அதிகாரம் 5 – A.W. பின்க்
வேதத்தின் எந்தவொரு பகுதிக்கும், நாம் தரும் விளக்கம் வேதத்தின் ஏனைய பகுதிகளிலுள்ள போதனைகளோடு கண்டிப்பாக ஒத்திசைந்திருக்க வேண்டும் என்று நாம் கூறுவது (Analogy of Faith), சாதாரணமானதாகவும், யதார்த்தமானதாகவும் தோன்றலாம், ஆனால் வேதத்தை விளக்குவதில் திறமையற்றவர்கள் மட்டுமல்லாமல், அனுபவம் வாய்ந்த அநேகர்கூட இதைப் பின்பற்றாமல் விட்டுவிடுகிறார்கள் என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. இந்த வேத விளக்க அடிப்படைக் கொள்கையைப் பொருட்படுத்தாமல், வேதத்தின் மெய்த்தன்மையை மறைத்து, தெளிவற்ற வேதப்பகுதிகளுக்கு, புதிதாகவோ அல்லது தூக்கிவாரப்போடச் செய்யும் ஏதாவதொரு விளக்கத்தையோ தர முயலுகிறவர்கள், வேதத்தை விளக்குவதில் நிச்சயமாகத் தவறிழைப்பார்கள். இது குறித்து ஜோன் ஓவன், “வேதத்தை விளக்குவதில் இந்த விதியை நாம் பொறுப்புடன் கையாளுகிறபோது, கடவுளுடைய வார்த்தையைச் சிதைக்கும் பாவகரமான ஆபத்து நமக்கு ஏற்படாது. ஒவ்வொரு வேதப்பகுதிக்கும் சரியான அர்த்தத்தை நாம் கண்டடைய முடியாமற்போனாலும், அதைச் சிதைக்கும் பாவத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்” என்று சொல்லியிருக்கிறார். உதாரணமாக, “தேவன் ஆவியாயிருக்கிறார்” (யோவான் 4:24), அவர் உருவமற்றவரும் கண்ணுக்குப் புலப்படாதவராகவும் இருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ளும்போது, அவருக்குக் கண், காது, கை, கால் இருப்பது போல் குறிப்பிடப்பட்டிருக்கிற வேதப்பகுதிகளை நாம் தவறாக விளங்கிக்கொள்ளுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். மற்றொரு உதாரணம், அவரிடத்தில் “யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை” (யாக்கோபு 1:17) என்பதை நாம் அறிந்திருக்கிறபோது, அவர் “மனஸ்தாபப்படுகிறார்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிற பகுதி, நம்முடைய புரிதலுக்காகவே அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுகிறோம். சங்கீதம் 19:11 மற்றும் வேறு சில வசனங்களில், விசுவாசிகளுடைய இரக்கமான நற்செயல்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என்றும், வேறுசில பகுதிகள் அத்தகைய ஈடு செய்தல் அவர்களுடைய நற்செயலுக்கான வெகுமதியாக இல்லாமல், கடவுளுடைய கிருபையினால்தான் வழங்கப்படுகிறது என்றும் சொல்லுகிறபோது, மேலே பார்த்த விதத்தில்தான் நாம் இப்பகுதிகளை அணுக வேண்டும்.
வேதத்தில் தெளிவாகவும் ஏனைய பகுதிகளோடு ஒத்துப்போகிறதாகவும் இருக்கிற பகுதிகளுக்கு, முரண்படுகிற விதத்தில் எந்தவொரு வேதப்பகுதிக்கும் விளக்கம் தரக் கூடாது. அத்தோடு, அப்படியான முரண்படுகிற விளக்கங்களை நம்முடைய விசுவாசத்திற்கும், கீழ்ப்படிவுக்குமான விதிமுறையாக கருதக் கூடாது. தேவ ஆவியின் முழுமையான சித்தத்தை அறிவதற்கு, வேதத்தை விளக்குகிறவர்கள் வேதத்தின் அனைத்துப் பகுதிகளையும் பற்றிய ஒரு பொதுவான நல்லறிவு இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், ஒரு வேதப்பகுதியை விளக்குகிறபோது, அதோடு தொடர்புடைய பகுதிகளை இனங்கண்டு, அவற்றை ஒன்றுதிரட்டி, ஒப்பிட்டுப் பார்த்து, அந்தப் பகுதிக்கான விளக்கத்தைத் திட்டவட்டமாக அறிந்துகொள்ளும் விதத்தில் வருந்தி உழைக்க வேண்டும் என்பதையும் இது வலியுறுத்துகிறது. இதையெல்லாம் செய்த பின்னும், ஒரு வேதப்பகுதி தெளிவற்றதாகவும் அல்லது சந்தேகத்திற்குரியதாகவும் இருந்தால், அதே விஷயத்தை விளக்குகிற தெளிவான இன்னுமொரு பகுதியைக் கொண்டுதான் அந்தப் பகுதிக்கு விளக்கம்தர வேண்டும். மொர்மனிய கூட்டத்தைப் (Mormonism) போல், ஒரு வேதப்பகுதியைக் கொண்டு ஒரு போதனையையே உருவாக்கக் கூடாது. அவர்கள் 1 கொரிந்தியர் 15:29ஐ சுட்டிக்காட்டி, தங்களுடைய மூதாதையர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிற ஒரு போலிப் போதனையை உருவாக்கியிருக்கிறார்கள். அதேபோல், ரோமன் கத்தோலிக்கமும், யாக்கோபு 5:14, 15 வசனங்களைச் சுட்டிக்கட்டி, நோய்வாய்ப்பட்டவர்களுக்காக எண்ணெய் பூசி ஜெபித்தல் என்ற ஒரு முறையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நம்முடைய கர்த்தர் தம்முடைய ஊழியத்தின்போது வலியுறுத்தியது போல் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்கினால் மட்டுமே எந்தவொரு உண்மையும் நிறுவப்பட வேண்டும் (யோவான் 5:31-39; 8:16-18). எந்தவொரு முக்கியமான போதனையும் முன்னடையாளங்கள், உருவகங்கள், அல்லது உவமைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமையக் கூடாது என்பதில் அதிக கவனம் காட்டவேண்டும். முன்னடையாளங்கள், உருவகங்கள், அல்லது உவமைகள் போன்றவற்றை, தெளிவான மற்றும் எழுத்துபூர்வமான பகுதிகளை விளக்குகிறபோது உதாரணங்களாகப் பயன்படுத்தலாம்.
