ரோமன் கத்தோலிக்கர்களே! உங்களுக்கு ஓர் நல்ல செய்தி!

எனக்கு ரோமன் கத்தோலிக்கர்கள் மத்தியில் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். உண்மையில், சிறு வயதில் நான் ரோமன் கத்தோலிக்க மதத்தவர்களால் நடத்தப்பட்ட கல்லூரியில் படித்திருக்கிறேன். அங்குதான் வாழ்க்கையில் நேரத்தோடு காரியங்களை செய்வதையும், எதையும் ஒழுங்கு முறையோடு செய்துமுடிக்கும் வழக்கத்தையும் நான் கற்றுக்கொண்டேன். ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள் நடத்துகின்ற ஒரு சமூகசேவை நிலையத்தில்தான் நான் இன்றும் சபைத் தலைவர்களுக்கான கிறிஸ்தவ போதனை வகுப்புகளை நடத்துகிறேன். உண்மையில் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களை மனிதநேயத்தோடு நான் நேசிக்கிறேன். அவர்களிடம் வேறுபாடு காட்டி நான் ஒருபோதும் பழகுவதில்லை. ரோமன் கத்தோலிக்கர்கள் சமூக சேவை செய்வதில் அதிகம் ஈடுபட்டிருக்கிறார்கள். அது பாராட்ட வேண்டிய செயல். ரோமன் கத்தோலிக்க மதத்தவரான அன்னை தெரேசாவின் சமூக சேவைப் பணி யாருக்குத் தெரியாமல் இருக்கும்? அந்தளவுக்கு மனித நேயத்தோடு நான் அன்பு காட்டுகின்ற ரோமன் கத்தோலிக்கர்களுக்கு ஓர் நல்ல செய்தியை விளக்க விரும்புகிறேன்.

1. உங்கள் பாவங்களை மன்னிக்க இயேசு கிறிஸ்து என்றும் தயாராக இருக்கிறார்.

உலகத்தில் பிறந்திருக்கும் அனைத்து மதத்தாரும் பாவிகளாகவே பிறந்திருக்கிறார்கள். இதில் எவருக்கும் விதிவிலக்கில்லை. யூதர்களிடம் பழைய ஏற்பாடு இருந்தும், ஆபிரகாம் போன்ற அருமைப் பெரியவர்கள் அவர்கள் மத்தியில் பிறந்திருந்தும் யூத இனம் பாவத்தில் பிறந்ததாக மட்டுமல்லாமல், இயேசு கிறிஸ்துவிடம் இருந்து பாவமன்னிப்பைப் பெறாமல் இருந்து வருகிறது. நிக்கொதேமு போன்ற யூதர்கள் இதை உணர்ந்ததாலேயே இயேசு கிறிஸ்துவிடம் ஓடி வந்து பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொண்டார்கள் (யோவான் 3). யூத மதத்தில் பாவத்தைப் பற்றிய போதனை இருந்தும், சடங்குகளால் மட்டும் அந்தப் பாவங்களைப் போக்கிக்கொள்ள அது முயல்கிறது. அதைப் போலவே ரோமன் கத்தோலிக்க மதத்திலும் அந்தச் சபையில் சேர்வதாலும், அதன் சடங்குகளைப் பின்பற்றுவதாலும் மட்டுமே பாவம் போகும் என்ற போதனை இருந்து வருகிறது. இறப்பதற்கு முன் பாவத்திற்கு முழு விடுதலை தரக்கூடிய விதத்தில் ரோமன் கத்தோலிக்க மதப் போதனைகள் காணப்படவில்லை. இறக்கின்ற ஒவ்வொரு ரோமன் கத்தோலிக்கரும் முழப் பாவமும் போகாமல் ‘பெர்க்கட்டரி’ என்று அழைக்கப்பட்டும் ஆத்தும திருத்த இடத்தை அடைந்து அங்கே தங்களுடைய பாவங்களுக்கான தண்டனையைத் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகின்றது? ரோமன் கத்தோலிக்கரான நீங்கள் உங்களுடைய பாவத்துக்கு மன்னிப்பு அடைய முடியாமலும், பரலோக நிச்சயமில்லாமலுமே இறக்கிறீர்கள் என்பது தெரிகிறதல்லவா.

Continue reading

உங்களால் முடியும் ஊழலை ஒழிக்க!

“இரவிலே வாங்கினோம் சுதந்திரம், இன்னும் விடியவேயில்லை” என்றெழுதினான் ஒரு தமிழ்நாட்டுக் கவிஞன். இந்தியாவின் ஒட்டுமொத்தப் பிரச்சனைகளையும் இரண்டே வரிகளில் கொட்டித்தீர்த்திருக்கிறது அவனுடைய பேனாமுனை. ஊழல் பிரச்சனை நம் நாட்டில் பெரிய பிரச்சனைதான். அதை இல்லாமலாக்க எல்லோருக்கும் விருப்பமிருக்கிறது. ஆனால் வழிதான் தெரியவில்லை. ஊழலை மையமாக வைத்து வெள்ளித்திரையில் ‘இந்தியன்’ படத்தைக் காட்டிப் பார்த்தும் ஊழலை ஒழிக்க முடியவில்லை. ஊழல்கள் மலிந்த சினிமா உலகம் ஊழலுக்கு எதிராக படத்தை எடுத்து பணம் பண்ணிவிடுகிறது. என்ன விசித்திரம்! இன்றைக்கு அன்னா ஹசாரே பற்றித்தான் பத்திரிகை முழுவதும் வாசிக்கிறோம். காந்தியைப்போல உடைதரித்து ஊழலுக்கு எதிராக போர்க்கொடி எழுப்பியிருக்கிறார் இந்த மனிதர். ஊழலை இவர் ஒழிக்கப் போகிறாரா? அல்லது ஊழல் இவரை ஒழிக்கப் போகிறதா? யாருக்குத் தெரியும். எப்படிப் பார்த்தாலும் இன்றைக்கு எல்லாருக்கும் மெல்லுவதற்கு கிடைத்திருக்கும் அவல் ஊழல்தான்.

