தேவகோபம்: இறையியலறிஞர்கள் சொன்னவை!

ஜொனத்தன் எட்வர்ட்ஸ்

அமெரிக்காவின் பெருஞ்சிந்தனையாளரும், பிரசங்கியும், இறையியல் வல்லுனருமான ஜொனத்தன் எட்வர்ட்ஸ் (Jonathan Edwards, 1703-1758) 1 தெசலோனிக்கேயர் 2:16ல் கொடுத்த பிரசங்கத்தின் ஒருபகுதி.

அதனுடைய முழு வல்லமையோடும் அது கொட்டப்படும்போது கர்த்தரின் கோபம் எத்தனை பயங்கரமானது. ஓரளவுக்கு அதைப்பற்றி அறிந்துகொள்ள தேவகோபம் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். கர்ஜிக்கும் சிங்கத்தைப் போன்றது ஓரரசனின் கோபம்; ஆனால், இது சர்வவல்லமையுள்ள யேகோவாவாகிய ஆண்டவரின் கோபம். இதைப்பற்றி அறிவுபூர்வமாக அறிந்துகொள்ளப் பார்ப்போம். எந்தவிதமான அனுதாபமோ, கருணை காட்டுவதற்கான எந்தவிதமான சந்தர்ப்பங்களோ இல்லாமல் முழுமையாக தேவகோபம் வெளிப்படும்போது அது எத்தனை பயங்கரமானது! உலகத்தைத் தன் வல்லமையினால் வார்த்தையைப் பயன்படுத்தி கட்டளையிட்டுப் படைத்த ஆண்டவரின் கோபம் எப்படிப்பட்டது? சூரியனைப்பார்த்து உதிக்காதே என்று கட்டளையிட்டு அதை உதிக்காமல் இருக்கச்செய்து, நட்சத்திரங்களை அதனதன் இடத்தில் இருக்கச் செய்கிறவரின் கோபம் எப்படிப்பட்டது? உலகத்தை அசையச்செய்து, பரலோகத்தின் தூண்களை நடுங்கச் செய்கிறவரின் கோபம் எத்தகையது? கடலைக் கண்டித்து, தண்ணீரில்லாமலாக்கி, மலைகளை அவை இருக்கும் இடங்களில் இருந்து அகற்றித் தன்கோபத்தைக் காண்பிப்பவரின் உக்கிரகோபம் எப்படிப்பட்டதாயிருக்கும்? எந்த மனிதனும் அதன் முன் நிற்கவழியில்லாத பிரகாசத்தைக் கொண்டிருக்கும் கர்த்தரின் கோபம் எப்படிப்பட்டது? தீயமனிதர்கள்மீது தன் பிரகாசமான நெருப்புப்போன்ற ஒளியை வீசச்செய்யும் மகோன்னதமானவரின் கோபம் எப்படிப்பட்டது? வல்லமையுள்ள பிசாசுகளும் தாங்கி நிற்கமுடியாது அதனடியில் நசுங்கிப்போகின்ற உக்கிரத்தோடு வெளிப்படும் தேவகோபத்தின் முன் மண்புழுப்போலிருக்கும் மனிதன் என்னவாவான்? அதைக்கொஞ்சமாவது ருசித்துப்பார்க்க, இந்த உலகத்தின் மீது தேவகோபம் எப்படி வெளிப்படுகின்றது என்பதை அறிந்துகொள்ள வாருங்கள். தன்னுடைய கோபத்தைக் கொஞ்சம் உணரும்படியாக கர்த்தர் மனிதனின் மனச்சாட்சியை உருத்தும்போது கடின இருதயமுள்ள அவன் கதறுவான். சொட்டுத் தேவகோபத்தின் வெளிப்படுத்தலின் கீழ் அவனுடைய மானுடம் நசுங்கிப் போகிறது. இதை நாம் அநேக உதாரணங்களில் காண்கிறோம். இந்தக் கொஞ்சக் கோபத்தின் பயங்கரமே அவனைக் கலங்கிப்போகச் செய்யுமானால் அந்தக் கோபம் முழுமையாக வெளிப்படுத்தப்படும்போது அது எப்படியிருக்கும்! தண்ணீர் தெளிப்பதுபோன்ற கர்த்தரின் சின்னக்கோபமே இந்தளவுக்கு மனிதனைத் தொல்லைப்படுத்திக் கலங்கடிக்குமானால், கர்த்தர் வெள்ளக்கால்வாய்களைத் திறப்பதுபோல் தன்னுடைய தீராக் கோபத்தைக் குற்றவாளியாக நிற்கும் மனிதர்கள் மேல் கொட்டி, பெருங்கடலலைகளைப்போல் அந்த உக்கிரக்கோபம் அவர்களைத் தாக்கும்போது அவர்கள் என்ன செய்வார்கள். கர்த்தரின் கொஞ்சக்கோபமே எப்படி மனிதனை மூழ்கச் செய்துவிடுகிறது!

சங்கீதம் 2:12
குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.

சார்ள்ஸ் ஸ்பர்ஜன்

அக்டோபர் 23, 1881ம் ஆண்டில் பெரும் பிரசங்கி சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன் (Charles Haddon Spurgeon , 1834-1892) மத்தேயு 3:7ல் கொடுத்த பிரசங்கத்தின் ஒருபகுதி.

பாவம் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அவர் உண்மையிலேயே தேவனாக இருந்தால், அவர் இந்த உலகத்தின் நியாயாதிபதியாக இருந்தால், எல்லாத் தீமைகளையும் அவர் அடியோடு வெறுக்கிறவராக இருக்க வேண்டும். நீதியற்றவர்களையும் நீதிமான்களையும், ஒழுக்கமற்றவர்களையும் ஒழுக்கமுள்ளவர்களையும், குடியைத் தொடாதவர்களையும் குடித்து வெறிக்கிறவர்களையும், உண்மை பேசுகிறவர்களையும் பொய்யர்களையும் அவர் ஒரேவிதத்தில் நடத்தமுடியாது. அப்படி நடந்துகொள்ளுகிற கடவுளை மனிதன் நிராகரிக்கத்தான் வேண்டும். ஆனால், நாம் அறிந்து விசுவாசிக்கின்ற மெய்யான தேவன் எல்லாப் பாவங்களையும் அடியோடு வெறுக்கவேண்டும். அவருடைய சுத்தமான பரிசுத்த இருதயம் அனைத்து கேடுகளையும் பார்த்து முகஞ்சு-ழிக்க வேண்டும். அதை அவரால் செய்யமுடியும் என்பதற்காக அல்ல; அப்படி அவர் செய்தேயாக வேண்டும். வெகு சீக்கிரமே இந்தக் காலங்களில் அவர் எல்லாப் பாவங்களுக்கு எதிராகவும் தன்னுடைய உக்கிரக்கோபத்தை அவர் கொட்டித்தீர்க்கவேண்டும். இயற்கையமைப்பின்படி கர்த்தர் படைத்துள்ள உலகம் அவசியமான சில ஒழுங்குகளின்படி நிர்வகிக்கப்பட வேண்டும். அதேபோல் இயற்கையின் முறைமையின்படி பாவம் தண்டிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பாவமும், கீழ்ப்படியாமையும் அவற்றின் தன்மையின்படி அவற்றிற்கான பலனை அனுபவிக்கவேண்டும். இதுவே பாவத்தின் தவிர்க்க முடியாத விளைவு; அதைப்பற்றிய எந்த விவாதத்திற்கும் இடமில்லை. இது நிலையானதாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. “மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார் இயேசு. தேவனுடைய கோபத்தைப்பற்றி விளக்குகிறபோது அவரை அதிகாரவெறிபிடித்த கொடுமைக்காரராக நாம் படம்பிடித்துக் காட்டுகிறோம் என்று எண்ணிவிடாதீர்கள். நாம் சொல்லுவதெல்லாம் இயற்கையின்படி நடக்கவேண்டியவைகளைத்தான்; நீங்கள் விஷத்தைக் குடித்தால் அது உங்கள் உயிரை மாய்த்துவிடும்; நீங்கள் குடித்து வெறித்து நடந்துகொண்டால் அல்லது எந்த நோயினால் பாதிக்கப்பட்டாலோ அது உங்களுக்கு தாங்கமுடியாத வருத்தத்தையும் கேட்டையும் கொண்டுவரும். அதுபோல் பாவம் தேவகோபத்தை சந்தித்தேயாக வேண்டும்; வேறுவழியேயில்லை. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்தில் உள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் சிறு எழுத்தாகிலும், எழுத்தின் உருப்பாகிலும் ஒழிந்து போகாது; அந்த நிறைவேறுதலின் ஓர் அம்சமாக கர்த்தர் எல்லாப் பாவங்களையும், மீறுதல்களையும் ஒட்டுமொத்தமாக அழிக்கவேண்டும்.

ஆர்தர் பின்க்

ஆர்தர் பின்க் (A. W. Pink, 1886-1952) எழுதிய ஆக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி.

கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளுகிற அநேகர் தேவகோபம் என்று ஒன்றிருப்பதாக நம்புவதில்லை. தேவகோபம் என்பது தெய்வீகத்தில் காணப்படும் குறைபாடு என்று வெளிப்படையாக சொல்லுமளவுக்கு போகவிரும்பாதவர்கள், அந்த உண்மையை ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. அவர்களுடைய இருதயத்தில் அந்தப் போதனைக்கு எதிராக இரகசியமான ஒரு வெறுப்பு காணப்படுவதால் அதைப்பற்றி அவர்கள் நினைக்கவோ, கேட்கவோ விரும்புவதில்லை. தேவகோபத்தை முழுதாக நிராகரித்துவிடாதவர்களில் சிலர், அதைப்பற்றி பெருமளவுக்கு சிந்திக்க வேண்டிய அளவுக்கு, அதில் பயப்படுமளவுக்கு கோரமான எந்தத் தன்மையுமில்லை என்கிறார்கள். வேறு சிலர், தேவனுடைய குணாதிசயங்களில் ஒன்றான நன்மை தேவகோபத்தோடு பொருந்திவராததொன்றாகக் கருதி அவர்களுடைய எண்ணங்களில் இருந்து அதைத் தவிர்த்துவிட முயல்கிறார்கள்.

ஒத்தவாக்கிய அகராதியைக் கவனத்தோடு ஆராய்ந்து பார்த்தால் அதில் ஆண்டவருடைய கோபம், ஆக்ரோஷம், தேவகோபம் ஆகிய வார்த்தைகளே, அவருடைய அன்பையும், கனிவையும்விட அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன் (சங்கீதம் 7:11).

உண்மை, வல்லமை, கருணை ஆகியவை கர்த்தருடைய பூரணத்துவங்களில் ஒன்றாக இருப்பதுபோல் தேவகோபமும் அவற்றில் ஒன்றாக இருக்கின்றன. கர்த்தருடைய குணாதிசயத்தில் எந்தவிதமான குறைபாட்டிற்கும் இடமில்லை; ஒரு சிறு கலங்கத்தையும் அதில் காணமுடியாது; தேவகோபம் அதில் அடங்காமல் இருந்தால் மட்டுமே அதில் குறைபாட்டிற்கு இடமுண்டு. பாவத்தை உதாசீனப்படுத்துவது ஒழுக்கக்குறைவாகும். பாவத்தை வெறுக்கிறவன் ஒழுக்கத்தொழுநோயாளியாவான்! சகலவிதமான பரிசுத்தப் பூரணத்துவத்தைக் கொண்டிருக்கும் ஒருவர் நீதியையும் அக்கிரமத்தையும், ஞானத்தையும் முட்டாள்தனத்தையும் எப்படி சமமானவையாக ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியும்? நித்திய பரிசுத்தத்தைக் கொண்டிருப்பவர் எப்படி பாவத்தை உதாசீனம் செய்து அதன்மீது தன்னுடைய கண்டிப்பைக் காட்டாமல் இருக்கமுடியும்? (ரோமர் 11:22). பரிசுத்தமாயிருப்பவற்றில் மட்டுமே ஆனந்தம் காணும் கர்த்தர் பரிசுத்தமற்றவற்றை எப்படி வெறுக்காமல் இருக்கமுடியும்? கர்த்தருடைய தன்மை எப்படி அவசியமானதாகவும், நித்தியமானதாகவும் பரலோகத்தை உண்டாக்கியிருக்கிறதோ அதேபோல் நரகத்தையும் உண்டாக்கியிருக்கிறது. கர்த்தரில் எப்படி எந்தக் குறைபாடும் இல்லையோ அதேபோல் அவரில் எந்தக் குணாதிசயமும் இன்னொன்றதைவிடப் பூரணமற்றதாக இல்லை.

சகலவிதமான அநீதிகளையும் நித்தியத்துக்கும் வெறுப்பதுதான் தேவகோபம். அது தீமைகளுக்கெதிரான தெய்வீக நீதியின் வெறுப்பும் கோபமுமாகும். அது பாவத்திற்கெதிராகப் புறப்பட்டிருக்கும் கர்த்தரின் பரிசுத்தமாகும். அது கர்த்தர், பாவத்தைச்செய்து வருகிறவர்களுக்கெதிராக அறிவித்திருக்கும் நீதியான தண்டனை. கர்த்தருடைய அதிகாரத்துக்கு எதிராக பாவம் இருப்பதாலேயே அவர் அதன் மீது கோபமுள்ளவராக இருக்கிறார்; அவருடைய இறையாண்மைக்கெதிரானதாக பாவம் இருக்கிறது. அவருடைய ஆளுகைக்கெதிராக இருப்பவர்கள் அனைவரும், அவரே ஆண்டவர் என்பதைக் கர்த்தர் அறிந்துகொள்ளும்படிச் செய்வார். மனிதர்கள் அவருடைய மகத்துவத்தை அலட்சியப்படுத்துவதால் அது எத்தகையது என்பதை அவர்கள் உணரும்படிச் செய்வார் கர்த்தர். மனிதர்கள் மிகச் சாதாரணமானதாகக் கருதும் பயமுறுத்துகின்ற கோபத்தை, அது எத்தனை பயங்கரமானது என்று அவர்கள் அறிந்துகொள்ளும்படிச் செய்வார் கர்த்தர். தனக்கெதிராக நிகழ்ந்த எந்தப் பாதிப்பின் காரணமாகவோ அல்லது மனிதர்களுக்கு காரணகாரியமெதுவுமில்லாமல் காயத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவோ கர்த்தர் காட்டும் பழிவாங்கும் கொடுஞ்சினம் அல்ல தேவகோபம். உலகத்தின் இராஜா தான்தான் என்பதை நிச்சயம் கர்த்தர் நிரூபிக்கத்தான் போகிறார்; ஆனால் அவருக்கு பழிவாங்கும் குணமில்லை.

ரொபட் ஹெல்டேன்

ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த இறையியலறிஞரும், வேதவிளக்கவியலாளருமான ரொபட் ஹெல்டேன் (Robert Haldane, 1764-1842) ரோமர் 1:18 வசனத்திற்கு தந்திருக்கும் விளக்கத்தின் பகுதி இது.

மனிதனுக்கு மரணம் எனும் தண்டனை விதிக்கப்பட்டு அவன் ஏதேனில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட, இந்த உலகம் சாபத்துக்குள்ளான ஆரம்பகாலத்திலேயே தேவகோபம் வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. அதற்குப் பிறகு நோவாவின் காலத்து வெள்ளத்தின் மூலமும், சோதோம், கொமோரா நகரங்களின் எரிநெருப்பிலாலான அழிவின் மூலமும், இதற்கெல்லாம் மேலாக உலகத்தில் மரணத்தின் ஆளுகை மூலமும் உதாரணங்களாக அது வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பாவத்திற்கும் எதிரான நியாயப்பிரமாணத்தின் சாபத்தில் இதைக் காண்கிறோம்; கர்த்தர் ஏற்படுத்தியிருக்கும் தகனபலிகளில் இதைக் காண்கிறோம்; மோசேயின் காலத்து அத்தனை பிரமாணங்களும் இதை வெளிப்படுத்துகின்றன. இந்நூலின் (ரோமர்) எட்டாவது அதிகாரத்தில் பவுல், உலகமும், படைப்போடு தொடர்புடைய அனைத்தும் தவித்துப் பிரசவவேதனைப்படுவதாக விளக்குகிறார். கர்த்தர் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தி அவருடைய மகிமையைப் பறைசாற்றுகின்ற அதே உலகம், அவர் பாவத்துக்கு எதிரி என்றும், மனிதரின் தீமைகளனைத்தையும் தண்டிக்கிறவர் என்றும் நிரூபிக்கிறது. அனைத்திற்கும் மேலாக, தேவகுமாரன் இந்த உலகத்திற்கு வந்து தன் தெய்வீகத்தை வெளிப்படுத்தி தன்னுடைய துன்பங்கள் மற்றும் சிலுவை மரணத்தின் மூலம், இதற்கு முன் வெளிப்படுத்தப்பட்டிருந்த தேவகோபத்தின் கோரமான விளைவுகள்பற்றிய அனைத்து உதாரணங்களுக்கெல்லாம் மேலான உதாரணமாக பாவத்திற்கெதிரான தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்தினார். இதைவிட, இனி வரப்போகும் கோடானவர்களுக்கான நித்திய தண்டனை புதிய உடன்படிக்கையின் காலத்தில் அதிகாரபூர்வமாகவும் வெளிப்படையாகவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. புதிய உடன்படிக்கையின் கீழ் பரலோகம் வெளிப்படுத்தும் இரண்டு வெளிப்படுத்தல்களைக் காண்கிறோம் & ஒன்று தேவகோபம்; இரண்டாவது, கிருபை.

மார்டின் லொயிட் ஜோன்ஸ்

தேவகோபத்தைப் பற்றி பிரபல பிரசங்கி மார்டின் லொயிட் ஜோன்ஸ் (Martyn Lloyd-Jones, 1899-1981) எழுதியிருக்கும் ஆக்கத்தின் ஒரு பகுதி இது.

தேவகோபத்தையும், கர்த்தரின் நியாயத்தீர்ப்பையும் பற்றிய போதனைகளை விளங்கிக்கொண்டால் மட்டுமே நித்திய தேவகுமாரரான இயேசு கிறிஸ்து ஏன் இந்த உலகத்திற்கு வந்தார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். தன்னுடைய மகிமையை ஒதுக்கிவைத்துவிட்டு குழந்தையாக பெத்லகேமில் பிறந்து, சகலவிதமான துன்பங்களையும் வாழ்க்கையில் கிறிஸ்து ஏன் அனுபவித்தார் என்பது நமக்குத் தெரியும் & அது நம்முடைய இரட்சிப்பிற்காகவே. இருந்தபோதும், இரட்சிப்பிற்கு அது ஏன் அவசியம் என்ற கேள்வி எழுகிறது. நாம் இரட்சிக்கப்படும்படியாக இவையெல்லாம் ஏன் நிகழவேண்டும்? தேவகோபத்தைப்பற்றியும் நியாயத்தீர்ப்பைப்பற்றியும் முழுமையாக விளக்காமல் எவரால் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முடியும் என்று நான் சவால்விடுகிறேன். சிலுவையையும், இயேசு கிறிஸ்துவின் மரணத்தையும் பற்றிய போதனைகளை நாம் கவனிக்கும்போது இது நமக்கு மேலும் தெளிவாகின்றது. கிறிஸ்து ஏன் மரித்தார்? அவருடைய இரத்தத்தினால் இரட்சிக்கப்படுவதற்காக என்று நாம் இதற்கு பதிலளிப்போமானால், அவருடைய இரத்தத்தினால் நாம் ஏன் இரட்சிக்கப்பட வேண்டும்? நாம் இரட்சிப்படைவதற்காக கிறிஸ்து கல்வாரியில் மரித்து, புதைக்கப்பட்டு, உயிர்த்தெழுவது ஏன் அத்தனை முக்கியமானது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தகுந்த ஒரேயொரு விளக்கம் தேவகோபம்பற்றிய வேதபோதனைதான். இந்தப் போதனை உண்மையானதாக இல்லாதிருக்குமானால் கிறிஸ்துவின் சிலுவை மரணம் நிச்சயமாக அவசியமேயில்லாததொன்று என்றுதான் கூறவேண்டும்.

இந்த வசனத்தில் (எபேசியர் 2:3) காணப்படும் இரண்டு விஷயங்களை ஆராய்வோம். முதலாவதாக, பவுல் சொல்லுகிறார், இந்த உலகத்தில் பிறந்திருக்கும் அனைவரும் தேவகோபத்தின் கீழ் இருக்கிறார்கள் என்று. அவர் சொல்லுகிறார், “நாமெல்லோரும் . . . சுபாவத்தினால் மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.” மனித குலத்தின் ஏனைய மக்களனைவரையும்போல நாமெல்லோரும் கோபாக்கினையின் பிள்ளைகள் என்பதே இதற்கு அர்த்தம். இந்தக்காலத்தில் மிகவும் பிரசித்தமில்லாத, அதேநேரம் மிகவும் அருமையான ஒரு போதனையை நாம் இங்கு சந்திக்கிறோம். இது பிரசித்தமில்லாதது மட்டுமல்ல அநேகரால் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டிருக்கும் சத்தியம். இதைப்பற்றிய விவாதத்தில் ஈடுபடுகிறபோது அநேகரால் தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் போகிறது. சில வருடங்களாகவே பிரபலமாகியிருக்கும் ஒரு போதனை, ஆண்டவர் அன்புடையவராக இருக்கிறார் என்றும் அவரை அன்புள்ளவராக மட்டுமே பார்க்க வேண்டும் என்று சொல்லுகிறது. தேவகோபத்தைப்பற்றி நாம் பேசுவோமானால் அது ஆண்டவர் அன்புள்ளவராயிருக்கிறார் என்பதற்கு முற்றிலும் ஒத்துப்போகாத எதிர்மறையான போதனை என்கிறார்கள் அவர்கள். . . . நாம் இப்போது பழைய ஏற்பாட்டுக் கடவுளை நம்புவதில்லை; நாம் இப்போது புதிய ஏற்பாட்டுக் கடவுளையே நம்புகிறோம். அவரே இயேசு கிறிஸ்து என்பது இவர்களின் வாதம். வேறு சிலர் இன்னும் ஒருபடி மேலேபோய், கடந்த நூற்றாண்டில்தான் இந்த விஷயங்கள்பற்றி நமக்குத் தெளிவான விளக்கம் கிடைத்தது என்றும், இந்த நூற்றாண்டின் ஆரம்பகாலம்வரை மக்கள் தேவகோபம் என்று ஒன்றிருப்பதாக நம்பிவந்ததோடு, கடவுளைப்பற்றிய தவறான நம்பிக்கைகளைக் கொண்டிருந்தனர் என்கிறார்கள்.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலிருக்கிறதா? முதலாவதாக, ஒரு தவறான எண்ணத்தைத் திருத்தப் பார்ப்போம்.

சிலர் கோபம் என்ற வார்த்தையைத் தவறாக விளங்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வார்த்தையைக் கேட்டவுடனேயே அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அது கட்டுப்படுத்தமுடியாத ஆத்திரம் என்று எண்ணிவிடுகிறார்கள். சுயக்கட்டுப்பாட்டை இழந்து, மகா ஆத்திரத்துடன் சரீரம் நடுங்க, சரீரத்தோலெல்லாம் வெளுப்படைந்து, இழிவான வார்த்தைகளைப் பேசி இழிவான செயல்களைச் செய்கின்ற ஒருவனின் கோபத்தை மட்டுந்தான் அவர்களால் நினைத்துப் பார்க்கமுடிகிறது. இது கோபத்தைப்பற்றிய மிகத்தவறான கருத்து. பாவமனிதன் சிலவேளைகளில் இந்தவிதமாக நடந்துகொள்வதுண்டு; ஆனால் வேதம், கோபம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது இதெல்லாம் அந்த வார்த்தையில் அடங்கவில்லை. நீதியின் அடிப்படையில் வெளிப்படுத்தப்படும் கோபத்தைத்தான் வேதம் விளக்குகிறது. இன்னும் மேலும் விளக்குவதானால், வேதபோதனையின்படி கர்த்தரின் அன்பின் மறுபக்கமே தேவகோபம். இது கர்த்தரின் அன்பை நிராகரிப்பதனால் ஏற்படுகின்ற தவிர்க்கமுடியாத விளைவு. அன்பே உருவாயிருக்கின்ற ஆண்டவர், நியாயத்தின் தேவனாகவும், நீதியின் தேவனாகவும் இருக்கிறார். தேவனின் அன்பு வெறுத்து ஒதுக்கப்பட்டு நிராகரிக்கப்படும்போது அதன் விளைவாக அங்கே தேவனின் நியாயத்தையும், நீதியையும், கோபத்தையும் மட்டுமே காணமுடியும்.

————————————————————————————————————

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 33 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

அதிகாரமும் அடங்காப்பிடாரிகளும்

சமீபகாலங்களில் உலக நாடுகளிலும், சமுதாயங்களிலும், திருச்சபைகளிலும் நிகழ்ந்து வரும் நிகழ்வுகளும், சிந்தனைப்போக்கும் அதிகாரத்தைப் பற்றி என்னை அதிகமாக சிந்திக்கவைத்தது. அரசுகளுக்கும், அதிகாரங்களுக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவது மட்டுமல்லாமல், பொதுஉடமைகளுக்கு தீவைப்பதும், வாகனங்களைத் தாக்கி உடைப்பதும், எதிராளிகளைத் தாக்கிக் காயமேற்படுத்துவதும் சமுதாயத்தில் இன்று சர்வசாதாரணமாக நிகழ்ந்து வரும் நிகழ்வுகளாக இருக்கின்றன. அல்ஜிசீரா போன்ற சில மீடியாக்கள் இத்தகைய தாக்குதல்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் துன்பத்தை அனுபவித்து வருவது உண்மைதான். அதை நிர்வகிக்கும் ஹமாஸ் ஒரு சமாதானப் புறா அல்ல; ஆரம்பத்திலிருந்தே இஸ்ரவேலுக்கு எதிராக வன்முறை நடத்திவரும் வன்முறைக்கூட்டம் அது. பாலஸ்தீனியர்களைத் தூண்டிவிட்டு வன்முறையை சர்வசாதாரணமாக அது நடத்திவருவதை அல்ஜிசீரா தொடர்ந்து மிகுந்த அனுதாபத்தோடு செய்தி வெளியிட்டு வருகிறது. இதேபோல்தான் சீரியாவிலும் ஐசிஸ் அமைப்பு உருவாகி வன்முறையை வளர்த்தது. இவர்களெல்லோரும் அரசுகள் தவறான போக்கில் போவதாகவும் அதனால் அவற்றைத் தூக்கியெறிய இதுவே வழி என்றும் சொல்லுகின்றனர். இதே நியாயத்தைத்தான் ஸ்ரீ லங்காவில் புலிகளை ஆதரித்தவர்களும் சொன்னார்கள். அதிகாரங்கள் தவறான போக்கில் போனால் வன்முறை செய்து அவற்றை நீக்க வேண்டும் என்ற தத்துவமே உலகமெங்கும் காணப்படும் அரசியல் வன்முறை அமைப்புகளின் சித்தாந்தமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அரசைப் பிடிக்காவிட்டால் குடிமக்கள் அரசுக்குக் கீழ்ப்படியாமல் எதிர்ப்புக்காட்டும் Civil disobedience சமுதாயத்தில் சாதாரணமாகிவிட்டது.

அரசியலில் மட்டுமல்லாமல் சமுதாயத்தின் எல்லாத் தட்டுகளிலும் அதிகாரத் தளங்களுக்கு (Authority structure) எதிரானதொரு புதிய ஒழுக்கமுறை இன்றைய சமுதாயத்தில் இருந்துவருகிறது. இதற்கு முன்பெல்லாம் எது சரி, எது தவறு என்பதில் சமுதாயத்தில் தெளிவான கருத்து இருந்தது. இப்போது அது அடியோடுமாறி ஒருவருக்கு எது சரியாகப்படுகிறதோ அது மற்றவர்களுக்குத் தவறாகத் தெரிந்தாலும் அதை எல்லோரும் சரியானதாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலுத்து (Postmodernism) சமுதாயக் கோட்பாடாகியிருக்கிறது. இதனால்தான் ஆண், பெண் என்ற இனவேறுபாட்டை இன்று சமுதாயம் விலக்கிவைத்து ஒரு ‘புதிய ஒழுக்கப் போக்கை’ (New morality) உருவாக்கியிருக்கிறது. அத்தோடு சமுதாயத்தில் எல்லோரும் ஒருவருக்கொருவர் சமம் (Egalitarianism) என்ற தத்துவமும் மேலோங்கி பரவிவருகிறது. அதாவது ஆணும், பெண்ணும் சமம், உயர்வு தாழ்வு என்ற நிலை சமுதாயத்தில் எதிலும் இருக்கக்கூடாது என்ற போக்கும் அதிகாரத்தை எதிர்த்து நிற்கிறது. தனக்குப் பிடிக்கவில்லை, தன்னுடைய வசதி பாதிக்கப்படுகிறதென்றால் சுய உரிமையை முன்வைத்து மேலிடத்திலிருப்பவர்களுக்கெதிராகப் போர்க்கொடி எழுப்புவது வழமையாகிவிட்டது. சமீபத்தில் இந்திய உச்சநீதிமன்றம் தன்னினச் சேர்க்கை செயல்கள் தண்டனைக்குரியவை என்றிருந்த சட்டத்தை இனிச் செல்லுபடியாகாது என்று தீர்ப்பளித்து அத்தகைய செயல்களை நியாயப்படுத்தியிருக்கிறது. ஆண், பெண் இனவேறுபாட்டை வெறித்தனமாக எதிர்க்கும் இன்றைய சமுதாயம், மூன்றாம் பாலின் உரிமைகளுக்கு மூர்க்கத்தனமாகப் போராடுகிறது. இதெல்லாம் கர்த்தரின் அதிகாரத்துக்கும் சமுதாய பாதுகாப்புக்காக அவர் ஏற்படுத்தியிருக்கும் சமுக அதிகாரங்களுக்கும் எதிரான போராட்டம்.

சமீபத்தில் அமெரிக்க சுப்ரீம் கோர்டிற்கு புதிய நீதிபதியொருவரை சிபாரிசு செய்து அதிபர் டொனல்ட் டிரம்ப், பிரெட் கவனாவை சிபாரிசு செய்தபோது, அவர் பழமைவாதக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர் என்பதற்காக அவர் நியமனமாவதை தடுத்து நிறுத்துவதற்கு எதைச் செய்தாலும் பரவாயில்லை என்று அரசுக்கெதிரான Civil disobedienceஐ எதிர்க்கட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிடவேண்டும் என்று கூக்கிரலிட்டார்கள். இதுவே இன்றைய அதிகார மறுப்பு வர்க்கத்தின் புதிய ஒழுக்கமுறை. எதெல்லாம் அதிகாரமாக சமுதாயத்தில் இதுவரை இருந்து வந்திருக்கிறதோ அதையெல்லாம் இடித்தெரிந்து அதிகாரத்தையே இல்லாமலாக்கும் ஆக்ரோஷமான போரை சமுதாயத்தின் ஒரு பகுதி நடத்திவருகிறது. இது தாராளவாதப் போக்கின் (Liberalism) அதிகாரத்திற்கு எதிரான உச்சகட்டப் போர். தனிமனிதனின் இச்சையை முதன்மைப்படுத்தி அவனுடைய சுயநலப்போக்கிற்கு உரிமைகோரி பொதுவான அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் சமுதாயத்தின் ஒரு பகுதியே கைதிகளுக்கான உரிமை, ஓரினச்சேர்க்கையாளருக்கான உரிமை, இனமாற்றக்காரருக்கான உரிமை, பாலியல் தொழிலாளருக்கான உரிமை, போதைப் பொருள் பயன்படுத்துபவர்களுக்கான உரிமை, சட்டரீதியற்ற முறையில் நாட்டில் நுழைந்திருப்பவர்களுக்கான உரிமை என்று அத்தகையோருக்கான உரிமைப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதெல்லாம் அதிகாரத்திற்கெதிராக அதை அழித்துவிடக் கங்கனம்கட்டி நடந்துவரும் போராட்டம். இதையெல்லாம் கிறிஸ்தவத்தை எதிர்க்கும் புரோகிறசிவ் சோஷலிசத்தை நோக்கி நடைபோடும் சமுதாயத்தில் காணலாம். ஆனால், இத்தகைய கடவுளுக்கெதிரான சமுதாயங்களின் மூர்க்கத்தனமான போராட்டத்தின் மத்தியில் கிறிஸ்தவர்கள் சமுதாயத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறை என்ன என்பதையே இந்த ஆக்கம் ஆராய்கிறது.

அதிகாரம் என்பது எது?

அதிகாரத்தைப் பற்றிய முறையான புரிந்துகொள்ளுதல் நமக்கிருக்கவேண்டும். அதிகாரமில்லாத ஒரு சமுதாயத்தை வேதம் நமக்கு அடையாளம் காட்டவில்லை. மனித சமுதாயத்தை மனிதன் உருவாக்கவில்லை. அதேபோல் அதிகாரத்தையும் மனிதன் உண்டாக்கவில்லை. மனித சமுதாயத்தை உருவாக்கிய தேவன் ஆதியிலேயே படைக்கப்பட்ட மனித குலம் தன்னை அனைத்துக்கும் மேலான அதிகாரியாக ஏற்றுத் தன் அதிகாரத்தின் கீழ் இருக்கவேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருந்தார் (ஆதியாகமம் 1-3). அவரே பத்துக்கட்டளைகளைத் தந்து முழு மனித குலமும் அதைப் பின்பற்ற வேண்டும் என்ற நியதியை ஏற்படுத்தியிருக்கிறார். அந்தக் கட்டளைகள் முழு மனிதகுலத்துக்குமான அவருடைய அதிகாரக் கட்டளைகளாக, வாழ்க்கை நியதியாக இருக்கின்றன. மெய்க்கிறிஸ்தவர்கள் மட்டுமே அவற்றை வாழ்க்கையில் பின்பற்றும் ஆவிக்குரிய தன்மையைக் கொண்டிருந்தாலும், அவையே மனிதகுலத்தில் பொதுவான நீதிக்கட்டளைகளாக இருந்துவருகின்றன. எது சரி, எது தவறு என்பதை இந்தக் கட்டளைகள் நமக்கெல்லாம் மேலதிகாரியான சர்வவல்லவரான கர்த்தரின் பார்வையிலிருந்து நமக்கு விளக்குகின்றன. அவற்றின் அடிப்படையிலேயே இதுவரை நாட்டுச் சட்டங்களும் இயற்றப்பட்டு எங்குமிருந்து வருகின்றன.

அதுமட்டுமல்லாமல் கடவுளே ஆண், பெண் என்ற வேறுபாட்டை உண்டாக்கி ஆணைத் தலைமை ஸ்தானத்தில் நிறுத்தி, பெண் ஆணோடு இணைந்து பணியாற்றும் நிலையை வரலாற்றில் உருவான முதல் குடும்பத்தில் ஏற்படுத்தியிருந்தார். இது படைப்பில் ஏற்படுத்தப்பட்டிருந்த சமுதாயத்தின் ஆணிவேரான அதிகார அமைப்பு. ஆதியாகமத்தைத் தொடர்ந்து வாசிக்கும்போது இந்த ஆரம்ப அதிகார அமைப்பின் கீழ் சமுதாயத்தின் ஏனைய அதிகார அமைப்புகளைக் கர்த்தர் படிப்படியாக மனிதகுலத்தில் ஏற்படுத்தியிருப்பதைக் காணலாம். அவரே தெரிந்தெடுத்து தன் மகிமைக்காகப் பயன்படுத்திய நாடான இஸ்ரவேலிலும் அவர் ஏற்படுத்தியிருந்த அதிகார அமைப்புகளைக் காண்கிறோம். கடவுளுடைய நீதியையும் அதிகாரத்தையும் தொடர்ந்து நினைவுறுத்தி, அவருடைய அதிகாரத்தின் கீழும் அவர் ஏற்படுத்தியிருக்கின்ற அதிகார அமைப்புகளின் கீழும் நாம் பணிவோடு வாழவேண்டும் என்பதை அவர் தந்திருக்கும் பத்துக்கட்டளைகளும் அவர் ஏற்படுத்திய உடன்படிக்கைகளும் நமக்கு அறிவுறுத்தி நம்மை வழிநடத்துகின்றன. மனிதன் அதிகாரத்தைப் பற்றிய விளக்கத்தை கடவுளிடம் இருந்தே பெற்றுக்கொள்கிறான். பாவத்தில் தொடருகின்ற மனிதகுலம் தொடர்ந்தும் அதிகாரத்தின் அவசியத்தை அறிந்துவைத்திருப்பதனாலேயே அதிகாரத்தளங்களைப் பொதுவாக எல்லா நாடுகளிலும், சமுதாயங்களிலும் காண்கிறோம். இதுவரை நாம் பார்த்திருக்கும் விளக்கங்களில் இருந்து அதிகாரத்தையும், அதிகாரத்தளங்களையும் எதிர்ப்பதும், இல்லாமலாக்க முயல்வதும் கடவுளுக்கு எதிரான செயல்மட்டுமல்ல, மனிதகுலத்தின் நலத்திற்கே தீங்கு விளைவிக்கும் நாசச்செயல்களாக அமையும். அதையே இன்றைய சமுதாயத்தின் பாவச் செயல்களில் இருந்தும் அதன் வெறித்தனமான அதிகாரங்களுக்கெதிரான போராட்டதில் இருந்தும் கவனிக்கிறோம்.

அதிகாரத்தைப் பற்றியும் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு நாம் நடக்கவேண்டிய அவசியத்தைப் பற்றியும் தெளிவாக விளக்கும் புதிய ஏற்பாட்டு வசனங்களைக் கவனியுங்கள்.

பவுல் அப்போஸ்தலன் ரோமர் 13:1-3ல் அதிகாரங்களைப் பற்றி மிகவும் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. 2 ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்துநிற்கிறான்; அப்படி எதிர்த்துநிற்கிறவர்கள் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள். 3 மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும். (ரோமர் 13:1-3)

பவுல் அப்போஸ்தலன் இந்த வசனங்களில் சமூக அதிகாரத் தளங்களைப் பற்றிய உண்மைகளை விளக்குகிறார். அதிகாரம் எப்படி உருவாக்கப்பட்டது, நடைமுறைக்கு வந்தது என்பது பற்றியெல்லாம் பட்டியலிட்டுக் கொடுக்காமல் அதிகாரம் கர்த்தரால் ஆதியில் ஏற்படுத்தப்பட்டது என்ற உண்மையின் அடிப்படையில் அவர் இந்தப் புதிய ஏற்பாட்டு விளக்கங்களைக் கொடுக்கிறார். கிறிஸ்தவன் தன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒருபகுதியாக சமூக அதிகாரங்களை மதித்து அவைகளுக்குக் கட்டுப்பட்டு வாழவேண்டும் என்பதையே பவுல் இங்கு விளக்குகிறார். இந்த வசனங்கள் மிகத்தெளிவாக அதிகாரத்தளங்களை உருவாக்கியிருப்பவர் கர்த்தர் என்றும், அவராலே அல்லாமல் எந்த அதிகாரமும் உருவாகவில்லை என்றும், உலக சமுதாயங்களில் காணப்படுகின்ற அனைத்து அதிகாரங்களும் அவராலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் விளக்குகின்றன. அதேநேரம், அதிகாரங்கள் அநியாயத்திற்கே எதிரானவையென்றும், நீதி, நியாயம் நிலைநிற்க சமுதாயம் அதிகாரங்களை மதித்து நடக்கவேண்டும் என்றும் விளக்குகின்றன. வேதம் பிடிக்காதவர்களும், கடவுளை மதிக்காதவர்களும் இவற்றை மறுதலிக்கலாம். அதற்காக கடவுள் இல்லை, வேதம் இல்லை என்று ஆகிவிடாது. பூனை கண்ணை முடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டது என்று அர்த்தமல்ல.

இந்த அடிப்படையிலேயே ஏனைய புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களும் அதிகாரத்தைப் பற்றியும் சமுதாயத்தில் காணப்படும் அதிகாரப்பிரிவுகளைப் பற்றியும் விளக்கியிருக்கிறார்கள். பேதுரு, 1 பேதுரு 2:13-14, 18 வசனங்களில் இதைப்பற்றி விளக்குவதைக் கவனியுங்கள்.

13 நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள். 14 மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள். (1 பேதுரு 2:13-14)

வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள். (1 பேதுரு 2:18)

மேலே காணப்படும் வசனங்களில் பேதுரு பவுல் தந்திருக்கும் அதே போதனைகளை தனக்குரிய முறையில் கிறிஸ்தவர்களுக்கு எழுதியிருக்கிறார். இரண்டு வேதப் பகுதிகளும் ஒரே உண்மையையே வலியுறுத்துகின்றன.

கொலோசெயர் 3:18-20, 22 வசனங்களில் பவுல், இந்த அதிகாரத்தளங்களை வேறெங்கெல்லாம் சமுதாயத்தில் காண்கிறோம் என்றும் அவற்றிற்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியத்தைப் பற்றியும் விளக்குவதைக் கவனியுங்கள்.

18 மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள். 19 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள். 20 பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது. (கொலோசெயர் 3:18-20)

வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள். (கொலோசெயர் 3:22)

தொடர்ந்து பேதுரு, 1 பேதுரு 3:1-2ல் பின்வருமாறு பவுல் விளக்கியதையே நினைவுறுத்துகிறார்.

1 அந்தப்படி மனைவிகளே உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, 2 போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். (1 பேதுரு 3:1-2)

பவுல் மேலும் தீத்துவுக்கு எழுதிய நிருபத்தில் தீத்து 2:4-5லும், 2:9-10லும், 3:1-2லும் பின்வருமாறு சொல்லுகிறார்.

4 பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், 5 தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, (தீத்து 2:4-5)

9 வேலைக்காரர் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக, 10 தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்து கொள்ளவும், திருடாமலிருந்து, சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் புத்திசொல்லு. (தீத்து 2:9-10)

1 துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும், 2 ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்னாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு. (தீத்து 3:1-1)

அரசு, மேலாளர்கள் மற்றும் குடும்பம் இவற்றோடு சமுதாயத்தில் வேறெந்தெந்த அதிகாரங்களுக்கெல்லாம் நாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை விளக்கும் பின்வரும் வசனங்களைக் கவனியுங்கள்.

அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். (1 பேதுரு 5:5)

உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே. (எபிரெயர் 13:17)

இதுவரை நாம் பார்த்து வந்திருக்கின்ற வசனப்பகுதிகள் அனைத்தும் சமுதாயத்தில் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து அதிகாரத்தளங்களையும் பொதுவாக விபரித்து அவற்றிற்குக் கீழிருப்பவர்கள் அமைதலோடு அந்த அதிகாரங்களுக்குப் பணிந்து நடக்கவேண்டும் என்று விளக்குகின்றன. சமுதாயத்தில் நம்மை ஆளும் அரசு, வேலைத்தளங்களில் நமக்கு மேலிருக்கும் அதிகாரிகள், வீட்டில் சொந்தக் கணவன், பெற்றோர், திருச்சபை ஆகிய சமூக அதிகாரங்களை இந்தப் பகுதிகளில் நாம் வாசிக்கிறோம். ஆகவே, எங்கு நமக்கு மேலாக ஒரு அதிகாரத்தளம் இருக்கிறதோ அந்த அதிகாரத்தளத்துக்கு மதிப்புக்கொடுத்து நாம் நடக்க வேண்டும் என்பதே கர்த்தர் ஏற்படுத்தியிருக்கும் எக்காலத்துக்கும் பொருந்தும் நியமம். இந்த விஷயத்தில் பழைய ஏற்பாடும், ஆண்டவராகிய இயேசுவும் போதித்திருப்பதையே பவுலும், பேதுருவும், எபிரெயருக்கான நிருபத்தை எழுதியவரும் சுட்டிக்காட்டி விளக்கியிருப்பதைக் கவனிப்பது அவசியம். அதிகாரங்களை மதித்து நடக்கவேண்டும் என்பதில் புதிய ஏற்பாட்டை எழுதியிருப்பவர்கள் எல்லோரும் ஒருமித்த கருத்தையே கொண்டிருந்திருக்கிறார்கள்.

நீதியற்ற அதிகார அமைப்புகள்

அதிகாரத்திற்கும், அதிகார அமைப்புகளுக்கெதிராகவும் போராடி வருகிறவர்கள் அவை நீதியற்ற முறையில் நடந்துகொள்ளுகின்றன என்றும், நம் பார்வைக்கு நீதியானவையாகத் தெரியவில்லை என்ற விளக்கத்தை முன்வைக்கிறார்கள். நீதியற்ற முறையில் நடக்கும் எந்த அதிகாரங்களுக்கும் நாம் கட்டுப்பட வேண்டியதில்லை என்பது பொதுவாக நம்மினத்தில் நிலவி வரும் கருத்து. அதாவது நம்மைப் பொறுத்தவரையில் ஒரு அதிகாரம் நீதியற்ற முறையில் நடந்தால் அதற்கு அடிபணிய வேண்டியதில்லை, அதை எதிர்க்கலாம், அதைத் தூக்கியெறியலாம் என்பது அநேகருடைய பொதுவான சிந்தனையாக இருந்து வருகிறது. அத்தோடு நம் பார்வைக்கும் இச்சைக்கும் எதிரான முறையில் நமக்கு அநீதியாகத் தெரிகிறவற்றையும் எதிர்த்து இல்லாமலாக்க வேண்டும் என்ற எண்ணப்போக்கும் ஒரு பகுதியினரை சமூக அதிகாரங்களை எதிர்க்கவைக்கின்றது. அதனால்தான் அதிகார அமைப்பாக கடவுள் ஆதியில் இருந்து ஏற்படுத்தியிருக்கும் ஆண், பெண் வேறுபாட்டையும் நீதியற்றதாக சமுதாயத்தின் ஒரு பகுதி எதிர்க்கிறது. இந்தச் சிந்தனை வேதத்திற்கு முரணானது; வேதம் எதிர்க்கிறது என்பதை அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. இந்த சிந்தனை இந்த உலகத்துப் பார்வையில் இருந்து எழுகிறதே தவிர கர்த்தரின் வேதத்தில் இருந்தல்ல. இந்த எண்ணப்போக்கிற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

  1. மனித சுயநலம்: தன் சுயநினைப்பே சரியானது, நீதியானது என்ற சுயநலப்போக்கு. இதற்கு அடிப்படைக் காரணம் பாவமே.
  2. தன் கருத்துக்கு ஒத்துப்போகாததை எதிர்த்து தன்னுடைய சிந்தனைப் போக்கின்படி வாழவேண்டும்; அதுவே சுதந்திரத்தின் அடித்தளம் என்ற மனப்போக்கு.

இந்த எண்ணத்தின் காரணமாகத்தான் அநேகர் அரசு விதிக்கும் வரிகளில் சில நியாயமானவை அல்ல என்று தீர்மானித்து அதைக்கட்ட மறுக்கிறார்கள் அல்லது தவிர்த்துவிட வேண்டிய வழிகளை நாடுகிறார்கள். இந்த எண்ணப்போக்கே பலரை ஜனநாயக ரீதியில் அமைக்கப்பட்டுள்ள அரசுகளுக்கு எதிராகப் போராடத் தூண்டுகிறது அல்லது அரசைக் கவிழ்க்கும் நடவடிக்கைகளை எடுக்க வைக்கிறது. இந்த எண்ணத்தின் விளைவாகவே அநேகர் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை; வேலைத்தளத்தில் மேலிருப்பவர்களை மதித்து நியாயமாக நடந்துகொள்வதில்லை. இந்த எண்ணப்போக்கே ஓரினச்சேர்க்கையாளர் உரிமைகளுக்காக சிலரைப் போராட வைக்கிறது. இதை லிபரல் எண்ணப்போக்கு என்று அழைப்பார்கள்; அதாவது வேதத்திற்கு முரணான பாவகரமான உலகத்து இச்சைகளின் அடிப்படையிலான எண்ணப்போக்கு இது.

முதலில், சமுதாயத்தில் எங்கும் நிகழும் அநியாயத்துக்கும், நீதியற்ற நடவடிக்கைகளுக்கும் காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வேதத்தைப் பொறுத்தவரையில் மனிதனைப் பிடித்திருக்கும் பாவமே அதற்கு முழுக் காரணம். பாவத்தைப் பற்றிய உணர்வற்ற பாவ மனிதன் தவறானவற்றை இச்சிப்பதிலும், அநியாயங்களைச் செய்வதிலும் ஆச்சரியமில்லை. பாவமுள்ள இந்த உலகில் பாவம் பெருகி உலகை நிரப்பி அழித்துவிடாமல் இருக்கவே கர்த்தர் அதிகார அமைப்புகளை உருவாக்கி பாவத்தைக் கட்டுப்படுத்துகிறார். அத்தகைய கட்டுப்பாடுகளை அவர் விதிக்காமலிருந்திருந்தால் உலக அழிவு உடனடியாக நிகழ்ந்துவிடும். கர்த்தரின் திட்டங்கள் அனைத்தும் இந்த உலகத்தில் பூரணமாக நிறைவேற பாவம் கட்டுப்படுத்தப்பட்டு கர்த்தரின் திட்டங்களின் பூரணத்துவத்தை நோக்கி உலகம் போய்க்கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்த உலகத்தில் ‘அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல; துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்’ என்று பவுல் ரோமர் 13:3ல் சொல்லுகிறார். இந்தப் பாவ உலகில் அதிகாரத்தளத்தில் அமர்ந்திருக்கும் அரசுகளும், அதிகாரிகளும் சரியானது எது, தவறானது எது என்ற பொதுப்பார்வையைக் கொண்டிருந்து சட்டம், போலீஸ், இராணுவம், வக்கீல்கள், நீதிபதிகள், நீதிமன்றம் என்ற அமைப்புகளின் மூலம் பொது நீதி நிலவுமாறு கடமையாற்றுகிறார்கள். இதற்குப் பின்னால் இருந்து, இந்த எண்ணப்போக்குக்கிற்கும், அமைப்புகளுக்கும் காரணகர்த்தாவாக இருந்து இயக்கி வருகிறவர் உலகாளும் கர்த்தரே. இவற்றை எதிர்ப்பதும், தூக்கியெறிய முயல்வதும் கர்த்தரை எதிர்த்து நிற்பதிலேயே போய் முடியும்.

உலகத்தின் அரசுகளும், அதிகார அமைப்புகளும் பூரணமானவையல்ல; அத்தனையும் பாவ மனிதர்களால் இயங்கி வருபவையே. இருந்தபோதும் அவை கர்த்தருடைய பொதுநீதியைப் பாதுகாத்துவரச் செயல்படுகின்றன. அவை பல வேலைகளில் தவறாக நடந்துகொண்டபோதும், நீதியற்ற செயல்களைச் செய்தபோதும் அதற்காக கர்த்தர் ஏற்படுத்தியிருக்கும் அமைப்பைத் தூக்கியெறிய முயல்வது கர்த்தரையே தூக்கியெறிய முயலும் செயலாகும். உதாரணத்திற்கு இயேசுவின் எதிரிகள் அவரை மடக்குவதற்காக அரசுக்கு வரிகொடுப்பது முறையானதா? என்று கேட்டபோது ‘சீசருக்கு உரியதை சீசருக்குக் கொடு’ என்று இயேசு பதிலளித்தார். இதன் மூலம் அரசு விதிக்கும் வரியை செலுத்த வேண்டும் என்று இயேசு சொல்கிறார். ரோமப் பேரரசும் அதற்குக் கீழிருந்து வரிவசூலித்தவர்களும் (சகேயு) சுயநலவாதிகளாக இருந்தபோதும் இயேசு அதற்காக அவ்வரசுக்குக் கீழ்ப்படியக்கூடாது; வரிசெலுத்தக்கூடாது என்று சொல்லவில்லை. இன்னொரு தடவை, ரோமப்பேரரசை எதிர்த்து யூதர்களுக்கு தலைமை தாங்கிப் போராடவேண்டும் என்று யூதர்கள் எதிர்பார்த்தபோது இயேசு அதற்கு இடங்கொடுக்காது அவர்களுடைய எண்ணத்தில் மண்ணைப் போட்டார். அதற்காகவே யூதர்கள் அவரைக் கொல்ல முயன்றார்கள். இயேசு எந்த விதத்திலும் இஸ்ரவேலில் இருந்த அரசுக்கோ அல்லது ரோமப்பேரரசுக்கோ எதிரான விதத்தில் நடந்துகொள்ளவில்லை; எந்த அதிகாரத்தையும் தூக்கியெறிய முயலவில்லை. அதிகார அமைப்புகளை உருவாக்கி நியமித்த திரித்துவத்தின் இரண்டாம் ஆள்தத்துவமான தேவகுமாரன் தன் அதிகாரத்துக்கு எதிராகச் செயல்படுவாரா? இயேசுவில் காணப்பட்ட இதே போக்கைப் பவுல் அப்போஸ்தலனிலும் காண்கிறோம். பல முறை சிறைவாசத்தை அனுபவித்த பவுல் அதிகாரங்களுக்குக் கட்டுப்பட்டே நடந்துகொண்டார். தன்னுடைய ரோம குடியுரிமையை அவர் சுவிசேஷ நோக்கத்திற்காகப் பயன்படுத்திக்கொண்ட போதும் எந்தவகையிலும் தன்னுடைய உரிமைகளுக்காக வாதாடிப் போராடி அரசையும், சமூக அதிகாரங்களையும் எதிர்க்கவில்லை.

எஜமானர்களும், அடிமைகளும்

முக்கியமாக இந்தப் புதிய ஏற்பாட்டு கட்டளைகளும் அவற்றிற்கான விளக்கங்களும் முதல் நூற்றண்டில் நீதியற்ற முறையில் சமுதாயத்தை ஆண்டுகொண்டிருந்த ரோமப் பேரரசின் காலத்தில் கொடுக்கப்பட்டவை. அந்தக் காலப்பகுதியில் சமுதாயத்தில் அடிமைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. ‘வேலைக்காரர்கள்’ என்று நாம் கொலோசெயர் 3:22லும், 1 பேதுரு 2:9லும் காண்கின்ற வார்த்தை முறையாக ‘அடிமைகள்’ அல்லது ‘அடிமை’ என்றே மொழிபெயர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் மூலமொழியான கிரேக்கத்தில் அதுவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் அன்றிருந்த அடிமைவாழ்க்கை முறைதான். எஜமானர்களும், அடிமைகளுமே அன்றிருந்திருக்கிறார்கள்; இன்று சமுதாயத்தில் காண்பதுபோன்ற சம்பளத்துக்காக ஒருவருக்குக் கீழ் வேலை செய்கிறவர்கள் அன்றிருக்கவில்லை. இன்று வேலைக்காரர்களாக இருக்கும் எவருக்கும் சமுதாயத்தில் உரிமைகளும் வசதிகளும் இருந்து வருகின்றன. அரசின் பாதுகாப்பும் சட்டங்களும், நீதிமன்றமும் அவர்களுக்கு உதவுகின்றன. முதல் நூற்றாண்டு ரோம அரசின் கீழிருந்த நாடுகளில் இதற்கெல்லாம் இடமிருக்கவில்லை. அடிமைகள் விலைக்கு வாங்கப்பட்டார்கள்; எஜமானர்களுக்குக் கீழ் அவர்கள் எந்த வேலையையும் செய்ய வேண்டியவர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கு உரிமைகளோ உடமைகளோ இருக்கவில்லை. அவர்களுக்காக வாதாட எந்த யூனியனும் இருக்கவில்லை. அவர்கள் எஜமானர்களுடைய உடமைகளாக மட்டுமே கணிக்கப்பட்டார்கள். அடிமைகளுக்கு அன்பு காட்டிய நல்ல எஜமானர்கள் அன்றிருந்திருந்தபோதும் அடிமைகளை அநேகர் கொடுமைப்படுத்தியும் வந்தார்கள். முக்கியமாக பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அடிமைகளாகவே இருந்திருக்கிறார்கள். முதலாம் பேதுருவில், பேதுரு இத்தகைய சூழ்நிலையில் வாழ்ந்தவர்களுக்கே அறிவுறை செய்கிறார். இத்தகைய சமூக சூழலின் கீழ் வாழ்ந்தவர்களுக்கே பவுலும் தன் நிருபங்களை எழுதியிருக்கிறார்.

பவுலின் பிலேமோன் நிருபம் பிலேமோன் என்ற கிறிஸ்தவ எஜமானுக்கு எழுதப்பட்டது. அவனுடைய வீட்டில் அன்று சபை கூடிவந்துகொண்டிருந்தது. பிலேமோனின் அடிமையாக வேலை செய்து வந்தவன் ஒநேசிமு. ஒரு நாள் ஒநேசிமு வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டான். அது தற்கொலை செய்துகொள்வதற்கு சமமான ஒரு செயல். ஏனென்றால் அன்று அடிமைகள் சந்தையில் விலைகொடுத்து வாங்கப்பட்டார்கள்; அவர்கள் எஜமானுக்கு சொந்தமானவர்கள். வீட்டைவிட்டு ஓடிப்போன ஒரு அடிமையை எவரும் வாங்கமாட்டார்கள்; வீட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது; விற்கவும் முடியாது. ரோம சட்டம் அதற்கெல்லாம் எதிரானது. அடிமை அமைப்புமுறைக்கு அது பாதுகாப்பளித்தது. ரோமுக்கு போன ஒநேசிமு பவுலை சிறையில் சந்தித்து அந்த அறிமுகத்தால் சுவிசேஷத்தைக் கேட்டு கர்த்தரையும் விசுவாசித்தான். பவுல் அவனை மீண்டும் பிலேமோனிடம் சிபாரிசுக் கடிதத்தோடு அனுப்பிவைத்ததாக அந்த நிருபத்தில் நாம் வாசிக்கிறோம். ஒநேசிமு பிலேமோனிடம் திரும்பியபோது தொடர்ந்தும் அடிமையாகவே (இப்போது கிறிஸ்தவ அடிமை) வாழவேண்டியிருந்தது. அடிமை வழக்கத்தை முதலில் அன்றோடு ஒழித்துவிட்டு ஒநேசிமுவை கவனித்துக்கொள்ளும்படி பவுல் பிலேமோனுக்கு எழுதவில்லை. அவனை மீண்டும் அடிமையாக ஏற்றுக்கொண்டு அன்றுமுதல் கிறிஸ்தவ அன்பைக்காட்டி நடத்தும்படியே பவுல் பிலேமோனுக்கு அறிவுறுத்தினார். அத்தோடு ஒநேசிமுவால் ஏதும் நஷ்டங்கள் ஏற்பட்டிருந்தால் அதைத் தானே ஈடுகட்டிவிடுவதாகவும் பவுல் எழுதியிருந்தார்.

இதெல்லாம் எதைக் காட்டுகிறது? நிச்சயமாக பவுலின் இந்த ஆலோசனையின் அடிப்படையில் அடிமைத்தனத்துக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை; இன்று அது இல்லாமல் போயிருப்பது நல்லதுதான். இருந்தாலும் இந்த வரலாற்று சமூகப் பின்புலத்தின் அடிப்படையில்தான் நாம் அதிகாரத்தையும், அதிகாரத்துக்கு மதிப்பளித்து சமுதாயத்தில் நம் கடமைகளைச் செய்யவேண்டிய அவசியத்தையும் இந்த வேதப்பகுதிகளில் இருந்து விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது, நீதியற்ற சமுதாய அமைப்புகளின் கீழ் வாழ்ந்தாலும் கிறிஸ்தவர்கள் அந்த சமுதாய அமைப்பின் அதிகாரங்களுக்கு எதிராகப் போராடி சமூக சீர்திருத்தத்தை நாடாமல் அதிகாரங்களை மதித்து அவர்களுக்குக் கட்டுப்பட்டுப் பணியாற்ற வேண்டும் என்பதையே இந்த வேதப்பகுதிகள் விளக்குகின்றன. சமுதாயத் தீங்குகளுக்கு எதிராக வேதம் எத்தனையோ பகுதிகளில் விளக்கங்கொடுக்கிறது; அவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்கிறது. இருந்தபோதும் அந்த சமுதாயத்தீங்குகளுக்கு விடிவாக அது அதிரடி சமூக சீர்திருத்தத்தையோ அல்லது அராஜகத்தையோ சிபாரிசு செய்யவில்லை; அதிகாரத்துக்கெதிரான போராட்டத்தை முன்வைக்கவில்லை. சமுதாயத்தீங்குகளுக்கு விடிவாக அது சுவிசேஷத்தையும், சுவிசேஷ வாழ்க்கை முறையையுமே நம் முன்வைக்கிறது. கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மூலம் கிறிஸ்துவை விசுவாசித்து மனிதர்களின் வாழ்க்கை மாற்றமடைகிறபோதே சமுதாயத் தீங்குகளுக்கு விடிவு ஏற்படுவதாக அது விளக்குகிறது. பாவத்தில் இருந்து விடுபட்டு கிறிஸ்தவ நன்னடத்தையை வாழ்க்கையில் கொண்டிருக்கின்றபோதே சமூக மாற்றங்களை கிறிஸ்தவன் ஏற்படுத்துகிறான் என்கிறது வேதம்.

