கருத்துரை – ஷேபா மிக்கேள் ஜோர்ஜ்
நெல்லை அப்போஸ்தலர் ரேனியஸின் சுவிசேஷம் மற்றும் இலக்கியப் பணிகளை சீகன்பால்க், வில்லியம் கேரி, கால்டுவெல், ஜி.யு. போப் என்பவர்களோடு சேர்த்து சீர்திருத்த கிறிஸ்தவ மிஷனரிகள் என்ற ரீதியில் மேலோட்டமாகத் தெரிந்து வைத்திருந்த போதிலும் ஆழமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு இதற்கு முன் கிடைத்ததில்லை. எனவே திருமறைத்தீபம் இதழில் வந்திருக்கும் இந்த ஆக்கம் அதற்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. ரேனியஸின் பன்முகப்பட்ட அருட்பணி ஊழியத்தின் சாராம்சத்தை இதழ் மூலம் அறிந்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதேவேளை இத்தனை அசாதாரணமான ஆவிக்குரிய எழுப்புதல் நிகழ்ந்த மாவட்டம் இன்று அதன் அடையாளமே இல்லாமல் அவிந்து போனது ஏன்? என்ற கேள்வியும் சேர்ந்து எழுந்தது. அது மட்டுமல்லாமல் ‘எழுப்புதல்’ ‘சீர்திருத்தம்’ என்ற வார்த்தைகளைக் கேட்டாலே ஜெட் வேகத்தில் ஆறு நூற்றாண்டுகள் பின்நோக்கி ஓடும் மூளைக்கு, ஒரு நூற்றாண்டுக்கு முன் பக்கத்து மாவட்டத்தில் நடந்த அற்புதமான சுவிசேஷ எழுப்புதல் குறித்த நிகழ்ச்சிகள் எட்டாமல் இருந்திருக்கிறதே! என்ற ஆதங்கத்தையும் உண்டாக்கியது.
திருமறைத்தீபம் இதழ் ஏற்படுத்திய தாக்கத்தோடு, இதழ் அறிமுகப்படுத்திய தனபால் தேவராஜ் அவர்கள் எழுதிய “ரேனியஸ் வாழ்க்கை வரலாறு” நூலும் கையில் கிடைத்துவிட ஆர்வத்துடன் அதை வாசிக்க ஆரம்பித்தேன். சமாதானபுரம், மெய்ஞானபுரம், பாபநாசம் போன்ற ஊர்களின் பெயர்கள் மட்டுமல்லாமல் தாவீது உபதேசியார், சற்குணம், ஞானாயுதம், மாசிலாமணி, வேதநாயக சாஸ்திரி போன்றவர்கள் பெயர்களோடும் பரிச்சயம் ஏற்பட்டு, அது வாசிப்புக்கு நல்ல உயிரோட்டம் அளித்தது.
ரேனியஸின் மிஷனரி ஊழியம் எப்படி முதல் நூற்றாண்டு பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்தை ஞாபகப்படுத்தியதோ அதே போல அன்றைய விசுவாசிகள் அனுபவித்த துன்பமும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை ஞாபகப்படுத்தியது. மெய்யாகவே வரலாற்றில் அது ஒரு அற்புதமான எழுப்புதலின் காலம்; உயிர் பயமின்றி, உணவு உடை குறித்த கவலையின்றி கூட்டம் கூட்டமாக விசுவாசிகள் சத்தியத்துக்கு சாட்சி கொடுத்த காலம்; உபதேசிமார்களின் உதடுகள் ஓய்வே இன்றி காலை முதல் மாலை வரை ஆத்துமாக்களைத் தேடித் தேடி ஞான உபதேசம் அளித்த காலம்; சிறியோரும் பெரியோரும் ஆர்வத்துடன் தமிழ் எழுத்துக்களைக் கற்று வேத அறிவில் வளர்ந்த காலம்; விளக்கேற்றும் எண்ணெய் வாங்கும் வசதி இல்லாத பத்து வயது சிறுவனும் இரவு நேரத்தில் பனை ஓலைகளைப் பொறுக்கி