உலக சமுதாயம் எப்பொழுதுமே

உலக சமுதாயம் எப்பொழுதுமே காலத்துக்கேற்ப மாறுதல் அடைந்து கொண்டே வரும். பாவம் தொடர்ந்தும் பாவமாகவே இருந்து சமுதாய மக்களைப் பாதித்து வந்தாலும், காலத்துக்குக் காலம் அது புதுக்கோணங்களில் மக்களின் சிந்தனைப்போக்கைப் பாதித்து செயல்பட வைக்கின்றது. நமது தமழ் சமுதாயத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். கல்லூரிகளில் பாலியல் கல்வி போதிக்க வேண்டும் என்றளவுக்கு இன்று சிந்தனை போய்க்கொண்டிருக்கிறது. இதுபோல் இன்னும் எத்தனையோ மாற்றங்கள். இந்த மாற்றங்கள் சமுதாய மக்களைப் பாதிப்பதோடு கிறிஸ்தவர்களையும், சபைகளையும் பாதிப்பதாகவும் இருக்கின்றன. பாவத்தோடு கிறிஸ்தவர்கள் நடத்தும் போராட்டம் இந்த சமுதாய மாற்றங்களை நினைவில் கொண்டு நடத்தப்படுவதாக இருக்க வேண்டும். இந்த மாற்றங்களை நாம் புறக்கணித்துவிட மு‍டியாது; அவை நம்மை ஒன்றும் செய்யாது என்று அலட்சியமாக இருந்துவிடவும் முடியாது. இந்த மாற்றங்களைக் கவனித்து, இவற்றின் போக்கில் போய்க்கொண்டிருக்கிற சமுதாய மனிதன் திருந்துமுகமாக நாம் சுவிசேஷத்தை வல்லமையோடு பிரசங்கிக்க வேண்டும். மே‍லை நாடுகளில் இன்றைய சூழ்நிலையில் சமுதாய மக்களைப் பாதித்திருக்கும் சிந்தனைப் போக்கைப் பின்நவீனத்தும் (Postmodernism) என்று சமூகவியலாளர்கள் அழைக்கிறார்கள். இந்தப் பின்நவீனத்துவம் டெலிவிஷன், இணையம் மற்றும் பல நவீன தொழில்நுட்ப செய்திப்பரவல் சாதனங்களின் மூலம் தமிழ் மக்களையும் இன்று துரிதமாகப் பாதித்து அவர்களுடைய சிந்தனைப்போக்கிலும், வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இம்மாற்றங்களை மேலை நாடுகளில் வாழும் தமிழர் மத்தியில் வெட்டவெளிச்சமாகப் பார்க்கலாம். ஆனால், கீழைத்தேசங்களில் முக்கியமான நகர்ப்புறங்களில் வாழ்பவர்களை அவை இன்று பெருமளவுக்கு பாதித்து வருகின்றன. இந்தப் பின்நவீனத்துவத்தை விளக்கி, இதை எதிர்கொண்டு நாம் எப்படிக் கிறிஸ்தவர்களாக வெற்றிகரமாக வாழ்வது? திருச்சபைகள் எவ்வாறு சுவிசேஷ ஊழியத்தைத் தொடர்வது? என்பதை “பின்நவீனத்துவமும், கிறிஸ்தவமும்” என்ற ஆக்கத்தின் மூலம் இந்த இதழில் ஆராய்ந்திருக்கிறோம். சிந்தித்து விளங்கிக் கொள்ள வேண்டிய இந்த ஆக்கம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். வழமையாக வரும் ஆக்கங்களோடு புதிய சில ஆக்கங்களையும் இவ்விதழில் காணலாம். தொடர்ந்து நீங்கள் சத்தியத்தில் வளரவும், வளம்பெறவும், உறுதிபெறவும் கர்த்தர் உங்களுக்கு இந்த இதழ் மூலம் உதவட்டும்.

– ஆசிரியர்