மகிமையுள்ள திருச்சபை

திருச்சபைக் கோட்பாடுகள் வேதத்தில் கர்த்தர் தந்திருக்கும் அதிமுக்கியமான அடிப்படைப் போதனைகளில் ஒன்று. அநேகர் அதுபற்றிக் கர்த்தர் வேதத்தில் விளக்கமாக எதையும் நமக்குத் தரவில்லை என்று எண்ணி வருகிறார்கள். அதற்குக் காரணம் அப்போதனைகளை எவ்வாறு வேதத்தில் இருந்து பெற்றுக்கொள்வது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. கர்த்தர் இந்த உலகத்தில் சபையைக் கட்டியெழுப்புவதற்காகத் தன்னுடைய ஒரே மகனை அனுப்பியிருக்கும்போது, அது பற்றி வேதத்தில் விளக்காமலா இருந்துவிடப் போகிறார்? எந்தளவுக்குத் திருச்சபை முக்கியமானது, அவசியமானது, மகிமையானது என்பதை இந்த ஆக்கத்தில் விளக்கப்போகிறேன்.

வரலாற்றில் கர்த்தரின் மீட்பின் திட்டத்தில், அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்துவில் இரட்சிப்பை அடைவதே இலக்காகக் காணப்படுகிறது. பிதாவும், குமாரனும் இணைந்து உலகம் படைக்கப்படுவதற்கு முன்பாக ஏற்படுத்திய திட்டத்திற்குப் பெயரே மீட்பின் திட்டம். இதை எபேசியர் 1 போன்ற வேதப்பகுதிகளில் வாசிக்கிறோம். இந்தத் திட்டத்தின்படி கர்த்தர் தன்னால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களை வரலாற்றில் கிறிஸ்துவின் மூலம் இரட்சிக்கிறார். கிறிஸ்துவால் நிறைவேற்றப்பட்ட பாவிகளுக்கான மீட்பு எவ்வாறு படைக்கப்பட்ட உலகத்தில் நிறைவேற்றப்படுகிறது என்பதை ‘மீட்பின் வரலாறு’ விளக்குகிறது. மீட்பின் வரலாறு படைப்பிலிருந்து ஆரம்பித்து கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் முடிவடைகிறது.

இரட்சிக்கப்பட்ட கர்த்தருடைய மக்கள் புதிய உடன்படிக்கையின் காலத்தில் சபையாகக் கூடிவந்து, அவரை ஆராதித்து, அவருக்காக வாழ்ந்து சுவிசேஷப்பணியில் ஈடுபடுவது மீட்பின் திட்டத்தின் ஒரு பகுதி. இந்தச் சபையைத் தன்னோடு அழைத்துச் செல்லவே கிறிஸ்துவின் இரண்டாவது வருகை அமைந்திருக்கும். இன்னொருவிதத்தில் சொல்லப்போனால், கர்த்தரின் மீட்பின் உச்சகட்டத் திட்டமாக அமைந்திருந்து அவருக்கு மகிமையளிப்பது திருச்சபையே. கர்த்தரின் வார்த்தையில் இதைக் கவனிக்கத் தவறினால் நாம் திருச்சபை பற்றிய விஷயங்களில் கவனக்குறைவாக இருந்தோ அல்லது அதை அலட்சியப்படுத்தியோ வருவோம். அநேகர் இன்று திருச்சபைக்கு அளிக்கவேண்டிய மரியாதையை அளிக்கத் தவறிச் செயல்பட்டும், வாழ்ந்தும் வருவதற்கு இதுவே காரணம். கர்த்தரின் திட்டத்தில் திருச்சபை இத்தகைய உயரிய இடத்தைக் கொண்டிருப்பதால்தான் வேதம் அதுபற்றித் தேவையான அளவுக்கு அசைக்க முடியாத போதனைகளைத் தந்திருக்கின்றது. அத்தோடு, மீட்பின் வரலாற்றில் திருச்சபையின் மகிமையைப் பார்க்கத் தவறுகிறவர்களே அநாவசியமாக வரலாற்றில் இஸ்ரவேலுக்கு முதன்மை கொடுத்து கால வரலாற்றுக் கோட்பாட்டிற்கு இரையாகிப் போனவர்களாக இருக்கிறார்கள்.

மீட்பின் திட்டம்

திருச்சபை பற்றிய கோட்பாடுகளில் தவறான கருத்துக்களைக் கொண்ட அனேகர் நம் மத்தியில் காணப்படுகிறார்கள். அது வேத அறியாமையின் காரணமாகவும், வேதத்தை அலட்சியப்படுத்துவதன் காரணமாகவும் நிகழ்ந்திருக்கிறது. திருச்சபைகள்கூட வேதபூர்வமான முறையில் இயங்கி வராமல் போவதற்குக் காரணம் இந்த வேத அறியாமையே.

