அன்புக்குரிய வாசகர்களே!

அன்புக்குரிய வாசகர்களே! ஆத்துமாக்கள் கர்த்தரை ஆராதித்து வாழ்வதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று வேதம் போதிப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆத்துமாவுக்கு கர்த்தர் கொடுத்திருக்கும் அத்தனை முக்கியமான பணியை சபைகளும், ஆத்துமாக்களும் கர்த்தருக்குப் பிடித்தமில்லாத வழிகளில் அவர் முன் செய்து வருகின்றார்கள். நீதியின் தேவனும், பாவத்தை சகிக்காத நம் பரமனும் ஆத்துமாக்களின் அறிவற்ற செயல்களைப் பார்த்து சிரித்துக்கொண்டுதான் இருக்கிறார். நியாயத்தீர்ப்பு நாளில் கர்த்தருக்கு முன் நாம் செலுத்திய ஆராதனை அத்தனைக்கும் கணக்குக் கொடுக்காமல் தப்ப முடியாது. அத்தனை முக்கியமான ஆராதனையை கர்த்தர் நடத்தும் வழியில் செலுத்துவது அவசியமல்லவா? அதனால் இவ்விதழில் பல ஆக்கங்கள் ஆராதனையைப் பற்றி ஆராய்கின்றன. இதன் மூலம் கர்த்தர் உங்களோடு பேசி உங்கள் ஆராதனையை சிறப்புறச் செய்யட்டும்.

இரகசியக் கிறிஸ்தவர்கள் என்ற ஒரு கூட்டத்தை சிலர் இன்று உருவாக்கி ஆத்துமாவுக்கு பொருந்துகிற விதத்தில் கிறிஸ்தவத்தை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்‍டிருக்கிறார்கள். இது வேதத்தில் காண முடியாத ஒரு கூட்டம் என்பது பலருக்குத் தெரிவதில்லை. துணிந்து இயேசுவுக்கு சாட்சியா இருக்க மறுப்பவர்கள் விசுவாசிகளாக இருக்க முடியாது. கிறிஸ்துவை இரகசியமாக அனுபவிக்க முடியாது; அவருடைய பெயரைச் சொல்லிக்கொண்டு இரகசியமாக வாழவும் கூடாது. அது பற்றி இவ்விதழில் எழுதியிருக்கிறோம்.

தொடர்ந்து வரும் திருச்சபை வரலாறு பற்றிய ஆக்கம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று நம்புகிறோம். சீர்திருத்தவாதிகளையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறோம். இவ்விதழ் ஜோன் விக்ளிப்பின் சரிதத்தோடு வருகிறது. பல வருடங்கள் வந்து கொண்டிருந்த கேரியின் வாழ்க்கை சரிதம் இவ்வித‍ழோடு முடிவுக்கு வருகிறது. அம்மகாமனிதரின் வாழ்க்கை அநேகரைச் சிந்திக்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இடையில் வராமலிந்த 1 கொரிந்தியர் 12-14 வேதப்பகுதியின் விளக்கம் மறுபடியும் இவ்விதழில் தொடர்கிறது. இவற்றோடு வழமையாக வரும் சீர்திருத்த போதனைகளை அளிக்கும் 1689 விசுவாச அறிக்கைக்கான விளக்கங்களும், கிறிஸ்தவ கோட்பாடுகளும் தொடர்கின்றன. உங்களுடைய ஆத்மீக வாழ்கை இவற்றால் பலமடையட்டும். அதுவே எங்களுடைய எதிர்பார்ப்பும், ஜெபமுமாகும்.

– ஆசிரியர்

ஆராதனை! மனிதனின் சிந்தனைப் போக்கிலா? அல்லது கர்த்தரின் வழியிலா?

கிறிஸ்தவ திருச்சபை தன் தலைவராகிய கர்த்தரை ஆராதிக்கும் பெரும் கடமையைத் தன்னில் கொண்டிருக்கிறது. அது கடமையாக மட்டும் இல்லாமல் திருச்சபை முழு இருதயத்தோடும், ஆனந்தத்தோடும் கர்த்தரின் பாதத்தில் கொடுக்க வேண்டிய ஆம்மீக பலியாகவும் இருக்கிறது. இத்தகைய ஆத்மீக பலியை ஆத்துமா தன் சொந்த வழியில், தன்னுடைய சிந்தனைப் போக்கின்படி கர்த்தருக்கு முன் செலுத்தலாமா? அல்லது கர்த்தர் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் அவர் காட்டும் வழியில் செலுத்தப்பட வேண்டுமா? என்பதைப் பற்றி நாம் இன்று சிந்தித்துப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

