சத்தியப் பஞ்சம் போக்கும் இலக்கியச் சோலை!

(திருமறைத்தீபத் தொகுப்புகள் பற்றிய கருத்துரை) – ஷேபா மைக்கேள் ஜோர்ஜ்

(மைக்கேள், ஷேபா தம்பதிகள் ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன் எனக்கு அறிமுகமானார்கள். மத்திய கிழக்கு நாடொன்றில் வாழ்ந்து வரும் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. விசுவாசத் தம்பதிகளான அவர்கள் திருமறைத்தீப இதழைப் பல வருடங்களாக வாசித்து வருவதோடு, நாம் வெளியிட்டு வரும் நூல்கள் அனைத்தையும் பெற்று ஆர்வத்தோடு வாசித்து வருகிறார்கள். முக்கியமாக சகோதரி ஷேபா இளம் வயதில் இருந்தே இலக்கிய வாசிப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார். தமிழ் சஞ்சிகைகளையும் நூல்களையும் தவறாமல் பெற்று வாசித்து வாசிப்பில் வளர்ந்திருக்கிறார். திருமறைத்தீபமும், நமது நூல்களும் அறிமுகமான காலத்தில் இருந்து அவருடைய வாசிப்பு இன்னுமொரு கட்டத்தை அடைந்து, அவர் ஆர்வத்தோடு எழுதுவதிலும் ஈடுபட ஆரம்பித்தார். தன் வாசிப்பு அனுபவங்களைச் சரளமாக எழுத்தில் வடிப்பதற்கு அவருடைய வாசிப்புப் பழக்கம் அவருக்கு அருமையாகக் கைகொடுத்திருக்கிறது. நம் வலைத்தளத்திலும், இதழ்களிலும் அவர் எழுதியிருக்கும் சில ஆக்கங்களே அதற்குச் சான்று.

வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரியும் ஷேபா அங்கு ஓய்வுக்காக நேரங்கிடைக்கும் நேரத்திலும் வாசிக்கத் தவறுவதில்லை. வேலைக்குப் போகும்போது அறுநூறு பக்கங்களுக்கும் மேலான திருமறைத்தீபத் தொகுப்பு ஒன்றையும் கையோடு கொண்டு சென்று வாசிப்பது அவருடைய வழக்கம். அந்தத் தொகுப்புகளில் நீச்சலடித்துத் தன் சத்தியத் தாகத்தைத் தணித்துக்கொள்வதை அவர் அன்றாட வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த அனுபவங்களை அவர் இந்த ஆக்கத்தின் மூலம் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். அவருடைய வாசிப்பும், எழுத்தும் மென்மேலும் உயரக் கர்த்தர் உதவட்டும். – ஆசிரியர்)

கர்த்தருடைய கிருபையினால் கிறிஸ்துவினாலுண்டாகும் இரட்சிப்பை விசுவாசித்து பரிசுத்த ஆவியின் வல்லமையோடு பரம கானானை நோக்கித் தொடரும் இந்த விசுவாச பயணத்தில், என்னோடு தொடர்ந்து பயணிக்கும் நல்ல நண்பனான “மோட்ச பிரயாணம்” நூலுக்கு இணையான மற்றொரு உண்மையான நண்பன் “திருமறைத்தீபம் இதழ்த் தொகுப்புகள்” (Bible lamp volumes).

