கிறிஸ்தவனின் தனித்துவமான குணாதிசயங்கள்

கிறிஸ்தவனின் தனித்துவமான குணாதிசயங்கள் – The Distinguishing Traits of a Christian

கார்டினர் ஸ்பிரிங் (Gardiner Spring)

The Distinguishing Traits of a Christian-1இந்தக்காலத்தில் வெளியிடப்படும் நூல்களின் தொகை (ஆங்கிலத்தில்) அதிகம். ஒரே விஷயத்தைப் பற்றி புதிய புதிய எழுத்தாளர்கள் புதுக்கோணத்தில் எழுதி வருகிறார்கள். அவற்றில் நிச்சயம் வாசிக்க வேண்டியவையும் உண்டு. வெளியிடப்படும் நூல்கள் எல்லாவற்றையுமே வாங்கவோ, வாசித்துவிடவோ முடியாது. தரமான நூல்களை வாசிக்காமல் இருக்க முடியாது. என் நண்பனொருவன் வாசிக்கவே பிறந்திருக்கிறான். நல்ல வாசிப்பாளி; வாசிப்பவற்றை மனதில் நிறுத்திக்கொள்ளும் திறமையுள்ளவன். நான் வேகமாக வாசிப்பவனில்லை. நேரமெடுத்து வாசிப்பதே என் பழக்கம். டாக்டர் லொயிட் ஜோன்ஸ் அந்தவகையைச் சேர்ந்தவர் என்பதை அவருடைய எழுத்தில் வாசித்து அறிந்திருக்கிறேன்.

தவிர்க்கக்கூடாத, வாசிக்க வேண்டிய நூல்கள் என்றிருக்கின்றன. எத்தனைப் புதிய நூல்கள் வந்தாலும் இந்நூல்கள் காலத்துக்கும் தொடர்பவை; சிறந்த கிறிஸ்தவ இலக்கியங்கள். அத்தகையவற்றை அறிமுகப்படுத்துவதே என் நோக்கம். இது பலவருடங்களுக்கு முன் நான் வாசித்த நூல். இன்றும் அதன் பிரதி என் நூல்களின் மத்தியில் இருக்கிறது. அவசியம் வாசிக்கவேண்டிய நூல்கள் என்ற என் பட்டியலில் இது நிச்சயம் இடம் பெறும். அது கார்டினர் ஸ்பிரிங் (Gardiner Spring) எழுதிய ‘கிறிஸ்தவனின் தனித்துவமான குணாதிசயங்கள்’ (The Distinguishing Traits of a Christian) என்ற நூல். இந்த நூல் எழுதப்பட்டது 19ம் நூற்றாண்டில் (1813ல்). இருந்தும், இன்றும் தொடர்ந்து அச்சில் இருந்து வருகிறது. இணையத்திலும் இலவசமாக வாசிக்கும் வசதியிருக்கிறது. அநேகருடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு இது பேருதவி புரிந்திருக்கிறது. கார்டினர் ஸ்பிரிங்கைப் பற்றிச் சொல்லிவிட்டு அதற்குப் பிறகு நூலைப்பற்றி விளக்குகிறேன்.

அமெரிக்காவைச் சேர்ந்த கார்டினர் ஸ்பிரிங் 1785ல் பிறந்தார். 1808ல் சட்டம் படித்து சட்டத்தரணியாகப் பணிபுரிந்தார். கர்த்தரின் அழைப்பை உணர்ந்து இறையியல் கற்று 1810ல் நியூயோர்க் நகரில் பிரஸ்பிடீரியன் சபைப் போதகராக அறுபத்திமூன்று வயதில் தான் இறக்கும்வரை பணிபுரிந்தார். அவருடைய ஊழியப்பணிக்காலத்தில் பரிசுத்த ஆவியானவர் அவருடைய பிரசங்கத்தை அதிகமாகப் பயன்படுத்தி எழுப்புதலை ஏற்படுத்தினார். பிரின்ஸ்டன் இறையியல் கல்லூரியின் போர்ட் அங்கத்தவராக 1809ல் நியமனமான ஸ்பிரிங் ‘பிரசங்க மேடையின் வல்லமை’ என்ற நூலையும் எழுதினார். அந்நூல் இறையியல் கல்லூரியில் கற்பவர்களை போதகஊழியத்தில் அனுபவம் பெற்றவர்களோடு ஒப்பிட்டு ஆராய்கிறது. அந்நூலின் சாரம்சமே, அனுபவமுள்ள மெய்ப்போதகர்களின் கீழ் வளருகிறவர்கள் மட்டுமே நல்ல திறமையான போதகர்களாக முடியும் என்பதுதான். ஸ்பிரிங் வேறு சில நூல்களையும் எழுதியிருக்கிறார். அவர் 1873ல் இறைவனடி சேர்ந்தார்.

கார்டினர் ஸ்பிரிங்கின் நூல் முக்கியமானது. கிறிஸ்தவர்களுக்கும், திருச்சபைக்கும் பெரிதும் துணைபுரிந்திருக்கும் நூல் இது. எத்தனையோ காலங்களுக்கு முன்னால் எழுதப்பட்டிருந்தபோதும், இன்றைய சூழ்நிலைக்கு அத்தனை பொருத்தமானதாக நூலின் போதனைகள் அமைந்திருக்கின்றன. அதற்குக் காரணம் கார்டினர் ஸ்பிரிங் வேத அடிப்படையில் கிறிஸ்தவத்தை விளக்கியிருப்பதுதான். காலத்துக்குக் காலம் தன்னை உருமாற்றிக்கொள்ளுவதல்ல கிறிஸ்தவம். காலங்கள் மாறினாலும், சமுதாயமும், கலாச்சாரமும் மாறினாலும், மதநம்பிக்கைகள் மாறினாலும் மெய்க்கிறிஸ்தவ போதனைகள் என்றும் மாறாதவை. இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து நிற்கும், வெறும் உணர்ச்சிவசப்படுதலையும், கலாச்சாரத்துக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொண்டிருக்கும், ஆவியின் பிரசன்னமில்லாத உப்புச்சப்பற்ற ‘கிறிஸ்தவத்தை’ இந்நூல் நிச்சயம் தோலுரித்துக் காட்டுகிறது.

நூலின் ஆரம்பத்தில் மெய்க்கிறிஸ்தவமல்லாத, கிறிஸ்தவத்தின் பெயரில் தோற்றமளித்துக்கொண்டிருக்கும் ஆவியற்ற மதநம்பிக்கையை விளக்குகிறார் ஸ்பிரிங். ஏழு அடையாளங்களைத் தெளிவாக விளக்கி எது மெய்க்கிறிஸ்தவமல்ல என்று படம்பிடித்துக் காட்டுகிறார். இவற்றைமட்டும் நம்பித் தங்களைக் கிறிஸ்தவனாக எண்ணிக்கொண்டிருக்கிறவர்களை எச்சரிக்கிறார் ஸ்பிரிங். சுவிசேஷத்தைக் கேட்டு, இடுக்கமான பாதையில் காலெடுத்து வைத்து, பரலோகத்துக்குரிய மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் கொண்டிருப்பதே மெய்க்கிறிஸ்தவம். அது ஆவியானவரால் நம்மில் நிகழும் அற்புதம். அதற்குக்குறைவான எதுவும் கிறிஸ்தவமாகாது என்பதை கார்டினர் ஸ்பிரிங் வலியுறுத்துகிறார். தவறான எண்ணங்கள் ஒருவரைத் தவறான வழியில் அழைத்துச் சென்று தவறான வாழ்க்கையை வாழவைத்துவிடுகின்றது என்பதை ஸ்பிரிங்கின் விளக்கங்கள் தெளிவுபடுத்துகின்றன. விசாலமான பாதை கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்து, மனதுக்கு இதமூட்டினாலும், அதுவல்ல ஒருவரை பரலோகத்துக்கு அழைத்துச் செல்வது. அந்தவகையில் விசாலமான பாதையை நம்பி அதில் வீறுநடை போட்டுக்கொண்டிருப்பவர்கள் எத்தனைப் பரிதாபகரமானவர்கள் என்பதை இந்த ஏழு போலிக்காரணிகளும் சுட்டிக்காட்டுகின்றன. இந்த எச்சரிப்பு எத்தனை அவசியமாக இருக்கின்றது இன்று. இந்த ஏழு போலிக்காரணிகளும் எது மெய்யான கிறிஸ்தவமல்ல என்பதை விளக்குவதோடு, மெய்யான கிறிஸ்தவத்தின் மெய்த்தன்மையை நாம் விளங்கிக்கொள்ளுவதற்கும் உறுதியான அத்திவாரமிடுகின்றன; நம்மை சிந்திக்க வைக்கின்றன.

அந்தக்காலத்துப் பிரசங்கிகளிடம் ஆத்துமாவின் உணர்ச்சிகளுக்கு தூபம்போட்டு, நளின வார்த்தைகளால் போலி ஆசீர்வாதங்களை அள்ளித்தெளிக்கும் வழக்கம் இருக்கவில்லை என்பதை கார்டினர் ஸ்பிரிங்கின் எழுத்தில் பார்க்கிறோம். ஆத்துமாக்களைக் கவருவது அவருடைய நோக்கமல்ல; ஆவிக்குரிய விஷயத்தை சிந்திக்கவைக்கவே அவர் முயலுகிறார். அவரைப்பொறுத்தவரையில் ஆவிக்குரிய விஷயமென்பது வாழ்வுக்கும், சாவுக்கும் இடைப்பட்ட விஷயம். அதில் விளையாட்டுக்கும், கேளிக்கைக்கும் இடமில்லை. இயேசுவைப் போலவும், பவுலைப்போலவும் ஆத்துமாக்களின் இருதயத்தை சத்தியத்தால் ஊடுருவிச் சிந்திக்கவைக்கிறார் கார்டினர் ஸ்பிரிங். ஆவிக்குரியவிதத்தில் ஒருவரை இருதயப் பரிசோதனையில் ஈடுபட வைக்கின்றன அவருடைய வார்த்தைகள்.