எந்தவொரு வேதப்பகுதியையும், அதனுடன் இணைந்திருக்கிற வேறு வேதப்பகுதியோடு தொடர்புபடுத்தி மட்டுமே விளக்கமளிக்க வேண்டும் என்பதை வேதத்தை விளக்குகிற எவரும் தன் மனதில் உறுதியாகக் கொண்டிருக்க வேண்டும். இந்த அடிப்படையான விதியைக் கடைபிடித்தால், பல வசனங்களைக் குதர்க்கமாக விளக்குவதிலிருந்து அது நம்மைப் பாதுகாக்கும். ஆகவே, “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்” (யோவான் 14:28) என்று கிறிஸ்து சொல்வதை நாம் கேட்கும்போது, “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” (யோவான் 10:30) என்ற அவருடைய முந்தைய அறிவிப்பை நாம் கவனத்தில் கொண்டால், கிறிஸ்து பிதாவைவிட சற்றுக் கீழான நிலையில் இருக்கிறார் என்ற தவறான சிந்தனைக்கு இடமளிக்காமலிருக்கலாம். ஆகவே யோவான் 14:28ல் கிறிஸ்து விளக்கியது அவருடைய மத்தியஸ்தப் பணியைப் பற்றியதாகவே நிச்சயமாக இருக்க வேண்டும். ஏனென்றால், அந்தப் பணியில், பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுகிற ஊழியனாக அவர் இருக்கிறார். ஆகவே குமாரன், வேறு எவராகவும் இருக்க வாய்ப்பே இல்லை, அவர் “சர்வவல்லமையுள்ள தேவன்” (ஏசாயா 9:6), “மெய்யான தேவன்” (1 யோவான் 5:20) என்று நாம் உறுதியாகச் சொல்ல வேண்டும். அதேபோல், “ஞானஸ்நானம் பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு” (அப்போஸ்தலர் 22:16) என்பது போன்ற வசனம் “அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (1 யோவான் 1:7) என்ற வசனத்திற்கு முரணானது என்று தவறாக விளங்கிக்கொள்ளக் கூடாது. “கழுவப்படுதல்” என்ற அடையாள விளக்கத்தை மட்டுமே நாம் அதில் கவனிக்க வேண்டும். “பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று” (கொலோசெயர் 1:20) என்ற வசனம் “உலக மக்கள் அனைவரும் இரட்சிப்படைவார்கள்” (Universalism) என்று போதிக்கவில்லை. அல்லது, அது நித்திய தண்டனையை விவரிக்கிற வேதப்பகுதிகளுக்கெல்லாம் முரணாகவும் இல்லை. அதேபோல், 1 யோவான் 3:9ஐ 1 யோவான் 1:8டுடன் ஒத்துப்போகும் விதத்தில்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
எந்தவொரு வேதப்பகுதியையும் விளக்குகிறபோது அதன் சந்தர்ப்பச் சூழலைக் கூர்ந்து கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமானது. வேதத்திலுள்ள எந்தவொரு பகுதியையும் வேதத்தின் ஏனைய பகுதிகளோடு இசைந்துபோகிற விதத்தில் விளக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், அந்தப் பகுதி அமைந்திருக்கிற சந்தர்ப்பத்தின் பொதுவான தன்மையோடு முழுமையாக உடன்படும் விதத்தில் விளக்க வேண்டும். அப்பகுதியின் வெளிப்படையான எளிய விளக்கத்தை அறிவதில் கவனம் காட்ட வேண்டும். இந்த எளிய முறையை நிராகரித்து, வேறு அவசியமற்ற காரியங்களில் ஈடுபடுவது தவறான விளக்கங்களை உருவாக்குவதற்கே வழிவகுக்கும். ஒரு வசனத்தை அதன் சந்தர்ப்ப சூழலிலிருந்து பிரித்தோ, அல்லது அதன் ஒரு பிரிவைத் தனிமைப்படுத்தியோ விளக்குவது, அந்த வேதப்பகுதிக்கு அபத்தமான விளக்கம் தருவது மட்டுமல்ல, அதைப் பொய்யாகக் காட்ட முயலுவதாகும். உதாரணமாக, மத்தேயு 18:17ல் “சபைக்குச் செவிகொடுத்தல்” என்பது சபை தலைவர்களுடைய தீர்ப்புக்கு சபை அங்கத்தவர்கள் அடிப்பணிய வேண்டும் என்பதைக் குறிப்பிடவில்லை; அது அத்துமீறிச் செல்லும் சகோதரர் தனிப்பட்ட ஆலோசனைக்கு இணங்க மறுத்தால், உள்ளூர் சபை அந்த விஷயத்தில் கூடித் தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது. ஒருவர் சொல்லியிருக்கிறார், “சாமர்த்தியமான வஞ்சக இருதயம் கொண்ட ஒருவர், வேதத்திலுள்ள சில வசனங்களை அவற்றின் சந்தர்ப்பங்களிலிருந்து பிரித்தெடுத்து, தன் மனம்போனபோக்கில் அவற்றை இணைத்துக்காட்ட முடியும், அப்படிக் காட்டப்படுகிற அனைத்தும் உண்மையிலேயே வேதத்தின் வார்த்தைகளாக இருந்தாலும், அவை அதைத் தொகுத்தவரின் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறதே தவிர, பரிசுத்த ஆவியின் எண்ணங்களை அல்ல.”
