பழைய ஏற்பாடு வேதத்தின் ஒரு பகுதி. அதிலிருந்து பிரசங்கம் செய்ய வேண்டியது மிக மிக அவசியம். ஒரு கண்ணோடு மட்டும் எப்படி வாழ முடியாதோ அதேபோல் பழைய ஏற்பாடு இல்லாமல் வாழ முடியாது. இவ்விதழில் ஜெப்ரி தோமஸ் அதன் அவசியத்தை வலியுறுத்திக் காட்டுகிறார்.
பழைய ஏற்பாட்டிலிருந்து பிரசங்கிப்பது ஏன் அவசியம்?
1. இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டிலிருந்தே பிரசங்கித்தார்
எல்லாவிதமான சந்தர்ப்பங்களிலும் இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டிலிருந்தே பிரசங்கம் செய்தார். தான் பிசாசினால் சோதிக்கப்பட்டபோதும், தனது எதிரிகளுக்குப் பதிலளித்தபோதும், தன்னை விசுவாசிக்கும்படி மக்களை அழைத்தபோதும், தனது விசுவாசத்தை வலியுறுத்தவும், முக்கியமாக தமது பிரசங்கத்திற்கும் கிறிஸ்து பழைய ஏற்பாட்டையே பயன்படுத்தினார். பழைய ஏற்பாட்டின் அனைத்துப் பகுதிகளையும் கிறிஸ்து தனது பிரசங்கத்தில் பயன்படுத்தியுள்ளார். நமது ஆண்டவரின் பிரசங்கங்களில் பத்துவிகிதமானவை பழைய ஏற்பாட்டு நூல்களில் இருந்தே கொடுக்கப்பட்டன. இன்று அநேகர் கேள்விக்குரியதாகக் கருதும் பகுதிகளில் இருந்தும் அவர் பிரசங்கித்துள்ளார். உதாரணமாக ஆதியாகமம் 2, நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளம், லோத்து மனைவி உப்புத் தூணாக மாறுதல், யோனாவை மீன் விழுங்குதல் அத்தோடு நினிவே மக்கள் மனந்திரும்புதல் ஆகிய பகுதிகளை அவர் பயன்படுத்திப் பிரசங்கித்துள்ளார். இயேசு கிறிஸ்து ஐந்து பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளை நேரடியாக பெயரைக் குறிப்பிட்டு எடுத்துக் காட்டியுள்ளார்.