தலைப்பை வாசிக்கும்போதே என்னடா, ஜெயமோகனைப் பற்றி கிறிஸ்தவ இதழான நம்மிதழில் ஏன் எழுதவேண்டும், நமக்கும் அவருக்கு என்ன தொடர்பு என்ற சிந்தனையெல்லாம் உங்களுக்கு எழலாம். அவரைப்பற்றி எழுதுவதற்குக் காரணமிருக்கிறது. தமிழகத்தின் படைப்பாளியான ஜெயமோகனைப் பற்றி கடந்த பத்து வருடங்களுக்குள்தான் அறிந்துகொண்டேன். அதற்குப் பிறகு இரு தடவைகள் மட்டும் அவரோடு போனில் பேசியிருக்கிறேன். காலம் இதுவரை அவரைச் சந்தித்துப் பேசமுடியாமல் செய்திருக்கிறது. கிறிஸ்தவரல்லாத அவரைப்பற்றி, கிறிஸ்தவ இதழில் எழுத வேண்டிய அவசியம் என்ன, என்ற கேள்வி எழலாம்.
ஜெயமோகன் ஒரு இலக்கியவாதி, படைப்பாளி. தமிழகத்திலும் அதற்கு வெளியிலும் பேசப்படுகிற, முக்கிய எழுத்தாளர். அவர் பல துறைகளில் கால்பதித்து சாதனைகள் புரிந்திருக்கிறார். வெளிப்படையாகப் பேசி நடந்துகொள்ளுகிறவர். வாசகர்களுடன் பெருமை பாராட்டாமல் தொடர்புவைத்து சகஜமாகப் பழகும் மனிதநேயம் கொண்டவர். எழுதுவதோடு மட்டும் இருந்துவிடாமல் இளைஞர்களை ஊக்குவித்து வாசிக்கவும், எழுதவும், கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவும் தூண்டி வருகிறவர். அதற்காக வாசகர் சந்திப்புகளை அடிக்கடி நடத்தியும் வருகிறார். எனக்குத் தெரிந்து இதைச் செய்யும் முதல் எழுத்தாளர் ஜெயமோகன் என்றுதான் சொல்லுவேன். வாசிக்கிறவன் இல்லாவிட்டால் எழுதுவதில் பயனில்லையே. ஜெயகாந்தன் இதை தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் மட்டும் வேறுபாணியில் நடத்திவந்திருக்கிறார்; அவருடைய நோக்கம் வேறு ஜெயமோகனின் நோக்கம் வேறு. இதெல்லாம் ஜெயமோகனில் நான் காணும், எனக்குப் பிடித்திருக்கும் விஷயங்கள். ஜெயமோகன் ஒரு சிந்தனையாளர், அறிவுஜீவி. தமிழ், இலக்கியம், கலை, பண்பாடு, நூல்கள் மற்றும் பொதுவான விஷயங்கள் பற்றிய அவருடைய கருத்துக்களை அவருடைய தளத்தில் வாசித்து உள்ளுக்குள் பாராட்டியிருக்கிறேன்.
அவரைப்பற்றி நான் எழுதக் காரணம், கிறிஸ்தவத்தைப் பற்றிய அவருடைய புரிதல்தான். கிறிஸ்தவத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவித்து எழுதியிருக்கிற, எழுதுகிற படைப்பாளிகளில் இவரை மட்டுமே நான் அறிந்திருக்கிறேன். சாதாரணமாக கிறிஸ்தவத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் கிறிஸ்தவரல்லாதவர்களைப் பற்றி நான் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. பொதுவாக அவர்களுடைய கண்ணோட்டம் அறிவும், ஆய்வும் சார்ந்ததாக இல்லாமல் மத எதிர்ப்புத் தொனியில் மட்டுமே இருக்கும். அதற்கெல்லாம் கிறிஸ்தவர்கள் பதிலளித்துக்கொண்டிருப்பது வீண்வேலை. சுவிசேஷப் பணியில் செலவிட வேண்டிய நேரத்தை அதில் செலவிட்டு காலத்தை வீணாக்குவதில் பலனில்லை. ஜெயமோகன் இவர்களிலிருந்து வேறுபட்டவர். இதுவரை நான் வாசித்திருக்கும் அவருடைய கருத்துக்களிலிருந்து ஜெயமோகனுக்குள் கிறிஸ்துவைப்பற்றியதொரு ஆத்மீகத் தேடல் இருப்பதை நான் உணர்கிறேன். அதை அவரே தன் எழுத்துக்களில் பலதடவைகள் விளக்கியிருக்கிறார். அந்தத் தேடல் சுயஅறிவின், உணர்வின் அடிப்படையிலான ஒரு தேடல். அது அவர் தேடும் ஆன்மீகக் கிறிஸ்துவை அவர் இன்னும் அடையமுடியாமல் வைத்திருக்கிறது. இந்த ஆன்மீகக் கிறிஸ்து அவரே உருவாக்கிக்கொண்ட ஒரு கிறிஸ்து.
ஜெயமோகன் தான் பத்து வயதில் இருந்து கிறிஸ்தவ சூழலில் வளர்ந்ததாகச் சொல்லியிருக்கிறார். ரோமன் கத்தோலிக்க, தாராளவாத புரொட்டஸ்தாந்து போதகர்களின் தொடர்பும் அவருக்கு அதிகம் இருந்து வருகிறது. அவர்களோடு ஜெபத்திலும் ஈடுபட்டு வருவதாக அவர் சொல்லியிருக்கிறார். திருநெல்வேலி மாவட்டம், நாகர்கோவில் பகுதிக்காரரான அவருக்கு தமிழகத்து ‘பைபிள் பெல்ட்’ என்று அழைக்கப்படுகின்ற அப்பிரதேசம் கிறிஸ்தவத்தோடு தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறது. அத்தோடு ஒரு காலத்தில் ஆத்மீகத் தேடுதலில் ஈடுபட்டவராக அவர் இருந்திருப்பதும் கிறிஸ்துவை அறிந்துகொள்ளும் ஆர்வத்தை அவரில் ஏற்படுத்தியிருக்கலாம். அவருக்கு கிறிஸ்தவத்தைப் பற்றிய நன்மதிப்பு இருக்கிறது. கிறிஸ்தவத்தை அவர் வெறுக்கவில்லை; பொதுவாக இந்துக்கள் கிறிஸ்தவத்தைக் காணும் கண்ணோடத்தைவிட அவருடையது வித்தியாசமானது. இருந்தபோதும் அவர் கிறிஸ்தவத்தோடு தான் முரண்படுகிற விஷயங்களை வெளிப்படையாக எழுதத் தவறுவதும் இல்லை.
அநேக வருடங்களுக்கு முன் (2000) நான் சாது செல்லப்பா, தெய்வநாயகம் போன்றோரின் போலிப்போதனையான தோமஸ் கிறிஸ்தவத்தைப் பற்றி ‘இந்திய வேதங்களில் இயேசுவா’ என்ற நூலுக்கான ஆய்வில் ஈடுபட்டிருந்தபோதே முதன் முதல் ஜெயமோகனைப் பற்றி அறிய நேர்ந்தது. தன்னுடைய தளத்தில் அதுபற்றித் தன் வாசகர்களுடன் அவர் உரையாடலை நிகழ்த்தியிருந்தார்; அது பற்றிய என்னுடைய கருத்தையும் தன் தளத்தில் குறிப்பிட்டு சுட்டியிருந்தார். அதற்குப் பின், ராஜீவ் மல்கோத்திரா, அரவிந்தன் நீலகண்டன் கோஷ்டியின் ‘உடையும் இந்தியா’ நூலில் நான் அவதானித்த அவர்களுடைய சதித்திட்டத்திற்கெதிரான கிறிஸ்தவ கண்ணோட்ட விளக்கத்தைத் கொடுப்பதற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்தபோதும் (2013) அதுபற்றிய ஜெயமோகனின் கருத்துக்களை ஆராய நேர்ந்தது. அவற்றில் இருந்து ஜெயமோகன் கிறிஸ்தவத்தை அணுகும் முறைபற்றி அதிகம் அறிந்துகொண்டேன். பொதுவாக கிறிஸ்தவம் பற்றிய விமர்சனம் செய்பவர்களைவிட அவருடைய கருத்துக்கள் கொஞ்சம் வித்தியாசமாகவே தெரிந்தன.
