கர்த்தருடைய நாள்: கிறிஸ்தவ சபத்து நாள்

கர்த்தருடைய நாளைப் பற்றி விளக்கமளிக்கும் தமிழ் நூல்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. அப்படியே தவறி இருந்துவிட்டாலும், இதுபற்றித் தெளிவான மெய்யான விளக்கத்தை அவை தந்திருக்குமா என்பது சந்தேகமே. அதற்குக் காரணம் எனக்குத் தெரிந்தவரையில் நம்மினத்தில் 18ம் நூற்றாண்டுக் காலத்தில் திருநெல்வேலிப் பக்கம் பணிபுரிந்திருந்த சில மிஷனரிகளைத் தவிர வேறு எவரும் கர்த்தரின் நாளுக்கு மதிப்புக்கொடுத்து அதை அனுசரித்தும், அனுசரித்து வரும்படி சபை மக்களுக்குப் போதித்தும் வந்திருந்தவர்கள் மிகக் குறைவு. கர்த்தருடைய நாளென்று ஒன்று இருக்கிறதென்றறிந்து வாரத்தின் முதல் நாளில் சபைக்கூட்டங்களை நடத்திவருகிறவர்கள் இருந்தபோதும், அதற்கும் அந்த முழுநாளையும் ஆண்டவரின் நாளாக, கிறிஸ்தவ சபத்துநாளாக அனுசரிப்பதற்கும் வடதுருவத்திற்கும், தென்துருவத்திற்கும் இடையில் இருக்கும் தூரமளவுக்கு இடைவெளி இருக்கிறதென்பது அனேகருக்குத் தெரிந்திருக்கவில்லை. இதை வாசிக்கிறபோதே பலருடைய மனம் நான் சொல்வது பற்றிக் கேள்வியெழுப்ப ஆரம்பித்திருக்கும். இதுபற்றி விளக்கும் ரொபட் மார்டின்,

‘கிறிஸ்தவ வரலாற்றின் ஒவ்வொரு காலப்பகுதியிலும் திருச்சபை இறையியல் போராட்டத்தைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது. இதில் 20ம் நூற்றாண்டு மிகவும் தீவிரமான இறையியல் விவாதத்தில் ஈடுபட்ட நூற்றாண்டாக இருந்திருக்கிறது. வேதத்தின் அதிகாரத்தைக் குறித்த பழைய போராட்டங்கள் மறுபடியும் தலைதூக்கித் தீவிரமாக கிறிஸ்தவ விசுவாசத்திற்கும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் புதிய யுகத்திற்கான அர்த்தத்தைத் தேட ஆரம்பித்தன. இந்நூற்றாண்டில் தலைதூக்கிய கெரிஸ்மெட்டிக் இயக்கத்தின் காரணமாகப் பரிசுத்த ஆவியானவர் பற்றிய இறையியல் போதனை பியூரிட்டன் காலத்துக்குப் பிறகு முதல் முறையாக பெருமளவுக்கு விவாதிக்கப்பட்டது. இது தவிர வேறு இறையியல் போதனைகளும் பலரது கவனத்தையும் ஈர்த்தன; விசுவாசத்தினால் நீதிமானாகுதல், கர்த்தரால் ஏற்றுக்கொள்ளத் தகுந்த ஆராதனை முறை, கிறிஸ்தவ வாழ்க்கையில் நியாயப்பிரமாணத்தின் இடம் என்பது போன்ற அதிமுக்கிய போதனைகள் பற்றிய விவாதங்கள் எழுந்தன. ஒவ்வொரு யுகத்தில் வாழும் கிறிஸ்தவர்களும் இத்தகைய இறையியல் கேள்விகளுக்குப் பதில் தேடியாக வேண்டியிருக்கிறது. நாம் வாழும் யுகமும் இதற்கு விதிவிலக்கானதல்ல’ என்றெழுதியிருக்கிறார்.

டாக்டர் மார்டின், இதைத் தன்னுடைய 418 பக்கங்களைக்கொண்ட ‘கிறிஸ்தவ சபத்து’ (Christian Sabbath) எனும் அருமையான நூலின் அறிமுகத்தில் எழுதியிருக்கிறார். இந்த நூல் கிறிஸ்தவ சபத்து (கர்த்தரின் நாள்) பற்றிய பியூரிட்டனான ஜோன் ஓவனின் போதனைகளுக்கு இணையானது என்று கூறலாம். நம் காலத்தில் கர்த்தருடைய நாள் பற்றி விளக்கும் நூல்களில் முன்னிலையில் இருக்கும் ஆய்வும், ஆழமும், வேத அதிகாரமும் கொண்ட ஆணித்தரமான நூல் இது என்பது என் கருத்து.