என்னடா, ஊழல் பற்றிய அக்கறையில்லாதது போல் இப்படி எழுதியிருக்கிறானே என்று நினைக்கிறீர்களா? உண்மையில் ஊழல் மட்டுமல்ல அதைப்போன்ற எத்தனையோ பாவங்களையும் நான் வெறுக்கத்தான் செய்கிறேன். வீட்டிலிருந்து ஆபிஸுக்குக் கூட நிம்மதியாகப் போக முடியாதபடி வழியில் மரித்து காரணமில்லாமல் காசு வசூலிக்கும் போலீஸ்காரரில் இருந்து, காசு கொடுத்து வாங்கிய ரிசர்வேஷன் இரயில் டிக்கெட் இருந்தும் நம் நம்பருள்ள சீட்டை இன்னொருவருக்கு அதிக காசுக்கு விற்றுவிடும் ரெயில்வே ஆபிசர்வரை நம் சொந்த நாட்டிலேயே நம்மை சிறைவைத்திருக்கும் ஊழலை யாரால் வெறுக்காமல் இருக்க முடியும். அதை நான் வெறுக்கவே வெறுக்கிறேன். ஊழலை வெறுப்பதால் மட்டும் ஊழல் இல்லாமல் போய்விடுமா? ஊழலைப் பற்றி பேசினாலோ, எழுதினாலோ, போராட்டம் நடத்தினாலோ அல்லது கடுமையான லோக்பால் சட்டம் கொண்டு வந்தாலோ ஊழல் போய்விடுமா? அன்னா ஹசாரேயால் மட்டும் ஊழலை அழித்துவிட முடியுமா? ஊழல் எங்கிருந்து வந்தது? மனிதனை அதை செய்ய வைப்பது எது? என்றெல்லாம் இன்னும் நாம் கேட்க ஆரம்பிக்காமல் இருப்பதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? இல்லை, இன்னும் கேட்கவில்லை. எனக்குத் தெரியும். பொறுமையாக நான் சொல்லப்போவதை வாசியுங்கள்.

ஊழல் உலகத்தில் தானாகத் தோன்றிவிடவில்லை. அது நம்மைப் பிடித்திருக்கும் ஒரு நோய். ஒவ்வொரு இந்தியனிலும் ஊழல் நோய் ஏதோவொரு விதத்தில் இருக்கிறது. ஊழலே செய்யாத இந்தியனை இந்தியா பார்த்ததில்லை. கோடிக்கணக்கில் பணத்தைப் பலர் வாரிக்கொட்டிக் கொண்டுள்ள 2ஜீ ஸ்பெக்டிரம் ஊழலைப் பற்றியும் அதைச் செய்தவர்களைப் பற்றியும் நாள் முழுவதும் பெரிதாகப் பேசி விடுகிறீர்கள். ஆனால், லைசென்ஸ் இல்லாமல் வண்டியோட்டுகிற உங்கள் ஊழல் உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. ஆபீஸ் நேரத்தைத் திருடி சொந்த வேலைகளைச் செய்வதும், போலிஸ்காரன் இல்லாத ஒன் வே பாதையில் தைரியமாக வண்டியோட்டுவதும், சொந்த மனைவிக்குத் தெரியாமல் தண்ணியடிப்பதும், பணத்தை செலவழிப்பதும், நாள் முழுவதும் பொய் சொல்லுவதும், சொன்ன வார்த்தைகளை மதித்து நிறைவேற்றாமல் இருப்பதும் உங்களுக்கு ஊழலாகத் தெரியவில்லை. என்னடா, இப்படிப் போட்டு உடைக்கிறானே! என்று உணர்ச்சிவசப்படுகிறீர்களா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஊழல் எங்கிருந்து வருகிறது? கிறிஸ்தவ வேதம் சொல்லுகிறது, “நம்முடைய இருதயம் திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாக இருக்கிறது” (எரேமியா 17:9) என்று. இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? நாம் தீங்கை மட்டுமே செய்யக்கூடிய இருதயத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதுதான். அந்தவிதமான இருதயத்தோடுதான் நாம் பிறந்திருக்கிறோம். பிறப்பிலிருந்தே நாம் கேடானவர்கள். வானத்தில் இருக்கும் நம்மைப் படைத்தவர் கண்களுக்கு இந்த உலகத்தில் ஒருவருமே நீதிமானாகத் தெரிவதில்லை. அதற்குக் காரணம் நாம் தீங்கானவர்களாக இருப்பதுதான். பிறப்பிலிருந்தே ஒவ்வொரு மனிதனின் இருதயமும் தீங்கானவையாகவே இருக்கின்றன. இப்போது தெரிகிறதா ஊழலுக்கு என்ன காரணமென்று? ஊழல் போக வேண்டுமானால் நாம் மாற வேண்டும், நம்முடைய இருதயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். வேறு வழியேயில்லை. ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் உங்களுடைய இருதயத்தை மாற்றக்கூடிய வல்லமை உங்களுக்கோ அல்லது உலகத்தில் இருக்கும் எந்த மனிதனுக்கோ இல்லை. கல்வி அறிவும், நல்ல போதனைகளும் நம் இருதயத்தை மாற்றும் வல்லமையைக் கொண்டிருக்கவில்லை. அதனால்தான் நம் நாட்டில் காந்தி பிறந்திருந்தும், திருக்குறள் இருந்தும், ஆத்திசூடி முதல் ஔவையார் எழுதிய நல்ல கருத்துள்ள நூல்கள் இருந்தும் மனிதன் தொடர்ந்து ஊழல்வாதியாக இருக்கிறான்.

உங்கள் இருதய மாற்றத்திற்கு என்ன வழி என்று நீங்கள் கேட்பீர்கள். அதற்கு வழி நம்மைப் படைத்த கடவுளிடம் தான் இருக்கிறது. அவரே அதற்கு வழி செய்திருக்கிறார். அது என்ன தெரியுமா? அவர் மனிதனாக இந்த உலகத்தில் பிறந்து நாம் செய்த கேடுகள், செய்து கொண்டிருக்கின்ற கேடுகள், செய்யப்போகின்ற கேடுகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக தம்மில் தாங்கி தம்மையே நமக்காக இரத்தப்பலி கொடுத்திருக்கிறார். என்றும் பரிசுத்தராக இருக்கின்ற கடவுளின் முன் அவருடைய நியாயஸ்தலத்தில் குற்றவாளிகளாக இருக்கும் உங்களுக்கு விடுதலை கொடுக்கத்தான் கடவுள் இப்படிச் செய்திருக்கிறார். அதனால்தான் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பாவிகளுக்காக தன்னைப் பலியாகக் கொடுத்தார் என்று கிறிஸ்தவ வேதம் சொல்லுகிறது (ரோமர் 5:6). கேடானவர்களாக, ஊழல்வாதிகளாக, குற்றஞ்சாட்டப்பட்டு நிற்கும் உங்களால் நீதியான காரியங்களை வாழ்க்கையில் சுயமாக செய்ய முடியாமலிருக்கிறது. நீதியைச் செய்யக்கூடியவர்களாக இயேசு கிறிஸ்துவால் மட்டுமே உங்களை மாற்ற முடியும். பரிசுத்தமில்லாத, குற்ற உணர்வுள்ள உங்களுடைய இருதயத்தைப் பாவமே இல்லாத பரிசுத்தரான இயேசு கிறிஸ்துவால் மட்டுமே மாற்ற முடியும். உங்கள் இருதயம் மாற்றப்பட்டாலொழிய ஊழல் போக வழியில்லை. பரிசுத்தரான இயேசு பரிசுத்தமில்லாத உங்களைப் பரிசுத்தப்படுத்த தன் சொந்த இரத்தத்தை சிலுவையில் செலுத்தி மரித்திருக்கிறார். உங்கள் பாவங்களை முழுவதுமாகக் கழுவி கடவுள் முன் நீதியானவர்களாக உங்களை நிறுத்தும்படியாக அப்படி செய்திருக்கிறார்.

