அழிவுக்கு முன் வந்த அமைதி

2 இராஜாக்கள் 14:23-29

பழைய ஏற்பாட்டு நூலான 2 இராஜாக்களில் நாம் கவனித்து வருகின்ற விஷயங்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதென்று நம்புகிறேன். வேதத்தின் முதல் பாகமான பழைய ஏற்பாட்டில் கர்த்தரின் வெளிப்படுத்தல் முழுமையாக நமக்குக் கொடுக்கப்பட்டிராவிட்டாலும், கர்த்தரின் மீட்பின் வரலாற்றை முன்னோக்கிப் பார்த்து, அந்த வரலாற்றின் முழுமையை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்ற பழைய ஏற்பாடு மிகவும் முக்கியமானது. பழைய ஏற்பாடில்லாமல் புதிய ஏற்பாடில்லை; புதிய ஏற்பாடில்லாமல் பழைய ஏற்பாடில்லை. இந்த இரண்டும் கர்த்தரின் வெளிப்படுத்தலை ஆதியாகமத்தில் இருந்து ஆரம்பித்து படிப்படியாக விளக்கி புதிய ஏற்பாட்டில் அதன் பூரணத்துவத்தை அடைகின்றன.

இந்த ஆக்கத்தில் இப்போது நாம் 2 இராஜாக்கள் 14வது அதிகாரத்தில் இறுதிப்பகுதியான 23-29 வரையுள்ள வசனங்களை ஆராயப்போகிறோம்.

முதலாம் யெரொபெயாம்: அறிமுகம்

மேலெழுந்தவாரியாக இந்தப் பகுதியை வாசிக்கும்போது இதில் பிரசங்கம் செய்கிற அளவுக்கு என்ன இருக்கிறது, என்று சிலருக்குத் தோன்றலாம். ஆனால், இதுவரை நாம் இந்த நூலில் பார்த்து வந்திருப்பதைப்போல இந்தச் சிறு பகுதியிலும் மீட்பின் வரலாற்று உண்மைகளும், இறையியல் விளக்கங்களும், கர்த்தரின் குணாதிசயம், வாக்குத்தத்தங்கள் பற்றிய விளக்கங்களும் புதைந்து காணப்படுகின்றன.

இப்போது நாம் யூதாவைவிட்டு மறுபடியும் இஸ்ரவேலுக்கு வருகிறோம். 22-23 வசனங்கள், யூதாவின் அரசனான அமத்சியாவின் மரண அறிவித்தலையும், அவனுக்குப் பின் அவனுடைய மகனான அசரியா யூதாவில் ஆட்சிக்கு வந்ததையும் நமக்கு விளக்கிய பிறகு, வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்து அமத்சியா யூதாவில் ஆட்சி செய்த 15வது வருடத்தில் இஸ்ரவேலில் இரண்டாம் யெரொபெயாம் ஆட்சிக்கு வந்ததையும், அவன் 41 வருடங்களுக்கு ஆட்சி செய்ததையும் நமக்கு அறிவிக்கிறது. இந்த இரண்டாம் யெரொபெயாம் யோவாசின் குமாரன். இவனும் இவனுக்கு முன்பிருந்தவர்களைப் போலவே கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான் என்று 24ம் வசனம் நமக்குச் சொல்லுகிறது. அதையும்விட மோசமான ஒரு தகவலையும் அந்த வசனம் நமக்குத் தருகிறது.

2 இராஜாக்கள் 14:24

கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்கள் ஒன்றையும் அவன் விட்டு விலகவில்லை.

இதைவிட மோசமான ஒரு அறிமுகம் ஒருவனுக்குத் தேவையில்லை. இரண்டாம் யெரொபெயாம் பொல்லாப்பைச் செய்தது மட்டுமல்ல, இஸ்ரவேலைப் பாவம் செய்வதற்கு கைப்பிடித்து அழைத்துச் சென்ற முதலாம் யெரொபெயாம் செய்த பாவங்களில் ஒன்றையும் இவன் விட்டுவைக்கவில்லை என்கிறது வேதம். தன்னுடைய பெயருக்கேற்றபடி இவன், பாவம் செய்வதில் முதலாம் யெரொபெயாமுக்கு எந்தவிதத்திலும் பின்நிற்கவில்லை.

பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கும்போது அதைக் கவனத்தோடு செய்யவேண்டும். கடந்த வருடம் நான் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் விளையாட்டுப் போட்டியொன்றைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அதில் ஒரு விளையாட்டு வீரனின் பெயர் Sinner என்றிருந்தது. அதாவது ‘பாவி’ என்றிருந்தது. ஆங்கில ஆக்ஸ்போர்ட் அகராதியில்கூட அதற்கான அர்த்தங்கள் நல்லதாக இருக்கவில்லை. உண்மையில் நாமெல்லோருமே பிறப்பில் இருந்து பாவிகள்தான். எந்த நோக்கத்தோடு அந்தப் பெயர் கொடுக்கப்பட்டதோ எனக்குத் தெரியாது, பிறப்பிலிருந்து நாம் பாவிகள் என்பதை அந்தப் பெயர் தொடர்ந்து அந்த விளையாட்டு வீரனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தால் நல்லதுதான்.

