பத்தாவது ஆண்டு மலர்

பத்து வருடங்களைக் கண்டுவிட்டது திருமறைத்தீபம். அதை நினைவு கூரு முகமாக இந்த இதழ் பத்தாண்டு நிறைவு மலராக வெளிவருகின்றது. பத்திரிகையின் வளர்ச்சியில் ஊக்கம் காட்டிப் பங்கெடுத்து வருபவர்களை இந்தப் பக்கங்களில் நீங்கள் பார்க்கலாம். நம்மையே நாம் பெருமை பாராட்டிக் கொள்வதற்காக இதை நாம் வெளியிடவில்லை. கண்களில் படாமல் பின்னால் இருந்து பணிபுரிகிற அநேகரை ஒரு தடவையாவது வெளிச்சத்தில் நிறுத்தி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதற்காகவே இந்த நினைவு மலர் வெளிவருகிறது.

சர்வ வல்லவரான கர்த்தர் தம்முடைய அளப்பரிய கிருபையால் தரமான கிறிஸ்தவ காலாண்டு பத்திரிகையை தமிழினத்திற்கு வழங்க நம்மை இந்நாள் மட்டும் வழிநடத்தி வந்திருக்கிறார். பிள்ளைப் பருவத்தைக் கடந்து வளர்ந்திருக்கிறது திருறைத்தீபம். இதற்குப் பாலூட்டி, அருஞ்சுவை உணவூட்டி, நல்லாடை உடுத்தி இதன் வளர்ச்சியில் அக்கறைகாட்டி தாயின் பாசத்துடன் தொடர்ந்து உழைத்து வரும் ஒரு கூட்டமே இருக்கின்றது. ஆசிரியரும், அவர் பணிபுரியும் சபையும் இதற்கு அடித்தளமென்றால் இந்தக் கட்டிடம் வளர தன் பங்குக்கு செங்கல் வைத்து இதன் வளர்ச்சியில் அக்கறை காட்டி உழைக்கிறவர்கள் அநேகர். கர்த்தரே இப்பணிக்கு ஊன்றுகோல்.

 

நான் எழுதுவதையும், மொழி பெயர்ப்பதையும் சரிபார்த்து பல வருடங்களாக துணை புரிந்துள்ளார் என் மனைவி. இன்று அந்தப் பொறுப்பைச் சுமந்து வருகிறார், சென்னையில் எடிட்டராக ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் சகோதரன் ஜேம்ஸ், பத்திரிகையை அருமையாக அச்சிட்டு நேரம் தவறாமல் அனுப்பிவருகிறார்கள் டிராவு பிரின்ட் அச்சகத்தார். ஸ்ரீ லங்காவில் பத்திரிகையை அச்சிட்டு விநியோகித்து வருகிறார் கள் கிருபை இலக்கிய சேவையைச் சேர்ந்த சகோதர்கள் அருள்செல்வமும், மில்டனும். எம்மோடு இணைந்துழைக்கும் அநேக திருச்சபைகள் இவ்விதழ் தொடர்ந்து வெளிவரத் துணை புரிகிறார்கள். அவசியமேற்படுகிற வேளையில் தேவையான ஆக்கங்களை எழுதிப் பணிபுரிகிறார்கள் என் அருமை நண்பர்களான போதகர்கள். பத்திரிகையின் நடைமுறைத் தேவைகளைப் பொறுப்புடன் நிறைவேற்றி வருகிறார்கள் சவரின் கிறேஸ் சபை அங்கத்தவர்கள். பத்திரிகை வழங்கிவரும் வேத போதனைகளால் ஆத்மீக ஒளி பெற்று சத்தியத்தில் அக்கறைகாட்டி பத்திரிகைக்கு ஆதரவு அளித்துவருகிறார்கள் வாசக நண்பர்கள். ஜெபங்களில் எம்மைத் தாங்கி நெகேமியாவின் ஈட்டிபோல் இருந்து வரும் அன்புள்ளங்களும் அநேகம். இப்படி இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. திருமறைத் தீபத்தின் வளர்ச்சிக்காக அக்கறையோடு உழைத்து வரும் அனைவருக்கும் பத்திரிகையின் சார்பாக என் மனமார்ந்த நன்றிகள்.