சில நிகழ்வுகளின் முக்கியத்துவத்தைத் துல்லியமாகக் கண்டறிவதற்கு, அந்த நிகழ்வின் சந்தர்ப்பத்தையும், சூழலையும் கவனிப்பது பேருதவியாக இருக்கும். அநேக பிரசங்கிகள் இதைச் செய்ய தவறுவதால்தான், “ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்” (சங்கீதம் 51:15) என்ற இந்த உண்மையின் வலிமையைத் தங்களுடைய வாழ்வில் உணராதிருக்கிறார்கள். பாவத்தின் காரணமாக தாவீதின் வாய் திறக்கவில்லை, தன் பாவத்தை அறிக்கையிடவும் இல்லை. அதன் காரணமாக, பரிசுத்த ஆவியின் தீ அணைக்கப்பட்டிருந்தது. இப்போது அவர் கடவுளிடம் ஒப்புரவானதால், வெட்கத்தால் மூடப்பட்டிருந்த தன் உதடுகள் தொடர்ந்து அந்நிலையில் இல்லாமலிருக்க வேண்டும் என்று கர்த்தரிடம் தன் ஏக்கத்தைத் தெரிவித்தார். ஒரு நிகழ்வின் ஆத்மீக முக்கியத்துவம், அது எந்தவிதத்தில் தொடருகிறது என்பதிலேயே வெளிப்படும். இதற்கான அருமையான பயன்பாட்டை நமக்குத் தருகிற விதத்திலான ஒரு உதாரணத்தை மத்தேயு 8:23-26 வசனங்களில் நாம் காணலாம். இதற்கான கருப்பொருள் 23 ஆவது வசனத்தின் கடைசியிலும், அதற்கு மேலுள்ள 19-22 வசனங்களை வாசிப்பதன் மூலம் அறிந்துகொள்ளலாம். இங்குள்ள வரிசைமுறை நல்லதொரு வழிகாட்டுதலாக இருக்கிறது. இந்தப் பகுதி முழுவதும் கிறிஸ்துவை “பின்தொடர்வதைப்” பற்றி விளக்குகிறது. 23-26 வசனங்கள், சூறாவளி ஏற்பட்ட சூழலில், கிறிஸ்துவினுடைய சீடனின் பாதையைப் பற்றிய அருமையானதொரு விளக்கத்தைத் தருகிறது. அதாவது, சோதனைகள், சிரமங்கள் மற்றும் ஆபத்துகளின் சூழலை எதிர்கொள்வதைப் பற்றி அது விளக்குகிறது. இப்படியான சூழலில், பெரும்பாலும் கர்த்தர் தூங்கிக்கொண்டிருக்கிறதாகவும், நமக்கு வரும் ஆபத்தைப பற்றிக் கவலைப்படாமலோ அல்லது அலட்சியமாகவோ இருக்கிறார் என்றும் தோன்றலாம். ஆனால் உண்மையில் இது நம்முடைய விசுவாசத்திற்கான சோதனை. நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்பதை இயேசு நமக்குத் தெரிவிக்கிறார். எத்தகைய சூறாவளியாக இருந்தாலும், அதிலிருந்து நம்மைக் காப்பதற்கு அவர் போதுமானவராக இருக்கிறார்.