அதையடுத்து மெய்க்கிறிஸ்தவம் எது என்பதை விளக்க ஆரம்பிக்கிறார் கார்டினர் ஸ்பிரிங். மெய்க்கிறிஸ்தவத்தை அடையாங்காட்டும் பதினொரு காரணிகளை அவர் அருமையாக விளக்குகிறார். ‘கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன், அதனால் நான் கிறிஸ்தவன். வேறு எதுவும் எனக்கு அவசியமில்லை. நான் பூரணமானவனாயில்லாவிட்டாலும், அடிக்கடி பாவங்களைச் செய்துவிட்டாலும், குறைகள் கொண்டவனாக இருந்தாலும், தொடர்ச்சியான மனந்திரும்புதலைக் கொண்டிராவிட்டாலும், கீழ்ப்படிவில்லாதிருந்தாலும், இயேசு என்னைக் கைவிடமாட்டார். என் விசுவாசத்தைப்பற்றிக் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கவும், பரிசோதிக்கவும் நான் அனுமதிக்க மாட்டேன்’ என்று ஒருவித குருட்டு நம்பிக்கையின் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு கார்டினர் ஸ்பிரிங்கின் நூல் சம்மட்டி தலையில் இறங்கியதுபோல்தான் இருக்கும். அவர் விளக்குகின்ற, கிறிஸ்தவத்தை அடையாளப்படுத்தும் அறிகுறிகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த அடையாளங்கள் கடுமையானதாக இருப்பதாக அவர்கள் சொல்லுவார்கள் என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை. எதைச் செய்தாவது, எதைச் சொல்லியாவது ஒருவனை எப்படியாவது ஞானஸ்நானம் எடுக்கவைத்து பரலோகத்துக்குள் நுழைத்துவிடவேண்டும் என்று தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் சுவிசேஷப்பிரசங்கிகளுக்கும் கார்டினர் ஸ்பிரிங்கின் வார்த்தைகள் புரியாது. ஆனால், உண்மை கசக்கத்தான் செய்யும்; அறுவைச் சிகிச்சை நோகத்தான் செய்யும். இயேசுவின் மலைப்பிரசங்க வார்த்தைகளைவிட்டு ஒரு சொட்டும் விலகாமல் கார்டினர் ஸ்பிரிங் விளக்கியிருக்கும் உண்மைகள் நம் தோலைக்கூடத் தொட்டு உரசாத அனுபவங்களை நாடுபவர்களுக்கு மிளகாயைக் கடித்ததுபோலத்தானிருக்கும். ஆனால், அவையே பரலோக நிச்சயத்திற்கு ஒருவரை வழிகாட்ட முடியும்.

வெறும் பல மணிநேர ஜெபத்தையும், தியானத்தையும், ஓடியாடிச் செய்யும் சேவையையும் மட்டும் பரிசுத்தவாழ்க்கைக்கு அடையாளங்களாகக் கருதிக் கொண்டிருக்கும் தற்கால ‘இயேசுவுக்குத் தீர்மானம் எடுக்கும்’ கூட்டத்துக்கு கார்டினர் ஸ்பிரிங் மெய்க்கிறிஸ்தவத்திற்கு அடையாள அறிகுறிகளாக வலியுறுத்தும், சுவிசேஷத்தாழ்மை, சுவிசேஷக் கீழ்ப்படிவு, சுயவெறுப்பு, உலகத்தைத் துறந்துவாழ்தல், தொடர்ச்சியான மனந்திரும்புதல் போன்ற ஆவிக்குரிய விஷயங்கள் இடுக்கமானவையாக, சிறைவாசத்துக்கு ஒப்பானவையாகத்தான் தெரியும். ஆனால் இவை இல்லாத கிறிஸ்தவத்துக்கும் எனக்கும் சம்பந்தமேயில்லை என்ற இயேசுவின் போதனைகளை எப்படி மறுக்க முடியும்? பரலோக வாழ்க்கையை அடைவதற்கான வழிமுறைகளாக கார்டினர் ஸ்பிரிங் இவைகளைக் காட்டவில்லை; பரலோக வாழ்க்கையை அடைந்திருப்பவர்களின் அறிகுறிகளாகத்தான் அவர்களில் இவற்றை எதிர்பார்க்கிறார். இவை கிருபை நிகழ்ந்திருப்பதற்கான அடையாளங்களே தவிர கிருபையை அடைவதற்கானவையல்ல.

கார்டினர் ஸ்பிரிங் (1785-1873) அவருக்கு முன் வாழ்ந்திருந்த அமெரிக்காவின் மிகச்சிறந்த சிந்தனையாளரும், பிரபல பிரசங்கியுமாயிருந்த ஜொனத்தன் எட்வர்ட்ஸ் (1703-1758) ஏற்கனவே எழுதியிருந்த ‘ஆவிக்குரிய உணர்வுகள்’ (Religious Affections) என்ற நூலை அடிப்படையாகக் கொண்டே தன்னுடைய ஆக்கத்தை வரைந்திருக்கிறார். எட்வர்ட்ஸின் நூலே இதை எழுத கார்டினர் ஸ்பிரிங்கைத் தூண்டியிருக்கிறது. எட்வர்ட்ஸின் அழிவற்ற ஆக்கத்தின் அருமையான சத்தியங்களை வாசித்துப் புரிந்துகொள்ளக்கூடியவிதத்தில் எளிமையான ஆங்கிலத்தில் தனித்துவத்தோடு தந்திருக்கிறார் கார்டினர் ஸ்பிரிங்.

கார்டினர் ஸ்பிரிங்கின் நூலை அடிப்படையாகக்கொண்டு, அதன் அரைவாசிப்பகுதியைப் பயன்படுத்தி ‘யார் மெய்க்கிறிஸ்தவன்’ என்ற தலைப்பில் ஓர் ஆக்கத்தை ஆங்கிலத்தில் வரைந்திருக்கிறார் ஜெரமி வோக்கர். அதைத் தமிழாக்கி உங்களுக்குத் தந்திருக்கிறோம். ஆங்கிலத்தில் கார்டினர் ஸ்பிரிங்கின் நூலை வாசிக்க முடியாதவர்களுக்கு ஜெரமி வோக்கரின் ஆக்கம் ஆசீர்வாதமாக இருக்கும். இதை வாசித்துவிட்டு ஆங்கிலத்தில் இருக்கும் ஸ்பிரிங்கின் நூலையும் பெற்று வாசியுங்கள். நிச்சயம் உங்களுக்கு அது பயனளிக்கும். எந்தக்காலத்திலும் மெய்க்கிறிஸ்தவம் தலையெடுத்து நிற்க இதைப் போன்ற நூல்களை நாம் வாசிப்பது அவசியம்.

கார்டினர் ஸ்பிரிங்கின் ஆங்கில நூல் இணையத்தில் இலவசமாக வாசிக்கும்படி இருக்கிறது (PDF). இணைய நூலுக்கு அல்பர்ட் என். மார்டின் முகவுரை எழுதியிருக்கிறார். நூலை அமேசோன் (Amazon) வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம். வேறு பதிப்பகத்தார்களும் அதை விற்பனை செய்கிறார்கள். ஜெரமி வோக்கரின் ஆக்கத்தை வாசிக்க இங்கே அழுத்தவும்.

Holiness, J C Ryle

Holiness, J C Ryle – Evangelical Press, Darlington DL3 0PH. UK

Holiness, J C Ryle – The Banner of Truth, Edinburgh, UK

Holiness - 3dபரிசுத்தத்தைப் (Holiness) பற்றி எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான ஆங்கில நூல்கள் இருக்கின்றன. அவற்றில் எத்தனையோ நூல்கள் அருமையானவை. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பட்டியலில் பத்துக்கு மேல் சட்டென்று பெயர் சொல்லக்கூடிய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் முதலிடத்தைப் பிடிக்கக்கூடிய நூல் எது என்று சிந்திக்க ஆரம்பித்தால் அது கொஞ்சம் தலைசுற்றக்கூடிய விஷயந்தான். அந்தளவுக்கு நல்ல நூல்கள் இருக்கின்றன. இவற்றில் பழைய எழுத்தாளர்களும், புதியவர்களும் எழுதிய நூல்கள் அடங்கும்.

