(2 இராஜாக்கள் 15; 2 நாளாகமம் 27)
2 இராஜாக்கள் நூல் வடதேச இஸ்ரவேலுக்கே, நூலின் ஆரம்ப அதிகாரங்களில் முக்கியத்துவம் தந்திருந்தபோதும், இருந்திருந்து யூதாவின் பக்கமும் தன் கவனத்தைச் செலுத்துவதைக் கவனிக்க முடிகிறது. முக்கியமாக நூலின் கடைசிப்பகுதி யூதாவிலேயே அதிக கவனத்தைச் செலுத்துகிறது. இந்த நூலின் 15ம் அதிகாரத்தில் நாம் யூதாவின் அரசனாகிய உசியாவைச் சந்தித்தோம். இப்போது அவனுடைய மகனாகிய யோதாமைப்பற்றி இதே அதிகாரத்தில் சுருக்கமாக விளக்கப்பட்டிருக்கிறதைக் காணலாம்.
அறிமுகம்
2 இராஜாக்கள் 15ம் அதிகாரத்தில் நூலாசிரியர் யோதாமைப்பற்றி விளக்குகிறபோது அதை ஏழு வசனங்களுக்குள் சுருக்கமாக முடித்துவிடுகிறார். ஆனால், 2 நாளாகமத்தை எழுதியவர் 27ம் அதிகாரத்தில் முழு அதிகாரத்திலும், 9 வசனங்களில் அவனைப்பற்றி விளக்குகிறார். 2 இராஜாக்கள் நூலை வாசிக்கும்போது அதை 2 நாளாகமத்தோடு தொடர்புபடுத்தி வாசிக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் ஒரு நூலில் தரப்படாத விளக்கங்களை அடுத்த நூல் நமக்குத் தருகிறது. அதன் மூலம் யாரைப்பற்றி அல்லது எந்த சம்பவத்தைப் பற்றி வாசிக்கிறோமோ அதைப்பற்றிய முழுவிபரங்களையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
2 இராஜாக்கள் 15ம் அதிகாரத்தில் 8-31 வரையுள்ள வசனங்களில் இஸ்ரவேலின் சடுதியான வீழ்ச்சியையும், அது தன் இறுதி முடிவை நோக்கி வெகுவேகமாக நகர்வதையும்பற்றி வாசித்தபின், அவ்வதிகாரத்தின் 32ம் வசனத்தில் யூதாவின் அரசனாக வந்த யோதாமைப் பற்றி வாசிக்கிறோம். ஏற்கனவே இந்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் யோதாமைப்பற்றி 5ம் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அதிகாரத்தில் பொதுவாக இஸ்ரவேலின் வீழ்ச்சிபற்றியே அதிகக் கவனம் செலுத்தப்பட்டிருந்தபோதும், அது இஸ்ரவேலின் எல்லையைத் தாண்டிப் பக்கத்து நாடான யூதாவை நோக்கியும் தன் கவனத்தைத் திருப்பாமலில்லை.
இதே காலப்பகுதியில் யூதாவில் நிலமை வித்தியாசமாக இருந்தது. அரசனான உசியா இறந்தபின் இப்போது யோதாம் சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டிருக்கிறான். இதுவரை இருபது வருட குறுகிய காலப்பகுதியில் அடுத்தடுத்து இராஜாக்கள் இஸ்ரவேலில் ஆட்சி செய்து அது அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது, யூதாவில் ஒரு நல்ல அரசன் ஆட்சிக்கு வந்திருக்கிறான். உண்மையில் இஸ்ரவேலில் நடந்து வரும் சம்பவங்கள் யூதாவுக்கு ஒரு உதாரணமாக, எச்சரிக்கையாக இருப்பதை மறுக்கமுடியாது. யூதாவில் அதை எத்தனை பேர் சிந்தித்துப் பார்த்தார்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் யூதாவுக்கு இப்போது ஒரு நல்ல அரசனை ஆண்டவர் தந்திருக்கிறார்.
யோதாம் தன்னுடைய 25ம் வயதில் அரசனானான். அவன் பதினாறு வருடங்கள் எருசலேமில் ஆண்டான் என்று 2 நாளாகமம் 27:8 சொல்கிறது. இருந்தும், தகப்பனான உசியா குஷ்டரோகியாக இருந்தபோது அரசவேலைகள் அனைத்தையும் அவனே கவனித்துக் கொண்டிருந்தான் என்று 2 நாளாகமம் 26ம் அதி. 21ம் வசனம் சொல்லுகிறது. உசியாவின் மரணத்திற்குப் பின்பே யோதாம் அதிகாரபூர்வமாக அரசனானான்.
யோதாமின் தகப்பனான உசியா ‘அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்திருந்தபோதும்’, முடிவுவரையும் கர்த்தருக்கு உண்மையானவனாக இருக்கவில்லை. அவன் கர்த்தருடைய வார்த்தைக்கு எதிராக ஆலயத்தில் ஆசாரியனாக வருவதற்கு ஆசைப்பட்டு கர்த்தரின் தண்டனைக்குள்ளானான். கர்த்தர் அவனுக்கு குஸ்டரோகத்தைக் கொடுத்தார். மரணத்தில் கூட அவனுக்கு எந்த மகிமையும் கிடைக்கவில்லை.