பாவ உலகத்தைச் சேர்ந்த பாவஉணர்த்துதல் இல்லாதவர்களுக்கு அதைப்பற்றிய கவலைகளெல்லாம் இருக்காது. இரண்டாம் யெரொபெயாமுக்கு நிச்சயம் அந்தக் கவலை ஒருபோதும் வாழ்க்கையில் இருந்திருக்கவில்லை. இவனுக்கு ஏன் இந்தப் பெயர் கொடுக்கப்பட்டதென்று நாம் ஆச்சரியப்படலாம். ஏனென்றால், எந்தப் பிள்ளைக்கும் நாம் யூதாஸ் ஸ்காரியத்து என்று பெயர் வைக்க கனவிலும் நினைக்க மாட்டோம். இஸ்ரவேலின் யூதாஸ் ஸ்காரியத்து என்று சொல்லுமளவுக்கு கர்த்தருக்குத் துரோகியான முதலாம் யெரொபெயாம் பெயரை ஏன் இவனுக்கு வைத்தார்கள்? இந்த உலகத்து இச்சைகளின்படி, பாவநிலையில் இருந்து சிந்தித்தால் முதலாம் யெரொபெயாம் இஸ்ரவேலின் ‘ஒபாமா.’ அதில் எந்த சந்தேகமும் இல்லை.

தன் பதவிக்காலத்தில் அமெரிக்காவைத் துரிதமாக ‘லிபரல்’ வழிகளில் போவதற்கான சட்டங்களை இயற்றி சமூக இயந்திரத்தைப் பயன்படுத்தி கல்விக்கூடங்களில் இருந்து சமுதாயத்தைக் கர்த்தரின் வழிகளுக்கு எதிர்மாறான வழிகளில் போவதற்கான வழிமுறைகளை உருவாக்கி அதற்கெல்லாம் துணை நின்றதில் ஒபாமாவுக்குப் பெரும்பங்குண்டு. அந்தவிதத்தில் ஒபாமா ‘லிபரலிசத்தின்’ சாம்பியன். இதுபோலத்தான் இஸ்ரவேலுக்கு முதலாம் யெரொபெயாம். கர்த்தருக்கு முரணான ஆராதனையை ஏற்படுத்தி சமுதாயத்தைத் திசைதிருப்பியவன் இவனே. அந்தவிதத்தில்தான் அவிசுவாசிகளான இஸ்ரவேலர் யெரெபெயாமைப் பின்பற்றியிருந்திருப்பார்கள். கர்த்தர் இல்லை என்று அறைகூவலிட்டுக் கொண்டிருந்த ரிச்சர்ட் டோர்கின்ஸை ஆண்டவரை நிராகரிக்கும் அவிசுவாசிகள் சாம்பியனாகக் கொண்டாடவில்லையா? அதுபோலத்தான் இஸ்ரவேலுக்கு முதலாம் யெரொபெயாம். அதனால் தங்களுடைய சாம்பியனின் பெயரை வைப்போம் என்று இந்த அரசனுக்கு இரண்டாம் யெரொபெயாம் என்று அரசகுடும்பத்தார் பெயர் வைத்திருக்கலாம்.

இஸ்ரவேலில் இந்தமுறையில் இரண்டாம் யெரொபெயாம் காலத்திலும் பாவம் கட்டவிழ்த்துவிடப்பட்டு தொடர்ந்தது. முதலாம் யெரொபெயாம் செய்த பாவங்களைவிட இன்னும் அதிகமாக என்ன செய்யலாம் என்றவிதத்தில் இரண்டாம் யெரொபெயாம் போட்டிபோட்டுப் பாவம் செய்வதில் மூழ்கிப் போயிருந்தான். சிலைவழிபாடும், கானான் தேசத்துக் குட்டித்தேவர்கள், தேவதைகள் வழிபாடும், கர்த்தர் வெறுத்தொதுக்கியிருந்த மலைப்பிரதேசங்களில் செய்யப்பட்டு வந்த பலிகளும் எல்லையில்லாமல் நாட்டில் மக்கள் மத்தியில் ஊறிப்போயிருந்தன. புறஜாதி மக்களோடு போட்டிபோட்டு சிலை வழிபாட்டில் ஈடுபட்டு வந்திருந்தார்கள் இஸ்ரவேல் மக்கள்.

