருக்கிறார்.
இந்தத் தவறுகள் வேதத்தை எழுத்துபூர்வமாக வாசகர்கள் முன் சமர்ப்பிக்காமல், மொழிபெயர்ப்பாளன் தன் சொந்தக் கருத்தை அதில் திணித்து வாசகர்களைத் திசைதிருப்பிவிடுகிற ஆபத்தை ஏற்படுத்திவிட்டிருக்கிறது.
1 தீமோத்தேயு 1:5ன் ஆரம்பத்தில் வந்திருக்க வேண்டிய ‘de’ எனும் கிரேக்க இணைவார்த்தையை தவிர்க்காமலும், வசனத்துக்கு முன்னாலும் பின்னாலும் இருக்கும் வசனங்களைத் தொடர்புபடுத்தியும் வாசித்திருந்தால் மொழிபெயர்ப்பாளரின் இந்தத் தவறுகளுக்கு இடம் இருந்திருக்காது. சந்தர்ப்பத்தைக் (Context) கவனிக்காமல் எதையும் விளக்கவோ, மொழிபெயர்க்கவோகூடாது. அதாவது, ஒரு வசனம் அமைந்திருக்கும் சந்தர்ப்பத்தைக் கவனிக்காமல் மொழிபெயர்ப்பாளன் மொழிபெயர்ப்பில் ஈடுபடக்கூடாது. 1 தீமோத்தேயு 1:5ல் காணப்படும் ‘கற்பனை’ என்ற வார்த்தை ‘கட்டளை’ அல்லது ‘உத்தரவு’ என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். இங்கு கிரேக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் parangelias என்ற வார்த்தைக்கு அதுவே பொருள். இந்திய வேதாகம இலக்கிய மொழிபெயர்ப்பும் (IBL 2000), ஸ்ரீலங்காவில் சர்வதேச வேதாகம சங்கத்தினரால் 2002ல் வெளியிடப்பட்ட இலகு தமிழ் மொழிபெயர்ப்பும் (IBS) இந்த வார்த்தையை சரியாகக் ‘கட்டளை’ என்று மொழிபெயர்த்திருக்கின்றன.
அத்தோடு, 1:7-9 ஆகிய வசனங்களில் பவுல் நியாயப்பிரமாணத்தைப் பற்றி விளக்கியிருக்கிறார். இந்த வசனங்களில் நியாயப்பிரமாணம் என்ற பதம் நிச்சயம் பத்துக்கட்டளைகளைத்தான் குறிக்கின்றது என்பதில் சந்தேகம் இல்லை. அதனால்தான் தமிழ்வேத மொழிபெயர்ப்பாளர்கள் 1:5ல் காணப்படும் commandment என்ற வார்த்தை பத்துக்கட்டளையைத்தான் குறிக்கிறது என்ற முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், அது மிகவும் தவறான முடிவு. 1:1-10 வரையுள்ள வசனங்களைக் கவனமாக வாசித்தால் 1:5 பத்துக்கட்டளைகளைப்பற்றியதல்ல என்பதை உணரலாம்.