மேலைத்தேய நாடுகளில் ஓய்வுநாள்

மேலைத்தேய நாடுகளில் 19ம் நூற்றாண்டுவரை கர்த்தருடைய நாளான கிறிஸ்தவ சபத்து பற்றி எவரும் கேள்வியெழுப்பியது கிடையாது. அதுவரை அதை வேதபோதனையாக அனுசரித்துவரப் பழகியிருந்தார்கள். அத்தோடு அதுவரை உலகமும்கூட ஞாயிறு தினத்தை விடுமுறை தினமாக மட்டும் கருதாமல், கடைகளைத் திறந்து வியாபாரம் செய்வதையும் தடைசெய்து வைத்திருந்தார்கள். முழு நாளையும் கடவுளுடைய நாளாக அனுசரித்து வந்திருந்தனர். இதற்குக் காரணம் 18ம் நூற்றாண்டுவரை சுவிசேஷத்தின் மூலம் பொதுவான கிருபையின் செல்வாக்கு மேலைத்தேய நாடுகளில் இருந்து வந்திருக்கிறது. அதெல்லாம் 19ம் நூற்றாண்டில் அடியோடு மாற ஆரம்பித்து ஞாயிறு தினத்தில் அதுவரை செய்துவந்திராத செயல்களையெல்லாம் சமுதாயம் செய்ய ஆரம்பித்தது. 20ம் நூற்றாண்டில் இருந்து சுவிசேஷக் கிறிஸ்தவர்களும் ஞாயிறு தினத்தை விடுமுறை தினமாக மட்டுமே கணிக்க ஆரம்பித்தார்கள்; ஓய்வுநாளில் வேலைக்குப் போவதை அவர்கள் குற்றவுணர்வில்லாமல் வழக்கமாகக்கொள்ள ஆரம்பித்தார்கள். திருச்சபைகளும் மக்களைச் சபைக்கு வரவழைப்பதற்காக, சிறுபிள்ளைகளுக்கு இனிப்புக்கொடுப்பதுபோல் இசை நிகழ்ச்சிகளையும் வேறு நிகழச்சிகளையும் நடத்த ஆரம்பித்தார்கள். ஓய்வுநாள் அனுசரிப்பு என்பது பழைய ஏற்பாட்டு யூதமுறை என்றும், புதிய ஏற்பாட்டுக் காலத்துக்கு அது எந்தவிதத்திலும் உகந்தது அல்ல என்ற எண்ணமே கிறிஸ்தவர்கள் மத்தியில் பொதுவாக இருந்துவரும் கருத்தாக இருக்கிறது. சீர்திருத்த கிறிஸ்தவ திருச்சபைகள் மட்டுமே இதற்கு விதிவிலக்காக ஓய்வுநாளைக் கர்த்தருடைய கிறிஸ்தவ சபத்து நாளாக அனுசரித்து வந்தன. இந்த 21ம் நூற்றாண்டில் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டிருக்கிறது. திருச்சபைக்கு மதிப்புக்கொடுக்காமல் நிறுவன ஊழியங்களை நடத்திவருவது அதிகரித்து அதன் காரணமாக ஓய்வுநாளில் ஆராதனைக்குக் கூடிவருவதற்கு மதிப்பில்லாமல் போயிருக்கிறது. 2020ல் ஆரம்பித்த கோவிட்-19 இதை இன்னுமொரு கட்டத்துக்குக் கொண்டுபோய் சபைகூடிவருதலை Zoom கூடிவருதலாக மாற்றிவிட்டிருக்கிறது. ‘ஓய்வுநாளை இல்லாமாக்கினால் கிறிஸ்தவம் இல்லாமல் போய்விடும்’ என்று ஜே. சி. ரைல் என்றோ சொன்ன வார்த்தைகளை நினைவுபடுத்துவதுபோல் ஓய்வுநாளை மதிப்பதும் அருகிப்போய் கிறிஸ்தவ செல்வாக்கும் மேலைநாடுகளில் குறுகிப்போயிருக்கிறது.