உடன்படிக்கையின் கர்த்தர் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாரா? என்ற கேள்வி எழும். நிச்சயம் அவர் கண்களுக்கு இதெல்லாம் தப்பவில்லை. அதுமட்டுமல்லாமல் அவர் இஸ்ரவேலரை அநேக தடவைகள் தீர்க்கதரிசிகள் மூலமாக எச்சரிக்கை செய்திருந்தார். அதற்கும் மேலாக அவர் என்ன செய்தார்? ஆமோஸ் 4:6-12 இதற்கு நமக்கு பதில் தருகிறது.

ஆமோஸ் 4:6-12

ஆகையால் நான் உங்கள் பட்டணங்களில் எல்லாம் உங்கள் பல்லுகளுக்கு ஓய்வையும், உங்கள் ஸ்தலங்களில் எல்லாம் அப்பக்குறைவையும் கட்டளையிட்டேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இதுவுமல்லாமல், அறுப்புக்காலம் வர இன்னும் மூன்றுமாதம் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யாமலிருக்கவும் பண்ணினேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்து போயிற்று. இரண்டு மூன்று பட்டணங்களின் மனுஷர் தண்ணீர் குடிக்க பட்டணத்துக்குப் போய் அலைந்தும் தாகந்தீர்த்துக்கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். கருக்காயினாலும் விஷப்பனியினாலும் உங்களைத் தண்டித்தேன்; உங்கள் சோலைகளிலும் திராட்சத்தோட்டங்களிலும் அத்திமரங்களிலும் ஒலிவமரங்களிலும் மிகுதியானதைப் பச்சைப்புழு அரித்துப்போட்டது; ஆகிலும் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். எகிப்தில் உண்டானதற்கு ஒத்த கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்கள் வாலிபரைப் பட்டயத்தாலே கொன்றேன்; உங்கள் குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்கள் பாளயங்களின் நாற்றத்தை உங்கள் நாசிகளிலும் ஏற்றப்பண்ணினேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். சோதோமையும் கொமோராவையும் தேவன் கவிழ்த்துப்போட்டதுபோல, உங்களைக் கவிழ்த்துப்போட்டேன்; நீங்கள் அக்கினியினின்று பறிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தீர்கள்; ஆனாலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகையால் இஸ்ரவேலே, இந்தப்பிரகாரமாக உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச்செய்யப்போகிறபடியினால் உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.

இதெல்லாம் நம் காலத்தில் நமக்கும் பொருந்தும். ஆனால், எந்த எச்சரிப்பைக் கொடுத்தபோதும், தற்காலிக தண்டனைகளைக் கர்த்தர் கொண்டுவந்தபோதும் இஸ்வேலர்கள் மனந்திரும்பவில்லை. அத்தனை எச்சரிக்கைகளையும் எந்த அக்கறையும் காட்டாமல் அவர்கள் உதாசீனப்படுத்தினார்கள். இப்போது அவர்களுக்கு காத்திருந்ததெல்லாம் இறுதித் தண்டனை மட்டுமே.

அழிவும், அமைதியும்

இந்த ஆத்மீகப் பின்னணியில்தான் நாம் இரண்டாம் யெரொபெயாமின் நீண்டகால ஆட்சியை அலசிப்பார்க்க வேண்டும். அவனுடைய தகப்பன் யோவாஸ். யோவாஸ் என்ற பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட அரசர்கள் இஸ்ரவேலிலும், யூதாவிலும் இருந்திருக்கிறார்கள். இந்த இரண்டாம் யெரொபெயாமைப் பற்றி 24ம் வசனத்தில் நூலாசிரியர் சொல்லுவதைக் கவனியுங்கள்,

2 இராஜாக்கள் 14:24

கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்கள் ஒன்றையும் அவன் விட்டு விலகவில்லை.

யெகூவின் நான்கு தலைமுறையின் கடைசி அரசனான இரண்டாம் யெரொபெயாம் 41 வருடங்கள் ஆட்சி செய்தான். இவன் காலத்தோடு யெகூவுக்கு கர்த்தர் அளித்த வாக்குத்தத்தம் முடிவுக்கு வரப்போகிறது. ஏனைய இஸ்ரவேல் அரசர்களைவிட, 13ம் அரசனான இவன் மட்டுமே அதிகமான வருடங்கள் ஆட்சி செய்திருக்கிறான். அந்தளவுக்கு இந்த மோசமான அரசன் ஆட்சி செய்ய ஏன் கர்த்தர் அனுமதித்தார்? இவன் எந்த நன்மையும் செய்யவில்லை; இவன் சிலைவழிபாட்டில் ஊறிப்போயிருந்தவன். கர்த்தரின் உடன்படிக்கையை நிராகரித்து அவருடைய கட்டளைகளை அலட்சியப்படுத்தி வாழ்ந்துவந்திருந்தான். அப்படியானால் இவனை இத்தனை வருடங்கள் ஆள ஏன் கர்த்தர் அனுமதித்தார்? இதற்தான பதிலுக்கு வருமுன் நாம் இன்னும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

இரண்டாம் யெரொபெயாம் 41 வருடங்கள் ஆண்டதுமட்டுமல்ல, ஏனைய அரசர்கள் செய்யமுடியாத விஷயங்களை இவன் இஸ்ரவேலில் செய்திருந்தான். இஸ்ரவேல் இழந்துபோயிருந்த பகுதிகளையெல்லாம் இரண்டாம் யெரொபெயாம் மறுபடியும் இஸ்ரவேலோடு இணைத்திருந்தான்.

