உங்களால் முடியும் ஊழலை ஒழிக்க!

“இரவிலே வாங்கினோம் சுதந்திரம், இன்னும் விடியவேயில்லை” என்றெழுதினான் ஒரு தமிழ்நாட்டுக் கவிஞன். இந்தியாவின் ஒட்டுமொத்தப் பிரச்சனைகளையும் இரண்டே வரிகளில் கொட்டித்தீர்த்திருக்கிறது அவனுடைய பேனாமுனை. ஊழல் பிரச்சனை நம் நாட்டில் பெரிய பிரச்சனைதான். அதை இல்லாமலாக்க எல்லோருக்கும் விருப்பமிருக்கிறது. ஆனால் வழிதான் தெரியவில்லை. ஊழலை மையமாக வைத்து வெள்ளித்திரையில் ‘இந்தியன்’ படத்தைக் காட்டிப் பார்த்தும் ஊழலை ஒழிக்க முடியவில்லை. ஊழல்கள் மலிந்த சினிமா உலகம் ஊழலுக்கு எதிராக படத்தை எடுத்து பணம் பண்ணிவிடுகிறது. என்ன விசித்திரம்! இன்றைக்கு அன்னா ஹசாரே பற்றித்தான் பத்திரிகை முழுவதும் வாசிக்கிறோம். காந்தியைப்போல உடைதரித்து ஊழலுக்கு எதிராக போர்க்கொடி எழுப்பியிருக்கிறார் இந்த மனிதர். ஊழலை இவர் ஒழிக்கப் போகிறாரா? அல்லது ஊழல் இவரை ஒழிக்கப் போகிறதா? யாருக்குத் தெரியும். எப்படிப் பார்த்தாலும் இன்றைக்கு எல்லாருக்கும் மெல்லுவதற்கு கிடைத்திருக்கும் அவல் ஊழல்தான்.

என்னடா, ஊழல் பற்றிய அக்கறையில்லாதது போல் இப்படி எழுதியிருக்கிறானே என்று நினைக்கிறீர்களா? உண்மையில் ஊழல் மட்டுமல்ல அதைப்போன்ற எத்தனையோ பாவங்களையும் நான் வெறுக்கத்தான் செய்கிறேன். வீட்டிலிருந்து ஆபிஸுக்குக் கூட நிம்மதியாகப் போக முடியாதபடி வழியில் மரித்து காரணமில்லாமல் காசு வசூலிக்கும் போலீஸ்காரரில் இருந்து, காசு கொடுத்து வாங்கிய ரிசர்வேஷன் இரயில் டிக்கெட் இருந்தும் நம் நம்பருள்ள சீட்டை இன்னொருவருக்கு அதிக காசுக்கு விற்றுவிடும் ரெயில்வே ஆபிசர்வரை நம் சொந்த நாட்டிலேயே நம்மை சிறைவைத்திருக்கும் ஊழலை யாரால் வெறுக்காமல் இருக்க முடியும். அதை நான் வெறுக்கவே வெறுக்கிறேன். ஊழலை வெறுப்பதால் மட்டும் ஊழல் இல்லாமல் போய்விடுமா? ஊழலைப் பற்றி பேசினாலோ, எழுதினாலோ, போராட்டம் நடத்தினாலோ அல்லது கடுமையான லோக்பால் சட்டம் கொண்டு வந்தாலோ ஊழல் போய்விடுமா? அன்னா ஹசாரேயால் மட்டும் ஊழலை அழித்துவிட முடியுமா? ஊழல் எங்கிருந்து வந்தது? மனிதனை அதை செய்ய வைப்பது எது? என்றெல்லாம் இன்னும் நாம் கேட்க ஆரம்பிக்காமல் இருப்பதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? இல்லை, இன்னும் கேட்கவில்லை. எனக்குத் தெரியும். பொறுமையாக நான் சொல்லப்போவதை வாசியுங்கள்.

