வளரும் மலர் . . . !

அன்புள்ள வாசகர்களே,

புது வருடம் பிறந்து மூன்று மாதங்கள் பறந்தோடி விட்டன, இப்பத்திரிகை பிறப்பதற்கு முன்பாக நாட்கள் இவ்வளவு வேகமாக நகர்ந்ததை நான் உணர்ந்ததில்லை. நகரும் நாட்களுடன் வேகமாகப் பொறுப்புகளும் அதிகரிக்கின்றன. கடந்த இதழுடன் பத்திரிகை ஆயிரம் பிரதிகளைத் தாண்டி நிற்கிறது. மேலும் பிரதிகள் கேட்டு எழுதுவோர் அநேகர். முடிந்த வரை எழுதுவோரின் தேவையை நிறைவு செய்ய நாம் முயற்சிக்கிறோம். தேவனுக்குப் பிரியமானால் மேலும் அச்சிட அவர் வகை செய்வார் என்பது எம் நம்பிக்கை. இத்தேவைகளுக்காகவும் கர்த்தரிடம் ஜெபத்தில் வாருங்கள். பத்திரிகையின் தேவைகளைப் பலவிதங்களில் தொடர்ந்து சந்திக்கும் அன்புள்ளங்களையும் ஜெபத்தில் நினைவு கூறுங்கள்.

Continue reading

கர்த்தர் கட்டியெழுப்பும் திருச்சபை

கர்த்தர் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் திருச்சபையில் இன்று ‘ஊழியம்’ எப்பாடுபடுகின்றது என்று கடந்த இதழில் பார்த்தோம். ஊழியம் வேத அடிப்படையில் அமைய வேண்டும். ஊழியத்தைப் பற்றிய போலித்தனமான வேதத்திற்கு புறம்பான எண்ணங்களைத் திருத்த வேண்டுமென்பதுதான் இப்பத்திரிகையின் நோக்கமேயொழிய ‘ஊழியத்தையோ, ஊழியக்காரர்களையோ களங்கப்படுத்துவது அல்ல’. ஊழியம் செய்ய வேண்டுமென்பது பாராட்டுதலுக்குரிய ஒரு வாஞ்சையாக இருப்பினும் அதைக் கடைத்தெருவிற்கு கொண்டு வருமளவுக்கு இன்று நிலைமை மாறியிருப்பதை வேதம் அனுமதிக்காது.

பஸ்நிலையத்தில் ஊழியத்திற்கு அழைப்பா?

சில வருடங்களுக்குமுன் ஒருமுறை இக்கட்டுரையாசிரியர் திருச்சியில் பஸ்நிலையத்தில் இரவு பதினொரு மணியளவில் சென்னை போகும் பஸ்ஸீக்காக காத்திருந்தபோது பஸ்நிலையத்தில் ஒலி பெருக்கி அலறிக் கொண்டிருந்தது. அதில் ஒரு தமிழக சுவிசேஷகர் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். ‘ஆண்டவர் இன்று உன்னோடு பேசுகிறார். உன்னை ஊழியத்திற்கு வரும்படியாக அழைக்கிறார்’ என்று அந்த இரவு நேரத்திலே அவரது சத்தம் என் காதைத் துளைத்தெடுத்தது. அவரது பேச்சும் என்னைச் சிந்திக்க வைத்தது. யாரோடு இந்த மனிதன் பேசுகிறார்? கர்த்தர் தன் ஊழியத்திற்கு தன் மக்களைத்தான் அழைக்கிறாரே தவிர அவரை அறியாதவர்களை அழைப்பதில்லையே. ஏதோ அவரது ஊழியமே ஆள் இல்லாது திண்டாடுவதுபோல் இரவு நேரத்தில் பஸ் நிலையத்தில் இப்படி அலறத்தான் வேண்டுமா? இதற்கெல்லாம் வேதத்தில் என்ன ஆதாரம்? என்று சிந்தித்தேன். இப்படியாக உணர்ச்சி வசப்படும்படியாக கர்த்தரின் பெயரில் இல்லாததைச் சொல்லி ஆசை காட்டுவதனாலேயே இன்று அநேகர் விபரம் தெரியாது ஊழிய ஆசை பிடித்துத் திரிகிறார்கள்.

சமீபத்தில் என் கையில் கிடைத்த ஒரு கிறிஸ்தவ பத்திரிகையில் காணப்பட்ட ஒருவரின் சாட்சியும் என்னைத் திகைக்க வைத்தது. அச்சாட்சியில் கடவுளை அறியாதிருந்த அம்மனிதர் தான் ஒரு கூட்டத்திற்குப் போனபோது அங்கே பேசிய மனிதர் தன் பெயரைச் சொல்லி அழைப்புக் கொடுத்ததாகவும், தன்னை கர்த்தர் ஊழியத்தில் பயன்படுத்தப் போவதாக அவர் மூலம் சொன்னதாகவும், அதைக் கேட்டே தான் கர்த்தர் மீது விசுவாசம் கொண்டதாகவும் கூறியுள்ளார். தேவன் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் தன் ஊழியத்திற்காக சிலரை இவ்விதமாக அழைத்திருந்ததாலும் அவ்வாறு அழைக்கப்பட்டவர்கள் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம் (பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள்). அதாவது வரலாற்றில் நிகழப்போகும் சம்பவங்களுக்கும் இவ்வாறாக அழைக்கப்பட்டவர்களுக்கும் நேரடித் தொடர்பிருந்தது. திருச்சபை நிறுவப்பட்டபின்பு, வேதம் முழுமையாகக் கொடுக்கப்பட்ட பின்பு தொடர்ந்தும் இம்முறையில் ஊழியத்திற்கு மனிதரை அழைக்கப் போவதாக தேவன் வேதத்தில் எங்குமே போதிக்கவில்லை. திருச்சபையில் தான் ஏற்படுத்தும் போதகர்கள், மூப்பர்களே சபையில் அத்தகைய தகுதி பெற்றவர்களைத் தெரிந்து நியமனம் செய்ய வேண்டுமென்பது கர்த்தரின் போதனை. அதுமட்டுமல்லாது ஊழியம் செய்யலாம் என்று ஆசைக்காட்டி எவரையுமே இயேசுவோ அல்லது அவரது அப்போஸ்தலர்களோ கர்த்தரிடம் அழைத்ததில்லை.