2 இராஜாக்கள் 14:25

அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான்.

தன் தகப்பன் யோவாஸுக்குப் பிறகு பிரச்சனைகள் எதுவுமில்லாமல் இவன் அரசனானதோடு, இவன் காலத்தில் இஸ்ரவேலில் சமாதானம் நிலவியது. எதிரி நாடுகளான அசிரியாவும், எகிப்தும் இவன் காலத்தில் பலவீனமான நாடுகளாக இருந்தன. அதனால் இவனை எதிர்த்து நிற்க எவரும் இருக்கவில்லை. இலகுவாக இவன் இஸ்ரவேலை விஸ்தரித்து அமைதியோடு வாழமுடிந்தது என்று இந்த உலகத்து வரலாற்றாசிரியர்கள் விளக்கங்கொடுப்பார்கள். ஆனால், அவர்கள் பார்வையில் தவறில்லாமல் இருந்தபோதும், அதுவே இரண்டாம் யெரொபெயாம் அநேக காலத்துக்கு நாட்டில் பொருளாதார வளர்ச்சியையும், அமைதியையும் கண்டு வாழ்ந்ததற்குக் காரணம் என்று வேதத்தை நம்புகிறவர்கள் சொல்ல மாட்டார்கள்.

அப்படியானால் இந்தளவுக்கு குழப்பங்களில்லாத, அமைதியான நீண்ட ஆட்சிக்காலத்துக்குக் காரணமென்ன? இதை எப்படிக் கர்த்தர் இந்த மோசமான அரசன் காலத்தில் அனுமதித்தார் என்ற கேள்விகளெல்லாம் நம் மனதில் குதித்தெழாமலிருக்காது.

எப்போதுமே இதற்கெல்லாம் கர்த்தர் மட்டுமே காரணமாக இருக்கமுடியும். உலகத்தில் எந்த நிகழ்ச்சிக்கும் அவர் மட்டுமே அடிப்படைக் காரணம். அவரில்லாமல் ஒன்றும் இயங்காது. இறையாண்மையுள்ள கர்த்தர் அனுமதிக்காமல் எதுவும் நிகழமுடியாது. பல நிகழ்ச்சிகளுக்கான காரணங்கள் நம் கண்களுக்கு நேரடியாகப் புலப்படாமல் இருக்கலாம். ஆனால், கர்த்தர் அறியாததும், அவரில்லாமல் நிகழ்கின்றதும் உலகத்தில் ஒன்றுமேயில்லை.

இரண்டாம் யெரொபெயாமின் அமைதியான நீண்ட ஆட்சிகாலத்துக்குக்கான காரணத்தை வேதம் நமக்குத் தெரிவிக்கிறது. 2 இராஜாக்கள் 10:30 வசனத்தைக் கவனியுங்கள்.

2 இராஜாக்கள் 10:30

கர்த்தர் யெகூவை நோக்கி: என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாய்ச் செய்து, என் இருதயத்தில் இருந்தபடியெல்லாம் ஆகாபின் குடும்பத்துக்குச் செய்தபடியினால், உன் குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நாலு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்றார்.

இது இஸ்ரவேலின் அரசனாக இருந்த யெகூவுக்கு கர்த்தர் சொன்ன வார்த்தைகள். அவன் செம்மையாகச் செய்த காரியங்களுக்காகக் கர்த்தர் அவனுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் இது. அவனுடைய குமாரர் நான்கு தலைமுறைக்கு இஸ்ரவேலை ஆள்வார்கள் என்று கர்த்தர் சொல்லியிருந்தார். யெகூ முழு இருதயத்தோடும் நடந்திராமல் இருந்தாலும் அவன் ஆகாபின் குடும்ப விஷயத்தில் கர்த்தர் சொன்ன வார்த்தைகளை நிறைவேற்றியதால் கர்த்தர் இந்த வாக்குறுதியை அவனுக்குக் கொடுத்தார். யெகூவைப்போலவே அவனுடைய குமாரர்களும் கர்த்தரை அறியாமல் அவருக்கு விசுவாசமாக வாழாமல் போயிருந்தபோதும் கர்த்தர் தன்னுடைய வாக்குறுதியை மீறப்போவதில்லை. இந்த வாக்குறுதியின்படி யெகூவின் கடைசி நான்காம் தலைமுறையாக யெகூவின் குடும்பத்தில் வந்தவன்தான் இந்த இரண்டாம் யெரொபெயாம்.

