தசமபாகம் செலுத்துதல் – (A. W. பிங்க்)

1. வேதத்தில் தசமபாகம் செலுத்துதல் பற்றிய போதனை

நியாயப்பிரமாணம் சீனாய் மலையில் மோசோக்கு கொடுக்குமுன்பாகக் கர்த்தர் தன்னுடைய வெளிப்படுத்தலை மக்களுக்குக் கொடுத்திருந்தார். மூன்று விஷயங்களில் அத்தகைய வெளிப்படுத்தல் தெளிவாக இருந்திருப்பதை ஆதியாகமத்தில் வாசிக்கலாம். அந்த மூன்று விஷயங்களும் பின்வருமாறு:

  1. கர்த்தருக்குப் பலிகளைச் செலுத்துவது
  2. ஓய்வுநாளைப் பின்பற்றுவது
  3. தசமபாகத்தைக் கொடுப்பது

இந்த விஷயங்களில் கர்த்தரின் கட்டளை ‘வெளிப்படையாக’ அல்லாமல் ‘உள்ளடக்கமாகவே’ தரப்பட்டிருக்கின்றன.

1. கர்த்தருக்குப் பலிகளைச் செலுத்துவது (ஆதியாகமம் 26:4). இந்த வசனத்தில் ஆபிரகாம் கர்த்தரின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து அவருடைய விதிகளையும், கற்பனைகளையும், நியமங்களையும், பிரமாணங்களையும் விசுவாசத்தோடு பின்பற்றியிருக்கிறார் என்று வசனம் சொல்லுகிறது. இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளுவது, ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அத்தனை கட்டளைகளும் வெளிப்படையாக ஆதியாகமத்தில் எழுதப்பட்டிராதபோதும், அவற்றை ஆபிரகாம் தெளிவாக அறிந்திருந்து பின்பற்றியிருக்கிறார். ஆபிரகாம் கட்டளைகளை அறியாமல் வாழவில்லை. ஆதியில் ஆபேலும், ஆபிரகாமும், நோவாவும் ஆண்டவரின் ஆராதனைபற்றிய கட்டளைகளை அவரிடம் இருந்து பெற்று முறையாகப் பின்பற்றியிருந்திருக்கிறார்கள்.

2. ஓய்வுநாள் – படைப்பில் இது உருவாக்கப்பட்டிருந்தது. ஆதாமும், ஏவாளும் ஏதேனில் அதைப் பின்பற்றியிருந்தார்கள். ஆதாம் தன்பிள்ளைகளுக்கு அதைப் போதித்திருந்தான். அதன்படி காயினும், ஆபேலும் ஓய்வுநாளில் கர்த்தருக்கு ஆராதனை செலுத்தியிருந்தார்கள். நியாயப்பிரமாணம் வருமுன்பே மக்களுக்கு ஓய்வுநாள் பற்றிய போதனை தெரிந்திருந்து அதன்படி வாழ்ந்திருந்தார்கள். யாத் 20ல் கர்த்தர் நியாயப்பிரமாணத்தை மோசேக்கு கொடுக்குமுன்பே, ஓய்வுநாளைப் பற்றி மக்கள் அறிந்திருந்திருப்பதை யாத் 16ம் அதி 23-27 வரையுள்ள வசனங்களில் வாசிக்கலாம். ஓய்வுநாள் பற்றிய கட்டளையைத் தெளிவாக அறிந்திருந்தும், மக்கள் அதை மறந்து நடந்துகொண்டதை இந்த அதிகாரம் விளக்குகிறது.

3. தசமபாகம் – இதேபோல்தான் தசமபாகம் பற்றிய போதனையையும் அறிந்துகொள்ளுகிறோம். ஆதியாகமம் 14:20ல் ஆபிரகாம் மெல்கிசேதேக்குக்கு ‘எல்லாவற்றிலும் தசமபாகம் செலுத்தினான்’ என்றிருப்பதை வாசிக்கிறோம். ஆபிரகாமுக்கு இது தெரியாமல் இருந்திருக்கவில்லை. இதை ஆபிரகாம் செய்திருந்த செய்தியே அதுபற்றிய அறிவு அன்றைய மக்களுக்கு இருந்திருக்கிறது என்பதைத் தெளிவாக வலியுறுத்துகிறது.

ஆதியாகமம் 28:19-22 ல் தசமபாகம்

இதில் தசமபாகம் பற்றி யாக்கோபுக்குத் தெரிந்திருந்தது மட்டுமல்லாமல் அதைச் செலுத்துவேன் என்று கர்த்தருக்கு அவன் வாக்குறுதியும் தந்திருக்கிறான் (22). இதையெல்லாம் யாக்கோபு எப்படி அறிந்திருந்தான் என்ற விளக்கத்தை நாம் இப்பகுதியில் வாசிக்காவிட்டாலும், யாக்கோபு அதை அறிந்திருந்து விசுவாசமாக தசமபாகம் செலுத்துவதில் உறுதியாக இருந்திருப்பது, கர்த்தர் அதை அவனுக்கும் அவனோடிருந்தவர்களுக்கும் வெளிப்படுத்தியிருந்திருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. கர்த்தர் ஆதியிலேயே தன் சிருஷ்டிகளுக்கு அவர்களுடைய அனைத்து வருமானத்திலும் இருந்து தனக்கு தசமபாகம் செலுத்துவதை உணர்த்தியிருந்திருக்கிறார்.

மோசேயின் நியாயப்பிரமாணத்தில் தசமபாகம்

நியாயப்பிரமாணத்தில் தசமபாகம் கொடுப்பதைக் கர்த்தர் வலியுறுத்தியிருப்பதை லேவி 27:30-32 வரையுள்ள வசனங்கள் விளக்குகின்றன. அது கர்த்தருக்கு உரியது (30); கர்த்தருக்குப் பரிசுத்தமானது (30) என்ற வார்த்தைகள் இரண்டு தடவை அழுத்தமாகக் காணப்படுகின்றன. இதன் மூலம் கர்த்தர் தசமபாகம் செலுத்துவது பற்றிய விஷயத்தில் தன்னுடைய அதிகாரத்தை வலியுறுத்துகிறார். நம் வருமானத்தில் பத்தில் ஒன்று நமக்குச் சொந்தமானதல்ல; அது கர்த்தருக்குச் சொந்தமானது. எப்படி வாரத்தில் ஏழு நாட்களில் ஒன்று அவருக்குச் சொந்தமானதோ அதேபோல்தான் இதுவும். இரண்டுமே பரிசுத்தமானவைகள்.

பழைய ஏற்பாட்டு ஆசாரியர்களுக்கு உதவித்தொகை

இதை ஆண்டவர் மக்கள் கையில் விட்டுவிடாமல் தானே இதுபற்றிய வெளிப்படுத்தலை மக்களுக்கு அளித்திருக்கிறார். இதன் மூலம் ஆராதனைபற்றிய விஷயங்களில் மனிதன் தானே எந்த விதியையும் ஏற்படுத்திக்கொள்ளுவதைக் கர்த்தர் விரும்பவில்லை என்பதை அறிந்துகொள்ளுகிறோம். அதனால்தான் எண்ணா 18:25-26 லேவியர்களுக்கு தசமபாகத்தொகையில் பத்தில் ஒன்றை அளிக்கவேண்டும் என்பதை விளக்குகிறது. இதைக் கர்த்தரே தீர்மானித்து மனிதனுக்கு வெளிப்படுத்தி யிருக்கிறார். இதில் மனிதன் தன்னுள்ளத்தில் ஒருதொகையைத் தீர்மானித்துக் கொடுப்பதற்கு கர்த்தர் அனுமதியளிக்கவில்லை. அதை அவரே தீர்மானித்திருக்கிறார்.

