வணக்கம் வாசகர்களே! புது வருட வாழ்த்துக்களை இதழூழியத்தில் இணைந்து பணிபுரிகிறவர்கள் சார்பாகத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். புதிய வருடம் பிரச்சனையில்லாத வருடமாக இருக்க கர்த்தர் எல்லோருக்கும் துணைசெய்யட்டும். பலவிதமான கோவிட்-19 சிக்கல்களுக்கு மத்தியில் இதழைத் தொடர்ந்து வௌ¤யிட ஆண்டவர் துணை செய்து வருகிறார். புதிய வருடத்திலும் அதைத் தொடர அவருடைய கிருபையை நாடி நிற்கிறோம்.
இந்த இதழில் ‘மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கினால்’ என்ற ஆக்கத்தில் 1 தீமோத்தேயு 1:5 பற்றிய வேதஉட்பொருள் விளக்கவுரை அளித்திருக்கிறேன். இது ஒரு புதுவகை ஆக்கமாகத் தெரியலாம். இதை ஆங்கிலத்தில் Exegetical Essay என்று அழைப்பார்கள். தமிழில் இருக்கும் வேதமொழிபெயர்ப்புகளின் குறையை மட்டுமல்லாமல் கவனத்தோடு வசனங்களை ஆராய்ந்து போதிக்க வேண்டிய அவசியத்தையும் இதில் சுட்டியிருக்கிறேன். புதிதாக நாம் வெளியிட்டிருக்கும் ‘மனித சித்தம்’ எனும் நூலின் ஒரு அதிகாரத்தின் பகுதியை இதில் தந்திருக்கிறேன். அந்த நூலைப் பெற்று வாசித்து நண்பர்களுக்கும், சக கிறிஸ்தவர்களுக்கும் அறிமுகம் செய்து வையுங்கள்.
இதையடுத்து 2 இராஜாக்கள் 15ம் அதிகாரத்தில் இருந்து அசரியா எனப்படும் உசியாவைப்பற்றிய ஒரு விளக்கத்தையும் இந்த இதழில் காணலாம். அது நானளித்திருக்கும் ஒரு பிரசங்கத்தின் வடிவம். அத்தோடு நாம் வௌ¤யிட்டிருக்கும் ‘பியூரிட்டன்களின் பார்வையில் மனந்திரும்புதல்’ எனும் நூலைப் பல தடவைகள் வாசித்து, அனுபவித்துத் தன் அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளுகிறார் மத்தியகிழக்கு நாட்டில் வாழும் ஒரு வாசகி. அது உங்களையும் நூலைப் பெற்று வாசிக்கத் தூண்டட்டும்.
பாவத்தின் பாவம் என்ற ரால்ப் வென்னிங்கின் நூலின் இறுதிப் பகுதி இந்த இதழில் வந்திருக்கிறது. இனி இதை நூலாக வெளியிடும் நற்பணியை ஆரம்பிக்கவேண்டும். அதற்காக ஜெபியுங்கள். அத்தோடு நம்மினத்தில் நல்ல நூல்களைப்பெற்று வாசிக்கும் பயிற்சி வளர்ந்து, சபைகள் சத்தியத்தில் வளர்ந்துயரவும் ஜெபித்துக்கொள்ளுங்கள். சத்தியத்தை அடிப்படையாகக்கொண்ட ஆத்மீக வளர்ச்சியில்லாத சபைகளாலும், ஆத்துமாக்களாலும் யாருக்கு என்ன பயனிருக்கப்போகிறது? சத்தியதாகமில்லாதிருக்கும் நம்மினத்திற்காகத் தொடர்ந்து ஜெபியுங்கள். – ஆர்