பிரசங்கம் செய்வதைப் பற்றி நான் ஒரு நூலை எழுதியிருந்தபோதும் (பிரசங்கிகளும் பிரசங்கமும்), அதைப்பற்றி சில நாடுகளில் போதனைகள் தந்திருந்தபோதும், இன்று முதல்முறையாக “தர்க்கரீதியிலான பிரசங்கம்” செய்வதைப்பற்றி விளக்கமாக எழுதப்போகிறேன். என் நூலிலும், நான் இதுவரை கொடுத்திருக்கும் போதனைகளிலும் இதுபற்றி சுருக்கமாக நான் விளக்காமல் இருந்ததில்லை. இருந்தாலும் இப்போது நாம் கவனிக்கப்போகிறவிதத்தில் அதை நான் விளக்கமாகவும், ஆழமாகவும் எழுதியதில்லை. இப்போது இதுபற்றி எழுதுவதற்குக் காரணம் நம்மினத்துப் பிரசங்கிகளிடம் அது உணர்வுபூர்வமாக இல்லாமலிருப்பதை நான் உணர்ந்திருப்பதுதான். இதுபற்றி சுருக்கமாக ஒரு ஆக்கத்தை நான் திருமறைத்தீபம் வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறேன். அது திருமறைத்தீபம் இதழிலும் வந்திருக்கிறது.
பொதுவாகவே கிறிஸ்தவ பிரசங்கங்கள் தர்க்கரீதியிலான முறையில் நம்மினத்தில் பெரும்பாலும் செய்யப்படுவதில்லை. இந்த முறையில் பிரசங்கிப்பது என்பது என்றும் இருந்திராத ஒரு நவீன முறையோ, புதுக்கண்டுபிடிப்போ அல்ல. இதுவே வழமையாக பிரசங்கம் தயாரிக்கும் போதும், பிரசங்கிக்கும்போதும் காணப்படவேண்டிய முறை; வரலாற்றில் தொடர்ந்திருந்து வந்திருக்கும் முறை. இந்த முறையிலேயே சீர்திருத்தவாதிகளான ஜோன் கல்வின், மார்டின் லூத்தர், பியூரிட்டன் பெரியவர்கள், 18ம் நூற்றாண்டு பிரசங்கிகள், 19ம் நூற்றாண்டில், ஸ்பர்ஜன், ரைல், 20ம் நூற்றாண்டில் டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ் ஆகிய அனைவரும் பிரசங்கம் செய்து வந்திருக்கிறார்கள். இந்த முறையில் பிரசங்கத்தைத் தயாரிப்பதற்கும், பிரசங்கம் செய்வதற்கும் தர்க்க அறிவு தேவைப்படுகிறது. அதாவது, தர்க்கமாகிய பாடத்தை அறிந்திருப்பது அவசியமாகிறது.
20ம் நூற்றாண்டுக்கு முன்பு பேச்சுக்கலையிலும் (Rhetoric), பிரசங்கப் பணியிலும் ஈடுபடுகிறவர்கள் தர்க்கத்தை ஒரு பாடமாகப் படித்து வந்திருக்கிறார்கள். பேச்சுக்கலையாகிய பாடத்தை எடுக்கிறவர்கள் தர்க்கத்தையும் இணைத்துப் படிக்கவேண்டிய கட்டாயம் அன்று இருந்திருக்கிறது. அதேநேரம் பிரசங்கக்கலையைக் கற்றுக்கொள்ள வரும் இறையியல் மாணவர்களும் அந்தப் பாடத்தை, இறையியல் கல்லூரிக்கு வருமுன்பே தங்களுடைய கல்லூரி வாழ்க்கையில் ஒரு பாடமாகக் கற்றிருந்திருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், இறையியல் கல்லூரிகளில் தர்க்கமாகிய பாடத்தைக் கற்றுத் தராமல், அதன் கோட்பாடுகளைப் பிரசங்கம் தயாரிப்பதிலும், பிரசங்கம் செய்வதிலும் மாணவர்கள் பயன்படுத்த வேண்டுமென்று எதிர்பார்த்தார்கள். இன்னொரு வகையில் சொல்லப்போனால், பிரசங்கத்திற்கு தர்க்கம் எந்தளவுக்கு அவசியமானதென்பதை இந்தச் செயல் உணர்த்துகிறது.
19 நூற்றாண்டு சீர்திருத்த இறையியல் அறிஞரான ஆர். எல். டெப்னி (Robert Lewis Dabney), இறையியல் மாணவர்களுக்கு பிரசங்கக் கலையைக் கற்றுத் தந்திருக்கிறார். அவரது பிரசங்கம் பற்றிய விரிவுரைகள் RL Dabney on Preaching, Lectures on Sacred Rhetoric என்ற தலைப்பில் வெளிவந்திருக்கின்றன. டெப்னி தன் நூலில் தர்க்கம்பற்றிக் குறிப்பிட்டிருப்பதை இப்போது உங்களுக்குத் தமிழில் தருகிறேன். அவர் தன் இறையியல் மாணவர்களுக்கு பிரசங்கம் பற்றி அளித்திருந்த ஒரு விரிவுரையில் பின்வருமாறு சொல்லியிருக்கிறார்,
“பிரசங்கத்தில் வாதத்தை அருமையாகத் தயாரிப்பதற்குத் தர்க்கம் பற்றிய முறையான அறிவு மிகவும் அவசியமானதென்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், அந்த விஞ்ஞானத்தை இந்த இடத்தில் உங்களுக்குக் கற்றுத்தருவது என் வேலையல்ல. அந்தப் பாடத்தை நீங்கள் உங்கள் கல்லூரி வாழ்க்கையில் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று நான் அனுமானம் செய்கிறேன். இந்த இடத்தில் அந்தத் தர்க்கத்தைப் பேச்சுக்கலையில் (பிரசங்கத்தில்) எப்படிப் பயன்படுத்துவது என்பதை விளக்குவதுதான் என் வேலை” என்று டெப்னி குறிப்பிட்டிருக்கிறார்.
ஆகவே, தர்க்கம் ஆகிய பாடம் பிரசங்கம் தயாரிப்பதற்கு அவசியமானதென்பதை அன்று போதகர்களும், இறையியல் கல்லூரிகளும் நம்பியிருந்தன. சாதாரணமாகவே கல்லூரிகளில் அன்று அது கற்றுக்கொடுக்கப்பட்டது. பிரசங்கம் அல்லது பேச்சுக்கலையை நாடிப் போகிறவர்கள் தர்க்கத்தையும், சட்டத்தையும் பாடங்களாகப் பயின்று வந்திருக்கிறார்கள். முக்கியமாக சட்டக்கலையைக் கற்றுக்கொள்ளுகிறவர் களுக்கும் இது ஒரு பாடமாக வைக்கப்பட்டிருந்திருக்கிறது.
ஒரு கருத்தைப் பிரசங்கத்தில் கேட்பவர்கள் முன் வைப்பதற்கு அவசியமான வாதத்தைத் தயார் செய்வதற்குத் தேவையான விதிகளை இந்தத் தர்க்கத்தில் இருந்தே டெப்னி பயன்படுத்தித் தன் மாணவர்களுக்கு கற்றுத் தந்திருக்கிறார். தன்னுடைய நூலில் 168-232 வரையுள்ள பக்கங்களில் டெப்னி தர்க்கரீதியில் விளக்கமளிப்பதற்கு அவசியமான விதிகளை விளக்கியிருக்கிறார். அவருடைய நூல் 19ம் நூற்றாண்டு ஆங்கிலத்தில் இருந்தபோதும், ஆங்கில அறிவுள்ளவர்கள் பொறுமையோடும், கவனத்தோடும் சிந்தித்து வாசித்தால் நிச்சயம் அதன்மூலம் பயனடைவார்கள்.
இந்தப் பக்கங்களில் டெப்னி தர்க்கமாகிய பாடத்தைப் பயன்படுத்தி அதன் அவசியத்தை உணர்த்தி பிரசங்கத்தில் அதைப் பயன்படுத்துவதற்கான விதிகளை முன்வைக்கிறார். “தர்க்கிக்காத பிரசங்கி பிரசங்கியே அல்ல” என்கிறார் டெப்னி. தொடர்ந்து அவர், “ஆத்துமாக்களைக் கவரக்கூடிய பிரசங்கி மெய்யாகத் தர்க்கம் செய்கிறவன்; ஏனெனில், அவன் நுட்பத்தோடு தர்க்கிக்கிறான், துல்லியமாகத் தெளிவாகத் தர்க்கிக்கிறான்” என்கிறார்.
முதலில், தர்க்கரீதியிலான பிரசங்கம் என்றால் என்ன?
பிரசங்கம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ் அதை “கனல் கக்கும் தர்க்கம்” (Logic on Fire) என்று விளக்கினார். இதன் மூலம் லொயிட் ஜோன்ஸ் பிரசங்கத்தைத் தர்க்கம் என்று அழைத்திருப்பதைக் கவனிக்கவேண்டும். நெருப்பாய் எரியும் தர்க்கமே பிரசங்கம் என்று அவர் கூறியிருக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது? சீர்திருத்தவாத பிரசங்கிகள் எல்லோருமே பிரசங்கத்தைத் தர்க்கமாகவே கணித்திருக்கிறார்கள்.
R L Dabney அதைப் புனிதமான பேச்சுவன்மை (Scared Rhetoric) என்று அழைத்திருக்கிறார். சொல்வன்மையுள்ள, தூண்டக்கூடிய புனிதமான பேச்சு வன்மை என்பது அதற்கு அர்த்தம்.
தர்க்கரீதியிலான பிரசங்கத்தைத் தெளிவாக விளக்குவதானால் பின்வருமாறு விளக்கலாம்.
பிரசங்கத்தின் கருப்பொருளை, அதற்கான தெளிவான ஆதாரங்களோடும், வாதத்திறமையோடும், இறையியல் தவறுகள் எதுவும் இல்லாமல் தர்க்கரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் தயாரித்துப் பயன்பாடுகளோடு பிரசங்கிப்பது.
இத்தகைய பிரசங்கங்களே வழமையானவை என்பதற்கும், அந்த விதத்திலேயே எப்போதும் பிரசங்கங்கள் அமையவேண்டும் என்பதற்குமான அநேக உதாரணங்களை வேதத்தில் காணலாம்.
எந்தப் பிரசங்கத்திலும் கருப்பொருள் இருக்கவேண்டும். இதையே பிரசங்கத்தில் முதலில் அறிமுகத்தில் விளக்குவார்கள். இதை ஆங்கிலத்தில் proposition என்பார்கள். தமிழில் இதை “கூற்று” என்று சொல்லலாம். அதாவது, இது ஒரு statement. இன்னொருவிதத்தில் சொல்லப்போனால், முழுப்பிரசங்கப் பொருளையும் சுருக்கமாக இந்தக் கூற்று முன்வைக்கும். இந்தக் கூற்றை நாம் சாட்சிகளைப் பயன்படுத்தி வாதத்திறமையோடு தர்க்கரீதியில் விளக்கிப் பிரசங்கிக்கப்போகிறோம். இந்த இடத்திலே தர்க்கம் வந்துவிடுகிறது. தர்க்கம் இல்லாமல் அந்தக் கூற்றை நாம் சரிவர வேதபூர்வமாக விளக்கமுடியாது. தர்க்கம் இல்லாமல் விளக்கப்போனால், ஒரு முறையான வரைபடத்தைக் கையில் வைத்திராமல் ஒரு இடத்தை நோக்கிப் பிரயாணம் செய்வதுபோலிருக்கும். எங்கு போகிறோம் என்று தெரியாமலேயே போய்க்கொண்டிருப்போம். என்ன சொல்லுகிறோம் என்று தெரியாமல் பிரசங்கமென்ற பெயரில் எதையோ உளறிக் கொண்டிருப்போம்.