ஆனால், அவனுடைய குமாரனான யோதாம் வித்தியாசமானவன்.
2 நாளாகமம் 27:1-2
யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் எருசாள். அவன் தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் அவனைப்போலக் கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்; ஜனங்கள் இன்னும் தங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
இந்த வசனங்களில் இருந்து நாம் யோதாமைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ளுகிறோம்.
யோதாமின் தாழ்மை
யோதாமைப்பற்றி விளக்குவதற்கு ஒரேயொரு வார்த்தையைத் தேடுவீர்களானால் அதற்குப் பொருத்தமான ஒரே வார்த்தை தாழ்மைதான். யோதாமில் அதைத்தான் நாம் காண்கிறோம். தாழ்மையை நாம் உலகத்தில் காணமுடியாது. தாழ்மை கிறிஸ்தவனுடைய ஒரு குணாதிசயமாக இருக்கிறது. அதாவது, கிறிஸ்தவனே கிறிஸ்துவுக்குள் மெய்யான தாழ்மையைக் கொண்டிருக்க முடியும். கிறிஸ்தவனாக இருப்பதால் ஒருவனுக்கு தாழ்மை இயல்பாக இருந்துவிடாது; அதை அவன் தன்னில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்துக் கிறிஸ்தவர்களும் அதைக் கொண்டிராமல் இருப்பது வருந்தவேண்டிய விஷயம். முக்கியமாக போதிக்கிறவர்களில் தாழ்மை இல்லாமல் இருப்பதே அவர்கள் ஆசீர்வாதமற்றவர்களாக இருப்பதற்கும், அழிவைத் தேடிக்கொள்ளுவதற்கும் முக்கிய காரணம்.
யோதாம் தாழ்மையுள்ளவனாக இருந்தான். யோதாம் அரசனானபோது சூழ்நிலை கஷ்டமானதாக இருந்தது. அவனுடைய தகப்பனான உசியா பலம் வாய்ந்தவனாக இருந்தான். அவனுக்குப் பெரும் வெற்றிகள் கிடைத்து நாடும் ஆசீர்வாதங்களை அடைந்திருந்தது. ஆனால், இந்த ஆசீர்வாதங்கள் உசியாவின் தலைக்கு ஏறி, அவன் ஆணவக்காரனாக மாறியிருந்தான்.
2 நாளாகமம் 26:16
அவன் பலப்பட்டபோது, தனக்குக்கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம்மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.
உசியா பலம் வாய்ந்தவனாக இருந்தான். அவன் மேலும் பலப்பட்டபோதெல்லாம் அவனுக்கு ஆணவம் உண்டாகி அழிவுக்கு வழிதேடிக்கொண்டான். அவன் ஆலயத்து ஆசாரியர்களுடைய பணியைத் தானே செய்யமுடிவு கட்டினான். அதை வேதம் அனுமதிக்கவில்லை. அந்தப் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த லேவியரைத் தவிர வேறு எவரும் அதைச் செய்யக்கூடாது. நியாயாதிபதிகள் நூலில் நாம் வாசிக்கின்ற மீகா இதைச்செய்து எத்தனைப் பெரிய கொடுந்தண்டனையை அடைந்தான் என்பதை நினைத்துப் பாருங்கள். ஆண்டவர் தன்னுடைய ஆராதனை விஷயங்களில் எவரும் கைவைப்பதை அடியோடு விரும்பவில்லை. உசியா அதைத் தொட்டது அவனுக்கு ஆபத்தானது. நான் பலம் வாய்ந்த அரசன், இப்போது என்னைவிட பலம் வாய்ந்த எவரும் இல்லை என்று எண்ணி, தான் நினைத்ததையெல்லாம் செய்யலாம் என்று முடிவுகட்டி ஆராதனை விஷயத்தில் அவன் கைவத்தது கர்த்தரின் கோபத்தை அவன் அனுபவிக்கும்படிச் செய்தது. இந்த நூற்றாண்டில் ஆண்டவருடைய ஆராதனையை வெறும் கூத்தாக சபைகளில் மாற்றி வைத்திருப்பவர்கள், தங்களுடைய சென்டிமென்டுக்கு ஏற்றபடி ஆடல் பாடல்களோடு ஆராதனையை நடத்திச் செல்லுகிறவர்கள் இதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளவேண்டும். பழைய ஏற்பாட்டில் ஆண்டவர் ஏற்படுத்திவைத்திருக்கும் ஆராதனைத் தத்துவங்கள் புதிய ஏற்பாட்டிலும் தொடர்கின்றன என்பதை மறக்கக்கூடாது. உசியாவின் ஆணவமே, அவன் விசுவாசமுள்ள அரசனாக இருக்கமுடியாதபடி செய்தது.