1995ல் நண்பரொருவரின் வீட்டு அறையில் என்னோடு சேர்த்து மூன்று விசுவாசிகளின் உள்ளத்தில் எழுந்த சத்திய வாஞ்சையின் வார்ப்பே திருமறைத்தீபம். ஒரு சிறு முயற்சி யாக சவரின் கிறேஸ் சபையைச் சார்ந்த சவரின் கிறேஸ் வெளியீடுகளினால் 1995ல் முந்நூறு பிரதிகளோடு மட்டும் உதயமான திருமறைத்தீபம் சீர்திருத்த வேத போதனை களை தமிழினத்திற்கு அறிமுகப்படுத்துவதையும், அதன் அடிப்படையில் போதகர் களும் திருச்சபைகளும் வளரத் துணைச் செய்வதையும் இலக்காகக் கொண்டு உழைத்து வருகின்றது. இன்று இருபது நாடுகளில் திருமறைத்தீபம் பவணி வருகின்றது. இந்நாள்வரை இதன் வளர்ச்சிக்குத் துணை புரிந்த கர்த்தர் தொடர்ந்தும் வழி நடத்துவார் என்ற நம்பிக்கையோடு பாதம் பதித்து நடந்து வருகிறது திருறைத்தீபம்.

திருமறைத்தீபத்தை அச்சிட ஆரம்பித்தபோது யாரிடம் அச்சிடுவது என்ற கேள்வி எழுந்தது. கர்த்தரே ஒரு நிறுவனத்திடம் எம்மை வழிநடத்தினார். தொடர்ந்து பத்து ஆண்டுகளாக கடமைக்காக எதையும் செய்யாது, அக்கறையோடு நமது பணிகளுக்கு முதலிடம் கொடுத்து பத்திரிகையை அச்சிட்டு வருகிறார்கள் ‘டிராவு பிரின்ட்’ அச்சகத்தார். இந்த சிறப்பிதழின் வர்ணப் பக்கங்களையும் பணமே வாங்காது அச்சிட்டுத் தந்திருக்கிறார்கள். நண்பர் ஜோன் ஃபிரிக்கர் (John Fricker) அங்கே நமது பணிகளைச் செய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறார். பத்து ஆண்டுகளாக எந்தவித தடங்கலும் இல்லாமல் சகல பணிகளையும் பொறுப்போடு செய்து உதவி வருகிறார்.

விடியும் வேளையில் பகலவனின் பார்வைபட்டு மறையும் பனித்துளிகளாய்ப் பறந்து விட்டன பத்து ஆண்டுகள். திருறைத்தீபம் எத்தனையோ இதயங்களில் சீர்திருத்தத் தீயைப் பற்ற வைத்திருக்கிறது என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. அந்தத் தீ கொழுந்துவிட்டு எரியும் இதயங்களும் அநேகம். இருண்டு போயிருக்கிற தமிழினத்தின் கிறிஸ்தவ சமுதாயத்தில் ஒளியேற்றிவைக்கப் பாடுபட்டு வரும் திருமறைத்தீபம் அதில் வெற்றி கண்டிருக்கிறதா என்பதற்கு காலம்தான் சாட்சி சொல்ல வேண்டும்.

இயேசுவைத் தேவனாக ஏற்றுக்கொண்டு இரண்டாங்கெட்டான் வாழ்க்கை வாழ்ந்து வரும் திருச்சபைகளையும், கிறிஸ்தவ சமுதாயத்தையும் அசைத்து மெய்யான விசு வாசத்திற்கு அடையாளம் அவருடைய வார்த்தைக்கு அடிமைப்பட்டு அனைத்துக் கடமைகளையும் செய்வதே என்பதை பகிரங்கமாக அறிவித்து வருகிறது திருறைத்தீபம். கிறிஸ்தவ சமுதாயத்தில் எல்லோருக்கும் துதிபாடி, சபைப் பிரிவுகளை யெல்லாம் தாஜா செய்து, கொள்கைகளையும் கோட்பாடுகளையும் புறக்கணித்து பிரபலமான பத்திரிகை என்று பெயர் வாங்குவதை நாம் என்றுமே இலட்சியமாகக் கொண்டிருக்க வில்லை. சத்தியத்தை வெளிப்படையாகப் போதிப்பதையும், நடைமுறையில் இருக்கு மாறு பார்த்துக்கொள்ளுவதையும் வெட்கப்படுகிற காரியமாக நாம் எண்ணவில்லை. “கொள்கைகளையும், கோட்பாடுகளையும் வெளிப்படையாக எடுத்துக் கூறாத பத்திரிகை ஓர் இலக்கியத் தடங்கல்” என்ற பிரசங்கிகளின் இளவரசனாம் ஸ்பர்ஜன் சொன்ன வார்த்தைகள் எங்கள் காதில் தொடர்ந்து ரீங்காரமிட்டு வருகின்றன. தமிழினத்தில் சத்தியத்தின் அடிப்படையில் சீர்திருத்தம் ஏற்பட்டு சபைகள் வளர வேண்டும் என்ற வாஞ்சையோடு தொடர்ந்து உழைத்து வருகிறோம்.