இன்று பெரும்பாலான பிரசங்கங்கள் சலிப்பூட்டும்படியாக இருப்பதற்குக் காரணம் சத்தியம் தர்க்கரீதியில் பிரசங்கிக்கப்படாததால்தான். அதாவது, ஒரு வசனத்தைக் கேட்பவர்கள் முன்வைத்து, அதுதான் சத்தியம் என்று அநேகர் அடித்துச் சொல்லுகிறார்களே தவிர கேட்டுக்கொண்டிருப்பவர்கள் அதை ஏன் சத்தியமாக ஏற்று விசுவாசிக்கவேண்டும் என்பதற்கான தெளிவான ஆதாரங்களைத் தர்க்கரீதியில் அவர்கள் முன்வைத்து விளக்கி நிரூபிக்க அவர்களால் முடியாமல் இருக்கிறது. இதனால் கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு அது புரிவதில்லை; அவர்கள் வளரவும் வழியில்லாமலிருக்கிறது.
இதற்கு உதாரணமாக, கெரிஸ்மெட்டிக் பிரிவினர், “ஒவ்வொரு கிறிஸ்தவனும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருக்க வேண்டும்” என்ற கூற்றை முன்வைப்பார்கள். அதைப் பிரசங்கிக்கும் பிரசங்கி தர்க்கரீதியில் அதை நிரூபிப்பதில்லை. அங்கே, இங்கே என்று ஒரு சில வேதவரலாற்று சம்பவ உதாரணங்களை மட்டும் முன்வைத்து, அந்தப் பகுதிகளைச் சரியாக விளக்காமல், அங்கு நடந்திருப்பதால் இன்றைக்கு நமக்கும் அது நடக்க முடியும், நடக்க வேண்டும் என்று அவர்கள் ஆணித்தரமாகக் கூறுவார்கள். இதில் தர்க்கம் இடம் பெறவில்லை. அவசியமான பல கேள்விகளே தலைதூக்குகின்றன.
முதலில், இந்தக் கூற்றில் தவறான தர்க்கம் காணப்படுகிறது. சரியான முறையில் தர்க்கம் செய்தால் எப்போதுமே தவறான தர்க்கத்தை இனங்கண்டு கொள்ளலாம். இதற்கு சிலஜிசத்தைப் (Syllogism – முக்கூற்று முடிவு விதிமுறை) பயன்படுத்தினால் தவறான தர்க்கத்தை இனங்கண்டுகொள்ளலாம்.
பிரதான கூற்று – பரிசுத்த ஆவி அபிஷேகம் செய்கிறார்
சிறிய கூற்று – பவுல் அபிஷேகத்தைப் பெற்றிருந்தார்
முடிவு – எல்லாக் கிறிஸ்தவர்களும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அடைவார்கள்
இது தவறான தர்க்கம். இதில் முடிவு தவறான தர்க்கத்தின் மூலம் பெறப்பட்டிருக்கிறது. பவுல் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அடைந்திருந்தால் எல்லாக் கிறிஸ்தவர்களும் அதை அடைந்திருக்கவேண்டும் என்ற வாதம் தவறானது.
இதில் பிரசங்கி காட்டிய பகுதிகளில் நடந்த நிகழ்வுக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்ற உண்மை தர்க்கரீதியில் விளக்கப்படவில்லை. அவர் சொல்லுவதை நாம் நம்ப வேண்டும் என்று பிரசங்கி வலியுறுத்துகிறார். ஆனால், தர்க்கரீதியில் தகுந்த வேதஆதாரங்களோடு அது நிரூபிக்கப்படாவிட்டால் நாம் நம்பத்தேவையில்லை. வேத உண்மைகளாக இருந்தாலும் பிரசங்கத்தில் அவை தர்க்கரீதியில் சாட்சிகளோடும், ஆணித்தரமாகவும், முறையோடு ஒன்றன் பின் இன்னொன்று வருவதாகவும் முன்வைக்கப்படாதவரையில் அவற்றை நாம் நம்ப வேண்டிய அவசியமில்லை.
இன்னும் இரண்டு உதாரணங்களைக் கவனிப்போம்.
உதாரணம் 2: வேறு சிலர், திரித்துவம் என்று ஒன்றில்லை, இயேசுவை மட்டுமே நம்ப வேண்டும் என்பார்கள். ஆனால், அவர்கள் நம்புகிற அந்த விஷயத்தை அவர்களால் தர்க்கரீதியில் வேத ஆதாரங்களோடு நிரூபிக்க முடிவதில்லை. திரித்துவம் என்ற வார்த்தை வேதத்தில் இல்லை என்ற ஒரு காரணத்தை மட்டுமே கிளிப்பிள்ளை போல் சொல்லிவருவார்கள். இத்தகைய தவறான தர்க்கத்தை நாம் நம்பவேண்டிய அவசியமில்லை.
உதாரணம் 3: இதேபோல்தான் சிலர் இயேசுவின் பெயரில் மட்டும் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்பார்கள். அவர்களும் தர்க்கரீதியில் ஆதாரங்களோடு அதை நிரூபிப்பதில்லை; இன்றுவரை நான் அதைத் தர்க்கரீதியில் விளக்கிய எவரையும் கண்டதுமில்லை. அப்படி அவர்கள் செய்யாதவரையில் அதைப்பற்றி நாம் சிந்திக்கவேண்டிய அவசியமில்லை.
இவற்றில் இருந்து எதை அறிந்துகொள்ளுகிறோம். எந்த வேத உண்மையும் பிரசங்கத்தில் தகுந்த, துல்லியமான வேதஆதாரங்களோடு நம்பக்கூடியவிதத்தில் தர்க்கரீதியில் அசைக்கமுடியாதபடி விளக்கப்பட வேண்டும். அப்படி விளக்கும்போதுதான் அந்த உண்மை வேத அதிகாரத்தை அடைகிறது. அப்படி விளக்காவிட்டால் அந்த உண்மையின் அதிகாரத்தை நாம் பலவீனமான வாதத்தின் மூலம் மட்டுப்படுத்திவிடுகிறோம். அதனால் பிரசங்கமும் பலவீனமடைந்துவிடுகிறது.
தர்க்கமும் மனிதனும்
தர்க்கத்திற்கான அவசியம் என்ன?
அநேக கிறிஸ்தவர்கள் தர்க்கத்தை மனித சிந்தனையாக, ஆவிக்குரியதாக இல்லாத சிந்தனையாகக் கருதுகிறார்கள். அந்த எண்ணம் தவறு. உண்மையில் தர்க்கத்திலும் தவறான தர்க்கம், சரியான தர்க்கம் என்றிருக்கிறது. சரியாகச் சிந்தித்துத் தர்க்கிக்கும்போதே தவறான தர்க்கத்தை நாம் அடையாளம் கண்டுகொள்கிறோம். அதனால்தான் தர்க்கம், அதாவது சரியாக தர்க்கம் செய்வது அவசியமாகிறது. முக்கியமாகப் பிரசங்கிகளுக்கு மிகவும் அவசியமானது.
படைப்பில் கர்த்தர் மனிதனைக் காரணகாரியங்களோடு சிந்திக்கக் கூடியவனாகவே படைத்திருக்கிறார். படைப்பிலேயே மனிதன் இந்த ஆற்றலைப் பெற்றுக்கொண்டான். கர்த்தர் தன் சிருஷ்டிகள் அனைத்திற்கும் பெயர் வைக்கும்படி முதல் மனிதனாகிய ஆதாமைக் கேட்டுக்கொண்டார். ஆதாம் தன் அறிவைப்பயன்படுத்தி சிந்தித்து ஆராய்ந்து தகுந்த காரணங்களோடு ஒவ்வொரு சிருஷ்டிக்கும் பெயர்வைக்க வேண்டியிருந்தது. ஆதாமுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பொறுப்பை நாம் சாதாரணமானதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அவன் செய்தவற்றை ஆண்டவர் ஏற்றுக்கொண்டார். ஆதாம் கண்மூடித்தனமாக எதற்கும் பெயர்வைக்கவில்லை. ஆதாமால், சரியானவிதத்தில் சிந்திக்க முடிந்தது. தன் சிந்தனையைக் காரண காரியங்களோடு மற்றவர்கள் நம்பக்கூடியவிதத்தில் தர்க்கரீதியில் விளக்க முடிந்தது. அத்தகைய தன்மையோடு அவனை ஆண்டவர் படைத்திருந்தார். இந்தவிதத்திலேயே அவன் தன் மனைவிக்கும் பெயர்வைத்தான் (ஆதியாகமம் 2:23).
ஆதியாகமம் 2:23
அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
மானிடத்தின் மகிமையே சிந்திக்கும் ஆற்றலில்தான் தங்கியிருக்கிறது (ரோமர் 12:1-2). ஏனைய சிருஷ்டிகளில் இருந்து நம்மை வேறுபடுத்துவதும் இந்த சிந்திக்கும் ஆற்றலே.
ரோமர் 12:1-2
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
மனிதன் தர்க்கரீதியில் சிந்திக்கக்கூடிய ஆற்றலோடு படைக்கப்பட்டிருந்த போதும், பாவம் அவனை பலவீனமானவனாக்கியது. அவனில் அனைத்தையும் பாதித்த பாவம் அவனுடைய சிந்திக்கக்கூடிய ஆற்றலையும் பாதித்தது, ஆனால் அதை அவனிலிருந்து அகற்றிவிடவில்லை (Thinking ability). பாவம் அதை பலவீனப்படுத்திவிட்டது. அதனால் பாவியாகிய மனிதன் சிந்திக்கக்கூடியவனாக இருந்தபோதும் இன்று சரியானவிதத்தில் சிந்திக்கமுடியாதவனாக இருக்கிறான் (ரோமர் 1). அவனால் சத்தியத்தைப் பொய்யாக்க முடியுமே தவிர அதனை நேசிக்கவும், அதன் வழியில் நடக்கவும் முடியாமலிருக்கிறது. தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவனால் முடியாது (ரோமர் 1:28).
ரோமர் 1:28
தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
இந்நிலைமை மாறி அவன் சரிவர சிந்திக்க மறுபிறப்பு தேவை. மறுபிறப்பை அடைந்தவனே சிந்திக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி ஆவிக்குரியவிதத்தில் சிந்திக்க ஆரம்பிக்கிறான்.
மறுபிறப்பை அடைந்தவர்களும் சிந்திக்க வேண்டியவர்களாகவும், சரியாகச் சிந்திக்க வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள். அதாவது சத்தியத்தைக் கற்றுக்கொள்ளுவதிலும், அதைப் பகிர்ந்துகொள்ளுவதிலும் அவர்கள் சரிவர சிந்திக்கவும், சத்தியத்தைப் புரிந்து பின்பற்றவும் வேண்டும். இது அவர்களுடைய கடமை. இந்த இடத்திலேயே தர்க்கம் வந்துவிடுகிறது.