ஊழல் உலகத்தில் தானாகத் தோன்றிவிடவில்லை. அது நம்மைப் பிடித்திருக்கும் ஒரு நோய். ஒவ்வொரு இந்தியனிலும் ஊழல் நோய் ஏதோவொரு விதத்தில் இருக்கிறது. ஊழலே செய்யாத இந்தியனை இந்தியா பார்த்ததில்லை. கோடிக்கணக்கில் பணத்தைப் பலர் வாரிக்கொட்டிக் கொண்டுள்ள 2ஜீ ஸ்பெக்டிரம் ஊழலைப் பற்றியும் அதைச் செய்தவர்களைப் பற்றியும் நாள் முழுவதும் பெரிதாகப் பேசி விடுகிறீர்கள். ஆனால், லைசென்ஸ் இல்லாமல் வண்டியோட்டுகிற உங்கள் ஊழல் உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. ஆபீஸ் நேரத்தைத் திருடி சொந்த வேலைகளைச் செய்வதும், போலிஸ்காரன் இல்லாத ஒன் வே பாதையில் தைரியமாக வண்டியோட்டுவதும், சொந்த மனைவிக்குத் தெரியாமல் தண்ணியடிப்பதும், பணத்தை செலவழிப்பதும், நாள் முழுவதும் பொய் சொல்லுவதும், சொன்ன வார்த்தைகளை மதித்து நிறைவேற்றாமல் இருப்பதும் உங்களுக்கு ஊழலாகத் தெரியவில்லை. என்னடா, இப்படிப் போட்டு உடைக்கிறானே! என்று உணர்ச்சிவசப்படுகிறீர்களா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஊழல் எங்கிருந்து வருகிறது? கிறிஸ்தவ வேதம் சொல்லுகிறது, “நம்முடைய இருதயம் திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாக இருக்கிறது” (எரேமியா 17:9) என்று. இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? நாம் தீங்கை மட்டுமே செய்யக்கூடிய இருதயத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதுதான். அந்தவிதமான இருதயத்தோடுதான் நாம் பிறந்திருக்கிறோம். பிறப்பிலிருந்தே நாம் கேடானவர்கள். வானத்தில் இருக்கும் நம்மைப் படைத்தவர் கண்களுக்கு இந்த உலகத்தில் ஒருவருமே நீதிமானாகத் தெரிவதில்லை. அதற்குக் காரணம் நாம் தீங்கானவர்களாக இருப்பதுதான். பிறப்பிலிருந்தே ஒவ்வொரு மனிதனின் இருதயமும் தீங்கானவையாகவே இருக்கின்றன. இப்போது தெரிகிறதா ஊழலுக்கு என்ன காரணமென்று? ஊழல் போக வேண்டுமானால் நாம் மாற வேண்டும், நம்முடைய இருதயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். வேறு வழியேயில்லை. ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் உங்களுடைய இருதயத்தை மாற்றக்கூடிய வல்லமை உங்களுக்கோ அல்லது உலகத்தில் இருக்கும் எந்த மனிதனுக்கோ இல்லை. கல்வி அறிவும், நல்ல போதனைகளும் நம் இருதயத்தை மாற்றும் வல்லமையைக் கொண்டிருக்கவில்லை. அதனால்தான் நம் நாட்டில் காந்தி பிறந்திருந்தும், திருக்குறள் இருந்தும், ஆத்திசூடி முதல் ஔவையார் எழுதிய நல்ல கருத்துள்ள நூல்கள் இருந்தும் மனிதன் தொடர்ந்து ஊழல்வாதியாக இருக்கிறான்.

