பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும்

அதிகாரம் 4 – A.W. பிங்க்

ஒரு பிரசங்கி, தேவனுடைய வார்த்தை அடங்கியிருக்கிற புத்தகமாகிய வேதத்தில் தேறினவனாகவும், அதிலிருந்து புதியவைகளும் பழையவைகளுமாகிய பொக்கிஷத்தை எடுத்துரைக்கும் தகுதியுள்ளவனாகவும் இருக்க வேண்டும். வேதமே அவனுடைய பாடநூலாக இருக்க வேண்டும். அதிலிருந்து புறப்படும் ஜீவனுள்ள தண்ணீரை அவன் அனுதினமும் பருக வேண்டும். இதற்காக நாம் நல்ல மொழிபெயர்ப்புள்ள வேதநூலையும், ஒரு ஒத்தவாக்கிய அகராதியையும் பயன்படுத்த வேண்டும். அத்தோடு, மூலமொழியிலுள்ள வார்த்தைகளை அறிந்துகொள்ளுவதற்கான இன்டர்லீனியர் வேதநூலையும் அவ்வப்போது பயன்படுத்தலாம். எந்தவொரு வேதப்பகுதியையும் முதலாவதாக நாம் வாசித்து, விரிவான ஆய்வு செய்தபிறகுதான், விளக்கவுரைகளை நாட வேண்டும். வேதப்பகுதியை நீங்கள் கவனத்துடன் முழுமையாக ஆராய்வதற்கு முன்பாக அல்லது நீங்கள் ஆழ்ந்து சிந்திப்பதற்கு முன்பாக விளக்கவுரையை நாடும் ஆபத்திலிருந்து பிரசங்கிகளாகிய உங்களைப் பாதுகாத்துக்கொள்ளும்படி உறுதியாக வலியுறுத்துகிறேன். வேதம் மிகவும் எளிமையாக எழுதப்பட்டிருக்கிறது. அதனால், யாருடைய உதவியுமின்றி வேதத்தைப் படித்து விளங்கிக்கொள்ள முடியும் என்று நினைப்பதும், அல்லது வேதம் மிகவும் கடினமானது, சாமானிய மனிதன் அதை ஆராய முற்படுவது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று நினைப்பதும் எப்படி தவறானதோ, அதேபோல, தேவனுடைய ஊழியர்களான மற்றவர்களுடைய உழைப்பைச் சார்ந்திருந்து, அவர்களுடைய கருத்துக்களை வெறுமனே எதிரொலிப்பதும் மிகவும் ஒழுங்கற்ற செயல்.

ஒரு பிரசங்கி தேவனுடைய பாதத்தில் அமர்ந்து, அவருடைய வார்த்தைக்கான விளக்கங்களை அவரிடமிருந்து கற்று, அவருடைய செய்தியை அவரிடம் காத்திருந்து பெறவேண்டும். கர்த்தருக்குப் பிரியமானது எவை என்றும் பிரியமல்லாதது எவை என்றும் வேதத்தைத் தவிர்த்து வேறு எங்கிருந்தும் நாம் தெரிந்துகொள்ள முடியாது. உலகத் தத்துவ மேதைகளும் அறிவியலறிஞர்களும் அறிந்திராத, தெய்வீக ஞானத்தின் இரகசியங்களை வேதமே நமக்குத் தெரிவிக்கின்றது. “வேதத்திலிருந்து வெளிப்படாத எதுவும், வேதத்தின் மீது கட்டப்படாத எதுவும், வேதத்தோடு பொருந்திப் போகாத எதுவும், உலகத்தின் பார்வையில் மிக உயர்ந்த ஞானம் என்று பறைசாற்றப்பட்டாலும், பழமையான பாரம்பரியத்தைச் சார்ந்து, கல்விமான்கள்கூட ஏற்றுக்கொள்ளுவதாக இருந்தாலும், அவையாவும் வீணானதும் பயனற்றதுமாகும். சுருங்கச் சொல்லுவதானால், அவையாவும் பொய். நியாயப்பிரமாணத்தின்படியும் சாட்சியாகமத்தின்படியும் விளக்கப்படாத எந்தவொரு வார்த்தையிலும் உண்மை இருப்பதில்லை. எந்தவொரு இறையியலாளனும் இந்தத் தெய்வீகக் கட்டளைகளிலேயே மகிழ்ச்சிகொள்ளுவானாக. இரவும் பகலும் அதிலேயே உழைத்து, அதையே தியானம் செய்து, அதிலிருந்தே தனக்கான ஞானத்தைப் பெறவேண்டும். தன்னுடைய எண்ணத்தையெல்லாம் அதைநோக்கியே திருப்பி, ஆத்மீக விஷயங்களில் அதில் காணப்படாத எதையும் விட்டுவிலகுவானாக” என்று ஒல்லாந்துத் தூய்மைவாதிகளில் ஒருவரான ஹெர்மன் விட்சியஸ் (Herman Witsius) என்பவர் சொல்லியிருக்கிறார்.