உசியாவுக்கும், அவனுடைய மகனான யோதாமுக்கும் இடையில் சில விஷயங்களில் ஒற்றுமையும், ஒரேயொரு முக்கியமான வேறுபாடும் இருந்திருக்கிறது.
2 நாளாகமம் 27:3-5 வாசியுங்கள். இந்த வசனங்கள் யோதாமின் வளர்ச்சியை விளக்குவதாக இருக்கின்றன.
2 நாளாகமம் 27:3-5
அவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஓபேலின் மதிலின்மேல் அநேக கட்டடங்களையும் கட்டினான். யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும், காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான். அவன் அம்மோன் புத்திரருடைய ராஜாவோடு யுத்தம்பண்ணி அவர்களை மேற்கொண்டான்; ஆதலால் அம்மோன் புத்திரர் அவனுக்கு அந்த வருஷத்திலே நூறுதாலந்து வெள்ளியையும், பதினாயிரங்கலக் கோதுமையையும், பதினாயிரங்கல வாற்கோதுமையையும் கொடுத்தார்கள்; இரண்டாம் மூன்றாம் வருஷத்திலும் அம்மோன் புத்திரர் அப்படியே அவனுக்குச் செலுத்தினார்கள்.
3ம், 4ம் வசனங்கள் யோதாம் ஆலயத்தின் உயர்ந்த வாசலையும், ஓபேல் நகர் மதிலின்மேல் அநேக கட்டிடங்களையும் சுற்றிவரக் கட்டினான். தலைநகரான யெருசலேமைச் சுற்றிப் பாதுகாப்பு வளையங்களை அதிகப்படுத்தி நகர்ப்பாதுகாப்பைப் பலப்படுத்தினான். 5ம் வசனம், உசியாவைப்போலவே அவனும் அம்மோன் புத்திரை வெற்றிகொண்டான் என்கிறது. 5ம் வசனத்தின் கடைசிப்பகுதி அவனுடைய செல்வத்தின் வளர்ச்சியை விளக்குகிறது. அம்மோன் புத்திரர் அவனுக்கு அந்த வருடம் 100 தாலந்து வெள்ளியையும், 10,000 கலக் கோதுமையையும், 10,000 கல வாற்கோதுமையையும் கொடுத்தார்கள். இரண்டாம் மூன்றாம் வருடத்திலும் அம்மோன் புத்திரர் அந்தளவுக்குக் கப்பம் செலுத்தினார்கள். இதனால் யோதாம் மிகவும் பலம் வாய்ந்தவனாகவும், செல்வத்தில் நிறைந்தவனாகவும் இருந்தான். தன் தகப்பனைப்போல பலம் வாய்ந்தவனாக உயர்ந்தான். இங்கேதான் ஒரு வித்தியாசத்தைக் காண்கிறோம். அவன் உசியாவைப்போல பலசாலியாக வந்திருந்தாலும், தன் தகப்பனுடைய பாவத்தைப் பின்பற்றவில்லை. அதுவே முக்கியமான வேறுபாடு. அது நமக்கு நம்பிக்கையைத் தருகிறது, கர்த்தர் யோதாமின் வாழ்க்கையில் கிரியை செய்து வந்திருக்கிறார். அவன் தன் தகப்பனின் பாவத்தைத் தன்காலத்தில் செய்யவில்லை.
அப்படி உசியா செய்த பாவம் என்ன?
யோதாம் அப்படி எதைச்செய்யாமல் விட்டான்?
இந்த விஷயத்தை நாம் 2 இராஜாக்கள் 15ல் வாசிப்பதில்லை. அத்தனை முக்கியமான விஷயத்தை அவர் விட்டுவிட்டதற்குக் காரணம் இல்லாமல் இருக்காது. இருந்தபோதும் அதில் இந்த விஷயம் விளக்கப்படவில்லை. 2 நாளாகமம் 27 இந்த விஷயத்தை நமக்கு விளக்கி யோதாமைப்பற்றி நாம் நன்றாகத் தெரிந்துகொள்ள உதவுகிறது.
யோதாம் அப்படி செய்யாமல்விட்டது எது?
2 நாளாகமம் 27:2
அவன் தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் அவனைப்போலக் கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்; ஜனங்கள் இன்னும் தங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
யோதாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானவற்றை மட்டும் செய்யவில்லை. அவ்வாறு செய்வது அவசியம். அவன் அதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை. எதைச்செய்யக்கூடாது என்பதை அறிந்துணர்ந்து அவற்றைத் தவிர்த்துக்கொள்ளுவதையும் யோதாம் கடமையாகக் கொண்டிருந்தான். உசியா ஆணவக்காரனாக இருந்து கர்த்தரின் ஆலயப்பணியைத் தன்கையில் எடுத்துக்கொண்டான். அது அவன் செய்த பெரிய பாவம். யோதாம் அதைச் செய்யவில்லை. அதற்குக் காரணம் அவன் ஆணவக்காரனாக இருக்கவில்லை. அவனில் கர்த்தரிடம் இருக்கவேண்டிய பயமும், தாழ்மையும் காணப்பட்டன.
