இந்த ஆக்கம் பரிசுத்த வேதாகமத்தைப் பற்றியது. அதிலிருந்தே நாம் கிறிஸ்தவ இறையியல் தொடர்பான எதையும் கற்க ஆரம்பிக்க வேண்டும். பரிசுத்த வேதாகமத்தைப் பற்றிய நம்முடைய நம்பிக்கைகள் தவறாக இருக்குமானால் நாம் வேதபூர்வமான கிறிஸ்தவர்களாகவோ, சபையாகவோ இருக்கமுடியாது. கத்தோலிக்க மதம் வேதம் மட்டுமே கர்த்தருடைய வார்த்தை என்பதை நம்புவதில்லை. கெரிஸ்மெட்டிக் குழுவினர் வேதத்திற்குப் புறத்தில் இருந்தும் கர்த்தர் தொடர்ந்து வெளிப்படுத்தலைத் தந்துகொண்டிருக்கிறார் என்று நம்புகிறார்கள். வேதத்தில் சத்தியமும், மனித சிந்தனைகளும் கலந்து காணப்படுகின்றன என்று தாராளவாதப் போக்குடையவர்கள் (Liberal) நம்புகிறார்கள். வேதத்தைப் பற்றிய நம்முடைய நம்பிக்கைகள் தவறாக இருக்குமானால் நாம் சத்தியத்தை மட்டுமே நம்புகிறோம் என்று சொல்லமுடியாது. வேதம் பற்றிய உங்களுடைய நம்பிக்கை என்ன?
1. கடவுளையும், அவருடைய சித்தத்தையும் நமக்கு வெளிப்படுத்தும் கர்த்தரின் சர்வ அதிகாரமுள்ள தெய்வீக வெளிப்படுத்தல் வேதம் மட்டுமே.
இந்த நம்பிக்கை இல்லாவிட்டால் நாம் சபைகூடிவருதலில் எந்தப் பயனுமில்லை. இன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் வேதத்தைப் பற்றிய நம்பிக்கை பலவீனமாக இருக்கிறது. அந்த பலவீனமே அவர்கள் தாங்கள் நினைத்தபடி எதையும் செய்வதற்குக் காரணமாக இருக்கிறது. கடவுளைப் பற்றியும், மனிதனைப் பற்றியும், இரட்சிப்பைப் பற்றியும், திருச்சபையைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும் நம்முடைய நம்பிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்குகின்ற ஒரே நூல் வேதம் மட்டுமே. அதில் நமக்குத் தெளிவில்லாமல் இருந்தால் நம்முடைய நம்பிக்கைகளும், செயல்களும் கர்த்தருக்கு எதிராகவே எப்போதும் இருக்கும்.
இன்று நம்மினத்தில் திருச்சபை நல்ல நிலையில் இல்லாமல் இருப்பதற்கும், திருச்சபை தலைமை சரியில்லாமல் இருப்பதற்கும், ஆத்துமாக்கள் தடுமாற்றமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதற்கும் இது முக்கிய காரணம். வேதம் அவசியமென்பதை எல்லோருமே ஏற்றுக்கொண்டாலும், அதன் தன்மையைப் பற்றியும், அது விளக்கும் உண்மைகளைப் பற்றியும் தெளிவான விளக்கமில்லாமலும், அதை முறையாகப் பயன்படுத்தத் தெரியாமலும் ஆத்துமாக்களும், போதகர்களும், சபைகளும் இருந்து வருகின்றன. அதன் காரணமாக ஆத்மீக வலிமையின்றி சபைகள் போலிப்போதனைகளுக்கு இலகுவாக இடங்கொடுத்து விடுகின்றன.
வேதம் சர்வ அதிகாரம் கொண்டதாக கர்த்தருடைய சித்தத்தை வெளிப்படுத்தும் ஒரே நூலாக இருக்கிறது என்ற உண்மையில் மலையளவுக்கு உண்மைகள் காணப்படுகின்றன. அதாவது, வேதம் சர்வ அதிகாரம் கொண்டது என்று கூறும்போது, அதன் அதிகாரத்திற்கான காரணத்தை ஆராய்வது அவசியம். கடவுள் சர்வ அதிகாரம் கொண்டவர் என்று கூறும்போது, அத்தகைய அதிகாரத்திற்கான குணாதிசயங்களையும், தகுதிகளையும் அவர் தன்னில் கொண்டிருப்பதே அதற்குக் காரணம். அவருக்கிருக்கும் அத்தகைய குணாதிசயங்களைக் கொண்டிருக்கும் இன்னுமொரு நபரோ, சக்தியோ உலகத்தில் இல்லை. அதுவே கடவுளை சர்வ அதிகாரமுள்ளவராக்குகிறது.
அதேபோல வேதத்திற்கு சர்வ அதிகாரம் இருக்கிறது என்று கூறும்போது அந்த அதிகாரத்திற்கான குணாதிசயங்களையும், தகுதிகளையும் வேதம் தன்னில் கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்லாமல், அத்தகைய அதிகாரத்தைக் கொண்டிருக்கும் வேறு எந்த நூல்களும் இந்த உலகத்தில் இல்லை என்பது அதற்குக் காரணம். வேதத்திற்கு மட்டும் இருக்கும் அந்த சர்வ அதிகாரமே நம்மோடு பேசி, வழிநடத்தி, நம்மை ஆளும் அதிகாரமாக அது இருப்பதற்குக் காரணம். அந்தக் குணாதிசயங்கள் யாவை :
அ. வேதம் தன் அதிகாரத்திற்கான சாட்சிகளைத் தன்னில் கொண்டிருக்கும் தன்மை.
ஆ. பரிசுத்த ஆவியானவர் வேதம் உண்மையென்பதை நம்ப வைக்கிறார்.
இ. திருச்சபை வேதத்தின் அதிகாரத்தை உறுதிப்படுத்துகிறது.
ஈ. வேதம் அளிக்கப்பட்டிருக்கும் முறை – அது தெய்வீக வெளிப்படுத்தல்.
1.1 கடவுள் வேதத்தின் மூலம் மட்டுமே தன்னை வெளிப்படுத்துகிறார்.
எபிரெ 1:1-2
“பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.”
கடவுள் சத்தியத்தை எந்த விதத்தில் ஆதியில் இருந்து வெளிப்படுத்தினார் என்பதை இந்த வசனம் விளக்குகிறது.
பூர்வகாலங்களில் – ஆதியில் – In the beginning – உலகத்தோற்றத்தின் ஆரம்பத்தில் இருந்து பங்குபங்காகவும், வகைவகையாகவும் – சிறிது சிறிதாகவும், (மொத்தமாக அல்லாமல் சிறிது சிறிதாக), வகைவகையாகவும் (வெவ்வேறு விதங்களில்). அதாவது, ஆரம்பத்தில் இருந்தே கடவுள் மனிதனோடு பேசி தான் யார் என்பதை வெளிப்படுத்தினார். சிலவேளைகளில் மனிதர் முன் மானுடத்தோற்றத்திலும், தூதர்களைப்போலவும், ஆண்டவரின் தூதனாகவும் தோன்றி வெளிப்படுத்தினார். அற்புதங்களைச் செய்து தானே தேவன் என்பதை வெளிப்படுத்தினார். அதற்குப் பிறகு மோசேயின் மூலம் தன்னுடைய கட்டளைகளை அவர்களுக்கு எழுத்தில் எழுதிக்கொடுத்தார். அதற்குப் பிறகு தீர்க்கதரிசிகளை எழுப்பி அவர்கள் மூலம் தன் சித்தத்தை மக்களுக்கு வெளிப்படுத்தினார். இந்த முறையிலேயே பழைய ஏற்பாட்டில் (ஆதியாகமம் முதல் மல்கியா வரை) கர்த்தர் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தீர்க்கதரிசிகள் மூலம் – இந்த இடத்தில் இந்த வார்த்தை வேதம் யார் மூலமாக பழைய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப்பட்டதோ அவர்கள் அனைவரையும் தீர்க்கதரிசிகளாக விளக்குகிறது. முதல் ஐந்து நூல்களை எழுதிய மோசே முதற்கொண்டு மல்கியாவரையுள்ள நூல்கள் தீர்க்கதரிசிகள் மூலமே வெளிப்படுத்தப்பட்டன. தீர்க்கதரிசிகளின் பணி கர்த்தரின் செய்தியை நேரடியாக உள்வாங்கி மக்களுக்கு அறிவிப்பது.
இந்தக் கடைசி நாட்களில் – In the last days – இந்தக் கடைசி நாட்கள் என்பது இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையில் இருந்து அவருடைய இரண்டாம் வருகையுள்ள காலத்தைக் குறிக்கும் வார்த்தைப் பிரயோகம்.
குமாரன் மூலமாய்த் திருவுளம் பற்றினார் – spoke – பேசினார் – வெளிப்படுத்தினார். ஆகவே முதல் நூற்றாண்டில் இயேசுவின் மூலம் சத்தியம் வெளிப்படுத்தப்பட்டு, பெந்தகொஸ்தே நாளில் இருந்து அப்போஸ்தலர்கள் அவற்றை மக்களுக்குப் போதித்து இறுதியில் புதிய ஏற்பாடாக அப்போதனைகள் அனைத்தும் எழுத்தில் எழுதி முடிக்கப்பட்டன. இந்த முறையிலேயே வேதம் முடிவுக்கு வந்தது.
1689 பாப்திஸ்து விசுவாச அறிக்கை தரும் விளக்கம் இதுதான்:
“ஆகவே, தேவன் தமது திருச்சபைக்கு வெவ்வேறு காலங்களில் பல்வேறு விதத்தில் தம்மையும், தமது சித்தத்தையும் வெளிப்படுத்தினார். அதுமட்டுமல்லாது, சத்தியத்தின் பாதுகாப்பிற்காகவும், பரப்புதலுக்காகவும், தீய மனிதர்கள், பிசாசு, உலகம் ஆகியவற்றின் தொல்லைகளின் மூலம் திருச்சபை பாதிப்புறாதபடி நிலைநிறுத்தப்பட்டு ஆறுதல் பெறவும், தம் சித்தத்தைக் குறித்தும், தம்மைக் குறித்ததுமான வெளிப்பாட்டை எழுத்து வடிவில் அருளத்திருவுளங் கொண்டார்.”