1:3ல் பவுல் ‘நீ சிலருக்குக் கட்டளையிடும் பொருட்டாக’ என்று சொல்லியிருக்கிறார். இங்கே கட்டளை என்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை 1:5ல் காணப்படும் அதே வார்த்தைதான். 1:3ல் அது வினைச்சொல். 1:5ல் அது பெயர்ச்சொல். அது மட்டுமே வேறுபாடு. ஆனால், 1:5ல் அது ‘கற்பனை’ என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1:5 லும் அது ‘கட்டளை’ என்றே மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். 1 தீமோத்தேயு 1:5, பவுல், போலிப்போதனைகளுக்கும், வெறும் கட்டுக்கதைகளுக்கும் இடங்கொடாமல் (வசனம் 3) கிறிஸ்துவின் போதனைகளை மட்டுமே பின்பற்றும்படி சபைக்குக் கொடுத்த கட்டளையையே குறிக்கிறது. இந்த வசனத்தை எழுத்துபூர்வமாக மொழிபெயர்த்தால் அது ‘ஆனால், எங்கள் கட்டளையின் நோக்கம், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே’ என்றிருக்கவேண்டும். இதன் பொருள் என்னவென்றால், ‘நாங்கள் கிறிஸ்துவின் போதனைகளை விளக்கி நீங்கள் பின்பற்றும்படியாகக் கொடுத்த கட்டளையின் நோக்கம் நல்ல மனச்சாட்சியிலும், உண்மையான விசுவாசத்திலும் இருந்து பிறக்கும் அன்பே’ என்பதுதான். அதாவது, எங்களுடைய கட்டளை அன்பின் அடிப்படையில் உங்கள் மத்தியில் வளரவேண்டிய அன்பை இலக்காகக்கொண்டு கொடுக்கப்பட்டது என்கிறார் பவுல்.
ESV ஆங்கில மொழிபெயர்ப்பு 1 தீமோத்தேயு 1:5ஐ சரியாக மொழிபெயர்த்திருக்கிறது. ‘The aim of our charge is love . . .’ என்று அது மொழிபெயர்த்திருக்கிறது. தமிழ் வேத மொழிபெயர்ப்பாளர்கள் ஆங்கில KJV (1611) மொழியாக்கத்தைப் பின்பற்றி இதை மொழிபெயர்த்திருக்கலாம் என்று நான் சந்தேகிக்கிறேன். ஏனென்றால், KJV – ‘Now the end of the commandment is charity out of a pure heart, and of a good conscience, and of faith unfeigned’ என்றிருக்கிறது. KJV மொழியாக்கத்தை நேரடியாகத் தமிழாக்கம் செய்தால் அது பின்வருமாறு அமையும். ‘இப்போது கட்டளையின் முடிவென்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.’ தமிழ் வேதத்தின் மொழியாக்கம் தப்பான அர்த்தத்தைத் தந்துவிடுகிறது. இது வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘கட்டளை’ பத்துக்கட்டளைகளைப் பற்றியது என்ற எண்ணத்தை வாசகர்களுக்குத் தந்துவிடுகிறது. ஆங்கிலத்தில் Commandment எனும் பதம் பத்துக்கட்டளைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அதைக் குறிப்பதற்காக மட்டுமேயுள்ள விசேஷ அந்தஸ்தோடு அது அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படவில்லை. பொதுவாக கர்த்தருடைய கட்டளையை மட்டுமல்லாது மனிதர்களுடைய கட்டளைகளையும் குறிக்கவும் அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வசனம் அமைந்திருக்கும் சந்தர்ப்பத்தை வைத்தே அது யாருடைய கட்டளை என்பதை அறிந்துகொள்கிறோம்.
இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக NKJV, NASB, ESV போன்ற தரமான ஆங்கில மொழிபெயர்ப்புகள் ‘எங்கள்’ என்ற வார்த்தையைக் ‘கட்டளை’ என்பதோடு இணைத்து ‘எங்கள் கட்டளையின் நோக்கம்’ என்று இந்த வசனத்தை மொழிபெயர்த்திருக்கிறார்கள். லென்ஸ்கி, பவுல் குறிப்பாக இந்தக் கட்டளையைக் கொடுத்திருக்கிறார் என்பதை உணர்த்த ‘இந்தக் கட்டளை’ (this charge) என்று இதை மொழிபெயர்க்கலாம் என்று கூறுகிறார். உண்மையில் கிரேக்க மூலமொழியில் tes Parangelias என்று ஒருமையிலேயே இந்த வார்த்தைப் பிரயோகம் காணப்படுகிறது. அதாவது, பெயர்ச்சொல்லான கட்டளையும் அதற்கு முன்னால் அதை விளக்கும் வகையில் வரும் கிரேக்க ஆர்ட்டிகலும் (tes) ஒருமையில் இருக்கின்றன. தமிழ் இலக்கணத்தில் வார்த்தைக்கு முன்னால் கிரேக்கத்தைப்போல ஒரு ஆர்ட்டிகளைப் பயன்படுத்தும் வழக்கம் இல்லை. இருந்தபோதும் ஆங்கிலத்திலோ, தமிழிலோ மொழிபெயர்க்கும்போது இந்த வார்த்தைப் பிரயோகத்தை சந்தர்ப்பத்திற்கேற்றபடி விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சில மொழிபெயர்ப்புகள் ஒருமையிலேயே ஆங்கிலத்தில் இதை மொழிபெயர்த்து (the charge) சந்தர்ப்பத்திற்கேற்றபடி அதைப் புரிந்துகொள்ளுகிற கடமையை வாசகர்களிடம் விட்டுவிட்டிருக்கின்றன. வேறுசில ஆங்கில மொழிபெயர்ப்புகள், இந்தக் கட்டளை யாருடையது என்பதை இனங்காட்டுவதற்காகப் பன்மையில் ‘எங்கள் (our)’ அல்லது ‘இந்த’ (this) என்ற பதத்தை இந்த இடத்தில் இணைத்திருக்கிறார்கள். அவ்வாறு செய்கிறபோது அவசியத்தின் காரணமாக அது இணைக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்கப் பொதுவாக மொழிபெயர்ப்புகள் சாய்ந்த எழுத்தைப் (Italic) பயன்படுத்துவது வழக்கம். அத்தோடு இதற்கு முந்தைய வசனங்கள் மூலம் பவுல் தானும் தன்னைச் சார்ந்தவர்களுடைய கட்டளையைப் பற்றியே விளக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளலாம்.
சிலருக்கு இதுவரை நான் விளக்கியிருப்பவைகள் சாதாரணமானதாகத் தெரியலாம். சின்ன விஷயத்தை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்? என்று கேட்கலாம். அதற்குப் பதில், முதலில் வேதமொழிபெயர்ப்பைப் பொறுத்தவரையில் இது சின்ன விஷயமல்ல. இரண்டாவது, கர்த்தருடைய வார்த்தையின் கருத்தை மாற்றியமைத்து மொழிபெயர்ப்புகளிருந்தால் அதை வாசிக்கிறவர்களும், விளக்கிப் பிரசங்கிக்க வேண்டிய பிரசங்கிகளும் வார்த்தைக்கு மாறானதைப் புரிந்துகொள்ளும் பெரிய ஆபத்து இருக்கிறது.
வேதம் கர்த்தரின் அதிகாரமுள்ள வார்த்தை. மூலமொழிகளான எபிரெயம், கிரேக்கம் ஆகியவற்றின் மூலம் நம் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் வேதத்தை மொழியாக்கம் செய்கிறவர்கள் அது கர்த்தருடைய அழியாத வார்த்தை என்ற தேவபயத்தை இருதயத்தில் தாங்கி மொழியாக்கம் செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது. ஆங்கில வேதத்தை மொழியாக்கம் செய்த குழுவினர்களிடம் காணப்பட்ட இறையியல் தரம், மொழிப்பாண்டித்தியம் ஆகியவை நம்மினத்தில் காணப்படாததால் எதிர்காலத்தில் ஒரு நல்ல தமிழ் மொழிபெயர்ப்பு உருவாவதென்பது குப்பையில் குண்டுமணி தேடுவதுபோல்தான் இருக்கும் என்று எனக்குத் தெரிகிறது.