நீதியானதை மட்டுமே வாழ்க்கையில் செய்ய வேண்டும், ஊழல்வாதியாக வாழ விருப்பமில்லை, நான் மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் நீங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களுடைய பாவ விடுதலைக்காக சிலுவையில் மரித்தார் என்பதை உணர்ந்து உங்களுடைய பாவங்களுக்காகவும், கேடுகளுக்காகவும் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் பாவி, என்னை மன்னியும் ஆண்டவரே! பாவங்களைச் செய்யும் என் இருதயத்தை மாற்றும் ஆண்டவரே! என்று அவரிடம் மன்றாடி ஜெபம் செய்வீர்களானால் அவர் உங்களுடைய பாவங்களை மன்னித்து உங்கள் இருதயத்தில் குடிபுகுந்து உங்களைப் பரிசுத்தப்படுத்துவார். ஊழல் செய்யாமல் வாழ முதலில் நீங்கள் நீதியைச் செய்யும் இருதயத்தை இயேசுவிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்துவால் உங்கள் இருதயம் மாற்றப்படுவதுமட்டுமல்ல அதை இயேசுவே இனி ஆள வேண்டும். இயேசு ஆளுகின்ற இருதயத்தைக் கொண்டிருந்தால் மட்டுமே அவருடைய கட்டளைகளை நீதியாக உங்களால் நிறைவேற்ற முடியும். ஒரு இந்தியனுடைய இருதயம் இயேசுவால் மாறி இயேசு அதில் குடிபுகுகிறபோது அந்த இந்தியனில் ஊழலுக்கு முடிவுகட்டப்படுகிறது. அவன் இனி கடவுளின் பார்வையில் ஊழல்வாதியாக நிற்காமல் நீதிமானாக நிற்பான். அந்த இந்தியனாக ஏன் நீங்கள் இருக்கக்கூடாது? ஊழல் கூடாது என்கிற உங்களுடைய ஊழல் செய்யும் இருதயம் மாற வேண்டாமா? உங்களுக்கும் பிரயோஜனமில்லாமல், உங்கள் சொந்த மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் முன்னும் உண்மையோடு வாழமுடியாமல் வைத்திருக்கும் ஊழல் மலிந்த உங்கள் இருதயத்தை இயேசு மாற்றத் தயாராக இருக்கிறார். அவரை இன்றே ஆண்டவராக ஏற்று நீதி செய்யும் இருதயத்தைப் பெற்று ஊழலுக்கு முடிவுகட்டுங்கள்.

உங்கள்மேல் இருக்கும் தேவகோபம்

தேவனுடைய கோபம் மனிதர் மேல் இருப்பதாக வேதத்தில் வாசிக்கிறோம். “சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லா அவபக்திக்கும் அநியாயத்திற்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது” என்கிறது வேதம் (ரோமர் 1:18). அன்புகாட்ட வேண்டிய கடவுள் எப்படி மனிதன் மேல் கோபப்பட முடியும்? அது நீதியாகாதே? என்று சிலர் கேட்கக்கூடும். மனிதன் மேல் இருக்கும் தேவகோபம் நியாயமானதா? என்று நாம் சிந்திக்கத்தான் வேண்டும்.

இதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் முதலில் கடவுளுடைய குணாதிசயங்களைப்பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். கடவுள் நீதியும், உண்மையும், பரிசுத்தமும் உள்ளவர் என்று வேதம் சொல்லுகிறது. அவரிடம் அநீதிக்கோ, அசுத்தத்திற்கோ, பொய்க்கோ இடமில்லை. கடவுள் பூரணமானவர். அவர் என்றும் மாறாதவர். அப்படிப்பட்டவர் ஒருபோதும் அநீதிக்கு இடங்கொடுக்க மாட்டார் என்பதில் நமக்கு சந்தேகமே இருக்கக் கூடாது.

அப்படியானால் அவருக்கு எப்படி மனிதன் மேல் கோபம் வந்தது? நீதியும், உண்மையும், பரிசுத்தமும் உள்ள கடவுள் அநீதியைப் பார்த்து சகித்துக்கொண்டிருந்தால் அவர் நீதியுள்ளவராக இருக்க முடியாது. கடவுள் அநீதியை ஒருபோதும் சகிக்க மாட்டார். ஒளி வீசிக்கொண்டிருக்கும் போது இருட்டுக்கு எப்படி அங்கே இடமிருக்காதோ அதே போலத்தான் கடவுளுக்கு முன் அநீதிக்கு இடமிருக்காது. மேலே நாம் பார்த்த ரோமர் 1:18 வசனம், சத்தியத்தை அநியாயத்தினால் அடக்கி வைக்கிற மனிதனுடைய எல்லாச் செயல்களுக்கும் எதிராக தேவகோபம் இருக்கிறது என்று சொல்கிறது. பாவத்தினால் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் மனிதன் அநியாயத்தை மட்டுமே செய்து வருகிறான். அவனுக்கும் பக்திக்கும் தொலைதூரம். கடவுள் இருக்கிறார் என்று தெரிந்திருந்தும், அவரையும் சத்தியத்தையும் நிராகரித்துவிட்டு மரங்களையும், மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும் மனிதன் வழிபட்டு வருகிறான் (ரோமர் 1:23). நீதியுள்ள கடவுளால் அதை எப்படி சகித்துக்கொண்டிருக்க முடியும்? அது நியாயமாகாது. அதனால் தான் தேவகோபம் மனிதன் மேல் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தான் படைத்த மனிதன் தன்னையே தூக்கி எறிந்துவிட்ட பிறகும் அவனைத் தண்டிக்காவிட்டால் கடவுளின் நீதிக்குப் பங்கம் ஏற்படும். என்றும் மாறாத பூரணத்துவரான கடவுள் தன்னுடைய நீதிக்கு எதிராக ஒருபோதும் நடக்க மாட்டார். தான் கிழித்த கோட்டை அவர் தாண்டமாட்டார். அநீதியைத் தண்டிப்பது நீதியுள்ள கடவுளின் கடமை. அதனால்தான் தேவகோபம் மனிதன் மேல் நிலைத்திருக்கிறது. மனிதன் நீதியாகவே அவருடைய கோபத்தின் கீழ் வந்திருக்கிறான் என்று வேதம் சொல்லுகிறது.

