வணக்கம் வாசகர்களே! இன்னுமொரு இதழைப் பூர்த்தி செய்து உங்கள் முன் படைக்க கர்த்தர் உதவியிருக்கிறார். என்னோடிணைந்து இதழ் பணியில் தொடர்ந்து உழைத்து வருபவர்களுக்கு நான் நன்றி சொல்லாமல் இருக்கமுடியாது. வாசகர்களாகிய உங்களுக்கு இந்த இதழும் இதற்கு முன் வந்திருப்பவை போலவே ஆவிக்குரிய பலன்களை அளிக்க ஜெபத்தோடு அனுப்பி வைக்கிறோம்.
பரிசுத்த வேதாகமத்தைப் பற்றிய அவசியமான இறையியல் விளக்கங்களை சுமந்து நீளமான ஒரு ஆக்கம் இந்த இதழில் வந்திருக்கிறது. பரிசுத்த வேதாகமத்தைப் பற்றிய நம்முடைய நம்பிக்கைகள் ஏனோதானோவென்று இருந்துவிடக்கூடாது. நீங்கள் உங்களுடைய வேதம் பற்றிய நம்பிக்கைகளைச் சரிசெய்துகொள்ள இந்த ஆக்கம் உதவட்டும்.
இந்த நூற்றாண்டில் திருச்சபைக்கு மதிப்பளிப்பவர்கள் மிகக்குறைவு. திருச்சபை இல்லாமலேயே கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்ந்து, கிறிஸ்தவ பணிகளையும் செய்துவரலாம் என்ற மிகத்தவறான போக்கைப் பின்பற்றுகிறவர்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் திருச்சபையின் நாயகனான இயேசு கவனிக்காமலில்லை. திருச்சபையின் மகிமையைப் பற்றிய ஒரு ஆக்கத்தை இதில் தந்திருக்கிறேன். வாசகர்களாகிய நீங்கள் திருச்சபைக்கு உங்கள் வாழ்க்கையில் முக்கிய இடத்தை அளித்து கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்ந்து கிறிஸ்துவை மகிமைப்படுத்துங்கள். அதற்கு இந்த ஆக்கம் துணைபோகுமானால் கர்த்தருக்கே எல்லா மகிமையும் சேர வேண்டும்.
இந்த இதழில் ஆர்த்தர் பிங்கின் வேதவிளக்க விதிமுறைகள் பற்றிய நூலில் இருந்து இன்னுமொரு அதிகாரத்தை மொழியாக்கம் செய்து தந்திருக்கிறோம்.
பலவிதமான பணிகளுக்கு மத்தியில் இந்த ஆக்கத்தைத் தயாரிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இத்தனைக் காலமும் வழிநடத்தி வந்திருக்கும் தேவன் இதையும் கவனத்தோடு தயாரித்து உங்கள் முன் படைக்க உதவியிருக்கிறார். இதழை வாசிக்கிறவர்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. இதைப் பயன்படுத்தி வரும் கர்த்தரின் அளவற்ற கிருபையை நினைத்து அவருக்கு இருதயபூர்வமாக நன்றி செலுத்துகிறேன். என்னை இப்பணியில் ஊக்குவித்து வரும் சபையாருக்கும் நன்றி. – ஆசிரியர்