நீதியற்ற அரசின் கீழும், நீதியற்ற சமுதாய அமைப்பு முறையின் கீழும் வாழ்ந்து வருவதை அதிகாரத் தளங்களை உதறித்தள்ளுவதற்கு ஒருபோதும் சாக்காக இருக்கக்கூடாது என்பதை மேலே நாம் கவனித்த வசனங்கள் வெளிப்படுத்துவதைக் கவனியுங்கள். நீதியான சமுதாயத்தில் மட்டுமே அதிகாரங்களுக்கு நாம் கட்டுப்பட வேண்டும் என்பதல்ல கர்த்தரின் போதனை. சமுதாயத்தில் நீதியற்ற காலங்களிலும் தொடர்ந்து கடவுளே உலகத்தை ஆளுகிறவராகவும், சகல அதிகாரங்களும் அவருக்குக்கீழாகவே இருந்து வருகின்றன. நீதியற்ற நீரோ, டொமீசியன் போன்ற ரோமப் பேரரசர்களும் கர்த்தரால் ஆள அனுமதிக்கப்பட்ட ராஜாக்களாக இருந்திருக்கிறார்கள். நேரடியாக கர்த்தருடைய வார்த்தைகளுக்கு எதிரானவற்றைச் செய்ய எவரும் நம்மை வற்புறுத்தும்போதே நாம் அவர்களுக்குக் கீழ்ப்படியாமல் தானியேலைப்போல கர்த்தருக்கு மட்டும் கீழ்ப்படியவேண்டும். ஏனைய சந்தர்ப்பங்களில் நீதியற்றவர்களுக்குக் கீழிருந்து அதிகாரத்துக்கு மதிப்புக்கொடுத்து கிறிஸ்தவ நன்னடத்தையைப் பின்பற்றிப் பணிசெய்யவேண்டும் என்பதே வேதம் நமக்களிக்கும் தெளிவான போதனை. அநீதிகளுக்கு மத்தியில் கிறிஸ்தவ நன்னடத்தையோடு அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டு ஒருவர் வாழ்கிறபோதே சுவிசேஷ செய்தியின் வல்லமை நிலைநாட்டப்படுவதாக வேதம் விளக்குகிறது. சுவிசேஷ வாழ்க்கையே அநீதியையும், பாவத்தையும் கட்டுப்படுத்துவதற்காக கர்த்தர் ஏற்படுத்தியிருக்கும் ஆவிக்குரிய வாழ்க்கை முறை. அதற்கு ஈடானதொன்றில்லை. சமூக சீர்திருத்தமும், சமூக நீதியும் குறுகிய காலத்துக்கான வெளிப்புற மாற்றத்தை மட்டுமே கொண்டுவர முடியும். அவற்றால் மனிதர்களை மாற்றமுடியாது; பாவத்தைத் கட்டுப்படுத்த முடியாது; நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவரமுடியாது. சமூகத்தில் நிரந்தர மாற்றங்கள் ஏற்பட ஆவிக்குரிய சுவிசேஷ வாழ்க்கை முறை மக்கள் மத்தியில் உருவாக வேண்டும். வேதம் சுவிசேஷத்திற்கும், சுவிசேஷத்தின் அடிப்படையிலான ஆவிக்குரிய இருதய மாற்றத்துக்குமே முன்னிடம் கொடுக்கிறது.

அதிகாரத்தை மதித்து நடக்கவேண்டும்

இதுவரை நாம் பார்த்திருக்கும் வேதவிளக்கங்கள் சமுதாயத்தின் அனைத்து அதிகாரங்களுக்கும் நாம் மதிப்புக்கொடுத்து பணிந்து நடக்கவேண்டும் என்பதை விளக்குகின்றன. அதுவே கிறிஸ்தவ நன்னடத்தை. அந்த நடவடிக்கையின் மூலமாகவே கிறிஸ்துவை நாம் மகிமைப்படுத்தி சுவிசேஷ வாழ்க்கையை சமுதாய மக்கள் அறிந்துகொள்ளும்படியாக வாழ்ந்து வரவேண்டும். தாராளவாத (லிபரல்) சிந்தனை கிறிஸ்தவர்களுக்கு இருக்கக்கூடாது. அதிகாரங்களுக்கு அடிபணிந்து (கீழ்ப்படிந்து) வாழவேண்டும் என்று போதிக்கும் வேதத்தில் ‘கீழ்ப்படிந்து’ என்ற வார்த்தையில் ஆழமான அர்த்தமிருக்கிறது. அதாவது ஒருவன் தன்னைத் தாழ்த்தி தனக்கு மேலிருக்கும் அதிகாரத்தை மதித்து கர்த்தருக்காக அந்த அதிகாரத்திற்கு பணிந்து அனைத்துப் பணிகளையும் செய்யவேண்டும் என்பதே அதன் அர்த்தம். இன்று கிறிஸ்தவர்களும் உலகத்து சிந்தனைகளைப் பின்பற்றி தங்களுடைய உரிமைகளுக்காக தொட்டதற்கெல்லாம் குரல்கொடுக்கவும் போராடவும் ஆரம்பித்திருக்கிறார்கள்; அநியாயத்தைத் தட்டிக்கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இயேசுவும், அப்போஸ்தலர்களும், வேத மனிதர்களும் இதற்கெதிரான முறையிலேயே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். இயேசு தன் உரிமைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து தன்னைத் தாழ்த்தி சகல அதிகாரங்களுக்கும் அடங்கி வாழ்ந்து காட்டியிருப்பதை சிந்தித்துப் பாருங்கள்.

1 பேதுரு 2:18-23
18 வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள். 19 ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால், அதுவே பிரீதியாயிருக்கும். 20 நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும். 21 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். 22 அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை. 23 அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.

இத்தகைய வாழ்க்கைமுறை உலகத்தைப் பொறுத்தவரையில் முதுகெலும்பில்லாத பலவீனமாகத் தெரியலாம்; வேதத்தைப் பொறுத்தவரையில் இதுவே கிறிஸ்துவின் வல்லமையும் நிதர்சனமான கிறிஸ்தவ சுவிசேஷ வாழ்க்கையுமாகும்.

ஆண்டவர் சிரிக்கிறார்!

சாதாரணமாக மனிதர்களிடம் நாம் நகைச்சுவையை எதிர்பார்க்கலாம். ஆனால், கர்த்தருக்கும் நகைச்சுவை தெரியும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சங்கீதம் 2ல், “பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்” என்கிறது. உலகத்தில் மனிதர்கள் மத்தியில் நடக்கும் அத்தனைக்கு பின்னும் கர்த்தரே இருக்கிறார். அவரை மீறி எதுவும் நடந்துவிட முடியாது என்பது வேத சத்தியம் மட்டும் அல்ல; சீர்திருத்த சத்தியத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. அத்தோடு மனிதர்களின் ஆர்ப்பாட்டமான, அகங்காரப்போக்குகளையெல்லாம் மேலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் கர்த்தர் நகைக்கவே செய்கிறார். ‘மனிதன் ஒன்றை நினைக்க தேவன் ஒன்றை நினைக்கிறார்’ என்ற வார்த்தைப் பிரயோகம் கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் நிச்சயம் உண்மை.

கர்த்தர் நகைக்கிறார் என்று வேதம் சொல்லுவதால் கடவுளும் மனிதனைப்போலத்தான் அவருக்கும் மானுட உணர்வுகள் இருக்கின்றன என்று நினைத்துவிடக்கூடாது. ஆண்டவர் ஆவியாக இருக்கிறார் என்கிறது வேதம். அவருக்கு மனிதனைப்போல சரீரமோ, உணர்வுகளோ இல்லை; அதற்கெல்லாம் அப்பாற்பட்டவராக இருக்கிறார் ஆண்டவர். இருந்தபோதும் அவரால் மனிதனோடு அவனைப் புரிந்துகொண்டு உறவாட முடியும். மனிதன் ஆண்டவரைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் மனித மொழியில் ஆண்டவருடைய எண்ணங்கள் வேதத்தில் இந்த முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பரலோகத்தில் இருக்கிறவர் மனிதனுடைய திட்டங்களையும், ஆட்டங்களையும், கூத்துக்களையும் பார்த்து நகைக்கிறார் என்கிறது வேதம். நகைத்தல் என்பது வடமொழி வார்த்தை; அத்தோடு நகைப்பு என்பது அமைதியான சிரிப்பு. வேதம் ஆண்டவர் சிரிக்கிறார் (laughing) என்கிறது. இது என்னை சிந்திக்க வைக்கிறது. உலகம் கர்த்தர் இருக்கிறார் என்பதையே மறந்து பாவத்தின் காரணமாக என்னென்னவோ திட்டங்களையெல்லாம் தீட்டி அவை நிச்சயம் நிறைவேறும் என்ற மமதையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கர்த்தருக்கு மதிப்புக்கொடுக்காத உலகம் கண்கள் இருண்டுபோய் போடும் மமதைத் திட்டங்கள் வெற்றி பெறும்போது அதற்குத் தாங்களே காரணம் என்று எண்ணி மார் தட்டிக்கொள்ளுகிறது. ஆனால், எல்லாவற்றிற்கும் காரணகர்த்தாவான கர்த்தர் அமைதியாக அனைத்தையும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்; தன்னுடைய திட்டங்கள் அனைத்தும் பூரணமாக நிறைவேற அவற்றையெல்லாம் பயன்படுத்திக்கொள்ளவும் செய்கிறார்.

சமீபத்தில் என் மாமனார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக தங்கியிருந்தபோது அவரை விசாரிக்கப் போன நான் பக்கத்துப் படுக்கையில் இருந்த ஒரு வியாதியஸ்தரோடு அவருடைய டாக்டர் செய்த சம்பாஷனையைக் கேட்க நேர்ந்தது. அவர்களுக்கு நானிருப்பது தெரியவில்லை. அது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பேச்சு அந்த சம்பாஷனையைக் கூர்ந்து கேட்க வைத்தது. அந்த வியாதியஸ்தர் அந்த வைத்தியசாலையில் குணமடையாமல் மூன்று மாதங்கள் இருந்திருக்கிறார். அவருக்கு வயது எழபத்தைந்துக்கு மேலிருக்கும். இறந்துபோக வேண்டும் என்று தன்னுடைய ஆசையை அவர் டாக்டரிடம் பகிர்ந்துகொள்ள அதற்கு டாக்டர் அதைத் தன்னால் நிறைவேற்றி வைக்க முடியும் என்று நம்பிக்கையளித்து வருகிற வார விடுமுறைக்குள் மனைவி மற்றும் உறவினர்களுக்கு இறுதி வார்த்தைகளை சொல்லிவிடும்படிச் சொன்னார். அதற்குப் பிறகு, அவருடைய வாழ்க்கையை முடித்துவிடுகிறேன், அது மிகவும் இலகுவானதுதான், உங்களுக்கும் தொல்லையில்லை என்று மிகச் சாதாரணமாகச் சொன்னது என்னைத் திகைத்துப் போக வைத்தது. யூத்தனேசியா என்ற நவீன சமுதாயத்தின் மரியாதையான கொலையை அந்த டாக்டர் அன்று விளக்கிக் கொண்டிருந்ததை இதுதான் முதல் தடவை நான் காதால் கேட்டிருக்கிறேன். பரலோகத்தில் இருக்கும் தேவன் இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறார், ‘சிரிக்கிறார்’ என்ற உணர்வே அந்த டாக்டருக்கு இருக்கவில்லை என்பது நிச்சயம்.

இந்த சம்பவம் அல்ல நான் இந்த ஆக்கத்தை எழுத ஆரம்பித்ததற்குக் காரணம். சமீபத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் உலகத்தில் நிகழ்ந்திருக்கின்றன. அவை பற்றி விளக்கவே இதை எழுத ஆரம்பித்தேன். ஒன்று, அமெரிக்கத் தூதரகம் இஸ்ரவேலின் எருசலேமில் அமைக்கப்பட்டது. இரண்டாவது, மலேசிய நாட்டில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களுந்தான் என்னை சங்கீதம் கர்த்தரைப்பற்றிச் சொன்ன வார்த்தைகளை நினைக்க வைத்தன.

அமெரிக்கா 22 வருடங்களுக்கு முன்பே தன் தூதரகத்தை எருசலேமுக்கு மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை காங்கிரஸில் எடுத்திருந்தபோதும் அதை நிறைவேற்றும் தைரியம் எந்த அமெரிக்கத் தலைவர்களுக்கும் இருந்ததில்லை. அது அரசியல் பிரச்சனைகளை உருவாக்கும் என்று எல்லோரும் அமைதியாக இருந்துவிட்டார்கள். பொதுவாக அமெரிக்கா எப்போதும் இஸ்ரவேலுக்கு நண்பனாக இருந்து வந்திருக்கிறது. இஸ்ரவேலுக்கு அதிக ஆயுத சப்ளை செய்வதும் அமெரிக்காவே. இஸ்ரவேலின் தலைநகராக எருசலேமை அமெரிக்கா ஏற்றுக்கொண்டிருந்தபோதும் பாலஸ்தீனியர்கள், இஸ்லாமிய நாடுகள் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பினால் அமெரிக்கா இந்த விஷயத்தில் அமைதி காத்து வந்திருக்கிறது. இன்று அமெரிக்கா தன்னுடைய தூதரகத்தை டெல் அவீவிலிருந்து எருசலேமுக்கு மாற்றிக் கொண்டுள்ளது. அதற்கான முடிவை எடுத்தது மட்டுமல்லாமல் அதை உடனடியாகவே காலதாமதமில்லாமல் செய்து முடித்திருக்கிறது. ஐநா, பாலஸ்தீனியர்கள் மற்றும் பல உலக நாடுகள் இதைக் கண்டித்தபோதும் அமெரிக்கா அதைப்பற்றியெல்லாம் சட்டை செய்யாமல் இதைச் செய்திருக்கிறது. அமெரிக்காவின் டொனல்ட் டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவின் புதிய நிலைப்பாட்டை இதன் மூலம் பறைசாற்றியிருக்கிறது. அதாவது, எது நியாயமானது, சரியென்று படுகிறதோ அதை மற்றவர்கள் என்ன சொல்லுவார்களோ என்றெல்லாம் தயக்கம் காட்டி பயந்து நிற்காமல் உடனடியாக செய்து முடிப்பதே நல்ல தலைமைக்கு அழகு என்பதை அமெரிக்கா உலகுக்கு அறிவித்திருக்கிறது.

மைக் பென்ஸ்

அமெரிக்காவின் இந்தச் செயல் அந்நாட்டின் சுவிசேஷ கிறிஸ்தவர்கள் எந்தளவுக்கு பொதுவாழ்வில் செல்வாக்குள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறது. உதவித் தலைவராக இருக்கும் மைக் பென்ஸ் ஒரு கிறிஸ்தவர். இஸ்ரவேலும், எருசலேமும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகளில் முக்கிய இடத்தைக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க தூதரகத்தைத் திறந்து வைத்து மைக் பென்ஸ் எருசலேமில் உரையாற்றியிருக்கிறார். பாலஸ்தீனியர்களும், ஹமாஸ், ஹிஸ்பொலா போன்ற தீவிரவாத இயக்கங்களும், பாலஸ்தீனிய அமைப்பும் தீவிரமாக எதிர்த்து வந்திருந்த, எதைச் செய்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று உலக அரசுகள் பயந்திருந்தனவோ அந்தச் செயலை அமெரிக்க தலைமை மிகச் சாதாரணமாக செய்து முடித்திருக்கிறது. அதுவும் இஸ்ரவேல் நாடாக மலர்ந்த 70 வருட நினைவு நாளில் அதைச் செய்திருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு சார்பான செயல், யூதர்களுக்கு ஆதரவளிக்கும் செயல் என்றெல்லாம் பயந்து நிற்காமல் அமெரிக்க தலைமை செய்திருக்கும் இந்தக் காரியம் வரலாற்றில் முக்கியமானதுதான். எது ஒருபோதும் நடக்காது என்று உலகம் நினைத்திருந்ததோ அது நடந்துவிட்டது. அத்தோடு அமெரிக்கா பகிரங்கமாக இஸ்ரவேலின் தலைநகரம் எருசலேம் என்பதை இதன் முலம் ஒத்துக்கொண்டிருக்கிறது. ஆண்டவர் நகைக்கிறார்!

மகாதீர் முகமட்

சமீபத்தில் மலேசிய நாட்டில் நிகழ்ந்த தேர்தலில் வரலாறு காணாத நிகழ்ச்சியொன்று நடந்திருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து அதை ஒரேயொரு கட்சி (அம்னோ) 61 ஆண்டுகள் ஆண்டு வந்திருக்கின்றது. நாட்டின் பிரதமர்களெல்லாம் அக்கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர். அதுவும் அந்தக் கட்சி நாட்டில் அதிகத் தொகையினராக இருக்கும் மலே இனத்தவர்களுக்கு சார்பான கட்சியாக அவர்களுடைய நலத்திற்கே முக்கியத்துவம் தந்து வந்த கட்சியாக இருந்தது. ஏனைய இனத்தவர்களான சீனர்களும், இந்தியர்களும் அவர்களுக்கு அடுத்த இடத்திலேயே இத்தனை காலமும் இருந்து வந்திருக்கிறார்கள். அந்த நாட்டில் அதிக காலம் பிரதமராக இருந்து வந்திருந்தவர் மகாதீர் முகமட். இருபத்தி இரண்டு வருடங்கள் அவர் பிரதமராக இருந்து மலே இனத்தவர்களுக்கு அதிகம் செய்து வந்திருந்தார். அக்காலப்பகுதியில் இந்தியர்கள் வாழ்க்கையில் மிகவும் பின்னடைந்த நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். அவருடைய கட்சிக்கு கால்வருடும் கட்சியாகவே மலேசியாவின் இந்தியர்களின் கட்சியும் இருந்து வந்தது. வயது போய்க்கொண்டிருக்கிறது என்பதால் மகாதீர் முகமட் தன்னுடைய உதவிப் பிரதமராக இருந்த படாவியை பிரதமராக நியமித்து ஓய்வு எடுத்துக்கொண்டார்.

மகாதீர் பிரதமராக இருந்தபோது படாவிக்கு முன் அவருக்கு உதவிப்பிரதமராகவும், நிதியமைச்சராகவும் இருந்தவர் அன்வார் இப்ராகிம். இளமையும் திறமையும் கொண்டிருந்த அன்வாரின் செல்வாக்கு நாளடைவில் அதிகரித்ததைக் கண்ட மகாதீர் அதை விரும்பவில்லை. அத்தோடு அவருக்கும் நாட்டின் பொருளாதாரம் சம்பந்தமான விஷயத்தில் அன்வாருக்கும் கருத்துவேறுபாடு உருவாகியது. மகாதீர் அன்வாரைப் பதவியில் இருந்து நீக்கி இல்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி ஜெயிலில் தள்ளினார். சிலவருடங்களுக்குப் பின் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அன்வார் புதுக்கட்சியொன்றை (பக்கட்டான் ரெக்யெட் & மக்கள் நீதிக்கட்சி) ஆரம்பித்தார். மக்கள் சுதந்திரம் என்ற கோட்பாட்டை முன்வைத்து தேர்தலில் நின்ற அந்தக் கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றது. அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் அன்வாரின் கட்சி அதிக பலமடைந்து முதன் முறையாக பெருந்தொகையினர் எதிர்க்கட்சி பாராளுமன்ற அங்கத்தவர்களாகினர். ஆளும் கட்சியில் பெரும்பான்மை இல்லாமல் போனது. இருந்தும் அன்வாரின் கட்சியால் ஆட்சியைப் பிடிக்குமளவுக்கு இடங்கள் கிடைக்கவில்லை. படாவிக்குப் பின் பிரதமராக வந்த நஜீப் ரசாக் (அவருடைய தந்தை முன்னாள் பிரதமர்) அன்வாரின் செல்வாக்கு உயர்வதைப் பிடிக்காமல் மறுபடியும் போலிக்குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆட்சியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜெயிலில் தள்ளினார். அன்வாரின் மனைவி வென் அசீசா கட்சியின் தலைவரானார். அவருடைய மகள் நூருளும் நாடாளுமன்ற அங்கத்தவராக இருந்தார். அவர்கள் அன்வாரின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடி வந்தனர்.

அன்வார் ஜெயில் தள்ளப்பட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு பிரதமர் நஜீப் ரசாக்கின் எல்லையற்ற பணமோகத்தையும், அதிகார துஷ்பிரயோகத்தையும், கோடிக்கணக்கான அரச நிதிச் சுரண்டலையும் கண்டு கோபமுற்ற முன்னாள் பிரதமரான மகாதீர் முகமட் ஓய்வில் இருந்து வெளிவந்து அன்வாரின் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அத்தோடு நஜீப்புக்கு எதிராக மக்கள் முன் கூட்டங்களில் பேச ஆரம்பித்தார். அன்வாரின் கட்சித் தலைவராக இருந்த அன்வாரின் மனைவியும் மனம் மாறி தன் கணவனுக்கு துரோகம் செய்திருந்த மகாதீரை மன்னித்தார். சமீபத்தில் நிகழ்ந்த தேர்தலில் அன்வாரின் கட்சி ஏனைய எதிர்க்கட்சிகளோடும் மகாதீரோடும் இணைந்து நஜீப்புக்கு எதிராக தேர்தலில் நின்றது. பிரதமர் நஜீப்பும், ஆளும் அம்னோ கட்சியும், அரச இயந்திரங்களும் எதிர்க்கட்சிகள் வெற்றிபெறாமல் இருக்க அவர்களுக்கு எதிராக என்னென்ன தடைகளை உண்டாக்க முடியுமோ அதையெல்லாம் செய்தனர். தேர்தலை எப்போதும் இல்லாதவாறு வாரநாளிலும் வைத்தனர். இருந்தும் தேர்தலில் பெரும்பான்மை இடங்களையும், வாக்கையும் பெற்று எதிர்க்கட்சி மலேசியா வரலாற்றில் முதன் முறையாக ஆட்சியைப் பிடித்தது. ஏற்கனவே எதிர்க்கட்சிகளால் தீர்மானிக்கப்பட்டிருந்தபடி மகாதீர் முகமட் அவருடைய அனுபவத்தின் அடிப்படையில் 93ம் வயதில் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார். நிச்சயம் மலே மக்கள் மத்தியில் மகாதீருக்கு தொடர்ந்து இருந்த செல்வாக்கு எதிர்க்கட்சிகளுக்கு உதவிசெய்தது. உலகத்தில் இத்தனை வயதில் ஆட்சியில் இருக்கும் ஒரே தலைவர் மகாதீர்.

மகாதீர் ஒரிரு வருடங்களுக்கு மட்டுமே பிரதமராக இருப்பேன் என்றும் அதற்குப் பிறகு அன்வார் பிரதமராவார் என்றும் அறிவித்தார். பிரதமரானதும் அவர் செய்த முதல் காரியமே நாட்டு அரசரைச் சந்தித்து அன்வாரை விடுதலை செய்யும்படி கேட்டுக்கொண்டதுதான். அதன்படி முழு மன்னிப்புப் பெற்று அன்வார் இப்போது விடுதலையாகியிருக்கிறார். மகாதீரின் உதவிப் பிரதமராக அன்வாரின் மனைவி வென் அசாசி பதவியில் இருக்கிறார். தேர்தல் முடிந்து முதல் முறையாக மலே, சீன மற்றும் இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி இப்போது நாட்டை ஆளுகிறது. தனக்கு என்ன நடந்தது என்பதை ஆட்சியில் இருந்த மலே கட்சியான அம்னோ இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறது; அது இன்னும் ஆட்சியை இழந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. தன்னை அசைக்க முடியாது என்று எண்ணி வாழ்ந்த முன்னாள் பிரதமர் நஜீமும் அவருடைய மனைவியும் கணக்கற்ற அரச குற்றச்சாட்டுகளுக்கும், தொடரப்படப்போகும் நீதிமன்ற வழக்குகளுக்கும் முகங்கொடுத்து பயத்தோடு வாழ்ந்து வருகின்றனர். நஜீப்பின் மனைவி அரச நிதியைப்பயன்படுத்தி வாழ்ந்திருக்கும் சொகுசு வாழ்க்கை பற்றிய விபரங்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பத்திரிகைகளில் வர ஆரம்பித்திருக்கின்றன. அது தமிழகத்து ஜெயலலிதாவை நினைவுபடுத்துவதாக இருக்கிறது.

மலேசியாவில் நடந்திருக்கும் ‘அரசியல் சுனாமி’ நாட்டு மக்களை முதல்தடவையாக சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்படிச் செய்திருக்கிறது. அரசு மக்களாட்சி நடத்தும் என்ற நம்பிக்கை வலுத்திருக்கிறது. அதையெல்லாம் விட மேலாக நாட்டில் மதசுதந்திரத்துக்கு மதிப்பளிக்கப்படும் என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது. இதுவரை மலே மக்களின் இஸ்லாமிய மதநம்பிக்கைக்கு மட்டுமே முதலிடம் தரப்பட்டிருந்தது. கிடைத்திருக்கும் சுதந்திரமும், அரசியல் மாற்றங்களும் மலேசியாவில் முழு மத சுதந்திரத்துக்கு வழிவகுத்து கிறிஸ்தவ சுவிசேஷம் எந்தளவுக்குப் பரவி நாட்டு மக்களின் ஆத்மீக விடுதலைக்கு வழிவகுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். கிடைத்திருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி திருச்சபைகள் வேதபூர்வமான வழிமுறைகளை மட்டும் நாடி கிறிஸ்துவை மனந்திரும்புதலோடு மகிமைப்படுத்த வேண்டிய பொன்னான காலங்கள் இவை. பரலோகத்தில் அமைதியாக இருந்து ஆண்டவர் நகைக்கிறார்!

————————————————————————————————————

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 32 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

வேதம் மட்டுமே! வேறெதுவும் வேண்டாம்

நான் வாசித்த மூன்று நூல்கள்

சமீபத்தில் அருமையான மூன்று ஆங்கில நூல்களை வாசிக்க முடிந்தது. என் மனைவிக்கு அறுவை சிகிச்சை நடந்திருந்ததால் அவரைக் கவனித்துக்கொள்ளுவதற்காக ஊழியப்பணிகளில் இருந்து இரண்டு வாரம் ஓய்வெடுத்திருந்தேன். அந்தக் காலங்களைப் பிரயோஜனமாகப் பயன்படுத்தி இந்த நூல்களை வாசிக்கமுடிந்தது. உண்மையில் இந்த மூன்று நூல்களையும் ஒரே நேரத்தில் மாறி மாறி வாசித்தேன். ஒன்று கர்த்தரின் உடன்படிக்கையைப்பற்றி நண்பர் கிரெக் நிக்கல்ஸ் எழுதிய இறையியல் நூல் (The Covenant Theology, Greg Nichols, 365pgs). இது கவனத்தோடு பொறுமையாக வாசிக்கவேண்டிய இறையியல் ஆக்கம். இரண்டாவது, விசுவாச அறிக்கைகளின் அவசியத்தைப் பற்றி கார்ல் ட்ரூமன் எழுதிய நூல் (Creedal Imperative, Carl Trueman). மூன்றாவது போதக, பிரசங்க ஊழியப்பணி பற்றி ரொபட் ரேமன்ட் எழுதிய நூல் (The God Centered Preacher, Robert Reymond, 351pgs).

இந்த மூன்று நூல்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததுபோல் காணப்பட்டாலும் ஒரு முக்கிய விஷயத்தில் மூன்று நூலாசிரியர்களும் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அதை அவர்கள் வெளிப்படையாகவே நூலில் பல்வேறு விதங்களில் விளக்கியிருக்கிறார்கள். அதாவது இவர்கள் மூவரும் 16ம், 17ம் நூற்றாண்டு விசுவாச அறிக்கைகளின் அடிப்படையிலான சீர்திருத்த விசுவாசத்தை உறுதியோடு விசுவாசிக்கிறவர்கள். இவர்களில் இருவர் பிரஸ்பிடீரியன் சபைப் பிரிவைச் சேர்ந்தவர்கள்; ஒருவர் சீர்திருத்த பாப்திஸ்து, என் நல்ல நண்பர். கார்ல் ட்ரூமனும், ரேமன்டும் வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கையையும், நண்பர் நிக்கல்ஸ் 1689 விசுவாச அறிக்கையையும் விசுவாசிக்கிறவர்கள். முதலிரு பிரெஸ்பிடீரியன் இறையியலறிஞர்களும் சீர்திருத்த பாப்திஸ்துகளை மதிக்கிறவர்கள். அதேபோல் நண்பர் நிக்கல்ஸ் தன் நூலில் சினாட் ஆப் டோர்ட் மற்றும் பியூரிட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கைகளுக்கு மதிப்புக் கொடுத்து தன் நூலை எழுதியிருக்கிறார். சாதாரணமாக பிரெஸ்பிடீரியன் பிரிவினர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் பாப்திஸ்துகள் சீர்திருத்தவாதத்தை நம்புகிறவர்களாக இருக்க முடியாது (Baptists cannot be Reformed) என்று கருதி வந்தபோதும் இந்த இருவருக்கும் அந்த வியாதி இல்லை. இந்த இருவரும் சீர்திருத்த பாப்திஸ்து இறையியலறிஞர்களோடும், திருச்சபைகளோடும் நல்லுறவு வைத்து பல விஷயங்களில் இணைந்துழைக்கிறார்கள். அதேபோல் நண்பர் நிக்கல்ஸும் இருந்து வருகிறார். இந்த மூவருக்கும் 17ம் நூற்றாண்டில் பியூரிட்டன் பிரெஸ்பிடீரியன்களும், பியூரிட்டன் ஜோன் ஓவனின் கொங்கிரிகேஷனலிஸ்டுகளும், பியூரிட்டன் சீர்திருத்த பாப்திஸ்துகளும் நல்லறவு வைத்திருந்து இணைந்து பணியாற்றியிருந்ததை நன்கு அறிந்திருக்கிறார்கள்.

நண்பர் கிரெக் நிக்கல்ஸின் கர்த்தரின் உடன்படிக்கைபற்றிய நூல், 16, 17ம் நூற்றாண்டு சீர்திருத்த பியூரிட்டன் காலப்பகுதிகளில் வெளிவந்த விசுவாச அறிக்கைகளைப் பின்னணியாகக் கொண்டு கர்த்தரின் உடன்படிக்கை பற்றிய சத்தியத்தை, அதுவும் அதுபற்றிய சீர்திருத்த பாப்திஸ்துகளின் நிலைப்பாட்டை ஆய்வு செய்கிறது. ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த இறையியல் அறிஞரான கார்ல் ட்ரூமன், சத்தியத்தில் திருச்சபை நிலைத்திருக்க விசுவாச அறிக்கை எத்தனை அவசியமானது என்பதைத் துல்லியமாக விளக்குகிறார். இதுபற்றி இதுவரை நான் வாசித்திருக்கும் நூல்களில் இது சிறப்பானது என்று சொல்வேன். ரொபட் ரேமன்ட் போதக, பிரசங்க ஊழியப்பணி வேதபூர்வமானதாக இருப்பதற்கு அது சீர்திருத்த விசுவாசத்தின் அடிப்படையில், விசுவாச அறிக்கைகள் விளக்கும் சத்தியங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கவேண்டும் என்று விளக்குகிறார். இத்தனை தைரியத்தோடு இதை இவர் எழுதியிருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டேன்; மறுபுறம் ஆனந்தமும்கூட. ஆகவே, இவர்கள் மூவரும் வரலாற்று விசுவாச அறிக்கை விளக்கும் சத்தியங்களில் ஆழமான நம்பிக்கைகொண்ட, அவற்றை அறிக்கையிடும் இறையியல் அறிஞர்கள் (Confessional theologians).

வேதம் மட்டுமே

‘வேதம் மட்டுமே வேறெதுவும் தேவையில்லை’ என்ற சுலோகம் இன்று நேற்றில்லாமல் இருந்து வந்திருக்கிறது. இதை யெகோவாவின் சாட்சிகளில் இருந்து இன்றிருக்கும் சுவிசேஷக் கிறிஸ்தவ சபைப்பிரிவுகள்வரை அனைவரும் அறிக்கையிட்டு வருகிறார்கள். இவர்கள் வேதத்திற்கு மட்டுமே நாம் அடிபணிவோம், வெறெதற்கும் அடிபணிய மாட்டோம் என்று மட்டுமல்லாமல், வேதத்தைத் தவிர வெறெதையும் வாசிக்க மாட்டோம், சபைக்குள்ளும் அனுமதிக்கமாட்டோம் என்று அறைகூவலிடுகிறார்கள். ஆங்கிலத்தில் இந்த நிலைப்பாட்டை ‘No Creed, No Confession, Bible alone’ என்று சொல்லுவார்கள். இதை மேலைத்தேய சபைகள் மத்தியில் மட்டுமல்லாமல் கீழைத்தேய நாடுகளிலும் எங்கும் பரவலாகக் காணலாம்.

உண்மையில் ‘வேதம் மட்டுமே’ (Scripture alone) என்ற வார்த்தைப் பிரயோகம் 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாத காலத்தில் எழுந்தது. மார்டின் லூத்தரும், ஜோன் கல்வினும் இதை வலியுறுத்திப் பேசி எழுதியிருக்கிறார்கள். அதற்குக் காரணம், அன்று ரோமன் கத்தொலிக்க மதம் வேதத்தை அடியோடு புறக்கணித்து பெயரளவில் மட்டும் அதைப் பயன்படுத்தி வேதத்தில் இல்லாத எல்லாவற்றையும் கத்தோலிக்கர்கள் தங்களுடைய ஆத்மீக விருத்திக்காகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். கிரியையினாலேயே இரட்சிப்பு கிடைக்கும் என்று போதித்த கத்தோலிக்க மதம், பரிசேயர்களைப்போல ஆயிரக்கணக்கான நிபந்தனைகளை உருவாக்கி கத்தோலிக்கர்கள் அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. இயேசு பிரசங்கித்த மலைப்பிரசங்கம் பரிசேயர்களுக்கு எதிரானது மட்டுமல்லாமல் வார்த்தைக்கு வார்த்தை கத்தோலிக்க மதத்திற்கும் எதிரானதாகும். கத்தோலிக்க மதம் அன்று இந்த விதத்தில் வேதத்தின் அதிகாரத்தையும், பயன்பாட்டையும் சிதைத்து தான் சுயமாக உண்டாக்கிய நிபந்தனைகளுக்கு மக்களை அடிமைப்படுத்தியதால் அதற்கு எதிராகப் போராடி வெற்றிகண்ட சீர்திருத்தவாதிகள் ‘வேதம் மட்டுமே’ என்ற சுலோகத்தை உருவாக்கினார்கள். இந்த வார்த்தைப்பிரயோகத்தில் ‘மட்டுமே’ (alone) என்ற வார்த்தை வேதத்தைத் தவிர வெறெதுவும் நமக்கு அதிகாரமாக இருக்கக்கூடாது என்ற அர்த்தத்தையும், அதிலிருந்து மட்டுமே எந்தப் போதனையையும் பெற்றுக்கொள்ள வேண்டும், பின்பற்ற வேண்டும் என்ற போதனையையும் விளக்குவதாக இருந்தது. இந்த வார்த்தைப் பிரயோகத்தைப் புரிந்துகொள்ளுவதற்கு நமக்கு வரலாற்று ஞானம் அவசியமாகிறது. 16ம் நூற்றாண்டு வரலாற்றில் இந்த வார்த்தைப் பிரயோகம் உருவாகியிருப்பதால் அதன் அடிப்படையில் மட்டுமே இதை விளங்கிக்கொண்டு விளக்கங்கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த வார்த்தைப் பிரயோகம் பொருளற்றதாகிவிடும்; தவறான கருத்தைத் தந்துவிடும். இந்த வார்த்தைப் பிரயோகத்தை உருவாக்கிய சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன் பெரியவர்களுமே வரலாற்று விசுவாச அறிக்கைகளையும், வினாவிடைப்போதனைகளையும் எழுத்தில் வடித்து நமக்குத் தந்திருக்கிறார்கள். ‘வேதம் மட்டுமே’ என்று அறைகூவலிட்ட இந்த தேவமனிதர்கள் விசுவாச அறிக்கைகளைப் பயன்படுத்துவது வேதத்திற்கு எதிரான செயல் என்று எண்ணியிருந்தால், அவற்றை எழுதி, வெளியிட்டு, பயன்படுத்தியோடு திருச்சபைக்கு உதவட்டும் என்று விட்டுச் சென்றிருப்பார்களா? சிந்தித்துப் பாருங்கள். ஆகவே, ‘வேதம் மட்டுமே’ என்ற சீர்திருத்தவாத வார்த்தைப் பிரயோகம் விசுவாச அறிக்கைகளுக்கும், வினாவிடைப்போதனைகளுக்கும் எதிரான வார்த்தைப் பிரயோகமல்ல; அப்படி எண்ணுவது மிகப் பெரிய தவறு. சமீபத்தில், இயன் மரே எழுதி வெளிவந்த ஒரு நூலில், ‘வேதத்தை அடியோடு அகற்றி அதன் இடத்தை எடுத்துக்கொள்ளுவதல்ல விசுவாச அறிக்கைகளின் நோக்கம்; சத்தியத்திற்கு மாறாக அதற்கு விளக்கங்கொடுப்பதைத் தவிர்ப்பதுதான்’ என்று விளக்கியிருக்கிறார்.

இன்று சுவிசேஷத் திருச்சபைகளில் பெரும்பாலானவை இந்த வரலாறெல்லாம் தெரியாமல் வார்த்தைக்கு வார்த்தை ‘வேதம் மட்டுமே’ என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதைப் பயன்படுத்துகிற இவர்கள் இதன் மூலம் விளக்குவதென்ன தெரியுமா? ‘நாங்கள் எந்த விசுவாச அறிக்கையையும் வைத்துக்கொள்ள மாட்டோம், நாங்கள் விசுவாசிப்பதைத் தெளிவாக துல்லியமாக விளக்கமாட்டோம். வேதத்தை விசுவாசிக்கிறோம், இயேசுவை விசுவாசிக்கிறோம், அது மட்டுமே முக்கியம் வேறெதுவும் முக்கியமில்லை’ என்று சொல்லுகிறார்கள். அதனால்தான் இவர்களுடைய சபைகளில் எதை விசுவாசிக்கிறோம் என்பதை விளக்கும் எந்தவித அறிக்கையும் இருக்காது. சட்டவிதிகள் இருக்காது. கிறிஸ்துவை விசுவாசிக்கிறோம், வேதத்தை விசுவாசிக்கிறோம் என்ற வார்த்தைகளைக் தவிர வேறெதையும் இவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. விசுவாச அறிக்கை தேவையில்லை, நாங்கள் விசுவாசிப்பதைத் தெளிவாக சொல்லமாட்டோம் என்று இவர்கள் சொல்லுகிறபோது இவர்கள் ஏற்கனவே அந்த அறிக்கைக்கு தங்களை ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள் என்பதை இவர்கள் உணரவில்லை. உலகத்தில் எவருமே ஏதாவதொரு நம்பிக்கை இல்லாமல் வாழ்வதில்லை. ஆண்டவர் இல்லை என்று மறுக்கிறவனுக்கு அதுவே அவனுடைய நம்பிக்கையாக, அறிக்கையாக இருக்கிறது. தன் விசுவாசம் எப்படிப்பட்டதென்று தெளிவாக விளக்க மறுக்கிறவனுக்கு அதுவே அவனுடைய அறிக்கையாக இருக்கிறது. அதாவது, குறைந்தளவுக்கு மட்டுமே என் விசுவாசம் இருக்கும் என்பது அவனுடைய அறிக்கை.

விசுவாச அறிக்கை அலர்ஜி

கார்ல் ட்ரூமன் தன்னுடைய நூலில் சொல்லுகிறார், ‘எதையும் அறிக்கையிட மாட்டோம் என்று சொல்லுகிற இவர்கள் ஏற்கனவே ஒரு அறிக்கையை வெளிப்படையாக அறிக்கையிட்டிருப்பதை மறந்துவிடுகிறார்கள். தங்களுடைய விசுவாசத்தை அறிக்கையிட மாட்டோம் என்பது இவர்களுடைய அறிக்கையாக இருக்கிறது என்பது இவர்களுக்குத் தெரியவில்லை.’ நீங்களே ஆராய்ந்து பாருங்கள், விசுவாச அறிக்கை அவசியமில்லை என்றும், தாங்கள் விசுவாசிப்பதை விளக்கிச் சொல்லமாட்டோம் என்றும், வேதத்தை மட்டுமே நம்புகிறோம் என்றும் சொல்லுகிற சபைப்பிரிவுகளெல்லாம் எந்த அறிக்கையையும் கொண்டிருக்கவில்லையா? நிச்சயமாகக் கொண்டிருக்கிறார்கள். எந்த விசுவாச அறிக்கையையும் கொண்டிராத கெரிஸ்மெட்டிக் சபை அந்நிய பாஷையில் பேசாதவர்கள் ஆவியில்லாதவர்கள் என்பதை அடித்துச் சொல்லிவருகிறது. சீர்திருத்த சத்தியம் வேண்டாம், விசுவாச அறிக்கை வேண்டாம், சபை சட்டஅமைப்பு வேண்டாம் என்று சொல்லுகிற சகோதரத்துவ சபைகள் விடமாட்டேன் சாமி என்று, காலக்கூறு கோட்பாட்டைப் பின்பற்றி வருகின்றன. எனவே ‘வேதம் மட்டுமே’ என்று அறிக்கையிடுகிற இவர்கள் உண்மையில் பல விஷயங்களை ஆணித்தரமாக விசுவாசிக்கும் அதேவேளையில் அவற்றை விளக்கிச் சொல்ல மட்டும் மறுக்கிறார்கள்.

தாங்கள் விசுவாசிக்கின்றவற்றை வெளிப்படையாக சொல்ல மறுத்து, தாங்கள் யார் என்பதை இனங்காட்டிக் கொள்ளாமல் அதை மறைத்து, விசுவாச அறிக்கை கூடாது என்று இவர்கள் சொல்லுவதற்குப் பல காரணங்கள் உண்டு.

  1. இவர்களில் பலருக்கு உண்மையில் எதை விசுவாசிக்கிறோம் என்பதில் ஆணித்தரமான உறுதியில்லை. அதனால் விசுவாசிப்பவற்றை இவர்களால் தெளிவாக அறிக்கையிட முடியாதிருக்கிறது. விசுவாச அறிக்கை தேவையில்லை என்று இவர்கள் கூறுவது உண்மையை மறைப்பதற்காகவே.
  2. பலர் தாங்கள் விசுவாசிப்பதை அறிக்கையிட்டு தங்களை இனங்காட்டிவிட்டால் எல்லாத்தரப்பாரும் சபைக்கு வராமல் போய்விடுவார்கள் என்று பயப்படுகிறார்கள். அதனால் கிறிஸ்துவை விசுவாசிக்கிறோம், வேதத்தை விசுவாசிக்கிறோம் என்பதை மட்டுமே சொல்லுவதோடு நிறுத்திக்கொள்ளுகிறார்கள். இதனால் பலதரப்பட்ட நம்பிக்கை கொண்டவர்களும் சபைக்கு வருகிற வாய்ப்பு இருக்கிறது.
  3. வேதம் மட்டுமே என்று சொல்லுவதோடு நிறுத்திக்கொண்டால் ஒரு போதகன் தான் எதை விசுவாசிக்கிறேன் என்பதை மறைத்து ஆளாளுக்கு ஏற்றவிதத்தில் போதனைகளைத் தந்து தன்னுடைய தொழிலைக் காப்பாற்றிக்கொள்ள முடிகிறது.
  4. சிலர் வேதசத்தியங்களை ஆழமாக அறிந்திருப்பது அவசியமில்லை என்றும், அப்படி ஆழமாக அறிந்திருப்பது ஐக்கியத்துக்கு உதவாது என்றும் கருதி விசுவாச அறிக்கை பிரிவினையை உண்டாக்கும் என்று அதற்கு விலகி நிற்கிறார்கள்.
  5. சிலர் எந்த விசுவாச அறிக்கையும் வேதத்திற்கு முரணானது என்ற முற்றிலும் தப்பான எண்ணத்தில் அதை நிராகரிக்கிறார்கள்.
  6. சிலர் மனிதனால் எழுதப்பட்ட விசுவாச அறிக்கையை வைத்திருப்பதும், நம்புவதும் வேதத்தில் இருக்க வேண்டிய நம்பிக்கையை சிதைத்துவிடும் என்று நம்பி அதற்கு விலகி நிற்கிறார்கள்.
  7. வேறு சிலர் விசுவாச அறிக்கைகள் மிகவும் பழமையான வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்ததால் (16, 17ம் நூற்றாண்டு) அவற்றால் நவீன கால கிறிஸ்தவத்துக்குப் பயனில்லை என்ற மிகத் தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

சுவிசேஷ கிறிஸ்தவர்களில் அநேகர் தரும் இந்தக் காரணங்களுக்கெல்லாம் பதிலளிப்பது அவசியம். விசுவாச அறிக்கைகளை நிராகரித்து அவற்றை வேதத்திற்கு முரணானவையாகப் பார்க்கிறவர்களைப்பற்றி கார்ல் ட்ரூமன் முக்கியமானதொரு உண்மையை நம்முன் வைக்கிறார். ‘விசுவாச அறிக்கை மனிதன் எழுதியது, அது தேவையில்லை என்கிறவர்கள் தங்களுடைய நம்பிக்கைகளை இரகசியமாக வைத்திருந்து, அவற்றை எழுத்தில் வெளியிடாமலும், எவரும் அவற்றை ஆராய்ந்து அவை வேதபூர்வமானவையா என்று தீர்மானிக்க வழியில்லாமலும் செய்கிறார்கள்.’ இதுவே இவர்களைப்பற்றிய உண்மை. இவர்கள் எந்த விசுவாச அறிக்கையையும் எதிர்ப்பதற்குக் காரணம் தங்களுடைய இரகசியமான நம்பிக்கைகளை இரகசியமாக வைத்திருந்து எவரும் அவற்றை அறிந்துகொள்ளாமல் இருக்கச் செய்வதுதான்.

விசுவாசத்தை அறிக்கை செய்யாவிட்டால் ஆபத்து

விசுவாச அறிக்கைகளை ஏற்று அவற்றிற்கு நம்மை ஒப்புக்கொடுப்பதில் இல்லை ஆபத்து; அவற்றை வேதத்தைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து வேதபூர்வமானவையா என்று தீர்மானிக்காமல் இருப்பதுதான் ஆபத்து. எதுவுமே வேதத்தின் போதனைகளால் ஆராயப்பட வேண்டும். வரலாற்றில் எழுந்திருக்கும் விசுவாச அறிக்கைகள் வேதத்தில் இருந்து எடுக்கப்பட்டு, வேதத்தினால் ஆராயப்பட்டு, ஆவிக்குரிய இறையியலறிஞர்களால் பரிசீலிக்கப்பட்டு 300 வருடங்களுக்கு மேலாக சீர்திருத்த திருச்சபைப் பிரிவுகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தளவுக்கு ஆய்வுக்குள்ளாகி, அங்கீகரிக்கப்பட்டு, வரலாற்றில் நிலைத்திருக்கும் விசுவாச அறிக்கைகள் எப்படி திருச்சபைகளுக்கு ஆபத்தானவையாக அமைய முடியும்? உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? சீர்திருத்த விசுவாச அறிக்கைகள் எதுவுமே தனிமனிதனால் எழுதப்பட்டவையல்ல. அவை சீர்திருத்தவாத, பியூரிட்டன் திருச்சபை இறையியல் அறிஞர்களால் திருச்சபைகளின் அனுமதியோடு பலகாலம் கூடி ஆய்வுசெய்து, விவாதித்து, திருச்சபைகளால் பரிசீலிக்கப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அங்கீகரித்து திருச்சபைகளின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டவை. அதனால்தான் இவை திருச்சபை விசுவாச அறிக்கைகளாக இன்றும் இருந்துவருகின்றன. இந்த வகையிலேயே சினாட் ஆப் டோர்ட், பெல்ஜிக் விசுவாச அறிக்கை, ஹைடில்பேர்க் வினாவிடைத் தொகுப்பு, வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை மற்றும் வினாவிடைத் தொகுப்புகள், 1689 பாப்திஸ்து விசுவாச அறிக்கை ஆகியவை வெளியிடப்பட்டன.

விசுவாச அறிக்கைகள் பழங்காலத்தைச் சேர்ந்தவை; அவற்றால் நவீன காலத்துக்கு நடைமுறைப்பயனில்லை என்ற வாதம் உப்புச்சப்பில்லாதது. வேதமும் மிகவும் பழமையானதுதான். அதனால் அதை ஒதுக்கிவிடப் போகிறீர்களா? விசுவாச அறிக்கைகளைப் பொறுத்தவரையில் அவை எப்போது எழுதப்பட்டவை என்பதல்ல முக்கியம், அவை எதைப் போதிக்கின்றன என்பதுதான் முக்கியம். இறையியலில், ஏனைய இறையியல் பயிற்சிகளைப்போல வரலாற்று இறையியல் (Historical theology) மிகமுக்கியமானது. இது வேதசத்தியங்கள் எந்தெந்தக காலத்தில் என்னென்ன ஆபத்துகளைச் சந்தித்தன என்றும், திருச்சபை அவற்றை எவ்வாறு எதிர்கொண்டு சத்தியத்தில் உறுதியாக இருந்தன என்றும் விளக்குகின்றது. வரலாற்று இறையியலை வாசிக்கின்றபோது ஆதிசபை முதல் மூன்று நூற்றாண்டுகளைக் கடப்பதற்கு முன்பே பல போலிப்போதனைகளைக் கர்த்தரைக் குறித்த போதனைகள் தொடர்பாக சந்தித்திருப்பதையும் அதன் காரணமாக எழுந்த விசுவாச அறிக்கைகளையும் விளக்குவதைக் காண்கிறோம். (அப்போஸ்தலர்கள் விசுவாச அறிக்கை, நைசீன் விசுவாச அறிக்கை 381, கெல்சிடோனியன் விசுவாச அறிக்கை 451). இந்தப் பழம்பெரும் வரலாறில்லாமல் நவீனகாலத்தில் சத்தியத்துக்கு எதிராக உருவாகும் ஆபத்துக்களை ஒருவரால் எப்படித் தடுத்து வெற்றிகொள்ள முடியும்? திருச்சபை வரலாறு நமக்கு வலிமையூட்டுகிறது; வரலாற்றை நிராகரிக்கிறவர்களின் ஆவிக்குரிய எதிர்காலம் வளமையாக இருக்கமுடியாது. ‘விஞ்ஞான உலகம் பெற்றுத்தந்திருக்கும் குழந்தையே வரலாற்றை நிராகரிக்கும் நவீன காலத்தவறு’ என்கிறார் கார்ல் ட்ரூமன்.

வார்த்தைகளுடையதும், வார்த்தைப் பிரயோகங்களினதும் முக்கியத்துவத்தை ஆரம்பத்திலேயே விளக்கியிருந்தேன். சிந்தித்துப் பாருங்கள்; வரலாற்றில் எழுந்த விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப் போதனைகளும் தேவையற்றவையாக இருக்குமானால் எங்கிருந்து நாம் இறையியல் வார்த்தைப் பிரயோகங்களைப் பெற்றுக்கொள்ளப் போகிறோம்? நீதிமானாக்குதல், பரிசுத்தமாக்குதல், பரிகாரப்பலி, விசுவாசத்தினால் மட்டும், கிருபையின் அடிப்படையிலான உடன்படிக்கை, நிபந்தனையற்ற தெரிந்துகொள்ளுதல், முழுமையான பாவச்சீரழிவு போன்ற இறையியல் வார்த்தைப் பிரயோகங்களை அறியாமல் தட்டுத்தடுமாறி அரைகுறை வேத அறிவோடு 16ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த கத்தோலிக்க காட்டாட்சிக்காலத்தில் இருந்ததைப்போலல்லவா தள்ளாடிக்கொண்டிருந்திருப்போம். வரலாற்று விசுவாச அறிக்கைகள் நமக்கு இந்த வார்த்தைப் பிரயோகங்களை அறிமுகப்படுத்தி வேதஞானத்தை வளர்த்துக்கொள்ள துணை செய்கின்றன.

விசுவாச அறிக்கைகள் தெளிவாக துல்லியமாக வேத சத்தியங்களை முறைப்படுத்தி வழங்குவதால் சத்தியத்தைப் பாதுகாத்துக்கொள்ளவும், போலிப்போதனைகளைத் தவிர்த்துக்கொள்ளவும் முடிகிறது. ‘கிறிஸ்து எல்லோருக்குமாக மரித்தார்’ என்பது பரவலாக சுவிசேஷக் கிறிஸ்தவம் நம்பிவரும் ஒரு போதனை. இது தவறு என்பதை அறியாமலேயே பெரும்பாலானோர் இருந்து வருகிறார்கள். இது எத்தனை ஆபத்தானது என்ற உணர்வும் அவர்களுக்கில்லை. இது ஒன்றும் அத்தனை பெரிய ஆபத்தான விஷயமல்ல என்று அசட்டை செய்கிறவர்களும் அநேகம். வரலாற்று விசுவாச அறிக்கைகளையும், வினாவிடைப்போதனைகளையும் ஆராய்ந்து வாசிக்கின்றபோதுதான் இது சாதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டிய விஷயமல்ல; மிகவும் ஆபத்தான, கிறிஸ்துவின் வருகையின் காரணத்தையும், அவர் நிறைவேற்றிய பரிகாரப்பலியின் தன்மையையும், சுவிசேஷத்தையும் மாற்றிப்போதிக்கின்ற மோசமான போலிப்போதனை என்பது தெரியவரும். வரலாற்று விசுவாச அறிக்கைகளையும், வினாவிடைப்போதனைகளையும் பயன்படுத்தாதவர்கள் மத்தியில் நடமாடி வரும் இந்தப் போதனை எந்தளவுக்கு விசுவாச அறிக்கைகள் அவசியமானவை என்பதை உணர்த்துகிறதா, இல்லையா?

‘நாம் கிருபையின் காலத்தில் இருக்கிறோம், அதனால் பத்துக் கட்டளைகளை நடைமுறையில் பின்பற்றவேண்டிய அவசியமில்லை’ என்பதைக் காலக்கூறு கோட்பாட்டைப் பின்பற்றுகிறவர்களும், அன்டிநோமியனிச புதிய உடன்படிக்கை இறையியலைப் பின்பற்றுகிறவர்களும், பொதுவாகவே அனைத்து சுவிசேஷ கிறிஸ்தவ திருச்சபைகளும் நம்பி வருகின்றன. இது எத்தனை தவறான போதனை என்பதை வரலாற்று விசுவாச அறிக்கைகள் நமக்கு விளக்கி சத்தியத்துக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றுகிறவர்கள் வரலாற்று விசுவாச அறிக்கைகளை நிராகரிக்கிறார்கள். அதில் ஆச்சரியமில்லை; ஏனெனில் அவர்களுடைய போதனையில் அது மண்ணை வாரிக்கொட்டுகிறது.

இதேபோல் திரித்துவம் பற்றியும், கிறிஸ்து பற்றியும், கிறிஸ்துவின் பரிகாரப்பலி பற்றியும், நீதிமானாக்குதல் பற்றியும், பரிசுத்தமாக்குதல் பற்றியும் விசுவாச அறிக்கைகள் தெளிவான வேதவிளக்கத்தைத் தந்து போலிப்போதனைகளை இனங்காட்டி சத்தியப்பாதுகாப்புத் தூணாக நிற்கின்றன. இந்த அடிப்படை வேத சத்தியங்களில் வேதத்துக்கு முரணான கருத்துக்களைக் கொண்டிருக்கிறவர்களல்லவா விசுவாச அறிக்கைகளைக் கண்டு பயப்பட வேண்டும்? சத்தியத்துக்கு மட்டுமே கட்டுப்படுவேன் என்கிற கிறிஸ்தவ விசுவாசி, விசுவாச அறிக்கைகளைக் கைநீட்டி வரவேற்கிறவனாக அல்லவா இருப்பான்.

மூன்று நல்ல நூல்களை வாசித்த சுகமான அனுபவம் மட்டுமல்லாது, ‘வேதம் மட்டுமே’ என்ற சீர்திருத்த வார்த்தைப் பிரயோகத்தின் மெய்யான அர்த்தத்தைத் தெரிந்து வைத்திருந்து இந்நூல்களை எழுதியிருக்கும் ஆசிரியர்களின் விசுவாசமும் எனக்கு மனநிறைவைத் தந்தது. வரலாற்று சீர்திருத்தவாதத்தின் ஐந்நூறாவது ஆண்டைக் கடந்து வந்திருக்கும் இக்காலத்தில் இனியாவது ‘வேதம் மட்டுமே’ என்று விஷயம் தெரியாமல் உளறிவராமல் அந்த வார்த்தைப் பிரயோகத்தின் உள்ளர்த்தத்தை அறிந்துகொள்ள சுவிசேஷ கிறிஸ்தவர்கள் முயலவேண்டும் என்பதே என் விருப்பம்.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 31 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

இறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)

நாம் ஒருபோதும் எந்தப் பெயரையும் வெறும் ‘லேபலாக’ பயன்படுத்தக்கூடாது. அதாவது வசதிக்காகவோ, சுயலாபத்திற்காகவோ, காரணங்கள் எதுவுமின்றியோ, பாப்திஸ்து, பிரெஸ்பிடீரியன், கல்வினிஸ்ட்டு, சீர்திருத்தவாதம் என்பவற்றையெல்லாம் எந்தவித ஆழ்ந்த இறையியல் புரிந்துணர்வோ, நம்பிக்கைகளோ இல்லாமல் பயன்படுத்திவருவது நம்மினத்தில் மிகச் சாதாரணமாக இருந்துவருகிறது. தமிழகத்தில் எனக்குப் பரிச்சயமான ஒரு சபைப்பிரிவு மேலைத்தேய நாட்டில் இயங்கி வரும் ஒருசபைப்பிரிவின் பெயரை, அது எந்த நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறது, ஏன் அந்தப் பெயரைச் சூட்டிக்கொண்டிருக்கிறது, அது வேதபூர்வமானதா, இல்லையா என்பதெதுவுமே தெரியாமலும், அறிந்துவைத்திராமலும் அந்தப் பெயரைச் சூட்டித் தன்னை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த மேலைத்தேய சபைப்பிரிவைத் திருப்திப்படுத்தி அவர்களிடம் வசதி பெறுவதை மட்டுமே நோக்கமாகக்கொண்டு அது இதைச் செய்துவருகிறது. இந்தப் பிரிவைப் பொறுத்தவரையில் அந்தப் பெயர் வசதிக்காகப் பயன்படுத்திக்கொள்ளுகிற வெறும் ‘லேபல்’ மட்டுமே.

சத்தியம் நமக்கு ‘லேபலாகி’விடக்கூடாது. என்றைக்கு அது நமக்கு வெறும் லேபலோ அன்றே ஆவியானவர் நம்மிடம் இல்லையென்றாகிவிடும். நான் விசுவாசிக்கின்ற சத்தியம் என்னுடைய ஆவிக்குரிய ஆழ்ந்த நம்பிக்கை; அதற்கு நான் அடிமை. உதாரணத்திற்கு, தேவன் ஒருவரே என்பதும், அவரில் மூன்று ஆள்தத்துவங்கள் உண்டு என்பதும், அம்மூன்று ஆள்தத்துவங்களும் ஒருவரே என்பதும் எனக்கு வெறும் பொருளற்ற வார்த்தைகளல்ல; அவை இறையாண்மையுள்ள கர்த்தரைப் பற்றிய அசைக்கமுடியாத வேத நம்பிக்கை. இதை மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியமோ கட்டாயமோ எனக்கில்லை. இதில் நம்பிக்கையில்லாதவர்களை நான் உதறித்தள்ளமாட்டேன்; அதேநேரம் அவர்களுடைய உறவுக்காக இதைத் தியாகம் செய்யவும் மாட்டேன். இத்தகைய ஆழ்ந்த உறுதியான சத்திய நம்பிக்கையின்மையே அநேக சபைப்பிரிவுகளையும், சபைத் தலைவர்களையும் லிபரல் கோட்பாடுகளைப் பின்பற்றவும், நியோ ஓர்த்தடொக்ஸி (Neo-Orthodoxy) நிலைப்பாட்டை ஏற்கவும் பின்தள்ளியிருக்கிறது.

ஆழ்ந்த சத்திய நம்பிக்கையின் அவசியம்

ஆங்கிலத்தில் Conviction என்றொரு வார்த்தை உண்டு. இதற்கு க்ரியா சொற்பொருள் அகராதி ‘தீர்க்கம்’ அல்லது ‘தீர்க்கமாக ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு’ என்று பொருள் தருகிறது. இதை ஆழமான தீவிர நம்பிக்கை என்றும் கூறலாம். இத்தகைய உறுதியான தீர்க்கமான நிலைப்பாடு சத்தியத்தைப் பொறுத்தவரையில் நம்மினத்தில் அநேகரிடம் இன்று இல்லை. இத்தகைய நிலைப்பாடு இல்லாதவர்களாக பிரசங்கிகளும் போதகர்களும் இருக்கமுடியாது. ஆனால், இந்த நிலைப்பாட்டைக் கொண்டிராதவர்களே பெரும்பாலும் சபைகளிலும், மேடைகளிலும் கர்த்தரின் பெயரில் செய்தியளித்து வருகிறார்கள். உறுதியான ஆழமான இறையியல் நம்பிக்கையைக் கொண்டிருப்பது ஊழியப்பிழைப்பு நடத்த உதவாது என்பது பொதுவாகவே அநேகமான ஊழியர்களுடைய எண்ணமாக இருக்கிறது. வெளிப்படையாக இப்படிச் சொல்லி வாழ்கிறவர்களே நம்மினத்தில் ஏராளமாக இருக்கிறார்கள்.

கிறிஸ்தவனுக்கு இருக்கவேண்டிய ஆழமான தீவிர வேத நம்பிக்கையைப் (Conviction) பற்றி ஒரு எழுத்தாளர் பின்வருமாறு விளக்குகிறார், “ஒரு காரியம் உண்மையானது என்று அதைப்பற்றிய உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருப்பதே இந்தத் தீர்க்கமான நிலைப்பாடு; இதற்குப் பொருள் வலுவான நம்பிக்கையைக் கொண்டிருத்தல். இன்னொரு வகையில் சொல்லப்போனால் இந்த வலுவான நம்பிக்கை நம்பிக்கையின்மைக்கும், சந்தேக மனநிலைக்கும் முற்றிலும் எதிர்மறையானது. ஆழமான நம்பிக்கை கொண்ட மனிதனாக (Man of conviction) ஒருவரை நாம் கருதும்போது, அவர் உறுதியான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவராகவும், தான் போகிற பாதையைத் தெளிவாக உணர்ந்திருக்கிறவராகவும் கருதுகிறோம். அந்த மனிதனின் தீர்க்கமான நம்பிக்கைகள் அவன் வாழும் விதத்தையும், சிந்தனையையும், பேச்சையும், போகிற பாதையையும் அடியோடு மாற்றி அமைத்திருப்பதைக் காண்கிறோம். உறுதியான வேதநம்பிக்கைகள் கொண்ட மனிதனாக ஒருவனை நாம் கருதுகிறபோது அவனுடைய நம்பிக்கைகள் வேதத்தில் இருந்து மட்டும் வெளிப்படுகிறதையும், அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் அவை பெருமாற்றங்களைக் கொண்டுவந்திருப்பதையும் குறிக்கிறோம்.” இத்தகைய தீர்க்கமான நம்பிக்கைகளைக் கொண்டிருக்க ஒருவன் சத்தியத்துக்கு கட்டுப்பட்டவனாகவும், தன்னுடைய வேதநம்பிக்கைகளை சரியாக வரையறுத்துக் கொண்டவனாகவும், அவற்றின்படி நடந்துசெல்லுவதற்கான தைரியத்தைக் கொண்டவனாகவும் இருக்கவேண்டும். (ரோமர் 4:18-22).

