பழைய சுவிசேஷமும், புதிய சுவிசேஷமும்

சுவிசேஷத்திலும் பழசு புதிதென்று இருக்கின்றதா? என்று நீங்கள் கேட்கலாம். ஆம்! நண்பர்களே பழைய சுவிசேஷம் என்று நாம் குறிப்பிடுவது கர்த்தர் தனது வார்த்தையின் மூலம் நமக்கருளின மெய்யான சுவிசேஷத்தைத்தான். ஆனால் புதிய சுவிசேஷம் திருமறையைத் திரிபுபடுத்தி இன்று நம்மத்தியில் உலவி வரும் போலிப் போதனையாகும். ஒன்று கர்த்தரை மகிமைப்படுத்துகிறது; மற்றது மனிதனைக் கர்த்தரின் இடத்திற்கு உயர்த்த முனைகிறது. ஒன்று இரட்சிப்பிற்கு கர்த்தரை நாடிவரும்படி அழைப்பு விடுக்கின்றது; மற்றது நாம் கடவுளின் துணையோடு நம்மை நாமே இரட்சித்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறது.

Continue reading

வில்லியம் பார்க்ளே ஒரு சாதாரண மனிதன் ! ! !

வில்லியம் பார்க்ளேயின் நூல்களை எங்கும் காணலாம். நூல் நிலையங்கள். பாவிக்கப்பட்ட புத்தகக் கடைகள், மூன்றாம் உலக நாடுகளில் வாழும் போதகர்களின் படிப்பறைகள், ஸ்கொட்லாந்தின் போதகர்கள் அனைவரதும் இல்லங்கள் என்று பார்க்ளேயின் நூல்கள் நுழையாத இடங்களே இல்லை. பார்க்ளே எழுபது நூல்களை எழுதியுள்ளார். அவரது பதினேழு வால்யூம்கள் அடங்கிய புதிய ஏற்பாட்டு விளக்கவுரைகள் நான்கு மில்லியன் பிரதிகள்வரை விற்பனையாயின. ஆப்பிரிக்க, ஆசிய நாட்டுப் போதகர்களை அவை அடைய வேண்டுமென்பதற்காக பார்க்ளே தனது புத்தகங்களுக்குப் பணமே வாங்கவில்லை. அருமையான உதாரணங்களையும், சுருக்கமான பத்திகளையுடைய சிறு அத்தியாயங்களையும் கொண்டதாக அவரது எழுத்துக்கள் அமைந்தன. அவரது நூல்கள் வியக்கத்தக்க வரலாற்று விபரங்களைக் கொண்டவை. தான் ஒரு குழப்பமற்ற ‘சாதாரண மனிதன்’ என்ற உருவத்தை மற்றவர்கள் மனதில் பதிய வைப்பதை பார்க்ளே நோக்கமாகக் கொண்டிருந்தார். இது அவரது நூல்கள் பலவற்றின் தலைப்பாகவும் அமைந்தது. ஒரு சாதாரண மனிதனின் ஜெபநூல், ஒரு சாதாரண மனிதனின் பார்வையில் அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கை என்பன இவற்றில் சில. ஞாயிறு பாடசாலைகளுக்கும், ‘போய்ஸ் பிரிகேடுகளுக்கும்’ பாடங்களை அவர் எழுதியிருந்தார். பிரித்தானிய வார இதழ், எக்ஸ்பொசிட்டரி டைம்ஸ் ஆகிய இதழ்களிலும் அவர் தொடர்ந்து எழுதி வந்தார்.

Continue reading

கிருபையின் போதனைகள்

கடந்த இதழில் சீர்திருத்தப் போதனைகளின் முக்கிய அம்சங்களைப் பார்க்கத் தொடங்கினோம்.

அதன் முதலாவது அம்சமான கடவுளின் சர்வ ஏகாதிபத்தியத்தைப் பற்றி விளக்கமாகப் பார்த்தோம். இவ்விதழில் அதன் இரண்டாவது அம்சத்தைக் கவனிப்போம்.