தர்க்கமும் கிறிஸ்தவனும்
இப்போது தர்க்கத்தை விவரமாகக் கவனிக்கலாம். தர்க்கத்தை விளக்கும் பிரபல சீர்திருத்த கிறிஸ்தவ பாடலாசிரியரான ஐசெக் வொட்ஸ் பின்வருமாறு சொல்லுகிறார், “சத்தியத்தைத் தெளிவாக அறிந்துகொள்ளவும், அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் நம்முடைய சிந்திக்கும் ஆற்றலை நல்லமுறையில் பயன்படுத்துவதே தர்க்கம்.” நம்முடைய புத்திரீதியிலான ஆற்றல்களை நல்லமுறையில் நம்மிலும் மற்றவர்களிலும் வளர்த்துப் பயன்படுத்த உதவுவதே தர்க்கம்.
சிந்திக்கும் ஆற்றலை நாம் வளர்த்துக்கொள்ளும்போதே நாம் நன்மையானவற்றை தீமையிலிருந்து பிரித்துப் பார்க்கவும், சத்தியத்தை அசத்தியத்தில் இருந்து வேறுபடுத்தியும் பார்க்க முடியும். இந்த இரண்டும் இக்கால வாழ்க்கைக்கும், வரப்போகும் உலக வாழ்க்கைக்கும் அவசியமானவை.
சத்தியத்தை அறிந்துகொள்ளும்படியாக நம்முடைய புத்திரீதியிலான ஆற்றலை நல்லமுறையில் பயன்படுத்தும்போதே நம்முடைய ஞானம், விவேகம், பரிசுத்தம் மற்றும் நம்முடைய நடவடிக்கைகள் அனைத்தும் அவற்றின் செல்வாக்கிற்குள் வருகின்றன.
ஐசெக் வொட்ஸ், நம்முடைய சிந்தனை சரியானவிதத்தில் அமைவதற்குத் தேவையான மூன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறார்.
1. நம்முடைய சிந்திக்கும் ஆற்றல் பலவீனமாக இருப்பதாலும், சத்தியங்கள் கிணற்றில் தண்ணீர் ஆழமாக இருப்பதுபோல் காணப்படுவதாலும் நம்மால் உடனடியாக கிணற்றில் ஆழத்திற்குப் போய் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. சத்தியம் கிணற்றின் ஆழத்தில் இருப்பதால் அந்த ஆழத்துக்கு இறங்கிப்போய் அவற்றைப் புரிந்துகொள்ள தர்க்கம் நமக்கு உதவிசெய்கிறது. ஒருங்கிணைந்து காணப்படும் அநேக கேள்விகளை எழுப்பித் தீவிரமாகச் சிந்தித்து தர்க்கிக்கப்பதால் ஆழத்தில் காணப்படும் சத்தியங்களை நாம் வெளிக்கொணர முடியும்.
2. இந்தப் பாவ உலகில் அநேக விஷயங்கள் மறைவாகவும், தெளிவற்றவிதத்திலும் காணப்படுகின்றன. பூரணமற்ற இந்த உலகில் நாம் வெளிப்புறமாகக் காண்கிறவை உண்மையானவையல்ல. அவற்றின் வெளித்தோலை அகற்றி, அவற்றை நிதானித்து அவற்றின் உண்மைத் தன்மைகளைப் புரிந்துகொள்ளுவதற்கு தர்க்கம் உதவுகிறது. உதாரணம்: கால நிலை மாற்றம் (Climate change), சூழல் பாதுகாப்பு (Environment protection), தனியுரிமை (Individualism) போன்றவை. இந்த விஷயங்களில் நம்மில் பெரும்பாலானோருடைய சிந்தனை தாராளவாதப் போக்கைப் பின்பற்றுவதாகக் காணப்படுகிறது. கிறிஸ்தவ வேத சிந்தனையை அநேகர் இந்த விஷயங்களை ஆராயப் பயன்படுத்துவதில்லை. படைப்பிற்கும் இந்த விஷயங்களுக்கும் தொடர்பிருக்கிறதென்பதை கிறிஸ்தவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. கிறிஸ்தவ வேதத்தின்படி தர்க்கரீதியில் சிந்தித்து இந்த விஷயங்களைப் பற்றிய கருத்துக்களை கிறிஸ்தவன் கொண்டிருக்கவேண்டும்; அவை உலகத்துக்குப் பிடிக்காமலிருந்தாலும் வேதமே நமக்கு இந்த விஷயங்களில் உண்மையை விளக்குவதாக இருக்கிறது. சமுதாயம் இதைப்பற்றிக் கொண்டிருக்கின்ற கருத்துக்கள், அதற்காக சமுதாயம் எத்தனை ஆவேசமாகக் குரல் கொடுத்தாலும் உண்மையானவையோ, வேதபூர்வமானவையோ அல்ல. வேதமே அந்தக் கருத்துக்களின் வெளித்தோலை உரித்து உள்ளிருப்பதை இனங்காட்டுகிறது.
3. பாவத்தின் காரணமாக இந்த உலகத்தில் நம்முடைய புத்திரீதியிலான ஆற்றல்கள் பலவீனமாகக் காணப்படுவதால் நமக்கு உதவி தேவைப்படுகிறது. எதையும் எத்தகையது என்று தீர்மானித்து நாமெடுக்கும் முடிவுகள் நம்முடைய சூழ்நிலைக்கு ஏற்பவும், கல்வி மற்றும் பண்பாட்டுக்கு ஏற்பவும் அமைந்திருப்பதால் அவை தவறானவைகளாக அமைந்து விடுகின்றன. முதிர்ச்சியற்ற முடிவுகளை எடுத்துவிடாமல் இருக்கவும், நம்முடைய பலவீனமான ஆற்றல்களின் செல்வாக்கில் இருந்து தப்பிக்கொள்ளவும் தர்க்கம் நமக்குப் பெருந்துணை செய்கிறது.
தர்க்கக் கல்வி முறை
தர்க்கக் கல்வி முறை இன்று நம்மினத்தில் இல்லாமல் இருக்கிறது. தர்க்கத்தைப் பற்றிய தவறான கருத்துக்கள் அதற்குக் காரணமாக இருக்கலாம்.
கல்விச் சீர்திருத்தவாதிகள் மேலை நாடுகளில் 20ம் நூற்றாண்டில் தர்க்கம் வகுப்புகளில் ஒரு பாடமாக இருப்பதை நீக்கிவிட்டார்கள். காரணம் அதனால் சமூக நன்மை இல்லை என்பதுதான். சிந்தித்து ஆராயும் பக்குவம் அதனால் பாதிக்கப்பட்டது, அதிகாரத்துவ பண்பாடு வளரத்தொடங்கியது.
17ம் நூற்றாண்டு பியூரிட்டன்கள் தர்க்கத்தில் நம்பிக்கை வைத்திருந்தனர். அமெரிக்க நாட்டை உருவாக்கிய பியூரிட்டன்களும், அமெரிக்கத் தலைவர்களும் இதில் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர்.
நம்மினத்துக் கல்வி முறையில் தர்க்கத்திற்கு இடமே இல்லை. அதனால் தர்க்கக்கல்வி இல்லாமலேயே வளர்ந்து நாம் தர்க்கரீதியில் எதையும் ஆராய்ந்து புரிந்துகொள்ளவும், பதிலளிக்கவும், பேசவும் இயலாதவர்களாக இருக்கிறோம்.
இது பிரசங்க ஊழியத்தையும், சபைத்தலைமையையும் பெருமளவில் பாதித்திருக்கிறது. உணர்ச்சிகளும் (emotion), நடைமுறைவாதமும் (pragmatism), மட்டுமே நம்மினத்துக் கிறிஸ்தவத்தையும், சபைகளையும் இன்று ஆண்டு வருகின்றன.
வாழ்க்கைக்கு அவசியமானது தர்க்கம்
சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவைப்படுகிறது தர்க்கம். சகல மனிதர்களும் அன்றாட வாழ்க்கையில் அவசியமாகப் பயன்படுத்த வேண்டியது தர்க்கம். தர்க்கம் இல்லாவிட்டால் எத்தனையோ காரியங்களில் பெருந்தவறான முடிவுகளை எடுத்து அதனால் நஷ்டப்பட்டே வாழ்ந்து வருவோம். அநேகர் வாழ்க்கையில் எடுக்கும் தவறான முடிவுகளுக்கு இது இல்லாததே காரணமாக இருக்கலாம்.
உதாரணமாக, ஒரு விவசாயி பயிரிடுவதற்கு மழையை நம்பியிருப்பான். தண்ணீரில்லாமல் பயிரிட்டுப் பிரயோஜனமில்லை என்பது பகுத்தறிவு மட்டுமல்ல, அதில் தர்க்கம் இருக்கிறது. முதலில் பயிரிட மழை வேண்டும், அடுத்து நிலம் பண்படுத்தப்பட வேண்டும். அதன் பிறகு பயிரிட வேண்டும். இதில் தர்க்கம் இருக்கிறது. இதில் எதுவும் மாறி அமையக் கூடாது. அப்படி மாறி அமைவது தர்க்கத்திற்கு எதிரானது; விவசாயத்திற்கும் ஆபத்து. இந்தத் தர்க்கம் விவசாயியில் ஊறிப்போய்க் காணப்படும். அதை அவன் வாழ்க்கையில் அனுபவத்தில் கற்றுக்கொண்டிருக்கிறான். அது அவனுக்கு பரம்பரையாகப் போதிக்கப்பட்டிருக்கலாம். இருந்தாலும் இதுவே அடிப்படைத் தர்க்கக் கல்வி. இதை எந்த விவசாயியும் மறுப்பதில்லை. இந்தத் தர்க்கத்தைத்தான் நாம் சமுதாயத்தின் அத்தனை விஷயங்களிலும் பயன்படுத்துகிறோம்.
அதனால் தர்க்கத்தை நாம் ஏதோ விசேஷமானவர்கள் மட்டும் கற்கவேண்டியதொன்றாக எண்ணக்கூடாது. அத்தகைய தர்க்க சிந்தனை இல்லாத சமுதாயம் நல்ல சமுதாயமாக இருக்கமுடியாது.
பிரசங்கத்தில் தர்க்கம்
மறுபடியும் சீர்திருத்த இறையியலறிஞரான ரொபட் லூயிஸ் டெப்னி சொல்லுவதைக் கவனியுங்கள்,
“தர்க்கம் செய்யாதவன் உண்மையான பிரசங்கியல்ல. தர்க்கரீதியில் விளக்காமல் அவனால் எவர் மனதிலும் ஆழ்ந்த நம்பிக்கையை உண்டாக்க முடியாது. தர்க்கித்துப் பிரசங்கிக்காதவனையே சலிப்புப் பிரசங்கி என்று அழைக்க வேண்டும். தர்க்கித்துப் பிரசங்கிக்கிறவன் நுட்பத்தோடும், துல்லியமாகவும் பிரசங்கிக்கிறான். அவனுடைய பிரசங்கம் கேட்பதற்கு ஆர்வமூட்டுவதாக இருக்கும்; அதற்குக் காரணம் தர்க்கரீதியில் எதையும் அவன் புரியவைப்பதால் மட்டும் அல்ல, அவன் சரியானதை நமக்குத் தருகிறான். இதற்கு எதிர்மறையானவனே நம்மில் எந்தவிதமான அழுத்தத்தையும் ஏற்படுத்துவதில்லை; அத்தோடு சலிப்பூட்டுகிறவனாக இருக்கிறான்.”
தர்க்கத்திற்கான விதிகள் என்ற அதிகாரத்தில் டெப்னி இதைக் குறிப்பிட்டிருக்கிறார். வாதம் (Arguments) என்ற பகுதியில் 179-232 பக்கங்களில் Dabney on Preaching என்ற நூலில் டெப்னி விளக்கியிருப்பது மிகவும் அவசியமாக வாசிக்கவேண்டிய விஷயங்கள்.
