சமீபத்தில் என் சபையில் நான் ஒரு பிரசங்கத்தை அளித்தபோது, அதில் கிறிஸ்துவை விசுவாசிக்காமல் இருக்கிறவர்களைப் பார்த்து, ‘உங்களைக் கிறிஸ்துவை விசுவாசிக்கும்படியாக கர்த்தர் அழைக்கிறார். இயேசு கிறிஸ்துவை நீங்கள் விசுவாசிக்காமல் இருப்பது உங்களுடைய பொறுப்பில்லாத தன்மையையே காட்டுகிறது. எத்தனையோ காரியங்களில் வாழ்க்கையில் பொறுப்போடு நடந்துகொள்ளுகிற நீங்கள் இந்த விஷயத்தில் அக்கறைகாட்டாமல் இருப்பது நியாயமானதல்ல. நீங்கள் பரலோகத்துக்குப் போகாமல் இருக்கப்போவது உண்மையானால் அதற்கு நீங்கள் எவரையும் குற்றஞ்சாட்டமுடியாது. உங்களுடைய அவிசுவாசத்தினால், கிறிஸ்துவை விசுவாசிக்க மறுக்கும் உங்களுடைய பொறுப்பற்ற தன்மையே நீங்கள் பரலோகத்தை அடையமுடியாமல் செய்துவிடும். இயேசு என்னிடம் வா, நான் இளைப்பாறுதல் தருகிறேன் என்று வாக்குறுதி தந்திருக்கும்போது அதை நிராகரித்து வாழ்வது தண்டனைக்குரிய குற்றம். இயேசு நீ கதறக்கதற, உனக்குக் கைவிலங்கு மாட்டி பரலோகத்துக்கு அழைத்துச் செல்லப்போவதில்லை. எனவே, ஏசாயாவின் வார்த்தைகளை விசுவாசித்து இயேசு தரும் ஜீவத்தண்ணீரை அருந்த ஓடிவாருங்கள், அதற்குப் பணம் கொடுக்கத்தேவையில்லை, இலவசமாக இயேசு தரும் இரட்சிப்பை இரண்டு கையாலும் விசுவாசத்தோடு வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று அவிசுவாசிகளைப் பார்த்துப் பிரசங்கித்தேன்.
இது அன்று ஆராதனையில் கலந்துகொண்ட ஒருவருக்கு மனதில் இடறலை ஏற்படுத்திவிட்டது. அவர் என்னிடம் ‘பாஸ்டர், இதில் ஆர்மீனியன்கள் கொடுக்கிற செய்தியின் வாடை அடிக்கிறதே. அவர்கள்தான் இப்படி அவிசுவாசிகளை இயேசுவிடம் வரும்படி அழைப்பார்கள். மனிதன் பாவத்தில் அவரிடம் வரமுடியாதபடி அல்லவா இருக்கிறான். அதுவும் முன்குறிக்கப்பட்டவர்கள் மட்டுந்தானே இரட்சிப்பை அடையமுடியும். அவிசுவாசிகளை இந்தமுறையில் இயேசுவிடம் வரும்படி பிரசங்கிப்பது தவறல்லவா’ என்று கேட்டார். இந்த சகோதரன் கேட்டது போலவே சீர்திருத்தச் சத்தியங்களை அறிந்துகொள்ள ஆரம்பித்திருப்பவர்கள் முன்குறித்தலாகிய தத்துவத்தைப்பற்றியும், சுவிசேஷ அறிவிப்பைப்பற்றியும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அந்தவிதத்தில் சிந்தித்திருக்கிற அநேகரை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் எல்லோருக்குமே மனிதனுடைய பொறுப்பைப்பற்றியும், கர்த்தருடைய இறையாண்மைக்குரிய செயல்களைப்பற்றியும் புரிந்துகொள்ளுவதில் குழப்பங்கள் இருந்திருக்கின்றன.
இதேபோல் அநேக வருடங்களுக்கு முன் ஒரு இந்தியப் பிரசங்கி எனக்கு நன்கு அறிமுகமான ஒரு சீர்திருத்தப் போதகரை அவர் ஹைப்பர் கல்வினிஸ்டா? அவர் சுவிசேஷப்பணியில் ஈடுபடுவதுபோல் தெரியவில்லையே என்று என்னிடம் கேட்டார். அந்தச் சீர்திருத்தப் போதகர் இந்த இந்தியப் பிரசங்கி செய்கின்ற சுவிசேஷப் பணிகளைத் தன் ஊழியத்தில் செய்யாததால் இந்தியப் பிரசங்கி அவரை ஹைப்பர் கல்வினிஸ்டு என்று தீர்மானித்துவிட்டார். (ஹைப்பர் கல்வினிஸ்டுகள் தெரிந்துகொள்ளுதலாகிய சத்தியத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு சுவிசேஷம் அறிவிப்பதைத் தவிர்த்துவிடுகிறார்கள்) இத்தகைய தவறான நம்பிக்கைகளைக் கொண்ட சிலர் நம்மத்தியில் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் சீர்திருத்தப் போதனைகள் பற்றிய தெளிவான புரிதல் இல்லாததும், சுவிசேஷ அறிவிப்பை சீர்திருத்தப் போதனைகளின்படி வேதபூர்வமாக எப்படிக் கொடுப்பது என்பது பற்றியும் அநேகருக்குச் சரியான புரிதல் இல்லாததுதான். அத்தோடு சீர்திருத்தப் போதனைகளின்படி சுவிசேஷப்பணியை எப்படிச் செய்யவேண்டும் என்பதும் அவர்களுக்குத் தெரியாமலிருக்கிறது. சீர்திருத்தப் போதனைகளைப் புதிதாகக் கற்றுக்கொள்ளுகிறவர்களுக்கு இத்தகைய குழப்பங்களும், சந்தேகங்களும் இருப்பதில் ஆச்சரியமில்லை.