2. பாவத்தினால் முழுமுற்றாகப் பாதிக்கப்பட்ட மனிதனின் உபயோகமற்ற நிலை

சீர்திருத்தப் போதனைகளுக்கு, அதாவது கிருபையின் போதனைகளுக்கு மாறான கருத்துக்களை ஆராய்ந்து பார்க்கும்போது கடவுளுக்கு எதிரான மனித குலத்தின் பாவத்திற்கும், கடவுளிடமிருந்து பிரிந்திருக்கும் அவர்களது ஆவிக்குரிய நிலைக்கும் முக்கியத்துவம் கொடுக்காததே அவற்றின் முதன்மையான தவறாகக் காணப்படுகின்றது. சிலர் இவற்றை முற்றாக அலட்சியம் செய்கிறார்கள். ஏனையோர் இவற்றிற்கும் தங்களது வாழ்க்கைக்கும் எந்தவித தொடர்பும் இல்லாதது போல் வாழ்ந்து வருகிறார்கள், கடவுளிடமிருந்து பிரிந்திருக்கும் மனிதனின் நிலையையும், பாவம் அவனிலும், மனித குலத்திலும் ஏற்படுத்தியிருக்கும் மோசமான பாதிப்பையும் நாம் வலியுறுத்தாவிட்டால் நமது உண்மையான நிலையையும், அதிலிருந்து நம்மை விடுவிக்கக்கூடிய இரட்சகரின் அவசியத்தையும் நாம் ஒருபோதும் பாராட்ட முனையமாட்டோம்.

கடவுள் மனிதனைப் படைத்தபோது அவர் தேவர்களைப் படைத்ததைவிட வித்தியாசமான முறையைக் கையாண்டார். அவர் முழு மனித குலத்தையும் ஒரே நேரத்தில் படைக்காது, முதலில் ஒரு மனிதனைப் படைத்தார். அவனில் இருந்து மனித குலம் தோன்றுமாறும், அம்மனித குலத்தின் நியாயபூர்வமான பிரதிநியாக இருக்குமாறும் அவனைப் படைத்தார். கடவுள் அவனுக்கு அளித்த நிலையில் இருந்து அவன் தவறாதிருந்தால், அவன் பிரதிநிதித்துவப்படுத்தும் முழு மனித குலமுமே பரிசுத்தமான தேவர்களைப்போல என்றும் நிரந்தரமான பரிசுத்தத்தோடு இருந்திருக்க முடியும்.

ஆகவே, முதல் மனிதனான ஆதாம் மனிதகுலத்தின் பிரதிநிதியாக முழுமையாகவும் பரிசுத்தமாகவும் கடவுளுக்குக் கீழ்ப்படியும்படியாக சோதிக்கப்பட்டான். அவன் தவறினால் அதற்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதையும் கடவுள் அவனுக்குத் தெளிவாகத் தெரிவித்திருந்தார் (ஆதி. 2:16-17). மரணமே அத்தண்டனையாகும். கடவுளுக்குக் கீழ்ப்படியாது வீழ்ந்த தேவர்களுக்குக் கிடைத்த அதே தண்டனையே மனிதனுக்கும் தீர்மானிக்கப்பட்டது. கடவுள் மனிதனுக்கு அளித்த சோதனை எந்தவித குழப்பமுமற்றதாக, அவனுக்குச் சார்பானதாக, இலகுவானதாக இருந்தது. அதிலிருந்து அவன் தவறினால் அவனால் எந்தவித சாக்குபோக்கும் சொல்லமுடியாது.