இதையெல்லாம் இஸ்ரவேல் மறந்து, கர்த்தருக்கு எதிராக நடந்து வழிதவறிப்போயிருந்தபோதிலும், பழைய ஏற்பாட்டுக்காலததில் ஆத்மீக எழுப்புதல் நிகழ்ந்த காலங்களிலெல்லாம் கர்த்தரின் ஆராதனையின் ஒருபகுதியாக சீரமைக்கப்பட்ட ஒன்றாக தசமபாகம் அளிக்கும் முறை இருந்திருக்கிறது. அதற்கு உதாரணம் 2 நாளாகமம் 30. இது எசேக்கியா நாட்டில் செய்த பொதுவான ஆத்மீக சீர்திருத்தத்தை விளக்குகிறது. 31:4-6 வரையுள்ள வசனங்கள் இந்தச் சீர்திருத்தத்தின் ஒருபகுதியாக விசுவாசத்தோடு லேவியருக்கு தசமபாகம் அளிக்கவேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இதற்குப் பிறகு நெகேமியா 10ம் அதிகாரத்தில் இதுபற்றி வாசிக்கிறோம். நெகேமியா தன் காலத்தில் மறுபடியும் அழிவடைந்திருந்த ஆலய மதில்களைக் கட்டிமுடித்து ஆராதனை சீர்திருத்தங்களை ஏற்படுத்தியபோது அதில் லேவியருக்கு தசமபாகம் அளிப்பதும் ஒரு பகுதியாக இருந்தது. அதுபற்றி நெகே 10:34-37 வரையுள்ள வசனங்களில் வாசிக்கலாம்.

பழைய ஏற்பாட்டில் கடைசிப் புத்தகமான மல்கியாவும் தசமபாகம் பற்றி வலியுறுத்துகிறது. நெகேமியாவோடு திரும்பிவந்து ஆலயப்பணி செய்த மக்கள் ஆர்வம்குன்றி ஆத்மீக வலிமையிழந்து கர்த்தரின் வார்த்தைகளை மறந்து மீறிநடந்தபோது கர்த்தரின் வார்த்தை அவர்களுக்கு வந்தது. அவற்றில் ஒன்றாக தசமபாகத்தை விசுவாசத்தோடு கர்த்தருக்கு அளிப்பதைக் கர்த்தர் மறுபடியும் நினைவுபடுத்தாமல் போகவில்லை. மல்கியா 3:7-8 ஐ வாசித்துப் பாருங்கள். இந்த இடத்தில் கர்த்தர், ‘உன்முற்பிதாக்களின் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வந்த என்னுடைய நியமங்களை விட்டு நீ விலகிப்போனாய்’ என்று கர்த்தர் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள். அவற்றில் ஒன்று கர்த்தருக்கு தசமபாகத்தை அளிப்பது. தசமபாகத்தைக் கர்த்தருக்கு விசுவாசத்தோடு கொடுக்காமலிருப்பதை அவர் திருட்டுக்கு ஒப்பிட்டு பத்துக்கட்டளைகளில் ஒன்றை மீறுவதாகக் காட்டியிருக்கிறார் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். கர்த்தரிடமே திருடுவதைப் போன்ற கொடுமை ஒன்றில்லை.

புதிய ஏற்பாட்டில் தசமபாகம்

கர்த்தர் மட்டுமே நாம் அவருக்கு எந்தத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று கட்டளையிட முடியும். பழைய ஏற்பாட்டில் அவர் திரும்பத் திரும்ப அதைக் கட்டளையிட்டிருப்பதால், புதிய ஏற்பாட்டில் அதில் எந்த மாற்றமும் கொண்டுவரவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே அதன் அவசியத்தை மத் 23:23ல் மறைமுகமாக வலியுறுத்தியிருக்கிறார். வேதபாரகரும், பரிசேயர்களும் செய்த செயல்களில் குறைகண்ட ஆண்டவர் அவர்களுடைய போலித்தனத்தை இந்த வசனத்தில் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் தசமபாகம் செலுத்தவேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்திருக்கிறார்கள். ஆனால், நீதியையும், இரக்கத்தையும், விசுவாசத்தையும் கொண்டிருக்கவில்லை. இயேசு இதற்காக அவர்கள் தசமபாகம் செலுத்தவேண்டாம் என்றோ, அதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்றோ சொல்லவில்லை. ‘இவைகளையும் செய்யவேண்டும்’ என்று அவர் நீதியையும், இரக்கத்தையும், விசுவாசத்தையும் ஆணித்தரமாக வலியுறுத்தி, அத்தோடு ‘அவைகளையும் விடாதிருக்கவேண்டும்’ என்று தசமபாகம் செலுத்தவேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறார். இந்த இடத்தில் தசமபாகம் செலுத்துவதில் இயேசு தன் அதிகாரத்தை அழுத்தமாகப் பதிய வைப்பதைக் கவனிக்கவேண்டும்.

அடுத்ததாக 1 கொரிந்தியர் 9:13-14ஐக் கவனியுங்கள். 14ம் வசனத்தில் காணப்படும் ‘அந்தப்படியே’ என்ற வார்த்தை இந்த இடத்தில் முக்கியமானது. இந்த இருவசனங்களிலும் தசமபாகம் என்ற வார்த்தை இடம்பெறவில்லை. இருந்தபோதும், அது உள்ளடக்கமாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. 13ம் வசனம் மிகத்தெளிவாக ஆலயத்தில் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்களும், பலிபீடத்தில் பணிபுரிகிறவர்களும் அங்கிருப்பவைகளை அனுபவிப்பதில் பங்கிருக்கிறது என்பதைப் பவுல் நினைவுறுத்துகிறார். இன்னொருவிதத்தில் சொல்லப் போனால் பழைய ஏற்பாட்டு மோசேயின் நிர்வாகத்தின்படி ஆலயத்தில் பணிபுரியும் ஆசாரியர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்ள வழிசெய்யப்பட்டிருந்தது. அந்த வழி தசமபாகமே என்பதைப் பவுல் அந்த வார்த்தையைப் பயன்படுத்தாமல் இங்கு சுட்டிக்காட்டுகிறார். அந்தப்படி, அதாவது அதேபோல் புதிய ஏற்பாட்டுக்காலத்தில் சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்கள் அந்தப் பணிமூலம் பிழைக்கவேண்டும் என்கிறார் பவுல். பழைய ஏற்பாட்டு முறையைப் பின்பற்றி புதிய ஏற்பாட்டில் ஊழியத்தில் இருப்பவர்களின் தேவை கவனிக்கப்பட வேண்டும் என்பதைப் பவுலின் போதனை. பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்ட அந்த முறையான தசமபாகம் புதிய ஏற்பாட்டிலும் இந்தத் தேவையை நிறைவேற்றப் பயன்படுத்தப்படவேண்டும் என்பதை ‘அந்தப்படி’ என்ற வார்த்தை வலியுறுத்திக்காட்டுகிறது.

அடுத்ததாக 1 கொரிந்தியர் 16:1-2 ஐக் கவனியுங்கள். இங்கும் தசமபாகம் என்ற வார்த்தை இடம்பெறவில்லை. ஆனால், அதுவே இந்தப் பகுதியில் தெளிவாக உள்ளடக்கமாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள். நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.

2ம் வசனத்தில் ‘சேர்த்து’ என்பது எதைக்குறிக்கிறது? இந்த வார்த்தை திடீரென அந்நாளில் செய்யவேண்டியதைக் குறிக்காமல் ஏற்கனவே திட்டமிட்டுச் செய்யவேண்டிய ஒரு கடமையைக் குறிக்கிறது. 2ம் வசனத்தில் ‘தன்னிடத்தில் சேர்த்துவைக்கக்கடவன்’ என்றிருப்பதற்குக் காரணம் என்ன? இந்த வார்த்தைப் பிரயோகம் தெளிவாக மல்கியா 3:10ல் சொல்லப்பட்டதை நினைவூட்டுகிறது. அந்த வசனத்தில் ‘பண்டகசாலை’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மல்கியாவில், ‘தசமபாகங்களையெல்லாம் பண்டகசாலைக்குக் கொண்டுவாருங்கள்’ என்றிருக்கிறது. 1 கொரிந்தியர் 16:2ல் பவுல் என்ன சொல்லுகிறார்? வாரத்தின் முதல் நாளில், அவனவன் சேர்த்துவைக்கக் கடவன்’ என்கிறார். இது தெளிவாக மல்கியா 3ல் குறிப்பிடப்பட்டிருக்கும் அதே உண்மைதான்.