சுவிசேஷசத்தை நாம் பாவிகளுக்கு அறிவிப்பதற்குக் காரணம் வேதம் அதைச் செய்யும்படியாக நமக்குக் கட்டளையிடுவதால்தான். கர்த்தருடைய சித்தத்தைப் பொறுத்தவரையில் இறையியல் அதை இருபிரிவுகளாகப் பிரித்து விளக்குகிறது. முதலாவது, நித்தியத்தில் இருந்து அவரில் காணப்படும் அவருடைய மாறாத சித்தம் (Will of Purpose). இரண்டாவது, அவர் தீவிரமாகவும், உண்மையோடும் மனிதர்கள் பின்பற்றும்படியாக வலியுறுத்தித் தந்திருக்கும் கட்டளைகள் (Will of Precept). இந்த இடத்தில் கர்த்தரின் சித்தம் பற்றிய இந்த உண்மையைப் புரிந்துகொள்ள பியூரிட்டன் பெரியவரொருவரின் ஆலோசனையை நாம் பின்பற்ற வேண்டும். அவர் சொன்னார், ‘தர்க்கரீதியான சிந்தனைகள் உதவாத இடத்தில் விசுவாசம் நீச்சலடிக்கவேண்டும்’ என்று. கர்த்தருடைய சித்தம்பற்றிய இந்த உண்மையை நாம் விசுவாசத்தால் ஏற்று நம்பவேண்டும். சுவிசேஷ அறிவிப்பை கர்த்தர் நமக்குக் கட்டளையாகத் தந்திருக்கிறார்.
சுவிசேஷத்தை நாம் அறிவிப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம், கர்த்தர் அதை இலவசமாக அறிவிப்பதால்தான் (Free offer). கர்த்தர் கருணையோடு தன் இரு கரத்தையும் நீட்டி பாவிகளைத் தன்னிடத்தில் வா, வா என்று அழைக்கிறார். கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினர் கர்த்தர் பொதுவாக மனிதர்கள் மீது அன்புகாட்டவில்லை என்று வாதிடுகிறார்கள். யோவான் 3:16 நிச்சயமாக மனித குலத்தின் மீது கர்த்தருக்கு இருக்கும் பொதுவான அன்பை விளக்குகிறது. இந்த வசனத்தைப் பற்றி ஜோன் கல்வின் விளக்கும்போது, ‘கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி உலகத்தில் எந்த நன்மையும் இல்லாதிருந்போதும், தான் கருணையுள்ளவர் என்பதை உலகத்துக்குக் காட்டி உலகத்தின் அனைத்து மனிதர்களையும் எந்தவிதப் பாரபட்சமுமின்றி கிறிஸ்துவை விசுவாசிக்கும்படி கர்த்தர் அழைக்கிறார்’ என்கிறார் (கல்வினின் விளக்கவுரை). சுவிசேஷத்தின் மூலம் கர்த்தர் தன்னிடம் மனிதர்கள் மனந்திரும்பி வரவேண்டும் என்று இலவசமாக அழைப்பதை வேதத்தின் அநேக பகுதிகள் விளக்குகின்றன. உதாரணத்திற்கு ஏசாயா 45:22, 55:1-3; எசேக்கியேல் 18:23, 33:11; உபாகமம் 5:29; லூக்கா 13:34; லூக்கா 19:41; வெளிப்படுத்தின விசேஷம் 22:17).
சீர்திருத்த விசுவாசத்தை விளக்குகின்ற அத்தனை வரலாற்று விசுவாச அறிக்கைகளிலும் இந்த சுவிசேஷ இலவச அறிவிப்பு (Free Offer of the Gospel) தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. ஆர்மீனியனிசத்திற்கு எதிராக டோர்ட் இறையியல் குழு வெளியிட்ட அறிக்கையில் இது காணப்படுகிறது. 1689 விசுவாச அறிக்கையிலும் (7ம், 20ம் அதிகாரங்கள்), வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கையிலும், சவோய் விசுவாச அறிக்கையிலும் இதை விளக்கும் அதிகாரங்கள் காணப்படுகின்றன. பியூரிட்டனான ஜோன் ஓவன், ‘சகல மனிதர்களையும் நாம் நேசிக்கவேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். சுவிசேஷத்தை இலவசமாக எல்லா மனிதர்களுக்கும் பாரபட்சமின்றி அறிவிப்பது நம்முடைய கடமையாக இருக்கிறது. இயேசு கிறிஸ்து அதைத் திருச்சபைக்குக் கட்டளையாகவே மத்தேயு 28:18-20 வரையுள்ள வசனங்களில் தந்திருக்கிறார். சீர்திருத்த பாப்திஸ்து போதகரான ஜெப்ரி ஸ்மித், ‘மனிதர்கள் மனந்திரும்பும்படியாக நாம் பிரசங்கிக்கிறோமா?’ என்று தான் எழுதிய ஒரு நூலின் அதிகாரத்தின் தலைப்பில் கேட்கிறார். ‘மனந்திரும்புதலுக்கான பிரசங்கம்’ (Preaching Conversions) என்ற தலைப்பில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் அவருடைய நூல் சுவிசேஷ அறிவிப்பை விளக்கி அதை வலியுறுத்தும் அருமையான நூல்.