யோதாம் கர்த்தருக்குப் பயந்தவன்
யோதாம் உசியாவுக்கு நடந்ததையெல்லாம் கண்ணால் பார்த்து வளர்ந்திருந்தான். தகப்பனைக் கர்த்தர் தண்டித்ததையும் அதனால் அவனுக்கு நேர்ந்தவற்றையும் அவன் பார்த்திருந்தது மட்டுமல்லாமல் மறக்கவில்லை. அப்படிப் பார்த்து வளருகிற எல்லோருமே அவற்றில் இருந்து பாடம் படிப்பதில்லை. யோதாம் அப்படிப்பட்டவனல்ல. அவன் அவற்றை மறக்காமல் இருந்து அவற்றைச் செய்யாமலிருந்தான்.
2 நாளாகமம் 27:2
ஆனாலும் அவனைப்போலக் கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்.
இந்த வசனம் பொருளுள்ளதாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். உண்மையில் இந்த வசனம் யோதாம் செய்யாததை மட்டும் நமக்கு விளக்காமல் அவன் எப்படிப்பட்டவன் என்பதையும் விளக்குகிறது. தாழ்மையைக் கொண்டிருந்த யோதாம், கர்த்தருக்குப் பயந்தவனாக இருந்தான். ‘தேவபயம்’ என்ற அல்பர்ட் என். மார்டினின் அருமையான புத்தகத்தை நாம் வெளியிட்டிருந்தோம். எத்தனை பேர் வாங்கி வாசித்துப் பயன்பட்டீர்களோ தெரியவில்லை. அப்படி ஒரு நூல், அல்லது அதன் அருகிலும் வரக்கூடிய ஒரு நூல் தமிழில் இல்லை என்பது எனக்குத் தெரியும். இருந்தும் நம்முடைய இனத்தவர்கள் அப்படிப்பட்ட நூல்களின் மகிமை தெரியாமல் இருக்கிறார்கள். அந்நூலை ஆங்கிலத்தில் வாசித்து என் சபையாரை வாசிக்கும்படி நான் வலியுறுத்தியிருக்கிறேன். என் பிரசங்கங்களிலும் நான் சில பகுதிகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இது போதகர்கள் தங்கள் பிரசங்க ஊழியத்தில் செய்ய வேண்டிய முக்கியமான காரியம். நல்ல சத்துள்ள உணவை சபையாருக்குப் படைத்து பிரசங்கம் செய்யாதவர்கள் கர்த்தரால் அழைக்கப்பட்டிருக்க முடியாது. நீங்களும் அந்த நூலை வாங்கி வாசித்து, திருமணம், மற்றும் பிறந்தநாள் காலங்களில் நண்பர்களுக்குப் பரிசாகக் கொடுக்கவேண்டும்.
எப்படி மொழி தெரியாத ஒரு இனம் அழிந்துவிடுமோ, அதேபோல்தான் நல்ல நூல்களை வாசித்து வளராத சபையும் ஒருநாள் செத்துவிடும்.
யோதாமுக்கு தேவபயமிருந்தது. கர்த்தருக்குப் பயப்படுகிற மனிதன் மட்டுமே அவரை எதிர்த்து நிற்கமாட்டான். தேவபயம் விசுவாச வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. தேவபயமில்லாமல் நம் மத்தியில் சிலர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களைப் பாவத்தைத் துணிகரமாகச் செய்கிறவர்கள். மெய்யான கிறிஸ்தவ விசுவாசத்தைக் கொண்டிராத ஒருவனையோ, அல்லது ஒருத்தியையோ யாராவது திருமணம் செய்யத் துணிகிறார் என்றால் அவனுக்கோ அவளுக்கோ தேவபயமில்லை என்றுதான் அர்த்தம். தேவபயமில்லாத இடத்தில் கர்த்தரின் வார்த்தையின்படி வாழ்கிற விசுவாசம் இருக்கவே முடியாது. அதனால்தான் தேவபயம் என்ற அந்தப் புத்தகத்தை வாசிப்பது அவசியம் என்கிறேன். நம்மில் அநேகர் குற்றுயிரும், குலையுயிருமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்கு இதுதான் காரணம். தேவனுக்குப் பயப்படுகிறீர்களா? அல்லது அவருடைய வார்த்தைக்கு எதிரானதைச் செய்யும் துணிகரமான இருதயத்தைக் கொண்டிருக்கிறீர்களா? யோதாம் அப்படிப்பட்டவனல்ல. அவன் கர்த்தருக்குப் பயப்படுகிற இருதயத்தைக் கொண்டிருந்ததால்தான் தகப்பன் செய்த பாவத்தைச் செய்யத் துணியவில்லை. தேவபயம் பாவத்தைப் பாவமாகப் பார்த்து அதற்கு ஒதுங்கி நிற்க உதவுகிறது.
