பாரம்பரியத்திற்கும், சம்பிரதாயங்களுக்கும் மனிதர்கள் கொடுக்கும் மரியாதை தமிழினத்தில் அதிகம். தாத்தா காலத்தில் இருந்து வருகிற வழக்கமென்றும், நூறுவருட பாரம்பரிய மென்றும் சொல்லி பாரம்பரியத்தில் இன்பம் காண்பார்கள் நம்மினத்தவர்கள். பாரம்பரியமாக நடந்து வருகிற ஒரு காரியம் நல்லதா? கெட்டதா? என்ற வித்தியாசம் பார்க்காமல் அது ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிற ஒரு காரியம் என்பதற்காக அதற்கு மரியாதை தந்து சிந்தனையில்லாமல் ஆதரித்து வருகிறது தமிழினம். அதை ஒழித்துவிட்டால் எத்தனையோ நன்மைகள் வருகின்ற வாய்ப்புகள் இருக்கின்ற போதும், அது பாரம்பரியமாக இருந்து வருகிற ஒரே காரணத்துக்காக வரப்போகிற நன்மைகளையும் இழக்கத் தயாராக இருக்கும் கண்மூடித் தனமான வழக்கத்தைப் பின்பற்றுகிறது நமது சமுதாயம். பாரம்பரியத்தோடு சேர்ந்தவைதான் சடங்குகளும், சம்பிரதாயங்களும். நம் மக்கள் தொடர்ந்தும் இருட்டில் இருந்து இளைய சமுதாயம் வளர வழியில்லாமல் இருப்பதற்கு இந்தப் பாரம்பரியமும், சடங்குகளும், சம்பிரதாயமும் பெரிய இடையூராக இருப்பதை எவராலும் மறுக்க முடியாது.
இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கு முன்பு நான் புறஜாதிக்காரனாக வாழ்ந்த காலத்தில் சிறு வயதில் எங்களுடைய சாதி வழக்கத்துக்கு மாறாக நான் மீசை வைக்கப்போய் என்னுடைய தகப்பனாருக்கு மாரடைப்பே வந்தது பழைய கதை. ஒன்று நல்லதா? கெட்டதா? அதால் நன்மையுண்டா? கேடு வருமா? என்றெல்லாம் சிந்திக்காமல் பாரம்பரியமாக செய்து வருகிறதை ஒருபோதும் மாற்றக்கூடாது என்ற எண்ணத்தில் கிணற்றுத் தவளையாக வாழ்ந்து வருகிறார்கள் நம்மக்கள்.