அன்புக்குரிய வாசக நண்பர்களுக்கு இதயம் கனிந்த

புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த இதழோடு திரு மறைத்தீபம் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 1995ல் நண்பர்கள் சிலரின் ஊக்குவிப்பால் நூறு பிரதிகளோடு மட்டும் ஆரம்பமான பத்திரிகை இன்று தமிழ் பேசும் கிறிஸ்தவ அன்பர்கள் வாழும் நாடுகளை யெல்லாம் சென்றடைந்து ஆத்மீக உணவளிக்கும் பணியைச் செய்து வருகின்றது. ஆரம்பத்திலிருந்தே சீர்திருத்த விசுவாசத்தை தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி, அந்த விசுவாசத்தின் அடிப்படையில் சபை ஊழியங்கள் ஆரம்பித்து வளர ஆவன செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு பத்திரிகை எழுந்தது. அந்தப் பணியை இன்றுவரை தளராது செய்ய எம்மை வழி நடத்தி வருகின்ற நம் தேவனுக்கு முதற் கண் வணக்கங்கள். ஒன்பது ஆண்டுகளில் கர்த்தர் நம்மத்தியில் சாதித்துள்ள காரியங்கள் அனேகம். வேதபூர்வமான சீர்திருத்த விசுவாசத்தில் ஆர்வம் காட்டி அதன் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையையும், ஊழியங்களையும் அமைத்துக் கொள்ளும் பணியில் அனேகரைக் கர்த்தர் வழிநடத்தி வருவதை நாம் காண்கிறோம். இந்த எழுச்சி எமக்கு மகிழ்ச்சியையும், மனத்தாழ்மையையும் தருகின்றது. இருந்தபோதும் நல்லது நடக்கின்றபோதெல்லாம் நெஞ்சம் கலங்குகின்ற பிசாசின் வஞ்சகச் செயல்களையும் எம்மால் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. சீர்திருத்தப் பாதை சத்தியமானதாகவும், இனிமையான தாகவும் இருந்த போதும் அது கல்லும் முள்ளும் நிறைந்த இடரான பாதை என்பதை நண்பர்கள் பலர் ஏற்கனவே உணர்ந் திருக்கிறார்கள். கர்த்தருடைய வார்த்தைக்கு முரணான பாரம்பரியங்களையும், சடங்காச்சாரியங்களையும் தூக்கி எறிந்துவிட்டு, முகத்தாட்சன்யத்துக்கும், மனிதனுக்கு துதிபாடும் போக்கிற்கும் நம் வாழ்வில் சமாதி கட்டி சபை சீர்திருத்தத்தில் ஈடுபடுவதென்பது சாதாரணமான காரியமல்ல. அது சாத்தானுக்கு பிடித்தமானதுமல்ல. இதை இந்த ஒன்பது ஆண்டுகள் நமக்குக் காட்டித் தந்திருக்கின்றன. ஆரம்பத்தில் அளவுகடந்த ஆர்வம் காட்டிப் பாதியில் பாதையைவிட்டு விலகிய சிலரை நாம் சந்தித்திருக்கிறோம். எதிர்ப்புகளை சந்திக்க அஞ்சி ஊழியம் என்ற பெயரில் வெறும் சரக்குக்கடை நடத்தப் போனவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். இத்தனைக் கும் மத்தியில் சத்தியம் வீண் போகாது என்ற தளராத நம்பிக்கையோடு, அதை விற்க மறுத்து, சொந்த வாழ்க்கையிலும், ஊழியத்திலும் பல தியாகங்களைச் செய்து தொடர்ந்து சத்தியத்திற்காக உழைத்து வருகின்ற அருமை வாசக நண்பர்களுக்கு இந்த இதழைக் காணிக்கையாக வழங்குகிறேன்.

– ஆசிரியர்.-