நெருப்புக் கொலுத்தி ஆர்வத்துடன் வேதம் படித்த காலம்; வாரநாட்கள் முழுவதும் காலையும் மாலையும் சபையாகச் சேர்ந்து விசுவாசிகள் ஆனந்தமாகக் கர்த்தரை ஆராதித்து வந்த காலம்; விக்கிரக கோயில்கள் தேவாலயங்களாக மாறி வந்த காலம்; கூட்டம் கூட்டமாக ஆத்துமாக்கள் மனந்திரும்பி புதிது புதிதாக கிறிஸ்தவ கிராமங்கள் உண்டான காலம்; சாதி, இனப் பாகுபாடுகள் ஒழிந்து மனித சித்தம் புதுப்பிக்கப்பட்டு சீர்திருத்த சமுதாயம் மலர்ந்த காலம் அது. இவற்றையெல்லாம் வாசிக்கும் போது உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அத்தோடு இந்த ஆச்சரியமான எழுப்புதல் ஊழியத்தில் கர்த்தர் பயன்படுத்திய பாத்திரமாகிய ரேனியஸிடம் காணப்பட்ட பல அற்புதமான கிறிஸ்தவ குணாதிசயங்களில் பரிசுத்த ஆவியானவரின் அழுத்தமான கைரேகைகளைக் காணமுடிந்தது. அத்தகைய குணாதிசயங்கள் நம்மத்தியில் காணப்படுகின்ற பல குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியது; என்னிலுந்தான். அவற்றில் சிலவற்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
- கர்த்தருக்குள் எடுத்த தீர்மானங்களில் எத்தனை தடைகள் வந்தாலும் உறுதியாக இருந்த ரேனியஸின் குணம், தீர்மானங்களை நிறைவேற்றுவதில் நமக்கு இருந்து வருகின்ற சோம்பலையும், உறுதியற்ற தன்மையையும் இனம் கண்டு கொள்ள உதவியது.
- ரேனியஸ் ஒரு ரோபோ மனிதனோ? என்ற எண்ணத்தை உண்டாக்கும் அளவிற்கு இருந்த ரேனியஸின் உழைப்போடு நமது உழைப்பை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகவும் வெட்கமாக இருந்தது. குறிப்பாக ஆங்கில சீர்திருத்த கிறிஸ்தவ நூல்களை பொறுமையாக வாசித்து சத்தியத்தை அறிந்து கொள்ள சோம்பல் பட்டு மொழிபெயர்ப்பு நூல்களைத் தேடி அலையும் எனது எண்ணப்போக்கிற்கு சாட்டையடி கொடுத்து ஆங்கில வாசிப்புக்கு அதிகமாக ஊக்கப்படுத்தியது. காலத்தை மீட்டெடுத்து ஞானமாகப் பயன்படுத்துவதில் மேலும் அதிகப்படியான ஜாக்கிரதை உணர்வைக் கொடுத்தது.
- சரளமாகப் பேசும் நண்பர்களிடம் கூட சுவிசேஷ வார்த்தைகளைப் பேசும் போது திக்கித் திணறும் நமக்கு ரேனியஸின் சுவிசேஷம் அறிவிக்கும் ஆற்றலை விவரிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். தனிநபரோ, திருவிழா கூட்டமோ என்ற எண்ணிக்கை அவருக்கு ஒரு பொருட்டல்ல! சிறுபிள்ளையோ சாமியாரோ வயது முதிர்ச்சியோ ஒரு தடையல்ல! எந்த வயதினருக்கும் எந்த இடத்திலும் சரியான விதத்தில் ஆத்துமாவைக் குறிவைத்து சுவிசேஷம் அறிவிப்பதில் மிகவும் தேர்ந்தவராக இருந்த ரேனியஸை நமக்குச் சுவிசேஷம் அறிவிப்பதில் மிகப்பெரிய மாதிரியாக எடுத்துக் காட்டுகிறது வரலாறு என்பது நிதர்சனமான உண்மை.