(1 கொரிந்தியர் 16:2ல் ஆங்கிலத்தில் treasuring up or storing என்றிருக்கிறது. அதை store என்றும் சொல்லலாம். இதற்குள் சேர்த்துவைக்கும் இடம் என்ற கருத்தும் இருக்கிறது. அதுவே மல்கியாவில் தெளிவாக ‘பண்டகசாலை’ என்றிருக்கிறது. இந்தப் பழைய ஏற்பாட்டுப் பதத்திற்கும் 1 கொரிந்தியர் 16:2ல் காணப்படும் ‘சேர்த்துவைத்தல்’ என்ற பதத்திற்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. மல்கியாவில் சொல்லப்பட்டதே இங்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அத்தோடு இந்த இடத்தில் இந்த வசனத்தை தசமபாகம் அளிப்பதற்கு ஆதாரமாகப் பிங்க் காட்டுவதற்குக் காரணம், வாரத்தின் முதல் நாளிலேயே சபையில் காணிக்கை எடுக்கப்பட்டது. விசுவாசிகள் வாரத்தின் முதல் நாளிலேயே தசமபாகம் மற்றும் ஏனைய காணிக்கைகளையும் சபையில் கொடுத்தனர். ஆகவே, இந்தப் பகுதி உள்ளடக்கமாக தசமபாகமளிப்பதை வலியுறுத்துகிறது. – ஆர். பாலா)

அதுமட்டுமல்ல, இதைத் திடீரென்று உள்ளத்தில் ஏற்படுகின்ற ஒரு உந்துதலின் அடிப்படையில் செய்யாமல், முன்கூட்டியே திட்டமிட்டு வாரத்தின் முதல்நாளில் செய்யவேண்டும் என்கிறது வசனம். அத்தோடு, 2ம் வசனம் ‘ஒவ்வொருவருடைய வருமானத்திற்கு ஏற்றபடி’ அதைத் தீர்மானித்து ஒதுக்கிவைக்கவேண்டும் என்கிறது. ஒவ்வொருவரும் தன் மனம்போனபடி அதைச் செய்யவேண்டும் என்றோ தன் இருதயம் வழிநடத்தியபடி அதைச் செய்யவேண்டும் என்றோ வசனம் சொல்லவில்லை. ‘ஒவ்வொருவரும்’ . . . ‘தன் வருமான வளர்ச்சிக்குத் தக்கபடி’ அதைச் செய்யவேண்டும் என்கிறார் பவுல். இதிலிருந்துதான் proportionate giving (தன் தன் வரவுக்குத் தக்கதாக) என்ற முறையை இன்று திருச்சபை பின்பற்றுகிறது. அதாவது, வருமான வளர்ச்சிக்கு பொருந்திவருகிற தொகையை ஆராய்ந்து தீர்மானித்துக் கொடுத்தல் என்பது இதற்கான விளக்கம். இன்னொருவிதத்தில் சொல்லப்போனால், என்னுடைய வருமானம் கடந்த வருடத்தைவிட இருமடங்கு அதிகரித்திருந்தால், அந்த அதிகரித்திருக்கும் வருமானத்திற்குத் தக்கதாக, வருமான வளர்ச்சியின் அடிப்படையிலான தொகையைத் தீர்மானித்துக் கொடுக்கவேண்டும். என்னுடைய தசமபாகம் அந்த வருடத்தில் என் வருமானத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவகையில் இருக்கவேண்டும்.

‘வரவுக்குத் தக்கதாக’ எந்த அடிப்படையில் இந்தத் தொகையை ஒவ்வொருவரும் தீர்மானிப்பது? 2 கொரிந்தியர் 8:13, 15 வசனங்களில் பவுல், ‘சமநிலையிலிருக்கும்படி’ என்றும் ‘சமநிலைப் பிரமாணத்தின்படியே’ என்றும் சொல்லியிருக்கிறார். இந்தப் பகுதி முழுவதும் கர்த்தருக்குக் காணிக்கை கொடுக்கும் வழக்கத்தைப் பற்றியே விளக்குகிறது என்பதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். இந்தப் பகுதியில் பவுல் விளக்குகிற ‘சமநிலைப் பிரமாணம்’ தசமபாகமான ‘பத்தில் ஒருபகுதியைத்’ தவிர வேறில்லை. பத்தில் ஒரு பகுதியையே வருமானத்திற்கு ஏற்றபடி கர்த்தருக்குக் கொடுக்கும்படி பழைய ஏற்பாடு சொல்லுகிறது. அந்த சமநிலைப் பிரமாணத்தையே பவுல் இங்கு கொரிந்தியருக்கு நினைவூட்டுகிறார். அன்று கிறிஸ்தவர்களுக்கு இது பற்றித் தெரிந்திருந்ததால் பவுல் நீண்ட விளக்கத்தை அளிக்கவில்லை. பத்தில் ஒருபகுதியைக் கொடுப்பதையே ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் நியதியாக ஏற்படுத்தித்தந்திருக்கிறார். அது ஒவ்வொருவருடைய வருமானத்திற்கும் ஏற்றவகையில் அமைந்திருக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் இன்னுமொரு பகுதியையும் கவனிக்காமல் போகக்கூடாது. எபிரெயர் 7:5ம் 6ம். இந்த 7ம் அதிகாரத்தில் அப்போஸ்தலர் பவுல் மூலமாக பரிசுத்த ஆவியானவர் லேவியரின் ஆசாரியத்துவத்தைவிட கிறிஸ்துவின் ஆசாரியத்துவம் மகிமையானது என்று விளக்குகிறார். அதை உறுதிப்படுத்தும் ஒரு காரணியாக மெல்கிசேதேக்கின் வழியில் வந்த கிறிஸ்துவின் ஆசாரியத்துவம், மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவத்தைவிட சிறப்பானது என்று காட்டுகிறார். அதை விளக்கும்போது, தெரிந்துகொள்ளப்பட்ட மக்களின் தகப்பனான ஆபிரகாம் மெல்கிசேதேக்கின் சிறப்பை உணர்ந்து அவனுக்கு தசமபாகம் செலுத்தினான் என்கிறார் எபிரெயருக்கு எழுதியவர்.

இந்த ஏழாம் அதிகாரத்தின் உதாரணமே ஆதியாகமம் 14ல் விளக்கப்படுகிறது. அங்கே, கிறிஸ்துவின் ஒப்பாளியாகிய மெல்கிசேதேக்குவைப் பற்றி மூன்று விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

  1. மெல்கிசேதேக்கு ராஜாவாகவும், ஆசாரியனாகவும் இருக்கிறான்.
  2. கிறிஸ்துவுக்கு ஒப்பாளியான அவன், தன்னுடைய பெயரில் நீதியையும், சமாதானத்தையும் கொண்டிருக்கிறான். மெல்கிசேதேக்கு என்றால் நீதியின் அரசன் என்றும், சாலேம் என்றால் சமாதானம் என்றும் அர்த்தம்.
  3. கிறிஸ்துவுக்கு ஒப்பாளியாகிய மெல்கிசேதேக்கு ஆபிரகாமை ஆசீர்வதித்து அவனுக்கு கிறிஸ்துவின் மரணத்தை நினைவுபடுத்தும் அடையாளங்களாக அப்பத்தையும், திராட்சை ரசத்தையும் கொண்டுவந்தான்.