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் – கர்த்தரால் எழுத்தில் தரப்பட்டு நம் கையில் இருக்கும் வேதம் மட்டுமே கர்த்தருடைய சித்தம் முழுவதையும் நாம் அறிந்துகொள்ள உதவுகின்ற ஒரே வெளிப்படுத்தல். அதனால், இன்றும், உலக முடிவு வரையிலும் கர்த்தருடைய சித்தத்தை அறிந்துகொள்ள வேதம் மட்டுமே உதவும். முற்காலங்களில் செய்ததுபோல் கர்த்தர் தன் சித்தத்தை நேரடியாக இனிப் பேசி அளிப்பதில்லை. வேதம் தெரியாவிட்டால் கர்த்தரின் சித்தம் நமக்குத் தெரியவில்லை என்று தான் அர்த்தம்.
1.2 ஆவியினால் அருளப்பட்டிருக்கும் வேதம் மட்டுமே நமக்குப் போதுமானதாகவும், தவறிழைக்க முடியாத (Infallible) கர்த்தரின் வெளிப்படுத்தலாகவும் உள்ளது.
2 தீமோ 3:16-17
“வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது (Sufficient – போதுமானதாக).”
அ. தேவ ஆவியினால் அருளப்பட்டது – ஸ்ரீ லங்கா வேதாகம சங்கம் 2002 மொழிபெயர்ப்பில் “இறைவனின் உயிர்மூச்சினால்” என்றிருக்கிறது. ILS Bible – “கர்த்தரின் சுவாசத்தால்” என்றிருக்கிறது. Θεόπνευστος – theopneustos – God-breathed – breathed out ‘தேவஆவியினால்’ என்ற வார்த்தை மூல மொழியில் பயன்படுத்தப்படவில்லை; இருந்தாலும் theopneustos என்ற கிரேக்க வார்த்தையில் கடவுள், ஆவி ஆகிய பதங்கள் இரண்டும் காணப்படுகின்றன. ‘கர்த்தரால் ஊதி அளிக்கப்பட்டது’ என்பதே எழுத்துபூர்வமான மொழிபெயர்ப்பு. (Inspired)
ஆ. போதுமானது – Sufficient அதில் காணப்படும் அனைத்தும் நமக்குப் போதுமானவை; அதற்கு மேல் எதுவும் நமக்கு அவசியமில்லை; விசுவாசத்திற்கும், விசுவாச வாழ்க்கைக்கும் தேவையான அனைத்தையும் அது தன்னில் உள்ளடக்கியிருக்கிறது. கிறிஸ்தவ வாழ்க்கையில் சகல விஷயங்களுக்கும் அது மட்டுமே நமக்கு வழிகாட்டி. தான் வேதத்தில் வெளிப்படுத்தியிருக்கும் சத்தியத்துக்கு மேலாக கர்த்தர் எதையும் தொடர்ந்து தனி மனிதர்கள் மூலமாகவோ, தரிசனங்கள் மூலமாகவோ, கனவிலோ வெளிப்படுத்துவதில்லை. இன்னொருவிதத்தில் சொல்லப்போனால், வெளிப்படுத்தல் முடிவுக்கு வந்திருக்கிறது. கர்த்தரின் வெளிப்படுத்தலாகிய வேதத்தின் மூலமே கர்த்தர் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதால் அது நம்முடைய ஆவிக்குரிய தேவைகள் அனைத்தையும் தீர்க்கப்போதுமானதாக இருக்கின்றது.
இ. தேவனுடைய மனிதன் தேறினவனாக – ஸ்ரீ லங்கா வேதாகம சங்கம் 2002 IBS – ‘மனிதனுக்குக் கற்பிக்கவும்’ என்று மொழிபெயர்த்திருக்கிறது. இது தவறு. ‘தேவனுடைய மனிதன்’ என்பதே சரியான மொழிபெயர்ப்பு. தேவனுடைய மனிதன் என்பது ஊழியக்காரன் என்பதற்கான வார்த்தைப் பிரயோகம். அதாவது, ஒருவன் போதக ஊழியம் செய்யத்தேவையான அனைத்தையும் வேதம் அவனுக்குத் தரக்கூடியதாக இருக்கிறது என்பதே இதன் கருத்து. ஆவியால் அருளப்பட்ட வேதத்தில் தவறுகளுக்கு இடமில்லை. அது எல்லா நம்பிக்கைகளுக்கும் உரியது.
2 பேதுரு 1:20-21
“வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.” (This translation is close to the truth)
வேதத்திலுள்ள எந்தப் போதனையும் தீர்க்கதரிசிகளின் மனதில் சுயமாகத் தோன்றிய விளக்கங்கள் அல்ல என்பதை நீங்கள் அறிய வேண்டும். தீர்க்கதரிசனம் (கர்த்தரின் வார்த்தை) மனிதருடைய சித்தத்தில் இருந்து உருவாகவில்லை. அதை வெளிப்படுத்திய மனிதர்கள் பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டு அவர் வெளிப்படுத்தியதை மட்டுமே பேசினார்கள். ‘As they were carried along by the Holy Spirit’, (ஆவியினால் தூக்கிச் செல்லப்படுவதைப் போல). இது ஒரு தெய்வீக அற்புதச் செயல். எழுதியவர்கள் பிசாசு பிடித்ததைப்போல சுயஉணர்வை இழந்து ஆவியின் ஆளுகைக்குள் வரவில்லை; எழுதியவர்கள் இயந்திரத்தைப்போல செயல்படவில்லை. எழுதியவர்கள் முழுச் சுயஉணர்வோடும், முழுச் சுதந்திரத்தோடும் இருந்து இயங்கிய நிலையில் ஆவியானவர் அவர்களை ஆட்கொண்டு அவர்களுடைய சகல ஆற்றலையும், அறிவையும் பயன்படுத்தி கர்த்தரின் சித்தத்தை மட்டுமே அவர்களைக்கொண்டு எழுதவைத்தார்.
1 தெசலோ 2:13
“ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே. . . . அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.”
லூக்கா 24:27, 44
27. “மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.”
44. “அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேற வேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.”
எம்மாவுக்குப் போகும் வழியில் இயேசுவுக்கு நிகழ்ந்தவற்றை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்த சீடர்களுக்கு அவையெல்லாம் நடந்திருக்கவேண்டிய அவசியத்தை அவர்களுக்கு உணர்த்தி அவர்களை நம்பவைக்க இயேசு எந்த அற்புதத்தையும் செய்யவில்லை; மனித சிந்தனையில் உருவான விஷயங்களை அவர்கள் முன் வைக்கவில்லை. புதிதாக எந்தப் போதனைகளையும் கொடுக்கவில்லை. அவர் செய்ததெல்லாம், பழைய ஏற்பாட்டில் மோசேயின் ஐந்து நூல்களில் இருந்தும், சங்கீத நூலில் இருந்தும், ஏனைய அனைத்துத் தீர்க்கதரிசன நூல்களிலிருந்தும் தம்மைப்பற்றிச் சொல்லியிருப்பவைகளை அவர்களுக்கு நினைவூட்டி அவை நிச்சயம் நிகழவேண்டும் என்றும் அவையே தனக்கு நிகழ்ந்தன என்றும் விளக்கினார். இன்னொருவிதத்தில் சொல்லப்போனால், அன்றைக்கு எழுத்தில் இருந்த பழைய ஏற்பாட்டு நூலை மட்டுமே பயன்படுத்தி இயேசு தான்தான் தேவகுமாரன் என்பதை அவர்களுக்கு நிரூபித்துக் காட்டினார், இதிலிருந்து இயேசு, தன்னை வெளிப்படுத்த வேதத்தில் மட்டுமே தங்கியிருந்து அதை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறாரென்றால் வேதத்தின் அதிகாரத்தையும், அதன் அழியாத்தன்மையையும், இயேசுவைப் போல அதை மட்டுமே நாம் நம்பிப் பயன்படுத்த வேண்டும் என்ற உண்மையையும் நாம் அறிந்துணர வேண்டும்.
எது வேதம் ?
நம் கையில் இருக்கும் வேதத்திலுள்ள 66 நூல்கள் மட்டுமே பரிசுத்த வேதம். அவை மட்டுமே கர்த்தரின் வழிநடத்தலால் ஆதித் திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கர்த்தர் பரிசுத்த ஆவியின் மூலமாக திருச்சபையை வழிநடத்தி இந்த 66 நூல்களை மட்டுமே தன்னுடைய தெய்வீக வெளிப்படுத்தலாக ஏற்று அங்கீகரிக்கும்படிச் செய்திருக்கிறார். அவற்றிற்கு வெளியில் காணப்படும் தள்ளுபடி ஆகமங்கள் வெறும் மனித எழுத்துக்கள் மட்டுமே. வேதத்திற்கு இருக்கும் தகுதி அவற்றிற்கு இல்லை. கத்தோலிக்க மதம் இந்தத் தள்ளுபடி ஆகமங்களை அங்கீகரித்துப் பயன்படுத்துகிறது.
வேதம் தவறுகளற்றது Inerrant – வேதம் கர்த்தரால் தெரிவுசெய்யப்பட்ட மனிதர்களால், ஆவியின் செல்வாக்குக்கு அவர்கள் உட்பட்டு ஆவியின் வழிநடத்தலால் எழுதியிருந்தபோதும் எந்தவித மனித சிந்தனைகளோ, தவறுகளோ, பாவ எண்ணங்களோ அதில் சிறிதும் இடம்பெறாதபடி ஆவியானவர் பார்த்துக்கொண்டார். அதனாலேயே அதற்குப் பரிசுத்த வேதாகமம் என்று பெயர். வேதம் போதிக்கின்ற அனைத்தும், அதில் விளக்கப்பட்டிருக்கும் வரலாற்று உண்மைகள் உட்பட அனைத்தும் நம்பகமானவை. எந்தவிதத் தவறுகளுக்கும் வேதத்தில் இடம் இல்லை.
