மனமகிழ்ச்சிக்குரிய ஓய்வு நாள்

ஓய்வு நாளைக் குறித்த பல சந்தேகங்களைக் கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கிறார்கள். இப்புதிய ஏற்பாட்டுக் காலத்தில் நமக்கும் அந்நாளுக்கும் என்ன தொடர்பு? என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.

மனமகிழ்ச்சிக்குரிய ஓய்வு நாள்

உலக மக்கள் அனைவரும் பின்பற்றக் கூடியதாக கர்த்தர் படைப்பில் ஏற்படுத்திய மூன்று காரியங்களில் (திருமணம், தொழில், வாரந்தர ஓய்வு நாள்) ஒன்று ஓய்வு நாள் என்பதை விபரமாக கடந்த இதழில் பார்த்தோம்.

புதிய உடன்படிக்கையின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் ஓய்வு நாளைப் பின்பற்ற வேண்டும் என்று தெளிவாகப் போதிக்கும் புதிய ஏற்பாட்டின் வேதப்பகுதிகளுக்கு சிலர் தவறாக விளக்கம் கொடுத்து வரும் காரியம் இன்று நேற்றாக இல்லாமல் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அத்தகைய வேதப்பகுதிகளில் முக்கியமானவற்றை இவ்விதழில் ஆரய்ந்து அவை என்னதான் கூறுகின்றன என்று பார்க்க வேண்டியது நமது கடமை.

மத்தேயு 12:8; மாற்கு 2:27; லூக்கா 6:5

மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்று இயேசு மத்தேயு 12:8 இல் கூறுகிறார். மனுஷன் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஓய்வு நாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது என்று மாற்கு 2:27 இல் வாசிக்கிறோம். லூக்கா சுவிசேஷமும் இவ்வசனங்களை உறுதிப்படுத்துகின்றது. இவ்வசனங்களின் அடிப்படையில் கிறிஸ்து ஓய்வு நாளை இல்லாமலாக்கியிருக்கிறார் என்று தவறாக சிலர் விளக்கம் கொடுத்து வந்திருக்கிறார்கள். சுவிசேஷக் கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோரும் இன்றும் இப்படியே நம்பி வருகிறார்கள். ஆனால் இவ்வசனங்களை நாம் முறையாகப் படித்தால் அத்தகைய போதனை தவறானது என்று புரிந்து கொள்ளலாம்.

இவ்வேதப்பகுதிகளைப் புரிந்து கொள்ள நாம் ஒரு உண்மையை மனதில் கொள்ள வேண்டும். பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர் பின்பற்றிய ஏழாம் நாளான ஓய்வு நாளுக்கும் புதிய ஏற்பாட்டின் ஓய்வு நாளுக்கும் இடையில் வித்தியாசம் உண்டு என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். கடந்த இதழ்களில் நாம் இதைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளோம். ஏழாம் நாளான ஓய்வு நாள் வாரத்தின் முதல் நாளுக்கு கிறிஸ்துவால் அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் அதிகாரத்தின்படி அப்போஸ்தலர்கள் ஆதி சபையில் வாரத்தின் முதல் நாள் கூடி கர்த்தரை ஆராதிக்கத் தொடங்கினார்கள். இவ்வாண்டவருடைய நாளே புதிய ஏற்பாட்டில் ஓய்வு நாளாக பின்பற்றப்படுகின்றது.

இதை மனதில் வைத்துக் கொண்டு இவ்வேதப்பகுதிகளை நாம் படிக்க வேண்டும். இப்பகுதிகளில் இயேசு பரிசேயர்கள் ஓய்வு நாளில் ஒருவன் என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்று ஏற்படுத்தியிருந்த விதிகளைக் கண்டிக்கிறார். பரிசேயர்கள் பழைய ஏற்பாட்டில் கர்த்தர் போதித்ததற்கும் மேலான பல விதிகளை இஸ்ரவேல் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தனர். ஓய்வு நாளில் உணவில்லாமல் போகும் ஒருவனுக்கு உணவு கொடுப்பதும், அந்நாளில் காயப்பட்டிருப்பவனுக்கு உதவி செய்வதும், நோயுற்றிருப்பவனுக்கு மருத்துவ வசதி அளிப்பதும் ஓய்வு நாளைப் பின்பற்றுவதற்கு முரணான செயல்கள் அல்ல. அவை கருணையின் காரியங்கள் என்றும் அத்தகைய காரியங்களை ஓய்வு நாளில் செய்வது தவறில்லை என்பதை பழைய ஏற்பாடே போதிக்கின்றது.