வேதத்தை விளங்கிக்கொள்ளுவதற்கான விதிமுறைகளை இப்போது நாம் படிப்போம். முதலாவதாக, முக்கியமானதொன்று, பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும், ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் நமக்குச் சரியான புரிதல் இல்லாமல், நாம் தவறிழைத்தால், வேதத்தின் பல முக்கியமான பகுதிகளைத் தவறாகப் புரிந்துகொள்ள நேரிடும். டிஸ்பென்சேஷனலிசம் என்ற நவீன, தவறான போதனையிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே இப்பகுதியை நாம் அணுகாமல், ஆக்கப்பூர்வமான விதத்தில் இதை நாம் கையாளவேண்டும். டிஸ்பென்சேஷனலிச போதனையாளர்களின் எழுத்துக்களையும், கல்வினின் “கிறிஸ்தவத்தின் விளக்கவுரை” (Institutes of the Christian Religion) என்ற புத்தகத்தின் போதனைகளையும் கவனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, டிஸ்பென்சேஷனலிசப் போதனையாளர்கள், பரிசுத்த ஆவியானவர் தங்களுக்கு வேதத்திலிருந்து புதிய விளக்கங்களைத் தந்திருக்கிறார் என்று சொல்லியிருப்பதனால், கல்வினுக்கே பரிசுத்த ஆவியானவர் வேதத்திலிருந்து ஆழமான, முறையான புரிதலைத் தந்திருக்கிறார் என்ற முடிவுக்கே வரமுடிகிறது. ஆகவே கல்வினின் “கிறிஸ்தவத்தின் விளக்கவுரை” (Institutes of the Christian Religion) என்ற புத்தகத்தை வைத்திருக்கிறவர்கள், அதிலுள்ள இரண்டு அத்தியாயங்களான “பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையேயுள்ள ஒற்றுமைகள்” மற்றும் “இரண்டு ஏற்பாடுகளுக்கிடையேயுள்ள வேறுபாடுகள்” என்ற அத்தியாயங்களைக் கவனத்துடன் வாசிக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.

இரண்டு ஏற்பாடுகளுக்கிடையேயும் இருக்கிற வேறுபாடுகளைக் காட்டிலும், இவை இரண்டிற்கும் இடையே இருக்கிற ஒற்றுமைகளே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருக்கின்றன. ஒரே திரித்துவ தேவன்தான் இவை இரண்டையும் கொடுத்திருக்கிறார், இரட்சிப்பிற்கான வழியும் ஒரே விதமாகவே இரண்டிலும் விளக்கப்பட்டிருக்கிறது, பரிசுத்தத்திற்கான அளவுகோலும் ஒரேவிதமாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது, நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்குமான இறுதி முடிவைப் பற்றி ஒரேவிதமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்திற்குமான ஆணிவேர், பழைய ஏற்பாட்டில்தான் இருக்கிறது. ஆகவே ஒன்றில்லாமல் மற்றதை சரியாக விளங்கிக்கொள்ள முடியாது. சுவிசேஷப் புத்தகங்களிலும் நிருபங்களிலும் இருக்கிற பல முக்கியமான போதனைகளை அறிவதற்கு, பழைய ஏற்பாட்டிலுள்ள முற்பிதாக்களின் வரலாறும், யூதமத சடங்குமுறைகளைப் பற்றியும் நாம் அறிந்திருப்பது அவசியமானது மட்டுமல்ல, அவற்றிற்கிடையில் பயன்படுத்தப்பட்டுள்ள பதங்களும் அவைகளின் நோக்கங்களும்கூட ஒன்றே என்பதை நாம் அறியலாம். மத்தேயு 5:17ல் இயேசு விளக்கியிருக்கிற எச்சரிப்பான வார்த்தைகளைக் கவனியுங்கள், “நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்” என்றார் இயேசு. இதில் இயேசு, நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் என்று பழைய ஏற்பாடு முழுவதையும் பற்றிச் சொல்லுகிறார், அவற்றை நிலைநிறுத்தி உறுதிப்படுத்தவும், மனிதர்கள் அவற்றைத் தவறாக விளக்கிப் புரட்டுவதிலிருந்து தடுக்கவும், அவற்றிலுள்ள யாவும் மனிதனுக்கு நன்மையானவை என்றும் சொல்லியிருக்கிற அவர், அவற்றை முற்றாகப் புறக்கணித்து புதிதாக அல்லது அதோடு தொடர்பில்லாத முற்றிலும் வித்தியாசமான ஒன்றைப் போதித்திருப்பார் என்று நினைப்பதற்குக்கூட வழியில்லை. மத்தேயு 7:12ல் இயேசு தம்முடைய பிரதான கட்டளையைப்பற்றி விளக்குகிறபோது, “இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்” என்று சொல்லியிருப்பதிலிருந்து, கிறிஸ்துவின் போதனைக்கும், அவருக்கு முன்பு கர்த்தருடைய வார்த்தையை அறிவித்தவர்களுடைய போதனைக்கும் இடையே முரண்பாடுகள் இருக்க முடியவே முடியாது என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