இது மிகவும் அவசியமாக உணர்ந்து பின்பற்ற வேண்டிய உண்மை. வேதம் எழுதி அளிக்கப்பட்ட வரலாற்றை வாசித்துப் பார்த்தால் எத்தனை கவனத்தோடு எழுதப்பட்டு, பாதுகாக்கப்பட்டு அது நம் கையில் வந்து சேரும்படிக் கர்த்தர் செய்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளலாம். சாதாரண மனிதனின் எழுத்துக்களில் காணப்படும் தவறுகளை வேதத்தில் காணமுடியாது. பரிசுத்த ஆவியானவர் அதில் எந்தத் தவறும் நுழைந்துவிடாதபடி பாதுகாத்திருக்கிறார். அதனால், நாம் நம்பிக்கையோடு வேதத்தை ஆராய்ந்து படிக்கவேண்டும். மொழிபெயர்ப்புகள் அனைத்திலும் நிச்சயம் குறைபாடுகள் இருக்கலாம்; கர்த்தர் பாதுகாத்தளித்த எபிரெய, கிரேக்க மூலப் பிரதிகள் எந்தத் தவறுகளும் இல்லாமலேயே நமக்குத் தரப்பட்டிருக்கின்றன.
Verbal plenary inspiration – வார்த்தைக்கு வார்த்தை முழுமையான தெய்வீக அற்புத வெளிப்படுத்தல்
மூல மொழிகளில் வேதத்தின் அத்தனை வரலாறும், சம்பவங்களும், போதனைகளும் மட்டுமல்லாமல் அதன் ஒவ்வொரு வார்த்தையும் ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு தேவமனிதர்கள் எழுதியிருக்கிறார்கள். சரியான வேதவார்த்தைகளைப் பயன்படுத்தும்படிப் பரிசுத்த ஆவியானவர் எழுதியவர்களை வழிநடத்தியிருக்கிறார். எழுதியவர்களுடைய தனித்தன்மையும், எழுத்தாற்றலும், ஞானமும் எந்தவிதத்திலும் பாதிக்காதபடி பரிசுத்த ஆவியானவர் அவர்களைப் பயன்படுத்தித் தான் எதை எழுத்தில் தரத் தீர்மானித்தாரோ அதை மட்டுமே அவர்கள் எழுதும்படிப் பார்த்துக்கொண்டார். அதனால் வேதத்தின் வரலாற்றையும், நிகழ்ச்சிகளையும் நம்புவது போல் அதன் ஒவ்வொரு வார்த்தைக்கும் மதிப்புக் கொடுத்து அவற்றை நாம் நம்பிப் புரிந்துகொள்ள வேண்டும். வேதத்தின் போதனைகளை சரிவரப் புரிந்துகொள்ள அதன் வார்த்தைகளுக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொள்வதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். வேதத்தில் காணப்படும் வார்த்தைகளை ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது; அவற்றை மனம்போனபோக்கில் புரிந்துகொள்ளக்கூடாது.
வேதவார்த்தைகள் வல்லமையானவை. அதனால் தான் இயேசு கிறிஸ்து, வேதத்தில் இருந்து ஒரு வார்த்தையும் அகற்றப்படக்கூடாது; அதோடு எதையும் சேர்க்கவும் கூடாது என்று சொல்லியிருக்கிறார். (உபா 4:2, 12:32; நீதி 30:5-6; வெளி 22:18-19).
இன்று வேதத்தில் காணப்படும் வார்த்தைகளை மாற்றி அதன் இறையியலையே சமுதாயப்போக்குக்கேற்றபடி மாற்றும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
ஆதியாகமம் 1:27 – ‘ஆதாம்’ என்ற எபிரெய வார்த்தை மனிதன் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வேதத்தில் இது மூன்று விதங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 1. ஆண் என்ற கருத்தில். 2. ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானவிதத்தில். 3. ஆதாமின் பெயராகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் இரண்டாவது அர்த்தத்திலேயே இது ஆதி 1:27ல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘ஆதாம்’ என்ற வார்த்தை எபிரெய மொழியில் இந்த இடத்தில் םָדָאָֽה – ā·ḏām) இலக்கணப்படி ஆண்பாலிலேயே காணப்படுகிறது. ஆதாமிலிருந்தே ஏவாள் உருவாகி, மனிதகுலத் தோற்றத்துக்கு ஆரம்பமானவனாக ஆதாம் இருந்திருப்பதால் அவனுடைய பெயர் மனிதரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வசனத்தில் இது ‘மனுஷர்’ அல்லது ‘மனிதன்’ என்று தமிழில் இருப்பது சரியானது. அதை வேறுவிதத்தில் மாற்றக்கூடாது. பரிசுத்த ஆவியானவர் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து காரணத்தோடுதான் பயன்படுத்தியிருக்கிறார். நவீன காலத்தில், ஆண், பெண் வேறுபாட்டை அகற்றவும், ஆணுக்கு சமமாக பெண்ணுக்கு சகலவிதத்திலும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்பதற்காகவும் இந்த வார்த்தை ஆணுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்ற எண்ணத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் இதை மாற்ற முயற்சிக்கிறார்கள். அப்படிச் செய்வது முழுத்தவறு. ஆணில் இருந்து பெண் உருவானதையும், ஆணுக்குக் கர்த்தர் சமுதாயத்தில் அளித்திருக்கும் முக்கிய பொறுப்புகளையும் அகற்ற முயலக்கூடாது.
ஆங்கிலத்தில் ஆணைக்குறிக்கப் பயன்படுத்தப்படும் வார்த்தை Man. பெண்ணைக்குறிக்க woman என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் Man என்ற வார்த்தை ஆணைத்தவிர வேறு எவருக்கும் பயன்படுத்தப்படுவதில்லை. தமிழில் அதற்கு ‘ஆண்’ என்ற வார்த்தையை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். தமிழில் ‘மனிதன்’, ‘மனிதர்’ என்ற வார்த்தைகள் ஆணை அல்லது ஆண்களைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. மதுரை பல்கலைக்கழக அகராதியில்கூட ஆண்களைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பெண்பாலில் அது பயன்படுத்தப்படவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களைக் குறிக்கவும் ஆதாம் என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மனிதர்கள் என்று தமிழில் பொதுவாகச் சொல்லும்போது ஆண், பெண் இருபாலரையும் குறிக்க அதை நாம் பயன்படுத்துகிறோம்.
வேதமொழிப்பெயர்ப்பில் இந்த வார்த்தைகளை எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
முதல் மனிதனைக் கர்த்தர் படைத்தபோது அவனுக்கு ஆதாம் என்று அவர் பெயரிட்டார். (ஆதி 2:7). இந்த இடத்தில் எபிரெய வார்த்தையான ஆதாம் என்பது ஆண்பாலில் காணப்படுகிறது. ஆங்கில வேதம் அதை Man என்று ஆண்பாலில் ஆணைக்குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழில் மனுஷன் என்றிருப்பது தவறில்லை. ஆனால், அது ஆணைக்குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உணரவேண்டும். அது பெண்ணைக் குறிக்கப் பயன்படுத்தப்படவில்லை. ஆதியாகமம் 2ம் அதிகாரம் முழுவதும் ஆணாகிய மனிதனைக் குறிக்க ஆதாம் என்ற வார்த்தையே ஆண்பாலில் எங்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 2:15ல் அதே வார்த்தை மனுஷன் என்று தமிழில் ஆதாமாகிய முதல் மனிதனைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 20:21ம் வசனத்தில் ஆணாகிய ஆதாமில் இருந்து பெண்ணாகிய ஏவாள் உருவாக்கப்பட்டாள் என்பதைக் குறிப்பதற்காக, முதல் மனிதன் ஆதாம் என்று அழைக்கப்பட்டிருக்கிறான். அதற்குப் பிறகு 23ம் வசனத்திலும், 25ம் வசனத்திலும் ஆதாம் என்றே முதல் மனிதன் அழைக்கப்பட்டிருக்கிறான். இந்தப் பகுதியில் கவனிக்கவேண்டிய இன்னொன்று, 2:24ல், இந்த அதிகாரத்தில் முதல் தடவையாக தமிழில் ‘புருஷன்’ என்ற வார்த்தை ஆணைக்குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் அது Man என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. முதல் தடவையாக இந்த இடத்தில் எபிரெயத்தில் அது ஆதாம் என்ற வார்த்தையாக இல்லாமல் (֙םָדָאָֽה), அதற்குப் பதிலாக ஆணைக் குறிக்கும் இன்னுமொரு வார்த்தையான (ישִׁ֔א’) ‘ஈஷ்’ என்ற எபிரெய வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. முதல் மனிதனாகிய ஆணில் இருந்து உருவானவள் என்பதால் பெண்ணாகிய ஏவாள் ‘ஈஷ்ஸா’ என்று அழைக்கப்பட்டாள் (2:23). எபிரெய மொழியில் ‘ஈஷ்’ (ஆண்பால்), ‘ஈஷ்ஸா’ (பெண்பால்) என்ற வார்த்தைகளும் ஒத்திருப்பதைக் கவனிக்க வேண்டும்.
இதையெல்லாம் நான் விளக்கியிருப்பதற்குக் காரணம் எந்தளவுக்கு வார்த்தைகளைப் பரிசுத்த ஆவியானவர் கவனத்தோடு பயன்படுத்தியிருக்கிறார் என்பதையும், வெளிப்படுத்தல் வார்த்தைக்கு வார்த்தை முழுமையான தெய்வீக வெளிப்படுத்தலாக இருந்திருக்கிறது என்பதையும் நீங்கள் உணர வேண்டும் என்பதற்காகத்தான். வேதத்தில் காணப்படும் வார்த்தைகளை அலட்சியப்படுத்தாமல் கவனத்தோடு ஆராய்ந்து வேதத்தைப் படிக்கவேண்டும். வார்த்தைகளுக்கு நாம் நினைத்தபடி விளக்கமளிக்கக்கூடாது. வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வேதமொழிப்பெயர்ப்புகளை நாம் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.
