[19ம் நூற்றாண்டுத் தமிழகத்தின் பியூரிட்டன் அருட்பணியாளரான ரேனியஸின் வாழ்க்கை வரலாறும், பணிகளும்]

ரேனியஸ்
தற்காலத்தில் தமிழில் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட நூல்கள் எப்பொழுதுமே இரசித்து வாசிக்கும்படியாக இருப்பதில்லை என்பது நம் வாசகர்களில் அநேகர் என்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கும் உண்மை. இதற்கான காரணங்களைப் பல தடவைகள் இந்த இதழில் வெவ்வேறு ஆக்கங்களில் விளக்கியிருக்கிறேன். அந்நிலை மாறுவதென்பது சுலபமானதல்ல; இன்று அல்லது நாளை நடந்துவிடக்கூடியதுமல்ல. இருந்தும் வாசித்தனுபவிக்கக்கூடிய ஒரு சில நல்ல நூல்களும் இருக்கத்தான் செய்கின்றன. சில வருடங்களுக்கு முன் என்னுடைய தமிழகப் பயணத்தின்போது, சென்னை தியாயராஜர் நகர் நியூலன்ட்ஸ் புத்தகநிலையத்தில் பல நூல்களை வாங்கினேன். இந்தப் புத்தகநிலையம் வித்தியாசமானதாகத்தான் இருந்தது. பல முக்கிய புத்தக நிலையங்களில் வாங்குவதற்கு அரிதாகக் காணப்படும் நூல்களை இங்கு காணமுடிந்தது. அத்தோடு இந்தப் புத்தக நிலையம் இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு விற்பனை நிலையம். அதன் உரிமையாளர் எந்த நூலையும் வாசித்துப் பார்க்காமல் கடையில் விற்பனைக்கு வைப்பதில்லை. அதை அவரிடம் பேசியதில் இருந்து அறிந்துகொண்டேன். பணத்துக்காக மட்டும் நூல்களை விற்கும் அநேக கடைகளைவிட இது வித்தியாசமானது என்பது இதிலிருந்தே தெரிகிறது; ஒரு நல்ல வாசகனுக்கு இதை உணர்வது கஷ்டமல்ல.
அந்தக் கடையில் அன்று நான் கவனித்து வாங்கிய ஒரு நூல், ‘ரேனியஸ் வாழ்க்கை வரலாறு.’ இது திருநெல்வேலியைச் சேர்ந்த தனபால் தேவராஜ் என்பவர் எழுதியது. இதை எழுத அவருக்குத் துணையாகப் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய பெயர்களும் நூலில் தரப்பட்டிருக்கின்றன. தேவராஜ், தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்தவர். அதில் தொடர்ந்தும் ஊழியக்காரராகப் பணிபுரிந்து வருகிறார். அந்தத் திருச்சபையைச் சேர்ந்தவராக இருப்பதால் அவருக்கு ரேனியஸைப்பற்றித் தெரிந்திருக்கிறது. அத்திருச்சபை ரேனியஸ் நாள் என்று ஒரு நாளைத் திருநாளாக வைத்திருக்கிறது. இருந்தபோதும் இன்று ரேனியஸின் ஊழிய மகிமை பற்றி எதையும் அறியாமலும், உணராமலும் உயிரிழந்த ஒரு பாரம்பரியச் சபைப்பிரிவாகவே அது இருந்து வருகிறது.
இந்த ஆக்கம் தனபால் தேவராஜின் நூலைப் பற்றிய திறனாய்வாக மட்டுமல்லாமல் ரேனியஸ் பற்றி இருந்து வருகிற சில முரண்பாடான கருத்துக்களுக்கும் பதிலாக இருக்கப்போகிறது. அத்தோடு சீர்திருத்த இறையியலறிஞரான ரேனியஸின் மகிமையான பன்முகப்பட்ட ஊழியப்பணிகள் பற்றிய என் சொந்தக் கருத்துக்களையும் விளக்கும் ஆக்கமாகவும் இருக்கப்போகிறது. சாதாரணமாக ஒரு நூலுக்கு விமர்சனம் அல்லது கருத்துரை அளிக்கும்போது இத்தனை நீண்ட ஆக்கத்தை எவரும் எழுதுவதில்லை. இது நீளமான ஆக்கமாக அமைந்திருப்பதற்குக் காரணம் ரேனியஸைப் பற்றித் தெரிந்துகொண்டிருக்கும் பல விஷயங்களை நான் வாசகர்கள் முன் ஆணித்தரமாக வைக்கத் தீர்மானித்ததால்தான். வில்லியம் கேரி (1761-1834), அதோனிராம் ஜட்சன் (1788-1850) ஆகியோரின் சமகாலத்து அருட்பணியாளரான ரேனியஸின் (1790-1838) வாழ்க்கையும், அருட்பணியும் என்னை எந்தளவுக்குப் பாதித்திருக்கிறதோ அதையும்விட மேலாக உங்களைப் பாதிக்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம். கர்த்தர் அதைத் தன் சித்தப்படி நிறைவேற்றட்டும்.

தனபால் தேவராஜ்
தேவராஜ் இந்நூலை 2015ல் வெளியிட்டிருக்கிறார். நூலுக்கு தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த பேராயர் மற்றும் வேறுசிலர் வாழ்த்துரை அளித்திருக்கிறார்கள். அவர்கள் நூலை வாசித்து எதையும் புரிந்துகொண்டிருக்கிறார்களா என்பது தெரியாது. இப்படி வாழ்த்துரைகளை முக்கியமானவர்களிடம் பெற்று நூலுக்கு மகிமை சேர்க்க முயல்வது இந்திய கலாச்சாரம். இம்முறையை மேலை நாடுகளிலும் காணலாம். நூலில் எனக்குப் புதுமையாகத் தெரிந்தது, வாழ்த்துரை அளித்திருப்பவர்கள் ‘லெட்டர் பேடில்’ இருப்பதுபோல் தங்களுடைய தொழில், முகவரி, இணையதள முகவரி, தொலைபேசி எண்கள் என்று ஒன்றுவிடாமல் அத்தனை விபரங்களையும் கொடுத்திருந்ததுதான். பொதுவாக இதையெல்லாம் மேலைநாட்டு நூல்களில் காண்பதற்கு வழியில்லை. இதுவும் ஒருவகை இந்தியத்துவம் என்று நினைக்கிறேன்.
நூலின் பொருளடக்கத்தில் 102 தலைப்புகள் இருந்தன. பொதுவாக இதை அதிகாரப் பிரிவு என்று சொல்லுவோம். உடனடியாக 102 அதிகாரங்களா, என்று மலைத்துப் போய்விடாதீர்கள். அவை உண்மையில் வழமையாக நாம் நூல்களில் கவனிக்கும் நீண்ட அதிகாரப்பிரிவுகள் அல்ல. ஒவ்வொன்றும் ஒன்றரை அல்லது இரண்டு பக்கங்களைக் கொண்ட குறும் பிரிவுகள் மட்டுமே. நூலின் விஷயங்களைத் தொகுத்து அதிகாரப்பிரிவுகளைக் குறைத்திருக்கலாம். இருநூறு பக்கங்களைக் கொண்ட நூலுக்கு இத்தனை அதிகாரப்பிரிவுகள் அவசியமற்றவை. ஆனால், தலைப்புகள் வாசிப்பதற்கு எளிமையாகவே இருந்தன. முழு நூலும் 218 பக்கங்களைக் கொண்டமைந்திருந்தது.
ரேனியஸின் வாழ்க்கை வரலாற்றின் பெரும்பகுதியை, ரேனியஸின் மூத்த மகன் 1841ல் ஸ்கொட்லாந்தில் தொகுத்து வெளியிட்ட அவருடைய ஆங்கில நினைவுக்குறிப்பின் தமிழாக்கத்தில் இருந்து எடுத்து நூலாசிரியர் நூலை எழுதியிருக்கிறார் என்பது நூலை வாசிக்கும்போது தெரிகிறது. நாட்குறிப்பில் ரேனியஸ் எழுதியிருந்தார் என்று நாள், வருடத்தைப் பலபகுதிகளில் ஆசிரியர் தொடர்ந்து குறிப்பிட்டு வந்திருக்கிறார். பெரும்பாலும் அந்த நாட்குறிப்பே இந்நூலை எழுத இவருக்குப் பயன்பட்டிருக்கிறது. நூலின் மிகப் பெரிய குறைபாடு, இந்நூலை எழுதுவதற்கு என்னென்ன நூல்களையும், ஆவணங்களையும் ஆசிரியர் பயன்படுத்தியிருக்கிறார் என்ற விபரங்களை நூலில் அடிக்குறிப்பாகவோ அல்லது பின்பக்கத்திலோ அவர் தரவில்லை. தமிழகச் சூழலுக்கு இது பெரிய தவறாகவோ அல்லது அவசியமற்றதாகவோ ஆசிரியர் எண்ணியிருந்திருக்கலாம். ஒரு புதினத்தையோ, கதைகளையோ எழுதும்போது அவை தேவைப்படாது. ஓர் ஆய்வு நூலை அல்லது வரலாற்று நூலை எழுதுகிறபோது விபரங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன என்ற பட்டியலைப் பின்பக்கத்திலாவது தெளிவாகக் குறிப்பிட வேண்டியது நூலாசிரியரின் கடமை. இதில்லாமல் அந்த வரலாற்றை வாசிக்கின்ற விபரம் தெரிந்தவர்கள் நூலில் தரப்பட்டிருக்கும் விஷயங்களை நம்பத் தயங்குவார்கள். இந்த ஆய்வு நூல் பட்டியல் நூலில் இல்லாமலிருப்பது ஆசிரியரின் ஆய்வின் தரத்தைக் குறைத்துவிடுகிறது; நூலின் சிறப்பையும் பெருமளவுக்குப் பாதிக்கின்றது. இதில் வந்திருக்கும் வாழ்த்துரைகளைவிட ஆதார நூல்களின் பட்டியல் நூலுக்குத் தவிர்க்கமுடியாதபடி அவசியமானவை. பயனுள்ள இந்த நூலில் அது இல்லாமலிருப்பது ஒரு பெருங்குறை; கவலையையும் அளிக்கிறது.
வாழ்த்துரை கொடுத்திருக்கும் ஒருவர் இந்நூல் ஒவ்வொரு இறையியல் கல்லூரியிலும் பாடநூலாக வைக்கப்பட வேண்டும் என்று எழுதியிருக்கிறார். படித்தவராக இருந்தும் அவர் ஒரு பெரிய உண்மையை மறந்துவிட்டார். இறையியல் கல்லூரி மாணவனுக்கு அவசியமானது நூலுக்கு ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் நூல் மற்றும் ஆவணங்களின் விபரங்கள். அதில்லாத இந்த நூல் எந்தவகையில் இறையியல் கல்லூரி மாணவனுக்கு உதவப்போகிறதென்பது தெரியவில்லை. இன்னொரு பதிப்பு வருமானால் இந்தக் குறை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். நூலில் எனக்குப் பிடித்த சில அருமையான அவசியமான விபரங்கள் இருந்தன. அந்த விபரங்கள் உண்மையா, என்பதை அறிந்துகொள்ளவும் மேலும் ஆய்வுகளில் ஈடுபடவும் இந்நூலை எழுத ஆதாரமாக இருந்த நூல் பட்டியலைத் தந்திருக்கவேண்டும். நூலை வாசித்தபிறகு நான் தீவிரமாக ரேனியஸின் ஆங்கில நாட்குறிப்பைத் தேடி அலைந்து அதை எப்படியோ பதிவிறக்கம் செய்துகொண்டேன்! ஆதார நூல்கள் பற்றிய விபரங்களை ஆசிரியர் தந்திருந்தால் என் கஷ்டத்தைக் குறைத்திருக்கலாம்; நூலை நம்பி வாசிக்கவும் அது துணையாக இருந்திருக்கும்.
நூலை வாசித்தபிறகு நூலாசிரியரைக் கண்டுபிடித்து அவரோடு பேசவேண்டும் என்ற உந்துதல் என்னில் ஏற்பட்டது. கர்த்தரின் கிருபையால் கடந்த வருடம் அவரோடு ‘சூமில்’ உரையாட முடிந்தது. ஆய்வு நூல்கள் பற்றிய விபரத்தை நூலில் ஏன் தரவில்லை, என்று அவரிடம் நான் நேரடியாகவே கேட்டேன். இந்த நூலைச் சுருக்கி சிறுவர்களுக்காக இன்னுமொரு நூலைத் தான் எழுதியிருப்பதாகவும் அதில் தான் பயன்படுத்திய ஆதார நூல்களின் பட்டியலைத் தந்திருக்கிறேன் என்று அவர் தெரிவித்தார். அவருடைய நேர்மையான பதிலும், விளக்கங்களும், தாழ்மையும் எனக்குப் பிடித்திருந்தன. குறைபாடுகள் இருப்பினும், நூலை எழுதிவெளியிட்டதற்கான என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றியையும் அவருக்கு நேரடியாகவே தெரிவித்தேன். நிச்சயம் தேவராஜ் ஒரு நல்ல பணியைச் செய்திருக்கிறார். இன்னொன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே! ரேனியஸ் பற்றிய அவருடைய மகன் தொகுத்த ஆங்கில நினைவுக்குறிப்போ அல்லது தேவராஜின் நூலோ, ரேனியஸின் தனிப்பட்ட சொந்த வாழ்க்கை பற்றிய விபரங்களைத் தரும் நூல்களல்ல. உண்மையில் இவற்றை ரேனியஸின் வாழ்க்கைச் சரிதங்களாக நினைத்துவிடக்கூடாது. இவை முக்கியமாக ரேனியஸின் சுவிசேஷ, சீர்திருத்த அருட்பணிகளை விளக்கும் படைப்புக்களாகவே இருக்கின்றன. அந்த அருட்பணிகளே ரேனியஸைப் பற்றி நாம் சிந்திப்பதற்குக் தூண்டுகோளாக இருக்கின்றன.
ரேனியஸைப் பற்றிய என் தேடல்
இனி ஆசிரியர் விளக்க முனையும் ரேனியஸுக்கு வருவோம். தமிழில் காணப்படும் வேதமொழிபெயர்ப்புகளைப்பற்றிய ஆக்கங்களைத் திருமறைத்தீப இதழில் எழுதுவதற்கான ஆய்வுகளில் நான் ஈடுபட்டிருந்தபோதுதான் ரேனியஸினுடைய பெயர் எனக்கு அறிமுகமானது. அவருடைய திருத்திய மொழிபெயர்ப்பை பிரித்தானிய பொதுக்கமிட்டி ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதை அப்போது அறிந்துகொண்டேன். அந்த ஆய்வு என்னைத் திருநெல்வேலி மிஷனரிகளைப் பற்றி அறிந்துகொள்ள வழிகோளியது. என் ஆய்வும், வாசிப்பும் ரேனியஸின் மீதும், அவருடைய ஊழியத்தின் மீதும் என்னில் மதிப்பை உயர்த்தியது. அந்தவேளையில்தான் ஏமி கார்மைக்களோடு முரண்பட்ட தென்னிந்திய திருச்சபை பிஷப்பாக இருந்த ஸ்டீபன் நீலைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிந்தது. ஸ்டீபன் நீலைப் பற்றிச் சீர்திருத்த வரலாற்றிறையியல் அறிஞரான இயன் மரே, ஏமி கார்மைக்களைப் பற்றித் தான் எழுதிய நூலில் குறிப்பிட்டிருக்கிறார் (Amy Carmichael-Beauty for Ashes, Iain H. Murray, 2015, pgs 83-87). ஆங்கிலிக்கன் திருச்சபையைச் சேர்ந்த ஸ்டீபன் நீல் வேத அதிகாரத்தைப் பற்றிய அதி உயர்ந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கவில்லை என்பது அவருடைய கணிப்பு. நீல் சமயசமரசப் போக்கைப் பின்பற்றிய, தாராளவாதப் போக்குக்கொண்டவர். நீலைப் பற்றி நான் திருமறைத்தீப இதழொன்றில் ஏமி கார்மைக்களைப் பற்றி எழுதிய ஆக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறேன்.
“தென்னிந்திய ஆங்கிலேயத் திருச்சபையில் 1939ல் பிஷப்பாக நியமிக்கப்பட்ட ஸ்டீபன் நீல் தான் பிஷப்பாக வருவதற்குமுன் 25ம் வயதில் ஏமியின் கீழ் சிறுவர்களுக்குக் கல்வி பயிற்றும் பணியில் வந்திணைந்தார். அவருடைய பெற்றோர் மருத்துவப்பணி செய்வதற்காக டோனவூருக்கு வந்திருந்தனர். ஸ்டீபன் நீல் கேம்பிரிஜ் டிரினிட்டி கல்லூரியில் கற்றிருந்தார். அக்காலத்தில் இங்கிலாந்தில் ஆங்கிலேயத் திருச்சபையின் மிஷனரிக்கிளையாக இருந்த சி.எம்.எஸ்., வேதம் பழைய புதிய ஏற்பாடுகளைக் கொண்ட கர்த்தரின் ஆவியினால் ஊதி அருளப்பட்ட தவறுகளற்ற வார்த்தை என்ற நம்பிக்கையை இழக்க ஆரம்பித்து, மிஷனரி ஊழியத்துக்குப் போகிறவர்களுக்கு அத்தகைய நம்பிக்கை இருக்கத் தேவையில்லை என்று தீர்மானித்தது. இதனால் சி.எம்.எஸ். இரண்டாகப் பிரியவும் நேரிட்டது. சி.எம்.எஸ். மூலம் இந்தியா வந்திருந்த ஸ்டீபன் நீல் இதை நம்ப ஆரம்பித்து ஏமியின் கொள்கைகளில் குறைகாண முயன்றார். வேதம் மட்டுமே கர்த்தருடைய வார்த்தை என்று ஸ்டிபன் நீல் ஏற்றுக்கொள்ள மறுத்தார். ஏமிக்கு நீலோடு பலமுறை இதுபற்றிய வாக்குவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சில வருடங்களுக்கு இந்தப் பிரச்சனை ஏமிக்கு பெருந்தலைவலியையும், துன்பத்தையும் அளித்தது. ஏமி இதைச் சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. தன் பணிகளுக்கு ஸ்டீபன் நீலின் துணை மிக அவசியமாக இருந்தபோதும், வேதத்தை வேதமாக ஏற்றுக்கொள்ள ஸ்டீபன் நீல் தவறியதால் டோனவூர் ஐக்கியத்தில் இருந்து அவரை ஏமி தைரியத்தோடு நீக்கினார். அதற்குப் பிறகு டோனவூர் ஐக்கியத்தில் பேசுவதற்கு நீலுக்கு அவர் இடமளிக்கவில்லை.” (ஏமி கார்மைக்கள்: சாம்பலுக்கு மதிப்பூட்டிய சாதாரண மங்கை, இதழ் 4, 2015)
ஆங்கிலிக்கன் திருச்சபையைச் சேர்ந்த பிஷப் ஸ்டீபன் நீலின் தாராளவாதப் போக்கிலேயே (Liberalism) இன்று தென்னிந்திய திருச்சபைப் பிரிவு போய்க்கொண்டிருக்கிறது. ஆங்கிலேயரான ஸ்டீபன் நீல் ‘இந்தியாவின் கிறிஸ்தவ வரலாறு’ என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதினார். அந்த நூலில் ஸ்டீபன் நீல் ரேனியஸைப் பற்றிக் குறைகூறியிருக்கிறார். ரேனியஸ் தன் ஊழியக்கால முடிவில் கல்கத்தாவில் இருந்த இங்கிலாந்து மிஷன் போர்டோடு (CMS) முரண்படும் நிலை உருவானது. அந்த முரண்பாட்டுக்கு ரேனியஸே காரணம் என்றும், தவறு அவர் மீதுதான் என்கிற தோற்றத்தை ஸ்டீபன் நீலின் நூல் தருகிறது. அதற்குப் பின் திருநெல்வேலி மிஷனரிகளைப்பற்றியும், குறிப்பாக ரேனியஸ் பற்றியும் தெரிந்துகொள்ள நான் வாசித்திருந்த அத்தனை ஆங்கில நூல்களும் ஸ்டீபன் நீலின் நூலை ஆதாரமாக வைத்து ரேனியஸைப் பற்றி எழுதும்போது அவரில் குறைகண்டே எழுதியிருந்தன. அத்தோடு ரேனியஸின் ஊழியத்தைப்பற்றிய பெரிதளவு விளக்கங்களையும் எந்த நூலும் தரவில்லை. எனக்குள் இருந்த ரேனியஸ் பற்றிய இந்த அரைகுறை ஞானத்திற்கு முடிவு ஏற்பட்டு அவரைப்பற்றிய தெளிவான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் அப்போது எனக்கு இருக்கவில்லை. ஏன் இந்தளவுக்கு ரேனியஸின் ஊழியத்தை இருட்டடிப்பு செய்கின்ற முயற்சியில் பலரும் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள் என்ற பெருங்கேள்வி என் இருதயத்தைத் துளைத்தெடுத்தது. அதற்குப் பதிலைக் கண்டறிய வேண்டும் என்ற பேராவலும் என்னைக் குடைந்தெடுத்தது.