மெல்கிசேதேக்கு கிறிஸ்துவுக்கு ஒப்பாளியாக இருந்தது மட்டுமல்லாமல், ஆபிரகாமும் விசுவாசிகளின் தகப்பனாக அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குணாதிசயத்தைக் கொண்டவனாகக் காட்டப்படுகிறார். ஆபிரகாம் மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவத்தை உணர்ந்து மதித்து, கர்த்தரின் துணையோடு தான் போரில் அரசர்களை வென்று கைப்பற்றிய பொருள்கள் அனைத்திலும் இருந்து தசமபாகத்தை மெல்கிசேதேக்குவுக்கு அளித்தான். அந்தச் செயல் எபிரெயருக்கு எழுதியவரால் நமக்குச் சுட்டிக்காட்டப்பட்டு கிறிஸ்துவின் ஆசாரியத்துவத்தின் கீழ் வந்திருக்கும் நாம் ஆபிரகாமின் உதாரணத்தைப் பின்பற்றி கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து விசுவாசத்தோடு அவருக்குரிய தசமபாகத்தை செலுத்தவேண்டும் என்று உணர்த்துகிறார். இந்த விஷயத்தில் நம் தகப்பனாகிய ஆபிரகாம் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார் என்கிறார் எபிரெயருக்கு எழுதியவர். வேதத்தில் கடைசித் தடவையாக தசமபாகம் குறிப்பிடப்பட்டிருக்கும் எபிரெயருக்கு எழுதியவரின் நிருபம் (7ம் அதி) அதைக் கிறிஸ்துவோடு நேரடியாக இணைத்துக் காட்டுகிறார். பழைய ஏற்பாட்டில் தசமபாகம் ஆசாரியர்களிடம் கொண்டுவரப்பட்டு பண்டகசாலையில் வைக்கப்பட்டது. ஆனால், கடைசித் தடவையாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் தசமபாகம் நேரடியாக கிறிஸ்துவோடு இணைத்துக்காட்டப்பட்டு, கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிந்து தசமபாகம் செலுத்தவேண்டிய நம்முடைய பொறுப்பு திருச்சபைக்குத் தலைவரான அவருக்குக் கீழாகக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

நம்முடைய வருமானமனைத்திலும் பத்தில் ஒன்றை, ஒழுக்கத்தோடும் சிரத்தையோடும். விசுவாசத்தோடும் ஒதுக்கிவைத்து கர்த்தருடைய பணிக்குக் கொடுப்பதையே கர்த்தர் தன் ஊழியங்களுக்குரிய பணத்தேவையைச் சந்திக்கும் முறையாக ஏற்படுத்தியிருக்கிறார். விசுவாசிகள் இதை பக்தி சிரத்தையோடு செய்யும்போது கர்த்தரின் பணிகளுக்குக் குறைவேற்படாததோடு, அவை கடனில் போகவேண்டிய அவசியமும் ஏற்படாது. தசமபாகம் கொடுப்பதில் குறைவேற்படுகின்றபோதுதான் கர்த்தரின் பணிக்குக் குறைவேற்பட்டு அவிசுவாசிகளின் உதவியை அதற்காக நாடுவதும், உலகத்து வழிகளைப் பின்பற்றிப் பணம்சேர்க்கும் அநாவசியச் செயல்களும் உருவாகின்றன.

2. புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்கான தசமபாகம்

கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருடைய இருதயத்தின் ஆழத்திலும் தசமபாகம் செலுத்தவேண்டும் என்ற நம்பிக்கை நிச்சயமாகக் காணப்படும். அதேநேரம் இந்தக் கடமையைச் செய்யாமலிருக்கிறோமே என்ற தவிப்பும் அல்லது இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளாமலிருக்கிறோமே என்ற எண்ணமும் காணப்படும். இரண்டுமே உண்மை. சிலர், மற்றவர்கள் தசமபாகம் செலுத்தாமலிருக்கிறார்களே என்ற குற்றச்சாட்டை எழுப்பலாம். வேறுசிலர், இந்தக் காலத்தில் இது அத்தனை கட்டாயமானதாக இருந்தால் பிரசங்கிகள் ஏன் இதுபற்றிப் பிரசங்கிக்காமல் இருக்கிறார்கள் என்று கேட்கலாம். நண்பர்களே! பிரசங்கிகள் அநேக விஷயங்களைப்பற்றிப் பிரசங்கிக்காமல் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். அதனால் உங்களுடைய குற்றச்சாட்டில் எந்தப் பொருளும் இல்லை.

இதுவரை நாம் மூன்று விஷயங்களைக் கவனித்திருக்கிறோம்.

1. சீனாய் மலையில் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே தசமபாகம் அளிக்கும் முறை இருந்து வந்திருக்கிறது. அதை நாம் ஆபிரகாம் ஆசாரியனான மெல்கிசேதேக்குவுக்கு தசமபாகமளித்ததிலிருந்து அறிந்துகொள்கிறோம். அத்தோடு யாக்கோபு Padan-aramக்கு போகும் வழியில் கர்த்தரிடம் இருந்து வெளிப்படுத்தலைப் பெற்றுக்கொண்டபோது அவருக்குப் பத்தில் ஒன்றைக்கொடுப்பதாக வாக்குறுதி அளித்தான்.

2. நியாயப்பிரமாணத்தைக் கர்த்தர் அளித்தபோது (சீனாய்) அதற்குள் தசமபாகமளித்தலும் இணைக்கப்பட்டது. ஆனால், நியாயப்பிரமாணத்தில் இருந்த அத்தனையையும் இஸ்ரவேல் அலட்சியப்படுத்தியபோது தசமபாகமளித்தலையும் மல்கியாவின் காலம்வரை அலட்சியம் செய்திருந்தது. அதனால்தான் மல்கியாவின் காலத்தில் கர்த்தர் தெளிவாக மல்கியா மூலம் தன்னுடைய மக்கள் தன்னிடம் திருடியதாகக் கர்த்தர் குற்றஞ்சாட்டினார்.

3. புதிய ஏற்பாட்டில் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் புதிய ஏற்பாட்டு மக்கள் தசமபாகமளிக்கவேண்டும் என்பதை, தசமபாகம் சடங்காச்சாரிய முறைகளில் ஒன்றல்ல அது ஒழுக்கநியதிக் கோட்பாட்டின் ஒரு பகுதி என்பதன் மூலம் ஆண்டவர் விளக்கியிருக்கிறார். அது ஒரு காலப்பகுதிக்கு மட்டும் ஏற்படுத்தப்பட்டதாக அல்லாமல் எல்லாக் காலப்பகுதிகளிலும் அளிக்கப்பட வேண்டியதொன்றாக வேதம் விளக்குகிறது.

இனி ஒருபடிமேலே போய் இதைக் கவனிப்போம். தசமபாகமளிப்பது பழைய ஏற்பாட்டுக் காலத்து மக்களைவிட அதிகமாகப் புதிய ஏற்பாட்டு மக்களுக்குக் கட்டாயமானதாகக் காணப்படுகின்றது. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு: முதலாவது, லூக்கா 12:48ல் தரப்பட்டுள்ள விதியான, எவருக்கு அதிகமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவர்களிடம் அதிகமாக எதிர்பார்க்கப்படுகின்றது என்பதன்படி புதிய ஏற்பாட்டு மக்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. பழைய ஏற்பாட்டு மக்களைவிட அதிகமாக வசதிகளையும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் நாம் அடைந்திருப்பதால் நம்முடைய கடமைப்பாடு அதிகமானதாக இருக்கிறது. நியாயப்பிரமாணத்தைவிட கிருபை மேலானதாக இருப்பதாலும், பயத்தைவிட அன்பு பெரிதாக இருப்பதாலும், மாம்சத்தைவிட பரிசுத்தஆவியானவர் வல்லமையானவராக இருப்பதாலும், ஆண்டவருக்கு விசுவாசமாயிருக்க நம்மை ஊக்கப்படுத்தும் ஆழமான காரணிகள் தசமபாகமளிக்க வேண்டிய நம்முடைய கடமையைப் பெரிதாக்குகிறது. ஏனைய எல்லாக்கட்டளைகளையும் பின்பற்றும் நாம் அதை எந்தக் காரணத்தால் செய்கிறோமோ, நாட்டுச்சட்டங்களைப் பின்பற்றும் நாம் அதை எதற்காகச் செய்கிறோமோ அதே காரணத்துக்காக தசமபாகமளிப்பதையும் செய்யவேண்டும்; செய்யவேண்டும் என்பதற்காக அல்ல அதைச் செய்யவிரும்புவதால் செய்யவேண்டும்.

கிறிஸ்துவின் ஆசாரியப்பணி மெல்கிசேதேக்கின் ஆசாரியப்பணியையும் விடவும், ஆரோனின் ஆசாரியப்பணியையும்விடவும், லேவியரின் ஆசாரியப்பணியைவிடவும் மேலானதாக இருப்பதால் கிறிஸ்துவுக்கு நாம் தசமபாகமளிக்கவேண்டியது மாபெரும் கடமையாக இருக்கிறது. இயேசுவைவிடத் தரத்தில் கீழானவர்களாக இருந்தவர்களுக்கு, நம்மைவிடக் குறைவான ஆசீர்வாதங்களையும், வசதிகளையும் கொண்டிருந்த பழைய ஏற்பாட்டு மக்கள் தசமபாகமளித்திருப்பதால், அவர்களையும்விட அதிக வசதிகளையும் ஆசீர்வாதங்களையும் அடைந்திருக்கும் நாம் தசமபாகமளிக்கவேண்டியது நம்முடைய பெருங்கடமையாக இருக்கின்றது.