ஆற்றவேண்டிய பணிகள் மலை போல் நம்முன் எழுந்து நிற்கின்றன. போக வேண்டிய வழியும் இடறலானது; நீண்டது. இதுவரை இருந்ததைவிடப் பொறுமையும், துணிவும், தன்னம்பிக்கையும் நமக்குத் தேவை. முன்வைத்த காலைப் பின்வைக்காமல் தொடர்ந்து சீர்திருத்தப் பாதையில் கர்த்தர் நம்மை வழிநடத்திச் செல்லட்டும். நம்மெல் லோரையும் ஒன்றுகூட்டி இலட்சிய வாஞ்சையோடு சீர்திருத்த கிறிஸ்தவத்தின் வளர்ச் சிக்காகவும், எழுச்சிக்காகவும் பயன்படுத்தி வரும் இராஜாதி இராஜனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு இந்தப் பத்தாவது ஆண்டு நிறைவு மலரை சமர்ப்பிக்கிறேன். வருகிற காலங்களிலும் நாம் ஏற்றுக் கொண்டுள்ள இலட்சியத்தை மறக்காது கர்த்தரின் மகிமைக்காக உழைக்க கிறிஸ்து இயேசு நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.

– ஆசிரியர்

பத்தாண்டு காலத் தமிழ் கிறிஸ்தவ இலக்கிய வளர்ச்சி

கடந்த பத்தாண்டு காலத்தில் தமிழில் கிறிஸ்தவ இலக்கியம் எந்தள வுக்கு வளர்ந்திருக்கிறது என்பதைக் கணிப்பதே இந்த ஆக்கத்தின் நோக்கம். கிறிஸ்தவ இலக்கியம் என்று கூறும்போது கிறிஸ்தவ இலக்கியமாகத் தன்னை இனங்காட்டிக் கொண்டு தமிழில் வெளி வரும் எல்லாக் குப்பைகளையும் நாம் கருத்தில் கொள்ளவில்லை.

கிறிஸ்தவ இலக்கியம்

‘கிறிஸ்தவ இலக்கியம்’ என்ற வார்த்தைகளின் பொருளை முதலில் விளக்குவது அவசியமாகிறது. இதில் ‘கிறிஸ்தவம்’ என்று நாம் குறிப்பிடுவது ரோமன் கத்தோலிக்க மதத்தைத் தவிர்த்த புரொட்டஸ்தாந்து பிரிவினரை மட்டுமே. ரோமன் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவமல்ல. அது கிறிஸ்தவத்தின் பெயரில் உலாவரும் போலிச் சமயம். இது தமிழினத்தில் இன்று அநேகர் புரிந்து கொள்ளாத உண்மையாக இருக்கிறது. சமீபத்தில் போப் இரண்டாம் ஜோன் போலின் மரண சடங்கின்போது நியூசிலாந்தின் கத்தோலிக்க குரு ஒருவர் பின்வருமாறு கத்தோலிக்க மதத்தை புரொட்டஸ்தாந்து மதத்திலிருந்து பிரித்துக் காட்டினார்: “கத்தோலிக்க மதம் புரொட்டஸ்தாந்து மதத்தைப் போல வார்த்தையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது சடங்குகளை அடிப்படையாகக் கொண்டது. இதுவே இரண்டையும் பிரிக்கும் முக்கிய மான அடிப்படை வேறுபாடு” என்றார். இது எத்தனை பெரிய உண்மை. கத்தோலிக்க மதம் வேதத்தை ஒரு சாட்டுக்காக கையில் வைத்திருந்தாலும் அது வேதத்தின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்க வில்லை. சடங்குகளில் மட்டுமே அது மனிதனின் இரட்சிப்புக்காகவும், அத்தனை ஆத்மீகக் காரியங்களுக்காகவும் தங்கியிருக்கிறது.