ஆனால், இவற்றை பரிசேயர்கள் ஏற்றுக் கொள்ளாததோடு மேலும் கடுமையான, பழைய ஏற்பாட்டிற்கும், நடைமுறைக்கும் ஒவ்வாத பல காரியங்களைச் செய்யும்படி இஸ்ரவேல் மக்களை வற்புறுத்தினர். இதையே இப்பகுதிகளில் கிறிஸ்து எதிர்க்கிறார். தானே ஓய்வு நாளின் ஆண்டவராய் இருக்கிறேன் என்று கூறியதன் மூலம், தானே மேசியா என்றும், படைப்பின் ஆண்டவராகிய தான், அனைத்திற்கும் ஆண்டவராயிருக்கும் தான், ஓய்வு நாளுக்கும் ஆண்டவராயிருக்கிறேன் என்று தெள்ளத்தெளிவாக பரிசேயர்களுக்கு எடுத்துச் சொல்கிறார். ஆண்டவர் என்ற வார்த்தை அனைத்தையும் இறை ஆண்மையுடன் ஆள்கிறவர் என்று பொருள்படும். இயேசு அத்தகைய ஆண்டவராய் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்.

சிலர் போதிப்பது போல் அவர் ஓய்வு நாளை அழிக்க வந்திருக்கிறார் என்று இப்பகுதிகளுக்கு விளக்கம் கொடுக்க முனைவது அத்தகைய போதனையை இப்பகுதிகளுக்குள் திணிக்க முனைவதாகும். அத்தகைய பொருளை ஆண்டவருடைய வார்த்தைகள் கொண்டிருக்கவில்லை என்பதை மத்தேயு 12:8 ஐயும் மாற்கு 2:27 ஐயும் சேர்த்துப் படிக்கும்போது புரிந்து கொள்ளலாம். மாற்கு 2:27 இல், கிறிஸ்து ஓய்வு நாள் மனுஷனுக்காக ஏற்படுத்தப்பட்டது என்று போதிக்கிறார். அதுவே உண்மை. பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி, மனுஷனுக்காகவே ஓய்வு நாள் உருவாக்கப்பட்டது. மனுஷன் அந்நாளில் கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அந்நாள் உருவாக்கப்பட்டது. அந்நாளில், ஆபத்துக் காலத்தில் தாவீது தேவனுடைய ஆலயத்தில் அப்பத்தைப் புசித்தது தவறான செயலல்ல என்று இயேசு விளக்குகிறார். அது கருணையின் காரியம். ஓய்வு நாளை ஏற்படுத்திய நானே அதற்கும் அனுமதியளித்திருக்கிறேன். இன்று தொடர்ந்தும் அவ்வோய்வு நாளுக்கு ஆண்டவராயிருந்து என் சீடர்கள் பசியாயிருந்த போது அந்நாளில் வழியில் இருந்ததை உணவாகக் கொண்டதையும் அனுமதிக்கிறேன் என்றே இயேசு இங்கு போதிக்கிறார். இதைத்தவிர வேறு போதனைகளை இப்பகுதியில் நுழைக்க முனைவது தவறு.

ரோமர் 14:1-6; கலாத்தியர் 4:8-11; கொலோசெயர் 2:16, 17

புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்கள் ஓய்வு நாளைப் பின்பற்றத் தேவையில்லை என்று தவறாகப் போதிப்பவர்கள் மேல்வரும் வசனங்களை அடிக்கடி உதாரணம் காட்டுவர். ஏனெனில், இப்பகுதிகள் பழைய உடன்படிக்கையின் ஓய்வு நாள் ஒழிக்கப்படுவதைப் போதிக்கின்றன.

இவ்வசனங்களின் அடிப்படையில் பொதுவாக சில தவறான போதனைகள் அளிக்கப்பட்டு வந்துள்ளன. அவற்றை முதலில் ஆராய்ந்து அவை சரியானவையா? என்று பார்ப்போம்.

(1) புதிய ஏற்பாட்டின்படி எந்த ஒரு நாளையும் விசேஷமான நாளாகப் பின்பற்றத் தேவையில்லை என்று சிலர் கூறுவர்.