BL_Volumes

திருமறைத்தீபம் இதழின் அட்டைப்படத்தில் காணப்படும் அடையாளச் சின்னத்திலிருக்கும் ‘விளக்கு’ சிறுவயதில் கதைபுத்தகத்தில் கவனித்து அப்படியொன்று கிடைத்தால் நன்றாக இருக்குமே! என்று அறியா வயதில் ஆசைப்பட்ட அலாவுதீனின் அற்புத விளக்கை அடிக்கடி ஞாபகப்படுத்தும். அன்று கிடைக்காத அந்த அற்புத விளக்கு இன்று திருமறைத்தீபம் இதழ் வடிவில் எனது கரத்திலிருப்பதாகவே உணருகிறேன். உண்மைதான்! விசுவாச வாழ்க்கையில் ஆரம்ப நிலையில் இருக்கும் ஓர் ஆத்துமாவுக்கு பாவத்தைக் குறித்தும், மனந்திரும்புதலைக் குறித்தும், விசுவாசத்தைக் குறித்தும், இரட்சிப்பைக்குறித்தும், இரட்சகரைக் குறித்தும் எழும் பல குழப்பங்களைப் போக்கி ‘களங்கமில்லா ஞானப்பாலாகிய’ வேதத்தின் இரகசியங்களைக் கலப்பில்லாமல் ருசிக்க உதவிவருகின்ற ‘அற்புத விளக்கு’ என்று திருமறைத்தீபம் இதழ் தொகுப்புகளைக் கூறுவதில் தவறேதுமில்லை. குறிப்பாக சத்தியத்தைச் சத்தியமாக அறிவிக்கும் கிறிஸ்தவ நூல்கள் அருகிக் காணப்படும் தமிழினத்தின் அசத்திய இருளகற்றி சத்திய ஒளியேற்ற தேவன் அருளிய அற்புத விளக்கு.

இன்றுவரையிலும் வெளிவந்துள்ள ஏழு தொகுப்பு நூல்களிலும், அவற்றின் பொருளடக்கம் பகுதியில் ஒவ்வொரு தொகுப்பிலும் தொகுக்கப்பட்டுள்ள இதழ்களின் வருடம், எண் மற்றும் தலைப்புகள் வாரியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இது எளிதாக நம் தேவைக்கேற்ப இதழ்களையும் தலைப்புகளையும் தெரிவு செய்து வாசிக்க உதவியாக இருக்கிறது. திருமறைத்தீபம் இதழை வாசிக்கும் வாசகர்களுக்கு அதன் தலைப்புகளின் சிறப்பு தெரியாதது அல்ல. இன்று பல நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளுக்குக் கொடுக்கும் அதிரடித் தலைப்புகளை வாசிக்கும்போது ஏற்படும் எதிர்பார்ப்பு அதன் உள்ளடக்கங்களை வாசிக்கும்போது ‘இலவு காத்த கிளி’ போல ஏமாற்றத்தையே அளிக்கிறது. ஆனால் திருமறைத்தீபம் இதழ் தலைப்புகள் அதன் மையக் கருத்தை தெளிவாக வலியுறுத்துவதில் ஒருபோதும் சோடை போனதில்லை.

“திருமறைத்தீபம்” நூலின் சிறப்புகளை எழுத ஆரம்பித்தால் அதன் பக்கங்களின் எண்ணிக்கை ஒரு புத்தகத்தின் பக்கங்களையும் மிஞ்சிவிடும். எனவே சுருக்கமாக எழுத முற்படுகிறேன்.

1. ஒரு தனிப்பட்ட மனிதனின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அவசியமான அடிப்படை சத்தியங்கள் போதுமான அளவிற்கு அலையலையாக அணிவகுத்துக் காணப்படுகிறது.

கர்த்தரின் வெளிப்படுத்தப்பட்ட சித்தமாகிய வேதத்தின் வழுவற்ற மாறாத அதிகாரம், திரித்துவ தேவனின் குணாதிசயங்கள், உள்ளியல்புகள், இறையாண்மை, மனிதனுடைய பாவத்தின் முழுமையான வீழ்ச்சி, இரட்சகருக்கான அவசியம், தேவகிருபை, கிறிஸ்துவின் கோபநிவாரண பலி, பரிசுத்த ஆவியினாலுண்டாகும் மறுபிறப்பு, மனந்திரும்புதல், விசுவாசம், உள்ளிருக்கும் பாவம், விடாமுயற்சியுடன் கூடிய பரிசுத்த வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல் ஆகிய அனைத்து அடிப்படை சத்தியங்களையும் வேதத்தின் அடிப்படையில் சீர்திருத்த விசுவாச அறிக்கை, வினாவிடை போதனைகள், கல்வினிச ஐங்கோட்பாடுகள் மற்றும் கிருபையின் போதனைகள் வாயிலாக மிகவும் தெளிவாகப் பாமரனும் புரிந்துகொள்ளும் எளிய நடையில் எழுதியுள்ளார் நூலாசிரியர்.