திருச்சபை பற்றிய மிகத் தவறான ஆபத்தான போதனைகள்

1. முதலாவது தவறான போதனை பின்வருமாறு விளக்குகிறது- “வேதம் திருச்சபை பற்றி எந்தத் தெளிவான, துல்லியமான போதனைகளையும் அளிக்காமல், பொதுவான போதனைகளை மட்டும் தந்து அதுபற்றிய விஷயங்களில் நம்முடைய நாட்டுச் சூழ்நிலையின்படியும், சந்தர்ப்பத்திற்கேற்றபடியும் நடந்துகொள்ள அனுமதிக்கிறது.” வேதத்தில் நல்லறிவு இல்லாதபடியால் இப்படிப்பட்ட சிந்தனைகளைப் பலர் தங்களில் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். மீட்பின் வரலாற்றில் அதிமுக்கியமான திருச்சபையைப் பற்றிக் கர்த்தர் தெளிவான போதனைகளை எப்படித் தராமல் இருந்திருப்பார். வேதத்தைக் கவனத்தோடு ஆராய்ந்து படித்தால் திருச்சபைபற்றிய தெளிவான அத்தனை போதனைகளையும் வேதம் பல்வேறு பகுதிகளில் விளக்கமாகத் தந்திருப்பதைக் கண்டுகொள்ளலாம். சீர்திருத்தவாதியான ஜோன் கல்வின் எழுதிய மிகப்பெரிய நூலான “கிறிஸ்தவப் போதனைகளின் தொகுப்பில்” அரைவாசிக்கு மேல் திருச்சபையைப் பற்றித்தான் விளக்கியிருக்கிறார். வேதத்தில் அந்தளவுக்குத் திருச்சபை பற்றிய போதனைகள் இல்லாமலிருந்திருந்தால் கல்வின் திருச்சபை பற்றிப் பாதி நூலுக்கு மேல் விளக்கமளித்திருக்க முடியாது. 1689 விசுவாச அறிக்கையில் நீளமான அதிகாரம் (26) திருச்சபை பற்றியது. திருச்சபை பற்றிப் பொதுவான விளக்கங்களை மட்டுமே வேதம் தந்திருந்தால் பாப்திஸ்து பெரியவர்கள் இத்தனைப் பெரிய அதிகாரத்தை எழுதியிருப்பார்களா?

2. இரண்டாவது தவறான போதனை, “பழைய ஏற்பாட்டில் விசுவாசிகளையோ, திருச்சபையையோ காணமுடியாது. புதிய ஏற்பாட்டுக்காலத்தில் மட்டுமே அதைக் காணலாம். திருச்சபை ஒரு தற்காலிக இடைக்கால அமைப்பு மட்டுமே. கர்த்தரின் இறுதி நோக்கம் இரண்டாம் வருகைக்குப் பின் மறுபடியும் இஸ்ரவேலை ஆசீர்வாதமுள்ள நாடாக்குவது மட்டுமே” என்கிறது.

இந்தத் தவறான விளக்கத்தைக் காலவரையறைக் கோட்பாட்டினால் (டிஸ்பென்சேஷனலிசம்) பாதிக்கப்பட்டிருக்கும் சகோதரத்துவ சபைகளும், கெரிஸ்மெட்டிக் சபைகளும், ஏன், சுவிசேஷ சபைகளில் பெரும்பாலானவையும் நம்பி வருகின்றன. இது மிகவும் தவறான இறையியல் விளக்கம். இவர்கள் புதிய ஏற்பாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து பழைய ஏற்பாட்டை உதாசீனம் செய்கிறார்கள். சீர்திருத்த பாப்திஸ்துகள் இறையியல் ரீதியில் இவர்களோடு முரண்படுகிறார்கள். இவர்கள் இஸ்ரவேலுக்கு மட்டுமே முக்கியத்துவமளித்து அந்நாடு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குப் பின் வளமான நாடாக கிறிஸ்துவின் நேரடி ஆட்சியின் கீழ் ஆயிரம் வருடங்கள் இந்த உலகில் காணப்படும் என்று தவறாக நம்பி வருகிறார்கள். இஸ்ரவேல் ஒரு வல்லமையான தேசமாக இருந்து வந்த காலம் முடிந்துவிட்டது என்பதை இவர்கள் உணரவில்லை. இன்று கர்த்தர் சலக ஜாதிகளுக்குள்ளும் பாவிகளை இரட்சித்து திருச்சபையைக் கட்டிவருகிறாரே தவிர யூதர்களுக்கு மட்டுமான விசேஷ திட்டங்களைக் கொண்டிருந்து செயல்படவில்லை.

