பக்திவைராக்கியம் – வாசகர் பார்வையில்

(இந்நூலை வாசகர்கள் சீர்திருத்த வெளியீடுகள் சென்னை முகவரியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். கைபேசி எண் – 9445671113)   

மறுபிறப்பையும், மறுமைக்குரிய விசுவாசத்தையும், மெய்யான மனந்திரும்புதலையும் கொண்டு கிறிஸ்துவுக்குள் வளரும் ஒவ்வொரு விசுவாசியும், போதகரும் கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய அடிப்படை  குணாதிசயங்களில் ஒன்றே  “பக்தி வைராக்கியம்”.

இந்த நூலில் ஆசிரியர், வேதம் கூறும் நீதியான பக்தி வைராக்கியம் என்பது என்ன? அது ஏன் அவசியம்? அத்தகைய கிறிஸ்தவ வைராக்கியம் எங்கிருந்து வருகிறது, எத்தகைய சூழலில் வளர்கிறது? எப்படி வெளிப்படுகிறது? எனக்குள் அத்தகைய வைராக்கியம் இருக்கிறதா? இல்லையென்றால் எப்படி அதைப் பெற்றுக்கொள்வது? நமக்குள்ளிருக்கும் பக்தி வைராக்கியத்தை மட்டுப்படுத்தும் காரணிகள் எவை? ஆகிய பக்தி வைராக்கியம் குறித்து எழும் பலவிதமான கேள்விகளுக்கு 12 தலைப்புகளில், வேதத்திலிருந்து அநேக பரிசுத்தவான்களை உதாரணங்களாகக் காட்டி தெளிவாக விளக்கியிருக்கிறார். பயன்படுத்தியிருக்கும் அனைத்து வேத வசனங்களையும் மூலமொழியினடிப்படையில் மிகவும் துல்லியமாகவும், தெளிவாகவும் விளக்கியிருப்பது நாம் வசனங்களை எவ்வித குழப்பங்களும் இல்லாமல் புரிந்து கொள்ள உதவுவதோடு மட்டுமல்லாமல், வேத வசனங்களை எப்படிக் கற்றுக்கொள்வது என்ற படிப்பினையையும் தருகிறது.

சீர்திருத்த விசுவாசிகள் என்று மார்தட்டிக் கொள்ளும் நம்முடைய வாழ்க்கையில், விசுவாசிகளானபோது தேவனோடு கொண்டிருந்த அன்பும், ஆனந்தமும் இன்று குறைந்து காணப்படுவதும்,  வாழ்க்கையில் ஏற்படும் சின்ன சின்னத் தோல்விகளே நம்மைத் துவண்டு போகச் செய்வதும், இந்தக் கொரோனா காலத்தின் தற்காலிக கட்டுப்பாடுகள் நம்மைக் கலக்கமடைய செய்வதும், நம்மில் இருக்கும் பக்தி வைராக்கியத்தின்  மந்தமான நிலையையே எடுத்துக்காட்டுகிறது.

‘கொதிக்கின்ற’ அல்லது ‘எரிகின்ற’ என்ற பதத்தோடு விளக்கப்பட்டிருக்கின்ற “பக்தி வைராக்கியம்”, தேவனிடமிருந்து வந்து நம் ஆவியில் குடியிருப்பதால், தேவனுக்கேற்ற நற்கிரியைகளில் தீவிரமாக ஈடுபட நம்மை உந்தித் தள்ளும் விசையைப்போலச் செயல்படுகிறது.  ஆகவே அத்தகைய வைராக்கியத்தை, ஜாக்கிரதையாக தூண்டிவிட்டு வளர்ப்பது ஒவ்வொரு விசுவாசியின் தனிப்பட்ட கடமை என்று கூறுகிறார் நூலாசிரியர். பாவகரமான வைராக்கியம் மற்றும் நீதியான வைராக்கியம் ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாடுகளைத் தெளிவாக விளக்கப்படுத்தியிருப்பது, நம் இருதயத்தை தற்பரிசோதனைச் செய்யத்தூண்டி, தவறான வைராக்கியத்தைக் கண்டுபிடித்து கருவறுக்கவும், தேவனுக்கேற்ற வைராக்கியத்தில் தொடர்ந்து வளரவும் உதவுகிறது.