2. ஒரு மெய்விசுவாசி தன் குடும்பத்துடன் சேர்ந்து நடைமுறை பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்கு உதவிசெய்யும் பல ஆக்கங்கள் உள்ளன.

குடும்பம் ஒரு ஆலயம், இல்லற வாழ்க்கையின் இரகசியம், உழைக்கப் பிறந்தவன் நீ, என்ன தொழில் செய்வது, எப்படிச் செய்வது? திருமண உறவில் நெருக்கம், ஆவிக்குரிய பிள்ளை வளர்ப்பு, குடும்ப ஆராதனை போன்ற பொதுவான ஆக்கங்கள் குறிப்பிடத்தக்கவை. அடுத்ததாக விசுவாச ஆண்களுக்கான கட்டுரைகளில், குடும்பத் தலைவன், வாழ்க்கையில் தீர்மானம் எடுப்பது எப்படி? நம்மினத்துக்கு இன்று தேவை நல்ல தலைவர்கள்? ஆகியவை ஒரு கிறிஸ்தவ குடும்பத் தலைவனிடம் வேதம் எதிர்பார்க்கும் தலைமைத்துவம், கடமை பொறுப்புகள் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டுகின்றன. அடுத்ததாக பாரம்பரியத்திற்கும் கிறிஸ்தவ பக்தி விருத்திக்கும் இடையே உள்ள வேறுபாடு அறியாமல் பலவிதமான குழப்பங்களோடும், கேள்விகளோடும் போராடும் விசுவாச பெண்களுக்கு, பொட்டு வைக்கலாமா? முக்காடு போடலாமா? என்பது போன்ற ஆரம்ப அரிச்சுவடி முதல் போதகரின் மனைவி வரைக்கும் விசுவாச வாழ்க்கைக் குறித்து எழும் பல கேள்விகளுக்குத் தெளிவான பதிலைத் தருகின்றன இதழ் தொகுப்புகள். இவற்றோடு பிள்ளைகள், வாலிபர்களுக்கான படிப்பினைகள் மற்றும் வாசிப்பது, சிந்திப்பது, உரையாடுவது சம்பந்தமான பல்வேறு கட்டுரைகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3. கிறிஸ்து தன் இரத்தத்தைச் சிந்திச் சம்பாதித்து, ஸ்தாபித்து, பராமரித்து வரும் திருச்சபையின் பக்தி விருத்திக்கான போதனைகள் நூல் முழுவதும் வெளியரங்கமாகவும், இலைமறை காயாகவும் கொட்டிக்கிடக்கின்றன.

இவ்வுலகில் கர்த்தர் கட்டியெழுப்பும் திருச்சபையின் நோக்கம், கோட்பாடுகள், அங்கத்துவம், ஆராதனை, திருநியமங்கள், ஓய்வுநாள், காணிக்கை, பிரசங்கம், தலைமைத்துவம், சபைக் கட்டுப்பாடு மற்றும் திருச்சபை வரலாறு, விசுவாச அறிக்கை ஆகியவற்றின் அவசியம் குறித்தும் தெளிவான விளக்கங்களை வேதத்திலிருந்தும், வரலாற்றிலிருந்தும் முறையாக எவ்வித முரண்பாடுகளுமின்றி தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் மிகவும் சிறப்பாக எழுதியுள்ளார் ஆசிரியர். அவற்றில் கிறிஸ்துவின் வழியில் திருச்சபை ஊழியம் என்ற தொடர் ஆக்கம் மிகவும் முக்கியமானது. கூடில்லா குருவிகள், சபை வாழ்க்கை இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கையா! அங்கத்துவமில்லா திருச்சபையா? போன்றவை சபை மற்றும் சபை அங்கத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தும் ஆக்கங்கள். போதகக் கண்காணிப்பின் மேன்மையை எடுத்துக்காட்டும் மேய்ப்பனில்லா ஆடுகள் என்ற கட்டுரை, திருச்சபையின் தற்போதைய அழகற்ற நிலையையும் வரப்போகும் மகிமையையும் எடுத்துக்காட்டி சபையின் ஐக்கியத்தையும் விடாமுயற்சியையும் வலியுறுத்தி ஊக்கப்படுத்தும் ‘மகிமையடையும் திருச்சபை’, ஆராதனை ஒழுங்கை விவரிக்கும் 1 கொரிந்தியர் 12-14 கட்டுரை, போதகர்களுக்கான பிரசங்கிகளும் பிரசங்கமும், போதகா, உன் கடமை! போன்ற சில ஆக்கங்கள் குறிப்பிடத்தக்கவை.

