ஐந்தாவது ஆண்டில் திருமறைத்தீபம்

ஓராண்டைத் தாண்டுமோ என்று எண்ணிக் கொண்டிருந்த எங்கள் எண்ணங்களையெல்லாம் பொய்யாக்கி ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது பத்திரிகை. அலட்டிக் கொள்ளாமல் ஆரவாரமில்லாமல், அமைதியோடு திருமறைத்தீபம் நடைபோட வேண்டும் என்பதே ஆரம்பமுதல் எமது நோக்கம். அதேமுறையில் வாசிக்கும் அன்பர்கள் எல்லாம் வாய்க்கு வாய் பத்திரிகை பற்றிய செய்தியைப் பரப்பி, தமிழ்கூறும் நல்லுலகெங்கும் கிறிஸ்தவ அன்பர்களின் அன்பையும், மதிப்பையும் பெற்று தாழ்மையோடு இப்புதிய வருடத்தை ஆரம்பித்திருக்கிறது திருமறைத்தீபம்.

புதிய வருடத்தில் கணினியின் இணையத்தில் தீபம் ஒளிவிட ஆரம்பித்திருக்கிறது. கணினி வசதியுள்ளவர்கள் பத்திரிகையை http://www.biblelamp.org என்ற இணைய முகவரியில் வாசிக்கலாம்.

இவ்விதழில் மெய்க்கிறிஸ்தவன் யார்? என்று விளக்கும் அருமையான செய்தியை அல்பர்ட் என். மார்டின் தருகிறார். போலித்தனமாக, மாம்சத்தின் வழிகளில் கிறிஸ்துவுக்கு கூட்டம் சேர்க்கும் குழுக்களின் கைங்கரியங்களால், கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும், மறுபிறப்பு என்றால் என்னவென்று அறியாத மக்கள் கூட்டத்தால் தமிழுலகம் இன்று நிரம்பி வழிகின்றது. இத்தகைய சூழ்நிலையில் அக்கறையோடு வாசித்துப் புரிந்து கொள்ள வேண்டிய அருமையான செய்தி இது. மேலெழுந்தவாரியாக இதை வாசித்து ஒதுக்கிவிடாமல் இதுபற்றி சிந்தித்து நீங்கள் மெய்க்கிறிஸ்தவர்தானா? என்று முடிவு செய்து கொள்ளுங்கள். பெயர்க்கிறிஸ்தவனாக இருப்பதைவிட பரலோக வாழ்க்கைக்குத் தேவையான தகுதி நமக்குண்டா என்று பார்த்துக் கொள்வது வரப்போகும் ஆபத்திலிருந்து நம்மைக் காக்கும். உங்கள் எண்ணங்களையும் ஆசிரியருடன் பகிர்ந்து கொள்ளத் தவறாதீர்கள்.

இவ்விதழில் வழமையாக வரும் சில ஆக்கங்கள் வரத் தவறியுள்ளன. வரப்போகும் இதழ்களில் அவை தொடர்ந்து வெளிவரும், வாசக அன்பர்களுக்கெல்லாம் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்.