அப்போஸ்தலர்களுடைய போதனைக்கும் இயேசுவினுடைய போதனைக்கும் இடையே எந்தவிதமான முரண்பாடும் இல்லை. ஏனென்றால், தம்முடைய அப்போஸ்தலர்களுக்கான இயேசுவின் பிரதான கட்டளையில் இயேசு, “நான் உங்களுக்குக்  கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்” (மத்தேயு 28:20) என்று சொல்லியிருக்கிறார். பவுலின் போதனைகள் எந்தவிதத்திலும் பழைய ஏற்பாட்டுப் போதனைகளிலிருந்து முரண்பட்டிருக்கவில்லை. வேதத்திலுள்ள முதல் நிருபத்தில் பவுல், தான் எந்த சுவிசேஷத்தை அறிவிக்கும்படியாக கர்த்தரால் பிரித்தெடுக்கப்பட்டவன் என்பதைக் குறிப்பிடுகிறபோது, “தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே வாக்குத்தத்தம் பண்ணினது” (ரோமர் 1:4) என்று சொல்லியிருக்கிறார். இப்போது வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவநீதியைக் குறித்து சொல்லுகிறபோதும், அவர் மிகவும் கவனத்துடன், “அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது” என்று சொல்லியிருக்கிறார். நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் இல்லாமல், விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறோம் என்ற சத்தியத்தை நிலைநிறுத்துகிறபோதும், ஆபிரகாமைப் பற்றிய குறிப்பையும் தாவீதின் சாட்சியத்தையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார். கொரிந்து சபை விசுவாசிகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த ஆவிக்குரிய வரங்களின் காரணமாக, அவர்கள் ஆவிக்குரிய விதத்தில் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணித் தவறாக நடந்து வந்தார்கள். அவர்களைக் கண்டிக்கிறபோது, பவுல், கர்த்தருடைய தயவை அதிகமாகப் பெற்றிருந்த இஸ்ரவேலர்களுக்கு நடந்தவைகளை நினைவூட்டுகிறார். அவர்கள் கர்த்தருடைய தயவைப் பெற்றிருந்தபோதும், அதாவது, “எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள். எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள்” (1 கொரிந்தியர் 10.1-5) என்ற நிலையிருந்தபோதும், அவர்கள் பாவம் செய்தபோது அது அவருடைய கோபத்திலிருந்து அவர்களைக் காக்கவில்லை என்பதையே சுட்டிக்காட்டியிருக்கிறார். முக்கியமான நடைமுறைச் சத்தியங்களை விளக்குகிறபோது பவுல், ஆபிரகாமின் இரண்டு மகன்களுடைய வரலாற்றைச் சுட்டிக்காட்டியே விளக்கியிருக்கிறார் (கலாத்தியர் 4:22-31).

புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாட்டின் தொடர்ச்சியாகவும், நிறைவேற்றமாகவும் இருக்கிறது. எபிரெயர் நிருபத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற, பழைய மற்றும் புதிய உடன்படிக்கைகளுக்கு இடையிலான வேறுபாடுகள் ஒப்பீட்டின் அடிப்படையில் தரப்பட்டவையே தவிர, முற்றாகப் பழைய உடன்படிக்கையோடு தொடர்பில்லாதவை அல்ல. அவை இரண்டிற்குமான வித்தியாசம், உண்மையில் அவைகளுக்கு இடையிலான வேறுபாடுகள் அல்ல, அவைகளுக்கு இடையில் காணப்படும் தரவரிசையே. அதாவது, கீழிருந்து மேல் நோக்கிச் செல்லுகிற விதத்திலான வித்தியாசம். பழையது புதியதற்கு தயார்செய்கிறது. இந்த இடத்தில், சிலர் யூதமத வாடை அதிகமாக வீசும் கிறிஸ்தவ விளக்கம் தருகிறார்கள். அது தவறானது. வேறு சிலர், இதிலிருக்கும் ஆவிக்குரிய நுணுக்கத்தைக் கவனிக்காமல், யூத மதத்தின் முறையில், மாம்சப் பிரகாரமாகவே இப்பகுதிகளை அணுகுகிறார்கள். ஆனால், தேவன் கிறிஸ்துவுக்குள் தெரிந்தெடுத்தவர்களுக்காக ஏற்படுத்திய நித்திய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை, ஆபேல் முதல் அனைவருக்கும் தந்து வருகிறார். இப்போதும் அதைத் தொடருகிறார். ஜோன் கல்வின் தான் வாழ்ந்த காலத்தில் இருந்த, நவீன டிஸ்பென்சேஷனலிசக் கோட்பாட்டாளர்களின் மூதாதையர்களின் மடத்தனத்தைக் கடிந்துரைத்திருக்கிறார், “ஆபிரகாமை விசுவாசிகள் எல்லாருடைய தகப்பன் என்று சொல்லிக்கொண்டு, விசுவாசிகள் பெறும் ஆத்மீக நன்மையை அவர் பெற்று அனுபவிக்கவில்லை என்று சொல்லுவது எவ்வளவு ஆபத்தானது?” என்கிறார் கல்வின்.

இயேசுவோ, அல்லது அவருடைய அப்போஸ்தலர்களோ, எந்தவொரு சத்தியத்தை விளக்குவதாக இருந்தாலும், அதற்கான ஆதாரத்தைப் பழைய ஏற்பாட்டிலிருந்து எடுத்துக்காட்டியே வாதிட்டிருக்கிறார்கள் என்பதைப் புதிய ஏற்பாட்டின் ஒவ்வொரு பக்கங்களிலும் காணலாம். பழைய ஏற்பாட்டின் போதனைகளும், அதன் வார்த்தைப்பிரயோகங்களும் புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன. சுமார் 600 தடவைக்கு மேல் நேரடியான குறிப்புகளும் இருக்கின்றன. லூக்கா 1:46-55 வசனங்களில் தேவனுடைய மகிமையை அறிவிக்கிற ஒவ்வொரு குறிப்பும் பழைய ஏற்பாட்டின் சாயலைக் கொண்டிருக்கிறது. மத்தேயு 6:9-13 வசனங்களிலுள்ள கர்த்தருடைய ஜெபத்திலும் அதைக் காணலாம். ஆகவே வேதத்தைப் படிக்கிறவர்கள், பழைய புதிய ஏற்பாடுகளாகத் தரப்பட்டிருக்கிற வேதமிரண்டிற்கும் சமஅளவிலான முக்கியத்துவத்தைத் தரவேண்டும். புதிய ஏற்பாட்டில் மட்டும் கவனம் செலுத்தி, அதை மட்டுமே படிக்கிறவர்களாக நாம் இருக்கக்கூடாது. புதிய ஏற்பாட்டைச் சரியாக விளங்கிக்கொள்ள, பழைய ஏற்பாட்டை ஆழமாகப் படிக்க முயற்சிக்க வேண்டும். அப்படிச் செய்யாதபட்சத்தில், சுவிசேஷப் புத்தகங்களையும் நிருபங்களையும் சரியாக விளங்கிக்கொள்வதென்பது ஒருபோதும் இயலாது. இது, முன்னடையாளங்களைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கு மட்டுமல்ல. அதாவது, 1 கொரிந்தியர் 5:7ல் “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே” என்று பவுல் எதைப் பற்றி சொல்லுகிறார் என்பதை யாத்திராகமம் 12ஐக் கொண்டே அறியமுடியும் என்பதும், எபிரெயர் 9, 10 அதிகாரங்களுக்கான விளக்கங்களை லேவியராகமம் 16 ஆவது அதிகாரம் இல்லாமல் சரியாக விளங்கிக்கொள்ள முடியாது என்பதும் மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள பல முக்கியமான வார்த்தைகளுக்கு, உதாரணமாக, “முதற்பேறு, மீட்பு, கோபநிவிர்த்தி” போன்ற வார்த்தைகளுக்கான சரியான விளக்கத்தை அறிந்துகொள்ள, பழைய ஏற்பாட்டில் அவை எந்தவிதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று பின்நோக்கிப் போய்ப் பார்த்தே நாம் தெரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது.