4. கிறிஸ்துவின் மணவாட்டியாக இவ்வுலகில் சத்தியத்திற்காகத் தொடர்ந்து போராடும் திருச்சபை சந்திக்கும் ஆபத்துக்கள் குறித்த எச்சரிப்பைத் தருகிறது.

திருமறைத்தீபத் தொகுப்புகள், முதலாம் நூற்றாண்டு துவங்கி இந்த 21-ம் நூற்றாண்டு வரைக்கும் சபை சந்தித்து வந்திருக்கும் போலிப் போதனைகள் பலவற்றை அவற்றின் பெயர், பின்னணி மற்றும் வரலாற்றுச் சான்றுகளோடு எடுத்துக்காட்டுகின்றன. ஏரியன், ஆர்மீனியன் முதல் வில்லியம் பார்க்ளே, போல் யொங்கி சோ வரையில் பல போலிப் போதனையாளர்கள் குறித்த குறிப்புகளைத் தொகுப்புகள் அளிக்கின்றன. அத்தோடு பாரம்பரியப் புதர்களைக் குறித்தும், சமய சமரச வலைகள் குறித்தும் கடுமையான எச்சரிப்பைத் தருகின்றன. செழிப்பு உபதேசம், மிஸ்டிசிஷம், ஆன்டிநோமியனிசம், ஹைப்பர் கல்வினிசம் மற்றும் இன்னும் பல மாய மான்களையும் தொகுப்புகள் இனம் காட்டுகின்றன. அத்தோடு பிரபலமான சீர்திருத்த கிறிஸ்தவ தலைவர்களிடமும் காணப்பட்ட சில தவறான வேத கண்ணோட்டத்தைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்யும் ஆசிரியரின் ஜாக்கிரதை உணர்வு மிகவும் பாராட்டுக்குரியது.

எதிரியைக் குறித்த எச்சரிப்பைத் தருவதோடு நின்றுவிடாமல் தைரியமாக எதிர்த்து நின்று போராடும் தற்காப்புக் கலைகளையும் கற்றுத் தருகிறார். வேதவிளக்க விதிகளைப் பயன்படுத்தி வேதத்தைத் தொடர்ச்சியாக கற்றுக் கொள்ளும் வழிமுறைகள், சிக்கலான வேதப்பகுதி குறித்த விளக்கங்கள், வினாவிடைப் போதனைகள் போன்றவை அடிப்படை வேத அறிவைத் தருகின்றது. யாக்கோபு நிருப போதனைகள், மலைப்பிரசங்க விளக்கவுரை (ஜே.சி. ரைல்), வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை, அழிவில்லா ஆத்மீக ஆலோசனை (போதகர் மார்டின்), தணிந்துபோகும் அன்பு (ஒக்டேவியஸ் வின்ஸ்லோ), ஆத்மீகப் பின்வாங்குதல் (வில்லியம் பிளமர்) போன்ற ஆக்கங்கள் நடைமுறை பரிசுத்த வாழ்வு குறித்த தரமான பயிற்சியளிக்கின்றன. சீர்திருத்த வீரர்கள் மற்றும் பியூரிட்டன் பெரியோர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் விடாமுயற்சியோடு விசுவாச வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல ஊக்கப்படுத்துகின்றன. அனைத்துக்கும் மேலாக ஒரு சாதாரண விசுவாசியை வேத இறையியலில் தேர்ந்த போதகனாக அனல் வீசும் பிரசங்கங்களை அளிக்கத் தகுதியுள்ளவனாக்கும் வகையில் ஆழமான பல இறையியல் போதனைகளைக் கொண்டிருப்பது நூலின் சிறப்பை சிகரத்தின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது. (எ.க: உடன்படிக்கை இறையியல், பாவத்தின் பாவம், தேவ கோபம், தேவ பயம், பக்தி வைராக்கியம், பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர், மனித சித்தம், மனந்திரும்புதல் இன்னும் பல).

