சுவிசேஷ ஊழியம்

தீமோத்தேயுவைப் பார்த்து பவுல், நீ சுவிசேஷகனாகவும் இருக்க வேண்டும் என்று சொன்னார் (2 தீமோத்தேயு). சுவிசேஷ ஊழியத்தில் அப்போஸ்தலர்கள் பெரும் அக்கறை காட்டினார்கள். இயேசு கிறிஸ்து சுவிசேஷத்தை அறிவித்த மனித குமாரனாக வந்தார். அவர் திருச்சபை‍க்குக் கொடுத்த பெருங்கட்டளை, சுவிசேஷத்தை சகல மக்களுக்கும் எந்தவித வேறுபாடு காட்டாமலும் அறிவிக்க வேண்டும் என்பதே (மத்தேயு 28:18-20). இதெல்லாம் சுவிசேஷ ஊழியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சில உதாரணங்கள். சுவிசேஷ ஊழியத்தின் அவசியத்தை நம்பாதவர்களும், அதில் அக்கறை காட்டாதவர்களும் இருக்க முடியாது. இந்த ஆக்கம் சுவிசேஷ ஊழியத்தின் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு ஆக்கமல்ல; அவ்வூழியம் எப்படி அமைய வேண்டும் என்பதை விளக்கும் ஆக்கம். இன்று தமிழ் மக்கள் மத்தியில் நடந்து வரும் சுவிசேஷ ஊழியத்தைப் பார்த்து புறஜாதியார் கிறிஸ்தவத்தை மதிக்காமல் இருப்பதில் வியப்பில்லை. சமீபத்தில் ஒரு இந்து நண்பர் என்னிடம் தன்னுடைய குடும்பத்தாரைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டார். சுவிசேஷ ஊழியம் என்று சொல்லி தன் குடும்பத்தை சிலர் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக வருத்தப்பட்டார். தனக்கு உடல்நலம் சரியில்லாதபோது சுவிசேஷக் கூட்டத்திற்கு வந்தால் உடனே சுகமாகிவிடும் என்று பலர் வற்புறுத்தியும் தான் போகவில்லை என்று கூறிய அவர், இந்தக்கூட்டங்களுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்துகிற ஒருவராவது உடல் நலமில்லாமலிருக்கும் தனக்கு சரீரப்பிரகாரமாக ஒரு உதவியும் செய்வதில்லை என்றார். கூட்டத்திற்கு வருமாறு போன்செய்து வற்புறுத்துகிறவர்கள், உங்களுக்கு இன்றைக்கு எப்படி இருக்கிறது? ஏதாவது உதவி தேவையா? என்று ஒரு வார்த்தை கூட கேட்பதில்லை என்று வருத்தப்பட்டுக்கொண்டார்.

Continue reading