கடவுளை மனிதன் நிராகரித்துவிடுவதோடு நின்றுவிடாமல் அவருடைய சகல கட்டளைகளையும் புறக்கணிக்கிறான். “சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்து” (ரோமர் 1:29) நிற்கிறான். ஆகவேதான் “இப்படிப்பட்டவை களைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராய் இருக்கிறார்கள் என்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்” என்று வேதம் சொல்கிறது (ரோமர் 1:32). அப்படி அறிந்திருந்தும் கடவுளுக்கெதிராக மனிதன் பாவம் செய்வதோடு அவருக்கெதிராகப் பாவம் செய்கிறவர்களிடம் பிரியத்தோடும் இருக்கிறான்.

ஆகவே, கடவுள் எப்படி நம்மீது கோபங்கொள்ள முடியும்? என்று கேட்பதைவிட, அவருடைய கோபத்திலிருந்து நாம் எப்படி விடுபடுவது? என்று சிந்திப்பது நியாயமானது. இதற்குப் பதில் அளிக்கும் வேதம் கடவுளே இதற்கு ஒரு வழியை ஏற்படுத்தித் தந்திருப்பதாக விளக்குகிறது. மனிதன் மேல் இருக்கும் தேவ கோபத்தை நீக்குவதற்காகவும், அவன் அழிந்து போகாமல் இருப்பதற்காகவும் கடவுள் தன்னுடைய ஒரே குமாரனை இந்த உலகத்துக்குத் தந்தருளியிருக்கிறார் (யோவான் 3:16) என்கிறது வேதம். அதைக் கடவுள் அன்புள்ளத்தோடு செய்திருப்பதாகவும் அது விளக்குகிறது.
கல்வாரி சிலுவையில் மரித்த தேவ குமாரனாகிய இயேசு மனிதன் மேல் இருக்கும் தேவ கோபத்தைக் தன் மேல் சுமந்து அவனுடைய பாவத்துக்கு தன்னையே பரிகாரப் பலியாக்கினார். கடவுளுடைய கோரிக்கைகளைப் பூரணமாக சிலுவை மரணத்தின் மூலம் நிறைவேற்றினார். மனிதன் தேவகோபத்திலிருந்தும், பாவத்திலிருந்தும் விடுதலை பெற இயேசு கிறிஸ்து நிறைவேற்றிய கிருபாதாரப் பலி இதுவே. ஆகவேதான் வேதம், கடவுளுடைய அன்புக்குப் பாத்திரரான குமாரனை விசுவாசிக்கிற ஒருவன் நித்திய ஜீவனை நிச்சயமாக அடைவான் என்கிறது. மேலும், “அவரை விசுவாசியாதவன் தண்டனைக்குள்ளானவனாயிருக்கிறான்” என்றும் விளக்குகிறது (யோவான் 3:18).

கடவுளிடம் அநீதி இருக்கிறதென்று நாம் சொல்லக் கூடாது (ரோமர் 9:14). உருவாக்கப்பட்ட ஒரு பொருள் உருவாக்கினவரைப் பார்த்து, நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று கேட்கலாமா? (ரோமர் 9:20). தன்னுடைய கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும் கடவுளுக்கு உரிமையுண்டு (ரோமர் 9:22). அழிவுக்கு பாத்திரமாக்கப்பட்டு அவருடைய கோபாக்கினைக்கு உள்ளானவர்கள் மேல் அவர் நீடிய சாந்தத்தோடு இன்னும் பொறுமையாக இருப்பதை நினைத்து நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் (ரோமர் 9:23).
தண்டனையின் நாள் நெருங்கிக் கொண்டே இருக்கிறது. கடவுளின் ஒரே குமாரரான இயேசு கிறிஸ்து மறுபடியும் இந்த உலகத்துக்கு வந்து எல்லோரையும் நியாயந்தீர்க்கப்போகும் நாளே நித்திய தண்டனையின் நாள். அந்த நாள் வரும்வரையும் உள்ள காலம்தான் கடவுளின் பொறுமையின் நாட்களாக இருக்கும். இந் நாட்களைத் தான் வேதம் கிருபையின் நாட்கள் என்று அழைக்கிறது. அதற்குப் பிறகு அவருடைய பொறுமைக்கு இடமிருக்காது. கடவுளின் ஒரே குமாரரான இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் நியாயத்தீர்ப்புநாளில் கொடுக்கப்படும் நித்திய தண்டனையிலிருந்து தப்பிக்கொள்ளலாம். அவர்கள் தேவ குமாரனாகிய கிறிஸ்து மட்டுமே கொடுக்கக் கூடிய நித்திய ஜீவனை இலவசமாகப் பெற்று சமாதானத்துடன் கடவுளின் அன்பை அனுபவிக்கலாம்.

நண்பர்களே! உங்கள் பாவமே உங்களைத் தேவகோபத்துக்குள்ளாக்கி இருக்கிறது. பரலோக வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்க முடியாதபடி உங்களைத் தடுத்து வைத்திருப்பதும் அந்தப் பாவமே. இந்தக் கிருபையின் நாட்களில் அந்தப் பாவம் உங்களைவிட்டு நீங்க ஆண்டவரை நாடுங்கள். வரப்போகும் நித்திய தண்டனையிலிருந்து தப்பிக்கொள்ளுங்கள். பின்வரும் வேத வசனங்களை ஆராய்ந்து பார்த்து உங்கள் பாவங்களுக்காக கடவுளிடம் மன்னிப்பை நாடுங்கள். பாவ வாழ்க்கைக்கு இன்றே ஒரு முடிவு கட்டுங்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். அவர் உங்களைத் தேவ கோபத்திலிருந்து விடுவித்து நித்திய ஜீவனையும், பரலோக வாழ்க்கையையும் இலவசமாகத் தருவார்.

“தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்துக்கு அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரே பேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத் தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான்.” (யோவான் 3:16–20)

“தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லோரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே”
(1 தீமோத்தேயு 2:5,6).

“பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமானது”
(1 தீமோத்தேயு 1:15).

யார் உங்கள் கடவுள்?

பிரபலமான ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் சமீபத்தில் மரணமான ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தின் தலைவரான ஸ்டீவ் ஜோப் பற்றிய கட்டுரை வந்திருந்தது. அதன் தலைப்பு “இந்த சந்ததியின் கடவுள்” என்றிருந்தது. இது என்னை சிந்திக்க வைத்தது. உங்களில் எத்தனை பேருக்கு ஸ்டீப் ஜோப்பைப் பற்றித் தெரியும் என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் இந்த அசாதாரண மனிதனின் வாழ்க்கையைப் பற்றி நினைத்துப்பார்ப்பது நமக்கு நன்மை தரும். வெகு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஸ்டீவ் ஜோப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு தன் நண்பனோடு வீட்டுக் கார் கராஜில் கம்பியூட்டர் தயாரித்து விற்கும் வியாபாரத்தை ஆரம்பித்தார். இப்படித்தான் இன்று உலகத்தில் முன்னிலையில் இருக்கும் ஆப்பிள் கம்பியூட்டர் ஆரம்பத்தில் உருவானது. ஸ்டீப் ஜோப்பிற்கு அசாதாரண விடாமுயற்சி, முன்னோக்கிப் பார்க்கும் அறிவுத் திறன், எல்லோரையும்விட ஒரு பங்கு முன்னால் போய் யாரும் செய்யாததை செய்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் எல்லாம் சேர்ந்தே பிறந்திருந்தது. அவர் மரணமடையும் தருவாயில் ஆப்பிள் கம்பேனி மைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸின் கம்பேனியையும் தாண்டி முதல் நிலையில் இருந்தது. 489 பில்லியன் சொத்தை சேர்த்துக் குவித்திருந்தார் ஸ்டீப் ஜோப். அமெரிக்க அரசாங்கத்தைவிட ஸ்டீவ் ஜோப்பிடம் அதிக பணமிருந்ததாக செய்திப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பொட்,
ஐ-போன், ஐ-பேடு ஆகிய தயாரிப்புகள் உலக மக்களின் வாழ்க்கை முறையையும், நடவடிக்கைகளையும் முற்றாக மாற்றி அவர்களுடைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருந்தன. இன்னும் பத்து வருடங்கள் உயிரோடிருந்திருந்தால் ஸ்டீவ் ஜோப் இந்த உலகத்தை எந்தளவுக்கு மாற்றியிருந்திருப்பார் என்று எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. இத்தனைக்கும் எந்த மனிதனும் உலகத்தில் சாதித்திராத இத்தனை சாதனைகளும் மரணத்திலிருந்து ஸ்டீப் ஜோப்பிற்கு விடுதலை கொடுக்க முடியவில்லை. கடுமையானதும், விரைவில் பரவுகிறதுமான ஒருவகை புற்று நோய் ஸ்டீவ் ஜோப்பின் வாழ்க்கையை 55 வயதில் முடித்து வைத்தது.

இந்த சாதனையாளருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை. தன்னால் முடியும் என்ற சுய நம்பிக்கை அளவுக்கு மேல் அதிகமாக இருந்தது. வெறியோடு சாதிக்க வேண்டும் என்று உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஸ்டீவ் ஜோப் வாழ்ந்தார். அவருடைய வாழ்க்கை இலட்சியத்தை பிரதிபலிப்பது போல் அவருடைய தாயாரிப்புகளின் பெயர்கள் எல்லாமே “ஐ” என்ற ஆங்கில எழுத்தை முன்னால் கொண்டிருந்தன. “ஐ” என்றால் “நான்” என்பது அர்த்தம். எந்தளவுக்கு ஸ்டீவ் ஜோப் தன்மீதும், தன்னுடைய திறமை மீதும், சாதனைகள் மீதும் அளவில்லாத நம்பிக்கை வைத்திருந்தார் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. அவருடைய படத்தை அட்டைப் படமாகக் கொண்டு அவரைப் பற்றி எழுதப் போட்டியிடாத பத்திரிகைகள் இல்லை. அந்தப் படங்களும், கட்டுரைகளும் தனக்குப் பிடித்தமான விதத்தில் வர ஸ்டீவ் ஜோப் அதிக அக்கறை காட்டினார். அவர் தன்னையே வணங்கி தனக்காக மட்டும் வாழ்ந்திருந்தார்.

இதையெல்லாம் எழுதும்போதே ஸ்டீவ் ஜோப் மீது எனக்கு பரிதாபம் தான் வருகிறது. தனக்காக மட்டும் வாழ்ந்து எந்தளவுக்கு அவர் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருந்தார் என்பதால்தான் அந்த பரிதாபம். தானே கடவுள் என்பது போல் வாழ்ந்து “இந்த உலகத்தின் கடவுள்” என்று தன்னைப் பற்றி ஒரு பத்திரிகையும் தலைப்புச் செய்தி எழுத வைத்திருந்த ஸ்டீவ் ஜோப்பின் வாழ்க்கை வெறுமையில் தான் முடிந்தது. அவரது பெயர், பணம் அனைத்தையும் இந்த உலகத்தில் விட்டுவிட்டு கடவுள் இல்லாத ஓரிடத்துக்கு ஸ்டீவ் ஜோப் போய் சேர்ந்து விட்டார். அது பரிதாபப்பட வேண்டிய நிலைதான். என்னதான் இந்த உலகத்தில் நாம் சாதித்தாலும், எத்தனை சொத்துக்களை சேர்த்துக் குவித்தாலும், எத்தனை சுகங்களை எல்லையில்லாமல் அனுபவித்தாலும் யாரை நாம் வணங்கியிருக்கிறோம், யாருக்காக வாழ்ந்திருக்கிறோம் என்பதே மரணத்திற்குப் பிறகு நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கப்போகின்றது. தனக்காக மட்டுமே வாழ்ந்த ஸ்டீவ் ஜோப்பிற்கு சுயத்தால் அழிவில்லாத வாழ்க்கையை அளிக்க முடியவில்லை. வாழ்ந்த போதும் அவருடைய வாழ்க்கையில் கடவுள் இல்லை. போன பிறகும் அவரிருக்கும் இடத்தில் கடவுள் இல்லை. எத்தனைப் பரிதாபம்!