பழைய ஏற்பாட்டில் ஆதாமும், ஏவாளும் மனந்திரும்பி இரட்சிப்பை அடைந்தார்கள். அவர்களுக்கு கர்த்தர் போதித்த சுவிசேஷமே ஆதி 3:15ல் காணப்படுகிறது. அவர்கள் விசுவாசிகள் என்பதை ஆதி 4ம் அதிகாரத்தின் ஆரம்ப வசனங்களே விளக்குகின்றன. ஆதாமின் பின் வந்த விசுவாச சந்ததிகளாகவே ஆபேலும், சேத்தும், நோவாவும், ஆபிரகாமும் காணப்படுகிறார்கள். புதிய ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட விதத்தில் தெய்வீக நிறுவனமாக திருச்சபை பழைய ஏற்பாட்டில் முழுமையாகக் காணப்படாவிட்டாலும் திருச்சபையின் ஆரம்ப அடிப்படைக் குறியீடுகளைக் கொண்டதாக சபை இஸ்ரவேலர்களுக்கு மத்தியில் காணப்பட்டது. பழைய ஏற்பாட்டில் விசுவாசிகளின் தொகை மிகக் குறைவானது. அவர்கள் பெருந்தொகையில் காணப்படவில்லை. நாம் இந்தக் காலத்தில் எந்தவிதத்தில் சுவிசேஷத்தைக் கேட்டுப் பரிசுத்த ஆவியால் இரட்சிப்பை அடைகிறோமோ அதேபோல் பழைய ஏற்பாட்டில் ஆதாமும், ஆபிரகாமும் இரட்சிப்பை அடைந்திருந்தார்கள். அவர்களே பழைய ஏற்பாட்டுத் திருச்சபை அங்கத்தவர்கள். ரோமர் 4ல் பவுல் ஆபிரகாமின் விசுவாசத்தைக் கொண்டிருந்தவர்களே விசுவாசிகள் என்று விளக்கியிருக்கிறார். விசுவாசிகளைக் கொண்டமைந்ததே திருச்சபை. ஆபிரகாம் விசுவாசத்தின் மூலம் நீதிமானாகி கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் இணைக்கப்பட்டிருந்தார். அந்தச் சரீரம், புதிய ஏற்பாட்டுக்காலத்தில் இருப்பதுபோல நிறுவனமாக, யூதர்களையும், புறஜாதியினரையும் தனக்குள் கொண்டிருந்து, தனக்கே உரிய திருநியமங்களைக் கொண்டிருந்து வெளிப்படையாகக் கூடிவரவில்லை. அதற்குக் காரணம் புதிய உடன்படிக்கையின் காலம் ஆரம்பிக்காததுதான். அத்தோடு, புதிய ஏற்பாட்டுக்கால அமைப்பை அன்று திருச்சபை கொண்டிராமல் இருந்தபோதும், அது அடியோடு பழைய ஏற்பாட்டில் இல்லை என்று வாதிடுவது மிகவும் தவறான இறையியல் கண்ணோட்டம்.

3. மூன்றாவது தவறான போதனை, “திருச்சபை எங்கும் ஆவிக்குரியதாக செயலிழந்து காணப்படுவதால், வேறுவிதங்களில் அதன் பணிகளைச் செய்வதில் எந்தத் தவறும் இல்லை” (நிறுவனங்கள் மூலம், தனி ஊழியங்களின் மூலம்) என்பது.

இதை நடைமுறைவாதக் (பிரெக்மெட்டிஷம்) கணிப்பு என்பார்கள். நடைமுறைவாதம் வேதத்திற்கு மதிப்பளிக்காது; எது சாதகமாகவும், வசதியாகவும் இருக்கிறதோ அதையே நடைமுறைவாதம் வேதமாகப் பின்பற்றும். வேதம் நடைமுறைவாதப் போக்கிற்கு எதிரி. நடைமுறைவாதப் போக்குள்ளவர்கள், உலகத்தில் சில திருச்சபைகள் சத்தியத்தை விட்டுப் பிரிந்து தவறாக நடந்து ஆவிக்குரிய இலக்கணங்களைக் கொண்டிராமல் இருப்பதைப் பார்த்து திருச்சபை அமைத்துச் செயல்படுவதைக் கர்த்தர் நிறுத்திக்கொண்டுவிட்டார் என்று கூறுவது முட்டாள்த்தனமான வாதம். உலகத்தில் திருச்சபைகள் எல்லாமே எப்போதும் பரிசுத்தமாகவும், பூரணமாகவும் இருந்துவிடாது (வெளி 1-3 அதிகாரங்கள்). நல்ல விசுவாசமான சபைகள் மத்தியில் போலிகளும் இருந்துவிடலாம். அதை வரலாறே விளக்குகிறது. அதற்காகக் கர்த்தரின் திட்டம் நிறைவேறவில்லை என்று தவறாகக் கணிப்பிடக்கூடாது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைவரை இந்த உலகத்தில் திருச்சபை தொடர்ந்திருந்து வளர்ந்து வரும். அதனால் கர்த்தர் திருச்சபை செய்யும்படிக் கொடுக்கப்பட்டிருக்கும் பணிகளை வேறுவிதங்களில் கிறிஸ்தவ நிறுவனங்களை அமைத்தும், தனி ஊழியங்கள் என்ற பெயரிலும், கமிட்டிகளை அமைத்தும் செய்து வருவது கர்த்தரையும், அவருடைய வேதத்தையும் கலங்கப்படுத்தி உதாசீனம் செய்கின்ற பாவமான செயல்கள். திருச்சபைக்கு மதிப்புக்கொடுத்து அதிலிருந்து வாழ்ந்து, அது செய்யவேண்டிய செயல்களில் ஈடுபாடு காட்டாமலிருப்பவர்கள் கிறிஸ்தவத்தைப் பற்றிய மிகத் தவறான எண்ணங்களைக் கொண்டிருந்து வருகிறார்கள்.