யெரொபெயாம் மோசமானவனாக இருந்தபோதும், சிலைவழி பாட்டுக்காரனாக இருந்தபோதும், அவனுடைய நீண்ட ஆட்சிக்காலத்துக்குக் காரணம் இறையாண்மையுள்ள கர்த்தரே. இவன் காலத்தோடு கர்த்தர் யெகூவுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதி நிறைவுக்கு வருகிறது. வரலாற்று நிகழ்ச்சிகளுக்குக் கர்த்தர் காரணமில்லை என்றும், அதெல்லாம் தற்செயல் நிகழ்ச்சிகள் என்றும் கர்த்தரை அறியாதவர்கள் சொல்லிவருவார்கள். வரலாற்றின் தேவன் நம் கர்த்தர் என்பதை நாம் உணரவேண்டும். கிறிஸ்துவுக்கு முன் எட்டாம் நூற்றாண்டில் இஸ்ரவேலில் அமைதியான நீண்ட ஆட்சி நிகழ்ந்து வந்திருக்கிறதென்றால் அதற்கு அத்தகைய ஆட்சியை ஏற்படுத்தப்போவதாக கர்த்தர் வாக்குறுதி கொடுத்திருந்ததுதான் ஒரே காரணம்.

அத்தோடு, 2 இராஜாக்கள் 14:25 இன்னுமொரு விஷயத்தையும் நமக்கு விளக்குகிறது. யெகூவின் வார்த்தையின்படி கர்த்தர் இரண்டாம் யெரொபெயாம்வரை நாலுதலைமுறைக்கான ஆட்சியைக் கொடுத்ததை இதுவரை கவனித்திருக்கிறோம். இவன் இஸ்ரவேல் பறிகொடுத்த பகுதிகளையெல்லாம் மீண்டும் கைப்பற்றி எந்த அரசனும் செய்திராதளவுக்குப் பரந்த இஸ்ரவேல் தேசத்தை ஆண்டதற்கும் கர்த்தரே காரணம் என்பதையும் இந்த வசனம் விளக்குகிறது.

2 இராஜாக்கள் 14:25

காத்தேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் குமாரன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான்.

இந்த வசனத்தில் கடைசிப்பகுதியை மட்டுமே ஆரம்பத்தில் கவனித்தோம். இப்போது முழு வசனத்தையும் கவனியுங்கள். இரண்டாம் யெரொபெயாம் இஸ்ரவேலின் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டதற்குக் காரணம் அவனுடைய பராக்கிரமம் அல்ல. அவனுடைய பெரும்படைப் பலத்துக்கும், தேச விஸ்தரிப்புக்கும் கர்த்தரின் வாக்குறுதியே காரணம். இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் தீர்க்கதரிசி அமித்தாயின் குமாரனான யோனா. இந்த யோனாதான், யோனா நூலில் நாம் காண்கிற திமிங்கலம் விழுங்கிய யோனா. இரண்டாம் யெரொபெயாமின் தேச விஸ்தரிப்பைப்பற்றியும், படைகளின் வெற்றியையும் ஏற்கனவே யோனா மூலம் கர்த்தர் வெளிப்படுத்தியிருந்தார். இதெல்லாம் நிகழும்படியாக கர்த்தர் அனைத்தையும் தன் வாக்குறுதியின்படி திட்டமிட்டிருந்தார். அவருடைய வாக்குறுதியின்படி இஸ்ரவேல் அமைதியான ஆட்சியையும், பரந்த தேசத்தையும், பொருளாதார விருத்தியையும் இந்தக் காலத்தில் கொண்டிருந்தது. இதில் இரண்டாம் யெரொபெயாம் வெறும் கருவி மட்டுமே. அவனையும் மீறிக் கர்த்தரின் திட்டங்கள் அவன் மூலமாக அவனுடைய காலத்தில் நிறைவேறின.

இருந்தபோதும் நாம் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்குப் பதில்காண வேண்டும். மோசமான யெரொபெயாம் ஆட்சியில் இத்தனை நன்மைகளைக் கர்த்தர் ஏன் அனுமதித்தார்? கேடான ஒரு மனிதனைக் கர்த்தர் ஏன் பயன்படுத்தினார்?

இதற்கு 2 இராஜாக்கள் 14:26-27 நமக்குப் பதிலளிக்கிறது. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. அந்தக் காரணங்களை இந்த வசனங்கள் நம்முன் வைக்கின்றன.

2 இராஜாக்கள் 14:26-27

இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடிது என்றும், அடைபட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனுமில்லை என்றும் கர்த்தர் பார்த்தார். இஸ்ரவேலின் பேரை வானத்தின் கீழிருந்து குலைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லாமல், யோவாசின் குமாரனாகிய யெரொபெயாமின் கையால் அவர்களை ரட்சித்தார்.

1. முதலாவதாக, இஸ்ரவேல் அந்நிய தேசத்தாரால் அனுபவித்துவந்த துன்பங்களைக் கர்த்தர் கசப்பானதாகக் கண்டார்.