இருந்தபோதும், இந்த ஆவிக்குரிய விஷயத்தில் என் கண்முன் எப்போதும் நிற்கின்ற ஒரு நூல் ஜே. சி. ரைல் என்பவரால் எழுதப்பட்ட பரிசுத்தம்தான் (Holiness). முதலில் ரைலைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறேன். இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆங்கிலிக்கன் பிரிவைச் சேர்ந்த சபையின் போதகராக இருந்தார். அந்தக்காலத்தில் ஆங்கிலிக்கன் பிரிவு திருச்சபை வேதத்திற்கு முரணான வித்தியாசமான பாதையில் போக ஆரம்பித்திருந்தது. அதற்கு மத்தியில் தெளிவான சுவிசேஷ விசுவாசத்தோடு வேதசத்தியங்களை மட்டும் விசுவாசித்து பிரசங்கித்து தனியொருவராக இக்கட்டுகளுக்கு மத்தியில் பணிபுரிந்திருந்தவர் ஜே. சி. ரைல். ஒவ்வொரு காலப்பகுதியிலும் திருச்சபை வெவ்வேறான சத்தியப்போராட்டங்களைச் சந்திக்க நேரிடும். அந்தவகையில் ரைலும் அத்தகைய போராட்டங்களைச் சந்திக்க நேர்ந்தது. ஒரு சீர்திருத்த பாப்திஸ்து என்ற முறையில் ரைலின் சபைக் கோட்பாடுகளில் நமக்கு ஒத்த கருத்து இல்லாவிட்டாலும் இரட்சிப்பு மற்றும் பரிசுத்த வாழ்க்கை பற்றிய வேதரீதியிலான சீர்திருத்த, பியூரிட்டன் போதனைகளின் அடிப்படையில் ரைல் ஸ்பர்ஜனைப்போன்ற நம்பிக்கைகளைக் கொண்டிருந்ததால் அவரை நம்மவர்களில் ஒருவராகத்தான் நினைக்கிறேன்.

jcryle2பரிசுத்தம் (Holiness) என்ற இந்த நூலை ரைல் எழுதுவதற்கு காரணங்கள் இருந்தன. அதை ரைலே நூலின் முன்னுரையில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். பரிசுத்தத்தைப் பற்றி இந்நூலை ரைல் எழுதுவதற்கு இறையியல் காரணங்களும், நடைமுறைக் காரணங்களும் இருந்தன. அத்தகைய ஏழு இறையியல் காரணங்களை அவர் விளக்கியிருக்கிறார். ஒருவருடைய இறையியல் நம்பிக்கைகளைப் பொறுத்தே அவருடைய நடைமுறை வாழ்க்கையும், நடவடிக்கைகளும் அமையும். அதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. அந்தவகையில் ரைலினுடைய காலத்தில் பரிசுத்தம் பற்றிய விஷயத்தில் காணப்பட்ட தவறான இறையியல் கோட்பாடுகளே அது பற்றி ரைலை எழுத வைத்தன. இதுவரையிலும் சீர்திருத்த, பியூரிட்டன் பெரியவர்களிடம் காணப்படாத புதிய போதனைகள் பரிசுத்தமாக்குதல் பற்றி உருவாகியிருப்பதை அடையாளங்கண்ட ரைல் கிறிஸ்தவர்கள் அவற்றைப் பின்பற்றித் தவறான வழியில் போய்விடக்கூடாது என்ன ஆதங்கத்துடனும், ஆவிக்குரிய போதக வாஞ்சையோடும் இந்த நூலை எழுதியிருக்கிறார். அப்படி ரைல் கவனித்த அந்த மாறுபாடான கருத்துக்கள் என்ன?

பரிசுத்தமாக்குதலை அடைவதற்கு விசுவாசம் மட்டும் போதுமானது என்று அன்று பரவலாகப் போதிக்கப்பட்டது. எந்தவித விளக்கத்தையும் கொடுக்காமல் ‘விசுவாசம் மட்டுமே’ பரிசுத்தமாக்குதலுக்கு தேவையானது என்று கிளிப்பிள்ளைபோல் கூறுவது வேதபோதனைகளுக்கு முரணானது என்று ரைல் கண்டார். கிறிஸ்துவை அடைய விசுவாசம் மட்டுமே தேவை என்பது சரியானது; ஆனால், பரிசுத்தமாக்குதலுக்கு விசுவாசம் மட்டுமே தேவை என்பது வேத போதனையல்ல. நீதிமானாக்குதலுக்கு விசுவாசம் மட்டுமே தேவை என்று கூறும் வேதம் விசுவாசத்தினால் பரிசுத்தமாக்கப்படுகிறோம் என்று ஓரிடத்திலும் போதிக்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தவிதத்தில் கிறிஸ்தவ வாழ்க்கை பற்றிய தவறான கருத்துக்கள் எழுந்தன. இந்தக் கருத்துக்கள் அடிப்படையில் வேதமும், வரலாற்றுக் கிறிஸ்தவமும் போதிக்கும் கிறிஸ்தவத்தை ஒத்து அமைந்திருக்கவில்லை. இதுபற்றி விளக்குகின்ற தற்காலத்துப் போதகரான மொரிஸ் ரொபட்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

ROBERTS-Maurice_1“நீதிமானாக்குதல் விசுவாசத்தினால் மட்டும் கிடைக்கிறது. ஆனால், பரிசுத்தமாகுதல் விசுவாசத்தோடும், நம்முடைய கிரியைகளோடும் தொடர்புடையது. கிருபையில் வளருவதும், பரிசுத்தமாகுதலும், பரிசுத்தமாகுதலுக்கான நடவடிக்கைகளும் விசுவாசத்தினால் மட்டும் நிகழ்வதில்லை. இது கெஸ்ஸிக் இயக்கம் (Keswick movement) நூறுவருடங்களுக்கு முன்புவிட்ட தவறாக இருக்கிறது. அந்தக் காலத்தில் பிரபல்யமாக இருந்த கெஸ்ஸிக் ஆவிக்குரிய கூட்டங்களில் ஒரு தவறான நம்பிக்கை பின்பற்றப்பட்டது. அதாவது, நாம் விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாகிறோம், அதேபோல் விசுவாசத்தினால் மட்டுமே பரிசுத்தமாகுதலையும் அடைகிறோம் என்பதே அது. கெஸ்ஸிக் கூட்டங்களில் பேசிய சில பிரசங்கிகள் ஒன்றைச் செய்தார்கள். பிரசங்கிக்கப் போகிறவர் தன் கைகள் ஒவ்வொன்றிலும் நாணயத்தை வைத்திருப்பார். அவர் ஒரு கரத்தை முன்னால் நீட்டி விரித்துச் சொல்லுவார், ‘இதோ இருக்கிறது உன்னுடைய நீதிமானாக்குதல். அதை உன்னுடைய விசுவாசத்தினால் மட்டும் வந்து எடுத்துக்கொள். இது இலவசமான கிருபை. இதுதான் உன்னுடைய நீதிமானாக்குதல்’ என்பார். அதேபோல் அவர் மற்ற கையையும் நீட்டி விரித்து சொல்லுவார், ‘இதோ இருக்கிறது உன்னுடைய பரிசுத்தமாகுதல். அதை உன்னுடைய விசுவாசத்தினால் மட்டும் வந்து எடுத்துக்கொள்’ என்பார். இவர் சொன்னதில் முதவாவது சரியானது, ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், இரண்டாவது முழுத்தவறு, ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கமல்ல. நம்முடைய தனிப்பட்ட விசுவாசத்தின் மூலமாக மட்டும் நாம் பரிசுத்தமாகுதலை அடைவதில்லை. விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்படுகிறோம். ஆனால், பரிசுத்தமாகுதல் நம்மில் தொடர்ச்சியாக நிகழ்கின்ற கிருபை. தொடர்ச்சியான பரிசுத்தமாகுதலின் ஒரு பகுதியாக தேவனுடைய வார்த்தையில் விளக்கப்பட்டிருக்கும் ஒழுக்க நியதிக் கட்டளைகளுக்கு அடிபணிந்து அவற்றைப் பின்பற்ற நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.”

விசுவாசத்தைப் பற்றிய ரைலின் காலத்து இந்தப் புதிய விளக்கமே வேறு தவறான போதனைகளுக்கும் வழிகோளியது. அவற்றையும் ரைல் விளக்கியிருக்கிறார். விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்கப்படுவதைப்போலவே சடுதியாக பரிசுத்தமாகுதலும் நிகழ்கிறது என்ற தவறான போதனை, பரிசுத்தமாகுதலில் விசுவாசிக்கு எந்தப் பொறுப்புமில்லை என்றும் அவன் பரிசுத்தமாகுதலுக்கு தன்னைக் கிறிஸ்துவிடம் முழுதாக அர்ப்பணிக்க வேண்டியது மட்டுமே தேவையாக இருக்கின்றது என்று விளக்கங்கொடுப்பதற்கு இடங்கொடுத்தது. இதெல்லாம் வரலாற்றுக் கிறிஸ்தவ விளக்கங்களைவிட அடிப்படையிலேயே மாறுபட்டவை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் காணப்பட்ட இத்தகைய விளக்கங்களே பிற்காலத்தில் பெந்தகொஸ்தே போதனைகள் உருவாகவும் வழிகோளியது. ரைல் இந்தத் தவறான போதனைகளின் ரூபத்தைத் தோலுரித்துக் காட்டி பரிசுத்தம் (Holiness), பரிசுத்தமாக்குதல் (Sanctification) என்றால் உண்மையில் என்ன என்பதைத் தெளிவாகத் தன் நூலில் விளக்கியிருக்கிறார்.

இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழும் நாம் ரைல் சந்தித்த அதே தவறான போதனைகளைத்தான் தொடர்ந்தும் எதிர்கொண்டு வருகிறோம். சீர்திருத்த, பியூரிட்டன் போதனைகளே இந்தத் தவறான போதனைகளை நாம் வேதபூர்வமாக இனங்கண்டுகொள்ள உதவுகின்றன. நீதிமானாக்குதலைப் பற்றியும், பரிசுத்தமாகுதலைப் பற்றியும் தெளிவாகப் புரிந்துகொள்ளாவிட்டால் கிறிஸ்தவ வாழ்க்கையில் தவறான நடைமுறைகளைக் கைக்கொண்டு ஆவிக்குரிய சந்தோஷமில்லாமல்தான் வாழ நேரிடும். ரைலின் காலத்தைப் போலவே இன்றும் ‘பாவத்தோடு போராடி, அதை நம்மில் தொடர்ச்சியாக அழித்து, அதற்கு விலகி நின்று வாழ வேண்டும்’ என்ற சத்தியத்திற்கு ஆபத்து இருந்துவருகிறது. சுலபமாக, பொறுப்புகள் எதுவுமில்லாமல், விசுவாசத்தின் மூலம் மட்டும் ஜெபித்து நம்மைக் கர்த்தருக்கு அர்ப்பணஞ் செய்து வந்தால் பரிசுத்தமாகி விடலாம் என்ற தவறான கருத்து பரவலாக இருந்துவருகின்றது. ஒழுக்க நியதிக் கட்டளைகளைப் (பத்துக் கட்டளைகள்) பின்பற்றிப் பாவத்தை வெறுத்தொதுக்கி வாழவேண்டும் என்ற போதனைகளுக்கு எதிர்ப்பும் இருக்கின்றது. ரைல் தன்காலத்துப் பிரச்சனைகளை மட்டும் அணுகவில்லை; பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே நம் காலத்துப் பிரச்சனைகளுக்குத் தகுந்த பதிலளித்திருக்கிறார். இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு மரித்த மார்டின் லொயிட் ஜோன்ஸ் என்ற வேல்ஸைச் சேர்ந்த போதகர் ரைலின் இந்நூலின் ஒரு பதிப்பிற்கு முன்னுரை வழங்கி தன் காலத்தில் இதன் தேவையைப் பெரிதாகச் சொல்லியிருக்கிறார். அந்தளவுக்கு காலங்களைக் கடந்து தொடர்ந்து இந்நூலின் பயன்பாடு இருந்து வருகிறது.