5. உலக அரசியல் மற்றும் சமுதாய மாற்றங்கள், இயற்கை பேரிடர்கள் மற்றும் கொள்ளை நோய்கள் நிகழ்ந்து வரும் காலத்தில் தீபத் தொகுப்புகள் நம்மைத் தைரியப்படுத்தி அவற்றைக் குறித்த சரியான கிறிஸ்தவ பார்வையையும், அணுகுமுறையையும் அளிக்கின்றன.

இலங்கை போர், அமெரிக்க இரட்டை கோபுரத் தகர்ப்பு, உலகப் பொருளாதார சரிவு, தலிபான்களின் எழுச்சி போன்ற அரசியல் மாற்றங்கள்; தாராளவாதம், பின்நவீனத்துவம், பெண்ணியம் போன்ற சமுதாயச் சீரழிவுக் கோட்பாடுகள்; சுனாமி பேரழிவுகள், கொரோனா கட்டுப்பாடுகள் போன்றவை ஓநாய்க் கூட்டம் போலச் சூழ்ந்து நம்மைத் திகைக்க வைக்கும் காலங்களில், சற்றும் காலம் தாழ்த்தாமல் அன்பும், ஜாக்கிரதையும் கொண்ட மேய்ப்பனாக இறையாண்மை கொண்ட தேவனின் எச்சரிப்பையும், பராமரிப்பையும் ஞாபகப்படுத்தி தைரியப்படுத்துகின்றன இதழ்த் தொகுப்புகள். அத்தோடு இத்தகைய காலங்களில் விசுவாசிகள் கொண்டிருக்க வேண்டிய விசேஷித்த கடமைப் பொறுப்பு குறித்துச் சுட்டிக் காட்டவும் தயங்குவதில்லை திருமறைத்தீபம்.

மொத்தத்தில் பரலோக ராஜ்ஜியத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டு நன்றாகத் தேறின ஒரு வேதபாரகன் போல, தன் இறைப் பொக்கிஷத்திலிருந்து, அவிசுவாசிக்கும் விசுவாசிக்கும் ஏற்றபடி பழையவைகளையும் புதியவைகளையும் எடுத்துக் கொடுக்கும் நல்ல வீட்டெஜமானாக இருந்து வருகின்றன இதழ்த்தொகுப்புகள்.

“இந்த 21ம் நூற்றாண்டு தமிழ் கிறிஸ்தவர்களின் சத்தியப் பஞ்சம் போக்க கர்த்தர் அருளிய இலக்கியச் சோலை இது! வேதத்தின் பட்டறையில் வைத்து பரிசுத்த ஆவியானவரால் கூர் தீட்டப்பட்ட அருமையான ‘எருசலேம் பட்டயம்’ இது!”