பல தடவைகள் படைப்பாளி ஜெயமோகனின் கிறிஸ்தவம் பற்றிய கருத்துக்களை விளக்கி எழுத எண்ணியிருந்தேன்; இருந்தும் அதைத் தவிர்த்து வந்திருந்தேன். அவருக்கே நேரடியாக அதுபற்றி எழுதலாமா? என்றுகூட சிந்தித்திருக்கிறேன். கடந்த வருடம் அவர் தமிழக தொலைக்காட்சியில் இரண்டு மேடைப் பேச்சாளர்கள் நடத்தும் ‘பேசலாம் வாங்க’ நிகழ்ச்சியில் அளித்திருந்த ஒரு பேட்டியைக் கேட்க நேர்ந்தது. அந்தப் பேட்டியே இந்த ஆக்கத்தை எழுதவைத்தது.
அந்த நிகழ்ச்சியைக் கேட்ட பிறகு முன் அவர் எழுதி வெளியிட்டிருந்த ‘சிலுவையின் பெயரால்’ என்ற நூலைக் கின்டிலில் இறக்கி வாசித்தேன். அந்நூலில் அவருடைய கிறிஸ்தவம் பற்றிய விளக்கங்களும், அதுபற்றிய பலரின் கடிதங்களும், அதற்கான ஜெயமோகனின் பதில்களும் ஏற்கனவே அவருடைய வலைத்தளத்தில் பதியப்பட்டிருந்தவை. அவற்றின் தொகுப்பே இந்த நூல். கிறிஸ்தவம் பற்றிய அவருடைய சிந்தனைகளை அந்த நூலில் அவர் வெளியிட்டிருக்கிறார். அதிலிருக்கும் ஓர் ஆக்கமான, ‘விவிலியம், புதிய மொழியாக்கம்’ கத்தோலிக்க மதத்தின் பேராதரவுடன் 1995ல் வெளியிடப்பட்ட பொதுமொழிபெயர்ப்பைப் பற்றியது. ஜெயமோகன் அந்த மொழிபெயர்ப்பைப் பெரிதும் பாராட்டி. ‘சென்ற இருபது வருட காலத்தில் தமிழில் நிகழ்ந்த பிரமாண்டமான தமிழ்ச்சாதனைகளில் ஒன்று என்று இந்த மொழியாக்கத்தை ஐயமில்லாமல் சொல்லலாம்’ என்று எழுதியிருந்தார். அதிலுள்ள வெறும் தமிழ் நடையை வைத்து மட்டுமே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அதை ஒரு மெய்க் கிறிஸ்தவர் எழுதியிருந்தால் நான் மிகுந்த வேதனை அடைந்திருப்பேன். ஆனால் கிறிஸ்தவரல்லாத ஜெயமோகனுக்கு வேதமொழிபெயர்ப்பு எப்படியிருக்கவேண்டும் என்ற ஆவிக்குரிய அணுகுமுறையும், வேத மொழிகள் பற்றிய நுணுக்கங்களும் தெரியாதிருந்திருப்பதில் பெரிய ஆச்சரியமில்லை. அந்தப் பொதுமொழிபெயர்ப்பை விமர்சனம் செய்து திருமறைத்தீபத்தில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.
‘சிலுவையின் பெயரால்’ ஜெயமோகனுக்கு இயேசு கிறிஸ்துவின் மீதிருக்கும் அபிமானத்தையும் அவரைப்பற்றிய அவரது தேடலையும் விளக்குகிறது. நூலில் முழுக்க முழுக்க கத்தோலிக்க மதவாடை அடிக்கிறது. அதிலிருந்து ஜெயமோகனுக்கு அந்த மதத்தாரோடிருக்கும் தொடர்பைப் புரிந்துகொள்ள முடிகிறது. அடிப்படையிலேயே கிறிஸ்தவ வேதத்திற்குப் புறம்பான போதனைகளைக் கொண்டிருந்து தாராளவாதக் கண்ணோட்டத்தோடு மெய்க் கிறிஸ்தவத்தின் எந்த அடையாளமுமே இல்லாமல் நடமாடி வரும் கத்தோலிக்க மதத்தைப் பற்றிய முறையான புரிதல் ஜெயமோகனுக்கு அடியோடு இல்லாமல் இருந்திருப்பதிலும் ஆச்சரியமில்லை. நம்மினத்துக் கிறிஸ்தவர்களுக்கே அதுபற்றிய பொதுவான அறிவு இல்லாமலிருக்கும்போது, கிறிஸ்தவரல்லாத ஒருவர் கிறிஸ்தவத்தைப் பற்றிய வேதபூர்வமற்ற கருத்துக்களைக் கொண்டிருப்பதில் ஆச்சரியமெதுவுமில்லை.
தொலைக்காட்சியில் ‘பேசலாம் வாங்க’ நிகழ்ச்சிக்கு ஜெயமோகன் அளித்திருந்த பேட்டியில் கிறிஸ்தவத்தைப் பற்றி அவர் கொடுத்திருந்த விளக்கம் எனக்கு வருத்தத்தை அளித்தது. வேத இறையியல் மொழியில் சொல்லுவதானால், ஜெயமோகன் ‘மறுபிறப்படைந்த’ கிறிஸ்தவரல்ல. ஆனால், கத்தோலிக்கம் மற்றும் சி. எஸ். ஐ கிறிஸ்தவ சூழலில் வளர்ந்து கிறிஸ்தவத்தின் மீது மதிப்பு வைத்திருப்பவர் மட்டுமே. கிறிஸ்தவர்களுடனும், கிறிஸ்தவ போதகர்களுடனும் அவருக்கு நட்பிருந்து வருகிறது. அதை அவரே பேட்டியில் விளக்கியிருக்கிறார். இதெல்லாம் நல்ல விஷயங்கள். இருந்தும் கிறிஸ்தவத்தைப் பற்றிய அவருடைய புரிதல் சரியானதல்ல. அதை அவர் வாசித்த நூல்களில் இருந்தும் அவருடைய நண்பர்களிடமிருந்தும் பெற்றுக்கொண்டிருந்திருக்கலாம். இந்தளவுக்கு கிறிஸ்தவத்தின் மீது மதிப்பு வைத்திருந்து இயேசுவைத் தேடிக்கொண்டிருப்பதாகக் கூறும் ஒருவர் கிறிஸ்தவத்தையும், கிறிஸ்துவையும் சரிவரப் புரிந்துகொள்ளாமலிருப்பதும், தன்னுடைய சுயபுரிதலின் அடிப்படையில் மட்டும் கிறிஸ்தவத்தைப் பற்றிய உண்மைக்கு மாறான கருத்துக்களைப் பகிர்ந்து வருவதும் எனக்கு முறையானதாகப்படவில்லை. அதுவும் ஒரு முக்கிய எழுத்தாளர், ஆளுமை அதைச் செய்யும்போது அவருடைய வாசகர்கள் அதனால் கிறிஸ்தவத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள நேரிடுகிறது. கிறிஸ்தவரல்லாத ஒருவருக்கு கிறிஸ்தவத்தைப் புரிந்துகொள்ளுவது கொஞ்சம் கஷ்டமானதுதான். இருந்தாலும், கிறிஸ்தவம் பற்றிய பொதுவான, முறையான புறநிலை அறிவைப் பெற்றுக்கொள்ளுவது அத்தனை கடினமானதுமல்ல.
