வேதத்தை எவ்வாறு வாசித்துப் புரிந்துகொள்ளுவது? பொதுவாகவே கிறிஸ்தவர்கள் ஆதியாகமத்தில் இருந்து ஒவ்வொரு நூலாக வாசிப்பார்கள். மீண்டும் மீண்டும் அந்த நூல்களை வாசித்து அதன் பொதுவான போக்கைப் புரிந்துகொள்ளப் பார்ப்பார்கள். பெரும்பாலானோருக்கு புதிய ஏற்பாட்டைத் தெரிந்துகொண்டிருக்கும் அளவுக்குப் பழைய ஏற்பாட்டைப்பற்றிய புரிதல் இருக்காது. பொதுவாகச் சொல்லப்போனால் கிறிஸ்தவர்களுக்கு வேதத்தின் வரலாற்று நிகழ்வுகள் பற்றிய புரிதல் மிகக் குறைவு. ஒவ்வொரு நூலுக்கும் இடையில் காணப்படும் தொடர்பு, முழு வேதத்தின் ஒருங்கிணைந்த தொடர்ச்சியான வரலாற்றுப் பயணம், அதன் மூலம் படைத்தவர் செய்திருக்கும், செய்து வருகின்ற கிரியைகள், இவையனைத்திற்கும் புதிய உடன்படிக்கை கால மக்களான நமக்குமுள்ள தொடர்பு போன்ற விஷயங்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதற்குக் காரணம் வேதத்தை எப்படி முறையாக, எந்த அடிப்படையில் வாசித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருப்பதுதான்.
19ம் நூற்றாண்டில் உருவான, (அதற்கு முன்னிருந்திராத) ஒரு வேதவிளக்க முறைக்குப் பெயர் காலசகாப்தக் கோட்பாடு (டிஸ்பென்சேஷனலிசம்). இதைக் காலப்பாகுபாட்டுக்கோட்பாடு என்றும் அழைப்பார்கள். டின்பென்சேஷன் என்பதற்கு ஒருகாலப்பகுதி என்று அர்த்தம். வேதவரலாற்றைப் பல பிரிவுகளாகப் பிரித்து அதற்கு விளக்கங்கொடுப்பதே காலசகாப்தக்கோட்பாடு. வரலாற்றை ஏழு பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் கர்த்தர் எந்தவிதமாக இஸ்ரவேலையும், சபையையும் சோதித்தார் என்று விளக்குகிறது இந்தப் போதனை. ஒரு காலப்பிரிவின் சோதனையில் இஸ்ரவேல் தோற்றபோது இன்னொரு காலப்பிரிவின் சோதனை அவசியமாயிற்று என்கிறார்கள் இவர்கள். பிரச்சனை என்னவென்றால், ஒவ்வொரு பிரிவுக்கும் அடுத்துவரும் பிரிவோடு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், ஒரு காலப்பிரிவில் கர்த்தர் செயல்பட்டவிதமாக அடுத்துவரும் பிரிவில் செயல்படவில்லையென்றும், அவரின் திட்டங்கள் ஒரேவிதமாக இல்லாமல் ஒவ்வொரு பிரிவிலும் மாறிக்கொண்டே போகின்றன என்று இந்தப் போதனை விளக்கி, வேதத்தின் ஒருங்கிணைந்த தன்மையை ஒரு கட்டடத்தை இடிப்பதுபோல் இடித்துத் தள்ளிவிடுகிறது. இதன் காரணமாக வேதவரலாற்று இறையியலையும், வேத சத்தியங்களையும் காலங்களுக்கேற்றவகையில் பிரித்து விளக்கி பெரும் சத்தியக்கோளாறை உருவாக்கிவிட்டிருக்கிறது காலசகாப்தக்கோட்பாடு. உதாரணத்துக்கு, இந்தப் போதனையின்படி பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் மனிதனடையும் இரட்சிப்பு வெவ்வேறுவிதமானவை; பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலுக்கும், புதிய ஏற்பாட்டு சபைக்கும் எந்தத்தொடர்பும் இல்லை. கர்த்தர் இரண்டுவிதமான மக்களையும் (இஸ்ரவேல், சபை), அவர்களுக்கான இரண்டுவிதமான திட்டங்களையும் வைத்திருந்தார் என்றும், இஸ்ரவேல் இந்த உலகத்தில் தொடரும் நாடாகவும், சபை ஆவிக்குரியதாக இருந்து பரலோகத்தை அடையும் என்றும் விநோதமான போதனைகளை இந்தக் கோட்பாடு அளிக்கிறது. பழைய ஏற்பாட்டைப் புதிய ஏற்பாட்டோடு தொடர்பில்லாததாக விளக்கி, வேதத்தின் அடிப்படை உண்மையான அதன் ஒற்றுமையை இந்தப்போதனை அடியோடு இல்லாமலாக்கிவிடுகிறது.
காலசகாப்தக்கோட்பாடு, நாம் எப்படி வேதத்தை வாசிக்கவேண்டும், அதாவது, அதைப் புரிந்துகொள்ளும்விதமாக அதன் வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்துப் படிக்கவேண்டும் என்று நமக்கு விளக்குகிறது. நாம் பின்பற்றவேண்டும் என்று அது வலியுறுத்தும் வேதவாசிப்பு முறை சரியானதா? அத்தகைய முறையை வேதம் அங்கீகரித்து தனக்குள் அந்த முறை காணப்படுவதாக விளக்குகிறதா? என்ற கேள்வி எழும்போதே இந்தப்போதனை பிரச்சனைக்குள்ளாகிறது. 19ம் நூற்றாண்டில் இந்தப் போதனையை ஆரம்பித்து வைத்த ஜோன் நெல்சன் டார்பியும் அவருடைய தோழரான ஸ்கோபீல்டும், வேதத்தில் ஒன்றோடொன்று தொடர்பில்லாத ஏழு காலப்பிரிவுகள் காணப்படுவதாக விளக்கினர். அப்படியிருப்பதாக அவர்களே தீர்மானித்து வேதவசனங்களைப் பயன்படுத்தி தங்களுடைய கணிப்பை நிரூபிக்க முயற்சி செய்கின்றனர். இந்த முறையில்தான் பிரச்சனை இருக்கிறது. வேதவிளக்கவிதிகளின்படி (Interpretive principles) நாம் மனதில் தீர்மானிக்கின்ற எதையும் வேதத்தை வைத்து நிரூபிக்க முயலக்கூடாது. நம்முடைய நம்பிக்கைகளை வேதமே தெளிவாகக் காட்டினாலொழிய அவற்றை நாம் மெய்யானவையாக ஏற்றுக்கொள்ளக்கூடாது. டார்பி, ஸ்கோபீல்ட் சகோதரர்களின் பெருந்தவறு செயற்கையாக ஏழு காலப்பிரிவுகளை உருவாக்கி, அவை வேதத்தில் காணப்படுவதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பதுதான். ஒன்றுக்கொன்று தொடர்பற்ற ஏழு காலப்பிரிவுகளாக வேதத்தைப் பிரித்துப் பார்ப்பது தவறு என்றால், அவர்களுடைய அத்தனை போதனைகளும் தவறானவையாகிவிடுகின்றன. உண்மையில் அத்தகைய ஏழு காலப்பிரிவுகளாக வேதத்தைப் பிரித்துப் பார்ப்பது தவறு; அத்தகைய பாகுபாட்டுக்கு வேதம் இடமளிக்கவில்லை.