தீர்க்கமான உறுதியான வேத இறையியல் நம்பிக்கைகளைக் கொண்டிராத மனிதன் நல்ல பிரசங்கியாகவும், போதகனாகவும் இருக்கவழியில்லை. அத்தகைய மனிதன் சத்தியத்தில் தெளிவில்லாதவனாகவும், ஏராளமான முரண்பாடுகளைத் தன்னில் கொண்டவனாகவும் இருப்பான். அவன் நிலைதடுமாறுகிறவனாகவும், இரட்டை மனம் கொண்டவனாகவும் காணப்படுவான். இதைத்தானே நாடுபூறாவும் மேடை மேடையாகக் காண்கிறோம் என்பீர்கள், உண்மைதான். அதுவே நம்மினத்தைப் பிடித்திருக்கும் ஆவிக்குரிய பேராபத்து. திருச்சபை ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிற மனிதன் ஒருபோதும் தெளிவானதும் உறுதியானதுமான இறையியல் அடித்தளத்தை வாழ்க்கையில் கொண்டிராதவனாக இருக்கக்கூடாது; அவன் படிப்பறிவில்லாத கிராமத்து மக்களுக்குப் போதகனாக இருந்தாலும்கூட.

ஒரு போதகன் ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும் காலத்தில் தான் எதை விசுவாசிக்கிறேன் என்ற நம்பிக்கையில்லாதவனாக, எதை விசுவாசிக்க வேண்டும் என்பதைத் தேடியலைந்து கொண்டிருக்கும் இறையியல் நாடோடியாக (Theological nomad) இருக்கக்கூடாது. போதகனாக வருவதற்கு முன்பே இதிலெல்லாம் அவனுக்குத் தெளிவான, உறுதியான நம்பிக்கைகள் இருக்கவேண்டும். அதனால்தான் மேலைநாட்டில் குறைந்தளவு பல்கலைக்கழக பட்டம் இல்லாதவர்களை இறையியல் கல்விப் பயிற்சிக்கு அனுமதிக்கமாட்டார்கள். இதில் விதிவிலக்குகள் இருந்துவிடலாம். இருந்தாலும் இந்தப் பொதுவான விதிக்குக் காரணம் கல்வியறிவு பெற்றிருப்பவனுக்கே எழுத வாசிக்கத் தெரிந்திரிந்து நூற்றுக்கணக்கான ஆழமான இறையியல் நூல்களை நுண்னுணர்வோடு வாசிக்கவும், ஆராயவும் முடியும் என்பதுதான். (நம்மூர் பட்டங்களெல்லாம் பல் துலக்கவும் உதவாது.) எப்போதும் ஆரம்ப இறையியல் பயிற்சி ஒருவன் எதை விசுவாசிக்கவேண்டும் என்பதை அவனில் ஆழமாகப் பதியச்செய்வதாக இருக்கவேண்டும். அதுவே அவனுடைய ஊழியத்தில் அவனுக்கு எதிர்கால வழிகாட்டி. இதை ஆத்துமாக்களுக்கு வழங்கக்கூடியதாக திருச்சபைகள் இருக்கவேண்டும்.

கிறிஸ்துவின் சுவிசேஷத்தைத் தெளிவாகப் பிரசங்கிப்பதற்கு, பிரசங்கி அதில் தேர்ந்த ஞானத்தையும், ஆழமான நம்பிக்கையையும் கொண்டவனாக இருக்கவேண்டும். உதாரணத்திற்கு, வேதத்திற்கு முரணான ஆர்மீனியனிசப் போதனைகளை நம்புகிற ஒருவன் அத்தகைய நிலைப்பாடுள்ளதாகவே சுவிசேஷ செய்தியை அளிக்க முடியும். காலக்கூறு கோட்பாட்டை (dispensationalism) நம்புகிற ஒருவன் தான் இன்று திருச்சபை காலத்தில் (Church age) வாழவில்லை என்ற நிலைப்பாட்டோடு சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபட்டு வருவான். கெரிஸ்மெட்டிக் நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிற ஒரு மனிதன் அந்நிய பாஷையில் பேசாதவர்களெல்லாம் ஆவியானவரைத் தங்களில் கொண்டிருக்கவில்லை என்றும் அவர்கள் விசுவாசிகளாக இருக்கமுடியாது என்ற நிலைப்பாட்டோடு இருந்து வருவார்கள். தவறான இறையியல் நம்பிக்கைகள் தவறானவிதத்தில் வேதத்தை விளக்கவும், பிரசங்கிக்கவும் வைத்துவிடும், ஆத்துமாக்களை வஞ்சிக்கவும் வைத்துவிடும். காரை ஓட்ட ஆரம்பிப்பதற்கு முன்பே எங்குபோகப் போகிறோம் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும் இல்லையா? அதை ஓட்டிக்கொண்டிருக்கும்போது போகவேண்டிய இடத்தைப் பற்றி சிந்தித்துக்கொண்டோ, அதற்கான வழியைத் தேடிக்கொண்டோ இருப்பதில் இருக்கும் பெரும் சங்கடம் நமக்குத் தெரியாமலிருக்க முடியாது. இதுபோலத்தான் தீர்க்கமான உறுதியான வேத இறையியல் நம்பிக்கைகளைக் கொண்டிராமல் இருப்பதும், வாழ்வதும், ஊழியம் செய்வதும்.

இறையியல் கல்லூரிகள் என்ற பெயரில் நம்மினத்தில் இருப்பதெல்லாம் அங்கு போகிறவர்களை தவறான இறையியல் போக்கில் வழிநடத்துபவையாகவே இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை ஆணித்தரமாக சத்தியத்தை விளக்குகிற நிலைப்பாட்டைக் கொண்டிராமல் எந்தத் திருச்சபைப் பிரிவுக்கும் எதிரானதாக இல்லாத, எல்லோரையும் திருப்திப்படுத்துகிற  இறையியல் போதனைகளை வழங்குகிற நிலைப்பாட்டை எடுத்திருப்பதால் இவற்றில் தீர்க்கமான உறுதியான நம்பத்தகுந்த இறையியல் போதனைகளை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. இத்தகைய கல்லூரிகளில் டிகிரி வாங்கியிருப்பவர்களே பெரும்பாலும் நம்மினத்து ஊழியங்களில் ஈடுபட்டிருப்பதால் ஆழமான நம்பத்தகுந்த போதனைகள் இவர்களிடம் இல்லாமலிருக்கின்றன. இவர்கள் வழிநடத்தும் ஆத்துமாக்கள் பருந்தின் கையில் அகப்பட்ட புறாவின் நிலையிலேயே இருந்து வருவார்கள்.

வேதம் மட்டுமே சத்தியமானது; அதன் போதனைகள் தவறற்றவை, அது மட்டுமே பூரணமான அதிகாரம் கொண்டது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சபைப்பிரிவுகளை சந்தோஷப்படுத்தும் நோக்கில் இல்லாமல் வேதபோதனைகளைக் கொடுக்கும் இறையியல் கல்லூரிகள் நம்மினத்தில் இல்லை. சமீபத்தில் ஒரு இந்திய இறையியல் கல்லூரி பேராசிரியரை சந்தித்தேன். இளைஞரான அவர் தான் எழுதப்போகும் இரண்டாவது பி. எச். டீ பட்டத்துக்கான பொருளை எனக்கு விளக்க விரும்பினார். எகிப்து நாட்டுக்கும் திராவிடத் தமிழகத்துக்கும் எத்தகைய தொடர்பு இருந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்வதே அவருடைய நோக்கமாக இருந்தது. இது உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டுக்கு வேண்டுமானால் பயன்படும்; ஆவிக்குரிய திருச்சபைக்கு எந்தப்பயனையும் அளிக்கப்போவதில்லை என்று கூறி அவரை வேதசத்தியங்களை கருப்பொருளாகக் கொண்டு ஆய்வில் ஈடுபடும்படி அறிவுரை கொடுத்தேன். லிபரலிசம் எந்தளவுக்கு நம்மினத்து இறையியல் கல்லூரிகளைப் பாதித்து அங்கு போகிறவர்களை ஆத்மீக அழிவை நோக்கி வழிநடத்துகின்றன என்ற உணர்வுகூட நம்மினத்து கிறிஸ்தவத்தில் இல்லாமலிருக்கின்ற போக்கு வருத்தத்தைத் தருவதாக இருக்கிறது.

வேதமும் திருச்சபை வரலாறும் சுட்டும் உதாரணங்கள்

தீர்க்கமான உறுதியான வேதநம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்கு எண்ணிக்கையற்ற உதாரணங்களை வேதத்திலும், சபை வரலாற்றிலும் காணலாம். ஆண்டவர் இயேசு தான் வாழ்ந்த சமுதாயத்துக்கும், யூத மதத்துக்கும் தலை சாய்த்து நடக்காமல் தன் பிதா தனக்கு அளித்த பணியை நிறைவேற்றுவதில் மட்டுமே உறுதியாக இருந்தார். அவருடைய மலைப்பிரசங்கம் தீர்க்கமான ஆணித்தரமான வேத நம்பிக்கைகளை தெளிவாக ஆத்துமாக்கள் முன்வைக்கிறது. அதில் சமய சமரசத்தையோ, அடக்கி வாசிக்கின்ற அசிங்கப் பாணியையோ நாம் காண வழியில்லை. யூதமதமும், பரிசேயர்களும், சதுசேயர்களும், ஆலய நிர்வாகிகளும், ரோமர்களும் என்ன நினைப்பார்கள் என்ற கவலையெல்லாம் இல்லாமல் சத்தியத்தை சத்தியமாக தலைநிமிர்ந்து பிரசங்கித்த தேவகுமாரனை நாம் கிறிஸ்துவில் காண்கிறோம். சமயசமரசம் செய்ய எண்ணியிருந்தாலோ, சத்தியத்தை தோசையைத் திருப்பிப்போடுவதைப்போல திருப்பிப்போட்டுப் பிரசங்கிக்க நினைத்திருந்தோலோ, எந்த பயமும் இல்லாமல் யூதர்கள் மத்தியில் அவர் ‘பிதாவும் நானும் ஒருவரே’ என்றும், ‘ஆபிரகாமுக்கு முன்பே நானிருந்தேன்’ என்றும் வைராக்கியத்தோடு பேசியிருப்பாரா? அப்படிச் சொன்னதனால்தானே அவர்கள் அவரைக் கல்லெறிந்து கொல்லத் துடித்தார்கள். சிறுவயது முதலே இயேசு தன் மானுடத்தில் வேதநம்பிக்கைகளைத் தீர்க்கமாக, ஆழமாகக் கொண்டிருந்தைப் பார்க்கிறோம்.

இதேபோலத்தான் ஸ்தேவானையும், அப்போஸ்தலன் பவுலையும், பேதுருவையும், தீமோத்தேயுவையும், தீத்துவையும் காண்கிறோம். இவர்களெல்லோரும் இயேசுவைப்போலத் தீர்க்கமாக வேதநம்பிக்கைகளைத் தங்களுக்குள் வளர்த்துக்கொண்டு மனச்சாட்சியை சுத்தமாக வைத்திருந்து சத்தியத்தைப் பிரசங்கித்தும் போதித்தும் வந்திருக்கிறார்கள். இவர்களிடம் எந்தவிதமான சத்தியத் திருகுதாளமும் இருந்தாக நாம் வேதத்தில் வாசிப்பதில்லையே. அப்போஸ்தலர் 24:16ல் பவுல் சொல்லுகிறார், ‘இதனால் நான் தேவனுக்கும் மனுஷனுக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசைப்படுகிறேன்.’ இதற்குக் காரணம் தனக்கு சத்தியத்தில் இருந்த தீர்க்கமான நம்பிக்கை என்பதை இதற்கு முன்வரும் வசனங்களில் பவுல் விளக்கியிருக்கிறார். சத்தியத்தில் தெளிவில்லாமல் வேதம் தெரிந்ததுபோல் போலியாக நடித்துப் பிரசங்கிக்கிறவர்களும், வயிற்றுப்பிழைப்புக்காக சத்தியத்தைத் தள்ளிவைத்துவிட்டு பொய்யைப் போதித்து வருகிறவர்களும் கறைபடிந்த மனச்சாட்சியோடும், தங்களைக் குற்றப்படுத்தும் மனச்சாட்சியோடும் கர்த்தருக்கு முன்பும், ஆத்துமாக்களுக்கு முன்பும் ஊழிய நாடகமாடி வருகிறார்கள்.

மார்டின் லூத்தர்

வேதம் மட்டுமல்லாமல் சபை வரலாறும் நமக்கு எண்ணற்ற தீர்க்கமான வேதநம்பிக்கைகளைக் கொண்ட ஆவிக்குரிய மனிதர்களை இனங்காட்டுகிறது. சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தர் இதற்கு பேருதாரணமாக இருந்தார். அதற்குக் காரணம் அவருடைய தீர்க்கமான வேத நம்பிக்கைகளை அவர் மிகவும் கடுமையான உயிர்ப்போராட்டத்தின் மத்தியில் வெளிப்படுத்த நேர்ந்ததுதான். கத்தோலிக்க போப்பும் அவரைச் சார்ந்தவர்களும், நாட்டரசனும் கத்தோலிக்க மதத்திற்கெதிரான 95 காரணங்களை அவர் எழுதியதற்கான காரணத்தை விளக்கும்படி ஒரு கூட்டத்திற்கு அவரை வரவழைத்து, அந்தக் கூட்டத்தில் அவருடைய காரணங்களை ஏற்றுக்கொள்ளாமல் தான் எழுதியதனைத்தையும் மறுதலித்து கத்தோலிக்க மதத்திற்கு விசுவாசமாக இருப்பேன் என்று சொல்லச் சொன்னபோது, ‘என் மனச்சாட்டி வேதத்திற்குக் கட்டுப்பட்டது, என் மனச்சாட்சிக்கு எதிராக என்னால் நடக்க முடியாது’ என்று ஆணித்தரமாக உயிர்ப்பயமில்லாமல் அனைத்து எதிரிகள் முன்பும் மார்டின் லூத்தர் சொன்னதை எண்ணிப்பாருங்கள். இதை ஆழமான உறுதியான வேதநம்பிக்கைகளைக் கொண்டிருக்கும் ஒரு மனிதனால் மட்டுமே செய்யமுடியும். இத்தகைய அசைக்கமுடியாத மெய்யான வேதநம்பிக்கை கொண்டிருக்கும் தீர்க்கமான மனிதர்களை நம்மினத்தில் எங்கு காணமுடிகிறது. விட்டால் இயேசுவையே விற்றுவிடத் தயாராக இருக்கின்ற போலிகள் நிரம்பியிருக்கும் நாடாக அல்லவா நம்நாடிருக்கிறது. 16ம் நூற்றாண்டு சீர்திருத்தத்தை நினைவுகூருகிற விசேஷ கூட்டங்கள் நடத்துகிற நம்மினத்து திருச்சபைகள் அதைச் செய்வதற்கு தங்களுக்கு என்ன தகுதியிருக்கிறது என்பதை ஒருதடவை நினைத்துப் பார்ப்பது நல்லது. வயிற்றுப்பிழைப்புக்கு சத்தியத்தை விற்று வாழ்க்கை நடத்துகிறவர்கள் எங்கே, மார்டின் லூத்தர் எங்கே?

சார்ள்ஸ் ஸ்பர்ஜன்

திருச்சபை வரலாற்றில் சீர்திருத்த பாப்திஸ்து பிரசங்கியும் போதகருமான ஸ்பர்ஜனை எண்ணிப்பார்க்காமல் இருக்கமுடியாது. தன் காலத்தில் பாப்திஸ்து யூனியன் வேத நம்பிக்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவர எத்தனித்து, விஞ்ஞானத்தின் அடிப்படையில் வேதவசனங்களை ஆய்வு செய்து நிரூபிக்கும் எத்தனிப்பில் ஈடுபாடு காட்டியபோது வரப்போகின்ற ஆபத்தைத் துல்லியமாக புரிந்துகொண்டிருந்த ஸ்பர்ஜன் அதை பாப்திஸ்து யூனியனுக்கு விளக்க அவர்கள் அதைப் புறந்தள்ளி எள்ளிநகைத்தபோது, தனியொருவராக தன்னுடைய திருச்சபையை பாப்திஸ்து யூனியனில் இருந்து விலக்கி தானும் தன் சபையும் எதை விசுவாசிக்கிறோம் என்பதை சந்தேகமற அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக 1689 விசுவாச அறிக்கையை மறுபடியும் பதிப்பித்து வேதத்திற்கும், அதற்கும் மட்டுமே அடிபணிவோம் என்று பகிரங்கமாக பறைசாற்றித் தான் தீர்க்கமான ஆணித்தரமான வேதநம்பிக்கைகள் கொண்டவன் (Man of biblical conviction) என்பதை ஸ்பர்ஜன் அனைவரும் அறிந்துகொள்ளச் செய்தார். சுயலாபத்தில் மட்டும் அக்கறைகொண்டவராக இருந்திருந்தாலோ அல்லது பாப்திஸ்து யூனியனோடு ஒத்துப்போய் சத்தியம் பெரிதில்லை என்று எண்ணியிருந்தாலோ ஸ்பர்ஜன் இப்படி நடந்திருந்திருப்பாரா? ஆழமான, ஆணித்தரமான வேதநம்பிக்கையல்லவா அவரை இப்படி நடந்துகொள்ள வைத்தது.

ஆழமான சத்திய நம்பிக்கைக்கு என்ன நடந்தது?

நமக்கு சத்தியம் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்; அது பற்றிய தீர்க்கமான அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும். உங்களுடைய நம்பிக்கைகள் சத்தியத்தின் அடிப்படையில் அமைந்திராவிட்டால் அவற்றால் எந்தப் பயனும் இல்லை. ஞானஸ்நானம் எடுப்பதன் மூலமோ அல்லது உணர்ச்சிவசப்பட்டு ஒரு கூட்டத்தில் கிறிஸ்துவுக்காக தீர்மானம் எடுத்ததன் மூலமோ கிறிஸ்துவை விசுவாசித்திருக்கிறேன் என்று ஒருவர் நம்பிக்கொண்டிருந்தால் விசுவாசத்தைப் பற்றிய அவருடைய இறையியல் நம்பிக்கை அடிப்படையிலேயே தவறுதலானது என்று அர்த்தம். தவறான அந்த நம்பிக்கை அவரில் உறுதியாக இருந்தாலும் அதில் எந்தப் பயனும் இல்லை; ஏனெனில் அவரிடம் கிறிஸ்தவ விசுவாசம் உண்மையிலேயே இல்லை. இதிலிருந்து இறையியல் தவறு எத்தனை ஆபத்தானது என்பதை புரிந்துகொள்ளுவது நல்லது. சத்தியம் தொடர்பான எதிலும் நாம் தவறான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கக்கூடாது; அவை பற்றிய அரைகுறை அறிவும் அடியோடு உதவாது. பெரியவர் ஸ்பர்ஜன் ஒரு தடவை சொன்ன வார்த்தைகளை இங்கே நினைவுகூருவது பொருத்தமாயிருக்கும். அவர் சொன்னார், ‘சரியானதற்கும், முற்றிலும் தவறானதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை விளக்குமட்டுமல்ல நுணுக்கமான புரிந்துகொள்ளுதல் (Dicernment); சரியானதற்கும், சரியானதைப்போலத் தோற்றமளிப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை விளக்குவதே நுணுக்கமான புரிந்துகொள்ளுதல்.’ சரியானதைப்போலத் தோற்றமளிக்கும் போலிப்போதனைகள் இன்று இறையியல் போதனைகளைப் பொறுத்தவரையில் பரவலாகவே உலாவி வருகின்றன.

சத்தியம் பற்றிய சத்தியமான உண்மைகள் ஆரம்பக் கிறிஸ்தவனுக்கு மட்டுமல்ல, முதிர்ந்த கிறிஸ்தவனுக்கும் மிக அவசியமானது. அதனால்தான் சீர்திருத்தவாதிகள் சத்தியத்தை வினாவிடைப்போதனைகளாக சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்குமாக எழுதி வெளியிட்டார்கள். சிறுவர்களில் இருந்து பெரியவர்கள்வரை சத்தியத்தை சத்தியமாக ஆரம்பத்தில் இருந்தே அறிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை அவர்கள் ஆணித்தரமாக உணர்ந்திருந்தார்கள். வினாவிடைப் போதனைகள் சத்தியத்தை அப்பட்டமாக துல்லியமாக நேரடியாக விளக்குபவை. அவற்றில் குளருபடிகளுக்கோ, மலுப்பல்களுக்கோ இடமில்லை. அவற்றை வாசித்து மனதிலிருத்திக் கொள்ளும்போது சத்தியத்தால் நம் மனம் நிரம்புகிறது. இதை உணர்ந்ததால்தான் இங்கிலாந்தில் ரிச்சட் பெக்ஸ்டர் தான் பணிபுரிந்த கிடர்மின்ஸ்டர் ஊரில் வாழ்ந்த அத்தனை வீட்டாருக்கும் வினாவிடைப்போதனையில் பயிற்சியளித்திருந்தார். 16ம் நூற்றாண்டில் ஹாலந்து சீர்திருத்த சபைகள் ஆர்மீனியனிச போதனைகளுக்கு எதிராக சினொட் ஓவ் டோர்ட் என்ற தெளிவான அறிக்கையை வேத அடிப்படையில் தொகுத்து வெளியிட்டு திருச்சபைகளுக்கு சத்திய பாதுகாப்பளித்தன. பதினேழாம் நூற்றாண்டில் பியூரிட்டன் பெரியவர்கள் விசுவாச அறிக்கைகளை எழுதி வெளியிட்டனர். இவை நாம் விசுவாசிக்க வேண்டிய வேத சத்தியங்களை முறைப்படுத்தி தொகுத்து வெளிவந்தன. சத்தியம் பாதுகாக்கப்படவும், போலிப்போதனைகளைத் தவிர்த்துக்கொள்ளவுமே இவை வெளியிடப்பட்டன. இவற்றை ஆழமாக விசுவாசித்து, போதித்து திருச்சபைகளை வளர்க்கும்போது அங்கே இறையியல் பச்சோந்தித்தனத்திற்கு இடமிருக்காது. நம்மினத்தில் இன்று திரித்துவம் பற்றிய அடிப்படை சத்தியத்தை அறியாமல் பெரும்பாலான போதகர்களும்,  விசுவாசிகளும் இருந்து வருகிறார்கள். இவர்கள் திரித்துவ சத்தியத்தை அறியாமல் திரித்துவ தேவனை எப்படி வழிபட்டு வாழ்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இன்று ஓரளவுக்கு சத்தியத்தைத் அறிந்துவைத்திருக்கின்ற பலர் சத்தியத்தில் தெளிவான ஆழமான நம்பிக்கையில்லாதவர்களாக (lacking deep conviction) இருக்கிறார்கள். இதுவும் ஆபத்து. இவர்களே சத்தியம் தெரிந்திருந்தும் அதன்படி வாழாது உலகப்பிரகாரமாக வாழ்கிறவர்கள். இதன் ஆபத்தை இவர்கள் உணர்வதில்லை. இவர்களுக்கு சத்தியம் மனதளவில் மட்டுமே நிற்கிறது. அவர்களுடைய மனச்சாட்சியையும், வாழ்க்கையையும் அது பாதிக்கவில்லை. சத்தியம் தெரிந்திருந்தும் அதுபற்றிய தீர்க்கமான நம்பிக்கை இல்லாமல் வாழ்கின்றவன் தனக்கும் பிறருக்கும் ஆபத்தானவன். அவனால் அறிந்துவைத்திருக்கின்ற எந்த சத்தியத்தையும் தீர்க்கமான நம்பிக்கையோடு ஆணித்தரமாக அறிக்கையிடவோ, விளக்கவோ, போதிக்கவோ முடியாது. இதைவிட சத்தியத்தை அறிந்திராமல் இருப்பது மேல். இத்தகையவர்களே சத்திய முரண்பாட்டுக்கு இடங்கொடுத்து மலுப்பல் ஆசாமிகளாக, இறையியல் பச்சோந்திகளாக (Theological Chameleons) இருந்துவருவார்கள். முரண்பாட்டுடன் வாழ்வதும், அதன் அடிப்படையில் எதையும் செய்வதும் இவர்களுக்கு கைவந்த கலையாகிவிடுகிறது. இத்தகையவர்களை யாக்கோபு இரட்டை மனம் கொண்டவர்களாகக் கணிக்கிறார். இவர்கள் சத்திய உறுதியற்றவர்கள்; இவர்கள் சத்தியத்துக்கு தூணாக இருக்க வழியில்லை.

பிரசங்கத்தைப் பற்றி விளக்குகின்ற டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ், ‘தத்துவரீதியில் நெருப்பாகப் பிரசங்கிப்பதே பிரசங்கம். நெருப்பாக இருக்கும் ஒரு மனிதன் மூலம் இறையியல் விளக்கங்கள் பாய்ந்து வருவதே பிரசங்கம். இதைச் செய்வதற்கு அவனுக்கு சத்தியம் தெளிவாகத் தெரிந்திருப்பதோடு அதை அவன் அனுபவித்தவனாகவும் இருக்கவேண்டும். நான் மறுபடியும் சொல்லுகிறேன், சத்தியத்தை அனுபவிக்காமல் அதோடு எந்தத் தொடர்பும் இல்லாதவிதத்தில் விளக்குகிற மனிதன் பிரசங்க மேடைப்பக்கம் வருவதற்குத் தகுதியில்லாதவன்; அவனைப் பிரசங்க மேடையில் ஏறவிடக்கூடாது’ என்கிறார்.

இன்று நம்மினத்தில் சீர்திருத்த சத்தியத்தை அறிந்துகொள்ள ஆர்வம் பலருக்கிருக்கிறது;  அதிகரித்து வருகிறார்கள். இருந்தாலும் இவர்களில் பலர் அரைகுறை அறிவோடு அதன் முழுத் தாற்பரியமும் தெரியாமல் இருந்துவருகிறார்கள். அநேகர் இதை சுயலாபத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள். சீர்திருத்தவாதத்தின் அரிச்சுவடி தெரியாதவர்களெல்லாம் அதன் 500வது ஆண்டுநிறைவைக் கொண்டாடுவது சிரிப்பூட்டுகிற காரியமல்லவா? கடந்தவாரம் என் நண்பரொருவருக்கு அத்தகையதொரு கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி அழைப்பு வந்தது. அந்தக் கூட்டம் பற்றி அவர் மேலும் கேள்விகள் கேட்டபோது அது ஒரு பிரஸ்பிடீரியன் சபை நடத்தும் கூட்டம் என்றும் அதில் பேசப்போகிறவர் ஒரு ரோமன் கத்தோலிக்க குரு என்றும் அறிந்து அவர் அதிர்ந்து போனார்.

தேவை இன்று ஆழ்ந்த சத்திய நம்பிக்கை

சீர்திருத்தவாதம் வெறும் ‘லேபலாகப்’ பயன்படுத்தும் வார்த்தைப் பிரயோகமல்ல. அதன் வரலாற்றையும், வரலாற்று இறையியலில் அது வகிக்கும் பங்கையும், வேத இறையியலோடு அதற்கிருக்கும் பிரிக்கமுடியாத தொடர்பையும், திருச்சபைக் கோட்பாட்டில் அது வகிக்கும் அசைக்க முடியாத இடத்தையும், போதக இறையியலில் அது ஏற்படுத்துகின்ற அனுபவபூர்வமான மாற்றங்களையும் சபைவாழ்க்கையில் அறிந்து, உணர்ந்து அனுபவித்து இருதயத்திலும், வாழ்க்கையிலும் மாற்றத்தை அடையாதவர்களுக்கு அது வெறும் லேபலாக மட்டுமே இருக்கமுடியும்.

சீர்திருத்த இறையியல் இருதயத்தோடு சம்பந்தப்பட்ட, அதில் ஆவிக்குரிய மாற்றத்தை உண்டாக்குகின்ற தீர்க்கமான சத்தியம். அந்த சத்தியத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டுள்ள ஆவிக்குரிய மனிதனை அன்றாடம் மாற்றி பரலோகத்தை நோக்கி நம்பிக்கையோடு நடக்கவைக்கின்ற அனுபவ இறையியல் அது. சீர்திருத்த இறையியல் அனுபவபூர்வமாக ஒருவனில் ஏற்படுத்துகின்ற தாக்கம் அவனை அன்றாடம் கர்த்தர் முன் மண்டியிடச் செய்யும். தாழ்மையோடும், தேவபயத்தோடும் கிறிஸ்துவுக்கு ஒப்பானவனாக மாறும்படியாக அவனை மாற்றுகின்ற இறையியல் சத்தியம் அது. தாழ்மை அவனுக்கு நாடகக்காரன் பூசும் அரிதாரம் அல்ல; கர்த்தரின் சர்வ வல்லமைக்கு முன் அவன் தன்நிலை உணரும் குணாதிசயம். சீர்திருத்த இறையியல் நம்பிக்கைகளைக் கொண்டிருந்து அனுபவத்தில் அதை ருசிபார்த்து வருகின்ற மனிதன் வேறெவரையும்விட தன்னுடைய இருதயத்தின் பலவீனத்தையும், பாவத்தையும் அதிகமாக உணர்ந்திருப்பான். அத்தகைய பாவஉணர்வினால் அவன் ஆவியால் வழிநடத்தப்பட்டு அன்றாடம் தன் மாம்சத்தின் பாவத்தையும் பலவீனத்தையும் அடித்து அழித்து வாழ்கிறவனாக இருப்பான். அத்தோடு அவன் இறையாண்மையுள்ள கர்த்தரின் மகிமைக்காக மட்டுமே எதையும் செய்பவனாக, அவருடைய வார்த்தைகளை மட்டுமே பின்பற்றி வாழ்பவனாக இருப்பான். இதன் காரணமாக சீர்திருத்த விசுவாசம் வாழ்க்கை அனுபவத்தோடு ஆழ்ந்த தொடர்புடைய இறையியலாக இருக்கின்றது. இந்த உலகத்தில் பரலோக அனுபவத்தை அடையும்படியாக முழுமையாக வாழ்வில் அனுபவபூர்வமாக பின்பற்ற வேண்டிய வேதசத்தியம் அது. இத்தகைய அனுபவமாற்றத்தைக் கொண்டுவரும் இறையியலை வாழ்க்கையில் கொண்டிராத எவனும் வெறும் ‘காகித சீர்திருத்தவாதி’ (Paper reformer) மட்டுமே. அவன் எசேக்கியேல் 37 விளக்கும் ‘உலர்ந்த எழும்பு.’ அப்படிப்பட்டவன் சீர்திருத்த இறையியலை ஒருபோதும் அறிந்துணர்ந்து புரிந்துகொண்டிராதது மட்டுமல்ல சுயலாபத்துக்காக அதைப் பயன்படுத்துகிற மாயக்காரன் (மாற்கு 7:7). அவன் ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய். அத்தகையவன் மெய்யான தேவஊழியனாக இருக்க வழியில்லை.

சீர்திருத்த சத்தியத்தை அறிந்து அதில் வளர ஆசைப்படுகிறீர்களா? முதலில் நீங்கள் மெய்யான மனந்திரும்புதலையும், கிறிஸ்துவில் வைக்கவேண்டிய விசுவாசத்தையும் கொண்டிருக்கவேண்டும். மெய்யான விசுவாசமில்லாத இருதயத்தில் எந்த சத்தியத்திற்கும் இடமிருக்க முடியாது. இதை வாசித்து நீங்கள் ஆச்சரியப்படத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும், நம்மினத்தில் போலிக்கிறிஸ்தவம் வைரஸ்போல பரவியிருப்பதால் அநேகர் மெய்யான விசுவாசமில்லாமல் விசுவாசிகள் என்று தங்களைத் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித பரிசுத்த அடையாளங்களும், நடவடிக்கைகளும் இல்லாதிருப்பதே இவர்களுடைய வாழ்க்கையில் விசுவாசமில்லை என்பதற்கு முக்கிய அடையாளம். மெய்யான விசுவாசமே ஒருவனை பரிசுத்தப்படுத்தி பரிசுத்தமாக்குதலில் ஈடுபாட்டோடு ஈடுபடவைக்கிறது.

அடுத்ததாக, சீர்திருத்த விசுவாசத்தைப் பொறுமையோடு ஆராய்ந்து முழுமையாக கற்றுக்கொள்ள நீங்கள் உழைக்கவேண்டும். அதுபற்றி நீங்கள் அதிகம் வாசிக்க வேண்டும்; வாசித்தவற்றை சிந்தித்துப் பார்க்கவேண்டும். வாசிப்பு என்கிறபோது எந்தளவுக்கு அவசியமானவற்றை வாசிக்கலாமோ அதேபோல் தவிர்க்க வேண்டியவற்றையும் தயவு தாட்சண்யமில்லாமல் தவிர்க்க வேண்டும். சீர்திருத்த சத்தியங்கள் உங்கள் இருதயத்தில் ஆழமாகப் பதிந்து மனச்சாட்சியின் குரலாக அது மாறிவிடவேண்டும். அவற்றில் என்றும் அகன்றுவிடாத ஆழந்த நம்பிக்கை இருக்கவேண்டும். சீர்திருத்த இறையியல் போதனைகள் அறிவோடு மட்டும் சம்பந்தப்பட்டதாக இல்லாமல் அனுபவ இறையியலாக இருப்பதால் உங்கள் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளும் அதனால் பாதிக்கப்பட்டு தேவ பயத்தையும் பக்தி வைராக்கியத்தையும் அது உங்களில் உண்டாக்க வேண்டும்.

சீர்திருத்த விசுவாசம் திருச்சபைக்கு கொடுக்கும் மதிப்பையும், மரியாதையையும் வெறெதிலும் பார்க்க முடியாது. சபை வாழ்க்கை இன்று நம்மினத்தில் பெட்டிக்கடை வியாபாரமாக இருக்கிறது. ஆராதனை உணர்ச்சிகளுக்கு தூபமூட்டும் வெறும் சுய ஆராதனை மட்டுமே. பிரசங்கத்தைப்பற்றிச் சொல்லத்தேவையில்லை. இந்நிலையில் சீர்திருத்த விசுவாசத்தில் ஆர்வம் காட்டுகிறவர்கள் தனி ஊழியம் செய்யாமலும், போலி சபைகளுக்கு அடிமையாகாமலும், நல்ல சபைகளை நாடி சபை வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும். அத்தகைய நல்ல சபைகள் நம்மினத்தில் வெகுசில என்பதும் எனக்குத் தெரியாமலில்லை. அத்தோடு நம்மினத்து பண்பாட்டு அசிங்கங்களை மனதிலும் வாழ்க்கையிலும் இருந்து அகற்றி குடும்பத்தை வேதபூர்வமாக கர்த்தரின் பாதையில் நடத்தவேண்டும். வேதவாசிப்பிலும், ஜெபத்திலும் உறுதியாகத் தரித்திருந்து சபையைக் கட்டுவேன் என்று சொன்ன சபை நாயகனாகிய நம்ஆண்டவர் நல்ல சபைகளை நம்மினத்தில் நிறுவ நாம் ஜெபிக்கவேண்டும். இதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் நிதர்சனமாக நிகழ்கிறபோதே நீங்களும் வருங்காலத்தில் பத்தோடு பதினொன்றாக, இறையியல் பச்சோந்தியாக மாறிவிடாமலிருக்க முடியும்.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 30 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

புத்தகங்களும் வேதப்பிரசங்கப் பஞ்சமும்

புத்தகங்கள்

ஜோன் கல்வினைப் பற்றிய நூல் இப்போது விற்பனைக்கு வந்துவிட்டது. அமேசான் மூலமும், தமிழக விநியோகஸ்தர்கள் மூலமும் நூலைப்பெற்றுக்கொள்ளலாம். இன்னும் இரு புதிய நூல்களை முடிப்பதற்கு முயன்றுகொண்டிருக்கிறேன். எப்போது மூன்றாவது பாகம் திருச்சபை வரலாறு வரும் என்று கேட்கிறவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. முடிந்தவரை இருக்கும் நேரத்தைப் பயன்படுத்தி எழுதிக்கொண்டிருக்கிறேன். அதையும் எழுதி வெளியிட கர்த்தர் வழிவகுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வாசிப்பதற்காக நான் முன்பதிவில் ஆர்டர் செய்திருந்த சில நூல்கள் சமீபத்தில் கூரியரில் வந்து கிடைத்தன. ‘கிறிஸ்தவ சபத்து’ (Christian Sabbath) பற்றிய அதாவது ஓய்வு நாளைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி ஆங்கிலத்தில் 400 பக்கங்களுக்கு மேல் அருமையான ஒரு நூலை மறைந்த போதகரும், இறையியல் வல்லுனருமான ரொபட் மார்டின் வெளியிட்டிருக்கிறார். இந்த நூல் எளிமையான ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஓய்வுநாளைக் கவனத்தோடு பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை ஆணித்தரமான வாதங்களோடும் ஆதங்கத்தோடும் வாசகர்கள் முன் வைக்கிறது. ஓய்வு நாளைப் பின்பற்ற வேண்டும் என்ற சிந்தனையே இல்லாத இனமாக கிறிஸ்தவ தமிழினம் இருந்து வருகிறதைப் பார்த்து வருந்தத்தான் முடிகிறது. என்னைப் பொறுத்தவரையில் பழைய ஏற்பாட்டைப் பற்றிய அடிப்படையில் தவறான மனப்பான்மையும், கீழ்ப்படிவின்மையும், ஆணவப்போக்குமே பலரை இந்நிலையில் வைத்திருக்கிறது. பரிசுத்தமாக வாழ்வது என்பதற்கு வேதத்திலில்லாத விளக்கங்களைக் கொடுத்து வருகிறவர்களிடம் ஓய்வு நாளைப் பரிசுத்தத்தோடு பின்பற்றுகிற வழிமுறையை எங்கே காணமுடியும்? இந்த விஷயத்தில் தமிழினத்துப் போதகர்கள் மிகவும் பின்தங்கிப்போயிருக்கிறார்கள். மற்றவர்களை வழிநடத்தவேண்டிய அவர்களிடமே ஓய்வு நாள் அனுசரிப்பை எதிர்பார்க்க முடியாமல் இருக்கும்போது சாதாரண மக்களிடம் அதை எப்படிக் காணமுடியும்? இருந்தபோதும் ஓய்வு நாளைப்பற்றிய அக்கறையிருந்து முடிந்தவரை ஆத்துமாக்களுக்கு அதுபற்றி விளக்கிப் போதித்துப் பின்பற்றி வரும் ஒருசில போதகர்கள் நம்மினத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து நான் உள்ளுக்குள் மகிழ்கிறேன். அவர்களும் அவர்கள் பணிசெய்து வரும் திருச்சபையும் நிச்சயம் ஆசீர்வதிக்கப்படும்.

ஓய்வு நாளைப் பின்பற்றுகிற வழிமுறை இல்லாத சமுதாயத்தில் கிறிஸ்தவத்தைக் காணமுடியாது என்று ஜே. சி. ரைல் அடித்துச் சொல்லியிருக்கிறார். ‘ஓய்வு நாளை சட்டரீதியாக இல்லாமலாக்குகிற நாள் வருமானால் பிசாசின் ராஜ்யமே இந்த உலகத்தில் முன்னோக்கி வளரும். அது அவிசுவாசிகளுக்கு ஆனந்தத்தைத் தரும்; ஆனால் கர்த்தரை அவமதிக்கும் செயல்’ என்றார் ரைல். அந்தளவுக்கு அந்த தேவமனிதரில் ஓய்வு நாள் பற்றிய போதனை ஊறிப்போயிருந்திருக்கிறது. ஓய்வு நாளுக்கு வாழ்க்கையில் ஒருவித மதிப்பும் தராமல் ரைலின் எழுத்துக்களில் மட்டும் ஆர்வம் காட்டுவதுபோல் பாசாங்கு செய்கிறவர்களுக்கு ரைலின் இந்த வார்த்தைகள் பிடிக்கப்போவதில்லை. சார்ள்ஸ் ஸ்பர்ஜனும், ஜோன் ஓவனும், ஜோன் பனியனும், இன்னும் எத்தனையோ தேவ மனிதர்களும் ஓய்வு நாளை கிறிஸ்தவத்தின் அடித்தளமாக விளக்கியிருக்கிறார்கள். விஷயம் தெரியாமலா விசுவாச அறிக்கைகளும், வினாவிடை நூல்களும் ஓய்வு நாளை அனுசரிப்பது பற்றிய விளக்கங்களைத் தந்திருக்கின்றன. எல்லா நாட்களும் ஒன்றுதான் என்று விதண்டாவாதம் செய்து இருதயம் கடினப்பட்டுப்போய் மெல்லிய தோலளவு கிறிஸ்தவர்களாக இருந்து வருகிறவர்களுக்கு இதை எப்படிப்புரிய வைப்பது? ஓய்வு நாளைப் பரிசுத்தத்தோடு அனுசரித்து வரும் போதகர்களையும், குடும்பங்களையும் கொண்டிருக்கும் திருச்சபைகளே ஆசிர்வதிக்கப்பட்ட சபைகள். அந்த சபைகள் மத்தியிலேயே பரிசுத்த ஆவியானவரின் மெய்யான நடமாட்டத்தை நிச்சயம் காணமுடியும்.

அல்பர்ட் என். மார்டின் அவர்கள் எழுதி வெளிவந்திருக்கும் இன்னுமொரு ஆங்கில நூல், ‘உங்கள் சரீரத்தில் கர்த்தரை மகிமைப்படுத்துதல்’ (Glorifying God in your body). இதற்கு ‘சரீரம் உங்களுடையதா, கர்த்தருடையதா?’ என்ற உப தலைப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. பரிசுத்த வாழ்க்கைக்கும் சரீரத்திற்கும் என்ன தொடர்பு என்பதைப்பற்றி நம்மினத்தில் விளக்கமுள்ளவர்களாக இருப்பவர்கள் மிகவும் குறைவு. சுவரில்லாமல் சித்திரம்வரைய முடியாது என்ற பழமொழி இருப்பதை மட்டும் நாம் அறிந்துவைத்திருக்கிறோம். ஆனால், சரீரமாகிய சுவரில்லாமல் பரிசுத்தமாக வாழ வழியில்லை என்பது மட்டும் நமக்குப் புரியாமலிருக்கிறது. இந்த மரணத்துக்கேதுவான சரீரத்திலேயே நாம் பரிசுத்தமாக இந்த உலகத்தில் வாழ்ந்து முடிக்கவேண்டிய கடமையைக் கொண்டிருக்கிறோம். மறுபிறப்பை அடைந்திருக்கும் நம்முடைய சரீரத்தின் அத்தனை அங்கங்களையும் அடக்கிக் கட்டுப்படுத்தி அவை பாவத்தைச் செய்துவிடாதபடி தடுத்து ஆளவேண்டிய தகுதியையும், வல்லமையையும் நாம் மறுபிறப்பின் மூலமாகப் பெற்றிருக்கிறோம். அதேவேளை உயிர்த்தெழப்போகும் நம்முடைய சரீரத்தின் தேவைகளையும் கர்த்தரின் துணையோடு சந்தித்து அவருடைய மகிமைக்காக அதைப் பயன்படுத்த வேண்டிய கடமைப்பாடும் நமக்கு இருக்கிறது.

இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் சமுதாயம் சரீர ஆராதனையில் ஈடுபட்டிருக்கிறது. ஆண்களும் பெண்களும் சரீரத்தை அழகுபடுத்தி பூரணப்படுத்தும் செயலில் கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு வழிகாட்டும் வியாபார நிறுவனங்களுக்கு அளவில்லை. மீடியாவில் இதுபற்றித்தான் அன்றாடம் அலசலும் அலம்பலும். அழிவுக்குரிய இந்த சரீரத்தை நாம் பூரணப்படுத்த வழியில்லை. அதை உணர்கிறவர்களாக சரீர ஆராதனைக்காரர்கள் இல்லை. அதேசமயம். சரீரம் அழிவுக்குரியது என்பதால் அதை அலட்சியப்படுத்தி ஏனோதானோவென்று வாழ்கின்ற எதிர்மறையான எண்ணப்பாட்டைக் கொண்டிருக்கிறவர்களும் இருக்கிறார்கள். பரிசுத்த வாழ்க்கைக்கும் சரீரத்திற்கும் தொடர்பில்லை என்ற தவறான எண்ணத்தைக் கொண்டிருந்து உண்ணும் உணவில் கவனமில்லாமல் சரீரத்தைக் கெடுத்து, பரிதாபத்துக்குரிய தோற்றத்தையும் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கர்த்தரை எப்படித் தங்கள் சரீரத்தில் மகிமைப்படுத்த முடியும்? இவர்களுடைய எண்ணமும் செயலும் சரியல்ல. அழிவுக்குரியதாக இருந்தாலும், உயிர்த்தெழப்போகும் இந்தச் சரீரம் கர்த்தருடைய மகிமைக்குரியது. அது அவருடைய மகிமைக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். இதை அருமையாக, ஆணித்தரமாக, இறையியல்பூர்வமாக முதலில் விளக்கி அதற்குப் பிறகு சரீரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்ற நடைமுறை விஷயங்களை அல்பர்ட் என். மார்டின் விளக்கியிருக்கிறார். சரீரத்தைப் பொருட்படுத்தாமல், கவனித்து அதன் தேவைகளை நிறைவேற்றாமல், இருக்கவேண்டிய காலம்வரை இருக்கமுடியாமல் மரித்த கர்த்தருடைய பிள்ளைகள்தான் எத்தனைபேர். அத்தகைய அவசியமான சரீரக் கவனிப்பில் ஈடுபடாமல் அசதியும், நோய்களும் சரீரத்தைவாட்ட கர்த்தருடைய பணிகளைத் தொடர்ந்து செய்யமுடியாமல் போனவர்கள் எத்தனைபேர். இதை எழுதிக்கொண்டிருக்கிறபோதே சரீரத்தை அசட்டைசெய்து வாழ்ந்துகொண்டிருக்கும் நானறிந்திருக்கும் சிலபேருடைய முகம் என் கண்முன்னால் நிற்கிறது. சரீரத்தை வேதபூர்வமாகக் கவனித்து அதன் தேவைகளை நிறைவேற்றுவது நமது தொடருகின்ற பரிசுத்த வாழ்க்கைக்கு (continuing sanctification) அசைக்க முடியாதவிதத்தில் அவசியமானது என்பதையும் நாம் எப்படி மறுக்கமுடியும்? இதையெல்லாந்தான் அல்பர்ட் என். மார்டின் தன் நூலில் சுட்டிக்காட்டியிருக்கிறார். சுருக்கமாக, அதேவேளை வேதரீதியில் தெளிவாக சரீரத்தைக் கவனிக்கவேண்டிய கடமையை மறுக்க வழியில்லாதபடி மார்டின் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சவரின் கிரேஸ் புத்தகங்கள்

எங்களுடைய சபையில் கிட்டத்தட்ட 40 வருடங்களாக இயங்கிவந்த புத்தக விற்பனையகத்தை இந்த வருடத்தில் மூடினோம். உண்மையில் அது ஒரு ஏஜன்சியாகத்தான் இயங்கி வந்தது. அதாவது புத்தகக்கடைகளுக்கு புத்தகங்களை விநியோகம் செய்வதே அதன் ஆரம்ப நோக்கமாக இருந்தது. இருந்தாலும் புத்தகக் கடைகள் நல்ல சத்தான கிறிஸ்தவ நூல்களை ஸ்டொக்கில் வைத்து விற்பனை செய்யத்தவறியதால் சில்லறை வியாபாரத்தையும் நாமே செய்யவேண்டியிருந்தது. இதை வருடக்கணக்காக செய்து வந்திருக்கிறோம். இதைக் கடமைப்பாட்டோடு எங்களுடைய சபை உதவிக்காரர்களில் ஒருவரே மேற்பார்வை செய்துவந்தார். புத்தக வியாபாரத்தைப் பொறுத்தவரையில் தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் பலநல்ல மாற்றங்களே இந்த புத்தக ஏஜன்சி பணியை நாம் நிறுத்திக்கொண்டதற்கு முக்கியகாரணம். அத்தோடு அதை மேற்பார்வை செய்துவந்தவருக்கும் வயதாகிக்கொண்டிருக்கிறது. இந்த ஏஜன்சி பணியை நிறுத்திக் கொள்ளும் முடிவைத் தன் பராமரிப்பின் மூலம் கர்த்தரே எங்களுக்கு காட்டித் தந்திருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

புத்தகங்களை வெளியிடுவதிலும், விற்பனை செய்வதிலும் அதீத மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இன்று நூல்களை வெளியிட நாம் ஒரு பதிப்பகத்தாரைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. விற்பனை செய்வதற்கும் ஒரு மார்கெட்டிங் கம்பேனியை நம்பவைக்கத் தேவையில்லை. நவீன கணினி மற்றும் இன்டர்நெட்யுகம் இதையெல்லாம் தலைகீழாக மாற்றி அச்சிடுதல், பதிப்பித்தல், விற்பனை செய்வதிலெல்லாம் நவீன யுத்திகளைப் பயன்படுத்தி வருகிறது. இது மிகவும் வசதியானது. நூல்கள் தேவையானவர்கள் இன்று அமேசான் போன்ற எத்தனையோ இன்டர்நெட் கம்பேனிகளிடம் மிக இலகுவாக குறைந்தவிலையில் ஒரே வாரத்தில் நூல்களை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். எந்தக் கடையையும் தேடிப்போய் வாங்க வேண்டிய அவசியமில்லாமல் இருக்கிறது. (இதற்காக புத்தகக் கடைகளைப் புறக்கணிக்காதீர்கள். அங்கு போவதில் இருக்கும் வசதி நூல்களைத் தொட்டுப் பிரித்துப் பார்த்து வாங்கமுடிவதுதான்.) புத்தகக் கடைகள் ஸ்டொக் செய்யாத நூல்களையும் இன்டர்நெட் மூலமாக பெற்றுக்கொள்ளும் வசதி இன்று இருக்கிறது. இத்தகைய காரணங்களும் எங்களுடைய விற்பனையகத்தை மூட முக்கிய காரணம். இருந்தாலும் எங்களுடைய சபைத்தேவைகளை நிறைவேற்ற முக்கியமான நூல்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி தேவையான அளவு நூல்களை மட்டும் வைத்திருக்கப் போகிறோம்.

புத்தகங்களைப் பற்றி எழுதுகிறபோது ஒரு விஷயத்தை சொல்லாமல் இருக்க முடியாது. தமிழகத்தில் இன்று பல மாநிலங்களில் புத்தக விழாக்களை வருடந்தோறும் நடத்தி வருகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் இந்த விழாக்களுக்குப் போய் புத்தகங்களை வாங்க முடிகிறது. நூலாசிரியர்களும் இதில் கலந்துகொண்டு வாசகர்களை சந்திக்கிறார்கள்; செய்தியளிக்கிறார்கள். இதெல்லாம் நான் புத்தகம் வாசிக்க ஆரம்பித்த காலத்தில் நிகழவில்லை. இதற்கெல்லாம் நூல்கள் விஷயத்தில் இன்று ஏற்பட்டிருக்கும் நவீனமயமாக்கம் பெருங்காரணம். புத்தகம் பேசுது என்ற பெயரில் ஒரு மாத இதழும் கூட வெளிவருகின்ற புத்தகங்கள் பற்றியும், புத்தக விழாக்கள் பற்றியும் விபரங்களை அள்ளித்தருகின்றன. ஒருவிதத்தில் இதை எண்ணி மனமகிழ முடிந்தாலும் இதுவே கிறிஸ்தவர்கள் மத்தியில் நிகழந்தால் எத்தனை நன்மையாக இருக்கும் என்று சிந்திக்காமல் இருக்கமுடியவில்லை.

வேதப்பிரசங்கப் பஞ்சம்

சமீபகாலமாக நான் பணிபுரிந்து வருகின்ற சபைக்கு வருடக்கணக்காக வேதப்பிரசங்கத்தைக் கேட்கமுடியாமலும் வேதஞானமே இல்லாமலுமிருந்து வந்திருக்கின்ற பலர் அத்தகைய பிரசங்கத்தையும், நல்ல சபை அமைப்பையும் நாடி வருவதைக் காண்கிறேன். இது சுற்றி வர சபைகளில் என்னதான் நடக்கிறது என்பதைக் காட்டுகிறது. வேதப்பிரசங்கத்தில் நம்பிக்கை வைக்காமல் உணர்ச்சிவசப்படுத்தக்கூடிய சாட்சிகளுக்கும் அனுபவங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஆத்தும அழிவை நோக்கி அநேகரை வழிநடத்தி வரும் ஊழியங்கள் எல்லா நாடுகளிலும் பெருகிக் காணப்படுகின்றன. கீழ்ப்படிவெதுவுமின்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் தற்காலிகமாக தங்களுடைய ஆத்மீகத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுவதற்காக இத்தகைய சபைகளை நாடிப்போகிறவர்கள் அநேகர். அவர்களுக்கு உடனடித் தேவைகள் நிறைவேறினாலே போதும்; தங்களுடைய நித்திய இருதயத் தேவைகளை அவர்கள் சிந்தித்துப்பார்ப்பதில்லை. இத்தகையவர்களை மடக்கிப் பிடிப்பதற்காகவே சுவிசேஷப்பணி என்ற பெயரில் எலிவலைகளைப்போல பெருமளவு ஊழியங்கள் பெருகிக் காணப்படுகின்றன. இந்த இடங்களில் இறையியல்பூர்வமான வேதபோதனைகளுக்கும், வேத சிந்தனைகளுக்கும் இடமிருக்காது. கிறிஸ்துவின் பெயரையும், வேதத்தையும் பயன்படுத்தி உலகப்பிரகாரமான ஆத்மீக வழிமுறைகளை ஆத்துமாக்கள் பின்பற்றவைத்து தங்களுடைய சுயநல நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளுவதிலேயே இத்தகைய ஊழியங்களில் ஈடுபட்டிருக்கிறவர்கள் கருத்தாக இருப்பார்கள். ஜொயல் ஒஷ்டின், பெனிஹின் போன்றோரின் ஊழியங்கள் இதற்கு உதாரணம். ஆண்டவரின் நாமத்தை இவர்கள் எந்தவிதத்திலும் தங்களை வளர்க்கப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்கமாட்டார்கள். தற்காலிகமாக மனதுக்கு இதமளிக்கும் சரீரத்தின் மேல்தோலைக்கூடத் தொடமுடியாத ஆத்துமசுகத்துக்காக அலைபவர்களுக்கு இந்த இடங்கள் தோதானவைதான்.

இதெல்லாம் என்னை சிந்திக்கவைக்காமல் போகவில்லை. சபைக்கு ஆட்கள் தேவை என்பதற்காக இருதயத்தை விற்று, வேதத்தை ஒதுக்கிவைத்து ஊழியம் செய்வதுபோன்ற கொடுமை இல்லை என்பது எனக்குத் தெரியும். மனச்சாட்டி இல்லாதவர்கள் செய்கின்ற மனுஷத்தனமான ஊழியம் அது. அத்தகைய ஊழியங்களைச் செய்கிறவர்கள் மெய்யான ஆத்தும பாரமில்லாதவர்கள்; சுயநலக்காரர்கள். அவர்கள் ஆத்துமாக்களின் வாழ்க்கைக்கு ஆபத்தானவர்கள். ஆத்துமாக்களை வைத்து பிழைப்பு நடத்துகிற இவர்கள் ஆத்துமரீதியிலான எந்த விஷயத்துக்கும், எந்த மனிதர்களுக்கும் தங்களுடைய ஊழியங்களில் இடம்கொடுப்பதில்லை. முதலில் இவர்களுடைய ஊழியங்களில் மெய்யான வேதப்பிரசங்கத்தைப் பார்க்கமுடியாது. ஒப்புக்காக வேதத்தை தங்களுடைய சுயநலத்துக்காக இவர்கள் பயன்படுத்தினாலும் மார்டின் லூத்தருக்கு இருந்ததுபோன்ற நம்பிக்கை இவர்களுக்கு வேதத்தில் இருப்பதில்லை. ‘நான் செய்ததெல்லாம் வார்த்தையைப் பிரசங்கித்ததுதான். அதற்குமேல் வார்த்தை அனைத்தையும் செய்தது’ என்று லூத்தர் தன் பிரசங்க ஊழியத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். வேதப்பிரசங்கமும் போதனையும் இல்லாமல் ஆத்துமவிருத்தி ஆத்துமாக்களுக்கு எப்படி, எங்கிருந்து ஏற்பட முடியும்? வெறும் துதியும், உபவாச ஜெபமும், சினிமாவை நினைவூட்டும் பாடல்களும், கைதட்டல்களும் ஆத்துமவிருத்தியை எந்தக் காலத்தில் யாருக்கு ஏற்படுத்தியிருக்கிறது? பிரசங்கப் பஞ்சகாலத்தில் நம்மினம் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. ஆவியின் பலத்தோடு கொடுக்கப்படும் வேதப்பிரசங்கம் (1 தெசலோ 1:5) நடக்குமிடங்களை விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய நிலையில் நம்மினம் இருந்துவருகிறது. இதையும்விட பரிசுத்தம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் பிரபஞ்சத்திற்குரிய வேஷத்தைத் தரித்துக்கொண்டு (ரோமர் 12:2) ஊழியம் செய்துவருகிறவர்களால் திருச்சபைப் பணி அவிசுவாசிகள் மத்தியில் கெட்டபெயரை வாங்கிக்கொண்டிருக்கிறது.

வேதத்தை மட்டும் வேதபூர்வமாக பிரசங்கித்து திருச்சபை அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து சபை நடத்த முற்படுகிறவர்களுக்கு ஆவியற்றவர்கள், சுவிசேஷ வாஞ்சையற்றவர்கள் என்று இத்தகைய போலி ஊழியக்காரர்கள் பெயர்சூட்டுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் கர்த்தரின் வார்த்தையை மட்டும் பிரசங்கித்து ஆவிக்குரிய ஆத்துமதாகத்தோடு இருப்பவர்களுக்கு கடைசிவரை பணிசெய்து வருவதில் இருக்கும் ஆத்தும சந்தோஷமும் திருப்தியும் வேறெதிலும் கிடைப்பதில்லை. அத்தகைய வைராக்கியத்தோடு உழைக்கிறவர்களை மனதில்கொண்டுதான் இயேசு, அறுவடை மிகுந்திருக்கிறது, ஆனால் ஊழியக்காரர்கள் குறைவு என்று சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

சாமானியர்களில் ஒருவர்

என் ஊழியப் பணியும், இலக்கியப்பணியும் பல நாடுகளில் நல்ல நண்பர்களை எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. அவர்களைக் கர்த்தர் தந்திருக்கும் ஈவாகவே நினைக்கிறேன். நல்ல நண்பர்கள் நல்ல புத்தகங்களைப்போல. நல்ல நூல்களைத் தொடர்ந்து வாசிக்கலாம். அதுபற்றி சிந்திக்கலாம்; கருத்துக் கூறலாம். நல்ல நூல்கள் நம் நினைவலைகளில் எப்போதும் நிலைநிற்கும். அதுபோலத்தான் நல்ல நண்பர்களும். இருந்தாலும் அவர்கள் மனிதர்கள். அவர்கள் நூல்களைவிட ஒருபடி மேல். நல்ல நண்பர்களைப் பெற்றுக்கொள்ளுவது சுலபமானதல்ல. இதுபற்றி இன்னொரு ஆக்கத்தில் நேரங்கிடைக்கும்போது விளக்கமாகவே எழுதவிருக்கிறேன். நட்பை அடையவும், தக்கவைத்துக்கொள்ளவும், வளர்க்கவும் நாம் செய்யவேண்டியவைகள் அநேகம். ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடாமல் நட்பு வளராது நிலைக்காது. முதிர்ந்த போதகர் ஒருவர் ஒருமுறை சொன்னார், ‘நட்பை அழிக்கவேண்டுமானால் செய்திப்பறிமாறலை தவிர்த்துக்கொள்’ என்று. எத்தனை உண்மை. நட்பு நண்பனின் உறவைத் தொடர்ந்து நாடும்; அதில் திளைக்கும்.

என் நண்பர் ஒருவரைப்பற்றித்தான் இங்கே எழுதப்போகிறேன். அவரோடு இருபது வருடகாலத் தொடர்பு இருக்கிறது. அதை அவரே சமீபத்தில் எனக்கு நினைவுபடுத்தினார். சமூக, பொருளாதார, கல்வி நிலையில் நாங்கள் இருவரும் எதிரும் புதிருமானவர்கள். இயல்பாகவே நட்பு உருவாக பல அம்சங்களில் இருவருக்கு ஒருமனப்பாடு இருக்கவேண்டுமென்பார்கள். அதிலெல்லாம் ஈடுபாடு காட்டி அறிந்துகொள்ள நான் என்றுமே முயன்றதில்லை. எங்கள் நட்புக்கு ஒரே காரணம் சத்தியத்தில் இருக்கும் ஒருமனப்பாடு மட்டுமே. சத்தியம் எங்களை இணைத்திருக்கிறது என்பதே உண்மை. இருபது வருடங்களாக வருடத்தில் சில தடவைகள் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். எங்கள் பேச்சு எப்போதும் சத்தியம் பற்றியதாக மட்டுமே இருந்திருக்கிறது.