லூக்கா 15:3-32ல் பதிவுசெய்யப்பட்டிருக்கிற உவமைகளை, அதன் சந்தர்ப்ப சூழலைப் புறக்கணித்துவிட்டு, அதைச் சரியாக விளங்கிக்கொள்ள முடியாது. இந்த உவமைகளைக் கிறிஸ்து தன் சீடர்களுக்கு அல்ல, தன்னுடைய எதிரிகளுக்கே சொன்னார் என்ற அடிப்படை உண்மையைக் கவனிக்கத் தவறுவதால், வனாந்தரத்தில் விடப்பட்ட தொண்ணூற்றொன்பது ஆடுகள், அதாவது மனந்திரும்ப அவசியமில்லாதவர்களாக அடையாளங் காட்டப்பட்டிருப்பது யாரைக் குறிக்கிறது என்பதைப் பற்றியும், தகப்பனுடைய தயாள குணத்தைக் குறை கண்ட “மூத்த மகன்” யாரைக் குறிக்கிறது என்பதைப் பற்றியும் வேத விளக்கவுரையாளர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பமும் பல்வேறுவிதமான விளக்கங்களும் உருவாகுவதற்குக் காரணமாக அமைகிறது. நம்முடைய கர்த்தர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களுடன் உணவருந்தியதைப் பற்றி முறுமுறுத்த பரிசேயர்களுக்கும் வேதபாரகர்களுக்கும் பதிலளிக்கிற விதமாகவே இந்த உவமைகள் கொடுக்கப்பட்டன. அவர்களுடைய இருதயத்தின் நிலையை அம்பலப்படுத்தவும், அவருடைய கிருபையான செயல்களை நிலைநிறுத்துகிற விதத்திலுமே இந்த உவமைகளைக் கர்த்தர் வடிவமைத்திருக்கிறார். அவர்மீது அவதூறான குற்றச்சாட்டுகளைச் சொல்லிவந்தவர்களின் சீரழிந்த நிலையை எடுத்துக்காட்டவும், பாவிகளைத் தம்முடன் ஏன் ஐக்கியங்கொள்ள ஏற்றுக்கொள்ளுகிறார் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கவும், இவற்றின் மூலம் தெய்வீக செயற்பாடுகளின் கிருபைகளை வெளிப்படுத்தவுமே இந்த உவமைகளைச் சொல்லியிருக்கிறார். இத்தகைய பரவலான உண்மைகளை நாம் புரிந்துகொண்டால், இந்த உவமைகளிலுள்ள விவரங்களைப் புரிந்துகொள்வது சிரமமாக இருக்காது.
லூக்கா 15:1, 2 வசனங்களில், இருவேறுபட்ட அல்லது நேரெதிரான நிலையிலுள்ள மனிதர்களைப் பற்றிய விளக்கங்களை நாம் காண்கிறோம். ஒரு கூட்டத்தினர், இழிவானவர்களாகக் கருதப்பட்ட வரிவசூல் செய்பவர்களும், பாவிகளும். அவர்கள் கிறிஸ்துவினுடைய தேவையை ஆழமாக உணர்ந்தவர்களாக அவரால் ஈர்க்கப்பட்டவர்கள். மற்றொரு கூட்டத்தினர், பெருமையும் சுய நீதியும் கொண்ட பரிசேயர்களும் வேதபாரகர்களும். இந்த இரண்டு பிரிவினரை மையமாகக் கொண்டுதான் இந்தப் பகுதியிலுள்ள மூன்று உவமைகளும் தரப்பட்டிருக்கின்றன. முதலாவது உவமையில், காணாமற்போன தன்னுடைய ஆட்டைத் தேடிப் பாதுகாக்கிற நல்ல மேய்ப்பனைக் காண்கிறோம். இதுவே இரட்சிப்பிற்கு ஆதாரமான அவருடைய பணி. தங்களுக்கு மனந்திரும்புதல் அவசியமில்லை என்று எண்ணிக்கொண்டிருந்த சுயநீதிக்காரரான பரிசேயர்களே ஏனைய தொண்ணூற்றொன்பது ஆடுகள். தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட ஆடு வீட்டிற்குக் கொண்டுவரப்படுகிறது. ஏனைய தொண்ணூற்றொன்பதும் வனாந்திரத்திலேயே விடப்பட்டன. இரண்டாவது உவமை, ஒரு பெண்ணின் காணாமற்போன வெள்ளிக்காசு கண்டுபிடிக்கப்படுவதை விவரிக்கிறது. இந்த உவமையில் மனித இருதயத்திற்குள் நடக்கும் பரிசுத்த ஆவியானவரின் கிரியை விளக்கைக் கொளுத்தி வெள்ளிக்காசைக் கண்டு பிடிக்கும் செயலின் மூலம் விளக்கப்படுகிறது. மூன்றாவது உவமையில், மேய்ப்பனால் தேடப்பட்டவன், அதாவது, ஆவியால் பிரகாசிக்கப்பட்டவன், தகப்பனோடு இருக்கிறான். அதே சமயம் மூத்த மகன், “ஒருக்காலும் நான் உம்முடைய கற்பனையை மீறவில்லை” என்று தன்னைப் பற்றிப் பெருமிதமாகப் பேசுகிறான். இது பரிசேயர்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது. மூத்தவன் தகப்பன் கொடுத்த விருந்திலும், சந்தோஷத்திலும் பங்கு கொள்ளவில்லை. இதிலிருந்து, இந்த உவமைகளில் ஒரு பகுதி யாருக்குச் சொல்லப்படுகிறது என்பதையும், அதன் சந்தர்ப்பச் சூழலையும், அந்தப் பகுதியில் பேசுகிறவர் யார் என்பதையும், அதை வடிவமைத்திருக்கிற விதத்தையும் கண்டறியவேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்.
எங்கெல்லாம் “ஆகையால்” “ஆதலால்” “ஏனெனில்” போன்ற வார்த்தைகள் வருகிறதோ அங்கெல்லாம், அந்த வார்த்தைகள், அதற்கு மேலிருக்கிற பகுதியை நாம் ஆராய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. இப்படியான வார்த்தைகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்த வார்த்தைகளைத் தொடர்ந்து வருகின்ற பகுதிகளின் விளக்கம், அதற்கு மேலிருக்கும் பகுதியில் விவரிக்கப்பட்டிருக்கிற வார்த்தைகளின் மூலமாகச் சொல்லப்படுகிறது என்பதை இது தெரிவிக்கிறது.