கிறிஸ்துவினால் அனுப்பப்பட்டு சுவிசேஷத்தைச் சொல்லித் திருச்சபைகளை அமைத்த அப்போஸ்தலர்கள் திருச்சபைப் பணியைத் தவிர வேறு பணிகளில் ஒருபோதும் ஈடுபட்டிருக்கவில்லை. அவர்களுடைய வாழ்க்கையில் திருச்சபையைத் தவிர வேறெதற்கும் அவர்கள் இடங்கொடுக்கவில்லை. முதல் நூற்றாண்டு அப்போஸ்தலப் பாணியைப் பின்பற்றாமல் மனம்போன போக்கில் சுயநல நோக்கத்தோடு திருச்சபைக்கு மதிப்புக்கொடுக்காமல் இருந்துவரும் ஊழியங்களே தமிழினத்தில் இன்று அதிகம். வேதத்தின் பூரண அதிகாரத்தையும், அதன் போதுமான தன்மையையும் விசுவாசிப்பவர்கள் திருச்சபையைத் தவிர வேறெதற்கும் தங்களுடைய சிந்தனையிலும், வாழ்க்கையிலும் இடங்கொடுக்க மாட்டார்கள்.

கர்த்தரின் மீட்பின் வரலாற்றில் திருச்சபை

இந்த வரைபடம் ஆதாம் இரட்சிப்படைந்தபின் அவனுடைய சந்ததியில் விசுவாச சந்ததி எவ்வாறு வளர்ந்து பழைய ஏற்பாட்டுக்காலத்தில் இஸ்ரவேல் தேசத்து மக்கள் மத்தியில் விசுவாசிகள் குறைந்தளவில் இருந்து வந்திருக்கின்றனர் என்பதையும், ஆபிரகாமின் உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்கள் புதிய உடன்படிக்கை காலத்தில் திருச்சபையிலேயே நிறைவேறுகின்றன என்பதையும் காட்டுகின்றது. இஸ்ரவேலுக்கு வெளியில் ஒருசிலரே புறஜாதிகள் மத்தியில் கர்த்தரை விசுவாசித்திருக்கின்றனர். புதிய ஏற்பாட்டுத் திருச்சபைக்கான வித்து பழைய ஏற்பாட்டிலேயே போடப்பட்டுவிட்டது என்பதை நாம் உணரவேண்டும். அத்தோடு புதிய உடன்படிக்கை காலத் திருச்சபையே கர்த்தரின் திட்டத்தில் உன்னதமான இடத்தைக் கொண்டிருந்து இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர்நோக்கி நிற்கின்றது. சர்வவல்லவரான கிறிஸ்து தன்னுடைய சபையைக் கட்டுவதில் மும்முரமாக இன்று ஈடுபட்டுவருகிறார். அதை அவர் எவ்வாறு கண்ணும் கருத்துமாகப் போஷித்துப் பாதுகாத்து வருகிறார் என்பதை எபேசியர் 5:22-32 விளக்குகிறது.

திருச்சபையின் மகிமையை விளக்கும் வேதப்பகுதிகள்

கிறிஸ்துவின் மீட்பின் திட்டத்தில் திருச்சபைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உயரிய இடத்தை விளக்கும் சில வேதப்பகுதிகளைக் கவனிப்போம். இந்த வசனங்கள் அசைக்கமுடியாதபடி கர்த்தரின் திட்டத்தில் உயரிய இடத்தைத் திருச்சபை கொண்டிருக்கிறது என்பதை விளக்குகின்றன. கர்த்தர் திருச்சபைக்கு அத்தனை மதிப்பளித்து அதன் மூலமாகவே தன்னுடைய திட்டங்களை இந்த உலகில் நிறைவேற்றி வருகிறாரென்றால், எந்தளவுக்கு நாம் கர்த்தரின் வார்த்தைக்கு மதிப்பளித்து திருச்சபைக்கு விசுவாசமாக இருந்து வாழ்ந்து பணியாற்றவேண்டும் என்பதை உணரவேண்டும்.