தர்க்கத்தின் அவசியத்தை விளக்க இன்னுமொரு உதாரணத்தைத் தர விரும்புகிறேன்.
1689 விசுவாச அறிக்கை பரிசுத்த வேதாகமம் என்ற முதலாவது அதிகாரத்தில், வேதத்தைப் பற்றிய விளக்கத்தைத் தருகிறபோது நமக்குத் தேவையான அத்தனை சத்தியங்களும் வேதத்தில் இரண்டு வகையில் தரப்பட்டிருக்கின்றன என்று விளக்குகிறது.
- வெளிப்படையாகத் திட்டவட்டமாக,
- உள்ளடக்கமாக, இன்றியமையாத நிலையில்
இவற்றில் முதலாவதிற்குத் தர்க்கம் தேவையில்லை. அத்தகைய சத்தியங்கள் நேரடியாகத் தெளிவாகப் புரிந்துகொள்ளும்படி எங்கும் பரவலாகக் காணப்படுகின்றன. இரண்டாவதிற்கு தர்க்கம் அவசியமாகிறது. ஏனெனில், அவை நிலத்தின் கீழ் தங்கம் காணப்படுவதுபோல் நேரடியாகப் பார்வைக்குத் தெரியாமல் வசனப் பகுதிகளுக்குள் புதைந்து காணப்படுகின்றன. அவற்றை வெளியில் கொண்டுவர வேதவாசகனுக்கும், பிரசங்கிக்கும் தர்க்கம் அவசியமாகிறது. தர்க்கத்தைப் பயன்படுத்தாமல் ஒருவராலும் அவற்றைக் கண்டுகொள்ள முடியாது. நம்முடைய அறிவையும், சிந்தனை ஆற்றலையும், உழைப்பையும் பயன்படுத்திப் பல்வேறு கேள்விகளை எழுப்பி வேதத்தில் பல பகுதிகளிலும் இருந்து அந்த உண்மையை வெளிக்கொணர வேண்டும். இதற்கே தர்க்கம் அவசியமாகிறது. (பிரசங்க ஊழியத்தில் இருப்பவர்கள் வாசிக்க வேண்டிய ஒரு நூல் By Good and Necessary Consequence by Ryan M. Mcgraw. இந்நூலில் மெக்ரோ இன்றியமையா நிலையில் காணப்படும் சத்தியங்களை அறிந்துகொள்ளும் முறை பற்றி அருமையாக விளக்கியிருக்கிறார்).
முறைப்படுத்தப்பட்ட இறையியலின் அவசியத்தை இந்த இடத்தில் குறிப்பிடாமல் இருக்கமுடியாது. வேதத்தில் காணப்படும் சத்தியங்களின் தர்க்கரீதியிலான தொகுப்பே அது. அநேக சத்தியங்களைத் தர்க்கத்தைப் பயன்படுத்தி வேதத்தில் இருந்து (Deduced and collected or inferred from many passages) தர்க்கரீதியில் அனுமானித்து உணரவேண்டும்.
உதாரணமாக, சபை அங்கத்துவத்தை எடுத்துக்கொள்ளுவோம். அந்த வார்த்தையே வேதத்தில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், சபைக்கு அவசியமான அந்த முறை பற்றிய சத்தியம் வேதத்தில் உள்ளடக்கமாக, இன்றியமையாத நிலையில் தரப்பட்டிருக்கிறது. முறையான கேள்விகளை எழுப்பி முறையான தர்க்கத்தைப் பயன்படுத்தி அதை வேதத்தின் பல பகுதிகளிலும் இருந்து நிரூபிக்கவேண்டும். தர்க்கத்தின் பலனை இங்கு காண்கிறோம். நம்முடைய சிந்தனைத்திறனையும், தர்க்கத்தையும் பயன்படுத்தாமல் இந்தப் போதனையை வெளிக்கொணர முடியாது. அந்த விதத்திலேயே கர்த்தர் இந்தப் போதனையைத் தந்திருக்கிறார். அதனால் கர்த்தரின் வேதமும்கூட சிந்தித்து ஆராய்ந்து, தர்க்கத்தைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ள வேண்டிய நிலையில்தான் தரப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் சிந்தித்து ஆராய்ந்து எதையும் புரிந்துகொள்ளும்படியாக நம்மைக் கர்த்தர் படைத்திருப்பதுதான்.
இன்னுமொரு உதாரணத்தைக் கவனிப்போம்.
ஆதியாகமம் 1:1
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
இது ஒரு கூற்று (proposition, statement).
இந்தக் கூற்றை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், ஆரம்பத்தில் கர்த்தர் வானத்தையும் பூமியையும் படைத்தார் என்பதைத் தெளிவாகக் கண்டுகொள்கிறோம். ஆனால், இதில் அதற்கு மேல் அநேக சத்தியங்கள் உள்ளடக்கமாகப் பொதிந்து காணப்படுகின்றன. 1689 விசுவாச அறிக்கை சொல்லுவதுபோல் Necessarily contained – By good and necessary consequence. தர்க்கரீதியில் சத்தியத்தை அனுமானித்து உணரவேண்டும். தர்க்கத்தைப் பயன்படுத்தாமல் அந்த உண்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது.
அந்த உண்மைகள்:
- கர்த்தரும், இயற்கையும் ஒன்றல்ல; கர்த்தர் வேறு, இயற்கை வேறு (God and nature are distinct).
- கர்த்தர் நித்தியமானவர்; சிருஷ்டி படைக்கப்பட்டது.
- எந்தவித துணைப்பொருளின் உதவியும் இல்லாமல் கர்த்தர் இல்லாததிலிருந்து இருப்பவைகளை உருவாக்கினார்.
இந்த உண்மைகளைப் பெறப்பயன்படுத்தப்பட்ட கூற்றுக்களும் உண்மையானவையாக இருக்கவேண்டும். அப்படி அவை உண்மையாக இருந்தால் மட்டுமே இந்தத் தர்க்கரீதியிலான அனுமானங்கள் உண்மையாக முடியும்.
- அந்த வசனத்தில் கர்த்தரே படைத்தவர் என்பது உறுதி.
- கர்த்தர் படைத்தவற்றில் இயற்கை அடங்கியிருக்கிறது (வானமும், பூமியும்).
- ஆகவே, இன்றியமையாத முடிவு – கர்த்தரும் இயற்கையும் வெவ்வேறானவை.
தர்க்கத்தைப் பயன்படுத்தாமல் ஆதியாகமம் 1:1ல் இந்த முடிவுகளுக்கு நாம் வரமுடியாது.
தர்க்கரீதியில் பிரசங்கங்கள் அமைய அவற்றில் மூன்று விஷயங்கள் காணப்படவேண்டும்.
- முரண்பாடிருக்கக்கூடாது (Consistent) – பிரசங்கம் முரண்பாடில்லாமல் சீராக அமைந்திருக்கவேண்டும். தர்க்கரீதியிலான உண்மைகள் முரண்பாடற்ற விதத்தில் தொடரவேண்டும். ஒரு வக்கீல், எதிர்தரப்பு வக்கீல் அடித்து நொறுக்கிவிடக்கூடிய வாதங்களை முன்வைப்பதில்லை. முரண்பாடெதுவும் இல்லாததாக நாம் வெளிப்படுத்தும் உண்மைகள் அமைந்திருக்கவேண்டும்.
- வேதபூர்வமாக, சத்தியமானவையாக இருக்கவேண்டும் (Sound) – அதாவது, அவற்றில் இருந்து தவறான ஒரு கருத்து உருவாக வழியிருக்கக்கூடாது.
- முழுமையானதாக இருக்கவேண்டும் (Complete) – பிரசங்கத்தின் கருப்பொருளை நிரூபிக்கும் முழுமையான தேர்ந்தெடுக்கப்பட்ட வேத ஆதாரங்கள் காணப்பட வேண்டும். ஏனோதானோவென்று வசனங்களைத் தெரிவுசெய்து எதையும் நிரூபிக்க முயலக்கூடாது. வேதத்தில் காணப்படும் வசனங்களில் தெளிவானதும், அழுத்தமானதுமானவற்றைப் பயன்படுத்தித் தர்க்கிக்க வேண்டும். பிரசங்கம் அரைகுறையாக அல்லாமல் முழுமையானதாகக் காணப்பட வேண்டும்.
நல்லதும், மோசமானதுமான தர்க்கம்
1. சிந்திக்காமல் தர்க்கம் செய்வது
உதாரணம்: சில கிறிஸ்தவ சபைகளில் மக்கள் ஏன் ஆடிப்பாடுகிறார்கள்? தாவீது ஆடிப்பாடியதால் அவர்கள் அப்படிச் செய்கிறார்கள்.
இன்னொன்று, தோமா இந்தியா வந்ததால் இந்து மதத்தில் இயேசுவைப் பற்றிப் பேசப்படுகிறது.
அனுமானம் தோமா இந்தியா வந்தார்
தமிழர் சமயங்கள் சிலைவணக்கத்தை எதிர்த்தன
தமிழர் சமயங்களில் இயேசுவைக் கண்டுகொள்ளலாம்
இதில் தமிழர் சமயங்களில் சிலைவணக்கம் இல்லாமலிருந்ததற்கும், தோமா வருகைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தோமாவின் இந்திய வருகை கட்டுக்கதை. எந்தவிதமான வரலாற்று ஆய்விலும் ஈடுபட்டு அதை நிரூபிக்காமல் ஊகித்துச் சொல்லும் புரளி அது. அத்தோடு தமிழர் சமயங்கள் சிலை வணக்கத்தை ஆதரிக்கவில்லை என்பதற்கும் அதன் மூலம் இயேசுவை அறிந்துகொள்ளலாம் என்பதும் உண்மைக்கு மாறான புரளி மட்டுமே.
அனுமானம் – பிரஜாபதி என்ற பதம் கர்த்தரைக் குறிக்கிறது
கூற்று – இந்திய வேதத்தில் கர்த்தரைக் கண்டுகொள்ளலாம்.
இதில் பிரஜாபதி என்ற பதம் கர்த்தரைக் குறிக்கிறது என்பதற்கான இந்து மத ஆதாரங்களோ, கிறிஸ்தவ ஆதாரங்களோ அடியோடு இல்லை. எந்தவித ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரங்களும் இல்லாத மிக மோசமான, அறிவுக்குப் புறம்பான தர்க்கம் இது. இந்த ஒரு வார்த்தையைக் கொண்டு இந்து மதத்தில் இயேசுவைக் கண்டுகொள்ளலாம் என்பது அடிப்படையில் மோசமான தர்க்கம்.
2. தவறான காரணம் தருதல்
அப்போஸ்தலர் 2:4 – அங்கிருந்தவர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு அந்நியபாஷைகளில் பேசினார்கள். இதைவைத்து, பரிசுத்த ஆவியால் நிரப்பப்படும்போதெல்லாம் ஒருவர் அந்நியபாஷை பேச வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள்.
கூற்று – அ. அவர்கள் ஆவியால் நிரப்பப்பட்டார்கள்
கூற்று – ஆ. அவர்கள் அந்நிய பாஷை பேசினார்கள்
முடிவு: இ. ஆவியால் நிரப்பப்படும்போதெல்லாம் ஒருவர் அந்நிய பாஷை பேசுவார்.
இது தவறான தர்க்கவாதம் (Illogical). இதன் மூலம் ‘அ’, ‘ஆ’ விற்கு காரணமாக இருந்தது என்பது ஊகம். முதலாவது நிகழும்போதெல்லாம் இரண்டாவதும் நிகழவேண்டும் என்ற வாதமும் தவறானது. வேதத்தை ஆராய்ந்து பார்க்கும்போது பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டபோதெல்லாம் மக்கள் அந்நிய பாஷை பேசியிருக்கவில்லை என்பதை அறிந்துகொள்ளலாம்.