கர்த்தர் ஏன் தசமபாகமளிப்பதை ஏற்படுத்தியிருக்கிறார்?

1. முதலாவதாக, படைத்தவரின் உரிமைகளை நாம் தொடர்ந்து அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக. நம்மைப் படைத்தவர் நாம் அவரை மகிமைப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார். அவர் நம்முடைய நாட்களில் ஏழில் ஒன்றையும், நம்முடைய வருமானத்தில் பத்தில் ஒன்றையும் அவருக்குத் தந்து அவரை மகிமைப்படுத்தவேண்டும் என்கிறார். பத்தில் ஒன்றை அவருக்குக் கொடுப்பது, நம்முடைய உலக ஆசீர்வாதங்கள் அனைத்தும் அவரிடம் இருந்தே வருகின்றன என்பதை அங்கீகரிக்கும் செயலாகும்.

2. அடுத்ததாக, இயற்கையிலேயே நாம் பொருளாசையுள்ளவர்களாக இருப்பதால் அதற்கு நிவாரணமாக ஆண்டவர் இதை நியமித்திருக்கிறார். பத்துக்கட்டளைகளில் ஒன்று நாம் பொருளாசையுள்ளவர்களாக இருக்கக்கூடாது என்பது (யாத் 20:7). அதனால்தான் இயேசுவும் தன் சீடர்களைப் பார்த்து, ‘பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்’ (லூக்கா 12:15) என்றார். பொருளாசையிலிருந்து நம்மைப் பாதுகாக்கவே, சுயநல இச்சையில் இருந்து விடுவிக்கவே கர்த்தர் தசமபாகத்தை அவருக்குக் கொடுப்பதை நியமித்திருக்கிறார். இது நாம் ஆசீர்வாதத்தை அடையவே நியமிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய நன்மைக்காகவே நியமிக்கப்பட்டிருக்கிறது.

3. தன்னுடைய பணிகளில் ஏற்படும் சகலவிதமான பொருளாதாரப் பிரச்சனைக்கும் தீர்வாக இதைக் கர்த்தர் நியமித்திருக்கிறார். இஸ்ரவேலர் தசமபாகத்தை விசுவாசத்தோடு கொடுத்துவந்த காலங்களிலெல்லாம் கர்த்தர் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்த ஆராதனைக்குரியவைகளை அவர்கள் செய்வதற்குப் பிரச்சனையில்லாமலிருந்தது. நம் காலத்தில் கர்த்தருடைய மக்கள் தசமபாகம் அளிப்பதை முறையாக செய்து வருவார்களெனில் கிறிஸ்தவபணிகளுக்கு ஏற்படும் எல்லாவிதமான தொல்லைகளுக்கும் முடிவு ஏற்படும். தசமபாகத்தை முறையாகக் கொடுக்கும் எந்த சபையும் வெட்கப்படுகிற நிலை ஏற்படாது என்பதை நாம் உறுதியாக நம்புகிறேன். இதுவே கிராம சபை ஊழியங்களுக்கும், அருட்பணி ஊழியங்களுக்கும் பொருந்தும். உங்கள் சபையில் பத்து ஆண் கிறிஸ்தவர்கள் இருந்து அவர்கள் தங்கள் வருமானத்தில் பத்தில் ஒன்றை ஆண்டவருக்காக முறையாகக் கொடுத்தால் நிச்சயம் உங்களால் ஓர் ஊழியக்காரரை நிரந்தரமாகப் பணியில் அமர்த்தி அவருடைய தேவையைத் தீர்க்க முடியும். எந்தவொரு சபை ஊழியக்காரரும், தன் தேவையைத் தீர்த்து வைக்க உதவும் அந்த சபை மக்களுக்குக் கிடைக்கும் சராசரி வருமானத்தைவிட அதிகமாக வாங்குவதற்கு ஆசைப்படக்கூடாது.

அதனால், உங்கள் சபையில் பத்து ஆண் அங்கத்தவர்கள் இருந்து அவர்கள் தங்கள் வருமானத்தில் பத்தில் ஒன்றை சபைக்களிப்பார்களானால் – அது எதுவாக இருந்தாலும் – உங்கள் மத்தியில் ஓர் ஊழியக்காரரை நியமித்து அவருடைய தேவைகளை அதால் நிறைவேற்ற முடியும். அதுவே அருட்பணி ஊழியப்பிரச்சனைகளைத் தீர்க்க கர்த்தர் நியமித்திருக்கும் வழி. உங்கள் சபையில் உழைக்கும் பத்து ஆண் சீனர்கள் இருந்தால் எந்த வெளிநாட்டுத் துணையிலும் தங்கியிருக்காமல் நீங்களே உங்கள் சபைத்தேவைகளைக் கவனித்துக்கொள்ள முடியும். இந்தியாவிலும், சீனாவிலும் ஐம்பது வருடங்களுக்கு மேலாக சபையாக அமைக்கப்பட்டிருந்தபோதும், தங்களுடைய பணத்தேவைக்காக அங்கிருக்கும் சபைகள் ஆஸ்திரேலியாவிலும், இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் இருக்கும் சபைகளில் தொடர்ந்து தங்கியிருப்பது பெரும் ஊழலும், வெட்கப்பட வேண்டிய செயலுமாகும். அதற்குக் காரணமென்ன? கர்த்தரின் வேதத்தை அவர்கள் பின்பற்றாததுதான். கிறிஸ்தவ பணத்தேவைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றிய அடிப்படைப் போதனைகள் அவர்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கவில்லை. அதற்காகவே கர்த்தர் தசமபாகமளிப்பதை நியமித்திருக்கிறார். அவருடைய பணிகளின் பணத்தேவைகளை அதுவே தீர்த்துவைக்கிறது. தசமபாகமளிக்கும் எவரும் கடன்தொல்லைகளில் அகப்பட்டுக்கொள்ள மாட்டார்கள்.

4. அடுத்ததாக, நம்முடைய விசுவாசத்தை சோதிப்பதற்காகவும் கர்த்தர் இதை நியமித்திருக்கிறார்; முக்கியமாக, இளம் வயதான கிறிஸ்தவர்களுடைய விசுவாசத்தை சோதிப்பதற்காக. ஓர் இளம் வாலிபன் கர்த்தரை விசுவாசிக்க ஆரம்பித்திருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுவோம். அவன் தன் எதிர்காலத்திற்காக கர்த்தரை நம்பியிருப்பதாகவும், தன்னுடைய இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கர்த்தரின் கையையே நம்பியிருப்பதாகவும் சொல்கிறான். இருந்தாலும் அவன் கர்த்தருக்கு அந்த வருடத்திற்கு பத்தில் ஒன்றைக் கொடுப்பதற்கு அவரை உறுதியாக நம்பியிருக்கிறானா? நண்பர்களே! தசமபாகம் செலுத்துவது இளைஞர்களில் அவர்களுடைய இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையானவற்றிற்காக ஆண்டவரை நம்பியிருக்கும் ஆவியை வளர்த்துவிடுகிறது.

இரண்டு எதிர்ப்புக் கோஷங்களைக் கவனிப்போம்

தசமபாகம் செலுத்துவது பற்றி ஆத்துமாக்களுக்கு விளக்கும்போது, அவர்களில் சிலர் சொல்லுவார்கள், தன்னுடைய வீட்டாருக்குத் தேவையானவற்றை நிறைவேற்றுவது ஒரு மனிதனின் கடமை என்று. உண்மைதான், நானும் அதைச் செய்கிறேன். வேதம் அதைச் செய்யும்படிச் சொல்லுகிறது. அப்படிச் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. நான் ஒருபடி மேலே போவேன். ஓர் இளைஞன் தன் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக தன் வருமானத்தை அதிகரித்துக்கொள்ளுவது எல்லாவிதத்திலும் சரியானதே. ஆனால், அவன் தசமபாகம் செலுத்தாதவனாக இருந்தால் அவனுக்கு இப்போது கிடைக்கும் சம்பளமும் நிச்சயம் தொடரும், விருத்தியாகும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. தசமபாகம் செலுத்துகிறவனுக்கு அந்த உத்தரவாதம் கர்த்தரிடம் இருந்து கிடைக்கிறது.