நியூலன்ட்ஸ் புத்தக நிலையத்தில் நான் வாங்கிய ரேனியஸ் வாழ்க்கை வரலாற்றை நான் உடனடியாக வாசிக்காமல் என் நூலறையில் வாசிக்கவேண்டிய நூல்கள் பிரிவில் வைத்திருந்தேன். கடந்த வருடம் (2021) டிசம்பரில் நான் வருடாந்தர விடுமுறை எடுத்தபோது நூலை வாசிக்க ஆரம்பித்தேன். அதை எப்படியும் வாசித்து முடித்துவிடவேண்டும் என்று இரு வாரங்களில் முடித்துவிட்டேன். அதற்காக ஒவ்வொரு நாளும் சில மணித்துளிகளை ஒதுக்கியிருந்தேன். வாசிப்பில் பலவகை இருக்கிறதல்லவா? இந்த வாசிப்பு நிறுத்தி வாசித்து விஷயங்களை உள்ளெடுத்து, மீண்டும் சில பகுதிகளை மறுபடியும் வாசிக்கிறதாக அமைந்திருந்தது. அத்தோடு என் கணினியில் திருநெல்வேலி மாவட்டத்தின் படத்தையும் திறந்துவைத்து ரேனியஸ் பணிபுரிந்திருந்த பிரதேசங்கள் ஒவ்வொன்றையும் கவனித்து மனதிலிருத்தி வாசிப்பில் ஈடுட்டேன். உண்மையில் தமிழில் எழுதப்பட்ட ஒரு கிறிஸ்தவ நூலை இந்தளவுக்குக் கருத்தோடு நான் அதுவரை வாசித்ததில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
திருநெல்வேலியைப் பற்றிச் சொல்லவேண்டுமானால் அதன் பெயரின் அர்த்தம், ‘புனித நெல் வேலி’ என்பதே. இன்று அந்த மாவட்டம் 3876 சதுர கிலோமீட்டர்களைக் கொண்டிருக்கிறது. 19ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் திருநெல்வேலி மாவட்டம் இன்றிருப்பதைவிட மிகப் பெரிதாக இருந்தது. அது கிழக்குப் பகுதியில் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தையும் தமிழகக் கரையோரப்பகுதிகளையும் உள்ளடக்கி, மேற்கில் கேரளத்தின் எல்லைவரையும் விரிந்து, தெற்கில் கன்னியாகுமரி வரையும் பரந்திருந்தது. இத்தனைப் பெரிய பரந்து விரிந்த பிரதேசத்தில் அன்று ரேனியஸ் தன் பணிகள் அனைத்தையும் செய்திருக்கிறார் என்பதை மனதிலிருத்திக் கொண்டால் அவருடைய மாவட்டம் தழுவிய உழைப்பின் பெருமையை உணரலாம்.
ரேனியஸைப் பற்றியும், அவருடைய ஊழியத்தின் விசேஷத்தன்மைகளையும் ரேனியஸின் ஆங்கில நினைவுக்குறிப்பு நூலிலும், தேவராஜின் நூலிலும் வாசித்து அறிந்துகொண்டபின் நான் அளவுமீறி மகரந்தப்பூக்களில் தேன்குடித்து அந்த மயக்கத்தில் காற்றில் போகுமிடமறியாமல் பறக்கும் தேனீயைப்போல இரண்டுவாரங்கள் ஆகாயத்தில் மிதந்துகொண்டிருந்தேன். கண்ணில்படுகிறவர்கள், பேசுகிறவர்கள் எல்லோரிடமும் ரேனியஸைப் பற்றித்தான் பேச்சு. பிரசங்கத்திலும், ஜெபக்கூட்டத்திலும்கூட நான் அவரைப்பற்றிக் குறிப்பிடத்தவறவில்லை. சூட்டோடு சூடாக ரேனியனின் ஆங்கில நினைவுக்குறிப்பை (626 பக்கங்கள்) உடனடியாகப் பிரதியெடுத்தேன். என் நண்பரொருவர் அதைக் கேட்க அவருக்கும் ஒரு பிரதியெடுத்துக் கொடுத்தேன். அதற்குமுன் என் நண்பருக்கு ரேனியஸைப்பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. வாசித்து முடித்தபின் கருத்துத்தெரிவிக்க மறக்காதீர்கள் என்று அவரிடம் கேட்டிருந்தேன். அவர் தீவிர வாசகர். அதனால் இரண்டு மூன்று வாரங்களில் நேரங்கிடைக்கும்போதெல்லாம் நாட்குறிப்பை வாசித்து முடித்துவிட்டு, ‘இந்த அளவுக்கு அருட்பணிபுரிந்திருக்கும் ஒருவரை என் வாசக அனுபவத்தில் இதுவரை நான் வாசித்ததில்லை. சத்தியப்பிசகில்லாமல் கணக்கற்ற துன்பங்களை அனுபவித்து, தன்னையிழந்து கர்த்தரின் அருளால் அசாத்தியப் பணிபுரிந்திருக்கும் பல்திறன்கொண்ட சீர்திருத்த அருட்பணி ஊழியர்’ என்று அவரைப் பற்றி அவர் கருத்துச்சொன்னதோடு, ஆங்கில நினைவுக்குறிப்பை வாசிக்கும் அனுபவத்தைத் தனக்குக்கொடுத்ததற்காக எனக்கு அதிகம் நன்றி தெரிவித்தார். அவருடைய கருத்துக்கள் நான் ஏற்கனவே ரேனியஸைப்பற்றி அறிந்துகொண்டிருந்த உண்மைகளை மேலும் உறுதிப்படுத்தின. ரேனியஸ் பற்றிய ஆங்கில நினைவுக்குறிப்பைத் தமிழில் மொழிபெயர்த்து மூன்று பாகங்களாகத் தொகுத்து ஜெபக்குமார் என்பவர் 2016ல் வெளியிட்டிருக்கிறார். இந்த ஆக்கத்தை எழுதிமுடித்த பின்னரே அது என் கையில் கிடைத்ததால் அதைப்பற்றிய திறனாய்வை வருங்காலத்தில் தரத் தீர்மானித்திருக்கிறேன்.
ரேனியஸின் இறையியல் பின்னணி
தேவராஜ் அவர்களின் நூலைப் பற்றிய நேர்மறையான விஷயங்களை விளக்க ஆரம்பிப்பதற்கு முன் கடைசியாக ஒரு முக்கிய உண்மையை விளக்குவது அவசியமாகிறது. ரேனியஸ் ஜெர்மானிய லூத்தரன் சீர்திருத்த திருச்சபைப் பிரிவைச் சேர்ந்தவர். சீர்திருத்தக் கோட்பாடுகளை முறையாகக் கற்றறிந்திருந்த மறுபிறப்படைந்த கிறிஸ்தவர். மாபெரும் சீர்திருத்தவாதிகளில் ஒருவரான மார்டின் லூத்தருடைய வழியில் வந்தவர். நிச்சயமாக இறையியல் கோட்பாடுகளைப் பொறுத்தவரையில் அன்று இந்தியாவில் இருந்த சகல இங்கிலாந்து (ஆங்கிலிக்கன்) திருச்சபையைச் சேர்ந்த மிஷனரிகள் எல்லோரையும்விட ரேனியஸ் தனித்துவமுள்ளவராக இருந்திருக்கிறார். உண்மையில் அவருடைய சீர்திருத்த இறையியல் நம்பிக்கைகளே ஆங்கிலிக்கன் CMS அமைப்பினரோடு ஆரம்பத்தில் இருந்தே அவருக்கேற்பட்ட கருத்துவேறுபாடுகளுக்கு முக்கிய காரணம். அத்தகையவரின் வாழ்க்கை சரிதத்தை எழுதுகிறபோது அவருடைய இறையியல் நம்பிக்கைகளையும், அவருடைய திருச்சபைப் பின்னணியையும், ஓரளவுக்காவது தேவராஜ் தன் நூலில் விளக்காமல் விட்டிருப்பது என்னைப் பொறுத்தளவில் பெருங்குறைபாடு. நூலாசிரியருக்கு அவை பற்றித் தெரியாமல் இருந்திருக்கலாம். ஜோன் கல்வின் அல்லது மார்டின் லூத்தருடைய பணிகளைப் பற்றி எழுதும்போது அவர்கள் எத்தகைய விசுவாசத்தைக் கொண்டிருந்தார்கள் என்று விளக்காமல் விடமுடியுமா? அவர்களுடைய இறையியல் விசுவாசமல்லவா அவர்களை அடிப்படையில் ஏனையோரிடமிருந்து பிரித்துக் காட்டியிருக்கிறது?
சார்ள்ஸ் ரேனியஸ் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை சீர்திருத்த, பியூரிட்டன் இறையியல் கோட்பாடுகளைப் பின்பற்றி அவற்றின் அடிப்படையில் பணியாற்றியிருந்த சீர்திருத்த பியூரிட்டன் மிஷனரி. ‘சீர்திருத்தம்’ என்ற பதத்தை நான் வெறும் பாரம்பரியத்தின் அடிப்படையிலோ அல்லது சபைப்பிரிவுகளின் அடிப்படையிலோ பயன்படுத்தவில்லை; ரேனியஸின் தனித்துவமான இறையியல் கோட்பாட்டை விளக்கும் பதமாகத்தான் பயன்படுத்துகிறேன். அதுபோலவே ‘பியூரிட்டன்’ என்ற பதத்தையும் 17ம் நூற்றாண்டுப் பியூரிட்டன் பெரியவர்களின் இறையியல் நம்பிக்கைகளைக் குறிப்பதற்காக இங்கு பயன்படுத்தியிருக்கிறேன். ரேனியஸின் இறையியல் நம்பிக்கைகள் சீர்திருத்த, பியூரிட்டன் பெரியவர்களைத் தழுவிக் காணப்பட்டன. அவருடைய எழுத்துக்களும், பணிகளுமே அதற்குச் சான்றாக இருக்கின்றன. ரேனியஸ், அவருக்கு முன்பு இந்தியா வந்திருந்த சீகன் பால்கு, வில்லியம் கேரி ஆகிய சீர்திருத்த மிஷனரிகளின் பின்னணியில் வந்த லூத்தரன் மிஷனரி. தமிழில் அவரெழுதியிருந்த ‘வேதசாஸ்திரச் சுருக்கம்’ அவருடைய இறையியல் நம்பிக்கைகளுக்கும், விசுவாசத்திற்கும் அத்தாட்சி. அதை வாசித்து நான் மலைத்துப் போய்விட்டேன் என்றுதான் சொல்லவேண்டும். அத்தகைய வேதப் பின்னணியைக் கொண்டிருக்காத எந்த மனிதன் மூலமும் மெய்யான ஆவிக்குரிய எழுப்புதல் ஏற்பட்டிருக்க முடியாது. ரேனியஸின் இறையியல் பின்னணியும், ஆழமான விசுவாசமும், பக்திவைராக்கியமுமே கர்த்தரின் கிருபையால் அவருடைய தளராத ஊழியத்தை நெல்லை கண்ட ஆவியின் பேரெழுப்புதாலாக்கியிருந்தது.
தனபால் தேவராஜின் இந்த நூலைப்பற்றிய குறைபாடுகளை ஆரம்பத்திலேயே விளக்கிவிட்டேன். இனி நூலின் சிறப்பான அம்சங்களையும், ரேனியஸைப் பற்றியும், நானறிந்துகொண்ட விஷயங்களையும் விளக்க விரும்புகிறேன். சில குறைபாடுகள் இருந்தபோதும், நூலை எழுதி வெளியிட்ட தேவராஜுக்கு நான் முதலில் நன்றி சொல்லவேண்டும். ரேனியஸைப்பற்றி இந்தியத்துவ ‘அதீத அமானுஷ்ய’ போக்கில் இந்த நூலை எழுதாமல், அதாவது ரேனியஸின் ஊழியத்தின் சிறப்புக்களை மட்டும் சுயநலத்தோடு கவித்துவ வார்த்தைகளில் விளக்கி நிறுத்திவிடாமல், ஊழியத்தில் அவர் அனுபவித்திருந்த பெரும் இடர்பாடுகளையும், துன்பங்களையும், கடுமையான எதிர்ப்புகளையும் சரிசமமாக நேர்மையோடு விளக்கியிருந்தது பாராட்ட வேண்டிய அம்சம். அநேகர் நல்ல விஷயங்களை மட்டும் விளக்கிவிட்டு, இடறல்களை ஒதுக்கிவைத்து ஊழியம் பரலோகத்தைப்போல இருந்தது என்பதுபோல் எழுதுவார்கள். அப்படி இந்த நூல் இருந்துவிடுமோ என்ற பயம் இதை வாசிக்க ஆரம்பித்தபோது இருந்தது. தொடர்ந்து வாசிக்க, வாசிக்க நூலில் நான் யதார்த்தத்தையும், மெய் வரலாற்றுப் பதிவுகளையும் கவனிக்க ஆரம்பித்தேன்.
நூலின் தமிழ் நடை
பொதுவாகவே தமிழில் வந்துகொண்டிருக்கின்ற கிறிஸ்தவ நூல்களில் தமிழ் நடை வாசிப்பைத் தூண்டக் கூடியதாக இல்லை என்று அநேக வாசகர்கள் என்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதில் உண்மையிருந்தபோதிலும், வாசிப்பில்லாத சமூகமாக நம்மினம் இருப்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தேவராஜின் இந்நூலின் தமிழ்நடை நெருடலில்லாமல் இருக்கிறது. தொடர்ந்து வாசிப்பதற்கு எழுத்து நடை தடையாக இருக்கவில்லை. அவர் திருநெல்வேலி வட்டார வழக்குகளை எழுத்தில் பயன்படுத்தியிருப்பதில் எந்தத் தவறும் இல்லை. எந்த எழுத்தாளனையும் அவனுடைய சுற்றுச்சூழல் பாதிக்கத்தான் செய்யும். அத்தோடு 1800 களில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்களை எழுதுகிற ஒருவர் அந்தக் காலத்து தமிழுக்கு முற்றிலும் அந்நியமான தமிழில் அவற்றை எழுதுவதும் தவறு. ஆங்காங்கே அக்காலத்து வழக்குகள் வந்துபோவதும் வாசகனை அந்தக் காலத்துக்கு அழைத்துப்போவதாக அமையும்; எழுத்துக்கும் சுவையூட்டும்.
பொதுவாக ‘விவிலியத் தமிழை’ நூலாசிரியர் தன் நடையில் பயன்படுத்தாமல் இருந்திருப்பது மிகவும் பாராட்டவேண்டியது. வசனங்களையும் அநாவசியத்துக்கு நீட்டிவிடாமல் சுருக்கமான வசனங்களை ஆசிரியர் பயன்படுத்தியிருக்கிறார். நூலில் அவர் பயன்படுத்தியிருக்கும் வரலாற்றோடு தொடர்புடைய சில வார்த்தைகளை வாசகர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கின்ற ஒரு கஷ்டம் இருக்கிறது. இவற்றிற்கு நூலின் இறுதியில் ஆசிரியர் பொருள் விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, ‘பிரிப்பராண்டி’ (Preparandi) எனும் பதம். ரேனியஸ் பயன்படுத்திய பள்ளி இப்படி அழைக்கப்பட்டது. இது ஜெர்மானியப் பதமாக இருக்கலாம். இதுபோன்ற பதங்களுக்கு நூலின் பிற்பகுதியில் பொருள் விளக்கம் தந்திருந்தால் உதவியாக இருந்திருக்கும். பொதுவாக ஆசிரியரின் தமிழ் நடை, வாசிப்புப் பழக்கமில்லாதவர்களும் நூலை வாசிக்கத் தடையாக இருக்காது என்பதே என் கருத்து.
நூலில் ஆங்காங்கு இலக்கணப் பிழைகளும், எழுத்துப் பிழைகளும், அச்சுப் பிழைகளும் உள்ளன. முக்கியமாக எந்தெந்த இடங்களில் வல்லின, மெல்லின, இடையின எழுத்துக்கள் பயன்படுத்தப்பட வேண்டுமென்பதில் தற்காலத்தில் பெரும்பாலானோர் கவனம் செலுத்துவதில்லை. இவற்றைத் திருத்துவது நல்லது. தமிழில் வல்லுனராக, பேரறிஞராக இருந்து தமிழ் இலக்கண நூல் படைத்து, வேதத்தைத் தரமான தமிழில் மொழிபெயர்த்திருக்கும் ரேனியஸின் தமிழார்வம் நம்மை நல்ல தமிழெழுத ஊக்குவிக்கவேண்டும். இது கிறிஸ்தவ வரலாற்று வாழ்க்கைச் சரிதமாதலால் எழுத்து நடையில் தேவையற்ற கவித்துவப் பாணி இல்லாமல் எழுதியிருப்பதும் நல்ல விஷயமே.
ரேனியஸின் இந்திய வருகை
ஜெர்மானியரான சார்ள்ஸ் தியோபீலஸ் இவால்ட் ரேனியஸ் (Charles Theophilus Ewald Rhenius) லூத்தரன் சீர்திருத்த சபைப்பிரிவைச் சேர்ந்தவர். அவர் 1790ல் இன்றைய ஜெர்மானிய தேசத்தில் பிறந்தார். அவருக்கு ஆறு வயதாக இருக்கும்போது அரச படையில் பணியாற்றிய அவருடைய தந்தை ஓதோ ரேனியஸ் (Otho Rhenius) மரணமானார். ரேனியஸுக்கு இரண்டு சகோதரர்களும், ஒரு சகோதரியும் இருந்தார்கள். அவர் 1807ல் கிறிஸ்துவை அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு 1810ம் ஆண்டு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக விசுவாசித்து தேவராஜ்யத்தில் இடம்பெற்றார் ரேனியஸ். 1810லேயே அவர் ஊழியப்பணி செய்யும் விருப்பத்தில் பெர்லினில் இருந்த செமினரியொன்றில் மதிப்புக்குரிய ஜோன் ஜெனிக்கே (John Janicke) என்பவரின் கீழ் இறையியல் பயில விண்ணப்பித்தார். ஆகஸ்டு மாதம் 1812ம் ஆண்டு பெர்லினில் அவர் அன்றைய லூத்தரன் திருச்சபையில் மிஷனரியாகப் பணிபுரிவதற்காகப் போதகராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டார். அதற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஜெர்மானிய அரச அங்கீகாரத்துடன் அவர் டென்மார்க் வழியாக இங்கிலாந்து புறப்பட்டார். அவருடைய நோக்கம் இந்தியாவுக்கு ஊழியப்பணிபுரியப் போவதே.
ரேனியஸில் மொரேவியர்களின் சுவிசேஷத் தாக்கம் அதிகம் இருந்தது. அதுவும் அவர் இந்தியாவுக்கு மிஷனரியாக வரத்தீர்மானித்ததற்கான காரணம். பிரிட்டனின் ஆளுகைக்குள் காலனி நாடாக இந்தியா இருந்த அந்தக் காலத்தில் கிழக்கிந்திய கம்பேனியின் அனுமதியில்லாமல் எவரும் இந்தியா வர வழியிருக்கவில்லை. அதுவும் மிஷனரிகள் வருவதற்கு அந்தக் கம்பேனி விரும்பவில்லை. அத்தோடு பிரிட்டனின் மிஷன் அமைப்புகள் மூலமே எவரும் இந்தியா வரக்கூடிய வாய்ப்பும் இருந்தது. இந்தியா போகத் தீர்மானித்த ரேனியஸ் அதற்கான இறையியல் பயிற்சியைப் பெர்லினில் பெற்று பிரிட்டனுக்கு வந்து திருச்சபை மிஷன் சங்கத்தின் (CMS) மூலம் இந்தியா செல்ல முயன்றார். இந்த மிஷன் சங்கம் பிரிட்டனின் இங்கிலாந்து ஆங்கிலிக்கன் பிரிவைச் சேர்ந்தது. ஜோன் வெஸ்லி, ஜோர்ஜ் விட்பீல்ட் போன்ற தேவஊழியர்களின் சுவிசேஷ ஊழியத்தின் தாக்கத்தால் ஆங்கிலிக்கன் சபையில் உருவான சுவிசேஷப் பிரிவினரின் மூலம் அச்சபைப்பிரிவில் உருவான மிஷன் அமைப்பே இது. இதே பிரிவைச் சேர்ந்த இன்னும் இரு மிஷன் அமைப்புகளே LMSம், SPCKயும். ரேனியஸுக்கு இந்தியா போக இந்த அமைப்புகளைவிட்டால் வேறு வழியிருக்கவில்லை. அவருடைய திருச்சபை சம்பந்தமான இறையியல் கோட்பாடுகள் இந்த மிஷன் அமைப்புகளின் கோட்பாடுகளைவிட வேறுபட்டதாயிருந்தது. வேறு வழியில்லாததால் CMS மூலம் இந்தியா போக அவர் விண்ணப்பம் செய்தார். அது தன் வாழ்நாளில் பின்னால் தனக்குப் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தப் போகிறது என்பதை அவர் அப்போது அறிந்திருந்திருக்கவில்லை.
பிரிட்டனுக்கு ஷானார் என்பவரோடு இந்தியா போவதற்காக வந்த ரேனியஸ் கிழக்கிந்திய கம்பேனியின் அனுமதி கிடைக்க பதினைந்து மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1814ம் வருடம் பிப்ரவரி மாதம் 14ம் தேதி கப்பலேறி அதே வருடம் ஜூலை மாதம் 4ம் தேதி, ஐந்து மாதப் பிரயாணத்திற்குப் பிறகு ரேனியஸும், ஷானாரும் சென்னையில் வந்திறங்கினர். இப்படியே ரேனியஸின் வாழ்க்கை வரலாற்றை தேவராஜ் ஆரம்பிக்கிறார். இதை எழுதுகிறபோது என்னை நான் மிகவும் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் இது ஒரு நூலுக்கான திறனாய்வு என்பதை மறந்து ரேனியஸைப் பற்றி ஒரு நூலையே எழுதத்தூண்டும் அளவுக்கு என்னை ரேனியஸின் விசுவாசமுள்ள ஊழியம் பாதித்திருக்கிறது.