Continue reading

வரையறுக்கப்பட்ட ஆராதனை விதி – The Regulative Principle of Worship

நாம் இதுவரை இவ்விதழின் முதலாவது ஆக்கத்தில் பார்த்த வேதம் போதிக்கும் ஆராதனை விதிக்கு வரலாற்றில் திருச்சபைத் தலைவர்கள் முறையாக ஒரு பெயரைக் கொடுத்தார்கள். அதற்கு வரையறுக்கப்பட்ட ஆராதனை விதி அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட ஆராதனை விதி என்று பெயர். இதனை ஆங்கிலத்தில் The Regulative Principle of Worship என்று அழைப்பார்கள். இது இப்படி ஒரு பெயரைப் பெற்று அழைக்கப்பட்டு பிரபலமானதற்கு வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன. சீர்திருத்தவாத காலத்திற்குப் பின்பு பதினேழாம் நூற்றாண்டில் மறுபடியும் திருச்சபையில் ஒரு ஆபத்து தலைதூக்கியது. இவ்வாபத்து முக்கியமாக ஆராதனையையும், போதக ஊழியத்தையும் பாதிப்பதாக இருந்தது. ஒரு விதத்தில் மறுபடியும் ரோமன் கத்தோலிக்க சடங்கு முறைகளை ஆராதனையில் அறிமுகப்படுத்தும் ஆபத்தாகவும் காணப்பட்டது. இவ்வாபத்து தோன்றிய வரலாற்றை முதலில் பார்ப்போம்.

Continue reading

ஜோன் விக்ளிப் “சீர்திரத்தவாதத்தின் விடிவெள்ளி”

பதினாறாம் நூற்றாண்டில் சீர்திருத்தவாதம் ஜேர்மனியில் ஆரம்பித்து காட்டாறுபோல் சீரிப்பாய்ந்து பரவுவதற்கு முன்னர் அதற்கான வித்தை விதைக்க கர்த்தர் பயன்படுத்திய பல நல்ல மனிதர்களை சபை வரலாற்றில் சந்திக்கிறோம். இந்தவகையில் சீர்திரத்தவாதத்தின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்ட மனிதர்தான் இங்கிலாந்தின் ஜோன் விக்ளிப் (John Wycliffe). விக்ளிப்பின் ஆரம்பகால வாழ்க்கைபற்றிய விபரங்கள் அதிகம் இல்லை. அவருடைய பெற்றோரைப் பற்றிய தகவல்களோ அல்லது அவர் கர்த்தரை அறிந்து கொண்டவிதம் பற்றிய விபரங்களோ கிடைக்கவில்லை. இங்கிலாந்தின் யோர்க்ஷயர் பகுதியில் அவர் பிறந்ததாக மட்டும் வரலாறு சொல்கிறது.

1356 இல் ஆக்ஸ்பர்டின் மேர்டான் கல்லூரியின் பட்டதாரி மாணவராக முதலில் ஜோன் விக்ளிப்பை நாம் சந்திக்கிறோம். அதன்பின் 1360 அவர் முதுநிலை பட்டத்தை பேலியல் என்ற இடத்தில் பெற்றார். இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது விக்ளிப் தனது கல்லூரி வாழ்க்கையை பதினான்காம் வயதில் ஆரம்பித்திருக்க வேண்டும். 1372 ஆம் ஆண்டில் விக்ளிப் இறையியலில் அறிவர் பட்டத்தைப் பெற்றார். இக்காலத்தில் விக்ளிப் ரோமன் கத்தோலிக்க போதனைகளில் அதிக ஞானத்தைப் பெற்றிருந்தார். வாதத்திறத்தையும் கொண்டிருந்தார். ஐரோப்பா முழுவதிலும் சிறந்த அறிஞர் என்றும் அறியப்பட்டிருந்தார். கர்த்தர் தன்னுடைய ஊழியத்திற்கு ஒரு திறமைசாலியைத் தெரிவு செய்திருந்தபோதும், விக்ளிப் இக்காலங்களில் ரோமன் கத்தோலிக்கப் போதனைகளிலேயே மூழ்கிப்போயிருந்தார்.

Continue reading

‘அடியோபரா’