பசுபிக் தீவுநாடுகளில் ஓய்வுநாள்

நான் வாழும் நியூசிலாந்து நாட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சில தீவுநாடுகளில் (Island nations) இன்றும் ஞாயிறு தினத்தில் கடைகளைத் திறந்துவைத்து எவரும் வியாபாரம் செய்வதில்லை. அதுமட்டுமல்லாமல் முழுத்தீவு மக்களும் அந்நாளில் சபைகளுக்குப்போய் ஆராதனை செய்வார்கள் (டொங்கா, சாமொவா, ராரடொங்கா, பீஜீ போன்றவை). இந்நாடுகளில் சுவிசேஷ கிறிஸ்தவத்தின் பாதிப்பு இன்று மிகவும் குறைந்து காணப்பட்டபோதும், ஞாயிறு தினத்தில் எல்லோரும் சபைக்குப்போய் வருவதும், அந்நாளில் முழுக்கடையடைப்பும், விமானதளங்களும் இயங்காத நிலை இன்றும் தொடர்கின்றது. நான் பல வருடங்களுக்கு முன் ராரடொங்கா (குக் தீவுகள்) நாட்டிற்கு விடுமுறைக்குப் போயிருந்தபோது ஞாயிறு தினத்தில் ஒரேயொரு கடை மட்டுமே அவசரத் தேவைக்காகத் திறந்துவைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். விமானநிலையம் உட்பட அனைத்தும் அந்நாளில் மூடப்பட்டு, நாட்டு மந்திரிகளும்கூட ஆராதனைக்குச் சபைக்குப் போனார்கள். மக்கள் புதிய உடைகளை உடுத்தி மரியாதையோடு ஆராதனைக்குப் போனார்கள். அவர்களுடைய சபை ஆராதனையில் கலந்துகொண்டபோது அவர்கள் ராகத்தோடு அருமையாகப்பாடி ஆராதித்ததை அவதானித்தேன். இன்றும் இத்தீவுகள் ஞாயிறு தினத்தை கர்த்தருடைய நாளாக அனுசரிப்பது அங்கே வழக்கத்தில் இருந்து வருகிறது. சுவிசேஷத்தினால் அல்லாமல் இந்தக் கிருபை இந்நாடுகளுக்குக் கிடைக்கவில்லை. இன்று சுவிசேஷத்தை இந்நாடுகள் இழந்துகொண்டிருக்கின்றன. கர்த்தருடைய நாளை அனுசரிப்பது அத்தனை அவசியமானதும், கர்த்தரை மகிமைப்படுத்தும் செயலாகவும் இருந்தபோதும் சுவிசேஷ கிருபையை கிறிஸ்துவுக்குள் அனுபவித்திராமல் அதைச் செய்வதால் எந்தப் பயனுமில்லை.

நம்மினத்தில் ஓய்வுநாள்

நம்மினத்து நிலைமை இதையெல்லாம்விட மோசமானது. மேலைநாட்டுக் கிறிஸ்தவம் சத்தியத்தை அறிந்திருந்து, அதை அனுபவித்து, நல்ல திருச்சபைகளைக் கண்டிருந்தும் இன்று கர்த்தருடைய நாளைத் தூக்கியெறிந்துவிட்டு திசைமாறிப்போய்க் கொண்டிருக்கிறது. நம்மினத்தில், மேலைநாடுகளைப்போல சத்திய எழுப்புதல் ஏற்பட்டு, திருச்சபைகள் நல்லவிதமாக அமைக்கப்பட்டு கர்த்தருடைய நாள் அனுசரிப்பைக் கொண்டிருந்ததை நம்மவர்கள் கண்டதில்லை. 18ம் நூற்றாண்டில் ஸ்கொட்லாந்து போன்ற பகுதிகளில் இருந்து வந்த நல்ல மிஷனரிப்போதகர்களும், அதற்குப்பின் வில்லியம் கேரி போன்ற வெகுசிலரே கர்த்தருடைய நாள் அனுசரிப்பைக்குறித்துப் பிரசங்கித்தும், உதாரணபுருஷர்களாக இருந்தும் வந்திருக்கின்றனர். கர்த்தருடைய நாள் அனுசரிப்பு பற்றிய போதனைகளும் பெருமளவுக்கு நம்மினத்தில் கொடுக்கப்படவில்லை. வாரத்தில் ஒருநாளில் ஆராதனை நடத்தவேண்டும் என்றும், அதற்கு ஞாயிறு வசதியாக விடுமுறை தினமாக இருப்பதால் அந்நாளில் ஆராதனை நடத்தலாம் என்றவிதத்தில் மட்டுமே இன்று கர்த்தருடைய நாள் பற்றிய எண்ணங்களைத் 99% மானோர் கொண்டிருக்கிறார்கள். ஆராதனை முடிந்தபின், அந்நாளில் எதையும் செய்யலாம் என்ற எண்ணத்தோடு வேலை செய்வது முதல், பண்டிகைகள் கொண்டாடுவதும், கடைகளுக்குப் போய் பொருட்களை வாங்குவதும், உணவருந்துவதும் அனைத்து சமூகக் கொண்டாட்டங்களையும் நடத்திவருவதுமே இன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் வழக்கமாக இருந்துவருகிறது. கர்த்தருடைய நாள் அனுசரிப்பைப்பற்றிப் போதகர்களும், பிரசங்கிகளும்கூட அதிகளவில் அறிந்துவைத்திருக்கவில்லை. கர்த்தருடைய நாள் அனுசரிப்பு நம் காலத்துக்கும், பண்பாட்டிற்கும் ஒத்துப்போகாதது என்ற எண்ணப்போக்கும், புறஜாதி இனத்தார் மத்தியில் வாழுகிறபோது கர்த்தருடைய நாள் அனுசரிப்பு நடக்காத ஒன்று என்ற சிந்தனையும் காணப்படுகிறது.