1 தீமோ 2:5, 8 – இந்தப் பகுதியில் 5, 8 ஆகிய வசனங்களில் ஆண், ஆண்கள் என்றே இருக்கவேண்டும். இருபாலரையும் குறிக்க இவை பயன்படுத்தப்படவில்லை. ஆணைக்குறிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ரோமர் 3:26 – Propitiation, RSV – Expiation கிருபாதார பலி (கிருபையை ஆதாரமாகக் கொண்ட பலி) என்று தமிழ் வேதாகமத்தில் இருப்பது சரியான மொழிபெயர்ப்பல்ல. கிரேக்க மூலத்தில் இந்த வார்த்தை தேவகோபத்தைப் போக்கிய பலி என்ற அர்த்தத்தைத் தருகின்றது. (a sin offering, by which the wrath of the deity shall be appeased). (Hilaskomai – to propitiate). இதே கிரேக்க வார்த்தை, Hilasterion கிருபாசனம் (mercy seat) என்று எபிரெயரில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கிருபாசனத்திலேயே தேவகோபத்தைத் தணிக்க பழைய ஏற்பாட்டில் இரத்தப்பலி கொடுக்கப்பட்டது. ரோமர் 3:26ல் காணப்படும் Propitiation என்ற ஆங்கில வார்த்தை தமிழில் ‘கோபநிவாரண பலி’ என்று இருக்க வேண்டும். அதுவே சரியான மொழிபெயர்ப்பு. இந்த வார்த்தையை நான் உருவாக்கி சில வருடங்களாகவே பயன்படுத்தி வருகிறேன். நான் எழுதி வெளியிட்டிருக்கும் ‘தேவகோபம்’ என்ற நூலில் இதுபற்றி அதிகமாக விளக்கி எழுதியிருக்கிறேன்.
1 கொரி 6:9 – ‘சுயபுணர்ச்சிக்காரரும்’ – Gk: Malakos – Effeminate – Literally: soft – a soft character – Dictionary – having characteristics regarded as typical of a woman. பெண்ணுக்கரிய தன்மைகளை வெளிப்படுத்தி பெண்ணைப்போல நடந்து கொள்கிறவன். மத்தேயு 11:8 – இயேசு யோவானைக்குறித்து, அவன் அப்படிப்பட்டவனா என்று கேட்டார். 1 கொரி 6:9ல் ‘சுயபுணர்ச்சிக்காரர்’ சரியான மொழிபெயர்ப்பல்ல (musturbation). இந்த இடத்தில் சரியான வார்த்தைகள், ‘சிற்றின்பக்காரரும்’ (passive), ‘ஆண்புணர்ச்சிக்காரரும்’ (active).
1 பேதுரு 3:1 – Submisive – IBS Lanka – பணிந்து. ‘கீழ்ப்படிதல்’ என்பதே சரியானது.
1 பேதுரு 2:18 – Slave – பழைய திருப்புதலில் ‘வேலைக்காரர்’ என்றிருப்பது சரியல்ல. அடிமைகள் என்பதே சரியானது. இன்று அடிமைமுறை சமுதாயத்தில் இல்லை என்பதற்காக வார்த்தையைக் காலத்துக்கேற்றதாக மாற்றி எழுதக்கூடாது. அடிமைகளிடம் அன்று காணப்பட்ட பயபக்தியுள்ள கீழ்ப்படிவு இன்று வேலைக்காரர்களிடம் காணப்பட வேண்டும். இன்னொருவருக்குக் கீழிருந்து பணிபுரியும் எவருமே வேலைக்காரர்கள்தான். நமக்கு மேலிருப்பவர்களுக்குக் கீழ்ப்படிந்து நாம் நடக்க வேண்டும்.
1 தீமோ 1:5
“கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.”
1 தீமோ 1:5ல் தமிழ் வேதாகமத்தில் “கற்பனை” என்றிருக்கும் மொழிபெயர்ப்பு தவறு, இந்த இடத்தில் மொழிபெயர்ப்பாளர் எழுத்துபூர்வமாக மொழிபெயர்க்காமல் இந்தப் பகுதிபற்றித் தான் கொண்டிருக்கும் எண்ணத்திற்கேற்ப மொழிபெயர்த்திருக்கிறார். அதாவது, அவரைப் பொறுத்தவரையில் வசனத்திற்கு முன்னால் வரும் பகுதியும், பின்னால் வரும் பகுதியும் நியாயப்பிரமாணத்தைப் பற்றி விளக்குகின்றதாகத் தீர்மானித்து “கற்பனை” என்ற பதத்தை நியாயப்பிரமாணத்தின் கற்பனை என்ற அர்த்தத்தில் தந்திருக்கிறார். தமிழ் வேதாகமம் பத்துக் கட்டளையைக் குறிக்கவே எல்லா இடங்களிலும் கற்பனை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. ஆனால், இது கட்டளை என்றிருக்க வேண்டும். ஏனெனில், இது அப்போஸ்தலர் அவர்களுக்கு இட்ட கட்டளையைக் குறிக்கிறது.
இந்தப் பகுதியில் 1 தீமோ 1:5ஐ எழுத்துபூர்வமாக மொழிபெயர்த்தால் ‘அது இப்போது எங்கள் கட்டளையின் நோக்கம், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே’ என்றிருக்கவேண்டும். இதன் பொருள் என்னவென்றால், ‘நாங்கள் கிறிஸ்துவின் போதனைகளை விளக்கி நீங்கள் பின்பற்றும்படியாகக் கொடுத்த கட்டளையின் நோக்கம் நல்ல மனச்சாட்சியிலும், உண்மையான விசுவாசத்திலும் இருந்து பிறக்கும் அன்பே’ என்பது தான். அதாவது, எங்களுடைய கட்டளை உங்கள் மத்தியில் வளரவேண்டிய அன்பை இலக்காகவே கொண்டு கொடுக்கப்பட்டது என்கிறார் பவுல்.
1 யோவான் 5:18
“தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்.”
ESV – We know that everyone who has been born of God does not keep on sinning, but he who was born of God protects him, and the evil one does not touch him.
இந்த இடத்தில் இது, “தொடர்ந்து (தொடர்ச்சியாகப்) பாவஞ்செய்யானென்று” என்றிருந்திருக்க வேண்டும். தமிழிலக்கியத்தில் வினைச்சொல் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று மட்டுமே இருக்கின்றது. ஒரு செயல் நிகழ்காலத்தில் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருவதைக் குறிக்கும் இலக்கண வார்த்தை தமிழில் இல்லை. கிரேக்க மொழியிலும், ஆங்கிலத்திலும் அது இருக்கிறது. (Present continuous tense)
வார்த்தைக்கு வார்த்தை மூலமொழியை ஒத்து மொழிபெயர்ப்பு இருக்கவேண்டிய அவசியத்தை நான் வலியுறுத்துவதற்குக் காரணமென்ன?
வார்த்தைகள் வசனத்தில் அநாவசியத்துக்குப் பயன்படுத்தப்படவில்லை. வார்த்தைகள் மாறினால் வசனமும், அது சொல்லவரும் உண்மையும் மாறிவிடும். வேதத்தில் வார்த்தைகள் சரியானபடி மொழிபெயர்க்கப்படாவிட்டால் வாசிக்கிறவர் அதன் மெய்ப்பொருளை அறிந்துகொள்ள முடியாது. சத்தியம் சிதைக்கப்பட்டுவிடும்.
பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்தோடு பயன்படுத்தியிருப்பதால் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். தவறான மொழிபெயர்ப்பு தவறான செய்தியைத் தருவதோடு கர்த்தரின் வார்த்தை என்பதற்கான அதிகாரத்தை இழந்துவிடும்; போலிப்போதனைகளை உருவாக்கி விடும்.
அத்தோடு பிரசங்கிக்கிறவனின் செய்தியில் கர்த்தரின் அதிகாரம் இருக்காது. அதிகாரமில்லாத பிரசங்கத்தை ஆவியானவர் பயன்படுத்தமாட்டார்.
சத்தியத்தை உறுதியாகப் பின்பற்றி சத்தியத்தின் அடிப்படையில் வாழும் சபையாக இருக்க வேதத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் மதிப்புக்கொடுத்து சத்தியத்தைப் பாதுகாக்கும் சபையாக நாம் இருக்கவேண்டும்.
1 தீமோ 3:15
அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.
வேதாகமத்தைப் பற்றிய விளக்கத்தைக் கொடுக்கும் 1689 விசுவாச அறிக்கை அதன் முதலாம் அதிகாரம், பத்தி 6ல் பின்வருமாறு விளக்குகிறது.
தேவனுடைய மகிமைக்கும், மனிதனுடைய இரட்சிப்புக்கும், விசுவாசத்திற்கும், வாழ்க்கைக்கும் அவசியமான தேவனுடைய எல்லாத் திட்டங்களும் பரிசுத்த வேதாகமத்தில் திட்டவட்டமாக (வெளிப்படையாக) அல்லது உள்ளடக்கமாக (இன்றியமையா நிலையில், – Implicitly or inference or by good and necessary consequence to be deduced) காணப்படுகின்றது. இவற்றோடு எக்காலத்திலும், ஆவியின் பெயரில் எந்தவித புதிய வெளிப்பாடுகளையோ அல்லது மனித மரபுசார்ந்த வழிமுறைகளையோ சேர்க்கக்கூடாது. (இன்றியமையா நிலையில் என்ற பதம் நேரிடையான கட்டளைகளாக இல்லாமல் பொதுவான வகையில் கொடுக்கப்பட்டுள்ள தேவ போதனைகளைக் குறிப்பதாகும். இத்தகைய போதனைகளை நாம் வேதப்பகுதிகளை ஆராய்ந்து அதில் காணப்படும் தெளிவானதும், எளிதில் நிலைநாட்டக் கூடியதுமான முடிவுகளைக் கொண்டு அறிந்துகொள்ளலாம்.) ஆயினும், தேவனுடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இத்தகைய போதனைகளில் சரியான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள நமக்கு தேவ ஆவியானவரின் ஆன்மீக அறிவொளி அவசியமானதாகும்.
இனித் தொடர்ந்து உள்ளடக்கமாக, மேலெழுந்தவாரியாகக் கண்களுக்கு நேரடியாகப் புலப்படாமல் காணப்படும் சத்தியங்களை எவ்வாறு அறிந்துகொள்வது என்பதற்கான மேலும் சில உதாரணங்களைக் கவனிப்போம்.