- அழைத்த கர்த்தருக்கு மிகவும் உண்மையாக இருந்து பொறுப்புடன் தனது கடமைகளை நிறைவேற்றினார் ரேனியஸ். கேட்கிறார்கள் என்பதற்காக எல்லோருக்கும் ஞானஸ்நானம் அளித்துவிடாமல் அவர்கள் மனந்திரும்புதலை ஆராய்ந்து பார்த்து சபையில் சேர்த்துக் கொண்டார் (பொன்னப்ப பிள்ளையின் அங்கத்துவ அனுமதி கடிதம் அதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு). வெளிப்படையாக பாவம் செய்தவருக்கு திருவிருந்து அளிக்க மறுத்தார். ஞான போதிப்பு முறையை ஏற்படுத்தி அடிப்படை கிறிஸ்தவ உபதேசங்களை ஆத்துமாக்களின் மனதில் ஆழமாகப் பதியச் செய்தார். சாதிப் பிரிவினை மேலோங்கியபோது எந்தச் சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் தைரியமாக செமினரியை இழுத்து மூடினார். உபதேசியார்களின் தவறுகள் நிரூபிக்கப்பட்டபோது அவர்களை பணிநீக்கம் செய்தார்…. இவற்றையெல்லாம் வாசிக்கும் போது, தேவபயத்தோடு முகஸ்துதிக்கு இடம் கொடுக்காமல், பாவத்தோடு எந்தச் சமரசமும் செய்யாமல் கிறிஸ்தவ கடமைகளை நிறைவேற்றுவதில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று பரிசோதித்துப் பார்க்க வைத்தது.
- சி.எம்.எஸ். உடன் ஏற்பட்ட முரண்பாட்டால் திருநெல்வேலியை விட்டு வெளியேறும் நிலையில், “திருநெல்வேலியின் மீது இவ்வளவு பலத்த அடி விழக் கர்த்தர் ஏன் அனுமதித்தார்? என் பாவங்களின் நிமித்தமா? சபையாரின் பாவங்களின் நிமித்தமா?” என்று கூறி தாழ்மையோடு தன்னை சோதித்துப் பார்த்த ரேனியஸின் குணம், பிரச்சினை என்று வந்தால் என்ன? ஏது? என்று நிதானிக்காமல் உடனடியாக மற்றவர்களைக் கைகாட்டும் சிறுபிள்ளைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, இதில் என் தவறு என்ன இருக்கிறது என்று சோதித்துப் பார்க்கும் பொறுமையைக் கற்றுத் தந்தது.
- நேசிக்கிறவர்களின் மரணம் குறித்த ரேனியஸின் பார்வை இவ்வாறாக இருந்தது, “உலகப் பொருட்கள் மீது அன்புவைக்காமல், நமது அன்பின் உச்சத்தை நமது கடவுளும் இரட்சகருமானவரிடத்திலேயே வைக்க, காலம் இருக்கும்பொழுதே நாம் பழகியிருப்போமானால், இவ்விதத் துயரங்கள் நமக்கு எவ்வளவு இலகுவான வேதனையாயிருக்கும். ஒரு நாள் அவர்களைவிட்டு நாம் பிரிவோம் அல்லது அவர்கள் நம்மை விட்டுப்பிரிவர். ஆ! ரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாய் மட்டும் நாமிருக்கக்கூடுமானால் எவ்வளவு மேன்மை!” என்ற வரிகள் நாம் நேசிப்பவர்களின் மரணத்தை ரேனியஸின் பார்வையில் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள உதவியது.
- ரேனியஸின் சுயநலமற்றப் பொதுக் கல்விப் பணிகள், காலரா காலங்களில் ஆற்றிய பொதுநலத் தொண்டுகள், விசுவாசிகள் அல்லாதவர்களிடம் கொண்டிருந்த பொதுவான நட்புறவு போன்றவை ஒரு விசுவாசியாக நாம் உலகத்திற்கு ஆற்றவேண்டிய பொதுவான கடமைகளில் மேலதிகமான அறிவைப் பெற உதவியது.