திருமறைத்தீபம் இதழ் தொகுப்பு நூல்களால் நான் பெற்ற நன்மைகள் ஏராளம். தனிப்பட்ட வாழ்க்கையில் வேத விதிகளைப் பயன்படுத்தி, உடன்படிக்கை இறையியல் அடிப்படையிலான வேத வாசிப்பில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தேன்கூடு போல பல அறைகளையும் தடுப்புகளையும் கொண்ட என் திருக்கு இதயத்தின் பல தடுப்புச் சுவர்கள் ஒவ்வொன்றாகச் சரிந்து சத்திய வெளிச்சம் நன்றாக ஊடுருவிப் பரவிச் சிந்தனையிலும் செயலிலும் தொடர்ச்சியான சீர்திருத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. தெளிந்த வேதபூர்வமான உலகக் கண்ணோட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. குடும்ப வாழ்க்கையிலும், குழந்தை வளர்ப்பிலும் பல மாற்றத்தை ஏற்படுத்தி சுவிசேஷ அன்பின் சில பலன்களை ருசிக்க உதவி செய்தன. குடும்பத்தில் உள்ளவர்களிடமும், நண்பர்களிடையேயும் பக்திவிருத்தியை உண்டாக்கும் வகையில் பயனுள்ள உரையாடலில் ஈடுபட அவசியமான சில யுக்திகளைக் கற்றுத் தந்திருக்கின்றன. அவதூறு பேசாமல் நாவைக் கட்டுப்படுத்தப் பயிற்சியளித்திருக்கின்றன. கீழ்ப்படிவு, தாழ்மை, பொறுமை போன்ற குணாதிசயங்களில் என் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. தீமையோடு எதிர்த்து நிற்காமலும், துன்ப காலங்களில் சோர்ந்து போகாமலும் கர்த்தருடைய பராமரிப்பை முறுமுறுக்காமல் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள உதவி செய்துள்ளன. சகோதர ஐக்கியத்தில் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்துள்ளன. கிறிஸ்தவ நம்பிக்கைகளில் வேதபூர்வமான உறுதியையும் ஆழமான சந்தோஷத்தையும் தந்துள்ளன. ஒவ்வொரு நாளும் வேத அறிவில் வளரவேண்டும் என்ற வைரக்கியத்தைத் தொடர்ந்தளிக்கின்றன. சபைக்கும், ஓய்வுநாளுக்கும் வாழ்க்கையில் பிரதானமான இடத்தை கொடுக்கும் பழக்கத்தை உண்டாக்கியிருக்கின்றன. பாவத்தை அழிப்பதிலும் பரிசுத்த வாழ்க்கை வாழ்வதிலும் ஜெபத்தை வல்லமையுள்ள ஆயுதமாகப் பயன்படுத்தும் வித்தையைக் கற்றுத் தந்திருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக என் ஆத்ம நேசரோடு அதிகமான நெருக்கத்தையும், ஆழமான அன்பையும் ஏற்படுத்தித் தந்த மிகவும் உண்மையான நண்பன் திருமறைத்தீபத் தொகுப்புகள்.

சத்திய சுத்தம் மட்டுமல்லாமல் திருமறைத்தீபத்தின் இலக்கிய சந்தத்திற்கும் குறைவில்லை. கடந்த பத்து மாதங்களில் குறைந்தது அதன் நான்கு பக்கங்களையாவது வாசிக்காத நாட்கள் இல்லை. அந்த அளவிற்கு ஆசையோடும் ஆர்வத்தோடும் தொடர்ந்து வாசிக்கத் தூண்டும் எழுத்துநடை ஆசிரியருடையது. இது கர்த்தர் ஆசிரியருக்கு அளித்துள்ள ஆழமான இறைஞானத்தையும், தர்க்கவாத எழுத்துத் திறமையையும், கடினமான உழைப்பையும் நிதர்சனமாக எடுத்துக்காட்டுகிறது. ஜெபத்தோடு தொகுப்புகளை வாசிக்கும்போது இடைப்படும் கர்த்தரின் பிரசன்னம் அதற்கு மேலும் மகுடம் சூட்டுகிறது.

தமிழ் சீர்திருத்த கிறிஸ்தவத்தின் வரலாற்றுப் பாதையில் சீகன்பால்க், வில்லியம் கேரி, ரேனியஸ், கால்ட்வெல், ஜி.யூ. போப் என்பவர்களின் வரிசையில் நின்று, வேதம் மட்டுமே! விசுவாசம் மட்டுமே! கிருபை மட்டுமே! கிறிஸ்து மட்டுமே! தேவ மகிமை மட்டுமே! என்று முழக்கமிட்டு வீறு நடை போடும் திருமறைத்தீபத்தின் இலக்கியப் பணி தேவ கிருபையோடு தடைகளை எல்லாம் தகர்த்து தொடர்ந்து முன்னேற ஊக்கத்தோடு ஜெபிக்கிறேன்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s