இதற்கு ஓர் உதாரணமாக, டார்பி, ஸ்கோபீல்டின் விளக்கங்களின்படி அப்போஸ் 2ம் அதிகாரத்தில் இருந்து இரகசிய வருகைவரை (உண்மையில் அப்படியொன்றில்லை) ‘திருச்சபைக்காலம்’ என்று விளக்குகிறார்கள். காலசகாப்தக்கோட்பாட்டின்படி பழைய ஏற்பாட்டில் திருச்சபையின் சாயலைக்கூட காணமுடியாது. திருச்சபை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் நிறுவப்பட்ட தற்காலிக ஆவிக்குரிய மக்கள் என்பது இவர்களுடைய வாதம். இவர்கள் தவறாகப் பயன்படுத்தும் ‘எழுத்துபூர்வமான’ வேதவிளக்கமுறை இந்தவிதமாக வேதத்தை விளக்கும்படி இவர்களை வழிநடத்துகிறது. திருச்சபை புதிய ஏற்பாட்டில் மட்டுந்தான் இருந்தது என்றால், பழைய ஏற்பாட்டில் விசுவாசிகள் இருக்கவில்லையா? என்ற கேள்வி எழுகிறது? ஆதாமையும், ஆபிரகாமையும், மோசேயையும், தாவீதையும் நாம் எப்படிக் கணிப்பது? என்ற பிரச்சனை உருவாகிறது. அவர்கள் அதற்குப் பதிலாக, இவர்கள் ஒருவிதத்தில் விசுவாசிகள்தான், ஆனால், திருச்சபை புதிய ஏற்பாட்டில் உருவான பின்பே அவர்கள் அதில் சேர்க்கப்பட்டார்கள் என்று பதிலளிக்கிறார்கள். அத்தோடு இவர்களுடைய விசுவாசமும், புதிய ஏற்பாட்டு விசுவாசிகளின் விசுவாசமும் ஒன்றல்ல என்றும் இவர்கள் கூறுகிறார்கள். இக்கோட்பாட்டைப் பின்பற்றும் பெரும்பாலானோர், பழைய ஏற்பாட்டு தேவமனிதர்களில் பரிசுத்த ஆவியானவர் வாசம்செய்யவில்லை என்றும் நம்புகிறார்கள். (‘பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர்’ எனும் என் நூலை வாசியுங்கள்). செயற்கையாக வேதத்தில் காணப்படாத ஒன்றோடொன்று தொடர்பில்லாத ஏழு காலப்பிரிவுகளை இவர்கள் உண்டாக்கியது, இரட்சிப்புபற்றிய வேதசத்தியங்களுக்கு குளறுபடியான விளக்கங்களைக் கொடுப்பதில் இவர்களைக் கொண்டுபோய்விட்டிருக்கிறது.
செயற்கையான முறையில் ஏழுவகைக் காலப்பிரிவு வேதத்தில் காணப்படவில்லை என்கிறபோது அந்த முறையை வைத்து உண்டாக்கப்பட்டுள்ள அத்தனை வேதவிளக்கங்களும் தவறானவை என்பதிலேயே போய்முடியும். முதல் கோணலென்றால் முற்றும் கோணலென்பது அனைவருக்கும் தெரிந்ததே. வேதத்தின் ஒரு சத்தியத்தைத் தவறாக விளக்குவது ஏனைய சத்தியங்களனைத்தையும் தொட்டுப் பாதிக்காமல் விடாது. காலசகாப்தக் கோட்பாட்டை உருவாக்கியவர்கள் ஏழுகாலப்பிரிவின் அடிப்படையிலேயே வேதத்தின் அத்தனை அடிப்படை சத்தியங்களுக்கும் விளக்கமளிக்கிறார்கள். திருச்சபைபற்றி இவர்கள் அளிக்கும் தவறான விளக்கத்தை ஏற்கனவே தந்திருக்கிறேன். அதேபோல்தான், இரட்சிப்பு, பரிசுத்தமாக்குதல், கிறிஸ்தவ வாழ்க்கை, பரிசுத்த ஆவியானவர், கிறிஸ்துவின் மீட்பின் வரலாறு, கிறிஸ்துவின் ராஜ்யம், கிறிஸ்துவின் வருகை என்று அனைத்துப் போதனைகளுக்கும் இவர்கள் வேதமறியாத தவறான விளக்கங்களைத் தருகிறார்கள். இதன் காரணமாகவே இந்தக் கோட்பாட்டை இறையியல் அறிஞரொருவர், Wrongly dividing the Bible (தவறான முறையில் வேதத்தைப் பகுப்பது) என்று அழைத்திருக்கிறார். இன்னொரு அறிஞர் சொன்னார், ‘நாம் பின்பற்றுகிற வேதவிளக்க விதிமுறைகள் சரியானவையாக இருந்தால் வேதத்தில் எந்த இறையியலையும் சரியாகப் புரிந்துகொள்ளலாம்’ என்று. டார்பி, ஸ்கோபீல்ட் வேதவிளக்க விதிமுறை சரியானதல்ல. இருந்தும் தமிழினத்தின் பெரும்பாலான கிறிஸ்தவ பிரசங்கிகளும், கிறிஸ்தவர்களும் அதற்கு அடிமைகளாகியிருக்கிறார்கள்.
மீட்பின் வரலாற்றை விளக்கும் வேதம்
ஏழுவகைக் காலசகாப்தக் கோட்பாடு வேதத்தில் இல்லாதது, அது செயற்கையான போதனை என்றால் வேதவரலாற்றையும் அது போதிக்கும் சத்தியங்களையும் விளங்கிக்கொள்ள நாம் பயன்படுத்தவேண்டிய தகுந்த முறையொன்று இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. அத்தகையதொரு முறையை வேதமே நமக்கு இனங்காட்டுகிறது என்பதுதான் அதற்குப் பதில். இப்போது நான் விளக்கப்போகிற சத்தியத்தைப் பற்றி இதுவரை நான் விபரமாக இதழில் எழுதியதில்லை. அதன் அவசியத்தை உணர்ந்தே அதை இப்போது எழுதத் தீர்மானித்தேன். அவசர வாசிப்புக்காரர்களால் இதை உடனடியாகப் புரிந்துகொள்ள முடியாது. இறையியல் சத்தியங்களை எப்போதுமே அவசர வாசிப்பின் மூலம் கற்றுக்கொள்ள முடியாது. நுணுக்கமான வேத சத்தியங்களைப் பொறுமையாகக் கவனத்தோடு படித்தே புரிந்துகொள்ள முடியும். வேதம் விளக்கும் கர்த்தரின் முன்குறித்தல் பற்றிய போதனை அப்படிப்பட்ட சத்தியங்களில் ஒன்று.
சமீபத்தில் நான் வாசித்த இறையியலறிஞர் கார்ள் ட்ரூமனின் வார்த்தைகள் பொருளுள்ளவை. அவர் சொல்கிறார், ‘மூளையில் அறுவை சிகிச்சையை எப்படி ஒரு சுத்தியலையும், இயந்திர அரிவாளையும் பயன்படுத்திச் செய்துவிட முடியாதோ, அதேபோல்தான் சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கான கவனத்தோடுகூடிய இறையியல் விளக்கங்களை ஆக்கபூர்வமாக 280 வார்த்தைகளில் தந்துவிட முடியாது.’ அதாவது கருத்தோடுள்ள இறையியல் விளக்கங்களை ட்டுவிட்டரிலும், இன்ஸ்டகிரேமிலும், பத்துநிமிட யூடியூப் கிளிப்புகளிலும் பதிவுசெய்துவிட முடியாது என்கிறார் அவர். அப்படிச்செய்ய முயல்கிற அனேகர் சுற்றியிருக்கிறார்கள். இதெல்லாம் அவசரக்குடுக்கைகளுக்கு உதவும்; அறிவை வளர்த்துக்கொள்ளத் துடித்து ஆழமான இறையியல் சத்தியங்களைக் கற்றுக்கொள்ள முயல்கிறவர்களுக்கு ஒருநாளும் உதவாது. அதற்கு நேரமும், பொறுமையும், மீள்வாசிப்பும் அவசியம்.
