புதிய வருடம் ஆரம்பித்து விட்டது

புதிய வருடம் ஆரம்பித்து விட்டது. நமது  பத்திரிகைக்கு இது சிறப்பான வருடம். பத்து வயதைக் கர்த்தரின் கிருபையால் கடந்து வந் திருக்கிறது திருமறைத்தீபம். இதை நினைவு கூறுமுகமாக அடுத்த இதழ் சிறப்பு இதழாகப் பரிமளிக்க விருக்கிறது. பணத்தையோ, பாராட்டையோ எதிர்பார்க் காமல் சத்திய வாஞ்சையோடு தமிழ் கிறிஸ்தவத்தின் மறுமலர்ச்சிக்காக, சீர்திருத்தத்திற்காக உழைத்து வரு கிறது பத்திரிகை. இத்தனை வருடங்களாக வழிநடத்தி ஆசீர்வதித்துள்ள இறையாண்மையுள்ள கர்த்தர் இனி வருங்காலங்களிலும் நம்மை வழி நடத்தி சத்தியத்திற் காக பாடுபட தொடர்ந்து உதவ வேண்டுமென்பதே எங்கள் ஜெபம். இதற்காக எங்களோடு இணைந்து செயல்படுங்கள், ஜெபியுங்கள்.

இதுவரை வந்துள்ள இதழ்களைப் போலவே இதிலேயும் சில முக்கிய கோட்பாடுகளை ஆராய்ந்திருக்கிறோம். தமிழ்ப் பண்பாடு என்ற பெயரில் விசுவாசிகள் மத்தியில் உலவி வரும் இந்துமதப் பண்பாட்டையும் (பக். 1), பண்பாடென்ற பெயரில் நம்மத்தியில் காணப்படும்  வாழ்க்கைக்கு உதவாத நடைமுறைகளையும் (பக். 26) இரு ஆக்கங்களில் ஆராய்ந்திருக்கிறோம். வேதபூர்வமான சீர்திருத்தப் போதனைகளை அளிப்பது பத்திரிகையின் பிரதான நோக்கம் என்பது வாசகர்களுக்குத் தெரியும். வேதரீதியிலான அந்த சீர்திருத்தம் இன்று எங்கெல்லாம் நடக்க வேண்டும் என்பதை ‘எதில் வேண்டும் சீர்திருத்தம்’ என்ற ஆக்கம் ஆராய்கிறது. முடிந்து போனதல்ல சீர்திருத்தம்; அது தொடர்ந்து நடக்க வேண்டியது என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள் அதிகம். வேத அடிப்படையில் நாம் வாழ்கிறோமா?, நமது ஊழியங்கள் அதன்படி நடக்கின்றனவா? என்று அன்றாடம் ஆராய்ந்து பார்த்து கவனத்தோடு வாழ்வது தான் சீர்திருத்த வாழ்க்கை. வியாபார ஊழியம் செய்கிறவர்களுக்கும், சுயநலத்தால் தம்மை வளர்த்துக்கொள்வ தற்காக குடும்ப ஊழியம் செய்து வருபவர்களுக்கும் இந்த சத்தியம் சுட்டுப்போட்டாலும் விளங்காது. சிக்கலான வேதப்பகுதிகளை விளக்கும் ஒரு பகுதியும் இந்த இதழில் ஆரம்பமாகிறது. வழமையாக வந்து கொண்டிருக்கும் ஏனைய ஆக்கங்களும் இந்த இதழை அலங்கரிக்கின்றன.

பத்திரிகையால் அடைந்த பயன்களைக் கடிதங்கள் மூலம் தொடர்ந்து விளக்கிவரும் உங்களுக்கு எங்களுடைய நன்றி. ஒவ்வொரு கடிதத்திற்கும் பதிலெழுதுவது முடியாத காரியமென்றாலும் அவை எங்களை அதிகமாக இந்தப் பணியில் ஊக்கத்தோடு உழைக்கவைக்கின் றன. தொடர்ந்து எழுதுங்கள். ஜெபியுங்கள். – ஆசிரியர்