ஊழியப்பயிற்சி

ஊழியத்துறையில் இன்று வேதத்திற்குப் புறம்பான பல காரியங்களை நாம் அவதானிக்கும் அதேவேளை ஊழியத்திற்கு சிலரைத் தெரிவு செய்ய வேண்டிய அவசியத்தையும் நாம் புறக்கணித்துவிட முடியாது. ஊழியத்திற்கு வருபவர்களுக்கு இருக்க வேண்டிய பல்வேறு முக்கிய இலக்கணங்களைப்பற்றி விபரிக்கும் திருமறை அவற்றில் ஒன்றாக (1 தீமோத்தேயு; 2 தீமோத்தேயு) ஒரு ஊழியக்காரர் புதிய விசுவாசியாக இருக்கக்கூடாது என்று குறிப்பிடுகிறது. விசுவாசத்தில் வளர வேண்டிய ஒருவர் மற்றவர்களுக்கு எப்படிப் போதிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் ஊழியம் செய்யப் புறப்படுகிறவர்கள் திருச்சபையில் வளர்ந்தவர்களாக இருக்க வேண்டும். திருச்சபையின் வாசலையே கண்ணால் காணாதவர்களுக்கும், ஊழியத்திற்கும் எந்தவிதத் தொடர்புமேயில்லை. இன்று இவ்விரண்டு முக்கிய உண்மைகளையும் எண்ணிப் பார்ப்பாரில்லை. சபைத் தொடர்பு இல்லாதவர்களுக்கும், எப்படியாவது ஊழியம் செய்ய வேண்டும் என்று அலையும், புது விசுவாசிகளான வாலிபர்களுக்கும் தீனிபோட்டு தம்மை வளர்த்துக் கொள்ள இன்று சிலர் புறப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடைய சாகச வார்த்தைகளிலும், அவர்கள் அளிக்கும் வசதிகளிலும் மயங்கி நிற்போர் அநேகர். பல கிறிஸ்தவ ஸ்தாபனங்களும் வேதாகமக் கல்லூரிகளும், தனிப்பட்ட நபர்களும் இன்று இதைப் பல நாடுகளிலும் செய்து வருகிறார்கள், திருச்சபைகளும், சபைப் போதகர்களும் வாலிபர்களைக்காத்துக் கொள்ள வேண்டுமானால் இத்தகையோரின் பிடியில் இருந்து விடுபட வேண்டும்.

ஊழியத்திற்கு யாரை எப்படித் தயார் செய்வது? திருமறையின் அடிப்படையில் நாம் சில உண்மைகளை இக்காரியத்தில் பின்பற்றுதல் அவசியம்.

1. ஊழியம் என்று இங்கு நாம் குறிப்பிடுவது வேதத்தைப் போதித்து மக்களை வழி நடத்தும் போதக ஊழியம், மூப்பர் பணி, உதவிக்காரர், புதிதாக சபை நிறுவும் ஊழியம் ஆகியவற்றைத்தானே தவிர இசை நிகழ்ச்சி, பாட்டுக் கச்சேரி நடத்தும் தாலந்துகளை அல்ல. ஏனெனில் வேதத்தில் எங்குமே இவை சபை நிறுவுதலுக்கும், அவற்றின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படும் ஊழியங்களாகக் குறிப்பிட்டுக் காட்டப்படவில்லை.

2. திருச்சபைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சபைக்கும், போதகர்களுக்கும் மதிப்புக் கொடுத்து, சபை வாழ்க்கைக்குத் தன்னை ஒப்புக்கொடுப்பவர்களே ஊழியத்தைப் பற்றிச் சிந்திக்கத் தகுதியுள்ளவர்கள். ஒருவருக்கு எத்தனை அற்புதமான தாலந்துகள் இருந்தாலும் சபை வாழ்க்கைக்குத் தன்னை ஒப்புக்கொடுக்காவிட்டால் ஊழியத்துக்கும் அவருக்கும் வெகுதூரம்.

3. புதிய விசுவாசிகளுக்கு சபைப்போதகர்கள் ஊழிய ஆசையை ஏற்படுத்தக்கூடாது. வளரும் குழந்தை எழுந்து நடக்குமுன் அதற்கு நடக்கக் கற்றுக் கொடுப்பதால் எந்தப்பயனுமில்லை. ஊழியக்காரர்கள் இல்லாத குறையால் ஆர்வமுள்ள புதிய விசுவாசிகளையும், நடக்கப் பழகும் இறைஞர்களையும் சிலர் ஊழியத்திற்குள் நுழைத்துவிடுகிறார்கள். அனுபவமில்லாதவர்களையும், குழந்தைகளையும் வேலைக்குச் சேர்ப்பது உலக வழக்கமாக இல்லாதிருக்கும்போது அவற்றையெல்லாம்விட மேலான தேவ ஊழியத்தில் மட்டும் நாம் ஏறுக்கு மாறாக நடப்பது ஏன்?