வேறு சிலர் சொல்லுவார்கள், நான் முதலீடு செய்திருந்த பணத்தை இழந்திருக்கிறேன், அதனால் தசமபாகம் செலுத்த முடியவில்லை. ஆம்! தொடர்ந்து ஆண்டவரிடம் திருடினால் இதுபோல் இன்னும் மோசமானவைகள் நிகழத்தான் செய்யும். முதலீடு செய்வதில் நமக்கு ஞானம் மிகவும் தேவைப்படுகிறதுதான், ஆனால், சபைப் பணவிஷயத்தில் நாம் கர்த்தருடைய வார்த்தையை மீறி நடந்துகொண்டிருந்தால் அத்தகைய ஞானத்தை அவர் நமக்கு அளிக்கமாட்டார். நடுத்தர வயதிலோ அல்லது வயோதிப வயதிலோ பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கர்த்தரின் வார்த்தையின் கண்டனத்துக்குள்ளாகி, அதன் முன் குற்றவாளியாக நின்று அவரால் கண்டிக்கப்பட்டும், தாழ்த்தப்பட்டும் பணக்கஷ்டத்தோடு வாழ்வதற்குக் காரணம் அவர்கள் அநேக வருடங்களாக கர்த்தரிடம் திருடி வாழ்ந்திருப்பதுதான் என்பதை நான் மிக உறுதியாக நம்புகிறேன். மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்! அவர் கொடுத்த பணத்தை அவரை மகிமைப்படுத்தும்விதத்தில் அவருடைய வார்த்தையைப் பின்பற்றி அவருக்குக் கொடுத்திராவிட்டால், அவர்களுக்குக் கொடுப்பதை அவர் நிறுத்திக்கொள்வதைப் பார்த்து அவர்கள் ஆச்சரியம் அடையத்தேவையில்லை. (எரேமியா 5:25). நடக்கின்ற ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் ஒரு காரணம் இருக்கிறது. எல்லா விஷயங்களுக்கும் வேதம் விளக்கமளிக்கிறது.

கர்த்தரை சோதிப்பது

இனி வசனத்திற்கு நேரடியாக வருவோம். இதில் மூன்று விஷயங்களை நான் கவனிக்க விரும்புகிறேன்.

மல்கியா 3:10, ‘என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.’

1. சோதித்துப் பாருங்கள் – கோர்டில் கூண்டில் நிற்பதைப்போலக் கர்த்தர் தன்னைச் சோதித்துப் பார்க்கும்படி அறைகூவலிடுகிறார். அதுவும் தசமபாகம் செலுத்துவதில் தன்னைச் சோதிக்கும்படிக் கூறுகிறார். பத்தில் ஒன்றை அவருக்குக் கொடுத்து அவருடைய வாக்குறுதியைச் சோதிக்கும்படிச் சொல்லுகிறார். விசுவாசத்தோடும், வழமையாகவும், முறையாகவும் ஆண்டவருக்கு தசமபாகத்தைத் செலுத்தி அவர் சொன்னபடி நம்மை ஆசீர்வதிக்கிறாரா இல்லையா என்று தம்மைச் சோதிக்கும்படிக் கர்த்தர் கேட்கிறார். தசமபாகம் கொடுப்பதன் மூலம் நாம் கர்த்தர் இருக்கிறார் என்பதையும், நம்முடைய உலகத்தேவைகள் அனைத்தின் மேலும் அதிகாரமுள்ளவராகவும் இருக்கிறார் என்பதையும் நாம் சோதித்து அறிந்துகொள்ளலாம். வழமையாகவும், விசுவாசத்தோடும், முறையாகவும் உங்களுடைய மொத்த வருமானத்தில் இருந்து பத்தில் ஒன்றை ஆண்டவருக்காக அளிப்பீர்களானால் அவர் உங்களைக் கைவிடுகிறவரா? இல்லையா என்பதை நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளலாம். என்னை ‘சோதித்துப் பார், சோதித்துப் பார்’ என்று அவர் கேட்கிறார்.

விசுவாசியே! உன்னுடைய நாள் வருமானம் நூறு ரூபாயாக மட்டும் இருந்தாலும் பரவாயில்லை. அதை வைத்து நீ கஷ்டத்தோடு உன்தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நீ பாடுபட்டாலும் பரவாயில்லை. அந்த நூறு ரூபாயில் பத்தில் ஒன்றை ஒதுக்கிவைத்து ஆண்டவருக்குக் கொடுத்துப் பார், அவர் உனக்குக் கடனாளியாக இருக்கப்போகிறாரா? என்பதை நீ அறிந்துகொள்வாய். ‘என்னைச் சோதித்துப் பார்’ என்று அவர் உன்னைக் கேட்கிறார். நான் உன்னுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவனா என்பதை என்னைச் சோதித்து அறிந்துகொள் என்கிறார் கர்த்தர். உன் விசுவாசம் வீண்போகாதபடி செய்கிறேனா என்பதை என்னைச் சோதித்துப் பார்த்து அறிந்துகொள் என்கிறார் அவர்.

2. வானத்தின் பலகணிகள் திறக்கப்படும் – இதற்கு அர்த்தம் ‘எல்லையில்லா ஆசீர்வாதம்’. அது ஆவிக்குரிய ஆசீர்வாதத்தைக் குறிப்பிடவில்லை. ஏனென்றால், தசமபாகம் செலுத்தி ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை அடைய முடியாது. அப்படியானால் அது உலக ஆசீர்வாதமா? ஒருவிதத்தில் அதைத்தான் குறிப்பிடுகிறார். பெற்றோரை மகிமைப்படுத்துகிறவர்களின் வாழ்நாளை அதிகரிப்பேன் என்று ஆண்டவர் சொன்னதுபோல் இதைச் செய்வதாக வாக்குறுதி தருகிறார். அதாவது, நம்முடைய வருமானத்தைக் கூட்டுவதாக அவர் வாக்குறுதி தருகிறார். இது கர்த்தருடைய பணத்தைத் திருடாது தசமபாகத்தை முறையாகக் கொடுப்பவர்களுக்குக் கொடுக்கப்பட்டிகருக்கும் வாக்குறுதி.

இதையே நாம் ஆதியாகமம் 7:11-12லும் வாசிக்கிறோம். இதே வார்த்தைப் பிரயோகத்தை அங்கு காணலாம். (மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன.) ஆதியாகமம் 7ல் பயன்படுத்தப்பட்ட அதே உண்மையையே மல்கியா 3ல் வாசிக்கிறோம். வானத்தில் பலகணிகளைத் திறப்பது என்பது அளவில்லாத ஆசீர்வாதத்தைக் குறிக்கிறது. அது ஆவிக்குரிய ஆசீர்வாதத்தைக் குறிப்பிடவில்லை. ஏனெனில், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நாம் எதையும் கொடுத்து வாங்கிவிட முடியாது. அப்படியானால் இது உலக ஆசீர்வாதத்தைக் குறிக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம். ஒருவிதத்தில் அப்படித்தான். ஏனெனில் தன்னை மகிமைப்படுத்துகிறவர்களை அவர் மகிமைப்படுத்துவேன் என்று சொல்லியிருக்கிறார். அதிகமாகத் தனக்குக் கொடுக்கிறவர்களுக்கு அதிகமாகவே அளிப்பேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். தங்களுடைய பெற்றோர்களைக் கனப்படுத்துபவர்களுக்கு அதிக வாழ்நாட்களை அளிப்பேன் என்று கர்த்தர் சொல்லியிருப்பது போல்தான் இதுவும்.