இதைவிட ‘ஆ’ விற்கும், ‘இ’ க்கும் காரணம் ‘அ’ வாக இருந்திருக்கலாம்.
அ. விசுவாசிகளானார்கள்.
ஆ. பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள்
இ. அந்நிய பாஷை பேசினார்கள்.
இன்னொரு உதாரணம்: ‘சபைக்கு மக்கள் குறைவாக வருவதற்கு போதகரின் மனஉளைச்சலே காரணம்.’
அ. போதகரின் மனஉளைச்சல்
ஆ. மக்கள் வருகை குறைவு
முடிவு: மக்கள் வருகைக்குறைவுக்கு போதகரே காரணம்.
இது தவறான தர்க்கம். போதகரின் மனஉளைச்சலுக்கும், மக்கள் வருகை குறைவிற்கும் சபையில் வேறு விஷயங்கள் காரணமாக இருந்திருக்கலாம்.
3. மோசமான வாதம்
‘அவர் நல்ல பிரசங்கியாக இருக்க முடியாது ஏனெனில், அவர் கல்வினிசத்தை நம்புகிறார்.’
கூற்று – அவர் பிரசங்கி
கூற்று – அவர் கல்வினிஸ்ட்
முடிவு – அவர் நல்ல பிரசங்கி அல்ல.
மேலே காணப்படும் முக்கூற்றில் ஒன்று இன்னொன்றுக்குக் காரணமல்ல, இது மோசமான வாதம். இதில் ஒன்று இன்னொன்றைத் தீர்மானிக்கவில்லை.
4. நல்ல வாதம்
ஒருவரின் தனிப்பட்ட குறைபாடுகள் நாம் வாதம் செய்யும் பொருளோடு தொடர்புடையதாக இருக்கும்போது அவரை எதிர்த்துக் கருத்துச் சொல்லுவதில் தவறில்லை. இயேசு பரிசேயர்களைத் தாக்கியதற்குக் காரணம் அவர்களுடைய நடவடிக்கைகளோடு முரண்பாடுடையதாக அவர்களுடைய போதனை இருந்தது.
உதாரணம்: நீதியற்ற வாழ்க்கை வாழ்ந்த பரிசேயர்கள், மற்றவர்களுடைய செயல்களை நீதியற்றதாகக் குறைகண்டார்கள். அவர்களுடைய போதனை முரண்பாடான கருத்துக்களின் அடிப்படையிலானது.
5. இலக்கணத்தையும், வார்த்தையையும் ஆராயாமல் முடிவுக்கு வருவது
ஆதியாகமம் 4:3
சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.
காயின் கர்த்தருக்குக் ‘காணிக்கை’ கொண்டுவந்தான். பொதுவாகவே இதைச் சபைக்குக் கொடுக்கவேண்டிய காணிக்கையாக தமிழ்ப் பிரசங்கிகள் விளக்குவார்கள். அந்த வார்த்தையையும், அது காணப்படும் வசனப்பகுதியின் சந்தர்ப்பத்தையும் ஆராயாததால் இப்படி அநேகர் விளக்குகின்றனர். இது தவறான தர்க்கம். வார்த்தைகளைப் பற்றித் தவறான முடிவுக்கு வந்து விளக்கம்கொடுப்பது தவறான தர்க்கம்.
6. முகந்தெரியாதவர்களை ஆதாரமாகக் காட்டுவது
‘இவ்வுலகப் பெண்களைத் திருமணம் செய்தவர்கள் தேவதூதர்கள் என்று எல்லா இறையியல் வல்லுனர்களும் சொல்லுகிறார்கள்.’
இதில் யார் அந்த இறையியல் வல்லுனர்கள்? பிரசங்கி அதை விளக்குவதில்லை. இது தவறான முறை.
7. ஒரு விஷயத்தை நிரூபிக்காமல் அதைப் பின்பற்றுவதால் ஏற்படும் மோசமான பாதிப்பைச் சுட்டிக்காட்டுதல்.
‘திருநங்கைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் சமுதாயத்தில் கிறிஸ்தவ சபையாகச் செயல்பட முடியாது.’ இதில் கிறிஸ்தவ சபைக்கு ஆபத்து வரும் என்பது ஒரு நம்பிக்கையினால் ஏற்படும் விளைவாக சொல்லப்படுகிறது. அந்த விளைவைத் தர்க்கிப்பவர் அதற்குக் காரணமாக அமைவதாகக் காட்டும் திருநங்கைகள் பற்றிய உண்மையை வேதத்தில் இருந்து முன்வைப்பதில்லை.
இன்னொன்று, ‘படைப்பை நீ நம்பக்கூடாது ஏனென்றால், அதை நம்பினால் நீ கட்டுக்கதைகளையே நம்புகிறாய், உண்மையை அல்ல.’
இதில் ஒன்று இன்னொன்றுக்குக் காரணமல்ல. படைப்பை நம்புவதற்கும் கட்டுக்கதைகளை நம்புவதற்கும் தொடர்பில்லை.
8. பயமுறுத்தலால் தர்க்கிப்பது
‘முக அலங்காரம் செய்துகொண்டால் நிச்சயம் நரகத்திற்குப் போவாய்’
கூற்று – முக அலங்காரம் செய்வது தவறு
கூற்று – அதனால் நரகத்திற்குப் போவாய்
இதில், பயமுறுத்தலுக்கும் முக அலங்காரத்துக்கும் தொடர்பில்லை.
இன்னொன்று, ‘டிரம்புக்கு வாக்களிக்காவிட்டால் கிறிஸ்தவர்கள் வெகுவிரைவில் அவர்களுடைய விசுவாசத்திற்கெதிரான துன்புறுத்தல்களைச் சந்திக்கும் நிலைவரும்’
கூற்று – டிரம்ப் கிறிஸ்தவத்தை ஆதரிக்கிறார்
கூற்று – டிரம்பை ஆதரித்தால் கிறிஸ்தவம் பாதுகாக்கப்படும்
முடிவு – டிரம்ப்புக்கு வாக்களிக்காவிட்டால் கிறிஸ்தவர்களுக்கு துன்பம் ஏற்படும்
இந்த பயமுறுத்தலுக்கும் டிரம்புக்கு வாக்களிக்காமல் போவதற்கும் தொடர்பில்லை.
9. பரிதாபத்தைப் பயன்படுத்திப் போதகரோடு ஒத்துப்போகும்படி தர்க்கிப்பது.
‘நான் மாதக் கணக்கில் கட்டடத் திட்டத்திற்காக உழைத்திருக்கிறேன்; இந்தத் திட்டம் உங்களுக்கு நல்லதாகப்படும் என்று நம்புகிறேன்.’ திட்டம் நல்லதா இல்லையா, என்பதை முடிவு செய்யாமல் அதற்கு உழைத்த காலத்தை நினைவுபடுத்தி (பரிதாபத்தை முன்வைத்து) திட்டத்தை ஒத்துக்கொள்ளும்படி வலியுறுத்துவது. ‘நான் பத்து வருடமாக சபைக்கு உழைத்திருக்கிறேன்; நான் சொல்வது எப்படித் தப்பாகிவிடும்’ போதகரின் உழைப்புக்கும், அவர் சொல்லும் விஷயத்திற்கும் தொடர்பில்லை.
10. வெகுஜன வரவேற்பை வைத்து தர்க்கிப்பது
‘கிறிஸ்தவர்கள் அனைவருமே திரித்துவத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்’ உண்மைதான், ஆனால் அதுவல்ல திரித்துவம் உண்மை என்பதற்கான ஆதாரம்.
இன்னொன்று ‘பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்தில் இந்தியர்கள் கேவலமாக நடத்தப்பட்டார்கள் என்பது எல்லோருக்குமே தெரிந்த உண்மை.’ யார் இந்த எல்லோரும்? இதற்கு ஆதாரம் எது? இந்த இரண்டிலும் வெகுஜனக் கணிப்பு ஒரு விஷயத்திற்கு ஆதாரமாகிவிடாது.
11. ஒரு விஷயத்தை நிரூபிக்க உணர்ச்சிகள் மற்றும் கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு தர்க்கிப்பது.
‘சிந்திக்கும் மக்கள் நிச்சயம் கருக்கலைப்பை ஆதரிப்பார்கள்’
இதில், ஆதரிக்காதவர்கள் சிந்திப்பவர்கள் அல்ல என்ற எண்ணம் உண்டாக்கப்படுகிறது.
12. பொதுவானதில் இருந்து குறிப்பிட்ட ஒன்றை வலியுறுத்துவது (Deduction, Syllogism) சிலஜிசம்.
இரண்டு கூற்றுகளில் இருந்து இறுதி முடிவுக்கு வருவதே சிலஜிசம்.
உதாரணம்:
பிரதான கூற்று – எல்லாப் பாலூட்டிகளும் (mammal) மிருகங்கள்
குறிப்பிட்ட கூற்று – எல்லா யானைகளும் பாலூட்டிகள்
முடிவு – எல்லா யானைகளும் மிருகங்கள்
அரிஸ்டோட்டில் பயன்படுத்திய சிலஜிசம்
பிரதான கூற்று – மனிதர்கள் நிலையற்றவர்கள்
குறிப்பிட்ட கூற்று – சாக்கிரடீஸ் ஒரு மனிதர்
முடிவு – சாக்கிரடீஸ் நிலையற்றவர்
தர்க்கம் குறிப்பிட்ட அடிப்படை விதிகளைக் கொண்டிருக்கிறது. எதையும் நாம் அறிந்துணர்வதற்கு இந்த அடிப்படை விதிகள் அவசியம். இவையே அறிவுக்கான அடித்தளம். இந்த அடிப்படை விதிகளைப் பின்பற்றாவிட்டால் செய்திப் பரிமாறலுக்கு வழியில்லை. உண்மையில் தர்க்கத்திற்கான இந்த அடிப்படை விதிகளைப் பயன்படுத்தாவிட்டால் நான் விளக்கிக் கொண்டிருக்கும் எதையும் நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. இந்த அடிப்படை உண்மைகளை ஓரளவுக்காவது ஏதோவொருவிதத்தில் பின்பற்றுவதால்தான் நீங்கள் நான் விளக்குவதைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
இந்த அடிப்படை விதிகள் உருவாக்கப்பட்டவையல்ல; கண்டுபிடிக்கப் பட்டவைகள். இவையே இந்த உலகத்தை அடிப்படை விதிகளாக ஆண்டு வருகின்றன. இவற்றில் நான்கு முக்கியமானவைகள்.
- முரண்பாடின்மை (The law of non-contradiction)
- அடையாளம் காணுதல் (The law of identity)
- நடுவில் இருப்பதாகத் தோற்றமளிப்பதை அகற்றுதல் (The Law of excluded middle)
- பகுத்தறிவுள்ள முடிவு (The law of rational inference)
தர்க்கத்தின் இந்த விதிகளைப் பின்பற்றாமல் சரியானவிதத்தில் சிந்திக்க முடியாது. தர்க்கம் என்பது, உங்களுடைய எண்ணங்களை ஒழுங்கோடு சீரமைப்பது. ஒழுங்கில்லாவிட்டால் அர்த்தம் இல்லாமல் போய்விடும், செய்திப்பரிமாறலுக்கும் இடம் இருக்காது. இனி இவை ஒவ்வொன்றையும் விளக்கமாகக் கவனிப்போம்.