ஆதிச்சபை விசுவாசிகளிடம் காணப்பட்ட ‘அனல் வீசும்’ பக்தி வைராக்கியமே யூத  பாரம்பரியக் கட்டுகளை உடைத்து அவர்களை தேவ பக்தியுள்ள வாழ்க்கை வாழச் செய்தது; யூதேயாவைக் கடந்து சுவிசேஷ விதையை உலகெங்கும் பரவச் செய்தது. இந்தியாவில் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே பற்ற வைக்கப்பட்ட ‘சுவிசேஷத் தீப்பொறி’ இன்றளவும் விரவிப் பரவி ஆயிரம் ஆயிரம் ஆத்துமாக்களை ஆண்டவருக்காய் எரியச் செய்யாமலிருப்பதற்கு,  விசுவாசிகளிடையே காணப்படும் மந்தமான அவிந்துபோன  பக்திவைராக்கியமே காரணம். எனவே ஒவ்வொரு விசுவாசியும், போதகரும், சபையின் நன்மைக்காக தேவன் தங்களுக்கு அளித்திருக்கும் தாலந்துகளைப் பற்றிய தெளிவான புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்; ஊக்கத்தோடு ஜெபிக்க வேண்டும். தேவபக்திக்குரிய காரியங்களில் அக்கறையோடும் ஆர்வத்தோடும் ஈடுபட்டு, கர்த்தர் அளித்திருக்கும் வரங்கள், அறிவு மற்றும்  வாய்ப்புகளை ஜாக்கிரதையாகப் பயன்படுத்தி பக்தி வைராக்கியத்தில் வளரவேண்டும்.

கர்த்தரின் முதலாம் கட்டளை மற்றும் ராஜரீகக் கட்டளையான அன்பு கூறுதலோடு பக்தி வைராக்கியத்தையும் தொடர்புபடுத்தி விளக்கும் அத்தியாயம் பக்தி வைராக்கியத்தின் இன்றியமையாத தேவையைப் பறைசாற்றுவதோடு, கர்த்தரை அவர் விரும்பும் வண்ணம் நாம் இன்னும் நேசிக்க ஆரம்பிக்கவே இல்லை என்ற உண்மையை வேதனையோடு ஒப்புக்கொள்ளச் செய்கிறது.

‘பக்தி வைராக்கியத்தின் அதிரடி உதாரணங்கள்’ என்ற தலைப்பில், வேதத்தின் அநேக பரிசுத்தவான்களின் வாழ்வில் பக்தி வைராக்கியம் எவ்வாறு வெளிப்பட்டது என்று விளக்கும் ஆசிரியர், நம் வைராக்கியம் தள்ளாடுகின்ற சூழ்நிலையில் தேவக்கிருபை எவ்வாறு செயல்படுகிறது? பக்தி வைராக்கியம் தள்ளாடுவதற்கான காரணங்கள் என்ன? என்பதைத் ‘தள்ளாடும் பக்தி வைராக்கியம்’ என்ற தலைப்பில் எலியாவின் வாழ்க்கையிலிருந்து மிக அருமையாக விளக்கியிருக்கிறார். அசத்திய போதனைகள் ஆழிப்பேரலையாக எழும்பி, ஆத்துமாக்களை அகால பாதாளத்தை நோக்கி அடித்துச் செல்லும் இக்கடைசி நாட்களில்,  ஆத்தும பாரத்தோடு திறப்பிலே நிற்கவும், சுவரை அடைக்கவுந் தக்கதாக தேவன் தேடும் ஒரு விசுவாச வீரனாக மாத்திரமல்ல, ஒரு கடைநிலை விசுவாசியாக பெற்றுக்கொண்ட விசுவாசத்தை உறுதியோடு காத்துக்கொள்ளவும் “பக்தி வைராக்கியம்” இன்றியமையாத தேவையாக உள்ளது. போதகர் பாலா அவர்கள் குறிப்பிட்டுள்ளபடி, சபையின் அனைத்து விசுவாசிகளும் வாசிக்க வேண்டிய நூலிது. போதகர்களாக இருப்பவர்கள் வாசிக்காமல் இருக்கவே கூடாது.

ஆழ்கடல் முத்துக்களென, அருமையான சத்தியங்கள் அடங்கிய  போதகர் டேவிட் மெரிக்கின் நூல், அழகிய தமிழில் நூல் வடிவில் நம் கையில் கிடைத்திருப்பது நம் பாக்கியம்.  நூலைத் தமிழில் மொழிபெயர்த்த போதகர் ஜேம்ஸ் அவர்களுக்கும், சீர்திருத்த வெளியீடுகள் மற்றும் பதிப்பாசிரியர் அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

– ஷேபா மிக்கேல் ஜார்ஜ்