என் நண்பரைப்பற்றி நான் எழுதுவதற்கு காரணமிருக்கிறது. அவர் ஆரம்பப் பள்ளியைக்கூட முடித்தில்லை. சிறு கிராமத்தில் வாழ்வும், வளர்ப்பும், இருப்பும். சாதாரண வேலை; சாதாரண வீடு; அன்றாடம் மூன்று வேலை உணவைத் தரும் ஊதியம். அதற்கு மேல் ஒன்றுமில்லை. ஒரேயொருமுறை அவருடைய ஊருக்குப்போய் வீட்டில் தேநீர் அருந்தியிருக்கிறேன். அதற்கு மேல் அவருடைய பின்புலம் பற்றிச் சொல்லுவதற்கு ஒன்றுமேயில்லை. வாழ்க்கையில் விளிம்பு நிலையில் இருப்பதில் தப்பில்லை. சமூகம் அதற்கு மதிப்புக்கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் சாமானிய நிலையில் இருப்பவர்களிடந்தான் மனித உறவுகளின் அருமையையும் ஆழத்தையும் உணர முடியும். இன்றைய சமூகத்தின் தீயவிளைவுகளால் அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள். அடுத்தவனை அழித்து தன்னை உயர்த்திக்கொள்ளும் சுயநலமும், அகங்காரமும் சாமானிய நிலையில் இருப்பவர்களிடம் பெரிதும் இருப்பதில்லை. அவர்களுடைய பேச்சும், நடத்தையும் இயல்பானவையாக இருக்கும். வாழ்க்கையில் தேவைகள் குறைவாக இருப்பதால் பணத்திற்கு அவர்கள் அடிமையாகவில்லை. இருப்பது போதும் என்ற மனப்பான்மையோடு அவர்களால் வாழமுடிகிறது.

வெகுகாலத்துக்கு முன்பே கிறிஸ்துவை விசுவாசித்திருக்கிறார் என் நண்பர். அது எத்தகைய விசுவாசம் என்பதை அவருடைய வாழ்க்கையில் காண்கிறேன். இன்று கிறிஸ்தவ விசுவாசம் தரங்குறைந்து காணப்படுவதை உணர்கிறேன். சத்தியத்தில் உறுதியற்ற ஒருவித விசுவாசத்தையே நான் எங்கும் காணமுடிகிறது. சத்தியத்தில் தெளிவில்லாமல், வேதத்தின் அடிப்படை அம்சங்களில் பரிச்சயமில்லாமல் விசுவாசிகள் என்று தங்களை அறிவித்துக்கொள்ளுகிற பெருங்கூட்டமே எங்கும் இருக்கிறது. இதில் ஆபத்து என்னவென்றால் இவர்கள் சத்தியத்தை அறிந்துகொள்ளுவதிலும், அதில் தெளிவு பெறுவதிலும் எந்த ஆர்வமோ அக்கறையோ இல்லாதவர்களாக இருப்பதுதான். இயேசுவை விசுவாசிக்கின்ற, நேசிக்கின்ற இருதயம் இயல்பாகவே சத்தியத்தில் நாட்டம் செலுத்தும் என்பதே வேதபோதனை. சத்தியமே ஒருவருடைய விசுவாசத்தை எடைபோட உதவுகின்ற அளவுகோள்; வெறும் உணர்ச்சி வேகமோ அல்லது வார்த்தைக்கு வார்த்தை அல்லேலூயா சொல்லுவதோ அல்ல. இயேசு சொல்லுகிறார், ‘சத்தியம் உன்னை விடுதலையாக்கும்.’ சத்தியத்திற்கு வாழ்க்கையில் இடங்கொடுக்காத ‘விசுவாசம்’ கிறிஸ்தவ விசுவாசமல்ல; அது போலியானதாக மட்டுமே இருக்க முடியும். அது தொடர்வதற்கும், நிலைப்பதற்கும் வழியில்லை.

இங்குதான் என் நண்பரில் நான் பெரும் வேறுபாட்டைக் காண்கிறேன். கல்வி பெரிதாக இல்லாவிட்டாலும் சத்தியத்தை அறிந்துகொள்ளுவதிலும் அதில் வளருவதிலும் அவர் காட்டும் ஆர்வம் ஆரம்பமுதலே என்னை ஈர்த்தது. வேதத்தை வாசிப்பதில் மட்டுமல்லாது கிறிஸ்தவ இலக்கியங்களை வாசித்து சிந்தித்து அதுபற்றிப் பேசுவதிலும் அவருக்கு இருந்த அலாதியான ஈடுபாட்டை நான் வேறு எவரிலும் அந்தளவுக்குக் கண்டதில்லை. கிறிஸ்தவ இறையியல் போதனைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற தாகம் அவருக்கு அதிகமாகவே இருந்தது. அதிக நேரத்தை அவர் வாசிப்பில் செலவிடுகிறார் என்பது சொல்லாமலேயே தெரிந்தது. வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுவதற்கு கல்வியோ, பட்டங்களோ தேவையில்லை தெரியுமா? எழுத்துக்கூட்டி வாசிக்கத் தெரிந்தாலே போதும். ஆர்வத்தோடு நேரத்தைக் கொடுத்து வாசிக்க ஆரம்பிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் அது ஒருவரை எங்கோயோ கொண்டுபோய்விடும். அதைத்தான் என் நண்பரில் நான் காண்கிறேன். அவருடைய வாசிப்புப் பழக்கம் சத்தியத்தை ஆராயவும், அதில் மூழ்கி முத்தெடுக்கவும் அவருக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. சமீபத்தில் அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார், ‘கிறிஸ்தவ உலகப் பார்வை’ என்ற தலைப்பில் நீங்கள் எழுதியிருந்த ஆக்கம் அருமையானது என்று. எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. கல்லூரிக்குப் போய் பட்டம் வாங்கியிருக்கும் ஒருவராவது அதுபற்றி இதுவரை எதுவும் சொன்னதில்லை. நான் பேசும்வரை காத்திருக்காமல் அவர் தொடர்ந்து அந்த ஆக்கம் பற்றிய தன்னுடைய எண்ணங்களைப் பகிர ஆரம்பித்தார். சமீபத்தில் வந்திருந்த ‘சுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள்’ ஆக்கத்தில் நான் குறிப்பிட்டிருந்த, சபை அமைப்பதற்கு அவசியமான ஏழு அம்சங்களைப் பற்றி விவாதித்தார். இதையெல்லாம் அக்கறையோடு வாசித்து சிந்தித்து ஆராய்ந்திருப்பதோடு அவை பற்றிக் கலந்துரையாடுவது அவருக்கு அவசியமாகப்படுகிறது. வாசிப்பவற்றை சிந்தித்துப் பார்த்துப் பிரறோடு பறிமாறிக்கொள்ளுகிறபோதே நம் அறிவு பட்டை தீட்டப்படுகிறது என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. அவரோடு நடந்த கலந்துரையாடல் எத்தனை சுகமான அனுபவமாக இருந்தது தெரியுமா? என் நண்பர் சாமானியர்தான்; ஆனால் கிருபையிலும் ஞானத்திலும் வளர வேண்டும் என்ற துடிப்பும், வாசிப்புப் பழக்கமும் அவரை அசாதாரணராக்கியிருக்கிறது. அவருடைய வாசிப்பு வெறும் வாசிப்பல்ல; வாசித்தவற்றைப் பற்றி அவர் மறுபடியும் மறுபடியும் சிந்திக்கிறார், பிறரோடு அது பற்றிப் பேச விரும்புகிறார்.

என்னுடைய ஊழியப்பணியில் எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தரும் ஒன்று, இன்றைய படித்த வாலிபர்களிடமும், நடுத்தர வயதுள்ளவர்களிடமும் வாசிப்புப் பழக்கம் இல்லாதது. இந்த ஆதங்கமே ‘சட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு’ என்ற நூலை எழுத வைத்தது. வாசிப்பில்லாமல் சத்தியத்தில் வளர முடியாது; வாசிப்பில்லாமல் சத்தியத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாது; வாசிப்பில்லாமல் ஊழியப்பணிகளெதுவும் செய்யமுடியாது. வாசிக்காதவர்களால் தங்களுக்கும் பிறருக்கும் எந்தப் பயனுமில்லை. இது எனக்கு நன்றாகவே தெரியும். இதை அநேகர் உணராதிருக்கிறார்களே என்ற ஆதங்கம் என்னை வாட்டாமலில்லை. அதுவும் போதகப்பணியில் இருப்பவர்களிடம் வாசிப்பு இல்லாதிருக்கும் அவலத்தை நான் எங்குபோய் சொல்லுவது? இந்த ஆதங்கத்தை என் நண்பரிலும் நான் பார்த்தேன். தனக்குத் தெரிந்த போதகர்கள் நூல்கள் வாசிப்பதைத் தவிர்த்துக்கொள்வதாகவும், அது பற்றிப் பேசவே வேண்டாம் என்று சொல்வதாகவும் அவர் குறைபட்டுக்கொண்டார். சிலர் இதெல்லாம் சபை நடத்த உதவாது என்றும் சொல்லியிருக்கிறார்களாம். இது எதைக்காட்டுகிறது? நம்மினத்தில் கிறிஸ்தவம் இன்றிருக்கும் அவலநிலையைத்தான். மனதைத் தளரவைக்கும் அனுபவங்களைச் சந்தித்தாலும் என் நண்பர் தன்னுடைய சிறிய வருமானத்தில் ஒரு பகுதியை கிறிஸ்தவ இலக்கியங்களை வாங்குவதில் செலவிட்டு தனக்குத் தெரிந்த போதகர்கள், ஊழியர்கள், விசுவாசிகள் என்று எல்லோருக்கும் தான் வாழும் பகுதியில் விநியோகித்து வருகிறார். இப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவரோ இருவரோ ஒவ்வொரு சபையிலும் இருந்தால் எத்தனை நன்மையாக இருக்கும்.

கிறிஸ்தவ பக்தி வைராக்கியத்தைப் பற்றி நண்பர் டேவிட் மெரெக் ஜூன் 2016ல் பல செய்திகளை அளித்திருந்தார். அந்த பக்திவைராக்கியத்தை என் நண்பரில் நான் நிதர்சனமாகக் காண்கிறேன். ஒருவர் கிறிஸ்தவராக இருப்பதால் பக்தி வைராக்கியம் அவரில் தானே ஏற்பட்டுவிடாது. இருக்கும் கிறிஸ்தவ பக்தியை நடைமுறையில் வைராக்கியத்தோடு வெளிப்படுத்துவதே பக்தி வைராக்கியம். தான் வாழும் சிற்றூரும், குறைந்தளவான வாழ்க்கை வசதிகளும், சத்தியத்தில் நாட்டங்காட்டாத உறவுகளும் ஊர் மக்களும் தன்னைச் சூழ்ந்திருந்தபோதும் இந்த நண்பரில் பக்திவைராக்கியம் கொழுந்துவிட்டெரிகிறது. அதன் தனலை நான் ஒவ்வொரு முறை அவரை சந்திக்கும்போதும் உணர்கிறேன்.

கிறிஸ்தவர்களில் அநேகருக்கு தங்களுடைய மாம்சத்தின் செய்கைகளைக் கட்டுப்படுத்தி அழிப்பதில் மட்டுமே வாழ்நாளெல்லாம் போய்விடுகிறது. அந்த நடைமுறைக் கடமையில் அவர்கள் சோர்வையும், தளர்வையும் சந்தித்து கொஞ்சம் எழுவதும், பின் விழுவதும், பின் எழுவதுமாகவே ஆவிக்குரிய சந்தோஷம் அதிகமின்றி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களால் பயனுள்ள எதையும் பெரிதாக செய்ய முடிவதில்லை. வயது போய்க்கொண்டிருந்த போதும் கிறிஸ்தவ அனுபவ முதிர்ச்சி அவர்களுக்கு எப்போதும் எட்டாத கொம்புத்தேனாகவே இருந்துவிடுகிறது. கிறிஸ்தவ வாழ்க்கை மாம்சத்தின் செய்கைகளை அழிப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டதல்ல. அது ஒருபுறம் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கவேண்டியிருந்த போதும், கிறிஸ்தவ கிருபைகளில் வளர்ந்து, கிறிஸ்துவின் அன்பை ருசித்து வெளிப்படுத்தி, கிறிஸ்து தந்திருக்கும் ஈவுகளையெல்லாம் பயன்படுத்திப் பணிசெய்வதும் கிறிஸ்தவ வாழ்க்கையின் இன்னொரு புறமாக இருக்கிறது. இந்த இரண்டும் தொடர்ந்து நம் வாழ்வில் எப்போதும் காணப்படவேண்டும். ஒன்றிருந்து ஒன்றிராமல் இருப்பதற்குப் பெயர் கிறிஸ்தவ வாழ்க்கையல்ல. மாம்ச இச்சையடக்கத்தில் மட்டும் ஈடுபட்டுத் தளர்ந்து போய்க்கொண்டிருந்தால் அது கிறிஸ்துவை ஒருபோதும் மகிமைப்படுத்தாது; கிறிஸ்தவ பணிகளை மட்டுமே செய்து மாம்ச இச்சையடக்கத்தில் ஈடுபடாமலும், கிருபையில் வளராமலும் இருந்தால் அதுவும் கிறிஸ்துவை மகிமைப்படுத்தாது. இந்த இரண்டின் அவசியத்தையும் புரிந்துகொள்ள முடியாமல் இவற்றில் ஒன்றை மட்டும் செய்து அரைகுறை வாழ்க்கை வாழ்கிற அநேகரையே நம்மைச் சுற்றி எங்கும் காண்கிறோம்.

என் நண்பருக்கு கிறிஸ்தவ வாழ்க்கையின் இந்த இருகட்ட ஆவிக்குரிய இரகசியம் தெரிந்திருக்கிறது. வயதின் காரணமான உடல் தளர்ச்சியும், உற்றார் உறவினரின் ஒட்டாத உறவும், சுவிசேஷத்திற்கு தலை சாய்க்க மறுப்பவர்களும், சபை இன்றிருக்கும் நிலையும், மாம்ச இச்சையடக்கக் கடமையும் அவருக்கும் சிலவேளைகளில் சோர்வை உண்டாக்குகிறபோதும், அதையெல்லாம் சட்டை செய்யாமலும், தளர்ந்துபோய் சாட்சியை இழந்துவிடாமலும் கிருபையில் வளர்ந்து கிறிஸ்துவின் அன்பில் இன்பம் கண்டு தன்னால் முடிந்தவரையில் கிறிஸ்துவுக்குப் பணிபுரிந்து வருகிறார். இதுவே அவருடைய பக்தி வைராக்கியத்தின் இரகசியம். ஒரு சாமானியரின் வாழ்க்கையில் ஜோடனைகளில்லாமல் அப்பட்டமாக ஒளி வீசும் அடிப்படைக் கிறிஸ்தவ சத்தியம் இது.

2016ன் ஆரம்பத்தில் நாம் வெளியிட்டிருக்கும் திருமறைத்தீபத் தொகுப்புகளில் முதல் பாகத்தை அவர் கடனாக ஒருவரிடம் இருந்து பெற்று ஒரே மாதத்தில் அத்தனை பக்கங்களையும் வாசித்து முடித்தாராம். திருமறைத்தீப இதழில் அவருக்கு என்றுமே அலாதியான பற்று. அதை அவர் வெறும் பத்திரிகையாகக் கருதவில்லை. தன்னுடைய ஆவிக்குரிய ஞானத்துக்கு தீனிபோட்டு ஊக்குவிக்கும் சத்திய ஊற்றாகக் கருதுகிறார். அதுபற்றிய பேச்சை ஆரம்பித்தாலே அவரால் நிறுத்திக்கொள்ள முடிவதில்லை. பத்திரிகை வெளிவந்த ஆரம்ப காலத்தில் இருந்தே அவர் அதை வாசித்து வருகிறார். ஒரே இதழைப் பல தடவைகள் வாசித்து அனைத்துப் போதனைகளையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முயல்வார். தன்னுள்ளத்தைத் தொட்டவற்றை மற்றவர்களோடு அவரால் ஒருபோதும் பகிர்ந்துகொள்ளாமல் இருக்க முடியாது. அவருடைய பத்திரிகை வாசிப்பில் அக்கறை, ஆர்வம், சத்தியத்தைக் கற்கும் வைராக்கியம் அனைத்தையும் நான் பார்க்கிறேன். பத்திரிகை எப்போது வரும் என்று அவர் காத்திருந்து பெற்று வாசிப்பார். மற்றவர்களையும் வாசிக்கவைக்க முயல்வார். சாதாரணமாக இதையெல்லாம் நாம் ஒரு சாமானியரிடம் காண்பதில்லை; இருந்தாலும் நம்புவதில்லை. என் நண்பரின் இந்த இலக்கணங்கள் என்னைத் தொடாமலில்லை.

கிறிஸ்தவனின் மெய்யான பக்தி வைராக்கியம் இன்று சபை இருக்கும் நிலையைக் குறித்து அவனைக் கவலை கொள்ளச் செய்யவேண்டும். அத்தகைய ஆவிக்குரிய ஆதங்கம் ஒருவருக்கு சும்மா வந்துவிடாது. எந்தளவுக்கு ஆவிக்குரியவிதத்தில் ஒருவர் வளர்ந்துவருகிறாரோ அதைப்பொறுத்தே இத்தகைய ஆவிக்குரிய ஆதங்கம் இருக்கமுடியும். இருபது வருடமாக சபை இருக்கும் நிலை என் நண்பரைக் கவலைகொள்ள வைத்திருப்பதை நான் காண்கிறேன். அவர் வாழும் ஊரில் நல்ல சபையென்று சொல்ல ஒன்றுமில்லை. அதுபற்றி ஒவ்வொரு தடவை நான் சந்திக்கும்போதும் அவர் பேசியிருக்கிறார். போதகர்களின் அக்கறையற்ற போக்கும், பிரசங்கத்தின் தாழ்வான நிலையும், அடிப்படை வேதபோதனைகளைக்கூட சபை அமைப்பிலும், சபை நடத்துவதிலும் பின்பற்றாது உலகின் போக்கில் போகும் தைரியத்தையும், மறுபிறப்பிலும், தொடர்ச்சியான மனந்திரும்புதலிலும் எந்த அக்கறையும் காட்டாத ஆத்துமாக்களின் மனப்போக்கும் அவரை நோவாவைப்போலவும், எரேமியாவைப்போலவும், யோனாவைப்போலவும் கவலைகொள்ள வைத்திருக்கின்றன. இந்த நிலை மாறத் தன்னால் ஒன்றும் பெரிதாகச் செய்துவிட முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் கண்களால் கண்டு மனதால் உணர்கிற ஆத்மீகக் குறைவற்ற செயல்களை அவருடைய இருதயம் கண்டு ஆதங்கப்படுகிறது. எருசலேமைப் பார்த்தபோது இயேசு கண்ணீர்விட்டார் என்று வேதத்தில் வாசிக்கிறோம். அவர் சமாரியப் பெண்ணுக்கு சுவிசேஷத்தைச் சொல்ல கால்நடையாகப் பல கிலோமீட்டர்கள் நடந்திருக்கிறார் (யோவான் 3:4). அறுவடைக்கு நிலம் தயாராக இருந்தபோதும் தகுதியான ஊழியக்காரர்கள் அநேகர் இல்லையே என்று அவர் ஆதங்கப்பட்டிருக்கிறார். நம்மினத்தின் ஆத்மீகக் குறைவு நம்மை ஆதங்கத்தோடு கண்ணீர்விட வைக்காவிட்டால் நம்முடைய விசுவாசத்தை சோதித்துப் பார்ப்பது நல்லது. என் நண்பருக்குத் தெரியும், பெரிதாக இதுபற்றித் தன்னால் ஒன்றும் செய்யமுடியாவிட்டாலும் எதையாவது செய்யாமலிருக்கக்கூடாது என்று.

அவர் அடிக்கடி போதகர்களைச் சந்தித்து நல்ல நூல்களை வாசிக்கும்படி வற்புறுத்தி வருகிறார். பத்துக்கட்டளைகளின் அவசியத்தைப் பற்றி தனக்குத் தெரிந்தவிதத்தில் விளக்கி வருகிறார். பிரசங்கத்தை வேதபூர்வமாக ஆத்தும கரிசனையோடு கொடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார். அவரை சாமானியன் என்பதற்காக பலர் சட்டை செய்வதில்லை. இருந்தும் தளராமல் தன்னால் முடிந்ததை அவர் செய்யாமலிருக்கவில்லை. அவிசுவாசிகளுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் அவர் பல முயற்சிகள் எடுத்துவருகிறார். டீக்கடை முன்பு டேப்ரெக்கோடரை வைத்து அங்கு வருகிறவர்கள் பிரசங்கங்களைக் கேட்க வைப்பதில் இருந்து அவர் எடுத்து வருகின்ற முயற்சிகள் அநேகம். அவரிடம் பெரிதாகப் பேசுகிற அளவுக்குப் பெரும் ஈவுகளோ, ஆற்றலோ, கல்வியோ இல்லை. இருந்தபோதும் மனந்தளராமல் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைத் தொடர்ந்து சொல்லிவருகிறார். அதற்காக அவர் சொல்லுவதைக் கேட்டு மனந்திரும்பாவிட்டாலும் அவரை மதிக்கின்ற மனிதர்கள் கிராமத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒருமுறை போதகர்களும் பல சபை மக்களும் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் பத்திரிகையைப் பற்றியும், கிறிஸ்தவ இலக்கியம் பற்றியும் ஒரு சில வார்த்தைகள் பேசும்படி அவரைக் கேட்டேன். வார்த்தைகளில் குழப்பமில்லாமல், தெளிவாக அங்கு கூடியிருந்தவர்கள் தங்களுடைய இருதயத்தை சோதித்துப் பார்க்கும் விதத்தில் கிறிஸ்தவர்களாகிய அவர்கள் இன்று முகங்கொடுக்க வேண்டிய கடமைகளைப் பற்றி அவர் சுருக்கமாகப் பேசினார். வாசிப்பின் அவசியத்தை அவர்களுக்கு எடுத்துக்காட்டினார்; வாசிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும்படி வலியுறுத்தினார். அவருடைய வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் அவருடைய இதயத்தில் இருந்து வருவனவையாயிருந்தன. என்னால் உணர முடிந்த அதை அன்று எத்தனைப் பேரால் உணரமுடிந்தது என்பது எனக்குக் தெரியவில்லை.

என் நண்பரில் குறைபாடுகள் இல்லாமலிருக்காது. குறைபாடுகளில்லாத பூரணமான ஆவிக்குரிய வாழ்க்கைக்கு இந்த உலகத்தில் இடமில்லை. குறைபாடுகளுக்கு முகங்கொடுத்து திருந்தி வாழ்கிற வாழ்க்கையே கிறிஸ்தவ வாழ்க்கை. அவருக்கு அருகில் இருந்து வாழும் சந்தர்ப்பம் எனக்கிருந்திருந்தால் அவருடைய நிறைகள் மட்டுமல்ல குறைகளும் என் கண்களுக்குப் பட்டிருக்கும். தன்னைக் குறைபாடுகள் இல்லாத மனிதனாக அவர் ஒருபோதும் காட்டிக்கொள்ளுவதில்லை. தன்னைப் பற்றிக் குறைசொல்லுகிறவர்களையும் அவர் பொறுத்துக்கொள்ளுகிறார். ஒன்று தெரியுமா? அவர் ஒரு தடவையாவது எங்களுடைய சந்திப்பின்போது யாரைப்பற்றியும் தனிப்பட்ட முறையில் குறை சொன்னதோ, அவர்களைப்பற்றிய அவதூறு செய்திகளை என்னிடம் பகிர்ந்து கொண்டதோ கிடையாது. ‘உங்களில் ஒருவன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்’ என்ற யாக்கோபுவின் வார்த்தைகள் என் நினைவுக்கு வருகின்றன.

போலித்தாழ்மைக்கு இன்னொரு பெயர் ஆணவம். இது தாழ்மைக்கு முற்றிலும் எதிரான சூர்ப்பனகை. இது வெறும் வெளிவேஷம் மட்டுமே. தாழ்மை உள்ளத்தில் காணப்படவேண்டியது. உள்ளத்தில் இல்லாமல் அது எவரிலும் நடத்தையில் இருக்கமுடியாது. தாழ்மையைக் கொண்டிருக்கிறவர்களுக்கு மட்டுமே மன்னிப்புக் கேட்கும் மனதிருக்கும். எவனுக்கு மன்னிப்புக்கேட்க இருதயமில்லையோ அவனிடம் தாழ்மை இல்லை என்றே பொருள். தாழ்மை இருக்கும் இடத்தில் சுயபரிதாபம் இருக்காது. சுயபரிதாபம் ஆணவத்தின் சகோதரன். தாழ்மையுள்ளவர்கள் தங்களை அறிந்துவைத்திருப்பார்கள். தாழ்மையாகிய நற்பண்பைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். அதீத ஆணவம், தாழ்மை இரண்டையும் நாம் நாகமானில் காண்கிறோம். ஆவிக்குரியவனாக அவன் மாறியபோது அதன் முக்கிய அடையாளமாகத் தாழ்மை அவனில் இருந்தது. கிறிஸ்தவ விசுவாசம் நமக்களித்திருப்பது தாழ்மையுள்ள இருதயம். அது கிறிஸ்துவில் இருந்தது. இந்த சாமானியரில் நான் தாழ்மை குடிகொண்டிருப்பதைப் பார்க்கிறேன். முதல் தடவை சந்தித்த காலத்தில் இருந்து நான் வெளிதேசத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்றோ, போதகர்களுக்கான கூட்டங்களில் பேசுகிறேன் என்றோ என்னை விசேஷமாகப் பார்த்து இந்த சாமானியர் என்னிடம் நடந்துகொண்டது கிடையாது. எவருடனும் பேசுவதுபோலவே என்னிடமும் பேசிப் பழகுகிறார். என்னை வித்தியாசமாக நடத்தவேண்டும் என்ற எண்ணங்கூட அவர் மனதில் ஒருபோதும் எழுந்திருக்காது என்பது எனக்குத் தெரியும். இது மிகவும் இயல்பான கிறிஸ்தவ தாழ்மை.

கல்வியறிவுள்ளவர்களையும், பட்டங்கள் பெற்றவர்களையும், ஆற்றல்கள் உள்ளவர்களையும், சாமர்த்தியமாக நடந்துகொள்ளுகிறவர்களையுமே சமுதாயம் பெரும்பாலும் தலையுயர்த்திப் பார்க்கிறது. இத்தனையும் இருந்தும் ஆவிக்குரிய இலக்கணங்கள் இல்லாமல் இருந்து என்ன பயன்? சாமானியர்களாக இருந்தும் ஆவிக்குரிய இலக்கணங்களைக் கொண்டிருந்து அதிசயிக்கத்தக்க விதத்தில் நம் கண்களுக்குப் புலப்படாமல் வாழ்ந்து வருகிறவர்களைக் கண்ணெடுத்துப் பார்ப்பதை நாம் தவிர்த்துவிடுகிறோம். அந்த சமானியர்களும் தங்களை யாரும் கவனிக்க வேண்டுமென்பதற்காக வாழ்வதுமில்லை; எதையும் செய்வதுமில்லை. நம்மினத்தில் இப்படி எத்தனை சமானியர்கள் நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள் தெரியுமா? தன் சகோதரன் பேதுருவுக்கு இயேசுவை அறிமுகப்படுத்திய அந்திரேயா மிகுந்த ஆற்றல் கொண்டிருந்தவனல்ல. அவனுடைய பெயர்கூட அடிக்கடி வேதத்தில் வருவதில்லை. பேதுருவின் வாழ்க்கை மாற அவனைக் கர்த்தர் பயன்படுத்தியிருப்பதை மறுக்கமுடியுமா? பவுலுக்கு அறிமுகமாகி பவுல் மூலம் ஆண்டவரை அறிந்துகொண்டவன் சாமானியனான ஒநேசிமு. பிலேமோனுக்கு அடிமையாக இருந்து ஓடிப்போன ஒநேசிமு ஆண்டவரை அறிந்துகொண்டபின் பவுலின் நேசத்துக்கு உரியவனானது மட்டுமல்ல அவரோடு இணைந்து பணி செய்யுமளவுக்கு பவுலின் நம்பிக்கைக்குரியவனானான் (பிலேமோன்). அப்பெல்லோவுக்கு வேத வார்த்தைகளில் சரியான வழிகாட்டிய பிரிஸ்கில்லாவும், ஆக்கில்லாவும் சாமானியர்களே. பவுல் இப்படி எத்தனையோ ஆவிக்குரிய சமானியர்களைப் பெயர் குறிப்பிட்டு தன் நிருபங்களில் வாழ்த்தியிருக்கிறார். அறிவும், ஆற்றலுமுள்ளவர்களால் மட்டுமல்ல, ஆவிக்குரிய சாமானியர்களால் நிறைந்ததே கர்த்தரின் திருச்சபை.

அநாவசியத்துக்கு மனிதர்களைப் பெயர் குறிப்பிட்டுப் பாராட்டுவதையும், பெரிதுபடுத்துவதையும் வேதம் அனுமதிப்பதில்லை. நாம் மகிமைப்படுத்த வேண்டிய மானுடத்தில் வாழ்ந்த ஒரேயொருவர் இயேசு மட்டுமே. அப்படியானால் இந்த சாமானியரைப்பற்றி நான் ஏன் எழுதுகிறேன். நிச்சயம் அவரைப் பாராட்டிப் பெரிதுபடுத்துவதற்காக அல்ல; அதை அவரும் விரும்பமாட்டார். அவரோடு எனக்கேற்பட்டிருந்த இந்த அனுபவங்களை எழுதக் காரணமில்லாமலில்லை. கிறிஸ்துவால் மறுபிறப்படைந்திருக்கும் இந்த சாமானியரைப் போன்றவர்களில் இன்றும் கொச்சைப்படுத்தப்படாமல் வெளிப்படையாகத் தெரியும் எளிமையும் வலிமையானதுமான விசுவாசம், மாசுபடாத மெய்யான அன்பு, கபடமற்ற நடத்தை, கனிவாக மனதில்பட்டதைச் சொல்லும் வெளிவேஷமில்லாத பேச்சு, பக்தி வைராக்கியம், சுவிசேஷ ஆர்வம், வாசித்து வேத அறிவைப்பெருக்கிக்கொள்ளும் அடங்காத ஆவல் ஆகியவற்றை நான் காண்கிறேன். கிறிஸ்துவை நேசிக்கும் இந்த சாமானியர்களிடம் இருந்து நான் கற்றுக்கொள்ளுபவை அநேகம். இவர்களுடைய எளிமையான விசுவாசம் இடர்களுக்கு மத்தியில் கிறிஸ்துவின் அன்பில் இவர்களை முத்துக்குளிக்க வைக்கிறது. இந்த சாமானியர்களில் நான் கிறிஸ்தவ விசுவாசத்தின் வல்லமையைக் காண்கிறேன்; கிறிஸ்து தரும் மறுபிறப்பின் மகத்துவத்தைப் பார்த்து வியக்கிறேன்; ஆவியானவரின் கிரியைகளின் ஆர்ப்பாட்டமில்லாத வெளிப்பாட்டை உணர்கிறேன்.

எத்தனை வல்லமையானது கிறிஸ்து இலவசமாகத் தரும் இரட்சிப்பு; மனிதர்களின் தர வேறுபாட்டையெல்லாம் மீறி அது அவர்களைக் கிறிஸ்துவை நேசிக்க வைக்கிறது. ஒருவர் சமுதாயத்தில் எந்த நிலையில் இருந்தாலும் அவர் இரட்சிப்பை அடைவதற்கு அந்நிலை எந்தவிதத்திலும் தடையாக இருப்பதில்லை. கிறிஸ்துவின் அன்பு நுழைய முடியாத சமுதாயத் தரவேறுபாடு உலகில் இல்லை. பணவசதியுள்ள பிலேமானையும், அடிமையான ஒநேசிமுவையும் இரட்சித்தது அதே அன்புதான். எனக்குத் தெரிந்த நல்ல நண்பர்களான சாமானியர்களையும் கிறிஸ்துவின் இந்த அன்பே தன்னலங்கருதாது அவருக்காக வாழவைத்துக்கொண்டிருக்கிறது.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 30 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

நமக்கொரு பாலகன் பிறந்தார்

ஏசாயா தீர்க்கதரிசி நூலில் (9:6) ‘நமக்கொரு பாலகன் பிறந்தார்’ என்ற இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளை நாம் வாசிக்கிறோம். கிறிஸ்துமஸ் தினத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றபோது இந்த வார்த்தைகளை நான் சிந்தித்துப் பார்க்கிறேன். பலரையும் கிறிஸ்து இயேசுவின் பிறப்பை சிந்தித்துப் பார்க்க வைக்கும் நாளாகவும், இன்னும் அநேகருக்கு வெறும் களியாட்ட நாளாகவும் கிறிஸ்துமஸ் தொடர்ந்து இருந்துவருகிறது. அதையெல்லாம் ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு ஏசாயாவின் வார்த்தைகளை அளந்து பார்க்க விரும்புகிறேன். ஏசாயா இந்த இடத்தில் இயேசு கிறிஸ்துவின் முதலாவது வருகையைப் பற்றிய தீர்க்கதரிசன வார்த்தைகளை நம்முன் வைக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது. வல்லமை கொண்ட வார்த்தைகள் இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள்; இவற்றின் அர்த்தங்கள் மிகவும் ஆழமானவை.

ஏன் ஏசாயா ‘நமக்கொரு பாலகன் பிறந்தார்’ என்று சொல்லியிருக்கிறார்? இவை பரிசுத்த ஆவியானவர் ஏசாயா மூலம் நமக்களித்திருக்கும் தீர்க்கதரிசன வார்த்தைகள். இயேசுவைப் பற்றி என்னென்னவெல்லாமோ சத்தியங்களை பரிசுத்த ஆவியானவர் இந்த இடத்தில் விளக்கியிருக்கலாம். ஆனால், அவர் குறிப்பாக ‘நமக்கொரு பாலகன் பிறந்தார்’ என்று இயேசுவின் பிறப்பைப் பற்றி விளக்குவதைக் கூர்ந்து கவனிக்காமல் இருக்கமுடியாது. இயேசு பாலகனாக, குழந்தையாக பிறக்க வேண்டியிருந்தது. கன்னி மேரியின் வயிற்றில் பரிசுத்த ஆவியானவரின் மூலம் அவர் பிறப்பிக்கப்பட்டார் என்கிறது வேதம். நமக்கு அவர் ஒரு பாலகனாக இந்த உலகத்தில் பிறந்தார். அந்த உண்மையை ஒருவராலும் மறுதலிக்கமுடியாது.

பாலகன் இயேசுவின் பிறப்பே பேரதிசயமானது. மாடமாளிகையில், பணிவிடை செய்யும் தாதியர் புடைசூழ ராஜ மரியாதைகளோடு பாலகன் இயேசு பிறக்கவில்லை. அதையெல்லாம்விட மேலான மரியாதைகளுக்கு அனைத்துத் தகுதியும் அவருக்கு இருந்தபோதும் வேதம் சொன்னபடி வெறும் சாதாரண ஆட்டுத்தொழுவத்தில், தாயும் தந்தையும் பக்கத்தில் இருக்க எளிமையான முறையில் இயேசு பாலகன் பிறந்தார். அத்தனை பெரிய வரலாற்று நிகழ்ச்சியை உலகம் அன்று அறிந்திருக்கவில்லை; கொண்டாடிக் களியாட்டத்தில் ஈடுபடவில்லை. உலகத்திற்கு சமாதானத்தையும், விடுதலையையும் தரக்கூடிய ஒரே தேவபாலகன் அன்று பிறந்திருந்தபோதும் அதெயெல்லாம் உணராது உலகம் உறங்கிக்கொண்டிருந்தது.

இயேசுவின் பிறப்பை, அது நடக்கவில்லை என்று உலகை நம்பவைக்க ஏரோது இராஜா என்னென்னவெல்லாமோ செய்து பார்த்தான் (மத்தேயு 2:1-6). பிறக்கப்போகும் குழந்தை இயேசுவால் தன் உயிருக்கும், உடமைக்கும், பதவிக்கும் ஆபத்து என்று கேள்விப்பட்ட அவன் தன் அதிகாரத்தையும் படைபலத்தையும் பயன்படுத்தி இயேசு பிறந்த நாளில் பிறந்த அத்தனை யூத ஆண்குழந்தைகளையும் கொன்றுகுவித்து இயேசு பிறக்கவில்லை என்று நிரூபிக்கப் பார்த்தான். இது வரலாற்றில் நிகழந்த பெருங்கொடுமை. தங்களுடைய குழந்தைகளை இழந்து யூதத்தாய்மார்கள் கதறி அழுத நெஞ்சையுருக்கும் நிகழ்வு இது. அன்று ஏரோது நினைத்தது நடக்கவில்லை. எப்படி நடக்க முடியும்? ‘நமக்கொரு பாலகன் பிறந்தார்’ என்ற வார்த்தைகள் சாதாரண மனிதர்களின் வார்த்தைகளா என்ன? இவை கர்த்தரின் தீர்க்கதரிசன வார்த்தைகள். தீர்க்கதரிசனங்கள் நிறைவேறாமல் போகாது. அதன்படி கர்த்தர் பாலகனாகிய இயேசுவைப் பாதுகாத்து வந்தார். யோசேப்புவுக்கும் மேரிக்கும் ஏற்கனவே நடக்கவிருக்கும் கொடுமையை விளக்கி அவர்கள் வேறு தேசத்தில் தப்பிப்போய் வாழ்ந்து ஏரோதின் கையில் அகப்படாமல் இருக்க வழிசெய்தார் பரத்தின் தேவன். விண்ணில் தோன்றிய நட்சத்திரங்கள் வழிகாட்ட சாஸ்திரிகள் பாலகனாகிய இயேசுவை சந்தித்துப் போற்றிப் பரிசுகள் அளித்தார்கள். நமக்கொரு பாலகன் பிறக்கத்தான் வேண்டும் என்று வேதம் ஆணித்தரமாக ஏசாயா மூலம் அறிவித்திருக்கும்போது அந்தப் பாலகனை ஏரோதோ இந்த உலகமோ எப்படி உதறித்தள்ள முடியும்?

ஏசாயா 7:14 சொல்லுகிறது,

இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.

எத்தனை அர்த்தமுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகளிவை. இயேசுவின் தாய் மேரி ஆவியினால் கர்ப்பவதியாகி ஒரு பாலகனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடப்படும் என்கிறது வேதம். அந்தப் பெயரைக் கவனியுங்கள். தேவன் நம்மோடிருக்கிறார் என்பது அதற்கு அர்த்தம். இயேசு பிறப்பதற்கு 700 வருடங்களுக்கு முன்பே ஏசாயா இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளைத் தந்திருக்கிறார். பிறக்கப்போகும் பாலகன் சாதாரண குழந்தையல்ல; அவர் நம்மோடென்றென்றும் இருக்கப்போகும் தேவன்.

பிறக்கப்போகும் நம் பாலகன் எங்கு பிறக்கப்போகிறார் என்பதையும் வேதம் முன்னுரைத்திருக்கிறது. மீகா 5:1-2 ஆகிய வசனங்களைக் கவனியுங்கள்,

எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது.

பாலகன் இயேசு இஸ்ரவேலிலுள்ள பெத்லகேம் எனும் சிற்றூரில் பிறக்கப் போகிறார் என்பதை வேதம் முன்கூட்டியே நமக்கு தீர்க்கதரிசி மீகாவின் மூலம் அறிவித்திருக்கிறது. மத்தேயு 2:1-6 ஆகிய வசனங்கள் இந்தத் தீர்க்கதரிசனத்தின்படி இயேசு பெத்லகேமில் பிறந்ததை நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.

பாலகன் இயேசு அரசன் தாவீதின் குலத்தின் வழியில் பிறக்கப்போவதையும் இஸ்ரவேலின் இராஜாக்களையெல்லாம்விட பேரரசனாக இருக்கப்போவதையும் ஏசாயா 11:1-10 வரையுள்ள வசனங்கள் விளக்குகின்றன. தாவீதின் தந்தையான ஈசாயின் வழியில் இயேசு பாலகன் பிறப்பார் என்கின்றன இவ்வசனங்கள். ஆவியினால் நிரம்பியிருக்கப்போகிற அவர் ஆளுகிறபோது பூமி கர்த்தரை அறிகிற அறிவினாலே நிறைந்திருக்கும் என்கின்றன இத்தீர்க்கதரிசன வசனங்கள். பாலகன் இயேசு பிறந்து ஆத்துமாக்களின் இருதயங்களை ஆளப்போகிற வரலாற்று நிகழ்வை விளக்குகின்ற இன்னும் ஏராளமான பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசன வசனங்களை நம்மால் எடுத்துக்காட்ட முடியும். எந்த மனிதனும் மறுதலிக்க முடியாதபடி இத்தீர்க்கதரிசனங்களின்படி பாலகன் இயேசு பிறந்ததை மத்தேயுவும், லூக்காவும் புதிய ஏற்பாட்டில் விளக்கியிருக்கிறார்கள்.

இயேசு பிறந்த வரலாற்று நிகழ்ச்சியை மறுதலிக்க லிபரல் உலகம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கிறிஸ்துமஸ் தினத்தை நினைத்துப் பார்க்கக்கூடாது என்று ஒரு கூட்டம் அமெரிக்காவில் கிளம்பியிருக்கிறது. கிறிஸ்துவின் பெயரே இல்லாத ஒரு ‘கிறிஸ்துமஸ்’ அவர்களுக்கு வேண்டுமாம். இன்னும் ஒரு பகுதி ஏனைய மதத்தவர்களின் மனதைப் புண்படுத்தும் என்பதற்காக பொது இடங்களில் கிறிஸ்துமஸ் சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்கிறது. மதசுதந்திரத்தைத் தன்னுடைய சட்ட அமைப்பில் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கே இன்று இந்த நிலை. இதற்கு எதிராக கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறப்பை நினைத்துப் பார்க்க அந்நாட்டில் பாடுபட்டுவருகிறார்கள். நமக்கொரு பாலகன் பிறந்தார் என்பதை மறுதலித்துவிட்டால் கிறிஸ்தவத்தை பலவீனப்படுத்திவிடலாம் என்று நினைக்கிறது லிபரல் உலகம். இயேசுவின் பிறப்பை மட்டுமல்ல, அவர் மரித்து உயிர்த்தெழுந்ததையும் மறுதலிக்க, அவரை ஏற்றுக்கொள்ள மறுத்த யூத உலகம் அன்று பெருமுயற்சிகளைச் செய்யவில்லையா? அதேபோல் இன்றும் இயேசுவுக்கு எதிரானவர்கள் கிளம்பியிருக்கிறார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை.

நமக்கொரு பாலகன் பிறந்தார்; நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் என்ற ஏசாயாவின் வார்த்தைகள் நம் காதுகளுக்கு எத்தனை இன்பத்தைத் தருகின்றன தெரியுமா? இந்த வார்த்தைகளை ஏசாயா அறிவித்த காலத்தில் வட இஸ்ரவேலரின் காதுகளுக்கு அவை தேனாக இருந்தன. அவர்கள் கர்த்தரின் வார்த்தையைப் புறக்கணித்து அதன் பலாபலன்களை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். அசீரிய அரசனின் கட்டுப்பாட்டின் கீழ்வந்து செபுலோனும், நப்தலியும் சமாதானத்தை இழந்து வாழ்ந்திருந்தார்கள். இப்போது ஏசாயா தீர்க்கதரிசி அப்படிப்பட்ட துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருந்த அதே பிரதேசத்தில், கலிலேயா கடற்கரைப் பகுதியில் கர்த்தர் அனுப்பும் மேசியாவாகிய பாலகன் பிறக்கப்போகிறார் என்று அறிவிக்கிறார். அந்தப்பகுதியில் காணப்படும் இருட்டை அகற்ற மேசியா வரப்போவது மட்டுமன்றி முழு உலகுக்கும் ஒளிவீசச் செய்ய அவர் வருகிறார் என்கிறார் ஏசாயா.

கர்த்தருக்கெதிராகப் பாவத்தைச் செய்து அதைத்தொடர்ந்து கொண்டிருக்கும் உலகத்தை நியாயமாகவே கர்த்தர் அழித்துவிட முடியும்; அப்படிச்செய்வது நியாயமானதுதான். இருந்தபோதும் அநியாய உலகை அழித்துவிடாமல் அதன் விடுதலைக்கு வழிகோள தன்னுடைய ஒரே குமாரனாகிய இயேசுவைக் கர்த்தர் அனுப்பினார்.

யோவான் 3:16

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

2 கொரிந்தியர் 4:6

இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.

ஏசாயா சொல்லுகிறார், நமக்கொரு பாலகன் பிறந்தார்; நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் என்று. இந்த வார்த்தைகளின் பொருள் நம்மை மலைக்கச் செய்யவேண்டும். இயேசு நமக்குக் கொடுக்கப்பட்ட சமாதானமும் விடுதலையுமாகும். வேறு வழிகளில் நமக்கு விடுதலை கிடைக்க முடியாது. நம்மால் நம்மைப் பாவத்தில் இருந்து விடுவித்துக்கொள்ள வழியில்லை. பாவ உணர்வற்றவர்களாக நாம் வாழ்ந்து வந்திருக்கிறோம். நாம் இந்த உலகில் நாடுகின்ற விடுதலை பாவத்தைத் தொடர்ந்து செய்வதற்காக மட்டுமே இருக்கமுடியும். மனித இனம் சுயநலம் கொண்டது. தன்னைப் பற்றியும் தன் சுகத்தைப் பற்றியும் மட்டுமே அதற்குக் கவலை. நம்மைப் படைத்தவரைப்பற்றி அது என்றுமே கவலைகொள்ளுவதில்லை. பாவத்தின் தன்மையை மனிதன் உணராதிருப்பதற்குக் காரணமே பாவம் அந்தளவுக்கு அவனை ஆளுவதுதான். தன்னைத் தானே விடுவித்துக்கொள்ள வழியில்லாத பாவச்சிறையில் வாழ்ந்துகொண்டிருக்கிறான் மனிதன். இந்தச் செய்தி கூட மனிதனுக்கு சிரிப்பை உண்டாக்கும். அந்தளவுக்கு பாவ உணர்வற்றவனாக மனிதன் இருக்கிறான்.

மனிதனின் இந்தத் தன்மையைத்தான் வேதம் இயலாமை என்று வர்ணிக்கிறது. மனிதனின் இயலாமையை மனிதன் அறியாமல் இருக்கும்படி பாவம் அவனை ஆண்டுகொண்டிருக்கிறது. கிருபையின் தேவன் மனிதன் மேல் இரக்கங்காட்டி அவனுக்காக, அவனுடைய விடுதலைக்காக ஒரு பாலகனை அனுப்பி இந்த உலகத்தில் பிறக்கும்படிச் செய்தார். அவருடைய ஒரே குமாரனை கிருபையாய் அனுப்பி வைத்தார். தேவனுடைய கிருபையின் அடையாளமே இயேசு கிறிஸ்து. அவர் நமக்காகப் பிறந்த தேவகுமாரன்; நமக்காகக் கொடுக்கப்பட்ட தேவகுமாரன். நாம் பாவவிடுதலை அடைந்து முழு சமாதானத்தோடு கர்த்தரோடு உறவாட அவர் நமக்காகப் பிறந்தார்.

பாலகனாக இயேசு நம்மத்தியில் பிறந்ததன் அர்த்தத்தை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். நமக்கு பாவவிடுதலை பெற்றுத்தர இயேசு எடுக்கவேண்டியிருந்த நடவடிக்கைகள் அநேகம். முதலில் தேவனாகிய அவர் மனித உருவெடுத்து முழுமானிடத்தைத் தன்னில் கொண்டிருக்க வேண்டியிருந்தது. அது பாலகனாக அவர் பிறவாமல் நடக்க முடியாது. நம்முடைய பிறப்புக்கும் அவருடைய பிறப்புக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது. நாம் பாவத்தில் பிறந்தோம்; அவர் பாவமில்லாமல் பிறந்தார். அவருடைய மானுடத்தில் பாவத்திற்கு இடமிருக்கவில்லை. அவருடைய பிறப்பும் பரிசுத்த ஆவியினால் மேரியின் வயிற்றில் நிகழ்த்தப்பட்ட கிரியை. தேவனும் மனிதனுமாய் இயேசு பாலகன் பிறந்தார்.

அவர் தேவகுமாரனாக இருந்தபோதும் எல்லா மனிதர்களையும் போல வாழவும் வளரவும் வேண்டியிருந்தது. மானுடத்தில் எந்தக்குறையும் இல்லாது அவர் எல்லோரையும் போல வளர்ந்து வாழ்ந்தார். பாவத்தின் கோரத்தை அவர் அறிந்திருந்தபோதும் அவரில் பாவம் இல்லாதது மட்டுமல்ல, அவர் பாவத்தை செய்ய முடியாதவராக முழுப்பரிசுத்தத்தோடு இருந்தார். இருந்தபோதும் எல்லாவிதத்திலும் நம்மைப்போல அவர் சோதனைக்குள்ளானார். எந்தச் சோதனையிலும் அவர் தோல்வியடையவில்லை. அத்தகைய பூரண தெய்வீகத்தையும் மானுடத்தையும் தன்னில் கொண்டு நம் பாலகன் பிறந்தார். இதெல்லாம் வேதத்தில் தீர்க்கதரிசனமாக சொல்லியிருந்தபடி அவரில் நிகழ்ந்தன. அவர் நியாயப்பிரமாணத்தை பாலகனாக இருந்து வளர்ந்து வருகின்றவரையிலும் தொடர்ந்து தன்னில் நிறைவேற்றவேண்டிய கடமைப்பாட்டைக் கொண்டிருந்தார். அத்தனையையும் பிதாவின் சித்தப்படி அவர் முழுமையாக நிறைவேற்றியதாக வேதம் சொல்லுகிறது.

எத்தனை அருமையான நற்செய்தியை ஏசாயா நமக்கு நினைவுறுத்துகிறார். நமக்கொரு பாலகன் பிறந்தார். வரப்போகிற கிறிஸ்துமஸ் தினம் இந்தச் செய்தியைத்தான் நமக்குத் தருகிறது. இஸ்லாமிய தீவிரவாதத்தாலும், ஐசிலின் அக்கிரமச் செய்கைகளாலும், பாவத்தின் கோரத்தாலும் மனிதகுலம் தள்ளாடித் தடுமாறி எப்படியிருக்கப்போகிறதோ புதிய வருடமென்று அதை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில், வரப்போகும் கிறிஸ்துமஸ் நம்மத்தியில் பிறந்து வாழ்ந்து மரித்து உயிர்த்தெழுந்து விண்ணில் வீற்றிருக்கும் ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவான நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருமைப் பிறப்பை நினைவூட்டி அவர் மட்டுமே அளிக்கக்கூடிய கிருபையின் சமாதானத்தை எண்ணிப்பார்க்க நம்மை இருகரம் நீட்டி அழைக்கிறது.

நம்மத்தியில் பிறந்து வாழ்ந்திருக்கும் நம் பாலகன் எத்தகையவர் தெரியுமா? ஏசாயா சொல்லுகிறார்,

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

பாலகனாகிய இயேசுவின் தோளின் இருக்கிறது கர்த்தத்துவம். ஈடு இணையில்லாப் பெயர்களுக்கெல்லாம் சொந்தமான வல்லமையுள்ள தேவன் அவர். அந்த சமாதானப்பிரபு இலவசமாக, கிருபையின் மூலம் அளிக்கின்ற தேவ சமானத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? அல்லது கலக்கமும், குழப்பமும், துன்பமும் தொடர்ந்து உங்கள் இருதயத்தை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கின்றனவா? இந்தக் கிறிஸ்துமஸ் தினம் உங்களுக்குக் கொண்டுவருகிறது நல்ல செய்தி. நம் பாலகன் இயேசு தரும் சமாதானத்தை அவரை ஆண்டவராக விசுவாசித்து உங்கள் பாவங்களுக்கெல்லாம் அவரிடமிருந்து மன்னிப்புப்பெற்று ராஜாதி ராஜாவான அவருடைய ஆளுகைக்குள் வாருங்கள். வீணான உலகத்திற்கும் அதன் சுகங்களுக்கெல்லாம் புறமுதுகு காட்டி பாலகனாகப் பிறந்து நமக்கு வாழ்வளிக்க வந்திருக்கும் இயேசு கிறிஸ்துவிடம் அவர் தரும் அன்பை ருசிக்கப் பறந்தோடி வாருங்கள். என்னிடத்தில் வருகிறவர்களைத் தள்ளிவிட மாட்டேன் என்று சொல்லியிருக்கிறபடி இயேசு கிறிஸ்து உங்களைத் தன் கிருபையால் போஷித்து நித்திய வாழ்வளிப்பார்.

நமக்கொரு பாலகன் பிறந்தார்
நல்லதைச் செய்ய முடியாத நம்மைக்காக்க
நமக்கொரு குமாரன் தரப்பட்டார்
நரகத்திலிருந்து நித்திய விடுதலையளிக்க

இயேசு பாலகனை இனிதே நினைப்போம்
பாவவிடுதலைக்காக அவர் பாதம் பணிவோம்
மனந்திரும்புவோம்; மன்னிப்பு அடைவோம்
மகிழ்வோடு அவர் தரும் இரட்சிப்பை ருசிப்போம்

நாட்களைக் கடத்தி நேசரைத் துறந்து
பாவத்தைத் தொடர்வதால் பலன் நமக்கில்லை
காலத்தைப் போக்காது கிறிஸ்துவை விசுவாசித்தால்
மலரும் நம் வாழ்வு; மரகதப்பூப்போல.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 30 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

அமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்

கடந்த மாதம் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்குப் போய்வந்தேன். அமெரிக்காவில் ஆறு மாநிலங்களிலும், கனடாவில் இரு நகர்ப்புறங்களிலும் பயணம் செய்தேன். நவம்பரில் நிகழவிருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றி அமெரிக்கர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கிருந்தது. அதுபற்றிப் பலரிடம் பேசியிருக்கிறேன். பொதுவாகவே என்றுமிருந்திராதவகையில் நாட்டு அரசியல் மிகவும் மோசமான நிலையை அடைந்திருக்கிறது என்ற பொதுவான கருத்தை நான் எல்லோரிடமும் காணமுடிந்தது. அமெரிக்கா பியூரிட்டன் பெரியவர்களால் உருவாக்கப்பட்ட நாடு. ஒழுக்கமுள்ளவர்களாக, நேர்மையுள்ளவர்களாக, உறுதியானவர்களாக நாட்டுத் தலைவர்கள் இருக்கவேண்டுமென்பதிலெல்லாம் அந்நாடு சிரத்தை காட்டி வந்திருக்கின்றது. அத்தகைய கொள்கைகளை இன்று சமுதாயம் தூக்கியெறிந்துவிட்டு பில் கிளின்டன் காலத்தில் இருந்து ஹொலிவுட் பாணி அரசியலுக்குப் போய்விட்டிருக்கிறது என்பதை உணர்ந்து வருந்துகிற அநேகரை நான் சந்தித்தேன். ஒழுக்கம் அதிகளவுக்கு சீரழிந்துவிட்டிருக்கிறது, அதுவும் ஒபாமாவின் எட்டுவருட ஆட்சியில் நாடு மிகவும் மோசமாகிவிட்டிருக்கிறது என்பது பொதுவாகவே கிறிஸ்தவர்களின் கணிப்பாக இருந்தது. இந்த எண்ணங்களோடு தேர்தல் நேரத்தில் என்ன செய்வது என்ற ஆதங்கத்தில் கிறிஸ்தவர்கள் இருப்பதைக் கண்டேன். ஹிளரி அதிபராவது நாட்டுக்கு ஆபத்தானது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தபோதும் வழமையான குடியரசுக்கட்சி தலைவர் போலில்லாமல் முரண்பாடுகள் கொண்ட மனிதராக, அரசியல் அனுபவம் எதுவும் இல்லாதவராக இருந்த டிரம்ப்பை நம்புவதா இல்லையா என்ற பெரிய தலைவலியும் அவர்களுக்கிருந்தது. அவர்களைப் பொறுத்தவரையில் அதிபராவதற்கு தகுதியற்றவர்களாயிருந்த இரண்டு தலைவர்களில் யாருக்கு வாக்களிப்பது என்ற நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. யாருக்கும் வாக்களிக்கக்கூடாது என்பவர்களையும், இரண்டு மோசமான தலைவர்களில் குறைந்தளவு மோசமானவருக்கு வாக்களிக்கலாம் என்ற எண்ணங்களை முன்வைப்பவர்களையும் கண்டேன். லொஸ் ஏன்ஜலிஸ் நகரில் கிறிஸ்தவரல்லாத ஒருவரும் இந்த வருடத் தேர்தல் குழப்பமுள்ளதாகவே இருக்கிறது என்ற கருத்தை முன்வைத்தார்.

அமெரிக்காவுக்கு வெளியில் ‘லிபரல்’ சமுதாயத்தில் (அதாவது கிறிஸ்தவப் போதனைகள் எதற்கும் மதிப்பளிக்காத சோஷலிஸ சமுதாயப்போக்கு) வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு அமெரிக்கா சமுதாயத்தைப் புரிந்துகொள்ளுவது கொஞ்சம் கஷ்டந்தான். நம்மைப் பொறுத்தவரையில் எந்தக் கட்சி தேர்தலில் நின்றாலும் எல்லாக் கட்சிகளுமே லிபரல் கட்சிகளாக, வேத ஒழுக்கத்திற்கும், வேத சமுதாயப் போக்கிற்கும் மதிப்பளிக்காதவையாக இருக்கும். ஆகவே, இரண்டு மோசமான கட்சிகளில் எது குறைந்தளவு ஆபத்தை விளைவிக்கும் என்ற அடிப்படையில் வாக்களித்தே நமக்குப் பழக்கமாகிவிட்டது. நான் வாழும் நியூசிலாந்தைப் பொறுத்தவரையில் இதுதான் உண்மை. ஒன்று சோஷலிஷ லிபரல் கட்சியான தொழிற் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது சமூகக் கண்ணோட்டத்தைப் பொறுத்தவரையில் லிபரல் கட்சியானாலும் பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் தனியார் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் தேசியக் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும். இந்த இரண்டும் மோசமான கோட்பாடுகளை முன்வைத்தால் ஆபத்துத்தான். இது நமக்குப் பழகிப்போய்விட்டது. ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரையில் கிறிஸ்தவ பாதிப்பு சமுதாயத்தில் தொடர்ந்தும் அதிகமாக இருப்பதால் குடியரசுக்கட்சி இதுவரை கிறிஸ்தவர்களுக்கு சார்பானதாக இருந்து வந்திருக்கிறது. அத்தோடு பெருமளவுக்கு கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டவர்கள் அரசியலில் இருந்துவருகிறார்கள்; கிறிஸ்தவ சமுதாயப் பார்வையையும் வலியுறுத்தி வருகிறார்கள். அமெரிக்க சட்ட அமைப்பும் மத சுதந்திரத்தை வலியுறுத்திப் பாதுகாத்து வருவதாக இருக்கிறது.

Donald-Trumpஇப்போது அதிபர் தேர்தல் முடிந்துவிட்டிருக்கிறது. வரலாறு காணாதவகையில் டொனல்ட் டிரம்ப் வெற்றி கண்டிருக்கிறார். அரசியல் வல்லுனர்கள், தேர்தல் கணிப்பாளர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் என்று எல்லோருமே அதிர்ச்சியடையும்வகையில் அவர்களுடைய கணிப்புகளையெல்லாம் தூள் தூளாக்கிவிட்டு டிரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார். சி. என். என். போன்ற லிபரல் தொலைகாட்சிகள், வாஷிங்டன் போஸ்ட் போன்ற லிபரல் செய்தித் தாள்கள் மற்றும் ஹொலிவுட் நடிகர்கள் என்று லிபரல்கள் அனைவரும் டிரம்ப்பை வெறுத்து அவர் மீது ஒரு வருடத்துக்கு மேல் தூற்றுதல்களை வாரி வாரி இறைத்திருக்கிறார்கள். இந்தளவுக்கு வெறுக்கப்பட்டவர்களும், அசிங்கப்பேச்சுக்கு உள்ளானவர்களும் எவரும் இல்லை எனலாம். இத்தனைக்கும் மத்தியில் டிரம்ப்பை நம்பி மக்கள் அவருக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். இது எப்படி நிகழ்ந்தது என்று நம்பமுடியாமல் அவருடைய எதிரிகள் எல்லோரும் மூளை குழம்பிப்போய் தவிக்கிறார்கள். இது சாதாரண வெற்றியல்ல; கொங்கிரஸ், செனட் என்று அத்தனையையும் வென்று மிகவும் பலமுள்ள அரசாங்கத்தை அமைத்திருக்கிறார் டிரம்ப். அமெரிக்க குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் தலைவரான போல் ரயன், ‘இந்த வெற்றிக்கு டிரம்ப்பே முழுக்காரணம்’ என்று டிரம்பின் வெற்றியை அங்கீகரித்திருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரையில் டிரம்ப் எப்படிப்பட்ட அதிபராக இருக்கப்போகிறார் என்பது தெரியாது. அவர் முரண்பாடுகள் கொண்டவர் என்பதை அவருடைய தேர்தல்காலப் பேச்சுக்கள் சுட்டியிருக்கின்றன. இருந்தும் டிரம்ப் ஒரு நல்ல தலைவராக இருக்கப்போவதில்லை என்று நம்மால் சொல்லிவிட முடியாது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் ஒன்று மட்டும் தெரிகிறது; கர்த்தர் தன்னுடைய கோபத்தின் மத்தியிலும் அமெரிக்க கிறிஸ்தவர்களின் ஜெபங்களைக் கேட்டு அவர்களுக்கு வரவிருந்த பேராபத்துகளைத் தவிர்த்திருக்கிறார். டிரம்ப்பை வெறுக்கின்ற அநேகர் டிரம்ப்பை மட்டுமே பார்க்கிறார்களே தவிர அமெரிக்க சமுதாயத்திற்கு ஏற்பட்டிருந்த போராபத்தை உணர மறுக்கிறார்கள். லிபரல் சமுதாயப் பார்வையைக் கொண்டவர்களுக்கு அதிலெல்லாம் அக்கறை இருக்காது. ஹிளரி கிளின்டன் தேர்தல் காலத்தில், குழந்தை பிறப்பதற்கு ஒரு நாளுக்கு முன்புகூட அதைத் தாயின் வயிற்றில் கருக்கலைப்பு செய்வதில் தவறில்லை என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இது ஆறாம் கட்டளைக்கு எதிரானது. அமெரிக்க சட்டங்களுக்கெல்லாம் எதிரான ஒரு நிலைப்பாடு இது. ஹிளரி அதிபராகியிருந்தால் இது நிச்சயம் சட்டமாகியிருக்கும். அமெரிக்க சுப்ரீம் கோர்ட் மிகவும் அதிகாரம் கொண்டது. அது அமெரிக்காவின் சட்ட அமைப்பைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பைக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் மரணமான அன்டோனின் ஸ்காலியா என்ற அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி பழமைவாதி. அவருடைய இடத்தில் இன்னொருவரையும் இன்னும் இரு நீதிபதிகளையும் புதிய அதிபர் சுப்ரீம் கோர்ட்டுக்கு நியமிக்கும் நிலை உருவாகியிருக்கிறது. நிச்சயமாக ஹிளரி கிளின்டன் லிபரல் நீதிபதிகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு நியமித்திருப்பார். அப்படி நிகழ்ந்திருக்குமானால் நாட்டின் நிலை மிகமோசமாகியிருக்கும். ஜனநாயகக் கட்சியின் லிபரல் கொள்கைகள், திருநங்கையருக்கு பொதுக் கழிப்பறைக்குள் போகும் அனுமதி உட்பட நாட்டில் சட்டமாகியிருந்திருக்கும். இத்தகைய லிபரல் ஒழுக்கக்கேடு மற்றும் லிபரல் சமுதாய மாற்றங்களை ஜனநாயகக் கட்சி அனுமதித்திருக்கும். அதிலிருந்து அமெரிக்கா பழமைவாதத்துக்குத் திரும்புவதென்பது நடவாத காரியமாகியிருக்கும். இந்தப் போராபத்திலிருந்து கர்த்தர் அமெரிக்காவைக் காப்பாற்றவில்லை என்று எவரால் சொல்ல முடியும்? டிரம்ப் அதிபராகியிருப்பதால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தொடர்ந்து கன்சர்வேடிவ் பழமைவாதிகளாக இருக்கவும், அமெரிக்க குடியரசின் சட்ட அமைப்பின் பாதுகாப்புக்கும், மத சுதந்திரத்திற்கும் தற்காலிக உத்தரவாதமும் கிடைத்திருக்கிறது. கிறிஸ்தவர்களும் ஓரளவுக்கு நிம்மதியாக மூச்சுவிட முடிந்திருக்கிறது.