4. எந்த ஊழியமாக இருந்தாலும் சரி ஒருவர் சபையில் அந்த ஊழியத்தை ஒரளவு செய்து சபையின் அங்கீகாரத்தைப் பெற்றவராக இருக்க வேண்டும். வீட்டில் மதிப்பில்லாதவர்கள் வெளியில் மதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது (1 தீமோ. 3:5). வெறும் ஊழிய ஆசை மட்டும் ஒருவர் ஊழியக்காரராவதற்குப் போதாது. அவர் ஊழியத்திற்கான தகுதிகளைக் கொண்டிருக்கிறார் என்று சபையார் அறிந்து கொள்ள வேண்டும். அவற்றால் பயனடைந்திருக்க வேண்டும். ஆகவே போதகர்கள் மூப்பர்கள் ஊழியத்திற்கு தகுதி பெற்றவர்களை சபையில் ஒரு வரம்புக்குட்படுத்தி பயன்படுத்த வேண்டும்.

5. ஒருவர் ஊழியத்திற்குப் பயன்படுவார் என்றறிந்ததும் அவரை ஊழியப்பயிற்சிக்கென்று துரத்திவிடக் கூடாது. நாம் பின்பற்றும் கோட்பாடுகளையும், கொள்கைகளையும் போதிக்கும் வேதாகமக் கல்லூரிகள் இன்று மிகக்குறைவு. ஆசையுடன் வளர்த்த கிளியை பூனையின் கையில் ஒப்படைத்த கதி அநேக சபைகளுக்கு இன்று ஏற்பட்டிருக்கிறது. ஏதாவதொரு கல்லூரிக்குப் போனால் போதும் ஊழியக்காரராய் வந்துவிடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் அநேகர்.

6. சீர்திருத்தக் கொள்கைகளைப் பின்பற்றுவோர் அதிகரித்து வரும் இந்நாளில் ஏற்பட்டுள்ள புதிய ஆபத்தை நாம் தவிர்க்க வேண்டும். சீர்திருத்தக் கோட்பாடுகள் பற்றிய அறிவு மட்டும் ஒருவரை ஊழியக்காரராக்கிவிடாது. அவற்றில் ஒருவருக்கு பேரறிவு இருந்தும் தேவபக்தியென்பதே இல்லாமலிருக்கலாம். உண்மையான சீர்திருத்தவாதி அடக்கம், தாழ்மையுணர்வு, சபையாரில் அன்பு, ஜெபத்தில் உறுதி, நேர்மை ஆகிய பண்புகளைக் கொண்டிருப்பார். ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாதது போல், வெறும் அறிவு மட்டும் ஊழியப் பணிக்குப் போதாது.

சபை ஆட்சிமுறை

திருச்சபை ஆட்சியமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியமில்லை என்பது இன்று சிலரின் கருத்து. இவர்களுடைய சிந்தனையை ஒருவிதத்தில் எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. சபைகள் பிரிந்து கிடக்கும் இக்காலத்தில் திருச்சபை ஆட்சியமைப்பை வலியுறுத்தினால் அவைகள் ஒன்று சேர்வதற்குத் தடை ஏற்படும் என்று இவர்கள் கருதலாம்.

வேறு சிலர் சுயநல நோக்கத்தினால் சபை அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வேதத்தில் உள்ள எல்லா சத்தியங்களையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். சில சத்தியங்களில் நமக்குத் தெளிவில்லாமல் இருக்கலாம். அவற்றில் எமக்கு ஞானமில்லை என்பதால் அவற்றை நாம் முற்றாகப் புறக்கணித்துவிட முடியாது. சபை தொடர்ந்து வளரவும், நிலையானதாக அமையவும், கர்த்தரின் அளவற்ற ஆசீர்வாதங்களைப் பெறவும் அவரே திருச்சபை அமைப்பிற்குத் தேவையான எல்லா விளக்கங்களையும் தம் வார்த்தையின் மூலம் நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

தவறான ஆட்சியமைப்பு முறைகள்

இன்று அநேக சபைகளில் திருமறைக்கு முரணான, ஆபத்தான மூன்றுவித ஆட்சிமுறைகளைப் பார்க்கிறோம்.

1. ‘கமிட்டி’ ஆட்சிமுறை – வேதம் சபையை மூப்பர்கள்தான் ஆள வேண்டுமென்று போதிக்க பல சபைகளில் ‘கமிட்டிகள்’ ஆட்சி நடத்துகின்றன. இக்கமிட்டிகளில் இருப்போர் அநேகமாக செல்வாக்குள்ளவர்களாகவும், ஊழியக்காரருக்குரிய இலக்கணங்களைக் கொண்டிராதவர்களாகவும் அமைந்துவிடுகின்றனர். முக்கியமாக இக்கமிட்டிகள் போதகரை ஆட்சி செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும்.

2. ஜனநாயக மக்களாட்சி முறை – திருமறை சபைக்குத் தலைவர் இயேசு கிறிஸ்து என்றும், அவரது ஆட்சி மூப்பர்கள் மூலம் அவரது வார்த்தையின் அடிப்படையில் அமைய வேண்டுமேன்றும் போதிக்க இன்று அநேக சபைகளில் மக்களாட்சி முறையே நடைமுறையிலிருக்கின்றது. அதாவது சபையில் எடுக்க வேண்டிய எந்தவிதத் தீர்மானமும் சபை மக்களுக்கு முன்பாகக் கொண்டுவரப்பட்டு வாக்குச்சீட்டைப் பயன்படுத்தி பெரும்பான்மை வாக்குப்பலத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சபை மக்களுக்கு எது விருப்பமானது, விருப்பமில்லாதது என்ற அடிப்படையில் சபையில் காரியங்கள் நடக்கின்றன.