Continue reading

பத்தாண்டுகால பத்திரிகை உலக அனுபவம்

தனிப்பட்ட முறையில் என்னைப்பற்றியும் என்னுடைய அனுபவங்களைப் பற்றியும் எழுதுவது எனக்குப் பிடித்தமில்லாத காரியம். இந்தப் பத்தாண்டுகளில் என்னைப்பற்றி அப்படி எதையும் நீங்கள் இந்தப் பத்திரிகையில் வாசித்திருக்கமாட்டீர்கள். கடந்த பத்தாண்டுகளை நினைவுகூருகிறபடியால் இந்தக் காலப்பகுதி காட்டித் தந்திருக்கின்ற உண்மைகளைப் பற்றி பேசுகிறபோது அதில் என் அனுபவங்களைக் குறிப்பிடுவது தவிர்க்க முடியாததாய் இருக்கிறது. இருந்தாலும் அவசியமானவற்றை மட்டும் பகிர்ந்துகொள்ள முயற்சி செய்கிறேன்.

தமிழினம் வாழ்கிற தேசங்களையெல்லாம் தள்ளி உலகத்தின் மறு கோடியில் இருக்கும் நியூசிலாந்து நாட்டில் ஒரு ஆங்கில சபைக்கு போதகனாக இருக்கும் என்னைத் தமிழில் ஒரு காலாண்டுப் பத்திரிகை நடத்தும்படி கர்த்தர் அழைத்த வரலாற்றை இன்றும் நினைத்துப் பார்த்தால் ஆச்சரிய மாகத்தான் இருக்கிறது. என்றாவது கிறிஸ்தவ இலக்கியப் பத்திரிகை யொன்றை தமிழில் வெளியிட வேண்டும் என்ற வாஞ்சையோ, வைராக் கியமோ, கனவோ, தரிசனமோ ஒருபோதும் எனக்கிருந்ததில்லை. தகுதியே இல்லாதவர்களும், தமிழெழுதத் தெரியாதவர்களும், இறையியலறிவு அறவே இல்லாதவர்களும் அத்தகைய காரியத்தில் மாம்சத்தின் துணிச்சலுடன் ஈடுபட்டு வருவது நாமறிந்ததே. வெறும் குருட்டார்வத்துடன் பெயர் வாங்கு வதற்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் செய்கிற காரியமல்ல பத்திரிகை வெளியிடுவது என்பதும் எனக்குத் தெரிந்திருந்தது. எதையும் சட்டென்று செய்துவிடுகிற, செய்யத் துணிகின்ற போக்கும் எனக்கென்றும் இருந்ததில்லை. அப்படியானால் திருமறைத்தீபம் பிறந்ததெப்படி? என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதல்லவா.

Continue reading

நமது சீர்திருத்தவாத பாரம்பரியம்

ஐரோப்பாவையே கலங்கவைத்த ஆண்டு 1517. கத்தோலிக்க மதத்திற் கெதிரான திருச்சபை சீர்திருத்தம் ஆரம்பித்த ஆசீர்வாதமான ஆண்டு. அந்த ஆண்டில் ஆரம்பித்துவைக்கப்பட்ட சீர்திருத்தத்தின் காரணமாகத்தான் இன்றைக்கு இந்தப் பத்திரிகையைக் கூட சத்தி யத்தின் அடிப்படையில் நம்மால் வெளியிட முடிகிறது. 1517ம் ஆண்டில் அக்டோபர் 31ம் தேதி நிகழ்ந்த, திருச்சபை சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமான அந்த நிகழ்ச்சியின் காரணமாக வருடாவருடம் உலகெங்கும் சீர்திருத்த சபைகள் அந்த நாளை சீர்திருத்த நாளாக (Reformation Day) நினைவுகூர்ந்து வருகிறார்கள்.