ஆனால் ஆதாம் கடவுளுக்குக் கீழ்ப்படியாது பாவம் செய்து பாவத்தில் வீழ்ந்தான். முழு மனித குலமும் அவனது பாவத்தில் பங்கு கொண்டது. அப்பாவத்தின் பலனாக ஆவிக்குரிய மரணம் அல்லது கடவுளிடமிருந்து பிரிந்திருக்கும் நிலை ஏற்பட்டது. ஆதாம் பாவத்தில் வீழ்ந்தபின் 930 வருடங்கள் இவ்வுலகில் வாழ்ந்திருந்தபோதும், பாவத்தில் வீழ்ந்தபோது உடனடியாக கடவுளோடு தனக்கிருந்த ஆவிக்குரிய அனுபவத்தை இழந்து அவரிடமிருந்து பிரிக்கப்பட்டான். அந்நாளிலிருந்து அவனது வாழ்க்கை மரணத்தை நோக்கி இடைவிடாது துரித நடைபோட்டது. மனிதன் இவ்வுலக வாழ்க்கையில் சாத்தானும், அவனது துர் ஆவிகளும் செய்யுமளவுக்கு பாவத்தைச் செய்யாதவாறு பொதுவான கிருபை அவனைத் தடுத்து வைத்திருக்கிறது. இப்பொதுவான கிருபையின் ஆசீர்வாதங்களான குடும்பம், நண்பர்கள், பணவசதி, சுகநலம், இயற்கை அழகு ஆகியவற்றை எல்லா மனிதர்களும் அனுபவிக்கிறார்கள். இருப்பினும் மனிதன் பாவத்தின் வழிகளிலேயே சென்று கொண்டிருக்கிறான். இத்தடைகள் இல்லாவிட்டால் துர் ஆவிகள்போல் அவனால் மாறிவிட முடியும். தனது பாவநிலையில் அவன் கடவுளுக்குப் பயந்து அவரை விட்டு ஓடிவிட முனைகிறான். அதுமட்டுமல்லாமல் துர் ஆவிகளைப் போல அவரை முற்றாக வெறுக்கவும் செய்கிறான். அவனை இப்படியே விட்டுவிட்டால் தனது நிலையில் அவன் தொடர்ந்திருப்பான். பவுல் கூறுவதுபோல, “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை” (ரோமர் 3:10,11). இந்நிலையில் இருந்து கடவுளின் மகிமையுள்ள வல்லமை மட்டுமே அவனைக் கரை சேர்க்க முடியும். அவ்வாறு அவன் காப்பாற்றப்பட வேண்டுமானால் கடவுளே அதற்கான முதல் நடவடிக்கையை எடுத்து, அவனது பாவத்திற்கான கிரயத்தைச் செலுத்தி, அவனது குற்றவுணர்வை நீக்கி மறுபடியும் பரிசுத்தமானவனாகவும், நீதிமானாகவும் மாற்ற வேண்டும்.

இதையே கடவுள் செய்கிறார். தனது சர்வ ஏகாதிபத்தியத்தினால் சாத்தானின் இராஜ்யத்திலிருந்து மனிதரை விடுவித்து பரலோகஇராஜ்யத்தில் அவர்களை சேர்க்கிறார். இவர்களையே ‘தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்’ என்று திருமறை 25 தடவை வர்ணிக்கின்றது. பின்வரும் வசனங்களை நாம் உதாரணமாகப் பார்க்கலாம். “அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப் போவதில்லை; தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் நிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்” மத்தேயு 24:22, “நீங்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்று நாங்கள் அறிந்து” 1 தெசலோ. 1:4, “அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள்; தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்” ரோமர் 11:7, “தேவன் தெரிந்து கொண்டவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்?” ரோமர் 8:33, “தெரிந்து கொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது” 1 பேதுரு 1:1.