1. முரண்பாடின்மை (The law of non-contradiction)
ஒரே நேரத்தில் ஒன்று இன்னொன்றாகவும் இருக்கமுடியாது. B, B யாகவும் B யாக இல்லாமலும் ஒரே நேரத்தில் ஒரே உறவில் இருக்கமுடியாது. ஒரே நேரத்திலும், உறவைப் பொறுத்தவரையிலும் கைக்கடிகாரம், கைக்கடிகாரமாகவும் மொபைல் போனாகவும் இருக்கமுடியாது. ஒரே சமயத்தில் அது ஒரு பொருளாகத்தான் இருக்கமுடியும். அப்படியில்லாவிட்டால் அது முரண்பாடானது. ஒரு நாய் ஒரு சமயத்தில் நாயாக மட்டுமே இருக்க முடியும். அதனால் நாயாகவும், பூனையாகவும் இருக்கமுடியாது. இது இந்த விதிக்கு முரணானது; இயற்கைக்கு மாறானது. ஒருவர் இதை நம்பித்தான் ஆகவேண்டும். நம்பாமலிருந்தால் அது குழப்பத்தில் போய் முடியும். ஒருவர், “எல்லா மதங்களும் ஒன்றுதான்” என்றும் “எல்லா மதங்களும் ஒன்றல்ல” என்றும் ஒரே சமயத்தில் சொல்லமுடியாது. அப்படிச் சொல்லுவது பொருளற்றது. ஒரு சமயத்தில் ஒன்று அதுவாக மட்டுமே இருக்கமுடியும். அது ஒன்றாகவும், இன்னொன்றாகவும் இருக்கமுடியாது. இந்த விதி தர்க்கத்தில் மிக முக்கியமானது.
இந்த விதியை வேதத்திற்குப் பயன்படுத்தினால், சத்தியம் ஒன்றாகத்தான் இருக்கமுடியும். அது சத்தியமாகவும், அதேநேரம் சத்தியத்துக்குப் புறம்பானதாகவும் இருக்க முடியாது. கர்த்தர் கர்த்தர் மட்டுமே, அவர் கர்த்தராகவும் இன்னொன்றாகவும் இருக்கமுடியாது. கர்த்தர் எங்குமிருக்கிறார் என்கிறது வேதம். ஒரே சமயத்தில் அவரால் எல்லா இடங்களிலும் இருக்க முடியும். அது அவருடைய குணாதிசயங்களில் ஒன்று. ஆனால், இந்து மதம் சொல்லுவதுபோல் அவர் தூணிலும், துரும்பிலும் இருக்கமுடியாது. அது அவருடைய குணாதிசயத்துக்கு மாறானது. தன்னுடைய குணாதிசயத்துக்கு மாறானதை அவர் செய்யமுடியாது; செய்யமாட்டார். அப்படிச் செய்வது அவருடைய குணாதிசயத்தை மாசுபடுத்திவிடும். அவருடைய பிரசன்னம் எல்லா இடத்திலும் ஒரே நேரத்தில் இருக்கமுடிவதற்கும், அவர் படைக்கப்பட்ட பொருட்களில் இருப்பதும் ஒன்றல்ல. இரண்டாவது கர்த்தரின் குணாதிசயத்துக்கு முரணானது. கர்த்தர் பரிசுத்தமானவராகவும், பரிசுத்தமற்றவராகவும் இருக்கவழியில்லை. அவர் எப்போதும் முழுப்பரிசுத்தத்தோடிருக்கிறார்.
தர்க்கத்தின் இந்த அவசியமான விதியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தர்க்கம் செய்வதில் பொருளில்லை. இதை ஏற்றுக்கொள்ளாதவர்களோடு சம்பாஷனையில் ஈடுபட முடியாது. இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கர்த்தர் இயற்கையில் ஏற்படுத்தியிருக்கும் விதியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இந்த விதியை வேதத்திலும் காண்கிறோம். அதைக் கர்த்தரே ஏற்படுத்தியிருக்கிறார்.
ஒரு மனிதன் உயிரோடும், அதே நேரம் மரித்தும் இருக்கமுடியாது. அது இந்த விதிக்கு முரணானது. அதேபோல் மனிதன் தன் குணாதிசயத்துக்கு முரணாக ஒரே நேரத்தில் இரண்டுவிதமாக இருக்க முடியாது. அவனால் ஒரு சமயத்தில் ஒரு இடத்தில் மட்டுமே இருக்கமுடியும். இந்த விதியை நாம் மாற்றமுடியாது. எங்கேயாவது உருண்டையாக இருக்கிற சதுரத்தைக் கண்டிருக்கிறீர்களா? முடியாது! ஒரே சமயத்தில் அந்த இரண்டும் ஒன்றில் இருக்கமுடியாது; அது முரண்பாடானது.
வேதம் படிக்கிறபோதும், அதை விளக்குகிறபோதும், இந்த விதிக்கு எதிராக நாம் பேசவோ, விளக்கவோ கூடாது. எத்தனையோ பிரசங்கிகள் இந்த விதியை மறந்து விளக்கமளிப்பார்கள்.
இந்த விதியை எவரும் மீறக்கூடாது. வேதத்தில் அநேக முரண்பாடுபோல் தோன்றும் உண்மைகள் காணப்படுகின்றன. ஆனால், வேதத்தில் முரண்பாட்டிற்கு இடமில்லை. உதாரணம்: கர்த்தரின் இறையாண்மையும், சுவிசேஷம் சொல்லுவதும் முரண்பாடுபோல் தோன்றும் இரு உண்மைகளே தவிர, முரண்பாடானவையல்ல. திரித்துவம் முரண்பாடானதில்லை. தன்மையைப் பொறுத்தவரையில் கர்த்தர் ஒருவரே, அதேநேரம் அவர் மூன்று ஆள்தத்துவங்களாக இருக்கிறார். அவர் ஒரே சமயத்தில் ஒருவராகவும், மூன்று ஆள்தத்துவங்களாகவும் இருக்கிறார் என்று வேதம் சொல்லவில்லை. கர்த்தர் தன் தன்மையைப் (Essence) பொறுத்தவரையில் ஒருவர், ஆனால் ஆள்த்துவத்தைப் பொறுத்தவரையில் (person) மூவர். கர்த்தர் தன் தன்மையில் ஒருவர் என்றும் ஆள்தத்துவத்திலும் ஒருவர் என்றும் நாம் சொல்வோமானால் அது கர்த்தரைப் பற்றிய முரண்பாடான போதனையில் போய் முடியும். அது போலிப் போதனை.
ஆகவே, இந்த முரண்பாடின்மையாகிய விதியை நாம் எப்போதும் பின்பற்றவேண்டும். இது தர்க்கத்தின் அடிப்படை விதிகளில் ஒன்று.
இந்த இடத்தில் நம்முடைய விசுவாசம் தர்க்கத்திற்கு எதிரானதல்ல என்பதை உணரவேண்டும். இரண்டும் இணைந்தே பயணம் செய்கின்றன. விசுவாசத்தைத் தர்க்கத்திற்கு எதிரானதாகக் காட்ட முயல்வதே இந்த அடிப்படை விதிக்கு முரணான செயல். விசுவாசமில்லாவிட்டால் தர்க்கம் பயனற்றதாகிவிடுகிறது. தர்க்கத்திற்கு விசுவாசம் இடங்கொடாவிட்டால் அது கண்ணில்லாமல் காட்டில் திரிவதுபோலாகிவிடும்; முரண்பாடுகளை அது உருவாக்கும். பலர் முரண்பாடான வேதவிளக்கங்களை அவை எல்லாமே உண்மையானவை என்று ஏற்றுக்கொள்ளுவதில் இதை நாம் காணலாம்.
2. அடையாளம் காணுதல் (The law of identity)
எவராது ஒரு பொருளைக் காட்டி இது கைக்கடிகாரம் என்று கூறினால், அது கைக்கடிகாரம் மட்டுமே. அது வேறு எதுவாகவும் இருக்கமுடியாது. அது ஒருகோப்பையாகவோ, டென்னிஸ் மட்டையாகவோ, கிரிக்கெட் பெட்டாகவோ இருக்கமுடியாது. அது வேறெதுவுமாக இருக்குமானால், நாம் உடனடியாகவே பகுத்தறிவற்ற irrational நிலையை அடைந்து விடுகிறோம். ஆகவே, நாம் எதைச் சொல்லுகிறோம் அதையே நம்புகிறோம். அதனால்தான் எந்தத் தர்க்கத்திலும் நாம் வார்த்தைகளைச் சரியாக விளக்குவது அவசியமாகிறது. ஆகவே, நாம் சொல்ல வருகின்றதைத் தெளிவாகத்துல்லியமாக, எந்தவித சந்தேகத்துக்கும் இடமில்லாமல் பகுத்தறிவுக்கேற்ற வகையில் விளக்கவேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் உங்கள் நண்பரிடம் நான் மெரீனா பீச்சுக்குப் போகிறேன் என்று சொன்னால், அவர் நீங்கள் சினிமா பார்க்கப் போகிறீர்கள் என்று நினைத்துக்கொள்வதில் போய்முடியும். அடையாளம் காணுதலாகிய இந்த விதி நாம் பகுத்தறிவற்ற முறையில் தர்க்கம் செய்வதை, விளக்குவதைத் தவிர்க்க உதவுகிறது. இன்று அநேகர் வார்த்தைகளைப், பதங்களை, ஒரு ஐடியாவை விளக்குவதற்கு பெருங்கஷ்டப்படுகிறார்கள்.
3. நடுவில் இருப்பதாகத் தோற்றமளிப்பதை அகற்றுதல் (The Law of excluded middle)
இந்த விதி ஒரு பொருள் இதுதான் அல்லது இன்னொன்று என்பதைச் சுட்டிக்காட்டும். அதாவது, எதுவுமே ஏதாவதொன்றாக இருக்கவேண்டும். அது இரண்டுங்கெட்டான் நிலையில் இருக்கமுடியாது. இரண்டில் ஒன்றாக இல்லாமல் நடுவிலோ, இரண்டுங் கலந்ததாகவோ இருக்கமுடியாது. தத்துவவாதியான ஹெகல் இந்தவிதியை ஆணித்தரமாக எதிர்த்திருக்கிறார்.
4. பகுத்தறிவுள்ள முடிவு (The law of rational inference)
இதை ஒரு சிலஜிசத்தில் (முக்கூற்று முடிவு விதிமுறை) இருந்து விளங்கிக்கொள்ளலாம்.
அ. எல்லா மனிதர்களும் நிலையானவர்களல்ல
ஆ. சாக்கிரடீஸ் ஒரு மனிதர்
இ. சாக்கிரடீஸ் நிலையானவரல்ல
நாம் எல்லாவற்றையும் தெளிவாகப் பூரணமாக அறிந்துவைத்திருக்கவில்லை. நமது அறிவும் பூரணமானதல்ல. இருந்தபோதும் நாம் நன்றாக ஆராய்ந்து படித்து நாம் சொல்ல வருகின்றவற்றைத் தெளிவாக விளக்கவேண்டிய கடமை நம்முன் இருக்கிறது. வார்த்தைகளையும், உண்மைகளையும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளக்கவேண்டிய பொறுப்பு இருக்கிறது.
