ஆசிரியருரை:

“இறையியல்” (Theology) என்ற வார்த்தை காதில் பட்டவுடனேயே தலைதெரிக்க ஓடும் கூட்டம் கிறிஸ்தவர்கள் மத்தியில் அதிகமாகவே இருப்பது நமக்குத் தெரியும். நான் போதகராக இருக்கும் சபைக்கு புதிதாக வந்த ஒரு ஆத்துமா தான் அதுவரை போய்க் கொண்டிருந்த சபையின் போதகர் ஒருமுறை தன் சபை மக்களைப் பார்த்து, “நான் உங்களுக்கு இறையியல் போதிக்கமாட்டேன்; கிறிஸ்துவையே போதிப்பேன்” என்று பெருமையோடு கூறியதாகக் குறிப்பிட்டார். அப்போதகரைப் பொறுத்தவரை இறையியலுக்கும் கிறிஸ்துவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவ்வாறு இறையியலற்ற ஒரு கிறிஸ்துவைப் பிரசங்கித்து ஆத்துமாக்களை அழித்துக் கொண்டிருக்கும் போதகர்களும், பிரசங்கிகளும்தான் எத்தனைபேர்! இவ்வாறு இறையியலுக்கும், வேதத்திற்கும் முதலிடம் கொடுக்காததால்தான் இன்று பெனிஹின், ஹாவார்ட் பிரவுன், கென்னத் கேப்லன்ட், போல் யொங்கி சோ போன்றோர் அநேக ஆத்துமாக்களை ஏமாற்றிப் பணம் பறித்து மாடமாளிகைகளைக் கட்டி வாழமுடிகின்றது, என்று கிறிஸ்தவ சபை வேதத்தையும், இறையியலையும் அலட்சியப்படுத்தத் தொடங்கியதோ அன்றே கெரிஸ்மெட்டிக் கூட்டத்தாரின் தோற்றத்திற்கும் வித்திடப்பட்டது; வேத இறையியலின் சோதனைக்குட்படாத வெறும் அனுபவத்தை மட்டும் நாடி அலையும் கூட்டமும் தலையெடுத்தது. இதனாலேயே இன்று இவர்கள் மத்தியில் வேதபூர்வமான பிரசங்கத்தையும் காணமுடிவதில்லை. வேத வசனங்களைக் கண்மூடித்தனமாக பயன்படுத்தும் வழக்கத்தையும் காண முடிகின்றது.

Continue reading

வியாக்கியானப் பிரசங்கம்

வியாக்கியானப் பிரசங்கத்தைப்பற்றி கடந்த இதழோடு எழுதி முடித்துவிடுவதே எனது நோக்கமாக இருந்தது. ஆனால் பல போதகர்களோடு அவர்களுடைய பிரசங்க முறைகள் பற்றி நான் சமீபத்தில் பேசி அறிந்து கொண்ட அனுபவங்கள் இதைப்பற்றி மேலும் ஒரு முறை எழுத வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை வியாக்கியானப் பிரசங்கம் என்றால் என்ன? அதன் வரலாறு, இன்றைய சூழ்நிலையில் இப்பிரசங்க முறையின் அவசியம், இப்பிரசங்க முறையைப் பயன்படுத்தத் தேவையான சாதனங்கள் ஆகியவை குறித்து விளக்கமாகப் பார்த்து வந்துள்ளோம். இவ்விதழில் நான் அனுபவரீதியாக அறிந்து கொண்ட, போதகர்கள், பிரசங்கிகள் மத்தியில் இன்று நடைமுறையில் இருக்கும் வழிமுறைகளை மனதில் கொண்டு சில முக்கியமான, எல்லாவகைப் பிரசங்கத்திற்கும் தேவையான, அதேவேளை வியாக்கியானப் பிரசங்கத்திற்கு அதிமுக்கியமாகத் தேவையான சில பொதுவான காரியங்களை ஆலோசனையாக பிரசங்க ஊழியத்திலிருப்பவர்களுக்குப் பயன்படும்படியாகக் கூற விரும்புகிறேன். கடந்த பதினெட்டு வருடங்களாக இவ்வூழியத்தில் நான் பெற்றுக் கொண்ட, தொடர்ந்து பெற்று வருகின்ற அனுபவங்களும் இங்கே இதற்குத் துணை புரியும் என்று நம்புகிறேன்.