கிறிஸ்துவை விசுவாசிக்கிற ஒவ்வொருவரும் ஒரேவிதத்தில் அவரை அறிந்துகொள்வதில்லை. சந்தர்ப்பங்கள் வேறுபடும். வேதத்தில் நாம் வாசிக்கின்ற ஒவ்வொரு மனிதருடைய மனமாற்றமும் வெவ்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் நிகழ்ந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. கர்த்தர் கிரியை செய்யும் விதமே அற்புதமானது. யோதாம், ஒரு நல்ல விசுவாசமுள்ள குடும்பத்தில் வளர்ந்து நல்ல உதாரணங்களைக் கண்டிராதபோதும், அவன் கர்த்தரின் கிருபையால் விசுவாசத்தை அடைந்து தேவபயத்தோடு பாவத்தைச் செய்யத்துணியாத இருதயத்தைக் கொண்டிருந்தான். கர்த்தரின் கிருபையே அவன் தேவபயத்தைக் கொண்டிருந்ததற்குக் காரணம். அவன் தன் தகப்பன் செய்த பாவத்தைத் செய்யத் துணியவில்லை. அந்த வார்த்தைகள் பொருள் பொதிந்தவை. பாவத்தைச் செய்யத் துணியாத தேவபயத்தை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா?
யோதாம் தாழ்மையைக் கொண்டிருந்தான். அதோடு தேவபயத்தையும் கொண்டிருந்தான். அவனுடைய தேவபயமும், தாழ்மையும் அவன் கர்த்தரை எதிர்த்து நின்று பாவத்தைச் செய்துவிடாமல் அவனைக் காப்பாற்றின.
யோதாம் அடைந்த ஆசீர்வாதம்
இந்தப் பகுதியின் 6வது வசனம் மிகவும் முக்கியமானது.
2 நாளாகமம் 27:6
யோதாம் தன் வழிகளைத் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நேராக்கினதினால் பலப்பட்டான்.
தமிழ் வேதத்தில் இந்த வசனம் சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அது அதிசயந்தான். ஆங்கிலத்தில் யோதாம் ‘தன் வழிகளைத் தயாரித்தான்’ அல்லது ‘சரிப்படுத்திக்கொண்டான்’ என்றிருக்கிறது. நேராக்கினான் என்பதற்கான எபிரேய மொழி வார்த்தைக்கு, ‘உறுதியோடு சரியானவிதத்தில் அமைத்துக்கொண்டான்’ என்று பொருள். அதையே யோதாம் செய்தான். யோதாம் கர்த்தரைத் தாழ்மையோடும், தேவபயத்தோடும் விசுவாசித்ததால் அவன் தன் வாழ்க்கையை சரியானவிதத்தில் உறுதியோடும், தீர்மானத்தோடும் கர்த்தருடைய வார்த்தைக்கேற்றபடி அமைத்துக்கொண்டான் என்கிறது இந்த வசனம்.
நேராக்கிக்கொண்டான் என்பதற்கு என்ன அர்த்தம்?
இதற்கான மூலமொழியின் அர்த்தத்தைக் கவனித்தோம். ஆனால், யோதாம் இதை எப்படிச் செய்தான்? அதாவது, யோதாம் இதைச் செய்வதற்கு சில அவசியமான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. ஒருவன் தூங்கி எழுந்தவுடன் காப்பி சாப்பிடுவதுபோல் இதை இலகுவாக செய்து விடமுடியாது. இதைச் செய்கிற ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் சென்டிமென்டலாக நடந்துகொள்ளமாட்டான். அதாவது, அவன் வாழ்க்கையில் எல்லா சந்தர்ப்பங்களிலும் தன்னுடைய உணர்ச்சிகளுக்கேற்ற முறையில் வளைந்துகொடுத்து தீர்மானங்களை எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கமாட்டான். இதுவே கர்த்தருக்குப் பயந்து வாழ்வதற்குப் பெரிய எதிரி.
நம்மில் பாவம் தொடர்ந்திருக்கும்வரை நம்முடைய உணர்ச்சிகள் பாவக்கறையோடேயே இருக்கும். அவற்றைக் கட்டுப்படுத்திக் கர்த்தரின் வார்த்தையின்படியாக உணர்ச்சிகள் அமைந்திருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. நம் உணர்ச்சிகளை மட்டும் நாம் நம்பினால் நிச்சயம் வழிதவறிப் போய்விடுவோம். யோதாமைப்போன்ற நல்ல விசுவாசி, தன் உணர்ச்சிகள் அதிகரித்து பரிசுத்தமாக இல்லாத காரியங்களில் ஆர்வம்காட்ட முயல்கிறபோது, கர்த்தருடைய வார்த்தைக்கு முரணான விஷயங்களில் போக முயற்சிக்கிறபோது, தாழ்மையோடு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி கர்த்தரின் வார்த்தையின் வழியில் போவதற்கான எல்லா முயற்சிகளையும் எடுப்பான். தன் உணர்ச்சிகள் தன்னைத் தவறான வழியில் அழைத்துப்போவதற்கு அவன் ஒருபோதும் இடங்கொடுக்கமாட்டான். தாவீது தன் உணர்ச்சிகளுக்கு இடங்கொடுத்து கர்த்தரில் தங்கியிருக்கத் தவறியதால் அவன் வாழ்க்கையில் ஏற்பட்ட பேரிடறலை நினைத்துப் பாருங்கள். அப்படிச் செய்வதைத் தாவீது தன் வாழ்க்கையில் தொடர்ச்சியாகக் கொண்டிருக்கவில்லை. அப்படியொரு தடவை அவன் தவறு செய்துவிட்டான். அப்படிப் போய்விடாமல் இருப்பதற்கு யோதாம் தன் வழிகளை உறுதியோடு நேராக்கிக் கொண்டான். உணர்ச்சிகள் தன்னை ஆள அவன் வழிவிடவில்லை.