யூதமதத்திற்கும், கிறிஸ்தவத்திற்கும் இடையில் அடிப்படையான ஒற்றுமை காணப்படுகின்றது. ஒரே தேவன் இவை இரண்டையும் ஏற்படுத்தினார். அவர் தம்முடைய குணாதிசயங்கள் அனைத்திலும் மாறாத பரிபூரணமானவர், தம்முடைய திட்டங்களிலும் செயல்களிலும் மாறாத தன்மையுள்ளவர். யூத மதம் வெளிப்புறச் சடங்குகளையே அதிகமாகக் கொண்டிருக்கிறது. அவர்களின் வழிபாட்டு முறைகள் கூடார அமைப்புகளையும், உலக நிலப்பரப்பின் சுதந்தரத்தையும் கொண்டிருந்தன. அவை யாவும், “பரலோகத்திலுள்ளவைகைளின் சாயலாகவும் நிழலாகவும்” இருக்கின்றன (எபிரெயர் 8:5, 10:1). சத்தியத்தை விளக்கிக்காட்டுவதில் பழைய ஏற்பாட்டைவிடப் புதிய ஏற்பாட்டின் எல்லை படர்ந்து விரிந்திருக்கிறது. அது இரண்டு உடன்படிக்கைகளுக்கிடையிலான ஒற்றுமையையும் விளக்குகிறது, வேறுபாட்டையும் விளக்குகிறது. அவற்றின் ஒற்றுமைகள், இரண்டு உடன்படிக்கைகளின் ஆழத்தையும் அவைகளின் அடிப்படை அம்சங்களையும் விவரிக்கின்றன. வேறுபாடுகள், இரண்டு உடன்படிக்கைகளின் சந்தர்ப்ப சூழலையும், அதன் மெய்ப்பொருளையும் விவரிக்கிறதாக இருக்கிறது. ஒன்று, வாக்குத்தத்தங்களையும் முன்னறிவிப்புகளையும் கொண்டிருக்கிறது. மற்றொன்று, அவற்றின் செயல்வடிவத்தையும் நிறைவேற்றத்தையும் தெரிவிக்கிறது. முதலாவது, முன்னடையாளங்களையும் நிழல்களையும் கொண்டிருக்கிறது. இரண்டாவது, நிஜத்தையும் அதன் சாராம்சத்தையும் கொண்டிருக்கிறது. கிறிஸ்தவ விசுவாசம், மோசேயின் வார்த்தைகளிலுள்ள தேவனுடைய பரிபூரணத்தை முழுமையாகவும் தெளிவாகவும் (1 யோவான் 2:8), பரிசுத்த ஆவியானவரின் நிறைவோடு அதிகமதிகமாகவும் (யோவான் 7:39; அப்போஸ்தலர் 2:3), தங்குதடையில்லாத பரந்தளவிலும் (ரோமர் 8:15, கலாத்தியர் 4:2-7) விளக்குகிறது.

வேதத்தை விளக்குகிறவர்கள், பழைய ஏற்பாட்டு வேதப்பகுதிகளைக் குறிப்பிடுகிறபோது மிகவும் கவனத்துடன் ஆராய்ந்தறிந்து குறிப்பிட வேண்டும். புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிற பழைய ஏற்பாட்டின் பகுதிகளை விளக்குகிறபோது, அவைகள் தரப்பட்டிருக்கிற விதம் மற்றும் அதன் நோக்கத்தை விளக்குவதற்கு வேத விளக்க விதிகளைப் பொறுப்புடன் கையாள வேண்டும். நம்முடைய ஆண்டவரும் அவருடைய அப்போஸ்தலர்களும் பழைய ஏற்பாட்டின் பகுதிகளை எப்படி கையாண்டிருக்கிறார்கள் என்பது, நாம் பழைய ஏற்பாட்டின் பகுதிகளை எப்படிக் கையாளவேண்டும் என்பதற்கான போதிய வழிகாட்டுதல்களைத் தருகிறது. புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிற பழைய ஏற்பாட்டின் பகுதிகளைக் கவனத்துடன் ஆராய்வதும், அவற்றின் சாராம்சத்தை அறிவதும், சோம்பேறித்தனமான தாராளவாதப் போக்கிலிருந்து நம்மைக் காப்பதோடு, தேவனுடைய வார்த்தையின் முழுமையான பொருளையும், அது நமக்குத் தரும் பயன்பாட்டையும் அதிகத் தெளிவோடு அறிந்துகொள்ளத் துணைசெய்கிறது. இதைக் குறித்து விரிவான ஆய்வு செய்வதற்கான சூழல் இருந்தாலும், அதற்குப் பதிலாக, இதை விளக்குகிற சில நேரடி உதாரணங்களைத் தருகிறேன்.