அதனால், ஒரு தர்க்கரீதியிலான சிலஜிசத்தின் மூலம் நாம் முடிவுகளைத் தீர்மானிக்கவேண்டியிருக்கிறது. அதற்கு அந்த சிலஜிசத்தின் எல்லாப் பாகங்களும் ஒன்றோடொன்று ஒத்துப்போய் உண்மையானவையாக இருக்கவேண்டும். அவை அனைத்தும் இணைந்து செயல்படுகின்றன. பகுத்தறிவுள்ள முடிவு என்ன சொல்கிறதென்றால், ‘அ’ வும் ‘ஆ’ வும் சரியானவையாக இருந்தால் ‘இ’, மார்டின் லூத்தர் சொன்னதுபோல ‘நிராகரிக்கமுடியாத தர்க்கம்.’ இந்த சிலஜிசம் சரியாக இணைந்துபோகாவிட்டால் அது தவறான தர்க்கமாகிவிடும். இந்த முறையைப் பயன்படுத்தாவிட்டால் பேச்சும், செய்திப் பறிமாறலும் மிகவும் கடினமானதாகிவிடும். இது கர்த்தரிடமிருந்தே வருவதால், இதற்கு நாம் கட்டுப்பட வேண்டியதுபோல அவரும் கட்டுப்படுகிறார். இந்த விதிகள் நம்மை வழிநடத்த ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த வகையில் தர்க்கரீதியில் முடிவுகள் எடுப்பது நம்மை முரண்பாடுள்ள பேச்சைப் பேசுவதிலும், முரண்பாடுள்ளவர்களாக நடந்துகொள்வதிலும் இருந்து நம்மைப் பாதுகாக்கும். அநேகர் முரண்பாட்டின் மொத்தஉருவாக இருந்து வாழ்கிறார்கள். அது கர்த்தர் நம்மைப் படைத்திருக்கும் விதத்திற்கே முரணான வாழ்க்கையாகும்.
அநேகர் ஆர்மீனியனிசமும், கல்வினிசமும் இணைந்து வாழமுடியும் என்று சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த இரண்டு தத்துவங்களும் ஒன்றுக்கொன்று அடிப்படையில் முரணானவை. இவற்றில் ஒன்று மட்டுமே சரியானது என்பதை ஒரு சிலஜிசத்தைப் பயன்படுத்தியே புரிந்துகொள்ளலாம். ஆனால், இரண்டையும் இணைத்துப் பார்க்கவும், அல்லது இரண்டையும் கலந்து பயன்படுத்தவும் முனைகிறவர்கள் முரண்பாடுள்ளவர்களாக இருக்கிறார்கள். கர்த்தர் முரண்பாட்டின் தேவனல்ல. அவருடைய வார்த்தையில் முரண்பாட்டிற்கு இடமில்லை. சத்தியம் ஒன்றே, அதற்குப் பலமுகங்கள் இல்லை என்று நான் பல தடவைகள் விளக்கியிருக்கிறேன். தர்க்கம் நம்மைச் சரியான வழியில் சிந்திக்க உதவுகிறது. முரண்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ள துணை செய்கிறது.
பிரசங்கம் அல்லது வேதபோதனை அளிக்கிறவர்கள் இனியாவது உங்களுடைய கூற்றுக்களும், வாதங்களும் தர்க்கரீதியில் நம்பக்கூடியவையாக, வேதபூர்வமானவையாக அமைந்திருக்கின்றனவா என்பதை ஆராய்ந்து விளக்குங்கள். நம் பிரசங்கங்களும், போதனைகளும், ஆத்துமாக்களைக் கண்ணைக்கட்டிக் காட்டில்விட்டதுபோல் இருந்துவிடக்கூடாது. தர்க்கம் அப்படிச் செய்துவிடாமலிருக்க நமக்கு உதவுகிறது.
வேதத்தில் தர்க்கம்
இந்த உலகத்தில் இயேசுவைப்போல சிறந்த தர்க்க ஞானியை எவரும் பார்த்திருக்க முடியாது. (தர்க்கவாதி – Logician). மேலெழுந்தவாரியாக வேதத்தை வாசிக்கும்போது அது நம் கண்களுக்குப் புலப்படாமல் போகலாம். ஆழ்ந்து சிந்தித்துக் கவனத்தோடு வாசித்துப் பார்த்தால் அவருடைய அருமையான தர்க்கரீதியிலான சம்பாஷனைகளையும் போதனைகளையும் உணரமுடியும்.
இந்த இடத்தில் இயேசுவிடமிருந்து பிரசங்கத்தில் மட்டுமல்லாமல், சாதாரண சம்பாஷனையிலும், வாதங்களின்போதும் அறிவுபூர்வமான சிலஜிசத்தை (அதாவது, இரண்டு அசைக்கமுடியாத உண்மைகளின் அடிப்படையில் ஒரு நிராகரிக்க முடியாத முடிவுக்கு வருவது) என்பதை எப்படிப் பயன்படுத்துவது, தர்க்கரீதியில் எப்படி வாதம் செய்வது என்பதைக் கற்றுக்கொள்ள முடியும். இதையே நாம் அப்போஸ்தலன் பவுலிடமும் காண்கிறோம்.
இதுவரை நாம் கவனித்திருப்பவற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய உண்மை – ஒருபோதும் சிந்திக்காமலும், ஆராயாமலும் பேசவோ, போதிக்கவோ, பிரசங்கம் செய்யவோ கூடாது. பேச்சு பொருள்ளதாக இருக்கவேண்டும். சம்பாஷனைக்குரிய இலக்கணங்களைக் கொண்டிருக்க வேண்டும். தர்க்கரீதியில் அமைந்திருக்க வேண்டும். முட்டாள்தனமான சிந்தனையும், பேச்சும், வாதமும் பிரசங்கிக்கிறவர்களிடமும், போதகர்களிடமும் இருக்கக்கூடாது. அதைத்தான் வேதத்தில் இருந்து கவனிக்கப்போகிறோம்.
அப்போஸ்தலர் 19:8ஐக் கவனியுங்கள். இதில் அப்போஸ்தலனாகிய பவுல் எந்தவிதமாய்ப் பிரசங்கம் செய்தார் என்று விளக்கப்பட்டிருக்கிறது.
பின்பு பவுல் ஜெபஆலயத்தில் பிரவேசித்து, தைரியமாய்ப் பிரசங்கித்து, மூன்று மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக் குறித்துச் சம்பாஷணைபண்ணி, புத்திசொல்லிக்கொண்டுவந்தான்.
And he went into the synagogue and spoke boldly for three months, reasoning and persuading concerning the things of the kingdom of God.
தமிழ் வேதத்தில் இந்த வசனத்தில் முக்கியமான இரண்டு வார்த்தைகள் சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை. முதலாவது வார்த்தையான ‘சம்பாஷனைபண்ணி’ என்றிருப்பது தர்க்கித்து என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கவேண்டும். அது ஆங்கிலத்தில் reasoning என்றிருக்கிறது. சம்பாஷனை செய்வதும், தர்க்கம் செய்வதும் ஒன்றல்ல. இரண்டாவது வார்த்தை ‘புத்திசொல்லிக்கொண்டு’ என்பது. இதுவும் தவறான மொழிபெயர்ப்பு. இந்த வார்த்தை, ஒருவர் நம்பும்படியாக அவரை நிர்ப்பந்தித்து வாதாடுவது என்ற அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. வெறுமனே புத்திசொல்லுவதை இது குறிக்கவில்லை.
இந்த வசனத்தை விளக்க நான் சாதாரணமாகவே பயன்படுத்தவேண்டிய எளிமையான தர்க்கத்தைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளப் போகிறேன். அதைத்தான் நீங்களும் வேதத்தை ஆராயும்போது செய்யவேண்டும். இந்த எளிமையான தர்க்கத்தைக்கூட அநேகர் பயன்படுத்துவதில்லை. சிந்தித்து தர்க்கத்தைப் பயன்படுத்துகிறபோது நான் இந்த வசனத்தில் எதைக் காண்கிறேன் என்பதை விளக்கப்போகிறேன்.
- இந்த வசனம் முதலில் பவுல் என்ன செய்தார் என்பதைச் சொல்லுகிறது. பவுல் பிரசங்கித்ததாகப் பொதுவாகச் சொல்லுகிறது.
- அந்தப் பிரசங்கத்தை அவர் எப்படிச் செய்தார் என்று சொல்லுகிறது – தைரியமாய்ச் செய்தார்.
- பவுல் பிரசங்கிக்கப் பயன்படுத்திய முறைகளைச் சொல்லுகிறது:
(அ) தர்க்கம் செய்தும் (Reasoning)
(ஆ) நம்பி ஏற்றுக்கொள்ளும்படியாக வலியுறுத்தி வாதிட்டும் (Persuading)
இதிலிருந்து பவுல் ஆவியில் தைரியமாகப் பிரசங்கித்தபோதும் இரண்டுவித பிரசங்க முறைகளைப் பயன்படுத்தி சத்தியத்தை அவர்கள் முன்வைத்திருப்பதைக் கவனிக்கிறோம். சத்தியத்தைத் தர்க்கத்தின் மூலம் அவர்கள் முன்வைத்தும், சத்தியத்தை அவர்கள் நம்பும்படியாக வலியுறுத்தி ஆணித்தரமாக வாதம் செய்தும் பிரசங்கித்திருக்கிறார். இதைத்தான் பிரசங்கிகள் பின்பற்றவேண்டியவர்களாக இருக்கிறார்கள். பவுல் உப்புச்சப்பில்லாமல் பிரசங்கம் செய்யும்படியாகக் கல்வி அறிவற்றவராக, சிந்திக்கத் தெரியாதவராக, தர்க்கத்தை அறிந்திராதவராக இருக்கவில்லை. அவர் கமாலியேலிடம் நியாயப்பிரமாணத்தையும், கல்வியையும் கற்றவர். பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தவர். இயேசு கிறிஸ்துவுக்கு அடுத்தபடியாக தர்க்கித்துப் பிரசங்கிப்பதில் மிகச் சிறந்தவராக இருந்திருக்கிறார். அதை அவருடைய புதிய ஏற்பாட்டு எழுத்துக்களில் வெளிப்படையாகவே காணலாம்.
இன்னுமொரு உதாரணமாக மாற்கு 2:5-12 வரையுள்ள வசனங்களைக் கவனியுங்கள்.
இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்: இவன் இப்படி தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன? உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்குமுன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
இந்தப் பகுதியில் திமிர்வாதக்காரனைப்பார்த்து இயேசு சொன்ன வார்த்தைகளைக் கேட்ட வேதபாரகர் அவர் தேவதூஷணம் சொல்லுவதாக தங்களுக்குள் எண்ணிக்கொண்டார்கள். அது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. இந்த இடத்தில் அவர்களோடு இயேசு தர்க்கவாதம் செய்கிறார். அவர்களைப் பார்த்து அவர், ‘எது எளிது?’ என்று கேட்கிறார். அது அவர் பயன்படுத்தப்போகும் தர்க்க சிலஜிசத்துக்கு ஆரம்பமாக இருக்கிறது. அவர் என்ன கேட்கிறார் என்பதை வேதபாரகர் நிச்சயம் புரிந்துகொண்டிருந்தார்கள். பூமியில் பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரமுண்டு என்பதுதான் அவருடைய வாதம். அதை நிரூபிக்க அவர் சிலஜிசத்தைப் பயன்படுத்துகிறார்.
- இயேசுவால் அற்புதங்கள் செய்யமுடியுமானால், பாவத்தை மன்னிக்கக்கூடிய தேவகுமாரன் அவர் என்பது உண்மை.
- மனிதகுமாரனாகிய இயேசுவால் அற்புதங்கள் செய்யமுடியும்.