சுவிசேஷ கிறிஸ்தவத்தின் பலம்

அமெரிக்க நாட்டைப்போல கர்த்தரின் பொதுவான கிருபை அதிகம் காணப்படும் நாட்டை நான் கண்டதில்லை. சுவிசேஷத்தின் தாக்கமும் அதனால் ஏற்பட்டிருக்கும் சமுதாய விளைவுகளும் அந்த நாட்டைப் பெரிதும் பாதித்திருப்பதைப்போல வேறு நாடுகளில் அதிகம் காணமுடியாது. ஐரோப்பா, கனடா போன்ற நாடுகள் ஒழுக்கத்தை மூட்டை கட்டிவைத்துவிட்டு ஹொலிவுட் பாணியில் என்றோ போய்விட்டன. அமெரிக்காவில் இன்றுவரை சுவிசேஷ கிறிஸ்தவர்களின் பலம் வேறு எங்கும் இல்லாதவகையில் இருந்துவருகிறது. உதாரணத்திற்கு திருநங்கையர்கள் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளுக்குப் போகலாம் என்ற நடைமுறையை டார்கட் (Target) என்ற வர்த்தக நிறுவனம் அனுமதித்தபோது அமெரிக்க கிறிஸ்தவர்கள் வட கரலைனா மாநிலத்தில் அந்நிறுவனத்தை அடியோடு புறக்கணித்து அதன் வர்த்தகத்திற்கு பெரும் இடறலை ஏற்படுத்தினார்கள். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல லிபரல் விளையாட்டு, வர்த்தக நிறுவனங்கள் அம்மாநிலத்தைவிட்டு வேறு மாநிலங்களுக்குத் தங்களுடைய வர்த்தக ஸ்தாபனங்களை நகர்த்தியபோதும் வட கரலைனா இன்றுவரை அசைந்துகொடுக்கவில்லை. அந்தளவுக்கு அந்த மாநிலத்தில் சுவிசேஷ கிறிஸ்தவர்கள் பலமுடன் இருந்துவருகிறார்கள். கிறிஸ்தவர்களால் நடத்தப்படும், மிகவும் பிரபலமான சிக் பிலே (Chick-fil-A) என்ற உணவுக்கூடம் ஞாயிறு தினத்தில் வர்த்தகம் செய்வதில்லை என்பதை வழக்கத்தில் கொண்டிருப்பதோடு அதை வெளிப்படையாகக் கூறி விளம்பரப்பலகைகளை எல்லாப் பகுதிகளிலும் ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க பல்கலைக்கழகங்களிலும் சுவிசேஷத்தின் தாக்கத்தை அதிகம் காணலாம். லூசியானா மாநிலத்தில் 5000 பேர் கொண்ட ஒரு சிறைச்சாலையில் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியொன்று நடந்துவருகின்றது. அதில் பயிற்சிபெற்று தேர்ந்தவர்கள் சிறைக்குள்ளேயே சபைநிறுவி பிரசங்கித்து வருகிறார்கள். இந்தளவுக்கு கிறிஸ்தவர்கள் தங்களுடைய நம்பிக்கைகளை வெளிப்படையாக, தைரியமாக வெளிப்படுத்தி சுதந்திரத்தோடு வாழ்ந்துவருவதை வேறு நாடுகளில் நாம் காணமுடியாது. லிபரலிசம் அமெரிக்காவைப் பெரிதும் பாதித்திருக்கும்போதும் சுவிசேஷ கிறிஸ்தவத்தின் தாக்கம் அமெரிக்க சமுதாயத்தில் இன்றும் தொடர்ந்திருந்துவருவதை நான் காண்கிறேன். அதை வேறு உலக நாடுகளில் நான் கண்டதில்லை. அந்நாட்டு சட்ட அமைப்பு மத சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் தந்து அதை வழியுறுத்துகிறது. இருந்தபோதும் அதற்குப் பேராபத்து வந்திருப்பதையும் அமெரிக்க கிறிஸ்தவர்கள் இன்று உணராமலில்லை. அதுவே அவர்களை டிரம்புக்கு வாக்களிக்க வைத்திருக்கிறது.

ஜெபக்கூட்டங்கள்

bibleversesஅமெரிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் பெனிஹின் போன்ற பிரசங்கிகளால் செழிப்பு உபதேசப் போலிப்போதனைகளும், வேறு லிபரல் போதனைகளும் ஏனைய நாடுகளைப்போல மலிந்து காணப்பட்டபோதும் அடிப்படை சுவிசேஷக் கோட்பாட்டைப் பின்பற்றி வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் கிறிஸ்தவர்கள் பரந்து காணப்படுகிறார்கள். அத்தகைய விசுவாசம் கொண்ட சபைகளும், நிறுவனங்களும் நாட்டில் அதிகம் உள்ளன. சீர்திருத்தவாத போதனைகளில் அதிக அக்கறை காட்டிவரும் கிறிஸ்தவர்களும் அங்கு இன்று அதிகரித்து வருகிறார்கள். எனக்குப் பரிச்சயமான அமெரிக்க கிறிஸ்தவ சபைகளில் என்னை உணர்ச்சிவசப்பட வைத்த ஒரு விஷயம் அவர்களுடைய விசுவாசமுள்ள, நேர்மையான, உறுதியான ஜெப வாழ்க்கைதான். ஜெபிப்பது அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு வழக்கமாக இல்லாமல் அதுவே வாழ்க்கையாக மாறியிருக்கிறது. அங்கு நான் கண்டதைப்போன்ற விசுவாசமுள்ள ஜெபவாழ்க்கை முறையை வேறெங்கும் நான் கண்டதில்லை. அந்நாட்டு கிறிஸ்தவர்கள் தங்களுடைய விசுவாசத்தில் தீவிர அக்கறை காட்டுகிறார்கள். அவர்களுடைய பேச்சிலும் செயலிலும் அவர்களுடைய விசுவாசத்தின் வல்லமையைக் காணமுடிகின்றது.

இன்று எல்லா நாடுகளிலுமே கிறிஸ்தவ சபைகளில் வாரத்தின் மத்தியில் ஜெபக்கூட்டத்தை நடத்துவது அருகி வந்துகொண்டிருக்கிறது. ஒரு ஆராதனையோடு ஓய்வு நாள் முடிந்துவிட்டது என்ற எண்ணப்பாடே பொதுவாக அநேக கிறிஸ்தவர்கள் மத்தியில் எங்கும் இருந்துவருகிறது. ஓய்வு நாளில் இரண்டு ஆராதனைகளை நடத்தி வார மத்தியில் ஜெபக்கூட்டம் நடத்துகிற சபைகளைப் பழைய பஞ்ஞாங்கமாகக் கருதுவது அதிகரித்துவருகிறது. (அத்தகைய பழைய பஞ்ஞாங்கத்தைப் பின்பற்றுகிறவர்களில் நானும் ஒருவன்). இதற்கு மத்தியில் தொடர்ந்து இம்முறையைப் பின்பற்றி விசுவாசமாக திருச்சபை நடத்தும் சபைகள் அங்கு அநேகம். அவர்களுக்கும் எதிர்ப்பு இல்லாமலில்லை. ஜெபக்கூட்டத்திற்கு எல்லோருமே போவதில்லை. இருந்தபோதும் அவர்களுடைய ஜெபக்கூட்டங்களில் மெய்யான விசுவாசத்தோடும் பாரத்தோடும் ஜெபங்கள் ஏறெடுக்கப்படுவதை நான் இருபது வருடங்களுக்கு மேலாகக் கவனித்து வந்திருக்கிறேன். அத்தகைய ஆழமான விசுவாசம் கொண்ட உறுதியான ஜெபங்கள் இன்றும் தொடர்கின்றன. உலக நாடுகளில் சுவிசேஷம் பரவ வேண்டும் என்ற அக்கறை அவர்களுக்கு அதிகமாக இருப்பதோடு அத்தகைய ஊழியங்களுக்காக அவர்கள் விசுவாசத்தோடு ஜெபிக்கிறார்கள். ஏனைய நாட்டுச் சமுதாய ஆத்துமாக்களின் பெயர்களும், ஊர் பெயர்களும் சொல்லுவதற்கு கடினமானவையாக இருந்தபோதும், அந்நாடுகளுக்குப் போகாமலும், அந்த ஆத்துமாக்களை ஒருபோதும் சந்திக்காமல் இருந்தபோதும் அதையெல்லாம் பொருட்படுத்தாது அவர்களுக்காக விசுவாசத்தோடு ஜெபிக்கும் அவர்களுடைய விசுவாசம் என்னைப் பொறுத்தவரையில் உயர்ந்ததாகவே பட்டது. இந்தவிதத்தில் சபை மக்களை வளர்த்துவருகின்ற போதகர்களைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. மெய்யான போதகர்களால் மட்டுமே இத்தகைய ஆசீர்வாதத்தைத் தங்களுடைய ஊழியத்தில் சந்திக்க முடியும். ஜெபத்தில் எந்தளவுக்கு உயர வேண்டியவர்களாக இருக்கிறோம் என்ற மனநிலையோடு நான் திரும்ப நேர்ந்தது.

ஜோர்ஜ் விட்பீல்ட்

george-whitefieldஅமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் போதக நண்பர் ஒருவர் என்னை ஜோர்ஜ் விட்பீல்ட் பிரசங்கம் செய்திருந்த ஓர் ஊருக்கு அழைத்துப் போனார். பச்சைப் பசேல் என்ற பரந்த வெளியில் அழகான சூழலைக் கொண்டிருந்த ஊர் அது. பென்சில்வேனியாவில் ஆமிஷ் (Amish) சமுதாயத்தை இந்தப் பகுதிகளில் காணலாம். மிகவும் பழமையான சமுதாயப் போக்கினைப் பின்பற்றும் மக்கள் ஆமிஷ் மக்கள். எந்த நவீன வசதிகளையும் அவர்கள் பின்பற்றுவது குறைவு. அவர்களுடைய உடைகள்கூட பழமையானதாக இருக்கும். உதாரணத்திற்கு அவர்கள் மின்சாரத்தைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாட்டினைக் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் மின்சாரத்தைப் பயன்படுத்தமாட்டார்கள்; ஆனால், தங்களுடைய தொழிலுக்காகக் கொண்டிருக்கும் கூடத்தில் அதைப் பயன்படுத்துவார்கள். அவர்கள் பயணிக்கும் வண்டியும் குதிரை வண்டிதான். விவசாயத்திற்காக அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களும் பழமையானதாக இருக்கும். ஆமிஷ் சமுதாயம் பெரும்பாலும் வெளியுலகத் தொடர்பைத் தள்ளிவைத்து வாழ்ந்து வருகிறது. என் நண்பரொருவர் இவர்கள் மத்தியில் சுவிசேஷத்தைப் பலவருடங்கள் சொல்லி வந்திருக்கிறார். அது திருச்சபை அமைப்பதில் போய் முடியும் ஒரு கட்டத்தை இப்போது நெருங்கிக்கொண்டிருக்கிறது.

ஜோர்ஜ் விட்பீல்ட் பிரசங்கம் செய்திருந்த இந்த ஊரில் ஒரு பிரஸ்பிடீரியன் சபை இன்றும் இருந்து ஆராதனை நடத்தி வருகிறது. 1800களில் கட்டப்பட்ட சபை அது. சாமுவேல் டேவிஸ் போன்றோரும் இங்கு பிரசங்கம் செய்திருக்கிறார்கள். விட்பீல்ட் பிரசங்கம் செய்த இடத்தில் இருந்த ஒரு மரத்தை நண்பர் சுட்டிக்காட்டினார். ஆயிரக்கணக்கானவர்கள் அதிகாலையில் பனியையும் இருட்டையும் பொருட்படுத்தாமல் பரந்த வெளியில் கூடிவந்து விட்பீல்டின் பிரசங்கத்தை அக்காலத்தில் கேட்டிருக்கிறார்கள். ஜோர்ஜ் விட்பீல்டின் பிரசங்கங்கள் அமெரிக்கர்கள் மத்தியில் அன்று கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டன. எத்தகைய கிறிஸ்தவ அடித்தளத்தை ஆசீர்வாதமாகக் கொண்டமைந்திருக்கிறது இந்நாடு என்பதை எண்ணிப்பார்க்காமல் இருக்கமுடியவில்லை. இத்தகைய நாட்டில் இன்று நடந்துவருகின்ற நிகழ்வுகள் நிச்சயம் அந்நாட்டுக்காக ஜெபிக்கவேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன. நாட்டை உருவாக்கிய அருமையான கிறிஸ்தவ தலைவர்களின் வழிமுறைகளையும், ஆத்மீக வெளிப்படுத்தல்களால் உருவாகிய கிறிஸ்தவ பாரம்பரியத்தையும் துச்சமாகக் கருதி வெகுவேகமாக லிபரல் சமுதாய வாழ்க்கையில் நேசம் காட்டி அதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது அமெரிக்கா. ஆபிரகாம் பரந்த வெளியை லோத்துவுக்குக் காட்டி உனக்குப் பிடித்த பகுதியைத் தெரிந்துகொள் என்று சொன்னபோது, கண்ணுக்குக் கவர்ச்சியாக இருந்த சோதோம், கொமோரா நகரங்கள் இருந்த பகுதியை லோத்து தெரிந்துகொண்டான். அது எத்தனைப் பெரிய தவறு! அந்தத் தவறை இன்று செய்து லிபரல் சமுதாய வாழ்க்கையைத் தெரிந்துகொண்டிருக்கிறது அமெரிக்க சமுதாயத்தின் ஒருபகுதி. என்றுமில்லாதவகையில் சுவிசேஷப் பிரசங்கங்கள் விட்பீல்டின் காலத்தைப் போல இன்று தேவையாக இருக்கிறது இந்நாட்டுக்கு.

நியூயோர்க்

நியூயோர்க் நகரில் புருக்ளின் (Brooklyn) பகுதியில் பிரசங்கம் செய்யச் சென்றிருந்தபோது சில நண்பர்களோடு இரவு உணவுக்காக நியூயோர்க்கின் மன்ஹேட்டன் பகுதிக்குப் போயிருந்தேன். எத்தனை தடவை இங்கு வந்தாலும் இந்த மாபெரும் நகரைப் பார்த்து ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. வானுயர்ந்த கட்டடங்களும், மஞ்சள் நிற டாக்சிகளும், கோடீஸ்வர யூதர்களும், அப்பார்ட்மென்ட் வாழ்க்கை வாழும் உயர் மத்தியதர மக்களும் நிறைந்த ‘கொங்கிரீட் நகரம்’ என்று அழைக்கப்படும் நியூயோர்க் நிச்சயமாக ஒரு பெரும் நகரந்தான் (Big apple). நியூயோர்க் மக்கள் வாழ்க்கையே வேறு. இந்நகர் தனக்கென ஒரு கலாச்சாரத்தையே கொண்டிருக்கிறது. நியூயோர்க் சிந்தனை, நியூயோர்க் பேச்சு, நியூயோர்க் வாழ்க்கை என்றெல்லாம் பேசும் அளவுக்கு அமெரிக்காவின் ஏனைய நகரங்களை விட மிகவும் வித்தியாசமானது நியூயோர்க்.

புருக்ளினில் கருப்பர்களைப் பெரும்பாலாகக் கொண்டிருந்த ஒரு சபையில் நான் முதன் முறையாகப் பிரசங்கித்தேன். நியூயோர்க்கில் இந்த சபை இருந்தபோதும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களாகத்தான் இருந்தார்கள். கிறிஸ்துவில் அன்பையும் விசுவாசத்தையும் கொண்டிருந்து வேதப் பிரசங்கங்களைக் கேட்பதிலும், ஆராதனை செய்வதிலும் ஊக்கம் காட்டிவரும் இந்த சபை சீர்திருத்த சத்தியத்தில் ஆர்வம்காட்டி வளர்ந்து வருகின்றது. புருக்லீன் நியூயோர்க்கின் ஐந்து பரோக்களில் (Borough) பெரியது. சபை இருந்த பகுதி அதிகமாக கருப்பர்கள் வாழும் பகுதி. வீடுகள் கட்டப்பட்டிருந்த முறை வித்தியாசமானதாக இருந்தது. அவை கட்டப்பட்டிருக்கும் விதம் எத்தகைய சமுதாய தரத்தில் உள்ளவர்கள் அந்தப் பகுதியில் வாழ்கிறார்கள் என்பதை விளக்குவதாக இருந்தது.

freedom_tower_newநியூயோர்க்கின் டுவின் டவர் தீவிரவாதிகளால் அழிக்கப்பட்டபிறகு அதே இடத்தில் இன்று ‘சுதந்திரக் கட்டடம்’ விண்ணைத் தொடும்விதத்தில் உயர்ந்து நிற்கிறது. எங்களை எவரும் அத்தனை விரைவில் அழித்துவிட முடியாது என்று சவால் விடும் விதத்தில் அது நிமிர்ந்து நிற்கிறது. கட்டடத்தைச் சுற்றி இன்று எல்லையற்ற பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்தும் அங்கு வேலை நடந்து வருகிறது. பல வருடங்களுக்கு முன் டுவின் டவரில் நின்ற நினைவு மனதில் வந்தது. அதற்கு அடுத்த வருடமே அந்தக் கட்டம் தாக்குதலுக்கு உள்ளாகிய நினைவும் கூடவே வந்தது. கட்டடம் தாக்கப்பட்ட வருடம் அக்டோபர் மாதத்தில் அது இருந்த பகுதியைச் சுற்றிப்பார்த்திருக்கிறேன். அந்தக் காட்சிகளும் மனதில் சித்திரமாக ஓடின.

அமெரிக்கா தற்செயலாக உருவான ஒரு நாடல்ல. அது கிறிஸ்தவ சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்டு கர்த்தரால் உருவாக்கப்பட்ட நாடு. கர்த்தரின் ஆசீர்வாதத்தை அதிகளவுக்கு அனுபவித்து வந்திருக்கும் நாடு. உலகத்தின் தலைமை நாடாக இருந்து மற்ற தேசங்களுக்கு வழிகாட்டி வந்திருக்கும் நாடு. உலகின் பாதுகாப்புக்கும் அதிகம் பணி செய்திருக்கும் நாடு. எல்லாவற்றுக்கும் மேலாக கிறிஸ்தவத்தின் தாக்கத்தைப் பெருமளவுக்கு தன் சமுதாயத்தில் கண்டிருக்கும் நாடு. இந்நாட்டில் ஏற்படும் லிபரல் மாற்றங்களும், கிறிஸ்தவத்திற்கெதிரான சமூக மாற்றங்களும் உலக நாடுகளுக்கு நன்மை தரப்போவதில்லை. அது நிகழாமல் இருக்க கர்த்தர் மட்டுமே துணைசெய்ய முடியும். புதிய அதிபரும் கொங்கிரசும், செனட்டும் நாட்டை நல்ல நிலைமைக்கு இட்டுச்செல்ல அந்நாட்டிற்காக ஜெபிக்க வேண்டிய கடமை உலகின் எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் உண்டு. கர்த்தர் அமெரிக்காவை ஆசீர்வதிக்கட்டும்.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 30 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

சுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2

‘சபையை உன் தாயாக நீ எண்ணாவிட்டால் கடவுளை உன் ஆண்டவராகக் கொண்டிருக்க முடியாது’ என்று சபைப்பிதாக்களில் ஒருவரான சிப்பிரியன் சொல்லியிருக்கிறார். ஜோன் கல்வின் சொல்லுகிறார், ‘கர்த்தர் தன்னுடைய குழந்தைகளை சபையின் மார்பில் அரவணைத்து வைத்திருக்கிறார். அவளுடைய ஊழியத்தினாலும் உதவிகளினாலும் பிள்ளைப்பருவத்தில் அவர்கள் போஷிக்கப்படுவதற்காக மட்டுமல்ல, வளர்ந்த பின்னும் அவளுடைய தாய்ப்பாசத்தினாலும், அக்கறைகொண்ட கவனிப்பினாலும் அவர்கள் முதிர்ச்சி அடைந்து தங்களுடைய விசுவாசத்தின் இலக்கை அடைவதற்காகவும் சபையாகிய தாய் அவர்களைத் தன் நெஞ்சில் வைத்திருக்கிறாள்’ என்கிறார். சீர்திருத்தவாதியான ஜோன் கல்வின் இந்தளவுக்கு திருச்சபையை அறிந்துவைத்திருந்தார்; அதற்கு மதிப்பளித்திருக்கிறார். இதைப் பெருமளவுக்கு அறியாமலும் உணராமலும் இன்றுவரையில் இருந்து வருகிறது நம்மினம்.

இதற்கு முன் வந்த ஆக்கத்தில் சபை அங்கத்துவம் என்பது இல்லாமலேயே திருச்சபை அமைக்க முற்படும் சிரிப்புக்கிடமான செயலைப்பற்றியும், அது இல்லாமலேயே சபை என்ற பெயரில் இயங்கிவரும் அநேக அமைப்புகளுக்குமான காரணங்களை விபரமாகக் கவனித்திருக்கிறோம். இந்த நிலைமை மாறவும், திருச்சபை நம்மினத்தில் வேதபூர்வமாக அமைவதற்கும் என்ன வழி? கீழே படிப்படியாக நான் விளக்கப்போகிற வேதம் போதிக்கும் ஏழு அம்சங்களை நம்மினத்தை மனதில்வைத்தே எழுதியிருக்கிறேன்.

(1) முதலில், திருச்சபை பற்றிய வேதபூர்வமான தெளிவான போதனைகள் நம்மத்தியில் இன்று அவசியமாகத் தேவைப்படுகின்றன. ஆரம்பத்தில் இருந்தே அத்தகைய போதனைகள் தெளிவான முறையில் நம்மினத்தில் கொடுக்கப்படவில்லை. சுவிசேஷம் சொல்ல வேண்டும் என்பதில் நம்மக்களுக்கு இருக்கின்ற ஆர்வம் அதன் இறுதி இலக்கான திருச்சபை பற்றியதில் என்றுமே இருந்ததில்லை; இப்போதும் இல்லை. எனவே திருச்சபை என்ற பெயரில் தங்களுடைய மனதில்பட்டதைச் செய்வதும் அல்லது நிறுவனங்களை அமைத்து ஊழியம் செய்வதும் இன்றுவரை நம்மினத்தில் தொடர்கின்றது. எனவே திருச்சபை பற்றிய போதனைகள் தெளிவாகக் கொடுக்கப்படாதவரையிலும், அதுபற்றி விளக்கும் நூல்கள் எழுதப்பட்டு பரவலாக ஆத்துமாக்களைப் போய்ச்சேராதவரையிலும் நிலைமை மாறுவது கடினமே. சீர்திருத்தப் போதனைகளில் நாட்டம் காட்டி வருகிறவர்கள் மத்தியிலும்கூட இன்றும் திருச்சபை வேதபூர்வமான முறையில் அமைக்கப்படாமலிருக்கின்றன. ஒரே போதகரோ அல்லது அவருடைய குடும்பம் போப்புப்போல இருந்து செயல்பட்டு வருவதோடு, அங்கத்துவ அமைப்புக்கோ, சபைக்கூட்டங்களுக்கோ இடங்கொடுக்காது கமிட்டிகள் அமைத்து சபை நடத்திவருகின்ற அமைப்புகளாகவே அவை இருந்துவருகின்றன; நிச்சயம் ஓரிரு விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்யும். அனுபவத்தில் அறிந்துவைத்திருப்பதைத்தான் இங்கே சொல்லுகிறேன். உள்ளூர் சபை போதகர்களோ, உதவிக்காரர்களோ அங்கத்துவ அமைப்போ இல்லாமல் ஒரே போதகரின்கீழ் இருபது முப்பது வருடங்கள் இருந்து வருகின்ற வேதஆதாரமற்ற செயல்கள் கேட்பாரின்றி இன்றும் தொடருகின்றன. இதையும்விட உள்ளூர் சபை என்ற பெயரில் இருக்கும் பத்து இருபது அமைப்புகள் ஒரே மனிதனின் ஆட்சியின் கீழ் எந்தப் போதகரையும், சபை அமைப்பையும் கொண்டிராமல் இயங்கிவரும் அலங்கோலமும் நம்மினத்தில் தொடர்கின்றது. ஏன் என்று கேட்டால் நம்பக்கூடிய தலைவர்கள் அவற்றைக் கொண்டு நடத்துவதற்கு இல்லை என்று பதில் கிடைக்கும். நம்பக்கூடியவர்களை இவர்கள் ஏன் தயார்செய்வதில்லை என்று நம்மால் கேட்காமல் இருக்க முடியவில்லை. இதெல்லாம் எதைச் சுட்டுகிறது? வேதம் தெளிவாகப் போதிக்கும், கர்த்தர் நேசிக்கின்ற திருச்சபை பற்றி இருந்து வரும் பெரும் அறியாமையைத்தான்.

முறையாக வேதபூர்வமாக அமைக்கப்பட்டிருக்கும் திருச்சபைகளில் இருந்து வளர்ந்து அனுபவம் பெறாதவர்களே நம்மினத்தில் இருந்து வரும் அநேக போதகர்கள். இதுவும் திருச்சபை ஒழுங்கற்று காணப்படுவதற்கு பெருங்காரணம். டாக்டர் ஒருவர் செயல்முறை அனுபவம் இல்லாமல் டாக்டராக முடியாது. வைத்தியசாலையில் நர்சாக இருக்கும் ஒருவர் அதில் அனுபவம் இல்லாமல் அந்தப்பணியைச் செய்ய முடியாது. அதேபோல்தான் இன்ஜினியர் வேலை செய்கிறவர்களும், மின்சாரத்துறையில் பணிபுரிகிறவர்களும். ஆனால், போதகப்பணி ஒன்றுதான் நம்மினத்தில் எந்தச் செயல்முறை அனுபமும் இல்லாமல் பெருந்தொகையானவர்கள் செய்துவருகிற பணியாக இருக்கிறது. கர்த்தர் அழைத்திருக்கிறார் என்ற அவர்களுடைய பேச்சைச் தவிர வேறு எந்தவிதமான இலக்கணங்களும் அவர்களுக்கு இருப்பதில்லை. ஆவிக்குரிய பணிக்கு அனுபவம் தேவையில்லை என்ற அதிகப்பிரசங்கித்தனமான எண்ணமும் இதற்குக் காரணமோ தெரியவில்லை. மேலைநாட்டுத் திருச்சபைகளில் திருச்சபை அனுபவம் இல்லாதவர்களை போதகர் பணிக்கு சபைகள் நியமிப்பதில்லை. எனக்குத் தெரிந்த ஒரு தமிழ் சபையில் வெறும் உலக வேலை செய்துவந்த ஒருவன், இந்துவாக இருந்து கிறிஸ்தவனாக மாறி வைராக்கியமுள்ளவனாக இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக போதக ஊழியத்தில் நியமிக்கப்பட்டிருக்கிறான். இதைப்போன்ற கொடுமை இருக்கமுடியாது. வேத ஞானமோ, பிரசங்க வரமோ, இறையியல் பயிற்சியோ, போதகப் பயிற்சியோ, ஆத்துமாக்களோடு பழகி வழிநடத்தும் அனுபவமோ எதுவுமே இல்லாமல் வெறும் பிணி தீர்க்கும் ஜெபக்கூட்டத்தை வாரத்துக்குப் பல தடவைகள் நடத்தி வருவதைத் தவிர இந்த மனிதனால் எதுவுமே செய்யமுடியாது. உண்மையில் அதைத்தான் அவர் செய்துவருகிறார். தமிழினத்தைப் பிடித்திருக்கின்ற இத்தகைய ஆவிக்குரிய பின்னடைதலை எந்தப்பெயரில் அழைப்பது?

spiritual-anmஇன்றைக்கு திருச்சபை பற்றி தமிழில் விளக்கும் நூல்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இருப்பவையும் வேதபூர்வமான விளக்கங்களை அளிப்பதில்லை. போதகர்கள் என்ற பெயரில் பணிசெய்து வருகிறவர்களும் அதுபற்றித் தெரிந்திருந்தாலும் அந்தப் போதனைகளைக் கொடுக்கமாட்டார்கள். பொதுவாகவே அதைக் கொடுக்காமல் இருப்பதற்குக் காரணம் தன்னலந்தான். உண்மை தெரிந்துவிட்டால் ஆத்துமாக்கள் தொல்லை செய்வார்களே என்ற பயந்தான். அல்பர்ட் என். மார்டின் எழுதி நாம் தமிழில் வெளியிட்டுள்ள ‘அழிவில்லாத ஆத்தும ஆலோசனைகள்’ என்ற நூல், அவருடைய பல்லாண்டுகால வாழ்நாள் திருச்சபைப் பணியின் பிரதிபலிப்பாக இருக்கிறது. திருச்சபை எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக அதில் தெரிவித்திருக்கிறார். சுவிசேஷம், கிறிஸ்தவ வாழ்க்கை என்பதில் ஆரம்பித்து திருச்சபை அமைப்பு, திருச்சபை வாழ்க்கை என்பது பற்றியும் எழுதியிருக்கிறார். இது பலதடவை வாசித்துப் பயன்படுத்தப்பட வேண்டிய நூல். தன்னலம் இல்லாத திருச்சபை பற்றிய உண்மையான வாஞ்சையுள்ளவர்களே இதைப் பயன்படுத்திக் கொள்ளுவார்கள். இது தவிர பல வருடங்களுக்கு முன் நான் எழுதி ஒரு நூலை வெளியிட்டேன். அது இப்போது அச்சில் இல்லை. அதை மேலும் விபரமாக விளக்கி எழுதி வெளியிடும் நோக்கமிருக்கிறது. ஒரு சபை எந்தப் பிரிவைச் சேர்ந்ததாக, அதாவது பாப்திஸ்து அல்லது பிரஷ்பிடீரியன் பிரிவுள்ளதாக இருந்தாலும் திருச்சபை அங்கத்துவம், பரிசோதித்து நியமிக்கப்பட்ட பக்திவிருத்தியுள்ள தலைமைத்துவம், ஒழுங்குக் கட்டுப்பாடு, இவற்றையெல்லாம் கொண்ட அமைப்பு ஆகியவற்றில் தெளிவில்லாமலும் அவற்றைக் கொண்டதாக இல்லாமலும் இருக்குமானால் அவற்றை நம்பி அவற்றோடு நாம் பாதுகாப்பான உறவுவைத்துக்கொள்ள முடியாது. திருமணம் செய்யாமல் இருவர் சேர்ந்து வாழ்வதை நாம் ஒப்புக்கொள்ளுவோமா? மாட்டோம். அவர்கள் என்ன சாக்குப்போக்குச் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளுவோமா? மாட்டோம். இது தவறானால், வேதம் போதிக்கும் திருச்சபை பற்றிய அத்தனையையும் ஓரங்கட்டிவிட்டு சபை ஊழியம் என்ற பெயரில் நடத்திவருவதையெல்லாம் எப்படி நியாயமானவையாகக் கருதி அங்கீகரிப்பது? ஆவிக்குரிய அத்தனையையும் ஆராய்ந்து மெய்யானதாகக் காட்டுவதற்காகத்தான் கர்த்தர் நமக்கு வேதத்தைத் தந்திருக்கிறார். அந்தத் தெய்வீக வேதம் போதிக்கின்றவற்றைத் தன்னில் கொண்டிராத ஊழியங்கள் எப்படி மெய்யானதாக, ஆவிக்குரியதாக இருந்துவிட முடியும்?

(2) ஆவிக்குரியவனாய், சத்தியமறிந்தவனாய், தன்னலமற்றவனாய், வேதத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற, ஏற்கனவே பரிசோதித்தறியப்பட்ட நல்ல ஊழியர்கள் உருவாக்கப்பட வேண்டும். 1 கொரிந்தியர் 12லும், ரோமர் 12லும், எபேசியர் 4லும் திருச்சபைக்கு வரங்களை அளிப்பதாக கிறிஸ்து விளக்குகிறார். அவரால் எழுப்பப்படாதவர்கள் அவருடைய பணியைச் செய்யமுடியாது; செய்யவும் கூடாது. இன்றைக்கு, ஆண்டவர் என்னோடு பேசியிருக்கிறார், ஊழியம் செய்ய அழைத்திருக்கிறார் போன்ற அசட்டுப்பேச்சுக்களுக்கு எல்லையில்லை. இது கேட்டுக்கேட்டுப் புளித்துப்போன கதை. பேசுகிற ஆண்டவர் வேதத்தின் மூலம் மட்டுமே இன்று வழிகாட்டுகிறார் என்பதை ஆணித்தரமாக நம்புகிறவன் நான். அப்படியில்லாவிட்டால் அவர் வேதத்தைத் தராமலேயே இருந்திருப்பார். வேதத்திற்கு இருதயத்தைத் தரமறுக்கிறவர்கள் கிறிஸ்துவின் சீடர்களாக இருக்கமுடியாது. வேதகிறிஸ்தவம் இன்று தேவையாக இருக்கிறது; வேதகிறிஸ்தவர்களாக நாம் இருக்கவேண்டும். இயேசு எழுப்புகிற ஊழியப்பணியாளர்கள் தங்களைத் தாங்களே ஊழியர்களாக அறிவித்துக்கொள்ளவோ, அந்தப்பணியில் நியமித்துக்கொள்ளவோ கூடாது. அது வேதம் போதிக்காத செயல்முறை. இயேசு எழுப்பும் ஊழியப்பணியாளர்கள் 1 தீமோத்தேயு 3ம், தீத்து 1ம் விளக்குகின்ற இலக்கணங்களை வாழ்க்கையில் கொண்டிருந்து ஆத்துமாக்கள் முன் அவற்றை வெளிப்படுத்தி வாழ்ந்துகாட்டியவர்களாக இருக்கவேண்டும். அத்தகையவர்கள் திருச்சபையால் தெரிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அத்தகைய இலக்கணங்களை இயேசு பவுல் அப்போஸ்தலன் மூலம் கொடுத்திருப்பதற்குக் காரணமென்ன? நம்மினத்துக் கிறிஸ்தவம் இத்தகைய இலக்கணங்களைக் கணக்கில் எடுப்பதில்லை. அந்தளவுக்கு அது வேதத்தை அலட்சியப்படுத்துகிறது. இன்று ஊழியப்பணிபுரிகிறவர்கள் பக்திவிருத்தியில்லாமலும், அடிப்படை சமூக இங்கிதங்களை அறியாமலும், அவிசுவாசிக்கிருக்கிற ஞானங்கூட இல்லாமலும் இருப்பதற்குக் காரணம் இந்த அடிப்படை இலக்கணங்களை அடியோடு கவனித்துப் பின்பற்றாமல் இருப்பதுதான். ஊழியங்கள் மோசமாக இருப்பதற்குக் காரணம் ஊழியக்காரர்கள் இந்த இலக்கணங்களைக் கொண்டிராததுதான். யாராக இருந்தாலும் இந்த இலக்கணங்களைக் கொண்டிராதவர்கள் ஊழியப்பணிசெய்வதில் பிரயோஜனமில்லை. ஆகவே, சபை நிறுவுதலுக்கு ஆரம்பம் இந்த இலக்கணங்களைக் கொண்டிருப்பவர்களை அந்தப்பணிக்காகத் தயார் செய்வதுதான். நன்றாகக் கவனியுங்கள், இந்த இலக்கணங்களைக் கொண்டிருக்கிறவர்களையே தயார் செய்ய முடியும்; தயார் செய்ய வேண்டும்.

வெறும் இறையியல் பாடங்களை மட்டும் கொடுத்து சபைத்தலைவர்களை உருவாக்கமுடியாது. சபைத்தலைமை என்பது வெறும் வேதஅறிவு மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. அவர்களுக்கு வேதஞானத்தோடு, வாழ்க்கை அனுபவமும், முதிர்ச்சியும் இருக்கவேண்டும். இந்த இலக்கணங்களைக் கொண்டவர்களை சபை அடையாளங்கண்டு அவர்களை சபை நிறுவும் பணிக்காகத் தயார்செய்ய வேண்டும். அத்தகையவர்களுக்கு முறையான வேதஇறையியலையும், வேதத்தைப் பகுத்துப் படிப்பதெப்படி, அதை விளக்குவதெப்படி என்ற பயிற்சியையும் அளிக்கவேண்டும். இன்று நம்மினத்தில் அநேகருக்கு வாசிக்கும் பழக்கம் அறவே கிடையாது. எனவே எல்லோரும் வேதத்தை முறையாக வாசிக்கிறார்கள் என்றும், அதன் போதனைகளை அறிந்திருக்கிறார்கள் என்றும் நம்பிவிட முடியாது. ஊழியத்துக்கு வருகிறவன் வாசிக்கிறவனாக இருக்கவேண்டும். அறிவைப்பெருக்கிக் கொள்ளும் ஆர்வமுள்ளவனாக இருக்கவேண்டும். வாசிப்புப் பழக்கமில்லாதவர்கள் போதக ஊழியத்திற்கு ஆசைப்படுவது ஒரு முடவன் நூறுமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓட ஆசைப்படுவதுபோல்தான். ஊழியத்திற்கு வருகிறவர்கள் ஆவியில் நிரம்பியவர்களாக, ஜெபத்தில் சிறந்தவர்களாக, ஆத்தும ஆதாயத்துக்கும், கண்காணிப்புக்குமான இருதயமுள்ளவர்களாக இருக்கவேண்டும். இதுவே இன்று சபைத் தலைமைக்கு ஒருவரிடம் இருக்கவேண்டிய அடிப்படைத் தகைமைகள். இவையில்லாதவர்களை மக்கள் நம்பப்போவதில்லை; அவர்களைக்கொண்டு நிறுவப்படும் ஊழியமும் ஆவிக்குரியதாக ஒருபோதும் இருக்கப்போவதில்லை.

(3) உருவாக்கப்படுகின்ற ஊழியர்கள் திருச்சபைபற்றிய போதனையை அறிவுபூர்வமாகவும், அனுபவத்திலும் பெற்றிருக்க வேண்டும். 1 தீமோத்தேயு 3, தீத்து 1 விளக்கும் இலக்கணங்களைக் கொண்டிருப்பவர்களுக்கு பயிற்சியளிக்கும்போது அந்த இறையியல் பாடங்களில் திருச்சபைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். திருச்சபை பற்றித் தெளிவாக அறிந்திராத ஒருவன் திருச்சபைப் பணியில் எப்படி ஈடுபடமுடியும்? சகல இறையியல் பாடங்களையும் கற்க வேண்டிய அவசியம் இருந்தபோதும், திருச்சபையை அனுபவரீதியில் நன்கு அறிந்திருக்கவேண்டும். முக்கியமாக திருச்சபை வாழ்க்கையை அனுபவித்து அதைக் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஒருவனுக்கு எத்தனைதான் கார் ஓட்டுவது பற்றி புத்தகப் படிப்பு இருந்தாலும் காரை அவன் ஓட்டிப் பழகும்வரை ஒரு பிரயோஜனமுமில்லை, அல்லவா? அதுபோலத்தான் இதுவும். திருச்சபை அமைக்கும் பணியில் ஈடுபடுகிற ஒருவனுக்கு அதுபற்றிய தெளிவான நடைமுறை ஞானமிருப்பது அவசியம். சுவிசேஷத்தைச் சொல்லி அதைக்கேட்டு மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களைக் கொண்டுதான் திருச்சபை அமைக்கவேண்டும். சுவிசேஷம் சொல்லுவதன் இறுதி இலட்சியம் மனந்திரும்பிய ஒரு ஆத்துமா திருச்சபையில் இணைக்கப்பட்டு கிறிஸ்துவின் விசுவாசமுள்ள சீடனாக சபையில் வாழவேண்டுமென்பதுதான். அது சுவிசேஷத்தின் இலக்காக இல்லாவிட்டால் இயேசு அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்த மத்தேயு 28:18-20 வரையுள்ள வசனங்களில் காணப்படும் கட்டளை பொருளற்றதாகிவிடும். இன்று நம்மினத்தில் முறையாக அமைக்கப்பட்ட திருச்சபைகள் இல்லாதிருப்பதற்குக் காரணம் திருச்சபையைப் பற்றி ஒன்றுமே தெரிந்திராதவர்கள், அனுபவமில்லாதவர்கள் திருச்சபை அமைக்கப் புறப்பட்டிருப்பதால்தான். அவர்களுக்கு ஒரு ஆத்துமா மறுபிறப்பை அடைந்திருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளுகிற அறிவோ, பக்குவமோ இல்லை. இதனால்தான் விசுவாசிக்கிறேன் என்று ஏதோவொரு மயக்கத்தில் சொன்னவர்களுக்கெல்லாம் கூட்டங்கூட்டமாக ஞானஸ்நானம் கொடுத்துவிடுகிற அநியாயம் நடந்துவருகிறது. இத்தகைய அனுபவமற்றவர்களே வீடுவீடாகவும், கூட்டங்களிலும் ஜெபக்கூட்டம் நடத்துவதைத் தவிர வேறெதையும் செய்வதில்லை. அவர்களுக்கு வேதமும் தெரியாது, ஆவிக்குரிய ஞானமும், அனுபவமும் இல்லை. ஆகவே, நடைமுறைத் திருச்சபைப் போதனைகளுக்கு முக்கியத்துவங்கொடுப்பதாக ஊழியப்பயிற்சி அமைந்திருக்க வேண்டும்.

(4) மெய்யாகவே மறுபிறப்படைந்து வேதத்திற்கு மட்டும் கட்டுப்பட்டு நடக்கின்ற விசுவாசிகளைக்கொண்ட ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும். இதுவரை எத்தகையவர்களை திருச்சபைப் பணிக்குத் தயார்செய்ய வேண்டும் என்று விளக்கினேன். அத்தகைய இலக்கணங்களைக் கொண்டவர்களே நிதானத்துடன் சபை நிறுவும் பணியில் ஈடுபட முடியும். இனி, எந்த முறையில் ஒரு ஐக்கியத்தை ஆரம்பிக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்பதைப் பார்ப்போம். சபையை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லாமல் ஐக்கியத்தை ஏற்படுத்தவேண்டும் என்று சொல்லியிருப்பதைக் கவனிக்க வேண்டும். சபை உருவாவதற்குத் தேவையான அம்சங்களை விசுவாசிகள் கூடிவருகின்ற கூட்டம் கொண்டிருக்காமல் சபை உருவாக முடியாது. இந்த உண்மையை அநேகர் நினைத்தும் பார்ப்பதில்லை. உண்மையில் நம்மினத்தில் அது அநேகருக்குத் தெரியாது. ஒரு ஐக்கியத்தை அமைக்க முதலில் விசுவாசிகளைக் கூட்ட வேண்டும். சபை அமைப்புப் பணியில் ஈடுபட சபையால் அனுப்பப்பட்டிருக்கும் ஊழியனுடைய வேலை இது. எந்த சபைக்கும் போகாமலும் அல்லது நல்ல சபையொன்றைத் தேடி அலையும் ஆத்துமாக்கள் அந்த ஊரில் இருக்கலாம். இன்னொரு சபையில் இருந்து ஆத்துமத் திருடலில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. அதேநேரம் கீரைக்கடைக்கு எதிர்கடை போடுவதிலும், கெரிஸ்மெட்டிக் குழுக்கள் செய்வதுபோல் ஈடுபடக்கூடாது. இதெல்லாம் வேதமறியாதவர்கள் சுயலாபத்துக்காக செய்கின்ற அநியாயங்கள். அந்த ஊழியக்காரன் அந்த ஊரில் செய்துவரும் சுவிசேஷ ஊழியத்தின் மூலம் விசுவாசத்தை அடைந்தவர்களும் இருப்பார்கள். இத்தகையவர்களைக் கூட்டி ஒரு ஐக்கியமாக வேதப்படிப்பிலும், ஆராதனையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் முதலில் ஈடுபட வேண்டும். இது ஒரு ஐக்கியம் மட்டுமே, சபை அல்ல. ஆதலால் இது ஞானஸ்நானம் கொடுப்பதிலும் திருவிருந்து கொடுப்பதிலும் ஈடுபடக்கூடாது. இது இன்னும் சபையாகவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பவுல் அப்போஸ்தலன் பிலிப்பேயின் ஆற்றங்கரையில் லீதியால் போன்ற பெண்களுடன் அது சபையாக உருவாகுமுன் பல காலம் ஐக்கியமாகக் கூடிவந்திருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இப்படியாக ஆரம்பத்தில் விசுவாசிகளாக கூடிவருகிறவர்களை சபைக்குரிய அம்சங்களைக் கொண்டிருக்கும் ஐக்கியமாக வளர்த்தெடுக்க வேண்டும். இதற்கு ஓரிரு வருடங்கள் எடுக்கலாம். ஏன் தெரியுமா? கிறிஸ்துவை விசுவாசித்தவுடனேயே ஒரு விசுவாசிக்கு கிறிஸ்தவம் பற்றியும், திருச்சபை பற்றியும், சபையில் இருந்து அதற்குத் தன்னை உட்படுத்தி விசுவாசத்தோடு எப்படி வாழ்வது, போதகர்களிடம் இருந்து சீஷத்துவத்தை எப்படிப் பெற்றுக்கொள்வது என்பது பற்றியெல்லாம் தெரிந்துவிடப்போவதில்லை. அவன் சபை வாழ்க்கைக்குத் தயார்செய்யப்பட வேண்டும். போர்வீரனாக ஒருவன் தயார் செய்யப்படாமல் எந்தப் படையும் ஒருவனைச் சேர்த்துக்கொள்வதில்லை. போர்வீரர்களாக தயார்செய்யப்படாதவர்களை வைத்து அமைக்கப்படும் படை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்? இன்று சபை என்ற பெயரில் நடந்துவரும் அலங்கோலங்களுக்குக் காரணமே விசுவாசிகளை சரிவரத் தயார் செய்யாது சபை என்ற பெயரில் கூடிவருவதால்தான். அத்தோடு சபை வாழ்க்கையில்லாமலும் அல்லது தவறான போதனைகளுக்கு தங்களை உட்படுத்தியும் வாழ்ந்து வந்தவர்கள் இந்த ஐக்கியத்தில் வந்து சேர்ந்திருக்கக் கூடும். இவர்களெல்லாம் விசுவாசிகளா என்று முதலில் ஆராய்வது அவசியம். அப்படி ஆராய்ந்து பார்த்தபிறகு அவர்கள் மெய்விசுவாசிகளாக இருந்தால் எத்தகைய போதனைகளைப் பின்பற்றி ஐக்கியம் அமையப்போகிறதோ அந்தப் போதனைகளைக் கொடுத்து திருச்சபை அமைப்புக்கும், திருச்சபை வாழ்க்கைக்கும் இவர்கள் தயார் செய்யப்பட வேண்டும். இப்போது தெரிகிறதா, ஏன் இந்த ஊழியப்பணியை செய்கிறவனுக்கு அதிக ஞானமும், முதிர்ச்சியும், வேத அறிவும், அனுபவமும் தேவை என்று? ஒரு கத்துக்குட்டிக்கு இதையெல்லாம் எப்படிச் செய்யத் தெரியும்? விசுவாசி என்ற ஒரு அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஊழியப்பணி செய்யப் புறப்பட்டிருப்பவர்களால்தான் நம்மினத்துக் கிறிஸ்தவம் இன்று குப்பைமேட்டில் இருந்துவருகிறது.

(5) ஏற்கனவே கூடிவந்துகொண்டிருக்கும் ஐக்கியம் தகுந்த காலத்தில் திருச்சபையாக அமைக்கப்பட வேண்டும். இந்த ஐக்கியம் திருச்சபையாக உருவெடுப்பதற்கு அதைத் தற்காலிகமாகத் தலைமை தாங்கி போதனைகளை அளித்து சபை நிறுவும் ஊழியப்பணியில் ஈடுபட்டு வருகிறவருக்குப் பெரும் பொறுப்பிருக்கிறது. நல்ல சபையாக இந்த ஐக்கியம் உருவெடுப்பதற்காக அவர் சபை சட்ட விதிகளையும், எத்தகைய சத்தியங்களை பின்னால் சபை பின்பற்றப்போகிறது என்பதை விளக்கும் தெளிவான ஒரு விசுவாச அறிக்கையையும் தயாரித்து அவற்றை இந்த ஐக்கியத்தில் இருப்பவர்களுக்குப் போதிக்க வேண்டும். இந்தப் போதனைகளையெல்லாம் கொடுத்தபிறகு தகுந்த காலத்தில் ஐக்கியத்தில் இருப்பவர்கள் அது சபையாக உருவெடுப்பதற்குத் தங்களை ஒப்புக்கொடுக்கத் தயாராக இருக்கிறார்களா என்று அவர்களோடு பேசித் தீர்மானிப்பது அவசியம். ஐக்கியமாக வந்துகொண்டிருந்திருப்பவர்கள் திருச்சபையாக இயங்குவதற்கான தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். எந்தவிதப் பிரச்சனைகளோ, கேள்விகளோ இல்லாமல் ஏற்கனவே போதித்து விளக்கப்பட்டிருக்கும் சபை சட்ட விதிகள், விசுவாச அறிக்கை ஆகியவற்றிற்கு தங்களை எல்லோரும் ஒப்புக்கொடுத்திருந்தால் அவர்களை ஆரம்ப அங்கத்தவர்களாகக் கொண்டு அந்த ஐக்கியம் திருச்சபையாக, எல்லோரும் கர்த்தரின் முன் உடன்படிக்கை எடுத்து சபையாக வேதபூர்வமாக அமைக்கப்பட வேண்டும். அதை வழிநடத்தி வந்திருப்பவரும் அந்த அங்தத்தவர்களில் ஒருவனாக இணைந்துகொள்வார். இதுவே ஒரு ஐக்கியம் திருச்சபையாக உருமாறுவதற்கான வழிமுறைகள். ஐக்கியமாகக் கூடிவந்திருக்கின்ற காலப்பகுதியில் அவர்களுக்கு ஞானஸ்நானமோ அல்லது திருவிருந்தோ கொடுக்கும் அதிகாரம் கிடையாது. இவை சபை மட்டுமே கொடுக்கக்கூடிய திருநியமங்கள்.

ஐக்கியத்தில் இருக்கிற எல்லோருமே அது சபையாக உருவெடுக்கும்போது ஆரம்ப அங்கத்தவர்களாக இணைந்துகொள்ளுவார்கள் என்று சொல்ல முடியாது. சிலருக்கு சில போதனைகளில் உடன்பாடு இருக்காமல் போகலாம். அவர்களுக்கு அவற்றை விளக்கிப் போதித்து அவர்களுடைய சந்தேகங்களைத் தீர்க்க முயலலாம். அப்படியும் அவர்கள் உடன்படாமலிருந்தால் அவர்களை அங்கத்தவர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த ஐக்கியம் சபையாக உருவெடுக்கும்போது சபையில் இணைய விருப்பமில்லாதவர்கள் வேறு இடங்களை நாட நேரிடும். அதில் தவறில்லை. அந்த சபை விசுவாசிக்கும் சத்தியங்களுக்கும், சட்டவிதிகளுக்கும் முழுமனதோடு ஒப்புக்கொடுக்காமல் அதில் எவரும் இணைவது நல்லதல்ல. அந்த சபையின் அங்கத்தவர்கள் எல்லோருமே அதன் விசுவாச அறிக்கைக்கும், சட்டவிதிகளுக்கும் முழுமனத்தோடு தங்களை ஒப்புக்கொடுத்தவர்களாகவும், அவற்றிற்குக் கட்டுப்பட்டவர்களாகவும் இருக்கவேண்டும். இந்த முறையிலேயே அங்கத்தவர்களைக் கொண்டு சபைகள் அமைக்கப்பட வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள் உள்ளன. ஐக்கியம் சபையாக உருவெடுக்கும்போது அது ஆணும், பெண்ணுமாக இருக்கும் குடும்பங்களைக் கொண்டு அமையும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும். பெண்களை மட்டும் கொண்டு ஒரு சபையை அமைக்கக் கூடாது. அப்படிப் பெண்கள் அதிகமாக இருந்து ஓரிரு ஆண்களே இருந்தால் மேலும் ஆண்கள் தொகை அதிகரிக்கும்வரை அது ஐக்கியமாகவே தொடருவது நல்லது. பெண்களை மட்டும் வைத்து சபை அமைத்தால் யாரை மூப்பர்களாகவும், உதவிக்காரர்களாகவும் பின்னால் தெரிவு செய்வது? ஆண்கள் மட்டுமே அந்தப் பணிகளில் நியமிக்கப்பட வேண்டும். இன்றைக்கு சபை என்ற பெயரில் இருந்துவரும் அநேக கூட்டங்கள் பெண்களை அதிகமாகவும், ஓரிரு ஆண்களை மட்டுமே கொண்டதாகவும் இருக்கின்றன. இது சரியல்ல. ஆணும், பெண்ணுமாக விசுவாசிகள் சபையில் இணைந்ததாக அப்போஸ்தலர் நடபடிகளில் அடிக்கடி வாசிக்கிறோம்.

(6) சபை அமைப்பில் மேற்பார்வை சபையின் பங்கு. இதுவரை ஒரு ஐக்கியம் எவ்வாறு சபையாக உருமாறுகிறது என்பதைக் கவனித்து வந்திருக்கிறோம். இங்கு கவனிக்க வேண்டிய இன்னுமொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. நம்மினத்தில் சபை நிறுவுவது என்பது காளான்கள் வளரும் வேகத்தையும் மிஞ்ஞிய செயலாக இருக்கிறது. அந்தளவுக்கு எந்தவித வேத வழிமுறைகள் எதையும் பின்பற்றாது நியாயாதிபதிகள் நூல் சொல்லுவதுபோல் ‘அவனவன் தன் இஷ்டத்துக்கு’ நடந்துவருவது நம்மினத்தில் சகஜம். இதுமிகவும் தவறானதும் ஆபத்தானதுமாகும். இதுவே நல்ல சபைகள் நம்மினத்தில் அமையமுடியாத நிலை இருப்பதற்குக் காரணம். இதற்குப் பரிகாரம் என்ன? வேதத்தைப் பின்பற்றினால் இந்தத் தவறைத் தவிர்த்துக்கொள்ளலாம். பொதுவாக எப்போதும் சபை நிறுவும் பணி ஏற்கனவே இருந்துவரும் வளர்ந்த, முதிர்ந்த ஒரு சபையால் செய்யப்பட வேண்டிய பணி. பவுல் அப்போஸ்தலன் மிஷனரிப் பணிக்கு அனுப்பப்பட்டபோது அவர் தான் நினைத்தபடி அதைச் செய்யப்போகவில்லை. அப்போஸ்தல நடபடிகள் 9ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம், அவர் விசுவாசத்தை அடைந்தபிறகு தன்னை எருசலேம் சபையில் இணைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அப்படி சபையில் சேர முற்பட்டபோது அப்போஸ்தலர்கள் அவரை சேர்த்துக்கொள்ளவில்லை. பர்னபா பவுலோடு தனியே பேசி உண்மைகளை அறிந்துகொண்டு அவரை அப்போஸ்தலர்களிடம் அழைத்துப் போய் அதற்குப் பிறகே அப்போஸ்தலர்கள் உண்மையை ஆராய்ந்து உணர்ந்து பவுல் சபையில் இணைய அனுமதி அளித்தனர். அந்தளவுக்கு அன்றே சபையில் கட்டுப்கோப்பு இருந்திருக்கிறது. இது நடந்து பல வருடங்கள் கழிந்தே அந்தியோகியா சபை பவுலையும் பர்னபாவையும் மிஷனரிப்பணிக்கு அனுப்பிவைத்தது. அப்படி அனுப்பிவைக்கப்படும் காலத்துக்கு முன் பவுல் அந்தியோகியா சபையின் ஒரு தலைவராக இருந்திருக்கிறார் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 13). இதிலிருந்து ஒரு சபையே சபை நிறுவும் பணியில் ஈடுபட்டிருக்கும் வழமையை புதிய ஏற்பாட்டில் காண்கிறோம். இதற்குப் பிறகு இந்த முறையே தொடர்ந்திருப்பதை அப்போஸ்தல நடபடிகள் நமக்கு புலப்படுத்துகிறது.

இந்த வேதமுறையைப் பின்பற்றி புதிதாக நிறுவப்படும் சபை தனக்கென்று ஒரு மேற்பார்வை சபையைக் கொண்டிருக்குமானால் அந்தச் சபைப் போதகர்கள் நிறுவப்படும் சபைக்குத் தேவையான உதவிகளை செய்துகொடுப்பதோடு தேவையான ஆலோசனைகளையும் அளித்து வழிநடத்த முடியும். அதுவும் அனுபவமற்ற புதிய சபை ஆத்துமாக்களுக்கும், அதை ஆரம்பித்து நடத்துகிறவருக்கும் மேற்பார்வை சபையில் பக்கபலம் மிகவும் அவசியம். பிசாசுக்குப் பிடிக்காதது எந்தவித ஆவிக்குரிய செயலுந்தான். அவன் புதிய புதிய சபைகள் உருவாவதை விரும்புவானா? அவனுடைய குழப்பங்களையும், தாக்குதல்களையும் முறியடிக்க புதிய சபை மேற்பார்வை சபையின் பாதுகாப்பில் அது தனித்து இயங்கும்வரை நல்லபடியாக வளரலாம். அனுபவமற்றவர்களால் ஏனோதானோவென்று ஆரம்பிக்கப்பட்டு அலங்கோலத்தில் இருக்கும் எத்தனையோ, சபை என்ற பெயரில் இயங்கும் அமைப்புகளை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்; அவமானப்பட்டு அழிந்துபோயிருப்பதையும் பார்த்திருக்கிறேன். இதையெல்லாம் தவிர்த்துக்கொள்ள ஒரு நல்ல மேற்பார்வை சபை இருப்பது எப்போதுமே நல்லதும் வேதபூர்வமானதுமாகும்.

அத்தோடு ஐக்கியமாகக் கூடிவந்திருந்த நிலையில் இருந்து திருச்சபையாக அமையும்போது அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு அதை வேதபூர்வமாக நடத்திவைக்கவும், போதகர் நியமனமாகும்வரை அந்தப் புதிய சபையில் ஞானஸ்நானம், திருவிருந்து ஆகியவற்றை நடத்தித் தரவும் மேற்பார்வை சபை உதவும். இதுவே வேதபூர்வமானது. நம்மினத்தில் ஞானஸ்நானம் கொடுப்பதும், திருவிருந்து எடுப்பதும் கேள்விமுறையில்லாது தெருவிருந்து போல் நடந்துவருகிறது. திருச்சபை பற்றிய உணர்வே இல்லாமல் தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பதுபோல் அனாமத்துக்கள் ஆவிக்குரியவர்களாக தங்களை இனங்காட்டிக்கொண்டு இவற்றைச் செய்துவருகிற அலங்கோலத்தை நம்மினத்தில்தான் பார்க்கிறோம்.

(7) புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் சபைக்கு தலைமை அவசியம். இதுவரை ஒரு குறிப்பிட்ட ஊரில் சுவிசேஷப்பணி புரிந்து, ஒரு ஐக்கியத்தை அமைத்து அதன் பிறகு அந்த ஐக்கியம் எந்தமுறையில் அங்கத்துவ அமைப்பைக்கொண்டு சபையாக அமைக்கப்படுகிறது என்பதைப் பார்த்திருக்கிறோம். அமைக்கப்பட்டிருக்கும் அந்த சபைக்கு இப்போது தலைமை அவசியம். இந்த இடத்தில் ஒரு உண்மையை விளங்கிக்கொள்வது அவசியம். அதாவது, ஒரு சபைக்குத் தலைமை அவசியம், ஆனால் தலைமையோடு அது ஆரம்பிக்க வேண்டியதில்லை. ஏனெனில் சபை அமைவதற்குத் தேவையான உதிரிப்பொருட்களில் (essential ingredients) தலைமை ஒன்றல்ல. சபை அமைவதற்கு அவசியமானது மெய்யான விசுவாசத்தைக் கொண்டு புரிதலோடு சபை வாழ்க்கைக்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும் விசுவாசிகள். சபைத் தலைமையானது ஒரு சபை அங்கத்துவ அமைப்பைக்கொண்டு அமைந்தபிறகு, அதனால் அங்கீகரித்து நியமிக்கப்பட வேண்டியது. (Leadership is not the essence of a church but it is essential to the church.) இன்னொருவிதத்தில் சொல்லப்போனால், சபை அமைந்த பிறகே தலைமை அதற்குத் தேவை. புதிதாக அமைக்கப்பட்ட சபை அதன் முதல் கடமையாக தலைமைக்குத் தகுதியானவர்களை ஆராய்ந்து பார்த்து அந்தந்தப் பதவியில் வேதவிதிகளைப் பின்பற்றித் தகுந்தவர்களை நியமிக்கவேண்டும். சபையின் இன்றைய நிரந்தரமான பதவிகள் மூப்பர்களும் (போதகர்கள்), உதவிக்காரர்களுந்தான். இவற்றைத் தவிர பிரெசிடென்ட், செக்கரட்ரி, கமிட்டி போன்ற வேதத்தில் நாம் பார்க்கமுடியாத உலகத்தில் காண்கிற பதவிகளை சபையில் உருவாக்கக்கூடாது. இப்படிப்பட்டவற்றை சபையில் கொண்டிருந்தால் நாம் வேதத்தைவிட்டு விலகிப் போகிறோம் என்றுதான் அர்த்தம். அத்தோடு வேதபூர்வமாக ஆவிக்குரியவிதத்தில் சபை இயங்குவதற்கு இத்தகைய உலகத்தைச்சார்ந்த பதவிகள் பெருந்தடையும், ஆபத்தானவையுமாகும்.