இளம் வாலிபராக இருபத்தைந்து வயதில் சென்னை வந்திறங்கிய ரேனியஸ் ஒருசில வருடங்களுக்குள் கர்த்தரின் கிருபையால் செய்திருந்த ஊழியம் ஆச்சரியமானது. சென்னை SPCK மிஷன் அமைப்பின் வழிநடத்தலின்படி அவர் ஷானாருடன் தரங்கம்பாடிக்குப் போய் ஆர்வத்துடன் ஐந்தே மாதங்களில் தமிழில் திறமையாகப் பேசவும், எழுதவும், பிரசங்கம் செய்யவும் கற்றுக்கொண்டார். ஒருவரோடு ஆவியானவர் இராதிருந்தால் இந்தளவுக்கு உலகமொழிகளிலேயே கடுமையானதொரு மொழியில் ரேனியஸ் பாண்டித்தியம் அடைந்திருக்க வழியில்லை. ரேனியஸுக்குள்ளிருந்த ஆவிக்குரிய வைராக்கியம் அவரைத் தமிழில் குறுகிய காலத்தில் பாண்டித்தியம் அடையவைத்தது. உடனேயே அவர் தரங்கம்பாடி மிஷன் பள்ளிக்கூடத்தில் தமிழில் கற்றுக்கொடுக்கவும் ஆரம்பித்தார். அதற்குப் பிறகு மறுபடியும் சென்னை வந்த ரேனியஸ் 1815ல் மாநில கவர்னரிடம் அனுமதி பெற்று CMS மிஷன் ஊழியத்தை அங்கு ஆரம்பித்தார். இன்றைய ஜோர்ஜ் டவுன் என்ற பகுதியில் அவர் ஆரம்பித்த ஊழியப்பணி சில வருடங்களுக்குள் அப்பகுதியிலும், அதற்குப் புறத்தில் காஞ்சிபுரம்வரை சபைகளையும், பள்ளிகளையும், வேதாகம கிளைச்சங்கமொன்றையும் ஆரம்பிக்கும்வரை நீண்டது. இதை எழுதும்போதே உடல் புல்லரிக்கிறது. பரிசுத்த ஆவியானவரைத் தன்னோடு கொண்டிராத ஒரு மனிதனால் இந்தளவுக்கு அன்றைய சென்னையில் ஆவிக்குரிய பணிபுரிந்திருக்க முடியாது. அவருக்குத் துணையாக ஷானாரும், ஸ்மிட் சகோதரர்களும், வேறிரு ஜெர்மானிய மிஷனரிகளும் விசுவாசமுள்ள சாந்தப்பன், தாவீது சுந்தரானந்த நாடார் போன்ற உள்ளூர் ஊழியக்காரர்களும் இருந்தனர்.
வரலாற்றைத் திரும்பிப் பார்க்கிறபோது ரேனியஸ் திருநெல்வேலிக்குப் போகவேண்டிய நிலை ஏற்பட்டது கர்த்தருடைய பராமரிப்பின் செயலாக இருந்தபோதும், அது நிகழ்ந்தவிதம் ரேனியஸுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது. ஜெர்மானிய லூத்தரன் சீர்திருத்த மிஷனரியான ரேனியஸுக்கும், இங்கிலாந்தின் ஆங்கிலிக்கன் CMS குழுவினருக்கும் அவர் சென்னைக்கு வந்த காலத்தில் இருந்தே கருத்துவேறுபாடுகள் ஆரம்பித்துவிட்டன. சென்னை ஊழியப்பணிகள் ஐந்தாறு ஆண்டுகளில் வளர்ந்து செழிக்க ஆரம்பித்திருந்தபோது திடீரென்று CMS குழுவினர் அவரைத் திருநெல்வேலிக்கு அனுப்பத் தீர்மானித்தனர். இதை எந்த விசுவாசமுள்ள போதகனால்தான் ஏற்றுக்கொள்ள முடியும்? தான் பயிரிட்டுத் தண்ணீர் ஊற்றி வளர்த்திருந்த ஊழியத்தை, அந்த மக்களைவிட்டுத் திடீரென விலகிப்போக ஒரு பச்சோந்தி ஊழியன் மட்டுமே ஒத்துக்கொள்வான்; உண்மை ஊழியக்காரர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். தனக்கும் CMS க்கும் இடையிலுள்ள கருத்துவேறுபாடுகள் காரணமாகவே குழுவினர் தன்னை இடமாற்றம் செய்கிறார்கள் என்று ரேனியஸ் கருதினார். அது அவருக்குப் பெரிய மனவருத்தத்தை அளித்தபோதும், வேதவசனத்தை வாசித்து அவர் ஆறுதல் அடைந்தார். இந்தக் கருத்துவேறுபாடுகள் பூதாகரமாக வளர்ந்து தன் ஊழியக்காலத்தின் பிற்பகுதியில் தனக்குப் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தப்போகிறதென்பதை ரேனியஸ் அன்று அறிந்திருக்க வழியில்லை. ஒத்த கருத்துள்ளவர்களோடு மட்டுமே இணைந்து எந்த ஊழியத்தையும் முறையாகச் செய்யமுடியும். திருச்சபைக்கோட்பாடுகளில் வேறுபட்ட கருத்துடைய சீர்திருத்த லூத்தரனும், ஆங்கிலிக்கன் பிரிவும் எப்படி இணைந்து பணியாற்ற முடியும்? தனக்குப் பிடிக்காதது நிகழ்ந்தபோதும் பெருந்தன்மையோடு ரேனியஸ் CMS குழுவின் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்து திருநெல்வேலிக்குப் புறப்பட்டார். கர்த்தரின் பராமரிப்பின்படி அதற்குப் பிறகு நெல்லையில் தன் வாழ்வில் நிகழவிருந்த பேரதிசயங்களை அன்று ரேனியஸ் அறிந்திருக்கவில்லை.
நெல்லை பயணமும், அருட்பணி ஊழியமும்
1820 ஜூன் 2ம் தேதி சென்னையை விட்டுப் பிரயாணம் செய்து, வழியில் ஆங்காங்கு தங்கியிருந்துவிட்டு ஜூலை மாதம் 7ம் தேதி ரேனியஸ் பாளையங்கோட்டை வந்து சேர்ந்தார். தன் சக ஊழியரான ஸ்மிட்டையும் விட்டுப் பிரிந்து வந்தது ரேனியஸுக்குத் தாங்க முடியாத வருத்தமாக இருந்தது. இவ்வாறாக ஆரம்பித்த ரேனியஸின் திருநெல்வேலி வருகை வரப்போகும் பதினெட்டே வருடங்களில் எவ்வாறெல்லாம் வளர்ந்து, பெருகி அப்பகுதியே உன்னத ஆவிக்குரிய எழுப்புதலைச் சந்திக்கும்படிச் செய்து, ‘திருநெல்வேலியின் அப்போஸ்தலன்’ என்ற பெயரையும் அவர் அடையும்படிக் காலம் மாறப்போகிறதென்பதை ரேனியஸ் நிச்சயம் அன்று உணர்ந்திருக்கவில்லை. குறுகிய காலப்பகுதியில் தங்கள் வாழ்க்கையில் இத்தகைய மகத்தானதொரு ஊழியத்தில் பங்குகொள்ளும் அனுபவத்தையும், ஆசீர்வாதத்தையும் அடைந்திருந்த மிஷனரிகள் வரலாற்றில் மிகக் குறைவு. திருநெல்வேலியில் பணிபுரிந்திருந்த வேறெந்த மிஷனரியும் அத்தகைய பன்முகப்பட்ட ஆசீர்வாதமான திருச்சபை ஊழியப்பணிகளைச் செய்திருக்கவில்லை. முதல் நூற்றாண்டு அப்போஸ்தலர்களின் காலத்தை நினைவுபடுத்தும் வகையில் ரேனியஸின் ஊழியப்பணிகள் அமைந்திருந்தன. அவரோடிருந்த கருத்துவேறுபாட்டால் CMS ஸும், SPCK யும் அவருக்குக் கொடுக்கவேண்டிய இடத்தைக் கொடுக்க மறுத்து வரலாற்றில் அவரது பணிகளைக் குறைத்துக் காட்டியிருக்கின்றன. நான் வாசித்த ஓர் ஆக்கம் அவர் மட்டுமே திருநெல்வேலியில் ஊழியப்பணிபுரியவில்லை என்றவிதத்தில் கருத்துத்தெரிவித்திருந்தது. காழ்ப்புணர்ச்சியினால் ரேனியஸின் பணிகளைக் குறைத்து மதிப்பிட்டு எழுதியிருப்பவர்களே அதிகம். அதையே பிஷப் ஸ்டீபன் நீலும் செய்தார். ஆங்கிலத்தில் நான் வாசித்த பல நூல்களிலும் அதை நான் கவனித்திருக்கிறேன். இன்றைய தென்னிந்திய திருச்சபைப் பிரிவும்கூட அவருடைய ஊழியத்தின் தாக்கத்தை அறியாமலும், உணராமலும் இருந்து வருகிறது.
திருநெல்வேலிப் பகுதியில் ரேனியஸ் கிறிஸ்தவ ஊழியத்தை ஆரம்பிக்கவில்லை என்பது முற்றிலும் உண்மைதான். திருநெல்வேலியில் முதல் கிறிஸ்தவரானது குளோரிந்தா என்ற பெயரைப் பெற்ற லட்சுமியே. இது நிகழ்ந்தது 1778ல். அதற்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு பாளையங்கோட்டையில் முதல் சபை நிறுவப்பட்டது. தரங்கம்பாடி மிஷனரிகளோடு தொடர்புடையவராக இருந்த தஞ்சை சத்தியநாதன் என்பவர் நெல்லையின் முதல் கிறிஸ்தவ குருவாக 1786-1805 வரை பணிபுரிந்திருந்தார். மேலும் சில சபைகளும் இக்காலத்தில் உருவாயின. மிஷனரி ஸ்வார்ட்ஸின் மரணத்திற்குப் பின்னர் இச்சபைகள் 1798ல் இருந்து ஜெனிக்கே என்பவரின் மேற்பார்வையில் இருந்தன. 1800ம் ஆண்டில் ஜெனிக்கேயின் மரணத்திற்குப் பின்னர் கெரிக்கே என்பவர் நெல்லை மிஷனரியானார். ஆனால் ஜெனிக்கேயும், கெரிக்கேயும் திருநெல்வேலிப்பகுதியில் நிலையாகத் தங்கியிருந்து உழைக்கவில்லை.
ரேனியஸ் திருநெல்வேலிக்கு வந்திறங்கியபோது பாளையங்கோட்டையில் ஏற்கனவே SPCK சபையொன்று இருந்ததையும் அதை விசுவநாதன் என்பவர் மேற்பார்வை செய்து வந்ததையும் அறிந்துகொண்டார். அச்சபைக்குரிய பள்ளிக்கூடமொன்றும் இருந்து வந்தது. SPCK யும் CMS ஐப்போல ஆங்கிலிக்கன் திருச்சபைப் பிரிவைச் சேர்ந்த மிஷன் அமைப்பு. ஒரே பிரிவினரின் ஊழியம் நடக்கும் இடத்தில் தான் சபை ஏற்படுத்துவது பிரச்சனையை உண்டாக்கும் என்பதால் ரேனியஸ் திருநெல்வேலி நகரில் வசித்து ஊழியம் செய்யத் தீர்மானித்தார். அவருக்கு மகிழ்ச்சி தரும்விதத்தில் அவரோடு சென்னையில் இருந்து நல்ல நண்பரும் பணியாளருமான ஸ்மிட்டும் வந்திணைந்தார். இப்படியாக ரேனியஸின் பேரூழியம் திருநெல்வேலியில் ஆரம்பமானது. அவருடைய ஊழியகாலத்தைப் 19ம் நூற்றாண்டில் நெல்லைப் பகுதியில் நிகழ்ந்த ஆவிக்குரிய எழுப்புதலாக எந்த சந்தேகமுமின்றிக் கூறலாம். எழுப்புதலுக்குரிய அத்தனை அடையாளங்களையும் அவருடைய ஊழியகாலத்தில் காணக்கூடியதாக இருக்கிறது. காரணமில்லாமல் அவரை, ‘திருநெல்வேலியின் அப்போஸ்தலன்’ என்ற பெயரை எவரும் அவருக்குத் தரவில்லை. என்னைப் பொறுத்தவரையில் ரேனியஸின் பணிகளின் தாக்கம் அவருக்குப் பின்வந்தவர்களின் காலத்திலும் தொடர்ந்தது. இந்த எழுப்புதலின் தாக்கம் குறைந்தது முப்பது அல்லது முப்பத்தைந்து வருடங்களுக்கு அந்தப் பகுதியை நிரப்பியது. ரேனியஸுக்குப் பின் ஜோன் தோமஸ், சார்ஜன்ட், கால்ட்வெல், ஜீ.யூ. போப் போன்றோர் காலத்திலும் அது தொடர்ந்தது. இதை ரேனியஸ் மூலம் கர்த்தர் ஆரம்பித்து வைத்தார் என்று சந்தேகமில்லாமல் சொல்லலாம். எழுப்புதல் என்பது குறுகிய காலப்பகுதியில் கர்த்தர் அற்புதமாகத் தன் ஆவியை ஒரு குறிப்பிட்ட பகுதியில் பொழிவதுதான். இத்தகைய எழுப்புதலை வரலாறு அடிக்கடி காண்பதில்லை. மனித முயற்சிகளையெல்லாம் மீறி, மனித ஆற்றல்களுக்கு அப்பாற்பட்டு பெருமளவு மக்கள் கர்த்தரை நாடி ஓடிவரும் ஒரு காலமே எழுப்புதல் காலம். இதை தேவராஜின் நூலை வாசிக்கிறவர்கள் நெல்லை வரலாற்றில் அடையாளம் காணலாம். 1900 களில் தோமஸ் வோக்கரும், ஏமி கார்மைக்களும் தென்னிந்தியாவில் பணிபுரிந்த காலத்தில் அதன் அடையாளங்களைக் காணமுடியவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும் (இயன் மரேயின் ஏமி பற்றிய நூலில் ரேனியஸின் உழைப்பைப் பற்றிய எந்தக் குறிப்புகளும் இல்லை).
ரேனியஸின் தமிழ் கிறிஸ்தவ இலக்கியத் தொண்டு
ரேனியஸ் எபிரெய, கிரேக்க மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தார். திருச்சபை அமைக்கச் செல்லும் எந்த ஊழியனுக்கும் அவசியமான மொழிப்பயிற்சி இது. திருச்சபை ஊழியத்துக்குத் தேவையான தகுதிகள் அனைத்தையும் ரேனியஸ் கொண்டிருந்தார். வெகு விரைவில் அவர் தரங்கம்பாடியில் தமிழைக் கற்றுக்கொண்டு பிரசங்கிக்க ஆரம்பித்தார். அவருடைய தமிழ்ப் பிரசங்க வரத்தைப் பாராட்டாதவர்கள் இல்லை எனலாம். ரேனியஸின் தமிழ்ப்பாண்டித்தியம் வியக்கத்தக்கது; அதுபோலவே அவருடைய சீர்திருத்த இறையியல் அறிவும். இல்லாமலா அவர் முறைப்படுத்தப்பட்ட இறையியலைத் (Systematic Theology) தமிழில் வடித்திருக்க முடியும்! அதை ‘வேதசாஸ்திரச் சுருக்கம்’ என்று ரேனியஸ் அழைத்தார். அது உரைநடையில் எழுதப்பட்டிருக்கிறது. 1900களின் நடுப்பகுதியில் தமிழில் இந்தளவுக்கு உரைநடை அருமையாக வளர்ந்திருந்திருப்பது வியக்கத்தக்கது. அது ஜெர்மானியரான ரேனியஸ் அந்தளவுக்கு தமிழ் ஞானத்தைக் கொண்டிருந்திருப்பது போற்றுதலுக்குரியது. ரேனியஸ் வேதத்தை ‘வேதம்’ என்றே அன்று தமிழில் அழைத்திருக்கிறார். கடவுளைத் ‘தேவன்’ என்றும் ‘சர்வேசுவரன்’ என்றும் ‘பராபரன்’ என்றும் எழுத்தில் அழைத்திருக்கிறார். அவர் தன் நூலில் ஆங்கிலத்தில் காணப்படும் இறையியல் வார்த்தைகளுக்கான தமிழ் வடிவத்தை ஒரு பகுதியில் தந்திருக்கிறார். அவற்றில் இருந்து எந்தளவுக்கு வார்த்தைகளின் மெய்யான அர்த்தங்களுக்கேற்ப அன்றைய நல்ல தமிழில் வார்த்தைகளை ரேனியஸ் உருவாக்கியிருக்கிறார் என்பதை அறிந்துணர முடிகிறது. ரேனியஸின் ‘வேதசாஸ்திரச் சுருக்கத்தில்’ அவர் பயன்படுத்தியிருக்கும் தமிழைக் கவனியுங்கள். வேதத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்குகிற பகுதியில் அவர் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.
‘வேதத்தின் மூலபாஷைகளை அறியவேண்டும், எல்லோரும் அப்படிச் செய்யவேண்டுவதில்லை. போதகர்களாயிருப்பவர்களுக்கு அது விசேஷமாய் வேண்டும். ஒரு சின்ன தோணியாலே ஒரு சிறு நதியைக் கடந்து போகிறவனிலும், பெரிய சமுத்திரத்தைக் கடந்து போகிறவன் அதிக அறிவையுடையவனாயிருக்க வேண்டுமல்லவா?’
ரேனியஸின் தமிழ்நடையில் அங்குமிங்குமாக சில வார்த்தைகள் தான் இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் போல் இருந்திராவிட்டாலும் அவருடைய உரைநடைத் தமிழ் எளிமையானதாக விளங்கிக்கொள்ளக்கூடியதாக அருமையாக இருக்கிறது. வேதம் எத்தகையது என்று விளக்கியிருக்கும் அவருடைய வேதசாஸ்திரச் சுருக்கத்தின் அதிகாரம் 1689 விசுவாச அறிக்கையின் முதல் அதிகாரத்தை முற்றிலும் ஒத்துக் காணப்படுகிறது. இதிலிருந்தே அவருடைய சீர்திருத்த விசுவாச ஞானத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
ரேனியஸின் தமிழ் நடையின் சொல்லாடலை விளக்குவதற்கு உதாரணமாக மேலும் சில பகுதிகளைக் கவனியுங்கள்.
‘புத்திக்கெட்டாதவைகளாயிருந்தும், புத்திக்கு விரோதமாயிருக்கவில்லையே’
மேற்குறிப்பிட்ட வார்த்தைப்பிரயோகத்தில் எதுகை, மோனையை அவர் எத்தனை அழகாகக் கையாண்டிருக்கிறார் என்று கவனியுங்கள். அவருடைய நடையை விளக்கும் இன்னுமொரு உதாரணத்தையும் தருகிறேன்.
‘வேதம் தெய்வத்தன்மையுள்ளதென்று எப்படித் தெரியுமென்றால், நான் தெய்வத்தன்மைக்குரிய இலக்கணங்களை அதிற் காண்கிறபடியினாலே தெரியுமென்று சொல்லலாமேயன்றி மற்றொருவன் இப்படிச் சொன்னபடியினாலே, அது எனக்குத் தெரியுமென்று சொல்லக்கூடாது. சூரியன் பிரகாசமுள்ளதென்பதும், சருக்கரை (சக்கரை) தித்திப்புள்ளதென்பதும் உனக்கு எப்படித் தெரியுமென்றால், சூரியனுடைய பிரகாசத்தைக் காண்கிறதினாலும், சருக்கரையின் தித்திப்பை நாவினால் ருசிபார்க்கிறதினாலும், எனக்குத் தெரியுமென்று சொல்லுவதுபோல இதுவும் சொல்லப்படும்.’
இந்தப் பகுதியில் வேதத்தைப் பற்றித் தான் சொல்லவருகின்ற சத்தியத்தை விளக்குவதற்கு சூரியனையும், சக்கரையையும் பற்றிய உதாரணங்களை எத்தனை அழகாக ரேனியஸ் பயன்படுத்தியிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். தமிழில் பாண்டித்தியம் இல்லாத ஒருவரால் அன்று இத்தனைத் தெளிவாக விளக்கமளித்திருக்க முடியாது.