ஜெயமோகன் ஏனைய எழுத்தாளர்களைப் போலல்லாது கிறிஸ்தவத்தைப் பற்றி அதிகம் எழுதியிருக்கிறார். அத்தோடு கிறிஸ்தவராக இல்லாதிருந்தபோதும் அறிவார்ந்த ரீதியில் அதை அணுகியிருப்பதைக் கவனித்திருக்கிறேன். இதெல்லாம் நான் கிறிஸ்தவம் பற்றிய அவருடைய கருத்துக்களை ஆராய்ந்தெழுதத்தூண்டியதற்கு ஒரு காரணம். தன் பேட்டியில் ஜெயமோகன், கிறிஸ்துவை மூன்றுவிதமாகக் கணிப்பதாகச் சொன்னார். அப்படித்தான் மேலைநாடுகளில் இருப்பதாகச் சொன்னார். ஒன்று, ரோமன் கத்தோலிக்க கிறிஸ்து; இரண்டாவது, புரொட்டஸ்தாந்து கிறிஸ்து; மூன்றாவது, தல்ஸ்தாயிடம் அவர் கற்றுக்கொண்ட ஆத்மீகக் கிறிஸ்து. இந்தவிதமாகப் கிறிஸ்தவத்தைக் கிறிஸ்தவ வரலாற்று ஆசிரியர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ பிரித்து விளக்கி நான் ஒருபோதும் கேட்டதுமில்லை, வாசித்ததுமில்லை.
இந்த மூன்றுவிதக் கிறிஸ்துகளையும் பற்றி அவர் தன் நூலான, ‘சிலுவையின் பெயரில்’ என்பதில் இன்னொருவிதமாக விளக்கியிருப்பதைக் கவனியுங்கள், ‘இன்று நாமறியும் கிறிஸ்து ஒருவரல்ல. குறைந்தபட்சம் மூன்று கிறிஸ்துக்கள் இருக்கின்றனர். வரலாற்றுக் கிறிஸ்து யூதர்களின் வரலாற்று நூல்களில் இருந்து நமக்குத் தெரியவருபவர். ஆத்மீகக் கிறிஸ்து கிறிஸ்துவின் சொற்கள் வழியாக கடந்த இருபது நூற்றாண்டுகளில் மாபெரும் மதங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் திரட்டிக்கொண்ட ஓர் ஆளுமை. மதக் கிறிஸ்து கிறிஸ்தவ சபையாலும் மதவாதிகளாலும் முன்வைக்கப்படுபவர்’ என்கிறார் ஜெயமோகன்.
அவர் தொடர்ந்து, ‘இந்த மூன்று கிறிஸ்துக்களையும் பிரித்தறியும் ஒருவரே சமநிலை கொண்ட ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும். கிறிஸ்துவை உணரவும் முடியும். நான் கண்டுவரும் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை ஓர் இறைவடிவமாக மட்டுமே பார்ப்பவர்கள். லௌகீகமான தேவைகளைக் கோரினால் அளிக்கக்கூடிய கண்ணுக்குத் தெரியாத ஓர் இருப்பு மட்டும்தான் கிறிஸ்து அவர்களுக்கு’ என்கிறார். தன்னுடைய கிறிஸ்து ‘இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு மாபெரும் ஆன்மீக ஞானி’ எனும் ஜெயமோகன், ‘அந்தக் கிறிஸ்துவை தல்ஸ்தாய், தஸ்தயேவ்ஸ்கி (இரஷ்ய எழுத்தாளர்கள்) வழியாகவே என் ஆத்மாவில் கண்டு கொண்டேன்’ என்கிறார்.
தன் கண்களுக்கும் புலன்களுக்கும் நூல்கள் மூலமும், மதங்கள் மற்றும் திருச்சபைகள் மூலமும் தெரியும் அத்தனை அம்சங்களையும் ஆராய்ந்து சுயமாகத் தனக்குள்ளேயே, தன் பார்வைக்கும் சிந்தனைக்கும் சரியாகப்படுகின்ற ஒருவகைக் ‘கிறிஸ்துவை’ ஜெயமோகன் தனக்குள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அவரால் கிறிஸ்துவை ஒரு மாபெரும் ஞானியாக மட்டுந்தான் பார்க்க முடிகிறது. உண்மையில் இவருடைய கிறிஸ்து பற்றிய எண்ணங்கள் புதிதானவையல்ல. ஆதி சித்தர்கள் இந்த முறையில்தான் கடவுளைக் குறித்த எண்ணங்களைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சிலை வணக்கத்தை வெறுத்தார்கள். அதனால் சுயஞானத்தின் அடிப்படையில் கடவுளை வேறுவிதங்களில் உணரவும் விளக்கவும் முயன்றார்கள். ஜெயமோகனுக்கு இயேசு கிறிஸ்து மீது நன்மதிப்பு இருக்கிறது. அவருடைய ‘மாபெரும் ஞானியான’ அந்தக் கிறிஸ்துவை அவரால் இன்றைய கத்தோலிக்கம் உட்பட்ட திருச்சபை அமைப்புக்களோடும், பெந்தகொஸ்தே குழுக்களோடும் தொடர்புபடுத்திப் பார்க்க முடியாமல் இருக்கிறது. தமிழகத்திலும் அதற்குப் புறத்திலும் இவ்வமைப்புகளில் அவர் காணும் வேதத்துக்கு முரணான செயல்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முக்கியமாக பெந்தகொஸ்தே குழுக்களினதும், கிறிஸ்தவ அமைப்புகளினதும் வேத ஆதாரமற்ற சுவிசேஷ அறிவிப்பு முறைகளை அவர் நிராகரிக்கிறார். கிறிஸ்தவ அமைப்புகளின் நியாயமற்ற செயல்கள்தான் அவரை, ‘கிறிஸ்துவின் சொற்களில் இருந்து உருவான சபைகளுக்கு அவர் பொறுப்பானவரல்ல’ என்று எழுதவைத்திருக்கிறது. ஜெயமோகன் கிறிஸ்தவ அமைப்புகளைக் குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நான் நிராகரிக்கவில்லை; அவற்றில் நிச்சயம் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இதை நான் ‘உடையும் இந்தியா’ நூலுக்கு எதிராக எழுதிய மறுப்புக் கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்தேன் (‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ திருமறைத்தீபம், இதழ் 4, 2013).
ஜெயமோகன் பிறந்ததும் வளர்ந்ததும் இந்துவாகத்தான்; இருந்தும் பொதுவுடமைக் கொள்கைகளில் அவருக்குப் பற்றிருக்கிறது. இதெல்லாம் அவரை மதங்களைக் கடந்ததொரு ஆன்மீகக் குருவைத் தேடவைக்கிறது. அந்தளவில் இருந்து மட்டுமே அவர் இயேசுவை ‘ஆத்மீக இயேசுவாகக்’ கணிக்கிறார்.
ஜெயமோகனின் கிறிஸ்தவம் பற்றிய தவறான புரிதல்கள் பற்றிய நான்கு அம்சங்களை விளக்க விரும்புகிறேன்:
1. ஜெயமோகன் வேதக் கிறிஸ்துவைச் சரியாகப் புரிந்துகொள்ளாத நிலையிலிருக்கிறார். அதில் ஆச்சரியமில்லை. வேத இறையியலின்படி ஆவியானவரால் கண்கள் திறக்கப்படாதிருக்கும் நிலையிலுள்ள எவருக்கும் வேதம் விளக்குகின்ற வரலாற்றுக் கிறிஸ்துவைத் தெரிந்துகொள்ள முடியாமலிருப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை. சுயத்தில் கிறிஸ்துவைத் தேடுகிறவர்களால் ஒருபோதும் வேதகிறிஸ்துவை அறிந்துகொள்ளவோ, உணரவோ முடியாது. கிறிஸ்தவ வேதத்தைப் பொறுத்தவரையில் மனிதன் சுயத்தில் ஆத்மீக உணர்வடையும் நிலையை இழந்து நிற்கிறான். அதற்கு வேதம் விளக்கும் மூலபாவமே காரணம். பாவத்தினால் பாதிக்கப்பட்டு கடவுளோடு இருக்கக்கூடிய தொடர்பை ஆதாமில் இருந்து இழந்து நிற்கும் எவராலும் சுயத்தில், சுயத் தேடுதலின் மூலமாகவும், எந்தக் கிரியைகளின் மூலமாகவும் கிறிஸ்துவை அனுபவபூர்வமாக ஒருபோதும் உணர முடியாது. அதற்கு சுயம் இடம் கொடுப்பதில்லை. அத்தோடு சுயம் ஆத்மீக ஆற்றலைப் பாவத்தால் முற்றாக இழந்து நிற்கிறது. அறிவுஜீவியான ஜெயமோகன் இயேசுவை அறிந்துகொள்ள தன்னுடைய அறிவிலும், சிந்தனையிலுமே தங்கியிருக்கிறார். பவுல் அப்போஸ்தலன் அத்தேனேயில் அப்படிப்பட்டவர்களைச் சந்தித்தபோது அவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்திருக்கிறார்.