3. ஒரே போதகரின் அதிகாரத் துஷ்பிரயோகம் – அதாவது சபைப் போதகர் வேறு எவருக்கும் கட்டுப்படாது தான் நினைத்த விதத்தில் கேள்வி முறையின்றி செயல்படுவது.

இம்மூன்று விதமான ஆட்சி முறைகளையே இன்று அநேக சபைகளில் காணக்கூடியதாகவுள்ளது. ஆனால் திருமறை இவற்றிற்கெதிரான போதனையையே தருகின்றது. திருமறையின்படி திருச்சபை கர்த்தரின் ஆட்சிக்குட்பட்டது. அங்கே மனித சிந்தனைக்கோ, வழிமுறைகளுக்கோ இடமில்லை. கர்த்தரின் வார்த்தையின்படி சபை ஆட்சிமுறை அமைய வேண்டியது அவசியம்.

புதிதாக எழும் சீர்திருத்த சபைகள்

இன்று வேத பூர்வமாக சபைகள் அமைய வேண்டும், சீர்திருத்தக் கோட்பாடுகள் அடிப்படையில் கிருபையின் போதனைகளில் திளைத்து சபைகள் தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் எங்கும் சபைகள் எழுந்து கொண்டிருக்கின்றன. புதிதாக எழும்பிக் கொண்டிருக்கும் இச்சபைகளில் உடனடியாக ஆரம்பத்திலேயே மூப்பர்கள் ஆட்சி அமைப்பு ஏற்படுத்துவது இலகுவான காரியமல்ல. வேத இலக்கணங்களைக் கொண்டவர்களும், மூப்பர்பணி பற்றிய அறிவுள்ளவர்களையும் தெரிவு செய்து வளர்த்தெடுக்க காலம் செல்லலாம். ஒவ்வொரு சபையும் ஆரம்பித்த உடனேயே முழுமையான ஆட்சியமைப்பைக் கொண்டிருந்ததாக வேதம் கூறவில்லை. சில சபைகளில் இத்தகைய ஆட்சியமைப்பு ஏற்படப் பல வருடங்கள் சென்றதாக வேதம் சொல்கிறது. மூப்பர்கள் ஒருவருக்கு மேல் இருக்க வேண்டுமென்று அவசரப்பட்டு தகுதியில்லாதவர்களை அப்பணியில் நியமிப்பதால் சபையே இறுதியில் பாதிக்கப்படும். சில சபைகள் அவை தோன்றிய காலத்திலேயே தேவனின் அருளால் மூப்பராகப் பணிபுரியத் தகுதியுள்ள பலரைக் கொண்டிருக்கலாம். அதே வசதி இன்னொரு சபைக்கு இல்லாமலிருக்கலாம். அத்தகைய வசதியில்லாத சபைகள் அதேகோட்பாடுகளைக் கடைப்பிடிக்கும் சபைகளோடு தொடர்பு கொண்டு செயற்படுவது அச்சபைக்குப் பாதுகாப்பாக அமையும். ஆதிசபைகள் இதேவிதமாக ஒன்றோடோன்று தொடர்பு கொண்டு வளர்ந்ததாக வேதத்தில் (அப்போஸ்தலர் நடபடிகள்) பார்க்கிறோம். ஆனால் ஆதி சபைகளில் அப்போஸ்தலர்கள் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதிகளாகக் கூடிய அதிகாரம் கொண்டிருந்தார்கள். இன்று அத்தகைய அதிகாரம் எவருக்குமே இல்லாததால் ஒரு சபை இன்னொரு சபையைக் கட்டுப்படுத்த முடியாது. ஐக்கியமும், பரஸ்பர ஆலோசனையும், உதவியுமே காணப்பட வேண்டுமேயல்லாது அதிகாரபூர்வமாக ஒருசபை மற்ற சபையைக் கட்டுப்படுத்த முயலக்கூடாது.

திருமறை போதிக்கும் சபை ஆட்சி அமைப்பு

திருமறை கிறிஸ்து இயேசுவையே சபைத் தலைவராகக் காண்பதால் எந்தவொரு திருச்சபையும் அவரது வார்த்தைக்கு மதிப்பளித்து அதன்படி சபை ஆட்சிமுறை அமையும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படித் திருமறை போதிக்கும் சபை அமைப்பு யாது?

1. சபை மூப்பர்களால் ஆளப்பட வேண்டும். அதாவது ராஜாவாகிய கிறிஸ்துவின் வசனப்படி அடையாளங்காணப்பட்ட மூப்பர்கள் கர்த்தரின் வார்த்தையின்படி அவரது பிரதிநிதியாக இருந்து சபையை ஆள வேண்டும். உதாரணமாக மத்தேயு 18:15-17; அப். 20:17, 28; 1 தீமோ. 3:1-7; தீத்து 1:5-9; 1 பேதுரு 5:2; எபிரே. 13:7, 17 ஆகிய வேதப்பகுதிகள் மூப்பர்களின் இம்முக்கிய பணியை வலியுறுத்துகின்றன. திருச்சபைக் கோட்பாடுகளைப்பற்றித் தெளிவாக எழுதிய வேத வல்லுனர்களில் முக்கியமானவரான ஜோன் ஓவன் “சபை ஆட்சிமுறை அல்லது கிறிஸ்துவின் அதிகாரத்தைச் சபையில் கையாளும் பணி மூப்பர்களுக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. மூப்பர்களாக இருக்கும் அனைவரும் ஆளும் உரிமையைக் கொண்டுள்ளார்கள், அவர்களைத் தவிர வேறு எவருக்கும் சபையில் உரிமை கிடையாது.”1 என்று கூறியுள்ளார். அதுவும் இன்றைய சூழ்நிலையில் இம்மூப்பர்கள் ஆண்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூற வேண்டியதும் அவசியமாகிறது.