இதை வாசிக்கும் நண்பர்களே, நீங்கள் யாருக்காக வாழ்கிறீர்கள்? யார் உங்களுடைய இருதயத்தில் முதலிடம் பிடித்திருக்கிறார்? இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதில்களில்தான் உங்களுடைய எதிர்காலமே தங்கியிருக்கிறது. ஸ்டீவ் ஜோப்பைப் போல உங்களுக்காக மட்டும் நீங்கள் வாழ்வீர்களானால் உங்களுடைய எதிர்காலம் வீணாய்த்தான் போகும். “நான்” என்ற அகந்தை உங்களுடைய இருதயத்தை ஆளுமானால் கடவுள் இருக்கும் இடத்துக்கு நீங்கள் போகப்போவதில்லை. தன்னம்பிக்கை மனிதனுக்கு இருப்பதில் தப்பில்லை. தானே எல்லாம் என்று நினைப்பது தான் அவனை அழித்துவிடும். நமக்கு மேல் நம்மைப் படைத்த எல்லாம் வல்ல கடவுள் இருக்கிறார் என்ற எண்ணம் நமக்கு வேண்டும். உங்களுக்கு அது இருக்கிறதா? அப்படி இருக்குமானால் அவரை நீங்கள் அறிந்துகொண்டிருக்கிறீர்களா? அவருக்காக வாழ்ந்து வருகிறீர்களா? படைத்தவர் நம்மைப் பார்த்து என்ன சொல்கிறார் தெரியுமா? நாம் அவருக்காக மட்டும் வாழவேண்டும் என்று சொல்லுகிறார். தான் படைத்த மக்கள் பின்பற்றும்படியாக அவர் கொடுத்திருக்கும் பத்துக் கட்டளைகள் எப்படி ஆரம்பிக்கின்றன தெரியுமா? அவை “நானே கடவுள்”  (யாத்திராகமம் 20) என்ற அறிமுகத்தோடு ஆரம்பிக்கின்றன. கடவுளின் இடத்தை யாரும், எதுவும் பிடிக்க முடியாது. இயேசு கிறிஸ்து மூலம் அந்தக்  கடவுளைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் பாவங்களில் இருந்து விடுதலை பெற்று சுயத்தை வெறுத்து அவருக்காக மட்டும் வாழப் பாருங்கள். அது மட்டுமே மரணத்திற்குப் பிறகுள்ள வாழ்க்கைக்கு உங்களைத் தயாராக்கும். யார் உங்கள் கடவுள் என்பதை இன்றே, இப்போதே தீர்மானியுங்கள்.

நட்ட கல் பேசுமா?

கடவுளுக்குப் பிடிக்காத ஒன்று என்ன தெரியுமா? சிலை வணக்கம்! ஏன், அவருக்கு அது பிடிக்கவில்லை என்று நீங்கள் கேட்கலாம். அதற்குக் காரணமிருக்கிறது. உங்களுக்குக் தெரியுமா? அவர் சொல்லியிருக்கிறார், மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான எந்த உருவத்தையாகிலும், யாதொரு விக்கிரத்தையாகிலும் வைத்து அவரை வணங்கக்கூடாதென்று (யாத் 20:7). ஏன், அவர் அப்படிச் சொன்னார்?  தன்னுடைய மகிமையை எதனோடும் பகிர்ந்துகொள்ள மாட்டேன் என்று கடவுள் ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார். இருந்தாலும், சிலை வைத்து வணங்குவது எங்களுக்கு வசதியாக இருக்கிறது என்று நீங்கள் சொல்லுவது எனக்குப் புரிகிறது. கடவுளை வணங்குகிற விஷயத்தில் நாம் மனுஷத்தனமாக சிந்திப்பது உதவாது. கடவுள் நம்மைவிடப் பெரியவர். எல்லாவற்றையும் படைத்தவர். அவரைவிட பெரியது ஒன்றுமில்லை. அவருக்கு துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை. அவருக்கு உருவமில்லை. காலங்களும் அவரைக் கட்டுப்படுத்துவதில்லை. ஒரே நேரத்தில் அவர் எங்கும் இருக்கிறார். இடங்களும் அவரைக் கட்டுப்படுத்துவதில்லை. உண்மையில் சொல்லப்போனால் மனிதர்களாகிய நாம் நமது மூளையை வைத்து அவரை அறிந்து கொள்ளுவது கொஞ்சம் கஷ்டம்தான். நம்முடைய மூளையைப் பயன்படுத்தி நாம் எத்தனையோ பெரிய காரியங்களை இந்த உலகத்தில் செய்தாலும் ஞானத்தின் தேவனாகிய கடவுளை நம்முடைய சிறிய மூளையை வைத்து அறிந்துகொள்ள முடியாது. அதனால்தான் நாம் சிலைகளை வைத்து அவரை வணங்க ஆரம்பித்து விடுகிறோம். நமக்குத் தெரிந்தபடி அவரைத் திருப்திப்படுத்த முயற்சி செய்கிறோம். அங்கேயே நாம் தவறு செய்கிறோம். நமக்குத் தெரிந்த விதத்தில் அவரை வணங்கப்பார்க்காமல் கடவுள் அதுபற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று நாம் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். நாம் நினைத்தவிதத்தில் அவரைத் திருப்திப்படுத்தப் பார்க்காமல் அவருக்கு எது பிடிக்கும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கடவுளைப் பொறுத்தவரையில் சிலை வைத்து அவரை வணங்குவதில் இரண்டு தவறுகள் இருக்கின்றன.

  1. சிலை மூலம் அவரை வணங்கும் போது நாம் அவரை நிராகரித்து விடுகிறோம். அதாவது, அவர் ஜீவனுள்ள, உருவமற்ற கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுகிறோம். சிலையே வைக்காதே! என்று அவர் சொல்லியிருக்கும் போது சிலை மூலம் அவரை வழிபடப் பார்ப்பது அவரை நிராகரிப்பதற்கு சமமானதுதானே.
  2. சிலை மூலம் அவரை வழிபடும்போது நாம் கடவுளுக்கு கொடுக்க வேண்டிய மகிமையை உயிரில்லாத சிலைக்கு கொடுத்துவிடுகிறோம்.