நான் இப்போது விளக்கப்போகின்ற, வேதத்தை எந்தக்கோணத்தில் படித்துப் புரிந்துகொள்வது என்ற போதனை இன்று நேற்று உருவானதல்ல. இந்த முறையிலேயே ஆதியில் இருந்து வேதத்தை திருச்சபை படித்து வந்திருக்கிறது. இந்த முறையை 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதத்திற்குப் பிறகு, கடல் நீருக்கு மேல் டொல்பின் மீன் பாய்ந்து வெளிவருவதுபோல் கிறிஸ்தவர்கள் இனங்கண்டு பயன்படுத்த ஆரம்பித்தபோதும், ஆதிசபைக்காலத்திலும், சபைப்பிதாக்கள் காலத்திலும் இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பியூரிட்டன் பெரியவர்களும் இந்த முறையையே வேதத்தைப் படிக்கப் பின்பற்றியிருக்கின்றனர். அப்படியானால் இந்த முறை ஏன் நம்மினத்தில் (தமிழினத்துக் கிறிஸ்தவம்) வேதத்தைப் படிப்பதில் பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்ற கேள்வி எழும். அதற்கு மிகமுக்கியமான காரணம், விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ ஜோன் நெல்சன் டார்பியின் காலசகாப்தக் கோட்பாடு கிறிஸ்தவ இறையியல் கல்லூரிகளையும், கிறிஸ்தவ இனத்தையும் ஆக்கிரமித்து தன் கட்டுக்குள் வைத்திருப்பதுதான். இரண்டாவது காரணம், நம்மினத்தில் சீர்திருத்தப் போதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டது சமீப காலத்தில்தான். சீர்திருத்த கிறிஸ்தவம் மட்டுமே இப்போது நான் விளக்கப்போகிற வேதவிளக்கவிதியை வேதத்தைப் படிக்கப் பயன்படுத்தி வந்திருக்கிறது. இது சீர்திருத்த கிறிஸ்தவம் உருவாக்கிய போதனையாகத் தவறாக எண்ணிவிடக்கூடாது. இதைச் சீர்திருத்தக் கிறிஸ்தவம், ஏனைய இறையியல் விளக்கங்களை வேதத்தில் இருந்து அறிமுகப்படுத்தியதுபோல் கிறிஸ்தவ உலகுக்கு அறிமுகப்படுத்தியது. இனி இந்தப் போதனை என்னவென்று ஆராய்வோம்.
வேதம் கர்த்தரைப் பற்றியும், அவருடைய கிரியைகளையும்பற்றி நமக்கு விளக்கும் தெய்வீக நூல். அது கர்த்தரின் கிரியையான படைப்பில் ஆரம்பித்து வரலாறு எப்படி முடியப்போகிறது என்பதை வெளிப்படுத்தல் விசேஷத்தில் விளக்குவதோடு முடிவுக்கு வருகிறது. இந்த வரலாற்றை ‘மீட்பின் வரலாறு’ (Redemptive history) என்று இறையியலாளர் அழைக்கிறார்கள். அதற்குக் காரணம், கர்த்தரின் பிரதான கிரியை, தான் படைத்து, பாவத்தில் வீழ்ந்திருக்கும் மனிதகுலத்தை மீட்டெடுப்பதாக இருப்பதால், வரலாற்றில் அவர் அதை எந்தவிதமாக நிகழ்த்துகிறார் என்பதை மீட்பின் வரலாறாகிய வேதம் விளக்குகிறது. இந்த மீட்கும் கிரியையைக் கர்த்தர் எந்தவிதமாக வரலாற்றின் பல்வேறு காலப்பகுதிகளில் படிப்படியாக நிறைவேற்றி முடிவுக்குக் கொண்டுவருகிறார் என்பதை இரண்டு கட்டங்களாக வேதம் விளக்குகிறது. இதில் முதலாவதை நாம் பழைய ஏற்பாட்டில் வாசிக்கிறோம். இரண்டாவதைப் புதிய ஏற்பாட்டில் வாசிக்கிறோம். இந்த இரண்டையும் இணைக்கிறவராக மீட்பராகிய இயேசு இருக்கிறார். பழைய ஏற்பாடு வந்து, வாழ்ந்து மரிக்கப்போகின்ற கிறிஸ்துவையும், புதிய ஏற்பாடு மண்ணில் பிறந்து வாழ்ந்து மரித்து உயிர்த்தெழுந்த கிறிஸ்து நிறைவேற்றிய மீட்பையும் விளக்குகின்றது.
மீட்பின் உடன்படிக்கை (Covenant of Redemption)
கர்த்தரின் மீட்பின் செயல் கிறிஸ்துவை மையமாகக் கொண்டது. உலகத்தோற்றத்துக்கு முன் பிதாவும், குமாரனும், பரிசுத்த ஆவியானவரும் இணைந்து தீர்மானித்த திட்டமே மீட்பு. பிதா தான் மனிதகுலத்தில் தெரிந்துகொண்ட மக்களைத் தன்னுடைய ஒரே மகனான இயேசு கிறிஸ்துவின் பரிகாரப்பலியின் மூலம் பாவத்தில் இருந்து விடுதலை செய்ய எடுத்த தீர்மானமே மீட்பு. அதைக் கிறிஸ்து தன் வாழ்க்கையின் மூலம் மீட்பை இந்த உலகில் நிறைவேற்றி, பரிசுத்த ஆவியானவர் மூலம் தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் மீட்பின் பலன்களைத் தங்கள் வாழ்க்கையில் அடையும்படிச் செய்கிறார். படைப்பிற்கு முன்பே தீர்மானிக்கப்பட்ட இந்த நித்திய திட்டம் (Eternal plan) நடைமுறையில் எவ்வாறு உலகத்தில் செயல்படுத்தப்பட்டது என்பதை வேதவரலாறு விளக்குகிறது. இதை சங் 2; ஏசாயா 53:10-12; எபே 1:13-14; அத்தோடு யோவானின் சுவிசேஷ நூல் முழுவதும் வாசிக்கலாம். இத்தகைய மீட்பின் திட்டத்தின் வரலாற்று விளக்கமே வேதம். உலகத் தோற்றத்துக்கு முன் திரித்துவ தேவனால் ஏற்படுத்தப்பட்ட இந்த மீட்பின் திட்டத்தை இறையியல்பூர்வமாக மீட்பின் உடன்படிக்கை (Covenant of Redemption) என்றும் அழைப்பார்கள்.