ஜெயமோகனின் சுயத்தேடலும், புரிதலும் கிறிஸ்துவை ஒரு ஞானி என்ற அளவில் பார்க்க மட்டுமே இடங்கொடுத்திருக்கிறது. இதுவே மகாத்மா காந்திக்கும் நேர்ந்த கதி. உண்மையில் ஜெயமோகன் குறிப்பிடும் ரஷ்ய எழுத்தாளர்களான தல்ஸ்தாய்க்கும், தஸ்தயேவ்ஸ்கிக்கும் இதுவே நிகழ்ந்திருக்கிறது. இதற்கு மேல் போய் அவர்களால் கிறிஸ்துவை அறியவோ, விசுவாசிக்கவோ முடியாமலிருந்திருப்பதில் ஆச்சரியமில்லை.
கிறிஸ்துவை உலகத்தில் நம் பார்வையில் படும் பாவங்களோடு தொடர்புபடுத்திப் பார்க்காமல் பரிசுத்தராக, புனிதராக ஜெயமோகன் பார்ப்பது பாராட்ட வேண்டியதொன்று. ஆனால், வேதம் விளக்கும் கடவுளான, திரித்துவ தேவர்களில் ஒருவரான, தேவகுமாரனும் மனுஷகுமாரனுமான இயேசு கிறிஸ்து வெறும் புனிதரோ, பரிசுத்தரோ மட்டும் அல்ல; அதற்கெல்லாம் மேலான இறையாண்மை கொண்ட படைத்தவரான கடவுளாக இருக்கின்றார். கிறிஸ்துவைத் தேடும் எவரும் வேதம் குறிப்பிடும் நாகமானையும், சமாரியப் பெண்ணையும், நிக்கொதேமுவையும்போல் மனத்தாழ்மையோடும், சுயத்தில் அவரை அறிந்துணரமுடியாது என்ற நிலைப்பாட்டோடும், கிறிஸ்துவே! நான் உம்மைத் தெரிந்துணரத் துடிக்கிறேன். நீர் எனக்கு வேண்டும். கிருபையால் உம்மை எனக்கு அறியச் செய்யும் என்று, தங்களுடைய பாவநிலையை உணர்ந்து கிறிஸ்துவின் பாதத்தில் அவரை முழுமையாக நம்பி விசுவாசித்து முழுச் சரணாகதி அடைந்தால் மட்டுமே அவரை ஆத்மீகரீதியில் அறிந்துணர முடியும். அத்தகைய ஆவிக்குரிய அறிதலை கிறிஸ்துவே விசுவாசத்தின் மூலம் அளிக்கிறவராயிருக்கிறார். இதெல்லாம் ஜெயமோகனுக்குத் தெரிந்திராமல் இருப்பதற்கு அவர் கிறிஸ்துவை அறிவதில் தன் சுயத்தில் மட்டும் தங்கியிருப்பதே காரணம். அத்தோடு இதை அவர், அவருக்குத் தெரிந்திருக்கும் எந்தப் புரொட்டஸ்தாந்து போதகரிடமும் இருந்து கேள்விப்படாமலிருந்திருப்பது பெரும் ஆச்சரியம். ஜெயமோகன் தன் தேடலைத் தொடர்ந்து தமிழில் இருக்கும் பரிசுத்த வேதத்தை மட்டும் ஒவ்வொரு நாளும் நம்பிக்கையோடு வாசித்து வந்தாரானால் கிறிஸ்துவின் கிருபையால் அவர் கிறிஸ்துவில் ஆத்மீக விடுதலையை அடைய முடியும். போதகர்கள் கைவிட்டாலும் வேதம் ஒருபோதும் ஒருவரைக் கைவிடாது. சத்தியம் விடுதலை தரும் என்கிறது கிறிஸ்தவ வேதம்.
2. திருச்சபைகள் பற்றிய ஜெயமோகனின் புரிதல் சரியானதல்ல. ரோமன் கத்தோலிக்க மதத்தை ஜெயமோகன் கிறிஸ்தவத்தின் ஒருபகுதியாகக் கணித்திருப்பதில் ஆச்சரியமில்லை. இதை இந்திய தேசத்தில் பொதுவாகவே கிறிஸ்தவர்கள் மத்தியிலும், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களிடமும் காணப்படும் ஒன்று. அதற்குக் காரணம் இந்தியாவில் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு இருக்கும் செல்வாக்கும், அந்த மதத்தின் பாதிப்பு அதிகமாக அநேக கிறிஸ்தவ பிரிவுகளிலும் காணப்படுவதுந்தான். கிறிஸ்தவரல்லாத இந்துக்கள்கூட, விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ, மூலைக்கு மூலை அன்னை மேரியின் சிலையும், கத்தோலிக்க ஆலயங்களும் அவர்கள் கண்படுமிடங்களிலெல்லாம் காணப்படுகின்றன. இதெல்லாம் பொதுவாகவே எல்லோரையும் கிறிஸ்தவத்தைக் கத்தோலிக்கப் பார்வையோடு அணுகவைக்கிறது. இந்தியாவில் கிறிஸ்தவ நூல்களில் பெரும்பாலானவை கத்தோலிக்க அணுகுமுறையிலேயே எழுதப்பட்டிருக்கின்றன. பத்திரிகைகளும், மீடியாக்களும் கத்தோலிக்க மதத்தைக் கிறிஸ்தவமாகவே கருதி செய்திவெளியிடுகின்றன.
ஆதியில் முதல் நூற்றாண்டில் ஆரம்பித்த கிறிஸ்தவ திருச்சபை பின்பு 3ம் நூற்றாண்டில் பலவிதமான போலிப்போதனைகளுக்கு முகங்கொடுத்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டிருந்தபோதும், அது சத்தியத்தைத் துறந்து படிப்படியாகப் போலிகளுக்கு தன்மத்தியில் இடங்கொடுத்து, அதன் காரணமாக தன்னுடைய ஆத்மீக வல்லமையை முற்றுமாக இழந்து திருச்சபை என்ற பெயரில், போலித்தனமான ஓர் உலகம் சார்ந்த நிறுவனமாக மாறியது. இந்த உலகில் அந்நிலையில் இருந்த போலி சபையே ரோமன் கத்தோலிக்கமாக உருமாறியிருக்கிறது. 7ம் நூற்றாண்டளவில் ரோமன் கத்தோலிக்கப் போதனைகள் முழுமையடைந்து நாட்டரசையே ஆட்டிப்படைக்கும் ஒரு நிறுவனமாக அதற்குப் பிறகு பலநூற்றாண்டுகளுக்கு மெய்க்கிறிஸ்தவத்தின் முதன்மை எதிரியாக உலகில் வலம் வந்தது.