2 இராஜாக்கள் 14:26

“இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடிது”

26ம் வசனத்தில் ‘கொடிது’ என்ற வார்த்தைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள எபிரேய வார்த்தை ‘மாரா’ என்பது. இந்த வார்த்தையைப் பயன்படுத்தியே ரூத்தின் மாமியாரான நகோமி தன்னுடைய துன்பத்தை விளக்கினாள். அதாவது தான் அனுபவித்து வரும் துன்பங்கள் ‘கசப்பானது’ என்றாள்.

ரூத் 1:20

அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.

மாரா என்ற இந்த வார்த்தைக்கு அதுவே அர்த்தம். ஆங்கிலத்தில் இது bitter (affliction) (கசப்பான துன்பம்) என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கர்த்தரின் பார்வையில் அன்று இஸ்ரவேலின் துன்பம் affliction அத்தனை கசப்பானதாகத் தெரிந்தது. அது கர்த்தரின் பார்வைக்கு வந்தது.

இஸ்ரவேல் மக்கள் கர்த்தரின் கட்டளையைப் புறக்கணித்து வாழ்ந்தாலும், அவர்களைக் கர்த்தர் ஒட்டுமொத்தமாக அழிக்கப்போவதும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும், இந்தக் காலத்தில் உடன்படிக்கையின் மக்களான அவர்கள் படும் அவஸ்தை கர்த்தரின் பார்வைக்கு வந்தது. அவர்கள் இந்தளவுக்கு துன்பப்படுவது கர்த்தருக்குப் பிடிக்கவில்லை.

2. இஸ்ரவேலின் பாவங்களுக்காக நாட்டைப் பூரணமாக உடனடியாக அழித்துவிடுவது கர்த்தரின் திட்டமாக இருக்கவில்லை.

இஸ்ரவேல் படும் துன்பங்களில் இருந்து விடுதலை தர இஸ்ரவேலுக்கு எந்தத் துணையும் இல்லை என்பதையும் கர்த்தர் கண்டார். 26 – “அடைபட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனுமில்லை என்றும் கர்த்தர் பார்த்தார்.” அதனால், இஸ்ரவேலை அடியோடு அழித்து இல்லாமலாக்கிவிடுவது கர்த்தரின் உடனடித் திட்டமாக இல்லாதிருந்ததால், யோவாசின் குமாரனாகிய இரண்டாம் யெரொபெயாம் காலத்தில் இஸ்ரவேலுக்கு அவர் விடுதலை தரத் தீர்மானித்தார்.

2 இராஜாக்கள் 14:27

இஸ்ரவேலின் பேரை வானத்தின் கீழிருந்து குலைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லாமல், யோவாசின் குமாரனாகிய யெரொபெயாமின் கையால் அவர்களை ரட்சித்தார்.

அதாவது, மூச்சுவிட மிகவும் சிரமப்படுகிறவனுக்கு வென்டிலேட்டரையோ அல்லது நெபியூலைசரையோ பயன்படுத்தி இலகுவாக மூச்செடுக்க டாக்டர்கள் உதவிசெய்வதுபோல் கர்த்தர் இஸ்ரவேல் மக்கள் இப்போதைக்கு மூச்சுவிட உதவிசெய்யத் தீர்மானித்தார். அப்படி அவர்கள் அனுபவித்துக்கொண்டிருந்த அவஸ்தையிலிருந்து விடுபட்டு இலகுவாக மூச்சுவிடுவதற்கு அவர் கொடுத்திருந்த வென்டிலேட்டர்தான் இரண்டாம் யெரொபெயாம்.

இந்தப் பகுதியிலிருந்து மூன்று பாடங்களை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது:

3. இறையாண்மையுள்ள கர்த்தர் மிகவும் இலகுவான இருதயம் கொண்டவர், கருணையுள்ளவர். (Soft hearted)