கத்தோலிக்கத்தின் காட்டாட்சியும், லூதரின் சத்திய வேட்கையும்

பதினாறாம் நூற்றாண்டில் உலகின் பெரும்பாகங்களைத் தன் கரத்தில் வைத்து கொடூர ஆட்சி செலுத்தி வந்தது ரோமன் கத்தோலிக்க மதம். அதன் தலைவனான போப் கிறிஸ்துவின் அப்போஸ்தலனான பேதுருவின் தெய்வீக வழித்தோன்றலாக தன்னை இனங்காட்டிக் கொண்டு நாடுகளையும், மக்களையும் மதத்தின் அடிப்படையில் ஆட்சிபுரிந்து வந்த காலம் அது. பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பு பல நூற்றாண்டுகளாகவே கத்தோலிக்க மதத்தின் அட்டகாசங்களும், அட்டூழியங்களும் மக்களை அம்மதத்தின்மீது வெறுப்படையச் செய்திருந்தன. இருந்தாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாதபடி அரசும், பேரரசனும், இளவரசர்களும் கத்தோ லிக்க மதத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தனர். கத்தோலிக்க மதத்தையும், போப்பையும் எதிர்த்தவர்கள் உயிரையே இழக்க நேர்ந்தது. அப்படி உயிரிழந்தவர்கள் அநேகர். தன்னோடு முரண்பட்ட நாடாளும் அரசனை அவனுடைய குடும்பத்தோடு தன் மாளிகைக்கு முன்பாக பனியில் மூன்று நாட்கள் பசியோடு மண்டியிட்டு தனக்குக் கருணைகாட்டுமாறு கேட்க வைத்த சமயத்தலைவராக இருந்திருக்கிறார் ஒரு போப். இத்தனையையும் கடவுளின் பெயரில் செய்து கொண்டிருந்தது கத்தோலிக்க மதம்.

Continue reading

ஒரு மனிதன் தன்னைத் தானே புகழ்ந்து

ஒரு மனிதன் தன்னைத் தானே புகழ்ந்து, “பாருங்கள், நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். அருமையான அனுபவத்தை என் வாழ்க்கையில் பெற்றிருக்கிறேன். என்னில் காணப்படும் கிறிஸ்தவ குணாதிசயங்களைப் பாருங்கள். என் பேச்சுக்கு நீங்கள் கீழ்ப்படி வீர்களானால் நீங்களும் நான் அடைந்த அனுபவத்தை அடையலாம்” என்று சொல்லுவதல்ல கிறிஸ்தவ சுவிசேஷம். நம்மில் காணப்படும் கிறிஸ்தவ குணாதிசயங்களைப் பார்ப்பதன் மூலம் எவரும் இரட்சிப்பை அடைய முடியாது. நாம் அடைந்திருக்கின்ற அனுபவங்களைப் பார்த்து எவரும் இரட்சிப்பைப் பெற முடியாது . . . ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அவர்களுக்கு நாம் பிரசங்கிக்க வேண்டும்; கிறிஸ்துவை விளக்கும் சுவிசேஷத்தைக் கேட்பதன் மூலம் மட்டுமே எவரும் இரட்சிப்பை அடைய முடியும். நீங்கள் குணமடைய விரும்பினால், ஏனைய ஆத்துமாக்கள் குணமடைய அவர்களுக்கு நீங்கள் துணை செய்ய விரும்பினால் உங்களுக்குள்ளேயே பார்த்துக் கொண்டிருப்பதை நிறுத்திவிடுங்கள். உங்களுடைய பாவத்தையும், அனுபவங்களையும் பார்த்துப் பாராட்டிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு சுவிசேஷத்தில் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள்.

– கிரேச்சம் மேச்சன் (Grasham Machen)

ஜோன் பனியனின் ‘மோட்சப் பயணம்’

ஜெரமி வாக்கர் (Jeremy Walker) இங்கிலாந்தில் மெயிடன்போவர் பாப்திஸ்து சபையின் போதகர்களில் ஒருவராக பணிபுரிந்து வருகிறார். இளமைப் பருவத்திலேயே சீர்திருத்தவாத, பியூரிட்டன் கோட்பாடுகளில் ஆழ்ந்த ஞானத்தைப் பெற்றிருக்கும் வாக்கர் ஜோன் பனியன் (John Bunyan) படைத்த மோட்ச பயணத்தின் (Pilgrims progress) அருமை பெருமைகளையும் அதை நாம் ஏன் வாசிக்க வேண்டும் என்பதையும் இவ்வாக்கத்தில் விளக்குகிறார்.

“ஐயா இந்த விஷயத்தில் என்னுடைய முடிவு உறுதியானது. இன்று நான் சிறையில் இருந்து வெளிவந்தால் கர்த்தரின் துணையோடு நாளை மறுபடியும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பேன்” என்று தன்னை சிறையில் தள்ளிய வழக்குமன்ற நீதியரசர்களைப் பார்த்து ஜோன் பனியன் கூறிய வார்த்தைகள் இவை. தன்னுடைய உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந் திருந்தபோதும் பனியன் கர்த்தரின் பணியைக் கைவிட்டுவிடவில்லை. பன்னிரெண்டு வருடங்கள் சிறையில் தள்ளப்பட்டிருந்த காலங்களிலும் பனியனின் நாவு அவருடைய பேனாவின் மூலம் பேசியது. அவர் எழுதிய பல நூல்களில் குறிப்பிடத்தகுந்தது மோட்சப் பயணம் (Pilgrims Progress).