16ம் நூற்றாண்டிலேயே அதன் ஆதிக்கம் ஆட்டம் காண ஆரம்பித்து இன்று அத்தகைய உலக வல்லமையைக் கொண்டிராத ஒரு மதமாக ரோமன் கத்தோலிக்கம் இருந்து வருகிறது. கிறிஸ்தவ சபைக்குள் புகுந்த போலித்தனம் பின்பு ரோமன் கத்தோலிக்கம் உருவாகக் காரணமாக இருந்ததென்பதை வைத்து, அந்த மதத்தை மெய்க்கிறிஸ்தவமாகக் கணித்து வருவது மிகவும் தவறான செயல். ரோமன் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவத்தோடு தொடர்பற்ற மதமாக நான் கணிப்பததற்கு முதன்மைக் காரணம், அந்த மதம் கிறிஸ்தவ வேதத்தின் அதிகாரத்தை அடியோடு ஏற்றுக்கொண்டு அதன் வழியில் போகாமல் இருப்பதுதான். மெய்க்கிறிஸ்தவத்தை வேறு பிரிவுகளில் இருந்து வேறுபடுத்துவதும் இந்த முதன்மைக் காரணிதான். இதைத்தவிர ரோமன் கத்தோலிக்கம் கிறிஸ்தவ வேதத்திற்கு விரோதமான அநேக வழிமுறைகளைத் தன்னில் கொண்டு தனிமதமாக இயங்கிவருகிறது. இத்தனைக் காரணங்களையும் பாரபட்சமில்லாமல் எழுதப்பட்டிருக்கும் ஒரு நல்ல ஆங்கில கிறிஸ்தவ வரலாற்று நூலில் இருந்து அறிந்துகொள்ள முடியும். Schaff எழுதிய The History of the Christian Church என்ற ஆறு வால்யூம்களே இதை அருமையாக விளக்கிவிடும். அத்தோடு நான் எழுதி வெளியிட்டுள்ள ‘கிறிஸ்தவ திருச்சபை வரலாறு’ முதலாம் பாகத்திலும் ரோமன் கத்தோலிக்க மதத்தின் முழு வரலாற்றையும், போதனைகளையும் வரலாற்று ரீதியில் விளக்கியிருக்கிறேன். இதற்கு மேல் கிறிஸ்தவ வேதத்தின் போதனைகளை ரோமன் கத்தோலிக்க மதப்போதனைகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தாலே போதும்; உண்மை தானாக வெளிப்படும்.
இறையியல் ரீதியில் கத்தோலிக்க மதம் குறிப்பிடும் இயேசு கிறிஸ்து கிறிஸ்தவ வேதத்தில் நாம் காணும் இயேசு கிறிஸ்துவல்ல. கத்தோலிக்க மதம், கிறிஸ்துவை இறையாண்மை கொண்ட தேவனின் ஒரே குமாரனாக, பாவிகளுக்கு இரட்சிப்பைப் பூரணமாக வழங்கக்கூடியவராகக் கணிப்பதில்லை. அந்த இரட்சிப்பை மனிதர்களுக்கு அளிப்பதில் தனக்கும் அது ஒரு பெரிய பங்கை எடுத்துக்கொள்கிறது. கர்த்தர் திருச்சபையை இரட்சிப்பின் செய்தியை அறிவிக்க நிறுவினாரே தவிர, இரட்சிப்பை அளிப்பதற்கு நிறுவவில்லை. அத்தோடு கத்தோலிக்க மதம், இயேசுவின் தாயாகிய மேரியைப் புனிதர்களில் ஒருவராகக் கணித்து அவரை வணங்குவதையும், கர்த்தரால் அற்புதமாக அளிக்கப்பட்ட வெளிப்படுத்தலான கிறிஸ்தவ வேதத்திற்கு அடியோடு புறம்பான மனித எழுத்துக்களான தள்ளுபடியாகமங்களையும் வேதத்திற்கு இணையானதாக, அதிகாரமுள்ளவையாகக் கருதுகிறது.
சாதாரண மனிதர்களைப் புனிதர்களாக்கி அவர்களைத் தெய்வீகம் கொண்டவர்களாகக் கணித்து உயரத்தில் வைத்து வணங்குகிறது கத்தோலிக்க மதம். போப்பைப் பேதுருவின் வழிவந்த தெய்வீக அப்போஸ்தலப் பதவியை வகிப்பவர் என்ற கிறிஸ்துவை நிந்திக்கும் போதனையையும் தனக்குள் அது தொடர்கிறது. அப்போஸ்தலனான பேதுரு திருச்சபையின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தபோதும் அவரில் எந்தத் தெய்வீகமும் காணப்படவில்லை. பேதுரு ஒரு சாதாரண மனிதன் மட்டுமே என்பதைக் கிறிஸ்தவ வேதம் தெளிவாக விளக்குகிறது. கத்தோலிக்க மதத்தை ஒரு மதமாக, கிறிஸ்தவ வேதத்தோடு தொடர்பில்லாத ஒரு சமயநிறுவனமாக நிச்சயம் நான் அங்கீகரிக்கிறேன். ஆனால், அதற்கு கிறிஸ்தவத்தோடு எந்தத் தொடர்பும் அடிப்படையில் இல்லை என்பதையும், அந்த மதத்தின் மூலம் ஒருவரும் கிறிஸ்துவில் ஆத்மீக இரட்சிப்பை அடைவதற்கு வழியில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல; கிறிஸ்தவ வேதமும், கிறிஸ்தவ வரலாறும் தெளிவாக விளக்குகின்ற அசைக்க முடியாத சத்தியம். அதனால் கத்தோலிக்க மதத்தை வேதபூர்வமான கிறிஸ்தவப் பிரிவாகவும், கத்தோலிக்கர்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைப்பதும் முரண்பாடான செயல்கள். இதனால்தான் 1800களில் திருநெல்வேலிப் பகுதியில் ஊழியப் பணி செய்திருந்த மிஷனரிகளான ரேனியஸ், சார்ஜன்ட், தோமஸ், கால்ட்வெல், ஜி. யூ. போப் போன்றவர்கள் கத்தோலிக்க மதத்தோடு எந்தவிதத் தொடர்பையும் மதரீதியில் வைத்திருக்கவில்லை. அத்தோடு கத்தோலிக்கர்களுக்கு சுவிசேஷத்தைச் சொல்லி மனந்திரும்பிக் கிறிஸ்துவை மட்டும் விசுவாசித்தவர்களைச் சபையில் இணைத்திருக்கிறார்கள். இதையே இவர்களுக்கு முந்தைய காலப்பகுதியில் இந்தியாவில் பணிபுரிந்திருந்த சீகன் பால்குவும், வில்லியம் கேரியும் செய்திருக்கிறார்கள்.
3. புரொட்டஸ்தாந்து கிறிஸ்தவத்தைப் பற்றி ஜெயமோகனுக்கு முழுமையான தெளிவில்லை. புரொட்டஸ்தாந்து கிறிஸ்தவத்தைச் சீர்திருத்த கிறிஸ்தவம் என்று ஜெயமோகன் அறிந்துவைத்திருக்கிறார். புரொட்டஸ்தாந்து கிறிஸ்தவம் பற்றிய அவருடைய சில கருத்துக்கள் உண்மையில் பாராட்டக்கூடியவை. கிறிஸ்தவரல்லாத ஒருவர் இந்தளவுக்கு கிறிஸ்தவம் பற்றிய புரிதலைக் கொண்டிருப்பதே ஆச்சரியந்தான். இருந்தபோதும் ஜெயமோகனின் புரெட்டஸ்தாந்து கிறிஸ்தவம் பற்றிய பல விஷயங்கள் குறைபாடுள்ளவை.
மார்டின் லூத்தருடைய யூத எதிர்ப்புக் கருத்துக்கள் பற்றி அவருடைய வாசகரொருவர் எழுதியிருந்த கடிதத்திற்கு ஜெயமோகன் அளித்திருந்த பதிலில் அவருடைய புரொட்டஸ்தாந்து கிறிஸ்தவம் பற்றிய சில கருத்துக்களை அறிந்துகொண்டேன். கத்தோலிக்க மதத்தில் வெறும் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதற்காக எழுந்ததல்ல புரொட்டஸ்தாந்து கிறிஸ்தவம் என்றும், கத்தோலிக்கத்தின் ஆன்மீகப் பார்வைக்கும், மார்டின் லூத்தரின் ஆன்மீகப் பார்வைக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடுண்டென்றும், கிறிஸ்தவ செய்தி என்பது தனி நபரின் ஆன்மாவை நோக்கி அந்தரங்கமாகச் செல்லவேண்டிய ஒன்று என்று லூத்தர் வற்புறுத்தினார் என்றும், கத்தோலிக்க மதத்தில் தனி மனித ஆன்மீகத்திற்கு இடமில்லை என்றும் அவர் விளக்கியிருந்தது மிகவும் சரியானதே.