இஸ்ரவேலின் கோரமான பாவங்களை அவர் உதாசீனப்படுத்தவில்லை; அவற்றை அவரால் ஒதுக்கிவிட முடியாது. அதேபோல் நம் பாவங்களையும் கர்த்தர் கவனிக்காமல் இருந்துவிட மாட்டார். இருந்தபோதும் அவருடைய வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றாமல் போகமாட்டார். இஸ்ரவேலின் பாவங்களுக்கு இறுதி முடிவு வரத்தான் போகிறது. ஆனால், அவர்களுடைய தற்காலிக துன்பக்குரலுக்கு அவர் செவிகொடுக்காமல் போகவில்லை. இஸ்ரவேல் மீதான அவருடைய கரிசனை, அவருடைய வாக்குறுதிகளுக்கோ, திட்டங்களுக்கோ முரணானதல்ல. கர்த்தர் இலகுவான இருதயம் கொண்டவராக இருப்பதால்தான் கோவிட்-19 நம்மை இன்றைக்கு அடியோடு இல்லாமலாக்கிவிடவில்லை. உலகத்தின், சமுதாயத்தின் பாவங்களை மட்டும் கணக்கெடுத்துப் பார்த்தால், கோவிட்-19ல் இப்போதைக்கு உலகத்தின் அரைவாசிக்குமேல் காலியாகிவிட்டிருக்கவேண்டும். ஆனால், கர்த்தர் இலகுவான இருதயம் கொண்டவர், கருணையுள்ளவர், இறுதி நியாயத்தீர்ப்பின்போது கொட்டப்போகும் அவருடைய கோபாக்கினைக்கு முன் கோவிட்-19 வெறும் எறும்புக்கடி மட்டுமே. கர்த்தரின் இலகுவான இருதயம், கரிசனையோடு கோவிட்-19 மூலம் மனிதர்களை மனந்திரும்பும்படி அழைக்கிறது. அவருடைய பொறுமையையும், கரிசனையையும் நம்மீது அவருக்கு இருக்கும் சந்தோஷமாக எண்ணிவிடக்கூடாது. அவர் இரண்டாம் யெரொபெயாம் காலத்தில் அவனுக்குக் காட்டிய சலுகைகள், அவன்மீது அவர் கொண்டிருந்த அன்பால் அல்ல. அவை பொதுவாக எல்லாப் பாவிகள் மீதும் அவர் காட்டுகிற பொதுவான கருணையே. அதன் மூலம் கர்த்தர் பாவிகளுக்கு மனந்திரும்ப அவகாசம் கொடுக்கிறார்.

ரோமர் 2:3-4

இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயா? அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?

4. வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் வசதிகள் அனைத்தும் கர்த்தரின் கருணைக்கு அடையாளமாக இருக்கலாம், ஆனால் அது நாம் வாழும் வாழ்க்கைக்கான பாராட்டுதல் என்று நினைத்துவிடக்கூடாது.

இரண்டாம் யெரொபெயாம் அனுபவித்த சலுகைகள், வாழ்க்கை வசதிகள் கர்த்தரின் கருணையால் வந்தவை. அவை, அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கோ, இஸ்ரவேல் மக்களின் பாவங்களுக்கோ வந்த பாராட்டுதல்கள் அல்ல. யெகூவுக்குக் கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலின் இறுதிக்கட்டமே இவனுடைய காலம். வரப்போகும் சுனாமிக்கு முன் கடற்கரை அமைதியாக இருப்பதுபோல் இவன் காலத்தில் அமைதி நிலவியது. அந்த அமைதி சுட்டும் சுனாமி பற்றி அன்று எவருமே எண்ணிப்பார்க்கவில்லை. அந்த அமைதிக்காலத்தைப் பயன்படுத்தி எவரும் கர்த்தரை நாடவில்லை. கர்த்தர் தங்களோடிருப்பதாக அவர்கள் மார்தட்டிக்கொண்டிருந்திருக்கலாம். இரண்டாம் யெரொபெயாமின் 41 வருட ஆட்சிக்குப் பின் வரப்போகும் அழிவை அவர்கள் உணரவில்லை. அதிலிருந்து தப்பிக்கொள்ளவும் வழிதேடவில்லை.

இஸ்ரவேல் பாவத்தில் தொடர்ந்திருந்து, வாழ்க்கை வசதிகளால் கண்கள் மறைக்கப்பட்டு வாழ்ந்தபோது இன்னுமொரு தீர்க்கதரிசியான ஆமோஸ் அவர்களை எச்சரித்திருக்கிறார்.

ஆமோஸ் 5:10-11

“ஒலிமுகவாசலிலே கடிந்துகொள்ளுகிறவனை அவர்கள் பகைத்து, யதார்த்தமாய்ப் பேசுகிறவனை வெறுக்கிறார்கள். நீங்கள் தரித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தைச் சுமை சுமையாய் வாங்குகிறபடியினால், நீங்கள் பொளிந்த கற்களால் வீடுகளைக்கட்டினீர்கள், ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை.”

வாழ்க்கை வசதிகள் நம் கண்களை மறைத்துவிடலாம். பாவத்தில் தொடர்கிறவர்களுக்கு வாழ்க்கை வசதிகள் ஆபத்தாக முடிந்துவிடுகின்றன. மனந்திரும்ப அவை தடையாக மாறிவிடலாம். அதுவே இஸ்ரவேலுக்கு நடந்தது. இரண்டாம் யெரொபெயாம் கர்த்தரின் பொதுவான கிருபையை அலட்சியப்படுத்தினான். அவர் தந்த சலுகைகளை இறுமாப்போடு தன்னுடைய தகுதிக்கான ஆசீர்வாதமாக எடுத்துக்கொண்டான். அது அவனுக்கு ஆபத்தாக அமைந்தது. வாழ்க்கையில் கர்த்தரின் பொதுவான கிருபையை அனுபவிப்பவர்கள் சிந்திக்க வேண்டும். உங்களுக்குச் சுவிசேஷம் கேட்கும் வசதி கிடைத்திருக்கிறது; நல்ல சபையில் இருந்து ஆராதிக்கும் வசதி கிடைத்திருக்கிறது; நல்ல வழிநடத்தல் கிடைத்திருக்கிறது. இருந்தும் இவற்றை உதாசீனம் செய்து பாவத்தில் தொடர்கிறீர்களா? இந்தக் கிருபைகளை உங்களுடைய வாழ்க்கை ஆசீர்வாதங்களாக நினைத்து பாவத்தில் தொடர்கிறீர்களா? மனந்திரும்புதலுக்கு வாழ்க்கையில் இடங்கொடுக்காமலிருக்கிறீர்களா?