இந்த இரண்டையும் கடவுள் நம்முடைய அறியாமையின் அடையாளங்களாகப் பார்க்கவில்லை. அறியாமையால் இப்படி செய்துவிட்டோம் என்று அவரிடம் நாம் சொல்லித் தப்பிவிட முடியாது. அவர் இந்த இரண்டையும் கொடிய பாவங்களாகப் பார்க்கிறார். மகா பரிசுத்தமும், சர்வத்தையும் படைத்த மகாவல்லவருமான அவரை அவரால் படைக்கப்பட்ட சாதாரண பொருட்களோடு ஒப்பிடுவது அவரை குறைவுபடுத்துகிற இழி செயலாக அவர் பார்க்கிறார். ஒருவருடைய புகைப்படத்தை எடுத்து அந்தப்படத்தில் நாம் மாற்றங்களை செய்து அவரிடம் காட்டினால் அவர் முகம் வாடிவிடும் இல்லையா. ஏன்? அவரை நாம் கேலி செய்கிறோம் என்பதால்தான். சாதாரண மனிதனுக்கே அது பிடிக்காமல் இருக்கிறபோது சர்வ வல்லவரான நம்மைப் படைத்த கடவுளைக் கேலி செய்வது அவருக்கு பொருக்குமா? இதனால்தான் சிலை வணக்கத்தைக் கடவுள் அருவருப்போடு வெறுக்கிறார்.

இப்படியெல்லாம் நான் கேள்விப்பட்ட தில்லையே என்று நீங்கள் கேட்கலாம். அது உங்கள் தவறுதான். அறியாமையை வைத்து கடவுளிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று ஏற்கனவே சொல்லிவிட்டேனே. நம் தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்த சித்தர் பரம்பரைக்கே இது தெரிந்திருக்கிறது, நீங்கள்தான் எதையும் சிந்தித்துப் பார்க்காமல் பாவத்தை செய்து வருகிறீர்கள். ஒரு சித்தர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

 “நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பஞ் சாத்துகிறீர்
சுத்தி வந்து முணு முணுவென்று சொல்லு மந்திரமேதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவங்கறிச் சுவை அறியுமோ?”

இது நம்நாட்டு சித்தர் பாடல். அவர்களுக்கு கூட சிலை வைத்து கடவுளை வணங்குவது அறிவுக்குறைவான செயல் என்று தெரிந்திருந்தது. உயிரில்லாத கல் எப்படிப் பேசும்? அதற்குக் கறிச்சுவை எப்படித் தெரியும்? என்று சித்தர்கள் ஆணித்தரமாக கிண்டலாகக் கேட்டிருக்கிறார்கள்.

சரி, சர்வ வல்லவரான கடவுளை நீங்கள் எப்படி வணங்க வேண்டும்? அவரை அறிந்துகொள்ள முடியாமல் நிற்கும் நீங்கள் அவரை அறிந்துகொண்டு வழிபட வேண்டுமென்பதற்காகத்தான் அவர் மனித உருவத்தில் முழுத் தெய்வீகத்தோடு இயேசு கிறிஸ்துவாக இந்த உலகத்தில் பிறந்தார். இயேசு கிறிஸ்துவை கடவுளாக வழிபடும்போதுதான் உங்கள் வழிபாட்டைக் கடவுள் ஏற்றுக்கொள்ளுகிறார். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இயேசு கிறிஸ்துவின் வேதப் புத்தகத்தை வாசித்து அவரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். அவரைக் கடவுளாக விசுவாசிக்க வேண்டும். பாவங்களிலிருந்து நீங்கள் முழுமையாக விடுதலை பெற அவர் உங்கள் பாவங்களைத் தன்மேல் தாங்கிப் பலியானார் என்பதை முழுமனதோடு விசுவாசித்து அவரிடம் நீங்கள் பாவ மன்னிப்பு பெற வேண்டும். ஜெபித்து, ஆண்டவரே! என் பாவங்களை மன்னித்து என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று மன்றாட வேண்டும். இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு அவர் அழிவில்லாத பரலோக வாழ்க்கையைக் கொடுக்கிறார் என்று கிறிஸ்தவ வேதம் சொல்லுகிறது. சிலை வணக்கத்தை நிறுத்திவிட்டு கிறிஸ்து இயேசுவை இன்றே விசுவாசியுங்கள்.

எதை நம்பி வாழுகிறீர்கள்?

“பொருளாதார வீழ்ச்சி” என்ற பேச்சு இன்றைக்கு பத்திரிகைகள் முழுவதும் ஒவ்வொரு நாளும் நாம் காணும் வார்த்தைகளாக இருக்கின்றன. பொருளாதாரப் பின்வாங்குதலால் ஐரோப்பா நிலை குலைந்து நிற்கிறது. கிறீஸ் நாட்டில் ஆரம்பித்து, அயர்லாந்து நாட்டை அசைத்து, இத்தாலியை அடிபணிய வைத்து, பிரான்ஸின் பொருளாதாரத்தைத் தேக்க நிலைக்குள்ளாக்கி, யூரோ கரன்சியைப் பாதித்து, ஐரோப்பிய யூனியனையும் அது வீழ்ந்து விடுமோ என்ற நிலைக்குத் தள்ளியிருக்கிறது இந்தப் பொருளாதார வீழ்ச்சி. நம் இந்தியா இதிலெல்லாம் இருந்து தப்பி நின்றாலும் உலகப் பொருளாதாரப் பாதிப்பு நம்மையும் தொடாமல் இல்லை. அடிக்கடி விலை உயர்வை நாம் பார்க்க வில்லையா? பெட்ரோலிலிருந்து, அரிசி, பருப்பு, பால் என்று விலைகள் ஜுரம் போல உயர்ந்து கொண்டே போவது இந்த உலகப் பொருளாதாரப் பின்வாங்குதலின் காரணமாகத்தான். அமெரிக்காவை இது இன்றைக்கு எந்தளவுக்கு அடிபணிய வைத்திருக்கிறது என்பதையும் நாம் ஒவ்வொரு நாளுந்தான் பத்திரிக்கையில் வாசிக்கிறோமே. பொருளாதாரப் பின்வாங்குதல் வேலையில்லாமையை உயர்த்தி விடும், பண வீக்கத்தை ஏற்படுத்தும், ரூபாயின் மதிப்பைக் குறைத்துவிடும், வங்கிகளை செயலிழக்கச் செய்யும், தொழிலகங்களை மூடவும் செய்துவிடும். கேட்பதற்கே பயங்கரமாக இருக்கிறதில்லையா? இதைத் தான் இன்றைக்கு உலக நாடுகளில் பல அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. இது இப்படியே தொடர்ந்தால் பேராபத்துத்தான் காத்திருக்கிறது. சுனாமியை இந்த நூற்றாண்டில் பார்த்துவிட்டோம், இனிப் பார்க்கப் போவது பொருளாதார சுனாமியாக இருக்குமோ, யாருக்குத் தெரியும்? எப்படி, யாரால் இது நடந்தது என்ற கேள்விகளை விமர்சகர்கள் அன்றாடம் கேட்டு ஆராய்ந்து அரசாங்கங்கள் மீதும், அரசியல்வாதிகள் மீதும், தொழிலதிபர்கள் மேலும் பழியைப் போட்டு வருகிறார்கள். எல்லோரும் சுலபமாக மறந்துவிடுகிற ஒன்று என்ன தெரியுமா? இதற்குப் பின்னால் இருந்து தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துக்கொண்டிருக்கும் நம்மைப் படைத்த கடவுளுக்கும் இதற்கும் தொடர்பு இருக்கின்றதென்பதுதான்.