உதாரணம் 4: கர்த்தரின் ஆராதனை
திருச்சபை ஆராதனை மிகவும் அவசியமான வேதபோதனை. அதாவது, நம்மைப் படைத்து நமக்கு இரட்சிப்பை இலவசமாக வழங்கிய தேவன், நாம் அவருடைய மகிமைக்காகவே படைக்கப்பட்டிருப்பதாலும், அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வாழவேண்டியவர்களாகவும் இருப்பதால் அவரை நித்தமும் ஆராதித்து வாழும்படியாகக் கட்டளையிட்டிருக்கிறார். மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம் கர்த்தரைத் தன் வாழ்வில் மகிமைப்படுத்தி, அவரில் ஆனந்தித்து வாழ்வதே என்று வினாவிடைப்போதனையின் முதலாம் வினாவிடை விளக்குகிறது. வீட்டிலும், திருச்சபையிலும் அவரை ஆராதித்து வாழவேண்டியது இரட்சிப்படைந்த ஒவ்வொருவரின் பொறுப்பு. ஆராதனை என்பது சபை ஆராதனையை மட்டும் குறிக்கும் பதமல்ல; நம் வாழ்க்கையை அவருடைய மகிமைக்காக, அவருடைய வார்த்தையை அனைத்து விஷயங்களிலும் பின்பற்றி வாழ்வதே ஆராதனையான வாழ்க்கை. இந்த முறையில் வாழவே கர்த்தர் இஸ்ரவேலை உருவாக்கினார். அவர்கள் அந்த முறையில் வாழத்தவறினார்கள். கர்த்தரை நேசித்து ஆராதிக்கும் சுபாவத்தை இரட்சிப்பு நமக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. சபை ஆராதனை இதில் ஒரு முக்கிய பகுதி. (உதா: ஏதேனில் ஆதாம், இவ்வுலகில் இரட்சிப்படைந்தவர்கள்).
இத்தனை பெரிய அவசியமான ஆராதனைக்குரிய கட்டளைபற்றிய அத்தனை போதனைகளும் வெளிப்படையாக வேதத்தில் நமக்குத் தரப்பட்டிருக்கும் என்றுதான் நாம் எதிர்பார்ப்போம்; அதுதான் இயற்கை. ஆனால், அவை வெளிப்படையாக அல்லாமல் பரவலாக பல பகுதிகளில் வேதம் முழுவதிலும் உள்ளடக்கமாகவே தரப்பட்டிருக்கின்றன. இது நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. அந்தவிதத்தில்தான் வேதம் நமக்கு அதைப் போதிக்கிறது. ஆகவே, உள்ளடக்கமாகத் தரப்பட்டிருக்கும் ஆராதனைபற்றிய சத்தியங்களை நாம் ஆராய்ந்து கவனத்தோடு படித்துப் பயன்படுத்தவேண்டியது நம்முடைய கீழ்ப்படிதலோடு தொடர்புடைய கடமை.
இதற்கான உதாரணங்களை இப்போது கவனிப்போம்:
கர்த்தரை நாம் ஆராதிக்க வேண்டும் என்ற உண்மையைப் படைப்பில் ஓய்வு நாளை ஏற்படுத்தியதன் மூலம் கர்த்தர் நமக்கு உணர்த்துகிறார். (ஆதி 2:1-3). ஓய்வுநாள் ஆராதனைக்காகவே ஏற்படுத்தப்பட்டது. இந்தப் பகுதி பற்றிப் பல கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம். முதலில், ஆதியாகமம் 1ம், 2ம் ஒரே படைப்பை விளக்குகின்றன. இவற்றில் இரண்டு படைப்புகள் இல்லை. முதலாவது ஆறாம் நாள்வரை படைப்பை விளக்கும்போது, இரண்டாவது 7ம் நாள் படைப்பை விளக்குகிறது. அதற்குப் பிறகு மறுபடியும் படைப்பில் முக்கியமான அம்சத்தை விளக்க ஆரம்பிக்கிறது. 7ம் நாள் உருவாக்கப்பட்டது மனித ஆராதனைக்காகவே. அது எத்தனை உயர்ந்தது என்பதை உணர்த்த கர்த்தரே ஓய்வெடுக்கிறார். இந்த ஒய்வு (சபாட் – Sabbat) என்ற வார்த்தை ஆவிக்குரிய ஆராதனை ஓய்வைக் குறிக்கின்ற விசேஷமான எபிரெய வார்த்தை. இதைப் புதிய ஏற்பாட்டில் எபிரெயருக்கு எழுதியவர் பயன்படுத்தியிருக்கிறார்.
எபிரெ 4:8-10, “யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே. ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனிவருகிறதாயிருக்கிறது. ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்.”
இந்த வசனங்களில் ‘இளைப்பாறுதல்’ என்ற வார்த்தை மூன்று தடவைகள் வந்திருக்கின்றன. அவற்றில் ஒரு வார்த்தை மட்டுமே ஆதியாகமம் 2:2ல் (ஓய்ந்திருந்தபடியால் – Sabbatismos) ஆவிக்குரிய ஒய்வுநாளைக் குறிக்கும் ‘சபத்து’ நாளாக இருக்கிறது. இந்த வார்த்தையையே எபிரெயரை எழுதியவர் புதிய உடன்படிக்கை காலத்திலும் அந்த நாள் தொடர்கிறது என்பதை எடுத்துக்காட்டப் பயன்படுத்தியிருக்கிறார். இத்தனை முக்கியமான இந்த ‘சபத்து ஓய்வு நாளைக்’ குறிக்கும் போதனை வெளிப்படையாக அல்லாமல் நாம் தர்க்கரீதியில் ஆராய்ந்து படித்துப் புரிந்துகொள்ளக் கூடியவிதத்தில் உள்ளடக்கமாகவே தரப்பட்டிருக்கிறது.
7ம் நாளை உருவாக்கி கர்த்தர் ஓய்வெடுத்தபோது அதை ஏற்கனவே படைக்கப்பட்டிருந்த ஆதாமும் ஏவாளும் கவனத்தோடு பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் தன்னைப் பார்த்துக் கற்றுக்கொள்ளவேண்டுமென்பதற்காகவே கர்த்தர் தான் ஒய்வெடுத்ததை உதாரணமாகக் காட்டியிருக்கிறார். இது மிகவும் அற்புதமானதும், வல்லமையானதுமான வேதப்பகுதி. இது விளக்கும் ஆராதனை மற்றும் ஆராதனை நாள் பற்றிய சத்தியம் ஆழமானதும், அவசியமானதுமாகும்.
கர்த்தரை நாம் ஆராதிக்க வேண்டும் என்பதும், அதை வாரத்தின் முதல் நாளில் செய்யவேண்டும் என்ற கட்டளையும் படைப்பில் இருந்தே ஆரம்பித்துவிட்டன. படைப்பில் ஏற்படுத்தப்பட்டவை எக்காலத்திலும் தொடர வேண்டியவையாக இருக்கின்றன.
அவை:
- உழைப்பு,
- திருமணம்,
- ஓய்வுநாள் ஆராதனை.
எந்த விஷயத்தை அறிந்துகொள்ளுவதற்கும் புதிய ஏற்பாட்டை மட்டும் ஆராய்வது மிகவும் தவறானது. புதிய ஏற்பாடுகூட பழைய ஏற்பாட்டைத்தான் ஆராதனை பற்றிய போதனைகளுக்கு ஆதாரமாகக் காட்டுகிறது. இந்தப் பகுதியில் உள்ளடக்கமாக விளக்கப்பட்டிருப்பதையே யாத்திராகமம் 20லும், உபாகமம் 5ம் அதிகாரத்திலும் மறுபடியும் வாசிக்கிறோம். இங்கே படைப்பில் ஏற்படுத்தப்பட்டது அந்தப் பகுதியில் எழுத்தில் நியாயப்பிரமாணத்தின் பகுதியாக மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆராதனைபற்றிய கர்த்தரின் இந்த நியமத்தை இஸ்ரவேல் மக்கள் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பின்பற்றி வந்திருந்தனர்.
இதைப் பற்றி ஏசாயா 58:13-14 விளக்குகிறது. இதில் ஒய்வுநாளைக்குறிக்க ‘சபத்து’ என்ற வார்த்தை இருமுறை வந்திருக்கிறது. அது பரிசுத்தநாள் என்றும் இருமுறை அழைக்கப்பட்டிருக்கிறது.
ஏசாயா 58:13-14
என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்டி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.
இதுவரை படைப்பில் ஆராதனையைக் கவனித்தோம். அதற்கு அடுத்த கட்டமாக ஆராதனை பற்றிய போதனையை ஆதியாகமம் 4ல் கவனிக்கிறோம். இடைப்பட்ட காலத்தில் மனிதன் பாவம் செய்து மனுக்குலம் பாவத்தில் வீழ்ந்து, கர்த்தர் ஆதாமைத் தேடிக்கண்டுபிடித்து அவனுக்கு இரட்சிப்பளித்தபின் ஆதாமின் சந்ததி பற்றி ஆதியாகமம் 4ல் வாசிக்கிறோம். அதில் ஆரம்பத்திலேயே மிகமுக்கியமாக நமக்கு விளக்கப்பட்டிருப்பது, ஆதாமின் சந்ததி எவ்வாறு கர்த்தரை ஆராதனை செய்தது என்பதுதான். இதிலிருந்தே ஆராதனைக்கு கர்த்தர் அளித்திருக்கும் மிக உயர்ந்த இடத்தைக் கவனிக்காமல் இருக்கமுடியாது. (ஆதி 4:1-5).
இந்தப் பகுதியிலும் ஆராதனைபற்றிய விளக்கங்கள் உள்ளடக்கமாகவே காணப்படுகின்றன என்பதை உணரவேண்டும். இது ஆராதனை பற்றிய பகுதி என்பது அந்தப் பகுதியில் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. ஆராதனைத் தத்துவங்கள் இதில் உள்ளடக்கமாகக் காணப்படுவதால் தான் அநேகர் இந்தப் பகுதிக்குத் தவறாக விளக்கமளித்து வருகிறார்கள். உள்ளடக்கமாகக் காணப்படுவதை ஆராய்ந்து வெளியில் கொண்டு வருவதற்குத்தான் நாம் வேதவிளக்கவிதிகளைப் (Rules of Interpretation) பயன்படுத்தவேண்டியவர்களாக இருக்கிறோம்.
விதி 1: வார்த்தைகளுக்கான சரியான அர்த்தம் தெரியவேண்டும்.
விதி 2: வசனப்பகுதி அமைந்திருக்கும் சந்தர்ப்பம் தெரிய வேண்டும்.
விதி 3: வசனப்பகுதியில் உள்ளடக்கமாகக் காணப்படும் உண்மை தெரியவேண்டும்.