பரிசுத்தம் (Holiness) என்ற இந்த நூலில் அதன் இருபத்தியோரு அதிகாரங்களில் ரைல் சீர்திருத்தவாத, பியூரிட்டன் வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் போதனைகளைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். இந்த நூல் போதிக்கும் வகையில் வேதபூர்வமான பரிச்சுத்தத்தைத் தன்னில் கொண்டிராத எவருடைய விசுவாசமும் மெய்யான விசுவாசமாக இருக்க முடியாது. இன்றைய காலப்பகுதியில் மேலைத்தேய கிறிஸ்தவம் ரைலின் இந்த விளக்கங்களுக்கு மாறான ஒரு பரிசுத்தமாகுதலை அமைத்துக்கொள்ளப் பார்க்கிறது. அதன் விளைவுகளையும் அது சந்தித்து வருகிறது. ரைலின் போதனைகள் இன்றைக்கு மேலைத்தேய கிறிஸ்தவ சபைகளில் ஆணித்தரமாகப் போதிக்கப்பட வேண்டும். போதகர்கள் தைரியமாக மனித பயமில்லாமல் அதைச் செய்ய வேண்டும். என் நண்பரான ஜிம் சவாஸ்தியோ (Jim Savastio) தன் சபையில் இந்த முழு நூலின் அதிகாரங்களிலும் இருந்து பிரசங்கங்களை அளித்திருக்கிறார். அதைக் கேட்டு வளரும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் அந்த சபை மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

பரிசுத்தமாகுதல் பற்றிய சீர்திருத்த விசுவாசத்தைப் பெருமளவுக்கு அறிந்திராத கீழைத்தேய கிறிஸ்தவத்திற்கு இன்று ரைலின் இந்தப் போதனைகள் தேவை. இவை பொறுமையோடும் கருத்தோடும் சிந்தித்துப் படிக்கவேண்டிய போதனைகள். இவற்றின் முதல் ஏழு அதிகாரங்களிலும் வேத அடிப்படையில் சீர்திருத்த, பியூரிட்டன் விசுவாசத்தின் பரிசுத்தம் பற்றிய போதனைகளை ரைல் அருமையாக விளக்கியிருக்கிறார். ரைல் எப்போதுமே எளிமையாக எழுதுபவர். அது அவரில் காணப்பட்ட ஒரு சிறப்புத்தன்மை. அதேவிதத்தில்தான் அவர் பிரசங்கமும் செய்திருக்கிறார். அதனால் ஆங்கிலத்தில் இருக்கும் இந்நூலை வாசிப்பதில் பலருக்கும் தடையிருக்காது. இந்நூல் பல பதிப்புகள் வெளிவந்து நீண்டகாலம் அச்சில் இருந்து வருகின்றது. பதினைந்துக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் இதனைப் பதிப்பித்து வந்திருக்கின்றன. பிரிட்டனில் இவெஞ்சலிக்கள் பிரஸ் பதிப்பகம் இதை வெளியிட்டது. என்னுடைய சபைப் புத்தக நிலையத்தில் அந்தப் பதிப்பையே விற்பனைக்கு வைத்திருக்கிறோம். இது சுருக்கப்பதிப்பாகவும் வெளிவந்திருக்கிறது. இருந்தபோதும் மூலப் பதிப்பை வாசிப்பதுபோலிருக்காது சுருக்கப்பதிப்புகள். சுருக்கப்பதிப்புகளை வாசிக்கின்றவர்கள் மூலப்பதிப்பை வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்.

ஆங்கில மூலம் அந்தளவுக்கு கடுமையான ஆங்கிலம் அல்ல. பொறுமையோடு வாசிக்கிறவர்கள் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் போதனைகள் இருக்கின்றன. வேத சத்தியங்களான நீதிமானாக்குதல், பரிசுத்தமாகுதல், இரட்சிப்பின் நிச்சயம் போன்றவற்றில் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு அந்த சத்தியங்ளைத் கற்றுக்கொள்ளாததால் நூல் சிறிது கடினமாகத் தெரியுமே தவிர அதன் மொழிநடையில் கடினம் இல்லை.

Dr.-D.-Martyn-Lloyd-Jonesமார்டின் லொயிட் ஜோன்ஸ் 1930ம் ஆண்டில் பழைய புத்தகங்களை விற்கும் ஒரு புத்தகக் கடையில் ரைலின் பரிசுத்தம் நூலைக் கண்டெடுத்தார். அதை வாசித்த அவர், ‘இதற்கு முன்பில்லாததொரு ஆவிக்குரிய திருப்தி இதை வாசித்தபோது எனக்கேற்பட்டது’ என்று கூறியதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து, ‘ரைல் எப்போதுமே வேத அடிப்படையில் விளக்கமளித்து எழுதுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார். அவர் ஒருபோதும் ஒரு கருத்தை உருவாக்கிக்கொண்டு அந்தக் கருத்தை நிரூபிக்க வேதத்தில் அதற்கு ஆதரவளிக்கும் வசனங்களைத் தேடி அலைவதில்லை. அவர் வேதபகுதிகளை எடுத்து அவற்றிற்கு நேரடியாக விளக்கமளிப்பதையே இலக்காகக் கொண்டிருக்கிறார். அவருடைய விளக்கங்கள் சிறப்பானவையும், உயர்தரமானவையுமாகும். அவை எப்போதுமே தெளிவாகவும், தத்துவரீதியாகவும், வேதசத்தியங்களுக்கு விளக்கங்கொடுத்து வழிநடத்துபவையாகவும் இருக்கின்றன. அவருடைய எழுத்துக்கள் எப்போதுமே பலமானவையாக அமைந்து வெறும் உணர்ச்சிபூர்வமான தியான சிந்தனைகள் என்று தள்ளிவிடமுடியாதபடி அமைந்திருக்கும். ரைல் பதினேழாம் நூற்றாண்டு பியூரிட்டன்களின் எழுத்துக் கிணற்றில் அதிகமாகத் தாகந்தீர்த்துக் கொண்டிருந்திருப்பதைக் காண்கிறோம். அவருடைய எழுத்துக்களெல்லாம் பியூரிட்டன் போதனைகளை நவீன வாசகர்களுக்கு நல்ல முறையில் செதுக்கித் தந்தவையாக இருக்கின்றன என்று சொல்லுவது மிகையாகாது’ என்று கூறியிருக்கிறார்.

ரைலின் இந்நூல் ஒவ்வொரு கிறிஸ்தவரும் அவசியம் வாசித்துப் பயன்பெற வேண்டிய நூல். இது உங்களுடைய டெப்லெட்டிலோ அல்லது ஐ பேட்டிலோ இறக்கி வாசிக்கக்கூடிய விதத்தில் ‘கின்டில்’ பதிப்பாகவும் வந்திருக்கிறது.

ரைலின் பரிசுத்தம் (Holiness) நூலை வாங்கி உடனே வாசிக்க ஆரம்பியுங்கள். உங்களுடைய பரிசுத்த வாழ்க்கை நிச்சயம் மேம்படும்.

தாம்பத்திய உறவில் நெருக்கம் – அலன் டன்

தாம்பத்திய உறவில் நெருக்கம்

தாம்பத்திய உறவில் நெருக்கம், அலன் டன், சீர்திருத்த வெளியீடுகள், இந்தியா.

நல்ல நூல்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதில் நான் எப்போதுமே தயங்கியதில்லை. ஒரு முக்கியமான நூலை தமிழ் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் வாசிக்க வேண்டிய அவசியத்தை இங்கு நான் குறிப்பாக விளக்க விரும்புகிறேன். இதுவரை வாசிப்பில் நீங்கள் அக்கறை காட்டியிருந்திராவிட்டால் உங்கள் வழக்கத்தை மாற்றிக்கொண்டு கொஞ்சம் வாசிப்பில் அக்கறை காட்டுங்கள். வாசிப்பே எல்லாமாகி விடாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் வாசிப்பு இல்லாத வாழ்க்கையில் ஆக்கபூர்வமான சிந்தனைக்கு வழியில்லை என்பதும் எனக்குத் தெரியும். வாசிப்பு அவசியமில்லையென்றால் நம்மைப் படைத்தவர் நமக்கு வேதத்தைத் தந்திருக்க மாட்டார். வாசிப்பு அவசியமில்லையென்றால் பவுல் சிறையில் நூல்களுக்காக அலைந்திருந்திருக்க மாட்டார். வாசிப்பு அவசியம் மட்டுமல்ல வாசிக்க வேண்டியவற்றை வாசிப்பதும் அவசியம். அதற்காகத்தான் இந்த நூலின் முக்கியத்துவத்தைப் பற்றி இங்கே எழுதுகிறேன்.