யோதாம் தன் வழிகளை நேராக்கிக்கொள்வதற்கு அவன் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது. அவன் பலசாலியாக இருந்ததோடு, அவனுடைய செல்வமும் அதிகரித்தது. அவனை ஏனைய நாடுகள் மதிக்க ஆரம்பித்தன. அவனுக்கு நாடுகள் கப்பம் செலுத்தின. இந்தவிதத்தில் பெருமைகள் குவிகிறபோது விசுவாசியின் இருதயமும் பெருமைப்பட ஆரம்பிக்கும். வெளியில் இருந்தும், உள்ளேயிருந்தும் உண்டாகிற சோதனைகளுக்கு அவன் முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது. தனக்குள் இருக்கும் தொடர்கிற பாவத்தை அவன் அடக்கியாள வேண்டியிருக்கிறது. அவனுடைய இருதயம் அவனைப்பார்த்து, ‘யோதாம் நீ இப்போது பெரிய அரசன். உன்னை எல்லோரும் பாராட்டுகிறார்கள். நீ உயர்ந்துவிட்டாய். உன்னால் முடியாதது எதுவும் இல்லை. நீ பெரியவன்’ என்றெல்லாம் அவனைப் பார்த்துச் சொல்லும். யோதாமுக்கு இது தெரியாமல் இருந்திருக்காது. ஆனால், யோதாம் இதற்கு மசிந்துகொடுக்காமல் ஆணவம் இருதயத்தில் குடிபுகுவற்கு இடங்கொடுக்காமல், தேவபயத்தோடு தாழ்மையை வளர்த்துக்கொள்ள வேண்டிய வேலையைச் செய்யவேண்டியிருந்தது. அவன் எச்சரிக்கையோடு நடந்துகொள்ள வேண்டியிருந்தது. தகப்பனின் பாவத்தை நினைத்துப் பார்க்க வேண்டியிருந்தது. உணர்ச்சிகளைக் கட்டி ஆளவேண்டியிருந்தது.
இப்படி விசுவாசி தன் வழிகளை நேராக்கிக்கொள்ளும் கடமையில் தவறக்கூடாது. ஜொனத்தன் எட்வர்ட்ஸ் எனும் 18ம் நூற்றாண்டுப் பிரசங்கி தன் வாழ்க்கையைச் சீராகவும், நேராகவும் வைத்திருப்பதற்காக 75 கடமைகளை ஒரு சிறு நோட்புக்கில் எழுதித் தன் பையில் வைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் காலையிலும், படுக்கைக்குப் போகுமுன்பும் அதை ஜெபத்தோடு ஆராய்ந்து பார்த்து தான் சரியாக நடந்து கொண்டிருக்கிறேனா என்று கர்த்தர் முன் வந்து நன்றியோடு ஜெபித்தாராம். தான் செய்ய மறந்தவைக்கு மன்னிப்பும் கேட்டாராம். இந்த 21ம் நூற்றாண்டில் கவனக்குறைவோடு ஏனோதானோவென்று அலட்சிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறவர்களுக்கு அது அதிகப்பிரசங்கித்தனமாகப் படலாம். ஆனால், தேவபயமும், தாழ்மையும் உள்ள மனிதன் தான் வாழ்கிற காலத்துக்கேற்றவகையில் தன் உணர்ச்சிகளுக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளமாட்டான். அவன் உறுதியாக தன் வாழ்க்கையை கர்த்தருக்கேற்றபடிக் கடினமாக உழைத்து நேர்செய்துகொள்வான்.
இதற்கும் தன்வழிகளை நேர் செய்துகொள்வதற்கும் என்ன தொடர்பு?
நிறைய தொடர்பிருக்கிறது. உறுதியில்லாமல் தீர்மானமில்லாத இலக்கில்லாத வாழ்க்கை வாழ்கிறவன் விசுவாசியாக இருக்கமுடியாது. அத்தகைய இலக்கில்லாத வாழ்க்கையில் பரிசுத்தம் இருக்க வழியில்லை. பரிசுத்தம் என்பது தானாக வராது. அது இருப்பதற்கு அநேக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். ஜெபம் பரிசுத்தத்தைக் கொண்டுவராது. ஒன்றை மறந்துவிடாதீர்கள். கர்த்தரை நோக்கி நீங்கள் உறுதியோடு போகாதிருந்தால், பரிசுத்தத்தை நோக்கி நீங்கள் போகமாட்டீர்கள். கடலில் பாய்மரத்துணி இழுத்தபோக்கில் போய்க்கொண்டிருக்கும் படகைப்போல உங்கள் இருதயம் இருந்தால் நீங்கள் கர்த்தரின் வழியில் ஒருநாளும் விசுவாசத்தோடு நடக்கமாட்டீர்கள். கர்த்தருக்குப் பயந்து வாழ்கிற வாழ்க்கை அந்தவிதத்தில் இருக்காது. யோதாம் குதிரையோட்டுகிறவன் லகானைத் தன் கரத்தில் உறுதியாகப் பிடித்து குதிரை தான் போகவிரும்பும் வழியில் போகவைப்பதில் உறுதியாக இருப்பதைப்போல, தன் உணர்ச்சிகளை அடக்கித் தன் வழிகளை நேராக்கிக்கொண்டு கர்த்தருக்குப் பயந்து வாழ்ந்தான்.