அடியோபரா என்றால் என்ன? என்ற கேள்வி நிச்சயம் உங்கள் மனதில் உடனடியாக எழுந்திருக்கும். சீர்திருத்தவாதிகளும், தூய்மைவாதிகளும் போதித்த வேதத்தில் காணப்படும் வரையறுக்கப்பட்ட ஆராதனை விதியை நாம் ஏற்கனவே இவ்விதழில் பார்த்திருக்கிறோம். வரையறுக்கப்பட்ட ஆராதனை விதியைப் படிக்கும்போது அதோடு சம்பந்தப்பட்ட “அடியோபராவையும்” (Adiaphora) பற்றி அறிந்து கொள்வது அவசியம். இவ்வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது. “இதற்கு முக்கியமானதொன்றல்ல” (Not a thing of importance) என்று பொருள். இவ்வார்த்தையை பதினாறாம் நூற்றாண்டின் சீர்திருத்தவாத காலத்திற்குப் பின்பு சில கிறிஸ்தவ சபைப்பிரிவினர் பயன்படுத்த ஆரம்பித்தனர். இவர்கள் கர்த்தருடைய வார்த்தை கட்டளையிட்டு செய்யாதே என்று நிராகரிக்காத எதையும், அது தடை செய்யாத எதையும் ஆராதனையில் சேர்த்துக் கொள்வதில் தவறில்லை என்று வாதாடினார்கள். உதாரணமாக கர்த்தரின் வார்த்தையில் சிலுவை அணியாதே! என்று எங்கும் நேரடியாகக் கட்டளையிடப்படவில்லை. அதேநேரம், அணியக்கூடாது என்றும் எங்கும் சொல்லவில்லை. ஆகவே, சிலுவையை அணிவதில் தவறில்லை என்பது இவர்களுடைய வாதம். இதே முறையில் வாதாடி பிரசங்கிகளுக்கான விசேஷ அங்கி, சிலைவணக்கம், சடங்குகள் என்று பல காரியங்களை இவர்கள் ஆராதனையில் சேர்த்துக் கொண்டார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் இரட்சப்பிற்காக கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தைத் தவிர வேறு எதுவும் முக்கியமானதாக இருக்கவில்லை. கிறிஸ்துவை விசுவாசித்தால் மட்டும் போதும், ஆராதனையில் எல்லாம் விசேஷ அக்கறை எடுக் வேண்டியதில்லை என்பது இவர்களுடைய எண்ணமாயிருந்தது. முக்கியமாக ஆங்கிலிக்கன் பிரிவைச் சேர்ந்தவர்கள் இம்முறையில் சிந்தித்தார்கள்.

Continue reading

‘இரகசிய கிறிஸ்தவர்கள்’

இரகசிய கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் ஒரு புது கிறிஸ்தவக் கூட்டத்தை தமிழகத்தின் சில சுவிசேஷகப் பிரசங்கிகள் உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு மனிதரைப்பற்றி எழுதிய ஒரு கிறிஸ்தவ பிரசங்கியார் அவரை இரகசிய கிறிஸ்தவர் என்று அழைத்து எழுதியிருந்ததை நான் சிலவருடங்களுக்கு முன் ஒரு பத்திரிகையில் வாசித்திருக்கிறேன். இரகசிய கிறிஸ்தவர்கள் என்று ஒரு கூட்டம் உண்மையில் இருக்கிறதா? இவர்கள் யார்? வேதம் இதுபற்றி என்ன சொல்லுகிறது என்று நாம் பார்ப்பது அவசியம்.

இரகசிய கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள், கிறிஸ்துவை விசுவாசித்தபோதும் தங்கள் வீடுகளில் கிறிஸ்துவை அறியாத பெற்றோர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ அல்லது கணவன் மாரிடமோ படவேண்டிய துன்பங்களிலிருந்து தப்புவதற்காக இரகசியமாக கிறிஸ்துவை ஆராதிப்பவர்கள் என்று இப்பிரசங்கிகள் விளக்கம் தருகிறார்கள். இரகசிய கிறிஸ்தவர்கள் தம்மை கிறிஸ்தவர்கள் என்று வெளிப்படையாக அழைத்துக் கொள்ளமாட்டார்கள். பெற்றோர்கள் அல்லது கணவனுடைய கோபத்திற்குப் பயந்து புற மத சடங்குகளையும் இவர்கள் தொடர்ந்து பின்பற்றுவார்கள். வீட்டாருக்குப் பயந்து நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வதையும், கோவிலுக்குப் போவதையும், வேறு சடங்குகளைச் செய்வதையும் இவர்கள் விட்டுவிடுவதில்லை. விசுவாசி என்று தன்னை அழைத்துக்கொள்ளும் மனைவி கணவனுக்கு அது ஒருபோதும் தெரியாமலேயே வாழ்வார்கள். ஆனால் இரகசியமாக வேதத்தை வாசித்தும், ஜெபித்தும் வருவார்கள். தாம் கிறிஸ்தவர் என்ற உண்மை தெரிந்து விடும் என்பதற்காக சபைக்கும் வழமையாகப் போக மாட்டார்கள். இவர்களே இரகசிய கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

Continue reading

சபைப் பிதாக்கள் (Church Fathers)