வேதமும், கர்த்தரின் உடன்படிக்கைகளும்
கர்த்தர் மீட்பை கிறிஸ்து மூலமாக வரலாற்றில் நிறைவேற்றுவதற்காக மக்களோடு தொடர்புகொண்டு, உறவாட ஏற்படுத்திய வழிமுறையே உடன்படிக்கை (Covenant). வரலாற்றின் வெவ்வேறு காலப்பகுதிகளில் கர்த்தர் மக்களோடு ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டார். நாம் கர்த்தரை ‘உடன்படிக்கையின் தேவன்’ என்று அழைப்பதற்கு அவர் ஏற்படுத்தியிருக்கும் இந்த உடன்படிக்கைகளே காரணம். உடன்படிக்கை என்ற பதம் பழைய ஏற்பாட்டில் Berith (பெரித்) என்றும், புதிய ஏற்பாட்டில் Diatheke (டியாதேக்கே) என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உடன்படிக்கை (Covenant) என்பது சாதாரணமாக இரண்டுபேர் ஒரு விஷயத்தைப் பற்றிய உடன்பாட்டுக்கு வருவதைக் (agreement) குறிக்கும். அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட அதில் சம்பந்தப்பட்டுள்ள இருவரும் தாங்கள் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உடன்படவேண்டும். திருமணம் இந்தவிதத்தில் ஓர் உடன்படிக்கை. ஆனால், வேதம் அதற்கு ஒருபடி மேலே போய் இதை விளக்குகிறது. கர்த்தரின் உடன்படிக்கையைப் பொறுத்தவரையில் அதை நிறைவேற்றுவதில் கர்த்தரே இறையாண்மைகொண்டவராக இருக்கிறார். கர்த்தரின் உடன்படிக்கைகள் தெய்வீக உடன்படிக்கைகள். கர்த்தரே உடன்படிக்கைக்குரிய சகல விதிகளையும், நிபந்தனைகளையும் ஏற்படுத்துகிறவராகவும் இருக்கிறார். கர்த்தர் யாரோடு இந்த உடன்படிக்கையை ஏற்படுத்துகிறாரோ அவர்கள் இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து அதன் பலன்களை அனுபவிக்கவேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் உடன்படிக்கையை மீறினால் அதற்குரிய தண்டனையை அனுபவிக்கவேண்டும். உடன்படிக்கையின் மக்கள் இந்த விஷயத்தில் கர்த்தரிடம் எந்த நிபந்தனையையும் விதிக்க முடியாது. உடன்படிக்கையின் நிபந்தனைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம்; ஆனால், அவைபற்றி கர்த்தரோடு தர்க்கம் செய்யமுடியாது. இந்தவிதத்தில் கர்த்தரின் உடன்படிக்கை சாதாரண மனித உடன்படிக்கைகளைவிட மாறுபட்டது. இதை உணர்த்துவதற்காகத்தான் பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பைச் (Septuagint) செய்தவர்கள் சாதாரணமான ஒரு உடன்படிக்கையை விளக்கப்பயன்படுத்துகிற syntheke என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல், அதிகம் பயன்படுத்தப்படாத diatheke என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதற்குக் காரணம் உடன்படிக்கையில் இரு தரப்பினர் சம்பந்தப்பட்டிருந்தபோதும், அதன் நிபந்தனைகள், வாக்குறுதிகள் அனைத்தும் ஒரு தரப்பால் மட்டுமே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுவதற்காகத்தான். உடன்படிக்கை என்பதன் சுருக்க விளக்கம், ‘உறுதிமொழியால் கட்டப்பட்ட வாக்குறுதி’ (Oath bound promise) எனலாம். காலத்துக்குக் காலம் இந்த உடன்படிக்கையை ஏற்படுத்தியே கர்த்தர் தன்னை மனிதர்களுக்கு வெளிப்படுத்தி தன்னுடைய சித்தத்தின்படி மனிதர்கள் வாழ்வதற்கு வழியேற்படுத்தியிருக்கிறார்.
வரலாற்றின் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் தன் சித்தப்படி கர்த்தர் ஏற்படுத்திய இந்த உடன்படிக்கைகள் அவருடைய மீட்பின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக உண்டாக்கப்பட்டவை. அதாவது, கர்த்தரின் மீட்பின் திட்டமாகிய நித்திய உடன்படிக்கைக்கும் இந்த உடன்படிக்கைகளுக்கும் பிரிக்கமுடியாத தொடர்பு காணப்படுகின்றது. நித்திய உடன்படிக்கையான மீட்பின் உடன்படிக்கை திரித்துவ அங்கத்தவர்களால் மட்டுமே ஏற்படுத்தப்பட்டபோதும், அதன் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே வரலாற்றில் கர்த்தரால் குறிப்பிட்ட மனிதர்களோடு உடன்படிக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த வரலாற்று உடன்படிக்கைகள் மக்களுக்கு கர்த்தரை வெளிப்படுத்தியதோடு, கர்த்தரின் வார்த்தையின்படியும், அவருடைய நிபந்தனைகளின்படியும் வாழ்ந்து, அவரளிக்கும் ஆசீர்வாதத்தை அடையத் துணைசெய்தன. எல்லா உடன்படிக்கைகளிலும் காணப்பட்ட பொதுவான கர்த்தரின் வாக்குறுதி, ‘நான் அவர்களுடைய தேவனாக இருப்பேன், அவர்கள் என் மக்களாக இருப்பார்கள்’ என்பதுதான். (எரேமியா 31:33; 2 கொரிந்தியர் 6:16). கர்த்தரின் உடன்படிக்கைகளின் மூலமே கர்த்தரின் சித்தத்தின் வெளிப்படுத்தல் (Revelation of God’s will) படிப்படியாக வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற உண்மையையும் உணரவேண்டும்.
கர்த்தர் ஏற்படுத்திய வரலாற்று உடன்படிக்கைகள் அனைத்தும் ஒருங்கிணைந்தவையாகவும், ஒன்று இன்னொன்றை நோக்கிப்போவதாகவும், ஒன்றில் இருந்து அடுத்து வருவது புறப்படுவதாகவும், ஒவ்வொன்றும் ஒரு சில புதிய அம்சங்களைத் தன்னில் கொண்டவையாகவும் இருந்து, இறுதியில் புதிய ஏற்பாட்டு வரலாற்றில் மீட்பின் திட்டம் நிறைவேறுவதில் போய் முழுமையடைகின்றன. இந்தவிதத்தில் வேதத்தில் கர்த்தரின் மீட்பின் வரலாற்றை நாம் அவர் ஏற்படுத்தியிருக்கும் உடன்படிக்கைகளின் அடிப்படையிலேயே விளங்கிக்கொள்ள முடிகிறது. இன்னொருவிதத்தில் சொல்லப்போனால் முழுவேதத்தையும் நாம் தூண்கள்போல நிற்கும் இந்த உடன்படிக்கைகளின் அடிப்படையிலேயே வாசித்து விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம். இவற்றின் அடிப்படையில் நாம் வேதத்தை வாசிக்காவிட்டால் நிச்சயமாக வேதத்தைத் தவறாக விளங்கிக்கொள்ளுவதைத் தவிர நமக்கு வேறுவழியில்லை. இதைப்பற்றிப் 19ம் நூற்றாண்டின் பெரும் பிரசங்கியான சார்ள்ஸ் ஸ்பர்ஜன் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள்,
‘வேதம் போதிக்கும் இறையியலின் ஆணிவேராக இருப்பது கர்த்தரின் உடன்படிக்கை இறையியல் . . . வேதத்தைப்பற்றிய போதனைகளில் பெருந்தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கும் அத்தனைபேரும், கர்த்தரின் உடன்படிக்கைகளான நியாயப்பிரமாணம், கிருபை ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுவதில் அடிப்படைத் தவறுகளைச் செய்ததாலேயே அந்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன்’ என்றார்.
