இரண்டாயிரம் ஆண்டுகள் முடிந்து

இரண்டாயிரம் ஆண்டுகள் முடிந்து 21 ஆவது நூற்றாண்டில் நாம் காலடி எடுத்து வைத்துள்ளோம். எக்காலத்திலுமில்லாத வ‍கையில் கடந்த நூறு ஆண்டு காலப்பகுதிகளில் உலகில் பிரமிக்கத்தக்க விதத்தில் துரித கதியில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கணினித்துறையிலும், விஞ்ஞானத்துறையிலும் மனிதன் மின்னல் வேகத்தில் முன்னேற்றம் கண்டுள்ளான். தொலைபேசி, தொலை நோக்கி, கணினி மூன்றும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தொடர்புச் சாதனத்துறையில் அதிசயிக்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு நாடுகளுக்கிடையில் உள்ள தூரம் குறுகி உலகம் மிகச்சிறிது என்று எண்ணும் வகையில் செய்திப்பரவல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ள அதேவேளை “மாற்றம்” என்ற வார்த்தைக்‍கே பொருள் தெரியாது அன்றாடக் கஞ்சியில் தன்னிறைவு கண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மானுடர்களும் இதே உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய உலகத்தை இதுவரை எதுவும் பாதித்திருப்பதாகத் ‍தெரியவில்லை. இவர்களுடைய வாழ்க்கையில் அன்றாடம் y2k.

இத்தனைக்கும் மத்தியில் இந்த உலகிற்கு அப்பால் ஒரு வாழ்வு உண்டு, அவ்வாழ்வை அடைய இறைமகன் இயேசுவின் கிருபையால் விசுவாசத்தை அடைய வேண்டும் என்ற வேதபோதனையைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பவர்கள் எத்தனை பேர்! இவ்வுலகும், அதன் சுகங்களுமே கதி என்று விடாப்பிடியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனித‍ர்கள் பிரமித்துக் கலங்கப்போகும் நியாயத்தீர்ப்பு நாளும் இத்தகைய மாற்றங்களுக்கு மத்தியிலும் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்ற எண்ணம் பலருக்கு எழுவதில்லை.

இறைமகன் இயேசுவை விசுவாசித்து, அவருக்காக மட்டுமே வாழ்ந்து, அவரைப்பற்றி மானுடம் அறிந்துகொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு, கிறிஸ்து நேசிக்கும் சபையில் கிறிஸ்தவ ஐக்கியத்தின் சுகம் கண்டு வாழும் பெருங்கடமைக்காக நம்மை அழைத்திருக்கும் தேவனை இந்நூற்றாண்டில் மகிமைப்படுத்த நாம் முன்வருவோம். கண்ணுக்கும், காதுக்கும் சரீர உணர்ச்சிக்கும் மட்டும் விருந்தளிக்கும் கேளிக்கை கிறிஸ்தவத்தின் கையில் பிடிபடாமல் வேத சத்தியங்களில் மட்டும் ஊன்றித் திளைத்து அவற்றில் பேரறிவு பெற்று மெய்க்கிறிஸ்தவர்களாக நாம் வாழ முயல்வோம். லூதரும், கல்வினும், நொக்ஸீம், பனியனும், ஸ்பர்ஜனும் பிரசங்கித்த சத்தியத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்த சபைகளை நாடிப்போய் அங்கே நல்வாழ்வு பெறுவோம்.

“கிறிஸ்தவர்” என்ற போர்வையில் மறைந்து வாழும் போலிகள் அழிந்து, பணத்திற்காக சுவிசேஷத்தைப் பயன்படுத்தி மக்களை சீரழிக்கும் மனிதர்கள் மறைந்து, சீர்திருத்தப்போதனைகளும், சபைகளும் இந்நூற்றாண்டில் தமிழர் மத்தியில் வளர்ந்து, வாழ்ந்து, உயர்ந்திட நம் தேவன் நமக்குக் கருணை காட்ட ஒன்று கூடி வைராக்கியத்துடன் ஜெபிப்போம். திருமறைத்தீபத்தை வாசிப்பதோடு நின்றுவிடாமல் அதன் போதனைகளின்படி வாழ்ந்து, வளர்ந்து, மற்றவர்களையும் வளர்த்து நம் தேவனை மகிமைப்படுத்த முன்வருவோம்.

-ஆசிரியர்