மத்தேயு 8:16ல், கிறிஸ்து “நோய்வாய்பட்ட அநேகரைக் குணமாக்கினார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது ஏசாயா தீர்க்கதரிசியின் (ஏசாயா 53:4) மூலமாக சொல்லப்பட்டவைகளின் நிறைவேற்றம் என்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது, “ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது” (மத்தேயு 18:17). மேசியாவைப் பற்றிய இந்தவிதமான முன்னறிவிப்புகள், நம்முடைய ஆவிக்குரிய மனநிலையை ஒளியூட்டுவதாகவும், அவர் தம்முடைய மக்களுக்கான மீட்பை ஏற்படுத்துகிறார் என்பதைவிட மேலதிகமான விளக்கங்களைத் தருகின்றன. என்னவென்றால், கிறிஸ்துவினுடைய ஊழியம், துன்பப்படுகிறவர்களுக்கான இரக்கம் காட்டும் ஊழியமாக இருந்திருக்கிறது. யாருக்கு ஊழியம் செய்யும்படியாக வந்தாரோ அவர்களின் துன்பங்களையும் வலிகளையும் அவர் தன்மீது சுமந்தார். அவர் செய்த அற்புதங்கள் இயேசுவின் மனதுருக்கத்தைக் காட்டுகிறது. கிறிஸ்துவின் பரிந்துரைக்கும் செயல், நம்முடைய பாவங்களின் காரணமாக வரக்கூடிய துன்பங்களை நீக்கி, நம்முடைய சரீரத்தைக் காக்கிறது. அவர் சிலுவையில் நிறைவேற்றிய மாபெரும் செயலினால் நம்மை மூடுகிறார். கிறிஸ்துவின் இந்த இரண்டு செயல்களுக்கும் இடையிலான தொடர்பை, இயேசு திமிர்வாதக்காரனிடம் “உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது” என்றும் “நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ” என்றும் சொன்ன வார்த்தைகளிலிருந்து நாம் அறியலாம் (மத்தேயு 9:2,6).

அடுத்ததாக, கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாக வாழ்ந்தபோது, ஆவிக்குரிய விஷயங்களைக் காட்டிலும் உலக வாழ்க்கையே மேலானது என்று எண்ணியவர்களுடைய தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கு, பழைய ஏற்பாட்டை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார் என்று பார்ப்போம். சதுசேயர்கள், ஆவியும் சரீரமும் ஒன்றோடொன்று நெருக்கமாக இணைந்திருக்கிறது, இவற்றில் ஒன்று அழிகிறபோது மற்றது இல்லாமலாகிவிடுகிறது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள் (அப்போஸ்தலர் 23:8). சரீரம் மரணமடைந்தால், ஆத்துமாவும் அத்தோடு இல்லாமலாகிவிடுகிறது என்று அவர்கள் கருதினார்கள். சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பதுபோல் மனிதனாக வந்த தேவகுமாரன், அவர்களுடைய கேள்வியைக் கொண்டே, காரண காரியங்களை விளக்கி அவர்களுக்கு ஞானமாக பதிலளித்திருக்கிறார். இதை அவர் யாத்திராகமம் 3 ஆவது அதிகாரத்தில், கர்த்தர் மோசேயிடம் “நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன்” என்று சொல்லிய குறிப்பைக் கொண்டு விளக்கியிருக்கிறார். எதற்காக இந்த வார்த்தைகளை இயேசு பயன்படுத்தினார்? சதுசேயர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிற விதத்தில் இதில் என்ன இருக்கிறது? அது வெளிப்படையாக விளக்கப்படவில்லை, ஆனால் உள்ளடக்கமாக காணப்படுகின்றது. இதன் மூலம் கிறிஸ்து ஒரு முடிவைச் சொல்லுகிறார், “தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார்” (மத்தேயு 22:32). கர்த்தர் அவர்களுடைய தேவனாக இருந்தார் என்று சொல்லாமல், “கர்த்தர் அவர்களுடைய தேவனாக இருக்கிறார்” என்று சொல்லியிருக்கிறார். ஆகையால் அவர்கள் இப்போதும் உயிருடன்தான் இருக்கிறார்கள். அவர்களுடைய ஆத்துமாக்கள் இன்னும் உயிருடன் இருந்தால், அவர்களுடைய  உடல்கள் அதற்காக குறிக்கப்பட்ட நேரத்தில் உயிரோடு எழ வேண்டும். ஏனென்றால் அவர்களுடைய “தேவன்” அவர்களோடு இருந்து, அவர்களுடைய எந்தவொரு பாகமும் அழியாமல் பாதுகாக்கப்படும் என்ற உத்திரவாதத்தைத் தந்திருக்கிறார் என்று விளக்கியிருக்கிறார். இதன்மூலம், ஒரு வேதப்பகுதியிலிருந்து எந்தவொரு விளக்கத்தையும் பெறுகிறபோது, அது வேதத்தின் ஏனைய பகுதிகளோடு முரண்படக்கூடாது என்ற முக்கியமானதொரு வேதவிளக்க விதிமுறையை ஏற்படுத்தியிருக்கிறார்.