திருமறை இவ்வாறு போதிக்க அதன் வழி செல்லாமல் சபைகளில் ‘கமிட்டிகளை’ ஏற்படுத்திக் காரியங்கள் செய்வது தவறு. இதன் மூலம் நாம் செய்யும் தவறுகளை அவதானிப்போம். முதலாவதாக, யார் கமிட்டியில் இருக்க வேண்டும் அவர் எத்தகைய தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நாமே முடிவு செய்பவர்களாக இருக்கிறோம். ஏனெனில் வேதம் கமிட்டியைப் பற்றி எதையுமே கூறுவதில்லை. இதன் மூலம் கர்த்தர் சபையில் யார் ஆள வேண்டும், அவர் எத்தகைய தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அதற்கெல்லாம் நாம் தடையாக அமைந்து விடுகிறோம்.

இரண்டாவதாக, உலகப் பிரகாரமாக அமையும் சபைக் ‘கமிட்டி’யிடம் மூப்பர்களுக்கு இருக்கும் ஊழிய வாஞ்சை, ஆடுகளை வழி நடத்தும் பக்குவம் ஆகியவற்றை நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் காரிய சித்தர்களாக இருந்த போதும் சபை நடத்தத் தேவையான முக்கிய இலக்கணங்கள் இல்லாதிருப்பதால் சபையின் ஆவிக்குரிய வளர்ச்சி குன்றும்.

மூன்றாவதாக, சபை மக்களை வழி நடத்திச் செல்வதில் வாஞ்சையுள்ள போதகர்களுடன் துணையாக இருக்கவுமே கர்த்தர் மூப்பர்களை நியமிக்கும்படிக் கூறியிருப்பதால், மூப்பர்களாயில்லாத சபைக் ‘கமிட்டி’ அத்தகைய வாஞ்சையைக் கொண்டிராமல் போதகர்களின் ஊழியத்திற்குத் துணைபுரியார்கள்.

சில சபைகளில் மூப்பர்களுக்கான வேதபூர்வமான அடையாளங்களைக் கொண்டிருப்பவர்களை சந்தேகமற அறிந்து கொள்ளவும் சபையாக அவர்களை அங்கீகரிக்கு முன் அவ்வூழியத்திற்குத் தயார் செய்யவும் குறுகிய காலத்திற்கு ‘கமிட்டி’யாக போதகர்களுடன் செயற்படும்படிச் செய்கிறார்கள். இங்கே இறுதி நோக்கம் தெளிவாக இருப்பதால் இது நல்லமுறையே கண்ணை மூடிக்கொண்டு ஏனோ தானோவென்று மூப்பர்களை நியமிப்பதைவிட இது மேலானது.

2. வேத இலக்கணங்களைக் கொண்டு நியமிக்கப்பட்ட உதவிக்காரர்கள் சபையின் நிதி, நிர்வாகக் காரியங்களைக் கவனித்தல் வேண்டும். இவர்கள் மூப்பர்களின் கீழ் இக் காரியங்களை சபை நன்மைகருதிச் செய்தல் அவசியம். மூப்பர்களுக்குள்ள அதிகாரம் உதவிக்காரர்களுக்கு கர்த்தரால் கொடுக்கப்படவில்லை. அதாவது சபையை ஆளும் பொறுப்பு அவர்களுடையது அல்ல. இதனால் உதவிக்காரர்களின் பணி தாழ்வுள்ளது என்று தீர்மானித்து விடக்கூடாது. கர்த்தரின் சபையில் உயர்வு தாழ்வு என்பவற்றிற்கு இடமில்லை. ஆனால் ஒவ்வொரு பணிக்கும் அவர் சில வரம்புகளை நியமித்துள்ளார். அதன்படி உதவிக்காரர்கள் மூப்பர்களின் கீழ் அவர்களுக்கு உதவியாக நிர்வாகக் காரியங்களைக் கவனிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளார்கள். போதித்து சபையை ஆளும் பொறுப்பு மூப்பர்களைச் சேர்ந்ததாயிருக்க, அவர்கள் அக்காரியத்தை எவ்விதத் தடையுமின்றிச் செய்யத் துணை புரியும் பொருட்டு நிர்வாகக் காரியங்களைக் கவனிக்க சபையில் உதவிக்காரர்களை நியமிக்கும்படிக் கர்த்தர் பணித்துள்ளார் (அப்போஸ். 6:1-7). அதுமட்டுமல்லாது, மூப்பர்களுக்கும், உதவிக்காரர்களுக்கும் இருக்க வேண்டிய இலக்கணங்களைப் பற்றிக் குறிப்பிடும் வேதப்பகுதிகள் உதவிக்காரர்கள் போதிப்பவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பாக்கவில்லை (1 தீமோ. 3). அதாவது அவர்கள் வேதம் அறிந்தவர்களாகவும், ஆவிக்குரிய வாழ்வில் முதிர்ச்சியுள்ளவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியமெனினும் அதிகாரபூர்மாக வேதத்தைப் போதிக்கும் செயலை வேதம் அவர்களிடம் எதிர்பார்க்கவில்லை.