இந்த அதிகாரத்தில் கர்த்தரின் இறையாண்மை, முன்குறித்தல், தெரிந்துகொள்ளுதல், மனித சித்தம் ஆகியன பற்றிய வேதபோதனைகளுக்கு முரண்படாதவகையில் வேதபூர்வமாக சீர்திருத்தச் சுவிசேஷப்பணியில் ஈடுபடவேண்டிய அவசியத்தை விளக்கப்போகிறேன்.
சுவிசேஷப்பணி என்பது எது?
‘பரிசுத்த ஆவியின் வல்லமையால், இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்று அவர்மீது முழு நம்பிக்கை வைத்து விசுவாசிக்கும்படி இயேசு கிறிஸ்துவைச் சுவிசேஷச் செய்தியில் மனிதர்கள் முன் வைப்பதே சுவிசேஷப்பணி.’
மேற்குறிப்பிட்ட வாசகத்தை ஆர்மீனியன்களும், சீர்திருத்த விசுவாசிகளும் பிரச்சனையில்லாமல் ஒத்துக்கொள்ளுவார்கள். இதுதான் வேதம் விளக்குகின்ற சுவிசேஷ அறிவிப்பு பற்றிய உண்மை. இருந்தபோதும், இந்த உண்மையை ஒத்துக்கொள்ளுகிறவர்கள் நடைமுறையில் இந்தச் சத்தியத்துக்கு முரணில்லாமல் சுவிசேஷத்தை அறிவிக்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறபோதே பிரச்சனையைச் சந்திக்கிறோம். இந்த வாசகம் குழப்பமற்ற முறையில் இருந்தபோதும், மனிதனைப்பற்றிய ஆர்மீனியனிச நம்பிக்கை, ஒரு ஆர்மீனியன் சுவிசேஷத்தை அறிவிக்கும்போது மேற்குறிப்பிட்ட வாசகத்தில் காணப்படும் உண்மைக்கு ஒருபடி மேலே போய், பாவியாகிய மனிதன் இரட்சிப்பை அடைவதற்கு உலகப்பிரகாரமான, சடுதியானதொரு உடனடி வழிமுறையைப் பின்பற்ற வசதி ஏற்படுத்திக் கொடுக்கிறான். இயேசுவை விசுவாசித்தேன் என்று கூட்டங்களில் கையை உயர்த்திக் காட்டுவது, இயேசுவுக்காகத் தீர்மானம் எடுப்பது, விசுவாசிக்கிறேன் என்று வாயால் மட்டும் சொல்லி கண்ணிமைக்கும் நேரத்தில் உடனடியாக ஞானஸ்நானம் எடுப்பது போன்ற வேதஆதாரமற்ற செயல்களை மனிதன் செய்யும்படிச் செய்து, அப்படிச் செய்கிறவர்கள் இரட்சிப்பை உடனடியாக அந்த நிமிடமே அடைகிறார்கள் என்று ஆர்மீனியன் தீர்மானிக்கிறான். மேலே நாம் கவனித்திருக்கும் சுவிசேஷப்பணி பற்றிய உண்மை அதைச் செய்யும்படி நிச்சயமாகச் சொல்லவில்லை. இயேசுவைப்பற்றிய சுவிசேஷத்தை அறிவிப்பதை மட்டும் சுவிசேஷப்பணியாக அது விளக்குகிறது; அறிவிப்பதற்கு மேலாக ஒரு மனிதனின் இரட்சிப்புக்கு அவன் அந்த நிமிடமே எதையாவது செய்யவைக்கும்படி அது நிர்ப்பந்திக்கவில்லை. டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ் தன்னுடைய ‘பிரசங்கமும் பிரசங்கிகளும்’ என்ற நூலில் இதற்காக ஒரு அதிகாரத்தையே ஒதுக்கி (தீர்மானம் எடுப்பதற்கான அழைப்பு) இந்த முறை எத்தனை தவறானது என்பதை அருமையாக விளக்கியிருக்கிறார். இந்த இடத்திலேயே ஆர்மீனியனிசத்திற்கும், சீர்திருத்த விசுவாசத்திற்கும் இடையில் காணப்படும் சுவிசேஷப்பணியின் வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இரட்சிப்பை ஒருவன் உடனடியாக, சடுதியாக அடைய ஆர்மீனியன் சுவிசேஷப் பணியை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறான். இரட்சிப்பை அடைவதற்கு கிறிஸ்துவை ஒருவன் ஏற்று விசுவாசிக்கவேண்டும், அது அவனுடைய தவிர்க்கமுடியாத கடமை என்று ஆணித்தரமாக வலியுறுத்தி அறிவிப்பதோடு சீர்திருத்தச் சுவிசேஷகன் தன் சுவிசேஷப் பணியை நிறுத்திக்கொள்ளுகிறான்.