விதி 4: தர்க்கத்தை பயன்படுத்தி பகுதி பற்றிச் சிந்திக்க வேண்டும்.
விதி 5: இதேபோன்ற ஏனைய வேதபகுதிகளோடு தொடர்புபடுத்தி இதன் போதனையை விளங்கிக்கொள்ள வேண்டும்.
ஆதியாகமம் 4:3-5 வரையுள்ள வசனங்களில் காணப்படும் ‘காணிக்கை’ என்ற வார்த்தைக்கான அர்த்தத்தைக் கண்டுபிடிப்பது அவசியம். ஆராய்ந்து பார்க்கும்போது அது நாம் சபையில் கொடுக்கும் காணிக்கை அல்ல, அந்தக் காலத்தில் ஆராதனைக்காகக் கொண்டுவரப்பட்ட கர்த்தருக்கு செலுத்தப்பட்ட பலி என்பதை அறிந்துகொள்கிறோம்.
அடுத்ததாக உள்ளடக்கமாக அந்தப் பகுதியில் காணப்படும் உண்மைகள்:
- அத்தகைய ஆராதனை செய்யப்பட்ட நாள் ஓய்வுநாள்.
- ஓய்வுநாள் ஆராதனைபற்றி பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுத் தந்திருந்தனர்.
- காயீன், ஆபேல் இருவரில் ஆபேல் மட்டுமே கர்த்தரை விசுவாசித்தவனாக இருந்தான்.
- ஆபேல் விசுவாசத்துக்குரிய கர்த்தருக்கேற்ற பலியைச் செலுத்தினான். காயீன் அவிசுவாசியாக இருந்து மனித சுபாவத்திற்கேற்ற பலியைச் செலுத்தினான்.
- ஆபேலின் பலியைக் கர்த்தர் அங்கீகரித்தார். காயீனின் பலியைக் கர்த்தர் நிராகரித்தார்.
இந்தப் பகுதியில் உள்ளடக்கமாகக் காணப்படும் இத்தனை உண்மைகளுக்கும் வேதத்தின் ஏனைய பகுதிகளை வைத்து ஆதாரங்காட்ட முடியும். ஆராதனை பற்றிய இந்த உண்மைகள் ஏனைய பகுதிகளில் வெளிப்படையாக விளக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, வெளிப்படையாக விளக்கும் பகுதிகள் இந்தப் பகுதியில் உள்ளடக்கமாகக் காணப்படுகிறவைகளைக் கண்டுகொள்ளத் துணைசெய்கின்றன.
புதிய ஏற்பாட்டுக்காலம் ஆரம்பமானபோது அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நாளான வாரத்தின் முதல் நாளைக் ‘கிறிஸ்தவ சபத்து நாளாக’ ஆண்டவரின் நாளாக ஏற்படுத்தினர். அவர்கள் கிறிஸ்துவின் அதிகாரத்தின்படி அதைச் செய்தனர். இதுவும் வெளிப்படையாக அல்லாமல் உள்ளடக்கமாகவே விளக்கப்பட்டிருக்கிறது. ஓரிரு வசனங்களாக இருந்தாலும் அந்த வசனங்களில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும் சத்தியத்தை நாம் முழுமனத்தோடும் பின்பற்ற வேண்டும்.
- இயேசு உயிர்த்தெழுந்தது வாரத்தின் முதல் நாளில்
- இயேசு, மனித குமாரனே ‘சபத்தின் ஆண்டவர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் (மத்தேயு 12:8)
- பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் வாக்குத்தத்தத்தின்படி வந்தது வாரத்தின் முதல் நாளில் (பெந்தகொஸ்தே தினம் வாரத்தின் முதல் நாள்)
- அப்போஸ்தல சபைகூடி வந்து ஆராதனை செய்தது வாரத்தின் முதல் நாளில் (அப் 20:7; 1 கொரி 16:2)
- யோவானுக்கு ஆண்டவர் வெளிப்படுத்தல் விசேஷத்தைத் தந்தது வாரத்தின் முதல் நாளில் (வெளி 1:10)
- முதல் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பேரரசன் கொன்ஸ்டன்டைன் காலத்தில் வாரத்தின் முதல் நாளில் ஆதிசபைகூடி வந்திருந்தது.
1689 விசுவாச அறிக்கையும், வினாவிடைப்போதனையும் வாரத்தின் முதல் நாளை ஓய்வுநாளாக, கிறிஸ்தவ சபத்து நாளாகக் (ஆண்டவருடைய நாள்) கணித்து ஆராதனை செய்யும்படிப் போதிக்கின்றன. அதற்குக் காரணம் வேதத்தில் அந்த முறையில் அது விளக்கப்பட்டிருப்பதால்தான். திருச்சபை ஆரம்பித்த காலத்தில் இருந்து இதுவே வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.
இது தவிர புதிய உடன்படிக்கை திருச்சபை ஆராதனை பற்றிய போதனைகளை ஆராயும்போது மிகமுக்கியமானதொரு உண்மையை மனதிலிருத்திக்கொள்ள வேண்டும்.
நாம் வேதத்தை ஆராயும்போது பின்பற்ற வேண்டிய மிகமுக்கியமான விதி:
“சபை ஆராதனை பற்றிய வேதபோதனைகளை வெளிப்படையாகத் தரப்பட்டிருக்கும் போதனைகள் மூலமும், அது பற்றி உள்ளடக்கமாகக் காணப்படும் போதனைகளின் மூலமும், வேதம் இனங்காட்டும் பொதுவான கோட்பாடுகள் மூலமும், நேர்மறையான கட்டளைகளின் மூலமும், அதுபற்றிய தெளிவான உதாரணங்கள் மூலமும், தர்க்கரீதியில் ஆராய்ந்து பெற்றுக்கொள்ளக்கூடிய இன்றியமையாநிலையில் உள்ளடக்கமாகத் தரப்பட்டிருக்கும் போதனைகள் மூலமும் பெற்றுக் கொள்ளுகிறோம்” என்கிறார் சீர்திருத்த அறிஞர் லீஜன் டங்கன்.
இந்த விதியைப் பயன்படுத்திப் பெற்றுக்கொள்ளும் உண்மைகளுக்கு மேல் வேறு எதையும் கர்த்தரின் ஆராதனையில் இணைக்கக்கூடாது.
மேலே நான் விளக்கிய விதிகளைப் பின்பற்றியே ஆராதனைக்குரிய தத்துவங்களை 1689 விசுவாச அறிக்கை தொகுத்து அதன் 22ம் அதிகாரத்தில் தந்திருக்கிறது. இந்த வேதவிதியைப் பயன்படுத்தி அவற்றைத் தொகுத்திருக்கிறோம் என்று சொல்லாமல், இந்த விதிகளின் மூலம் பெற்றுக்கொண்ட சத்தியங்களையே சீர்திருத்த பேரறிஞர்கள் அதில் விளக்கியிருக்கிறார்கள். இவற்றையே ஆராதனையில் சீர்திருத்த திருச்சபைகள் பின்பற்றி வருகின்றன. இந்த அதிகாரம் விளக்கும் போதனையை “வரையறுக்கப்பட்ட அல்லது முறைப்படுத்தப்பட்ட ஆராதனை முறை” என்று அழைக்கிறார்கள்.
இதுவரை கவனித்திருக்கும் வேதவிதிகளின்படி பெறப்பட்டிருக்கும் ஆராதனைபற்றிய புதிய உடன்படிக்கைப் போதனைகளைக் கவனிப்போம்.
- இயேசு யோவான் 3ல் – 3:23 – ஆவியோடும், உண்மையோடும்.
- அப்போ 2:42 – அப்போஸ். உபதேசம், ஐக்கியம், அப்பம் பிட்குதல், சபை ஜெபம்.
- பவுல் ஆராதனை பற்றி எபேசி 5:18-21; கொலோ 3:16-17ம் விளக்குகிறார்
- இயேசு திருவிருந்து பற்றி (சுவிசேஷ நூல்களிலும்), பவுல் 1 கொரி 11லும் திருவிருந்து பற்றி
- இயேசு ஞானஸ்நானம் பற்றியும், அதுபற்றிய அப்போஸ்தல உதாரணங்களும்
- சபை ஜெபத்தைப்பற்றி பவுல் 1 தீமோ 2; 1 கொரி
- பிரசங்கத்தைப்பற்றிப் பவுல் பரவலாகப் பல இடங்களில்
- வேத வாசிப்பைப்பற்றி பவுல் 1 தீமோ 4:13;
மேலே காணப்படும் ஆராதனை பற்றிய புதிய ஏற்பாட்டுப் போதனைகளில் இரண்டு உதாரணங்களை இப்போது கவனிப்போம். பவுலின் நிருபங்களில் காணப்படும் ஆராதனை பற்றிய இந்த வசனங்களை ஆராய்ந்து புரிந்துகொள்ளுவது அவசியம். மேலெழுந்தவாரியாகப் பார்க்கிறபோது இவற்றில் ஆராதனை பற்றி என்ன இருக்கிறது என்று சிந்திக்கலாம். ஆனால், எபேசிய, கொலோசெய சபை விசுவாசிகளுக்கு பவுலின் வார்த்தைகள் ஆராதனை பற்றியவை என்பது தெளிவாகத் தெரிந்திருந்தன. அதனால்தான் பவுல் நான் ஆராதனையைப் பற்றித்தான் விளக்கிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லாமல் அதுபற்றிய விளக்கத்தை அளிக்கிறார்.
எபேசியர் 5:18-21
துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
இந்தப் பகுதியில் 19-21 வசனங்கள் எழுத்துபூர்வமான மொழிபெயர்ப்பின்படி பின்வருமாறு இருந்திருக்க வேண்டும். –
“சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுக்களினாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு, உங்கள் இருதயங்களில் ஆண்டவருக்கு சங்கீதம் பாடி, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய கர்த்தருக்கு நன்றி செலுத்தி, கிறிஸ்துவில் இருக்கும் தெய்வ பயத்தோடு ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.”
மேலே பார்த்திருக்கும் வசனங்களில் தமிழ் மொழிபெயர்ப்பில் காணப்படும் ‘ஸ்தோத்திரம்’ என்ற வார்த்தை ‘நன்றி’ என்று வந்திருக்கவேண்டும். கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாக ஜெபத்தின் மூலம் நன்றி சொல்லுவதையே பவுல் இங்கு விளக்குகிறார். வடமொழி வார்த்தையான ஸ்தோத்திரம் இந்த இடத்தில் சரியான மொழிபெயர்ப்பல்ல.