உங்கள் இருதய மாற்றத்திற்கு என்ன வழி என்று நீங்கள் கேட்பீர்கள். அதற்கு வழி நம்மைப் படைத்த கடவுளிடம் தான் இருக்கிறது. அவரே அதற்கு வழி செய்திருக்கிறார். அது என்ன தெரியுமா? அவர் மனிதனாக இந்த உலகத்தில் பிறந்து நாம் செய்த கேடுகள், செய்து கொண்டிருக்கின்ற கேடுகள், செய்யப்போகின்ற கேடுகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக தம்மில் தாங்கி தம்மையே நமக்காக இரத்தப்பலி கொடுத்திருக்கிறார். என்றும் பரிசுத்தராக இருக்கின்ற கடவுளின் முன் அவருடைய நியாயஸ்தலத்தில் குற்றவாளிகளாக இருக்கும் உங்களுக்கு விடுதலை கொடுக்கத்தான் கடவுள் இப்படிச் செய்திருக்கிறார். அதனால்தான் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பாவிகளுக்காக தன்னைப் பலியாகக் கொடுத்தார் என்று கிறிஸ்தவ வேதம் சொல்லுகிறது (ரோமர் 5:6). கேடானவர்களாக, ஊழல்வாதிகளாக, குற்றஞ்சாட்டப்பட்டு நிற்கும் உங்களால் நீதியான காரியங்களை வாழ்க்கையில் சுயமாக செய்ய முடியாமலிருக்கிறது. நீதியைச் செய்யக்கூடியவர்களாக இயேசு கிறிஸ்துவால் மட்டுமே உங்களை மாற்ற முடியும். பரிசுத்தமில்லாத, குற்ற உணர்வுள்ள உங்களுடைய இருதயத்தைப் பாவமே இல்லாத பரிசுத்தரான இயேசு கிறிஸ்துவால் மட்டுமே மாற்ற முடியும். உங்கள் இருதயம் மாற்றப்பட்டாலொழிய ஊழல் போக வழியில்லை. பரிசுத்தரான இயேசு பரிசுத்தமில்லாத உங்களைப் பரிசுத்தப்படுத்த தன் சொந்த இரத்தத்தை சிலுவையில் செலுத்தி மரித்திருக்கிறார். உங்கள் பாவங்களை முழுவதுமாகக் கழுவி கடவுள் முன் நீதியானவர்களாக உங்களை நிறுத்தும்படியாக அப்படி செய்திருக்கிறார்.

நீதியானதை மட்டுமே வாழ்க்கையில் செய்ய வேண்டும், ஊழல்வாதியாக வாழ விருப்பமில்லை, நான் மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் நீங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களுடைய பாவ விடுதலைக்காக சிலுவையில் மரித்தார் என்பதை உணர்ந்து உங்களுடைய பாவங்களுக்காகவும், கேடுகளுக்காகவும் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் பாவி, என்னை மன்னியும் ஆண்டவரே! பாவங்களைச் செய்யும் என் இருதயத்தை மாற்றும் ஆண்டவரே! என்று அவரிடம் மன்றாடி ஜெபம் செய்வீர்களானால் அவர் உங்களுடைய பாவங்களை மன்னித்து உங்கள் இருதயத்தில் குடிபுகுந்து உங்களைப் பரிசுத்தப்படுத்துவார். ஊழல் செய்யாமல் வாழ முதலில் நீங்கள் நீதியைச் செய்யும் இருதயத்தை இயேசுவிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்துவால் உங்கள் இருதயம் மாற்றப்படுவதுமட்டுமல்ல அதை இயேசுவே இனி ஆள வேண்டும். இயேசு ஆளுகின்ற இருதயத்தைக் கொண்டிருந்தால் மட்டுமே அவருடைய கட்டளைகளை நீதியாக உங்களால் நிறைவேற்ற முடியும். ஒரு இந்தியனுடைய இருதயம் இயேசுவால் மாறி இயேசு அதில் குடிபுகுகிறபோது அந்த இந்தியனில் ஊழலுக்கு முடிவுகட்டப்படுகிறது. அவன் இனி கடவுளின் பார்வையில் ஊழல்வாதியாக நிற்காமல் நீதிமானாக நிற்பான். அந்த இந்தியனாக ஏன் நீங்கள் இருக்கக்கூடாது? ஊழல் கூடாது என்கிற உங்களுடைய ஊழல் செய்யும் இருதயம் மாற வேண்டாமா? உங்களுக்கும் பிரயோஜனமில்லாமல், உங்கள் சொந்த மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் முன்னும் உண்மையோடு வாழமுடியாமல் வைத்திருக்கும் ஊழல் மலிந்த உங்கள் இருதயத்தை இயேசு மாற்றத் தயாராக இருக்கிறார். அவரை இன்றே ஆண்டவராக ஏற்று நீதி செய்யும் இருதயத்தைப் பெற்று ஊழலுக்கு முடிவுகட்டுங்கள்.