இந்த விஷயத்தில் கவனக்குறைவாக இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு நல்ல உதாரணமாக, 2 கொரிந்தியர் 5:17ஐப் பற்றிப் பரவலாகக் காணப்படும் தவறான புரிதலைக் குறிப்பிடலாம். பத்தில் ஒன்பது வீதமானவர்கள் இந்த வசனம் “இப்படியிருக்க” என்று ஆரம்பிப்பதைக் குறிப்பிடுவதேயில்லை. இதன் காரணமாக, “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” என்ற வசனத்தைச் சரியாக விளங்கிக்கொள்ள முடியாமற் போவது மட்டுமல்லாமல், முற்றிலும் தவறாக விளங்கிக்கொள்ளுகிறார்கள். “இப்படியிருக்க” என்ற வார்த்தை, இந்த வசனத்தைத் தனியானதாகவோ, அல்லது தன்னில்தானே எல்லாவற்றையும் கொண்டுள்ளது என்ற விதத்திலோ அணுகக்கூடாது என்பதைத் தெரிவிக்கிறதோடு, இதற்கு மேலிருக்கிற வசனங்களோடு பிரிக்க முடியாத தொடர்பு கொண்டது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. இதற்கு முந்தைய வசனத்தைக் கவனித்தால், அதுவும் “ஆகையால்” என்று துவங்குகிறது. இது, இந்தப் பகுதி முழுவதும் ஒரு போதனை அல்லது கோட்பாட்டை விளக்குகிற பகுதி என்பதைக் காட்டுவதோடு, இந்தப் பகுதி ஒரு ஆத்துமாவின் அனுபவத்தை விளக்குகின்ற பகுதியாகவோ அல்லது சில கடமைகளை அறிவுறுத்துகிற பகுதியாகவோ இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
2 கொரிந்தியர் 5:17ல் “ஒருவன்” என்ற வார்த்தையை நாம் கவனிக்க வேண்டியது அவசியம். இந்த வார்த்தை, இந்த வசனத்தில் விவரிக்கப்பட்டிருக்கிற விஷயம், விதிவிலக்கான சில முக்கியமான நபர்களைப் பற்றியோ, முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர்களை மட்டுமோ குறிப்பதாகக் காணப்படவில்லை. மாறாக இது மறுபிறப்பு அடைந்த அனைவரையும் பற்றிய ஒரு பொதுவான உண்மையை முன்வைக்கிறது. உண்மையில், இந்த வசனம் கிறிஸ்தவ அனுபவத்தைப் பற்றியே சொல்லவில்லை; மாறாக மறுபிறப்பு நம்மில் ஏற்படுத்தியிருக்கிற புதிய உறவைப் பற்றித்தான் விவரிக்கிறது. சில கேள்விகளுக்கு விரிவான பதில் தரும் விதத்தில் இது நம்மை அழைத்துச் செல்லுகிறது: அப்போஸ்தலனாகிய பவுல் எதைக் குறித்து இங்கு எழுதியிருக்கிறார்? இதில் அவரைக் கவனம் காட்ட வைத்தது எது? இதை அவர் விளக்கியிருக்கிற விதத்தின் சிறப்பு என்ன? பவுல், யூதமத முறைமைகளையும் அதன் நம்பிக்கைகளையும் நேரடியாக மறுக்கிறார் என்பதை இங்கு தெரிவித்திருக்கிறார். 14 முதல் 16 வரையுள்ள வசனங்களில், பவுல், கிறிஸ்துவுடனான ஐக்கியம் நம்முடைய பிறப்பு வழி முறைமைகளை இல்லாமலாக்கிவிடும் என்றும் யூதர், யூதரல்லாதவர்கள் என்ற உலக முறைமைகளின்படியான வேறுபாடுகள் முடிவுக்கு வருகிறது என்றும் இது, நம்மை புதிய அல்லது உயிர்த்தெழுதலின் நிலையைக் கொண்டு, கடவுளுக்கு முன்பாக நம்முடைய புதிய நிலையை உறுதிப்படுத்துகிறது என்பதையும் வலியுறுத்துகிறார். நாம் புதிய படைப்பாக, புது உடன்படிக்கையின் கீழ் இப்போது வந்திருக்கிறோம். பழைய உடன்படிக்கையின் எல்லா வரையறைகளும் கட்டுப்பாடுகளும் அகற்றப்பட்டுவிட்டன. இந்தப் போதனையைத்தான் எபிரெயர் நிருபம் வெளிப்படுத்துகிறது.