கர்த்தர் வானத்தில் பலகணிகளைத் திறப்பேன் என்று சொல்கிறபோது உங்கள் வருமானத்தை அதிகரிக்கச் செய்வேன் என்கிறார் அவர். எத்தனையோ ஆத்துமாக்கள் வறுமையில் இருப்பதற்குக் காரணம் அவர்கள் கர்த்தர் அளித்துள்ள தங்களுடைய வருமானத்தில் விசுவாசமுள்ளவர்களாக இருந்திராததினால்தான். அவர்கள் கர்த்தரிடம் திருடியிருக்கிறார்கள்! அவர்கள் வாழ்க்கையில் கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அனுபவித்ததில் ஆச்சரியமில்லை. நம்மில் சிலர் மறுபடியும் வேதத்தைத் திறந்து பார்த்து இந்த உலக ஆசீர்வாதங்களைப் பயன்படுத்துவதற்கான விதிமுறைகளையும், போதனைகளையும் மறுபடியும் வாசித்துப் பார்க்க வேண்டும். சிலர் பழைய ஏற்பாட்டு ஆண்டவரே புதிய ஏற்பாட்டு ஆண்டவராகவும், மாறாதவராகவும் இருக்கிறார் என்பதை உணரவேண்டியவர்களாக இருக்கிறார்கள். கர்த்தர் மாறுவதில்லை.

3. இடங்கொள்ளாமல் போகுமட்டும் – இந்த இடத்தில் ஆங்கில வேத மொழிபெயர்ப்பாளர்கள் இதை எப்படி மொழிபெயர்ப்பது என்பது புரியாமல் இருந்திருக்கிறார்கள். ஆங்கில வேதமொழிபெயர்ப்பில் (மல்கியா 3:10) சில வார்த்தைகள் சாய்ந்த எழுத்துக்களில் இருக்கின்றன. அதற்குக் காரணம் அவை மூல வசனத்தில் இல்லை. வசனத்தைப் புரிந்துகொள்ள வசதியாக மொழிபெயர்ப்பாளர் அந்தச் சாய்ந்த எழுத்தில் இருக்கும் வார்த்தைகளை இணைத்திருக்கிறார். (இதைத் தமிழ் மொழிபெயர்ப்பில் காணமுடியாது). இதை எழுத்துபூர்வமாக வாசித்தால், ‘தேவையானவை மட்டுமல்ல தேவைக்கு மேலானதையும்’ கொடுப்பேன் என்கிறார் கர்த்தர். 2 நாளாகமம் 31:10ஐக் கவனியுங்கள், ‘சாதோக்கின் சந்ததியானாகிய அசரியா என்னும் பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: இந்தக் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரத் தொடங்கினதுமுதல் நாங்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தோம்; இன்னும் மிச்சமும் இருக்கிறது; கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்ததினால் இந்தத் திரட்சியான அம்பாரம் மீந்திருக்கிறது என்றான்.’

இதற்கு முன்புள்ள வசனங்களை வாசித்தீர்களானால் எசேக்கியாவின் காலத்தில் அவன் தசமபாகங்களைச் செலுத்துவதை மறுபடியும் ஆரம்பித்து வைத்ததால் மக்கள் ஆண்டவருடைய ஆலயத்துக்கு தசமபாகங்களைச் செலுத்த ஆரம்பித்து ஆசாரியரின் தேவைகள் நிறைவேறியது மட்டுமல்ல; தேவைக்கு மேலாக காணிக்கை குவிந்திருந்தது. நம்முடைய தேவையை மட்டும் போக்குவது அல்ல தேவைக்கு மேலாகவும் கர்த்தர் வருமானத்தைக் கொடுப்பார் என்பது இதற்கு அர்த்தம்.

ஜோன் பனியன் சொல்கிறார், ‘அங்கே ஒரு மனிதன் இருக்கிறான். சிலர் அவனைப் பயித்தியம் என்றார்கள்; அதிகதிகமாக அவன் கொடுத்தபோது, அதிகமானவற்றை அவன் அடைந்தான்.’

நடைமுறை ஆலோசனை

  1. உங்களுடைய வருமானத்தில் இருந்து, அது எந்த வருமானமாக இருந்தாலும் (சம்பளம், ஏனைய வருமானம், கிடைக்கும் ஈவுகள்) அவற்றில் இருந்து செலவழிக்கு முன் பத்தில் ஒன்றை ஒதுக்கி வைத்து ஆண்டவருக்குக் கொடுங்கள். அது கர்த்தருக்குச் சொந்தமானது. உலகத்தில் உங்கள் வேலைத்தளத்தில், வியாபாரத்தில் எத்தனைக் கவனமாக இருக்கிறீர்களோ அதேபோல் இந்த விஷயத்தில் நீங்கள் மிகக் கவனத்தோடும், முறையோடும் செயல்பட வேண்டும். 1 கொரிந்தியர் 16:2ல் பவுல் இதைத்தான் சொல்லுகிறார்.
  2. ஒரு நோட்புக்கை வைத்துக்கொண்டு அதன் ஒரு பக்கத்தில் வாரத்தில் வருகிற வருமானம் அனைத்தையும் எழுதி வையுங்கள். மறுபக்கம், அவற்றில் பத்தில் ஒன்று (தசமபாகம்) எவ்வளவு என்று எழுதுங்கள். அவை கர்த்தரைப் போய்ச் சேரவேண்டியது.

இதழாசிரியரின் பிற்குறிப்பு:

இந்த ஆக்கத்தை வரைந்தளித்துள்ள A.W. பிங்க் தன்னுடைய ஊழிய காலத்தின் நடுப்பகுதியில், 1919ல் சீர்திருத்த விசுவாசத்தை ஏற்றுக்கொண்டு தன்னுடைய பழைய காலசகாப்தக் கோட்பாடு நம்பிக்கைகளுக்கு அடியோடு முழுக்குப்போட்டார். அவருடைய வாழ்வின் இறுதிக்கால நம்பிக்கைகளும், எழுத்துக்களும் சீர்திருத்தப் போதனைகளைத் தழுவியிருந்தன. காலசகாப்தக் கோட்பாட்டு இறையியல் கல்லூரியில் இறையியல் பயின்று சபைப்பணி புரிய ஆரம்பித்த அவருடைய ஊழியப்பணியின் ஆரம்பகாலத்தில் பிங்க் எழுதியிருந்த நூல்கள் சீர்திருத்த விசுவாசத்திற்கு முரணான கொள்கைகளையே பின்பற்றியிருந்தன. பிங்கின் சீர்திருத்த விசுவாச நம்பிக்கைகள் படிப்படியாகவே வளர்ந்திருந்தன.

அவருடைய நூல்களை இன்று பல பதிப்பகத்தாரும், பிங்கின் இறையியல் நம்பிக்கைகளில் படிப்படியாக ஏற்பட்டிருந்த மாற்றத்தை வெளிப்படுத்தாமல், எந்த மாறுதலும் செய்யாது (without editing) வெளியிட்டு வருகிறார்கள். அதனால், ஆரம்ப காலத்தில் பிங்க் எழுதிய நூல்கள் சீர்திருத்தப் போதனைகளின் அடிப்படையில் அமைந்தவையல்ல என்பதை வாசகர்கள் உணராமல் போய்விடுகின்ற ஆபத்து இருக்கின்றது. பிங்கின், ‘கர்த்தரின் இறையாண்மை’ (Sovereignty of God) எனும் நூல் 1919ல் வெளியிடப்பட்டது. அவருடைய சீர்திருத்த நம்பிக்கைகளை வெளிப்படுத்திய முதலாவது நூல் இதுவே. இருந்தும், இந்நூலை The Banner of Truth வெளியிட்டபோது அதில் பல அவசியமான மாற்றங்களைச் செய்தே வெளியிட்டது. அதேநேரம் Backer Publishing Co வெளியிட்ட பதிப்பில் அத்தகைய மாற்றங்களைக் காணமுடியாது. இதேபோல்தான் பிங்கின் ஏனைய நூல்களையும் வாசகர்கள் கவனத்தோடு எந்தப் பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார், எந்த ஆண்டில் வெளிவந்தது என்பதைக் கவனித்துப் பார்த்து வாங்குவது அவசியம். பிங்கின் தமிழ் மொழிபெயர்ப்புகளையும் ஆராய்ந்துபார்க்காமல் வாசிக்கக்கூடாது.