லூத்தருடைய யூதவெறுப்புக் கருத்துக்களை ‘இந்த நூற்றாண்டின் அறிவியலை நிபந்தனையாகக் கொண்டு நாம் மதிப்பிடக்கூடாது’ என்று அவர் எழுதியிருந்தார். லூத்தரின் யூத வெறுப்புப் பார்வை குறைபாடானது என்பதை ஜெயமோகன் ஒப்புக்கொள்கிறபோதும் அதைவைத்து லூத்தரை எடைபோடுவதை அவர் அனுமதிக்கவில்லை. லூத்தரின் ‘முதன்மையான பணி வேதத்தை அனைவரும் வாசிக்கும்படியாக எளியமொழியில் கொண்டுவந்ததே’ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுவரை அவர் லூத்தரைப் பற்றி எழுதியிருந்ததெல்லாம் சரியானவையே. மார்டின் லூத்தர் ஜெர்மன் மொழியில் வேதத்தை மொழிபெயர்த்திருந்தார். தன் நாட்டு மக்கள் மத்தியில் அவர் வேதத்தைக் கொண்டு சேர்த்தார். வேதத்தை ஏனையோர் வேறு மொழிகளில் மொழிபெயர்த்தனர். லூத்தரின் முதன்மைப் பணி, அனைத்திற்கும் மேலாக வேதத்தின் அதிகாரத்தை வலியுறுத்தி, கிரியைகளின் மூலமாக ஒருவர் கடவுளுக்கு முன் நீதிமானாக முடியாதென்றும், மனித சித்தம் பாவத்தினால் கறைபடிந்திருப்பதால் சுயத்தில் ஒருவர் ஆத்மீக விடுதலையை எந்தக் கிரியையையும் செய்து அடையமுடியாதென்றும் வலியுறுத்தி கத்தோலிக்க மதத்தின் கிரியைகளின் அடிப்படையிலான இரட்சிப்பை நாடும் கோட்பாட்டிற்கு எதிரான ஆத்மீகப் போராட்டத்தைச் செய்ததுதான். வேதத்தை மொழிபெயர்த்ததே லூத்தரின் முதன்மைப் பணி என்றளவில் ஜெயமோகனின் பார்வை நின்றுவிடுகிறது.
மார்டின் லூத்தர் யூதர்களுக்கெதிரான வெறுப்பைத் தன் காலத்தில் கொண்டிருந்து அதை ஆக்ரோஷமாக எழுத்தில் வடித்திருந்ததற்குக் காரணம் யூதர்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளுவதில் காட்டிய தீவிர எதிர்ப்புதான். அது அவருக்கு பெரும் வருத்தத்தைத் தந்தது. ஜெர்மனியின் ஹிட்லரின் யூத விரோதக் கொள்கைக்கும், லூத்தரின் யூத விரோதக் கருத்துக்களுக்கும் பெரும் வேறுபாடு இருக்கிறது. லூத்தர் யூதர்களை அடியோடு வெறுக்கவில்லை; அவர்கள் கிறிஸ்துவை அடையவேண்டும் என்ற தீவிர ஆதங்கம் அவருக்கு இருந்தது என்று இறையியலறிஞரான ரொபட் கோட்பிரி குறிப்பிட்டிருக்கிறார். ‘அன்டி-செமிட்டிசத்திற்கும், யூத எதிர்ப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது. அன்டி-செமிட்டிசம் யூதர்களின் இரத்தப் பிறப்புக் காரணமாக அவர்களை அடியோடு வெறுக்கிறது. லூத்தர் யூதர்களை அவர்களுடைய இரத்தப் பிறப்பு கருதி எதிர்க்கவில்லை. அவர்களுடைய மதமே அவருக்குப் பிடிக்காததாக இருந்தது’ என்று கோட்பிரி எழுதியிருக்கிறார் (YouTubeல் ‘லூத்தர் அன்டி-செமிட்டிசக் கோட்பாடுள்ளவரா?’ என்ற செய்தியில் ரொபட் கோட்பிரி விளக்கியது. இதன் சுருக்கத்தை Ligonier Ministries வலைத்தளத்தில் வாசிக்கலாம்). லூத்தரின் யூதர்கள் பற்றிய எதிர்ப்புப் பார்வை இறையியல் நோக்கம் கொண்டது; அதில் இனத்துவேஷம் இருக்கவில்லை. நாம் நிச்சயம் யூதர்களுக்கு எதிராக லூத்தர் பயன்படுத்தியிருந்த வார்த்தைகளை ஆதரிக்கவோ, பயன்படுத்தவோ கூடாது. இருந்தாலும் அதை மட்டும் வைத்து லூத்தரையும் அவருடைய பணிகளையும் இன்றைய கால கண்ணோட்டத்தில் தவறாகக் கணிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. அன்டி-செமிட்டிசம் கடந்த நூற்றாண்டுப் பிரச்சனை, லூத்தர் காலத்துப் பிரச்சனையல்ல. ரோமன் கத்தோலிக்கப் போப்பையும், அனாபாப்திஸ்துகளையும்கூட இந்தவிதமாக லூத்தர் தாக்கியெழுதியிருக்கிறார். அதையெல்லாம் லூத்தருடைய நெருப்புக் கக்கும் தனித்தன்மையையும், அவர் காலத்துப் பிரச்சனைகளையும் வைத்தே விளங்கிக்கொள்ள வேண்டும்.
வரலாற்றுச் சீர்திருத்த கிறிஸ்தவத்தை, ஜெயமோகன், கத்தோலிக்க மதத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக அதிலிருந்தவர்கள் மத்தியில் எழுந்த வெறும் புரட்சிகரப் போராட்டமாக மட்டுமே கணிக்கிறார். அவரைப் பொறுத்தவரையில் அவருக்குத் தெரிந்த புரொட்டஸ்தாந்து சபை தென்னிந்திய சி. எஸ். ஐ சபை போன்றவை. அந்தச் சபைப்பிரிவுகளையும், அவற்றின் மத்தியில் நிகழ்ந்து வரும் விஷயங்களுமே சீர்திருத்த சபைகள் பற்றிய எண்ணங்களை அவர் வளர்த்துக்கொள்ள உதவியிருந்திருக்கின்றன. புரொட்டஸ்தாந்து கிறிஸ்துவுக்கும், கத்தோலிக்க மதக் கிறிஸ்துவுக்கும் இடையில் அவர் பெரிய வேறுபாட்டைக் காணவில்லை என்றே நினைக்கிறேன். உண்மையில் புரொட்டஸ்தாந்து சீர்திருத்தக் கிறிஸ்தவம் பற்றிய நல்லறிவு அவரிடம் இல்லாமல் இருக்கிறது. நான் எழுதி வெளியிட்டிருக்கும் ‘கிறிஸ்தவ திருச்சபை வரலாறு’ நூலின் இரண்டாம் பாகம் சீர்திருத்த கிறிஸ்தவ வரலாற்றையும், அதன் போதனைகளையும் விளக்குகின்ற நூல்.