ரேனியஸ் தமிழில் எழுதிக் குவித்திருந்த இறையியல் நூல்களும், துண்டுப் பிரதிகளும் ஏராளம். அவருடைய ‘வேதசாஸ்திரச் சுருக்கத்தை’ (The Summary of Christian Doctrine) நான் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து வாசித்துப் பார்த்தேன். ஒவ்வொரு இறையியல் போதனையையும் தெளிவாக விளங்கிக்கொள்ளக்கூடிய விதத்தில் சீர்திருத்த இறையியலடிப்படையில் காலத்துக்கேற்ற முறையிலும், தமிழ் சூழலுக்கேற்றபடியும் ரேனியஸ் எழுதியிருந்தார். அது 415 பக்கங்களைக் கொண்டது. அதை வாசித்து நான் ஆச்சரியப்பட்டேன்; அது பியூரிட்டனான தோமஸ் வொட்சனின் The Body of Divinityயின் இறையியலை நினைவுபடுத்தும் வகையில் தரமாகவும் தெளிவாகவும் இருந்தது; இருந்தபோதும் இது விரிவான நூலல்ல. எந்தவித சத்தியக்குறைபாடும் இல்லாமல் கவனத்தோடு இலகுவான தமிழில் அதைப் படைத்திருந்தார் ரேனியஸ். திருச்சபையார் பின்பற்ற வேண்டிய ஓய்வுநாளைப் பற்றி ஓரிடத்தில் விளக்கியிருக்கும் ரேனியஸ் வேறு எந்த நாட்களையும் விசேஷ நாட்களாகப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டளை வேதத்தில் இல்லை என்று ஆணித்தரமாக எழுதியிருக்கிறார். ‘கிறிஸ்து பிறப்பு நாள், பெரிய வெள்ளிக்கிழமை, பரிசுத்த ஆவியின் நாள், அற்சியசிஷ்டர்களுடைய நாள், எல்லாப் பரிசுத்தவான்களுடைய நாள் முதலான பண்டிகைகளைக் கொண்டாடுவதைக் குறித்து வேதத்தில் ஒரு கட்டளையுமில்லை’ என்று ரேனியஸ் எழுதியிருக்கிறார். இன்றைய தென்னிந்திய திருச்சபை இதற்கெல்லாம் மாறாக சடங்குபோல் விசேஷ நாட்களைத் திருவிழாக்களாகக் கொண்டாடிவருகிறது. அத்தோடு சபை அதிகாரிகளாகக் கண்காணிகளும், உதவிக்காரர்களும் மட்டுமே கிறிஸ்துவால் திருச்சபையில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் ரேனியஸ் அழுத்தமாக எழுதியிருக்கிறார். அவர்களைத் தவிர வேறு சபை அதிகாரிகள் புதிய ஏற்பாட்டு சபைகளுக்காக ஏற்படுத்தப்படவில்லை என்பதையும் அவருடைய வேதசாஸ்திரச் சுருக்கம் விளக்குகிறது. எந்தளவுக்கு ரேனியஸ் ஆங்கிலிக்கன் திருச்சபைக்கு மாறாக வேதத்தை மட்டுமே தழுவிய சீர்திருத்தக் கோட்பாடுகளை விசுவாசித்துப் பின்பற்றியிருந்திருக்கிறார் என்பதை வாசித்து மகிழ்ந்தேன். இந்த வேதசாஸ்திரச் சுருக்கத்தில் பக்கங்களின் எண்கள் இன்று நாம் பயன்படுத்தும் எண்களாக இல்லாமல் அன்றைய தமிழ் எழுத்துக்களில் தரப்பட்டிருக்கின்றன. அது அக்காலத்து வழக்கமாக இருந்திருக்கிறது. 19ம் நூற்றாண்டில் தமிழில் இத்தகைய முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூல் இருந்திருக்கிறது என்ற உண்மையை நினைத்துப்பார்க்கும்போது அது என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. ரேனியஸின் வேதசாஸ்திரச் சுருக்கம் மட்டுமே தனியாகத் துல்லியமாக ஆராய்ந்து திறனாய்வு விளக்கமளிக்கவேண்டிய அளவுக்குச் சிறப்பானதாக இருக்கிறது. அதை இன்னுமொரு ஆக்கத்தில் செய்ய விரும்புகிறேன். இது தவிர ரேனியஸ் 1818ல் ‘வேதாகமச் சரித்திர வினாவிடை’ எனும் நூலை வெளியிட்டார். 1820ல் ‘சுவிசேஷ சமரசம்’ எனும் ஏழு பாகங்களுடைய ஒரு பெரிய நூலை எழுதி வெளியிட்டார். உபதேசிகளுக்கும், இறையியல் மாணவர்களுக்கும், ஆத்துமாக்களுக்கும் என்னென்ன போதனைகள் அவசியமோ அவற்றையெல்லாம் நூல்களாகப் படைத்து வெளியிட்டிருந்தார் ரேனியஸ்.
ரேனியஸின் இலக்கியப்பணியில் மிக முக்கியமானது கிறிஸ்தவ வேதத்தைத் தமிழில் மொழிபெயர்¢க்க அவர் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள். பழைய ஏற்பாட்டின் பல பகுதிகளையும், புதிய ஏற்பாட்டின் பல நூல்களையும் அவர் தமிழில் திருத்தி மொழிபெயர்த்திருந்தார். அவற்றை அச்சிடப் பல தடங்கல்கள் ஏற்பட்டன. அவற்றை இந்த ஆக்கத்தில் தனியாக விளக்க விரும்புகிறேன். ரேனியஸ் எபிரெய இலக்கணத்தைத் தமிழில் எழுதினார். அத்தோடு தெலுங்கு, பிரெஞ்சு மொழியிலக்கணத்தையும் எழுதியிருந்தார். தமிழிலக்கணத்தையும் நூலாகப் படைத்திருந்தார்; அதை ஆங்கிலத்திலும் எழுதியிருந்தார். வரலாறு, திருச்சபை வரலாறு, தர்க்கம் ஆகிய நூல்களையும் வரைந்திருந்தார். கிறிஸ்தவ இறையியல் பற்றிய பல நூல்களை எழுதியிருந்தார். ஒரு தனி மனிதனால் குறுகிய கால ஊழியப்பணியில் எப்படி இத்தனை பெரிய இலக்கியத்தொண்டைச் செய்யமுடிந்தது என்று மலைப்புத்தட்டுகிறதல்லவா? ஆற்றலும், அர்ப்பணிப்பும், தளரா உழைப்பும், அளவுகடந்த மனவலிமையும், ஆவியானவரும் அவரில் இருந்தது மட்டுமே இதற்குக் காரணம் என்பது என் முடிவு. தேவராஜ் இந்நூலின் 87-97 ஆகிய பக்கங்களில் ரேனியஸ் எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டிருந்த நூல்களில் பட்டியலைத் தந்திருக்கிறார். இது ரேனியஸின் நாட்குறிப்பில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.
ரேனியஸின் பொதுக்கல்வித் தொண்டு
ரேனியஸ் தமிழில் அநேக அவசியமான இறையியல் மற்றும் அறிவியல் நூல்களை எழுதி வெளியிட்டதோடு ஆங்கிலத்தில் இருந்து பல நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். பொதுக்கல்வியின் அவசியத்தை உணர்ந்திருந்த ரேனியஸ் இந்துப் பிராமணியத்தின் கட்டுக்குள் இருந்த பொதுக்கல்வியை அனைவரும் ஜாதி வேறுபாடில்லாமல் அடையச் செய்வதற்கான சகல முயற்சிகளையும் எடுத்தார். கிறிஸ்தவத்திற்கும், திருச்சபை வளர்ச்சிக்கும் இத்தகைய பொதுக்கல்வி எத்தனை அவசியம் என்பதை சீர்திருத்த இறையியல் அறிஞரும், மிஷனரியுமான ரேனியஸ் உணர்ந்திருந்தார். அவரெழுதி வெளியிட்ட ‘பூமி சாஸ்திரம்’ அன்றைய தமிழகத்தில் வெளிவந்திருந்த முதலாவது தமிழ் பூலோகவியல் நூல். அதுவரை அத்தகைய அறிவியல் நூல் தமிழில் இருந்ததில்லை. சீர்திருத்த இறையியல் அறிஞரான ரேனியஸ் கிறிஸ்தவனுக்கு கிறிஸ்தவ உலகப்பார்வை இருக்கவேண்டும் என்று நம்பியிருந்ததில் ஆச்சரியமில்லை. அத்தகைய உலகப்பார்வை கொண்ட கிறிஸ்தவர்கள் நம்மினத்தில் அருகிக் காணப்படுகிறார்கள். அந்தத் தவறு நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் பொதுக்கல்வியின் அவசியத்தை உணர்ந்த ரேனியஸ் அக்கல்வியை நெல்லை மாவட்ட மக்களுக்கு அளிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்தார். தன்னுடைய இறையியல் கல்லூரியிலும், வினாவிடைப்போதனைப் பயிற்சிக்கூடத்திலும் இத்தகைய கல்வியும் இருக்குமாறு கவனித்துக்கொண்டார். கல்வியில் மிகுந்த அக்கறை செலுத்திய ரேனியஸ் திருநெல்வேலியிலும் அதற்குப் புறத்திலும் 400க்கு மேற்பட்ட பள்ளிக்கூடங்களையும் (டீ. ஐசெக் தேவதாஸ், 2004) கட்டியிருக்கிறார். கல்விக்கு சீர்திருத்த கிறிஸ்தவம் எப்போதுமே முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறது. கல்வியில்லாமல் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தில் வளரவோ முன்னேறவோ முடியாது என்பதை ரேனியஸ் அறிந்திருந்தார். ஜாதி வெறியும், மூடநம்பிக்கைகளும், சிலைவழிபாடும் ஆண்டு கொக்கரித்துக்கொண்டிருந்த 19ம் நூற்றாண்டு தமிழ் சமுதாயத்தில் கிறிஸ்தவம் நிலைத்து நிற்கவேண்டுமானால் கிறிஸ்தவ இறையியல் போதனைகளோடு பொதுக்கல்வியும் மனிதனுக்குத் தேவை என்பது ரேனியஸின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருந்தது.
ரேனியஸ் பொதுக்கல்வியை சாதி வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் அளிக்கும் முயற்சி செய்திருக்கிறார். இயன் மரே ஏமி கார்மைக்கள் பற்றி எழுதிய ஆங்கில நூலில் (32-34), ‘19ம் நூற்றாண்டு இந்திய மிஷனரிகள் உயர் சாதிக்காரர்களுக்கு மட்டுமே கல்வியை அளிப்பதில் கருத்துள்ளவர்களாக இருந்தார்கள் என்றும், அதன் மூலம் அவர்கள் சுவிசேஷத்தினால் இரட்சிப்படையும்போது அது ஏனைய சாதிகளிலும் சுவிசேஷத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பியிருந்தார்கள்’ என்று எழுதியிருக்கிறார். இந்தக் கருத்து தவறானது என்பதைத்தான் ரேனியஸின் பொதுக்கல்விக் கோட்பாடு உணர்த்துகிறது. அதுமட்டுமல்லாமல் ஏனையவர்களைப் போலல்லாமல் ரேனியஸ் பொதுக்கல்விக்கு அளித்த முக்கியத்துவம் அவருடைய சுவிசேஷப் பணிக்கும், திருச்சபைப் பணிக்கும் எந்த இடையூறையும் ஏற்படுத்தவில்லை. இரண்டுமே தொடரவேண்டும் என்றுதான் அவர் உழைத்திருந்தார். தன் கல்விக்கொள்கையில் சாதிவேறுபாட்டுக்கு ரேனியஸ் இடமளிக்கவில்லை.
இங்கில்பி என்பவரால் எழுதி டெல்லி ISPCK யினால் வெளியிடப்பட்டிருக்கும் ‘இந்தியாவின் மிஷனரிகளும் கல்வியும்’ எனும் நூலில் தென்னிந்தியாவில் கல்வித் தொண்டு என்ற தலைப்பில் ஒரு அதிகாரம் இருக்கிறது (201-236). அதில் தென்னிந்தியாவில் சானர்கள் மற்றும் நாடார்கள் மத்தியில் காணப்பட்ட கல்வி விருத்திக்கு 1838ல் தென்னிந்தியா வந்து பணிபுரிந்த ரொபட் கால்ட்வெல்லும் சி.எம்.எஸ்., எல்.எம்.எஸ்., மற்றும் எஸ்.பி.ஜி. மிஷனரி நிறுவனங்களே காரணமாக இருந்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கும் நூலாசிரியர் 1820-1838 வரை ரேனியஸ் செய்த கல்வித் தொண்டு பற்றி எதையும் குறிப்பிடவில்லை. உண்மையில் 1838வரை ரேனியஸ் திருநெல்வேலி மாவட்டத்தில் சாதிப்பாகுபாட்டிற்கு இடமில்லாமல் செய்திருந்த பொதுக்கல்வித் தொண்டே அது ரொபட் கால்ட்வெல் காலத்தில் தொடருவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது. ரொபட் கால்ட்வெல்லின் கல்விப் பணியை நான் குறைத்து மதிப்பிடாவிட்டாலும் அவர் வருவதற்கு முன்பே திருநெல்வேலி மாவட்டத்தில் 400 கல்வித்தளங்கள், அதுவும் ஆண்களுக்கும், பெண்களுக்குமாக கிராமம் கிராமமாக ரேனியஸின் உழைப்பினால் உருவாகியிருந்தன என்பதை வரலாற்றில் இருந்து மறைத்திருப்பது எந்தவிதத்தில் தகும்?
ரேனியஸின் இறையியல் கல்லூரி
கல்வியறிவு பெரிதும் இல்லாதிருந்த காலத்திலும் சத்தான சீர்திருத்த இறையியலைத் தன் மாணவர்களுக்கும், சபை மக்களுக்கும் அவர் கொடுக்கத் தவறவில்லை. திருச்சபைகளை ஊர் ஊராக அமைத்துவிட்டால் மட்டும் போதுமா? அந்தச் சபைகளில் ஆவிக்குரிய தலைவர்களாக இருந்து ஆத்துமாக்களை வழிநடத்தத் தரமான போதகர்கள் இல்லாமல் அவை எவ்வாறு நின்று நிலைக்கும்? ரேனியஸ் இதைப்பற்றியும் சிந்திக்காமல் போகவில்லை. நல்ல விசுவாசமுள்ள தலைவர்களைத் தயார் செய்யும்பொருட்டு நற்குணமும், நல்விசுவாசமும் உள்ளவர்களைத் தெரிவுசெய்து அவர்களுக்குத் தேவையான கல்வியளித்துப் போதனை செய்யுமளவுக்கு தயார்செய்ய இறையியல் கல்லூரியொன்றையும் அவர் அமைத்தார். அதை அவர் அழைத்த பெயர் வேறு; இருப்பினும் அது போதக இறையியல் கல்லூரியாகவே பணிபுரிந்தது. இதில் ஆங்கிலம் முதல், வேத இறையியல் போதனைகள், முறைப்படுத்தப்பட்ட இறையியல் என்று தேவையான அனைத்தையும் ரேனியஸ் மாணவர்களுக்குக் கற்றுத் தந்தார். அத்தோடு இறையியல் மாணவர்கள் ஆங்கிலத்தையும், வேத மூலமொழிகளையும் கற்றுக்கொள்ள ரேனியஸ் துணைபுரிந்தார். அவருக்கு இதில் உதவியாக சிலர் பணிபுரிந்தனர். இதில் பயிற்சி பெற்றுத் தேறியவர்கள் ஜெபத்தோடு அமைக்கப்பட்ட சபைகளில் உபதேசிமார்களாக நியமிக்கப்பட்டனர். இது எத்தனை பெரிய ஞானமுள்ள செயல் தெரியுமா? எழுப்புதலின் காரணமாகத் திருச்சபைகள் அங்குமிங்குமாக வெகுவேகத்தோடு எழுந்துகொண்டிருந்தபோது முன்னெச்சரிக்கையாக அவை நிலைத்து நிற்கும் வகையில் போதிப்பவர்களையும் உருவாக்குகின்ற பணியில் ரேனியஸ் ஈடுபட்டிருந்தார்.
இறையியல் நூல்களையும், வினாவிடை நூலையும் அவர் எழுதியது மட்டுமல்லாமல் தன் செமினரியிலும், பள்ளிகளிலும் மாணவர்கள் அவற்றைக் கற்றுக்கொள்ளும் வசதி செய்திருந்தார். ரேனியஸின் இறையியல் கல்லூரியில் மாணவர்களுக்கான பயிற்சி வெறும்போதனையாக மட்டுமல்லாமல், நடைமுறைப்பயிற்சியையும் கொண்டிருந்தது. பிரசங்கம் தயாரிப்பதிலும், பிரசங்கிப்பதிலும் மாணவர்களுக்கு அங்கு தீவிரமான பயிற்சி கொடுக்கப்பட்டது. மாணவர்கள் மாணவர்களுக்கு முன்பாக அவற்றைப் பிரசங்கம் செய்யவேண்டியிருந்தது. அத்தோடு பிரசங்கித்து வரும் உபதேசிகளில் எவரிலாவது குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அத்தகையவர்கள் மறுபடியும் செமினரிக்கு அனுப்பப்பட்டு குறைகள் திருத்தப்பட்டு பிரசங்கிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் ரேனியஸின் மாணவர்கள் சிறந்தவர்களாக இருந்திருப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை. அவருடைய செமினரியில் படித்துத் தேறியவர்களே சுவிசேஷம் சொல்லவும், உபதேசியார்களாகப் பணிபுரியவும், திருச்சபைப் பணியிலும் ஈடுபட அனுப்பப்பட்டவர்கள். அநேக உள்ளூர் விசுவாசிகள் இந்தவிதத்தில் திருச்சபைப் பணிக்காக ரேனியஸால் தயார்செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருந்தனர். அவருடைய மாணவர்களில் சற்குணம் என்பவரும், யோசேப்பும் ஸ்ரீ லங்காவுக்குப் போய் யாழ்ப்பாண மிஷனின் துணையோடு உயர்கல்வி பெற்றுத் திரும்பினர். சற்குணம் (1832) ரேனியஸின் இறையில் கல்லூரி ஆசிரியர்களில் ஒருவரானார். இவர் ஜோன் பன்யனின் திருப்போர் (Holy War) எனும் நூலைத் (1842) தமிழில் மொழிபெயர்த்தார். இவரே திருநெல்வேலிக் கிறிஸ்தவர்களில் முதன் முதலாக எழுத்தாளராகப் புகழ்பெற்றவர். 1842ல் இவர் ரேனியஸின் இறையியல் கல்லூரித் தலைவரானார். இப்பதவியில் அமர்ந்த முதல் இந்தியர் இவரே. இப்படி ரேனியஸின் எத்தனையோ மாணவர்களை உதாரணங்காட்டலாம்.
இங்குதான் ரேனியஸுக்கு CMS ஸுடன் பிரச்சனையும் ஆரம்பமானது. அந்த மிஷன் நிறுவனம் அத்தகைய உபதேசியார்களைத் தாங்களே பிரதிஷ்டை செய்யவேண்டும் என்றும், அப்படியில்லாமல் அவர்கள் சபைகளில் பணிபுரியக்கூடாது என்றும் வற்புறுத்தினர். இதை ரேனியஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. ரேனியஸுக்கு இருந்த திருச்சபைபற்றிய ஆவிக்குரிய பாரமும், அர்ப்பணிப்பும் CMS பிஷப்புக்கும், தலைவர்களுக்கும் இருக்கவில்லை. இதனால் அவருக்கும் கல்கத்தாவிலிருந்த ஆங்கிலிக்கன் சபைப் பிஷப்பான டானியேல் வில்சனுக்கும் பெருங் கருத்துவேறுபாடும், முரண்பாடும் ஏற்பட்டது. ரேனியஸ் சீர்திருத்த சுவிசேஷ நம்பிக்கைகளைக் கொண்டிருந்த லூத்தரன் மிஷனரி. ஆனால், அன்று இந்தியாவில் இருந்த CMS அத்தகைய சீர்திருத்த சுவிசேஷ நம்பிக்கைகளைத் தீவிரமாக விசுவாசத்தோடு கொண்டு செயல்பட்டதாகத் தெரியவில்லை. அது ஆங்கிலேயத் திருச்சபைப் பாரம்பரியத்துக்கு மட்டுமே முக்கியத்துவமளித்தது. இந்த முரண்பாடே மென்மேலும் பெருகி, ரேனியஸுக்கு எதிராகப் பணிபுரியும் புல்லுருவிகளை எழுப்பி, இறுதியில் ரேனியஸ் தன் ஊழியப்பணியைத் தொடரமுடியாதபடி அவர் நீக்கப்படும்படியான நிலைமைக்குத் தள்ளியது. ஒரேவித இருதயபூர்வமான இறையியல் நம்பிக்கைகளைக் கொண்டிராதவர்கள் இணைந்து ஆவிக்குரிய பணிபுரிவதென்பது ஒருபோதும் இயலாத செயல் என்பதை ரேனியஸுக்கு ஏற்பட்ட கவலைக்குரிய நிலை சுட்டிக்காட்டுகிறது.
திருச்சபைப் பணி
கர்த்தரின் கிருபையால் ரேனியஸின் திருச்சபை அமைக்கும் பணி அசாத்தியமாக நடந்து வந்தது. அதுபற்றி எவ்வளவோ எழுதலாம். திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தன் ஊழியக்காலப்பகுதியில் 300க்குட்பட்ட திருச்சபைகளை அவர் நிறுவியிருந்தார். ஒரு குறிப்பு 371 சபைகள் என்கிறது (டீ. ஐசெக் தேவதாஸ், 2004). ஒவ்வொரு உபதேசியாரும் ஒன்றுக்கு மேற்பட்ட சபைகளை நிர்வகிக்கும் பாரம் அவர்களுக்கு இருந்தது. அவர்களுடைய வருமானமோ மிகக் குறைவு. மாதத்திற்கு ரூபாய் 2 அல்லது 10 மட்டுமே அவர்களுக்குக் கிடைத்தது. அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவர்கள் கர்த்தருக்காகப் பணிசெய்திருக்கிறார்கள். 1829ல் ரேனியஸ் மாவட்டத்தை மூன்று வட்டாரங்களாகப் பிரித்து பாளயங்கோட்டைக்குப் பொறுப்பாகத் தானிருந்து, சாத்தான்குளத்திற்கு ஸ்மிட் ஐயரையும், டோனாவூருக்கு வின்க்ளர் ஐயரையும் நியமித்தார். ஆயினும் மிஷன் முழுவதிற்கும் ரேனியஸே தலைவராக இருந்தார். திருச்சபைகளும், ஆலயக்கட்டடங்களும் பள்ளிகளும், புதுக்குடியேற்றங்களும் நாளுக்கு நாள் வெகுவேகமாக அதிகரித்தன.