இத்தகைய கிறிஸ்தவ சமூக சூழலில் கர்த்தருடைய நாளின் அவசியத்தைப்பற்றி விளக்க முனைகிறபோது எதிர்ப்புக்குரல்கள் எழுவதில் ஆச்சரியமொன்றுமில்லை. எதிர்ப்புக்குரல் எழுகிறதென்பதற்காக சத்தியம் சத்தியமில்லாமல் போய்விடாது. சத்தியமுரண்பாட்டில் ஈடுபட்டு வாழ்ந்து பழகிவிட்டவர்களுக்கு அப்பட்டமாக சத்தியத்தின்படி நடப்பது கஷ்டமாக இருப்பதிலும் ஆச்சரியமில்லை. இருந்தபோதும் சத்தியத்தை சத்தியமாக விசுவாசித்து அதன்படி வாழவேண்டும் என்பதே தனிப்பட்ட கிறிஸ்தவனுக்கும், சபைக்கும் கிறிஸ்துவின் கட்டளையாக இருக்கிறது. நம்மினத்துச் சூழல் அதற்கு ஒத்துப்போகும்விதத்தில் இல்லை என்பதற்காகவும், கர்த்தருடைய நாளைப்பற்றியெல்லாம் வலியுறுத்திப் போதித்தால் ஊழியத்தை வளர்த்து ஊதியத்தை உயர்த்திக்கொள்ள முடியாது என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பவர்களுக்கும் கிறிஸ்தவமும் வேதமும் அவசியமில்லை. கிறிஸ்து போதித்து விளக்கி, தானே உதாரணமாக இருந்து வாழ்ந்து காட்டியிருக்கும் கிறிஸ்தவம் அவசியம் என்றால் யார் என்ன சொல்லுவார்கள் என்பதற்கெல்லாம் இடம்கொடாமல் கிறிஸ்தவ வேதம் போதிப்பதை உள்ளது உள்ளபடியாகப் பின்பற்றி விசுவாசத்தோடு வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை.

ஜோசப் பைப்பாவின் நூல்

ஜோசப் பைப்பா (Joseph Pipa) என்ற போதகரும், இறையியலறிஞரும் ஆங்கிலத்தில் ‘கர்த்தருடைய நாள்’ (The Lord’s Day) என்ற தலைப்பில் அருமையானதொரு நூலை எழுதியிருக்கிறார். இதை நான் பலருக்கும் பலதடவைகள் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். கர்த்தருடைய நாளைப் பற்றி எளிமையாகவும், ஆணித்தரமாகவும் எழுதப்பட்டிருக்கும் நவீன ஆங்கில நூல்களில் இதை நான் முதலிடத்தில் வைப்பேன். இது சீர்திருத்த இறையியலறிஞர்கள் ஒத்துக்கொள்ளுகிற உண்மை. ஜோசப் பைப்பா தன் நூலின் சாராம்சத்தை கையடக்க நூல் வடிவில் (Is the Lord’s Day for you) வெளியிட்டிருக்கிறார். அதில் பைப்பா பின்வருமாறு எழுதியிருக்கிறார்,

