நூல் மதிப்பீடு

பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர் – ஆர். பாலா

தற்கால தமிழ் கிறிஸ்தவத்தில் தேடித் திரிந்தாலும் கிடைக்காத ஆவிக்குரிய சத்தியங்களில் ஒன்று, பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவரைக் குறித்த உபதேசம். போதகர் பாலா அவர்களின் ‘சிக்கலான வேதப் பகுதிகள்’ குறித்த தொடர் போதனைகளின் வாயிலாக முதல் முறையாக இதனைக் குறித்துக் கேள்விப்பட்டபோது,  பழைய ஏற்பாட்டில் பரிசுத்த  ஆவியானவரா? என்று நான் ஆச்சரியப்பட்டது உண்மையே!  அதற்குக் காரணம், சீர்திருத்த போதனைகளோடு பரிச்சயம் ஏற்படுவதற்கு முன்னால் கால சகாப்தக் கோட்பாட்டுத் தத்துவங்களை விளக்கப்படங்கள் மூலம் படித்து அறிந்து வைத்திருந்ததின் பாதிப்பு என்று பின்பே அறிந்து கொண்டேன். பரிசுத்த ஆவியானவரை பெந்தேகோஸ்தே நாளோடும், அந்நிய பாஷை வரத்தோடும் மட்டுமே தொடர்புபடுத்தி அறிந்து வைத்திருந்த என் குருவி மூளைக்கு அவரைக் குறித்த விசாலமான அறிவைத் தந்தது போதகர் பாலா அவர்களின் போதனை. அதுவே இன்று நூல் வடிவில் நமது கைகளில் கிடைத்திருப்பது கர்த்தரின் அளப்பெரிய கிருபை!

இந்நூலில், பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளை ஆராய்ந்து விளக்கும் ஆசிரியர், முதல் அத்தியாயத்தின் ஆரம்பத்தில் திரித்துவ தேவனின் பிரிக்கமுடியாத உள்ளியல்பு குறித்த சத்தியத்தோடு ஆரம்பித்து இருப்பதே பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள் குறித்த பாதிக் குழப்பங்களுக்கு விடையளிப்பதாக இருக்கிறது. அதாவது மானுட மீட்பின் வரலாற்றில் துவக்கம் முதல் முடிவுவரை ஒரே விதமாக செயல்படும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள் குறித்து இன்று காணப்படும் பல தவறான கருத்து வேறுபாடுகளுக்கு அடிப்படைக் காரணம், பிரித்துப் பார்க்கக் கூடாத திரித்துவ தேவனின் உள்ளியல்புகளை பிரித்துப் பார்ப்பதே, என்பதைத் திட்டவட்டமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமின்றி மீட்பின் வரலாறு என்பது படைப்பு துவங்கி கிறிஸ்துவின் இரண்டாம் வருகைவரையில்  தொடருவதாக இருப்பதாலும், பழைய ஏற்பாட்டைவிட புதிய ஏற்பாட்டிலேயே பரிசுத்த ஆவியானவரைக் குறித்த சத்தியங்கள் அதிகமாகக் காணப்படுகின்றதாலும் இத்தகைய குழப்பங்கள் ஏற்படுகின்றன என்றும் ஆசிரியர் விளக்குகிறார்.

அடுத்தபடியாக பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளைக் குறித்து இன்று காணப்படும் பல தவறான போதனைகளுக்குக் காரணமாக இரண்டு முக்கிய காரியங்களை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

  1. வேத இறையியலை முறைப்படுத்தப்பட்ட இறையியலில் இருந்து முற்றாகப் பிரித்தல்.
  2. பெந்தகோஸ்தே நாளின் முக்கியத்துவத்தை உணராமலிருப்பது.

இந்த இரண்டு  முக்கியமான காரணங்களையும் வேத வசனங்களின் மூலமாக ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார். வேத இறையியல் மற்றும் முறைப்படுத்தப்பட்ட இறையியல் குறித்த விளக்கங்களை முதல் முறையாக வாசிப்பவர்களும் கூடப் புரிந்து கொள்ளும் வகையில் எளிய முறையில்  விளக்கியிருப்பது மிகவும் அருமை.

இரண்டாம் அத்தியாயத்தில், பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளைக் குறித்து இன்று பரவலாகக் காணப்படும் சில தவறான வாதங்களை முன்வைத்து (பரிசுத்த ஆவியானவரின் மூன்றுவிதமான கிரியைகள்), அவை எந்த விதத்தில் வேதத்தின் அடிப்படைப் போதனைகளில் இருந்து மாறுபடுகிறது என்பதையும், பழைய ஏற்பாட்டு விசுவாசிகளும் புதிய ஏற்பாட்டு விசுவாசிகளைப் போலவே மறு பிறப்பைப் பெற்றிருந்தார்கள் என்பதற்கான சான்றுகளையும், விளக்கங்களையும் ஆசிரியர் தந்துள்ளார்.