ஆர்மீனியனிசத்தைப் பின்பற்றுவோர் மனிதனின் சித்தத்தைப்பற்றிக் கொண்டிருக்கும் தவறான நம்பிக்கைகளே அவர்கள் சுவிசேஷப்பணியில் செய்துவரும் அநாவசியமான கிரியைகளுக்குக் காரணமாக இருக்கின்றன. மனிதன் இரட்சிப்பை அடைவதற்குக் கர்த்தருடைய கிரியைக்குத் துணைபோய் தன்பங்கைச் செலுத்தக்கூடியவிதமாக தன்னுடைய சித்தத்தில் ‘ஆவிக்குரிய வல்லமை’ உள்ளவனாக இருக்கிறான் என்கிறது ஆர்மீனியனிசம். அந்நம்பிக்கையின் காரணமாக சுவிசேஷத்தை சொல்லுவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் மனிதனை எதையாவது உடனடியாகச் செய்யவைத்து அவனை விசுவாசியாக்க அது முயல்கிறது. மனித சித்தம் பற்றிய இந்த விஷயத்தில் சீர்திருத்த விசுவாசம், மனிதனுடைய சித்தம் ஆவிக்குரிய வல்லமையை இழந்து காணப்படுகிறது என்று விளக்குகிறது. அதாவது, பாவநிலையில் இருக்கும் மனித சித்தம் இயற்கை ஆற்றலைக் கொண்டிருந்து சுதந்திரமாகச் செயல்பட்டபோதும், ஆவிக்குரிய ஆற்றலில்லாத நிலையில் கர்த்தருக்குரிய எந்தக் காரியங்களையும் செய்யமுடியாதபடி இருக்கிறது. அதைத்தான் முந்தைய அதிகாரங்களில் விளக்கமாகக் கவனித்து வந்திருக்கிறோம். அதனால் சுவிசேஷத்தை அறிவிப்பதோடு மட்டும் நின்று, அதன் பலனைக் கர்த்தரின் கையில் விட்டுவிடுகிறான் சீர்திருத்தச் சுவிசேஷகன்.
நான் ஏற்கனவே விளக்கிய சுவிசேஷப் பணி பற்றி வேதம் விளக்கும் உண்மையை மறுபடியும் கவனிப்போம். இதை விபரமாக விளங்கிக்கொள்ளுவது நல்லது.
‘பரிசுத்த ஆவியின் வல்லமையால், இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்று அவர்மீது முழு நம்பிக்கை வைத்து விசுவாசிக்கும்படி இயேசு கிறிஸ்துவைச் சுவிசேஷச் செய்தியில் மனிதர்கள் முன் வைப்பதே சுவிசேஷப்பணி’
இந்தக் கூற்றில் காணப்படும் உண்மைகளைக் கவனிப்போம். இதில் இரண்டு முக்கிய அம்சங்கள் காணப்படுகின்றன.
- இயேசுகிறிஸ்துவை மனிதர்கள் முன் வைக்கவேண்டும்.
- மனிதன் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்று விசுவாசிக்கும்படி அறிவிக்கவேண்டும்.
இதில் முதலாவதை விபரமாக இனி விளக்கப்போகிறேன்.
1. இயேசுகிறிஸ்துவை சுவிசேஷச் செய்தியில் மனிதர்கள் முன் வைக்கவேண்டும்.
இயேசு கிறிஸ்துவை சுவிசேஷச் செய்தியில் மனிதர்கள் முன் வைப்பது என்பது இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை விளக்குவதல்ல. அவரை மனிதர் முன் வைப்பதற்கும், அவருடைய வரலாற்றை விளக்குவதற்கும் இடையில் வேறுபாடுண்டு. வரலாற்றுக் கிறிஸ்துவினுடைய போதனைகளையும், அவரைப்பற்றிய உதாரணங்களையும் பிரசங்கத்தில் தருவது மட்டும் சுவிசேஷப் பணி அல்ல. அவர் வாழ்ந்து மரித்து எதைச் செய்துமுடித்து உயிர்த்தெழுந்தார் என்ற விபரங்களை மட்டும் விளக்குவதும் சுவிசேஷப் பணி அல்ல. எந்த உயிர்த்துடிப்பும், ஈடுபாடும் இல்லாமல் வெறும் செய்தியாக மட்டும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய விபரங்களைத் தாராளமாகக் கொடுத்துவிட்டு அதை சுவிசேஷப்பணியாகக் கருதிவிடக்கூடாது. சுவிசேஷப் பணி அதற்கும் மேலானது: அது இயேசு கிறிஸ்துவையே மனிதர் முன் வைப்பது.