‘சீர்திருத்த பக்திவிருத்தி சீர்திருத்த சிந்தனையில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்தப் பக்திவிருத்தி, நம் வாழ்க்கையில் திருச்சபைக்கு அளிக்கும் முக்கியத்துவம், குடும்ப ஆராதனை நடத்துதல், கர்த்தரின் ஒழுக்கநியதிக் கட்டளைகளான பத்துக்கட்டளைகளை உண்மையோடு பின்பற்றுதல், கர்த்தரின் வார்த்தை வழியிலான ஆராதனையில் கலந்துகொள்ளுதல் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது. இந்த பக்திவிருத்திக்கு அடித்தளமாக இருப்பது, கர்த்தருடைய நாள் கிறிஸ்தவ சபத்தாக இருக்கிறது என்ற ஆழமான நம்பிக்கையைக் கொண்டிருந்து, பொது ஆராதனையில் கலந்துகொண்டும், மீதமான நேரங்களில் தனிப்பட்ட, குடும்ப ஆராதனைகளை நடத்தியும், கிறிஸ்தவ பணியில் ஈடுபட்டும் இந்நாளைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்பதாகும்.’

ஜோசப் பைப்பாவின் இந்த வார்த்தைகள் வாசகர்களின் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். சீர்திருத்தப் போதனைகளின் கீழ் மெய்யாகத் திருச்சபை நடத்தி வராதவர்களின் கீழ் வளர்ந்திருக்கிறவர்களுக்கு இது உண்மையா? என்ற சிந்தனையைக் கிளப்பும். கர்த்தருடைய நாளுக்கும் பக்திவிருத்திக்கும் என்ன தொடர்பு என்று கேட்டு மனம் அலைமோதும். ஜோசப் பைப்பாவின் வார்த்தைகள் உண்மையானவை. வாரத்தின் ஒரு நாளைத் தனியாகப் பிரித்து அதைப் பரிசுத்தப்படுத்தி அந்த நாளை நாம் பரிசுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருப்பது கர்த்தரே (ஆதியாகமம் 1; யாத்திராகமம் 20). கர்த்தருடைய நாளான கிறிஸ்தவ சபத்து நாளில் ஆவிக்குரிய காரியங்களை இருதயத் தூய்மையுடன் விசுவாசத்தோடு செய்வதன் மூலமே அந்த நாளைப் பரிசுத்தமாக வைத்திருக்க முடியும். அந்த நம்பிக்கையே சீர்திருத்தவாதிகளிடமும், பியூரிட்டன் பெரியவர்களிடமும் இருந்தது. அதுவே இன்றைய சீர்திருத்த பாப்திஸ்துகளிடமும் இருந்து வருகிறது.

1689 விசுவாச அறிக்கையில் கர்த்தருடைய நாள்

கர்த்தருடைய நாள் கிறிஸ்தவ சபத்து நாளாக இருக்கிறதென்ற வேத சத்தியத்தை 1689 பாப்திஸ்து விசுவாச அறிக்கை மற்றும் வினாவிடைப் போதனையும், வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை மற்றும் வினாவிடைப் போதனையும், ஹைடில்பேர்க் வினாவிடைப்போதனையும் தெளிவாக விளக்கி அந்நாளை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று விளக்குபவையாக இருக்கின்றன. ஆதிசபையில் ஆரம்பித்து, சீர்திருத்தவாத காலத்தில் புதுப்பிக்கப்பட்டு, பியூரிட்டன்களின் காலத்தில் எழுச்சியோடிருந்து, 19ம் நூற்றாண்டில் சார்ள்ஸ் ஸ்பர்ஜனும், அவருடைய சமகாலத்தவர்களாக பிரிட்டனில் இருந்த பெட்ரிக் பெயார்பேன், தோமஸ் சார்மஸ், வில்லியம் கன்னிங்கம் ஆகிய கிறிஸ்தவ தலைவர்களும், அதேகாலப்பகுதியில் அமெரிக்காவில் கிறிஸ்தவ தலைவர்களாகவும் இறையியலறிஞர்களாகவும் இருந்த ரொபட் டெப்னி, அலெக்சாண்டர் ஹொட்ஜ், சார்ள்ஸ் ஹொட்ஜ், சாமுவேல் மில்லர், பென்ஜமின் வோர்பீல்ட் ஆகியோரும், அவர்கள் சார்ந்திருந்த திருச்சபைகளும் விசுவாசத்தோடு ஆணித்தரமாகப் பின்பற்றி வந்திருந்த கர்த்தருடைய நாள் அனுசரிப்பு 20ம் நூற்றாண்டில் இருந்து திசைமாறிப் போக ஆரம்பித்தது. நவீன கிறிஸ்தவ சமூகம் இன்று கர்த்தருடைய நாளைத் தூக்கியெறிகிறதென்பதற்காக சத்தியம் இல்லாமல் போய்விட்டது என்று அர்த்தமல்ல. நம் காலத்தில் கர்த்தரின் வார்த்தைக்கெதிராக வாழ்வதற்கான யுத்திகளைத் தேடி அலையும் தாராளவாத, யெரொபெயாம் சமுதாயத்தின் போக்கிற்கு எதிர்த்து நின்று படைப்பில் உருவாக்கப்பட்ட ஓய்வுநாளை நாம் நம் காலத்தில் கர்த்தரின் கிறிஸ்தவ சபத்து நாளாகப் பரிசுத்தப்படுத்தி கிறிஸ்துவுக்கு விசுவாசமாக வாழவேண்டும்.