ஜோன் ஓவன் இதுபற்றிக் கூறும்போது, “சபையின் எல்லாக் காரியங்களையும் கவனிக்கும் பொறுப்பு பிரதானமாகப் போதகர்களிடமும், மூப்பர்களிடமும் கொடுக்கப்பட்டிருந்தபோதும், உதவிக்காரர்கள் அவர்களுக்குத் துணையாக கீழ்வரும் பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள்:

1. சபையின் தேவைகளை, முக்கியமாக வறியோரின் தேவைகளை மூப்பர்களின் கவனத்திற்குக் கொண்டுவரல்.

2. தமது கடமைகள் சம்பந்தப்பட்ட முக்கிய காரியங்கள் பற்றி மூப்பர்களுடைய ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளல்.

3. சபையில் நிர்வாகக் காரியங்கள் அனைத்திலும் மூப்பர்களுக்குத் துணையாக இருத்தல்.”2 என்று கூறுகிறார்.

இன்று சில சபைகளில் உதவிக்காரர்களே மூப்பர்களைப்போல் சபை நடத்தி வருகிறார்கள். அதற்கு வேதம் இடம் கொடுக்கவில்லை. மூப்பர்களை நியமிக்காமல் அவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை உதவிக்காரர்கள் செய்வது சரியல்ல.

3. சபை மூப்பர்கள் சபைக் காரியங்கள் சம்பந்தமாக தாங்கள் எடுக்கும் தீர்மானங்களை அங்கத்தவர்களின் உடன்பாட்போடு (இணக்கத்தோடு) நடை முறைப்படுத்த வேண்டும். பெரும்பாலான சபைகளில் இன்று சபை மக்களுக்கு எது பிடித்தமானது? எது பிடிக்காது? என்ற அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. தீர்மானங்கள் எடுக்க சபை கூடிவரும்போது பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் அவை தீர்மானிக்கப்படுவது பரவலாகவே காணப்படும் முறையாகும். இத்தகைய ஜனநாயக அமைப்புக்கும் வேதத்திற்கும் வெகு தூரம். ஏனெனில் நாம் ஏற்கனவே கூறியது போல் சபைக்குத் தலைவராக கிறிஸ்துவே இருக்கிறார். அவரது ஆட்சியே சபைகளில் நடக்க வேண்டும். சபையின் தேவனாகிய கிறிஸ்துவின் ஆட்சி நடைமுறையில் காணப்பட வேண்டும்.

வழமையாக சபைகளில் போதகர்களின் எதோச்சாதிகாரம் அல்லது ஜனநாயக மக்கள் ஆட்சி என்று இருக்கும் நிலமையை மாற்றி வேதபூர்வமான கிறிஸ்தவன் அரசமைப்பை ஏற்படுத்துவது எப்படி? இங்குதான் நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட, மூப்பர்கள் தாம் எடுக்கும் தீர்மானங்களை சபையாரின் உடன்பாட்டுடன் நிறைவேற்ற வேண்டும் என்ற கோட்பாட்டை விளக்க வேண்டியது அவசியமாகின்றது. இதை நாம் விளக்க முனையும்போது சில உண்மைகளைக் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படுகின்றது. அதாவது சபை ஒரு போதகரை நியமிக்கும் போது அவருக்கு தேவ செய்தியை வேதபூர்வமாகப் போதிக்கும் அதிகாரத்தை வழங்குவதை உணர வேண்டும். போதகராக அவரை நியமித்த பின் நாம் விரும்பியதைத்தான் அவர் போதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. வேதத்திலுள்ளதை மட்டுமே அவர் போதிக்க வேண்டும். சில வேளைகளில் அவ்வாறு அவர் வேதத்தைப் போதிக்கும்போது அது நமக்குப் பிடித்தமில்லாததாக இருக்கலாம். ஆனால் நமக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ கொடுக்கப்படும் போதனை வேதபூர்வமாக இருந்தால் அதை ஏற்று நம்மை மாற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இவ்விதமாக போதகர்களின் மூலம் தனது வார்த்தையைப் பயன்படுத்திக் கர்த்தர் சபையில் தன் சித்தத்தை நிறைவேற்றிக் கொள்கிறார். போதகர்கள் வேதத்தில் இல்லாததை எடுத்துச் சொல்லாதவரை நாம் அவர்கள் போதனைக்கும், வழிநடத்தலுக்கும் கட்டுப்பட்டேயாக வேண்டும். இது கர்த்தருடைய ஆட்சிமுறை.

அதுமட்டுமல்லாமல் போதகர்களும், மூப்பர்களும் சபை வளர்ச்சி சம்பந்தமான பல தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. அத்தகைய தீர்மானங்களை அவர்கள் வேதத்தின் போதனைக்கேற்றதா என்று தீர்மானித்தபின் சபையின் முன் கொண்டுவர வேண்டியது அவசியம். அவ்வாறான நிலையில் சபை கூடி வரும்போது அங்கத்தவர்கள் அத்தீர்மானங்கள் வேதபூர்வமாக இருப்பின் அவற்றை ஏற்று உடன்பட வேண்டியது அல்லது இன்னொரு விதமாகக் கூறினால் அவற்றிற்கு இணங்க வேண்டியது அவசியம். இதை சில சபைகளில் கரங்களை உயர்த்திக் காட்டியோ, வேறு முறைகளிலோ செய்வார்கள். மூப்பர்கள் வேதபூர்வமாக விளக்கிய தீர்மானங்களை எதிர்ப்பதோ அல்லது அவை நடை முறைப்படுத்தப்படத் தடையாயிருப்பதோ ஆகாத காரியம். அதேவேளை மூப்பர்களும் ஒருவேளை தாம் வேதபூர்வமாக எடுத்த தீர்மானங்களில் சபை மக்களுக்குத் தகுந்த விளக்கமில்லையெனக் கண்டால் அத்தீர்மானங்களை அவர்கள் மீது திணிக்க முயற்சிக்காது அவற்றைப் பொறுமையோடு தொடர்ந்து விளக்கி அவர்களுடைய உடன்பாட்டுடன் அவற்றை நிறைவேற்ற முயல வேண்டும். சபை மக்கள் அத்தீர்மானங்களை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களா என்று மூப்பர்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறே கிறிஸ்து இயேசுவின் அரசாட்சி மூப்பர்கள் மூலம் சபையில் நடைபெறுகிறது.