Continue reading

பிரசங்கப் பேச்சு நடை, உச்சரிப்பு, குரல் வளம் . . .

இனி பிரசங்கத்தைத் தயாரிக்கும்போது பிரசங்கிகள் கவனிக்க வேண்டிய விஷயங்களை விளக்கமாக கவனித்து வந்த நாம் கடந்த இதழில் தயாரிக்கப்பட்ட பிரசங்கத்தை மேடைக்கு கொண்டு செல்லும் போது பிரசங்கக் குறிப்புகளை எந்த முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதைக் கவனித்தோம். ஆத்துமாக்களுக்கு ஆவிக்குரிய உணவளித்து வளர்க்க வேண்டிய உயர்ந்த ஊழியத்தில் இருக்கும் போதகர்கள், பிரசங்கிகள் வேதபூர்வமாக பிரசங்கங்களைத் தயாரித்து அளிக்க இவை உதவியாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். இவை தங்களுடைய பிரசங்க ஊழியத்துக்கு பெரிதும் உதவியிருப்பதாக எழுதித் தெரிவித்தவர் களுக்கு நன்றி. நம்முடைய பிரசங்க ஊழியத்தால் கர்த்தருக்கே அனைத்து மகிமையும் சேர வேண்டும்.

பிரசங்கங்களை நாம் வேத அடிப்படையில் கஷ்டப்பட்டு ஆராய்ந்து தயாரித்துவிடுவதோடு நமது வேலை முடிந்துவிடுவதில்லை. கடினமாக உழைத்து ஞானத்தோடு பிரசங்கங்களைத் தயாரிப்பது இன்றியமையாதது. அப்படித் தயாரித்த பிரசங்கத்தை ஆத்துமாக்களுக்கு முன் பிரசங்கிப்பது அதன் அடுத்த பகுதியாகும். பிரசங்கத்தை பிரசங்கித்து முடியும்வரை அந்தப் பணி நிறைவேறிவிட்டதாக நாம் கருத முடியாது. எத்தனைக் கருத்தோடு பிரசங்கத்தை உழைத்துத் தயாரித்தாலும் அதை ஆத்துமாக் களுக்கு முன் படைக்காதவரை அதனால் பிரயோஜனம் இருக்காது.

Continue reading

கவிதை! கவிதை!

சீர்திருத்தவாதம்!

சபையில் சீராக இல்லாத அனைத்தையும்
சீராக்குவது என்பது அதற்குப் பொருள்
வரலாற்றில் அது பெற்றது வார்த்தைகளால்
விவரிக்க முடியாததொரு இடத்தை
வேதத்தை நாமின்று நம் மொழியில் வாசிக்க
வழி ஏற்படுத்தித் தந்ததே அதுதான்
அதை ஈன்றெடுத்தோர் பட்ட துன்பங்கள்
ஒன்றா இரண்டா அதைப் பெற்றெடுக்க?
உறக்கத்திலும் விழித்திருக்கையிலும்
ரோமப் போப்பை அது அலறவைத்தது
கத்தோலிக்க மதத்தின் கடையாணியைப்
பிடுங்கி அதன் கால்களை ஒடித்தது
வேத விரோதக் கோட்பாடுகளையும்
சம்பிரதாயங்களையும்
சூறாவளியாக சுழன்று தாக்கியது
போப்பின் அடிவருடிகளையும், அரசையும்
அஞ்சி அஞ்சி அலரச் செய்தது
தொடர்ந்து அதன் வழியில் நாம்
இன்பப் பயணம் செய்யத் தூண்டும்
பதினாறாம் நூற்றாண்டின் சீர்திருத்தவாதம்

சாதிப் பித்து!

பாரதி பாடிச் சபித்து
அம்பேத்கர் அறவே வெறுத்து
காந்தி காரித் துப்பி
இயேசு இல்லாமலாக்கிய
இதயமற்ற சாதிப்பித்து
இருபத்தியோராம் நூற்றாண்டில்
நாட்டுக்கு ஒளியூட்டி
நல்வழி காட்ட வேண்டிய
நற்செய்தி சபைகளில்
நர்த்தன மாடுவதெப்படி?

சுபி . . .