கர்த்தருடைய நாளை ஏன் சபத்து நாளாக, முழு நாளையும் அனுசரிக்க வேண்டும் என்பதற்கான விபரமான விளக்கத்தைத் தருவதற்காக இந்த ஆக்கத்தை நான் எழுதவில்லை. இருந்தாலும் இதுபற்றி 1689 விசுவாச அறிக்கை தந்திருக்கும் விளக்கத்தை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். இதையே அத்தனை வரலாற்றுச் சீர்திருத்தத் திருச்சபைகளும் விசுவாசித்துப் பின்பற்றுகின்றன. இதை 1689 விசுவாச அறிக்கையின் 22ம் அதிகாரத்தில் வாசிக்கலாம். அதன் 7ம் பத்தி, புதிய உடன்படிக்கை காலத்தில் ஓய்வு நாள் (Sabbath) வாரத்தின் முதல் நாளாக, கர்த்தருடைய நாளாக மாற்றப்பட்டிருப்பதையும், அந்த நாளை நாம் கிறிஸ்தவ ஓய்வு நாளாகப் (Christian Sabbath) பின்பற்ற வேண்டும் என்பதையும் விளக்கிவிட்டு, அந்த நாளை எந்தவகையில் பின்பற்ற வேண்டும் என்பதை 8ம் பத்தி பின்வருமாறு விளக்குகிறது,

தமது இருதயத்தை ஆராதனைக்காக முறையாகத் தயார் செய்து உலகத்துக்குரிய காரியங்களையும், வீட்டுக் காரியங்களையும் ஏற்கனவே நிறைவேற்றி முடிந்தபின் தமது சொந்த வேலைகள் சம்பந்தமானதும், வேலைத்தளம் சம்பந்தமானதும், உலக இன்பப்பொழுதுபோக்கு பற்றியதுமான சிந்தனைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து, முழுநாளிலும் பரிசுத்தமாக இளைப்பாறிப் பொதுவானதும், தனிப்பட்டதுமான கடவுள் வழிபாட்டுக் காரியங்களுக்கும், இன்றியமையாததும், கருணைக்கிடமானதுமான கடமைகளுக்கும் தம்மை ஒப்புக்கொடுத்து மனிதர்கள் ஓய்வு நாளைக் (Sabbath day) கடவுளுக்கென்று பரிசுத்தமாக வைத்திருத்தல் அவசியம். (நெகேமியா 13:15-22; ஏசாயா 58:13; மத்தேயு 12:1-13).

மேற்குறிப்பிட்ட 7ம், 8ம் பத்திகளில் பழைய ஏற்பாட்டுக்காலத்தில் வாரத்தின் கடைசி நாளாக இருந்த ஓய்வு நாள் புதிய ஏற்பாட்டுக்காலத்தில் வாரத்தின் முதல் நாளாக மாற்றப்பட்டிருப்பதையும், அந்த நாள் கர்த்தருடைய நாளாக, கிறிஸ்தவ சபத்து நாளாகக் கணிக்கப்பட்டு முழு நாளும் பரிசுத்தமாக அனுசரிக்கப்பட வேண்டும் என்றும் விளக்குகின்றது. இதுவே சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும் புதிய உடன்படிக்கை ஓய்வுநாள் பற்றிக் கொண்டிருந்த வேதநம்பிக்கை. 8ம் பத்தியில் ஓய்வு நாள் ‘பரிசுத்தமாக’ வைக்கப்பட வேண்டும் என்றிருப்பதைக் கவனிக்கவேண்டும். வெறும் சபை ஆராதனை நடத்துவதை மட்டும் இந்தப் பகுதி விளக்கவில்லை. அந்த நாளில் நாம் செய்யும் அனைத்துக் காரியங்களையும் பரிசுத்தத்தோடு கர்த்தருக்கென்று செய்யவேண்டும் என்று இந்தப் பகுதி விளக்குகிறது. அந்த நாளில் பரிசுத்தமில்லாதவை எவை என்பதையும் அது விளக்குகிறது. ஓய்வு நாள் கர்த்தருடையதாகவும், அவருடைய மகிமைக்காகவும் அனுசரிக்கப்பட வேண்டுமென்பதால் அந்த நாளில் கர்த்தர் எதைப் பரிசுத்தமாகக் கருதுகிறாரோ அவற்றைச் செய்வதையே வேதம் எதிர்பார்க்கிறது. ஏனைய ஆறு நாட்களிலும் நியாயமாக செய்யக்கூடிய செயல்களைத் தவிர்த்து இந்நாளில் ஆண்டவரை ஆராதித்து, அவர் தொடர்பான விஷயங்களைத் தியானித்து, கிறிஸ்தவ ஐக்கியத்தை அனுபவித்து முழு நாளிலும் முற்றுமுழுதுமாக உலக விஷயங்களைத் தவிர்ப்பதையே வேதம் எதிர்பார்க்கிறது.