திருச்சபை பற்றிய அசைக்கமுடியாத ஆழ்ந்த நம்பிக்கை இல்லாதவர்கள் திருச்சபைக்கு மதிப்பளிக்க மாட்டார்கள். இந்த ஆழ்ந்த வேதநம்பிக்கை நம்மில் ஊறிப்போயிருந்தால்தான் கர்த்தரின் வார்த்தையின்படி திருச்சபை அமைத்து, திருச்சபையில் வாழ்ந்து, திருச்சபைக்கு மதிப்பளித்துப் பணியாற்றுவோம். அத்தகைய நம்பிக்கையை நாம் கவனிக்கப்போகிற வசனங்கள் உங்களில் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

முதலாவது வசனப்பகுதி

எபேசி 1:15-23 வரையுள்ள வசனங்களில் பவுல் எபேசியத் திருச்சபைக் கிறிஸ்தவர்களுக்காக ஜெபிக்கிறார். அந்த ஜெபத்தில் என்னென்ன காரியங்களுக்காக ஜெபிக்கிறேன் என்பதையும் அவர் விளக்குகிறார். இறுதியில், 20-23ம் வசனங்களில் திருச்சபையின் மகிமையைப் பற்றி அவர் மிக அருமையாக விளக்கியிருக்கிறார்.

ஆனபடியினாலே, கர்த்தராகிய இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நான் கேள்விப்பட்டு, இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்; தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன். எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து, எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.

முதலில், இந்த வசனங்கள் கிரேக்க மொழியில் நீளமான ஒரே வசனமாகக் காணப்படுகிறது. ஆங்கில வேதாகமத்திலும் இவை ஒரே வசனமாக அமைந்திருந்தாலும் அவசியம் காரணமாக சில நிறுத்தக் குறியீடுகளைப் பயன்படுத்தி முற்றுப்புள்ளியை 23ம் வசனத்தின் இறுதியில் தந்திருக்கிறார்கள். அதனால் இந்த வசனங்களில் பவுல் எதை விளக்குகிறார் என்பதைக் கவனமாக ஆராய்ந்து விளங்கிக்கொள்ளுவது நம்முடைய கடமையாக இருக்கிறது.

தமிழ் வேதாகமத்தில் இந்த வசனங்களை இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள். 15-19 வையும் ஒரு வசனமாகவும், 20-23 வரையும் ஒரு வசனமாகவும் இந்த வசனங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக இரண்டிற்கும் இடையில் காணப்படும் தொடர்பு அறுந்துவிடுகிறது. சாதாரணமாக இவற்றை வாசிக்கிறவர்கள் இவை இரண்டிற்குமான தொடர்பை உணரத் தவறிவிடுகிற ஆபத்து இதனால் ஏற்பட்டிருக்கிறது. இவற்றைப் பிரித்துவிடுவதால் மூலமொழியில் பரிசுத்த ஆவியானவர் விளக்கியிருக்கும் சத்தியத்தின் முழுமையை நாம் விளங்கிக்கொள்ள முடியாமல் போய்விடுகிறது. அதனால் போதிக்கின்ற பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் ஆங்கில வேதாகமத்தைப் பயன்படுத்தி தமிழில் வசனங்களை விளங்கிக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

இது எப்படி இருந்திருக்க வேண்டும்?

கர்த்தராகிய இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார் மேலுமுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நான் கேள்விப்பட்டு, இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்; தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், அதே வல்லமையால் எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து, எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார் என்பதையும் நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

இரண்டாவதாக, இதில் 23ம் வசனம், “சரீரமான சபைக்காக அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்” என்று இலக்கணபூர்வமாக, எழுத்துபூர்வமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