ரேனியஸ் ஆத்துமாக்களில் விசுவாசத்தையும், பக்திவைராக்கியத்தையும் எதிர்பார்த்தார். அவருடைய ஆங்கில நினைவுக்குறிப்பில் அதைப்பற்றி அவர் விளக்கமாக எழுதியிருக்கிறார். மெய்யான ஆழமான பாவ உணர்வை (Compunction) கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களில் அவர் எதிர்பார்த்தார். மனந்திரும்பும்போது உண்டாகும் இந்தப் பாவஉணர்வு எல்லோரிலும் ஒரே அளவுக்கு இருப்பது அவசியமில்லை என்கிறார் ரேனியஸ். இன்று பரவலாகப் பிரசங்கிக்கப்பட்டு வரும் செல்லாக்காசு சுவிசேஷத்தை ரேனியஸ் பிரசங்கிக்கவில்லை. கூட்டங்களில் கிறிஸ்துவுக்காகக் கைதூக்குவது, ஞானஸ்நானத்தின் மூலம் மறுபிறப்பு போன்ற சடங்குத்தனமான செயல்களை அவருடைய சுவிசேஷப் பணியில் அறவே காணமுடியாது. முற்றுமுழுதுமாக சீர்திருத்த, பியூரிட்டன் வழிகளில் அவருடைய சுவிசேஷப் பிரசங்கமும், இரட்சிப்பு பற்றிய இறையியல் போதனைகளும் அமைந்திருந்தன. மனந்திரும்புதல், விசுவாசம் பற்றிய அவருடைய விளக்கங்கள் தோமஸ் வொட்சன், தோமஸ் பொஸ்டன் போன்ற பியூரிட்டன் இறையியல் அறிஞர்கள் பாணியில் இருந்தன.
ரேனியஸ் ஒருவருக்கு அவசரப்பட்டு சபை அங்கத்துவத்தை அளிக்கவில்லை. மனந்திரும்பியிருப்பதாகக் கருதுகிறவர்களை அவர் ஆரம்பத்தில் ‘ஆயத்தக்காரர்களாகச்’ சேர்த்து ஆராய்ந்து பார்த்து கிறிஸ்தவ போதனைகளை அளித்தார். அவர்களில் சிலர் திருமுழுக்கிற்காக ஒன்றரை வருடங்களுக்குக் காத்திருக்க நேரிட்டது. நம்பத்தகுந்த விதத்தில் விசுவாசத்தை அடைந்திருக்கிறார்கள் என்று தெரிவுசெய்யப்பட்டவர்களை மட்டுமே அவர் ஞானஸ்நானத்துக்குத் தயாராகும் வகுப்புகளில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு வேதமும், இறையியல் போதனையும் அளிக்கப்பட்டது. அதற்காக அவர் ‘ஞானப்போதிப்பு’ எனும் ஒரு நூலையும் 1822ல் எழுதியிருந்தார். அரைகுறை விசுவாசமுள்ளவர்கள் சபை அங்கத்தவர்களாவதை அவர் முடிந்தவரையில் தடுத்தார். தேவராஜின் நூலில் 89-90 ஆகிய பக்கங்களில் ஒருவர் ஞானஸ்நானம் எடுப்பதற்கு அவசியமான அம்சங்களாக ரேனியஸ் கொண்டிருந்த நம்பிக்கைகளின் விளக்கங்களை வாசிக்கலாம். ஒரு சீர்திருத்த திருச்சபையில் சபை அங்கத்துவம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான கோட்பாடுகளைத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் ரேனியஸ் பின்பற்றியிருந்தார். அத்தோடு ரேனியஸ் திருச்சபை ஒழுங்கைக் கடைபிடிப்பதிலும் பெரும் அக்கறை காட்டியிருக்கிறார். பாவத்தில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு அவர் திருவிருந்து அளிப்பதைத் தடைசெய்தார். அவர்களில் திருத்தம் காணப்பட்டு, திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்பே திருவிருந்து கொடுக்கும் வழக்கத்தை சபைகளில் ஏற்படுத்தியிருந்தார். திருச்சபை பரிசுத்தத்தோடு இருக்கவேண்டும் என்பதில் ரேனியஸ் உறுதியாக இருந்திருக்கிறார்.
ரேனியஸ் தான் நிறுவிய சபைகளில் ஆரம்பத்திலிருந்தே ஜாதிக்கு இடமளிக்கவில்லை. ஆணித்தரமாக நடவடிக்கைகளை எடுத்து ஜாதி தலைகாட்டாதபடி கவனித்துக்கொண்டார். 19ம் நூற்றாண்டு தமிழ் சமுதாயத்தில் அது இலகுவான செயலல்ல; ஜாதிக்கு இடமளிக்காமலும், ஜாதிப்பிரச்சனை உண்டாகாமலும் இருப்பதற்காக அவர் எடுத்த நடவடிக்கைகள் எதிர்ப்புகளை எதிர்நோக்காமல் இருக்கவில்லை. இருந்தபோதும், ரேனியஸ் சுவிசேஷ சீர்திருத்த கிறிஸ்தவத்தில் ஜாதிக்கும், சமூக பேதத்திற்கும் இடமில்லை என்பதைத் தீவிரமாக உணர்ந்து எதிர்த்து நின்றிருக்கிறார். இன்றைய தென்னிந்திய திருச்சபைப் பிரிவு ஜாதிக்கு இடமளித்து ரேனியஸை அவமதித்து வரும் ஒரு சபைப்பிரிவாக இருக்கிறது. திருச்சபை ஒழுங்கு நடவடிக்கையில் ரேனியஸ் உறுதியாக இருந்தார். பரிசுத்தத்தில் விழுந்துபோகிறவர்களை போதகக் கண்காணிப்பளித்து மனந்திரும்பத் துணைசெய்ததோடு அவசியமானபோது சபை நீ¢க்கம் செய்யவும் அவர் தயங்கவில்லை. அவசரக்குடுக்கைப் போதகர்கள் இன்று சபை நடத்தும் விதத்திற்கும் சீர்திருத்தவாதியான ரேனியஸின் முறைக்கும் இமாலய உயர இடைவெளி இருந்தது.
தேவராஜின் நூலை வாசித்தபோது, நான் என் கூகுளில் இந்திய வரைபடத்தை என்னுடைய கணினியில் திறந்துவைத்து அன்றைய நெல்லை மாவட்டத்தை மனதில் படமாக நினைவில் வைத்தே வாசித்தேன். இப்போது புரிகிறதா, நூலை வாசிக்க ஏன் இரண்டு வாரங்கள் எடுத்தது என்று? நெல்லையில் ரேனியஸ் பிரயாணம் செய்திராத இடமேயில்லை என்று கூறலாம். வெகுதூரமுள்ள இடங்களுக்கு ஊழியப்பணி நிமித்தம் போகும்போது அவர் தன் அன்பு மனைவி அனியைத் தன்னோடு அழைத்துச் சென்றிருக்கிறார். திருநெல்வேலிக்குப் பக்கத்தில் இருக்கும் இடங்களுக்குப் போகும்போது அனி வீட்டில் இருந்திருக்கிறார். அப்படி அவர் பிரயாணம் செய்த இடங்களிலெல்லாம் மக்களுக்குச் சுவிசேஷத்தைச் சொல்லி ஊர், ஊராக அவர் திருச்சபையை அமைத்தார். ரேனியஸ் சுவிசேஷத்தைத் தனிப்பட்டவர்களிடம் சொல்லும் வைராக்கியம் கொண்டிருந்தார். அதில் அதீத ஆர்வமும் காட்டினார். சுவிசேஷத்தை சொல்லுவதில் ஆர்வம் காட்டாதவர்கள் திருச்சபை அமைக்கும் பணியில் வெற்றி அடைவது அரிது. ரேனியஸ் காலநேரம் பார்க்காமல் சுவிசேஷத்தை மக்கள் மத்தியில் எல்லாத் தரப்பாருக்கும் சொல்லுவதில் பேரார்வம் கொண்டிருந்தார்.
சில ஊர்களில் இந்துக்கள் தங்கள் கோவில்களை மூடிவிட்டு அவருக்கு செய்தி அனுப்பி, தங்களுக்கு சுவிசேஷத்தைச் சொல்லி ஞானஸ்நானம் கொடுக்கும்படிக் கேட்டிருக்கிறார்கள். வேறு சில ஊர்களில் இருந்த மக்கள் தாங்கள் மனந்திரும்பிவிட்டதற்கு அடையாளமாகத் தாங்கள் தெய்வமாகக் கருதி வழிபட்ட சிலைகளை வண்டிகளில் ஏற்றி அவருக்கு அனுப்பி தங்களூருக்கு வந்து உதவி செய்யுமாறு வற்புறுத்திக் கேட்டிருக்கிறார்கள். இடையன்குடி என்ற ஊரில் பத்துக்குடும்பத்தினர் இவ்வாறு பத்து இந்து சாமி விக்கிரகங்களையும், மரத்தாலான ஒரு சிலையையும் ஒரு கூடையில் வைத்து வண்டியில் ஏற்றி ரேனியஸுக்கு அனுப்பியிருந்தார்கள். அவர்களுடைய இந்துக் கோயிலும் திருச்சபைக் கட்டடமாக மாற்றப்பட்டது. இவர்களை ஆராய்ந்து பார்த்து, ஆயத்தக்காரர்களாக சேர்த்துக்கொண்டு கிறிஸ்தவ போதனைகளை அளித்தார் ரேனியஸ். அவர்களுக்குப் போதிக்க ஒரு உபதேசியாரையும் அனுப்பிவைத்தார். சில காலங்களுக்குப் பிறகு 1827லேயே அவர்களில் தகுதியானவர்களுக்கு அவர் திருமுழுக்களித்தார்.
ரேனியஸ் திருச்சபை அமைத்த அநேக ஊர்களில் அங்கிருந்த மக்கள் தங்கள் கோவில்களையே திருச்சபைகளாக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை ஆவிக்குரிய எழுப்புதலாக அல்லாமல் வேறு எந்தப் பெயரில் அழைப்பது? அதுவும் 19ம் நூற்றாண்டுத் தென் தமிழகத்தில், சாதிவெறியும், குருட்டுப் பக்தியும் தலைவிரித்தாடிய காலத்தில் ஒரு மேலைத்தேச மிஷனரியினால் இது எப்படிச் சாத்தியமானது? அதற்குப் பதில் அது ஆவிக்குரிய எழுப்புதல் என்பது மட்டுமே. இவை மட்டுமல்லாமல் ரேனியஸின் சுவிசேஷப்பணியால் அக்காலத்தில் ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றியிருந்த பெரும்பாலானோர் அந்த மதத்தைவிட்டு விலகி கிறிஸ்துவை விசுவாசித்தனர். ரேனியஸ் அவர்களுக்கு கிறிஸ்தவப் போதனைகளைத் தந்து திருச்சபையில் இணைத்துக்கொண்டார். 1827ல் ரேனியஸ் நெல்லை மாவட்டத்தில் அமைத்திருந்த திருச்சபைகள் 109, கிறிஸ்தவர்கள் 3505 பேர், உபதேசியார்களின் எண்ணிக்கை அறுபதுக்கு மேலிருந்தது. 1832ல் நெல்லையில் இருந்த சபைகள் 270, உபதேசிமார் எண்ணிக்கை 70, கிறிஸ்தவ குடும்பங்கள் 2519, சபை மக்கள் 8780. ஐந்தே வருடங்களுக்குள் ரேனியஸின் ஊழியத்தில் இத்தனை பெரிய வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ரேனியஸுக்கு திருச்சபைப் பணியில் ஸ்மிட், ஷாப்டர் தவிர வேறு பலரும் துணையாக இருந்திருக்கின்றனர்.

Holy Trinity Cathedral
இத்தகைய பணிகளெல்லாம் பலவிதமான துன்பங்களுக்கு மத்தியில் தொடர்ந்தவை. 1832 ஜனவரி மாதம் கொடூரமான காலரா இந்தியாவில் பரவ ஆரம்பித்து அநேகர் உயிரிழந்தனர். இக்காலத்து கோவிட் வைரஸைப் போல அது ஒரு நாளைக்கு எழுபது பேரையாவது திருநெல்வேலியில் பலிகொண்டது. ரேனியஸ் அமைத்த திருச்சபைகளில் சில கொலொராவால் அழிந்தன; ரேனியஸ் அந்த இடங்களில் மறுபடியும் சபைகளை அமைக்க ஆரம்பித்தார். கொலொராவால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணந்திரட்டி ரேனியஸும், ஷாப்டரும் மக்களுக்கு மருத்துவ உதவியளித்திருக்கிறார்கள். இந்த மருத்துவப்பணி பல காலங்களுக்கு அம்மாவட்டத்தில் தொடர்ந்தது. அரசியல்வாதிகளாலும், ஜமீன்தார்களாலும், நிலச் சொந்தக்காரர்களாலும், கிராமத்தலைவர்களாலும், ஜாதி வெறிபிடித்தவர்களாலும், தன்னோடிருந்த சிலராலுங்கூட ரேனியஸுக்கு அடிக்கடி பேராபத்தும், துன்பங்களும் ஏற்பட்டன. இவை கவலைகளை ஏற்படுத்தியபோதும் ரேனியஸ் மனந்தளராமல் தன் ஊழியப்பணியைத் தொடர்ந்து செய்தார். அப்போஸ்தலன் பவுலை நினைவுபடுத்துகின்றன ரேனியஸ் தன் வாழ்வில் சந்தித்திருக்கும் துயரங்கள். கிறிஸ்துவின் துயரங்களைவிடவா தன் துயரங்கள் மேலானவை என்று நினைத்து ரேனியஸ் தன்னைத் தேற்றிக்கொண்டு தேவபணியைத் தொடர்ந்தார்.
ரேனியஸ் தான் திருச்சபை அமைத்த ஊர்களில் அருமையான சபைக்கட்டிடங்களையும், கோபுர மணிகளையும் கட்டியிருந்தார். சபை மக்களும் அந்தப் பணிக்குத் தங்களால் முடிந்ததைக் கொடுத்து உதவியிருக்கின்றனர். சில கிராமங்களில் இந்துக் கோவில்கள் திருச்சபைக் கட்டடங்களாக மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. நிச்சயமாக இந்தப் பணியில் அவருக்கு நண்பரான ஸ்மிட்டும், வேறு மிஷனரிகளும், உள்ளுரில் அவரால் உபதேசியார்களாகத் தயாரிக்கப்பட்டவர்களும், சுவிசேஷகர்களும் துணையாக இருந்திருக்கின்றனர். ரேனியஸால் கட்டப்பட்ட அநேக சபைக்கட்டிடங்கள் இன்றும் நெல்லை மாவட்டத்தில் தலைநிமிர்ந்து நிற்கின்றன. பாளையங்கோட்டையில் 188 வருடங்களுக்குப் பின் இன்றும் நிலைத்துக் காணப்படும் தூய திரித்துவப் பேராலயத்தைக் (Holy Trinity Cathedral) கட்டியவர் ரேனியஸே. அவர் அடக்கம் செய்யப்பட்ட அடைக்கலபுரத்தில் திருச்சபைக் கட்டடமும் அவராலேயே கட்டப்பட்டது.
ரேனியஸ் அமைத்த கிறிஸ்தவ கிராமங்கள்
ரேனியஸ் அருட்பணிபுரிந்த சமுதாயம் 19ம் நூற்றாண்டுத் தென் தமிழக சாதி வெறிகொண்டிருந்த சமுதாயம்; பிராமணர்களும், நாடார்களும், முதலியார்களும், வேறு சாதிக்காரர்களும் மலிந்து காணப்பட்ட இந்து சமுதாயம். இன்றுபோலில்லாமல் அன்று சாதி பேதம் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த காலம். எந்தவித சாதிப் பாகுபாடும் காட்டாமல் ரேனியஸ் கிறிஸ்துவை அனைவருக்கும் பிரசங்கித்து திருச்சபை அமைத்து வந்திருந்தார். கிராமத்து மக்கள் சிலைவணக்கத்தை உதறித்தள்ளிவிட்டு கிறிஸ்துவை வணங்க ஆரம்பித்து திருச்சபை ஆராதனையில் ஈடுபட்டபோது சாதிப் பித்தர்களால் அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. வீடுகள் தீவைக்கப்பட்டு அழிக்கப்படுவதும், கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்படுவதும் அல்லது அழிக்கப்படுவதும் சகஜமாக நிகழ்ந்து வந்திருந்தன. அதனால், கிறிஸ்தவ விசுவாசிகளுக்குப் பாதுகாப்பளிக்க ரேனியஸ் நிலப்பகுதிகளை விலைகொடுத்து வாங்கி புதிய கிராமங்களை உருவாக்கினார். அத்தோடு அக்கிராமங்களுக்கு கிறிஸ்தவ பெயர்களையும் சூட்டினார். இதனால் கிறிஸ்தவர்களுக்கு ஒருவிதத்தில் பாதுகாப்பு கிட்டியது.
1823ல் பிராமணன் ஒருவரிடம் இருந்து ஒரு நிலப்பகுதியை விலைக்கு வாங்கி ஒரு கிராமத்தை ஸ்தாபித்து அதற்கு ‘அருளூர்’ (Village of Grace) என்று பெயரிட்டு கிறிஸ்தவர்களைக் குடியேற்றினார். 1827ல் ஜெர்மானிய தேசத்தவரான ஷ்லோடினின் உரிமையாளரும் ஆளுநருமான டோனா பிரபு என்பவர் இதுபோன்ற பணிகளுக்காக அளித்த நன்கொடையைப் பயன்படுத்தி புலியூர்குறிச்சியில் ஒரு நிலப்பரப்பை விலைக்கு வாங்கி அந்த மனிதரின் பெயரில் அந்தக்குடியிருப்புக்கு ‘டோனாவூர்’ என்று பெயரிட்டு கிறிஸ்தவர்களை அங்கு குடியேற்றினார் ரேனியஸ். 1828ல் இவ்வூரில் ஒரு மிஷன் வீட்டைக் அவர் கட்டினார்; அது பின்னால் மிஷன் ஊழியங்களை அந்தப் பகுதியில் தொடர முக்கிய இடமானது. இந்த டோனாவூரில்தான் பின்னால் ஏமி கார்மைக்கள் இந்தியாவுக்கு வந்து (1895) அநாதைப் பிள்ளைகளுக்கான காப்பகப் பணியை 1900ல் தோமஸ் வோக்கரின் துணையோடு ஆரம்பித்தார். வரலாற்று விபரம் தெரியாதவர்கள் டோனாவூரை ஏமி கார்மைக்கள் அமைத்ததாகத் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஏமி கார்மைக்களைப் பற்றிய ஒரு நூலை எழுதிய சீர்திருத்த வரலாற்றறிஞர் இயன் மரே (Ian Murray) கூட, ‘டோனா என்பவர் கொடுத்த பணத்தால் இந்தக் கிராமம் அமைக்கப்பட்டது’ என்று மட்டுமே எழுதியிருக்கிறார். அவருக்கும் ரேனியஸ் பற்றிய எந்த விபரங்களும் தெரிந்திருக்கவில்லை; எவரும் அதை அவருக்கு அறிவிக்கவும் இல்லை. 1914க்கு முன் ஏமி கார்மைக்கள் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டிருக்கும் தோமஸ் வோக்கரைப் பற்றிய நூலில் (பக்கங்கள் 273-276) டோனவூர் பகுதியின் ஆரம்ப கால வரலாற்று விபரங்களைத் தந்திருக்கிறார். அதாவது, இஸ்லாமியனான அலாம் கான் என்பவனோடு நிகழ்ந்திருக்கும் போரிலிருந்து திருவாங்கூர் அரசன்வரை விபரித்து, இந்துக் கிராமப்பகுதியான டோனவூர் எப்படி ஒரு கிறிஸ்தவ கிராமமாக மாறியது என்று விளக்கியிருக்கும் அவர் ரேனியஸைப் பற்றி ஒரு வார்த்தைகூட எழுதவில்லை. யார் அதைக் கிறிஸ்தவ கிராமமாக டோனா பிரபு தந்த பணத்தில் வாங்கியது என்பதையும் அவர் குறிப்பிடவில்லை. மிஷன் பணிக்காக அது அமைக்கப்பட்டது என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார். இவற்றிலிருந்து ரேனியஸ் பற்றிய வரலாற்று விபரங்கள் வேண்டுமென்றே யாராலோ மறைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது. இதற்கு ஏமி கார்மைக்கள் காரணமாக இருந்திருக்க முடியாது. என்னைப் பொறுத்தவரையில் அன்றிருந்திருந்த ஆங்கிலிக்கன் திருச்சபைக்குக் கீழிருந்த சி.எம்.எஸ். போன்ற மிஷன் நிறுவனங்களும், தென்னிந்திய திருச்சபையுமே இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். இந்த முறையில் ரேனியஸின் பல்வேறு பணிகள் சிலரின் சுயநல நோக்கத்தால் அடியோடு மறைக்கப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தில் இன்னுமொரு குறிப்பையும் இயன் மரேயின் நூலில் இருந்து குறிப்பிட்டாக வேண்டும். 1911களில் பிரிட்டனில் சுவிசேஷ இயக்கத்தின் தாக்கம் அடியோடு இல்லாமலாகி வருவதாகக் கவலையோடு தோமஸ் வோக்கர் தன் வாழ்க்கை சரிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக இயன் மரே எழுதியிருக்கிறார். இதன் தாக்கத்தினால்தான் பிஷப் ஸ்டீபன் நீலும் அதே காலப்பகுதியில் தன்னுடைய வேத நம்பிக்கைகளில் தாராளவாதப் போக்கில் போய் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டார். வோக்கரும், ஏமி கார்மைக்களும் பணிபுரிந்த 1900 களின் காலத்தில் தென்னிந்திய திருச்சபை ரேனியஸைப் போன்ற ஆழமானதும், அழுத்தமானதுமான சுவிசேஷ நம்பிக்கைகளையும், சீர்திருத்த விசுவாசத்தையும் கொண்டிருக்கவில்லை.
