தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கின்ற

தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கின்ற இரண்டு நாடுகளில் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற உள்நாட்டுத் தேர்தல்கள் நிகழவிருக்கின்றன. இந்தியாவிலும், ஸ்ரீலங்காவிலும் நிகழவிருக்கும் தேர்தல்களைத்தான் சொல்லுகிறேன். இரண்டு நாடுகளிலும் நடக்கவிருக்கும் தேர்தல்கள் முக்கியமானவை. பொருதாளாதாரத்துறையில் முன்னேற்றம் கண்டுவரும் இந்தியாவைத் தொடர்ந்து பாரதீய ஜனதாதான் ஆள வேண்டுமா? என்ற கேள்விக்கு இந்தத் தேர்தல் பதிலளிக்கும். ஸ்ரீலங்காவைப் பொருத்தவரையில் தமிழீல விடுதலைப் புலிகளுக்கும் நாடாளும் அரசுக்கும் உள்ள உறவு எந்தவகையில் அமையப்போகிறது என்பதை சுட்டிக் காட்டுவதாக அங்கு நடக்கவிருக்கும் தேர்தல் அமையும். நாட்டு நிகழ்வுகளில் கிறிஸ்தவர்களுக்கும் நிச்சயம் பங்கிருக்கின்றது. இரு நாடுகளிலுமே கடந்த சில வருடங்களாக கிறிஸ்தவத்திற்கெதிரான செயல்கள் நிகழ்ந்து வந்திருக்கின்றன. பாரதீய ஜனதா கட்சி இந்தியாவை இந்து நாடாகக் காணும் தனது திட்டத்தை ஒருபோதுமே மறைத்து வைக்கவில்லை. அதன் ஆட்சியில் கிறிஸ்தவர்களின் நிலை கவலை தரும்படியே இருந்து வந்திருக்கிறது. ஸ்ரீலங்காவில் சமீபகாலமாக புத்தமத எழுச்சிக்காகப் போராடுபவர்கள் தலைதூக்கி யிருப்பதைக் காணமுடிகின்றது. ஸ்ரீ லங்காவின் வரலாற் றில் முதல் தடவையாக புத்தபிக்குகள் கட்சி அமைத்து தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு இணைந்திருக்கும் ஜனதாவிமுக்தி பெரமுன ஓர் மார்க்ஸீயக் கட்சி. ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளைப்போல அரசுக்கெதிராக தெற்கில் ஆயுதம் ஏந்திய கூட்டம். அவர்கள் கிறிஸ்தவத்தின் நண்பர்கள் அல்ல. இரு நாடுகளிலும் காணப்படும் இந்த சூழ்நிலை நடக்க விருக்கும் தேர்தல்களால் எந்தவகையில் மாறப்போகின்றது என்று இருநாட்டு கிறிஸ்தவ சமுதாயங்களும் நிச்சயம் எதிர்பார்ப்புகளோடு காத்திருக் கும் என்பதில் சந்தேகமில்லை. இரு நாடுகளுக்காகவும் உலகெங்கும் இருக்கும் தமிழ் கிறிஸ்தவர்கள் ஜெபிப்பது அவசியம். தேசங்களுக்கெல்லாம் சொந்தக்காரராக இருந்து ஆண்டுவரும் இறையாண்மையுள்ள கர்த்தரின் சித்தம் இந்தத் தேர்தல்களின் மூலம் இந்நாடுகளில் நிறைவேறவும், கிறிஸ்தவர்கள் சமாதானத்துடன் வாழவும், சுவிசேஷம் தடையின்றி அறிவிக்கப்படவும், சபைகள் வளரவும் ஜெபியுங்கள். கர்த்தரின் கிருபையால் இன்னு மொரு இதழைத் தயாரித்து உங்கள் முன் வைக்கிறேன். இந்த இதழில் வந்திருக்கின்ற ஆக்கங்கள் உங்களுக்குப் பயனுள்ளவையாக இருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் தொடர்ந்து காட்டிவரும் ஆதரவுக்கு எமது இலக்கியக் குழுவின் சார்பாக எனது நன்றிகள்.

– ஆசிரியர்!