இயேசு கிறிஸ்துவை எப்படி மனிதர் முன்வைப்பது? பிதா தீர்மானித்தபடி ஆசாரியராகவும், இராஜாவாகவும், தீர்க்கதரிசியாகவும் இவ்வுலகுக்கு வந்து தனக்களிக்கப்பட்ட மீட்பின் பணிகளை நிறைவேற்றிய, கர்த்தரால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்துவாக அவரைச் சுவிசேஷச் செய்தியில் மனிதர் முன்வைக்கவேண்டும். ஜீவிக்கின்ற இரட்சகராக, ஆளுகின்ற இரட்சகராக அவரை முன்வைக்கவேண்டும். பவுல் 1 தீமோத்தேயு 2:5-6ல் சொல்லியிருப்பது போல, ‘மனுஷனாகிய இயேசு கிறிஸ்துவை’ ‘தேவனுக்கும் மனுஷருக்கும் இடையில் மத்தியஸ்தராக’ இருக்கும் இயேசு கிறிஸ்துவை, பேதுரு, 1 பேதுரு 3:18ல் விளக்கியிருப்பதுபோல ‘பாவங்களுக்காகத் துன்பங்களை அனுபவித்த’ இயேசு கிறிஸ்துவை, ‘நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி’ வந்த இயேசு கிறிஸ்துவை சுவிசேஷத்தின் மூலம் மனிதர்கள் முன்வைக்கவேண்டும். நானே வழி, நானே சத்தியம், நானே ஜீவன் என்று சொன்ன கிறிஸ்துவை, என் மூலமாக அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரமுடியாது என்று சொன்ன கிறிஸ்துவை அவர்கள் முன்வைக்கவேண்டும். அவர் மூலமாக, அவரால் மட்டுமன்றி எவரும் அவரை விசுவாசிக்க முடியாது என்று அறிவித்த இயேசு கிறிஸ்துவை மனிதர்கள் முன்வைக்கவேண்டும்.
இயேசு கிறிஸ்துவை நாம் இரட்சகராக, பாவிகளை இரட்சிப்பதற்காக இந்த உலகத்துக்கு வந்தவராக, நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து விடுவித்து நமக்காகத் தானே சாபமானவராக (கலாத்தியர் 3:13), வரப்போகும் தேவகோபத்திலிருந்து நம்மை விடுவிப்பவராக (1 தெசலோனிக்கேயர் 1:10) அவரை மனிதர்கள் முன்வைக்கவேண்டும். மரித்தோர் மேலும், ஜீவனுள்ளோர் மேலும் ஆண்டவராக இருப்பதற்காக மரித்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை (ரோமர் 14:9) சுவிசேஷகன் அவர்கள் முன்வைக்கவேண்டும். பாவியின் இரட்சிப்புக்குத் தேவையான அனைத்தையும் பிதாவின் கட்டளையைத் தலைமேல் சுமந்து பூரணமாகக் கல்வாரி சிலுவையில் நிறைவேற்றியவராக அவரைப் பிரசங்கிக்க வேண்டும். பாவத்தைப் போக்குவதற்குத் தன்னை ஒரே பலியாகச் செலுத்தி, சாபத்தையும், தேவகோபத்தையும் தன் மேல் சுமந்து சகல பாவங்களுக்குமான கடன்களைப் பூரணமாகத் தன் பரிசுத்த இரத்தத்தினால் அடைத்து, நம்மை நீதிமான்களாக்குவதற்கு நீதியைச் சம்பாதித்த கிறிஸ்துவை ஆத்துமாக்கள் முன்வைக்கவேண்டும். இந்தவிதத்தில் இந்த உண்மைகளை வெளிப்படையாகப் பிரசங்கித்து ஆத்துமாக்களுக்கு முன் கிறிஸ்துவை வைக்காத சுவிசேஷப் பணி மெய்யான சுவிசேஷப் பணியல்ல.
இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்தி அவரைப் பற்றிய வெறும் வரலாறு அல்ல. மனிதர்களின் வாழ்க்கையோடு தொடர்புடையது அவருடைய செய்தி. மனிதர்களின் வாழ்க்கையை மாற்றி அமைப்பது அவரைப்பற்றிய செய்தி. அவருடைய செய்தி, கர்த்தரைப் பிதாவாகக்கொள்ளாமல் நியாயாதிபதியாகிய அவரின் கோபத்தைத் தன்மேல் சுமந்து பாவத்தில் இருக்கும் மனிதர்களுடைய தேவையைத் தீர்த்துவைப்பதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் செய்தி. தொலைக்காட்சியில் கண்டும் கேட்டும், பத்திரிகையில் வாசிக்கும் ஜீவனற்ற வெறும் செய்தி அல்ல சுவிசேஷச் செய்தி. இயேசு கிறிஸ்துவை, அவருடைய தன்மை மற்றும் கிரியைகளை வேதபூர்வமாகவும், அவரை இறையாண்மையுள்ள இரட்சகராகவும், ஆண்டவராகவும் பாவிகளான மனிதர்கள் முன் சுவிசேஷச் செய்தியாக வைப்பதே சுவிசேஷப்பணி.
2 கொரிந்தியர் 5:18-21 வரையுள்ள வசனங்களில் பவுல் நாம் பிரசங்கிக்கவேண்டிய கிறிஸ்துவைப் பற்றிய சத்தியத்தைப் பின்வருமாறு விளக்குகிறார்.
இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசு கிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார். ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
2. மனிதன் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்று விசுவாசிக்கும்படி அறிவிக்கவேண்டும்.