என் நல்ல நண்பரான அலன் டன் என்ற அமெரிக்க போதகர் 2009ல் ‘Gospel Intimacy in a Godly Marriage’ என்ற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார். திருமண வாழ்க்கையைப் பற்றி ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான நூல்கள் இருந்தபோதும் இன்னொரு நூல் அவசியமா என்ற கேள்வி எழும். அந்தக் கேள்விக்கு இந்த நூலுக்கு மதிப்புரை தந்துள்ள மதிப்புக்குரிய ஜொயல் பீக்கி (Joel Beeke) என்ற போதகரும், நூலாசிரியரும் நல்ல பதிலளித்துள்ளார். அவருடைய பதில் இதுதான் – ‘இறையியல் போதனைகளின் அடிப்படையில் ஆழமாக மணவாழ்க்கையையும் அதில் இருக்க வேண்டிய நெருக்கத்தையும் விளக்குகின்ற அலன் டன்னின் நூல் நான் வாசித்திருக்கும் நூல்கள் அனைத்திலும் சிறந்ததென்றே கூறுவேன். உடன்படிக்கையின் அடிப்படையில் கிறிஸ்து தன்னுடைய சபையோடு கொண்டிருக்கும் ஆழ்ந்த இரகசியமான உறவை திருமணத்தின் மூலம் பவுல் விளக்குவதை, மணவாழக்கை பற்றி என் வாழ்நாளில் நான் வாசித்திருக்கும் ஒரு டஜன் நூல்களில் இந்த நூலே மிகவும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதாக இருக்கின்றது . . . உங்களுடைய மணவாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்களானால் உடனடியாக அலன் டன்னின் நூலை வாங்கி வாசியுங்கள். அத்தோடு ஒரு டஜன் நூல்களைப் பணம் கொடுத்து வாங்கி மற்றவர்களுக்கும் கொடுங்கள்.’ சமீபத்தில் நான் நண்பர் அலன் டன்னை சந்தித்தபோது இதைவிடப் பெரிய மதிப்புரையை யாரும் ஒரு நூலுக்கு கொடுக்க முடியாது என்று அவரிடம் சொன்னேன். அதற்குக் காரணம் போதகரும், நூலாசியருமான ஜொயல் பீக்கி இந்த வார்த்தைகளை சாதாரணமாக எழுதவில்லை என்பதால்தான்.

இறையியலறிஞர் பீக்கியின் வார்த்தைகள் மெய்யானவை. அந்தளவுக்கு கிறிஸ்துவுக்குள்ளான சுவிசேஷ அன்பின் அடிப்படையில் அலன் டன் மணவாழ்க்கை பற்றி இந்நூலில் விளக்கி எழுதியுள்ளார். அதனால்தான் இந்நூலைத் தமிழ் வாசகர்கள் வாசித்துப் பயனடையும்படியாக தமிழில் ‘தாம்பத்திய உறவில் நெருக்கம்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டோம். அதை வாங்கி வாசித்து அதிர்ந்து போய் மணவாழ்க்கையில் இவ்வளவு இருக்கின்றதா என்று கேட்டவர்கள் உண்டு.

தமிழில் மணவாழ்க்கை பற்றி விளக்கும் ஒரு சில நூல்கள் இருந்தபோதும் இந்தளவுக்கு வேதம் மணவாழ்க்கை பற்றி விளக்கும் சத்தியங்களை இறையியல்பூர்வமாக ஆழமாகவும், வசனபூர்வமாகத் தெளிவாக விளக்கியும், அதேநேரம் நடைமுறைக்குப் பயனளிக்கும் வகையிலும் எழுதப்பட்ட நூல்கள் இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும். அதனால்தான் இந்த நூல் தமிழில் மணவாழ்க்கை பற்றிய முக்கியமான கிறிஸ்தவ நூலாக இருக்கின்றது.

நம்முடைய இனத்தின் கலாச்சாரப் பாதிப்பால் கிறிஸ்தவர்கள் மத்தியில் திருமணமும், மணவாழ்க்கையும் இன்னும் விடுதலை பெறாமல் இருப்பதை உங்களில் அநேகர் உணர்வீர்கள். கிறிஸ்துவை விசுவாசித்த போதும் கிறிஸ்துவின் ஆளுமை மணவாழ்க்கையை ஆக்கிரமிக்காமல் இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். வெறும் சடங்காக கிறிஸ்தவர்கள் மத்தியில் இன்றைக்கும் மணவாழ்க்கை இருந்து வருகிறது. அதில் அன்பில்லை, ஜெபம் இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. அதெல்லாம் ஓரளவுக்கு இருக்கத்தான் செய்கிறது. கிறிஸ்தவர்கள் வேத போதனைகளின் அடிப்படையில் மணவாழ்க்கையைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதில்லை என்றுதான் சொல்ல வருகிறேன். கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதைத் தவிர மணவாழ்க்கையைப் பற்றி நம்மினத்தவர்களுக்கு என்ன தெரிந்திருக்கிறது? கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களைத் திருமணம் செய்துகொள்வதால் மட்டும் பவுலின் போதனைகளின் அடிப்படையில் சிறப்பான மணவாழ்க்கை அமைந்துவிடுமா? அப்படி இருந்துவிட்டால் அலன் டன்னின் நூலுக்கும், ஜொயல் பீக்கி அது பற்றி சொல்லியிருக்கும் வார்த்தைகளுக்கும் மதிப்பில்லாமலும் அவசியமில்லாமலும் போய்விடுமே.

அலன் டன்னின் இந்த நூலில் மணவாழ்க்கையைப் பற்றி அப்படி என்னதான் சிறப்பான விளக்கங்கள் இருக்கின்றன என்று கேட்பீர்கள். அதை நான் விளக்கத்தான் வேண்டும்.

அ. நூலாசிரியர் நேரடியாக மணவாழ்க்கை பற்றிய நடைமுறைப் பயன்பாட்டிற்குள் நுழைந்துவிடாமல் முதலில் மணவாழ்க்கை பற்றிய அடிப்படை வேத போதனைகளை ஆராய்கிறார்.

மணவாழ்க்கை என்றதுமே அதை எப்படி நடத்த வேண்டும் என்ற முறையில் எழுதப்பட்ட சில நூல்களையே நாம் தமிழில் காண்கிறோம். மணவாழ்க்கை நடைமுறை சம்பந்தப்பட்டதாக, சமுதாய உறவு பற்றியதாக இருந்தபோதும் அதைக் கடவுளோடு தொடர்புபடுத்தி விளக்கியெழுதப்பட்ட நூல்கள் தமிழில் இல்லை. தன்னுடைய நூல் எந்த அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை நூலாசிரியர் அலன் டன் விளக்குகிறார் – ‘நான் மணவாழ்க்கையை வேதம் பெருமளவுக்கு விளக்கும் கடவுள், படைப்பு, வீழ்ச்சி, மீட்பு ஆகிய பெரும் போதனைகளின் பின்னணியிலேயே காண்கிறேன். படைப்பு, மீட்பு ஆகியவற்றின் அடிப்படையில் மணவாழ்க்கையில் ஈடுபடப்போகிறவர்களைப் பற்றி நான் விளக்கிய பிறகுதான் அந்த மணவாழ்க்கையின் நெருக்கத்திற்கு எதிரான மிகப்பெரும் சவாலாகிய பாவத்தைப் பற்றி நான் விளக்கியிருக்கிறேன். நம்முடைய மணவாழ்க்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் பாவத்தை சுவிசேஷம் மட்டுமே எதிர்கொள்ள முடியும். அதனால்தான் நாம் மணவாழ்வில் ஒருவருக்கொருவர் சுவிசேஷ அன்பை எப்படிக் காட்ட வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.’

முதல் நான்கு அத்தியாயங்களில் கடவுள், படைப்பு, வீழ்ச்சி, மீட்பு ஆகிய வேத போதனைகளுக்கும் மணவாழ்க்கைக்கும் இடையில் உள்ள பிரிக்க முடியாத தொடர்பை ஆசிரியர் விளக்குகிறார். இந்தப் பகுதி மிகவும் முக்கியமானது. மணவாழ்க்கை கடவுளின் சிந்தையில் உருவானது மட்டுமன்றி அதற்கு எந்தளவுக்கு கடவுள் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதை இந்தப் பகுதி புரிய வைக்கிறது. வாசகர்கள் நிச்சயம் இத்தகைய விளக்கங்களைத் தமிழில் வாசித்திருக்க மாட்டீர்கள். அந்தளவுக்கு அலன் டன் வேத விளக்கங்களை ஆராய்ந்து தந்திருக்கிறார்.

நூலாசிரியர் அலன் டன் கிறிஸ்தவ மணவாழ்க்கையின் நெருக்கத்திற்கு எதிரான பெரும் எதிரியாக பாவத்தைக் காண்கிறார். அது முற்றிலும் உண்மை. பாவமே அனைத்திற்கும் எதிரி. அந்தப் பாவத்தோடுதான் நாம் சாகும்வரை போராட வேண்டிய கடமை இருக்கிறது. நம்மில் எல்லாப் பகுதிகளையும் பாதிக்கும் பாவம் மணவாழக்கையையும் பாதிக்கும். எல்லா விஷயங்களிலும் நமக்கு கிறிஸ்துவில் இருக்கும் சுவிசேஷ அன்பைக்கொண்டே பாவத்தை எதிர்க்கிறோம். அதேபோல் மணவாழ்க்கையிலும் சுவிசேஷ அன்பைக் கொண்டே பாவத்தை அழித்து நெருக்கத்தை அனுபவிக்க முடியுமென்று அலன் டன் விளக்குகிறார். வேத இறையியலின் அடிப்படையில் கிறிஸ்தவ மணவாழ்க்கையை ஆசிரியர் அணுகியிருக்கும் முறையே இந்நூலின் விசேஷ தன்மையாகும்.