தமிழில் “சபைக்கு . . தலையாகத் தந்தருளினார்” என்றிருக்கிறது. இதன் மெய்யான அர்த்தம் “சபைக்காக, சபையின் நன்மைக்காக” இத்தனையையும் கர்த்தர் செய்திருக்கிறார் என்பதுதான். அதைக் குறிக்கும் “Te” என்ற அழுத்தமான வார்த்தை கிரேக்கமொழியில் “சபை” என்ற வார்த்தைக்கு முன்னால் காணப்படுகிறது. தமிழில் அதை நேரடியாக மொழிபெயர்ப்பது கடினம். தமிழிலக்கணத்தின்படி ஒரு வார்த்தையின் முக்கியத்துவத்தை குறிக்கும் அடையாளங்கள் அந்த வார்த்தையின் இறுதியில் தொக்கி நின்று காணப்படும். கிரேக்க மொழியிலும் ஆங்கிலத்திலும் அவை வார்த்தையின் முன்னால் காணப்படும். இத்தகைய அடையாளக்குறிகளுக்கு நாம் எப்போதுமே மதிப்புக்கொடுத்து வார்த்தைகளின் அர்த்தத்தை விளங்கிக்கொள்ள வேண்டும். ஆங்கில மொழிபெயர்ப்புகளில் இந்த வார்த்தையை “To” அல்லது “for” என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். தமிழில் அதை “சபைக்காக” என்று மொழி பெயர்க்கும்போது அந்த வார்த்தையின் இறுதியில் “ஆக” என்று அது தொக்கி நிற்கிறது. இந்தளவுக்கு இதை விளக்குவது ஏன் அவசியமாகிறது?

எபேசி 1:20-23 தரும் போதனை:

நமக்கு இரட்சிப்பளிப்பதில் வல்லமையாக செயல்பட்ட பரிசுத்த ஆவியானவரின் அதே மாபெரும் வல்லமை கிறிஸ்துவை மரணத்தில் இருந்து உயிர்த்தெழச் செய்து, சகலவிதமான அதிகாரங்களுக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையிலும் மறுமையிலும் காணப்படும் எல்லா நாமங்களுக்கும் மேலாய் கிறிஸ்து உயர்ந்திருக்கும்படி, அவருடைய பாதங்களுக்குக் கீழாகச் சகலத்தையும் கொண்டுவந்து, அவரை உன்னதங்களில் பிதாவாகிய கர்த்தரின் வலதுபக்கத்தில் அமரும் விதத்தில் அனைத்திற்கும் மேலாக அவரை உயர்த்தி, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிற நிறைவாகிய சரீரமான சபைக்காக அனைத்திற்கும் மேலான தலையாக அவரைத் தந்தருளினார்.

இதிலிருந்து, அனைத்திற்கும் மேலான, அனைத்தையும் தன் கீழ் கொண்டிருக்கும் சர்வஅதிகாரமுள்ள தலையாக கிறிஸ்து உயர்த்தப்பட்டிருப்பது திருச்சபைக்காக, திருச்சபையின் பயனை நோக்கமாகக் கொண்டுதான் என்ற உயரிய போதனையை இந்தப் பகுதியில் இருந்து பெற்றுக்கொள்ளுகிறோம்.

திருச்சபை எந்தவிதத்தில் மகிமையுள்ள, உயர்வான தன்மையைக் கொண்டதாக இந்த உலகத்தில் இருக்கிறது என்பது இதிலிருந்து தெரிகிறது. அதனால் திருச்சபையைவிட உயர்வான எந்த நிறுவனத்தையும் இந்த உலகத்தில் கர்த்தர் அமைக்கவில்லை. இந்த உலகில் காணப்படும் சகல அதிகாரங்களிலும் மேலான அதிகாரம் கொண்ட தெய்வீக நிறுவனமாகக் காணப்படுவது திருச்சபை மட்டுமே.

எபேசியர் 3:9-11

எபேசியர் 3ம் அதிகாரத்தில், 1ல் இருந்து 8 வரையுள்ள வசனங்களில் பவுல், புதிய உடன்படிக்கையின் காலம் வரை மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒரு சத்தியத்தை விளக்குகிறார். 5ம் வசனத்தில் பவுல் அதை “இரகசியம்” என்று அழைக்கிறார். அதைக் கண்டுபிடிக்க முடியாத இரகசியம் என்று நினைத்துவிடக்கூடாது. இங்கே அது வேறு அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த இரகசியம் என்ன என்பதை 3ம் வசனத்தில் பவுல் விளக்குகிறார். அந்த இரகசியம் முற்காலங்களில் (பழைய ஏற்பாட்டுக்காலங்களில்) மறைவாக வைக்கபட்டிருந்தது புதிய உடன்படிக்கைக் காலத்தில் பரிசுத்த ஆவியானவரால் அப்போஸ்தலர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்று 6ம் வசனத்தில் விளக்குகிறார் பவுல். இதுவரை மறைவாக இருந்து வந்திருக்கிற சுவிசேஷத்திற்கு தான் கட்டுப்பட்டிருப்பதாகவும், அதை அறிவிக்கும் கிருபை இப்போது தனக்கு அளிக்கப்பட்டிருக்கிறதாகவும் பவுல் 7ம், 8ம் வசனங்களில் விளக்குகிறார்.

தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே, உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின்மூலமாய் இப்பொழுது தெரியவரும்பொருட்டாக, இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக்கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

மேலே நாம் கவனித்திருக்கும் வசனங்களில் பவுல் மிகவும் முக்கியமானதொரு உண்மையை விளக்குகிறார். கிறிஸ்துவினால் அழைக்கப்பட்டிருந்தபோதும் பவுல், அப்போஸ்தலர்களுக்கு எதிராகவும், ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த எருசலேம் திருச்சபைக்கு எதிராகவும் ஒருபோதும் நடந்துகொள்ளவில்லை. சபைக்குக் கட்டுப்பட்டு, சபையினால் அனுப்பப்பட்டு, சபை மூலமாகவே தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கும் கிருபையைத் தான் பயன்படுத்தியதாக பவுல் இப்பகுதியில் அறிவிக்கிறார்.

இந்தப்பகுதியில் இருந்து பின்வரும் பாடங்களை நாம் கற்றுக்கொள்கிறோம்:

  1. பவுல் அறிவித்ததுபோல் இந்தப் புதிய உடன்படிக்கையின் காலத்தில் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும்.
  2. சுவிசேஷத்தை அறிவிக்கும் பொறுப்பு கிறிஸ்துவால் புதிய உடன்படிக்கையின் காலத்தில் திருச்சபைக்கு மட்டுமே கொடுக்கப் பட்டிருக்கிறது. (எபே 3:10)
  3. சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டுமானால் அதற்கு இந்த உலகில் திருச்சபை முறையாக அமைக்கப்பட வேண்டியது அவசியம். (எபே 3:10)
  4. திருச்சபையின் மூலமாக அல்லாமல் சுவிசேஷப் பணியை வேறுவிதங்களில் செய்யமுயல்வது வேதம் காட்டும் வழியல்ல.
  5. இந்தப் பகுதியில் இருந்து தேவனின் மீட்பின் திட்டத்தில் திருச்சபை வகிக்கும் உன்னத இடத்தை அறியமுடிகிறது.

திருச்சபையின் மகத்துவத்தை உணர்த்தும் மூன்றாவது வேத உதாரணத்தைக் கவனிப்போம்.

மத்தேயு 16:17-19

இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.

இந்தப் பகுதி தரும் விளக்கம்:

  1. இயேசு கிறிஸ்து தன்னை உண்மையாக, ஆணித்தரமாக விசுவாசித்து இரட்சிப்படைந்திருக்கிறவர்களை வைத்துத் தன்னுடைய திருச்சபையை இந்த உலகத்தில் அமைக்கிறார்.
  2. தெய்வீக நிறுவனமாகிய திருச்சபையை அழிக்கும் வல்லமை எந்த சக்திக்கும் கிடையாது. (பாதாளத்தின் வாசல்கள் – Gates of hell) என்பது நரகத்தைக் குறிக்கின்றது).
  3. இயேசு கிறிஸ்து திருச்சபைக்கு மட்டுமே பரலோகத்தின் திறவுகோல்களைத் தந்திருக்கிறார். (பரலோகத்துக்குரிய ஆவிக்குரிய செயல்களைச் செய்யும் அதிகாரம் – பிரசங்கிப்பது; விசுவாசிகளை அடையாளங்கண்டு சபையில் இணைப்பது; ஒழுங்குநடவடிக்கை மூலம் சபைப் பரிசுத்தத்தைப் பாதுகாப்பது.)
  4. விசுவாசிகளை சபையில் இணைப்பதற்குப் பெயர் “கட்டுவது.” சபையில் இருந்து ஒருவரை ஒழுங்குநடவடிக்கை மூலம் சபை நீக்கம் செய்வதற்குப் பெயர் “கட்டவிழ்ப்பது.”
  5. பரலோகத்தின் திறவுகோல்களை இந்த உலகத்தில் ஆவிக்குரியவிதத்தில் பரிசுத்தத்தையும், ஞானத்தையும், போதகத்தகுதிகளையும் கொண்டிருக்கும் மூப்பர்களைக் கொண்டு முறையாக அமைக்கப்பட்டு இயங்கிவரும் சபை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஆவிக்குரிய அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது.

மத்தேயு 18:15-20

உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் நீ போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய். அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ. அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக. பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.

இந்தப் பகுதியில் நாம் கவனிப்பதென்ன?