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷச் செய்தியில் உறுதியான ஒரு நோக்கமுண்டு. மனிதன் அவரை இரட்சகராக ஏற்று விசுவாசிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பிரசங்கிப்பது சுவிசேஷப்பணியின் அதிமுக்கிய நோக்கம். அவரில்லாமல் மனிதர்களுக்கு வாழ்க்கையில்லை என்பதை மனிதர்களுக்கு உணரவைப்பது சுவிசேஷப்பணி. அதனால், மனிதர்கள் இயேசு கிறிஸ்துவை நாடி அவரைப்பற்றிய செய்தியைக் காதால்கேட்டு, சிந்தித்து, அவரை ஏற்று விசுவாசிக்கவேண்டும் என்று அவர்களை உறுதியோடு அழைப்பதாக சுவிசேஷச் செய்தி இருக்கவேண்டும். இதையே இந்தக் கூற்று விளக்குகிறது. இந்தப் பயன்பாட்டை வலியுறுத்தாத செய்தி சுவிசேஷச் செய்தியல்ல.
இந்தக் கூற்று ஒரு முக்கிய உண்மையைப் புலப்படுத்துகிறது. சுவிசேஷப்பணி பரிசுத்த ஆவியின் வல்லமையால் செய்யப்படுவது என்பதே அது. இந்தக் கூற்றில், ‘பரிசுத்த ஆவியின் வல்லமையால், இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்று அவர்மீது முழு நம்பிக்கை வைத்து விசுவாசிக்கும்படி இயேசு கிறிஸ்துவைச் சுவிசேஷச் செய்தியில் மனிதர்கள் முன் வைப்பதே சுவிசேஷப்பணி’ என்றிருப்பதைக் கவனியுங்கள். இதை, ‘சுவிசேஷப் பணி என்பது, பரிசுத்த ஆவியால் மனிதர்கள் இரட்சிக்கப்படும்படி இயேசு கிறிஸ்துவை அவர்கள் முன் சுவிசேஷப்பணி மூலம் வைப்பதே’ என்றும் விளக்கமுடியும். ஆனால், உண்மையில் இந்தக் கூற்று அதையல்ல நம்முன் வைக்கிறது. ‘மனிதர்கள் கிறிஸ்துவிடம் வரும்படியாகப் பரிசுத்த ஆவியின் வல்லமையால் சுவிசேஷப் பணிமூலம் அவரை மனிதர்கள் முன்வைக்கவேண்டும்’ என்பதே இந்தக் கூற்றுக்கான விளக்கம். இந்த இரண்டிற்கும் இடையில் பெரிய வித்தியாசம் உண்டு. முதலாவது, பரிசுத்த ஆவியின் வல்லமையால் மனிதர்கள் இரட்சிக்கப்படுவதைப் பற்றியது. இரண்டாவது, பரிசுத்த ஆவியின் வல்லமையால் சுவிசேஷப் பணியில் ஈடுபடுவது பற்றியது. இதில் இரண்டாவதையே இந்தக் கூற்று வலியுறுத்துகிறது. இன்னொருவிதத்தில் சொல்லப்போனால், சுவிசேஷப்பணியின் நோக்கமே சுவிசேஷம் சொல்லுவதன் மூலம் அதைக் கேட்பவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான். ஆகவே, சுவிசேஷப்பணியின் அடிப்படை நோக்கமே பாவிகளை கர்த்தரிடம் கொண்டுவருவதுதான். ஜெப்ரி ஸ்மித் தன் நூலில் (மனந்திரும்புதலுக்காகப் பிரசங்கித்தல்) இதையே வலியுறுத்தி எழுதியிருக்கிறார். அதாவது, ஆத்துமாக்கள் மனந்திரும்புவதை அடிப்படை நோக்கமாகக்கொண்டு பிரசங்கிக்கப்படாத பிரசங்கம் சுவிசேஷப் பிரசங்கமல்ல என்பது அவருடைய கருத்து. ஜெப்ரி ஸ்மித்தின் கருத்து மிகவும் சரியானது.
