கற்பவை கசடறக் கற்க . . . !

அன்புள்ள வாசகர்களே,

‘கற்பவை கசடறக் கற்க’ என்பது பெரியோர் வாக்கு, எதைப்படித்தாலும் அதை முறையாக, உண்மைப் பொருள் அறிந்து படிக்க வேண்டும் என்பது இதன் பொருள், வேதத்தைப் பொறுத்தவரை இது எத்தனை உண்மை, வேதத்தின் மெய்ப்பொருளை அறியாமல் தவறாகப் புரிந்து கொண்டால் அது கிறிஸ்தவ அறிவில் வளர உதவாது. தேவன் தம்மைக்குறித்தும், நாம் வாழ வேண்டிய வழிமுறைகள் குறித்தும் வேதத்தில் மட்டுமே எழுத்துருவில் அளித்திருப்பதால் அதைக் கசடறக் கற்பது அவசியம். கர்த்தருடைய துணையோடும், ஆவியின் உதவியோடும் நாம் வேதம் போதிக்கும் உண்மைகளை அறிந்து கொள்ள முடியும். இருந்தபோதும், வேத அறிவில் நாம் வளரத் துணை செய்யும் பொருட்டு கர்த்தர் நமக்கு நல்ல நூல்களையும் தந்துள்ளார். கற்றறிந்த நல்லறிஞர்களை எழுப்பி திருமறையில் அவர்களுக்கு நல்ல ஞானத்தைத் தந்து, அவர்கள் மூலம் நாம் வேத அறிவில் வளரத்துணை செய்யும் நல்ல நூல்களைத் தந்துள்ளார். திருமறைக் கல்விக்குத் துணை செய்யும் அத்தகைய நூல்களை நாம் தேடிப் பெற்றுப் பயனடைய வேண்டும்.

நமது துர்பாக்கியம், அத்தகைய நூல்கள் ஆங்கிலத்தில் அநேகம். இருந்தாலும் வல்ல தேவன் நமது தேவை அறிந்து ஆங்கிலத்தில் உள்ள நல்லறிஞர்களின் நூல்களை பலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்துள்ளார். அநேகக் குப்பைகள் தமிழிலே எழுத்துருவில் மலையாகக் குவிந்து புத்தகக் கடைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் இந்நாட்களில், விடி வெள்ளிபோல் ஒளிவீசும் பலநூல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அநேகர் இவை இருப்பதும் தெரியாமல் இருக்கிறார்கள். வாசகர்களுக்கு அத்தகைய நூல்களை அறிமுகப்படுத்துவதோடு, வாசிப்பின் மேன்மையையும் பலாபலன்களையும் எடுத்துக்காட்டுவது பயனுள்ளதாக அமைய வேண்டுமென்பது எங்கள் இதயதாகம்.

மேலும் ஒரு புத்தம் புதிய வருடத்தைத் தேவன் நமக்குத் தந்திருக்கிறார். இப்புதிய வருடத்தில் அவர் மட்டுமே தரக்கூடிய ஆவிக்குரிய அனைத்து ஆசீர்வாதங்களையும் பெற்று வாசகர்கள் வளர வேண்டும் என்பது திருமறைத்தீபத்தின் உளமார்ந்த வாஞ்சை, உங்கள் கடிதங்கள் எங்களை இவ்வூழியத்தில் ஊக்குவிக்கின்றன. தொடர்ந்து தேவன் விசுவாசமுள்ள கிறிஸ்தவ அன்பர்கள் மூலம் இவ்வூழியத்திற்கான பல தேவைகளையும் பொறுப்பேற்று நடத்தி வருகின்றார். கர்த்தரை என்றென்றும் சேவிப்போம்.

அன்புடன்,

ஆசிரியர்.

கர்த்தர் கட்டியெழுப்பும் திருச்சபை பாகம் – 3

கடந்த இதழில் வேதம் திருச்சபையைக் குறித்து என்ன சொல்கிறது என்றும், திருச்சபை அங்கத்துவதின் அவசியத்தைக் குறித்தும் பார்த்தோம். இவ்விதழில் கர்த்தர் கட்டியெழுப்பும் அத்திருச்சபையின் ஊழியத்தைப்பற்றி ஆராய்வோம்.