ஆகவே, கர்த்தரின் உடன்படிக்கைகள் நமக்கு கிறிஸ்துவை அடித்தளமாகக்கொண்ட கர்த்தரின் மீட்பின் வரலாற்று நிறைவேற்றத்தைத் தெளிவாக விளக்குகின்றன. 19ம் நூற்றாண்டுக்கு முன் கிறிஸ்தவர்கள் வேதம் விளக்கும் கர்த்தரின் இந்த உடன்படிக்கைகளின் அடிப்படையிலேயே மீட்பின் வரலாற்றை வேதத்தில் வாசித்து விளங்கிக்கொண்டிருக்கிறார்கள். 19ம் நூற்றாண்டுக்கு முன் வரலாற்றில் காலசகாப்தக் கோட்பாடுபற்றி எவருமே கேள்விப்பட்டிருக்கவில்லை. அதற்குக் காரணம் அந்நூற்றாண்டிலேயே அது ஜே. என். டார்பியின் மூலம் செயற்கையாக உருவானது.
வேதத்தில் உடன்படிக்கைகள்
கர்த்தர் மனிதனுக்குத் தன்னை வெளிப்படுத்தும்விதமாக ஒன்றுக்கு மேற்பட்ட உடன்படிக்கைகளை ஏற்படுத்தியதாக வேதம் விளக்குகிறது. இந்த ஆக்கத்தில் மட்டும் அவற்றைப்பற்றிய முழுமையான விளக்கத்தைத் தருவது மிகக்கடினம். உடன்படிக்கை இறையியலைப்பற்றிய ஒரு விளக்கமான நூலை எழுதத் தீர்மானித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இப்போதைக்கு சுருக்கமாக கர்த்தரின் வெவ்வேறு உடன்படிக்கைகளைப்பற்றி இந்த ஆக்கத்தில் விளக்கிவிடுகிறேன். கர்த்தரின் உடன்படிக்கை பற்றிய போதனையை 17ம் நூற்றாண்டில் உருவான சீர்திருத்த விசுவாச அறிக்கையான 1689ன் 7ம் அதிகாரத்தில் வாசிக்கலாம்.
ஏற்கனவே தன்னுடைய மக்களை கிறிஸ்து மூலம் பாவத்தில் இருந்து இரட்சிக்க ஒரு திட்டத்தை திரித்துவ அங்கத்தவர்கள் நித்தியத்தில் தீர்மானித்து ஒரு மீட்பின் உடன்படிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று கவனித்திருக்கிறோம். அந்த உடன்படிக்கையை வரலாற்றில் நிறைவேற்றுவதற்காக கர்த்தர் இரண்டு முக்கிய உடன்படிக்கைகளை ஏற்படுத்தினார்.
- கிரியைகளின் உடன்படிக்கை.
- கிருபையின் உடன்படிக்கை.
மீட்பின் நிறைவேற்றத்திற்காக இந்த இரண்டு உடன்படிக்கைகளைத் தவிர வேறு சில உடன்படிக்கைகளும் பழைய ஏற்பாட்டுக்காலத்தில் வரலாற்றில் மனிதர்களோடு (நோவா, ஆபிரகாம், மோசே, தாவீது) ஏற்படுத்தப்பட்டன. மேற்குறிப்பிட்ட இந்த இரண்டு உடன்படிக்கைகளும் மிக முக்கியமானவையாகவும், ஏனைய உடன்படிக்கைகளோடு தொடர்புடையவையாயும் அமைந்திருக்கின்றன.
கிரியைகளின் உடன்படிக்கை (The Covenant of Works)
ஏற்கனவே உலகத்தோற்றத்துக்கு முன்பாக திரித்துவ அங்கத்தவர்கள் தமக்கிடையில் ஏற்படுத்திய மீட்பின் உடன்படிக்கையைப்பற்றி விளக்கியிருக்கிறேன். அந்த உடன்படிக்கையை உலகத்தில் கிறிஸ்து மூலமாக நிறைவேற்ற ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைகளில் முதலாவது, கிரியைகளின் உடன்படிக்கை. இந்த உடன்படிக்கையைக் கர்த்தர் ஆதாமோடு ஏற்படுத்தினார். இதை ஆதியாகமம் 2:16-17ல் வாசிக்கலாம். சிலர் இந்தப் பகுதியில் உடன்படிக்கை என்ற பதம் பயன்படுத்தப்பட்டிராததால் இதை உடன்படிக்கையாகக் கருதமுடியாது என்கிறார்கள். அத்தகைய வாதம் தவறு. ஏனெனில், அந்தப் பதம் பயன்படுத்தப்பட்டிராதிருந்தாலும், அதற்கான கருத்துவடிவம் (concept) அந்தப் பகுதியில் காணப்படுகிறதா? என்றே கவனிக்கவேண்டும். எந்த உடன்படிக்கையையும் அடையாளப்படுத்தும் அதிமுக்கியமான அம்சங்களான, உடன்படிக்கையின் அங்கத்தவர்கள், உடன்படிக்கையின் சட்டரீதியான கட்டுப்படுத்துகின்ற நிபந்தனைகள், கீழ்ப்படிவிற்கான ஆசீர்வாதம், கீழ்ப்படியாமைக்கான தண்டனை ஆகிய அனைத்தும் இந்தப் பகுதியில் தெளிவாகக் காணப்படுவதாலேயே இறையியல் வல்லுனர்கள் இதை ஓர் ‘உடன்படிக்கை’ என்று அழைக்கிறார்கள். அத்தோடு ஓசியா 6:7ல், இஸ்ரவேலின் பாவங்களைக் குறித்து சுட்டும் தீர்க்கதரிசி, ‘அவர்களோ ஆதாமைப்போல உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாய் துரோகம் பண்ணினார்கள்’ என்று கர்த்தர் சொன்னதாகச் சொல்கிறார். இதிலிருந்து ஏதேனில் ஆதாமோடு செய்யப்பட்டிருந்தது உடன்படிக்கை என்பதை இந்த வசனம் விளக்குகிறது. ஆதாம் ஆண்டவரோடு கொண்டிருந்த உறவு உடன்படிக்கையின் அடிப்படையிலானது. அத்தோடு, இந்த உடன்படிக்கை நிபந்தனையின் அடிப்படையிலான உடன்படிக்கையாக இருப்பதால் அதற்கு ‘கிரியைகளின் உடன்படிக்கை’ என்று பெயர் கொடுக்கப்பட்டது. ஆதாம், கர்த்தரின் நிபந்தனையை நிறைவேற்றியிருந்தால் மட்டுமே அவனுக்கு நித்திய வாழ்வு கிடைத்திருக்கும். அந்தவிதத்தில் ஆதாம் அந்தக் கிரியையை முழுமையாக நிறைவேற்ற வேண்டியிருந்தது.