  1. இரண்டு பேருக்கிடையில் திருச்சபையில் பிரச்சனை. ஒருவர் மற்றவருக்கெதிராகப் பாவம் செய்திருக்கிறார்.
  2. பிரச்சனையை அவர்களால் தீர்த்துக்கொள்ள இயலாததால் நம்பிக்கைக்குரிய மூன்றாவது நபர் (நம்பிக்கைக்குரிய மூப்பர்களில் ஒருவர்) அதைத் தீர்க்க அழைக்கப்படுகிறார்.
  3. இதுவரை எடுக்கப்பட்டிருக்கும் திருத்த நடவடிக்கை இதில் சம்பந்தப்பட்டிருப்பவர்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியவரவில்லை.
  4. இத்தனையைச் செய்தும் பாவம் செய்தவன் திருந்தாததால், அந்த விஷயம் அங்கத்தவர்கள் கூடிய சபைக்கு அறிவிக்கப்பட்டு இறுதி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
  5. பாவம் செய்தவன் திருந்த மறுப்பதால் அவன் அவிசுவாசியைப் போலக் கருதப்பட்டு சபையால் சபை நீக்கத்துக்குள்ளாகுகிறான்.
  6. சபை நீக்கம் செய்யப்பட்டவனோடு ஆவிக்குரிய ஐக்கியத்தை சபை அங்கத்தவர்கள் வைத்துக்கொள்ளக்கூடாது. அவனைக் காண நேர்ந்தால் திருந்தும்படி மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

இந்தப் பகுதி தரும் விளக்கமென்ன?

  1. சபை ஒழுங்கு நடவடிக்கையைப் பற்றித்தான் விளக்குகிறேன் என்று சொல்லாமல் இயேசு கிறிஸ்து அதுபற்றிய விளக்கத்தை அளிக்கிறார். சபையைப் பற்றித்தான் விளக்குகிறார் என்பதற்கான அடையாள ஆதாரங்கள் பகுதியில் தெளிவாகக் காணப்படுகின்றன. 17ம் வசனத்தில் இரண்டு முறை “சபை” என்ற வார்த்தையைக் காண்கிறோம்.
  2. சபை ஒழுங்கு நடவடிக்கைக்கான முறையைப் படிப்படியாக இந்தப் பகுதியில் இயேசு விளக்குகிறார். சபை ஒழுங்கு நடவடிக்கை எப்போதும் சபை மக்கள் அறியும்படியாகப் பகிரங்கமாகப் பாவம் செய்கிறவர்களைத் திருத்தவே கொண்டுவரப்படவேண்டும்.
  3. ஆவிக்குரியதாக வேதத்துக்குக் கட்டுப்பட்டு திருச்சபை எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கையை இயேசு கிறிஸ்து ஏற்று அங்கீகரிக்கிறார். அதைச் செய்யும்படி அவரே சபைக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார் 18ம் வசனத்தில் காணப்படும் கட்டுவது, கட்டவிழ்ப்பது ஆகிய பதங்கள் திருச்சபையில் அங்கத்தவர்களை இணைப்பதையும், நீக்குவதையும் குறிக்கும் பதங்களாகும்.
  4. 20ம் வசனம் திருச்சபை கூடிவரும்போது அதன் மத்தியில் கிறிஸ்து பிரசன்னமாயிருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. இந்த வசனம் திருச்சபையைக் குறிக்கும் இன்னொரு வார்த்தைப் பிரயோகம்.
  5. முறையாக எவர்மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முறையான திருச்சபை அமைப்பு காணப்பட வேண்டும். – முறையான சபை அங்கத்துவ முறை, மூப்பர்கள், சபை சட்டவிதிகள், விசுவாச அறிக்கை.
  6. இந்தப் பகுதி திருச்சபை எந்தளவுக்கு இவ்வுலக ஆவிக்குரிய பணிகளுக்கு அவசியமானதாக, தவிர்க்கமுடியாததாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

இதுவரை நாம் கவனித்திருக்கும் பகுதிகளில் இருந்து திருச்சபைக்கு எந்தளவுக்கு வேதம் முக்கியத்துவமளிக்கிறது என்பதையும், மீட்பின் வரலாற்றில் திருச்சபையின் உன்னதமான, மகிமையான இடத்தையும் காணமுடிகின்றது. கிறிஸ்துவும் அவருடைய சபையுமே புதிய ஏற்பாட்டில் முதன்மையான இடத்தைக் கொண்டிருக்கிறார்கள். அந்த இடத்தை நாம் இந்த 21ம் நூற்றாண்டில் வேறு எவருக்குமோ அல்லது வேறு எதற்குமோ கொடுப்பது கிறிஸ்துவை நிந்திப்பதற்கு இணையான செயலாகும். கிறிஸ்து மீதும், அவருடைய திருச்சபை மீதும் ஆழ்ந்த அன்புள்ளவர்கள் திருச்சபைக்குக் கொடுக்கவேண்டிய இடத்தை வேறு எதற்கும் தாரைவார்த்துவிட மாட்டார்கள். நீங்கள் எப்படி?

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s