எங்கும் ஊழியம் மயம்

கர்த்தர் இவ்வுலகில் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் திருச்சபையை, இன்று என்றுமே இல்லாத அளவிற்குப் பேராபத்து சூழ்ந்துள்ளது. இந்தப் பேராபத்து திருச்சபையை தீவிரத்தோடு அழித்தொழிப்பதாக இல்லாமல், அதை ஒரு பொருட்டாகக் கருதாமல், அலட்சியப்படுத்துவதாக அமைந்துள்ளது. திருச்சபைக்கும், அதுபற்றித் திருமறை தரும் போதனைகளுக்கும் இன்று எங்கும் மதிப்பில்லை. திருமறையை அலட்சியம் செய்து, திருச்சபை என்ற பெயரில் கேலிக்கூத்துகள் நடத்துபவர்களும், திருச்சபையே தேவையில்லை என்று ஆணவத்தோடு அலைபவர்களுமே இன்று அவனியிலே பவனி வருகிறார்கள். திருமறை தெளிவோடு போதிக்கும், கர்த்தரின் அன்புக்குப் பாத்திரமான திருச்சபையைப் பற்றிய திருமறையின் போதனையை இத்தொடர் கட்டுரை அலசுகிறது. – ஆசிரியர்.

Continue reading

கற்றனைத்து ஊறும் அறிவு

“வாசிப்பு மனிதனை முழுமையானவனாக்குகின்றது”
– பிரான்ஸிஸ் பேக்கன் –

‘கற்றனைத்து ஊறும் அறிவு’ என்பது தமிழ்ப்புலவன் வள்ளுவன் வாக்கு. எந்தளவுக்கு நாம் படிக்கிறோமோ அந்தளவுக்கு அறிவு வளர்ச்சியும், முதிர்ச்சியும் அடைவோம் என்பது இதன் பொருள். வேதத்தில் நல்லறிவு பெறுவதற்கு நாம் வாசிக்கும் பயிற்சியை வளர்த்துக் கொள்ள வேண்டும். வேதத்தை அன்றாடம் ஊக்கத்தோடு வாசித்தல் அவசியம். அதே வேளை வேதசத்தியங்களைப் போதிக்கும் நல்ல நூல்களையும் நாம் வாசிக்க வேண்டும்.

Continue reading

வாசிக்காமல் போதிப்பதா?

ஒருவர் சிந்திப்பதற்கு வாசிப்பு அவசியம். சிந்திக்கும் அனைவருக்குமே வாசிக்கும் பழக்கம் இருக்கவேண்டும். அதிலும் வேதத்தை அன்றாடம் எடுத்து விளக்கும் ஊழியத்தில் ஈடுபட்டுள்ள போதகர்களுக்கு வாசிக்கும் பயிற்சி அதிகமுக்கியம். வாசிப்பு போதனைகளை சிந்திக்க வைக்கிறது. வேதத்தை வாசிப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் அவ்வேதத்தைப் புரிந்து கொள்ளத்துணை புரியும் நூல்களை வாசிப்பதும் அவசியம். போதக ஊழியத்தில் ஈடுபட்டுள்ள அநேகர் தமது வேலைப்பளுவினால் வாசிப்பதையே முற்றாகத் தவிர்த்துவிடுகிறார்கள். சிலர் வேதத்தை மட்டும் வாசித்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என்ற எண்ணத்தையும் கொண்டுள்ளார்கள். சிறையிலிருந்த பவுல் தீமோத்தேயுவிடம் நீ வரும்போது புத்தகங்ளைக் கொண்டுவா (1 தீதோ. 4:13) என்று கூறுவதைப் பார்க்கிறோம்.

Continue reading

வாசிப்பது எப்படி?

வாசிப்பது எவ்வளவு அவசியமோ அந்தளவுக்கு எதை வாசிப்பது? எப்படி வாசிப்பது? என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். வாசிப்பதற்கு துணை புரியும் சில அறிவுரைகளைப் பார்ப்போம்.