ஆதாமிய, கிரியைகளின் உடன்படிக்கை நித்தியத்துக்குமான உடன்படிக்கை அல்ல; அது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமான சோதனையின் அடிப்படையிலான உடன்படிக்கை (probationary). அதாவது, ஆதாம் அந்தக் குறுகிய காலப்பகுதியில் கர்த்தரின் கட்டளையை முழுமையாகப் பின்பற்றினால் நித்திய வாழ்வைத் தருவதாக ஆண்டவர் வாக்குறுதியளித்திருந்தார். ஆதாம் அதற்குக் கீழ்ப்படியாமல் உடன்படிக்கையை மீறியதால் அந்த உடன்படிக்கை முறிந்தது; அவனுக்கு நித்திய வாழ்வும் கிடைக்காமல் போயிற்று. அந்தக் குறிப்பிட்ட காலப்பகுதி எந்தளவுள்ளது என்ற விபரத்தைக் கர்த்தர் நமக்குத் தரவில்லை. அது குறிப்பிட்ட காலம் மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கர்த்தரின் இறையாண்மையின்படி ஆதாம் நித்தியத்துக்கும் ஜீவவாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியாது. அது கர்த்தரின் திட்டத்தில் இருக்கவில்லை. இந்தக் குறிப்பிட்ட காலப்பகுதியில் அவன் வெற்றிகரமாக கட்டளைகளைப் பின்பற்றி நிறைவேற்றியிருந்தால் மட்டுமே ஜீவவாழ்க்கை கிடைத்திருக்கும்; அதில் ஆதாம் தவறிவிட்டான்.
ஆதாமும், ஏவாளும் தடைசெய்யப்பட்டிருந்த மரத்தின் கனியை உண்டு கிரியைகளின் உடன்படிக்கையை மீறியதால் அவர்களுடைய கீழ்ப்படிவுக்கு வாக்குறுதியாகக் கொடுக்கப்பட்டிருந்த நித்திய வாழ்க்கையை அடையமுடியாமல் ஏதேனில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்களுக்குத் தண்டனையும், சாபமும் கிடைத்தது. ஆதாமின் வீழ்ச்சியினால் கிரியைகளின் உடன்படிக்கை நிறைவேறாமல் போயிற்று. ஆதாமின் வீழ்ச்சியோடு முறிந்துபோன இந்த உடன்படிக்கை அத்தோடு அடியோடு இல்லாமல் போய்விடவில்லை. அவ்வாறு தவறாக எண்ணுகிறவர்கள் இருக்கிறார்கள். வீழ்ந்தது ஆதாமே தவிர, கிரியைகளின் உடன்படிக்கை அல்ல. ஆதாம் உடன்படிக்கையை மீறியதால் அந்த உடன்படிக்கை முறிந்தது. ஆதாமோடு வீழ்ச்சியுற்ற மனிதகுலமனைத்தும் இன்று இந்தக் கிரியைகளின் உடன்படிக்கையின் கீழ்தான் தொடருகின்றன. மனித குலம் கர்த்தரின் சித்தத்திற்கு ஆதாமைப்போலக் கீழ்ப்படிய முடியாவிட்டாலும், முறிந்த கிரியையின் உடன்படிக்கை அவர்களிடம் அத்தகைய கீழ்ப்படிவைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறது (ரோமர் 7:10; 10:5; கலாத்தியர் 3:12). இந்த உடன்படிக்கையின்படி வாழ்ந்து அதை நிறைவேற்ற அவர்களுக்குத் தடையாக இருப்பது ‘பாவம்.’ பாவத்தில் இருக்கும் மக்கள் கர்த்தரின் கட்டளைகளைப் பூரணமாக நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
கிரியைகளின் உடன்படிக்கை ஏதேனுக்கு வெளியில் கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. ஏனென்றால் கிரியையின் உடன்படிக்கையை அவர்களுக்காக நிறைவேற்றியிருக்கும் கிறிஸ்துவை அவர்கள் விசுவாசித்து இரட்சிப்படைந்திருக்கிறார்கள்; கிரியைகளின் உடன்படிக்கையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டிராத அனைவரும் அதன் கீழேயே தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். ஆதாமால் நிறைவேற்ற முடியாத இந்தக் கிரியைகளின் உடன்படிக்கையைப் பூரணமாக வரலாற்றில் நிறைவேற்றியே கிறிஸ்து இரட்சிப்பைத் தன் மக்களுக்குப் பெற்றுத்தந்தார். கிரியைகளின் உடன்படிக்கை பாவிகளுக்குக் கர்த்தரின் பூரண கட்டளைகளின் குணாதிசயத்தை சுட்டிக்காட்டி கிறிஸ்துவை நோக்கி வழிநடத்துகிறது.
இந்த உடன்படிக்கை வேறு பெயர்களிலும் அவசியத்தின் காரணமாக அழைக்கப்படுகிறது. இது ‘ஜீவனுக்கான உடன்படிக்கை’ என்றும் அழைக்கப்படுகிறது (Covenant of Life). பேராசிரியர் ஜோன் மரே இதை ‘ஆதாமிய நிர்வாகம்’ (Adamic Administration) என்று அழைத்தார். பாமர் ரொபட்சன் இதைப் ‘படைப்பின் உடன்படிக்கை’ (Covenant of Creation) என்று அழைத்தார். இவர்கள் இருவரும் ‘கிரியைகளின் உடன்படிக்கை’ என்ற வார்த்தைப் பிரயோகத்தைவிட இவை பொருத்தமானவை என்று கருதினார்கள். அந்த உடன்படிக்கையின் கருத்துவடிவடிவத்தை (concept) இவர்கள் இருவரும் நிராகரிக்கவில்லை; வார்த்தைப் பிரயோகத்தை மட்டுமே மாற்றி அழைத்தார்கள். அப்படிச் செய்வதில் தவறில்லை. இறையியலைப் பொறுத்தவரையில் எப்போதுமே ஒரு கருத்து வடிவத்தை விளக்குவற்குத் தகுந்த பதத்தை உருவாக்கிப் பயன்படுத்துவது வழக்கம். அத்தகைய பதங்கள் வேதத்தில் காணப்படாதபோதும் வேத போதனைகளைப் புரிந்துகொள்ளவும், விளக்கவும் அப்பதங்கள் இன்றியமையாதவையாகின்றன. அந்த வகையில்தான் ஒரே கர்த்தரில் மூன்று ஆள்தத்துவங்கள் இருக்கிறார்கள் என்ற வேதசத்தியத்தை விளக்க ‘திரித்துவம்’ என்ற பதம் வரலாற்றில் உருவானது. அதைத் திருச்சபையும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
கிருபையின் உடன்படிக்கை (The Covenant of Grace)
கர்த்தர் தன்னோடு ஏற்படுத்தியிருந்த கிரியைகளின் உடன்படிக்கையை ஆதாம் மீறியதால் ஆதாமோடு மனிதகுலமும் பாவத்தில் வீழ்ந்தது. தொடரும் கிரியைகளின் உடன்படிக்கைக்குக் கீழிருந்த மனுக்குலம் கர்த்தரின் கட்டளைகளைப் பூரணமாக நிறைவேற்றக்கூடிய ஆற்றல் இல்லாமலிருந்தது. அதனால், மீட்பின் உடன்படிக்கையின்படி, மீட்பு கிறிஸ்து மூலம் இந்த உலகத்தில் நிறைவேறவும், மனிதனுக்கும் கர்த்தருக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்தவும், பாவிகளுக்கு இரட்சிப்பளிக்கவும் கர்த்தர் இன்னுமொரு உடன்படிக்கையை ஏற்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த உடன்படிக்கையின் பெயர் கிருபையின் உடன்படிக்கை. இந்த உடன்படிக்கை கர்த்தரின் இறையாண்மையின்படி கிறிஸ்து மூலம் உண்டானது.