அடுத்தபடியாக, மெய்யான எழுப்புதல் குறித்து மங்கலாகக் கொண்டிருந்த எனது எண்ணங்களுக்கு ஒரு தெளிவான வடிவம் கொடுத்து நன்றாக மனதில் இருத்திக் கொள்ளும் வண்ணம் இந்த வரலாற்றுக் குறிப்புகள் அழுத்தமான பாதிப்பை மனதில் ஏற்படுத்தியது. ரேனியஸின் ஊழியத்தில் ஆவியானவரின் விசேஷித்த கிரியையை நன்றாக அடையாளம் காண முடிந்தது. குறிப்பாக இதே காலகட்டத்தில் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் ரேனியஸைப் போன்றே வைராக்கியமாக உழைத்த வில்லியம் கேரியின் அசாதாரண பணிகள் தொடர்ந்துகொண்டிருந்தபோது, அவர் செய்திராதளவுக்குத் திருச்சபைப் பணிகளை அப்போஸ்தலர்களை நினைவுறுத்தும் விதத்தில் ரேனியஸை செய்யவைத்த ஆவியானவரின் விசேஷித்த கிரியையை திருமறைத்தீபம்பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டி எல்லா மகிமையையும் கர்த்தர் ஒருவருக்கே ஏறெடுக்க வைக்கிறது.
திருமறைத்தீபம் இதழை வாசித்தபோது மனதில் வலுவாக எழுந்த ஒரு கேள்வி, ‘இத்தனை மகிமையான சுவிசேஷ ஊழியத்தை ருசித்து, அனுபவித்து, கனிகொடுத்த மாவட்டம் மொத்தமாக அதன் அடையாளங்களை இழந்து இத்தனை சீக்கிரமாக வறண்டு போனது ஏன்?’ என்பது தான். ஒரு வேளை ரேனியஸின் வரலாற்று நூலில் வாசித்த ‘கொங்கராயக்குறிச்சி’ சபையைப்போல, கர்த்தர் அளித்திருக்கும் அதிக துன்பமற்ற வளமான வாழ்க்கைதான் குளிருமில்லாமல் அனலுமில்லாமல் இன்றைய கிறிஸ்தவம் அழிந்து கொண்டிருப்பதற்கான காரணமோ? என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. சங்க காணிக்கை, பிடி அரிசி காணிக்கை, மாதாந்திர ஸ்தோத்திர காணிக்கை என சபையின் பொருளாதார தேவைகளைச் சந்திக்க காலத்தின் நிர்ப்பந்தத்தால் ரேனியஸ் ஏற்படுத்திய வழியை, வெறும் சடங்குகளாக மட்டும் இன்றும் தொடரும் பாரம்பரிய சபைகளில் வினாவிடை உபதேசத்தின் பயன்பாடுகள் சுத்தமாக இல்லாமல் போனதும் ஒரு காரணம். இது வினாவிடைப் போதனைகளைத் தொடர்ச்சியாகக் கற்றுக் கொடுக்க வேண்டியதன் இன்றியமையாத் தேவையை நினைவுபடுத்துகின்றது. அத்தோடு எஸ்ரா, தானியேலைப் போல ஆத்தும பாரத்தோடும் மனந்திரும்புதலோடும் வைராக்கியமாக ஜெபிக்கும் ஜெப வீரர்களும், ரேனியஸைப் போலத் தளராமல் சுவிசேஷம் அறிவிக்கும் சுவிசேஷகர்களும் உருவாக வேண்டியதன் கட்டாயத்தையும் வலியுறுத்தியது.
இறுதியாக, திருமறைத்தீபத்தின் ரேனியஸ் குறித்த இந்த ஆக்கம், இன்றைய விசுவாசிகளில் அவிந்து போகும் நிலையிலிருக்கும் கிறிஸ்தவ வைராக்கியத்தைத் தூண்டிவிடும் சத்தியத் தீப்பொறியாக அமையும் என்று நிச்சயமாக நம்புகிறேன். அதற்கு அவசியமான கர்த்தருடைய கிருபைகளுக்காக ஊக்கத்துடன் ஜெபிக்கிறேன்.