கிறிஸ்தவ சுதந்திரம் என்ற பெயரில் சிலர் ரோமர் 14:5; கலா. 4:10, 11 ஐப் பயன்படுத்தி இப்படியாக விளக்கம் தருவர். ஆனால் அத்தகைய விளக்கம் தவறு. முதலில் அத்தகைய விளக்கம் வேதத்தை விளங்கிக் கொள்ளப் பயன்படுத்த வேண்டிய வேதத்தை வேதத்தோடு ஒப்பிட்டுப் படிக்க வேண்டும் என்ற (the analogy of faith) வேதவிதிக்கு முரணானது. நமது சீர்திருத்தவாத பெரியோர்கள் வேதத்தைப் படிக்கப் பயன்படுத்த வேண்டிய இவ்விதிமுறையை நமது விசுவாச அறிக்கையின் முதல் அதிகாரத்தில் ஒன்பதாவது பாராவில் எழுதி வைத்துள்ளார்கள். ஒரு வேதப்பகுதி எதைச் சொல்கிறது என்பதில் நமக்கு சந்தேகமேற்பட்டால் அது பற்றித் தெளிவாகப் போதிக்கும் ஏனைய பகுதிகளை வைத்தே அதைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதே அவ்விதி. ஆகவே எந்தவொரு நாளையும் நாம் விசேஷமாகப் பயன்படுத்தக்கூடாது என்ற போதனை, பவுலின் போதனையை அவருடைய ஏனைய நிருபங்களோடும், யோவானுடனும் மோதும்படியாகச் செய்கிறது. புதிய ஏற்பாடு வாரத்தின் முதல் நாள் விசேஷமான நாள் என்பதைத் தெளிவாகப் போதிக்கின்றது. கிறிஸ்தவன் வாரத்தின் ஒருநாளை நிச்சயமாக விசேஷமான நாளாகப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கின்றது. இதுபற்றி சிறந்த இறையியல் வல்லுனரான ஜோண் மரே பின்வருமாறு கூறுகிறார்: “ரோமர் 14:5 நாட்கள் பற்றிய எல்லா விசேஷமான அம்சங்களையும் இல்லாமல் செய்கிறது என்று கூறினால் வாரத்தின் முதல் நாளை விசேஷமான நாளாகப் பயன்படுத்த வேண்டும் என்ற போதனைக்கே இடமில்லாமல் போய்விடும். ஆகவே, புதிய ஏற்பாடு போதிக்கும் வாரத்தின் முதல் நாளை விசேஷமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற போதனையை நாம் மாற்ற முடியாததோடு, எந்தவொரு நாளையும் விசேஷமான நாளாகக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தக் கூடாது என்ற போதனையையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது”. (Romans Vol.2, Pg 258, 259)

(2) இப்பகுதிகள், கிறிஸ்தவ ஓய்வு நாள் என்று ஒன்றிருந்த போதும் மற்றவர்கள் ஓய்வு நாளை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் நாம் குறைகாணக்கூடாது என்று போதிக்கின்றன என்பர் சிலர்.

இவ்விளக்கம் முக்கியமாக கொலோசெயர் 2:16 இன் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. “ஓய்வு நாளைக் குறித்தாவது உங்களை ஒருவனும் குற்றப்படுத்தாதிருப்பானாக.” இங்கே பவுல் இவ்வசனங்களின் மூலம் நாம் பின்பற்றக்கூடாது என்று கூறும் காரியங்கள் கிறிஸ்தவன் செய்ய வேண்டிய கடமைகள் ‍அல்ல. அதனால்தான் அதைக் குறித்து மற்றவர்கள் உங்களைக் குறைகூறும்படி விடாதீர்கள் என்ற பவுல் கூறுகிறார். ஒரு கடமையில் நாம் தவறும்போது நிச்சயமாக மற்றவர்கள் நம்மைக் குறைகூறத்தான் வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு நம்மீது அன்பில்லை என்று தான் அர்த்தம். கிறிஸ்தவன் என்று நம்மை அழைத்துக் கொண்டு ஓய்வு நாளில் நாம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தாலோ, டி.வியைப் பார்த்துப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தாலோ, அவசியமில்லாமல் வேலை செய்து கொண்டிருந்தாலோ யாரும் குறைகூறினால், அவர்கள் நம்மைக் குறைகூறக்கூடாது என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்?