இங்கே மூப்பர்கள் சபை அங்கத்தவர்களின் உடன்பாட்டைக் கோருகிறபோது அது அவர்களது அனுமதியைக் கோருவதாகக் கருதப்படக்கூடாது. ஏனெனில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மூப்பர்களுடையது. வேத அடிப்படையில் மூப்பர்கள் அத்தீர்மானங்களை ஏற்கனவே எடுத்துள்ளார்கள். தீர்மானம் எடுப்பது சபை அங்கத்தவர்களின் பொறுப்பு அல்ல, அது மூப்பர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம். தீர்மானங்கள் சபைமுன் வருகின்றபோது அவை வேதபூர்வமாக இருக்கின்றவரை சபையார் அவற்றை ஏற்று நடப்பதன் மூலம் கர்த்தரின் ஆட்சிக்குட்படுகிறார்கள். இதைவிடுத்து அங்கத்தவர்கள் சபையில் தாறுமாறாகப் பேசி, தங்கள் உரிமையை நிலைநாட்டும் வழிகளைக் கையாள்வது, போதகர்கள், மூப்பர்களில்லாமல் சபையை நடத்துவது எல்லாம் உலகப்பிரகாரமான நடவடிக்கைகள். இவற்றிற்கும் வேதத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை.

(வளரும்)

1. John Owen, Vol. 16, p. 106

2. Ibid. Vol. 16, p. 151

கிருபையின் போதனை என்றால் என்ன?

கடந்த இதழில் திருமறைக்கு முரணானவகையில் வேத விளக்கமளித்து கர்த்தரின் கிருபையையே எள்ளி நகையாடும் ஆமீனியனின் போதனைகளையும் அவற்றிற்கு எவ்வாறு ஒல்லாந்து தேசீய சமயக்குழு முடிவு கட்டியது என்றும் பார்த்தோம். இருந்தாலும் காலத்தால் அழியாத சத்தியங்களைப் போலவே சில வேளைகளில் பொய்யும் தலை தூக்குவதுபோல் ஆமீனியனின் போதனைகள் இன்றும் பலரைப் பல நாடுகளிலும் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கின்றது.

Continue reading

சிரிக்கக்கூடிய காரியமா?

‘டொரான்டோ ஆசீர்வாதம்’ பற்றிய ஒரு கண்ணோட்டம்

சிரிக்க வைக்கும் சிரிப்பலை மாயம் பற்றிய செய்தியை இப்பத்திரிகை மூலமாக முன்பே தந்திருந்தோம். கனடாவின் டொரான்டோ நகரில் உள்ள ‘ஏர்போர்ட் வினியட் சபை’யின் மூலம் 1994 ஆம் ஆண்டில் இம்மாயம் முதன் முதலாக தலைப்புச் செய்தியில் இடம் பிடித்தது. பெந்தகொஸ்தே, பரவசக்குழுக்கள் மத்தியிலேயே பிரசித்தி பெற்று ‘டொரொன்டோ ஆசீர்வாதம்’ என்று பெயர் பெற்றுள்ள இதனைச் சிலர் ஆவியின் எழுப்புதல் என்று கூறினாலும் ஆண்டவரை இதுவரை அறியாத யாருமே அவரை இதன் மூலம் அறிந்து கொண்டதாக செய்தியில்லை. இதன் இன்றைய முக்கிய தலைவர்களில் ஒருவரான ரொட்னி-ஹாவார்ட் பிரவுன் இதனை எதிர்ப்பவர்கள் கண்கள் குருடாகி பேசமுடியாமல் போவார்கள் என்று பயமுறுத்தி வருகிறார். டொரான்டோவின் ‘ஏர்போட் வினியட் சபை’யில் ஆரம்பிக்கு முன்பாகவே இம்மாயம் பெனி ஹின், ரொட்னி ஹாவார்ட் பிரவுன், கென்னத் கோப்லான்ட் ஆகிய மனிதர்களால் நடத்தப்பட்டு வந்தது. மொரிஸ் செரூல்லோ, போல் யொங்கி சோ ஆகியோரும் இதைக் குறித்து நூல்கள் எழுதியுள்ளனர்.