ஓரு ஐக்கியம் சபையாக அமைக்கப்படுகிறபோது, அது சபையாக உருவாகும்வரையில் ஏற்கனவே அதை வழிநடத்தி வந்திருப்பவரே அந்தச் சபையில் தலைமைக்குத் தகுந்தவர் என்பதில் சந்தேகமில்லை. அத்தலைமைக்கான தகுதிகளைத் தன்னில் கொண்டிருந்ததனாலேயே அவர் சுவிசேஷத்தை அறிவித்து ஒரு ஐக்கியத்தை உருவாக்க அனுப்பப்பட்டிருக்கிறார் என்று ஊகிக்கிறேன். சபை அமைகிறபோது அவரும் அதன் அங்கத்தவர்களில் ஒருவராக இணைந்திருப்பார். ஆகவே, சபை உருவான உடனேயே அந்த சபை அங்கத்தவர்கள்கூடி அதை வழிநடத்தி வந்திருப்பவரின் தகுதிகளை வேதபூர்வமாக ஆராய்ந்து நிர்ணயித்து அவரைப் போதகப்பணிக்கு நியமிக்க வேண்டும். சபைத் தலைவர்கள் எப்போதுமே சபை அங்கத்தவர்களால் ஆராய்ந்து நியமிக்கப்பட வேண்டும். இதை வேறு எவரும் செய்வதற்கு அனுமதியில்லை. இதைச் செய்வதற்கு சபை அமைக்கப்பட்டபோது அது தன்னை ஒப்புக்கொடுத்திருக்கும் சபை சட்டவிதிகளையும், விசுவாச அறிக்கையையும் பின்பற்ற வேண்டும்; அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களுக்கு முரண்படாதவிதத்தில் அவற்றைப் பின்பற்றி இதைச் செய்யவேண்டும். போதகர் நியமனத்தில் மேற்பார்வை சபையின் உதவியும், மேற்பார்வையும் சபைக்குத் துணையாக இருக்கும். இதேபோல் உதவிக்காரர் பணிக்கு, அதற்குரிய தகுதிகளைக் கொண்ட ஆண்கள் இருப்பார்களானால் அவர்களையும் சபை சட்டவிதிகளைப் பின்பற்றி நியமிக்கலாம். இதை நிறைவேற்றுகிறபோது ஒரு ஐக்கியம் முழுமையான திருச்சபையாக அங்கத்தவர்களையும், போதகரையும், உதவிக்காரரையும் கொண்டு வேதபூர்வமாக அமைந்துவிடுகிறது.

விசுவாசிகள்கூடி ஐக்கியமாக இருந்துவந்த ஒரு அமைப்பு உள்ளூர் திருச்சபையாக வேபூர்வமாக அமைக்கப்பட்டபின் அது வெகுகாலத்துக்கு சபைத் தலைமை இல்லாமல் (போதகர்களும், உதவிக்காரர்களும்) இருந்துவிடக்கூடாது. எவ்வளவு காலத்துக்கு என்பதை நான் நாள் கணக்கிட்டு சொல்ல விரும்பவில்லை. அதிக காலத்துக்கு தலைமை இல்லாமலிருந்தால் அது சபையின் ஆவிக்குரிய வளர்ச்சிக்குத் தடையாகவும் தீங்காகவும் முடிந்துவிடும். எனவே, சபை அமைக்கும் நோக்கத்தோடு ஒரு ஐக்கியத்தை ஒரு ஊரில் அமைக்கும்போதே சபைத்தலைமையையும் மனதில் வைத்து அதை ஆரம்பிக்க வேண்டும். அதனால்தான் எந்தவொரு ஐக்கியமும் ஆண்களையும் பெண்களையும் கொண்டதாக அமைக்கப்பட வேண்டும் என்று ஆரம்பத்திலேயே விளக்கினேன். அத்தோடு சபைத் தலைமை வேண்டுமென்பதற்காக வேதஇலக்கணங்களை உதாசீனப்படுத்தி தகுந்த இலக்கணங்களைக் கொண்டிராத எவரையும் இந்த ஆவிக்குரிய பதவிகளில் நியமித்துவிடக்கூடாது; அப்படிச் செய்வது சபைக்குப் பெருந்தீங்கிழைத்துவிடும்.

இதுவரை நான் விளக்கியிருப்பவையே புதிய ஏற்பாட்டில் விளக்கப்பட்டிருக்கும் வேதபூர்வமான சபை அமைப்பு விதிகள். இவையெல்லாம் வேதத்தில் ஒரே இடத்தில் விபரமாகக் கொடுக்கப்படவில்லை. அப்போஸ்தல நடபடிகள் நமக்கு கிறிஸ்து எவ்வாறு தன்னுடைய அப்போஸ்தலர்களைக் கொண்டு திருச்சபையை எருசலேமில் நிறுவி அதன் மூலமாக ஏனைய பகுதிகளில் திருச்சபையை நிறுவினார் என்பதை விளக்குகிறது. அது நமக்கு சபை நிறுவும் பணிக்கான அநேக வேதவிதிகளைத் தெளிவாக உதாரணங்களின் மூலம் தருகின்றது. அந்த உதாரணங்கள் நமக்குக் கதை சொல்லுவதற்காகக் கொடுக்கப்படவில்லை. அவற்றை நாம் நடைமுறையில் பின்பற்றி நடக்கவேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் அமைக்கப்பட்ட திருச்சபையின் வாழ்க்கைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சகல விபரங்களையும் புதிய ஏற்பாட்டின் ஏனைய நூல்கள் நமக்கு விளக்குகின்றன. இவற்றை முறையாக ஆராய்ந்து படிக்கும்போது திருச்சபை பற்றிய அத்தனைப் போதனைகளையும் வேதம் நமக்குத் தந்திருப்பதை உணரலாம். இல்லாமலா ஜோன் கல்வின் தன்னுடைய இன்ஸ்டிடியூட் நூலில் முக்கால்வாசிப் பகுதியை திருச்சபையைப் பற்றிய போதனைகளை அளிப்பதில் செலவிட்டிருக்கிறார்.

சுவிசேஷம் எந்தளவுக்கு நம்மினத்தில் இன்று சொல்லப்பட வேண்டுமோ அந்தளவுக்கு திருச்சபை பற்றிய தெளிவான போதனைகளும் நமக்கு இன்று தேவை. தேவனை அறியாதவர்கள் சுவிசேஷத்தின் மூலமாகக் கிறிஸ்துவை அறிந்து விசுவாசிப்பது மட்டும் போதாது. அது ஆரம்பம் மட்டுமே. அவர்கள் நித்திய இரட்சிப்பை அடையும்வரை தங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையை சபைக்குத் தங்களை அர்ப்பணித்து நிதானத்தோடு இந்த உலகத்தில் வாழவேண்டிய பெருங்கடமை அவர்களுக்கு இருக்கிறது. அது திருச்சபை வாழ்க்கை இல்லாமல் முடியாது. நல்ல திருச்சபைகள் உருவாகி பக்திவிருத்தியுள்ள தலைமையோடும் ஒழுங்கோடும் அவை இயங்கிவரும்போது ஆத்துமாக்களுக்கு ஆத்துமப் பாதுகாப்பு கிடைக்கிறது. அத்தகைய ஆத்துமப் பாதுகாப்பை வழங்குகிற அளவுக்கு வேதபூர்வமான திருச்சபைகள் நம்மினத்தில் பெருமளவுக்கு இல்லை என்பதை விபரமறிந்தவர்கள் சொல்லாமலேயே புரிந்துகொள்ளுவார்கள். நல்ல திருச்சபைகள் உருவாகாதவரை நாம் கர்த்தரின் எழுப்புதலை நம்மினத்தில் காணமுடியாது. திருச்சபை பற்றிய போதனைகள் அதிகம் கொடுக்கப்பட்டு அதற்கான வைராக்கியம் வளருகிறபோதே மெய்யான ஆத்மீக சீர்திருத்தமும் நம்மினத்தில் ஆரம்பித்திருக்கிறது என்று நாம் ஆனந்தப்பட முடியும். அந்த நாள் என்று வரும்?

எபேசியர் 5:25-27

25. . . . கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, 26. தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், 27. கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 30 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

சுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள்

church membership-hc3dஜொனத்தன் லீமென் எழுதிய ‘சபை அங்கத்துவம்’ நூலும், இதுபற்றி விரிவாக எழுதப்பட்ட அவருடைய இன்னொரு நூலும் என்னை அதிகம் சிந்திக்கவைத்தன; இந்த ஆக்கத்தை எழுதுவதற்கு ஒரு காரணமாக அமைந்தன. முப்பத்திஐந்து வருடங்களாக நான் திருச்சபையில் போதகப்பணியில் இருந்துவருகிறேன். என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை ஆரம்பித்த காலத்திலேயே நின்று நிலைத்துப்போன அசைக்கமுடியாத நம்பிக்கை திருச்சபை பற்றியது. அதற்கு நான் ஆண்டவருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அந்த நம்பிக்கை அன்றே என்னில் ஆணிவேராகப் பதிந்திருக்காவிட்டால் இன்று என்ன செய்துகொண்டிருந்திருப்பேன் என்பதை என்னால் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. இந்த முப்பத்திஐந்து வருடகால கிறிஸ்தவ பணியில் என்னோடு நெருங்கியிருந்து உறவாடிய நண்பர்களும், அந்தளவுக்கு இல்லாவிட்டாலும் பழக்கமானவர்களும் அநேகர். இவர்களில் திருச்சபை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் கிறிஸ்தவ சாகரத்தில் என்னென்னவெல்லாமோ செய்து நீச்சலடித்துக்கொண்டிருக்கிறவர்கள் தொகை ஏராளம்.

முப்பத்தி நான்கு வருடங்களுக்கு முன் கடைசியாக சந்தித்திருந்த ஒரு நண்பன் இத்தனைக் காலத்துக்குப் பிறகு என்னை சமீபத்தில் தொடர்புகொண்டான். அவனுக்கு அன்றே ஐ.கியூ அநாவசியத்துக்கு அதிகம். இருவரும் ஓரிடத்தில் சேர்ந்து இறையியல் கற்றுக்கொண்டிருந்த காலம் அது; இளமைக்காலமும் கூட. ஜோன் மெக்காத்தரின் ‘கெரிஸ்மெட்டிக்ஸ்’ நூல் வெளிவந்திருந்த வருடம். அதை வாசித்துவிட்டு துள்ளிக்குதித்துக்கொண்டிருந்தோம். அது ஏற்படுத்திய தாக்கத்தால், கெரிஸ்மெட்டிக் அற்புத வரங்கள் இன்று இல்லை என்பதை ஆணித்தரமாக நிரூபிப்பதற்காக TDNT வால்யூம்களைப் புரட்டிப்புரட்டி telos என்ற வார்த்தை வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களையெல்லாம் அலசி ஆராய்ந்து வந்திருந்த காலம். எத்தனையோ இறையியல் கருத்துக்களில் எங்களிருவருக்கும் ஒத்த கருத்திருந்ததால் நெருங்கியே இருந்தோம். சூழ்நிலைமாறி ஒருவரையொருவர் பிரிந்து இன்று வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறோம். அவன் தானிருந்த சபையைவிட்டுப் போய் என்னென்னவெல்லாமோ செய்து இன்றைக்கு கூடில்லாக்குருவியாக தனக்கென ஒரு நிறுவனத்தை அமைத்து கிறிஸ்தவ பணிபுரிந்து வருகிறான். இன்றும் விசுவாசியாக இருந்தபோதும் திருச்சபை பற்றிய அவனுடைய எண்ணங்கள் என்னைப் பொறுத்தவரையில் வேதபூர்வமானதாக இல்லை. அவனுக்கு அது ஒன்றும் பெரிதல்ல. ‘இன்னும் தொடர்ந்து கிறிஸ்தவனாகத்தான் இருக்கிறேன், கிறிஸ்துவுக்காக உழைத்துக்கொண்டுதான் இருக்கிறேன், சபைத்தொடர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது’ என்பதுதான் அவனுடைய சிந்தனையாக இருக்கிறது. இது ஒன்றும் அவன் மட்டும் எடுத்திருக்கும் நிலைப்பாடல்ல. கிறிஸ்தவ சமுதாயத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்த எண்ணங்களோடேயே வாழ்ந்து வருகிறார்கள். கிறிஸ்துவை விசுவாசித்து ஏதோவொருவிதத்தில் எதைச்செய்தாவது கிறிஸ்தவ ஊழியம் செய்தால்போதும் சபையென்றெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளக்கூடாது என்பதுதான் இவர்களுடைய எண்ணமாக இருக்கிறது. இவர்கள் சபையை வெறுக்கவில்லை; சபையை அடியோடு ஒதுக்கவில்லை. ஆனால், திருச்சபை பற்றிய போதனைகளை முறையாக அறிந்திராது தங்களுடைய சிந்தனை வழிநடத்துகிறபடியெல்லாம் நடந்துவருகிறார்கள்; அதில் சந்தோஷப்பட்டுக்கொள்கிறார்கள். இந்த வார்த்தைகளை எழுதுகிறபோது எனக்கு நியாயாதிபதிகள் நூலில் அடிக்கடி சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைதான் நினைவுக்கு வருகிறது. ‘அந்நாட்களில் இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்’ (நியா. 21:25).

சமீபத்தில் நான் சந்தித்த ஒருவர் ஒரு கோப்பை என் கையில் தந்து நேரமிருக்கும்போது வாசித்துப் பாருங்கள் என்றார். அதை நான் வாசித்துப் பார்த்தேன். அவர் ஒரு கிறிஸ்தவர். தன் கைப்பணத்தையும் அங்குமிங்கும் இருந்து பெற்றுக்கொள்கிற பணத்தையும் கொண்டு பல இடங்களில் இருக்கும் போதகர்களுக்கு (அவர்கள் எதை விசுவாசிக்கிறார்கள் என்பதில் அக்கறை காட்டாமல்) பண உதவிசெய்து, அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்குப் போய்பேசியும் ஜெபித்தும் வருகிறார். இப்படித் தனக்கென எவருக்கும் எதற்கும் கணக்குக்கொடுக்கத் தேவையில்லாத ஒரு சொந்த ஊழியத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார். அடுத்ததடவை அவரை சந்தித்தபோது இதை எனக்கு ஏன் கொடுத்தீர்கள் என்பது தெரியவில்லை, இருந்தாலும் நீங்கள் எந்த சபையைச் சேர்ந்தவர், போதகரா? என்று கேட்டுவைத்தேன். நான் ஒருசபையிலும் இல்லை, போதகனும் இல்லை என்று அவர் பதில் தந்தார். அப்படியானால் நீங்கள் செய்கிற காரியங்களைச் செய்வதற்கு வேதத்தில் அனுமதியோ ஆதரவோ இல்லையே என்று கேட்டுவைத்தேன். அவர் அதற்கு, தான் நல்ல சமாரியனைப்போல இருந்து ஊழியம் செய்கிறேன் என்றார். நல்ல சமாரியன் கதைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்துப் பார்த்தபோது எனக்குத் தலைசுற்றல் வந்துவிடும்போலிருந்தது. இதுதான் இன்றைய நிலைமை.

membership-3dதிருச்சபை பற்றிய விஷயத்தில் அநேகர் வேதஞானத்தோடு நடந்துகொள்ளாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

(1) சபை பற்றிய இறையியல் அறிவின்மை – ஒரு முக்கிய காரணம் திருச்சபை பற்றிய வேத இறையியல் விளக்கங்களை சரிவரப்புரிந்துகொள்ளாமல் இருப்பது. இறையியலில் சபையைப்பற்றி விளக்குகிறபோது அதை இரண்டுவிதமாக பொதுவாக விளக்குவார்கள். அதாவது கண்களுக்குப் புலப்படாத சபை (Invisible), உள்ளூர் சபை (Local) என்று பிரித்து விளக்குவார்கள். இப்படி விளக்குவது பல்வேறு காரணங்களுக்காக அவசியமாகிறது. இந்தப்பதங்கள் எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதை சரிவரப் புரிந்துகொள்ளாவிட்டால் தவறிழைக்க நேரிடும். முதலில், இந்தப் பதங்கள் இரண்டு சபைகள் இருப்பதாக நமக்குக் காட்டவில்லை; சபை ஒன்றே. இயேசு தன்னுடைய ஒரே சபையைத் தான் இந்த உலகத்தில் ஏற்படுத்தி தொடர்ந்து போஷித்து வருகிறார். இரண்டாவதாக, கண்களுக்குப் புலப்படாத சபை என்பது கண்ணால் காணமுடியாத சபை என்று முடிவுசெய்யக்கூடாது. சபை ஒருபோதும் கண்ணால் காணமுடியாமல் இருக்கமுடியாது. 115 தடவைகள் புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சபை என்ற வார்த்தை கண்ணால் காணமுடியாதது என்ற அர்த்தத்தில் ஒரு தடவையாவது பயன்படுத்தப்படவில்லை. இது மிகவும் தவறான கருத்து. ஆங்கிலத்தில் சபையைக் குறித்து விளக்குவதற்காக invisible என்ற வார்த்தையை இறையியலறிஞர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், அவர்கள் அதைக் கண்ணால் காணமுடியாத ஒரு சபை இருக்கிறது என்ற அர்த்தத்தில் ஒருபோதும் பயன்படுத்தவில்லை. ஆண்டவருடைய சபையாகிய விசுவாசிகளின் ஆவிக்குரிய பிறப்பைப் பொறுத்தவரையில் அது கண்ணால் பார்க்கமுடியாத ஆவியின் செயல் என்ற அர்த்தத்தில் விசுவாசிகளின் ஆவிக்குரிய தன்மையை விளக்க மட்டுமே அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். விஷயம் தெரியாதோர் தவறான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். சீர்திருத்த இறையியல் வல்லுனரும் பேராசிரியருமான ஜோன் மரே சபையைக் குறித்து invisible என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை விரும்பவில்லை. சபை என்ற பதம் வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற அர்த்தத்தின் அடிப்படையில் மட்டுமே உலகளாவிய சபை என்ற வார்த்தைப் பிரயோகத்திற்கும் விளக்கம் கொடுக்க வேண்டும். சபை எப்போதும் கண்ணால் காணக்கூடியதாக, விசுவாசிகளைக் கொண்டு கூடிவருகின்ற அமைப்பாக மட்டுமே வேதத்தில் விளக்கப்பட்டிருப்பதால் உலகளாவிய சபை உலகமெங்கும் காணப்படும் உள்ளூர்சபைகளின் தொகையாக மட்டுமே இருக்க முடியும்; அது வேறுவிதத்தில் இருப்பதற்கு சபை என்ற வார்த்தைப் பிரயோகத்தின் மெய்யான அர்த்தம் இடம்கொடுக்கவில்லை.

(2) சபையில்லாமல் வாழ எத்தனிக்கும் துணிவு – சபையில்லாமல் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவர்கள் சபையைச் சேர்ந்தவர்கள் இல்லையா? என்று சிலர் துடிப்போடு கேட்பார்கள். இந்தக் கேள்வி எழும்பும் என்பது எனக்குத் தெரியாதல்ல. இப்படிப்பட்டவர்களை சிந்திக்க வைக்கத்தானே இதை எழுதியிருக்கிறேன். இவர்களுடைய எண்ணத்தில் சபை என்பது, இவர்களுடைய கற்பனையில் உலவிவரும் கண்ணால் காணமுடியாத சபை. உண்மையில் அப்படியொன்றில்லை; இருந்து அதில் அங்கத்தவர்களாக இருப்பதாக எண்ணி இவர்கள் வாழ்கிறார்கள். உள்ளூர் சபையில்லாமல் வாழமுடியும் என்று இவர்களுக்கு யார் சொல்லித்தந்தது? சபையில்லாமல் கிறிஸ்தவ வாழ்க்கையைக் கடைசிவரை நடத்திவிடலாம், பரலோகம் போய்விடலாம் என்று வேதம் எந்த இடத்தில் விளக்குகிறது? காட்டுங்கள் பார்க்கலாம். இவர்கள் தாங்களே உள்ளூர்சபை தேவையில்லை என்று தனிப்பட்ட சுயநல காரணங்களுக்காக முடிவுகட்டிவிட்டு, தங்களைக் கிறிஸ்தவர்களாக அழைத்துக்கொண்டு சபையில்லாமல் வாழ்ந்து இந்தக் கேள்வியை ஆணவத்தோடு கேட்கிறார்கள். வேதம் மட்டுமே நமக்கு அதிகாரம்; வேதம் இதுபற்றி விளக்குகிற உண்மைகளே இந்த விஷயத்தில் இறுதி முடிவாக இருக்க முடியும். எனக்குத் தெரிந்து வேதத்தில் வெளிப்படையாக உள்ளூர் சபையில் அங்கத்துவம் இல்லாமல் வாழ்ந்த விசுவாசி இயேசுவுக்குப் பக்கத்தில் சிலுவையில் அறையப்பட்டிருந்து கடைசி நேரத்தில் மனந்திரும்பி இயேசுவோடு பரலோகம் போனவன் மட்டுமே. அப்போஸ்தலருடைய நடபடிகள் 8ம் அதிகாரத்தில் வரும் எத்தியோப்பிய மந்திரி விசுவாசத்தை அடைந்து பிலிப்புவிடம் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டான். சபைபற்றிய வேறு விபரங்களை அந்தப் பகுதி தரவில்லை என்பதற்காக அவன் சபையில்லாமல் வாழ்ந்தான் என்ற தவறான முடிவுக்கு வரமுடியாது. அந்தப் பகுதி அவனுடைய விசுவாசம் எத்தகையது என்பதைச் சொல்லுவதோடு மட்டுமே நின்றுவிடுகிறது; அது விளக்கியிருப்பதற்கு மேல் அதில் வேறு எதையும் பார்ப்பதும், திணிப்பதும் வேதம் அறியாதவர்கள் செய்கிற செயல். சபையைப் பற்றி விளக்குகின்ற அத்தனைப் பகுதிகளையும் வைத்தே சபை பற்றிய உண்மைகளைத் தீர்மானிக்கவேண்டும். சரி சபையில்லாமல் வாழ்கிறவர்கள் கிறிஸ்தவர்களா? அந்தக் கேள்விக்கு அவர்கள் தங்களுடைய இருதயத்தை ஆராய்ந்து பார்த்து பதில் தேடவேண்டும். கிறிஸ்துவை நேசிக்கிறேன் என்று சொல்லுகிறீர்களே, அந்தக் கிறிஸ்து நேசித்து துன்பப்பட்டு உயிரையே கொடுத்திருக்கும் அந்தச் சபையில்லாமல் வாழத்துடிக்கிற உங்களுடைய விசுவாசம் கிறிஸ்தவ விசுவாசமா? என்பதுதான் என்னுடைய கேள்வி. அது உண்மையான விசுவாசமாக இருந்தால் நிச்சயம் கிறிஸ்துவைப்போல அவருடைய சபைக்கு உயிரைப் பணயம் வைக்கத் துடிக்கிற விசுவாசமாக அது இருக்கும்; சுயநல நோக்கங்களுக்காக சபையில்லாமல் வாழ்ந்து வருகிற விசுவாசமாக அது இருக்காது.

(3) பிரச்சனைகளைக் காரணம் காட்டி சபை வாழ்க்கை இல்லாமல் இருப்பது – சிலர், வேலை, குடும்பப்பிரச்சினை, பண்பாடு, வீட்டில் எதிர்ப்பு, தூரம், ஞாயிறுதினத்தில் வேலை, அறியாமை என்று பல்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லி சபையில்லாமல் வாழ்கிறவர்களாக இருக்கிறார்கள். அந்தளவுக்கு இவர்களுக்கு சபை வாழ்க்கை கிறிஸ்தவ வாழ்க்கையில் அவசியமற்றதாகப் போய்விட்டிருக்கிறது. கிறிஸ்தவ சீடத்துவம் பற்றிய எந்த சிந்தனையும் இவர்களுக்கில்லாமலிருக்கிறது. கிறிஸ்துவை விசுவாசித்தால் மட்டும் போதாது; அந்தக் கிறிஸ்து நேசிக்கும் சபைக்கு விசுவாசமாக இருந்து அவருடைய சீடனாக சபை வாழ்க்கையை நடத்தவேண்டும் என்று கிறிஸ்துவே வேதத்தில் விளக்குகிறாரே. வேறுசிலர் கிறிஸ்தவ தலைவர்களின் ஒழுக்கக்கேடான வாழ்க்கையைக் காரணங்காட்டி சபையில் நம்பிக்கையில்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். தவறான ஊழியர்களின் வாழ்க்கை முறைக்குக் காரணம் கிறிஸ்துவின் சபையல்ல; வேஷதாரி ஊழியங்களும், மனிதனின் பாவமுமே. இதற்காக கிறிஸ்துவின் சபையை நிராகரிப்பதால் எந்தப் பயனுமில்லை. கிறிஸ்துவின் சபையில் வாழ்ந்து மட்டுமே அநுபவிக்கக்கூடிய சபை அங்கத்துவம், திருமுழுக்கு, திருவிருந்து, வேதப்பிரசங்கம், போதகக் கண்காணிப்பு, சீடத்துவம், ஐக்கியம் அனைத்தும் இல்லாமல் கிறிஸ்தவனாக வாழ முயற்சி செய்வது கிறிஸ்துவை நிந்திக்கின்ற ஆணவச்செயல். சிலுவையை சுமந்து அவரைப் பின்பற்றுவதற்குத் துணைபோகாத ‘விசுவாசம்’ மெய்விசுவாசமாக இருக்கமுடியாது. சபை வாழ்க்கை இல்லாமல் கிறிஸ்தவனாக வாழ்ந்து நல்ல குடும்பவாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளலாம் என்று நினைப்பது முட்டாள்தனமான செயல்.

(4) ‘சபை’ என்ற பெயரில் இயங்கிவரும் அமைப்புக்கள் ஏற்படுத்தியிருக்கும் ஆத்மீகக்குழப்பம் – சபை வாழ்க்கையை இந்தளவுக்கு உதாசீனப்படுத்தி அநேகர் வாழமுயல்வதற்கு ‘சபை’ என்ற பெயரில் இருந்துவரும் அமைப்புகளும் காரணமாக அமைந்திருக்கின்றன. அதாவது சபை என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு சபைக்குரிய எந்த அமைப்பையும், இலக்கணத்தையும் தன்னில் கொண்டிராமல் இருந்து வரும் அமைப்புகளையே இங்கே குறிப்பிடுகிறேன். இவற்றில் பெரும்பாலானவைகளுக்கு வேதம் போதிக்கும் சபையைப் பற்றிய உண்மைகள் தெரியாது. அப்படியே ஓரளவுக்குத் தெரிந்திருப்பவைகளும் அவற்றை நடத்திவருகிறவர்களின் சுயநல நோக்கங்களினால் சபையாக அமைய முடியாமல் இயங்கி வருகின்றன. சரியான பக்திவிருத்தியுள்ள தலைமையையும், கட்டுக்கோப்புள்ள சபை அமைப்பையும், அங்கத்துவத்தையும், சபை ஒழுங்கையும், விசுவாச அறிக்கையையும், ஆத்தும விருத்தியையும் நோக்கமாகத் தன்னில் கொண்டிராமல் ‘சபை’ என்ற பெயரில் காளான்கள்போல் தனிநபர்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் கொண்டு தனித்தியங்கும் இத்தகைய குழுக்கள் பட்டிதொட்டியெல்லாம் இருந்துவருகின்றன. இதற்குள் எவரும் போகலாம்; எதுவும் செய்துகொள்ளலாம். கேட்டவர்களுக்கெல்லாம் இங்கு ஞானஸ்நானம் கொடுக்கப்படும். ஞானஸ்நானம் மட்டுமே அங்கத்தவத்துக்கு அடையாளமாக இங்கு கருதப்படுகிறது. எந்தவித அங்கத்துவ விசாரணையையோ, சபை பற்றியும், அங்கத்துவம் பற்றியும் எந்தவிதப் போதனைகளையும் இவை வழங்குவதில்லை. இவற்றில் சபைக்கூட்டங்களைப் பார்க்கமுடியாது. வேதபூர்வமாக ஆராய்ந்து ஆத்துமாக்களால் நியமிக்கப்பட்ட மூப்பர்களையும், உதவிக்காரர்களையும் காணமுடியாது. இவற்றை ஆரம்பித்து வைத்த தனிநபர்களும் அவர்களுடைய குடும்பங்களுமே அதிகாரிகளாக எப்போதும் இவற்றை நிர்வகித்து வருவார்கள். முக்கியமான ஓரிருவர் அல்லது அமைக்கப்பட்டிருக்கும் கமிட்டிகள் எடுக்கப்படும் எல்லா முடிவுகளுக்கும் காரணமானவர்களாக இருப்பார்கள். அத்தோடு திருவிருந்தைக் கலியாணவிருந்துபோல் வருகிறவர், போகிறவருக்கெல்லாம் கேள்விமுறையில்லாமல் கொடுக்கின்ற ஒரு வழக்கத்தையும் இவைகள் கொண்டிருக்கும். உண்மையில் கலியாணவீட்டில்கூட கண்டவர்களையும் தெரிந்து சாப்பிட அனுமதிக்கமாட்டார்கள்; இந்த அமைப்புகள் அதைவிட மோசமான நிலையில் இன்றிருக்கின்றன. ‘சபை’ என்ற பெயரில் காணப்படும் இத்தகைய குழுக்கள் வேதம் போதிக்கும் திருச்சபையை ஆத்துமாக்கள் அறிந்துகொள்ளாதபடி செய்து அவர்களையும் சபைக்குப் பொறுப்புள்ளவர்களாக நடக்க வழியில்லாதபடி செய்திருக்கின்றன. இருந்தும் இந்த அமைப்புகள் தங்களை சபையாகக் கருதி அந்தப்பெயரிலேயே தங்களை இனங்காட்டி ஆத்துமாக்களை உண்மையறியாத, அறிந்துகொள்ள வழியில்லாத ஆத்மீகக் குழப்பத்தில் வைத்திருக்கிறார்கள்.

(5) கூடில்லாக் குருவிகளான கிறிஸ்தவ நிறுவனங்கள் – என் வாழ்க்கையின் அரைவாசிப் பகுதி கிறிஸ்தவ அனுபவத்தை அடைந்து அதில் தொடர்வதாக இருக்கிறது. கிறிஸ்தவனாக வந்த காலத்தில் இருந்தே திருச்சபைக்கு பேராபத்தாக நம்மினத்தில் கிறிஸ்தவ நிறுவனங்கள் இருந்துவருவதை நான் அவதானித்து வந்திருக்கிறேன். நிறுவனங்கள் தங்களுடைய சுயலாபத்துக்காக ஆத்துமாக்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு சபைவாழ்க்கையை இல்லாமலாக்கி விடுகின்றன. பாரம்பரிய சபைகளுக்கு மட்டும் ஒத்தூதி, வேத அடிப்படையில் ஊழியப்பணிபுரியும் சபைகளை உதாசீனம் செய்துவிடுகின்றன. இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே இளமையில் இந்த நிறுவனங்களின் வலையில் விழுந்து இன்றுவரை உறுதியான சபைவாழ்க்கையையும், சீடத்துவத்தையும் அடையாமல் வாழ்ந்துவருகிறவர்கள் என் மனக்கண்ணில் வந்துபோகிறார்கள். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் கட்டுக்கோப்போடு இருந்து வேதத்தை மட்டும் நம்பிப் பிரசங்கம் செய்து வளர்ந்து வருகின்ற சபைகள் போன்ற மாதிரி சபைகள் நம்மினத்தில் இந்த நிறுவனங்களை சமாளிக்கும் விதத்தில் என்றுமே இருந்ததில்லை. ஒன்றில் ‘லிபரல்’ பாரம்பரிய சபைகள், இல்லாவிட்டால் உணர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து சத்தியத்தைப் புறக்கணிக்கும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் சபைகள்தான் இருந்தன. இவற்றிற்கு இடையில் தரம்வாய்ந்த நல்ல சபைகள் உருவாகி ஆத்துமாக்களின் கவனத்தை ஈர்த்து அவர்கள் நாடிவரும்படியாக அமையவில்லை. அங்குமிங்குமாக சிறு சபைகள் எழுந்தபோதும் அவை சபை அமைப்பையும், உறுதியான சபை அங்கத்துவத்தையும், விசுவாச அறிக்கைகளையும் கொண்டமையவில்லை. அவற்றின் தலைவர்கள் பக்திவிருத்தியோடு உறுதியான தலைமைத்துவத்தைத் தரத்தவறிவிட்டார்கள். சபை என்ற பெயரில் இயங்கும் அமைப்புகளினதும், தலைமைத்துவத்தின் எதேச்சாதிகாரப் போக்கும் அநேக வாலிபர்களைத் தூரத்தில் நிற்கவைத்துவிடுகிறது. கிறிஸ்தவ நிறுவனங்கள் தொடர்ந்து நம்மினத்துக் கிறிஸ்தவ சூழலை ஆக்கிரமித்து சபைக்கு எதிரியாகவே இயங்கிவருகின்றன.

மேல்வரும் காரணங்கள் திருச்சபை பற்றிய நல்லறிவை ஆத்துமாக்கள் பெற்றுக்கொள்ளவும், திருச்சபைகள் நல்லவிதத்தில் அமையவும் பெருந்தடையாக இருந்துவிடுகின்றன. வேதம் போதிக்கும் சத்தியங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விசுவாசிகளைக் கூட்டி சபை அமைப்பையும், அங்கத்துவ முறையையும், போதகக் கண்காணிப்பையும், ஒழுங்கு நடவடிக்கையையும், ஓய்வுநாள் அனுசரிப்பையும், நம்பக்கூடிய நல்ல தலைமையையும் கொண்டு இயங்க ஆரம்பித்திருக்கும் சில திருச்சபைகளை கடந்த பத்துப் பதினைந்து வருடங்களில் நம்மினம் கண்டுவந்திருக்கின்றது. மாபெரும் கிறிஸ்தவ சாகரத்தில் இவை நீச்சலடிக்கும் சிறு மீன்கள் மட்டுமே. இருந்தாலும் திருச்சபை பற்றிய நம்பிக்கையைக்கொண்டு வைராக்கியத்தோடு இயங்கி வரும் இவையே வருங்காலத்துக்கு வழிகாட்டிகளாக இருக்கமுடியும். இவை சந்திக்கவேண்டிய போராட்டங்களும், முகங்கொடுக்க வேண்டிய இடர்பாடுகளும் நம்மினத்தில் அநேகம். இருந்தாலும், ‘என் சபையைக் கட்டுவேன்’ என்ற கிறிஸ்துவின் உறுதிமொழி மீது நம்பிக்கை வைத்து இருதயத்தைப் பாதுகாத்து இவை தொடர்ந்து திருச்சபைப் பணியை முன்னெடுக்குமானால் எதிர்காலம் நன்றாகத்தான் இருக்கும்.

மேலை நாடுகளில் எந்தவகை அமைப்புகளுக்கும் எதிரான மனப்பான்மை (Anti-institutionalism) சமுதாயத்தில் தலையெடுத்து இன்று கிறிஸ்தவர்கள் மத்தியிலும் வளர்ந்து வருகிறது. அதிகார அமைப்புகளை எதிர்ப்பதும், தனக்காக மட்டும் வாழும் பின்நவீனத்துவ சிந்தனையும் சமுதாயத்தில் குடிகொண்டிருக்கிறது. இவை கிறிஸ்தவர்களையும் பெருமளவுக்குப் பாதித்திருக்கிறது. இந்த மனப்பான்மையால் ‘அமைப்பில்லாத திருச்சபை’யை நாடுகின்ற கிறிஸ்தவ கூட்டம் அங்கே வளருவதைக் காண்கிறோம். மேலைத்தேய சமுதாயம் திருச்சபை வாழ்க்கையை வரலாற்றில் அறிந்து அனுபவித்துவிட்டு இன்று அதைத்தூக்கியெறிந்துகொண்டிருக்கிறது. நம்மினத்திலோ விஷயமே வேறு. திருச்சபை பற்றிய போதனையையே அறியாமலும், அனுபவத்தில் ருசிபார்க்காமலும் அரைகுறைக் கிறிஸ்தவ அறிவைக்கொண்டிருந்து சுயநலத்துக்காக ‘சபை’ என்ற பெயரில் ஆத்மீகப் பணிசெய்யப் புறப்பட்டிருப்பவர்களைத்தான் இங்கு காண்கிறோம். அறியாமையும், சுயநலமும், சுயலாபமுமே நம்மினத்தில் திருச்சபை அமைவதற்குப் பெருந்தடையாக இன்றும் இருந்துவருகின்றன. இந்த நிலைமை மாறவும், திருச்சபை நம்மினத்தில் வேதபூர்வமாக அமைவதற்கும் என்ன வழி? அதை இனி வரவிருக்கும் ஆக்கத்தில் பார்ப்போம்.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 30 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுபடியும் அஞ்ஞரைப் பெட்டிக்குள்

அஞ்சரைப் பெட்டிக்குள் மீண்டும் ஒருமுறை கைவைத்துப் பார்க்கலாமா? நாட்கள் வேகமாக ஓட ஓட நம்மைச் சுற்றி நடக்கும் காரியங்கள் அதிர வைப்பவையாக இருக்கின்றன. ஐசிஸ் தீவிர வாதம் ஒருபுறம் உலகை உலுப்பிக் கொண்டிருக்கிறது. இயற்கை மாற்றங்களினால் நாடுகள் வெப்ப அதிகரிப்பையும், கடுங்குளிரையும், நிலநடுக்கங்களையும் அத்தோடு சில பகுதிகளில் நெஞ்சையுறுக்கும் மானிடக் கொலைகளையும் கண்டுகொண்டிருக்கிறது. பிரெக்ஸிட் போன்ற அதிரடி அரசியல் மாற்றங்களும், பின்நவீனத்துவ ஒழுக்கக் கேட்டின் உச்சக்கட்ட வெளிப்பாடுகளும் மானுடத்தை உரைய வைத்துக் கொண்டிருக்கின்றன. இதுபற்றியெல்லாம் கிறிஸ்தவர்களான நம்மால் சிந்திக்காமல் இருக்கமுடியுமா? இரட்சித்து நமக்கு ஜீவனளித்திருக்கும் ஆண்டவர் தாம் படைத்திருக்கும் இந்த உலகிலல்லவா அந்த வாழ்க்கையை வாழும்படிச் செய்திருக்கிறார். நிகழ்ந்துகொண்டிருக்கும் முக்கியமான சிலவிஷயங்களை இந்த அஞ்ஞரைப் பெட்டிக்குள் பார்க்கலாம் வாருங்கள்.

பெருமாள்முருகனுக்கு மறுவாழ்வு

பதினேழு நாட்கள் தொடர்ச்சியாக வெளிதேசத்தில் பணியாற்றிவிட்டு ஐந்து நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மறுபடியும் எழுத்துப்பணியை ஆரம்பித்திருக்கிறேன். இரண்டு மாதங்களாகவே பல தவிர்க்கமுடியாத காரணங்களால் எழுத்துப் பணி பாதிக்கப்பட்டிருந்தது. எழுதுவதுதான் இடையில் நின்றிருந்தபோதும் ஆண்டவரின் வசனத்தைப் படித்துப் போதிக்கும் பணி தொடர்வதாகத்தான் இருந்தது. எழுதுவதற்கு எனக்கு ஏற்பட்ட தடைகள் பயமுறுத்தல்கள் காரணமாகவோ, எதிர்ப்புக்களினாலோ ஏற்பட்டவையல்ல; அவை எல்லோரும் அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கும் நடைமுறைக் காரணிகளால் உருவானவை. அந்தத் தடைகள் நீங்க நான் மறுபடியும் எழுத ஆரம்பித்துவிட்டேன். எழுதுகிறவனுக்கு தடைபோடுகிறவர்களும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். மாற்றுக்கருத்துக்களைப் பொறுத்துக்கொள்ளும் இருதயம் இல்லாதவர்கள் உலகமுடிவுவரை இருக்கத்தான் போகிறார்கள். எவருக்கும் எந்தக் கருத்தையும் காரணகாரியங்களோடு கூடிய எதிர்க்கருத்துக்களைக் கொண்டு சந்திக்கும் ஆண்மை இருக்கவேண்டுமே தவிர அவலட்சணமான நடவடிக்கைகள் மூலம் எழுதுகிறவனை அடக்கிவைக்கின்ற ஆண்மையற்ற தன்மையிருக்கக்கூடாது.

Writingபங்களாதேசத்தில் சமீபகாலமாக தீவிரவாத இஸ்லாமியக் கோட்பாட்டைப் பின்பற்றுகிறவர்கள் மாற்றுக்கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களின் தலையைச் சீவி இரத்தங்குடித்திருக்கிறார்கள். இந்நூற்றாண்டில் இப்படி நடப்பது ஆச்சரியமாகத்தான் இருந்தாலும் தீவிரவாதத்தின் விளைவான அது யதார்த்தமாக இருந்து வருகிறது. இந்தளவுக்குப் போகாவிட்டாலும் சில காலத்துக்கு முன் தமிழகத்தில் எழுத்தாளர் பெருமாள்முருகன் இனி எழுதுவதை நிறுத்திவிட்டேன், பெருமாள்முருகன் என்ற எழுத்தாளன் இறந்துவிட்டான் என்று அதிர்ச்சியளிக்கும் விதத்தில் அறிக்கையிட்டது உங்களுக்கு நினைவிருக்கும். அவரெழுதிய மாதொருபாகன் என்ற நூல் ஒரு குறிப்பிட்ட சாதீய சமுதாயத்தை இழிவுபடுத்துவதாக அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு சிறு கூட்டத்தால் கருதப்பட்டு அவர்கள் இந்த எழுத்தாளருக்குப் பெரும் மனத்துன்பத்தை ஏற்படுத்தி அவருடைய எழுதுகோளையும், தார்மீக உரிமையையும் பறித்துக்கொண்டார்கள். எழுத்தாள வர்க்கத்தையே அதிரவைத்த ஒரு செயலிது. பயமுறுத்தல்களால் எழுத்தை ஆளமுயலும் அதிகார வர்க்கத்தின் மூடத்தனமான செயலிது. இருந்தபோதும் இப்போது உயர்நீதிமன்றம் பெருமாள்முருகனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட வழக்குக்கு பலமாதங்களுக்குப் பிறகு உறுதியான தீர்ப்பளித்திருக்கிறது.

பெருமாள்முருகனுக்கு எதிரான அத்தனைக் குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் அடியோடு நிராகரித்து, அவரை மறுபடியும் தலைநிமிர்ந்து நடக்கவும், எழுதுகோளை மீண்டும் கையிலெடுத்து அவரால் முடிந்த, செய்யத்துடிக்கின்ற எழுதுகின்ற பணியைத் தொடர்ந்து செய்ய அனுமதித்து உத்தரவிட்டிருக்கின்றது. இத்தகைய சந்தர்ப்பங்களில் அரசோ, போலிஸோ எழுத்தாளனைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும்விதத்தில் ஒரு குழுவை அமைத்து அது சில முக்கிய நிபந்தனைகளை இத்தகைய சந்தர்ப்பங்களில் பின்பற்றச் செய்யவேண்டும் என்றும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் இந்த அறிவுபூர்வமான செயல் எழுத்தாளர்கள் தலைநிமிர்ந்து நடக்க துணைசெய்திருக்கின்றது. இதெல்லாம் இத்தகைய செயல்கள் இனித் தமிழகத்திலோ இந்தியாவிலோ தொடராது என்பதற்கு அறிகுறியல்ல. எழுத்தையும், எழுத்தாளனையும் ஆளுகின்ற கூட்டங்கள் எழும்போதெல்லாம் சிந்திக்கின்ற மக்களும், அறிவுஜீவிகளும் வெறுமனே சும்மாயிருந்துவிடப்போவதில்லை என்பதை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிசெய்திருக்கின்றது. கிறிஸ்தவனான எனக்கு பெருமாள்முருகனின் கருத்துக்களில் பெரும் ஈடுபாடில்லை. இருந்தபோதும் எழுத்தாளனுக்கு இழைக்கப்படுகின்ற துன்பத்திற்கும், அவன் கையைக் கட்டிப்போடுகின்ற கொடுஞ்செயலுக்கும் எழுதுகிற எவரும் துணைபோக முடியாது. ஒரு கருத்தை எதிர்க்கருத்தால் மட்டும் சந்திக்க வேண்டுமே தவிர பயமுறுத்துதல்களாலும், துன்புறுத்துதல்களாலும் எழுதுகிறவனை அடக்கி அழிக்க முயல்வது கையாலாகாத்தனத்தின் கோரவெளிப்பாடாக மட்டுமே இருக்கமுடியும்.

இந்தச் சம்பவம் சாதீய வெறி எந்தளவுக்கு தமிழினத்தின் இன்றும் புரையோடிப்போய் பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணமாக இருக்கிறது. சாதீய வழியில் அரசியல் செய்த பல கட்சிகள் சமீபத்திய தேர்தலில் டெப்பாசீட் இழந்து இருந்த இடமில்லாமல் போயிருக்கிறார்கள்; இந்து சாதீயம் பேசும் பா. ஜா. க உட்பட. பொதுவாகவே சாதீய அடிப்படையில் எதையும் செய்வதைத் தமிழக மக்கள் விரும்பாவிட்டாலும் சாதியை வைத்துப் பிழைப்பு நடத்தும் கூட்டம் இன்றும் அதிகாரங்கொண்டதாக தமிழக சமுதாயத்தை அடக்குமுறையால் ஆள முற்பட்டு வருவதை மறுக்க முடியாது. சாதிக்கு வேட்டு வைக்கவேண்டும் என்று கிளம்பிய திராவிடக் கட்சிகளே இன்று அதற்குப் பலியாகி அடிமைகளாகிவிட்டிருக்கின்றனர். சமுதாயத்தில் இன்றைய சாதீயத்தின் ஆளுகை கிறிஸ்தவர்களை சிந்திக்க வைக்கவேண்டும். வேதபூர்வமான ஆவிக்குரிய மெய்க்கிறிஸ்தவ திருச்சபைப் பணிகள் தமிழகத்தில் உருவாக வேண்டுமானால் சாதிப்பேயின் ஆக்கிரமிப்பை இருதயத்தில் இருந்து அகற்றி வாழும் கிறிஸ்தவர்கள் தொகை அதிகரிக்க வேண்டும். பண்பாடு என்ற பெயரில் சாதிப்பேயையும், இந்துப் பாரம்பரியங்களையும் அரவணைத்து கிறிஸ்தவம் என்ற பெயரில் கபட நாடகம் ஆடும் சபைகளும் ஊழியங்களும் கிறிஸ்துவோடு எந்தத் தொடர்பும் கொண்டவை அல்ல. சாதீயத்திற்கு வக்காலத்து வாங்குகிறவர்கள் கிறிஸ்துவோடு சம்பந்தமில்லாதவர்கள். எங்கு சாதி ஆளுகிறதோ அங்கு கிறிஸ்துவையும், கிறிஸ்தவனையும் காணமுடியாது. அந்தளவுக்கு கிறிஸ்துவும் கிறிஸ்தவமும் சாதிக்குப் பேரெதிரிகள்.

அல்லோலகல்லோலப்படுத்திவரும் அமெரிக்கத் தேர்தல் ஜுரம்

usa-votinghandஇவ்வருட இறுதியில் நடக்கவிருக்கும் அமெரிக்க தேர்தல் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். குடியரசுக் கட்சியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும் டொனல்ட் டிரம்ப்பின் துரித எழுச்சியையும் பற்றி விளக்கியிருந்தேன். வாஷிங்டன் அரசியல்வாதிகளின் மேல் நம்பிக்கையிழந்து கோபத்தில் இருந்துவந்த குடியரசுக் கட்சி ஆதரவாளர்களே டிரம்பின் எழுச்சிக்கு முழுக்காரணம். அந்தக்கோபத்தை நல்ல முறையில் வசதியாக பயன்படுத்திக்கொண்டார் டொனல்ட் டிரம்ப். என்றுமில்லாதவகையில் குடியரசுக் கட்சியின் ஆரம்பத் தேர்தலில் அனுபவசாலிகளான அரசியல்வாதிகளான பதினேழு பேரைச் சாய்த்து, வரலாற்றில் காணப்படாத வகையில் 14 கோடி வாக்குகளைப் பெற்று இன்று குடியரசுக்கட்சி நியமனத்தை நோக்கி டிரம்ப் நடைபோட்டுக்கொண்டிருக்கிறார். தன்னைக் கிறிஸ்தவாக டிரம்ப் இனங்காட்டிக் கொண்டபோதும் அவர் நடைமுறையில் வேதபூர்வமான கிறிஸ்தவ அனுபவத்தைப் பெற்றவரோ அல்லது அத்தகைய வாழ்க்கை முறையை நடைமுறையில் கொண்டவரோ அல்ல. பலமுறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் மட்டுமல்லாது அவருடைய செயல்திட்டங்களும், கோட்பாடுகளும் கிறிஸ்தவ போதனைகளை ஒத்தவையல்ல. ஒருசில கிறிஸ்தவ போதகர்களும், முன்னணிக் கிறிஸ்தவ தலைவர்களும் டொனல்ட் டிரம்ப்பை ஆதரித்துப் பேசிவருவதற்குக் காரணம் அரசியல் பொருளாதார நோக்கங்களே தவிர அவருடைய கிறிஸ்தவ நம்பிக்கைகளினாலல்ல. சமீபத்தில் ஓர்லான்டோவில் ஓரினச்சேர்க்கையாளர்களின் கிளப் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு டிரம்ப ஓரினச் சேர்க்கையாளர்களை ஆதரித்துப் பேசியிருக்கிறார். ஓரினச்சேர்கையாளரான இசைவல்லுனர் எல்டன் ஜோன் டிரம்ப்பின் நண்பர். அவருடைய ஓரினத் திருமணத்தைக் குறித்துக் கருத்துக்கூறிய டிரம்ப் அவர்கள் என்ன செய்துகொண்டாலும் அது அவர்களுடைய சொந்தவிருப்பம் என்று கூறியிருக்கிறார். அமெரிக்காவின் பெரும்பாலான சுவிசேஷக் கிறிஸ்தவர்கள் கிளரி கிளின்டன் அதிபராக வருவதை எந்தவிதத்திலும் விரும்பாவிட்டாலும் டிரம்ப்பை ஆதரிப்பதற்குத் தயங்குவதில் ஆச்சரியமில்லை. இவ்வருட குடியரசுக்கட்சி அதிபர் நியமனத்தேர்தலில் டொனல்ட் டிரம்ப் மூலம் பலருக்கு தர்மசங்கடமான நிலை உருவாகியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. டிரம்ப் குடியரசுக்கட்சியின் வழமைகளுக்கெல்லாம் மாறான கென்டிடேட்டாக இருக்கிறார். இது கன்சர்வேட்டிவ்களான குடும்பத்தாருக்கும், அவர்களைப்போன்றவர்களுக்கும் பெரும் எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. இம்மாதம் நிகழவிருக்கும் குடியரசுக்கட்சி கன்வென்ஷன் சச்சரவிலும், கோமாளித்தனத்திலும் முடியாமல் இருந்தால் சரி.

குடியரசுக் கட்சியின் நிலை இப்படியிருக்க கிளரி கிளின்டனின் நிலையும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு பற்றி பலருக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. லிபியாவின் பெங்காஸி சம்பவம் கிளின்டனின் நிர்வாகத்திறமையில் பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. அரச இமெயில்களை சொந்த சேர்வர்களில் பயன்படுத்திக் கவனக்குறைவான முறையில் செயல்பட்டு வந்திருப்பதும், அதை நியாயப்படுத்தி உண்மையை மறைத்துப் பேசி வந்திருப்பதும் கிளரி கிளின்டன் நம்பக்கூடிய விதத்தில் அதிபராகப் பணிபுரியத் தகுந்தவரா என்ற எண்ணத்தைத் தோற்றுவித்திருக்கிறது. ஜனநாயகக்கட்சியினரிடத்திலேயே அவருக்கு எல்லோர் மத்தியிலும் ஆதரவிருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. அதுவும் அமெரிக்க உளவுத்துறையான எப். பி. ஐ கிளின்டன் அரச இமெயில்களைப் பயன்படுத்தியிருக்கும் விதம் முழுத்தவறானவை என்று அறிக்கையிட்டிருந்தபோதும், கிரிமினல் குற்றஞ்சாட்டும் அளவுக்கு அவர் தவறு செய்யவில்லை என்று அறிவித்திருப்பதும் பெரும் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. இதில் அரசியல் உள்நோக்கம் இருக்குமோ என்றும் ஒபாமாவிற்கு இதில் எந்தளவுக்கு சம்பந்தமிருக்கிறது என்றும் பலரை எண்ணவைத்திருக்கிறது. அமெரிக்க தேர்தல் நாடகங்கள் தொடர்ந்து எல்லோரையும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது என்பது மட்டும் சந்தேகமில்லை.

என்றுமில்லாதவகையில் இந்தத் தேர்தல் காலம் அமெரிக்க சமுதாயம் எந்தளவிற்கு ஒழுக்கத்தை ஓரங்கட்டிவிட்டு ஏனைய ஐரோப்பிய நாடுகள், கனடா போன்றவற்றைப்போல துரிதகதியில் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது. கடவுளைப் பற்றிய நம்பிக்கை அந்நாட்டுச் சமுதாயத்தில் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் கீழிறங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க போதக நண்பர் ஒருவரோடு இது பற்றி சமீபத்தில் பேசியபோது தேவனின் நியாயத்தீர்ப்பு தன் நாட்டின்மேல் இறங்கியிருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை என்றார். வரலாற்றுப் பெருமைமிக்க பியூரிட்டன்களை அடித்தளமாகக் கொண்டமைந்த இந்நாடு இன்று ஒழுக்கக்கேடான லிபரல் வாழ்க்கை முறையையும், செயலிழந்து, பொருளற்றுப் போய்விட்ட சோஷலிஸக் கொள்கைகளையும் நாடி விரும்புவது எந்தளவுக்கு அச்சமுதாயத்தின் அத்திவாரத்துக்கு ஆபத்தேற்பட்டிருக்கிறது என்பதைச் சுட்டுகிறது. சமீபத்தில் ஒபாமா கிளரி கிளின்டனை ஆதரித்துப் பேசிய ஒரு கூட்டத்தில் அவரை ஆதரித்து வோட்டளித்தால் முன்னேற்றத்தை அடையலாம் என்றும், டிரம்ப்பை ஆதரிப்பது சமுதாயத்தைப் பின்னோக்கிப் பழங்கோட்பாடுகளைப் பின்பற்ற வைக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். ஒபாமா விரும்பித் தேடும் முன்னேற்றம் அமெரிக்க சமுதாயத்தில் ஒழுக்கத்திற்கு மறுவிளக்கம் கொடுக்கும் ஒழுக்கக்கேடான பின்நவீனத்துவ மாற்றங்களே. கிளரி அதிபராக வருவது மறுபடியும் ஒபாமா வழியில் தேசம் அழிவை நோக்கிப் போவதிலேயே இட்டுச்செல்லும். கிளரியா, டிரம்ப்பா என்று தீரர்மானிப்பதற்காக அமெரிக்க மக்கள் நவம்பரில் தேர்தலை சந்திக்கப்போகிறார்கள். இது அமெரிக்க தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகிற தேர்தல். யார் வென்றாலும் அது நல்லதற்கு அல்ல என்பதில் பெரும்பாலான அமெரிக்க கிறிஸ்தவர்களுக்கு எந்த சந்தேகமுமில்லை என்பதைத்தான் உணரமுடிகின்றது. இறையாண்மையுள்ள தேவன் மட்டுமே இந்தத் தேசத்தை அழிவுப்பாதையில் இருந்து காப்பாற்ற முடியும். இந்த தேசமும் நாசத்தை சந்திக்கவேண்டும் என்ற நியாயத்தீர்ப்பு அதன் மேல் இருக்குமானால் அதைத் தடுக்க யாரால் முடியும்?

பிரிட்டனில் ‘பிரெக்ஸிட் (Brexit)’

brexitபிரிட்டனின் பிரதமரான டேவிட் கெமெரன் கடந்த மாதம் ஐரோப்பிய ஐக்கியத்தில் (European Union) பிரிட்டன் தொடர்ந்திருக்க வேண்டுமா, இல்லையா? என்பது பற்றி வாக்கெடுப்பு நடத்தத் தீர்மானித்தார். அதில் தொடர்ந்திருக்க வேண்டும் என்பதே அவருடைய நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டையே தன் கட்சியும், நாடும் எடுக்கும் என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்த கெமரன் அதுபற்றிப் பிரச்சாரம் செய்து வந்தார். அமெரிக்க அதிபரான ஒபாமாவும் பிரிட்டனுக்கு விஜயம் செய்து பிரிட்டன் தொடர்ந்து ஐரோப்பிய ஐக்கியத்தில் இருப்பதே அதற்கு நல்லது என்றும் பேசியிருந்தார். இதெல்லாம் நடந்தும் பேரதிர்ச்சி அளிக்கும் விதத்தில் வாக்கெடுப்பு நடந்து முடிந்தபோது வெளியேற வேண்டும் என்று வாக்களித்தவர்கள் 52வீத வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தனர். இது டேவிட் கெமரன் கொஞ்சமும் எதிர்பார்த்திராத நிகழ்ச்சி. உடனடியாகவே கெமரன் தான் அக்டோபருக்கும் பின் பிரதமராக இருக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். அவருடைய கட்சி இப்போது அடுத்த பிரதமரைத் தேடும் பணியில் இறங்கியிருக்கிறது. அதுவும் வெளியேற வேண்டும் என்ற கோஷ்டியைச் சேர்ந்தவர்களே அதற்குத் தெரிவாக வேண்டும் என்ற நிலையும் எழுந்திருக்கிறது. லேபர் கட்சியும் இதனால் பாதிக்கப்பட்டு வெளியேறக்கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அதன் தலைவர் தனக்கெதிரான பெரும் எதிர்ப்பு நிலைக்கு கட்சியில் முகங்கொடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியைச் சந்தித்து பதவியைக் காத்துக்கொள்ளப் போராடிக்கொண்டிருக்கிறார். வெளியேற வேண்டும் என்ற கோஷ்டியின் தலைவர்களில் ஒருவரான நைஜல் பராஜ் இதற்கான தன்னுடைய பதினேழு வருட போராட்டத்தில் பெரு வெற்றி கண்டிருக்கிறார்.

என்னதான் நடந்தது? ஏன் பிரெக்ஸிட்? என்று கேட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது. இதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. முதலில், உலகமயமாக்குதல் (Globalization) உச்சகட்டத்தை அடைந்து பல நன்மைகளை உலகுக்குக் கொண்டு வந்திருந்தபோதும் பெரும் பாதிப்புகளையும் உண்டாக்கி அவற்றிற்கு விடிவு காணமுடியாமல் செய்திருக்கிறது. ஐரோப்பிய ஐக்கியத்தில் இருக்கும் சில நாடுகளின் சமீபத்திய பொருளாதார வீழ்ச்சியும், அந்நாடுகளை நிமிர வைப்பதற்காக ஏனைய அங்கத்துவ நாடுகள் பணத்தை வாரிக் கொட்ட வேண்டிய நிலையும் மக்களுடைய சிந்தனையில் உலகமயமாக்குதல் பற்றிய பல கேள்விகளைக் கேட்க வைத்தன. இதுபோதாதென்று சிரியாவிலும், ஈராக்கிலும் நடந்து வரும் போர் இலட்சக்கணக்கானவர்களை ஐரோப்பா நோக்கிப் படையெடுக்க வைத்ததால் பெருகி வழியும் அகதிகள்கூட்டம் ஐரோப்பிய நாடுகளைத் தள்ளாட வைத்து, அகதிகள் விஷயத்தில் ஒத்துப்போக முடியாத பிரச்சனைகளையும் பிரிவினையையும் உருவாக்கியது. போதாததற்கு ஐசிஸ் தீவிரவாத அமைப்பு பிரான்ஸிலும், பிரெசெல்ஸ்ஸிலும் தீடிர் தாக்குதல் நிகழ்த்தி நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றதும் பிரிட்டிஸ் மக்களை அதிகம் பாதித்து, சிந்திக்க வைத்து தங்களுடைய நாட்டின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுக்க வைத்தது. ஐரோப்பிய ஐக்கியத்தில் தொடர்ந்திருந்தால் தங்களுடைய நாடு பாதிப்புக்குள்ளாகும் என்ற எண்ணம் தீவிரமடைந்து அதிலிருந்து வெளியேற வேண்டும் என்ற உறுதிப்பாட்டை எடுக்க வைத்தது. ஒரு காலத்தில் உலகமயமாக்குதலே அனைத்திற்கும் விடிவு என்றிருந்த நிலைப்பாடு இன்று சொந்த நாட்டின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஐரோப்பிய ஐக்கியத்தில் இருந்து விலக வேண்டும் என்று பிரிட்டிஷ் மக்களை வாக்களிக்க வைத்திருக்கிறது.