ஆ. கடவுள், படைப்பு, வீழ்ச்சி, மீட்பு ஆகியவற்றின் அடிப்படையில் மணவாழ்க்கையை விளங்கிக்கொள்வதால் மட்டுமே நடைமுறையில் பக்திவிருத்தியை மணவாழ்க்கையில் அனுபவிக்க முடியும் என்று ஆசிரியர் நம்புகிறார்.

இதையும் அவரே பின்வருமாறு விளக்குகிறார், ‘கடவுள், படைப்பு, வீழ்ச்சி, மீட்பு ஆகிய வேத போதனைகளே நம்மைப் பற்றிய உண்மை நிலையை அறிந்துகொள்ள உதவுகின்றன. கடவுளே எல்லாவற்றிற்கும் அடிப்படை அர்த்தத்தை அளிக்கிறார். ஆதியில் தேவன் இருந்தார் . . . என்ற ஆதியாகமத்தின் இந்த வசனங்கள் நமக்கு கடவுளின் படைப்பை  அறிமுகப்படுத்துகின்றன. நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டோம். பின்பு நாம் பாவிகளானோம். பாவத்தால் நாம் மரணத்தை சம்பாதித்துக்கொண்டோம். இரட்சிப்பு கிருபையின் மூலமாக மட்டுமே, விசுவாசத்தின் மூலமாக மட்டுமே, கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே நமக்குக் கிடைக்கிறது.’

‘இந்த உண்மைகளின் அடிப்படையில் நம்மைப் பற்றி நாம் சிந்திக்க விரும்பாவிட்டால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறவர்களாகி விடுவோம். இந்த உண்மைகள் நமக்கு வேதபூர்வமான உலகக் கண்ணோட்டத்தை அளிக்கின்றன. இந்தக் கண்ணோட்டம் நாம் யார் என்பதையும், நாம் ஏன் இங்கிருக்கிறோம் என்பதையும், நமக்கு என்ன நடந்திருக்கிறது என்பதையும், நம்மை சரிப்படுத்திக் கொள்வது எப்படி என்பதையும் அறிந்துகொள்ள துணை செய்கின்றது.’

ஆசிரியரின் விளக்கம் உண்மையானதுதான். ஒருவருடைய வாழ்க்கைக் குறிக்கோள் பணம் சம்பாதிப்பது மட்டுமே என்றிருந்தால் அவர் தன் வாழ்க்கையில் அனைத்தையும் அதை முன்னிலைப்படுத்தியே செய்வார், மணவாழ்க்கை உட்பட. ஒருவர் தன் வாழ்க்கையில் கடவுளுக்கு முக்கியத்துவம் தந்தால் அவரும் அவருடைய குடும்பத்தவர்களும் இயேசுவை முன்னிலைப்படுத்தி இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்திற்குரியவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இயேசுவை ஆராதித்து, இயேசுவின் அன்பைப் பகிர்ந்துகொண்டு, சுயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இயேசுவுக்காகவே பக்திவிருத்தியோடு வாழ்வார்கள். இந்நூல் இயேசுவின் சுவிசேஷ அன்பை ஆதாரமாகக் கொண்ட மணவாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஆலோசனை தருகிறது.

இ. நூலின் ஏனைய பயன்பாடுகள்

நூலில் 5ல் இருந்து 8 வரையிலான அதிகாரங்களில் சுவிசேஷ அன்பின் எதிரியைப் படம் பிடித்துக் காட்டி, சுவிசேஷ அன்பு எதிர்நோக்கும் சவால்களை விளக்கி, சுவிசேஷ அன்பை மணவாழ்க்கையில் எவ்வாறு பரிமாறிக்கொள்ளுவது என்று ஆசிரியர் விளக்குகிறார். இந்தப் பகுதியில் மனந்திரும்புதலுக்கும், மன்னிக்கும் இயல்புக்கும் அதிக முக்கியத்துவத்தை ஆசிரியர் கொடுத்திருக்கிறார். சுவிசேஷ அன்பிற்கு எதிரியான பாவத்தை எதிர்நோக்கி வெற்றிக்கொள்ளும்போது ஒவ்வொரு முறையும் மணவாழ்க்கையில் மனந்திரும்புதலுக்கும், மன்னிப்புக்கும் அவசியம் ஏற்படுகிறது. இந்த இயல்புகளை நாம் கிறிஸ்துவில் இரட்சிப்பின் அனுபவத்தின் மூலம் பெற்றுக்கொள்ளுகிறோம். கிறிஸ்தவ மனவாழ்க்கையில் சுவிசேஷ அன்பை வெளிப்படுத்த இவை மிகவும் அவசியமானவை.

கடைசிப்பகுதியான 9லிருந்து 12 வரையிலான அதிகாரங்களில் ஆசிரியர் தாம்பத்திய உறவின் நெருக்கத்திற்கு எதிரான நான்கு சவால்களை இனங்காட்டி அவற்றை எதிர்கொண்டு வெற்றிகாணும் வழிகளை விளக்குகிறார். அதில் முதலாவது, கணவனின் தலைமை வகிக்கும் பொறுப்பு சந்திக்கும் சவால், இரண்டாவது, சுயநலமாகிய சவால், மூன்றாவது வார்த்தைப் பறிமாற்றம் சந்திக்கும் சவால், நான்காவது மரணமாகிய சவால். இதில் மணவாழ்வில் எந்தவிதத்தில் நாம் சுவிசேஷ அன்பை வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஆசிரியர் அழகாக விளக்கியிருக்கிறார். நாம் பொதுவாகவே மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் ஒரு விஷயம் இங்கே மணவாழ்வில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. இருதயத்தின் கோளாறுகள் பேச்சின் மூலமாகவே வெளிப்படுகின்றன என்பதை யாக்கோபு தன் நிருபத்தில் விளக்கியிருப்பது எத்தனை உண்மை. சிந்தித்து, கவனத்தோடு சுவிசேஷ அன்பைப் பேச்சில் காட்டாமல் எவருடைய மணவாழ்க்கையிலும் பக்திவிருத்தியான நெருக்கத்தைக் காணமுடியாது என்கிறார் ஆசிரியர். சுவிசேஷ அன்பின் அடிப்படையிலான வார்த்தைகளை மணவாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்துவது என்று அலன் டன் கூறும் ஆலோசனைகளை அவர் உண்மையிலேயே தன்னுடைய மணவாழ்க்கையில் பயன்படுத்தியிருந்தால் மட்டுமே இந்த முறையில் நூலை எழுதியிருக்க முடியும். ஆசிரியரும் அவருடைய மனைவியாரும் சுவிசேஷ அன்பிலான மணவாழ்க்கைக்கு அருமையான உதாரணமாக அவருடைய சபையில் இருக்கிறார்கள்.

இதற்கு மேலும் நான் தொடர்ந்து இந்நூல் பற்றி விளக்கினால் நீங்கள் நூலை வாசிக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விடும். இந்த நூலை வாசிக்க வேண்டும் என்ற உணர்வை உங்கள் இருதயத்தில் நான் ஏற்படுத்தியிருந்தால் அது எனக்கு சந்தோஷத்தை அளிக்கும். இந்நூல் இதுவரை தமிழகத்தில் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறது. திருமறைத்தீபம் பத்திரிகையில் காணப்படும் முகவரிகளோடோ அல்லது இந்தத் தளத்தில் காணப்படும் இந்திய முகவரியோடோ தொடர்புகொண்டு இந்த நூலை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். வாங்கி வாசியுங்கள். உங்கள் மணவாழ்க்கைக்கு இது துணை செய்யும். வாங்கி புதுமணத் தம்பதிகளுக்கு கொடுங்கள். போதகர்கள் புதுமணத் தம்பதிகளுக்கு திருமண ஆலோசனை வழங்க இதைப் பயன்படுத்தலாம். சபைகள் நிச்சயம் தங்களுடைய மக்களுக்கு இதை அறிமுகப்படுத்துவது அவசியம். இதை வாங்கி வாசித்துப் பயனடைந்தால் நிச்சயம் ஒரு வரி எழுதி உங்கள் கருத்தைத் தெரிவிக்க மறக்காதீர்கள். நன்றி.

சுவிசேஷமும் கர்த்தரின் இறையாண்மையும்

Evangelism and the Sovereignty of God, J I Packer, Inter-varsity Press. Pgs 126

Evangelism 3dஎன்னுடைய படிப்பறை நூலகத்தில் இருக்கும் இந்நூலின் பின்பக்கத்தில் 1986ம் ஆண்டு நான் பின்வரும் குறிப்பை எழுதியிருக்கிறேன், ‘Worth the money spent. This book helped me when I was teaching a group of young men during the 1980’s. It helped resolve many questions the students had in their mind as well as mine. Thank you to Packer for writing this book.’ இந்தக் குறிப்பு பல தடவைகள் நூலை வாசித்த பிறகு எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். 1986ம் ஆண்டுதான் நான் நியூசிலாந்து நாட்டில் வந்திறங்கினேன். இந்த நூலை நான் அதற்கு சில வருடங்களுக்கு முன் வாங்கியிருந்திருக்க வேண்டும். என் கையிலிருக்கும் நூல் 1979ல் வெளிவந்தது. நூல் முதலில் 1961ல் வெளிவந்தது. அதற்குப் பிறகு ஒன்பது தடவைகள் மறுபதிப்பு செய்யப்பட்டிருப்பதில் இருந்தே நூலின் விஷேசத்தை அறிந்துகொள்ள முடிகிறது.