(3) இப்பகுதிகள் வாராந்தர ஏழாம் நாளான ஓய்வு நாளைக் குறித்துப் பேசவில்லையென்பது இன்னொரு வாதம்.

பவுல் இப்பகுதிகளில் நிச்சயமாக பழைய ஏற்பாட்டு சடங்குகளைப்பற்றிப் பேசியபோதும், வாராந்தர ஓய்வு நாளையும் உள்ளடக்கியே பேசுகிறார். பவுல் யூதக் கேலண்டரின்படியான விசேஷ நாட்களை மனதில் வைத்தே இங்கு ‍பேசுகிறார். யூத கிறிஸ்தவர்களில் சிலர் ஓய்வு நாளுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை வேறு நாட்களுக்கும் கொடுத்து வந்தனர். இங்கு பவுல் வாராந்தர ஏழாம் நாளான ஓய்வு நாளைக் குறித்துப் பேசுகிறார் என்று கூறுவது புதிய ஏற்பாட்டில் நாம் பின்பற்ற வேண்டிய ஓய்வு நாளை நிராகரிக்கும்படிச் செய்துவிடும் என்று சிலர் அஞ்சுகிறார்கள் ஆனால், அது தவறு.

(4) இப்பகுதிகள் வாராந்தர ஏழாம் நாளைக்குறித்துப் பேசுவதால் புதிய ஏற்பாட்டு ஓய்வு நாளை பழைய ஏற்பாட்டு ஓய்வு நாளோடு எந்தவிதத்திலும் ‍தொடர்புபடுத்த முடியாது என்பதும் ஒரு வாதம்.

மேற் கூறியவிதத்தில் வாதிடுபவர்களும் நாம் மூன்றாவதாக சுட்டிக் காட்டிய கருத்தோடு இணைந்தே பேசுகிறார்கள். இக்கருத்தும் புதிய ஏற்பாட்டில் ஓய்வு நாளைக் குறித்த போதனையைப் புரிந்து கொள்ள மறுக்கிறது. பழைய ஏற்பாட்டு ஓய்வு நாளுக்கும் புதிய ஏற்பாட்டு ஓய்வு நாளுக்கும் இடையில் ஒரு தொடர்பும் இல்லை என்ற இக்கருத்து வேதபோதனையோடு பொருந்திப் போகவில்லை.

இதுவரை ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட புதிய ஏற்பாட்டுப் பகுதிகளுக்கு சிலரளிக்கும் தவறான விளக்கங்களைப் பார்த்தோம். இனி இப்பகுதிகள் மூலம் பவுல் உண்மையில் போதிப்பதென்ன என்று பார்ப்போம்.

இப்பகுதிகள் அனைத்திலும் பவுல் பழைய ஏற்பாட்டு சடங்குமுறைகளை மனதில் வைத்தே அறிவுரை கூறியுள்ளார். பவுல் இப்பகுதிகளில் புதிய ஏற்பாட்டு வழிமுறைகளை மனதில் வைத்துப் பேசவில்லை. புதிய ஏற்பாட்டில் ஒரு நாள் ஓய்வு நாளாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது புதிய ஏற்பாடு தெளிவாகப் போதிக்கும் உண்மை. ஆனால், இப்பகுதிகளில் பவுல் அதைக் குறித்து வாதாடவில்லை. இப்பகுதிகளுக்கும் அப்போதனைக்கும் தொடர்பு இல்லை. வாரத்தின் முதலாம் நாளை பரிசுத்தமாக வைத்திருக்கக்கூடாது என்று வாதிடுவதற்காக இப்பகுதிகளைப் பயன்படுத்துவது மூடத்தனம்.

கலாத்தியர் 4:8-11 வரையுள்ள வசனங்களைப் பார்த்தால் இதைப்புரிந்து கொள்ளலாம். “பெலனற்றதும், வெறுமையானதுமான அவ்வழிபாடுகள்” என்று பவுல் குறிப்பிடுவது பழைய ஏற்பாட்டு வழிபாட்டு முறைகளையே. கொலோசெயர் 2 இல் பவுல் கொலோசெயர் எதிர்நோக்கிய பல தவறான போதனைகளைக் கண்டிக்கிறார் 8, 20, 16, 11, 18.