1919ல் பிங்க் அமெரிக்காவில் தான் பணிபுரிந்திருந்த சபையை விட்டுவிலகி பியூரிட்டன் எழுத்துக்களை மிகவும் ஆழமாகப் படிக்க ஆரம்பித்தார். அதற்குப் பின்பே படிப்படியாக அவருடைய இறையியல் நம்பிக்கைகள் சீர்திருத்த விசுவாசத்தின் அடிப்படையில் அமைய ஆரம்பித்தன. (இயன் மரே எழுதிய Life of Arthur W Pink (Revised and Enlarged Edition), 2004 ஆர்த்தர் பிங்கின் வாழ்க்கையையும், ஊழியத்தையும், இறையியல் நம்பிக்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களையும் விளக்கும் நூல். வாசிக்க வேண்டிய ஒரு நூல்கூட).

இதை நான் குறிப்பிடுவதற்குக் காரணம், இந்தத் தசமபாகம் என்ற இந்த ஆக்கத்தை எழுதிய ஆர்த்தர் பிங்க், இதை எழுதிய காலப்பகுதியில் திருச்சபை பற்றிய முழுமையான சீர்திருத்த நம்பிக்கையைக் கொண்டிருக்கவில்லை. அவர் தசமபாகத்தைத் தற்காலத்திலும் கர்த்தருக்குக் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி எழுதியிருப்பதை நான் மனமாற வரவேற்கிறேன். தசமபாகம் பற்றி வேத ஆதாரங்களோடு தெளிவாக எழுதப்பட்டிருக்கும் ஆக்கங்களில் இது மிகவும் முக்கியமானது. இதை நல்ல முறையில் வேத ஆய்வு செய்து பிங்க் அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறார். அத்தோடு, தசமபாகம் கொடுப்பதால் வரும் ஆசீர்வாதங்களையும் ஆணித்தரமாக இருதயத்தை அசைக்கும் வகையில் அவர் எழுதியிருப்பது பாராட்டத் தகுந்தது. இந்த விஷயத்தில் அவர் காலசகாப்தக் கோட்பாட்டைப் பின்பற்றவில்லை என்பது தெளிவு. காலசகாப்தக் கோட்பாடு பழைய ஏற்பாட்டு தசமபாகம் இஸ்ரவேலுக்கு மட்டுமே உரியது என்று தவறாகப் போதிக்கிறது. அதை பிங்க் பின்பற்றவில்லை. அத்தோடு, இந்த ஆக்கத்தில் பிங்க், விசுவாசிகள் புதிய உடன்படிக்கை காலத்தில் கொடுக்கவேண்டிய தசமபாகம் தவிர்த்த ஏனைய காணிக்கை முறைகளைப்பற்றி அதிக விளக்கமளிக்கவில்லை. அதற்குக் காரணம், அவர் தசமபாகத்தை விளக்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தார்.

இருந்தபோதும், தசமபாகத்தை எங்கே, யாருக்குக் கொடுப்பது என்பதில் ஆர்த்தர் பிங்கோடு நான் அதிகம் முரண்படுகிறேன். பிங்க் 1 கொரிந்தியர் 16:1-2 ஆகிய வசனங்களைப் பயன்படுத்தி புதிய ஏற்பாட்டுக் காலத்தில் தசமபாகம் கொடுப்பதை வலியுறுத்தியபோதும் அதை எங்கு கொடுப்பது என்பதை வேதபூர்வமாக விளக்கவில்லை. தசமபாகத்தை விசுவாசிகள் தீர்மானித்து ஊழியங்களுக்குக் கொடுக்கலாம் என்று கூறி நிறுத்திவிட்டார். இது மிகவும் தவறான விளக்கம். இதற்குக் காரணம் பிங்க் இதை எழுதிய காலத்தில் சீர்திருத்த திருச்சபைப் போதனைகளை அவர் முழுமையாகத் தழுவியிருக்கவில்லை.

1 கொரிந்தியர் 16:1-2 வசனங்களில் தெளிவாகவே பவுல், தர்மபணத்தை (எருசலேமுக்கு அனுப்பவேண்டியிருந்த நிவாரணப் பணம்) எப்படிச் சேர்ப்பது என்பது பற்றி கலாத்தியாவில் இருந்த சபைகளுக்கு விளக்கியிருந்தார். அதையே கொரிந்து சபையையும் பின்பற்றும்படி இந்த வசனங்களில் சொல்கிறார். காணிக்கைகளை வாரத்தின் முதல் நாளில் சபைக்குக் கொடுப்பது அன்று விசுவாசிகளின் வழக்கமாக இல்லாமலிருந்திருந்தால் பவுல் சபைகளுக்கு அதுபற்றி எழுதவேண்டிய அவசியமென்ன? காணிக்கை கொடுப்பது விசுவாசியின் தனிப்பட்ட விருப்பச் செயலாக இருந்திருந்தால் பவுல் அதுபற்றி சபைகளுக்கு எழுதியிருந்திருக்க மாட்டார். தசமபாகம் உட்பட அனைத்துக் காணிக்கைகளையும் நிதானித்து சபை அங்கத்தவர்கள் தாங்கள் அங்கத்தவராக இருக்கும் சபைக்கே கொடுக்க வேண்டும் என்பது புதிய ஏற்பாட்டின் தெளிவான போதனை. காணிக்கை பற்றி பவுல் 1 கொரிந்தியர், 2 கொரிந்தியர் ஆகிய நிருபங்களில் கொரிந்து சபைக்கே எழுதி விளக்கியிருக்கிறார்; தனிப்பட்ட நபர்களுக்கோ, நிறுவனங்களுக்கோ அல்ல. அத்தோடு அந்த நிருபங்கள் ஏனைய சபைகளுக்கும் அவர்கள் பின்பற்றும்படியாக அனுப்பப்பட்டிருந்தன. சபைக்குக் கொடுக்காது, காணிக்கைகளை விசுவாசிகள் தாங்கள் நினைத்தபடி நிறுவனங்களுக்கும், தனிஊழியர்களுக்கும் அனுப்புவது அடிப்படையில் வேதத்திற்கு முரணான செயல். ஒவ்வொரு விசுவாசியும் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஏதாவதொரு உள்ளூர் சபையில் அங்கத்தவராக இருப்பதையே வேதம் எதிர்பார்க்கிறது; வலியுறுத்தி விளக்குகிறது. (அங்கத்துவமில்லாத சபை அமைப்பா? என்ற தலைப்பில் நான் வெளியிட்டிருக்கும் நூலை வாசித்துப் பாருங்கள்). உள்ளூர் சபை உதவிக்காரர்களே காணிக்கைகளை மூப்பர்களினதும், அங்கத்தவர்களினதும் வழிநடத்தலின்படி சபைத்தேவைகளுக்கும் மற்றும் சுவிசேஷ, அருட்பணி ஊழியங்களுக்கும் பகிர்ந்து செலவிடவேண்டும். வேதமும், சீர்திருத்த விசுவாச திருச்சபை இறையியலும் இதையே போதிக்கின்றன. இந்த முறையையே சீர்திருத்த சபைகள் பொதுவாக எங்கும் பின்பற்றி வருகின்றன.

2 thoughts on “தசமபாகம் செலுத்துதல் – (A. W. பிங்க்)

  1. தசமபாகம் பற்றிய இந்த ஆக்கம் மிகவும் பிரயோஜனமுள்ளதாயிருக்கிறது. நாம் ஆண்டவர் மேல் வைத்திருக்கும் அன்பையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்த ஆண்டவர் கொடுத்த ஒரு கிருபையின் சாதனமாக தசமபாகம் இருக்கிறது.

    Like

  2. அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு ஆக்கம். முழுமனதோடு தசமபாகம் செலுத்துவதைப் பற்றியும், அதனால் கிடைக்கும் ஆவிக்குரிய மற்றும் உலக ஆசிர்வாதங்கள் பற்றியும் அருமையாக விளக்கி இருக்கிறது இவ்வாக்கம்.
    ஒரு விசுவாசியின் கடமையாக இருக்கிறது தசமபாகம் செலுத்துவது எனபதை இவ்வாக்கம் மிகவும் சிறப்பாக விளக்கி இருக்கிறது. ஒரு விசுவாசி தான் ஆண்டவரையே சார்ந்து வாழ்கிறேன் என்பதற்கு வெளிப்படையான அடையாளத்தில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.

    Like

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s