1828ல் ரேனியஸ் பேய்க்குளம் என்ற இடத்திற்குப் போய் ஒரு அந்தணரிடம் இருந்து குடியேற்ற நிலத்தைப் பெற்று அதற்கு ‘ஆசீர்வாதபுரம்’ என்று பெயரிட்டு கிறிஸ்தவர்களைக் குடியேற்றினார். 1830ல் அவர் சோலைக்குடியிருப்பு என்ற பகுதியில் நிலத்தை வாங்கி அங்கு ஒரு குடியிருப்பை ஏற்படுத்தி அதற்கு ‘பாவநாசபுரம்’ என்று பெயரிட்டார். சோலைக்குடியிருப்பிலும் பாவநாசபுரத்திலும் திருச்சபைகள் இருந்தன. பாவநாசபுரம் என்பது எத்தனை அருமையான கிறிஸ்தவ பெயர். தமிழ் வல்லுனராக இல்லாத ஒருவரால் இப்படியெல்லாம் சிந்தித்து அருமையான பெயர்களை வைத்திருக்க முடியாது. பாவநாசபுரத்தை அமைத்த பிறகு நெடுவிளை என்ற இடத்திற்கு வந்த ரேனியஸ் அவ்வூருக்கும் ‘மெஞ்ஞானபுரம்’ என்ற புதுப்பெயரைச் சூட்டினார். 1829ல் இன்னொரு குடியிருப்புக்கு ‘நாசரேத்’ என்று பெயரிட்டு அங்கு கிறிஸ்தவர்களை ரேனியஸ் குடியேற்றினார். இதே ஆண்டில் உருவாக்கப்பட்ட இன்னுமொரு கிறிஸ்தவ கிராமம் ‘சமாதானபுரம்.’
1833ல் ரேனியஸ் ‘விசுவாசபுரம்’ என்ற கிறிஸ்தவ கிராமத்தை அமைத்தார். அத்தோடு, ‘ஆரோக்கியபுரம், அடைக்கலபுரம், அனுக்கிரகபுரம்’ போன்ற வேதப்பெயர் சூட்டப்பட்ட வேறு கிறிஸ்தவ கிராமங்களையும் ஏற்படுத்தினார். 1834ல் ‘மாணிக்கபுரம்’ அமைக்கப்பட்டது. அத்தோடு ‘இரட்சண்யபுரம்’ எனும் கிராமமும் உருவானது. 1835 ‘சௌக்கியபுரம்’ அமைக்கப்பட்டது. இப்படியாக புதிய புதிய கிறிஸ்தவ கிராமங்களை அவசியத்தின் காரணமாக நெல்லையெங்கும் நிறுவி ரேனியஸ் கிறிஸ்தவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பளித்திருக்கிறார். இதற்காக ரேனியஸ் சொந்தமாகப் பணந்திரட்டி நிலப்பகுதிகளை வாங்கினார். இந்தப் பணிக்கு அவருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலர் உதவியிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட கிறிஸ்தவ கிராமங்களை உருவாக்குவதில் பின்வந்தவர்களுக்கு முன்மாதிரியாக ரேனியஸே இருந்திருக்கிறார் என்பதை வரலாறு சுட்டுகின்றது. நெல்லை மாவட்டத்தின் வரைபடத்தில் இந்த இடங்களையெல்லாம் தேடி அவற்றை அடையாளங்காணும்போது உடல் எப்படியெல்லாம் புல்லரிக்கிறது தெரியுமா? ஒரு மாவட்டம் முழுதும் அருமையான கிறிஸ்தவ பெயர்களை சுமந்து இந்த 21ம் நூற்றாண்டிலும் நிலைத்து நிற்கும் இந்தக் கிராமங்கள் அறைகூவலிட்டு வெளிப்படுத்தும் அரும்பெரும் சீர்திருத்த கிறிஸ்தவ வரலாற்றை நாம் அறிந்திராமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே நம்மினத்தின் அவலட்சணமான நிலையைக் காட்டுகிறது.
ரேனியஸின் தமிழ் வேதமொழிபெயர்ப்பு
நெல்லைக்கு வந்த காலம் முதலே மொழிபெயர்ப்பு வேலையிலும், துண்டுப் பிரசுரங்களையும் நூல்களையும் எழுதி வெளியிடும் பணியில் ஈடுபட்டிருந்த ரேனியஸ் கிறிஸ்தவ வேதத்தைத் தமிழில் மொழிபெயர்க்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார். குறிப்பாக எந்த ஆண்டில் அந்தப்பணி ஆரம்பமானது என்பது தெரியவில்லை. இருந்தும் அவர் தன் நாட்குறிப்பில் 1819ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதியில், “தமிழ் பழைய ஏற்பாட்டில் உபாகமம்வரை மொழிபெயர்ப்பைத் திருத்தி முடித்தேன். பஞ்சாகமத்தை (பழைய ஏற்பாட்டில் முதல் ஐந்து நூல்கள்) அச்சிட முயற்சிக்கிறேன். ஆனால் அச்சடிப்பதற்கேற்ற தாள் கிடைக்கவில்லை. இப்போது புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பைக் கடந்த சில வாரங்களாகத் திருத்திக் கொண்டிருக்கிறேன்” என்றெழுதியிருந்தார். ஜெர்மானிய நாட்டு அரசர் மூன்றாம் பிரெட்ரிக் வில்லியம் அவர்கள் ரேனியஸுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து அவர் வேதாகம மொழிபெயர்ப்பில் கொண்டிருந்த ஆர்வத்தை ஓரளவு அறிந்துகொள்ளலாம். “தமிழ், தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாட்டு நகல்களுடன், மிஷன் ஊழியத்தைப் பற்றிய விபரத்தைக் கொடுத்து, நீர் 1818 செப்டம்பர் 21ம் நாளில் எழுதிய கடிதத்தைப் பெற்றதில் நாம் விசேஷித்த மகிழ்ச்சி அடைகிறோம் . . . மேலும், நீர் எம்மை நினைத்துக்கொள்ளுவதற்காக இக்கடிதத்துடன் தரும் பதக்கத்தை உமக்கனுப்பும்படிக் கட்டளை பிறப்பித்திருக்கிறோம்” (டிசம்பர் 30, 1820) என்று பிரெட்ரிக் வில்லியம் அரசர் ரேனியஸுக்கு எழுதியிருந்தார்.
நான் இதுவரை என் வாசிப்பு அனுபவத்தில் கண்டிருந்ததெல்லாம் ரேனியஸின் தமிழ் வேத மொழிபெயர்ப்பு பற்றிய குறைபாட்டைத்தான். அவருடைய மொழிபெயர்ப்பை இந்திய வேதாகமக் கமிட்டி ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தது. அதற்குக் கொடுக்கப்பட்டிருந்த காரணம் ரேனியஸின் மொழிபெயர்ப்பு ‘கொச்சைத் தமிழில்’ இருந்ததென்பதுதான். அத்தோடு ‘எழுத்துபூர்வமான’ மொழிபெயர்ப்பாக அவருடைய மொழிபெயர்ப்பு அமையவில்லை என்றும், இஷ்டத்துக்கு வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதுபோலவும் குற்றச்சாட்டுகள் இருந்திருப்பதை நான் அறிந்தேன். இந்தக் குற்றச்சாட்டுகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; காரணம் ரேனியஸ் அன்று தமிழகத்திலிருந்த மேலைநாட்டு மிஷனரிகள் அனைவரையும்விடத் தமிழில் அசாத்தியப் பாண்டியத்தியம் பெற்றவராக இருந்தது மட்டுமல்லாமல், எபிரெயர், கிரேக்கம் போன்ற மொழிகளிலும், இலத்தீன், பிரெஞ்சு, தெலுங்கு போன்ற மொழிகளிலும் பாண்டித்தியம் அடைந்திருந்தார். இத்தகைய பன்மொழிப் புலமை கொண்டிருந்த இறையியலறிஞருடைய மொழிபெயர்ப்பு கொச்சையாக இருந்ததென்பதை எப்படி ஏற்றுக்கொள்ளுவது? அத்தோடு மார்டின் லூத்தரின் வழி வந்த ஜெர்மானிய சீர்திருத்த இறையியலறிஞரான ரேனியஸ் கர்த்தரின் வேதத்தின் அதிகாரத்தில் ஆழ்ந்த ஆணித்தரமான நம்பிக்கை கொண்டவராக இருந்தார். அத்தகையவர் வேதமொழிபெயர்ப்பில் அசட்டலாக இருந்திருக்கிறார் என்பதையும் நம்பமுடியவில்லை. இதில் ஏதோ குழப்பமிருப்பதாக எனக்குத் தோன்றியதாலேயே நான் மேலும் ரேனியஸைப் பற்றி ஆய்வு செய்ய நேரிட்டது. அதிக காலங்கள் கிடைக்காமல் இருந்த பதிலை தனபால் தேவராஜின் இந்த நூல் எனக்களித்தது. இந்த உண்மைகளைத் தேவராஜ் ரேனியஸின் நினைவுக்குறிப்பில் இருந்து பெற்றுக்கொண்டிருந்திருக்கிறார் என்பதை ரேனியஸின் ஆங்கில நினைவுக்குறிப்பு பிரதியை வாசித்து அறிந்துகொண்டேன்.
வேதமொழியாக்கம் எப்படி அமைய வேண்டும் என்பதை விளக்கி ரேனியஸ் 60 பக்கங்களுக்கு மேல் ஓர் ஆக்கத்தை 1827ல் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டிருக்கிறார். அது நாகர்கோவில் மிஷன் அச்சகத்தில் அச்சிடப்பட்டிருக்கிறது. அதன் தமிழ் தலைப்பு ‘வேதாகம மொழிபெயர்ப்பு விதிகள்.’ அதில் முக்கியமாக கீழைத்தேய மொழிகளிலும், தமிழ் வேதமொழியாக்கத்திலும் இருக்கவேண்டிய முக்கிய அம்சங்களை விபரித்திருக்கிறார். இதை அவருடைய மகன் ரேனியஸின் நினைவுக்குறிப்பில் ரேனியஸின் வார்த்தைகளிலேயே சுருக்கமாக விளக்கியிருக்கிறார். தேவராஜ் அதை மேலும் சுருக்கித் தன் நூலில் தந்திருக்கிறார். ரேனியஸின் இந்த அறுபது பக்க ஆங்கில ஆக்கத்தின் முக்கியத்துவத்தையும், சிறப்பான அம்சங்களையும் நான் இன்னுமொரு ஆக்கத்தில் திறனாய்வுசெய்து எழுத விரும்புகிறேன். (அதைக் கூகுள் டிஜிட்டல் நூலகத்தில் கண்டுபிடித்துப் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன்). வேதமொழியாக்கம் பற்றிய முக்கியமான விஷயங்கள் அதில் காணப்படுவதால் இந்த இடத்தில் சுருக்கமாக ஒருசில அம்சங்களை மட்டும் விளக்கிவிடுகிறேன்.
இந்த ஆக்கத்தின் ஆரம்பத்திலேயே ரேனியஸ் வேதமொழியாக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கியிருக்கிறார். அத்தோடு, அதுபற்றிய பல்வேறு கருத்துவேறுபாடுகளும் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ரேனியஸ் சொல்கிறார், ‘வேதமொழியாக்கத்தில் நடைமுறையில் ஈடுபட்டு அதுபற்றிய விபரங்களை அறிந்திருக்கிறவர்களே வேதமொழியாக்கம் பற்றிய தகுதியான கருத்தைத் தெரிவிக்கமுடியும்.’ அவர் தொடர்ந்து, ‘அத்தகைய மொழியாக்கப் பணியில் அதுவும், வேதமொழியாக்கப்பணியில் சில வருடங்களாக ஈடுபட்டு வந்திருப்பதால் ஐரோப்பிய மொழிகள் போலில்லாதிருக்கும் தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்கிறபோது மூலமொழிகளில் காணப்படும் அர்த்தங்கள் மொழியாக்கம் செய்யப்படும் மொழியில் தரமாக அமைந்திருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்’ என்கிறார். இந்த முன்னுரையோடு அவருடைய விளக்கம் தொடருகிறது.
(1) ரேனியஸ் ‘எழுத்துபூர்வமான’ மொழியாக்கத்திற்கு முற்றிலும் எதிராக இருக்கவில்லை. அப்படியொரு குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது. அவர் எதை எழுத்துபூர்வமான மொழியாக்கம் என்று விளக்கியிருப்பதை அவர் தன் கையெழுத்திலேயே நாட்குறிப்பில் வெளியிட்டிருக்கிறார். ரேனியஸைப் பொறுத்தவரையில் எழுத்துபூர்வமான மொழியாக்கம் எப்போதும் எபிரெய, கிரேக்க மூலமொழிகளுக்கு இணையாக, அவற்றைத் தழுவி அமையவேண்டும்; ஏற்கனவே காணப்படும் ஆங்கில மொழியாக்கத்தை மட்டும் தழுவி அவை அமையக்கூடாது என்பதுதான். அத்தோடு, மூலமொழிகளில் காணப்படும் பழமொழிகள் போன்ற அணிவகைகள் மொழியாக்கம் செய்யப்படும் மொழியில் வாசகன் விளங்கிக்கொள்ளும்படியாக மூல அர்த்தங்கள் மாறாமல் மொழிபெயர்க்கப்பட வேண்டும். மூலமொழிகளில் இருப்பதை வார்த்தைக்கு வார்த்தை மட்டும் மொழிபெயர்த்தால் மொழிபெயர்க்கப்படும் மொழியில் பழமொழிகள் போன்றவற்றை எவராலும் விளங்கிக்கொள்ள முடியாது என்பது ரேனியஸின் வாதம். இதில் எந்தளவுக்கு மொழியாக்கம் செய்கிறவன் உரிமை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான முழு விளக்கத்தைத் தன் நாட்குறிப்பில் ரேனியஸ் தரவில்லை; இருப்பினும், மூலமொழிகளில் காணப்படும் அர்த்தம் ஒருபோதும் மொழியாக்கத்தில் மாறக்கூடாது என்பதை அவர் அழுத்தமாக விளக்கியிருக்கிறார். ரேனியஸைப் பொறுத்தவரையில் வாசகனுக்கு விளங்காத ஒரு வேதமொழிபெயர்ப்பால் எந்தப் பயனும் இல்லை. அதையே அவருடைய எழுத்தில் இருந்து உணரமுடிகின்றது.
ரேனியஸ் தன் ஆக்கத்தில் விளக்கியிருக்கும் ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்:
ஆதி 25:28 – எழுத்துபூர்வமாக எபிரெய மொழிப்படி – ஈசாக்கு ஏசாவை நேசித்தான், ஏனெனில் அவன் வாயில் மான் இறைச்சி இருந்தது. And Issac loved Eassu, because venision in his mouth.
மொழியாக்கம் தரும் அர்த்தம் – ஈசாக்கு ஏசாவை நேசித்தான், ஏனெனில் உண்பதற்கு அவன் மான் இறைச்சி கொண்டுவந்தான். And Issac loved Esau, because he brought him venision to eat.
இதில் இரண்டாவதான, மொழியாக்க அர்த்தத்தைத் தரும் வாக்கியத்தின்படியே ரேனியஸ் மொழியாக்கம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார். முதலாவதின்படி மொழிபெயர்த்தால் நம் வாசகர்களுக்கே அது சிரிப்பூட்டும். இன்று நாம் பயன்படுத்தும் பழைய திருப்புதலில் இது எப்படி மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்று கவனியுங்கள்.
‘ஏசா வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாக இருந்ததினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான்.’ (ப.தி. – இந்திய வேதாகம சங்கம்).
எபிரெய மூல மொழியில் ஈசாக்கு கொண்டு வந்தது ‘வேட்டை’ அல்லது ‘விளையாட்டு’ என்ற அர்த்தத்தில் காணப்படுகிறது. அதை அப்படியே மொழியாக்கம் செய்தால் எவருக்கும் பொருள் விளங்காது. உண்மையில் வேட்டையில் இருந்து கொண்டுவரப்பட்ட மிருக உணவையே அது குறிக்கிறது. தமிழ் வேத பழைய திருப்புதலில் ‘வேட்டையாடிக் கொண்டுவந்தது’ என்பது எழுத்துபூர்வமாக சரியாக இருந்தாலும் அது எதைக் கொண்டுவந்தான் என்று விளக்குவதாக இல்லை. முக்கியமான ஆங்கில மொழியாக்கங்கள் அனைத்தும் (NASB, NKJV, ESV – Game) ‘வேட்டை’ என்றே எழுத்துபூர்வமாக மொழிபெயர்த்திருக்கின்றன.
KJV 1611 மட்டுமே ‘மான் இறைச்சி’ Venision என்று மொழிபெயர்த்திருக்கிறது. இது மூலமொழியில் இல்லாதிருந்தபோதும், வேட்டையில் கிடைத்த உணவு இதுவாகத்தான் இருக்கும் என்ற ஊகத்தில் தரப்பட்டிருக்கிறது. ரேனியஸ் தன் மொழியாக்கத்தில் இதை ஏற்றுக்கொண்டார். அத்தோடு தமிழ் வேத பழைய திருப்புதல், ‘ருசிகரமாக இருந்ததனாலே’ என்ற மூலமொழியில் சொல்லப்படாததொரு வார்த்தைப்பிரயோகத்தை மேலதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறது. அது தேவையற்றது என்பதே என்னுடைய கருத்து. ஏனெனில் வேட்டையாடிக் கொண்டு வரப்பட்டதை ஈசா உணவாகக் கொண்டான் என்று மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறதே தவிர அவன் அதை ருசித்து சாப்பிட்டான் என்று சொல்லப்படவில்லை.
எபிரெய, கிரேக்கம் மற்றும் ஆங்கில மொழிகளில் காணப்படும் வசனங்களைத் தமிழில் மொழிபெயர்க்கும்போது அந்த வசனங்கள் எங்கு முடிகின்றனவோ அங்கிருந்தே மொழியாக்கம் ஆரம்பிக்கவேண்டும். அதேவேளை, வசனத்தில் காணப்படும் ஒழுங்கும் (எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்) தமிழுக்கு ஏற்றவிதத்தில் இலக்கணபூர்வமாக மாற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் இலக்கணபூர்வமாக தமிழ்மொழியாக்கம் அமைய முடியாது. எழுத்துபூர்வமாக மொழிபெயர்க்கவேண்டும் என்ற வைராக்கியத்தில் மூலமொழிகளில் இருப்பவற்றை அதே வசன ஒழுங்கின்படி தமிழில் மாற்றினால் இலக்கணப்படி அவை தவறான பொருளைத் தருபவையாக அமையும். இதை ரேனியஸ் பல்வேறு வேத வசன உதாரணங்களைக் கொடுத்துத் தன் ஆக்கத்தில் தெளிவாக விளக்கியிருக்கிறார். அத்தோடு யோவான் 5:18ல் Breaking the Sabbath என்பது ‘ஓய்வுநாளைக் கட்டவிழ்த்தார்’ என்றிருக்கக்கூடாது என்றும் அது ‘கைக்கொள்ளாமல்’ அல்லது ‘காத்துக்கொள்ளாமல்’ என்றிருக்கவேண்டும் என்று விளக்கியிருக்கிறார். கிரேக்க மூல வார்த்தை இந்த இடத்தில் ‘கட்டவிழ்ப்பது’ என்ற எழுத்துபூர்வமான அர்த்தத்தைக் கொண்டிருந்தாலும் அது இந்த வசனத்தின் சந்தர்ப்பத்திற்கேற்ப மொழியாக்கம் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் தமிழில் வசனம் பொருளற்றதாகிவிடும். பழைய திருப்புதலில் ‘மீறுதல்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது; அது சரியான மொழியாக்கமே. இப்படியாக தன் ஆக்கத்தில் ரேனியஸ் மேலும் எத்தனையோ உதாரணங்களைத் தந்து வார்த்தைகளும், வசனங்களும் மூலமொழியின் அர்த்தம் மாறாதபடி எப்படித் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும் என்று விளக்கியிருக்கிறார். வார்த்தைகளையும் வசனங்களையும் இணைக்கும் இணைப்பு வார்த்தைகளும் (Conjuctions) மூலத்தில் இருப்பதுபோல, அதேவேளை தமிழில் பொருளோடு காணப்படும்படியாக எப்படி மொழியாக்கத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று ரேனியஸ் தந்திருக்கும் விளக்கங்கள் தமிழைக் கற்றுத் தமிழில் எழுதி வரும் என்னையே தூக்கிவாரிப்போடச் செய்கின்றது.
ரேனியஸ் ஏற்கனவே இருந்த தமிழ் வேதமொழியாக்கத்தில் காணப்பட்ட தவறுகளையும் சுட்டி, அவை எப்படி மொழியாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று விளக்கியிருக்கிறார். அன்றிருந்தது பெப்ரீஷியஸின் மொழியாக்கமாகத்தான் இருந்திருக்க வேண்டும். அதை ரேனியஸ் திருத்திப் புதுமொழிபெயர்ப்பொன்றைப் புதிய ஏற்பாட்டில் கொண்டுவந்திருந்தார். அவருக்கு எந்தளவுக்கு தமிழ் இலக்கணப் பாண்டித்தியம் இருந்திருக்கிறது என்பதை வாசித்து மலைத்துப்போகத்தான் முடிகிறது.