இந்தக் கிருபையின் உடன்படிக்கையை எங்கே காண்கிறோம்? அதை முதல் தடவையாக நாம் ஆதியாகமம் 3:15ல் கொடுக்கப்பட்ட கர்த்தரின் வாக்குறுதியில் அடையாளம் கண்டுகொள்கிறோம். ஆதியாகமம் 3:15ஐ சுவிசேஷ வாக்குறுதி என்று அழைப்பார்கள் (proto-evangelium). அதாவது, இதுவே வரலாற்றில் கர்த்தரளித்த முதலாவது சுவிசேஷ வாக்குறுதி.
உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
இது கர்த்தர் சாத்தானோடு பேசி அவனுக்களித்த தண்டனையின்போது சொல்லப்பட்ட வார்த்தைகள். இந்த வார்த்தைகளுக்குள் சுவிசேஷ செய்தி வெளிப்படையாகவே காணப்படுகிறது. கர்த்தர் இதில் ஸ்திரீ என்று குறிப்பிட்டது இயேசுவின் தாயை. வித்து என்று குறிப்பிட்டது இயேசு கிறிஸ்துவை. இதில் கர்த்தர், இயேசு சாத்தானின் தலையை நசுக்கப்போவதாகச் சொல்லுகிறார். அது இயேசு கிறிஸ்து தன்னுடைய வருகையின் மூலம் சாத்தானை முறியடித்து அழிக்கப்போவதைக் குறிக்கிறது. இயேசுவின் சிலுவை மரணத்தையே, ‘நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்’ என்பதன் மூலம் கர்த்தர் வெளிப்படுத்துகிறார். இயேசு கிறிஸ்து இந்த உலகுக்கு வந்து பாவிகளுக்கான இரட்சிப்பை நிறைவேற்றி சுவிசேஷத்தின் மூலம் அதை இலவசமாக வழங்கப்போவதை இந்த வார்த்தைகள் உணர்த்துகின்றன. இதுவே வேதத்தில் காணப்படும் முதலாவது சுவிசேஷ வாக்குறுதி. மேலே கவனித்த சுவிசேஷ வாக்குறுதிக்குள் உள்ளடக்கமாகக் (implicit) காணப்படுவதே கிருபையின் உடன்படிக்கை. அந்த உடன்படிக்கை இந்தச் சுவிசேஷ செய்தியின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது (Revealed).
இப்போது கிருபையின் உடன்படிக்கை என்றால் என்ன? என்பதை விளக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த உடன்படிக்கை, பிதாவினால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுடன் கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்டது. இது தனி மனிதனோடு ஏற்படுத்தப்பட்டதல்ல. கிறிஸ்துவால், பாவத்தில் இருந்து இரட்சிக்கப்படப்போகின்ற அவருடைய மக்களோடு ஏற்படுத்தப்பட்டது. இந்த உடன்படிக்கையில் கிறிஸ்து மீட்பராக இருக்கிறார் (எபிரெயர் 8:6; 9:15; 12:24). மீட்பராகிய கிறிஸ்து உடன்படிக்கையின் நிபந்தனைகளை (கிரியைகளின் உடன்படிக்கை) நிறைவேற்றி நம்மைக் கர்த்தரோடு ஒப்புரவாக்குகிறார். கிறிஸ்துவின்மூலம் பாவிகளுக்கு ஜீவனையும் இரட்சிப்பையும் விசுவாசத்தின் மூலம் இந்த உடன்படிக்கை வழங்குகிறது. இந்த உடன்படிக்கையில் ஒருவர் பங்குகொள்ள கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசம் கட்டாயமானதாக இருக்கிறது. இதனாலேயே இதனை கிருபையின் உடன்படிக்கை என்று அழைக்கிறார்கள். இந்த உடன்படிக்கையின் கிருபை தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு மட்டுமே உரித்தானது. அதனால் பழைய ஏற்பாட்டில் விசுவாசிகள் மட்டுமே கிருபையின் உடன்படிக்கையின் ‘கிருபையை’ விசுவாசத்தின் மூலம் அடைந்தார்கள்.
விசுவாசமும், இரட்சிப்பும் கிருபையின் மூலம் மட்டுமே கிடைக்கும் கிருபைகள். வாக்குத்தத்தமாக வெளிப்படுத்தப்பட்ட இந்தக் கிருபையின் உடன்படிக்கைக்கு ஆதாரம் நித்தியத்தில் திரித்துவ தேவனால் ஏற்படுத்தப்பட்ட ‘மீட்பின் உடன்படிக்கை’ என்பதை மறந்துவிடக்கூடாது. உடன்படிக்கை ஒன்றாக இருப்பதால், இந்த இரண்டு உடன்படிக்கைகளுக்கும் இடையில் பிரிக்கமுடியாத பெருந்தொடர்பிருக்கிறது. மீட்பின் உடன்படிக்கையை உலக வரலாற்றில் நடைமுறையில் நிறைவேற்றுவதே இந்தக் கிருபையின் உடன்படிக்கை. இந்த உடன்படிக்கை மனித வரலாற்றில், பழைய ஏற்பாட்டில் சுவிசேஷத்தின் மூலம் படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டு இஸ்ரவேலருக்கு அறிவிக்கப்பட்டது. இயேசுவின் வருகையின் காலத்தில் அவரால் இது முழுமையாக ஏற்படுத்தப்பட்டது.
சில கிறிஸ்தவ பிரிவினர், இந்தக் கிருபையின் உடன்படிக்கை ஆதி. 3:15ல் ‘ஏற்படுத்தப்பட்டது’ (established) என்று விளக்குகிறார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம். ஆதியாகமம் 3:15ல் தரப்பட்ட சுவிசேஷ வாக்குறுதியில் இது உள்ளடக்கமாக ‘வெளிப்படுத்தப்பட்டது’ (revealed) என்று கூறுவதே சரியானது. ‘ஏற்படுத்தப்பட்டது’ என்பதற்கும் ‘வெளிப்படுத்தப்பட்டது’ என்பதற்கும் இடையில் பெரும் வேறுபாடு இருக்கிறது. ‘ஏற்படுத்தப்பட்டது’ என்றால் ஒன்று முழுமையாக அமைக்கப்பட்டது என்று அர்த்தம். கட்டடம் கட்டப்பட்டது என்றால் அந்தக் கட்டடம் பூரணமாகக் கட்டி முடிக்கப்பட்டது என்று அர்த்தம். அந்தமுறையில் கிருபையின் உடன்படிக்கை ஆதி. 3:15ல் ‘அமைக்கப்படவில்லை.’ அதைக் கர்த்தர் வெளிப்படுத்த மட்டுமே செய்தார். இன்னும் துல்லியமாகச் சொல்லப்போனால், ஆதியாகமம் 3:15ல் காணப்படும் சுவிசேஷ வாக்குறுதியில் அடங்கிக் காணப்படும் கிருபையின் உடன்படிக்கையின் ‘கிருபை’ சுவிசேஷத்தின் மூலமாகப் பழைய ஏற்பாட்டுக் காலத்து மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அது ஆதியாகமம் 3:15ல் ‘அமைக்கப்படவில்லை’ என்று சொல்லுவதற்குக் காரணம், கிருபையின் உடன்படிக்கை ‘அமைக்கப்படுவதற்கு’ இயேசுவின் முதலாம் வருகை வரலாற்றில் அவசியமாக இருந்தது. இயேசு கிறிஸ்துவிலேயே கிருபையின் உடன்படிக்கை முழுமையாக புதிய உடன்படிக்கையில் ‘அமைக்கப்பட்டது.’ அது புதிய உடன்படிக்கையில் ‘அமைக்கப்படும்வரை’ பழைய உடன்படிக்கையில் சுவிசேஷத்தின் மூலம் பகுதி பகுதியாக ‘வெளிப்படுத்தப்பட்டது.’