இதேநிலையை இன்று அமெரிக்க மக்களிடமும் காண்கிறோம். டொனல்ட் டிரம்ப்பின் கொள்கைகள் பிரெக்ஸிட் நிலைப்பாட்டையே மக்கள் முன் வைக்கின்றன. அதற்குப் பேராதரவு அங்கு பெருகி நிற்பதையும் நாம் காண்கிறோம். ஐரோப்பிய ஐக்கியத்தில் தொடர்ந்திருக்கக் கூடாது என்று வாக்களித்தவர்களும், அவர்களின் தலைவர்களும் பிரெக்ஸிட் எங்குபோய் முடியும், அதன் விளைவுகள் என்ன என்பதை அறிந்திருந்ததாகவோ, அதுபற்றி சிந்தித்துப் பார்த்திருப்பதாகவோ தெரியவில்லை. அது பற்றிய காரசாரமான விவாதங்கள் இப்போது நிகழ்ந்து வருகின்றன. உண்மையில் பிரெக்ஸிட் பலரையும் வியப்படைய வைத்திருப்பதோடு, ஓரளவுக்கு பயத்தையும் உண்டாக்கியிருக்கிறது. அடுத்து என்ன என்பது பற்றி எவருக்கும் சரியாகத் தெரியாத நிலையை பிரெக்ஸிட் உண்டாக்கியிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் வேறு சிலவும் இந்த முடிவை எடுத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதுபற்றி கிறிஸ்தவர்களான நாம் எத்தகைய கருத்தை முன்வைக்கக் கூடும்? முதலில் எத்தனைப் பொருளாதார, வளர்ச்சிக்கான நிலைப்பாட்டை மனிதர்கள் எடுத்தாலும் அவையல்ல பூரணமான தீர்வை மனிதனுக்கும் நாட்டுக்கும் அளிக்க முடியும் என்பதுதான். நமக்கு மேல் ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணமே இல்லாமல் இவ்வுலகத்தில் சமாதானத்தையும், சொகுசு வாழ்க்கையையும் நாடிப்போய் எடுக்கவைக்கும் எந்த முடிவும் பூரணமாக விடிவை மனிதனுக்கு அளித்துவிடாது என்பதை பிரெக்ஸிட் சுட்டுகிறது. இரண்டாவதாக, பாவம் மனிதனில் தொடர்ந்திருக்கும் வரையில், அதற்கு அவனில் விடிவு ஏற்படாதவரையில் அவனால் நிம்மதியாக சக பிரஜையோடு தன்னலமில்லாமல் வாழ முடியாது என்பதையும் பிரெக்ஸிட் சுட்டுகிறது. அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷ்யாவுக்கும் இடையில் இருந்த ‘உரைபனிப் போர்’ முடிவுற்ற பிறகே பேர்லின் சுவர் இடிக்கப்பட்டு இரண்டு ஜெர்மனியும் ஒன்றாகி உலகமயமாக்குதலுக்கு வழிகாணப்பட்டது. அது இன்று ஒரு முடிவை எட்டியிருக்கிறது என்று நினைக்கும் வகையிலேயே பிரெஸ்ஸிட் நிகழ்வு ஏற்பட்டிருப்பதாகக் காண்கிறேன். பிரெக்ஸிட்தான் எதிர்காலத்திற்குத் தீர்வு என்று நினைப்போமானால் மீண்டும் நாம் தவறு செய்தவர்களாகிவிடுவோம். கடவுளை மையமாகக் கொண்டு அமைந்திராத எந்த அரசியல், பொருளாதார, சமூகத் தீர்வும் மனிதனுக்கு நிரந்தர விடுதலையை ஒருபோதும் தரமுடியாது. துரித கதியில் சந்தோஷத்தோடு ஓடிக்கொண்டிருந்த ஒரு வண்டி சடுதியாக எதிலோ இடிபட்டு திடீரென்று நின்றதுபோல்தான் பிரெக்ஸிட் எல்லோரையும் நிலைகுலைய வைத்திருக்கிறது. இதுவே முடிவல்ல. தனக்கு மேலிருக்கும் கடவுளை ஒரு தடவை நினைத்துப் பார்த்து பாவவிடுதலைக்காக அவருடைய மன்னிப்பைக் கிறிஸ்துவை விசுவாசித்துப் பெற்று தன் வாழ்க்கையை ஆண்டவருடைய வேதத்தின்படி மனிதன் அமைத்துக்கொள்ளுகிறபோதே அவனுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் எல்லா விடிவும் ஏற்பட முடியும். நம்மைச் சுற்றிவர, பிரெக்ஸிட் உட்பட நிகழ்ந்து வரும் அதிரடி அரசியல், பொருளாதார, சமுதாய நிகழ்வுகள் எல்லாமே பாவத்தின் வலிமையைத்தான் எனக்குச் சுட்டிக்காட்டுகிறது. முழுமையான மீட்பு மனிதனுக்கும், நாடுகளுக்கும் கிறிஸ்துவிடம் இருந்து மட்டுமே வரமுடியும். ஆவிக்குரிய ஆத்மீக எழுச்சிகள் பலவற்றை வரலாற்றில் கண்டிருக்கும் பிரிட்டன் இன்று அதையெல்லாம் தாக்கியெறிந்துவிட்டு ‘பிரெக்ஸிட்டை’ ஆபத்பாந்தவனாக எண்ணி அணுகியிருப்பது அதன் புத்திசாலித்தனத்தைக் காட்டவில்லை; பாவ சிந்தனையின் தொடர்விளைவின் அறிகுறியாகத்தான் படுகிறது.

வேதப்பிரசங்கப் பஞ்சம்

சமீபத்தில் ஒரு ஆத்மீக கூட்டத்தில் மத்தேயு 18ம் அதிகாரத்தை விளக்கிக் கொண்டிருந்தேன். கூட்டமுடிவில் ஒரு சிலர் அந்த அதிகாரத்திற்கு நான் அளித்த விளக்கத்தைப் பாராட்டி, அவர்களுக்கு நான் பேருதவி செய்திருப்பதாகக் கூறினார்கள். ஏன் என்று தெரிந்துகொள்வதற்காக இந்தப் பகுதியை நீங்கள் இதுவரை எப்படிப் புரிந்துகொண்டிருந்தீர்கள்? என்று கேட்டு வைத்தேன். அதற்கு ஒருவர் ‘கட்டுவது, கட்டவிழ்ப்பது’ என்ற பதங்கள் நமக்கு பேய்களைக் கட்டவும், கட்டவிழ்க்கவும் ஆண்டவர் தந்திருக்கும் அதிகாரத்தைக் குறிப்பதாகத்தான் இதுவரை நினைத்துப் பேய் விரட்டி வந்திருக்கிறோம் என்றார். ஒரு கணம் திகைத்துப் போனபோதும் அவர்கள் அப்படி நினைத்து செய்த காரியங்கள் இப்போது தவறு என்று உணர்ந்திருப்பது அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். இது எந்தளவுக்கு நம்மினத்தில் வேதப்பஞ்சம் நிலவி வருகிறது என்பதை உணர்த்துகிறது. வேதப் பஞ்சத்தால் பிரசங்கப் பஞ்சமும் உருவாகி ஆத்துமாக்கள் சத்தியத்தை சத்தியமாக கேட்கும் வழி இல்லாமல் இருக்கும்போது மெய்க் கிறிஸ்தவத்திற்கு நம்மினத்தில் ஏது வழி? வேதப் பஞ்சமும் எழுப்புதலும் எப்படி இணைந்து வாழமுடியும்? மெய்யான எழுப்புதலும் சீர்திருத்தமும் ஏற்பட்டபோதெல்லாம் வேதப் பஞ்சத்தின் தளையிலிருந்து மக்கள் அகல பிரசங்கங்கள் வேதபூர்வமாக உயர் நிலையில் இருந்திருப்பதைத்தான் வரலாறு நமக்கு சுட்டுகிறது. அந்நிலை உருவாகும் ஆரம்ப நிலையில் கூட நம்மினம் இல்லாதிருப்பது என் இருதயத்தில் வலியை ஏற்படுத்தியது. போதகர்கள், பிஷப்புகள், பிரசிடண்டுகள் என்றெல்லாம் பெயர்சூட்டிக்கொண்டு கிறிஸ்தவ தலைவர்களாக, அரசியல்வாதிகளைப்போலத் தங்களை இனங்காட்டிக்கொள்ளுகின்ற ஒரு பெருங்கூட்டத்தைத்தான் இங்கு பார்க்கிறோமே தவிர, வேதத்தைத் தெளிவாக அறிந்துணர்ந்து அதை விளக்கிப்போதித்துப் பிரசங்கிக்கும் மெய்ப்போதகனைக் காணமுடியாமல் இருப்பது நெஞ்சைப் பிளக்க வைக்கிறது.

இதேபோல் இன்னுமொரு கூட்டத்தில் ஆவியால் நிரம்பிய பிரசங்கம் எப்படி இருக்க வேண்டும் என்று மூன்று செய்திகளை அளித்தேன். முதலில் அது எனக்கே ஆசீர்வாதமாக இருந்தது. ஆவிக்குரிய, ஆவியால் நிரம்பிய பிரசங்கம் இன்று இல்லாமலிருப்பதற்கான ஐந்து காரணிகளை முதலில் விளக்கி, அதற்குப் பின் ஆவியானவரின் தன்மையை விவரித்து முக்கியமாக, வார்த்தை மூலம் அவர் செய்து வரும் ஆவிக்குரிய செயலை விளக்கி, இறுதியாக ஆவியில் நிரம்பிய பிரசங்கம் அமைவதற்கு அத்தியாவசியமான உதிரிப்பொருட்கள் எவை என்பதை விளக்கினேன். இதுபோன்ற செய்திகளை இதுவரை கேட்டதில்லை என்றே கூட்டத்தில் கலந்துகொண்ட போதகர்கள் சொன்னார்கள். ஆவலோடு அநேக நூல்களை அவர்கள் அள்ளிக்கட்டிக்கொண்டு போவதைப் பார்த்து இதயம் மகிழ்ந்தது. சாகரமாகப் பரந்து வியாபித்து நிற்கும் கடலில் சிறு தோனியில் போய்க்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. கண்ணுக்கெட்டிய தூரம்வரையில் ஊழியம் என்ற பெயரில் வேதப்பஞ்சத்தைப் போக்க வக்கில்லாத கூத்துக்கள் தொடர்ந்து நடந்துவருகின்றபோது எறும்புபோலிருந்து நம்மால் முடிந்ததை செய்துவர இத்தனைப் பாடுபட வேண்டியிருக்கிறதே என்றும், வேதத்தைப் படிப்பதற்கும், அதில் தேர்ச்சிபெற்று வேதத்தை மட்டுமே போதித்து ஆத்தும ஆதாயம் செய்வதற்கும் துடிப்போடு முன்வரும் இளைஞர்கூட்டம் நம்மினத்தில் உருவாக ஆண்டவர் கிருபை பாராட்ட வேண்டும் என்றும் ஜெபிக்காமல் இருக்க முடியவில்லை. அத்தகைய ஒரு இளைஞனை நான் சமீபத்தில் சந்தித்தேன். சபையில் பாடல் நேரத்தில் வழிநடத்துபவனாக இருந்த அந்த இளஞன் நான் பேசியதைக் கேட்டு என்னிடம் வந்து வேத இறையியலைத் திறம்படக் கற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். திருமறைத்தீபம் ஐந்து வால்யூம்களை வாங்கித் தீவிரத்தோடும் கருத்தோடும் வாசி என்றும், நாம் வெளியிட்டிருக்கும் நூல்கள் அத்தனையையும் பெற்று வாசிப்பை வளர்த்துக்கொள் என்றும் ஆலோசனை கூறினேன். நம் பிரசங்கத்தாலும் போதனையாலும் ஒரு இளைஞனையாவது சிந்தித்து செயல்பட வைக்கமுடியுமானால் இந்தக் காலகட்டத்தில் அதுவே பெரும் சீர்திருத்தத்திற்கு அடிக்கல் நாட்டியதாக அமையும்.

john-calvin-2வரும் பத்தாம் திகதி சீர்திருத்தவாதியான ஜோன் கல்வினின் பிறந்தநாள். அதை ஒரு சாக்காக வைத்து எட்டு மணிநேரம் கல்வினின், வளர்ப்பு, வாழ்க்கை, திருச்சபை சீர்திருத்தத்தில் அவர் வகித்த முக்கிய பங்கு, எழுதிக்குவித்திருந்த இலக்கிய இரத்தினங்கள், அவர் விட்டுச் சென்றிருக்கும் சவால்கள் என்பவற்றை விளக்கி எட்டுமணி நேரம் விரிவுரை அளித்தேன். இன்னும் சில மணிநேரங்கள்கூட அதுபற்றிப் பேசியிருந்திருக்க முடியும். அந்தளவுக்கு அந்த மனிதனைக் கர்த்தர் அற்புதமாகப் பயன்படுத்தி திருச்சபை சீர்திருத்தத்தில் முக்கிய பங்காற்ற வைத்திருந்தார். இந்த விரிவுரைகளை நூல்வடிவில் வெளியிடலாமே என்ற எண்ணமும் உடனடியாகத் தோன்றியது. இனி அந்தப் பணியை ஆரம்பிக்க வேண்டும். இவற்றைக் கேட்டு மகிழ்ந்த ஊழியக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுமானால் மரித்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் கல்வினின் மூலம் கர்த்தர் பேசியிருக்கிறார் என்று தான் அர்த்தம். கல்வினைப் பற்றி பெரும் பிரசங்கியான ஸ்பர்ஜன் சொல்லுகிறார், ‘என் வாழ்நாளில் தொடர்ந்து படிக்கப் படிக்க, ஜோன் கல்வினின் இறையியல்  போதனைகளே பூரணத்துவத்தைத் தொடுகின்ற போதனைகளாக இருப்பதை நான் தெளிவாகக் காண்கிறேன்.’ வில்லியம் கன்னிங்கம் என்ற ஸ்கொட்லாந்து இறையியலறிஞர் சொல்லுகிறார், ‘பவுலுக்கு அடுத்தபடியாக மனிதகுலத்துக்கு அதிக நன்மைகள் புரிந்திருக்கும் மனிதர் ஜோன் கல்வின்.’ ‘பதினாறு வருடங்கள் அவருக்குப் பக்கத்தில் இருந்து அவருடைய வாழ்க்கையை நான் கவனித்திருக்கிறேன். அதனால் அவரைப் பற்றிக் கருத்துச் சொல்லுகிற உரிமை எனக்கிருக்கிறது. சகலருக்கும் உதாரணமாக இருக்கும் விதத்தில் ஒரு கிறிஸ்தவனின் வாழ்வையும், மரணத்தையும் ஜோன் கல்வின் தன் வாழ்க்கையில் பிரதிபலித்திருந்தார். அத்தகைய உதாரணத்தை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிடவோ அல்லது அதைப் பின்பற்றி வாழ்வதோ முடியாத காரியம்’ என்று கல்வினின் நெருங்கிய நண்பரான தியடோர் பீசா தெரிவித்திருக்கிறார்.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 32 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

அஞ்சரை பெட்டிக்குள்

சமையலுக்குத் தேவையான பலவித மசாலாவகைகளைத் தனித்தனியாகப் பிரித்து ஒரே பெட்டியில் டப்பாக்களில் வரிசையாய் வைத்திருப்பார்கள் வீட்டுப்பெண்கள். அந்தப் பெட்டிக்குப் பெயர் அஞ்சரை பெட்டி. பல விஷயங்களை ஒரே நேரத்தில் இந்த ஆக்கத்தில் நான் விளக்கப்போவதால் இந்தப் பெயரைக் கொடுத்திருக்கிறேன். ஏறக்குறைய மூன்று வாரங்கள் வெளியூர் பயணத்திற்குப் பிறகு மறுபடியும் ஊர் வந்து சேர்ந்திருக்கிறேன். வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் எல்லாவற்றையும் நாம் பெரிதுபடுத்துவதில்லை; முக்கியமாக சிறுசிறு நிகழ்ச்சிகளை. பெரிய சம்பவங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துவிடுகிறோம்; அதுவும் அவை நம்மைப் பாதிப்பதாலோ அல்லது நமக்கு நன்மை தருவதாலோ மட்டுமே. இந்த மூன்று வாரங்களில் எத்தனையோ நிகழ்ச்சிகள் என் வாழ்க்கையில் மட்டுமல்ல, சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையிலும் உலகத்திலும் நடந்து முடிந்திருக்கின்றன. நினைத்துப் பார்க்கவேண்டியவையும், பாராட்டவேண்டியவையும், கடவுளைப் போற்றவேண்டியவையும், மறந்துபோக வேண்டியவையும், மனதைத் தவிக்கவைத்தவையும், மகிழ்ச்சி அடையச் செய்யதவையும் என்று ஏராளமான விஷயங்களுக்கு முகங்கொடுத்து கடந்துவந்திருக்கின்றோம். மனிதனாகப் பிறந்திருக்கும் நமக்கு எல்லா விஷயங்களையும் சம அளவில் நினைத்துப் பார்க்கவோ அவற்றில் இருந்து பாடங்கற்றுக்கொள்ளவோ முடியாது; நமது ஞானமும், ஆற்றலும் குறைவானது. இருந்தபோதும் நடந்துபோன பல விஷயங்களை நினைத்துப் பார்க்காமலும் அவற்றில் இருந்து பாடங்கற்றுக்கொள்ளாமலும் இருப்பது மனிதனுக்கு உகந்ததல்ல. ஒன்று தெரியுமா? நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அனைத்திலும் கடவுள் சம்பந்தப்பட்டிருக்கிறார்; நேரடியாகவோ, பின்னால் இருந்தோ செயல்பட்டிருக்கிறார். அவரின்றி ஒன்றும் நிகழ்வதில்லை; அவர் சம்பந்தப்படாத விஷயங்கள் எதுவுமே இல்லை. கடவுள் இறையாண்மையுள்ளவர் என்ற அவசியமான, ஆழமான சத்தியத்தை நம்புகிற நாம் இதை நம்பித்தான் ஆகவேண்டும். இந்த நம்பிக்கையே நம்மை முன்செல்ல வைக்கிறது; ஊக்குவிக்கிறது; உற்சாகப்படுத்துகிறது.

புடம்போட்டெடுக்கும் போராட்டங்கள்

204px-Glazing_a_crucibleஊருக்கு வந்திறங்கியபோதே மனதைத் தளரவைக்கும் ஒரு செய்தியை நண்பர் ஒருவர் தொலைபேசியில் சொன்னார். அது நம்பிக்கைத் துரோகம் சம்பந்தமான விஷயம். அதைக் கேட்டபிறகு நான் சொன்னேன், ‘இதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை; என்ன, மனிதனாக நாம் பிறந்திருப்பதால் மனது கொஞ்சம் வலிக்கும். ஆனால், கிறிஸ்தவனாக இருப்பதால் இது தரும் பாடத்தைக் கற்றுக்கொண்டு, சம்பவத்தை ஒதுக்கிவைத்துவிட்டு முன்னோக்கிப் போகவேண்டும்’ என்று. மனிதர்கள் எப்போதும் மனிதர்களாகத்தான் இருப்பார்கள்; கிறிஸ்தவர்களும்கூட. வாழ்க்கையில் சுகமும், துக்கமும் சேர்ந்தே வரும்; ஆழமான நட்பின் அனுபவத்தையும், நம்பிக்கைத் துரோகத்தையும் நாம் சேர்ந்தே அனுபவிப்போம். தொலைபேசியில் பேசிய நண்பருக்கு ஆறுதல் சொல்லி, செய்யவேண்டிய ஆத்மீகப் பணிகளில் இருந்து நமது கவனத்தைத் திசைதிருப்பப் பார்க்கும் இத்தகைய சம்பவங்களை ஒதுக்கிவைத்துவிட்டு முன்னோக்கிப் போவதை இலக்காகக் கொண்டிருக்கவேண்டும் என்று பேச்சை முடித்தேன்.

நடைமுறைக் கிறிஸ்தவத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். கிறிஸ்தவம் நமக்கு கடவுளோடு உறவை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. கிறிஸ்துவை வாழ்க்கையில் அடையவும், அவருக்காக வாழவும் நமக்கு மறுபிறப்பைத் தந்திருக்கிறது. இருந்தபோதும் இது கிறிஸ்துவை நம்பி, அவருடைய போதனைகளை வாழ்க்கையில் அன்றாடம் பின்பற்றி விசுவாசத்தோடு வாழவேண்டிய வாழ்க்கை; அதுவும் போராட்டங்களின் மத்தியில் வாழவேண்டிய வாழ்க்கை. போராட்டங்கள் இதில் முக்கிய இடம் பெறுகின்றன. இப்போராட்டங்கள் நம்முடைய பாவ சரீரத்தோடு நாம் போராடி இச்சைகளைத் தொடர்ந்து அழிப்பதனால் ஏற்படலாம்; நம்மைப் பிடிக்காதவர்கள் மூலம் நமக்கு ஏற்படலாம்; சத்தியத்தை மட்டும் விசுவாசித்து அதற்காகத் தலை நிமிர்ந்து நிற்பதனால் ஏற்படலாம்; நாம் நம்பியவர்கள் நமக்கு ஏமாற்றத்தைத் தரும்போது ஏற்படலாம்; நம்முடைய சரீர பலவீனத்தினால் உண்டாகலாம்; பிசாசின் கிரியைகளினால் ஏற்படலாம்; இன்னும் சொல்லப்போனால் பாவமான இந்த உலகத்தில் பரிசுத்தமாக வாழ நாமெடுக்கும் முயற்சிகள் அனைத்தும் போராட்டத்தைச் சந்திக்காமல் இருக்க வழியில்லை. போராட்டங்கள் இல்லாமல் பரிசுத்த வாழ்க்கையில் முன்னேற்றம் கிடையாது. ஒருவகையில் நாம் சந்திக்கும் போராட்டங்கள் நமக்கு சவால்கள். இந்தப் போராட்டங்கள் இல்லாமல் கிறிஸ்தவ வாழ்க்கையை நாம் நினைத்தும் பார்க்கமுடியாது. போராட்டங்களால் நம்மை அழிக்க முடியாது; அவை நம்மைப் புடம்போட்டெடுக்கும் அக்கினி. அக்கினி எரியும், சரீரத்தில் வலியை ஏற்படுத்தும்; ஆனால் நம்மை சுட்டெரிக்காது, இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடாது. இதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?

ஒவ்வொரு போராட்டமும் நமக்கு சவாலாக அமைந்து நம்முடைய பாவங்களிலும், தவறுகளிலும் இருந்து நம்மைத் திருத்திக்கொள்ள உதவுகின்றன. அத்தோடு கிறிஸ்துவின் கிருபையின் மகத்துவத்தை உணர்ந்து அதில் வளரவும் உதவுகின்றன. இவை போராட்டம் நம்மில் ஏற்படுத்தும் இருவகை நிகழ்வுகள். இங்கு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசமும், ஜெபமும் நமக்கு உறுதுணையாக இருக்கும் சாதனங்கள். இந்தப் போராட்டங்களுக்கு முகங்கொடுத்து தளர்ந்து போகிறவர்கள் ஒன்றில் பலவீனமான கிறிஸ்தவர்களாக இருப்பார்கள், அல்லது கிறிஸ்தவர்களாகத் தங்களைத் தவறாக எண்ணி மறுபிறப்பை அனுபவிக்காமல் வாழும் போலிகளாக இருப்பார்கள். இந்தப் போராட்டங்களை வெற்றிகண்டு முன்னோக்கிப் போகிறபோதே ஒருவரின் ஆத்தும வாழ்க்கையின் இரகசியத்தை நாம் அறிந்துணர்கிறோம். போலிகளுக்கு போராட்டங்கள் எதிரிகள்; கிறிஸ்துவை நேசிக்கிறவர்களுக்கு அவை வெறும் சவால்கள் மட்டுமே. ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே, கிறிஸ்துவை விசுவாசிக்கும் நமக்கேன் இந்தப் போராட்டங்கள் என்று நீங்கள் கேட்கலாம். மரணத்துக்குரிய சரீரத்தை நாம் தொடர்ந்து சுமந்திருப்பதாலேயே (ரோமர் 7) போராட்டங்கள் இந்த உலகில் நாம் பூரணத்துவத்தை நோக்கிப் போகும் பாதையில் நம்மைப் புடம்போட்டெடுக்கும் கருவியாக இருந்துவருகின்றன.

வாசிப்பும் பொது அறிவும்

2115வெளிநாட்டுப் பிரயாணத்தின்போது நண்பர் ஒருவர் சொன்னார், ‘கிறிஸ்தவ விஷயங்களையும், கிறிஸ்தவ வாசிப்பையும் தவிர வேறு எதன் பக்கமும் போகக்கூடாது என்ற போதனையின்கீழ்தான் நான் வளர்ந்து வந்திருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பிருந்துதான் அது தவறு என்று உணர்ந்து வாசிப்பில் ஈடுபட்டிருக்கிறேன்’ என்று. இது பொதுவாகவே நம்மினத்துக் கிறிஸ்தவர்களிடம் இருந்து வரும் எண்ணம். யார் சொல்லித் தந்ததோ தெரியாது. அவர்களுக்குப் போதித்து வரும் போதகர்கள் கொண்டிருக்கும் தவறான நம்பிக்கையால் ஏற்பட்டதாகத்தான் இருக்கவேண்டும். கிறிஸ்தவர்கள் பரிசுத்தமான எண்ணங்களோடு இருக்கவேண்டும் என்ற காரணத்தால் கிறிஸ்தவ விஷயங்களைத் தவிர்த்த அனைத்துமே பாவமானதென்றும், பாவத்தில் நம்மைத் தள்ளிவிடும் என்றும் கருதி கிறிஸ்தவ எழுத்துக்களல்லாதவற்றையும், நேரடியாக கிறிஸ்தவத்தோடு தொடர்பில்லாதவற்றையும் அநேகர் புறக்கணித்து வருகின்றார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், கிறிஸ்தவர்களால் நடத்தப்படாத அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பட்டத்தையும், வேலையையும் பெற்றுக்கொள்ளுவதற்காக இவர்கள் எந்தப் கேள்வியும் கேட்காமல் கண்டதையும் தங்களுடைய பிள்ளைகள் படிக்க அனுமதிப்பதுதான்.

கிறிஸ்தவம் தவிர்த்த எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தக்கூடாது என்பது மிகத்தவறான வாதம்; நம்பிக்கை. கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களால் எழுதப்படும் கிறிஸ்தவபோதனைகளுக்கு முரணான விஷயங்களை நாம் ஒதுக்கிவைப்பது நியாயமானதுதான். கிறிஸ்துவின் வாழ்க்கைபற்றி வேதத்திற்கு முரணான விஷயங்களைக் கொண்டிருக்கும் ஒரு நூலை வாசித்து நாம் அடையப்போகும் பயன் ஒன்றுமில்லை. இருந்தாலும் இந்த உலகத்தில் வாழ்ந்தே பரிசுத்தத்தில் வளர வேண்டியிருக்கும் நாம் உலக ஞானமில்லாமல் இருந்துவிடக்கூடாது. உலகப்பிரகாரமாக வாழக்கூடாது என்றுதான் வேதம் சொல்லுகிறதே தவிர உலகஞானமில்லாமல் இருந்துவிடு என்று சொல்லவில்லை. பாவத்தால் பாதிக்கப்பட்டுத் தனது விடுதலைக்காகப் பரிதவித்துக்கொண்டிருக்கும் (ரோமர் 8) இந்த உலகத்தைக் கடவுள் தொடர்ந்து கரிசனையோடு பராமரித்தும் பாதுகாத்தும் வருவதாக வேதம் விளக்குகிறது. ஆகவே, இந்த உலகத்தை முற்றாகப் புறக்கணித்து ஒரு கிறிஸ்தவனால் விசுவாசத்தோடும் பரிசுத்தத்தோடும் வாழ முடியாது. இந்த உலகத்தில் காணப்படும், நமது பரிசுத்த வாழ்க்கைக்கு உதவாத பாவமான அம்சங்களை மட்டுமே நாம் எப்போதும் தவிர்க்க வேண்டும். இந்த உலகம் நாம் பயன்படுத்தி, அனுபவித்து நன்மையடையவே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த உலகத்தைப் புறக்கணித்து அதன் நிகழ்வுகளோடு நமக்கு சம்பந்தமில்லாதபடி நாம் வாழமுயற்சிப்பதற்குப் பெயர் கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல. 19ம் நூற்றாண்டில் எழுந்த ஒருவகை கிறிஸ்தவ ‘பரிசுத்தக் கூட்டத்தினர்’ இந்த உலகம் கிறிஸ்தவர்களுக்கு ஆபத்தானது என்று முடிவுகட்டி உலகத் தொடர்புகளனைத்தையும் அடியோடு முறித்துக்கொண்டு வாழமுற்பட்டார்கள். அத்தகைய போதனைகள் அனாபாப்திஸ்துகளின் வழிவந்தவர்களிடமும், மெனனைட் குழுவினரிடமும், சகோதரத்துவ சபைகளிடமும், கெரிஸ்மெட்டிக் குழுக்களிடமும் இன்றும் இருந்துவருகின்றன. இவர்களே கிறிஸ்தவர்களுக்கு அரசியல் கூடாது என்றும், போரில் ஈடுபடுவது தவறு என்றும், நாட்டுப் படைகளில் போர்வீரர்களாக இணையக்கூடாது என்றும், வரிகட்டக்கூடாதென்றும், இச்சைகளை அடக்கி ஆள கிறிஸ்தவத்தோடு தொடர்பில்லாத அனைத்தையும் வெறுத்து வாழவேண்டும் என்ற பல தவறான வேதம் போதிக்காத கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். இது பரிசுத்த வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதுபற்றிய தவறான எண்ணங்களால் ஏற்பட்டிருக்கும் ஆபத்தான போதனைகள்.

உண்மையில் கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தில் வாழும் நாட்களில், தாம் வாழும் நாடுகளில் நல்ல பிரஜைகளாக நாட்டில் அக்கறைகாட்டி கிறிஸ்துவை சகலவிதத்திலும் மகிமைப்படுத்த வேண்டும் என்று வேதம் போதிக்கிறது. ரோமர் 13ம் அதிகாரத்தில் ஒவ்வொரு ஆத்துமாவும் அரசாங்கங்களுக்கு கீழ்ப்படிந்து வாழவேண்டும் என்று பவுல் விளக்குகிறார். ஏனெனில் அரசை அமைத்துக்கொடுத்திருப்பவர் நாம் விசுவாசிக்கும் கடவுள். அவரில்லாமல் அரசிருக்க வழியில்லை. எல்லா அதிகார அமைப்புகளையும் அவரே வகுத்துத் தந்து நம்மை ஆளுகிறவராக இருக்கிறார் (13:1-7). அரச அதிகாரத்தினதும், அதன் கீழுள்ள அத்தனை அதிகார அமைப்புகளின் கட்டளைகளை மீறுவதும், அடிபணிய மறுப்பதும் ஆண்டவரையே எதிர்ப்பதற்கு சமமானதாகும். இதை நான் விளக்குவதற்குக் காரணம், அனைத்தையும் படைத்த ஆண்டவருக்கு இந்த உலகத்து மக்கள் மீதுமட்டுமல்லாமல் அதன் மீதும் அதிகமான அக்கறை இருக்கிறது என்பதைச் சுட்டுவதற்காகத்தான். இப்படியிருக்கும்போது இந்த உலகத்தைப் புறக்கணித்து ஒருவரால் எப்படி ஆண்டவரை மகிமைப்படுத்த முடியும்? தன்னை மட்டுமே மகிமைப்படுத்தும்படி ஆண்டவர் நம்மைக் கேட்கிறபோது, இந்த உலகத்தில் அவர் ஏற்படுத்தி வைத்திருக்கும் எந்தக் கட்டமைப்பையும் எதிர்க்காமல் அவற்றிக்கு உட்பட்டே தன்னை மகிமைப்படுத்தும்படிக் கேட்கிறார். அதனால் வரி செலுத்துவதும், படைகளில் இணைவதும், அரச பதவிகளை வகிப்பதும், வாக்களிப்பதும் கிறிஸ்தவன் நியாயமாக செய்ய வேண்டிய பணிகளே.

கிறிஸ்தவன் இந்த உலகத்தில் தன்னுடைய கடமைகளை ஆண்டவருடைய மகிமைக்காக செய்வதற்கு இந்த உலகத்தைப் பற்றிய பொதுவான அறிவு அவனுக்குத் தேவை. அந்த அறிவில்லாமல் அவன் வேதபோதனைகளை சரிவர உலகத்தில் நிறைவேற்ற முடியாது. வேதபோதனைகளை அவன் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். அந்தப் போதனைகளை வைத்தே அவன் உலகத்தின் எல்லாக்காரியங்களையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியவனாக இருக்கிறான். பாவத்தை அவன் செய்யாதிருப்பதற்கு வேதபோதனைகளை அவன் அறிந்திருந்து பாவம் எது என்பதை ஆராய்ந்து தீர்மானித்து அதைச் செய்யாமலிருக்க வேண்டும். இந்த உலகத்தில் அவன் நிறைவேற்ற வேண்டிய கடமைகளைப் பூர்த்திசெய்ய அவனுக்கு வேதபோதனைகளும் அவற்றில் தெளிவும் அவசியம். இந்த உலகத்தில் அவன் அனுபவிக்கும்படி ஆண்டவர் அனுமதித்திருக்கும் காரியங்கள் எவை என்பதை ஆராய்ந்து அறிந்து அனுபவிக்கவும் அவனுக்கு வேதபோதனைகளில் நல்லறிவு தேவை. இதையே பவுல் ரோமர் 12:1-2 வசனங்களின் மூலம் விளக்குகிறார். தெளிவான வேத அறிவு இல்லாமல் ஒருவராலும் இந்த உலகத்தில் கிறிஸ்துவை மகிமைப்படுத்தும்படி வாழமுடியாது. வேதமே நமக்கு வெளிச்சமாக இருந்து எல்லா விஷயங்களையும் ஆராய்ந்துணரும் வழிகாட்டியாக இருக்கிறது.

ஒரு புறம் வேத ஞானம் நமக்குத் தேவையாக இருக்க, இன்னொரு புறம் உலகத்தைப் பார்க்கின்ற நம் பார்வை சரியாக இருக்கவேண்டும். அதற்கு உலகத்தைப் பற்றியும் நடந்துவரும் நிகழ்வுகளையும் நாம் ஆராயாமல் இருக்க முடியாது. சுற்றி நடப்பவற்றை அறிந்துவைத்திருந்து அவற்றையெல்லாம் கிறிஸ்துவின் பார்வையோடு அவதானிக்கவும், ஆராயவும் கிறிஸ்தவன் முற்பட வேண்டும். அதற்கு வாசிப்பு உதவுகிறது. கிறிஸ்தவர் அல்லாதவர்களால் எழுதி வெளியிடப்படும் அநேக நாளிதழ்களையும், வார மாத இதழ்களையும் நாம் வாசிக்காமல் இருந்துவிடுகிறோமா? இவற்றில் தரமானவை எவை என்பதைக் கண்டறிந்து அவற்றைப் பொது அறிவுக்காக வாசிக்க வேண்டியது அவசியம். அதுவும் போதகப் பணியில் இருக்கிறவர்கள் இவற்றை உதாசீனம் செய்வது அவர்களை உலகமறியாதவர்களாக வைத்துவிடும். உலகந்தெரியாதவனால் இந்த உலகத்தில் எப்படி ஊழியம் செய்யமுடியும்? கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் வாசிக்கும்படி நான் சொல்லவில்லை. தரமானவற்றை வாசித்து வேத அடிப்படையில் அவைபற்றிய எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

சமீபத்தில் இளம் வயதில் அருமையாகப் பாடும் கர்நாடக சங்கீதக் கலாநிதி சஞ்சய் சுப்பிரமணியத்தின் ஆங்கிலப் பேட்டி ஒன்றைப் பார்த்தேன். ஆச்சரியப்படும் வகையில் அவருடைய பல்வேறுபட்ட விஷய ஞானம் இருந்தது. சங்கீதத்தை மையமாகக்கொண்டே பெரும்பாலும் அவர் விளக்கமளித்தபோதும் இக்காலத்து இளைஞர்கள் பற்றியும், சங்கீதத்தில் புதிய உத்திகளை உருவாக்குவது பற்றியும், பாரம்பரிய இசையை முற்றாகத் தூக்கியெறிந்துவிடாமல், அதேநேரம் புதுமையை நோக்கிப் பயணம் செய்வது எப்படி என்பது பற்றியும், சிறுவனாக இருந்து சங்கீத உலகுக்குள் தான் நுழைந்தவிதம் பற்றியும் அருமையான, சுவையான, தெளிவான விளக்கங்களைக் கேள்விகேட்டவுடனேயே பட்டுப்பட்டெனத் தந்தார். அதுவும் கூடியிருந்த பெருங்கூட்டம் படித்த பிராமணர்கள் அதிகமிருந்த கூடுகை. மிகுந்த தன்நம்பிக்கையோடு சரளமாக அவர் பதிலளித்தது எந்தளவுக்கு இசைஞானமுள்ளவர் என்பதை வெளிப்படுத்தியது. ஒவ்வொரு நாளும் பலமணி நேரங்கள் விடாமல் அவர் பாடல்பயிற்சி எடுத்துக்கொள்ளுகிறாராம்; அதுவும் அவருடைய மகளுக்காக ஒவ்வொரு நாளும் இருபது பாடல்கள். மூச்சு வாங்குகிறது இல்லையா? சஞ்சேயின் உழைப்பைப்பற்றிக் கேட்டபோது, பிரசங்க மேடைக்குப் போகும்வரையும் பிரசங்கத்தைத் தயாரிக்காத நம்மினத்துக் கிறிஸ்தவ பிரசங்கிகளின் சோம்பேரித்தனத்தை நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. இதெல்லாம் போதாதென்று சஞ்சேக்கு போர்ட் கேம், இலக்கிய வாசிப்பு என்று வேறு இத்தியாதி ஆர்வங்கள். பழைய பஞ்சாங்கமாக இல்லாமல் இந்த நூற்றாண்டு மனிதனாக அவர் விளக்கிய அநேக விஷயங்கள் கடவுளின் பொதுவான கிருபையின் கீழ் மனிதனுக்கு அவர் தந்திருக்கும் ஆற்றல்களை விளக்குவதாக இருந்தது. ஒரு கிறிஸ்தவனாக இந்தப் பேட்டியை என்னால் எப்படிக் கேட்க முடிந்தது? முதலில் இசையில் எனக்கு இருக்கும் ஆர்வந்தான். ஆண்டவரே மனிதன் அனுபவிக்கும்படி இசையை உருவாக்கியவர். அந்த இசையில் தேர்ந்தவராக இருக்கும் சஞ்சய் கிறிஸ்தவராக இல்லாவிட்டாலும் பொதுவான விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளவும், அதேநேரம் இசை பற்றிய கிறிஸ்தவ பார்வையை வேதபூர்வமாக உருவாக்கிக்கொள்ளவும் என்னால் முடிகிறது. நான் கர்நாடக சங்கீத வாத்திய இசையை மட்டுமே கேட்பேன். பாடல் கச்சேரி பெரும்பாலும் இந்துமத தெய்வங்களை மேன்மைப்படுத்துவதால் அதன் பக்கம் தலைவைப்பதில்லை. சஞ்சய் சுப்பிரமணியத்தின் சிறப்பு என்ன தெரியுமா? அவர் தமிழில் அதிகம் கச்சேரி செய்வதுதான்.

நச்சென்ற மேலாடை நாறுகிறது உள்ளாடை

சாதிவெறி – தர்மபுரியில் சாதிவெறி உயிர்குடித்த இளவரசனின் நினைவு மங்கிப்போவதற்குள் சாதிப்பேய் மறுபடியும் தலைதூக்கியிருக்கிறது. உண்மையில் செய்தியில் வருவதைவிட இது நாளாந்தம் நடந்துவரும் நிகழ்வுதான். சமீபத்தில் இந்து நாளிதழில், தேர்தல் காலத்தில் சாதி பண்ணுகின்ற அட்டகாசத்தை விளக்கியிருந்தார்கள். இதெல்லாம் இந்த நூற்றாண்டில் தொடர்கிறதை நினைத்தாலே வயிறெரிகிறது. கடந்த வருடம் வண்ணியர் பெண்ணும் தலித் ஆணும் ஓடிப்போனதால் விளாரிப்பாளயத்து மேல் சாதியினர் தலித்துக்கள் வாழ்ந்த சோமம்பட்டியைத் தாக்கி நாசமாக்கினர். உடுமலைப்பட்டியில் தலித் வாலிபன் சங்கர் கோரமாக வெட்டிச் சாய்க்கப்பட்டிருக்கிறான். இரண்டுவகைத் ‘டம்ளர் முறையும்’ (மேல் சாதிக்கு பிளாஸ்டிக் கப் தலித்துக்கு டம்ளர்), மேல்சாதி நிலத்தில் தலித்துக்கள் காலில் செருப்பில்லாமல் நடக்கவேண்டிய நிலையும் தலித்துக்களுக்கெதிரான இன்னும் பல தடைகளும் தொடர்ந்திருந்து வருகின்றன தமிழகத்தில் என்பதை அறிகிறபோது எந்தளவுக்கு சுவிசேஷம் சத்தியமாக வைராக்கியத்தோடு இக்காலத்தில் சொல்லப்பட வேண்டும் என்பதை நினைக்காமல் இருக்க முடியாது. சட்டங்களும், சமூக சீர்திருத்தங்களும், கீழ் சாதி என்ற பெயரைத் துடைத்தெறிய உருவாக்கப்படும் ‘தலித்’ போன்ற அடையாளங்களும் ஒருபோதும் சாதி அமைப்பை அகற்றமுடியாது என்பதைத் தொடரும் சாதிவெறி இனங்காட்டுகிறது. தேர்தல் காலங்களில் அரசியல் லாபத்துக்காக திராவிட கட்சிகளும் சாதியைப் பயன்படுத்திக் கொள்ளுகின்றன. கிறிஸ்து மட்டுமே தலித், வண்ணியன், கொங்கு வேளாளன் என்ற பாகுபாட்டையெல்லாம் இல்லாமலாக்கி மனிதனை மனிதனாகப் பார்க்கின்ற இருதயத்தைக் கொடுக்கிறார். தேர்தல் வருகிறது, கிறிஸ்தவர்களே சிந்தித்து வாக்களியுங்கள். சாதிப் பிசாசு உங்கள் இருதயத்தில் ஒருக்காலும் இல்லாதிருக்கும்படிப் பார்த்துக்கொள்ளுங்கள்.

22_03_2016_TOI

குழந்தைத் திருமணம் – சென்னையில் இருந்தபோது ஆங்கில நாளிதழ் ஒன்றில் முன்பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் வந்திருந்த செய்தி என்னை மலைக்க வைத்தது. அது இந்திய தேசத்தில் தொடர்ந்திருக்கும் குழந்தைத் திருமணத்தைப் பற்றியது. அதெல்லாம் எப்போதோ முடிந்துபோன கதை என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு பத்திரிகையில் தரப்பட்டிருந்த புள்ளிவிபரங்கள் இந்திய சமுதாயம் இன்னும் தனக்குள் சீழ்விட்டுப் பரவியிருக்கும் அசிங்கங்களை அழித்துப் போடவில்லை என்பதை சுட்டியது. இந்தியாவில் பீகார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் வருடத்துக்கு இலட்சக்கணக்கில் குழந்தைத் திருமணங்கள் நடந்துவருவதாக அறிவித்த புள்ளிவிபரம், தமிழகத்தில் வருடாந்தம் 65,000 குழந்தைத் திருமணங்கள் நிகழ்வதாகவும் அதுவும் சென்னை அதில் முதலிடம் பெறுவதாகவும் தெரிவித்தது ஆச்சரியந்தந்தது. தொழில் நுட்பம், கல்வி அறிவு, பொருளாதாரம், கணினித்துறை என்று பல்வேறு துறைகளில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறபோதும் சமுதாயம் தொடர்ந்தும் புரையோடிப்போன அசிங்கங்களைத் தன்னில் இருந்து அகற்றிக்கொள்ள முடியாமல் அவற்றிற்கு வக்காலத்து வாங்கி வருவது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும். இதிலெல்லாம் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவராமல் இந்தியா மிளிர்கிறது, ஒளிர்கிறது என்றெல்லாம் மார்தட்டிக்கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

குழந்தைத் திருமணம் கொடூரமான செயல். 1900ங்களின் ஆரம்பத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின்போதும் தமிழகத்தில் இது இருந்துவந்தது. ஏமி கார்மைக்கல் தென் தமிழகம் வந்தபோது இதை எதிர்நோக்காமல் இருக்கவில்லை. பெரும்பாலும் கிறிஸ்தவ மிஷனரிகளின் பணிகளினாலேயே சமுதாயத்திற்கு இதிலிருந்து ஒருவித விடுதலை கிடைத்தது. சாதிப் பாகுபாட்டை நிர்த்தாட்சணியமாக ஆதரித்து அதன் அடிப்படையில் இருந்துவரும் சமுதாயம் குழந்தைத் திருமணத்தைத் தொலைத்துவிடாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை. இது அடிப்படையில் சாதியையும், நெருங்கிய குடும்ப உறவையும் பாதுகாக்க உருவான முறைதான். கிறிஸ்துவை அறிந்துகொள்ளுகிறபோதே மனிதனுக்கு இதில் இருந்து முழுமையான வெற்றிகிடைக்க முடியும். சமுதாய மாற்றங்களை வெறும் சமூக சீர்திருத்தத்தால் கொண்டுவந்துவிட முடியாது என்பதைக் கம்யூனிசத்தின் தோல்வி உலகுக்குக் காட்டியிருக்கிறது. கார்ல் மார்க்ஸும், மாவோவும், ஸ்டாலினும், கெஸ்ட்ரோவும் அதைத்தான் நிரூபித்திருக்கிறார்கள். அடிப்படை இருதய மாற்றத்தை சமூக சீர்திருத்தக் கோட்பாடுகளால் ஏற்படுத்த முடியாது. அதைப் படைத்தவர் மட்டுமே செய்யக்கூடியவராக இருக்கிறார். கம்யூனிசம்கொண்டுவர முடியாத சமுதாய மாற்றத்தைக் கிறிஸ்து கொண்டு வந்ததை அப்போஸ்தலர் நடபடிகள் 2ம் அதிகாரம் விளக்குகிறது. பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டு இருதயத்தில் கிறிஸ்துவை விசுவாசித்தவர்கள், அன்று எருசலேமில் தேவனை விசுவாசித்தவர்களில் பஞ்சம் பட்டினியோடு வாழ்ந்தவர்களுக்கு தங்களிடம் இருப்பவற்றையெல்லாம் விற்று அவர்களுடைய தேவையை நிறைவு செய்தார்கள். இதை சமுதாய சீர்திருத்தப் போதனைகளோ, நடவடிக்கைகளோ ஏற்படுத்தவில்லை; அரசு இயந்திரம் உண்டாக்கவில்லை; ஆண்டவர் மனிதனுடைய இருதயத்தில் ஏற்படுத்திய ஆத்மீக மாற்றம் அவனை சிந்திக்க வைத்து மற்றவர்களின் தேவைகளை உடனடியாக சந்திக்கவைத்தது. கம்யூனிசத்தாலும், சோஷலிசத்தாலும் செய்யமுடியாததை கிறிஸ்தவம் செய்தது. இதுபோல புரையோடிப்போன சமுதாய அசிங்கங்களான, சாதி அமைப்பு, குழந்தைத் திருமணம் போன்றவற்றில் இருந்து சமுதாயத்துக்கு கிறிஸ்து மட்டுமே விடுதலையளிக்கக் கூடியவராக இருக்கிறார்.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 32 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

அரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்

வரவிருக்கும் தமிழகத் தேர்தல்

electionதமிழகத்தில் வெகுசீக்கிரமே தேர்தல் நடைபெறவிருக்கிறது. உலகத்தில் அநேக நாடுகளில் அரசியலும், தேர்தல்களும் சமுதாயத்துக்கு உதவுவனவாக இல்லை. ஜனநாயகம் சமுதாயத்துக்கு நல்லதானாலும் அதை நல்லமுறையில் அமுலில் வைத்திருக்கத் தேவையான சுயநலமின்மை, ஞானம், முதிர்ச்சி போன்றவை நம்மக்களிடம் இல்லை. ஜனநாயகத்தின் பெயரில் இத்தாலியின் முசோலினி போன்று எதேச்சாதிகாரத்துடன் ஆள்கிறவர்களே எங்கும் அதிகம். வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி எதேச்சாதிகாரத்தையே அதிகாரவர்க்கங்கள் ஆபிரிக்காவிலும், வெனிசுவேலாவிலும், பொலிவியாவிலும் வேறு பல தேசங்களிலும் நடத்திவருகிறார்கள். அந்தளவுக்கு தமிழகம் போயிராவிட்டாலும் இரண்டு கட்சிகள் மட்டும் பணபலத்தையும், வசீகரத்தையும் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றி மாநிலத்தைத் தொடர்ந்து ஆண்டுவருகின்றன. இரண்டுமே அதிகார துஷ்பிரயோகத்திற்கும், பணவிஷயத்தில் நேர்மையின்மைக்கும் பேர்போனவை. அவற்றிற்கெதிராகக் கோர்டில் இருக்கும் வழக்குகளே இதற்கு அத்தாட்சி. இதெல்லாம் மக்களுக்குத் தெரியாததல்ல. இருந்தும் சமுதாயத்தில் தொடர்ந்திருக்கும் அரசியல் முதிர்ச்சியின்மையும், அறிவின்மையும், சுயநலமும் இந்த இரண்டு கட்சிகளுக்கே மக்களை மாறிமாறி வாக்களிக்க வைத்துப் பதவியில் அமர்த்துகின்றன. மக்களைக் கேட்டுப்பாருங்கள் சலிப்போடு, ‘வேறு என்ன சார் செய்வது’ என்பார்கள். இது தமிழகத்தைப் பிடித்திருக்கும் வைரஸ். ஜனநாயகத்தில் சமுதாயத்திடம் இருக்கும் முக்கிய துருப்புச்சீட்டு வாக்குச்சீட்டு மட்டுமே. அதை சரிவரப் பயன்படுத்தாவிட்டால் சமுதாயம் பாதிக்கப்படும். சிறுகட்சிகள் சுயலாபத்துக்காகப் போட்டிபோட்டுப் பேரம்பேசிப் பெரியகட்சிகளுடன் இணைந்துகொள்ளப் பார்க்கும்; தேர்தல் காலம் மட்டுமே இவர்களுக்கு லாபம் சம்பாதிக்கக் கிடைக்கும் நல்ல வாய்ப்பு. வரப்போகிற தேர்தல் காலத்தில் கோடிக்கணக்கில் பணத்தைக் கட்சிகள் பட்டிதொட்டி எங்கும் பட்டுவாடா செய்யப்போகின்றன. மக்களின் வசதியின்மையையும், சுயநலத்தையும் அறிந்துவைத்திருக்கின்ற கட்சிகள் அவற்றை மூலதனமாக்கி வாக்குகளைப்பெற பெருமுயற்சி செய்யப்போகின்றன. மறுபடியும் இன்னொரு மாநிலத் தேர்தல் நிகழ்ந்து, அதில் எந்தக் கட்சி அதிக சாமர்த்தியசாலியோ அதுவே வெல்லும். இது தமிழக அரசியலில் தொடரும் நெடுங்கதை.

கிறிஸ்தவர்களும் அரசியலும்

தேர்தல் காலத்தில் கிறிஸ்தவர்கள் என்ன செய்யவேண்டும்? இது முக்கியமான கேள்வி. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராக தமிழகத்தில் இல்லாதிருந்தபோதும், இதில் அவர்களுக்குப் பொறுப்பு இல்லாமலில்லை. நேரடி அரசியலில் அவர்கள் ஈடுபடவேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் அதையும், தேர்தல்களையும் அவர்கள் புறக்கணிக்க முடியாது. ஒலிவர் குரோம்வெல் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தார். பியூரிட்டன் பெரியவர்களுக்கு அமெரிக்க தேசத்தை உருவாக்கியதிலும், சீர்திருத்த விசுவாசத்தைப் பின்பற்றியவர்களுக்கு அந்நாட்டின் அரசியல் சாசனத்தை வரைந்ததிலும் பங்கிருந்திருக்கிறது. அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின்போது கொன்சிடரேட்டுகளைப் போரில் வழிநடத்தி பல வெற்றிகளைச் சாதித்த ஜெனரல் லீயும், அவருடைய படைத்தலைவருமான சாமுவேல் ஜெக்சனும் அருமையான கிறிஸ்தவ விசுவாசிகள். சீர்திருத்த விசுவாசியான ஆபிரகாம் கைப்பர் ஹாலந்து நாட்டின் பிரதமராக இருந்தவர். முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் கிறிஸ்தவ விசுவாசி; அவருடைய வாழ்க்கை சரிதத்தை வாசித்துப் பாருங்கள். இவர்களெல்லாம் அரசியலையும், தேர்தல்களையும் புறக்கணிக்கவில்லை. இதையெல்லாம் நாம் எங்கே தெரிந்துவைத்திருக்கிறோம்; தெரிந்துவைத்திருந்தால்தானே சிந்தித்துப் பார்க்க வசதியாயிருக்கும். மறுபடியும் வாசிப்பைப்பற்றி நான் புலம்ப விரும்பவில்லை.

நம்மினத்துக் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டம் கிடையாது. அரசியலுக்கும் ஆத்மீகத்துக்கும் சம்பந்தமில்லை என்று எண்ணுவதால் அரசியலை அவர்களுக்கு கிறிஸ்தவ வேதக்கண்ணோட்டத்தோடு அணுகத் தெரியவில்லை. ஒன்று, ஒரு காலத்தில் இருந்த Piatism நம்பிக்கையுடையவர்களைப்போல அரசியலை அவர்கள் முற்றாகப் புறக்கணிக்கிறார்கள், இல்லையெனில் உலகத்தானைப்போல அரசியலில் பாய்ந்து கிறிஸ்தவ சாட்சியை இழந்துபோகும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஒன்று, அரசியலைப் புறக்கணிக்கத் தெரிகிறது இல்லாவிட்டால் புலிகளை ஆதரிக்கத் தெரிகிறது. கிறிஸ்தவ சுவிசேஷத்தை அறிவிப்பதில் காட்டாத ஆர்வத்தை மனித உரிமைகள் இயக்கத்தில் இணைந்து காட்டுவதையும், மனிதநலவாத செயல்களில் ஈடுபடுகிறவர்களையும் நான் அறிந்திருக்கிறேன். இந்த விஷயங்களில் வேதக்கண்ணோட்டத்தைக் கொண்டு முடிவுகள் எடுக்க இவர்களுக்குத் தெரியவில்லை.

இயேசுவும், பவுலும் நமக்கு அரசியலை எப்படி எதிர்கொள்ளுவது என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். அரசுக்கு விசுவாசமாக இருந்து வரிசெலுத்தவேண்டும் என்று இயேசு சொல்லியிருக்கிறார். அரசை வன்முறையால் சாய்த்துவிடும் எண்ணம் கொண்டிருந்தவர்களோடு அவர் இணையவில்லை. ரோம அரசுக்கு எதிராக ஓர் இயக்கத்தை நடத்தவும் அவர் இடங்கொடுக்கவில்லை. அதற்காக அவர் ரோம அரசை ஆதரித்தார் என்பதில்லை. உலகத்தை உருவாக்கிய கடவுளே அரசாங்கங்களை அமைத்திருக்கிறார். அதனால்தான் அரசுகளுக்காக ஜெபிக்கும்படி பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் எழுதியிருக்கிறார். கிறிஸ்தவர்கள் இந்த விஷயத்தில் ஏனோதானோவென்று நடந்துகொள்ளக்கூடாது. முதிர்ச்சியில்லாதவர்களாக, சிந்திக்க மறுத்து கட்சிகளின் அரசியல் நோக்கங்களையும், திட்டங்களையும், செயல்முறைகளையும் ஆராய்ந்து பார்க்காது வாக்களிப்பது நமக்குத் தரப்பட்டிருக்கும் பொறுப்பை அலட்சியப்படுத்துவதாகும். கிறிஸ்தவம் இந்த விஷயத்திலும் கிறிஸ்துவின் பார்வையைக் கொண்டு வாக்குச்சீட்டைப் பயன்படுத்தும்படி கிறிஸ்தவனை நிர்ப்பந்திக்கிறது.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேலைத்தேய நாடுகளில் அரசும், மக்களும் சட்டத்துக்கும், மனித உரிமைகளுக்கும் மதிப்புக்கொடுத்து நடந்துவருகிறார்கள். அதனால் கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபட்டு சாட்சியை இழக்காமல் நடந்துகொள்ளக்கூடிய நிலைமை இருக்கிறது. ஏற்கனவே பார்த்தபடி கிறிஸ்தவர்கள் பெரும் பதவிகளை அரசியலில் வகிக்கக்கூடியதாக இருப்பதற்கும் அதுவே காரணம். கீழைத்தேய நாடுகளில் அப்படிப்பட்ட நிலைமை இல்லை. பெரும்பாலான நாடுகளில் சட்டம் மதிக்கப்படுவதில்லை. ஆளுகிறவர்கள் தங்களுடைய சுயலாபத்துக்காக அதைப் பயன்படுத்திக்கொள்ளுவதே பெரும்பாலும் வழக்கமாக இருக்கிறது. மனித உரிமைகளுக்கும் மதிப்புக்கொடுக்கப்படுவதில்லை. அத்தோடு கிறிஸ்தவர்கள் இந்நாடுகளில் பெரும்பான்மையினராக இல்லை. இத்தகைய பிரச்சனைகள் கிறிஸ்தவர்கள் அரசியலில் நாட்டம் காட்டுவதற்குப் பெருந்தடையாக இருந்துவிடுகின்றன. சிலவேளைகளில் அப்படி ஈடுபடுவது கிறிஸ்தவ சுவிசேஷத்துக்கும், திருச்சபைப் பணிகளுக்கும் பேராபத்தாக இருந்துவிடுகிறது. இதனால் கிறிஸ்தவர்கள் முன்யோசனையுடன் நடந்துகொள்ள வேண்டிய பெரும்பொறுப்பைக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் கிறிஸ்தவ சாட்சியை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமைப்பொறுப்பு கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது.

தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் எஸ்றா சற்குணத்தைப்போல திமுக அடிவருடியாகவோ அல்லது அதிமுக அடிவருடியாகவோ மாறிவிடுவது நல்லதல்ல. ஒரு கிறிஸ்தவன் வேதபோதனைகளுக்கு முரணாக நடந்து, ஒழுக்கத்தையும், சமுதாய, நாட்டுநலனையும் ஒதுக்கிவைத்துவிட்டு கட்சிகளுக்கு சார்பாக இருக்கக்கூடாது; கட்சிப்பணிபுரியப் போகக்கூடாது. தமிழக அரசியல் சூழ்நிலையில் கிறிஸ்தவப் போதனைகளைக் குழிதோண்டிப் புதைக்காமல் கிறிஸ்தவர்கள் கட்சிப்பணிபுரிவது பெருங்கஷ்டம். கிறிஸ்துவுக்கு களங்கம் ஏற்படுத்தி அரசியலில் ஈடுபடத்தான் வேண்டுமா? சிந்தியுங்கள். தேர்தல் காலத்தில் மாநில நலனுக்காகவும், மக்களுடைய நலனுக்காகவும் உழைக்கப் போகிற கட்சிகள் யார், என்பதை ஆராய்ந்து பாருங்கள். வாக்குகளைக் கேட்டு நிற்கிறவர்களுடைய வாழ்க்கையை, அவர்களுடைய பணிகளை ஆராய்ந்து பாருங்கள். நேர்மையில்லாதவர்களைப் புறக்கணியுங்கள். இயேசு இன்று வாழ்ந்தால் எப்படி நடந்துகொள்ளுவாரோ அதேபோல் இந்தவிஷயத்தில் நடக்கவேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. முக்கியமாக நீங்கள் வாக்களிக்கப்போகும் கட்சி கிறிஸ்தவர்களுக்குத் தொல்லை கொடுக்கிற கட்சியா என்று ஆராய்ந்து பாருங்கள். பெரிய கட்சிகள் நேர்மையற்றவை என்று உங்களுக்குத் தோன்றினால் சிறிய கட்சிகளை ஆராய்ந்து பாருங்கள்.

அதிமுக சரியில்லை என்றால் திமுகவிற்கு வாக்களிக்கவேண்டிய அவசியமில்லை; அப்படிச் செய்வதும் முழுத்தவறு. ஆட்சி அமைப்பதற்கு சின்னக்கட்சிகளால் முடியாமல் போகலாம்; இருந்தாலும் அந்தக் கட்சிகளையும் அவற்றின் கொள்கைகளையும் ஆராய்ந்து பார்க்காமல் இருக்கக்கூடாது. அநேக சின்னக்கட்சிகளும் சுயலாபத்தையே தேடி அலைகின்றன என்பது உண்மைதான். இருந்தாலும் அவற்றையும் ஆராய்ந்து பார்க்கத் தவறக்கூடாது. அவையும் நேர்மையற்றவையாகப்பட்டால் கட்சி சார்பற்றவர்கள் நல்ல நோக்கங்களுக்காக தேர்தலில் நிற்கிறார்களா என்று பாருங்கள். அவர்கள் பக்கம் நேர்மையும், நாட்டுக்கு உழைக்கும் சிந்தனையும் இருந்தால் அவர்களுக்கு வாக்களிப்பதில் தப்பில்லை. இதில் எது முக்கியமானது தெரியுமா? உங்களுடைய மனச்சாட்சியை இதுபற்றிய வேதபோதனைகளுக்கு அடிமையாக்கி அந்த மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்துகொள்ளாமல் இருப்பதுதான். அநேக கிறிஸ்தவர்கள் தங்களுடைய மனச்சாட்சியை உலகசிந்தனைக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். அரசியல், தேர்தல்பற்றிய விஷயங்களில் தங்களுடைய மனச்சாட்சி ஆண்டவருடைய சிந்தனைப்படி நடக்க அவர்கள் அதற்குப் பயிற்சியளிக்கவில்லை. சரீரப்பயிற்சியில்லாமல் கால்பந்தாட முடியாது; மனச்சாட்சிக்கு வேதப்பயிற்சி தராமல் அது ஆண்டவருடைய சிந்தனைகளைக்கொண்டிருக்க முடியாது.