கிறிஸ்தவர்களில் அநேகர் கர்த்தரின் இறையாண்மைக்கும் சுவிசேஷம் சொல்லுவதற்கும் இடையில் உள்ள தொடர்பைக் குறித்து இன்றும் வினாக்களை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானோர் கர்த்தரின் இறையாண்மை சுவிசேஷம் சொல்லுவதற்கு தடையாக இருந்துவிடுகிறது என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய எண்ணமே பொதுவாக நம்மினத்துக் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கின்றது. இந்த எண்ணத்தை சுக்கு நூறாக உடைத்து கர்த்தரின் இறையாண்மைக்கும் சுவிசேஷம் சொல்லுவதற்கும் இடையில் இருக்கும் உறவை அருமையாக விளக்குகிறார் ஜிம் பெக்கர். அநேக வருடங்களுக்கு முன் இதை முதல் முதலாக வாசித்தபோது என்னுடைய வேத சிந்தனைகள் வலுப்பெற இந்நூல் பெரிதும் உதவியது.

‘கர்த்தர் அனைத்திற்கும் பொறுப்பானவராக இருப்பதால் நாம் கையைக் கட்டிக்கொண்டு சுவிசேஷம் சொல்லாமல் இருந்துவிடலாமே. இறையாண்மையுள்ள கர்த்தர் எப்படியாவது தன் ஆடுகளை இரட்சித்துக் கொள்ளுவார்’ என்ற தவறான கருத்து இன்றும் ஒரு கூட்டத்தாரிடம் இருந்து வருகிறது. அத்தோடு, ‘நாம் அதிக ஊக்கமாக சுவிசேஷத்தை முன்னெடுத்துச் சென்றால் கர்த்தர் இறையாண்மை இல்லாதவர் என்றாகிவிடுகிறது’ என்று நினைப்பவர்களும் உண்டு. இந்த இரண்டு கருத்துக்களும் தவறானவை என்பதை சுட்டிக்காட்டி அவற்றிற்கு தர்க்கரீதியான பதிலை வேத ஆதாரத்தோடு தருகிறது இந்நூல்.

முதல் தடவை இதை வாசித்தபோது ஆசிரியரின் பாண்டித்தியத்தை உணர்ந்து மகிழ்ந்தேன். நூலைப் பல முறை வாசித்தேன். இன்றைக்கும் அதை அவசியமானபோது திறந்து வாசிக்காமல் இருப்பதில்லை. சுவிசேஷத்தை சொல்லுகிற காலம் முடிவடைகிறவரை அச்சில் இருக்க வேண்டிய நூலிது.

நூலில் நான்கு அதிகாரங்கள் இருக்கின்றன. முதல் அதிகாரம் கர்த்தரின் இறையாண்மையை விளக்குகிறது. இரட்சிப்பைப் பொறுத்தவரையில் கர்த்தர் இறையாண்மையுள்ளவராக இருக்கிறார் என்பதை இந்த சிறு அதிகாரத்தில் பெக்கர் விளக்குகிறார். இதில் சார்ள்ஸ் சிமியன் என்ற பிரசங்கிக்கும் ஜோன் வெஸ்லிக்கும் இடையில் இந்த விஷயம் சம்பந்தமாக நடந்த சம்பாஷனையைத் தந்திருக்கிறார் பெக்கர். பெக்கரைப் பொறுத்தவரையில், ‘All Christians believe in divine sovereignty, but some are not aware that they do, and mistakenly imagine and insist that they reject it.’ அதற்குத் தவறான ஊகங்களும், இரகசியமானவைகள் பூரண ஞானமுள்ள கடவுளுக்கு மட்டுமே தெரிந்தவை என்பதை ஏற்றுக்கொள்ளாமல் மட்டுப்படுத்தப்பட்ட மனித சிந்தனையை அந்த விஷயங்களில் பயன்படுத்தப் பார்ப்பதுந்தான் காரணம் என்று பெக்கர் விளக்குகிறார்.

நூலின் இரண்டாம் அதிகாரம் மிகவும் சிறப்பானது. இதில் கர்த்தரின் இறையாண்மையையும், மனிதனின் பொறுப்பையும் (Human reponsibility) தெளிவாக Antinomy, Paradox ஆகிய இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை விளக்கி 19 பக்கங்களில் விளக்கந் தந்திருக்கிறார். இந்த நூலை வாசித்தே இந்த உதாரணம் இந்த சத்தியங்களை விளக்க எத்தனை அருமையானது என்பதை முதன் முதலாக நான் உணர்ந்தேன். இதை இன்றும் நான் பயன்படுத்தத் தவறுவதில்லை. Antinomy என்பது, ‘நம் கண்களுக்கு முரண்பாடானதாகத் தோன்றுவது’ என்று அர்த்தம். இந்த உதாரணத்தை இறையியலில் பயன்படுத்தி கர்த்தரின் இறையாண்மை, மனிதனின் பொறுப்பு ஆகிய உண்மைகள் Antinomyயைப்போல நம் கண்களுக்குத்தான் முரண்பாடாகத் தோன்றும் இரு உண்மைகளாக இருக்கின்றனவே தவிர உண்மையில் அவற்றிற்கிடையில் முரண்பாடுகள் இல்லை என்று விளக்குகிறார் பெக்கர். இவை இரண்டும் இரயில் தண்டவாளங்களைப் போல சரிசமமாக வேதத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இரண்டு முரண்பாடில்லாத முற்றிலும் உண்மையான சத்தியங்கள் என்று விளக்குகிறார் பெக்கர். இங்கே தான் ஜீம் பெக்கரின் பாண்டித்தியத்தைப் பார்க்கிறோம். ‘Seemingly irreconcilable, yet both undeniable. There are cognant reasons for believing each of them; each rests on clear and solid evidence; but it is a mystery to you how they can be squared with each other’ என்கிறார் பெக்கர். ‘தெய்வீக இறையாண்மையும், மனிதனின் பொறுப்பும் ஒன்றுக்கொன்று எதிரிகளல்ல. ஒருவருக்கொருவர் முகத்தைச் சுளித்துக்கொள்ளும் பக்கத்துவீட்டுக்காரர்களல்ல; அவர்கள் நண்பர்கள்’ என்று முடிக்கிறார் பெக்கர். இவற்றில் ஒன்றில்லாமல் மற்றதில்லை. ஒன்றை மட்டும் வலியுறுத்தி மற்றதைக் குறைவுபடுத்தக்கூடாது. இரண்டும் உண்மை; இரண்டும் இணைபிரியாமல் வேதத்தில் காணப்படும் உண்மைகள்.

இதற்கடுத்த அதிகாரம் சுவிசேஷம் என்றால் என்ன என்று விளக்கும் அதிகாரம். சுவிசேஷத்தைப் பற்றிய தெளிவான எண்ணங்களைக் கொண்டிருக்க இந்த அதிகாரத்தை வாசிப்பது நல்லது. முதலில் சுவிசேஷத்திற்கான அடிப்படை விளக்கத்தைக் கொடுத்து அதன்பிறகு அந்த சுவிசேஷத்தை சொல்ல வேண்டிய விதத்தை விளக்குகிறார் பெக்கர். சுவிசேஷத்தை சொல்லும்போது அதில் என்னென்ன உண்மைகள் தவறாது இருக்க வேண்டும் என்பதை ஆதாரங்களோடு விளக்குகிறார். சுவிசேஷத்தை சொல்ல வேண்டிய வேதபூர்வமான முறையையும் அவர் விளக்காமலில்லை. சுவிசேஷ ஊழியங்கள் இன்றைக்கு தலைகீழாக மாறிப் போய் அதைப்பொறுத்தவரையில் வேதத்தைப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை என்றிருக்கிறபோது 54 பக்கங்களில் பெக்கர் தந்திருக்கும் விளக்கங்கள் நாவில் தேன் சுரந்ததுபோல் இருக்கிறது; நெஞ்சுக்கு நிம்மதியும் தருகிறது. இது நூலில் இருக்கும் இன்னொரு அருமையான அதிகாரம்.

நூலின் கடைசி அதிகாரம் ‘தெய்வீக இறையாண்மையும் சுவிசேஷமும்’ என்ற தலைப்பைக் கொண்டிருக்கிறது. இதில் இதுவரை சொன்னவற்றையெல்லாம் சுருக்கமாக மறுபடியும் ஒருமுறை பார்ப்பதோடு தெரிந்துகொள்ளுதல், தெரிந்துகொள்ளப்படாதவர்கள், வரையறுக்கப்பட்ட கிருபாதாரபலி ஆகியவை பற்றி வாசகர்களுக்கிருக்கும் சந்தேகங்களையெல்லாம் களைந்து இறுதியில் சுவிசேஷம் நமக்கு எத்தகைய நம்பிக்கையை அளிக்கிறது என்று விளக்கி நூலை ஒரு முடிவுக்கு கொண்டு வருகிறார் பெக்கர்.

எத்தனையோ நூல்கள் இந்த விஷயங்களைப் பற்றி விளக்கி இன்றைக்கு ஆங்கிலத்தில் வெளிவந்திருந்தபோதும் 52 வருடங்களுக்கு முன் ஜிம் பெக்கர் எழுதிய இந்த நூல் நேற்று எழுதியதுபோல் இன்றைய பிரச்சனைகளுக்கும் முகங்கொடுத்து சுவிசேஷம் அறிவிக்கும் பேரூழியத்தின் அவசியத்தையும் அதோடு தொடர்புடைய விஷயங்களையும் மனநிறைவு தரும்வகையில் வேதபூர்வமாக விளக்குகிறது. நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை – இதை வாசிக்காதவர்களுக்குத்தான் தாங்கள் இழப்பது என்னவென்று தெரியாமலிருக்கிறது என்பேன்.