சங்கீதம் 1:2
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
யோசுவா 1:8
இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.
சங்கீதம் 25:5
உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.
சங்கீதம் 63:6
என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.
இந்த மனிதர்களைப்போல உங்களுடைய வாழ்க்கையை அன்றாடம் நேராக்கிக்கொள்கிறீர்களா? இலக்கில்லாத போக்கில் ஒவ்வொரு நாளும் தொடராமல் நாளுக்குரிய அனைத்தையும் திட்டமிட்டுத் தீர்மானித்துக் கர்த்தருடைய வார்த்தைக்கேற்றபடி வாழ்ந்து வருவதைக் கடமையாகக் கொண்டிருக்கிறீர்களா? இருதயம் தானாக இயங்கும்படி விட்டுவிடக்கூடாது. அந்தத் தவறைத் தாவீது ஒரு தடவை செய்து தன்னைச் சுட்டுக்கொண்டான். யோதாம் தன் இருதயம் அதுபோனபோக்கில் விடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கவில்லை. அவனுடைய தாழ்மையும், தேவபயமும் அவனைப் பொறுப்புள்ளவனாக இருதயத்தை ஆளுகிறவனாக மாற்றியது. உசியாவைப் போல தன் இருதயம் அலைய அவன் அனுமதிக்கவில்லை.
இறுதியாக, யோதாமுக்குக் கிடைத்த ஆசீர்வாதத்தைக் கவனிப்போம்.
2 நாளாகமம் 27:9
யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீதின் நகரத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய, ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
இது எதைக்காட்டுகிறது தெரியுமா?
யோதாம் சகல மரியாதைகளுடனும் தாவீதின் நகரத்தில் நல்ல அரசர்களுக்குக் கொடுக்கப்படுகிற மரியாதைகளோடு அடக்கம் செய்யப்பட்டான். உசியாவுக்கு அது கிடைக்கவில்லை. பிதாக்கள் அடக்கம் செய்யப்படுகிற பகுதியில் தொலைவில் ஓரிடத்தில் அவனை அடக்கம் செய்திருந்தார்கள். உசியாவுக்கு இறப்பிலும் மரியாதை இல்லாமல் இருந்திருக்கிறது.
2 இராஜாக்கள் 15:38 ல் இதைவிட அதிகமாக சொல்லப்பட்டிருக்கிறது.
யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
இந்த வசனத்தில் யோதாமின் தகப்பனாக தாவீது வர்ணிக்கப்பட்டிருக்கிறார். 2 நாளாகமம் 27:9 தாவீதின் நகரத்தில் என்று மட்டுமே விளக்கியிருக்கிறது. இங்கே யோதாமின் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் என்று வாசிக்கிறோம். இதிலிருந்து தாவீதோடு நெருக்கமுள்ளவனாக யோதாம் காட்டப்பட்டிருக்கிறான்.
யோதாமுக்கு ஆசீர்வாதங்கள் ‘ஆசீர்வாத வசனங்கள்’ மூலமாக வந்துவிடவில்லை. அத்தகைய வசனங்களைக் கொடுத்தே இன்று பிரசங்கிகள் ஆத்துமாக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆத்துமாக்களும் அத்தகைய வசனங்களுக்காக அலைந்து தங்களை ஏமாற்றிக்கொள்கிறார்கள். கர்த்தரின் ஆசீர்வாதங்கள், அவருக்குப் பயந்து, தாழ்மையோடு வாழ்ந்து, அவருடைய வார்த்தையின்படி நடக்கிறவர்களுக்கே கிடைக்கும். அதுவே யோதாமின் வாழ்க்கையாக இருந்தது.
யோதாமைப்போல தாழ்மையையும், தேவபயத்தையும் கொண்டு அவருடைய வார்த்தையைப் பின்பற்றி வாழ்கிறீர்களா? தேவபயமில்லாத இருதயத்தில் தேவ அன்பு இருக்கமுடியாது. தேவ அன்பில்லாத இருதயத்தில் தேவன் இருக்கமாட்டார். நீங்கள் எப்படி?