ரோமர் 4:11-18 வசனங்களில், அப்போஸ்தலர்களின் வேதவிளக்க முறையில் ஒரு குறிப்பிடத்தகுந்த உதாரணத்தை ஆதியாகமத்தின் இரண்டு சிறு பகுதிகளை வைத்து விளக்கியதிலிருந்து நாம் அறியலாம். தேவன் ஆபிரகாமுக்கு, “திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக இருப்பாய்” (ஆதியாகமம் 17:5) என்றும், “உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்” என்றும் வாக்குறுதி அளித்தார். ஆபிரகாம் விசுவாசியாக இருந்தபோது இந்த வாக்குறுதி அவருக்கு அளிக்கப்பட்டது. தெய்வீக நியமமாக, விருத்தச்சேதனம் ஏற்படுத்தப்படுவதற்கு முன்பாகவே இது தரப்பட்டது. இதன் மூலம் பவுல் ஒரு தர்க்கரீதியிலான முடிவுக்கு வருகிறார். அந்த வாக்குறுதிகள், யூதர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும் உரியது. ஆபிரகாம் விசுவாசித்ததுபோல் விசுவாசிக்கிறவர்களுக்கு, கிறிஸ்துவின் நீதி அவர்களுடைய நீதியாக எண்ணப்படுகிறது. ஆபிரகாமுடைய விசுவாசத்தின் பாதையில் நடக்கிற அனைவருக்கும் அந்த வாக்குறுதியின் நன்மைகள் உரியது. ஆகவே “வாக்குத்தத்தத்தின் சந்ததி” என்று அந்த வாக்குறுதிகளில் குறிப்பிடப்பட்டிருப்பது, ஆவிக்குரிய தன்மை கொண்டது என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது (கலாத்தியர் 3:7-9, 14:29), உலகத்தின் எந்தப்பகுதியில் வாழ்ந்தாலும், விசுவாசத்தின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் இதில் அடங்கியிருக்கிறார்கள். “ஆபிரகாம் சரீரப்பிரகாரமாகவோ ஆவிக்குரியவிதத்திலோ தகப்பன் என்று சொல்லப்படவில்லை. விசுவாச குடும்பத்தின் தலைவன் என்ற விதத்திலேயே தகப்பன் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்” என்று ஸ்டிப்ளர் (Stifler) என்ற இறையியலாளர் இதுகுறித்து அருமையானதொரு விளக்கத்தைத் தந்திருக்கிறார். ரோமர் 9:6-13 வசனங்களில், பவுல், வெறுமனே ஆபிரகாமின் பிறப்பு வழி சந்ததியினராக இருப்பவர்கள் இந்த வாக்குறுதிகளின் ஆசீர்வாதங்களிலிருந்து விலக்கப்பட்டவர்கள் என்பதை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.

ரோமர் 10:5-9 வசனங்களில், பவுல், இந்த வேதவிளக்க விதிமுறையை உபாகமம் 30:11-14 வசனங்களைக் கொண்டு அதிரடியான உதாரணத்தைத் தந்து விளக்கியிருக்கிறார். நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதன் மூலமாகவே ஒரு மனிதன் நீதிமானாக்கப்படுகிறான் என்ற தவறான எண்ணத்திலிருந்து யூதர்களை விடுவிப்பதே பவுலின் நோக்கமாக இருந்திருக்கிறது (ரோமர் 10:2,3). இதை விளக்குவதற்கு மோசேயின் எழுத்துக்களிலிருந்து தன் வாதத்தை முன்வைக்கிறார். பவுல், நியாயப்பிரமாணத்தின் நீதிக்கும் விசுவாசத்தின் நீதிக்கும் இடையே இருக்கிற வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறார். யூதர்கள், அவர்களுடைய மாம்சப்பிரகாரமான எதிர்பார்ப்பின்படியாக கிறிஸ்து வராததனால், அவரை நிராகரித்தார்கள். ஆகவே அவர் மூலமாக வழங்கப்பட்ட கிருபையையும் அவர்கள் நிராகரித்தார்கள். மேசியா அவர்களுக்கு அருகில் இருந்தபோதும், அவர் இன்னும் அவர்களுக்குத் தூரமாக இருப்பதாகவே அவர்கள் எண்ணினார்கள். கிறிஸ்து இறங்கி வரும்படி அவர்கள் பரலோகத்திற்கு ஏறிப்போக வேண்டிய அவசியமே இல்லை. அவர் மரித்தோரிலிருந்து எழுவதற்காக அவர்கள் பாதாளத்திற்கு இறங்கிப்போக வேண்டியதும் இல்லை. உபாகமம் 30ல் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது மட்டும் பவுலின் நோக்கமல்ல. அதனுடைய சுவிசேஷப் பார்வையையும் விளக்கிக் காட்டுவதுதான் அவருடைய நோக்கமாக இருந்திருக்கிறது. “அந்த அதிகாரம் முழுவதும், சுவிசேஷ மனந்திரும்புதலை விளக்குகிற பிரசங்கம்” என்று தொமஸ் மேன்டன் சொல்லியிருக்கிறார். கிறிஸ்து பரலோகம் சென்ற பிறகு, இஸ்ரவேலர் உலகின் பலபகுதிகளுக்குச் சிதறிப் போகிற காலத்தைப் பற்றியும் இது விவரிக்கிறது. ஆகவே மோசேயின் வார்த்தைகள் சுவிசேஷம் பரவுகிற இந்தக் காலத்திற்கும் பொருத்தமானது. 11-14 வரையுள்ள வசனங்கள், கர்த்தருடைய சித்தத்தை அறிவதென்பது யாருக்கும் மறைபொருளல்ல என்பதை விவரிக்கிறது. அதை விளங்கிக்கொள்ளுவதற்கு யாருடைய உதவியும் தேவை இல்லை என்பதையும் தெரிவிக்கிறது.