ஆகவே, இப்பகுதிகள் அனைத்தும் பழைய ஏற்பாட்டு வழிபாட்டு முறைகளையும், சடங்குகளையும் மனதில் வைத்தே எழுதப்பட்டுள்ளன. புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் அவற்றை இன்று பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.

பவுல் இப்பகுதிக‍ளின் மூலம் பழைய எற்பாட்டு வழிபாட்டு முறைகளைப் பின்பற்றக்கூடாதென்று வலியுறுத்திப் போதிப்பதற்கான காரணமென்ன?

பவுல் கொலோ‍செயர் 2:17ல் “அவை வருங்காரியங்களுக்கு நிழலாக இருக்கிறது” என்று கூறுகிறார். பழைய ஏற்பாட்டு வாரந்தர ஏழாம் நாளான ஓய்வு நாள் வரப்போவதை நிழலாகக் காட்டுகிறது. ஆகவே நிழலாகக் காட்டும் எதையும் நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. பழைய ஏற்பாடு நிழலாகக் காட்டிய கிறிஸ்து ஏற்கனவே வந்து தனது செயல்களை முடித்துக் கொண்டுள்ளார். ஆகவே, நாம் தொடர்ந்து அவருடைய வருகையை நிழலாக நினைவுபடுத்தும் பழைய ஏற்பாட்டு வாராந்தர ஏழாம் நாளான ஓய்வு நாளைப் பின்பற்றத் தேவையில்லை. ஆகவேதான் இன்று நாம் வாரத்தின் முதல் நாளை ஓய்வு நாளாக கிறிஸ்துவின் உயிர்தெழுதலின் அ‍டிப்படையில் பின்பற்றுகிறோம்.

ஆகவே, பவுல் விசேஷ நாட்களைப் பற்றியோ, ஓய்வு நாளைப் பற்றியோ இப்பகுதிகளில் கவலைப்படவில்லை. நிழலாகக் காட்டும் எச்செயலையும் தொடர்ந்து பின்பற்றுவதை மட்டுமே பவுல் எதிர்க்கிறார். ஓய்வு நாட்களைப் (பழைய ஏற்பாட்டு விசேஷ தினங்கள்) பின்பற்றுவதைப் பவுல் இங்கே பரிசேயத்தனமாகக் கருதவில்லை, மூட நம்பிக்கையாகவே கருதுகிறார்.

“ஓய்வு நாள்” என்ற பதம் பழைய ஏற்பாட்டு ஏழாம் நாள் வழிபாட்டு முறையைக் குறிக்கும் பொதுவான பதம். இது பழைய ஏற்பாட்டு முறையைக் குறிக்கும் பதமே தவிர ‍விசேஷ நாட்களைக் கடைப்பி‍டிப்பதைக் குறித்துப் பேசும் பதம் அல்ல. ஆகவே, வாராந்தர ஏழாம் நாளாகிய ஓய்வு நாள் இல்லாமல் போவதால் ஆண்டவருடைய நாள் இன்று இல்லை என்று சொல்லுவதோ, ஆண்டவருடைய நாளை ஒரு பரிசுத்தமான நாளாக நாம் கொண்டாடக் கூடாது என்று சொல்லுவதோ முறையானதல்ல.

ஆண்டவருடைய நாளை நாம் இன்று பரிசுத்தமாக வைத்திருப்பதனால் அது நிழலானதாகவோ அல்லது வரப்போகும் எதையும் சுட்டிக் காட்டுவதாகவோ இருக்கவில்லை. அது நமக்கு நித்திய வாழ்வைப் பெற்றுத் தந்த கிறிஸ்துவின் உயிர்த் தெழுதலுக்கு அடையாளமாகவே இருக்கின்றது. அது இன்று இருண்ட நிழலாகத் தோற்றமளிக்கவில்லை. கிறிஸ்து நிறைவேற்றியுள்ள அனைத்திற்கும் சாட்சியாக அமைந்திருக்கின்றது. பழைய ஏற்பாட்டு வாராந்தர ஏழாம் நாளான ஓய்வு நாளுக்கும், ஆண்டவருடைய நாளுக்கும் ஒரு தொடர்புண்டு. அதாவது அவை இரண்டும் ஒரு ஒழுக்க நியதியைத் தன்னுள் கொண்டமைந்துள்ளன. இருந்தபோதும் அவை இரண்டும் வெவ்வேறு விதமான வழிபாட்டு நாட்கள். அதாவது, ஒன்று கிறிஸ்துவின் வருகையைச் சுட்டிக் காட்டுகின்றது. மற்றது அப்படிச் செய்யவில்லை. இவ்வேறுபாடு அந்நாட்கள் பரிசுத்தமான ஓய்வு நாட்களாக இருக்க வேண்டுமா என்ற வினாவோடு எந்தவிதத்திலும் சம்பந்தப்பட்டதல்ல.