மிகவும் சவாலான இந்த பகுதியை நூலாசிரியர், ஒரு தேர்ந்த வழக்கறிஞரைப் போல மிகவும் திறமையாகக் கையாண்டுள்ளார். பல அவசியமான  கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு தகுந்த விதத்தில் பதிலளித்திருப்பதோடு, அதற்கு ஆதாரமான வேத வசனங்களை மூல மொழியின் அடிப்படையில் விளக்கி உறுதிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, “பழைய ஏற்பாட்டு ஜாம்பவான்களான ஆபிரகாம், மோசே, யோசுவா, சாமுவேல் மற்றும் தாவீது ஆகியோரின் பரிசுத்த வாழ்க்கையை வாசிக்கும்போது, நம்முடைய பரிசுத்த வாழ்க்கையில் நாம் அவர்களைப் போல் இல்லையே! என்று கவலைப்படுகிறோமே. அப்படியிருக்க, அவர்கள் நம்மைவிட ஆவிக்குரிய வாழ்க்கையில் குறைந்த நிலையில் இருந்தார்கள் என்று சொல்லமுடியுமா? அதாவது மறுபிறப்பு அவர்களில் நிகழவில்லை என்று சொல்ல முடியுமா?” என்ற அவரின் கேள்விக்கு: யோபுவைப்போல, ‘என் கையினால் வாயைப் பொத்திக் கொள்கிறேன்’ என்பதைத் தவிர வேறு பதில் கூறமுடியாது என்பது நிதர்சனமான உண்மை. சிக்கலான இந்தப் பகுதியில் நூலாசிரியர் சீர்திருத்த இறையியல் அறிஞர்களான ஜோர்ஜ் ஸ்மீட்டன், பெஞ்சமின் வோர்பீல்ட் , ஜோன் மரே போன்றோரின் கருத்துக்களை பகிர்ந்திருப்பது, சீர்திருத்த இறையியல் அறிஞர்களின் ஆழமான இறையியல் ஞானத்தை எடுத்துக் காட்டுவது மட்டுமல்லாமல், வேதத்தின் சத்தியங்களை சரியான விதத்தில் புரிந்துகொள்ள இத்தகைய நல்ல நூல்களை வாசிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துவதாக இருக்கிறது.

அடுத்தபடியாக பெந்தகோஸ்தே தினத்தின் முக்கியத்துவத்தைக் குறித்த விளக்கங்களில், ஏற்கனவே மறுபிறப்பை அடைந்திருந்த அப்போஸ்தலர்கள் பெந்தகோஸ்தே நாளின் ஆவியானவரின் வருகைக்காகக் காத்திருந்தற்குக் காரணமென்ன? புதிய ஏற்பாட்டு சபையில் காணப்படும் ஒரே குடும்பம், ஒரே மனம் என்ற ஐக்கியத்தின் இரகசியம் என்ன? சுவிஷேசம் இஸ்ரவேல் தேசத்தை தாண்டி உலகமெங்கும் பாரபட்சமின்றி பிரசங்கிக்கப்பட்ட அதிசயம் எப்படி?  பழைய உடன்படிக்கை மற்றும் புதிய உடன்படிக்கை இடையேயான ஒப்பீடு மற்றும் புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்கள் என்ன?  என்பது போன்ற பல முக்கியமான கேள்விகளுக்கு நூலில் இருந்து மிகத்தெளிவான பதிலைப் பெற்றுக்கொள்ள முடிகிறது.