வேதத்தை விளக்குகிறவர்கள், எந்தவொரு வேதப்பகுதியையும் விளக்குகிறபோது, அப்பகுதியின் நோக்கத்தை அறிவதற்கு, அந்தப் பகுதிக்கு முன்னும் பின்னுமுள்ள வசனங்களின் தொடர்பை அறிவதும் அவசியம். சிலவேளைகளில், ஒரு வேதப்பகுதியின் நோக்கத்தை அறிவதற்கு அந்தப் பகுதி அமைந்திருக்கும் முழுப் புத்தகத்தையும் முறையாக ஆராய வேண்டியிருக்கும். எபிரெயர் நிருபத்தை வாசிக்கிறபோது, இதைச் செய்ய வேண்டியது அவசியம். எபிரெயர் 6:4-6 மற்றும் 10:26-31 பகுதிகள், ஒருவன் மனந்திரும்பிய கிறிஸ்தவனாக இருந்தும், பிறகு மோசமான வீழ்ச்சியடைந்து, பின்வாங்கிய நிலையிலேயே தொடர்ந்திருப்பதைத்தான் விளக்குகின்றன என்ற எண்ணத்தில், கிறிஸ்தவன் என்று நினைத்துக்கொண்டு தன்னைத்தானே சித்திரவதை செய்துகொள்ளுகிற எத்தனை பேர் இருக்கிறார்கள். இந்த வசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறவர்களின் சூழல் முற்றிலும் வித்தியாசமானது என்பதை நாம் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. இந்தப் பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கிற எபிரெயர்களின் நிலை தனித்துவமானது. இவர்கள் யூதமதத்தின் கீழ் வளர்ந்தவர்கள்; இருந்தும் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டவர்கள். ஆனால் மேசியாவைப் பற்றி அவர்கள் கொண்டிருந்த சரீரப்பிரகாரமான நம்பிக்கைகள் பொய்த்துப் போக, அவர்கள் அனுபவித்த துன்புறுத்தல்களும் அவர்களில் மனவுளைச்சலை ஏற்படுத்தி, கிறிஸ்தவ விசுவாசத்தை விட்டு, மீண்டும் யூதமத நம்பிக்கைகளுக்குத் திரும்புகிற சோதனைக்குள்ளானவர்கள். இத்தகைய போக்கு, பேராபத்தானது என்ற எச்சரிப்பு நேரடியாக அவர்களுக்குத் தரப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்தப் பகுதி கிறிஸ்தவர்களில் பின்வாங்கிப் போனவர்களைப் பற்றிச் சொல்லுகிறது என்பது ஆதாரமற்றது. அந்த விதத்தில் இந்தப் பகுதியை விளக்குவது இந்தப் பகுதி வடிவமைக்கப்பட்டிருக்கிற விதத்திற்கு முற்றிலும் எதிரானது.
சிலவேளைகளில், ஒரு வேதப்பகுதியின் முக்கிய போதனையை, அந்தப் பகுதி அந்தப் புத்தகத்தின் எந்த சந்தர்ப்பத்தில் அமைந்திருக்கிறது என்பதைக் கண்டறிவதில் இருந்தே அறிந்துகொள்ள முடியும். இதற்கு ஒரு பொருத்தமான உதாரணம் ரோமர் 2:6-10. இந்தப் பகுதியை அநேகர் கண்டபடி விளக்கியிருக்கிறார்கள். இந்த நிருபத்தின் கருப்பொருள் “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்பதுதான். இது ரோமர் 1:16-17 வசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்நிருபத்தின் முதற்பகுதி ரோமர் 1:18 முதல் 3:21 வரையுள்ள வசனங்களைக் கொண்டது. இதில் கடவுளின் நீதிக்கான உலகளாவிய தேவை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது பகுதி 3:21 முதல் 5:1 வரையுள்ள வசனங்களைக் கொண்டது. இதில் கடவுளுடைய நீதியின் வெளிப்பாடு முன்வைக்கப்படுகிறது. மூன்றாவது பகுதியான ரோமர் 5:1 முதல் 8:39 வரை, கடவுளின் நீதி நம்மை வந்தடைவதைப் பற்றி விவரிக்கிறது. ரோமர் 1:18-32ல், அப்போஸ்தலனாகிய பவுல், யூதரல்லாதவர்களின் குற்றத்தன்மையையும், ரோமர் 2 ஆவது அதிகாரத்தில் யூதர்களுடைய குற்றத்தன்மையையும் விவரித்துக்காட்டுகிறார். ரோமர் 2 ஆவது அதிகாரத்தின் முதல் பதினாறு வசனங்களில், நியாயத்தீர்ப்பின் செயல்வடிவம் எப்படியிருக்கும் என்பதை விவரிக்கிறார். 17 முதல் 24 வரையுள்ள பகுதியில், அதன் தாக்கம் யூதர்களின்மீது எப்படியிருக்கும் என்பதை விளக்கியிருக்கிறார். நியாயத்தீர்ப்பின் செயல்முறை எவற்றை அடிப்படையாகக் கொண்டதென்றால்:
- கடவுளின் நியாயத்தீர்ப்பு, மனிதன் தன்னில்தானே கண்டனத்திற்குரியவன் என்பதை அடித்தளமாக கொண்டது (வசனம் 1);
- கடவுளின் நியாயத்தீர்ப்பு, மனிதனுடைய உண்மையான நிலைக்கு ஏற்ப இருக்கும் (வசனம் 2);
- இரக்கம் அலட்சியப்படுத்தப்படுகிறபோது குற்றத்தன்மை அதிகரிக்கும் (வசனங்கள் 3-5);
- இதை வெளிப்புற சடங்குகளோ அல்லது உதட்டளவு அறிக்கையோ அல்ல, செயல்களே முடிவு செய்கின்றன (வசனங்கள் 6-10);
- இதில் கடவுள் பாரபட்சமாகவோ, அல்லது ஒரு சாராருக்கு சாதகமாகவோ செயல்படுவதில்லை. (வசனம் 11);
- இதில் மனிதர்கள் அவரவர் பெற்று அனுபவிக்கிற பல்வேறு வாய்ப்புகளுக்கேற்ப தீர்ப்பு அமையும். (வசனங்கள் 11-15);
- நியாயத்தீர்ப்பு இயேசு கிறிஸ்துவால் நிறைவேற்றப்படும் (வசனம் 16).