எபிரேயர் 4:1-9

இப்பகுதியையும் ஓய்வு நாளை எதிர்ப்பவர்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். நித்திய இளைப்பாறுதலைப் பற்றி ஆரம்பத்தில் விளக்கும் இப்பகுதி விசுவாசிகள் மட்டுமே அனுபவிக்கக்கூடிய அந்நித்திய இளைப்பாறுதலை சுட்டிக் காட்டும் வேறு இளைப்பாறுதல்களைப்பற்றியும் விளக்கி (படைப்பின் இளைப்பாறுதல், ஏழாம் நாள் இளைப்பாறுதல், யோசுவாவின் இளைப்பாறுதல்) பின்பு வேறொரு இளைப்பாறுதலும் இருப்பதாகக் கூறுகிறது. எட்டாம் வசனத்தில் “யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்கு உட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக் குறித்துச் சொல்லியிருக்க மாட்டாரே” என்று வாசிக்கிறோம். இங்கே அந்த வேறொரு நாள் எந்த நாள் என்பதை ஒன்பதாம் வசனம் தெளிவாக விளக்குகிறது. இவ்வசனத்தில் இளைப்பாறுதலைப் பற்றிப் பேசும் ஆசிரியர் “இளைப்பாறுதல்” என்ற வார்த்தைக்கு பழைய ஏற்பாட்டில் ஏழாம் நாளான வாராந்தர ஓய்வு நாளுக்கு பயன்படுத்தப்பட்ட அதே வார்த்தையையே பயன்படுத்தியுள்ளார். இப்பகுதியின் ஏனைய இடங்களில் இளைப்பாறுதல் என்ற வார்த்தைக்கு அவர் வேறு வார்த்தையை மூலத்தில் (katapausis 3:11; 4:1; 4:3; 4:5; 4:8; 4:10) பயன்படுத்தியுள்ளார். தமிழில் எல்லா இடங்களிலும் “இளைப்பாறுதல்” என்றே இருக்கிறது. ஆனால், 4:9 இல் அது “ஓய்வு நாள்” (சபத்து – Sabbatismos) என்றிருக்க வேண்டும். இவ்வார்த்தை புதிய ஏற்பாட்டில் இங்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. (There remaineth therefore a sabbath rest for the people of God – RV). அதாவது பழைய ஏற்பாட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டது போன்ற ஒரு சபத்து நாள் இன்று புதிய ஏற்பாட்டு மக்கள் பின்பற்றுமாறு கொடுக்கப்பட்டுள்ளதென்பதே இப்பகுதி போதிக்கும் தெளிவான உண்மை. A W Pink தனது The Christian Sabbath என்ற சிறு நூலில் இதுபற்றி தெளிவாக விளக்கியுள்ளார்.

ஆகவே, இப்பகுதி நாம் நித்திய இளைப்பாறுதலை எதிர்நோக்கி இருந்தபோதும் இவ்வுலகில் இருக்கும்வரை நாம் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டிய வாராந்தர ஓய்வு நாள் இருப்பதையும் அது வரப்போகும் நித்திய ஓய்வு நாளை எதிர்நோக்கி இருப்பதையும் நினைவுபடுத்துகிறது. ஆனால் ஓய்வு நாளை எதிர்ப்பவர்கள் இங்கே நித்திய ஓய்வைப்பற்றி மட்டுமே விளக்கப்பட்டிருக்கின்றது என்று தவறாக, இவ்வேதப்பகுதியை ஏனைய பகுதிகளோடு ஒப்பிட்டு ஆராயாமல் விளக்க முனைகிறார்கள்.

இன்று ஓய்வு நாளைக் கவனத்துடன் கடைப்பி‍‍டிப்பதன் மூலம் நித்திய ஓய்வை நாம் ஆனந்தத்துடன் எதிர்பார்த்து நிற்கிறோம்.