கர்த்தருடைய நாளை எதிர்க்கும் சுவிசேஷ கிறிஸ்தவ முக்கியஸ்தர்கள்

கிறிஸ்தவ வரலாற்றின் ஒவ்வொரு காலப்பகுதியிலும் வேதமும், கிறிஸ்தவமும் புதிய புதிய ஆபத்துக்களைச் சந்திப்பது வழமைதான். நாம் வாழும் காலப்பகுதியில் அது தீவிரமடைந்திருப்பதில் ஆச்சரியமில்லை. முக்கியமாக கர்த்தருடைய நாள் அனுசரிப்பு பற்றிய இறையியல் போதனையில் கவலைக்குரிய அம்சம், ஆங்கிலம் பேசப்படுகின்ற மேலைநாடுகளில் முக்கிய இவெஞ்சலிக்கள் இறையியல் வல்லுனர்களாகவும், போதகர்களாகவும் இருப்பவர்கள் இதற்கெதிரான வாதங்களை முன்வைத்து கிறிஸ்தவர்கள் இன்று கர்த்தருடைய நாளை ஓய்வுநாளாக அனுசரிக்கத் தேவையில்லை என்ற கருத்தை வலியுறுத்தி வருவதுதான். இவர்களில் ஜே அடம்ஸும் ஒருவர் (Jay Edward Adams). தன்னுடைய Keeping the Sabbath எனும் நூலில் கிருபையின் காலத்தில் ஓய்வுநாள் அனுசரிப்பிற்கு எதிரான வாதத்தை அவர் முன்வைத்திருக்கிறார். ‘கிறிஸ்தவர்கள் ஓய்வுநாளை அனுசரிக்கவேண்டும் என்பதற்கான முழுமையான வேத ஆதாரங்கள் . . . ஸீரோ (Zero)’ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதில் அவர் பக்கம் எந்த வேத ஆதாரமும் இல்லை என்பதுதான் உண்மை என்கிறார் ரொபர்ட் மார்டின்.

20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முக்கிய இவெஞ்சலிக்கள் இறையியலறிஞரான டொன் கார்சன் (D. A. Carson) ஓய்வுநாள் அனுசரிப்புக்கெதிரான வாதங்களைத் தன்னுடைய From Sabbath to the Lord’s Day எனும் நூலில் முன்வைத்தார். 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளிவந்த நூல்களில் இது முக்கியமானதாகும். இந்த 21ம் நூற்றாண்டிலும் இது மேலைநாட்டு இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவர்களைப் பாதித்து வருகிறது. சில நூல்கள் மக்களை அதிகம் பாதித்து பின்னால் வரும் சந்ததிக்கும் ஆபத்தை உண்டாக்கக்கூடியவை. இதை எழுதுகிறபோது சார்ள்ஸ் பினி, வில்லியம் பார்க்ளே போன்ற தாராளவாத அறிஞர்களின் நூல்களைப் பற்றிய நினைவு வருகிறது. இவெஞ்சலிக்கள் சமூகத்தை இவை இன்றும் பாதித்து வருவனவாக இருக்கின்றன. ஆத்துமாக்களின் மனச்சாட்சியை வேதத்திற்கெதிராகத் திருப்பிவிடும் ஆற்றலுள்ளவையாக இத்தகைய எழுத்துக்கள் இருந்து வந்திருக்கின்றன. இத்தகைய ஒரு நூலை வில்லியம் பெளே (William Paley) என்பவர் ஓய்வுநாள் அனுசரிப்புக்கெதிராக எழுதி, அதற்கு வேதஆதாரம் எதுவும் கிடையாது, அப்போஸ்தலர்கள் அதை உண்டாக்கி சபைகளுக்குள் திணித்ததாக விளக்கியிருக்கிறார் என்று ஜோன் ஸ்டோன் என்பவர் 1844ல் எழுதியிருப்பதாக ரொபர்ட் மார்டின் தன்நூலில் குறிப்பிட்டிருக்கிறார். பெளேயின் இந்நூல் கிறிஸ்தவ சமூகத்தை அன்று பெருமளவுக்குப் பாதித்திருந்தது.