மீட்பு: நிறைவேற்றமும், நடைமுறைப்படுத்தலும்

Redemption: Accomplished and Applied, John Murray, The Banner of Truth, Pgs 192.

redemption 3dபேராசிரியர் ஜோன் மரே ஸ்கொட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். பல வருடங்களாக அமெரிக்காவில் வெஸ்ட்மின்ஸ்டர் இறையியல் கல்லூரியில் வரையறுக்கப்பட்ட இறையியல் (Systematic Theology) பாடத்தைக் கற்றுக்கொடுத்தவர். அவரெழுதிய நூல்களில் ஒன்றுதான் Redemption: Accomplished and Applied. இந்த ஆங்கில நூலை நான் பல தடவைகள் வாசித்திருக்கிறேன். இன்றைக்கும் அதன் பக்கங்களை நான் அவசியமானபோது திறக்கமாலிருந்ததில்லை.

இந்நூல் கிறிஸ்துவின் மீட்பாகிய வேத சத்தியத்தை விளக்குகிறது. அதாவது, தனக்கு நியமிக்கப்பட்ட மீட்பாகிய பணியைக் கிறிஸ்து பிதாவின் கட்டளைக்கிணங்கி மனித உருவேற்று எவ்வாறு நிறைவேற்றினார் என்பதையும், அந்த மீட்பின் பலன்களாகிய கிருபைகள் எந்தவகையில் பிதாவால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியின் கிரியையால் நடைமுறையில் நிறைவேற்றப்படுகிறது என்பதையும் இந்நூல் விளக்குகிறது.

நூலின் முதல் பாகம் மீட்பின் நிறைவேற்றத்தைப் பற்றியது. அதில் ஐந்து அதிகாரங்கள் இருக்கின்றன. அதன் இரண்டாம் பாகம் மீட்பின் பலன்களைப் பற்றியது. அதில் பத்து அதிகாரங்கள் இருக்கின்றன. இரண்டாம் பாகத்தில் விளக்கப்பட்டிருக்கும் மீட்பின் பலன்களையே ‘இரட்சிப்பின் படிமுறைகள்’ என்று கூறுவார்கள்.

பேராசிரியர் மரே இந்நூலில் மீட்போடு தொடர்புடைய ஒவ்வொரு சத்தியத்தையும் வேத ஆதாரங்களோடு மிகத் தெளிவாக ஆரம்பம் முதல் எழுதியிருக்கிறார். அவசர அவசரமாக வாசித்து முடித்துவிடக்கூடிய நூலல்ல இது. நூலில் ஒவ்வொரு வாக்கியமும் சிந்தித்துப் படிக்க வேண்டியவை. அந்த வாக்கியங்களில் அடங்கியிருக்கும் உண்மைகள் பெரிது. வார்த்தைகளையும், வாக்கியங்களையும் கவனத்தோடு பேராசிரியர் மரே பயன்படுத்தியிருக்கிறார். சத்தியத்தை தெளிவாகக் குழப்பமில்லாமல் விளக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டியிருக்கிறார்.

என் கையில் இரண்டுவிதமான பதிப்புகள் இருக்கின்றன. பல வருடங்களுக்கு முன் நான் வாங்கிய நூல் 1979ல் வந்த பேனர் ஆவ் டுருத் பதிப்பு. அது 192 பக்கங்களைக் கொண்டது. இப்போது இதை மறுபடியும் இந்தப் பதிப்பகத்தார் அழகிய முறையில் வெளியிட்டிருக்கிறார்கள்.

சத்தியத்தை சத்தியமாக தெளிவாக விளக்குகிற, எழுதுகிறவர்களில் முக்கியமானவராக நான் பேராசிரியர் மரேயைக் கருதுகிறேன். ஏதாவது ஒரு சத்தியத்தில் விளக்கம் தேவையானால் பேராசிரியர் மரே என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம் என்று அவருடைய நூல்களைப் புரட்ட என் கை தவறியதில்லை. அந்தளவுக்கு அவருடைய விளக்கங்களுக்கு நான் மதிப்புத் தருகிறேன். இதற்காக அவருடைய ஞானஸ்நானத்துக்கான விளக்கத்தை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன் என்று அர்த்தமல்ல. அது போன்ற சிலதைத் தவிர்த்து ஏனைய இறையியல் விளக்கங்களில் அவருடைய தெளிவைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். எதையும் சுருக்கமாக அதேவேளை தெளிவாக வேத வசனங்களைத் தந்து விளக்குவதில் அவர் மன்னர்.

கிறிஸ்து யாருக்காக மரித்தார்? என்ற வேத வினாவுக்கு பதிலளிப்பதில் அநேகர் குழப்பத்தை உண்டாக்குவார்கள். பேராசிரியர் மரேயிடம் அதைப் பார்க்க முடியாது. மரே சொல்லுவதை வாசியுங்கள், ‘Did Christ come to make the salvation of all men possible, to remove obstacles that stood in the way of salvation, and merely to make provision for salvation? Or did he come to save his people? Did he come to put all men in salvable state? Or did he come to secure the salvation of all those who are ordained to eternal life? Or did he come effectively and infallibly to redeem?’ இப்படிப் பல அவசியமான தவிர்க்கமுடியாத வினாக்களை எழுப்பும் மரே அவற்றிற்கு என்ன பதில் சொல்லுகிறார் தெரியுமா? ‘The doctrine of the atonement must be radically revised if, as atonement, it applies to those who finally perish as well as to those who are the heirs of eternal life. In that event we should have to dilute the grand categories in terms of which the Scripture defines the atonement and deprive them of their most precious import and glory. This we cannot do’ என்று ஆணித்தரமாகக் கூறுகிறார் மரே. தொடர்ந்து அவர், ‘The saving efficacy of expiation, propitiation, reconciliation, and redemption is too deeply embedded in these concepts, and we dare not eliminate this efficacy.’ கிறிஸ்து சிலுவையில் மரித்தது பிதாவினால் தெரிந்துகொள்ளப்பட்டு அவருடைய கையில் கொடுக்கப்பட்டவர்களுக்காக மட்டுமே என்பதை ஆணித்தரமாக விளக்கும் மரே அதற்கு இந்தப்பகுதியில் யோவான் 6:38-39 ஆகிய வசனங்களை உதாரணங் காட்டுகிறார். ‘கிறிஸ்து நிறைவேற்றிய மீட்பில் மீட்கப்படுகிறவர்களின் பாதுகாப்பும் அடங்கியிருக்கிறது’ என்கிறார் மரே. ‘அதனால் யாருக்காக மீட்பு தீர்மானிக்கப்பட்டதோ, உருவாக்கப்பட்டதோ, நிறைவேற்றப்பட்டதோ இறுதியில் நடைமுறையில் எவர்களுக்குக் கொடுக்கப்படுகிறதோ அவர்களுக்கு மட்டுமே மீட்பின் பலன் சொந்தமானது’ என்கிறார் மரே.

கிறிஸ்து யாருக்காக மரித்தார்? என்பதை நாம் சென்டிமென்டலாகப் பார்க்கிறபோதுதான் பிரச்சனை உருவாகிறது. அதெப்படி கிறிஸ்து சிலருக்காக மரிக்காமல் போகலாம்? என்ற கேள்வி சென்டிமென்டல் கேள்வி. பரலோகத்துக்கு ஒருவன் போகாமலிருந்தால் அவன் பாவத்தில் இருந்து மனந்திரும்பாத ஒரே காரணத்தால்தான் அங்கு போகாமல் இருக்கிறான் என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது. மனந்திரும்புகிற எவருமே பரலோகம் போகாமல் இருந்ததில்லையே. பரலோகம் போகிற எல்லோருக்காகவும் கிறிஸ்து நிச்சயமாக மரித்திருக்கிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. பரலோகம் போகாதவர்களுக்காக அவர் மரித்திருக்க முடியாது. இதையெல்லாம் அருமையாக வேத ஆதாரங்களோடு பேராசிரியர் மரே இந்த நூலில் விளக்கியிருக்கிறார். இவை தவிர இரட்சிப்பின் படிமுறையில் காணப்படும் கிருபைகள் ஒவ்வொன்றையும் – திட்ப உறுதியான அழைப்பில் ஆரம்பித்து, மகிமைப்படுத்தப்படுதல் வரையும் அத்தனையையும் அவர் அருமையாக விளக்கியிருக்கியிருக்கிறார். Regeneration, Faith and Repentance, Justification ஆக்கங்கள் அருமையிலும் அருமை.

சில வேளைகளில் ‘என்னடா இந்த நூல் சின்னதா இருக்கே’ என்று நூலில் பக்க எண்ணிக்கையை மட்டும் பார்த்து நூலைக் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. பேராசிரியர் மரேயின் எழுத்தின் சிறப்பே சுருங்கக் கூறி விளங்க வைப்பதுதான். அவர் தன் வாழ்நாளில் அதிகமாக எழுதித் தள்ளியிருக்கவில்லை. ஆனால், எழுத்தியிருப்பவையெல்லாம் தங்கக் கட்டிகள் என்றுதான் சொல்லுவேன்.

இந்த நூல் ஒரு நாள் வாசித்துவிட்டு வைத்துவிட வேண்டிய நூலல்ல. தொடர்ந்து அடிக்கடி வாசித்து சிந்தித்து சத்தியத்தில் வளர உதவும் நூலிது. ஆங்கிலத்தில் இதை வாசிக்க முடிந்தவர்கள் தவறாது வாசிக்க வேண்டிய தவிர்க்கக் கூடாத நூலிது. இத்தகைய நூல்களை வாசித்து சிந்திக்கிறவர்கள் நம்மத்தியில் வளருகிறபோதுதான் விடிவு நம்மினத்துக்குக் கிறிஸ்தவத்துக்கு வரும்.

இதை நூலாக மட்டுமல்லாமல் இணையத்தில் கின்டில் மூலம் டெப்லெட்டிலோ, ஐபேட்டிலோ இறக்கி வாசிக்கக் கூடிய வசதியும் இருக்கிறது.