4. ஜெயமோகன் விளக்கும் விந்தையான ‘டால்ஸ்டாய் கிறிஸ்து’ மெய்யான கிறிஸ்து அல்ல. இந்தப் பேட்டியில் அவர் லியோ டால்ஸ்டாய் போன்ற எழுத்தாளர்கள் வேத வசனங்களைப் பயன்படுத்தி எழுதியிருப்பதையும், கற்பனையாக அவர் உருவகித்துக் காட்டியிருந்த கிறிஸ்துவையும் தனக்கு அதிகம் பிடித்திருப்பதாகச் சொன்னார். டால்ஸ்டாய் ஒரு ரஷ்ய எழுத்தாளர். நோபேள் பரிசுக்காக பல தடவைகள் நியமிக்கப்பட்டவர். அவருடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் வாழ்க்கை நிகழ்வுகள் கருத்தளவிலான ஒரு மாற்றத்தை உண்டாக்கியிருந்தது. அவற்றை அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய நாவல்களை அவர் எழுதியிருந்தார். டால்ஸ்டாய் மெய்யான கிறிஸ்தவ ஆத்மீக அனுபவத்தை (மறுபிறப்பை) அடைந்திருக்கவில்லை; ஒருவகைச் சித்தாந்தப் பாதிப்பை மட்டுமே அடைந்திருந்தவர். டால்ஸ்டாயின் எழுத்துக்களால் கவரப்பட்டு மகாத்மா காந்தியும் கிறிஸ்தவத்தின் சில போதனைகளை (மலைப்பிரசங்கம்) தன் புற வாழ்க்கையில் பயன்படுத்தியும், சத்தியசோதனையில் அதுபற்றிக் குறிப்பிட்டுமிருக்கிறார். இந்தவிதமாக கிறிஸ்தவம் மனிதர்களின் வாழ்க்கையில் புறத்தளவில் ஒரு பாதிப்பைக் கொண்டுவந்திருப்பதை நாம் மறுக்கமுடியாது. இதைக் கிறிஸ்தவம், கர்த்தரின் பொதுவான கிருபையால் மனிதரில் ஏற்படும் மாற்றமாக விளக்குகிறது. அந்தப் பாதிப்பு அதற்குமேலாகப் போகவில்லை; அவர்கள் மனந்திரும்பி மறுபிறப்பை அடைய அது துணைபோகவில்லை. அத்தகைய புறப்பாதிப்பை அடைந்திருந்த பலரை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். ஜெயமோகனுடைய டால்ஸ்டாயின் கிறிஸ்து இந்தளவிலேயே இருந்து வருகிறார். இதற்கெல்லாம் ஒருபடி மேலாகப் போய் வேதபூர்வமான கிறிஸ்தவ அனுபவத்தை மனந்திரும்புதல் மூலம் ஜெயமோகன் அடையக்கூடுமானால் அது எத்தனை நன்மையானதாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். கிறிஸ்துவுக்கு அருகில் வந்து, கிறிஸ்துவைப் பற்றிய சொந்தக் கற்பனைகளைத் தங்களில் வளர்த்துக்கொண்டு, முழுமையாக அவரை அறியாமல் வாழ்ந்து வருகிறவர்களில் ஜெயமோகனும் ஒருவர்.
கிறிஸ்தவர்கள் மத்தியில் சமய சமரசம் (Religious Syncretism)
சமய சமரசம் அடிப்படையில் ஆபத்தானதும், மோசமானதுமாகும். கிறிஸ்துவை அறியாதவர்கள் மத்தியிலும், அநியாயத்திற்கு இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளுகிறவர்கள் மத்தியிலும் சமய சமரசம் சர்வசாதாரணமாக ஆண்டு வருகிறது. வேதத்தின் போதனைகளை எடுத்து அவற்றிற்கு மறுவாசிப்பளிப்பதோ, அவற்றைப் பயன்படுத்தி புதிய மாற்றங்களை உருவாக்குவதோ, கற்பனையாக அவற்றை உருவகிப்பதோ அல்லது தெய்வநாயகம், தேவகலா போன்றோரைப்போல இந்து மதத்திற்குள் அவற்றைத் திணித்து மக்களை நம்பவைப்பதோ சமய சமரசச் செயல்களாகும். இதற்கு கிறிஸ்தவ வேதம் இடங்கொடுக்கவில்லை. சமய சமரசம் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற உதவலாம்; ஆனால் கிறிஸ்துவை நிந்திக்கும் பாதகத்தை அது செய்கிறது. மறுபிறப்படைந்து கிறிஸ்தவ வேதபோதனைகளை மட்டும், உள்ளது உள்ளபடியே நம்பிக் கிறிஸ்துவைப் பின்பற்றி வாழும் வாழ்க்கை உலகத்தில் துன்பத்தையும், கேலிப்பேச்சையும் நாம் அனுபவிக்கச் செய்யலாம்; சிறுபான்மையினராக இருந்துவிடச் செய்யலாம். ஆனால், அத்தகைய சாட்சியுள்ள, கிறிஸ்துவுக்கு மட்டும் மகிமையளிக்கும் வாழ்க்கையையே கிறிஸ்து கிறிஸ்தவர்களிடம் எதிர்பார்க்கிறார்.
ஜெயமோகன் தன்னுடைய ‘சிலுவையின் பெயரால்’ நூலில் ‘தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தாமஸ்’ எனும் ஆக்கத்தை வரைந்திருக்கிறார். அந்த ஆக்கத்திற்கு கிறிஸ்தவர்களிடம் இருந்து ஏச்சுப்பேச்சோடு அநேக மறுப்புரைகள் வந்ததாகத் தெரிவித்திருக்கிறார். கிறிஸ்தவர்கள் அல்லாத பிரமுகர்களும் எதிர்ப்புத் தெரிவித்தார்களாம். அத்தகைய மறுப்புக் கடிதங்களில் சிலவற்றை ஜெயமோகன் நூலில் தந்திருக்கிறார்.
தன் ஆக்கத்தில் ஜெயமோகன் தெய்வநாயகம், தேவகலா, ஜான் சாமுவேல் கூட்டணியின் போதனையான, தாமஸ் தமிழகத்துக்கு வந்து தமிழ் ஆதிக்கிறிஸ்தவமாகிய தமிழர்களுக்கே உரித்தான, ஆரியத் தொடர்பில்லாத திராவிட சமயத்தை உருவாக்கினார் என்ற விளக்கத்தை விபரமாகத் தந்திருக்கிறார். இந்தக் கோட்பாடு எப்படி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கே Early Christianity in Tamil Nadu என்ற ஒரு மகாநாடே இதற்காக நடத்தப்பட்டு தமிழகத்திலிருந்து தெய்வநாயகம், தேவகலா, தயானந்தன் பிரான்சிஸ், எஸ்றா சற்குணம், ஹெப்சிபா ஜேசுதாசன் போன்றோரின் கிறிஸ்தவ ஆய்வுக்கட்டுரைகள் அதில் கொடுக்கப்பட்டு இந்தக் கோட்பாட்டைப் பலரும் நம்பவைக்கும் பிரயத்தனம் செய்யப்பட்டிருக்கிறது. மு. கருணாநிதி, அப்துல் கலாம் போன்றோரின் ஆசியும் இதற்குக் கிடைத்திருக்கிறது. முக்கியஸ்தர்களான தமிழகக் கத்தோலிக்க மதத் தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவத் தலைவர்களும் இதற்கு ஆதரவையும் ஆசியையும் அளித்திருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக 2008ல் தமிழகத்தில் ‘தமிழர் சமய உலக முதல் மகாநாடும்’ நடத்தப்பட்டதாக ஜெயமோகன் விளக்கியிருக்கிறார். இந்துத்துவாவின் பிடியில் இருந்து தமிழர் சமயமான திராவிட சமயத்தை மீட்கவேண்டும் என்ற கோஷத்தை இந்தத் தமிழகத்து மகாநாடு முன்வைத்திருக்கிறது என்று விளக்கும் ஜெயமோகன், இதை தெய்வநாயகம், ஜான் சாமுவேல் கூட்டணியே முன்வைத்துப் பெரும் பணச்செலவில் உழைத்து வருகிறது என்று விளக்கியிருக்கிறார்.