ரோமர் 10:18ல் தேவனுடைய வார்த்தையின் ஆழங்களையும் அதன் படர்ந்து விரிந்த பயன்பாட்டையும் தெரிவிக்கிற ஒரு குறிப்பு இருக்கிறது, “அவர்கள் [சுவிசேஷத்தைக்] கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள் [அதற்குக் கீழ்ப்படியவில்லை (வசனம் 16)]; அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே” என்கிறார் பவுல். அவர் இதை சங்கீதம் 19:4ல் இருந்து குறிப்பிட்டிருக்கிறார். சுவிசேஷப் பரவுதலுக்குக் கட்டுப்பாடு இல்லை (கொலோசெயர் 1:5-6). வானத்தைப் போல் எல்லாருக்கும் பொதுவான தெய்வீக வெளிப்பாடாக அது இருக்கிறது (சங்கீதம் 19:1). “இயற்கையின் மூலம் தேவன் தம்மை உலகளாவியவிதத்தில் வெளிப்படுத்தியது, உலகளாவிய சுவிசேஷ பகிர்வுக்கான அவருடைய பராமரிப்பின் முன்னறிவிப்பாக இருக்கிறது. முந்தையது தேவையற்றதாக இல்லாமலிருந்தால், பின்பு வந்ததும் தேவையற்றதாகிவிடும். ஆனால், தேவன் தம்முடைய படைப்புயிர்கள் அனைத்திற்குமாக, இயற்கையின் மூலமாக தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். இதன் மூலம், தேவனுடைய சிறப்பான வெளிப்படுத்தலிலும் அவர்கள் பங்கடைய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” (Hengstenberg). சுவிசேஷம் உலகம் முழுவதும் அறிவிக்கப்பட வேண்டும் என்று பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனம் மட்டும் அறிவிக்கவில்லை, வானங்களும் அவற்றை அறிவிக்கின்றன. வானங்கள் ஒரு நாட்டுக்காக மட்டும் பேசவில்லை. முழு உலகத்தோடும் பேசுகின்றன. மனிதர்கள் விசுவாசிக்கவில்லையென்பதால், அவர்கள் சுவிசேஷத்தைக் கேள்விப்படவில்லை என்று அர்த்தமல்ல. 1 கொரிந்தியர் 9:9-10 வசனங்களில் மற்றொரு வினோதமான உதாரணத்தைக் காணலாம்.

கலாத்தியர் 4:24ல், ஆபிரகாமுடைய குடும்பத்தினரைப் பற்றிய குறிப்புகள் “உருவக அர்த்தம் கொண்டவை”. ஆகாரும் சாராளும் இரண்டு உடன்படிக்கைளைக் குறிக்கிறார்கள். அவர்களுடைய மகன்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அந்த உடன்படிக்கையை அவர்கள் அணுகுகிற விதத்திலிருந்து அறிந்துகொள்கிறோம். ஆனால் பவுலின் மூலமாக வந்த இந்த தெய்வீக வெளிப்பாடு இல்லாமல், தேவன் ஒரு தீர்க்கதரிசன மறைபொருளை இந்த வரலாற்று நிகழ்வின் மூலம் தந்திருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியாது; எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஒரு முக்கியமான நிகழ்வுக்கான நிழலாட்டம் இது என்பதையும் நாம் அறிந்திருக்க முடியாது, ஆவிக்குரிய அடிமைக்கும் ஆவிக்குரிய சுயாதீனனுக்கும் இடையில் இருக்கிற வித்தியாசங்களை விவரிக்கிற, ஒரு மாபெரும் சத்தியம் இதில் உதாரணமாகக் காட்டப்பட்டிருக்கிறது என்பதையும் அறிந்திருக்க முடியாது. இருப்பினும், அந்த நிகழ்வுகளின் மறைபொருள் விளக்கத்தைப் பவுல் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆபிரகாமுடைய குடும்பத்தின் நிகழ்வுகளைக் கர்த்தர், சத்தியத்தை நமக்கு விளக்கப்படுத்தும் விதத்தில் வடிவமைத்திருக்கிறார். ஆபிரகாமின் இரண்டு மகன்களும், மாம்ச பிரகாரமாகப் பிறந்தவர்களுக்கும், ஆவியின்படி பிறந்தவர்களுக்குமான நிழலாட்டமாக இருக்கிறார்கள். மாம்சத்தின்படி பிறந்த ஆபிரகாமின் சந்ததியினர், உள்ளான மனதின்படி இஸ்மவேலர்களாகவும், வாக்குத்தத்தத்திற்கு அந்நியர்களாகவும் இருந்திருக்கிறார்கள். பவுலின் இந்த விளக்கம், வேதத்தை விளக்குகிறவர்கள் தங்களுடைய மனதில் எழுகிற எண்ணங்களுக்குக் கடிவாளம் போடாமல், பழைய ஏற்பாட்டின் பகுதிகளுக்கு தங்களுடைய மனம்போன போக்கில் விளக்கம் தருவதற்கான முன்னுதாரணம் இல்லை. நம்முடைய முற்பிதாக்களுடைய வாழ்க்கையின் மூலம் நாம் பாடம் கற்றுக்கொள்ளும் விதத்தில் கர்த்தர் அவர்களை வழிநடத்தியிருக்கிறார் என்பதையே இவைகள் நமக்குத் தெரிவிக்கின்றன.