இந்தச் சுருக்கமான ஆய்விலிருந்து, அப்போஸ்தலனாகிய பவுல், ரோமர் 2:6, 7 வசனங்களில், “உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே. தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்” என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் இரட்சிப்பிற்கான வழி இதுதான் என்று அவர் சொல்லவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பாவத்தில் வீழ்ச்சியடைந்த மனிதன், தன்னுடைய சொந்த நற்செயலின் மூலமாகவோ அல்லது கடவுளுக்குக் கீழ்ப்படிவதன் மூலமாகவோ நித்திய பேரின்ப வாழ்வைப் பெறுவான் என்று சொல்லுவது, பவுலுடைய போதனைகளுக்கு நேர்எதிரானது. இந்தப் பகுதியில், கடவுளுடைய நியாயப்பிரமாணம் எதை வலியுறுத்துகிறது என்றும், அது நியாயத்தீர்ப்பு நாளில் எந்தளவுக்கு அவசியமானது என்பதையும் காட்டுவதுதான் பவுலுடைய நோக்கம். யூதனோ, யூதனல்லாதவனோ, யாராக இருந்தாலும், மனிதனுடைய சீரழிந்த தன்மை, கடவுளுடைய நியாயப்பிரமாணத்திற்குப் பூரணமாகவும் தொடர்ச்சியாகவும் கீழ்ப்படிய முடியாத நிலையை அவனில் ஏற்படுத்தியிருக்கிறது. இது மனிதனுடைய இயலாமையை வெளிப்படுத்துகிறதோடு, தேவநீதியைப் பெறுவதென்பது அவனுக்கு வெளியிலிருந்து நிகழ வேண்டியுள்ளது என்பதையும், அது கிறிஸ்துவின் மூலமாக வருகிறதென்பதையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
ஒரு வேதப்பகுதியின் நோக்கத்தை அறிவதில் கவனக்குறைவாக இருப்பது, தவறான போதனைக்கே வழிவகுக்கும் என்பதை நமக்குக் காட்டுகிற மற்றொரு வேதப்பகுதி, 1 கொரிந்தியர் 3:11-15. ஒரு ஆபத்தான மாயைக்கு ஆதரவாக இந்தப் பகுதி அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. அது என்னவெனில், ஒருவன் கிறிஸ்தவனாக இருந்தும் அவனுக்கு வரக்கூடிய அனைத்து வெகுமதிகளையும் இழந்து, எந்தவிதமான நற்செயல்களையும் அவன் தன்னில் கொண்டிராமல் இருந்தும் பரலோகம் சென்றுவிடுவான் என்பதுதான். இந்தவிதமான சிந்தனை, பரிசுத்த ஆவியானவரை மிகவும் அவமதிக்கும் செயலாகும். ஏனென்றால், பரிசுத்த ஆவியானவர் அவனுடைய ஆத்துமாவில் அற்புதமான விதத்தில் செயல்பட்டும், அவனில் தங்கியிருந்தும், அவனில் ஆவிக்குரிய கனிகளைக் கொண்டுவர முடியாமல் போய்விட்டது என்று சொல்லுவதாகிவிடும். இத்தகைய மோசமான சிந்தனை வேதபோதனைகளின் முரண்பாடற்ற தன்மைக்கு முற்றிலும் எதிரானது. எபேசியர் 2:10 சொல்லுகிறது, தேவனுடைய கிருபையினால் விசுவாசத்தின் மூலமாக இரட்சிப்பை அடைகிறவர்கள், “நற்கிரியைகளைச் செய்கிறதற்குக் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறார்கள்”. நற்செயல்களைத் தன்னில் கொண்டிராதவர்கள் இரட்சிப்பை அடைந்தவர்களாக இருக்க முடியாது. ஏனென்றால், “கிரியைகளில்லாத விசுவாசம் செத்தது” (யாக்கோபு 2:20). “மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டு” (சங்கீதம் 58:11). “அவனவனுக்குரிய (மறுபிறப்படைந்தவனுக்குரிய) புகழ்ச்சி தேவனால் உண்டாகும்” (1 கொரிந்தியர் 4:5). இவற்றைக் கிறிஸ்தவர்களில் சிலர் அடையமாட்டார்கள் என்று சொன்னால், இந்த வசனங்கள் அனைத்தும் உண்மையாக இருக்க முடியாது.