1. நமது விசுவாசத்திற்கு துணைபுரியும் நல்ல நூல்களையே வாசிக்க வேண்டும். இரண்டாந்தரமான நூல்களை நாம் கண்ணெடுத்தும் பார்க்கக்கூடாது. இன்று புத்தகக்கடைகளில் காணப்படும் தொண்ணுற்றி ஐந்து வீதமான நூல்கள் நமது விசுவாச வளர்ச்சிக்குத் துணை செய்யா. போல் யொங்கி சோ, சாம் ஜெபத்துரை, ஓரல் ரொபட்ஸ், சாது செல்லப்பா போன்றோருடைய நூல்களால் எந்தப்பயனும் அடைய முடியாது. தம்மை வளர்த்துக் கொள்ளவும், ‘விபரல்’ கொள்கைகளைப் பரப்பவுமே நூல்கள் எழுதும் இத்தகையோரால் நமது விசுவாச வாழ்க்கைக்குத் தீங்கு ஏற்படும்.

Continue reading

கேள்வி? பதில்!

கேள்வி 21: கடவுள் முழு மனித இனத்தையும் பாவத்தாலும் அவலத்தாலும் அழிந்து போகும் நிலையில் விட்டாரா?

பதில்: கடவுள் அநாதிகாலமுதல் தனது நன் நோக்கத்தின்படி சிலரை நித்திய ஜீவனுக்காகத் தெரிந்துகொண்டதோடு, அவர்களைப் பாவம் அதனால் ஏற்பாடும் அவலம் ஆகியவற்றிலிருந்து விடுவித்து, இரட்சிப்பை அடைவதற்கான வழிமுறையை மீட்பரொருவரின் மூலமாக ஏற்படுத்தினார்.

(எபேசி. 1:4; ரோமர் 3:21-22)

விளக்கக்குறிப்பு:

இவ்வினாவிடை கடவுளின் நிபந்தனையற்ற தெரிந்துகொள்ளுதலைப்பற்றிப் போதிக்கின்றது. 1. கடவுள், பாவத்தில் வீழ்ந்துள்ள மனிதரின் மொத்தத் தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையினரை இரட்சிப்பைப்பெறும்படியாக தெரிந்துகொண்டுள்ளார் என்றும், 2. இவர்களில் காணப்பட்ட எந்தவித நன்மைகளின் அடிப்படையிலும் கடவுள் இவர்களைத் தெரிந்துகொள்ளவில்லை என்றும், கடவுளின் தெரிந்துகொள்ளுதல் நிபந்தனையற்றது, ஏனெனில் அவர் தெரிந்துகொள்ளப்படாதவர்களில் காணப்படாத எதையும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் காணவில்லை என்றும், 3. கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே இரட்சிக்கப்பட முடியும் என்றும், 4. இறுதியாக அநாதி காலத்திலிருந்தே இத்தெரிந்துகொள்ளுதலானது கடவுளால் நிர்ணயிக்கப்பட்டது என்றும் இப்போதனை விளக்குகின்றது. இவை ஒவ்வொன்றையும் விளக்க இங்கே இடமில்லாவிட்டாலும் இவை வேதத்தில் தெளிவாகப் போதிக்கப்பட்டுள்ள உண்மைகள்.

Continue reading

திருமறை ஒரு நடமாடும் நூலகம்

கடவுள் எத்தனையோ வழிகளில் தன்னை வெளிப்படுத்தியிருக்க முடியும்; இருந்தபோதும் அவர் எழுத்தையே தெரிவு செய்தார். அப்படியானால் அவ்வார்த்தையை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

எழுத்தில் தெளிவான வெளிப்படுத்தல்

கடவுள் எழுத்தின் வடிவில் தன்னை வெளிப்படுத்தியுள்ள உண்மையை எவருமே மறுதலிக்க முடியாது. அவர் தன்னை நாட்டியத்தின் மூலமாகவோ, நாடகத்தின் மூலமாகவோ, அடையாளங்கள் மூலமாகவோ அல்லது சங்கீதத்தின் மூலமாகவோ வெளிப்படுத்தியிருக்க முடியும். இருந்தபோதும், கடவுள் எழுத்தையே நாடினார்.