மெய்யான மனந்திரும்புதலைத் தவிர வேறெதுவும் கர்த்தரை சமாதானப்படுத்தாது. அதைத்தவிர வேறெதையும் கர்த்தர் சகிக்கவும் மாட்டார். இஸ்ரவேலுக்குக் கிடைத்த தற்காலிக அமைதியும், வாழ்க்கை வசதியும் நிரந்தரமானதல்ல. அவர்கள் மனந்திரும்பி கர்த்தரை விசுவாசித்திருந்தால் அவர்கள் வருங்காலத்தில் வரவிருக்கும் பெருந்தண்டனையில் இருந்து தப்பியிருக்கலாம். ஆனால் அவர்கள் அதை நாடவில்லை. எத்தனை பெரிய எச்சரிக்கை இது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் இருதயம் மனந்திரும்புதலுக்கு இடங்கொடுக்காதிருந்தால் இஸ்ரவேலின் கதியே உங்களுக்கும். உடனடியாகத் தீவிரமாகச் சிந்தித்து மனந்திரும்பினால், இயேசுவை நாடி வந்தால் உங்களுக்கு விடிவு உண்டு.

வெளிப்படுத்தின விசேஷம் 22:12-15

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.

5. வரலாற்றைக் கர்த்தர் ஒழுங்குபடுத்தி நடத்திச் செல்லும் முறை நமக்கு ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.

மிக மோசமான ஒரு அரசன் 41 வருடங்கள் ஆளவும், தன் வாழ்நாளில் மிகவும் வசதியாகவும், பலமான தேசத்தையும், பரந்த எல்லைகளையும் கொண்டு வாழமுடிந்திருக்கிறது. இரண்டாம் யெரொபெயாம் இதற்காக எப்படியெல்லாம் சந்தோஷப்பட்டு இறுமாப்போடு இருந்திருப்பான் என்று எண்ணிப்பாருங்கள்.

அவனுக்குத் தெரிந்திராதது என்ன? அவன் மூலம் கர்த்தரின் வார்த்தை நிறைவேறியிருக்கிறது. அவனை அந்தளவுக்கு வாழ அனுமதித்த கர்த்தர் தன் திட்டங்களை அவன் மூலம் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார் என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கவில்லை. அவனுக்குப் பிறகு இஸ்ரவேல் இல்லாமல் போகப்போகிறது என்பதை அவன் உணர்ந்திருக்கவில்லை. யெரொபெயாமின் ஆட்சிக்காலத்தை வெறும் மனித வல்லமையினால் நிகழ்ந்ததாக மட்டும் பார்க்கிறவர்களுக்கு உண்மை தெரிந்திருக்கவில்லை. இதற்குப் பின்னால் இருந்து கர்த்தர் வரலாற்றை நடத்திச் செல்லுகிறார். இதுபோல்தான் உலகத்தில் கொடியவர்கள் வல்லமையோடு ஆட்சிசெய்து வரும்போது, அதெல்லாம் தங்களுடைய பெலத்தாலும், ஞானத்தாலும் நிகழ்வதாக எண்ணிக்கொள்வார்கள். ஹிட்லர் அப்படித்தான் நினைத்திருந்திருப்பான். இன்று தலிபான் ஆப்கானிஸ்தானில் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். கர்த்தரின் அனுமதியில்லாமல் அவர்கள் நாட்டைப் பிடித்திருக்க முடியாது. அவர்கள் இப்போது கொக்கரித்துக்கொண்டிருக்கலாம், ஆனால், பரலோகத்தில் இருக்கும் கர்த்தர் அதைப்பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறார். தலிபானின் எழுச்சி கர்த்தர் தன் திட்டத்தை நிறைவேற்ற அவசியமாக இருந்திருக்கிறது என்பதை நாம் மறக்கக்கூடாது. அமைதியான காலத்தை நாம் பயன்படுத்திக் கர்த்தரை நாடாமல் இருந்தால், அவருடைய திட்டப்படி கடுமையான காலங்களை நாம் அனுபவிப்பதைத் தவிர்த்துக்கொள்ள முடியாது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s