இந்த இடத்தில் நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. கேள்வி இதுதான் – இந்நிலையில் போதகர்களும், இறையியல் மாணவர்களும் என்ன செய்யவேண்டும்? என்பதே கேள்வி. வேதத்தைக் கையாண்டு பிரசங்கம் செய்து போதிக்கிறவர்கள் அதில் நல்லறிவு பெற்றிராவிட்டால் தங்களையும் ஏமாற்றி, ஆத்துமாக்களையும் ஏமாற்றி வருவார்கள். அதாவது, இல்லாதது பொல்லாததையெல்லாம் வேதம் சொல்வதாகப் பொய்யாகச் சொல்வதைத் தவிர வேறெதையும் அவர்களால் செய்யமுடியாது. அதையே இன்று பரவசக்குழுக்கள் மத்தியிலும், செழிப்புபதேசவாதிகள் மத்தியிலும் காண்கிறோம். இதேநிலைமைதான் முறையாக வேதத்தைக் கற்றறியாமல் ஊழியம் செய்துவருகிறவர்கள் எல்லோருடைய நிலைமையும்.
போதக ஊழியம் செய்கிறவர்களும், இறையியல் மாணவர்களும், முதலில், தமிழ் மொழிபெயர்ப்புகளின் அடிப்படைப் பிரச்சனைகளை உணர்ந்து அவற்றை மட்டுமே படிப்பதற்கும், போதிப்பதற்குப் பயன்படுத்துவதன் ஆபத்தை உணரவேண்டும். தமிழ் வேத பழைய திருப்புதல் (OV) அடிப்படை வேதசத்தியங்களைத் தவறில்லாமல் போதித்தாலும், துல்லியமாக தரமான மொழியாக்கமாக அமையவில்லை. அதை வாசித்து நிச்சயம் ஒருவர் சுவிசேஷத்தைப் புரிந்துகொள்ள முடியும்; இரட்சிப்புக்குரிய சத்தியங்களை அறிந்துகொள்ள முடியும். ஆனால், அது வசனப்பகுதிகளின் உட்பொருளை ஆராய்ந்து படித்து ஆழமான வேதசத்தியங்களைப் புரிந்துகொள்ளக்கூடியவிதத்தில் நல்ல மொழிபெயர்ப்பாக அமையவில்லை. அத்தோடு, நான் பலமுறை விளக்கியிருக்கிறபடி அதன் தமிழ் நடை தற்காலத்தில் அவிசுவாசிகளும், இளைஞர்களும் விளங்கிக்கொள்ள முடியாத ‘அந்நியத் தமிழாக’ இருக்கிறது.
தமிழ் வேதமொழிபெயர்ப்பின் இந்தக் குறையை உணர்ந்து வேதத்தைப் போதிக்கும் பொறுப்பில் இருப்பவர்களும், வேத இறையியலைக் கற்று தங்களைப் போதகப்பணிக்குத் தயார்செய்துகொண்டிருப்பவர்களும் நிச்சயமாக ஆங்கில மொழியைப் பயன்படுத்தக்கூடிய பக்குவத்தை அடைவதில் முழுமுயற்சியோடும் ஈடுபடவேண்டும். அதாவது, அம்மொழியில் பேசமுடியாவிட்டாலும், அதை வாசிக்கவும், எழுதவுமாவது கற்றுக்கொள்ளுவது அவர்களுக்கும், அவர்களுடைய போதனைக்குக் கீழிருப்பவர்களுக்கும் பேருதவியாக இருக்கும். இந்த இடத்தில் நான் பக்திவிருத்தியையும், போதக ஊழியத்தகுதிகள் அனைத்தையும் கொண்டிருப்பவர்களையே மனதில் வைத்து இதை எழுதுகிறேன். இவையில்லாமல் வேறெந்தப் பாண்டித்தியமும் இருந்து பயனில்லை.