சுவிசேஷப்பணியின் நோக்கம் ஆத்துமாக்களைக் கர்த்தரிடம் சேர்ப்பது என்பது எப்படிச் சரியாகும்? விசுவாசத்தை அளிப்பது கர்த்தரின் செயல் என்றுதான் வேதம் விளக்குகிறது. இருந்தபோதும், ஒவ்வொரு சுவிசேஷகனின் நோக்கமும் ஆத்துமாக்கள் மனமாற்றம் அடையவேண்டும் என்பதாகவே இருக்கவேண்டும் என்று கூறுவதில் ஒரு தவறுமில்லை. அந்த நோக்கமில்லாமல் அவன் சுவிசேஷம் சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை. சுவிசேஷப்பணி, சுவிசேஷகனின் கிரியையாக இருந்தாலும் அவனுடைய ஊழியத்தின் நோக்கம் அதன் மூலம் பாவிகள் மனமாற்றம் அடையவேண்டும் என்பதாகவே இருக்கவேண்டும். இருந்தாலும், சுவிசேஷகனின் பணி மூலம் எத்தனை ஆத்துமாக்கள் மனமாற்றம் அடைகிறார்கள் என்பதை வைத்து அவன் மெய்யாகவே சுவிசேஷப்பணி செய்கிறான் என்றும் தீர்மானித்துவிட முடியாது. ஏனென்றால், நெடுங்காலம் இஸ்லாமியர்கள் மத்தியில் சுவிசேஷப்பணி செய்து எவரும் மனமாற்றம் அடையாததை அனுபவத்தில் கண்ட மிஷனரிகள் இருந்திருக்கிறார்கள். அதை வைத்து அவர்கள் சுவிசேஷப்பணி செய்யவில்லை என்று தீர்மானிக்க முடியுமா? அதேவேளை, நேரடி சுவிசேஷச் செய்தியாக இல்லாத பிரசங்கங்களைச் செய்த பிரசங்கிகள் மூலம் ஆத்துமாக்கள் மனந்திரும்புதலை அடைந்திருக்கிறார்கள். அதைவைத்து இந்தப் பிரசங்கிகள் சுவிசேஷப்பணி செய்திருக்கிறார்கள் என்று கூறமுடியுமா? இரண்டு கேள்விகளுக்கும் ‘இல்லை’ என்பதே பதில். இதிலிருந்து எதைத் தெரிந்துகொள்ளுகிறோம்? பிரசங்கத்தின் மூலம் ஏற்படும் பலன்கள் பிரசங்கிகளின் கையில் தங்கியிருக்கவில்லை என்பதைத்தான். பிரசங்கிகளின் நோக்கமோ, அல்லது விருப்பமோ பிரசங்கத்தின் மூலம் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திவிட முடியாது. அதைக் கர்த்தர் மட்டுமே தன் சித்தத்தின் மூலம் செய்யக்கூடியவராக இருக்கிறார். இப்படிச் சொல்வதால் நாம் நம்முடைய சுவிசேஷப்பணி மூலம் எந்தப் பலனையும் எதிர்பார்க்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. நம் பணிகள் மூலம் ஒன்றும் நிகழாமல் இருந்தால், கர்த்தரை நாம் ஜெபத்தில் நாடி அதற்கான காரணத்தை அறிய முயற்சி செய்யவேண்டும். ஆகவே, நாம் அடைந்திருக்கும் பலன்களை வைத்து நம்முடைய சுவிசேஷப்பணியை எடைபோடக்கூடாது என்றும் சொல்லமுடியாது.
அப்படியானால் சுவிசேஷப்பணியை எப்படி விளக்குவது? இதற்குப் பதில் தரும் ஜே. ஐ. பெக்கர் பின்வருமாறு அருமையாக விளக்குகிறார்.
‘இதற்கான புதிய ஏற்பாட்டு பதில் மிகவும் எளிமையானது. சுவிசேஷப்பணி என்பது சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதுதான். இந்தச் செய்திப் பரிமாற்றக் கிரியை மூலம் கிறிஸ்தவர்கள் கர்த்தரின் நாவாகச் செயல்பட்டு அவருடைய செய்தியைப் பாவிகளுக்கு அறிவிக்கிறார்கள். எந்தவிதமான சந்தர்ப்பமாக இருந்தாலும், ஒரு பெரிய கூட்டத்திலோ, சிறிய கூட்டத்திலோ, பிரசங்க மேடையிலிருந்தோ, எவருடனோ நிகழும் தனிப்பட்ட உரையாடலின் மூலமோ அவர்கள் சுவிசேஷப்பணி செய்கிறார்கள். தன்னை எதிர்த்து நிற்கும் உலகைப் பார்த்து கிறிஸ்துவை விசுவாசிக்கும்படிப் படைத்தவர் அழைப்பது தெய்வீகச் செய்தியின் உச்சகட்டமாக இருப்பதால், அந்தச் செய்தியை அறிவிப்பது அதைக்கேட்பவர்கள் மனமாற்றம் அடையவேண்டும் என்பதை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்தவிதமாக ஆத்துமாக்கள் மனமாற்றமடையும் பணியில் ஈடுபட்டிராவிட்டால் நீங்கள் சுவிசேஷப்பணி செய்யவில்லை என்றுதான் அர்த்தம்! நீங்கள் சுவிசேஷப்பணியில் ஈடுபட்டிருக்கிறீர்களா என்பதை அறிந்துகொள்ள உங்களுடைய சாட்சியின் மூலம் யாரும் மனமாற்றத்தை அடைந்திருக்கிறார்களா என்ற கேள்வியைக் கேட்கக்கூடாது. நீங்கள் விசுவாசத்தோடு சுவிசேஷத்தை அறிவிக்கிறீர்களா என்றுதான் கேட்கவேண்டும்.’
ஒரு பிரசங்கி தன் சபையில் இருக்கும் ஆத்துமாக்கள் மனமாற்றமடைய உழைக்க வேண்டும். இந்த இடத்தில் மனமாற்றம் (Conversion) என்பதை வேதம் பயன்படுத்தும் முறையில் தான் நானும் பயன்படுத்துகிறேன். இரட்சிப்பது கர்த்தரின் பணி; மனமாற்றம் மனிதனின் பணி என்கிறது வேதம். அதாவது கர்த்தரின் கிருபையின் இரட்சிக்கும் செயலால் மனிதன் மனமாற்றம் அடையவேண்டும்; கர்த்தரை நோக்கி அவன் ‘திரும்பவேண்டும்.’ அத்தகைய கர்த்தரை நோக்கித் திரும்புதலே மனமாற்றம். அதையே கெட்டகுமாரன் செய்தான் (லூக்கா 15).