கொலோ 3:16-17
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி; வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
இந்தப் பகுதி தவறான அர்த்தத்தைத் தந்துவிடுகிறது. இது எப்படி இருந்திருக்கவேண்டுமென்றால்,
“கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே பெருமளவுக்கு (richly, abundantly) வாசமாயிருக்கட்டும், சகல ஞானத்தோடும் ஒவ்வொரு வருக்கும் போதித்தும், ஆலோசனைகளைக் கொடுத்தும்; சங்கீதத்தாலும், கீர்த்தனைகளாலும், ஞானப்பாட்டுக்களினாலும் பாடி, உங்கள் இருதயத்தில் கர்த்தருக்கு நன்றி செலுத்திக் கொண்டு”
ESV – Let the word of Christ dwell in you richly, teaching and admonishing one another in all wisdom, singing psalms and hymns and spiritual songs, with thankfulness in your hearts to God.
இதுவரை ஆராதனை பற்றிய புதிய ஏற்பாட்டு விளக்கங்களைக் கவனிக்கும்போது, ஆராதனை பற்றிய அனைத்துப் போதனைகளும் ஒரே இடத்தில் காணப்படாமல், பரவலாக பல்வேறு பகுதிகளில் இயேசு கிறிஸ்துவாலும், அப்போஸ்தலர்களாலும் விளக்கப்பட்டிருப்பதைக் கவனிக்கிறோம். அந்தவிதத்தில் காணப்படும் சத்தியங்களைத் தொகுத்து நாம் ஆராதனை பற்றிய போதனைகள் அனைத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இந்த முறையிலேயே வேதத்தை ஆராய்ந்து படித்து திருச்சபை ஆராதனை முறைகள் பற்றிய போதனைகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் மட்டுமல்லாமல் திருச்சபைக் கோட்பாடுகள் பற்றியதிலும் இதே வேதவிதிமுறையைப் பின்பற்றியே நாம் அதற்குரிய போதனைகளைப் பெற்றுக்கொள்ளுகிறோம். இம்முறையில் வேதசத்தியங்களை நாம் கண்டுகொள்ளவேண்டும் என்ற விதியை வேதமே தனக்குள் கொண்டிருந்து நமக்கு விளக்குகிறது. உதாரணத்திற்கு,
2 தீமோ 3:16-17
“வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. (அவசியமானதாக இருக்கிறது – profitable)
பழைய திருப்புதலின் இந்த வசனங்களில் இரண்டு இலக்கணப்பிழைகள் உள்ளன. முதலாவது, ’அவைகள்‘ என்ற வார்த்தை. ’அவை’ என்ற வார்த்தையில் ஒன்றுக்கு மேற்பட்ட என்ற அர்த்தம் காணப்படும்போது (பன்மை) ‘அவைகள்’ என்று எழுதுவது இலக்கணப்படித் தவறானது. இரண்டாவது, 17ம் வசனம் பன்மையில், ‘பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கின்றன’ என்று முடிந்திருக்க வேண்டும். இது பவுலின் தவறல்ல; பரிசுத்த ஆவியானவரின் தவறுமல்ல, தமிழில் வேதத்தை மொழிபெயர்த்த மனிதர்களின் தவறு.
வேதத்தோடு எதையும் சேர்க்கக்கூடாது; அதிலிருந்து எதையும் விலக்கக்கூடாது
இதுவரை நாம் பார்த்திருக்கும் இருமுறைகளின் மூலம் பெறப்படும் உண்மைகளுக்கு மேல் வேறு எதையும் நாம் வேதத்தோடு இணைக்கக்கூடாது. ஆவியினால் பெறப்பட்ட வெளிப்படுத்தல் என்ற பெயரிலோ அல்லது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலோ பாரம்பரியத்தின் பெயரிலோ எதையும் வேத உண்மைகளாகக் கருதக்கூடாது. ஏற்கனவே கர்த்தர் வேதத்தில் தந்திருக்கும் அவரின் சித்தத்திற்கு மேலாக எதையும் இணைப்பது இயேசு கிறிஸ்துவுக்குச் செய்யும் துரோகம்; சத்தியப் புரட்டல். அத்தோடு வேதத்தில் இருப்பதை அகற்றவும் கூடாது.
- புதிய வெளிப்படுத்தல்கள் இல்லை – இதன் அடிப்படையில் இந்தக் கடைசிக் காலங்களில் கர்த்தர் தொடர்ந்து புதிய வெளிப்படுத்தல்களைத் தருவதில்லை. வெளிப்படுத்தல் முழுமையடைந்து விட்டது. அது வேதத்தில் மட்டுமே காணப்படுகிறது. அதனால் இன்று தீர்க்கதரிசனங்களுக்கோ, அந்நிய பாஷைக்கோ, தனி மனிதனால் செய்யப்படும் அற்புத செயல்களுக்கோ இடமில்லாமலும், அவசியமில்லாமலும் போய்விட்டது. வெளிப்படுத்தலாகிய வேதசத்தியங்கள் எழுத்தில் எழுதப்பட்டு நமக்களிக்கப்படுவதற்கு முன்பு முதல் நூற்றாண்டு காலத்தில் காணப்பட்ட இவற்றைக் கர்த்தரே நிறுத்திக்கொண்டார்.
- நடைமுறைவாத ஆபத்து – அத்தோடு, வேதம் மட்டுமே சத்தியமாக இருப்பதாலும், அதோடு எதையும் இணைக்கக்கூடாததாலும், வேதம் தெளிவாக வெளிப்படுத்தாத, நம் வாழ்க்கை மற்றும், திருச்சபை பற்றிய எந்த முடிவும் வேத சத்தியமாகாது. அதை ‘நடைமுறைவாதம்’ (pragmatism) என்று அழைப்பார்கள். வேதத்தில் இல்லைதான், இருந்தாலும் இதைச் செய்வதில் என்ன தவறிருக்கிறது என்று கேட்பதும், இருக்கும் சூழ்நிலையில் இதுதான் சரியாகப்படுகிறது என்று ஒன்றைச் செய்வதையுமே ‘நடைமுறைவாதம்’ என்று அழைப்பார்கள். இதைச் செய்துதான் யெரொபெயாம் இஸ்ரவேலை கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்யவைத்தான்.
இன்று கிறிஸ்தவனுக்குத் தேவைப்படுவது வேத அறிவு. அதை அளிப்பதற்காகவும், அதன் மூலம் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பரிசுத்தமாக வாழ்வதற்கும் கர்த்தர் தன் சபையை இந்த உலகத்தில் நிறுவியிருக்கிறார். அந்த சபையின் பொறுப்பு வேதத்தை நம்பி அதைத் தெளிவாக விளக்குவதும், அதிலிருந்து சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதும், அதிலிருந்து ஆத்மீக ஆலோசனைகளை வழங்கிவருவதும் மட்டுமே. சத்தியம் வெளிப்படையாக ஆத்துமாக்களிலும், போதகர்களிலும், திருச்சபை ஊழியங்களிலும், நடைமுறைகளிலும் ஆட்சி செய்யாத திருச்சபை உண்மையான சபையல்ல. அதனால்தான் ஒவ்வொரு சபையும் கர்த்தரால் அழைக்கப்பட்ட பரிசுத்தமான, கற்றறிந்த, வேதத்தில் ஆழ்ந்த அறிவும், நம்பிக்கையும் கொண்ட போதகர்களைக் (மூப்பர்கள்) கொண்டிருக்கவேண்டும்.
சாதாரண மக்களுக்கு நம் சமூகத்தில் வேத அறிவு மிகவும் குறைவாக இருக்கிறது. அவர்களுடைய கண்களைத் திறந்துவைத்து ஆத்தும வழிநடத்துகிறவன் சத்தியக் குருடனாக இருந்துவிடக்கூடாது. குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியாது. அதனால், திருச்சபையில் போதனை செய்யும், பிரசங்கம் செய்யும் பணியில் இருப்பவர்கள் கிடைக்கும் அத்தனை வழிகளையும் பயன்படுத்தி வேத அறிவில் மேலான வளர்ச்சியைப் பெற்றுக்கொள்ளுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.
வேத அறிவு இல்லாமல் வேதத்தின் ஆளுகைக்குக் கீழ் நாம் வரமுடியாது. வேதம் நம்மையும், திருச்சபையையும் ஆளுகிறது என்பதற்கான சாட்சி வேதத்தை மட்டும் பின்பற்றி வாழும் நம்வாழ்க்கையும், திருச்சபைப் பணிகளுந்தான்.
- பரிசுத்த வேதாகமத்தை எவரும் புரிந்துகொள்ள அவர்கள் இரட்சிப்புக்குரிய தெளிவை ஆவியானவரிடம் இருந்து அடைந்திருக்கவேண்டும். ஆவியானவரே வார்த்தையில் நமக்குத் தெளிவைத் தருகிறவர். எபேசிய கிறிஸ்தவர்களுக்கு அது கிடைக்க பவுல் ஜெபித்திருக்கிறார். வேத அறிவைத் தந்து நம்மை வழிநடத்துகிறவர் பரிசுத்த ஆவியானவரே. வேதத்தை ஆராய்ந்து படிக்கும்போது தாழ்மையோடு அவரில் தங்கியிருந்து அதைச் செய்யவேண்டும்.
- சந்தர்ப்பசூழலோடு தொடர்புடைய சில விஷயங்களில் (சபை ஆராதனை, சபை அரசமைப்பு ஆகியவை சம்பந்தப்பட்ட) நாம் கிறிஸ்தவ விவேகத்தையும், இயற்கையையும், கர்த்தர் உலகம் செயல்பட ஏற்படுத்தியிருக்கும் பொதுவான விதிகளையும் பின்பற்றி முடிவுகளை எடுக்க வேண்டும்.