அநேக கிறிஸ்தவர்கள் எந்தக் கட்சி தேர்தலில் வெல்லக்கூடிய வாய்ப்பிருக்கிறதோ அதற்கு வாக்களிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அது முழுத்தவறு; அது சுயநலம் சார்பானது. உங்களுடைய சுயநல லாபத்திற்காக வாக்குச் சீட்டைப் பயன்படுத்தாதீர்கள். வெற்றிபெறப்போகிறவர்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கிறிஸ்தவன் நினைக்கக்கூடாது. நீங்கள் வாக்களிக்கப்போகிறவர் தேர்தலில் வெல்லாவிட்டாலும், நேர்மைக்கும், நல்ல கொள்கைகளுக்கும் வாக்களித்திருக்கிறோம் என்று சந்தோஷப்படுங்கள். அதைத்தான் கிறிஸ்து எதிர்பார்க்கிறார். தேர்தல் விஷயத்தில் நீங்கள் நீதியாக, வேதபூர்வமாக நடந்துகொள்ள வேண்டும் என்று வேதம் எதிர்பார்க்கிறது என்பதை மனதில் வைத்து தேர்தலை அணுகுங்கள். எல்லா விஷயத்தைப்போலவும் இந்த விஷயத்திலும் உங்களுடைய மனச்சாட்சி வேதத்தைப் பின்பற்றவேண்டும். மனச்சாட்சி கிறிஸ்துவுக்குரியதானால் அதற்கெதிராக உலகத்தானைப்போல வாக்குச்சீட்டைப் பயன்படுத்துவது கிறிஸ்துவுக்கு இழைக்கும் பெருந்துரோகம். உங்களுடைய மனச்சாட்சியில் கிறிஸ்துவுக்கு விசுவாசமாக நடந்துகொள்ளுங்கள். நமக்கெல்லாம் மேலாக இருக்கும் இறையாண்மைகொண்ட ஆண்டவர் மற்றவற்றைப் பார்த்துக்கொள்வார். நிச்சயம் ஜெபத்தோடு இந்நேரத்தில் சிந்தித்து செயல்படுவது அவசியம்.

நவம்பர் மாத அமெரிக்கத் தேர்தல்

usa-votinghandஇந்த ஆண்டு நவம்பரில் நிகழப்போகும் அமெரிக்கத் தேர்தலில் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடப் போகிறவர்களுக்கான கட்சித்தேர்தல்கள் சூடுபிடித்து நடந்துவருகின்றன. ஜனநாயக கட்சிப் பிரதிநிதியாக ஹிளரி கிளின்டன் தெரிவு செய்யப்பட்டுவிடுவார் போலத்தெரிகிறது. குடியரசுக்கட்சியில் அதற்காகப் பதினேழுபேர் போட்டியிட்டு இப்போது அது மூன்றுபேர் வரையில் வந்து நிற்கிறது. பல்லாண்டுகாலமாக குடியரசுக்கட்சியில் செல்வாக்கு செலுத்திவந்த புஷ் குடும்பத்தின் வாரிசான ஜெப் புஷ் தேர்தலில் இருந்து விலகிக்கொண்டார். கட்சித்தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன் அவர்தான் நியமனமாவார் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதற்கெல்லாம் சமாதி கட்டியது குடியரசுக்கட்சி ஆதரவாளர்களின் தற்போதைய மனநிலை. ஜெப் புஷ் அமைதியான மனிதர். கட்சியால் விரும்பப்படுகிறவர். நல்ல மனிதர் என்பதை அனைவருமே ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், நாட்டின் தற்போதைய நிலையை மாற்றி அமைக்க அவை மட்டும் போதாது என்று குடியரசுக்கட்சி ஆதரவாளர்கள் தீர்மானித்துவிட்டார்கள்.

ஏன் இந்த மாற்றம், என்னதான் நடந்தது? என்று கேட்பீர்கள். பில் கிளின்டன் ஆரம்பித்து வைத்து ஒபாமா வெற்றிகரமாக செயல்படுத்திய லிபரல் திட்டங்கள் அமெரிக்க சமுதாயத்தை ஐரோப்பாவையும், கனடாவையும்போல் வெகுவேகமாக மாற்றி அதன் பாரம்பரிய கிறிஸ்தவ அடித்தளத்தை சுக்குநூறாக்கியிருக்கிறது. தொலைக்காட்சியில் சமீபத்தில் அலன் டீஜெனரஸ் தன்னுடைய சொந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒபாமாவை வரவழைத்து, தன் தன்னினச் சேர்க்கைத் திருமணம் நிகழக்காரணமாக இருந்ததற்காக ஒபாமாவுக்கு எல்லோர் முன்னிலையிலும் பாராட்டும் நன்றியும் தெரிவித்தார். இதுதான் ஒபாமா அமெரிக்காவுக்குக் கொடுத்திருக்கும் பெருங்கொடை. இதன் மூலம் அமெரிக்க சமுதாயத்தின் ஒழுக்கநெறிப்போக்கின் அடித்தளத்தையே சிதைத்திருக்கும் ஒபாமா உலக நாடுகளின் மத்தியிலும் அமெரிக்காவுக்கு இருந்த தலைமை ஸ்தானத்தை குறைவுபடுத்தி எவரும் அந்த நாட்டைப் பெரிதாக நினைக்காதபடி செய்திருக்கிறார். இன்று அமெரிக்காவைப் பார்த்து எந்த நாடும் பயப்படுவதில்லை. பொருளாதாரம், சமூக ஒழுங்கு, அரசியல், படைபலம் எல்லாவற்றிலும் அமெரிக்காவை என்றுமில்லாதளவுக்கு ஒபாமாவின் கொள்கைகளும், செயல்களும் பாதித்து உள்நாட்டிலும், உலக ஸ்தானத்திலும் அதை மிகவும் பலவீனப்படுத்தியிருக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவுக்கு மறுபடியும் ரொனல்ட் ரீகனைப்போன்ற, முடிந்தால் அவரையும்விட உயர்ந்த, பாரம்பரியமாக அமெரிக்க சமுதாயம் பின்பற்றி வந்திருக்கின்ற கோட்பாடுகளை மறுபடியும் நிலைநாட்டுகின்ற தைரியசாலியான, செயல்வீரரான ஒரு தலைவர் தேவை என்று குடியரசு கட்சி ஆதரவாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை அவர்கள் நல்ல மனிதரான ஜெப் புஷ்ஸில் காணமுடியவில்லை என்று தீர்மானித்துவிட்டார்கள். இதுவே வேறு ஒரு காலப்பகுதியாக இருந்திருந்தால் நிச்சயம் ஜெப் புஷ் வென்றிருப்பார். அமெரிக்கா இன்றிருக்கும் நிலையில் ஒரு தைரியமான செயல்வீரர் தேவை என்று அவர்கள் கருதுகிறார்கள்.

Donald-Trumpஅத்தோடு குடியரசுக் கட்சியின் மேலிடத்தின் மீது அவர்களுக்கு பெருங்கடுப்பு ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸில் கட்சிக்குப் பெரும்பான்மை பலமிருந்தும் அவசியமானளவுக்கு ஒபாமாவின் கொள்ளைகளை எதிர்த்துநின்று அவருக்குத் தொல்லை கொடுக்கவில்லை என்பதும் அவர்களுக்குக் கோபத்தையூட்டியிருக்கிறது. அதனால் கட்சியின் ஆதரவோடு தேர்தலில் நிற்கும் அரசியல்வாதிகளின்மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லாமல் போயிருக்கிறது. மேலிடத்து ஆதரவில்லாத ஒருவரை அவர்கள் விரும்புகிறார்கள். வாஷிங்டன் அரசியல் விளையாட்டை அவர்கள் விரும்பவில்லை. அரசு எல்லாவிஷயங்களிலும் தலையிடுவதையும், எல்லாவற்றையும் செய்யப்பார்ப்பதையும் அவர்கள் வெறுக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இன்று அவசியமானதாக இருப்பது நாட்டின் பொருளாதார உயர்வும், வேலைவாய்ப்பும், சட்டத்தைமீறி நாட்டுக்குள் குடியேறுபவர்களைத் தடைசெய்வதும், நாட்டின் பாதுகாப்பையும், எல்லைகளையும் பலப்படுத்துவதே. இதெல்லாம் அவர்களை யாருக்கு வாக்களிக்க வைத்திருக்கிறது தெரியுமா? இதுவரை நான்கில் மூன்று தேர்தல்களை வென்றிருக்கும் பில்லியனுக்கு மேல் சொத்துக்களை வைத்திருக்கும், அரசியல் அனுபவம் கொஞ்சமும் இல்லாத, வியாபாரச் சக்கரவர்த்தியாகிய டொனல்ட் டிரம்ப்புக்கு. டொனல்ட் டிரம்ப் குடியரசுக்கட்சி ஆதரவாளர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் பேசிவருகிறார்; அரசியல் இங்கிதமெல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு தன் மனதில்பட்டதை ஆணித்தரமாக, எந்தப்பயமுமில்லாமல் பேசி வருகிறார். ஜனாதிபதி தேர்தலுக்காக தன் சொந்தப்பணத்தை மட்டும் செலவிட்டு வாக்குக் கேட்கும் முதல் மனிதராகவும் இருக்கிறார். 2016 அமெரிக்கத் தேர்தலில் டொனல்ட் டிரம்ப் புதிய மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறார்.

இந்தத்தடவை குடியரசுக் கட்டியின் ஜனாதிபதி நியமனத்தேர்தல் என்றுமில்லாதவகையில் சூடுபிடித்திருப்பது மட்டுமல்ல, நியமனத்துக்காகப் போட்டியிடுகிறவர்கள் எப்போதுமில்லாதவகையில் ஒருவரையொருவர் காரசாரமாகத் தாக்கித் திட்டி விளாசிக்கொண்டிருக்கிறார்கள்; ஒருவரையொருவர் அடிக்காததுதான் குறை. இதுவரை நடந்துள்ள மூன்று விவாதங்களில் இரண்டு சிறுபிள்ளைகள் காதுகொடுத்துக் கேட்பதற்கு கூசவேண்டிய விதத்தில் இருந்தன. அந்தளவுக்கு தாக்குதலும், இழிவுப் பேச்சுமிருந்திருக்கிறது. எதைச்செய்தும், எதைப்பேசியும் வெற்றியடைய வேண்டும் என்ற நினைப்பில் அவர்கள் பேசுவதுபோல் இருந்தது. வாய்ப்பேச்சு எப்படி இருக்கவேண்டும் என்று யாக்கோபு தன்நிருபத்தில் எழுதியிருப்பதை இந்நேரம் நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியவில்லை.

அமெரிக்க அரசியலில் கிறிஸ்தவம்

இந்தத் தேர்தலில் நான் கவனித்த முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? எல்லாக் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளும் இதுவரை இல்லாதளவுக்கு கடவுளைப்பற்றிப் பேசுவதுதான். எதற்கெடுத்தாலும் கடவுளுடைய பெயரைச் சொல்லுவதும், அமெரிக்காவை ஆசீர்வதிக்கும்படிக் கேட்பதும் அவர்களுடைய பேச்சுக்களில் சகஜமாக இருந்தது. அதுவும் தென் கரலைனா தேர்தல் துவங்குமுன் இந்தக் கடவுள் பேச்சு உச்சகட்டத்தை அடைந்தது. இதெல்லாம் எதைக்காட்டுகிறது தெரியுமா? அமெரிக்காவின் தற்போதைய கிறிஸ்தவம் எந்த நிலையில் இருக்கிறது என்பதைத்தான். நானும் கிறிஸ்தவன் என்று அரசியல்வாதி சொல்லுவதும், இன்னொரு அரசியல்வாதியின் மதநம்பிக்கையைப்பற்றி நான் கருத்துச் சொல்லமாட்டேன் என்று வேறொரு அரசியல்வாதி சொல்லுவதும் வழக்கமாகிவிட்டது. அமெரிக்க மக்களைப் பொறுத்தவரையில் சுவிசேஷக் கிறிஸ்தவம் பலவீனப்பட்டிருப்பதையே இது காட்டுகிறது. ஒபாமா பதவிக்கு வருமுன் தான் ஒரு பாப்திஸ்து என்று சொன்னதன் அர்த்தத்தை இன்று நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். கிறிஸ்தவம் அமெரிக்க சமுதாயத்தில் வெறும் மதமாக மட்டும் இன்று பரவலாக மாறிக்கொண்டிருக்கிறது. பியூரிட்டன் பெரியவர்கள் ஆரம்பித்து வைத்த சமுதாயம் இன்றைக்கு வெகுவேகமாக அந்த நம்பிக்கைகளைக் குழிதொண்டிப் புதைத்து பலவீனமான கிறிஸ்தவ நம்பிக்கையுடையதாக இருக்கிறது. இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவர்களின் வாக்குக்காக அரசியல்வாதிகள் தங்களைக் கிறிஸ்தவர்களாக அறிமுகப்படுத்திக்கொள்ளுவது சர்வசாதாரணமாகிவிட்டது. இவர்களில் எத்தனைபேர் உண்மையாகவே மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் அடைந்து, திருச்சபையில் திருமுழுக்கையும் திருச்சபை அங்கத்துவத்தையும் அடைந்து வாராவாரம் விசுவாசத்தோடு குடும்பமாக சபைக்குப்போய் வாழ்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் இவர்களுடைய கிறிஸ்தவத்தின் சுயரூபம் தெரிந்துவிடும்.

அமெரிக்க கிறிஸ்தவர்கள் எப்போதும் கன்ஸர்வெட்டிவ் கட்சியான குடியரசுக் கட்சியையே ஆதரித்து வந்திருக்கிறார்கள். இன்று அவர்களும்கூட கட்சியில் வழமைக்கு மாறாகக் கட்சி ஆதரவில்லாத டொனல்ட் டிரம்ப்பை விரும்புகிறார்கள். இது குடியரசுக்கட்சித் தலைமையையே திகைக்க வைத்திருக்கிறது. கட்சிக்காரர்கள் ஜெப் புஷ்ஸுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை பொய்த்துவிட்டது. தென் கரலைனாவில் ஜெப் புஷ் தன் சகோதரரான முன்னால் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஸைப் பேச வைத்தார். அவருடைய தாயும்கூட கூட்டங்களில் கலந்துகொண்டார். தென் கரலைனாவில் இன்றும் ஜோர்ஜ் புஷ்ஸுக்கு 85% ஆதரவு குடியரசுக்கட்சி ஆதரவாளர்களிடம் இருக்கிறது. இது தன்னுடைய நிலைமையை வலிமையுடையதாக்கும் என்று நம்பிய ஜெப் புஷ் முழு வேகத்தோடு இயங்கினார். ஆனால், ஒன்றும் பலிக்காமல் போய்விட்டது. இவெஞ்சலிக்கள் சமுதாயத்தில் 31 வீதமானோர் டிரம்ப்புக்கே வாக்களித்தார்கள். நெவாடாவிலும், இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவர்கள் டிரம்புக்கே அதிகமாக வாக்களித்திருக்கிறார்கள். குடியரசுக்கட்சியில் எல்லோருமே தைரியசாலியான ஒருவரின் தலைமைத்துவத்தை இன்று நாடுகிறார்கள். அதை அவர்களால் டிரம்ப்பில் மட்டுமே காணமுடிகிறது. கட்சியில் டொனல்ட் டிரம்ப்பைப் பிடிக்காதவர்கள் அவரை வீழ்த்த அவருக்கெதிராக என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். டொனல்ட் டிரம்ப்பின் பேச்சுக்களும், நடவடிக்கைகளும் கவனிக்கப்படுவதைப்போல வேறு எதுவும் இன்று அமெரிக்காவில் கவனிக்கப்படவில்லை என்றுகூட சொல்லலாம். அதிகார இயந்திரங்கள் அவரை அரசியலில் வீழ்த்த அந்தப்பாடுபடுகிறது. ஒபாமாகூட, ஜனாதிபதியாவதற்கு இருக்க வேண்டியவை டிரம்பில் இல்லை என்று சொல்லியிருக்கிறார். ஜனாதிபதி பதவியில் இருக்கும் ஒருவர் இப்படிக் கருத்துத் தெரிவித்திருப்பது ஆச்சரியமே. வத்திக்கானின் போப்பும் இதில் இணைந்துகொண்டு டிரம்ப் கிறிஸ்தவரில்லை என்று சொல்லியிருக்கிறார். இதுவரை எந்தப் போப்பும் வரலாற்றில் அமெரிக்க அரசியலில் தலைநுழைத்துக் கருத்துத் தெரிவித்ததில்லை. இது வியப்பானது. போப் சொன்னதும் பொதுவாகவே அமெரிக்கர்களுக்குப் பிடிக்கவில்லை. யார் என்ன சொன்னாலும், செய்தாலும் டொனல்ட் டிரம்புக்கு ஆதரவு பெருகிக்கொண்டிருக்கிறது. அவர் இதுவரை வெற்றியையே சந்தித்திருக்கிறார். டிரம்ப், தன்னைப் பிரஸ்பிடீரியன் கிறிஸ்தவன் என்று அழைத்துக்கொள்கிறார்! அதையும்விட அவருடைய தைரியமும், வழமையான அரசியல் நடவடிக்கைகளுக்கெல்லாம் முரண்பட்ட, அரசியலில் செய்யக்கூடாத காரியங்களையெல்லாம் செய்து வருவது அநேகருக்குப் பிடித்திருக்கிறது. அமெரிக்க குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் டிரம்ப் தங்களை தைரியத்தோடு வழிநடத்துவார் என்று நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கைகள் வீண்போகாமல் இருக்குமா? தேர்தல் நியமனத்துக்கு இன்னும் நாள் இருக்கிறது.  வரப்போகிற ‘சூப்பர் செவ்வாய்’த் தேர்தல் டிரம்ப்புக்கு சோதனையாய் அமையுமா, அவருடைய நியமனத்தை உறுதிப்படுத்துமா? என்பதைக் காட்டுவதாக இருக்கும். பல மாநிலங்களில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புக்கள் எல்லாம் இப்போது டிரம்புக்கு ஆதரவானதாகத்தான் இருக்கின்றன. இந்த ‘டிரம்ப் அலை’ எதுவரை போகிறதென்று பொறுத்திருந்துதான் பார்ப்போமே.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 32 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்

ஜனவரி 14ம் திகதி பெங்களூரில் திருமறைத்தீபத்தின் 20ம் ஆண்டுவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. கெம்பஸ் குருசேட் நிறுவனத்தின் மிகப்பெரிய ஹாலில் கூட்டத்தை பெங்களூர் சபையினர் ஏற்பாடு செய்திருந்தனர். அங்குபோனபோதே இத்தனைப் பெரிய இடத்தை எப்படி நிரப்பப் போகிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அதுவும் பெங்களூரில் அன்று போக்குவரத்து நெருக்கடி மற்ற நாட்களைவிட அதிகம். கூட்டம் நடந்த இடத்துக்குப் போய்ச்சேருவதற்கே ஒன்றரை மணிநேரம் எடுத்தது. கூட்டம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற ஆதங்கம் உள்ளுக்குள். வருகிறவர்களை வரவேற்று உபசரித்து இருக்குமிடத்துக்கு அழைத்துச் செல்வது போன்ற பணிகளையும், புத்தகங்கள் விற்பனை செய்வது, உணவு பரிமாறுவது போன்றவற்றையும் செய்வதற்காக இருபது பேருக்கு மேல் திருமறைத்தீப 20ம் ஆண்டு விழாவை சிறப்பிப்பதற்காக வெளியிடப்பட்டிருந்த மஞ்சள் நிறத்தில் ஸ்பர்ஜன் அவர்களின் வார்த்தைகளைக்கொண்டிருந்த நீல நிற டீ-சேர்ட்டை அணிந்து சுருசுருப்போடு இயங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் பெரிய ஏற்பாடுகளை செய்திருப்பது மட்டுமல்ல ஒழுங்கோடு கூட்டத்தை நடத்தும் வகையிலும் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்பது பார்த்த உடனேயே தெரிந்தது.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக, கிறிஸ்தவ இலக்கிய ஆர்வலரும், வெஸ்ட்மின்ஸ்டர் வெளியீடுகளின் நிறுவனருமான ரொபட் வெட்டி நியூசிலாந்திலிருந்து வந்து கலந்துகொண்டார். ஸ்ரீ லங்காவின் வவுனியாவில் இருந்து புரொட்டஸ்தாந்து சீர்திருத்த சபையின் போதகரான பார்த்திபன் வந்திருந்தார். இவர்களோடு இன்னும் சில தமிழகப் போதகர்கள் கூட்ட நிகழ்ச்சி நிரலின் வரிசைபடி திருமறைத்தீப இதழைப்பற்றிய தங்ளுடைய அனுபவங்களைக் கூட்டத்தில் பகிர்ந்துகொண்டனர். இறுதியில் நான் சுருக்கமாக செய்தியளித்தேன். திரு. ரொபட் வெட்டி, திருமறைத்தீப இதழுக்கும் தனக்கும் இடையில் உள்ள உறவை விளக்கினார். தமிழே தெரியாத அவர் இதழின் பணியில் காட்டிவரும் அக்கறைக்கான காரணத்தை விளக்கினார். சீர்திருத்த போதனைகளை வேதபூர்வமாகவும், தெளிவாகவும் தமிழுலகுக்கு அளித்து வருகிற பத்திரிகை என்பதே தன்னை அதில் ஈடுபாடுகாட்ட வைத்திருப்பதாகவும், இதழாசிரியர் மேல் தனக்கிருக்கும் நம்பிக்கையும் முக்கிய காரணம் என்றார். அடுத்து புத்தகங்களைத் தான் எப்படி வாசிக்க ஆரம்பித்தேன் என்பதை விளக்கினார். இளம் வயதில் கிறிஸ்தவனாக வந்தபிறகே எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டதாகக் கூறிய அவர், தான் முதலில் படித்த கிறிஸ்தவ புத்தகம் மோட்சபயணம் என்றார். நண்பரொருவருடைய துணையோடு அதை வாசித்து முடித்ததாகக் கூறிய அவர், அன்று முதல் வாசிப்பு தன்னுடைய வாழ்க்கையில் நிரந்தர இடத்தைப் பிடித்ததாக விளக்கினார். இப்போது 7000க்கும் குறையாத கிறிஸ்தவ ஆங்கில நூல்களைத் தன்னுடைய சொந்த நூலகத்தில் வைத்திருப்பதோடு பழம் கிறிஸ்தவ இலக்கியங்களை வேறு மொழிகளில் வெளியிடுவதையும் நோக்கமாகக் கொண்டு பணியாற்றி வருவதாகக் கூறினார். இறுதியில் வாசிப்பில்லாமல் கிறிஸ்தவனாக இருக்க வழியில்லை என்று விளக்கிய வெட்டி, “வாசியுங்கள், வாசியுங்கள், வாசியுங்கள்” என்றுகூறி தன்னுடைய உரையை முடித்தார். போதகர் பார்த்திபன் தன் சிற்றுரையில், திருமறைத்தீபம் இன்னும் ஐம்பது, நூறு வருடங்களுக்கு வெளிவரவேண்டும் என்று பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் சொன்னார். போதகர் ஜேம்ஸ் இதழ் திருச்சபைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் புள்ளிவிபரங்களோடு விளக்கினார். கூட்டத்தை நேரத்தோடு முடிக்க வேண்டுமென்பதால் உரையாற்ற வேண்டியிருந்த எல்லோரும் அன்று உரைநிகழ்த்த முடியாமல் போனது.

special editionஎல்லோருடைய உரைகளுக்குப் பின் திருமறைத்தீபத்தின் வரலாற்றை விளக்கும் 27 நிமிட ஒளி, ஒலி நாடா காட்டப்பட்டது. அதற்குப் பின் திருமறைத்தீபம் 20 வருட இதழ் தொகுப்புகள் ஐந்து வால்யூம்களாக வெளியிடப்பட்டன. அந்தப் பிரதிகளை ரொபட் வெட்டி அவர்கள் பெற்று வெளியிட்டு வைத்தார். அவரே இன்னொரு நூலான ‘இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு’ நூலையும் பெற்று வெளியிட்டார். அந்த நூலின் சிறப்பை சுருக்கமாக விளக்கிய அவர், தமிழில் அத்தகைய நூல் வெளிவந்திருப்பது தனக்கு மிகுந்த மகிழ்சியளிப்பதாகக் கூறினார். ஸ்ரீ லங்காவில் இருந்து வந்திருந்த போதகர் பார்த்திபன் ‘சட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு’ என்ற நூலைப் பெற்று வெளியிட்டு வைத்தார். வரவேற்புரை நிகழ்த்தி கூட்டத்தை ஆரம்பித்து நடத்திய போதகர் முரளி ஜெபத்துடன் கூட்டத்தை நிறைவு செய்தார். வந்திருந்த அனைவருக்கும் சுவையான உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை சகோதரர்கள் உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

book release

கிறிஸ்தவ இலக்கியத்தை முதன்மைப்படுத்தி ஆத்மீக வளர்ச்சிக்கு அவசியமான வாசிப்பை வலியுறுத்தும் இரண்டரை மணிநேர நிகழ்ச்சியில் அன்று ஐந்நூறு பேர்வரை கலந்துகொண்டு சிறப்பித்தது தமிழினத்தில் வியப்பான செயல்தான். ஆர்ப்பாட்டங்கள் எதுவுமில்லாமல் அமைதியாக நிகழ்ந்த கூட்டத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசலையும் பொருட்படுத்தாமல் அத்தனை பேர் கலந்துகொண்டது ஆச்சரியத்தைத் தந்தது. கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அன்று அதிகமாக புத்தகங்களையும் ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர். இந்நிகழ்வு தொலைக்காட்சியில் விரைவில் ஒலிபரப்பாகவிருக்கிறது. அன்றையதினம் நிச்சயம் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாளாக அமைந்தது.

நியூ புக் லேண்ட்ஸ்

IMG_0782எந்த நாட்டுக்குப் போனாலும் நான் ஒருமுறை புத்தகக் கடைகளுக்குப் போய்வந்துவிடுவேன். சில புத்தகங்களையும் இதழ்களையுமாவது வாங்கிவிடுவேன். விமானநிலையப் புத்தகக் கடைகளிலும் தவறாது அரைமணி நேரத்தைச் செலவிடுவது என் வழக்கம். மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனைப்பற்றிய ஒரு புதிய தொகுப்பு ‘மனா’ லட்சுமனன் எழுதி வெளிவந்திருப்பது அறிந்து அதை எங்கே பெற்றுக்கொள்ளலாம் என்று எழுத்தாளர் ஜெயமோகனை எழுதிக் கேட்டேன். அவர் நியூ புக் லேண்ட்ஸ் புத்தகக் கடையில் கிடைக்கும் என்றார். ஒரு மாதிரியாக கடையைத்  தேடிப்பிடித்தேன். தி நகரில் வட உஸ்மான் தெருவின் மேம்பாலம் முடியுமிடத்தில் கடை இருந்தது. பழைய எண், புதிய எண் குழப்பத்தால் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இத்தனை தூரம் வந்துவிட்டோம், எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற ஆதங்கத்தோடு சிலரிடம் விசாரித்து அங்கு போய்ச்சேர்ந்தேன். நண்பர் வெட்டியும் என்னோடிருந்தார். திரும்பிவர கொஞ்ச நேரமாகும் என்று கார் டிரைவரிடம் கூறினேன். அது முழு உண்மையல்ல. புத்தகக் கடைக்குள் நுழைந்துவிட்டால் நான் அத்தனை சீக்கிரம் வெளியில் வந்துவிடுவதில்லை என்பது டிரைவருக்கு எங்கே தெரியும். தெருவில் இருந்து பார்க்கிறபோது கடை பெரிதாகத் தெரியாவிட்டாலும் உள்ளே நுழைந்துவிட்டால் இடம் பெரிதுதான் என்பது புரியும். சென்னை ஹிக்கின்ஸ்பொட்டம் புத்தகசாலை முதல் பல புத்தகக் கடைகளுக்கு பல ஊர்களிலும் போய்வந்திருந்தாலும் இந்தக் கடைக்குப் போனது புது அனுபவமாக இருந்தது. உள்ளே நுழைந்தவுடனேயே எனக்குள் ஒரு புல்லரிப்பு ஏற்பட்டது. கடையைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பதால் மட்டுமல்ல, உள்ளே ஆயிரக்கணக்கில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்ததாலும் ஏற்பட்ட புல்லரிப்பு அது.

Mr Srinivasanகடையின் மேலாளர் ஸ்ரீனிவாசன். கடை இலக்கிய வாஞ்சையுள்ள நர்மதா பதிப்பகத்தால் ஆரம்பிக்கப்பட்டது. திரு ஸ்ரீனிவாசன் ஆரம்பகாலத்தில் இருந்து கடையை மேற்பார்வை செய்துவருகிறார். அவரோடு பேச்சுக்கொடுத்து விபரங்கள் அறிந்துகொள்ள முயன்றேன். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு வந்திருக்கும் காரணத்தைச் சொன்னேன். உடனடியாக வரிசைக்கிரமாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஜெயகாந்தன் நூல்களின் அருகில் அழைத்துச் சென்றார். அடுத்த ஒருமணி நேரம் கடையை அலசிப் பார்க்கும் செயலில் ஈடுபட்டேன். எழுத்தாளர்களின் பெயர் வரிசைப்படி அவர்களுடைய நூல்களெல்லாம் வரிசைக்கிரமாக வைக்கப்பட்டிருந்தன. பிரபலமான பழைய புதிய எழுத்தாளர்களின் நூல்களனைத்தும் அங்கே இருந்தன. அழகிரிசாமி, சி. சு. செல்லப்பா, மு வவிலிருந்து இக்காலத்து ஜெயமோகன், ராமகிருஷ்ணன்வரை எல்லோருடைய நூல்களும் இருந்தன. நான் தேடிக்கொண்டிருந்த ஜெயமோகனின் காடு நூல் அங்கு கிடைத்தது. இதுவரை இந்தளவுக்கு இலக்கிய நூல்களை ஒரே கடையில் நான் பார்த்ததில்லை. சிற்றிதழ்கள் இன்று எத்தனை புத்தகக் கடையை அலங்கரிக்கின்றன? நுழைந்த உடனேயே கடையில் அவை கண்ணில் படும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. தமிழில் மட்டும் 70,000 நூல்கள் இருப்பதாக ஸ்ரீனிவாசன் சொன்னார். அதுதவிர ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான நூல்களும் இருக்கின்றனவாம். சென்னைவாசிகள் அதிர்ஷ்டக்காரர்கள் என்று நினைக்கத் தோன்றும். அது நினைப்பாக மட்டுந்தான் இருக்க முடியும் என்பதை திரு ஸ்ரீனிவாசனோடு தொடர்ந்து பேச்சுக்கொடுத்தபோது தெரிந்தது. இத்தனை பெரிய புத்தகக் கடையில் ஆயிரக்கணக்கான இலக்கிய நூல்களை வைத்திருக்கிறீர்களே, எத்தனை பேர் வாசிக்கிறார்கள், கடை நடத்தும் அளவுக்கு லாபமிருக்கிறதா? என்று கேட்டேன். இல்லை சார் என்று அவர் உடனடியாக சொன்னார். 9 மில்லியன் மக்கள் வாழும் சென்னை மாநகரத்தில் ஆயிரம் பேர் மட்டுமே தீவிர வாசகர்களாக அங்கே புத்தகங்களை வாங்கி வாசிக்கிறார்களாம். அதிர்ச்சி தரும் செய்தி இது. வாசிப்பு நம்மினத்தில் கீழ் நிலையில் இருக்கிறது என்பது எனக்குத் தெரிந்திருந்தபோதும் இது கொஞ்சம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தந்தது. ஆயிரம் கஸ்டமர்களை வைத்து எப்படிக் கடை நடத்துகிறீர்கள்? என்பது என்னுடைய அடுத்த கேள்வியாக இருந்தது. இல்லை சார், இங்கே ஆயிரம் பேர்தான் புத்தகங்களை வாங்கி வாசித்தாலும் வெளிநாடுகளில் இருந்து பத்தாயிரம் பேர்வரை நூல்களை ஆர்டர் செய்து வாங்கி வாசிக்கிறார்கள், அவர்களாலேயே கடை நடத்த முடிகிறது என்று பதில் வந்தது. வெளிநாட்டுத் தமிழர்களாவது தமிழகத்தின் மானத்தைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்களே என்று சந்தோஷப்படத்தான் முடிந்தது. ஸ்ரீனிவாசன் ஆழம் சிற்றிதழுக்கு ‘வாசிக்கும் பழக்கம் குறைத்திருக்கிறதா’ என்ற தலைப்பில் பேட்டி கொடுத்திருக்கிறார்.

நியூ புக் லேண்ட்ஸ் கடையில் வாசிக்கிறவர்களைத்தான் வேலைக்கு வைக்கிறோம் என்று ஸ்ரீனிவாசன் சொன்னார். அதுவும் ஆச்சரியமாக இருந்தது. எத்தனையோ கடைகளுக்குப் போயிருந்தபோதும் இங்குதான் கடைக்காரரோடு புத்தக்கங்களைப்பற்றியும், நூலாசிரியர்களைப் பற்றியும் பேச முடிந்தது. ஸ்ரீனிவாசன் சொன்னார், ‘சார், சென்னையில் ஒரு இலட்சம் பேர் வாசிக்க ஆரம்பித்தாலே போதும் அரசு மாறிவிடும்’ என்று. அவை உண்மையான வார்த்தைகள். வாசிக்கிறவர்களே சிந்திக்கிறவர்கள். மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் கோமாளித்தன அரசுகளுக்கு நாட்டில் வாய்ப்பிருக்காது. ஒரு காலத்தில் இலக்கிய வாசிப்பில் இளைஞர்களுக்கு இருந்த நாட்டம் இன்று இல்லை. இருபது இருபத்தியோரு வயது இளைஞர்கள் எல்லாம் வாட்ஸப்பிலும், இன்ஸ்டகிராமிலும், முகநூலிலும் குறுஞ்செய்தி அனுப்பி குதூகலித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர வாசிப்பையே அறியாதிருக்கிறார்கள். வருங்காலத் தலைமுறை எப்படி இருக்கப்போகிறது? பெங்களூரில் இருந்தபோது தொலைபேசியில் சிறிது நேரம் எழுத்தாளர் ஜெயமோகனோடு பேசினேன். ஓரிருதடவை கடிதம் எழுதியிருந்தபோதும் அவரை நேரில் பார்த்ததில்லை. அதற்கு இந்தத் தடவை வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இருந்தாலும் ஐந்துநிமிடங்களுக்கு மேல் அவரோடு பேசியபோது அவருடைய இளம் வாசகர்கள் வாசிக்கிறவர்களாகவும், சிந்திக்கிறவர்களாகவும், நல்ல தமிழில் எழுதக்கூடியவர்களாகவும் இருப்பதை சுட்டிக்காட்டினேன். தன்னுடைய நூல்களைக்கூட அதிகம் பேர் வாசிப்பதில்லை என்றும், தமிழ் நாட்டில் வாசிப்பு அருகியே இருக்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார். நம்மினத்தில் வாசிப்பின்மை பற்றிய நம்முடைய ஆதங்கம் பெரிதாகி அநேகரை வாசிக்க வைக்க என்ன செய்யலாம் என்று தீவிர நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது. ஜனவரி மாதத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சிகள் மிகவும் நல்ல முயற்சி; சென்னை போயும் அதற்குப் போகமுடியாதபடி போனது ஒரு புறம் வருத்தமே.

திரு ஸ்ரீனிவாசனோடு என் நண்பர் ரொபட்டும் நானும் பேசிய சந்தர்ப்பம் மகிழ்ச்சியளித்தது. புத்தகக்கடைக்குப் போய் நூல்கள் வாங்காமல் இருக்க முடியுமா? வேதத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்களில் ஒருவரான பெப்ரீசியஸின் அகராதி மீள்வெளியீடு செய்யப்பட்டு கடையில் இருந்தது. அதுவரை அது அச்சில் இருப்பதை நான் அறிந்திருக்கவில்லை. அதை வாங்கிக்கொண்டேன். அத்தோடு 6000 ரூபாய்க்கு என் வாசிப்புக்கும், எழுத்துப் பணிக்கும் அவசியமான நூல்களை வாங்கி நியூசிலாந்துக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தேன். இரண்டரை மணிநேர அந்த சந்திப்பும், புத்தகக் கடை அனுபவமும் மனதுக்கு இதமாக இருந்தது. என் நண்பரைப் பார்த்து சொன்னேன், ‘இங்கேயே ஒரு பாயைப் போட்டுப் படுக்க இடம்கொடுத்தார்களானால் இரவிரவாக இந்த நூல்களையெல்லாம் அலசிப்பார்க்க வசதியாக இருக்கும்’ என்று. உண்மையில் கடையைவிட்டு வெளியில் வர கஷ்டமாகத்தான் இருந்தது. சென்னைவாசிகளே, நீங்கள் ஏன் நியூ புக் லேண்ட்ஸ் புத்தகக் கடைக்கு ஒருமுறை போய்வரக்கூடாது? ஸ்ரீனிவாசன் அவர்களையும் சந்தித்துப் பேச மறக்காதீர்கள். தரமான ஒரு புத்தகக் கடைக்குப் போன இதமான அனுபவத்தோடு வேறுவேலைகளைக் கவனிக்க நண்பரோடு கடையை விட்டு வெளியில் வந்தேன்.

வடஇந்தியப் பயணம்

நண்பர் ரொபட் வெட்டியும் என்னோடு வந்திருந்ததனால் இருவரும் ஒரு வாரத்துக்கு வடஇந்தியப் பயணத்தை மேற்கொண்டோம். இரண்டு நாட்கள் குஜராத்திற்குப் போய் நண்பர் போல் சிங்கையும், நண்பர்களையும் சந்தித்தோம். எங்குபோனாலும் பேச்சு எப்படியோ புத்தகங்களைப்பற்றியும், கிறிஸ்தவ இலக்கிய வெளியீடுகளின் திசையிலும் திரும்பிவிடுவது வழக்கம். குஜராத் மொழியில் நல்ல கிறிஸ்தவ இலக்கியங்கள் வரவேண்டிய அவசியத்தை ரொபட் வலியுறுத்தி அளவலாவினார். இந்திய மொழிகளில் வேதமொழிபெயர்ப்புகள் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப்போல சிறப்பாக இல்லாததுபற்றியும் விவாதித்தோம். வாசிப்பின் அவசியத்தை ரொபட்டும், நானும் பலர் மத்தியில் வலியுறுத்திவிட்டு அங்கிருந்து ஜெய்ப்பூருக்குப் பறந்தோம் (விமானத்தில்தான்). கல்லூரிப்படிப்புக்கு முன்பிருந்தே நான் வரலாற்றில் முக்கிய நாட்டம்காட்டி வந்திருந்தேன். வரலாற்றுப் பாடம் எனக்குப் பிடித்தமானது. இந்திய வரலாற்றை நான் வாசித்து வியப்படைந்திருக்கிறேன். ராஜபுத்திர மன்னர்களின் வீரம், மொஹலாய ராஜ்ஜிய விஸ்தரிப்பு, சோழ, பாண்டிய, சேர, பல்லவ, விஜயநகர ராஜ்ஜியங்களின் மகிமைகளை இந்திய வரலாற்றில் வாசித்து ஆச்சரியமடைந்திருக்கிறேன். முக்கியமாக ராஜஸ்தானின் ராஜபுத்திரர்களின் வீரம் என்னை எப்போதும் கவர்ந்திருந்தது. ஜெய்ப்பூருக்கு போகும் வாய்ப்புக்கிடைக்கிறபோது விட்டுவிடவா போகிறேன்.

Rambagh palace (2)ஜெய்ப்பூரில் நான் சந்திக்க விரும்பியிருந்த ஓர் வெளிநாட்டு ஊழியர் அங்கிருந்து வேறு மாநிலத்துக்கு மாறியிருந்தபடியால் அவரை சந்திக்க இயலாமல் போனது. ஒன்றரை நாட்கள் மட்டுமே ஜெப்பூரில் இருந்ததால் ஒரு வழிகாட்டியை ஏற்பாடு செய்து அரவாளி மலைத்தொடரில் இருந்த அம்பர் கோட்டையைப் பார்க்கப் புறப்பட்டோம். இரண்டு மணிநேரம் எடுத்தது அந்தக் கோட்டையைச் சுற்றிப்பார்த்து கோட்டையில் பெருமைகளை உணர. இது யாரால் கட்டப்பட்டது என்பது புதிராக இருந்தபோதும், 1600களில் ராஜபுத்திர மன்னனாக இருந்த ராஜா முதலாம் மான்சிங் கோட்டையின் பெரும்பாலான பகுதிகளைப் புதுப்பித்துக் கட்டியிருக்கிறான் என்கிறது வரலாறு. 85 கிலோ மீட்டருக்கு சீனாவின் பெருமதிலை நினைப்பூட்டும் வகையில் ஒரு பாதுகாப்பு அரணை மான்சிங் எழுப்பியிருந்தான். 16ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டிருந்த பாதுகாப்பு அரண்களைக் கொண்டிருந்த அந்தக் கோட்டை அந்தக் காலத்து தொழில்நுட்ப வளர்ச்சியையும், மன்னர்களின் கலை ஆர்வத்தையும், மாவீரத்தையும் படம்பிடித்துக் காட்டியது. கோட்டையைப் பார்த்தபோது என் நினைவுகள் வரலாற்றில் நான் வாசித்திருந்த மாமன்னன் மகாராணா பிரதாப்,  மன்னன் பிரித்திவிராஜ் சௌஹான் போன்றோர் பக்கம் திரும்பியது. ராஜபுத்திரர்கள் வாள் வித்தையிலும், வில் வித்தையிலும், குதிரை ஓட்டுதலிலும் மிகவும் சிறந்தவர்கள். வீரத்துக்குப் பேர்பெற்றவர்கள். அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளுவதை நிறுத்தியிருந்தால் அவர்களை எவரும் அசைக்க முடியாதிருந்திருக்கும்.

Jaipurராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூர் அழகிய நகரம். ராஜபுத்திரர்களின் கட்டடக் கலையை நினைவூட்டும் வகையில் நவீன கட்டடங்களும் நகரில் இருந்தன. பழங்கலைகளைத் தொடர்ந்து பாதுகாத்து பின்பற்றுவது பாராட்டப்படவேண்டிய விஷயம். வீதிகள் நல்ல நிலையில் இருந்தன. பழைய ஜெய்ப்பூர் நகரைச் சுற்றிப் புதிய ஜெய்ப்பூர் நகரம் கட்டப்பட்டிருந்தது. பழமையும் புதுமையும் நகரில் இணைந்து காணப்பட்டன. முக்கியமான ராஜபுத்திர கட்டடக்கலையை நினைவூட்டும் கட்டடங்களும் கோட்டைகளும் பழைய ஜெய்ப்பூரில் இருந்தன. இந்தளவுக்கு ஜெய்ப்பூர் அழகாகவும், வசதியாகவும் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ராணி காயத்திரி தேவியின் மாளிகைகளில் ஒன்று ராம்பாஹ் மாளிகை (Rambagh Palace). அது இன்று தாஜ் ஓட்டல் நிர்வாகஸ்தர்களின் கவனிப்பில் ஐந்து நட்சத்திர ஓட்டலாக இயங்கி வருகிறது. பழமை அப்படியே பாதுகாக்கப்பட்டு நவீன வசதிகளுடன் ஓட்டல் இருந்தது. அங்கு ஒரு நாளுக்குத் தங்குவதற்கு 45,000 ரூபாய்கள். அம்பர் கோட்டையைச் சுற்றிப்பார்த்துவிட்டு ராம்பாஹ்ஹில் ரொபட்டும் நானும் மதிய உணவு அருந்தச் சென்றோம். மாளிகையின் அழகான வெளிப்புற தோட்டத்தில் உணவருந்தினோம். மகாராஜாக்கள் போல் தலைப்பாகையும், உடையுமணிந்து பணியாளர்கள் உணவு பறிமாறினார்கள். அருமையாக உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. அதிலிருந்தே ஓட்டலின் சிறப்பை அறிந்துகொள்ள முடிந்தது. லோர்ட் மவுன்ட்பேட்டன் மற்றும் சார்ள்ஸ் இளவரசரில் இருந்து தற்கால ஹொலிவுட் நடிகர்கள்வரை பலர் இங்கு தங்கியிருந்திருக்கிறார்கள்.

Thick mistஜெய்ப்பூரில் இருந்து அடுத்த நாள் அதிகாலையில் கிளம்பி ஆக்ராவுக்கு பயணமானோம். வசதியான காரோடு, ஆங்கிலம் பேசும் டிரைவரும் கிடைத்ததால் பயணம் நல்லபடியாக ஆரம்பித்தது. ஆனால், எவரும் முன்கூட்டியே எச்சரித்திருக்காத பெருந்தடையை பயணத்தை ஆரம்பித்தபோது சந்திக்க நேர்ந்தது. முழு வடஇந்தியாவும் குளிர் காலத்தில் (அக்டோபர்-மார்ச்) மேகம் போன்ற தடித்த பனியில் மத்தியானம்வரை மூடி இருக்கும் என்பது அன்றுதான் தெரிந்தது. இதைப்பற்றி எதிலும் நான் வாசிக்கவும் இல்லை. இனி முன்வைத்த காலை பின்வைப்பதில்லை என்று பயணத்தைத் தொடர்ந்தோம். கண்களுக்கு முன் பத்துமீட்டர்வரை மட்டுமே பார்க்க முடிந்தது. போகும் பாதையில் வரைந்திருந்த வெள்ளைக்கோடுகள் மட்டுமே அந்தக் கோட்டுக்குள் வண்டி போக உதவியாக இருந்தது. சுற்றி இருந்த மரம் செடி எதுவுமே கண்களுக்குத் தெரியவில்லை. கொஞ்சநஞ்சமிருந்த தூக்கமும், அசதியும் என்னைவிட்டு ஓடிப்போயின. டிரைவருக்கு துணையாக சம்பாஷனையைத் தொடர கார் ஆக்ராவை நோக்கிப் போனது. மொத்தம் நாலரை மணி நேரப் பயணம். காரை அருமையாக ஓட்டிப் பத்திரமாக எங்களை ஆக்ராவுக்கு கொண்டு சேர்த்தார் டிரைவர் சாம். அவர் ராஜபுத்திரர்களின் வம்சத்தில் வந்தவராக தன்னை ஏற்கனவே அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். அவரோடு நடந்த சம்பாஷனையில் ராஜஸ்தானைப்பற்றிய அநேக விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்.

ஆக்ரா உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் சிறு நகரம். ராஜஸ்தானைக் கடந்து ஆக்ராவை சமீபித்தபோது பனிமூட்டம் கொஞ்சம் குறைந்து சுற்றி இருப்பவைகளைப் பார்க்க முடிந்தது. ஓட்டுனர் சாம் இனி பாதை மிகவும் நன்றாக இருக்கும் என்றார். இதுவரை இருந்ததைவிடவா, என்று நினைத்துக்கொண்டேன். ஜெய்ப்பூரில் இருந்து வந்த பாதை மிக அருமையாக இருந்தது. தனியார் நிறுவனத்தால் போடப்பட்ட பாதை என்று சாம் சொன்னார். உத்தரப்பிரதேசத்துக்குள் நுழைந்தவுடனேயே பாதையில் மாற்றம் தெரிந்தது. சாம் சொன்னதுபோல் அது நல்ல பாதையாக இருக்கவில்லை. அப்போதுதான் அவர் நகைச்சுவையாக அதைச் சொல்லியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். ராஜஸ்தான் அரசு செம்மையான பாதைகளை மாநிலத்தில் போட்டிருக்கிறது. அதே நிலை உத்தரப்பிரதேசத்தில் இல்லை. ஆக்ரா நெருங்க நெருங்க பாதை இன்னும் மோசமாக இருந்தது. இப்போது உத்தரப்பிரதேசத்தின் அகிலேஷின் ஆட்சி. உலகத்தின் அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் இருக்கும் ஊர் நல்ல முறையில் இருக்கும் என்ற என் எண்ணங்களில் மண் விழுந்தது. மத்திய அரசு தாஜ்மகால் இருக்கும் ஊரைச் சிறப்பாக வைத்திருப்பதற்கு கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுக்கின்றபோதும் அது அந்தப்பணியில் செலவிடப்படவில்லை என்பதை ஆக்ரா வரும் எவரும் புரிந்துகொள்ளுவார்கள். இதே தாஜ்மகால் வெளிநாட்டில் இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்து ஊரை ஒழுங்காக வைத்திருந்திருப்பார்கள் என்று நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

ஆக்ராவுக்குள் வண்டி நுழைந்ததுமே பாதைக்கு இருபுறமும் கழிவு நீர்போகும் சாக்கடையை சுத்தம்படுத்துகிறோம் என்று பாதைக்கு இருபுறமும் மூக்கைப் பொத்திக்கொள்ள வைக்கும் கழிவுகளை அள்ளி மலைபோல் குவித்திருந்தார்கள். நண்பர் ரொபட் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.  மேகமூட்டம்போல் ஊரெங்கும் தூசி. ராஜஸ்தானுக்கு பக்கத்தில் இருக்கும் உத்தரப்பிரதேசத்திற்கும் ராஜஸ்தானுக்கும் இடையில்தான் எத்தனை வித்தியாசம். கடைகள் எல்லாம் ஓர் அங்குலத் தடிப்பில் தூசிபடிந்து மிகவும் பழைய ஊராக ஆக்ரா காட்சி தந்தது. ஒருவழியாக கார் நாங்கள் தங்கப்போகும் ஓட்டலை அடைந்தது. உடனடியாக அறைக்குப் போய் உடை மாற்றிக்கொண்டு தாஜ்மகாலைப் பார்க்க ஓட்டல் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த காரில் போனோம். சாம் எங்களை இறக்கிவிட்டுவிட்டு மறுபடியும் ஜெய்ப்பூருக்கும் போகத் தயாரானார்.

IMG_0497எங்களுக்கு வழிகாட்டியாக வந்திருந்தவர் ஆங்கிலம் பேசத் தெரிந்த வரலாற்றறிவுள்ள வாலிபர். நன்றாகப் புகைப்படம் எடுக்கத் தெரிந்தவரும்கூட. அவர் வழிகாட்ட முதலில் தாஜ்மகாலைப் பார்க்கப்போனோம். வெளிநாட்டில் இருந்து வந்திருந்தபடியால் இந்திய இரத்தம் உடம்பில் ஓடினாலும் வெளிநாட்டார் கட்டணந்தான். அதைக்கட்டிவிட்டு உள்ளே நுழைந்தோம். தாஜ்மகாலுக்குள் நுழையும்போது காலணிகளுக்கு மேலாக அணிந்துகொள்ள காலுறை ஒன்றைத் தந்தார்கள். தூரத்தில் இருந்தே அந்த மாபெரும் கட்டடத்தைப் பார்த்தபோது மலைப்புத் தட்டியது. படங்கள் எப்போதும் சிறப்பாக எடுக்கப்படுவதால் அவை கொஞ்சம் அழகாகத்தான் எதையும் காட்டும். நேரில் பார்த்தபோது தாஜ்மகால் அந்தப் பனிமூட்டமுள்ள பகல் வேளையிலும் மின்னத்தான் செய்தது. சில மணி நேரங்களை அங்கே செலவிட்டு எல்லாக் கோணத்திலும் தாஜ்மகாலை மனதில் பதிவு செய்ய முயன்றேன். முழு நிலவு காலத்தில் அதில் பதிக்கப்பட்டிருந்த ஆரஞ்சுக் கற்கள் அனைத்தும் ஒளியில் மின்னி தாஜ்மகாலை இன்னொரு கோணத்தில் காட்டும் என்று கூறிய வழிகாட்டி அந்தக் கல்லில் கைவிளக்கை பிடித்துக் காட்டினார். அது மின்னத்தான் செய்தது. தாஜ்மகாலைப் பார்த்தபோது ஷாஜகானைப்பற்றியும், மும்தாஜைப்பற்றியும் வரலாற்றில் வாசித்திருந்த உண்மைகள் நினைவோட்டத்தில் படமாக ஓட ஆரம்பித்தன. ஷாஜகானின் மகன் அவுரங்கசிப் தந்தையைக் கொடூரமாக நடத்தியதும் நினைவில் வட்டமிட்டது. மும்தாஜ் ஷாஜகானின் மூன்றாம் மனைவி. அவளுக்குப் பிறந்தது பதினான்கு பிள்ளைகள்; எட்டு மட்டுமே உயிரோடு வாழ்ந்தவை. ஷாஜகானுக்கு மும்தாஜ் மீது அத்தனைப் பிரியமிருந்தது. அந்தப் பிரியத்தின் அடையாளமாகத்தான் இந்த அழகான கட்டடத்தை அவள் நினைவாகக் கட்டியிருக்கிறான் ஷாஜகான். 1632ல் ஆரம்பித்து 22 வருடங்கள் எடுத்தது இதைக் கட்டிமுடிப்பதற்கு. யமூனா நதிக்கரையில் 42 ஏக்கர் நிலப்பரப்பில் இது கட்டப்பட்டது. செலவான தொகை 32 மில்லியன் ரூபாய்கள். இதேபோல் இன்னொன்றையும் யமுனைக்கு அந்தப்புறம் ஷாஜகான் கட்டத் திட்டமிட்டு அத்திவாரம் போட்டிருந்தபோதும் அது நடக்கமுடியாமல் போய்விட்டது. ஒருதடவை மதத்தையும், பலதார திருமணத்தையும் மறந்து, தாஜ்மகாலின் கட்டடக்கலையைக் கண்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்ய முயன்றேன். பக்கத்திலேயே நடந்துவந்த வழிகாட்டி கொடுத்த விபரங்கள் மலைக்க வைப்பவை. எத்தனை நாடுகளில் இருந்து விலைமதிப்பான கற்களைத் தருவித்து, எத்தனைத் தொழில்நுட்பக் கலைஞர்களை உழைக்கவைத்து, ராஜஸ்தானில் கிடைத்த பளிங்குக் கற்களைக் கொண்டு அத்தனை அருமையான உலக அதிசயங்களில் ஒன்றை ஷாஜகான் கட்டியிருக்கிறான். தாஜ்மகால் நாட்டில் இருப்பதற்காக நிச்சயம் இந்தியா பெருமைகொள்ளத்தான் வேண்டும்.

Red Fort, Agraதாஜ்மகாலுக்கு சமீபத்திலேயே இருந்த மாமன்னன் அக்பர் கட்டிய செங்கோட்டையைப் பார்க்கப் போனோம். மொஹலாய கட்டடக் கலையை அதில் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அழகான தோட்டத்திலும், படுக்கை அறைகளிலும், வரவேற்பறைகளிலும், திறந்தவெளி குளிப்பறைகளிலும் மொஹலாய கலையம்சங்களைத் துல்லியமாகக் காணமுடிந்தது. எங்களோடு வந்த வழிகாட்டி அக்பரின் 500 மனைவிகளைப்பற்றியும், அவன் நடத்திய சொகுசு வாழ்க்கையைப் பற்றியும், கோட்டையின் சிறப்புக்களையும் விளக்கிக்கொண்டே வந்தார். செங்கோட்டை பழங்காலத்து சிறப்புக்களைக் கண்முன் நிறுத்தியது. சிறைபிடிக்கப்பட்டிருந்த ஷாஜகான் இங்கிருந்துதான் ஒவ்வொருநாளும் தாஜ்மகாலைக் கடைசிவரைக் கண்களால் கண்டு மடிந்திருக்கிறான். அவனுக்காக அவுரங்கசிப் கட்டியிருந்த பளிங்கு வாசஸ்தலத்தையும் பார்த்தோம். அங்கிருந்து புகைமூட்டத்தின் மத்தியில் தூரத்தில் காட்சிதந்த தாஜ்மகாலைப் பார்த்து வியந்தோம்; அவுரங்கசிப்பின் கோரச்செயல் ஒருபுறம் நெஞ்சைச் சுட்டது.

அடுத்தநாள் அதிகாலை மறுபடியும் பனிமூட்டத்தின் நடுவில் நியூடெல்லி நோக்கிச் சென்றோம். இப்போது ஓட்டுனர் வேறு ஒருவர். இருந்தபோதும் பத்திரமாக டெல்லி கொண்டுபோய்ச் சேர்த்தார். அங்குபோனபிறகுதான் குடியரசு தினத்திற்காக பலத்த பாதுகாப்பு இருந்ததால் முக்கிய இடங்களைப் பார்க்க முடியாது என்பது தெரிந்தது. டெல்லி போவது இதுதான் முதல்தடவை. கடுமையான டிராபிக் ஜேமும், புகைமூட்டம்போல் தலைநகரைச் சூழ்ந்திருந்த அசுத்தக் காற்றும் வா வாவென்று வரவேற்றன. இருந்தபோதும் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்த ஒரு போதகரை அவருடைய முகவரியைக் கண்டுபிடித்து சந்தித்து மூன்று மணிநேரத்தைக் கழித்தோம். சீன ஓட்டல் ஒன்றுக்கு அழைத்துப்போய் மதிய உணவு அருந்த வைத்தார். அதற்குப் பிறகு ஓட்டலுக்குப் போய் தங்கியிருந்துவிட்டு அடுத்தநாள் சென்னை நோக்கிப் பயணமானோம்.

ஒரு வாரத்திற்குள், மின்னல் வேகப் பயணம் என்று சொல்லுவார்களே அதுபோல பெங்களூரில் இருந்து மும்பாய், குஜராத், ஜெய்ப்பூர், ஆக்ரா, டெல்லி போய்வந்துவிட்டோம். இந்தியாவின் பெருமைவாய்ந்த பழம் வரலாற்றுப் பெருமையும், முக்கியத்துவமும் பெற்ற இடங்களைப் பார்த்த அனுபவம் மறக்க முடியாததுதான். ராஜபுத்திர வம்ச வரலாறு, மொஹலாய சாம்ராஜ்ய வரலாறு, ஆறு வேறுபட்ட மொழிகளையும், மதங்களையும், பண்பாடுகளையும் கொண்டிருக்கும் மாநிலங்கள் அனைத்துமே என்னைச் சிந்திக்க வைக்காமலில்லை. எத்தனை வம்சங்கள் வந்து மறைந்தாலும், ஆட்சிகள் உருவாகிக் கவிழ்ந்தாலும், கோட்டைகளும், மாளிகைகளும் மாமன்னர்களின் மாவீரத்தையும், போர்த்திறத்தையும், கலையார்வத்தையும், தொழில்நுட்பத் திறனையும், ஏன் கொடுஞ்செயல்களையும்கூட விவரித்துக் காட்டினாலும் ஆண்டவரை அறிந்திராத வெறுமை வாழ்க்கை வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. உலகமிருக்கும் வரையில் அவர்களுடைய இவ்வுலக சாகசங்களையும், பெருமைகளைகளையும் அவர்கள் விட்டுச்சென்றிருக்கும் அம்பர் கோட்டையும், தாஜ்மாலும், செங்கோட்டையும் பறைசாற்றிக்கொண்டிருந்தபோதும், அவர்கள் ஆண்டவரை அறியாது சுயத்திற்கு மட்டுமே மகிமைதேடி மடிந்திருக்கிறார்கள் என்பதையும் கூடவே சேர்த்துச் சொல்லாமலிருக்கவில்லை. எத்தனையோ சாதனைகளை வாழ்க்கையில் செய்து, சொகுசாக வாழ்ந்த சாலமோன் மன்னன் மனந்திரும்பி எல்லாம் இறுதியில் மாயை என்று சொல்லவில்லையா? ஆண்டவரை அறிந்து வாழும் வாழ்க்கையில் இருந்த நிம்மதியையும், சமாதானத்தையும், நிலைத்திருக்கும் பரலோக வாழ்க்கையனுபவத்தையும் நிலையற்ற உலக சுகங்களில் அவனால் காணமுடியவில்லை. இந்த உலகத்து சாதனையாளர்களின் வாழ்க்கை நமக்கு நிலையான வாழ்க்கையைத் தரக்கூடிய கிறிஸ்துவை நினைக்க வைக்கவேண்டும். எது இருந்தும் கிறிஸ்து இல்லாமல் எவருக்கும் பயனில்லை.

இந்த வட இந்தியப் பயணத்தில் பெரும்பாலும் நான் பார்த்த வரலாற்றுச் சின்னங்களெல்லாம் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அந்த நூற்றாண்டிலேயே எல்லா உலக அதிசயங்களையும்விட அற்புதமான ஆண்டவர் எழுப்பிய திருச்சபை சீர்திருத்தம் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கெதிராக ஐரோப்பாவில் ஆரம்பித்தது. வேதம் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்படவும், சத்தியம் பிரசங்கிக்கப்படவும் ஆண்டவர் பலரை எழுப்பி ஆவியானவரின் மூலம் வல்லமையான சீர்திருத்தம் நெருப்புப்போல் எங்கும் பரவச் செய்தார். லூத்தரும், கல்வினும், டின்டேலும் வாழ்ந்த காலமது. சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டு கிறிஸ்து இலவசமாகத் தரும் இரட்சிப்பைப்பற்றி ஐரோப்பியர்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு உருவான காலம். இருந்தும் அதன் அடிச்சுவடுகூடப் பதியும் ஆசீர்வாதமில்லாமல் இந்தியா இருந்துவந்திருக்கிறது என்பதையும் என்னால் நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. இந்தக் காலத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பேனி ஏற்கனவே வியாபாரத்தை இந்தியாவில் ஆரம்பித்திருந்தபோதும் பதினேழாம் நூற்றாண்டிலேயே புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்த சீகன்பால்க் இந்தியாவுக்கு வந்தார். அதற்கு நூறு வருடங்களுக்குப் பின்னரே கேரி இந்தியா வந்தார்; பல்வேறு இந்திய மொழிகளில் வேதத்தை மொழிபெயர்த்தார். இனியாவது அவர்களுடைய வருகையின் அடையாளமாக மகத்தான வேத சீர்திருத்தம் இந்தியாவில் உருவாகுமா, மெய்ச்சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டு கோடிக்கணக்கான மக்கள் ஆத்ம விடுதலை அடைய வழியேற்படுமா? இன்று இந்திய தேசத்தில் மகாராஜாக்களும், சிற்றரசர்களும், குடிமக்களிடம் அடிமைத்தனமும், காலனித்துவ ஆட்சியும் இல்லாமல் போயிருக்கலாம். இருந்தும் பெரியளவில் ஆத்மீக விடுதலை இல்லாமல் தேசம் இருந்து வருகிறது. டில்லியில் இருந்து கன்னியாகுமரிவரை வீசும், கிறிஸ்துவின் சுவிசேஷம் தரும் ஆத்மீக அறிவொளியே இன்று இந்தியாவுக்கு தேவை.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 28 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.