2013ல் ஜெயமோகன் ஸ்ரீனிவாசன் என்பவருக்கு எழுதிய பதில் கடிதத்தில் பிரஜாபதி என்று கீதையில் வரும் பாத்திரம் இயேசு கிறிஸ்துவே என்று பிரச்சாரம் செய்து வந்த சாது செல்லப்பாவின் போலிப் போதனை பற்றி விளக்கி, அது தவறான மதப்பிரச்சார அணுகுமுறை என்று காட்டுவதற்கு திருமறைத்தீப வலைத்தளத்தில் நான் அதுபற்றி விளக்கியிருந்த ஆக்கத்தின் (இந்திய வேதங்களில் இயேசுவா) ஒரு பகுதியை சுட்டியிருந்தார். தெய்வநாயகம் கோஷ்டி தாமஸ் திராவிட சமயத்தை தமிழர் மத்தியில் உருவாக்கினார் என்ற பிரச்சாரத்தைச் செய்ய, சாது செல்லப்பா இயேசுவை இந்திய வேதங்களில் திணித்து இயேசுவே பிரஜாபதி என்று மக்களை ஏமாற்ற முயல்கிறார். இதெல்லாம் ஆபத்தான சமயசமரசப் போக்குகள்.
கிறிஸ்தவரல்லாதவரான ஜெயமோகன், தெய்வநாயகம் கூட்டணியின் திட்டத்தை இந்த ஆக்கத்தில் அம்பலப்படுத்தியிருப்பது மட்டுமன்றி, தாமஸின் இந்திய வருகை பற்றிய ஆய்வுக்குரிய பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அது வெறும் வாய்க்கு வாய் பரப்பப்பட்ட ஒரு கற்பனைக் கதை என்றும் நம்பக்கூடிய வரலாற்று ஆதாரம் எதுவுமே இன்றுவரை அதை நிரூபிக்கக் கிடைக்கவில்லை என்றும் சுட்டியிருக்கிறார். கிறிஸ்தவ விசுவாசத்தைக் கொண்டிராத ஜெயமோகனுடைய அறிவுரீதியான சிந்தனை தமிழகக் கிறிஸ்தவப் பிரிவுகளிடமோ அல்லது கிறிஸ்தவ தலைவர்களிடமோ இல்லாமலிருப்பது வெட்கக்கேடான செயல்தான். போலியான தாமஸ் கட்டுக்கதையையும், தாமஸ் திராவிட மதத்தை உருவாக்கினார் என்பதையும் கிறிஸ்தவ வேதஇறையியல் அடியோடு நிராகரிக்கிறது. இதுபற்றி 2000ம் ஆண்டில் நான் வெளியிட்ட ‘இந்து மதத்தில் இயேசுவா?’ என்ற நூலில், இயேசுவின் அப்போஸ்தலர்களில் யாரும் செய்யாத சமய சமரச முயற்சியில் அப்போஸ்தலர்களின் ஒருவரான தாமஸ் ஈடுபட்டார் என்ற கருத்தை வேத ஆதாரங்களை முன்வைத்து நான் நிராகரித்து எழுதியிருந்தேன். வெறும் அரசியல், பொருளாதார, சமூக காரணங்களுக்காக இத்தகைய வேதம் நிராகரிக்கும் ஒரு கோட்பாட்டை முன்வைத்து கர்ணபரம்பரைக் கதைகளுக்கு காதுகொடுத்துப் பழகிப்போன தமிழக மக்களை ஏமாற்றும் பணியில் தெய்வநாயகம், தேவகலா, ஜோன் சாமுவேல் கூட்டணி ஈடுபட்டிருப்பதை ஜெயமோகன் அம்பலமாக்கி அடியோடு அதை மறுத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. இப்படி அதை நிராகரிப்பதில் ஜெயமோகனுக்கு எந்த ஆதாயமும் இல்லை. தன் நண்பர்களான கத்தோலிக்கர்களும் இந்தப் போலித்தனத்துக்கு இடம் கொடுத்து ஆதரவளித்திருந்தபோதும் எதையும் பொருட்படுத்தாமல் தைரியத்தோடு இந்தக் கோட்பாட்டை அவர் நிராகரித்திருக்கிறார்.
ஜெயமோகன் தன் ஆக்கத்தில் இறுதியில் சொல்கிறார், ‘மதமாற்றம் ஒரு இந்தியனின் பிறப்புரிமை . . . வரலாற்றுத் திரிபுகள், வெறுப்புப்பிரச்சாரத்தின் மூலம் அதை செய்ய நினைப்பது மிக ஆபத்தான போக்கு. கிறிஸ்து மனிதனாக வந்த இறைகுமாரன் என்ற உறுதியான நம்பிக்கை இவர்களுக்கு இருக்கும்பட்சத்தில் அந்த ஒரே வரியை சொல்லியே இவர்கள் தங்கள் மதத்தைப் பரப்பலாமே? அதற்கும் அப்பால் சென்று கிறிஸ்துவின் சொற்களில் வெளிப்படும் மானுடநீதிக்கும் எளியவர் மீதான கருணைக்குமான குரலை இவர்கள் கேட்டிருந்தார்கள் என்றால் கிறிஸ்துவை முன்வைப்பதற்கு இத்தனைப் பொய்களைச் சொல்லக் கூசமாட்டார்களா? தியாகத்தின் சிலுவையுடன் கிறிஸ்து வரட்டும், கள்ளநோட்டு எந்திரத்துடன் வரவேண்டாம்’ என்ற ஜெயமோகனின் வார்த்தைகளைத் தெய்வநாயகம் கோஷ்டியின் பிடியில் சிக்கியிருக்கும் கிறிஸ்தவர்கள் ஆராய்ந்து சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைக் கொண்டிருக்கும் சுவிசேஷம் நம் கையில் இருக்கும்போது, ஆத்மீக ஆதாயம் செய்ய ‘தாமஸ் கிறிஸ்தவம்’ போன்ற போலித்தனங்களில் நமக்கு நம்பிக்கை ஏன்? வேதம் தெளிவாக விளக்கும் சுவிசேஷத்தின் வல்லமையில் நம்பிக்கை வைக்காவிட்டால் நமக்கு கிறிஸ்துவில் நம்பிக்கை தளர்ந்துவிட்டது என்றுதான் அர்த்தம். இந்துக்களோ, இஸ்லாமியர்களோ, புத்தமதத்தவரோ கலப்படமற்ற சுவிசேஷத்தை மட்டும் கேட்டுச் சிந்தித்து மனந்திரும்புவதற்கு பரிசுத்த ஆவியில் நாம் தங்கியிராவிட்டால் கிறிஸ்தவர்கள் என்று நம்மை அழைத்துக்கொள்ளுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஆத்தும ஆதாயத்துக்கு சுவிசேஷத்தில் மட்டும் நம்பிக்கை வைத்துப் பிரசங்கிக்காத பிரசங்கிக்கு ஐயோ! திருச்சபைக்கும் ஐயோ! என்றுதான் இறைமகனான இயேசுகூட சொல்லுவார்.
என்னைப் பொறுத்தவரையில் ஜெயமோகனின் ‘சிலுவையின் பெயரால்’ நூல் அவர் மேல் நான் கொண்டிருக்கும் மதிப்பைக் குறைத்துவிடவில்லை. இருந்தபோதும் இலக்கியத்தைத் துல்லியமாக ஆராய்ந்து விளக்கம் கொடுக்கும் இந்த ஆளுமை, இந்த நூலில் விளக்கும் கிறிஸ்தவத்தைப் பற்றிய விஷயங்களில் அந்த ஆக்கபூர்வமான ஆய்வைப் பயன்படுத்தவில்லை என்பது என் கருத்து. இனிமேலும் கிறிஸ்தவத்தைப் பற்றிய கருத்துக்களை வெளியிடும்போது தகுதியானவர்களிடம் அதை விசாரித்து, ஆய்வு செய்து வெளியிடுவது அவருடைய மதிப்பைக் காப்பாற்றும். ஜெயமோகனின் பெயரைச் சுமக்கும் அநேக நூல்களில் இது ஒரு கருப்புப்புள்ளி!