இத்தகைய தவறான வேத விளக்க முறை, கடவுளை மிகவும் அவமதிப்பது மட்டுமல்லாமல், வேதத்திலுள்ள எளிமையான போதனைகளோடு நேரடியாக முரண்படுவதோடு, அந்தப் பகுதி அமைந்திருக்கிற சூழலையும் கருத்தில் கொள்ள மறுக்கிறது. 1 கொரிந்தியர் 3:11-15 வசனங்களை விளங்கிக்கொள்ள வேண்டுமானால், முதலில் 1-10 வரையுள்ள வசனங்களை நாம் கவனிக்க வேண்டும். அதன் மூலமாகவே அப்போஸ்தலனாகிய பவுல் இந்தப் பகுதியில் எதைப் பற்றி விளக்குகிறார் என்பதை நாம் அறிய முடியும். 3 ஆவது அதிகாரத்தின் தொடக்கத்தில், 1:11ல் கொரிந்தியர்களுக்கு எதிராக அவர் தெரிவித்த குற்றச்சாட்டிற்குத் திரும்புகிறார். அங்கு பவுல், கர்த்தருடைய ஊழியர் ஒருவரை மற்றொரு ஊழியருக்கு எதிரானவராகக் காட்டி, அதன் விளைவாக அவர்களுக்குள் ஏற்பட்ட பிளவைக் குறித்து அவர்களைக் கண்டிக்கிறார். 1 கொரிந்தியர் 3:3ல், அத்தகைய நடத்தை அவர்கள் மாம்சப்பிரகாரமாக நடந்துகொள்வதன் அடையாளம் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். தானும் அப்பொல்லோவும் “ஊழியக்காரர்தான்” (வசனம் 5) என்பதை அவர் அவர்களுக்கு நினைவூட்டுகிறார். தான் வெறுமனே நட்டதாகவும், அப்பொல்லோ தண்ணீர் பாய்ச்சியதாகவும், கடவுளே அதைப் பன்மடங்கு விளையச் செய்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். கடவுள் அவர்கள் இருவருடைய உழைப்பையும் ஆசீர்வதிக்காவிட்டால், இருவருமே “ஒன்றுமில்லை” (வசனம் 7) என்கிறார். ஆகவே வெறும் கருவிகளை முதன்மைப்படுத்துகிறவிதத்தில் நடப்பது, எத்தனை பைத்தியக்காரத்தனம்! ஆகவே, 1 கொரிந்தியர் 3ன் ஆரம்ப வசனங்கள் கடவுளுடைய ஊழியர்களின் விசேஷ பணிகளைக் குறித்து விவரிக்கிறது என்பது சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாகிறது. இது கிரேக்க மொழியில் இன்னும் தெளிவாகக் காணப்படுகிறது. எப்படியென்றால், கிரேக்க மொழியில் “மனிதன்” என்ற வார்த்தை இந்தப் பகுதியில் நேரடியாக இடம்பெறவில்லை. மாறாக, “அவனவனுடைய” என்ற வார்த்தையே இடம்பெற்றிருக்கிறது. இந்த வார்த்தைப் பிரயோகம், பவுலையும், அப்போலாவையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்களாகக் காட்டுகிறது.
இதே விளக்கம் 8 ஆவது வசனத்திலும் தொடர்கிறது. அங்கு, கடவுளுடைய ஊழியர்களின் வேலையில் பன்முகத்தன்மை இருந்தாலும், அதாவது ஒருவர் சுவிசேஷகராகவும் மற்றொருவர் போதனையளிக்கிறவராகவும் இருந்தாலும், அவர்களுடைய பணி ஒரே எஜமானரிடமிருந்தே வருகிறது. அது ஆத்துமாக்களின் நன்மையையே நோக்கமாகக் கொண்டது. எனவே கர்த்தருடைய ஊழியர்களில் ஒருவரை மற்றொருவருக்கு எதிராக நிறுத்துவதும் அல்லது ஒருவரைவிட இன்னொருவரை உயர்வாகக் காட்ட முற்படுவதும் பாவகரமான முட்டாள்த்தனம். கிறிஸ்து தம்முடைய ஊழியர்களுக்குப் பலவிதமான வரங்களைப் பகிர்ந்தளித்து, அவர்களுக்குப் பலவிதமான ஊழியங்களை வழங்கியிருந்தாலும், “அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்” என்று வாசிக்கிறோம். 10 ஆவது வசனத்தில், பவுல், தான் ஏற்படுத்திய ஊழிய “அஸ்திபாரத்தைப்” பற்றிக் குறிப்பிடுகிறார் (எபேசியர் 2:20லும் இதைக் காணலாம்). அதனைத் தொடர்ந்து, அவருக்குப் பின் வந்த கட்டடக்காரர்கள் பயன்படுத்திய பொருட்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவர்களுடைய பொருட்கள், அதாவது அவர்களுடைய பிரசங்கங்கள், கிறிஸ்துவை மகிமைப்படுத்துபவையாகவும், விசுவாசிகளைப் பக்திவிருத்தியில் பெருகச் செய்பவையாகவும் இருந்தால், அவர்கள் நிலைத்திருப்பார்கள், அதற்கான வெகுமதியையும் பெறுவார்கள். ஆனால் அதற்குப் பதிலாக, பிரசங்கிகள், குற்றச் செயல்களும், வெடிகுண்டுகளின் அச்சுறுத்தல்களும், யூதர்களுடைய சமீபத்திய செயல்கள் போன்றவை அதிகரிக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டால், அத்தகைய பயனற்ற குப்பைகள் வரப்போகும் நியாயத்தீர்ப்பு நாளில் எரிந்து பொசுங்கிப்போகும்; அவர்களுக்கு வெகுமதியும் கிடைக்காது. ஆகவே இந்தப் பகுதி, பிரசங்கிகள் அவர்களுடைய ஊழியங்களில் பயன்படுத்தும் கருவிகளைப் பற்றி விவரிக்கிறதே தவிர, தனிப்பட்ட ஒரு கிறிஸ்தவன் வாழவேண்டிய முறையைப் பற்றி விவரிக்கவில்லை.