சுவிசேஷம் எப்படி ஆதியாகமம் 3:15 அறிவிக்கப்பட்டு படிப்படியாக பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வெளிப்படுத்தப்பட்டு புதிய உடன்படிக்கையில் முழுமை பெறுகிறதோ, அதேபோல் கிருபையின் உடன்படிக்கை படிப்படியாக சுவிசேஷத்தில் வெளிப்படுத்தப்பட்டு இறுதியில் புதிய உடன்படிக்கையில் முழுமையாக நிறைவேற்றத்தை அடைகிறது. இதில் குழப்பத்திற்கு இடமில்லை. ஏனென்றால் பழைய ஏற்பாட்டுக்காலத்தில் கர்த்தரின் வெளிப்படுத்தல் பகுதி பகுதியாகவே வெளிப்படுத்தப்பட்டு புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து மூலம் முழுமை பெற்றது (எபிரெ 3:1-3). பழைய ஏற்பாட்டு மக்களுக்கு சுவிசேஷம் சடங்குகள், தீர்க்கதரிசனங்கள், பலிகள் மற்றும் அடையாளங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தபோதும், அது புதிய ஏற்பாட்டிலேயே கிறிஸ்துவின் சிலுவைப்பலியின் மூலம் முழுமையாக நிறைவேறியதோடு தெள்ளத்தெளிவாகவும் வெளிப்படுத்தப்பட்டது. அதுபோலவே கிருபையின் உடன்படிக்கையும் சுவிசேஷத்தின் மூலம் பழைய ஏற்பாட்டில் படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டு கிறிஸ்துவின் வருகையோடு புதிய உடன்படிக்கையில் முழுமையாக ‘ஏற்படுத்தப்பட்டது’ (established). இன்னொருவிதத்தில் சொல்லப்போனால், கிறிஸ்து ஏற்படுத்திய புதிய உடன்படிக்கையே கிருபையின் உடன்படிக்கை (எரேமியா 31:31-34). இறையியல்பூர்வமாக இந்த உடன்படிக்கை பற்றிய விளக்கத்தை அளிக்கும்போது அதன் கருத்துருவை விளக்குவதற்கு எப்போதும் முறையான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துவது அவசியம். 1689 விசுவாச அறிக்கையின் 7ம் அதிகாரத்தின் 3ம் பத்தி கிருபையின் உடன்படிக்கை படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டதை விளக்குகிறது.
இதுவரை நாம் கவனித்துள்ள, கர்த்தரின் மீட்பின் உடன்படிக்கையை வரலாற்றில் நிறைவேற்றும் இரு பெரும் வரலாற்று உடன்படிக்கைகளான கிரியைகளின் உடன்படிக்கை, கிருபையின் உடன்படிக்கை ஆகியவை பற்றிய இறையியல் விளக்கங்களே நாம் வேதத்தை மீட்பின் வரலாற்றின் அடிப்படையில் சரியாகப் புரிந்துகொள்ளத் துணைசெய்கின்றன. இந்த உடன்படிக்கைகளை நிராகரிப்பதோ அல்லது தவறாக விளக்குவதோ மீட்பின் வரலாற்றையே மாற்றி அமைப்பதில் முடிந்து, பெரும் இறையியல் குழப்பங்களை உருவாக்கும். காலசகாப்தக் கோட்பாட்டுக்கு மாற்று மருந்தாக இவை அமைந்திருக்கின்றன. இந்தப் போதனைகளே வேத இறையியலில் இரட்சிப்பியல், திருச்சபையியல் மற்றும் இறுதிக்காலவியல் ஆகியவற்றை நாம் வேதபூர்வமாக சரிவரப் புரிந்துகொள்ள உதவுகின்றன. ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட ஓர் அறிஞரின் வார்த்தைகளை மறுபடியும் நினைவுபடுத்திக்கொள்ளுவோம், ‘நாம் பின்பற்றுகிற வேதவிளக்க விதிமுறைகள் சரியானவையாக இருந்தால் வேதத்தில் எந்த இறையியலையும் சரியாகப் புரிந்துகொள்ளலாம்.’ அத்தகைய சரியான வேதவிளக்க விதிமுறை, கர்த்தரின் உடன்படிக்கைகளின் அடிப்படையில் வேதத்தை ஆராய்ந்து படிப்பது.
Thank you pastor,
மிகவும் பயனுள்ள ஆக்கம். ‘காலசகாப்தக் கோட்பாட்டினால்’ ஏற்கனவே ஏற்பட்டிருந்த பாதிப்புகள் மற்றும் கர்த்தரின் உடன்படிக்கை குறித்த குறைவான அறிவு ஆகியவை உடன்படிக்கை இறையியல் குறித்து முறையாக அறிந்து கொள்ளும் தேடலை உண்டாக்கி இருந்தது. அதற்குத் தீனி போடும் வகையில் இந்த ஆக்கம் அமைந்துள்ளது. காலசகாப்தக் கோட்பாட்டில் காணப்படும் இறையியல் குளறுபடிகள் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது.
உடன்படிக்கை இறையியல் குறித்த ஒரு முழுமையான பார்வையை சுருக்கமாக, ஆனால் தெளிவாக எழுதியுள்ளீர்கள்.
காலசகாப்த கோட்பாட்டு நம்பிக்கை கொண்ட தோழி ஒருத்தி, ஒரு உரையாடலின் போது ‘உடன்படிக்கை இறையியல் என்பது சுத்த முட்டாள்தனமான போதனை; ஏனெனில் இரட்சிப்புக்கும் பழைய ஏற்பாட்டு உடன்படிக்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை அதற்கான அவசியமும் இல்லை’ என்பதாக கூறினாள். அன்று அதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை, இந்த ஆக்கம் மூலம் அதற்கான பதிலை பெற்றுக் கொள்ள முடிந்தது. இன்று நாம் அனுபவிக்கும் கிருபையின் உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை உணர்ந்து ஆனந்தம் அடையச் செய்தது. அத்தோடு, இந்த ஆக்கம் கர்த்தரின் உடன்படிக்கையின் அடிப்படையிலான வேத வாசிப்பில் ஒரு முன்னேற்றத்தை தந்துள்ளது.
உடன்படிக்கை இறையியல் அதன் முழுமையான விளக்கங்களுடன் ஒரு நூலாக வெளிப்படும் நாளை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.
LikeLike
உடன்படிக்கை இறையியல் ஆக்கம் பற்றிய உங்களுடைய கருத்துக்கு நன்றி! அதைப் புரிந்துகொள்கிற அளவுக்கு இறையியல் பார்வை உங்களுக்கு இருப்பது அறிந்து மகிழ்ச்சி. இறையியலில் இலகுவான ஒரு பாடமல்ல அது. நம்மினத்தில் அதுபற்றிய ஞானமுள்ளவர்கள் குறைவு. அந்தளவுக்கு காலசகாப்தக் கோட்பாடு அநேகரின் கண்களைக் குருடாக்கியிருக்கிறது. உடன்படிக்கை இறையியலை நூலாகப் படைக்கும் ஆவல் இருக்கிறது. முடிந்தவரை அந்த முயற்சியில் ஈடுபட எண்ணியிருக்கிறேன். – ஆர். பாலா
LikeLike