Continue reading

பரிசுத்த வேதாகமம்

“1. இரட்சிப்புக்கின்றியமையாத சகல விதமான அறிவையும், விசுவாசத்தையும், கீழ்ப்படிவையும் அளிக்கக்கூடிய தவறிழைக்காத நியதியாகவும் (கட்டளை விதி), உறுதியானதும், போதுமானதாகவும் பரிசுத்த வேதாகமம் மட்டும் அமைந்துள்ளது. உள்ளுணர்வும், படைப்பின் கிரியைகளும் (பொது வெளிப்பாடு), மனிதன் எந்தவிதமான போக்கும் சொல்ல இடமளியாதபடி, தேவனுடைய ஞானம், வல்லமை, நற்குணம் ஆகியவற்றைத் தெளிவாக வெளிப்படுத்தினாலும், இரட்சிப்புக்கு இன்றியமையாத கடவுளைப்பற்றிய அறிவையும் அவரது சித்தத்தையும் வெளிப்படுத்த வல்லமையற்றவை. ஆகவே கடவுள் தமது திருச்சபைக்கு வெவ்வேறு காலங்களில் பல்வேறுவிதத்தில் தம்மையும் தம் சித்தத்தையும் வெளிப்படுத்தினார். அதுமட்டுமல்லாது, சத்தியத்தின் பாதுகாப்பிற்காகவும், பரப்புதலுக்காகவும், தீய மனிதர்கள், பிசாசு, உலகம் ஆகியவற்றின் தொல்லைகளின் மூலம் திருச்சபை பாதிப்புறாதபடி நிலை நிறுத்தப்பட்டு ஆறுதல் பெறவும், தம் சித்தத்தைக் குறித்தும் தம்மைக் குறித்துமான வெளிப்பாட்டை எழுத்துவடிவில் அருளவும் திருவுளங் கொண்டார்.”

(1689 திருமறைக் கோட்பாட்டின் பரிசுத்த வேதாகமத்தைப் பற்றிய முதல் அதிகாரத்தின் முதலாவது பகுதி.)

கிறிஸ்தவக் கோட்பாடுகள்

கேள்வி 25: கிறிஸ்து எவ்வாறு தீர்க்கதரிசியாகிய பணியைச் செய்கிறார்?

பதில்: கிறிஸ்து எமது இரட்சிப்பிற்கான தேவசித்தத்தைத் தனது வார்த்தையாலும், ஆவியாலும் வெளிப்படுத்துவதன் மூலம் தீர்க்கதரிசியாகிய பணியைச் செய்கிறார்.

(யோவான் 1:18; யோவான் 20:31; யோவான் 14:26)

விளக்கக்குறிப்பு:

பவுல் எபேசியர் 2:20 இல் திருச்சபையானது ‘அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டு அதற்குக் கிறிஸ்துவே மூலைக்கல்லாயிருக்கிறார்’ என்று கூறுவதைப்பார்கிறோம். ஏனைய அடிக்கற்கள் மூலைக்கல்லைச் சார்ந்திருப்பதைப் போல், அப்போஸ்தலரும் தீர்க்கதரிசிகளும் இயேசு கிறிஸ்துவை சார்ந்திருக்கிறார்கள். பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் கடவுளின் வசனத்தை எடுத்துக் கூறும் அதிகாரத்தைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சொன்னவையும், எழுதியவையும் கடவுளின் வார்த்தைகளேயன்றி வேறில்லை. அவர்கள் தங்களது சுயவல்லமையின் மூலம் பேசாமல் ஆவியின் வல்லமையினால் பேசினார்கள் (1 பேதுரு 1:1).

Continue reading

கேள்வி? – பதில்!

வாசகர்கள் எமக்கு அனுப்பும் கேள்விகளில் தெரிவு செய்யப்பட்டவை ஏனையோரின் பயன்கருதி இப்பகுதியில் பிரசுரமாகும். – ஆசிரியர்

இசைவழி ஊழியங்களும் அருளுரையும் ? !

இசைவழி ஊழியங்கள் பற்றிய தங்கள் கருத்தென்ன? தமிழ்க் கலாச்சாரத்துடன் ஆழ்ந்த தொடர்புடைய இசை நிகழ்ச்சியான ‘வில்லுப்பாட்டு’ போன்றவற்றின் மூலம் கர்த்தரின் செய்தியை எடுத்துச் சொல்வது தவறா?

கேள்வி சுருக்கமாக அமைந்துவிட்டபோதும் இதற்கான பதில் சுருக்கமாக அமைவது கடினம். இன்று பலர் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இசைவழி ஊழியங்கள் மூலம் கர்த்தரைப்பற்றி எடுத்துச் சொல்லி வருகிறார்கள். பலர் தங்கள் தாலந்துகளைப் பயன்படுத்தி இவ்வூழியத்தின் மூலம் தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ளும் வேளையில், பல சிரமங்களுக்கு மத்தியில் இவ்வூழியத்தைச் செய்து வருபவர்களும் உண்டு. ஆனாலும் இவ்வகை ஊழியங்களை எவ்வாறு நியாயப்படுத்த முடியும், இவற்றிற்கு வேதம் அனுமதி கொடுக்கிறதா? என்று நாம் ஆராய வேண்டியது அவசியம்.

Continue reading

திருச்சபை வளரத் திருமறைக் கோட்பாடுகள்

“சத்தியத்தை அறிந்து கொள்வதற்கு நாம் திருமறையையே நாடி வர வேண்டும்” இது “யெகோவாவின் சாட்சிகள்” என்று அழைக்கப்படும் கூட்டத்தார் தங்களுடைய பிரசுரத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு வாசகம். இதிலிருந்து நாம் அறிந்து கொள்வதென்னவென்றால் பிசாசும் உண்மையைத் தன் காரியத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்க மாட்டான் என்பதுதான். இந்நிலையில் வெறுமனே திருமறையை நாம் விசுவாசிக்கிறோம் என்று கூறுவது மட்டும் போதாது, நாம் விசுவாசிப்பது என்ன என்பதைத் தெளிவாக, அறிந்திருக்கவும் விளக்கவும் வேண்டும்.

Continue reading