மேலே நாம் கவனித்திருக்கும் ரேனியஸின் விளக்கத்தில் என்ன தவறிருக்கிறது? ரேனியஸின் விளக்கத்தில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், இங்கிலாந்து வேதமொழியாக்கக் கமிட்டி, தமிழ் மொழியாக்கம் எந்தவிதத்திலும் மாறாமல் அன்று காணப்பட்ட ஆங்கில மொழியாக்கத்தை (1611) மட்டுமே தழுவிக் காணப்பட வேண்டும் என்று வற்புறுத்தினர். எபிரெய, கிரேக்க, தமிழ் மொழிப் பண்டிதராக இருந்த ரேனியஸுக்கு இது அடியோடு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் எத்தனையோ பிழைகள் இருப்பதை அவற்றை மொழிபெயர்த்திருக்கும் கமிட்டிகளே ஒத்துக்கொண்டிருக்கும்போது, அத்தவறுகளைத் திருத்தாமல் தொடர்ந்து தமிழில் கொண்டுவருவது சரியல்ல என்று ரேனியஸ் வாதம் செய்தார். அதனால் மூலமொழிகளான எபிரெயம், கிரேக்க மொழிகளில் இருந்தே எந்தத் திருத்திய மொழியாக்கமும் செய்யப்பட வேண்டும் என்றார் ரேனியஸ். இதுதான் நடந்த உண்மை; அதை ரேனியஸே தன் நாட்குறிப்பில் விளக்கியிருக்கிறார். இந்த விஷயத்தில் ரேனியஸ் மீது எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
(2) அடுத்ததாக, தமிழில் பாண்டித்தியம் அடைந்திருந்த ரேனியஸ் இன்னுமொரு முக்கிய அம்சத்தைத் தன் நாட்குறிப்பில் விளக்கியிருக்கிறார். அதாவது, அவர் வாழ்ந்த 19ம் நூற்றாண்டுக் காலத்தில் கல்வியறிவு பெரும்பாலும் பிராமணர்களுக்கே இருந்தது. அத்தோடு அவர்கள் பயன்படுத்திய தமிழ் கவித்துவமுள்ள செய்யுள் தமிழாகப் பெரும்பாலும் பேச்சிலேயே பயன்படுத்தப்பட்டு வந்திருந்தது. எழுதப்பட்ட எதுவும் சிற்றோலைகளில் எழுதப்பட்டிருந்தன. கற்றவர்கள் இந்தச் செய்யுள் தமிழை வாய்க்கு வாய் பரிமாறி வந்திருந்தார்கள். இந்தத் தமிழின் வார்த்தைகள் கடுமையானவையாக கல்லாதவர்களால் புரிந்துகொள்ள முடியாதபடி இருந்தன. கம்ப இராமாயணம் அல்லது இரட்சணிய யாத்திரிகம் நூல்களின் தமிழ் இதற்கு உதாரணங்கள். இவற்றைக் கல்வியறிவில்லாதவர்களால் வாசித்துப் புரிந்துகொள்ள முடியாது. அதனாலேயே அவற்றிற்கு பிற்காலத்தில் பொழிப்புரைகள் (உரைநடை விளக்கங்கள்) எழுதப்பட்டன. இந்தத் தமிழை அன்று ‘கொடுந்தமிழ்’ என்று அழைத்தனர். இதைப் பயன்படுத்தி வேதமொழியாக்கம் செய்வது முட்டாள்தனம் என்பது ரேனியஸின் நம்பிக்கையாக இருந்தது. மேலும், இதற்கு எதிர்மாறாக சாதாரண மக்கள் அன்றாடம் பேசி வந்த தமிழ் இலக்கணபூர்வமாக இல்லாமலும் மொழிக்குரிய கட்டமைப்பில்லாமலும் மிகவும் கொச்சையாக இருந்தது. அதுவும் எழுத்தில் காணப்படாத பேச்சுவழக்கு. அதையும் கொடுந்தமிழாகக் கருதி வேதமொழியாக்கத்திற்குப் பயன்படுத்தக்கூடாது என்று ரேனியஸ் நம்பினார். அதனால் இந்த இரண்டுக்கும் இடைப்பட்டுக் காணப்படும் ‘செந்தமிழில்’ எல்லோரும் விளங்கிக்கொள்ளக்கூடிய தமிழில் தமிழ் வேதமொழிபெயர்ப்பு அமைய வேண்டும் என்பது ரேனியஸின் வாதமாக இருந்தது. ரேனியஸ் குறிப்பிடும் இந்தச் செந்தமிழே 19ம் நூற்றாண்டில் வளர ஆரம்பித்திருந்த உரைநடை. இருந்தபோதும் இந்த உரைநடையை வெறும் ‘வாசகம்’ என்றும், அழகணிகளற்ற பேச்சுமொழி என்றும் கற்றவர்கள் ஒதுக்கியதாக ரேனியஸ் தன் நாட்குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
இறுதியாக ரேனியஸின் நினைவுக்குறிப்பைத் தொகுத்தளித்திருக்கும், ஸ்கொட்லாந்தில் கல்விகற்றிருந்த அவருடைய மகன், தன் தந்தையின் வேதமொழிபெயர்ப்பைப் பற்றிக் குறிப்பிடும்போது, “ரேனியஸின் மொழியாக்க விதிகள் பற்றிய எத்தகையக் கருத்துவேறுபாடுகள் இருப்பினும், பொதுவாகவே அவருடைய தமிழ் வேதமொழிபெயர்ப்பு பெப்ரீஷியஸினுடயதைவிடத் திறமானதாகவும், மேலானதாகவும் இருந்தது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதில் ஒரே வருத்தம் ரேனியஸ் இறப்பதற்கு முன் அவருடைய மொழிபெயர்ப்பு நிறைவாகவில்லை என்பதுதான். அவருடைய புதிய ஏற்பாடு முதலில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது; ஆனால், பழைய ஏற்பாட்டின் பல நூல்களை ரேனியஸ் இறக்குமுன் மொழிபெயர்க்க ஆரம்பிக்கவில்லை” என்றெழுதியிருக்கிறார்.
இறுதியில் ரேனியஸ் தன் நாட்குறிப்பில் மார்ச் 13ம் நாள், 1827ல், “தமிழ் வேதமொழிபெயர்ப்பு பற்றிய விஷயத்தில் எனக்கிருந்த தடைகள் அகன்று அச்சிடும் பணி தொடருகின்றதை அறிந்து நான் மகிழ்ந்தேன். மாற்கு சுவிசேஷம் அச்சகத்திலிருந்து வெளிவந்துவிட்டது. லூக்காவை அச்சிடும் பணியும் ஆரம்பித்துவிட்டது. மொழிபெயர்ப்புக் கமிட்டியோடு நான் ஒரு கூட்டம் கூடினேன். அதில் எங்களுக்கிடையில் இருந்த சில கேள்விகளையும், சந்தேகங்களையும் நாம் நிவர்த்திசெய்தோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். எவ்வாறிருந்தபோதும் ரேனியஸின் புதிய ஏற்பாட்டு தமிழ்மொழிபெயர்ப்பு இன்று கையில் கிடைக்காமலேயே இருக்கிறது. இன்று பரவலாகத் தமிழ் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தி வரும் தமிழ் வேதமொழிபெயர்ப்பும் அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
ரேனியஸ், சி.எம்.எஸ். முரண்பாடு
நான் ஏற்கனவே விளக்கியிருந்தபடி ரேனியஸ் தன்னுடைய இறையியல் கல்லூரியில் பயிற்சியளித்து சபைகளை நிர்வகிக்க உபதேசியாரை அனுப்பிய முறையே அவருக்கும் கல்கத்தாவில் இருந்த பிஷப் டேனியல் வில்சனுக்கும் பிரச்சனையை உண்டாக்கியது. அது ரேனியஸின் இறுதிக்காலத்தில் நிகழ்ந்தது. சி.எம்.எஸ். நிறுவனத்தின் அதிகாரத்தை மீறி அவர் நடந்துகொள்வதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவரைப் பிடிக்காதிருந்த சிலரும் கல்கத்தா பிஷப்புக்குத் தவறான செய்திகளை அனுப்பி இறுதியில் ரேனியஸ் தன் ஊழியப்பணியில் இருந்து நீக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமான கட்டத்தை அடைந்தது. ரேனியஸினால் உருவாக்கப்பட்ட சபைகளில் பெரும்பகுதி இதை எதிர்த்து அவருக்குச் சாதகமாக அவரோடு நின்றிருந்தன. ரேனியஸ் 154 சபைகளும், 5581 விசுவாசிகளும், 67 உபதேசிமாரும் தன் பக்கம் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய எதிரிகள் நிச்சயம் இதற்கு மாறான தொகையே கொடுத்திருக்கின்றனர்.
ரேனியஸைப் பிடிக்காத சிலர் இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி அவருக்கெதிராகச் செயல்பட்டு அவரைப் பதவிநீக்கம் செய்யத் துணைபுரிந்திருக்கின்றனர். இது நிகழ ரேனியஸ் எந்தவிதத்திலும் தவறே செய்யவில்லை என்று என்னால் வாதாட முடியாது. ஒரு சில விஷயங்களில் அவர் நிதானமாக நடந்துகொண்டிருந்திருக்கலாம். ஆனால், ரேனியஸைவிட அவருடைய எதிரிகளே உலக ரீதியில் நடந்து, தங்களுடைய சுயநல நோக்கத்தினால் ரேனியஸை உதறித்தள்ளும் நிலையை உருவாக்கினர். இதுபற்றி தேவராஜின் நூலில் நீங்கள் விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த வருத்தமளிக்கும் செயலைப்பற்றிய நீண்ட விளக்கமளிக்க நான் விரும்பவில்லை. இங்கிலாந்தின் ஆங்கிலேய மிஷன் நிறுவனத்துக்கு எதிராக எந்தவிதத்திலும், சிந்திக்கவோ செயல்படவோ கூடாது என்ற ஒரே நோக்கத்தில் ரேனியஸின் செயல்களுக்குத் தவறான நோக்கம் கற்பித்து அவர் மீது எதிரிகள் நடவடிக்கை எடுத்தார்கள் என்பது மட்டுமே உண்மை. தன் பக்கத் தவறுக்கு ரேனியஸ் பெரிய மனதுடன் மன்னிப்புக் கேட்டிருந்தும், எதிரிகளுக்கு அது சமாதானமளிக்கவில்லை. இறுதியில் ரேனியஸ் தன்னோடிருந்த சபைகளைத் தொடர்ந்து வழிநடத்த ஒரு புதிய மிஷன் நிறுவனத்தை (ஜெர்மானிய இவெஞ்சலிக்கல் மிஷன்) ஏற்படுத்தித் தான் மரிக்கும்வரை அவற்றை வழிநடத்தி வந்திருந்தார். அவருடைய ஊழியத்தின் கீழ் தொடர்ந்தும் புதிய சபைகள் உருவாயின. இந்த விபரங்களை ரேனியஸின் மகன் எழுதி வெளியிட்டிருக்கும் 626 பக்கமுள்ள நினைவுக்குறிப்பை வாசித்து அறிந்துகொள்ளலாம். ரேனியஸ் 1838ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி கர்த்தரின் பாதத்தை அடைந்தார். அவருடைய உடல் ஜூன் 7ம் நாள் பாளையம்கோட்டையில், அவரே ஏற்படுத்திய கிறிஸ்தவ கிராமமான அடைக்கலபுரம் என்ற இடத்தில் கல்லறையில் வைக்கப்பட்டது. ஒரு மாபெரும் அருட்பணி ஊழியர் தன் உன்னத ஊழியத்தின் சிறப்பை வரையறுக்கும் பணியைக் காலத்தின் கரத்தில் ஒப்படைத்துவிட்டு இவ்வாறாகத் தான் விசுவாசித்துப் பின்பற்றிய கிறிஸ்துவின் பாதத்தை அடைந்தார்.
ரேனியஸின் அரும்பெருஞ்சிறப்புகள்
- அப்போஸ்தலர்களை நினைவுபடுத்தும் அப்போஸ்தலப்பணி – அப்போஸ்தலப்பணி என்ற பதத்தைப் பயன்படுத்துவதற்குக் காரணம் புதிய ஏற்பாட்டுத் திருச்சபை அமைப்பில் வேதம் விளக்கும் அப்போஸ்தலர்கள் கையாண்டிருக்கும் அதே முறைகளைப் பின்பற்றி அவர்களைப்போலத் திருச்சபை அமைப்பை மையமாகக் கொண்டு பன்முகப்பட்ட அருட்பணி புரிந்திருக்கும் ரேனியஸைப்போன்ற சீ¢ர்திருத்தப் போதனைகளில் ஊறிப்போய் வைராக்கியமாய் உழைத்து மெய்யான கிறிஸ்தவ எழுப்புதலைத் தன் வாழ்நாளில் சந்தித்திருந்த மிஷனரிகள் வேறு எவருமில்லை. சுவிசேஷகராக, போதகராக, இறையியலறிஞராக, எழுத்தாளராக, மொழியியல் வல்லுனராக, வேதமொழியாக்க வித்தகராக, இறையியல் பேராசிரியராக, திருச்சபை அமைப்பாளராக, பொதுக்கல்வியில் தேர்ந்தவராக, கிறிஸ்தவ கிராமங்களை உருவாக்கியவராக, திருச்சபை கட்டடங்களைக் கட்டியவராக, சமூகப்பணியாற்றியவராக இத்தனைப் பன்முகப்பட்ட பணிகளை ஆற்றியிருக்கும் இவரைப்போன்ற இன்னொருவரை வரலாற்றில் அடையாளம் காண்பதரிது. சி.எம்.எஸ்ஸுக்குக் கீழிருந்து தலையாட்டிப் பொம்மையாக ஒரு குறிப்பிட்ட பணியை மட்டும் செய்து அவர்களைத் திருப்திப்படுத்தும் பணியாளராக ரேனியஸ் இருக்கவில்லை. சுவிசேஷத்தைச் சொல்லுவதில் ஆரம்பித்து திருச்சபைகளை எங்கும் அமைத்து, திருச்சபைப் பணிக்கு இன்றியமையாத போதகர்களை உருவாக்குதல், அவர்களுக்குக் கல்வியளிக்கும் இறையியல் கல்லூரிகளை அமைத்துப் போதிப்பது, அவர்களுக்கும், ஆத்துமாக்களுக்கும் தேவையான கிறிஸ்தவ இலக்கியங்களைப் படைப்பது, நிவாரண உதவிகளைச் செய்வது என்று முழுமையான அப்போஸ்தலப்பணிக்குரிய இலக்கணங்கள் அனைத்தையும் அவருடைய ஊழியம் கொண்டிருந்ததால்தான் அவர் ‘நெல்லையின் அப்போஸ்தலன்’ என்று அழைக்கப்பட்டார். இதை அன்று வேறெவரும் இவரளவுக்குச் செய்திருக்கவில்லை. நவீன காலத்து கிறிஸ்தவ வரலாற்றறிஞர்களில் சிலர் வில்லியம் கேரியை ‘நவீனகால அருட்பணி ஊழியத்தின் தந்தை’ (Father of Modern Missions) என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதைக் குறைகூறும் தகுதி எனக்கில்லாவிட்டாலும், வில்லியம் கேரியின் அருட்பணியின் தரத்தை ஒருபோதும் நான் குறைத்து மதிப்பிடாவிட்டாலும், ரேனியஸை நான் ‘நவீனகாலத்தின் அப்போஸ்தலப்பாணி அருட்பணி ஊழியத்தின் தந்தை’ (Father of Apostolic Modern Missions) என்று அழைக்க விரும்புகிறேன். ஏனெனில், என்னைப்பொறுத்தவரையில் 19ம் நூற்றாண்டில் அத்தகைய பணியைச் செய்திருப்பவர்கள் வேறு எவருமில்லை.
- ரேனியஸ் முற்றுமுழுதுமாக சீர்திருத்த இறையியலை விசுவாசித்து அதில் வளர்ந்து வைராக்கியத்தோடு அதன் அடிப்படையில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து நெல்லையெங்கும் சீர்திருத்த திருச்சபை அமைத்தவர். இந்தவிதத்தில் சீர்திருத்த இறையியலை சத்திய முரண்பாடெதுவுமின்றிப் பின்பற்றி சீர்திருத்த திருச்சபைகளைக் கட்டுக்கோப்புடன் அமைத்த எந்த அருட்பணியாளரும் சீர்திருத்த திருச்சபை ஊழியத்தில் தமிழகத்தில் ஈடுபட்டதில்லை. ரேனியஸை வெறும் லூத்தரன் மிஷனரியாக சபைப்பிரிவுகளின் (Denominations) அடிப்படையில் மட்டும் கணிப்பது அவருக்கும், வரலாற்றுக்கும் நாமிழைக்கும் பெரும் தீங்கு. ரேனியஸ் 16ம் நூற்றாண்டின் சீர்திருத்தவாத கிறிஸ்தவத்திலும், 17ம் நூற்றாண்டின் பியூரிட்டன் கிறிஸ்தவத்திலும் ஊறித்திளைத்திருந்தவர். அவருக்கு மார்டின் லூத்தர் மற்றும் கல்வினின் போதனைகள் மட்டுமல்லாமல், பியூரிட்டன்களான தோமஸ் வொட்சன், ரிச்சட் பெக்ஸ்டர் போன்றோரின் பியூரிட்டன் இறையியலும் பரிச்சயமாயிருந்தது. அத்தகைய சீர்திருத்தப் போதனைகளையே அவர் தன் இறையியல் மாணவர்களுக்கும், திருச்சபைக்கும் போதித்து வந்திருக்கிறார்; எழுத்திலும், பிரசங்கத்திலும் வார்த்திருக்கிறார். இதில் இவருக்கு நிகராக அன்று எவரும் தமிழகத்தில் இருந்ததில்லை.
- தனிப்பட்டவிதத்தில் எவருக்கும் சுவிசேஷத்தைச் சொல்லுவதில் அளப்பரிய ஆர்வமும் ஆற்றலும் கொண்டவராக ரேனியஸ் இருந்தார். இந்த சுவிசேஷத் தாகத்தை இவர் மொரேவியர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டிருந்திருக்கிறார். எங்கு யாரைச் சந்தித்தாலும் அவர் கிறிஸ்தவ சுவிசேஷத்தைச் சொல்லாமல் விட்டதில்லை. அவருடைய சுவிசேஷம் சொல்லும் ஆர்வமும், வைராக்கியமும், ஆற்றலும் ஆவியின் அருளால் அவருடைய சுவிசேஷ ஊழியத்தைப் பன்மடங்கு பெருகவைத்தது.
- தமிழ் வேதத்தைத் தகுந்த மொழிநடையில் தமிழர்களுக்கு அளிக்கவேண்டும் என்று பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடைசிவரை உழைத்தவர் ரேனியஸ். புதிய ஏற்பாடு முழுவதையும், பழைய ஏற்பாட்டில் சில பகுதிகளையும் அவர் மொழிபெயர்த்திருக்கிறார். புதிய ஏற்பாடு முழுவதும் முதலில் அச்சிடப்பட்டது. ஏனையோருடையதைவிட அவருடைய தமிழாக்கம் நல்ல தமிழில் மூலமொழிகளைத் தழுவியதாக மிகச் சிறப்பாக இருந்ததென்பதே பலரின் பொதுவான கருத்து.
- தமிழில் மிகவும் தரமான கிறிஸ்தவ இலக்கியங்கள் பலவற்றைப் படைத்திருக்கிறார் ரேனியஸ். அவர் முறைப்படுத்தப்பட்ட இறையியல் (நான்காம் பதிப்பு 1852, 415 பக்கங்கள்), வினாவிடைப் போதனை, சபை சரித்திரம், கிறிஸ்தவ வேதபோதனைகள், சுவிசேஷக் கையேடுகள் என்று தமிழில் எழுதிக்குவித்திருந்த படைப்புகள் ஏராளம். இவரளவுக்குத் தமிழில் 19ம் நூற்றாண்டில் சீர்திருத்த கிறிஸ்தவ இலக்கியப்பணி செய்திருக்கும் இன்னொருவரை நினைத்தும் பார்க்க முடியவில்லை.
- சாதிவேறுபாடுகளற்ற பொதுக்கல்விக்கு முக்கியத்துவமளித்து நெல்லை முழுவதும் 400 பள்ளிகளை ஸ்தாபித்திருந்ததோடு, சிறப்புமிக்க பூலோகவியல் நூலொன்றை முதன் முறையாகத் தமிழில் எழுதி வெளியிட்டிருக்கிறார் ரேனியஸ். பொதுக்கல்விக்கு அவசியமான பல நூல்களை அவர் எழுதியிருக்கிறார். பெண்களுக்கான கல்வித் தளங்களையும் அவர் நிறுவினார். பொதுக்கல்விக்கு பெருமுக்கியத்துவமளித்த சீர்திருத்த அறிஞர் ரேனியஸ்.
- கர்த்தரின் துணையோடு குறுகிய காலப்பகுதியில் (18 வருடங்கள்) நெல்லை மாவட்டமெங்கும் இவரைப்போல 371 திருச்சபைகளை அமைத்த அசாத்திய செயலைச் செய்த இன்னொருவரை நான் வரலாற்றில் வாசித்ததில்லை. இந்தத் திருச்சபைகளில் பெரும்பாலானவை கிராம சபைகளாக இருந்தபோதும் அவை அனைத்தும் வேதபோதனைகளைத் தழுவிய நடைமுறை அமைப்பைக் கொண்டிருந்தன.
