பத்தாண்டுகால பத்திரிகை உலக அனுபவம்

தனிப்பட்ட முறையில் என்னைப்பற்றியும் என்னுடைய அனுபவங்களைப் பற்றியும் எழுதுவது எனக்குப் பிடித்தமில்லாத காரியம். இந்தப் பத்தாண்டுகளில் என்னைப்பற்றி அப்படி எதையும் நீங்கள் இந்தப் பத்திரிகையில் வாசித்திருக்கமாட்டீர்கள். கடந்த பத்தாண்டுகளை நினைவுகூருகிறபடியால் இந்தக் காலப்பகுதி காட்டித் தந்திருக்கின்ற உண்மைகளைப் பற்றி பேசுகிறபோது அதில் என் அனுபவங்களைக் குறிப்பிடுவது தவிர்க்க முடியாததாய் இருக்கிறது. இருந்தாலும் அவசியமானவற்றை மட்டும் பகிர்ந்துகொள்ள முயற்சி செய்கிறேன்.

தமிழினம் வாழ்கிற தேசங்களையெல்லாம் தள்ளி உலகத்தின் மறு கோடியில் இருக்கும் நியூசிலாந்து நாட்டில் ஒரு ஆங்கில சபைக்கு போதகனாக இருக்கும் என்னைத் தமிழில் ஒரு காலாண்டுப் பத்திரிகை நடத்தும்படி கர்த்தர் அழைத்த வரலாற்றை இன்றும் நினைத்துப் பார்த்தால் ஆச்சரிய மாகத்தான் இருக்கிறது. என்றாவது கிறிஸ்தவ இலக்கியப் பத்திரிகை யொன்றை தமிழில் வெளியிட வேண்டும் என்ற வாஞ்சையோ, வைராக் கியமோ, கனவோ, தரிசனமோ ஒருபோதும் எனக்கிருந்ததில்லை. தகுதியே இல்லாதவர்களும், தமிழெழுதத் தெரியாதவர்களும், இறையியலறிவு அறவே இல்லாதவர்களும் அத்தகைய காரியத்தில் மாம்சத்தின் துணிச்சலுடன் ஈடுபட்டு வருவது நாமறிந்ததே. வெறும் குருட்டார்வத்துடன் பெயர் வாங்கு வதற்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் செய்கிற காரியமல்ல பத்திரிகை வெளியிடுவது என்பதும் எனக்குத் தெரிந்திருந்தது. எதையும் சட்டென்று செய்துவிடுகிற, செய்யத் துணிகின்ற போக்கும் எனக்கென்றும் இருந்ததில்லை. அப்படியானால் திருமறைத்தீபம் பிறந்ததெப்படி? என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதல்லவா.

Continue reading