வணக்கம் வாசகர்களே! மறுபடியும் ஒரு புதிய இதழை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். முதலில், இதழாசிரியரான என்னோடு, இதழ் பணியில் இணைந்து தொடர்ந்து உழைத்துவருபவர்களுக்கு என் நன்றிகள். அத்தோடு, இந்தப் புதிய வருடம் உங்களனைவருக்கும் புத்துணர்வூட்டும் ஆசீர்வாதமான வருடமாக அமைய கர்த்தர் கிருபை பாராட்டட்டும். கர்த்தரின் கிருபையிலும், ஞானத்திலும் நீங்கள் மேலும் அதிகமாக வளரவும், உயரவும் இந்த இதழும் இதற்கு முன் வந்திருக்கும் இதழ்களைப்போலவே துணைபுரியட்டும்.
இந்தப் புதிய வருட முதல் இதழில் நம்மினத்தில் பலரும் அறிந்திராத, ஒருவிதத்தில் புறக்கணிக்கப்பட்டவராகவும் இருந்திருக்கும் மிக முக்கியமான ஒரு சீர்திருத்த கிறிஸ்தவ அறிஞரும், அருட்பணியாளரும், போதகருமான ஜெர்மனியைச் சேர்ந்த சார்ள்ஸ் தியோபீலஸ் இவால்ட் ரேனியஸ் (Charles Theophelus Ewald Rhenius) என்பவரை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இவரைப் பற்றிய தமிழ் நூலொன்றின் (தனபால் தேவராஜ்) திறனாய்வாக ஆரம்பித்த ஆக்கம் மிக நீண்டதாக ரேனியஸ் பற்றிய என்னுடைய மதிப்பீடாகவும் உருப்பெற்றிருக்கிறது. தமிழகத்தில் இவரையொத்த அளவிற்கு சத்தியப் பிசகில்லாமல் சீர்திருத்த இறையியலின் அடிப்படையில் திருச்சபைப் பணியாற்றிய இன்னொருவரைக் குறிப்பிட்டுக்கூற முடியாது. அந்தளவுக்கு அப்போஸ்தலப் பணிகளை நினைவூட்டும் அளவுக்கு விசுவாசத்தோடு இவர் பணியாற்றியிருக்கிறார். அதுவும், சி.எம்.எஸ். (திருச்சபை அருட்பணிச் சங்கம்) எனும் இங்கிலாந்து ஆங்கிலேயத் திருச்சபை (Anglican church) மிஷன் மூலம் இந்தியா வந்து அதற்குக் கீழ் இத்தகைய பெரும்பணியை அவர் மூலம் கர்த்தர் செய்திருந்திருப்பதே பெரும் ஆச்சரியம். சி.எம்.எஸ். மிஷன் நிறுவனம் இங்கிலாந்து ஆங்கிலேய திருச்சபையின் சுவிசேஷ இயக்கப் பிரிவைச் (Low church) சேர்ந்ததாக இருந்தபோதும் ரேனியஸின் இறையியல் நம்பிக்கைகளை அது முழுமையாகக் கொண்டிருக்கவில்லை.
இந்த இதழ் ‘ரேனியஸ் இதழாக’ மலர்ந்திருக்கிறது. ரேனியஸ் அவர்களின் திருப்பணிகள் உங்களைச் சிந்திக்கவும், சுயத்தை இழந்து, மனத்தாழ்மையுடன் வேதபூர்வமாகச் செயல்படவும் செய்யுமானால் அதைவிடப் பெரிய ஆசீர்வாதம் எங்களுக்குக் கிடைக்கமுடியாது. அத்தோடு, திருமறைத்தீப இதழ் தொகுப்புகளைப் பற்றிய வாசகர் ஷேபாவின் மதிப்பீட்டு ஆக்கத்தையும் இந்த இதழில் வாசிக்கலாம். – ஆசிரியர்