இந்து சமுத்திரத்தில்

இந்து சமுத்திரத்தில் உள்ள பன்னிரெண்டு நாடுகளைக் கோரமாகத் தாக்கி 300,000 பேரை அழித்திருக்கிறது சுனாமி. பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கான பணிகள் இந்நாடுகளில் தொடர்ந்து நடந்து வருகின்றன. உலக நாடுகள் உடனடியாக உதவிக்கு வந்து அமைதி இழந்து தவித்துக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு உதவிக்கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் மத்தியில் நெஞ்சில் ஈரமின்றி நிவாரணப் பணிக்கு அனுப்பப்பட்டு வரும் பணத்தையும் பொருளையும் கொள்ளையடிக்கும் பிணந்தின்னிக் கழுகுகளும் சுற்றிச் சுற்றி வருகின்றன. கடலுக்கு வெகு தூரத்தில் இருக்கும் வீட்டில் வசிக்கும் ஒரு சபைப் போதகர் கடல் தண்ணீரால் தான் பாதிக்கப்பட்டதாகப் பொய் சொல்லி நிவாரணம் பெற்றதை நான் அறிவேன். அழிவுக்கு மத்தியில் பாவம் மனிதனை என்னவெல்லாம் செய்யவைக்கிறது.

எல்லாவற்றையும் இழந்து நிற்பவர்களுக்கு எம்மால் செய்ய முடிந்ததை செய்வது அவசியம். அவர்கள் வீட்டில் மறுபடியும் விளக்கேற்றி வைக்க வேண்டியது மனிதாபி மானமுள்ளவர்களுடைய கடமை. அதேவேளை பாவத்தின் கோரத்தினை விளக்கும் ஒரு அடையாளமே சுனாமி என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. வரப்போகிற நியாயத்தீர்ப்பைக் குறிக்கும் ஒரு அடையாளமாகவும் அது இருக்கிறது என்று வேதம் விளக்குகிறது. ஸ்ரீ லங்காவின் அருகம் குடாப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் சிலர் சுனாமி கடவுளால் அனுப்பப்பட்டதென்று தெரிவித்திருக்கிறார்கள். உல்லாசப் பிரயாணிகளைக் கவருவதற்காக தங்கள் பிரதேசத்தில் உல்லாச விடுதிகளைக்கட்டி சின்னஞ் சிறுவர்களையும், சிறுமியர்களையும் இரகசியமாகப் பல்லாண்டுகாலமாக பாலியல் கொடுமைக்கு உட்படுத்தி வந்த அநியாயத்தைத் தாங்க முடியாமலேயே கடவுள் சுனாமியை அனுப்பியதாகக் கூறியிருந்தார்கள் என்று பத்திரிகையில் வந்திருந்தது. இந்தக் கிராமத்து மக்களில் ஒரு சிலருக்குத் தெரிந்திருந்ததுகூட இன்று பலருக்கு இருட்டாக இருந்து வருகிறது. நீதியின் தேவன் தொடர்ந்து பாவத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார் என்பதை சுனாமி வெளிப்படுத்தியுள்ளது. சிறுவர்களைப் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தும் நாடுகளில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லங்கா. இன்று அந்தக் கொடுமைகள் நடந்துவந்த உல்லாச ஓட்டல்களில் அநேகமானவை உருத்தெரியாமல் அழிக்கப்பட்டுவிட்டன. பாவம் அதிகரிக்க அதிகரிக்க கடல் கொந்தளிப்பும், நிலநடுக்கங்களும், இயற்கையின் கோரமும் அதிகரிக்கத்தான் செய்யும். இயேசு கிறிஸ்துவை நாடி வந்தால் மட்டுமே எங்கும் எவருக்கும் நித்திய விடுதலை கிட்டும் என்பதை சுனாமி யின் மூலம் சிலராவது அறியவந்தால் சரி.

– ஆசிரியர்.