Thank you pastor,
பக்தி விருத்தியுள்ள கிறிஸ்தவ வாழ்வுக்கு மிகவும் அத்தியாவசியமான சில ஊட்டப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள இந்த பிரசங்கம் மிகவும் உதவியது. யூதாவின் நல்ல ராஜாக்கள் என்றதும் ‘பளிச்’ என்று நினைவுக்கு வரும் சில ராஜாக்களின் பெயர் வரிசையில் யோதாமின் பெயர் ஒருபோதும் நினைவுக்கு வந்ததில்லை. ஆனால் இந்த பிரசங்கத்திற்கு பின்னர் யோதாமின் பெயரும் மறக்காமல் நினைவுக்கு வருகிறது.
விசுவாசப் பாதையில் தாழ்மையின் பள்ளத்தாக்கை கடந்து வந்தவர்களுக்கே தெரியும், வேதம் கூறும் தாழ்மை என்பது அத்தனை இலகுவாக பெற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல என்று. அதுவும் கடினமாக உழைத்து, தேசத்தை நல்ல செழிப்பான நிலைக்கு கொண்டு வந்து, உயர்ந்த நிலையில் வாழ்ந்த ராஜாவாகிய யோதாமிடம் காணப்பட்ட தாழ்மை என்பது மிகவும் அரிதானது. அத்தகைய உயர்ந்த வகைத் தாழ்மையைக் கொண்டிருக்கும் ஆத்துமா கண்டிப்பாக தேவ பயத்தோடு தன் கால்களை பாவத்துக்கு விலக்கி தேவனுக்கு பிரியமான வகையில் நேராக்கி கொள்ளும் என்றும் அறிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக ” நேராக்கிக் கொண்டான்” என்ற வார்த்தை பிரயோகத்தில் அடங்கியிருக்கும் ஆழமான அர்த்தம் புரிந்தது. தாழ்மையின் பள்ளத்தாக்கின் சறுக்கல்களுக்கும், மரணப் பள்ளத்தாக்கின் கண்ணிகளுக்கும் மட்டுமல்ல, மாயாபுரியின் மாயைகளுக்கும், மயக்க பூமியின் மந்த நிலைக்கும் தப்பிச் செல்ல வேண்டுமென்றால், நமது விசுவாச வாழ்க்கையின் ஒவ்வொரு காலடிகளும் மிகவும் எச்சரிக்கையாக, உணர்ச்சிகளுக்கு கடிவாளமிட்டு, தேவபயத்தோடு எடுத்து வைக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துக்கூறி உறுதியாக எச்சரித்தது.
அவிசுவாசிகள் அடையும் தண்டனைகள் நம்மை எச்சரிக்கைச் செய்து தவறானப் பாதைக்கு விலகி நடக்க உதவுகிறது. அதே நேரம் வரலாற்றில் காணும் விசுவாச வீரர்களின் வெற்றிகள் நம்மை உறுதியான காலடிகளோடு அந்த வழிகளைப் பின்பற்றி முன்னேறிச் செல்ல உதவுகிறது. பிரசங்கத்தைக் கேட்ட போதே ஜோனத்தான் எட்வர்ட்ஸின் 75 சுயப்பரிச்சோதனைக் குறிப்புகளை வாசித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அஜாக்கிரதையாக இருந்து மறந்து விட்டேன்.மறுபடியும் இந்த பிரசங்கத்தை வாசித்த போதுதான் தவறு நியாபகம் வந்தது. எட்வர்ட்ஸின் சுயப்பரிசோதனைக் குறிப்புகளை online-ல் வாசித்துப் பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 18வது நூற்றாண்டின் எழுப்புதல் காலத்தில் வல்லமையாகப் பயன்படுத்தப் பட்ட கர்த்தரின் பட்டயமான எட்வர்ட்ஸின் தனிப்பட்ட பரிசுத்த வாழ்க்கை எத்தனை கவனமாகக் கூர் தீட்டப்பட்டிருக்கிறது என்பதை அவரின் சுயபரிசோதனைக் குறிப்புகள் அழகாகப் படம் பிடித்துக் காட்டியது. தொடர்ந்து, தனிப்பட்ட வகையில் சுயப்பரிசோதனைப் பட்டியல் ஒன்றைத் தயாரித்துக் கொண்டதோடு, ஓய்வு நாளுக்கு முந்தைய மாலைநேரத்தில் அதைப் பயன்படுத்தி தவறுகளைத் திருத்திக் கொள்ளவும், மனந்திரும்புதலோடும், கீழ்ப்படிதலோடும் ஓய்வு நாளுக்காக ஆயத்தப்பட்டு பரிசுத்தமாக அந்த நாளை ஆசரிக்கவும் மிகவும் உதவியாக இருக்கிறது.
LikeLike
இந்தப் பிரசங்கத்தை வாசித்ததோடு மட்டுமல்லாமல், அதன் மூலம் நீங்கள் அடைந்த பயன்பாடுகளை அழகுபட விளக்கி எழுதியமைக்கு என்னுடைய பாராட்டுக்கள். தொடர்ந்து வாசியுங்கள்; சத்தியம் விடுதலையாக்கும். நன்றி. – ஆசிரியர்
LikeLike