Continue reading

சுசானா ஸ்பர்ஜன்

மகா பிரசங்கியான சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜனின் அருமை மனைவியார் சுசானா. ஸ்பர்ஜனின் அன்புக்குரிய வாழ்க்கைத் துணைவியாக இருந்தது மட்டுமல்லாமல் அவரது ஊழியத்திற்கும் பெருந்துணையாக இருந்தார் சுசானா. ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று கூறுவார்கள். அது ஸ்பர்ஜனைப் பொறுத்தவரை மிகப் பொருந்தும்.

Continue reading

நல்ல நூல்களைத் தெரிவு செய்வதெப்படி?

“புத்தகங்கள், ஆசிரியர்களால் முடியாதபோது, அவர்களுக்கு வசதியில்லாதபோது, அவர்கள் விரும்பாதபோது அதற்கும் மேலாக அவர்கள் இல்லாதபோது பிரசங்கிக்கும் வல்லமையைக் கொண்டிருக்கின்றன”
– தொமஸ் புரூக்ஸ்

நல்ல நண்பர்கள் நமக்குத் துணையாயிருப்பதுபோல் நல்ல நூல்கள் எப்போதும் நம் வாழ்வில் ஒளியேற்றும். முதலாம் சங்கீதம் துன்மார்க்கரினுடைய ஆலோசனை நமக்குப் பெருந்துன்பம்தருமென எடுத்துக் காட்டுகிறது. தீயமனிதர்களை நண்பர்களாகக் கொண்டால் எப்படி நாம் வழிதவறிப் போய்விடலாமோ அதேபோல் கண்களுக்கு மட்டும் குளிர்ச்சி தரும்வகையில் காணப்படும் நூல்களாலும் நமக்கு ஆபத்து ஏற்படும்.

Continue reading

கிருபையின் போதனைகள் என்றால் என்ன?

வரலாறும் வேத சத்தியங்களும் ஒன்றோடொன்று இணைந்தவை. கர்த்தர் வரலாற்றின் தேவனாக இருப்பதோடு அவ்வரலாற்றின் மத்தியிலேயே தன்னைப்பற்றிய சத்தியங்களை வெளிப்படுத்தினார். ஆகவே வரலாற்றில் சத்தியத்திற்கு எதிராக எழுந்த போலிப்போதனைகளை அடையாளம் காண்பது சத்தியத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கும், அதைக்காப்பதற்கும் உதவும். அந்த அடிப்படையில்தான் இதுவரை பெலேஜியனிசம், செமி-பெலேஜியனிசம் ஆகிய சத்தியத்திற்கெதிரான போலிப்போதனைகளைக் குறித்துப் பார்த்தோம். வரலாற்றையோ வரலாறு சந்தித்த சத்தியத்திற்கெதிரான எதிர்ப்புகளையோ நாம் நிராகரித்துவிட முடியாது. இவ்விதழில், திருச்சபையினால் தூக்கியெறியப்பட்ட இப்போதனைகள் பல நூறு ஆண்டுகளுக்குப்பின் மறுபடியும் எவ்வாறு மறுரூபம் அடைந்தன, திருச்சபையை ஆட்டிப்படைக்கக் கங்கணம் கட்டின என்று பார்க்கலாம்.

Continue reading

தமிழிலே உள்ள சிறந்த கிறிஸ்தவ இலக்கியங்கள்

தமிழில் கிறிஸ்தவ நூல்களுக்கு இன்று குறைவில்லை. புத்தகக்கடைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. ஆனால் அவை எல்லாமே ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் துணைபுரியுமா என்பது சந்தேகமே. தவறான கொள்கைகளைப் பரப்பும் நூல்களே அநேக புத்தகக்கடைகளை அலங்கரிக்கின்றன: யொங்கி சோ, தினகரன், சாம் ஜெபத்துரை போன்றோரின் மோசமான வேத அடிப்படையில் அமையாத நூல்களுக்கு மத்தியில் நல்ல நூல்களும் வெளிவருவது மகிழ்ச்சி தரும் காரியமே. சீர்திருத்தவாத காலத்து அறிஞர்களின் இறவாத் தன்மையுடைய சில இலக்கியங்கள் இன்று தமிழில் வெளிவந்துள்ளன. கல்வின், ஜோன் ஓவன், ப்ளேவல், ஆப்ரகாம் பூத் போன்றோருடையது மட்டுமன்றி, இதே கொள்கைகளைத் தழுவி எழுதிய பின்வந்தவர்களான பின்க், ஸ்பர்ஜன் போன்றோரின் நூல்களும் தமிழில் உள்ளன. நல்ல நூல்கள் ஆயிரக்கணக்கில் இல்லாவிட்டாலும் இதுவரை வெளிவந்திருப்பவை உன்னதமான எதிர் காலத்தை எடுத்துக்காட்டும் சின்னங்களாக இருக்கின்றன. இந்நூல்களை வாசித்து ஆவிக்குரிய வாழ்வில் ஆசீர்வதிக்கப்பட்ட போதகர்கள், கிறிஸ்தவர்கள் பலரை நாமறிவோம். வாசகர்கள் இன்றே இவற்றைப் பெற்றுப்பயனடையும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