வேதம், கடவுள் மனித குலத்தில் அநேகரை அவர்களுடைய பாவத்தின் தண்டனையிலிருந்து விடுவித்துள்ளார் என்று கூறுகிறது. இதைச் செய்யும் பொருட்டு திரித்துவத்தின் இரண்டாம் நபரான கிறிஸ்து கன்னிப்பிறப்பின் மூலம் மனித இயல்பைத் தன்மேல் சுமந்து மனித குலத்தில் ஒரு சாதாரண குழந்தையாக அவதரித்தார். இவ்வாறாக கடவுள் நம்மில் ஒருவராகப் பிறந்தார். இயேசு தனது மக்களின் பிரதிநிதியாக பூரணமான பாவமற்ற வாழ்க்கையை வாழ்ந்து, தன்னைத் தனது நியாயப்பிரமாணங்களுக்கும் உட்படுத்தி, பாவத்திற்கு கடவுள் விதித்துள்ள தண்டனையையும் தன்னில் தாங்கி அனுபவித்தார். தனது பாவமற்ற வாழ்க்கையில் ஆதாம் மீறிய கடவுளின் நியாயப்பிரமாணத்தைப் பூரணமாகக் கைக்கொண்டு தனது மக்களுக்காக பூரணமான நீதியையும், பரலோக இராஜ்யத்தை அடையும் உரிமையையும் பெற்றுத் தந்தார். அவரது மக்கள் எத்தகைய பாடுகளை நித்திய காலமும் நரகத்தில் அனுபவித்திருக்க வேண்டுமோ அதை கிறிஸ்து தன்னில் அனுபவித்தார். இவ்வாறாக அவர் தனது மக்களை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவித்தார். கிறிஸ்துவின் மீட்பின் பலன்கள் பிதாவினால் அவருக்கு அளிக்கப்பட்ட மக்களிடத்தில் பரிசுத்த ஆவியின் மூலம் நிறைவேற்றப்படுகிறது. இதையே அவர்கள் பரிசுத்த ஆவியின் மூலம் மறுபிறப்புப் பெறுகிறார்கள் என்று கூறுவர். அதாவது ஆவிக்குரிய வாழ்வில் உயிரளிக்கப்பட்டு புதுப்பிறப்பை அடைகிறார்கள்.

இதையே பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் 5:12, 19 இலும், எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் 2:1-10 இலும் விளக்குகிறார்.

கிறிஸ்து இறையியலில் மூன்று வித முக்கிய நடவடிக்கைகளை அவதானிக்கலாம். முதலாவதாக, ஆதாமினுடைய பாவம் நம்மெல்லோர் மீதும் வைக்கப்பட்டு – அதாவது நியாயப்படி நமது கணக்கில் வைக்கப்பட்டு – நாமெல்லோரும் அதற்குப் பொறுப்பாளிகளாகவும், நியாயப்படி அதன் பலாபலன்களை அனுபவிக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது. இதனையே மூலபாவம் என்று கூறுவர். இரண்டாவதாக, இதே முறையில், நமது பாவம் கிறிஸ்துவின் கணக்கில் வைக்கப்பட்டு அதன் பலாபலன்களை அவர் அனுபவிக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது. மூன்றாவதாக, கிறிஸ்துவின் நீதி நமது கணக்கில் வைக்கப்பட்டு நாம் பரலாகம் செல்லும் உரிமையையும் அளிக்கிறது. இவை ஒவ்வொன்றும் சட்டப்படியான நடவடிக்கைகள். ஆதாமிடமிருந்து நாம் நிந்தனையையும், அழிவையும் பெற்றுக்கொண்டுள்ளதுபோல் கிறிஸ்துவிடமிருந்து இரட்சிப்பைப் பெற்றுக் கொள்கிறோம். இம்மூன்று நடவடிக்கைகளில் எதையாவது நிராகரிப்பது கிறிஸ்தவத்தையே நிராகரிப்பது போலாகும்.