Continue reading

ஜோன் ஓவன்

ஜோன் ஓவன்

“பியூரிட்டன்களின் இளவரசர்”

ஜோன் ஓவன் “பியூரிட்டன்களின் இளவரசர்” என்று வரலாறு அழைக்கிறது. அதற்குக் காரணம் ஓவனின் ஆற்றலும், வேத ஞானமும், பரிசுத்த வாழ்க்கையும்தான். பன்னிரெண்டு வயதில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தனது இளமைக்காலக் கல்வியை ஆரம்பித்து, பின்பு அங்கேயே உதவித் தலைவராகவும், பல்கலைக்கழகத்தின் நடத்துனராகவும் பதவியேற்று, குரோம்வெல்லுக்கும் (Cromwell) ஆலோசகராகப் பணிபுரியுமளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்து சபை வரலாற்றில் முக்கிய இடத்தை ஓவன் பெற்றுக் கொண்டார். பியூரிட்டன்களில் தலைசிறந்த இறையியல் அறிஞராகவிருந்த ஓவன் சவோய் விசுவாச அறிக்கையைத் தயாரிப்பதற்கு துணைநின்றவர்களில் ஒருவர். ஓவன் திறமைவாய்ந்த போதகராகவும் இருந்தார். அவரது நூல்கள் இன்றும் அநேக ஆத்துமாக்களுக்கும், சபைகளுக்கும் பேருதவியாக உள்ளன. ஓவனின் எழுத்துக்கள் பதினேழு வால்யூம்களாக இன்றும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. போதகர்கள் போதக சமர்த்தர்களாகவும், இறையியல் அறிஞர்களாகவும், பரிசுத்தத்தில் தேர்ந்தவர்களாகவும் இருக்க, இருபது இறையியல் கல்லூரிகள்கூட ஓவனின் நூல்கள் செய்யக்கூடிய உதவியைச் செய்ய முடியாது. கிறிஸ்துவின் மரணத்தினால் உண்டாகும் வாழ்வு, கிறிஸ்துவின் மகிமை, சுவிசேஷ சபையின் மெய்த்தன்மை, இறைவனோடு ஐக்கியம் போன்ற நூல்கள் ஓவனின் இறையியல் ஞானத்தையும், இறை பக்தியையும் வெளிப்படுத்துவதில் சிறந்தவை. ஓவனின் நூல்களில் ஒரு சிலவே இன்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கிறிஸ்துவின் மரணத்தினால் உண்டாகும் வாழ்வு இவற்றில் ஒன்று. ஓவன் திருச்சபைக்கு விட்டுச் சென்றுள்ள சொத்து அவரது அழியா எழுத்துக்களே.

கிறிஸ்தவ இறையியல் – அறிமுகம் –

இறையியல் படித்தவர்களுக்கும், ஞானமுள்ளவர்களுக்கும் சொந்தமானது. பொழுதுபோவதற்கு ஒரு நல்ல சாதனம், ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கையில் அக்கறையுள்ளவர்கள் இறையியலின் வாசற்படியைக்கூட நாடக்கூடாது. அது அவர்களுடைய ஆன்மீக வாழ்க்கைக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்ற விதமான எண்ணங்களையெல்லாம் இன்று பலரும் கொண்டிருக்கிறார்கள். லிபரல் கோட்பாட்டாளர் நிச்சயமாக இவ்வெண்ணங்களுக்கு மூலகாரணமாக இருந்துள்ளார்கள். லிபரலிஸம் சமயக்குழுக்களில் பரவத்தொடங்கி வேதத்தில் மக்களுக்கிருந்த நம்பிக்கையைத் தகர்க்கத் தொடங்கியதும் இறையியலிலேயே மக்களுக்கு சந்தேகம் ஏற்படத் தொடங்கி அதிகப்படிப்பு புத்திக்குதவாது என்ற எண்ணத்தில் பலரும் அதில் கவனம் செலுத்துவதில் அக்கறை காட்டவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தலைதூக்கிய சுவிசேஷ இயக்கத்தைப்போல் தோற்றமளித்த புதிய  சுவிசேஷ இயக்கமும், நவீன கெரிஸ்மெட்டிக் இயக்கம் இத்தகைய எண்ணங்களை இனிப்பூட்டி வளர்த்தன என்றால் மிகையாகாது. இவ்வியக்கங்களின் தாக்கத்தால் இன்று பிரசங்கம் போதனை என்ற பெயரில் இறையியலற்ற, உப்புச் சப்பில்லாத ஆவிக்குரிய வாழ்க்கையில் எந்த வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியாத, காதுக்கு மட்டும் குளிர்ச்சி தரும் வெறும் பேச்சுக்களை சபை சபையாக இன்று கேட்க முடிகின்றது.

Continue reading