நேசமுள்ள வாசகர்களே!

சத்தியத்தை அறிந்துகொள்ளுவதிலும், அதில் வளர்வதிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிற உங்களை மறுபடியும் இந்த இதழ் மூலம் சந்திப்பது மகிழ்ச்சி தருகிறது. இந்த இதழும் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்க கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. போலி எது, சத்தியம் எது என்று பிரித்துப்பார்க்க முடியாதளவுக்கு வேத சத்தியங்களில் வளர்ச்சி குன்றியிருக்கும் நம்மினத்து மக்கள் மத்தியில் சத்தியத்தில் தெளிவுபெற்று, தொடர்ந்தும் குருடர்களாக இருக்கமாட்டோம் என்று விடாப்பிடியாய், குடும்ப ஊழிய அட்டகாசத்திற்கும், பாரம்பரியப் பிசாசுத்தனத்திற்கும் அடிபணிய மறுத்து ஆழி போல் சீறி எழுந்து கொண்டிருக்கும் பலரை இன்று அடையாளம் காண முடிவது நெஞ்சுக்கு இதமளிக்கிறது. உங்கள் சத்திய வாஞ்சையைப் புரிந்துகொள்ள மறுத்து, ‘நாங்கள் போட்ட வட்டத்திற்குள் இருக்கமாட்டேன் என்கிறானே’ என்று அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்யும் கூட்டத்தை நீங்கள் பொருட்படுத்தக்கூடாது. இயேசுவையே திட்டித் தீர்த்தது ஒரு கூட்டம். அதைவிட அதிகமாக உங்களை எவரும் திட்டிவிட முடியாது. பொறுமையைப் பேராயுதமாகப் பயன்படுத்துங்கள்; திட்டல்களை வாடா மல்லிகையாக சூடிக்கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை பெலப்படுத்துவார்; காலம் உங்களுக்கு வரலாறு படைக்கும்.

பத்தோடு பதினொன்றாக இருந்துவிடுவதற்காக இந்தப் பத்திரிகை உருவாகவில்லை; அசத்தியத்தைப் பார்த்தும் பார்க்காமலிருந்துவிடுவதற்காகவும் இது பிறக்கவில்லை.  அன்பின் பெயரில், அழிவை நாடிப்போகிறவர்களை அடையாளம் கண்டு திருத்த மறுக்கும் கூட்டத்தில் இதற்கு ஒருபோதும் பங்கிருக்காது. நாம் வாழப்போகும் நாட்கள் குறுகியது; கர்த்தர் மீண்டும் வரப்போகும் காலமும் தூரத்தில் இல்லை. சொல்லவும், செய்யவும், இடிக்கவும், கட்டவும் வேண்டியவைகள் அநேகம். சத்திய வார்த்தைகளில் கர்த்தர் எமக்களித்திருக்கும் வெளிச்சத்தைப் பயன்படுத்தி அவர் கட்டுகின்ற திருச்சபையை அவருடைய வார்த்தையின்படி கட்டுவதில் அக்கறை காட்டுவது மட்டுமே எங்கள் இலக்கும், இறுதி நோக்க முமாகும். இந்த நோக்கம் நிறைவேற நெகேமியாவைப் போல அண்ட வேண்டியவர்களை அண்டி அன்போடு அரவனைத்து, அண்டக்கூடாதவர்களைத் தூரத்தில் தள்ளிவைத்து ஒரு கையால் வேலை செய்து, மறு கையில் வேலைத் தாங்கி சத்தியப் பணியில் நித்தமும் ஈடுபடுவது மட்டுமே நெருப்பாக இருக்கிறது எங்கள் நெஞ்சத்தில். ஜெபியுங்கள் எமக்காக!

– ஆசிரியர்