தனக்குப் புத்திதெளிந்தபோது அவன் எழுந்து தன் தகப்பனை நோக்கிப்போனான். அது அவன் செய்யவேண்டிய செயலாக இருந்தது. அதுவே மனமாற்றம்.
யாக்கோபு 5:19-20ல், ‘உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகிப்போனால், மற்றவன் அவனைத் திருப்பினால் . . . பாவியைத் திருப்புகிறவன் . . . திரளான பாவங்களை மூடுகிறான்’ என்கிறார்.
இதில் ‘திருப்புதல்’ என்ற வார்த்தை இரண்டு தடவை வந்திருக்கிறது. இதை ஆங்கிலத்தில் turn என்பார்கள். ஒருவன் போய்க்கொண்டிருக்கும் வழியில் இருந்து அவனைத் திருப்புவதையே இது குறிக்கிறது. அதைத்தான் யாக்கோபு செய்யும்படியாகச் சொல்கிறார். அப்போஸ்தலர் 26:18ல் பவுல் அகிரிப்பாவிடம் தன் சாட்சியைக் கொடுத்தபோது, ‘சுயஜனத்தாரிடத்தினின்றும், அந்நிய ஜனத்தாரினிடத்தினின்றும் . . . சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்குத் ‘திரும்பும்படி’ . . . உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்று இயேசு சொன்னதாக அறிவித்தார். இதில் காணப்படும் ‘திரும்புகிற’ செயலையே நோக்கமாகக் கொண்டு சுவிசேஷத்தின் மூலம் பிரசங்கி பிரசங்கிக்கவேண்டியவனாக இருக்கிறான்.
கிறிஸ்தவர்கள் ஆத்துமாக்கள் மனமாற்றம் அடைவதற்காக சுவிசேஷத்தைச் சொல்லும்படி அழைக்கப்பட்டிருக்கிறார்கள். தன்னுடைய அவிசுவாசியான கணவன் மனமாற்றம் அடைய விசுவாசியான மனைவி உழைக்கவேண்டும். அதனால் சுவிசேஷப்பணி அல்லது சுவிசேஷ அறிவிப்பு என்பது வெறுமனே போதிப்பதோ, சத்தியத்தை விளக்குவதோ ஒருவர் மனதில் பதியுமாறு ஒரு செய்தியைக் கொடுப்பதோ மட்டும் அல்ல. அதற்கும் மேலானதொன்று சுவிசேஷப்பணியில் காணப்படுகிறது. இதுபற்றி விளக்கும் ஜோன் கல்வின்,
‘சத்தியத்தை வளர்ப்பதை மட்டும் போதகர்கள் செய்யக்கூடாது. அதை ஆத்துமாக்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளும்படியாகவும் உழைக்கவேண்டும். அதை ஏதோ ஒரு தடவை மட்டும் செய்கிறவர்களாக இல்லாமல் தொடர்ச்சியாகச் செய்யவேண்டும். அவர்கள் கர்த்தரின் செய்தியாளர்களாக இருக்கிறார்கள், அதனால், அவர்களுடைய முதல் கடமை கர்த்தரின் கிருபையை ஆத்துமாக்களுக்கு இலவசமாக அளிப்பது. அவர்களுடைய இரண்டாவது கடமை, தங்களுடைய சகல ஆற்றலையும் பயன்படுத்தி அது வீண்போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்கிறார் (2 கொரிந்தியர் 6:1 விளக்கவுரை).
சுவிசேஷத்தைக் கேட்கிற ஆத்துமா அதற்கு செவிசாய்த்து உடன்படுவதற்காக உழைப்பதை சுவிசேஷப்பணி தன்னில் கொண்டிருக்கிறது. சுவிசேஷப்பணி என்பது ஒருவரை மனமாற்றத்திற்கு வழிநடத்தும் நோக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கிறது. அதாவது, சுவிசேஷப்பணி என்பது ஒருவரை ஆதாயப்படுத்துவது, வெற்றிகொள்வது, சக மனிதர்களை இயேசு கிறிஸ்துவுக்காகக் கைப்பற்றிப் பிடிப்பதாகும். மீனைப்பிடிக்கிறவன் தன் கையிலிருக்கும் தூண்டிலைத் தண்ணீரில் சரியான இடத்தில் எறிந்து கருத்தோடு மீனைப்பிடிப்பதற்காக எப்படி உழைப்பானோ அதே உழைப்பைத்தான் சுவிசேஷப்பணியில் சுவிசேஷகன் கொண்டிருக்கவேண்டும். மீன் பிடிக்கிறவன் தூண்டிலைத் தண்ணீரில் எறிவதற்காக மட்டும் ஒருநாளும் ஆற்றங்கரைக்குப்போக மாட்டான். அவனுடைய குறிக்கோள் மீன்களோடு வீட்டுக்குத் திரும்புவதாகவே இருக்கும். அவனுக்கிருக்கும் அந்தக் குறிக்கோளில்லாமல் சுவிசேஷப்பணியில் ஈடுபடுகிறவன் சுவிசேஷம் சொல்லுகிறவனல்ல.
இந்த ஆக்கத்தின் மிகுதிப் பகுதியை ‘மனித சித்தம்’ என்ற தலைப்பில் நாம் வெளியிட்டிருக்கும் புதிய நூலின் 11ம் அதிகாரத்தில் படிக்கலாம்.