ஆங்கிலம் பேசப்படும் மேலைத்தேய நாடுகளில் டொன் கார்சனின் From Sabbath to the Lord’s Day என்ற நூல் இத்தகைய செல்வாக்கை இன்றும் கொண்டிருக்கிறது என்று டாக்டர் மார்டின் குறிப்பிடுகிறார். ரொபர்ட் மார்டின் தன் நூலில், டொன் கார்சனின் வேத விளக்கங்களுக்குத் தகுந்த துல்லியமான விளக்கங்களைப் பதிலடியாக, ஆணித்தரமாகத் தந்து நம் காலத்து கிறிஸ்தவர்களுக்குப் பெரும் நன்மை செய்திருக்கிறார். டொன் கார்சன் போன்றவர்கள் செல்வாக்குள்ளவர்களாக இருப்பதால் டாக்டர் ரொபர்ட் மார்டின் போன்ற இறையிலறிஞர்கள் அவர்களுக்கு பதிலளிப்பது 21ம் நூற்றாண்டு கிறிஸ்தவ சமுதாயத்துக்குக் கிடைத்திருக்கும் நன்மை. நூல்கள் வாசிப்பது அவசியந்தான். இருந்தபோதும் நூலாசிரியர்களின் இறையியல் அணுகுமுறை, அவர்களுடைய ஆத்மீக, திருச்சபைப் பின்புல ஆய்வில் ஈடுபட்டு அவர்களைப்பற்றி அறிந்துகொள்ளாமல் நூல்களை வாசிப்பதால், அவர்களுடைய எழுத்தாற்றலினாலும், செல்வாக்கினாலும் தவறானவற்றையும் உண்மையென்று நம்பிவிடக்கூடிய ஆபத்திருக்கிறது.

ஆதிசபைக்காலத்தில் இருந்து 19ம் நூற்றாண்டுவரை எவரும் கேள்வியெழுப்பாமல் பின்பற்றி வந்திருக்கும் கர்த்தருடைய நாள் அனுசரிப்பை, அதுவும் திருச்சபையும், வரலாற்று விசுவாச அறிக்கைகளும் ஆணித்தரமாக ஆதாரத்துடன் விளக்கியிருக்கும் சத்தியத்தை நம் காலத்து புதிய சிந்தானாவாதிகளின் செல்வாக்குள்ள எழுத்துக்களுக்கு வசப்பட்டு பலிகொடுப்பது எந்தவிதத்தில் தகும்? எரேமியா 16:16ல் சொல்லப்பட்டிருப்பதுபோல், ‘வழிகளில் நின்று, பூர்வபாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து’ அதில் நடக்கவேண்டிய நிலையில் கிறிஸ்தவ சமூகம் இன்றிருக்கிறது. அந்தப் பூர்வபாதைகளுக்கு முரணான வேதவிளக்கங்களுக்கு இருதயத்தில் இடமளித்துப் பின்பற்றுவது கர்த்தருடைய வேதத்துக்கு முரணாகப் போகின்ற செயலாக மட்டுமே இருக்கும். ஆதியிலேயே படைப்பில் கர்த்தர் ஏற்படுத்தி நம் நன்மைக்காகத் தந்திருக்கும் கர்த்தருடைய நாளான ஓய்வுநாளை நாம் உதாசீனப்படுத்துவது கர்த்தரை நிந்திக்கும் செயலைத்தவிர வேறில்லை. வேதத்தின் ஓய்வுநாள் பற்றிய போதனைகள் ஏற்றுக்கொள்ளலாம், ஏற்றுக்கொள்ளாமலும் விடலாம் என்ற விதத்தில் தரப்படவில்லை. அது நம்முடைய கிறிஸ்தவ விசுவாசத்தோடும், பக்திவிருத்தியோடும் தொடர்புடைய போதனைகள்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s