Continue reading

சபைக்கொரு நூலகம்

வாசிக்க மறுப்பவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள் என்பது நாமறிந்த உண்மை. 16 ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதம் தோன்றுவதற்கு முன்பாக கத்தோலிக்க சபை, மக்கள் சுயமாகச் சிந்திப்பதைத் தடை செய்திருந்தது. வேதத்தை வாசித்து சுயமாக விளங்கிக் கொள்வது அக்காலத்தில் ஆபத்தான காரியமாக இருந்தது. அத்தகைய ஆபத்திலிருந்து கடவுள் நமக்கு விடுதலை தந்திருக்கிறார். இச்சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் கிறிஸ்தவர்கள் சிந்திக்கப் பழக வேண்டும். அதற்கு சபைப்போதகர்கள் துணை செய்ய வேண்டும். சபை மக்கள் வாசிப்பதற்கு உதவிசெய்யும் வகையில் சபைப் போதகர்கள் நல்ல நூல்களை அடிக்கடி தம் மக்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டும். சில வேளைகளில் வேத பாட வகுப்புகளிலோ, விசேட வகுப்புகளிலோ ஒரு நல்ல நூலை அதில் கலந்து கொள்கிறவர்களை வாசிக்க வைத்து, அதை முறையாகப் படிக்கலாம்.

Continue reading

நூல் அறிமுகம்

திருச்சபைக் கோட்பாடுகள்

திருச்சபை இவ்வுலகிற்கு அளித்துள்ள சிறப்பான சான்றார்களில் ஒருவர் ஜோன் கல்வின். பதினான்காம் வயதில் கல்லூரிப் படிப்பை ஆரம்பித்துப் பின்பு வக்கீல் படிப்பிற்காக பிரான்ஸை நோக்கிச் சென்று கொண்டிருந்த கல்வினை வழியில் நிறுத்தி பெரல் மூலமாகக் கிறிஸ்தவ ஊழியத்திற்கு கர்த்தர் அழைத்தார். அன்று முதல் தேவ சேவையையே தன் வாழ்வில் குறிக்கோளாகக் கொண்டு கல்வின் ஜெனீவாவில் ஊழியத்தைத் தொடங்கினார். மகாத் திறமையுடன் அறிவியலும், கல்வியிலும் சிறந்து விளங்கினார். பிரான்ஸ் நாட்டில் சீர்திருத்தக் கொள்கைகளைப் பின்பற்றியதற்காகப் பல துன்பங்களை அனுபவித்த தன் சக சகோதரர்களின் நிலையைக் கண்டு வருந்தி, பிரான்ஸ் மன்னனுக்கு கிறிஸ்தவத்தைப் பற்றிய விளக்கத்தை அளித்து கர்த்தரை வெளிப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் ‘கிறிஸ்தவக் கோட்பாடுகள்’ என்ற நூலைக் கல்வின் எழுதினார். இதன் முதல் பதிப்பு 1536 ஆம் ஆண்டில் ஆறு அதிகாரங்களுடன் 520 பக்கங்களுடன் வெளிவந்தது. பின்பு மேலும் அதிக பக்கங்களுடன் பல பதிப்புகளாக வெளிவந்து இறுதியாக என்பது அதிகாரங்களைக் கொண்ட நூலாக வெளிவந்தது.

Continue reading