ஆங்கில மொழியில் வாசிக்க முடிந்தால் ஒரு நல்ல ஆங்கில மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தக்கூடிய வசதி ஏற்படும் (NKJV, NASB, ESV). தமிழ் வேதத்தை வாசிக்கும்போதெல்லாம் அந்த ஆங்கில வேதமொழிபெயர்ப்பை ஒப்பிட்டு வாசித்து வேதவசனங்களைத் தவறில்லாமல் புரிந்துகொள்ள முடியும். வேதத்தை சரிவரப்புரிந்துகொள்ள இதைத்தவிர வேறு வழியில்லை. தமிழ் வேதமொழிபெயர்ப்பில் மட்டும் தங்கியிருப்பது வேதத்தைக் கவனத்தோடும் கருத்தோடும் சத்தியம் மாறாமல் விளக்கிப் போதிக்க வேண்டிய போதகப் பணிக்கு ஒருபோதும் உதவாது. ஒரு போதகன் வேதத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து முத்தெடுத்து ஆத்துமாக்களுக்குப் படைக்கவேண்டியவனாக இருக்கிறான். அதனால்தான் அவன் ‘போதக சமர்த்தனாக’ (didaktikon) இருக்கவேண்டும் என்கிறது வேதம் (1 தீமோத்தேயு 3). (இதுகூட சரியான மொழிபெயர்ப்பில்லை. இது ‘போதகத் திறமை அல்லது போதிக்கும் திறமை’ என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். NASB – Skillful in teaching). வேதவசனங்களைப் பிரித்துத் திறமையாக ஆராய்ந்து, தெளிவாக, சத்தியமாகப் போதிக்கவேண்டிய பெரும் பொறுப்பு போதகனுக்கு இருக்கிறது. அதைச் செய்வதற்குத் தேவையான தகுதிகள் ஒருவருக்கு இருக்கவேண்டும். அந்தத் தகுதிகளோடு தொடர்புடையதுதான் ஆங்கிலமொழி அறிவும்.
ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ளுவது என்பது அத்தனை கடினமானதல்ல. முதலில், போதக ஊழியப்பணியைச் செய்வதற்கான தவிர்க்கமுடியாத அதன் அவசியத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டால், அம்மொழியைக் கற்றுக்கொள்ள எவரும் தீவிர நடவடிக்கை எடுக்காமல் இருக்கமாட்டார்கள். தமிழர்கள் மத்தியில் மட்டும் பணிசெய்தாலும், அதைக் கற்றுக்கொள்ளுவது தமிழ் வேதத்தில் நல்லறிவைப்பெற்று அதைப் பயன்படுத்துவதற்காகத்தான் என்ற உண்மையை மனதிலிருத்திக்கொள்வது அவசியம்.
கலப்பை பிடித்து உழுகின்ற கிராமத்து விவசாயிகூட அந்தக் கலப்பையை அடிக்கடி கவனத்தோடு சுத்தப்படுத்தி அது பயன்படுத்தக்கூடிய தரத்தோடு ஓட்டை உடசல் இல்லாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுவான். கலப்பை திறமானதாக இல்லாமலிருந்தால் அவனால் ஒழுங்காக நிலத்தை உழமுடியாது. கலப்பையைப் போன்றதுதான் வேதமும். தமிழில் அது தரமானதாக இல்லை என்பதை உணர்ந்து நல்ல கலப்பையைப் பயன்படுத்தி போதகப்பணியான உழுகின்ற செயலைச் செய்ய ஆங்கில அறிவு அவசியம். வாசிக்கவும், ஓரளவுக்கு எழுதவும்கூடிய ஆங்கிலமொழித் தகுதி இருந்துவிட்டால் வேதத்தைக் கற்றுக்கொள்ளவும், அதைப் பயன்படுத்துவதற்குமான ஒரு பெரிய உலகமே உங்கள் கண் முன் விரியும்.
தமிழ் மொழியில் மட்டும் வேதத்தைக் கையாளுகிறவர்கள் மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கித் தவிக்காமல் இருப்பதற்கு இதைத்தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை.
தற்காலத்திற்கு மிகவும் அவசியமான பதிவு. இன்று பெரும்பாலுமான சபைகள் இசைக்கும் உணர்ச்சிக்களுக்கும் அடிமையாகி போகின்ற காலத்தில், தமிழ் வேதத்தைக் கருத்தோடு வாசிப்பதின் அவசியத்தை ஆழமாகவும் உதாரணகளுடன் விளக்குகின்றது இந்த ஆக்கம். நன்றி பாஸ்டர்.
LikeLike