வேதத்தை நுனிப்புல் மேய்கிறவர்களாக இல்லாமல், கவனத்துடன் படித்தறிய முற்படுகிற எவரும், இதுவரை விளக்கியிருக்கும் பகுதிகளிலிருந்து, வேதத்தை எப்படி விளங்கிக்கொள்ளுவது என்பதற்கான சில பயனுள்ள தெய்வீகக் குறிப்புகளையும், உதவிகளையும், வேதத்தை விளக்குவதற்கான விதிமுறைகளையும் கற்றுக்கொண்டிருப்பார்கள். அந்தப் பகுதிகளை மறுபடியும் வாசியுங்கள், ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

3. வேதப்பகுதிகளை விளக்குகிறபோது, நம்முடைய விளக்கங்கள் அனைத்தும் வேதத்திலுள்ள சத்தியங்களோடு பொருந்திப் போகிறதாக இருக்க வேண்டும். ரோமர் 12:6ல் சொல்லப்பட்டிருக்கிற பிரகாரம், “நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன்.” “தீர்க்கதரிசி என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் விளக்கம் கூறுபவர் என்பதாகும். அதாவது தேவனுடைய சித்தத்தை அறிவிக்கிறவர்கள், தேவனுடைய மனதை மற்றவர்களுக்கு விளக்குகிறவர்கள்” என்று சார்ள்ஸ் ஹொட்ஜ் சொல்லியிருக்கிறார். அத்தோடு, “பிரமாணம்” என்ற வார்த்தை “விகிதம்” “அளவு” “விதி” “தரநிலை” என்ற அர்த்தங்களைக் கொண்டது. உள்ளார்ந்த மற்றும் இரட்சிக்கும் விசுவாசத்தோடு தொடர்பில்லாத பிலேயாம் மற்றும் காய்பா போன்றவர்கள் தீர்க்கதரிசிகளாக இருந்திருக்கிறார்கள். இந்த வசனத்தில் “விசுவாசம்” என்பது ஓர் இலக்கை அல்லது நோக்கத்தைக் குறிப்பிடுகிற விதத்தில் தரப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில், தேவனுடைய சித்தத்தை விளக்குகிறவர்கள், அவர் அதை வெளிப்படுத்தியிருக்கிற விதத்திலேயே எப்போதும் விளக்க வேண்டும் என்பதில் உறுதியாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்பதை இந்த வார்த்தையானது முக்கியமாக வலியுறுத்துகிறது. கலாத்தியர் 1:23, 1 தீமோத்தேயு 4:1 வசனங்களிலும் “விசுவாசம்” என்பது இதேவிதமாக தரப்பட்டிருக்கிறது, எபேசியர் 4:5ல் “ஒரே விசுவாசம்” என்றும், யூதா 3ல் “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசம்” என்றும், கர்த்தருடைய வார்த்தையாகிய வேதத்தைக் குறிக்கிற விதத்திலேயே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

வேதத்திலுள்ள எந்தவொரு வசனத்திற்கு விளக்கமளிக்கிறபோது, கர்த்தர் தன்னுடைய மனிதர்கள் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிற, வேதத்திலுள்ள ஏனைய சத்தியங்களோடு அது பொருந்திப் போகிறதாக இருக்க வேண்டும். ஆகவே, வேதத்தை விளக்குகிறவர்கள், வேதத்திலுள்ள உள்ளடக்கத்தைப் பற்றிய ஒரு பரந்தளவிலான அறிவைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம். புதிய விசுவாசிகள், மற்றவர்களுக்கு வேதத்தை விளக்கும் பொறுப்பில் ஈடுபடக்கூடாது. வேதத்திலுள்ள உள்ளடக்கத்தில் ஒரு பரந்தளவிலான அறிவைப் பெறுவதற்கு, முறையான, தொடர்ச்சியான வேத வாசிப்பு அவசியம். அப்போதுதான், மற்றவர்கள் எழுதுகிற புத்தகங்களையும் மதிப்பிட்டு வாசிப்பதற்கு ஏற்ற நபராக நீங்கள் இருக்க முடியும். வேதம் முழுவதும் தேவ ஆவியினால் தரப்பட்டிருப்பதனால், அதில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. ஆகவே, வேதத்தை விளக்குகிறபோது, வேதத்தின் மற்றப் பகுதியில் நேரடியாக தரப்பட்டிருக்கிற வசனங்களோடு முரண்படுகிறதாக இருந்தால், அந்த விளக்கம் தவறானது. எந்தவொரு வேத விளக்கமும் அங்கீகரிக்கக்கூடியதாக இருக்கவேண்டுமானால், வேத சத்தியங்களின் ஒட்டுமொத்தப் போதனையோடு சரியாகப் பொருந்திப் போகிறதாக இருக்க வேண்டும். எந்தவொரு வேத சத்தியமும், வேதத்திலுள்ள மற்ற சத்தியங்களோடு, பரஸ்பர இணைப்பு கொண்டதாகவும், மற்றதைச் சார்ந்திருக்கிறதாகவும் இருக்கிறது. ஆகவே ஒன்று மற்றொன்றோடு முழுமையாக இணைந்திருக்கிறது. வேதத்திலுள்ள புத்தகங்களைப் பற்றி பெங்கல் (Bengel) என்பவர், “அவைகள் ஒரே அழகான, இசைவான, மகிமையுள்ள சத்தியத் தொகுப்பாக இணைந்திருக்கிறது” என்று சொல்லியிருக்கிறார்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s