- தமிழில் குறுகிய காலத்தில் பாண்டித்தியம் அடைந்து அதற்கு இலக்கண நூலைப் படைத்து, அம்மொழியில் பலரும் பாராட்டுமளவுக்குச் சிறப்பாகப் பிரசங்கித்திருக்கும் ரேனியஸ் அளவுக்கு எந்த வெளிநாட்டு மிஷனரியும் தமிழில் சரளமாகப் பிரசங்கித்துப் போதித்ததில்லை. அவர் பிரசங்க வரத்தை மட்டும் கொண்டிராமல், தமிழில் அருமையாகப் பிரசங்கிக்கும் ஈவையும் பெற்றிருந்தார். 1830ல் நெல்லைக்கு வருகை தந்த சென்னை ஆர்ச் டீக்கன் ரொபின்சன் ஐயர் ரேனியஸின் சுவிசேஷப் பணியையும், பிரசங்கத்தையும் நேரில் கேட்டுப் பின்வருமாறு எழுதியிருக்கிறார்,
“ரேனியஸ் இந்நாட்டினர்க்கேற்ற முறையில் உயிர்த்துடிப்பும் பாண்டித்தியமுமுள்ள தமிழில் பேசுவது அவர்களை ஆச்சரியப்படத்தக்க விதமாகக் கவர்ச்சிக்கிறது. நாங்கள் அப்போது நெல்லையப்பர் கோவில் பிரகாரத்தில் நடந்துகொண்டிருந்தோம். திரளான மக்கள் எங்கள் பின்னால் வந்தனர். ரேனியஸ் சிறிது சிறிதாக அவர்களிடம் கேள்விகள் கேட்டு, விடைகளைத் தருவித்து அப்படியே பிரசங்கத்தை ஆரம்பித்துவிட்டார். அக்கூட்டத்தினர் தூண்களைச் சுற்றி நின்றும், குளத்தைச் சுற்றிலும் நின்று கொண்டும், மண்டபத்தில் அமர்ந்தும், மூச்சு விடும் சத்தம்கூடக் கேளாத அளவு வெகு அமைதியாகக் கேட்டார்கள். உற்சாகத்துடன், தெளிவாகவும், தைரியமாகவும், ஆழமாகப் பதியத்தக்க விதமாகவும், ஏற்ற எடுத்துக்காட்டுக்களுடனும் அவர் பேசினார். அம்மக்களின் மொழியை மட்டுமல்ல, அவர்களது உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் அவர் ஆட்கொண்டு விட்டார்.”
- ஜெர்மானிய தேசத்தவராக இருந்தபோதும் எபிரெயம், கிரேக்கம், லத்தீன், பிரெஞ்சு, தமிழ் (300 பக்கங்கள்) தெலுங்கு என்று பன்மொழி வித்தகராக அம்மொழிகளனைத்திலும் இலக்கண நூல்கள் எழுதி வெளிட்டிருக்கிறார் ரேனியஸ். தன்னுடைய தமிழ் இலக்கண நூலை ஆங்கிலத்திலும் அவர் வெளியிட்டார். தன் இறையியல் மாணவர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்றுக்கொள்ள அவர் வழிவகுத்திருந்தார்.
- மிஷனரியாக, போதகராக இருந்தது மட்டுமன்றி சீர்திருத்த இறையியலறிஞராக, இறையியல் கல்லூரி நிறுவி இறையியல் பேராசிரியராக அநேகருக்கு இறையியல் பயிற்சியளித்து உபதேசகர்களாக திருச்சபைகளில் பணிபுரியவைத்தார் ரேனியஸ். அவருடைய இறையியல் புலமைக்கு அவர் எழுதிவெளியிட்டிருக்கும் முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூலும் ஏனைய நூல்களுமே சான்று.
- ரேனியஸ் ஓய்வுநாளான ‘சபத்து நாளுக்கு’ முக்கியத்துவம் கொடுத்து அதைக் கர்த்தருடைய நாளாகக் கருதி முழுநாளையும் பரிசுத்தமாக வைத்திருப்பதில் அக்கறை காட்டியிருக்கிறார். இந்த ஓய்வுநாள் தத்துவத்தை அவர் 16ம் நாற்றாண்டு, 17ம் நூற்றாண்டு சீர்திருத்தவாத, பியூரிட்டன்களிடம் இருந்து கற்றுக்கொண்டிருந்தார். ரேனியஸின் ஆங்கில நாட்குறிப்பில் ஒவ்வொரு ஓய்வுநாளையும் அவர் ‘சபத்து’ என்றே எழுதியிருக்கிறார்; அத்தோடு ‘சபத்து நாளில்’ பிரசங்கம் செய்தேன் போன்ற வரிகளையும் அவருடைய நாட்குறிப்பில் ஏராளமாகக் காணலாம். அந்தளவுக்கு அன்றைய 19ம் நூற்றாண்டில் உணர்வோடு ‘சபத்து நாளை’ (ஓய்வுநாளை) ஒழுக்க நியதிக்கோட்பாடுகளில் ஒன்றாகக் கருதித் தன் வாழ்வில் பின்பற்றியதோடு, திருச்சபைக்கும் ரேனியஸ் போதித்து வந்திருக்கிறார் என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
- ரேனியஸின் திருச்சபைக் கோட்பாடும், ஆராதனை முறைகளும் ஆங்கிலிக்கன் முறைப்படியல்லாமல் இங்கிலாந்தில் ஆங்கிலிக்கன் திருச்சபையில் இருந்து திருச்சபை சீர்திருத்தத்திற்காக வெளியேறிய பியூரிட்டன் பெரியவர்களின் (Nonconformist Puritan Dissenters) முறைப்படி அமைந்திருந்தன. திருவிருந்தை அவர் எல்லோரும் அமர்ந்திருந்து ஒருவர் எடுத்தபின் அமர்ந்திருந்த நிலையிலேயே இன்னொருவருக்குக் கொடுக்கும் முறையில் வேதபூர்வமாகச் செய்திருந்தார். அதில் எந்தவிதக் கத்தோலிக்க, ஆங்கிலிக்கன் பிரிவின் வாடையும் அடிக்கவில்லை. அவர் பியூரிட்டன்களைப்போல ஆராதனையில் ஆங்கிலிக்கன் பொதுஜெப நூலைப் பயன்படுத்தவில்லை. திருமுழுக்கு எடுக்க வருகிறவர்கள் நெற்றியில் அவர் ஒருபோதும் சிலுவைக் குறியைப் போடவில்லை. ஆராதனையில் அவர் தானே தமிழில் மொழிபெயர்த்திருந்த ஆண்டவரின் ஜெபத்தைப் பயன்படுத்தினார். ஜெர்மானிய லூத்தரன் ஆராதனைப் பாடல்களை அவர் ஆராதனையில் பயன்படுத்தினார். அவரே முதன் முதலாக சபத்து ஓய்வுநாளில் காலையிலும், மாலையிலும் ஆராதனை நடத்தும் முறையைத் தான் ஏற்படுத்தியிருந்த அத்தனைக் கிறிஸ்தவ திருச்சபைகளிலும் அறிமுகப்படுத்தியவர். அவர் பியூரிட்டன்களின் வரையறுக்கப்பட்ட வேத ஆராதனைத் தத்துவத்தை ஆராதனையில் முற்றாகப் (Regulative Principles of Worship) பின்பற்றியிருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. (D. Issac Devadoss, IJT 46/1&2 (2004), pp 82-98). இத்தகைய காரணங்களால்தான் நான் ரேனியஸை ‘19ம் நூற்றாண்டுத் தமிழகத்தின் பியூரிட்டன் அருட்பணியாளர்’ என்று அழைக்க விரும்புகிறேன்; அதுவே உண்மையுங்கூட.
- ரேனியஸ் இங்கிலாந்தின் ஆங்கிலிக்கன் திருச்சபைக் கோட்பாட்டைப் பின்பற்றவில்லை. அது வேதத்தைச் சார்ந்த முறையல்ல என்பது அவருடைய நம்பிக்கை. சுவிசேஷ அப்போஸ்தலப் போதனைகளுக்கு அது மாறானது என்று அவர் அறிந்துணர்ந்திருந்தார். இதைப்பற்றிக் கருத்துத் தெரிவித்து அவர் எழுதியதொரு ஆக்கமே அவரைப் பிரச்சனைக்குள் தள்ளியது. ஆங்கிலிக்கன் பிரிவில் காணப்பட்ட பிஷப் (Bishop), மதகுரு (Priest), உதவிக்காரர்கள் என்ற மூன்று வகை சபை அதிகாரப் பிரிவுகளை அவர் நிராகரித்தார். பிஷப், ஏனைய சபை அதிகாரிகளுக்கு மேலதிகாரியாக இருக்கும் முறை அப்போஸ்தலர்களுடைய கோட்பாடுகளில் காணப்படவில்லை என்று அவர் உறுதியாக நம்பினார் (D. Issac Devadoss). இந்த முறைகளுக்கெதிரான ரேனியஸினுடைய வாதங்கள் முழுவதும் வேதத்தை முற்றுமாகத் தழுவி அமைந்திருந்தன. ரேனியஸ் வேதக்கோட்பாடுகளின்படியான திருச்சபை அமைப்பை நம்பியது மட்டுமல்லாமல், தான் உருவாக்கிய சபைகள் அனைத்தும் அவற்றைப் பின்பற்றும்படியாகவும் போதித்து வந்திருந்தார். ஆங்கிலிக்கன் மிஷன் நிறுவனத்திற்கும் ரேனியஸுக்கும் பிரச்சனைகள் உருவாக ரேனியஸின் ஆராதனை மற்றும் திருச்சபைபற்றிய கோட்பாடுகளே முக்கிய காரணமாக இருந்தன. இத்தனையும் அன்று அவருக்கும் ஆங்கிலிக்கன் மிஷனுக்கும் இடையில் பிரிவை உண்டாக்கி திருச்சபைகளுக்கு மத்தியிலும் பிரிவை ஏற்படுத்தின. இதன் காரணமாகவே சிலர் ரேனியஸைப் பற்றி ‘பிரிவினைவாதி’ (Schismatic) என்று தவறாக அழைத்து அவருடைய பெயரைக் கலங்கப்படுத்த முயன்றிருக்கிறார்கள். வேதத்தை மட்டுமே பின்பற்றிச் செயல்பட வேண்டும் என்ற ரேனியஸின் கோட்பாடுகளில் எந்தத் தவறும் இல்லை; அதனால் ஏற்பட்ட கோட்பாட்டுப் பிரிவினையிலும் எந்தத் தவறும் இல்லை. உலக ரீதியிலான திருச்சபை ஒற்றுமைக்காக சத்தியத்தைத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு போலிச்சமயசமரசவாதியாக, இறையியல் பச்சோந்தியாக வாழ்வதற்கு ரேனியஸ் தயாராக இருக்கவில்லை. அன்று உண்டான அந்தப் பிரிவினையை சுயநலநோக்கோடு ரேனியஸுக்கு எதிராகப் பயன்படுத்தி ஆதாயம் தேடிக்கொண்ட அன்றைய ஆங்கிலிக்கன் மிஷனே எந்தவித சத்தியத்தாகமும் இல்லாமல் உலகப்பிரகாரமாக நடந்துகொண்டிருந்திருக்கிறது. அதன் கையாட்களாகத்தான் கல்கத்தா பிஷப்பாகிய டானியேல் வில்சன், டக்கர் ஐயர், ஹாப்பர் ஆகியோர் செயல்பட்டிருக்கின்றனர். இவர்கள் ஆங்கிலிக்கன் திருச்சபையில் இருந்து வேதநம்பிக்கையின் காரணமாகப் பிரிந்துபோன பியூரிட்டன்களை நினைத்துப் பார்க்கவில்லை. ரேனியஸ் பிரிவினைவாதியாக இருந்திருந்தால் அத்தனைப் பியூரிட்டன்களுமே வரலாற்றில் தவறுசெய்திருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். இயேசு கிறிஸ்து எதைச்செய்திருப்பாரோ அதையே 17ம் நூற்றாண்டு பியூரிட்டன்களும், 19ம் நூற்றாண்டு ரேனியஸும் செய்திருந்தார்கள்.
1833ல் பாளையங்கோட்டைக்கு வந்த பிரசித்திபெற்ற முக்கிய மனிதர் ஜெர்மானிய தேசத்தைச் சேர்ந்த டாக்டர் ஜோசப் உல்ப்வ். இவர் யூதக் கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் ஊழியம் செய்து வந்த மிஷனரி. இவர் ரேனியஸோடு சில காலம் தங்கியிருந்து அவரின் அருட்பணியைக் கண்ணாரக் கண்டவர். பாளையங்கோட்டையிலும் இவர் கூட்டங்களில் பேசியிருக்கிறார். 1835ல் அவர் எழுதிய நூலொன்றில் ரேனியஸைப் பற்றி அவர் எழுதியது, ‘ஜெர்மானிய தேசத்தவரான ரேனியஸ் ஓர் உண்மையான மிஷனரி . . . அப்போஸ்தலர்கள் காலத்துக்குப் பின் தோன்றிய சகல மிஷனரிகளுக்கும் மேலானவர் இவர் என்பது என் நம்பிக்கை. ஸ்வார்ட்ஸ் ஐயரையும் விட அதிகம் முயற்சி எடுப்பவர். அதிக தைரியமுடையவர், அதிகமான தாலந்துகளைப் பெற்றவர்.’ ஜோசப் உல்ப்வின் வார்த்தைகள் அத்தனையும் மெய்யானவை. ரேனியஸின் அசாத்தியமான அருட்பணி இவ்வார்த்தைகளை உறுதிசெய்கின்றது.
இத்தனை மேன்மை பொருந்திய மனிதரின் உன்னத ஊழியப்பணியை அறியாத இனமாக இன்று நம்மினத்துக் கிறிஸ்தவம் இருந்து வருகிறது. இத்தனை மகத்தான அப்போஸ்தலப்பணியை காழ்ப்புணர்வினால் அடியோடு இருட்டடிப்பு செய்ய பிரிட்டனிலும், இந்தியாவிலும் செயல்பட்ட ஆங்கிலேயத் திருச்சபை மிஷனரி இயக்கங்கள் பெருமுயற்சி செய்து வந்திருக்கின்றன என்பதை நினைக்கும்போது மனம் துடிக்கின்றது. தான் சிறையிலிருக்கும்போது சுயநல நோக்கத்தோடு பிரசங்கம் செய்து தங்களுக்குப் பெயர் தேடிக்கொள்ள சிலர் முயல்வதைக் கேள்விப்பட்ட பவுல் அப்போஸ்தலன், எதுவாக இருந்தாலும் கிறிஸ்து பிரசங்கிக்கப்படுவது எனக்கு சந்தோஷமே என்று சொன்னார். அவருக்கிருந்த இதயம் இங்கிலாந்தின் ஆங்கிலேய திருச்சபை மிஷனரி இயக்கங்களுக்கு இருக்கவில்லை. இன்று லிபரல் ‘தாராளவாதப் போக்கில்’ இயங்கிவரும் இந்த இயக்கங்களும் தென்னிந்திய திருச்சபையும் ரேனியஸின் உழைப்பால் வளர்ந்து தளைத்த அத்தனைத் திருச்சபைகளையும் கபளீகரம் செய்து அவற்றைத் தங்களுடைய சொந்த உழைப்பால் வளர்ந்த ஊழியமாக மக்கள் முன் காட்டிச் செயல்பட்டு வருவது எத்தனை இழிவான செயல். 1947ல் இருந்து இந்த சபைகளனைத்தும் தென்னிந்திய திருச்சபையின் கீழ் வந்தன. சத்தியத்தின் அடையாளத்தை இழந்து, தாராளவாதத்திற்கு அடிபணிந்து உலகத்தைச் சார்ந்ததொரு மதப்பிரிவாக மட்டும் இயங்கி வரும் தென்னிந்திய திருச்சபையில் இன்று ரேனியஸின் விசுவாசத்தையும், வேதக்கோட்பாடுகளையும் காண்பதரிது. கர்த்தரின் எழுப்புதலால் நெல்லையில் ரேனியஸ் தண்ணீர் ஊற்றி வளர்த்து மரமான திருச்சபைப் பணியே அவருக்குப் பின்வந்த பலருடைய ஊழியப்பணிகளுக்கும் அடுத்த முப்பது வருடங்களுக்காவது ஆணிவேராக இருந்து உயரச் செய்திருக்கிறது என்பதை வரலாறு தெளிவாக விளக்குகிறது.
இறுதியாக . . .
சார்ள்ஸ் தியோபீலஸ் இவால்ட் ரேனியஸின் வாழ்க்கையைப் பற்றியும், தென் தமிழகத்தில் அவராற்றிய அனைத்து அசாத்திய ஊழிய சாதனைகளைப் பற்றியும், அவருடைய துல்லியமான இறையியல் கோட்பாடுகள் பற்றியும், அவருடைய அருட்பணிக் கோட்பாடுகள் (Mission principles) பற்றியும், திருச்சபை அமைப்புப் பணிகள் பற்றியும் தெளிவான முழுமையான ஒரு வரலாற்று நூல் தகுந்த ஆய்வுகள் செய்யப்பட்டு ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளிவரவேண்டியது மிகவும் அவசியம். அரைகுறையான ஆய்வுகள் செய்யப்பட்டு, அதீத உணர்வுகளை வெளிப்படுத்தி ஆதாரங்கள் இல்லாமல் சுருக்கமாக எழுத வேண்டும் என்பதற்காக இந்தியத்துவத் தன்மையில் எழுதப்படும் நூல்களால் எந்தப் பயனும் இல்லை. அத்தகையவையே தமிழில் அதிகம். தரமான ஆய்வுத்தரத்தைக் கொண்டிருந்து ஆதார நூல்களின் பட்டியலோடு (முக்கியமாக ஆங்கிலத்திலும், ஜெர்மானிய மொழியிலும் ரேனியஸைப் பற்றிக் காணப்படும் நூல்களைப் பயன்படுத்தி) அவரைப்பற்றியும், அவரதுபணிகள் பற்றியும் முழுமையான விளக்கமளிக்கும் ஆய்வு நூல் தேவை. அப்படிப்பட்ட நூல் மட்டுமே ரேனியஸைப் பற்றிய தகுந்த துல்லியமான கருத்தைக் கொண்டிருக்க வாசகனுக்கு உதவும்; இறையியல் கல்லூரிகளுக்கும் பயன்படும். அத்தோடு, ரேனியஸின் சமகால சீர்திருத்த அருட்பணியாளர்களாக இருந்திருக்கும் சீர்திருத்த பாஸ்திஸ்துகளான வில்லியம் கேரி (இந்தியாவில் 1800-1834), அதோனிராம் ஜட்சன் (இந்தியா, பர்மாவில் 1812-1850 வரை) போன்றோருக்கும் ரேனியஸுக்கும் தொடர்புகள் ஏதேனும் இருந்திருக்கிறதா? சீர்திருத்த கோட்பாடுகளைப் பின்பற்றி முக்கியமானதொரு காலகட்டத்தில் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் ஒரேகாலப்பகுதியில் வரலாற்றில் பிரமிக்கத் தகுந்தளவுக்குப் பணியாற்றியிருக்கும் இம்மூன்று முக்கிய தலைவர்களும் ஒருவரையொருவர் அறிந்திருந்து தொடர்புகள் வைத்திருந்திருக்கிறார்களா? என்பது போன்ற ஆய்வுகளும் செய்யப்பட்டு விபரங்கள் கிடைக்குமானால் எத்தனைப் பெரிய நன்மையாக அமையும். இத்தகைய படைப்பு உருவாக, தமிழினத்து கிறிஸ்தவர்கள் வாசித்துப்பயன்பட கர்த்தர் கிருபை பாராட்டவேண்டும். இருநூறு வருடங்களுக்கு முன் தமிழகத்தில் வெள்ளி நட்சத்திரத்தைப் போல ஒளிவீசி வேதத்தை மட்டுமே சார்ந்து நின்று கிறிஸ்துவின் கிருபையால் சீர்திருத்தப் பணியாற்றியிருக்கும் இந்தப் பெருமகனைப் பற்றியும், அவருடைய சாதனைகளையும் அறியாது வாழ்ந்து வரும் நம்மினத்துக் கிறிஸ்தவர்களை நினைத்து என்னால் இப்போது பரிதாபப்பட மட்டுமே முடிகிறது.
இந்த ஆக்கத்தை எழுதத் துணைபுரிந்த நூல்கள்:
- ரேனியஸின் வாழ்க்கை வரலாறு, தன்பால் தேவராஜ், ADA Books, Thirunelveli Dt. (கிடைக்குமிடம்: டயோசீசன் புக் டெப்போ, திருவனந்தபுரம் ரோடு, பாளையங்கோட்டை – 2, Mobile: 9442552964.)
- Memoir of the Rev. C. T. E. Rhenius, 1841, London, 626 pgs, http://books.google.com.
- Principles of Translating the Holy Scriptures, with critical remarks on various passages, particularly in reference to the Tamul Language by Rhenius, Nagarcoil, 1927.
- Amy Carmichael ‘Beauty for Ashes’ by Ian Murray, The Banner of Truth Trust.
- Lutheran-Anglican Dialogue in 19th Century India by D. Issac Devadoss, IJT 46/1&2 (2004), pp 82-98
- வேதசாஸ்திரச் சுருக்கம், Summary of a Body of Divinity in the Tamil language by Rev C. T. E. Rhenius, Fourth edition, The Tract and Book Society, Madras 1852. https://books.google.com
- Walker of Thinnevelly, Amy-Wilson Carmichael, Morgan & Scott Ltd.
- Missionaries, Education and India, J. C. Ingleby, ISPCK, Delhy, 2011.