இரண்டாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் கன்னா பின்னாவென்று வேதபோதனைகளைப்பற்றி விநோதமாக சிந்திக்கத் தொடங்கிய நொஸ்டிசிசத்தாலும், வேத ஆராய்ச்சியை உதாசீனம் செய்து எல்லைமீறி வெறித்தனமாக உணர்ச்சிகளுக்கு தூபம் போட்ட மொன்டனிசத்தாலும் திருச்சபைக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டது. திருச்சபையின் ஆத்மீகம் பலவீனமடைந்திருந்தது. இக்காலப்பகுதிகளிலேயே சபைப்பிதாக்கள் தங்களுடைய சபையில் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கினர். அவர்கள் மிகவும் திறமைசாலிகளாகவும், கடமைப்பாடுடையவர்களாகவும் இருந்தனர். இவர்களில் ஐரேனியஸ், டர்டூலியன், சிப்பிரியன், அலேக்சாந்திரியாவைச் சேர்ந்த கிளமண்ட், ஒரிகன் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர்கள் மூன்று பெரும் பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இப்பிரச்சனைகளை இவர்கள் தீர்மானத்துடன் சந்தித்தபோதும், இப்பிரச்சனைகளைக் குறித்து இவர்கள் எடுத்த தீர்மானங்கள் பிற்காலத்தில் மேலும் பெரிய பிரச்சனைகளை உருவாக்கின.

Continue reading

1689 விசுவாச அறிக்கை (அதிகாரம் 5)

தெய்வீக பராமரிப்பு

எழுதியவர்: லாமார் மார்டீன்
தமிழில்: ஆசிரியர்

1. அனைத்தையும் படைத்த நல்லவராகிய கடவுள், தமது அளவற்ற வல்லமையாலும், ஞானத்தாலும் மிகுந்த விவேகதுள்ள தமது பரிசுத்த பாரமரிப்பினாலும் பெரிதானதிலிருந்து சிறியதான எல்லாப்படைப்புயிர்களையும், பொருட்களையும், தன்னுடைய படைப்பின் நோக்கத்தின் நிறைவேற்றுதலுக்காகத் தாங்கி, வழிகாட்டி ஆண்டு வருகிறார். தவறாநிலையுடைய முன்னறிவாலும் தமது சுயசித்தத்தின் தன்னுரிமையுள்ள மாறாத்திட்டத்தின் மூலமும், மகிமையுள்ள தமது ஞானம், வல்லமை, நீதி, எல்லையற்ற நற்குணம், இரக்கம் ஆகியவற்றின் துதிக்காகவும் கடவுள் அனைத்தையும் ஆண்டு வருகிறார்.

யோபு 38:11; சங்கீதம் 135:6; ஏசாயா 46:10, 11; மத்தேயு 10:39-31; எபேசியர் 1:11; எபிரேயர் 1:3.

Continue reading

அடக்கி வாசிப்போம்!

இன்று ஆராதனையில் இசைக்கும், இசைக்கருவிகளுக்கும் அளவுக்கு அதிகமாக இடம் கொடுக்கப்படுகிறது. இசையும் ஆராதனையின் ஒரு அம்சம் என்று தவறாகக் கருதப்படுகிறது. கர்த்தர் ஒருபோதும் இசையையும், இசைக்கருவிகளையும் ஆராதனையின் அம்சங்களாக வேதத்தில் வெளிப்படுத்தவில்லை. ஜெபம், பிரசங்கம், பாடல்கள், வேதவாசிப்பு, திருவிருந்து, திருமுழுக்கு, காணிக்கை எடுத்தல் ஆகியனவையே ஆராதனையின் முக்கிய அம்சங்கள். இசைக்கு இதில் இடம் கொடுக்கப்படவில்லை. அதனால் ஆராதனையில் இசை இருக்கக்கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. இசை ஆராதனையின் ஒரு முக்கிய அம்சம் அல்ல; முக்கிய அம்சமாகக் கருதப்படக்கூடாது. அது நாம் கர்த்தரின் மகிமையைப் பாடுவதற்கு உதவும் வெறும் கருவியாக மட்டுமே இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, பிரசங்கம் ஆராதனையின் முக்கிய அம்சம். ஆனால், பிரசங்க மேடை ஆராதனையின் முக்கிய அம்சமல்ல. அதற்காக பிரசங்க மேடை இருக்கக்கூடாது என்று சொல்வோமா? பிரசங்க மேடை பிரசங்கம் செய்ய நமக்கு உதவும் வெறும் கருவியே. பிரசங்கத்தில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டுமே தவிர பிரசங்க மேடை எத்தனை அழகாக இருக்க வேண்டும் என்பதில் அல்ல. இதைப்போலத்தான் ஆராதனையில் நாம் ஆவியோடும், உண்மையோடும் கர்த்தரைப் பாடித் துதிப்பதில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டுமே தவிர இ‍சைக்கருவிகளில் அல்ல.

Continue reading