இவ்வாறாக ஆதாமுக்கும் கிறிஸ்துவுக்குமிடையில் இரட்சிப்பைக் குறித்த ஒரு பெருந் தொடர்பிருப்பதைக் காணலாம். பவுல் வசனத்திற்கு மேல் வசனமாக, நம்மைப் பிடித்திருப்பது வெறும் வியாதி அல்ல, அதைவிடக் கொடூரமான ஆவிக்குரிய மரணம் என்பதை வெளிப்படுத்துகிறார். கிறிஸ்துவும், “ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால் அவன் தேவனுடைய இராஜ்யத்தைக் காணமாட்டான்” (யோவான் 3:3) என்றும், “என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாதிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?” என்றும் கூறியுள்ளார். ஆவியினால் புதுப்பிக்கப்படாத மனிதன் கடவுளின் இராஜ்யத்தைப் பற்றிய உண்மைகளைக் கேட்டாலும் அவற்றைப் புரிந்து கொள்ள முடியாதிருப்பதுடன், கடவுளின் இராஜ்யத்தைப் பார்க்கவோ அதை அடையவோ இயலாதவனாக இருக்கிறான்.  இந்நிலையில் கடவுள் அவனைத் தொடர்ந்து விட்டிருந்தால் வீழ்ந்துபோன தேவ தூதர்களைப்போல மீளமுடியாத வீழ்ச்சியினை அனுபவித்திருப்பான்.

எவ்வாறு இறந்துபோன ஒருவன் தன்னை உயிர்ப்பித்துக்கொள்ள இயலாதோ அதேபோல், ஆவியில் இறந்துள்ள ஒரு மனிதன் தன்னை ஆவியில் புதுப்பித்துக் கொள்ள இயலாதவனாக இருக்கிறான். ஆகவே அவனுக்கு இயற்கையின் வரம்புகளை மீறி அதிசயங்களை செய்யும் கடவுளின் துணை தேவைப்படுகிறது. எனவே தனது வல்லமையின் மூலம், பரிசுத்த ஆவியால் சாத்தானின் பிடியில் இருந்து நம்மை விடுவித்து கடவுள் தமது ஆவியின் இராஜ்யத்தில் குடியேற வைக்கிறார். இவ்வனுபவத்தைத் தரும் நற்செய்தி எல்லோருக்கும் கொடுக்கப்பட்டாலும், கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மட்டுமே இதனைத் தம் வாழ்வில் அடைகிறார்கள். அவர்களே தேவ ஆவியினால் புதுப்பிக்கப்பட்டு நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

(வளரும்)

புத்தக விமர்சனம்

கிருபையின் மாட்சி

எழுதியவர்: ஆபிரகாம் பூத்

தமிழாக்கம்: வேதவள்ளி மெசாயாடொஸ்

இந்நூலை இவ்விதழில் அறிமுகப்படுத்துவது ஒருவிதத்தில் மிகப் பொருத்தமானது. ஏனெனில் இவ்விதழில் தேவ கிருபையின் மகிமையைப் பற்றிய மேலும் பல நல்ஆக்கங்களை வாசகர்கள் பார்க்கலாம். ஆபிரகாம் பூத் கூறுவதுபோல், சீர்திருத்த சபைகளுக்கும் ரோமன் கத்தோலிக்க சபைகளுக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் கிருபையின் போதனைகளைப் பற்றியதே. சீர்திருத்த சபைகள் கிருபையின் மூலம் மட்டுமே ஒருவன் இரட்சிப்பை அடையலாம் என்று போதிக்க கத்தோலிக்க சபை கிரியைகளின் மூலம் அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று வாதிடுகின்றது. இது இன்று கத்தோலிக்க சபைகள் மட்டும் வாதிடும் வாதமாக இல்லாமல் சுவிசேஷக் கோட்பாட்டாளர் மத்தியிலும் வேறு விதங்களில் காட்சியளிப்பதை வாசகர்கள் அறிவார்கள். ஆர்மீனியனிசக் கோட்பாட்டைக் கடைப்பிடிப்பவர்களும் இதே போக்கையே பின்பற்றுகின்றனர். சுவிசேஷத்தைக் கேட்பவர்களைக் கரம் தூக்க வைத்து கடவுளிடம் கொண்டுவர முயலும் அனைவரும் தேவ கிருபையின் மாட்சியைப் புரிந்து கொள்ளாதவர்களே. தேவ கிருபைக்கு மதிப்பளிப்பவர்கள் மனித சக்தியை நம்பிக் காரியமாற்ற முயல மாட்டார்கள்.

Continue reading