- ஆகவே, மனிதர்களின் பாவங்களை மன்னிக்கக்கூடிய தேவகுமாரன் இயேசு கிறிஸ்து.
ஆகவே, தவறாகச் சிந்தித்து இயேசு தேவகுமாரன் இல்லை என்று கருதிக்கொண்டிருந்த வேதபாரகரை அவர் சரியாகச் சிந்திக்கும்படி வற்புறுத்துகிறார். எந்த மனிதனும் இன்னொருவரைப் பார்த்து ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது’ என்று சொல்லிவிடுவது எளிது. அப்படிச் செய்வதால் ஒருவரின் பாவம் போய்விடுவதில்லை. ஒருவரின் பாவம் அவரால் மன்னிக்கப்பட்டது என்பதற்கு அதற்கு மேல் ஆதாரம் தேவை. அந்த ஆதாரம் இயேசுவிடம் இருந்தது. அவர் தேவகுமாரனாகவும், மனிதகுமாரனாகவும் இருந்ததும், அற்புதங்களைச் செய்யக்கூடியவராக இருந்ததும் அவர் பாவத்தை மன்னிக்கக்கூடிய அதிகாரம் உள்ளவர் என்பதை நிரூபிக்கின்றன. அதனால்தான் அவர் பூமியில் பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை வேதபாரகர் உணர வேண்டும் என்று சொன்னார் (10).
உன் பாவம் மன்னிக்கப்பட்டது என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடாமல் இயேசு திமிர்வாதக்காரனின் திமிர்வாதத்தை அற்புதமாகக் குணப்படுத்தி வேதபாரகரின் தவறான தர்க்கத்தைத் தன் தர்க்கத்தால் தவிடுபொடியாக்கினார்.
இந்தப் பகுதியைப் பொறுத்தவரையில் பாடம் – இயேசு பயன்படுத்திய தர்க்கத்தை அப்படியே நாம் பயன்படுத்த வேண்டும் என்பதல்ல. அதுவல்ல நாம் படிக்கும் பாடம். அதைக் காப்பி அடிப்பதற்காக இந்தப் பகுதி கொடுக்கப்படவில்லை. இது தரும் போதனை – சம்பாஷனையிலும், போதனையிலும் சரியான சிந்தனையையும், தர்க்கத்தையும் கவனத்தோடு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான். இயேசு தர்க்கவாதம் செய்தார். அதை வேதபாரகர்கள் புரிந்துகொண்டார்கள். இயேசு அந்த இடத்தில் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர்களுக்குத் தான் யார் என்று தெரியவைத்தார். அதற்கு அவர் சரியான தர்க்கத்தைப் பயன்படுத்தியுள்ளார் என்பதை நாம் உணர வேண்டும்.
இன்னுமொரு உதாரணத்தை மத்தேயு 22:23-33ல் காணலாம்.
உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றையத்தினம் அவரிடத்தில் வந்து: போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே. எங்களுக்குள்ளே சகோதரர் ஏழு பேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம்பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான். அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன் முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். ஆகையால், உயிர்த்தெழுதலில், அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்களெல்லாரும் அவளை விவாகம் பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள். உயிர்த்தெழுதலில், கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்; மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா? தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார் என்றார். ஜனங்கள் இதைக் கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
இந்தப் பகுதியில் சதுசேயர் ஒரு சிக்கலான சிலஜிசத்தை அவர்களுடைய கற்பனைக் கதைமூலம் இயேசுவின் முன் வைத்தார்கள். 24-28 வரையுள்ள வசனங்களில் அவர்கள் அவர் முன் வைத்த சிலஜிசத்தை புத்தியற்ற வாதமாக நாம் நினைத்துவிடக்கூடாது. சதுசேயருக்கு தர்க்கம் நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால், அதை இந்த இடத்தில் அவர்கள் தவறாகப் பயன்படுத்தினார்கள். அவர்களுடைய சிலஜிசத் தர்க்கம் என்ன?
- மரணத்திற்கும் பின் வாழ்விருந்தால், மறுவாழ்வில் திருமணம் தொடரும்.
- மறுவாழ்வில் திருமணம் இல்லையென்றால் எவரும் உயிரோடிருக்க முடியாது.
- அதனால், இந்த உலக வாழ்க்கைக்குப் பிறகு வேறுலக வாழ்க்கை இல்லை.
மரணத்திற்குப் பின் திருமணம் தொடரலாம் என்ற சதுசேயரின் வாதத்திற்குக் காரணம் அவர்களுடைய அனுமானமான மரணத்திற்கு பின் வரும் உலகில் நிச்சயம் திருமணம் தொடரும் என்பதே. உண்மையில் அவர்கள் மரணத்திற்கும் பின் வாழ்விருக்கிறது என்பதை நம்பவில்லை. உயிர்த்தெழுதல் இருக்கிறது என்பதை ஆணித்தரமாக இயேசுவின் வாயால் சொல்லவைக்க இந்த சிலஜிசத்தை அவர்கள் பயன்படுத்தினார்கள். இதன் மூலம் இயேசுவுக்கு சிக்கலேற்படுத்துவதாக அவர்கள் நம்பினார்கள். உயிர்த்தெழுதல் இல்லை என்று அவர் சொன்னால், பரிசேயர்களுக்கு அவர் மேல் கோபம் அதிகரிக்கும். உயிர்த்தெழுதல் இருக்கிறது என்று அவர் சொன்னால் சதுசேயர் அவர் மேல் ஆத்திரம் கொண்டு மக்களை அவருக்கெதிராகத் திருப்பப் பார்ப்பார்கள். இந்த தர்மசங்கடமான நிலைமையில் இயேசு உண்மையைத் தான் சொல்லவேண்டும். ஆனால், அதை அவர் சரியான சிலஜிசத்தைப் பயன்படுத்தி வேதபாரகரின் வாதத்தை முறியடிக்கிறார்.
29ம் வசனத்தில் அவர், வேதபாரகர்களுக்கு வேதவாக்கியங்கள் தெரியவில்லை என்பதை உணர்த்துகிறார். வேதத்தைக் கையில் வைத்திருந்தும் அதன் சத்தியங்களின் பொருள் தெரியாமல் அவர்கள் தவறான போதனைகளை உருவாக்கியிருந்தார்கள். இதை அதிரடியாக இயேசு அவர்களுக்கு உணர்த்துகிறார். அத்தோடு, நீங்கள் நினைக்கிறபடி அல்லாமல் பரலோகத்தில் எல்லோரும் தேவதூதர்களைப்போல இருப்பதால் இந்த உலகத்து உறவுகளுக்கு அங்கு இடமில்லை என்று விளக்கினார். அதற்குப் பின் அவர் 32ம் வசனத்தில் பழைய ஏற்பாட்டில் இருந்து ஒரு வசனத்தைப் பயன்படுத்தி உயிர்த்தெழுதல் இருக்கிறது என்பதை நிரூபிக்கிறார். ‘தேவன் ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார்’ (யாத்திராகமம் 3:6) என்பதே இயேசுவின் பதில். வெளிப்படையாக உயிர்த்தெழுதலை விளக்கும் எத்தனையோ வசனங்களை இயேசு பயன்படுத்தி உயிர்த்தெழுதலை நிரூபிக்காமல் வேதத்தில் அந்த உண்மை உள்ளடக்கமாகக் (இன்றியமையா நிலையில்) காணப்படும் வசனத்தைப் பயன்படுத்தி சதுசேயரின் வாயை அடைக்கிறார். ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுவுக்கும் தான் தேவனாக இருப்பதால் அவர்கள் இறந்தும் பரலோகத்தில் உயிர்வாழ்கிறார்கள் என்று இயேசு வெளிப்படுத்துகிறார். உயிர்த்தெழுதல் இல்லை என்றால் அவர்கள் ஜீவனோடிருக்கமுடியாது; இயேசுவும் அவர்களுக்குத் தேவனாக இருக்கமுடியாது. இயேசு தேவனாக இருப்பதோடு, அவர்களுக்கு அவர் தொடர்ந்து தேவனாக இருப்பதால் அவர்களும் உயிர்வாழ்கிறார்கள் என்பதே இயேசுவின் தர்க்கவாதம்.
மேலும் ஒரு உதாரணத்தைக் கவனிப்போம்.
மாற்கு 11:27-33.
அவர்கள் மறுபடியும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர் தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கையில், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள். இயேசு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், நீங்கள் எனக்கு உத்தரவு சொல்லுங்கள், அப்பொழுது நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன். யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ, மனுஷரால் உண்டாயிற்றோ, எனக்கு உத்தரவு சொல்லுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லையென்று கேட்பார்; மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படவேண்டியதாயிருக்கும், எல்லாரும் யோவானை மெய்யாகத் தீர்க்கத்தரிசி என்று எண்ணுகிறார்களே என்று தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி, இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.
எந்த அதிகாரத்தில் நீர் செய்யும் செயல்களைச் செய்கிறீர்? என்று தன்னிடம் கேட்ட மதத்தலைவர்களிடம் இயேசு 29ம் வசனத்தில் ஒரு சிக்கலான சிலஜிசத்தை முன்வைக்கிறார்.
- யோவானின் ஞானஸ்நானம் பரலோகத்தைச் சேர்ந்ததானால், இயேசுவைப்பற்றிய யோவானின் போதனையை அவர்கள் நம்பவேண்டும். (யோவானின் போதனை மனித போதனையாக இருந்தால் அவர்கள் மக்களின் கோபத்தைச் சந்திக்க நேரும்).
- யோவானின் ஞானஸ்நானம் ஒன்றில் பரலோகத்தைச் சேர்ந்தது அல்லது மனிதர்களைச் சார்ந்தது.
- மதத்தலைவர்கள் ஒன்று, இயேசுவின் போதனையை நம்பவேண்டும், இல்லாவிட்டால் மனிதர்களின் கோபத்திற்கு ஆளாகவேண்டும்.
இயேசுவின் சிலஜிசத்தை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள். இந்த இடத்தில் அந்த யூதத் தலைவர்களுக்கு இயேசுவின் பேச்சு புதிராகப் படவில்லை. அவர்களுக்கு அவருடைய தர்க்கரீதியான வாதம் தெளிவாகப் புரிந்திருக்கிறது. அதனால்தான் என்ன செய்வதென்று தெரியாமல் யோவான் எங்கிருந்து வந்தார் என்று எங்களுக்குத் தெரியவில்லை என்று பதிலளித்தார்கள். ஒன்று மட்டும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. யோவான் பரலோகத்தில் இருந்து வந்தார் என்று சொன்னால் இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது அவர்களுக்குப் பிடித்தமில்லாதது. யோவான் மனிதன் மட்டுமே என்று சொன்னால் மக்களுடைய கோபத்தைச் சந்திக்க நேரும். அதனால், தெரியாது என்று சொல்லித் தப்பிக்கப் பார்த்தார்கள்.
இவற்றில் இருந்து தன் பிரசங்கங்களிலும் போதனைகளிலும் இயேசு எத்தனை அருமையாகத் தர்க்கத்தைப் பயன்படுத்தி சத்தியத்தை ஆணித்தரமாக விளக்கியிருக்கிறார் என்பதை நாம் கவனிக்கவேண்டும். இயேசுவும் அப்போஸ்தலர்களும் இந்த விஷயத்தில் நமக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். காரணமில்லாமலா டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ் ‘கனல் கக்கும் தர்க்கம்’ என்று பிரசங்கத்தை விளக்கியிருக்கிறார். அது நூற்றுக்கு நூறு உண்மை.