1689 விசுவாச அறிக்கை 6ம் அதிகாரத்தில் இதுபற்றி விளக்குவதைக் கவனியுங்கள்:
‘அதேவேளை, கடவுள் வழிபாடு மற்றும் சபை ஆட்சியமைப்பு தொடர்புடைய – பொதுவாக எல்லா மனித நடவடிக்கைகளிலும், அமைப்புக்களிலும் கவனிக்கக் கூடியதுமான – சில சந்தர்ப்பங்களை நாம் இயற்கையின் விதிகள், கிறிஸ்தவ விவேகம், வேதாகமத்தின் பொதுவான விதிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தீர்மானித்து அவற்றை எக்காலத்திலும் கடைபிடிக்க வேண்டும். (உதாரணமாக வாரத்தின் முதல் நாளில் வழிபாட்டிற்காக சபைகூடிவர வேண்டும் என்றுதான் வேதம் சொல்கிறதே தவிர, எந்தெந்த நேரங்களில் கூடிவரவேண்டுமென்று கூறவில்லை. நாம் இயற்கையின் விதிகளைப் பயன்படுத்தி எல்லோருக்கும் வசதியான நேரத்தில் கூடிவர வேண்டும்.)’
வேதத்தில் எல்லாப் பகுதிகளும், அதன் போதனைகளும் சமமானவிதத்தில், இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடியவிதத்தில் காணப்படுவதில்லை. மாற்கு சுவிசேஷத்தை வாசித்து விளங்கிக்கொள்ளக்கூடிய விதத்தில் இலகுவாக வெளிப்படுத்தல் விசேஷம் காணப்படவில்லை. இருந்தபோதும் விசுவாசத்திற்குரிய போதனைகள் எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் காணப்படுகின்றன. கல்லாதவர்களும், கற்றறிந்தவர்களும் சாதாரண வேதவிதிகளைப் பயன்படுத்தி அவற்றைப் போதுமான விதத்தில் அறிந்து கொள்ள முடியும்.
எல்லா விஷயங்களிலும் வேதம் மட்டுமே இறுதித் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் கொண்டது.
வேதம் எப்போதும் ஒரே அர்த்தத்தைக் கொண்டிருக்கும். ஒரு வசனத்தில் இருந்து நாம் பல உண்மைகளைப் பெறமுடியாது. ஆதிசபைக்காலத்தில் ஒரிகன் போன்றோர் அதை நம்பினார்கள். அவர் ஒருவசனத்தில் நான்கு அர்த்தங்களைப் பார்த்தார். அது முழுத் தவறு. ஆவியானவர் வசனத்தில் ஒரு அர்த்தத்தையே தருகிறார். பல அர்த்தங்களை வசனத்தில் பார்த்து விளக்குவது அதிகப்பிரசங்கித்தனம் என்கிறார் மார்டின் லூத்தர். ஒரு வேதப்பகுதியில் இருந்து பல பயன்பாடுகளைப் பெறலாம்; பல அர்த்தங்கள் அதற்கு இருக்காது. அதனால் ஒரு வசனம் விளங்காதபோது பொறுமையாக அது பற்றி வேதத்தில் ஏனைய இடங்களில் காணப்படும் தெளிவான வசனங்களைப் பயன்படுத்தி தெளிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
சமயம் சம்பந்தப்பட்ட அனைத்து முரண்பாடுகளையும், சபைக் கவுன்சில் முடிவுகள், பழங்காலத்து எழுத்துக்கள், மனிதர்களின் போதனைகள், தனிப்பட்ட நபர்களின் கருத்துக்கள் அனைத்தையும் ஆவியானவரால் நமக்கு அருளப்பட்டிருக்கும் வேதத்தை வைத்து ஆராய்ந்தே உண்மையைத் தீர்மானிக்கவேண்டும். வேதம் சொல்லுவது மட்டுமே எந்த விஷயத்திலும் இறுதி முடிவாக இருக்கவேண்டும்.
எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அவற்றைத் தீர்க்க திருச்சபை வேதத்தின் முடிவையே நம்பியிருக்கவேண்டும்.
சில இறுதி வார்த்தைகள்
பரிசுத்த வேதாகமம் ஆரம்பத்தில் எபிரெய, கிரேக்க மொழிகளிலேயே எழுதப்பட்டிருந்தது. அவற்றையே நாம் மூலமொழிகள் என்று அழைக்கிறோம். அந்த மூலமொழிகளில் கர்த்தர் வேதத்தை அருளிச் செய்தபோது அவற்றில் எந்தத் தவறுக்கும் இடமிருக்கவில்லை. அந்த மூலப்பிரதிகளில் இருந்தே வேதம் உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக் கிறது. மூலமொழிகளில் எந்தத் தவறும் இல்லாதிருந்தபோதும் மொழிபெயர்ப்புகள் மூலத்தைப்போலத் தவறற்றவையாக இருந்துவிடாது. அதனால் முடிந்தவரை மூலத்தை ஒத்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எழுத்துபூர்வமான (Literal translation) மொழிபெயர்ப்புகளையே பயன்படுத்தவேண்டும். ஆங்கிலத்தில் அத்தகைய நல்ல நம்பத்தகுந்த மொழி பெயர்ப்புகள் இருக்கின்றன. தமிழ் மொழிபெயர்ப்புகள் அந்தளவுக்குத் தரமானவையாக இல்லை. அதைச் செய்யத் தகுதியுள்ளவர்கள் அரிதாக உள்ளனர்.
பழைய திருத்துதலில் (OV) இறையியல் தவறுகள் இல்லை. ஆனால், அது துல்லியமாக மூலத்தைத் தழுவி மொழிபெயர்க்கப்படவில்லை. அதன் தமிழும் மிகப்பழமையானது; இந்நூற்றாண்டு மக்களுக்குப் புரியாதது. இந்திய வேதாகம இலக்கியம் (Indian Bible Literature) ஒரு புதிய மொழிபெயர்ப்பைக் கொண்டுவந்தது. அதைப் பயன்படுத்தலாம். ஸ்ரீலங்கா சர்வதேச வேதாகம சங்க (International Bible Society) மொழிபெயர்ப்பில் பல பிரச்சனைகள் உள்ளன. இருந்தாலும் தமிழ் நடை நன்றாகவே இருக்கிறது.
பிரசங்கம் செய்கிறவர்கள் ஒரளவுக்குக் கற்றறிந்தவர்களாக, மொழிவளமுள்ளவர்களாக, பிரசங்கம் தயாரிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாக, வசனத்தில் உழைப்பவர்களாக இருக்கும்படி எதிர்பார்க்கப்படுவதால் அவர்கள் நல்ல தரமான ஆங்கில மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி தமிழ் வேதத்தில் வசனங்கள் சரியாக இருக்கின்றனவா என்று தீர்மானித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
இதுவரை பரிசுத்த வேதாகமம் பற்றிய இந்த ஆக்கத்தில் நாம் கற்றிருக்கும் அனைத்தையும் சுருக்கமாகக் கீழே தந்திருக்கிறேன்.
பரிசுத்த வேதாகமம்
- வேதம் கர்த்தரின் சித்தத்தின் மொத்த வடிவம்; அதற்கு மேல் மனிதன் அறிந்துகொள்ள அவசியமான அவருடைய சித்தம் எதுவும் இல்லை. கர்த்தர் வேதத்தின் மூலமாக மட்டுமே தன் சித்தத்தை வெளிப்படுத்துகிறார்; அவர் நேரடியாக இன்று பேசுவதில்லை. இன்னொரு வகையில் சொல்லப்போனால் கர்த்தரின் வெளிப்படுத்தல் நிறைவு பெற்றுவிட்டது.
- வேதத்தின் மூலம் மட்டுமே மனிதன் நேரடியாகக் கடவுளைப் பற்றிய அறிவை அடைந்து, இரட்சிப்பை அடைய முடியும்.
- வேதம், விசேஷமான முறையில் கர்த்தர் பரிசுத்த ஆவியினால் ஊதி அருளப்பட்ட தெய்வீகத் தன்மைகொண்ட வெளிப்படுத்தல். அதுபோன்று வேறெந்த எழுத்தோ, இலக்கியமோ உலகத்தில் இல்லை.
- எபிரெய, கிரேக்க மொழியில் எழுத்தில் கர்த்தர் தந்து பாதுகாக்கப்பட்டிருக்கும் வேதம் தன்னில் எந்தத் தவறுகளையும் கொண்டிருக்கவில்லை; ஆனால், மொழிபெயர்ப்புகள் குறை பாடுள்ளவையாக இருந்துவிடலாம்.
- கர்த்தரின் வேதத்தோடு எதையும் சேர்க்கக்கூடாது; அதிலிருந்து எதையும் நீக்கவும் கூடாது. வேதத்தில் காணப்படுபவை மட்டுமே வேதம்; கர்த்தரின் வார்த்தை.
- தெய்வீக வெளிப்படுத்தலாகிய வேதம் கர்த்தருக்குரிய சர்வஅதிகாரம் கொண்டது. வேதம் தன் அதிகாரத்தைத் தனக்குள்ளேயே கொண்டிருக்கிறது; அது தன் அதிகாரத்தை நிரூபிக்க படைக்கப்பட்ட எதிலும் தங்கியிருக்கவில்லை.
- வேதம் அழியாது. அதாவது அதில் கொடுக்கப்பட்டிருப்பவைகள் நிச்சயம் நிறைவேறும்; அது வீண்போகாது.
- கர்த்தரின் சித்தத்தின் மொத்த வடிவமாகிய வேதம், அவருடைய சித்தத்தை இரண்டு விதங்களில் வெளிப்படுத்துகின்றது:
- அ. வெளிப்படையாகவும்,
- ஆ. உள்ளடக்கமாகவும் கொண்டிருந்து வெளிப்படுத்துகின்றது.
- இரகசியமானவற்றைக் கர்த்தர் நமக்கு வெளிப்படுத்தவில்லை. அவர் மட்டுமே அதை அறிந்திருக்கிறார்.
- வேதம் எப்போதும் ஒரு அர்த்தத்தை மட்டுமே கொண்டிருக்கும் (One sense); அதற்குப் பல அர்த்தங்கள் கிடையாது. ஒரு வேதபோதனையில் பல பயன்பாடுகள் இருக்கலாம், ஆனால், வேதத்தின் அர்த்தம் எப்போதும் ஒன்று மட்டுமே.
- கிறிஸ்தவ வாழ்க்கை, திருச்சபை மற்றும் அனைத்து விஷயங்களிலும் வேதத்தின் தீர்ப்பு மட்டுமே இறுதியானது.