கடைசியாக பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு செயல்பட்டார் என்பதை மூன்று தலைப்புகளின் கீழ்த் தெளிவாக விளக்கியுள்ளார். இதில் படைப்பு துவங்கி, இஸ்ரவேல் தேசத்தைக் கடந்து ஒரு தனிப்பட்ட மனிதன்வரையில் செயல்பட்ட பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள் குறித்து ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். விசுவாசிகளில் மட்டுமல்லாமல் அவிசுவாசிகளான சவுல், பிலேயாம் போன்றவர்களிலும் ஆவியானவர் செயல்பட்ட விதம் குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில், பழைய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் பரிசுத்த ஆவியானவர் மறுபிறப்பை அளித்ததோடு, அவர்களுக்குள் நிரந்தரமாகத் தங்கி, அவர்கள் பரிசுத்த வாழ்க்கை வாழவும் நித்தியத்தை அடையவும் உதவி செய்தார். பழைய ஏற்பாட்டு விசுவாசிகள் எதிர்காலத்தில் நடக்கவிருந்த பரிசுத்த ஆவியானவரின் உலகளாவிய வருகையை எதிர்பார்த்ததோடு மட்டும் இருந்துவிடவில்லை. அதுமட்டுமல்லாமல், புதிய உடன்படிக்கை விசுவாசிகள் அனுபவிக்கும் புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்கள் மட்டுமே புதிய ஏற்பாட்டு விசுவாசிகளை பரிசுத்த ஆவியின் முழுமையை அடைந்தவர்களாக்குகிறது என்ற உண்மையையும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

இந்நூலில் ஆசிரியர், இறையியல் சத்தியங்களைத் தியானிக்கும்போது  ‘செய்யக்கூடாத’ தவறுகளாக சில காரியங்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார். அவற்றில் சில குறிப்பிடத்தக்கவை:

  1. வேத இறையியலை முறைப்படுத்தப்பட்ட இறையியலில் இருந்து பிரித்துப் பார்க்கக் கூடாது.
  2. பழைய ஏற்பாட்டு இறையியலை புதிய ஏற்பாட்டு இறையியலில் இருந்து பிரித்து பார்க்கக்கூடாது. ‘வேதம் ஒன்றே’.
  3. பழைய ஏற்பாட்டை வெறும் இஸ்ரவேலின் வரலாறாக மட்டும் பார்க்கக் கூடாது.
  4. பெந்தேகோஸ்தே தினத்தின் முக்கியத்துவத்தை உணராமல் பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளைக் குறித்த தவறான முடிவுக்கு வரக்கூடாது.
  5. ஏற்கனவே ஒரு இறையியல் கருத்தை மனதில் வைத்துக்கொண்டு அதை வேத வார்த்தைகளுக்குள் திணித்து விளக்கமளிக்கக் கூடாது. அந்த வசனம் அமைந்திருக்கும் ‘சந்தர்ப்பத்தைக் கவனிப்பது’ மிகவும் அவசியம்.

எனவே இதுபோன்ற சில கருத்துக்களை எப்போதும் நினைவில் நிறுத்தி இறையியல் சத்தியங்களைத் தியானிப்பது, சரியான விதத்தில் சத்தியங்களைப் புரிந்துகொள்ள உதவுவதோடு மட்டுமல்லாமல், பலதவறான கருத்துக்களை இனங்கண்டு கொள்ளவும் உதவும்.

விசுவாசிகளின் மறுபிறப்பிலும், மனந்திரும்புதலிலும், பரிசுத்தமாகுதலிலும் வல்லமையாகக் கிரியை செய்யும்  மூன்றில் ஒருவரான பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள் குறித்து குழப்பமான கருத்துக்களைக் கொண்டிருப்பது நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது மட்டுமல்லாமல், ஒரு மெய்யான விசுவாசி இவ்வுலக வாழ்வில் அடையக்கூடிய ஆவிக்குரிய சந்தோஷத்தையும், சமாதானத்தையும் முழுமையாக அனுபவிக்க முடியாமல் செய்துவிடும் அபாயமும் உள்ளது. எனவே வளருகின்ற ஒவ்வொரு விசுவாசியும், போதகரும் அவசியமாக வாசிக்க வேண்டிய நூலிது. நூலின் சில பகுதிகள் ஆழமான சத்தியங்களைக் கொண்டிருப்பதால் இரண்டு மூன்று முறை மீண்டும் மீண்டும் வாசிப்பது, நாம் இந்நூலை ஆசிரியரின் கருத்திற்கு ஏற்றாற்போல் புரிந்துகொள்ள உதவும்.

‘குறிஞ்சி மலர்’ போல கிடைப்பதற்கு அரிதான, அருமையான சத்தியங்களைக் கொண்டு அரும்பியிருக்கும் இந்நூல் அநேகருடைய ஆவிக்குரிய வாழ்வில் மணம் பரப்பிப் பயனளிக்க வேண்டும் என்று கர்த்தரிடம் வேண்டுகிறேன். ஆசிரியர் பாலா அவர்களுக்கும், சீர்திருத்த வெளியீடுகளுக்கும், இந்நூல் வெளிவர ‘திரைமறைவில்’ இருந்து உதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

– ஷேபா மிக்கேல் ஜார்ஜ்
(மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து)