நம்மைப் படைத்த கடவுள் ஒரு நோக்கத் தோடுதான் நம்மைப் படைத்திருக்கிறார். அதாவது, அவரை நாம் மதித்து நடந்து மகிமைப்படுத்த வேண்டும் என்பதே அந்த நோக்கம். நம்மை அவர் படைத்தபோது ஆடு, மாடுகளைப் போலப் படைக்காமல் அவரோடு நாம் தொடர்பு வைத்திருக்கும்படியாக என்றைக்கும் அழியாத ஆவியோடு படைத்தார். அதை நாம் மிருகங்களிலும், பறவைகளிலும் பார்க்க முடியாது. நம் ஆவிக்கு என்றும் அழிவில்லை. அது தெரியுமா உங்களுக்கு? நாம் இறந்த பிறகு, நாம் வாழ்ந்த நிலையைப் பொருத்து அது கடவுள் இருக்குமிடத்தைப் போய்ச் சேரும் இல்லாவிட்டால் என்றைக்கும் அழியாத நரகத்தில் இருந்து வதைபடும். கடவுள் ஏற்படுத்தி வைத்திருக்கும் இந்த நியதியை எவரும் மாற்ற முடியாது. உயிரோடு இருக்கிறபோது நாம் எப்படி வாழ்கிறோம் என்பதுதான் நம்முடைய ஆவியின் எதிர்கால நிலையை நிர்ணயிக்கப்போகிறது. ஆனால், மனிதன் அதைப் பொருட்படுத்துவதில்லை. பணக்காரனாக இருந்த ஒரு மனிதன் தான் வாழ்ந்த காலத்தில் பெரிய அநியாயங்களைச் செய்து கடவுளைப்பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் வாழ்ந்து இறந்தபின் நரகத்துக்குப் போனான். அங்கேயிருந்து தாங்க முடியாத அக்கினியில் வாடுகிறபோது அவனுக்கு பரலோகத்தில் தனக்குத் தெரிந்த கடவுளை நம்பிய லாசரு என்ற பிச்சைக்காரன் சந்தோஷமாக வாழ்வது தெரிந்தது. உடனே அவன் கடவுளோடு பேச ஆரம்பித்தான். கடவுளே! யாரையாவது நீங்கள் உலகத்துக்கு அனுப்பி நாம் செய்யும் பாவம் நம்மை நரகத்தில் வாட வைத்துவிடும் என்ற செய்தியை என் குடும்பத்துக்கு சொல்லச் செய்யுங்கள் என்று மன்றாடினான். அதற்கு பதிலளித்த கடவுள், ஒருமுறை இங்கு வந்தபிறகு எவரும் உலகத்துக்கு திரும்பிப் போகமுடியாது. அங்கிருக்கிறவர்களுக்கு நான் ஏற்கனவே கொடுத்திருக்கிற வேத வார்த்தைகளைப் படித்து அவர்கள் திருந்தி வாழ வேண்டும். அது மட்டுமே அவர்களுடைய ஆவியின் விடுதலைக்கு வழி காட்டுகிறது என்று சொன்னார். இதுவரை நான் விளக்கிய இந்தக் கதையை கிறிஸ்தவ வேதத்தில் வாசிக்கிறோம் (லூக்கா 16:19-31).

பார்த்தீர்களா, நாம் இந்த உலகத்தில் வாழ்கிறபோது எப்படி வாழ்கிறோம் என்பதில் கடவுள் அக்கறை காட்டுகிறார். நாம் கடவுளை மதிக்காமல் வாழ்கிறபோது அதற்கான பலனை அடைந்தே தீருவோம். நாம் பார்த்த கதையில் வந்த பணக்காரனுக்கு பணம் மட்டுமே பெரிதாக இருந்தது. அவனுக்கு ஆத்மீக அக்கறையே இருக்கவில்லை. கடவுளை
மதித்து வாழவேண்டும் என்ற எண்ணமும் இருக்கவில்லை. கடவுளை அறிந்துகொள்ள உதவும் கடவுளுடைய வேதம் அவனிடம் இருந்தபோதும் அதை வாசிக்க அவனுக்கு அக்கறையிருக்கவில்லை. பணத்துக்காகவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும் மட்டுமே வாழ்ந்த அவன் இறுதியில் நரகத்தை அனுபவிக்க நேர்ந்தது. கடவுள் பேச்சை நாம் கேட்டு நடக்க வேண்டும் என்று அவனுடைய வாழ்க்கை நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது. கடவுளின் வார்த்தையை நாம் வாசித்து அவரை அறிந்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறது அவனுடைய வாழ்க்கையின் முடிவு. அதேபோலத்தான் உலகப் பொருளாதாரப் பின்வாங்குதலும் நமக்கு ஒரு பெரிய எச்சரிக்கை விடுக்கிறது. பொருளாதார வளர்ச்சியிலும், பணத்தைக்குவிப்பதிலும் நாடுகள் நாட்டம் காட்டி அவற்றில் மட்டும் நம்பிக்கை வைக்கும்போது மனிதர்களின் நம்பிக்கைகளைத் தவிடுபொடியாக்கி விடுகிறார் நம்மைப் படைத்த கடவுள். உலகப் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்து நான் இருக்கிறேன், என்னை நோக்கிப் பார்! என்று அறைகூவலிடுகிறார் கடவுள். உங்கள் நம்பிக்கை பணத்திலும், இந்த உலக வாழ்க்கை தரும் சுகத்திலும் இருக்கக் கூடாது. கடவுளின் ஒரே குமாரனாகிய, நமக்கு பாவ விடுதலை அளிக்கக்கூடிய இயேசு கிறிஸ்துவில் மட்டுமே இருக்க வேண்டும். உலக சுகத்தில் நம்பிக்கை வைத்து நரகத்துக்குப் போக வழி ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். வேதத்தை வாசித்து இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வையுங்கள். உங்கள் பாவங்களுக்காக இயேசு கிறிஸ்துவிடம் மன்னிப்புக் கேட்டு அவர் இலவசமாக தரும் நித்திய வாழ்க்கையை காலந்தாழ்த்தாமல் பெற்றுக்கொள்ளுங்கள்.